பொன்னர்-சங்கர்







(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10
நுழைவாயில்

குங்குமத்தில் மீண்டுமொறு வரலாற்றுத் தொடர்கதை எழுத வேண்டுமென்று தம்பி முரசொலி மாறன் துளைத்தெடுத்தார். ஆயிரம் அலுவல்களுக்கிடையே அதற்கொரு நேரம் ஒதுக்க வேண்டுமே எனத் தயக்கம் காட்டினேன். மதுரை, முகவை மாவட்டங்களின் சுற்றுப் பயணத்தின்போது தொடர்கதை பற்றிய பேச்சு வந்தது. என்னுடன் பயணம் செய்த திரு.தென்னரசு குன்றுடையாக் கவுண்டர் கதையைத் தொடர்ந்து எழுதலாமே என்றார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் கோவை சிங்கநல்லூரில் வாழ்ந்த போது குன்றுடையான் என்றும் அண்ணன்மார் சாமி என்றும் பொன்னர் சங்கர் என்றும் பெயர்களைப் பலர் உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன். இந்த மூன்று பெயர்களுக்கும் தொடர்புடைய ஒரு உணர்ச்சிமயமானதும் உருக்கமானதுமான வரலாறு பற்றிய செவி வழிச் செய்திகளை நான் அப்போது கேட்டறிந்திருந்தது இப்போது என் நெஞ்சில் நிழலாடிற்று.
“பொன்னழகர் எனும் கள்ளழகர் அம்மானை’; திரு.அ.பழனிசாமி அவர்கள் தொகுத்த வரகுண்ணாப் பெருங்குடிக் கூட்டம் பொன்னர் -சங்கர் வரலாற்று நூல்”; புலவர் பிச்சை அவர்களின் ஓலைச் சுவடியை ஒட்டி கவிஞர் சக்திக்கனல் அவர்கள் தொகுத்த ‘அண்ணன்மார் சுவாமி கதை’ இவற்றை யெல்லாம் ஆழமாகப் படிக்கத் தொடங்கினேன். தமிழ் வளர்ச்சி இயக்க இயக்குநர் திரு.சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ளிடம் கலந்துரையாடினேன். நண்பர் தியாகராசன் (சின்னக் குத்தூசி), குங்குமம் பாவைச்சந்திரன் இருவரையும் இந்த வரலாற்றுக் கதை நடந்த பகுதிகளுக்குச் சென்று விபரங்கள் அறிந்து வருமாறு கேட்டுக் கொண்டேன். எனக்கே நேரில் சென்றிட விருப்பம். மக்கள் சூழ்ந்து கொள்வர். எதிர்பார்த்த பயன் கிட்டாது. நண்பர்கள் பாவைச்சந்திரன், தியாகராசன் இருவருக்கும் மிக உதவியாக இருந்து அந்தச் சரித்திரப் புகழ் பெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று மேலும் சில தகவல்களைத் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் திரட்டித் தந்தார். (பின்னர் எழுதத் தொடங்கி இரண்டொரு வாரங்களுக்குப் பிறகு அந்த இடங்களையெல்லாம் நேரில் சென்று பார்த்து வந்தேன்) அண்ணன்மார் வரலாற்றுக் கதையை கோவை வானொலியில் உடுக்கடிப் பாட்டாகப் பாடியதையும் நாடாப் பதிவு செய்து கேட்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.
பலரும் ஆய்வு செய்திருப்பதாலும், செவி வழிச் செய்தி களாகப் பல சொல்லப்படுவதாலும், தமிழகத்தின் வரலாற்றுப் பகுதிகள் எதுவுமே முழுமையாகக் கிடைப்பது என்பது அரிதான காரணத்தாலும் ஏறத்தாழ முன்னூறு அல்லது நானூறு ஆண்டு களுக்கு முற்பட்ட கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகள் என்பதாலும் காலப்போக்கில் அந்த நிகழ்ச்சிகள் வெவ்வேறு விதமாக வெளியிடப்பட்டதாலும் – தெளிந்த நீரோடையில் ஒரு சிறு கல் விழுந்தது போன்ற குழப்பம் ஏற்படுகிறது எனினும் – நிரோடையின் தெளிவுத் தன்மையில் மாறுபாடான எண்ணம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை.
நான் எழுதத் தொடங்கும் பொன்னர் சங்கர் வரலாற்று அடிப்படையிலான கற்பனைத் தொடர்கதையில் அடித்தளத் திற்கேற்ற கட்டிடம் உருவாக்கப்படுவது போன்ற முயற்சிதான் இருக்குமே தவிர, அடித்தளத்திற்கும் கட்டிடத்திற்கும் சம்பந் தமே இல்லாத முரண்பாடு நிச்சயமாக இருக்காது.
இந்த வரலாறு குறித்து வெளிவந்துள்ள நூல்கள், ஓலைச் சுவடி பற்றிய குறிப்புகள், செப்பேட்டுப் பட்டயம் போன்ற வைகள்கூட ஒன்றுக்கொன்று மாறுபட்ட செய்திகளைக் கூறு கின்றன என்பதை ஆய்வு செய்த சான்றோர்கள் மறுத்திட வில்லை.
இந்த வீர வரலாற்றுக்குரிய மூதாதையர் சோழ நாட்டுக் குரிய திருவாலூர் (திருவாரூர்) பகுதியிலிருந்து வந்து கொங்குச் சீமையை உருவாக்கினர் என்றவொரு குறிப்பு உள்ளது.
இதற்குச் சான்றாக நாமக்கல் வட்டம், வகுராம்பட்டி பெருங்குடிக் கூட்டத்தார் குல தெய்வமான கொண்டிசெட்டிப் பட்டிக்கு அருகில் உள்ள. காளியம்மன் ஊஞ்சல் பாட்டின் பின்வரும் வரிகள் விளங்குகின்றன.
“காவிரி நதியால் சூழ்ந்த சோழநாட்டில்
கனமிகுந்த ஆதி திருவாலூரெனும் பதியைவிட்டு
தங்கமெனுஞ் சேரசோழ னுடனே கூட
சேர மண்டலத்தில் வந்து தோன்றபேற்கு
கங்கைகுலப் பெருங்குடியார் குலதெய்வமான
கம்பீர மதுக்கரைச் செல்லி சகோதரியான காளியம்மன்
தவமிகுந்த குலத்தவர்கள் வேளாளர் வாழ்த்த
பாலையெனும் பொன்காளியம்மன் ஆடீரூஞ்சல்”
இஃதன்னியில் சோழநாட்டுத் திருப்பாதூரிலிருந்து வந் தோர் என மற்றொரு குறிப்பும் மானாமதுரைப் பகுதியிலிருந்து வந்தோர் என இன்னொரு குறிப்பும் கர்நாமாநிலக் கோலார் பகுதியிலிருந்து குடிபெயர்ந்தோர் எனப் பிறி தொரு குறிப்பும் நெல்லைச் சீமையிலிருந்து வந்தோர் என வேறொரு குறிப்பும் -ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஓலைச்சுவடிகள், பழம்பாடல்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன.
இன்று திருச்சி, சேலம், கோவை, பெரியார், தர்மபுரி, போன்ற பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ள வேளாண்குடி மக்களெனப்படும் கொங்கு வேளாளர் சமுதாயம்; தமிழ் நாட்டுக்குள்ளேயே ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் குடியேறியுள்ளனர் என்பதையும், அன்றைய தமிழ்நாடு இன்றுள்ள எல்லையைக் காட்டிலும் பெரும் பரப்புடையதாக அமைந்திருந்தது என்பதையும் சிந்தித்திடும்பொழுது தமிழ்க்குல மாந்தர்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என்பதும் பாய் கட்டிய படகு காற்று வீசுவதற்கேற்பக் கடலில் செலுத்தப்படுவதைப் போல, அக்காலத்தில் எழுந்த சூழ்நிலைகளுக்கேற்ப வாழுமிடங்களை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது என்பதும் புலனாகிறது.
பரந்துபட்ட நெடிய நிலப்பரப்பில் தமிழ் வேந்தர்களான முடியுடை மூவேந்தர்களாம் சேர சோழ பாண்டியர் ஆட்சி விரிவடைந்திருந்த காலம் மாறி அவர்கள் ஆங்காங்கு குறுநில மன்னர்களாக சோழர், பாண்டியர், சேரர் எனும் தமது குலப் பெயரைப் பூண்டு குறுகிய நிலப்பரப்புகளைத் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்த கால கட்டத்தில்தான் இந்த வரலாற்றுக்குரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. சோழன் என்ற பெயரில் அரசர்கள் சிலர்; அவ்வாறே பாண்டியன், சேரன் என்ற பெயர்களில் அரசர்கள் சிலர்; சிதறுண்ட பெருநாடு களின் துண்டு துணுக்குப் பகுதிகளை ஆட்சி புரிந்து வந்தனர்.
அந்தக் காலமும் மெல்ல மெல்லத் தேய்ந்து, ஆங்கிலேயர். போர்த்துகீசியர், டச்சுக்காரர் போன்றோர் வாணிபச் சந்தை யாக நமது நிலத்தை வளைத்துப் போடத் தொடங்கிய காலம் தோன்றிற்று.
வெளிநாட்டார் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு உள் நாட்டார் சின்னஞ்சிறு அரசுகளை நிறுவி ஆட்சி செலுத்தி அவற்றையும் பெருமளவு இழந்து நின்ற நிலையில்தான் இருண்டு கிடந்த தமிழகத்தின் ஒரு பகுதியில் ஒளிக்கீற்றாக இந்த வீர வரலாறு நிகழ்கிறது.
வேளாளக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், முதலியார், செட்டியார், வன்னியர், சாம்புவர் எனப் பல்வேறு சாதிப் பிரிவுகளாக வாழ்ந்த கொங்குச் சீமைப் பகுதி மக்களுக்கிடையே ஒரு வகுப்பாருக்கும் மற்றொரு வகுப்பாருக் குமிடையே ஏற்பட்ட பகையுணர்ச்சியே இந்த வீர வரலாற்றில் கரு என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. மாறாக வேளாளப் பெருங்குடியொன்றில் விளைந்த பங்காளிக் காய்ச்சலே இந்த வரலாற்றின் மைய
மைய இழையாக விளங்குகிறது. வேளாளர் வேட்டுவரிடையே எழுந்த மோதல் எனில் இந்த வரலாற்றில் அக்காலத்திலும் இக்காலத்திலுமுள்ள வகுப்பினர் இருசாராரின் அணியிலும் இடம் பெற்றிருக்க முடியாதல்லவா?
ஒன்றல்ல; இரண்டல்ல – மூன்று தலைமுறை வரையில் ஒரு பெருங்குடும்பத்தில் மூண்ட பங்காளிப் பகை, பல்வேறு வடி வங் கொண்டு இறுதியில் உருக்கமிகு வரலாற்றுக் காவியமாக முடிவு பெறுகிறது.
கள்ளங் கபடமில்லாமல், வெளுத்ததெல்லாம் பால் எனக் கருதுகிற குன்றுடையான் எனும் பாத்திரம் இந்த வரலாற்றின் தொடக்க காலக் கதாநாயகன் என்பதால் குன்றுடையான் கதை” என்று இதைக் கூறுவோரும் உண்டு. குன்றுடையானின் மூத்த மகன் பொன்னரை வைத்துப் பொன்னழகர் எனும் கள்ளழகர் அம்மானை எனப் பாடியதும் உண்டு. மூத்தோன் பொன்னரையும் இளையோன் சங்கரையும் அந்த இருவருக்கும் இளையவளான தங்கை அருக்காணி என்ற தங்கம்; ‘அண்ணன்மார்’ என அன்பொழுக அழைத்ததால் ‘அண்ணன்மார் சாமி கதை’ என உடுக்கடிப்பாட்டு ஒலித்ததும் உண்டு.
இவற்றில் எல்லாம் இழையோடுகின்ற பண்பாடு – பாச உணர்வு மன உறுதி வீரம் – காதல் கள்ளங்கபடமற்ற உள்ளங்களின் குளிர்ந்த தன்மை – அந்த உள்ளங்களை வருந்தச் செய்வதையே பொழுதுபோக்காகக் கொண்ட ஒரு சிலரது இதயங்களின் வெம்மை -அனைத்தையும் உணர்ந்து, அவற்றுக் கேற்ப உருவான கதாபாத்திரங்களின் சிறப்பை பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கச் செய்யும் ஆசையுடன் எழுதப்படுவதே ‘பொன்னர்-சங்கர்’ எனும் தலைப்பைக் கொண்ட இந்தத் தொடர்கதையாகும்.
வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட தொடர்கதைகள், நூல்கள், புதினங்கள், பலவற்றைத் தமிழகத்து எழுத்தாளர்கள் பலரும் படைத்துள்ளனர். கரிகால் பெருவளத்தான் காலத்து சோழ, பாண்டிய நாடுகள் வரலாற்றையும், பாண்டிய நாட்டுத் தூதர் ரோமாபுரியில் அகஸ்டஸ் சீசர் காலத்தில் பொறுப்பேற்றிருந்த செய்தியையும் பின்னணியாகக் கொண்டு “ரோமா புரிப் பாண்டியன்” எனும் வரலாற்றுக் கற்பனை ஓவியத்தையும், பாகனேரி பட்டமங்கலமெனும் பகுதிகளில் சிறப்புற்று விளங்கிய மாவீரர்களின் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு “தென் பாண்டிச் சிங்கம்” எனும் வீர காவியத்தையும், நான் எழுதியுள்ளதை வாசகர்கள் நன்கறிவர்.
தொன்மைப் பெருமை – இலக்கிய வளம் – கலைச் செழிப்பு வீர உணர்வு மானங்காக்கும் மாண்பு – போன்ற பல்வேறு சிறப்புக்களுக்குரிய தமிழகத்தில் ‘ஒற்றுமையின்மை’ எனும் ஒரு பெருந்தீமையே சங்க காலத்திலிருந்து தீராத நோயாக இருந்து வருகிறது.
வரலாறுகளைப் பின்னணியாகக் கொண்டு நான் இயற்றும் இத்தகைய தொடரோவியங்கள், அந்தத் தீராத நோயைத் தீர்த்துக் கட்டி; நலம் பெற்ற தமிழ் நிலத்தைக் காணும் வாய்ப்பை வருங்காலத்திலாவது வழங்க வேண்டும் என்பதே எனது பேரவா.
பொன்னரும் சங்கரும் அண்ணன்மார்சாமி எனப் போற்றப் பட்டு அவர்களுக்கென கொங்குச் சீமையில் கோயில்களும் எழுப்பப்பட்டுள்ளன. அந்தக் கோயில்களில் அவர்களின் குல் தெய்வங்கள் எனப்படும் பெரிய காண்டியம்மன், செல்லாண்டியம்மன் சிலைகளும் வழிபாட்டுக்குரியவைகளாக அமைக்கப்பட்டுள்ளன.
வல்லமையும், வணங்கத்தக்க நற்பண்பும், வைராக்கிய நெஞ் சும் கொண்ட பொன்னர் சங்கர் எனும் உடன்பிறப்புகளின் உடன்பிறப்பாம் தங்கம் எனும் அருக்காணியாம் கற்பரசியும் – முதலில் குறிப்பிட்டுள்ள பல்வேறு மாவட்டங்களில் வாழும் கொங்கு வேளாளக் கவுண்டர்,வேட்டுவக் கவுண்டர் மாத்திர மன்றி வேறு பல வகுப்பினராலும் தெய்வங்களாகச் சிறப்பிக் கப்படுகின்றனர். சகோதரர்களுக்கு உற்ற தோழனாகவும் விசு வாசமுள்ள துணைவனாகவும் திகழ்ந்த வீரபாகு சாம்புவனுக்கும் அந்தப் பகுதி மக்கள் மேற்கண்ட கோயில்கள் சிலவற்றில் சிலை வைத்து வணங்கி வழிபடுவதைக் காண முடிகிறது.
சாதாரண மனிதரினும் வேறுபட்டு அசாதாரண நிகழ்ச்சி களைத் தமது ஆற்றலால் விளைவிப்போரைத் தெய்வத்திற்குக் கூறப்படும் தன்மைகளுடன் ஒப்பிட்டுப் புகழ்வது அக்காலந் தொட்டு வழக்கில் இருந்து வரும் ஒன்றாகும்.
வள்ளுவரே கூட இறை அல்லது இறைவன் அல்லது தெய் வம் என்பனவற்றுக்குச் சொல்லப்படும் இலக்கணங்களைப் புறக்கணிக்காமல்; அந்த இலக்கணங்களின் வடிவமாக, மாந் தர் திகழ வேண்டுமென விரும்பினார்.
‘வாலறிவன்’ என்றால் தூய்மையான அறிவு வடிவாக விளங்கக் கூடியவன் எனக் கூறி, அவன் திருவடிகளைத் தொழாவிட்டால் கற்றும் பயனில்லை என்று சுட்டிக் காட்டினார்.
‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ அதாவது விருப்பு வெறுப்பு இல்லாதவனுடைய நிழலை நாடுபவர்க்குத் துன்பம் இல்லையென்று குறிப்பிட்டார்.
“தனக்குவமை இல்லாதான்”
“அறவாழி அந்தணன்”
இவ்வாறெல்லாம் கடவுள் எனப்படும் சொல்லுக்கு இலக்கணம் வகுத்தார்.
இறைவனுக்குரிய இத்தனை பெருமையும் கொண்டு ஒருவன் வையத்தில் வாழ வேண்டுமென்று கருதினார்.
அதனால்தான் ; ‘தெய்வத்துக்கென எத்தனையோ அருங் குணங்கள் சொல்லப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அற நெறியில் நின்று வாழ்கிறவன் வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப் படுவான்’ எனும் கருத்தமைந்த
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.”
என்ற குறள் வாயிலாகத் தெளிவு படுத்துகிறார்.
அப்படி மதிக்கப்பட்டவர்கள்தான் ‘அண்ணன்மார் சாமி‘ என அழைக்கப்படும் பொன்னர்-சங்கர் ஆவார்கள் என்பது எனது கணிப்பு.

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் பிருந்தா இ.எப்.பெக் எனும் அம்மையார் கனடா நாட்டைச் சேர்ந்தவர். அவர் காங்கயம் அருகில் உள்ள ஓலப்பாளையம் எனும் ஊரில் வந்து தங்கி கொங்கு மக்களைப் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டவர். அவர் அண்ணன்மார் கதை பற்றிய கிராமியப் பாடல்களையும் ஆராய்ந்து ஒரு ஆய்வு நூலையும் வெளியிட்டிருக்கிறார் என்பதிலிருந்து அண்ணன்மார் வரலாற்றுப் பின்னணியின் சிறப்பு தெளிவாகும்.
கவிஞர் சக்திக்கனல் அவர்களும், திரு. அ.பழனிசாமி அவர்களும் வெளியிட்டுள்ள நூல்களில் பொன்னர் – சங்கர் ஆட்சி நடத்திய பகுதி குறித்த வரைபடமொன்று காணப்படு கிறது. அந்தப் படத்தையும் இந்த என் முன்னுரையில் இணைத்துள்ளேன்.
அந்நாளில் அவர்கள் ஆட்சி நடத்திய பகுதிகளிலிருந்து கொங்கு நாட்டு மக்கள்; தாங்கள் வாழும் நிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பது இந்தப் படத்தைப் பார்த்தாலே நன்கு புரியும்.
எத்தனை சாதிகள் என்று வியப்புறும் வண்ணமும் வேதனையுறும் வண்ணமும் பிரிந்து கிடப்பினும் ‘ஒரே தமிழ்ச் சாதி’ என்று பாடிய பாரதியின் கவிதை வரிகள் கனவாகவே இன்றி நனவாகும் நாளை எதிர்பார்ப்போரில் நானும் ஒருவன்
அந்த உளமார்ந்த உணர்வுடனேயே தமிழ்ப் பெருங்குடி மக் கள் அனைவரின் ஆதரவும் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த வரலாற்றுத் தொடர்கதையைத் தொடங்குகிறேன்.
1. மணவிழாவில் மசச்சாமி
ஆரிச்சம்பட்டி என்றும் மணியங்குரிச்சி என்றும் அழைக் கப்படும் அந்த ஊர் திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. காவிரிப் பெருக்கினால் ஏற்கனவே வளம் பெற்றுத் திகழும் கழனிகள் – அந்தக் கழனிகளில் மெல்லத் தலையசைத்து ஆடும் பயிர்கள் – ஓங்கி உயர்ந்து குலைகுலையாகக் காய்த்து நிற்கும் செழுமை பொருந்திய தென்னை மரங்கள் நிறைந்த தோப்பு நீர் வளத்திற்குச் சிறிதும் குறைவற்ற நிலவளம் – அந்தப் பகுதியில் ஆரிச்சம்பட்டியெனும் மணியங்குரிச்சியில் மூன்று நாள் திருவிழாக் காட்சியில் முதல் இரண்டு நாட்களை மிஞ் சிடும் வகையில் மூன்றாவது நாள் நிகழ்ச்சி அமைய வேண்டு மென்பதில் அவ்வூர்ப் பெருங்காணியாளர் மலைக்கொழுந்தாக் கவுண்டரின் ஆட்கள் மிகுந்த ஆர்வங் காட்டிப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஊர் முழுவதும் தெருக்களில் தென்னங் கீற்றுத் தோரணங்கள். மாவிலைத் தோரணங்கள். தெருமுனை களில் உயர்ந்த வலுவான மூங்கில்களை நட்டு அவற்றில் தார் தள்ளிய வாழைகளைக் கட்டி வைத்தனர்.

ஊருக்குள் மட்டுமின்றி ஊருக்கு வரும் வழியிலே கூட வாழை மரங்கள் மூங்கில் மரங்களை அணைத்துத் தழுவிக் கொண்டு, தாங்கள் வெட்டுண்டதையும் பொருட்படுத்தாமல் விரிந்து நீண்ட இலைகளால் காற்றுடன் விளையாடிக்கொண்டிருந்தன. வண்ண வண்ணத்தாள்களில் விதவிதமாகச் செய்யப்பட்ட கூண்டுகள் வீதிகளின் மையத்தில் பல இடங்களில் எழிலாகத் தொங்க விடப்பட்டிருந்தன. பெரிய காணியாளர் மலைக் கொழுந்தாக் கவுண்டரின் மகன் சின்னமலைக் கொழுந்தும், அவ னது தாயாரும் மலைக் கொழுந்தாக் கவுண்டரின் இல்லத்தரசியு மான பெருமாயி அம்மாளும்; ஊரே அலங்காரமாகத் தோன்று வதைக் கண்டு உள்ளம் பூரித்துப் போயினர். சின்னமலைக் கொழுந்து ஊருக்குள் எல்லா இடங்களிலும் சுற்றிச் சுழன்று மூன்றாம் நாள் விழாவுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பணி பாட்களை உற்சாகமாக முடுக்கி விட்டுக் கொண்டிருந்தான்.
தலைதூக்கி அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு சுண்ணாம்புச் சாந்து குழைத்து கட்டப்பட்டிருந்த ஒரு சிறு மாளிகை போன்ற மலைக்கொழுந்தாக் கவுண்டர் வீட்டு வாசலில் பிரம்மாண்ட மான கொட்டகைப் பந்தல் ஒன்று போடப்பட்டிருந்தது. அந் தப் பந்தலை அழகுபடுத்தும் வேலையில் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆட்கள் பம்பரம் போலச் சுழன்று கொண்டிருந்தனர். பரபரப்புடன் நடைபெறும் அந்தப் பணிகளை வீட்டு முகப்பில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு மலைக்கொழுந்தாக் கவுண்டர் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் காலடியில் அமர்ந்து பெருமாயி அம்மாள், வெற்றிலை மடித்துக் கணவருக்கும் கொடுத்து, தானும் தாம்பூலத்தைக் குதப்பியவாறு, மறுநாள் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி யால் முகத்தை நிரப்பிக் கொண்டிருந்தாள்.
அந்த வீட்டுக்கு அருகாமையில் – குளக்கரையையொட்டி ஒரு நீண்ட பந்தல்; அந்தப் பந்தலில் மேள ஒலி கேட்டுக் கொண் டிருந்தது. பந்தலின் கொடுங்கைகளையொட்டிப் பனையோலைக் கூந்தல்கள் மிகநெருக்கமாகப் பின்னித் தொங்க விடப்பட்டி ருந்தன. பந்தல் கால் ஒவ்வொன்றிலும் ஈச்சங்குலைகள், மாங்கொத்துகள். பந்தல் நீளத்துக்கு ஒரு பெருங் கூட்டம் ஒவ் வொருவராக வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அவர் களின் எண்ணிக்கை ஆயிரம் பேருக்குக் குறையாமல் இருக்கும். அனைவருமே அழுக்கான அல்லது கிழிந்து நைந்து போன ஆடையுடுத்திய ஆண்கள், பெண்கள் ஏழை எளியோர்!
அவர்களது கண்களிலே ஒரு ஆவல் பந்தலின் நடுவே சற்று உயரமாகப் போடப்பட்டிருந்த மேடையையே அந்தக் கண்கள் மொய்த்தன. காரணம்; அந்த மேடையிலேதான் அவர்களுக்கு அளிக்கப்பட இருக்கும் உணவு தானியங்கள் பெரிய பெரிய கூடைகளில் கொட்டி வைக்கப்பட்டிருந்தன.
அந்த உணவு தானியங்கள் அரிசியாக வரகாக கம்பாக சோள்மாக இப்படிப் பலவகையாக அந்த மேடையில் குவிந்திருப்பதும்; அவற்றைத் தங்களுக்கு இனாமாக அள்ளி வழங்க இருப்பதும் – தரித்திரநாராயணர்களுக்குத் தாங்கொணாத மகிழ்ச்சியைத் தரக் கூடிய விஷயம்தானே!
மூன்று நாள் விழா -அதிலே இப்போது நடப்பது இரண்டாம் நாள் விழா – நாளைக்கு மூன்றாவது நாள் விழாதான் இந்த விழா நிகழ்ச்சிக்கே முத்தாய்ப்பு வைக்கும் விழாவாக அமையும் அதையொட்டியே ஊர் அலங்காரம் உணவு தானியம் வழங்கும் ஏற்பாடு – அப்படியென்றால் அது என்ன விழா?
இதோ; சோழன் தோட்டி ஊர்ப் பொது இடத்தில் அம்மன் கோயில் நிழலில் நின்று முரசு கொட்டுகிறான்; அது என்ன செய்தி என்று காது கொடுத்துக் கேட்டால் எல்லா விபரமும் புரிந்து விடும்.
“இதனால் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மணியங்குரிச்சியெனும் ஆரிச்சம்பட்டி பெரிய காணியாளர் மலைக் கொழுந்தாக் கவுண்டர் மகள் தாமரை நாச்சியாருக்கும் நெல்லி வளநாட்டு எல்லைக்காவல் ஆட்சித் தலைவர் செல்லாத்தாக் கவுண்டர் மகன் மாந்தியப்ப கவுண்டருக்கும் நாளைக் காலையில் நடக்க இருக்கும் திருமண விழாவை முன்னிட்டு இன்றைக்கு மணமகள் தாமரை நாச்சி யார் கைகளால் ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படுகிறது. அனைவரும் வந்து பெற்றுக் கொள்ளும் படியும், மணமக்களை ஆசீர்வதிக்கும்படியும் பெரிய காணி யாளர் வேண்டிக் கொள்கிறார்.”
”டம, டம” என்ற முரசு முழக்கத்துக்கிடையே சோழன் தோட்டி இதை மூன்று முறை சொல்லி முடித்து அங்கிருந்து அடுத்த ஊருக்குப் புறப்பட்டு விடவே, சூழ்ந்து நின்று செய்தி கேட்ட ஏழை எளியோர் உணவு தானியம் வழங்கும் பந்தலை நோக்கிப் படையெடுத்தனர்.
ஆதி திராவிட சமுதாயத்தில் பிறந்து ஐம்பது வயதைத் தாண்டிய சோழன் தோட்டியுடன் சுமார் ஆறு அல்லது ஏழு வயதுள்ள ஒரு இளைஞனும் வேகமாக நடந்து கொண்டிருந் தான். அவர்கள் முரசுடன் செல்வதைப் பார்த்து, தெரு நாய் ஒன்று குரைத்துக் கொண்டே துரத்தி வந்தது. சிறுவனுக்குப் பொல்லாத கோபம். தெருவில் கிடந்த ஒரு கல்லை எடுத்து நாயின்மீது வீசக் கையை ஓங்கினான். “டேடே… வீரமலை! பாவம், ‘நாயை அடிக்கக் கூடாது. வாயில்லா ஜீவன் ஏதோ அது பயந்து போய்க் குரைக்கிறது; நீ வா என்னோடு!’ என்று சொல்லிக் கொண்டே, சிறுவனின் கையில் இருந்த கல்லைப் பிடுங்கி எறிந்து விட்டு சோழன் தோட்டி நடக்கத் தொடங்கவே, “அப்பா! அப்பா! மெதுவா நடப்பா!என்னால் உன் கூட நடக்க முடியிலே!” என்றான் சிறுவன் வீரமலை!
“பெயர்மட்டும் வீரமலை! வேகமா நடக்க முடியலியா?” சோழன் தோட்டியின் கேலிச் சிரிப்பும் அதைத் தொடர்ந்து சிறுவனின் முதுகிலே செல்லமாக ஒரு தட்டுதலும்!
சோழன்தோட்டி பல ஊர்களில் முரசடித்து அறிவித்ததை யொட்டி ஆயிரம் இரண்டாயிரம் என்று ஏழை எளியோர் உணவு தானியங்களைப் பெறுவதற்கும், மலைக்கொழுந்தாக் கவுண்டர் மகள் தாமரை நாச்சியாரின் திருமணவிழாவைக் காண்பதற்கும் ஆரிச்சம்பட்டி யெனும் மணியங்குரிச்சியில் குழுமிடத் தொடங்கினர்.
உணவு தானியம் வழங்கும் பந்தலில் கூடியிருந்தோர் குதூ கலிக்க குமரிகளின் கூட்ட மொன்று மேடையை நோக்கி வந்தது. விண் மீன்களுக்கு நடுவே ஒரு வெண்ணிலவு போல் தாமரை நாச்சி; தங்கரதமெனக் குலுங்கி – ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்ட மேடையேறி நின்றாள். ஜொலிக்கும் அவளது அழகைக் கண்டு பந்தலில் வரிசையாக நின்றிருந்த பாட்டி மார்கள், அடியென் தங்கம்! ரதி மாதிரி இருக்கியே கண்ணு! என்று ஏற்கனவே ரதியைப் பார்த்தவர்களைப் போலத் தங் கள் பொக்கைவாய் திறந்து பாராட்டி வாழ்த்தினார்கள். வயதான ஆடவர்கள் கூட வாழ்க்கையில் சலிப்புற்ற தங்களது பருவத்தையும் மறந்து தாமரை நாச்சியை நோக்கி, வாயில் ஈ நுழைவது தெரியாமல் மரம் போல் நின்று விட்டார்கள். இளம் உள்ளங்களுக்குக் கேட்க வேண்டுமா? ஏழையாக இருப்பதிலும். ஒரு நல்ல வாய்ப்புதான் இல்லாவிட்டால் இன்றைக்கு இந்தப்பேரழகி கையினால் உணவு தானியம் பெற முடியுமா? வாங்குகிற சாக்கில் இவளைச் சிறிது நேரம் வைத்த விழி வாங்காமல் பார்த்தால் பிறகு வைகுந்த பதவி, சிவலோக பதவியெல்லாம் எதற்கு?” என்று அந்த வரிசையில் நின்ற வாலிபர்களில் பலர் எண்ணிப் பெருமூச்சு விட்டனர்.
உணவு தானியம் வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. ஒவ்வொருவராக மேடையருகே வந்தனர். கம்பா? வரகா? சோளமா? அரிசியா? என்று தாமரை நாச்சியின் தோழிகளில் ஒருத்தி கேட்பாள். அவரவரும் தங்கள் விருப்பத்தைச் சொல் வார்கள். அதனை எடுத்து ஒரு தோழி, தாமரையின் கையில் கொடுப்பாள். தாமரை அதை வழங்குவாள். “அம்மா, நீ மகராசியா இரு!” என்று மூதாட்டிகள் மொழிந்தனர். னாறும் பெற்று பெருவாழ்வு வாழு’ என முதிய பெரியவர் கள் அவள் தலையைத் தொட்டு வாழ்த்து பொழிந்தனர். அவளது உடல்தான் அந்தப் பந்தல் மேடையில் இருந்ததே தவிர, அவள் உள்ளம் வேறெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருந்தது என்பதை அவளது முகம் மறைக்காமலேயே தெளிவாகக் காட்டிற்று. வெண்சங்கொத்த கண்களிலே கருவண்டுகளென இருவிழிகளும் பறக்கச் சிறகின்றிப் பரபரத்துக் கொண்டிருந்தன.
ஊருக்குள் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகள் பல ஒரே நேரத்தில் வரும் ஒலி கேட்டது. அந்த ஒலி முழக்கத்தை தாமரை நாச்சியும் உணவு தானியம் வழங்கிக் கொண்டே உற்றுக் கவனித்தாள்.
வண்டிகள் அனைத்தும் பளபளக்கும் பட்டுத் திரைகளால் மூடப்பட்டிருந்தன. சுமார் நூறு வண்டிகளுக்குக் குறைவில் லாமல் இருக்கும். அந்த வண்டிகளில்தான் நெல்லி வளநாட்டு செல்லாத்தாக் கவுண்டரும் அவரது உற்றார் உறவினரும் திரு மண விழாவுக்கு வருகின்றனர். மணமகன் மாந்தியப்பன் வரும் வண்டி மட்டும் கிட்டத்தட்ட ஒரு தேர் போல சிங்காரிக்கப்பட்டு நான்கு குதிரைகள் பூட்டப்பட்டு வந்து கொண்டிருந்தது. தங்க ஜரிகைத் தலைப்பாகை கட்டி, தலைப்பாகை ஓரத்திலே வைர மிழைத்ததும் முத்துக்களும், பவளங்களும் பதித்ததுமான ஆரமொன்று அழகுற அமைக்கப்பட்டு விலை மதிக்க முடியாத அணிமணிகளை உடலிலே வாரிப் போட்டுக் கொண்டு அந்த ரத வண்டியிலே மணமகன் மாந்தியப்பன், மறுநாள் நடைபெற இருக்கும் திருமணத்தை எண்ணி கம்பீரமாகப் புன்னகை புரிந்து கொண்டிருந்தான்.
அந்த அலங்கார வண்டிகள் அனைத்தும், ஊருக்குள் நுழை யும் இடத்தில் பேரிகைகள், முரசுகள், சங்குகள், எக்காள வாத்தியங்கள், மேளங்கள் முழங்கிட மலைக்கொழுந்தாக் கவுண்டர் சார்பில் அவர் மகன் சின்ன மலைக் கொழுந்து ஒரு ஆடம்பரமான வரவேற்பு அளித்தான். செல்லாத்தாக் கவுண்டர் தன் மகன் மாந்தியப்பனை சின்ன மலைக் கொழுந்துக்கு அறிமுகம் செய்து வைத்திடவே இருவரும் அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார்கள். பின்னர் அந்த வண்டிகள் ஊர்வலமாகவே மணியங்குரிச்சித் தெருக்களில் நகர்ந்தன.
கண்கொள்ளாக் காட்சியாக திருமண வைபவம் களைகட்டி விட்டதைக் கண்டு அந்த ஊரே உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தது.
தாமரை நாச்சியார் உணவு தானியம் வழங்கும் பந்தலில் அநேகமாக முக்கால் பகுதிக் கூட்டம் குறைந்து விட்டது என்றே கூறலாம். அவளும் மிகவும் களைத்துச் சோர்ந்து போயிருந்தாள்.
“என்னடி தாமரை! இன்னைக்கே ரொம்ப களைச்சுப் போய்ட்டே? நாளைக்குக் கல்யாணம் முடிஞ்சு அப்புறம் எல் லாம் இருக்கு; மாப்பிள்ளை மகா முரடராம்; அப்ப என்னடி செய்யப் போறே?”
என்று ஒரு குறும்புக்காரத் தோழி கேட்டாள் மெல்லிய குரலில்!
தாமரைக்கு இருந்த தவிப்பில் தோழியின் கேலியைக் சுவைக்க முடியவில்லை; சுள் என்று எரிந்து விழுந்தாள், சும்மா கிட்டி!” எனக் குதித்து!
முதியோர்களான ஆடவர்க்கும் மூதாட்டிகளுக்குமிடையே ஒவ்வொரு வாலிபரும் தாமரையிடம் தானியம் வாங்க வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அந்த இடத்தை விட்டு விரை வில் நகராத காரணத்தால் தானியம் வழங்கும் நிகழ்ச்சி தாமத மாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது.
“இந்த வாலிப வயதில் கூட இவர்கள் வறுமையில் வாடுகிறார்களே?” என்று மெதுவாக ஒரு தோழியிடம் தாமரை சொன்னாள்.
“உழைக்க சோம்பேறித்தனப் பட்டால் இப்படித்தான் வாடணும்!” என்று முணுமுணுத்துக் கொண்டாள் அந்தத் தோழி!
அப்போது, சாக்கடையில் தோய்த்து எடுத்தது போன்ற கந்தலாக அதுவும் கிழிந்த ஆடையொன்றை அணிந்து, பரட் டைத் தலையுடனும்,தாடியுடனும் நடக்கக் கூடச் சக்தியில் லாமல் ஒருவன் தானியம் வாங்க நடந்து வந்தான். நடக்க முடியவில்லை என்பதால் அவன் கிழவனல்ல. நோயாளியாகவும் தெரியவில்லை. பல நாள் பட்டினி கிடந்தவனைப் போலத் தோற்றமளித்த அந்த வாலிபனைத் தாமரை நாச்சியார் மெத்தப் பரிதாபத்துடன் நோக்கினாள். அவனும் அவளை உற்றுப் பார்த்தான்.
அப்போது, “என்னம்மா தாமரை, இன்னும் முடியவில்லையா?” என்று கேட்டுக் கொண்டே அங்கு தாமரை நாச்சியின் தாயார் பெருமாயி அம்மாள் வந்து சேர்ந்தாள். வந்தவளின் கண்ணில் அந்தப் பட்டினிப் பிச்சைக்காரன் பட்டான்.
“என்னப்பா – உனக்கு என்ன வேணும்; அரிசியா? கம்பா? வரகா?” என்று பெருமாயி அம்மாளே அவனைப் பார்த்துக் கேட்டாள். அந்தப் பரம ஏழையான வாலிபனோ யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை மின்னல் வேகத்தில் அங்கு பாடிக் காட்டினான்.
‘கம்பு சோளம் வரகு வாங்க வரவில்லை அத்தை
கணவனாக உன் மகள் கழுத்தில்
தாலிகட்ட வந்தேன் அத்தை!’
இந்தத் திடுக்கிடும் பதிலைக் கேட்டுத் தீமிதித்தவள் போல ஆகி விட்ட பெருமாயி அம்மாள்;
“அடே, என்ன சொன்னே?” என்று ஆர்ப்பரித்து அவன் எதிரில் செல்வதற்குள் அந்த வாலிபன் தனது பரட்டைத் தலையையும், தாடியையும் அகற்றி மாறுவேடம் கலைந்து விட்டு அவர்களைப் பார்த்து;
“என்னை ஒண்ணும் தெரியாத மசச்சாமின்னு
கிண்டல் பண்ணுவிங்களே; இப்ப எப்படி
இந்த மசக்கவுண்டன் வேலை?”
என்று அசட்டுத்தனமாகச் சிரித்தான். தன் தாயார் இருப்பதையும், தோழிகள் சூழ இருப்பதையும் தானியம் வாங்க வந்தோர் கூடி நிற்பதையும் பொருட்படுத்தாமல் தாமரை நாச்சியார், ‘அத்தான்!’ என்று உரக்கக் கூவிக் கொண்டே அவனைத் தழுவிக் கொண்டாள்.
தாமரையின் தழுவலிலே வாழ்க்கையில் என்றுமே உணராத சுகத்தை முதன் முதலில் அனுபவித்துக் கொண்டிருந்த அந்த வாலிபனின் முதுகில் ‘சுளீர் சுளீர்’ என சவுக்கடிகள் விழுந்தன. “அப்பா! அவரை விட்டு விடுங்கள்!” என்று தாமரை கதறிக் கொண்டே தடுக்க முனைந்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. “டேய்! நெல்லியங்கோடா? என் குடும்பத்தைக் கெடுக்க குறுக்கு வழியிலா வந்திருக்கே? உன் குடலை உருவி மாலை போடலேனா என் பேரு மலைக்கொழுந்தாக் கவுண்டன் இல்லை” என்று சீறிப் பாய்ந்து அந்த வாலிபனைச் சவுக்கால் புரட்டியெடுத்தார் மணியங்குரிச்சி பெரிய காணியாளர். தாமரை அதைக் காணச் சகிக்காமல் மயங்கி விழுந்தாள் “அத்தான் அத்தான்”, என்று அலறியபடி! வதங்கிப்போன அல்லித்தண்டுபோல தரையில் கிடந்த அந்த வாலிபனைக் கொண்டு போய் கரையானும் செல்லும் கடிக்கக் கூடிய ஒரு கொட்டகையில் போட்டுப் பூட்டுமாறு உத்தரவிட்டார் மலைக்கொழுந்தாக் கவுண்டர். மயக்கத்திலிருந்த அவனை நாலுபேர் தூக்கிக் கொண்டுபோய் அந்தப் பயங்கரக் கொட்டடியில் அடைத்தனர்.
“செல்லாத்தாக் கவுண்டருக்கு இந்தச் சேதியெல்லாம் தெரிய வேண்டாம். தாமரையை உடனே தூக்கிக் கொண்டு போய் சிகிச்சை செய்” என்று மனைவியிடம் கூறிவிட்டு மலைக்கொழுந்தாக் கவுண்டர் வேகமாக வெளியேறினார்.
2. விருந்தினர் விடுதியும் வேதனைக் கொட்டடியும்
நடந்தது எதுவும் தெரியாமல் செல்லாத்தாக் கவுண்டரும்; மணமகனாக வந்த மாந்தியப்பனும் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்களும் மாப்பிள்ளை வீட்டாருக்கென ஒதுக்கப்பட்டிருந்த விருந்து மாளிகையில் உணவருந்தி மகிழ்ந்து, உறக்கத்தில் ஆழ்ந்தனர். தூக்கம் பிடிக்காத சிலர் சொக்கட்டான் ஆடத் தொடங்கினர். மாந்தியப்பனைச் சூழ்ந்து கொண்டு அவனது நண்பர்கள் மறுநாள் காலையில் அவனுக்கும் தாமரை நாச்சியாருக்கும் நடக்க இருக்கும் திருமணம் குறித்து கேலியும் கிண்டலும் செய்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
“இன்றிரவு எங்களோடு; நாளைக்கு இரவு எங்கள் நினைவெல்லாம் வரப் போகிறதா என்ன?”
“புதிதாக வருகிற ஒருத்திக்காகப் பழைய நண்பர்களை யெல்லாம் மறந்து விடுவேனா என்ன?”
“நீ மறக்க மாட்டாய் மாந்தியப்பா! ஆனால் வருகிறவள் மறக்க அடித்து விடுவாள். அதுவும் மலைக்கொழுந்தாக் கவுண்டர் மகள் மகாரூபவதி! அவள் மடியில் நீ தலை வைத்துப்படுத் திருக்கும்போது உலகம் என்று ஒன்று இருப்பதாகவே உனக்குத் தோன்றாது!”
“உங்கள் அனுபவத்தை யெல்லாம் எனக்குச் சொல்கிறீர்களா?”
“அப்படித் தான் வைத்துக் கொள்ளேன்!”
“நான் தாமரையை மணக்க வந்திருப்பது அவளது அழகுக் காகவும் வாழ்க்கையில் புதிய இன்பம் பெறுவதற்காகவும் என்பது என்னைப் பொருத்தவரையில் உண்மையாக இருந்தாலும் – இதில் என் தகப்பனார் செல்லாத்தாக் கவுண்டரின் ராஜதந்திர சிறப்பும் அடங்கியிருக்கிறது என்று உங்களுக்கெல்லாம் தெரியாது.”
“ராஜ தந்திரமா? என்னாப்பா அது?”
“என் பெரியப்பா கோளாத்தாக் கவுண்டரைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியுமா?”
“கேள்விப்பட்டிருக்கிறோம். சோழ மன்னன் கொடுத்த எழுபது வள்ளம் பூமியில் பல சீர்திருத்தங்களைச் செய்து வளப்படுத்தி பல குடும்பங்களுக்கு வாழ்வளித்தார் என்றும் சிற்றாலைப் பட்டணத்தை தலைமை ஊராக வைத்துத் தனது ஆதிக்கத்தில் இருந்த பகுதிக்கு நெல்லி வளநாடு என்று பெயர் சூட்டினார் என்றும் வளநாடு என்று ஒரு புதிய கிராமத்தையே உண்டு பண்ணினார் என்றும் வெள்ளாங்குளம் போன்ற பல ஏரிகளை அமைத்தார் என்றும் அவரைக் குடி மக்கள் எல்லாம் ‘மணியம்’ என்று மரியாதையுடன் அழைத்துப் பாராட்டினார்கள் என்றும் கோளாத்தாக் கவுண்டருக்கும் அவரது மனைவி பவளாத்தாளுக்கும் பிறந்தவன் நெல்லியங்கோடன் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம்.”
நண்பர்களில் ஒருவன் மாந்தியப்பனின் பெரியப்பாவைப் பற்றி இவ்வளவு விபரங்களைச் சுருக்கமாகச் சொன்னதும்; மாந்தியப்பன் சிரித்துக் கொண்டே.
“நெல்லியங்கோடன் பிறந்ததினால்தான் என் தந்தைக்கும் எனக்கும் அதிர்ஷ்டமே அடித்தது” என்றான்.
“என்னாப்பா அதிர்ஷ்டம்? சொல்லு! சொல்லு! இன்றிரவு உனக்குத் தூக்கம் வரப் போவதில்லை. அந்த அதிர்ஷ்டம் வந்த கதையையாவது சொல்லு!”
“நெல்லியம்மன் அருளால் பிறந்த மகன் என்று நெல்லியங்கோடன் எனப் பெயர் சூட்டினார்கள். நெல்லியங்கோடன் பிறந்த கவலையில் என் பெரியப்பா கோளாத்தாக் கவுண்டருக்கும் பெரியம்மா பவளாத்தாளுக்கும் ஆயுளும் குறைந்து விட்டது.”
“என்னப்பா இது; பிள்ளை பிறந்தால் சந்தோஷமாக இருப்பதற்குப் பதில் கவலை எதற்காக ஏற்பட்டது?”
“விளையும் பயிர் முளையிலேன்னு கேள்விப்பட்டதில்லையா? நெல்லியங்கோடன் நாலைந்து வயது வரையில் பேசவே இல்லை. ஊமைக் கோட்டான் – ஊதாத சங்கு – இப்படியெல்லாம் ஊரில் அவனைக் கேலி செய்தார்கள். பிறகு பேச ஆரம்பித்தான். பேச ஆரம்பித்தும் கூட பெற்றோருக்குக் கவலை ஓயவில்லை! அவன் நல்லது கெட்டது தெரியாமல் கபடு சூது அறியாமல் வெளுத்ததெல்லாம் பால் என்று சொல்லக்கூடிய ‘மசச்சாமி’யாக இருந்தான். அவன் இப்படி அசடு போல இருக்கிறானே; எப்படி எல்லாப் பொறுப்புக்களையும் கட்டிக் காத்து உயரப் போகிறான் என்று பெரியப்பாவும் பெரியம்மாவும் சோகமே உருவானார்கள். அதனால் இரு வரும் நோயில் விழுந்தார்கள். பிறகு அவர்கள் எழவே இல்லை. மரணப் படுக்கையில் என் தந்தையாரை அழைத்து நெல்லியங் கோடனை அவர் கையில் ஒப்படைத்து அவனுக்குத் துணை யாக இருந்து, அந்தப் பகுதி ஆளுகையையும் கவனித்துக் கொண்டு, அவன் பெரியவனானதும் அவனிடம் பொறுப்புக் களை வழங்குவதோடு, அவனுக்கு முறைப்பெண்ணான தாமரை நாச்சியையும் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண் டார். என் தந்தையும் அப்படியே செய்வதாக வாக்குறுதி கொடுத்து சத்தியம் செய்தார்.”
“இப்போது அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று?”
“என் தந்தையின் ராஜதந்திரம் என்றேனே; அதில் அந்த வாக்குறுதி பறந்து போய் விட்டது. மசச்சாமியாக இருந்த நெல்லியங்கோடன் மனநலமில்லாமல் சிற்றாலைப் பட்டணத் தில் முடங்கிக் கிடந்தவன், திடீரென்று எங்கேயோ போய்விட்டான். தேடித் தேடிப் பார்த்தார் என் தந்தை; அவன் ஆளே அகப்படவில்லை. அவனுக்கு மணமுடிக்க இருந்த தாமரை நாச்சியை எனக்கு மணமுடித்து விட்டால் மணியங்குரிச்சியார் பலமும் என் தந்தையைச் சேர்ந்துவிடும். நெல்லியங்கோடனுக்குள்ள நிலப்பகுதி ஆட்சிப் பொறுப்பு அனைத்தையும் என் தந்தையே அடைந்து விடலாம். மசச்சாமியாகி விட்ட நெல்லியங்கோடனுக்கும் தாமரைக்கும் ஒருவேளை திருமணமாகி விட்டால் அது தனது ஆதிக்க விஸ்தரிப்பை பாதிக்குமென்று தான் அவசர அவசரமாக எனக்கும் தாமரைக்கும் திருமணத்தை நடத்துகிறார் என் தந்தை!”
“ஏ; அப்பா! உன் தந்தை பெரிய சகுனிதானப்பா! யார் வீட்டு சொத்துக்கோ அதிபதியாகி விட்டார்; யாருடைய ஆட்சி உரிமையையோ தனதாக்கிக் கொண்டார் – தன் செயல்களுக்கு முத்திரை வைப்பது போல மணியங்குரிச்சிக்கும் சம்பந்தியாகி தன் வலிமையைப் பெருக்கிக் கொள்கிறார்!”
“இந்தக் காலத்திலே சகுனியாக இருந்து சூழ்ச்சி பண்ணனும்; விபீஷணனாக இருந்து துரோகம் பண்ணனும்? அதெல்லாம் அநியாயமாயிற்றே பாபச் செயலாயிற்றே என்று தயங்கினால் – பதவி, பவிசு, பத்து தலைமுறைக்குப் போதுமான ஆஸ்திபாஸ்தி, ஆதிக்கம், அதிகாரம் இதெல்லாம் ஒன்றும் நம்மை எட்டிக் கூடப் பார்க்காது! ஒருத்தரோட அழிவிலேயோ அல்லது துன்பத்திலேயோ தான் இன்னொருத்தரின் செழிப்பும் செல்வாக்கும் இருக்கிறது என்றால் அதற்கேற்றபடி காரியம் செய்வது தான் ராஜதந்திரம்.”
மாந்தியப்பனின் கொள்கையை மறுத்துரைக்க அந்த நண்பர்களில் யாரும் முன்வரவில்லை. காரணம்; மாந்தியப்பனுக்குக் கிடைத்த வாழ்வின் சுகத்தை அவனைச் சுற்றியிருந்தே அனுபவிக்கும் கூட்டம் அது! செல்லாத்தாக் கவுண்டரின் செயல்பாடுகளோ அல்லது மாந்தியப்பனின் நடவடிக்கைகளோ – அந்த நண்பர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ; கூடவே இருந்து கிடைத்தவரையில் ஆதாயமென்று வாழ்க் கையை சுவைத்துக் கொண்டிருப்பவர்கள் என்பதால் மாந்தி யப்பன் உரைத்த ராஜதந்திரக் கோட்பாட்டைத் தலையசைத் துப் புன்னகை புரிந்து ஆமோதித்து ஆரவாரம் செய்தனர்.
“என்னடா ஒரே கூத்தும் கும்மாளமும்? காலையிலே மண விழா! நல்லாத் தூங்கி எழுந்திருந்தால்தானே உடம்பு கலகலப் பாக இருக்கும்! போய்ப் படுங்க போங்க!” என்று முரட்டுக் குரலில் செல்லாத்தாக் கவுண்டர் கூச்சல் போட்டுக் கொண்டு வரவே, மாந்தியப்பனும் நண்பர்களும் அடங்கி ஒடுங்கி அவரவர்களின் படுக்கையில் சுருண்டு கொண்டார்கள்.
தாமரை நாச்சியாரின் அறையில் அவளது மயக்கம் தெளிவிக்க சிகிச்சைகள் விரைந்து நடைபெற்றன. தாயார் பெருமாயி அம்மாள் சோகம் கப்பிய முகத்துடன் மகளின் படுக்கையருகே அமர்ந்திருந்தாள். அவள் நெஞ்சில் கடந்தகால நிகழ்ச் சிகள் நிழலாடிக் கொண்டிருந்தன. தனது சகோதரன் கோளாத் தாக் கவுண்டரும், அவர் மனைவி பவளாத்தாளும் காலமான போது அவர்கள் அருகில் இருந்து கவனித்தவள்தான் பெருமாயி! பல நாட்கள் குழந்தையில்லாமலிருந்து பிறகு பிறந்த குழந்தை சுறுசுறுப்பும். விறுவிறுப்புமின்றி மசமசவென இருப்பது கண்டு பெற்றோர் பட்ட துன்பத்தை யெல்லாம் பெருமாயி அம்மாள் அறிவாள். யாருக்கும் ஒரு கெடுதியும் விளை விக்காமல் – எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அமைதியாக ஏற்றுக் கொண்டு கள்ளங்கபடமற்ற நிலையில்; இரண்டுங் கெட்டான், பிள்ளை என்ற பெயர் எடுத்துக் கொண்டிருந்த நெல்லியங்கோடன் மீது பெருமாயிக்கு ஒரு அனுதாபம் எப் போதும் உண்டு. “மணியங்குரிச்சி மலைக்கொழுந்தாக் கவுண்டர் வீட்டில் பிறந்துள்ள பெண் குழந்தையைத்தான் என் மகன் நெல்லியங்கோடனுக்குக் கட்டி வைக்க வேண்டும்” என்று கடைசியாகக் கண்களை மூடும் நேரத்தில் செல்லாத்தாக் கவுண்டரிடம் கோளாத்தாக் கவுண்டர் சொன்னது இப்போது கூட பெருமாயி அம்மாளின் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆனால் என்ன செய்ய முடியும்? நெல்லியங்கோடனோ சொத்து சுகம், ஆதிக்கத்திலிருந்த நெல்லி வளநாடு, தலைநகரம் சிற்றாலைப் பட்டணம் அனைத்தையும் இழந்து நாடோடியாக அலைந்து திரிந்துவிட்டு வந்திருக்கிறான். அவனையும் பிடித்து மலைக்கொழுந்தாக் கவுண்டர் கடுமையான தண்டனை கொடுக்கு மளவுக்கு கரையானும் செல்லும் இழைகிற கொட்டடியில் போட்டு அடைத்திருக்கிறார். அவனுக்குத் தாமரையைக் கல்யாணம் செய்து வைக்க முடியாவிட்டாலும் அந்தக் கொட்டடியிலிருந்து அவனை விடுவித்து வெளியே அனுப்பி விட்டால் போதும்; அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெருமாயி அம் மாள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.
சிகிச்சை மெல்ல மெல்லப் பலனளிக்கவே தாமரையாள் கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தாள். மகள் நலம் பெற்று விட்டதைக் கண்ட பெருமாயி. “தாமரை!” எனக்கூவி அவ ளைத் தழுவிக் கொண்டாள். இருவர் விழிகளிலும் நீர் பெருக் கெடுத்து வழிந்தது.
கொட்டடியில் அடைக்கப்பட்ட நெல்லியங்கோடன், கரையானும் செல்லுப் பூச்சியுமில்லாத ஒரு கால் வைத்து நிற் கும் இடம் கூடக் கிடைக்காமல் துடித்துத் துவண்டான். ஒரு பூங்காவில் உள்ள மலர்களை யெல்லாம் பறித்து அவற்றிலிருந்து சேகரித்துக் குவித்த மகரந்தத்துகள்களையெல்லாம் ஒருவனின் தலை முதல் கால்வரையில் உடல் முழுதும் கொட்டியது போல நெல்லியங்கோடனின் மேனி முழுவதும் கரையானும் செல்லும் இழைந்தன. ஊர்ந்தன. கடித்தன. பார்வைக்கு மக ரந்த அபிஷேகம் போல் இருந்தாலும் அந்தப் பாழும் பூச்சிகளின் தாக்குதலால் நெல்லியங்கோடன் நெளிந்து வளைந்து தவியாய்த்தவித்தான். நிற்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. படுக்க முடியவில்லை. கொட்டடியை அண்ணாந்து பார்த்தான். கெட்டியான உத்திரமொன்று குறுக்கே போடப்பட்டிருந்தது. அதைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டேயிருக்கலாம்; கரையானும் செல்லுப்பூச்சியும் படையெடுக் காது என்று கருதி, உயர எழும்பிக் குதித்து அந்த உத்திரத்தை ரு கரங்களாலும் கோத்துப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் கைகளில் மொசமொசவென்று கரையானும் செல்லும் மொய்த்து விட்டன. உத்திரத்தை விட் டுக் கீழே குதித்தான்.
அந்த லட்சக்கணக்கான பூச்சிகளின் தாக்குதலில் இருந்து தப்புவதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசித்தான்.
பிணங்களை எத்தனையோ புழுக்களும் பூச்சிகளும் மொய்த் துக் கொண்டு சாப்பிடுகின்றன. கழுகு, வல்லூறு, காக்கை போன்ற பறவைகள் பிணங்களைக் கொத்துகின்றன. நாய், நரி, ஓநாய்கள் கூட பிணங்களைக் கிழித்து இரையாக்கிக் கொள்கின்றன. அதனால்; தானும் பிணமாகி விட்டால் இந்த அற்பக் கரையான்களும் செல்லுப்பூச்சிகளும் என்னதான் கடித்தாலும் தனக்கு எந்தத் தொல்லையும் இருக்கப் போவதில்லை! அதுவே சரியான வழி என்ற முடிவுக்கு வந்தான்.
வேட்டியை அவிழ்த்துப் பாதியை நெடுக்காகக் கிழித்தான். பாதியை இடையில் கட்டிக் கொண்டான். இன்னொரு பாதி யைக் கழுத்தை இறுக்கக் கூடிய சுருக்காகப் போட்டு முடிந்து, ஒரு பகுதியை உத்திரத்தில் கட்டினான்.
பழுது பட்ட உரல் ஒன்று கிடந்தது. அதில் ஏறி, உத்திரத் தில் சுருக்கிட்டுக் கொண்டு பிணமாகத் தீர்மானித்து, உரலை உருட்டிக் கொணர்ந்து போட்டு அதன் மீது ஏறி நின்றான். சுருக்குப் போட்ட பகுதியைக் கழுத்தில் மாட்டிக் கொண்டான். கால்களால் உரலை உருட்டித் தள்ளி விட்டால் உத்திரத்தில் பிணமாகத் தொங்கிவிடுவான். உரலை உருட்டி விடக் கால் களையும் ஓங்கி விட்டான்.
அப்போது யாரோ ஓடிவந்து அவனை இறுகப் பிடித்துக் கொண்டதை உணர்ந்து திகைத்துப் போனான். “அத்தான்! என்ன வேலை செய்தீர்கள்?” என்று கதறி அழுது கொண்டே தாமரை அவன் உடலில் மொய்த்திருந்த கரையானையும், செல்லையும் தனது முந்தானையால், தட்டி விட்டுக் கொண்டே அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
தாமரையின் அறையில் பெருமாயி அம்மாள் மட்டுமே இருந்தாள். தாமரை, நெல்லியங்கோடனை அழைத்து வந்ததைப் பார்த்து அவசரமாக ஓடிப் போய் அறைக் கதவைச் சாத்தி உள் தாழ்ப்பாளைப் போட்டு விட்டு, பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த விளக்கையும் மங்கலாக எரியும்படி செய்தாள்.
தாமரையுடன் சேர்ந்து தனது அத்தை பெருமாயி அம்மாளும் தன் பக்கமிருப்பதை அறிந்த நெல்லியங் கோடனுக்கு ஒரு புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டது.
“நெல்லியங்கோடா! நீ இவ்வளவு நாளும் எங்கேயப்பா போயிருந்தாய்? மனநலமில்லாமல் எங்கேயோ ஓடி விட்டாய் என்று சொல்லியல்லவா உன் சித்தப்பா அவர் மகனுக்குத் தாமரையைத் திருமணம் பேசி முடித்து விட்டார்!” என்று பெருமாயி, கண் கலங்கக் கூறினாள்.
“அத்தை! நடந்த கதை முழுவதும் உங்களுக்குத் தெரியாது! சித்தப்பா செல்லாத்தாக் கவுண்டரின் சித்ரவதை பொறுக்க மாட்டாமல் நான் வளநாட்டை விட்டே ஓடி விட்டேன். எனக்குப் பரிந்து பேசிக் கொண்டிருந்த சோழன் தோட்டியை யும் சித்தப்பா ஊரைவிட்டே துரத்திவிட்டார். சோழன்தோட்டியும் என்னைப் பல இடங்களில் தேடிப்பார்த்தும் நான் கிடைக்காததால் உங்களிடம் வந்து வேலைக்குச் சேர்ந்து விட்ட விபரம் பிறகு தான் எனக்குத் தெரிய வந்தது. நிலம், அதி காரம், உடைமைகள் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக விடப்பட்ட நான், மாளிகையில் வாழ்ந்த நிலைமாறி ஆடுமாடு மேய்க்கும் ஆளாகச் சிறிது நாள் காலம் கடத்தினேன். கரூருக்கு அடுத்த ஆதிசெட்டிப்பாளையத்தில் ஒரு செட்டியார் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்பவனாகவும் இருந்தேன். நான் உயிரோடு இருப்பது தெரிந்தால் சித்தப்பா என்னைக் கொலையே செய்து விடுவார் என்று பயந்தே ஆதிசெட்டிப் பாளையத்தில் வாழ்க்கையை வறியவனாக ஓட்டிக் கொண் டிருந்தேன். உங்கள் மணியங்குரிச்சியில் பணி செய்து கொண் டிருந்த சோழன் தோட்டிக்கு, தாமரைக்கும் மாந்தியப்பனுக்கும் திருமணம் நடத்த சதி செய்யப்படுகிறது என்று தகவல் தெரிந் ததும் என்னை அரும்பாடுபட்டுக் கண்டு பிடித்துச் சேதியைச் சொல்லவே – நான் ஒருக்கணமும் தாமதிக்காமல் புறப்பட்டு வந்து விட்டேன். சோழன் தோட்டி எனக்கு சொல்லிக் கொடுத்த யோசனைப்படிதான் பிச்சைக்காரவேடத்தில் வந்து தாமரையைச் சந்தித்தேன்.”
நெல்லியங்கோடன் இந்த விபரங்களைச் சொல்லி விட்டுத் தொடர்ந்து, “என்ன இருந்தாலும் சோழன்தோட்டிக்கு என் தந்தையிடமும் என்னிடமும் உள்ள அன்பும் நன்றி உணர்வும் பாசமும் அளவிடவே முடியாதது அத்தை! அதில் ஒரு கடு களவு பாசம் கூட என் சித்தப்பாவுக்கு என் மீது இல்லை. அய்யோ. எத்தனை முறை என்னைக் கட்டி வைத்து கருவேல முள் கொப்புக்களால் அடித்துத் துவைத்திருக்கிறார் தெரியுமா? எல்லாமே எனக்கும் என் மகன் மாந்தியப்பனுக்கும்தான் வேண்டுமடா என்று அவர் கேட்டிருந்தால் எழுதியே கொடுத்துவிட்டு வந்திருப்பேன்! அத்தை; என் தந்தை விட்டுப்போன நாடு, நிலம், எதுவும் வேண்டாம் எனக்கு! என் தாமரை மட்டும் எனக்குத் கிடைத்தால் போதும்” என்று கண்களைக் குளமாக்கிக் கொண்டு பேசினான்.
“முதலில் சாப்பிடு கண்ணா?” என்று பெருமாயி பரிவுடன் கூறினாள்.
“அம்மா! அவர் உடம்பெல்லாம் பூச்சிக் கடி! தடித்துக் கிடக் கிறது! முதலில் அவர் வெந்நீரில் குளிக்கட்டும் அம்மா! வாங்க அத்தான்!” எனக் குழைந்து அழைத்தாள் தாமரையாள்! அவனும், பூரிப்புடன் குளிப்பதற்கு எழுந்தான். அந்த நேரத்தில் படபட வென கதவு தட்டும் ஒலி!
பெருமாயி அம்மாளும் தாமரையும் திடுக்கிட்டுத் திகைத்தனர்.
ஓங்கி உதைக்கப்பட்டதால் கதவு உடைந்து விழுந்தது. கதவை உடைத்துக் கொண்டு கோபங் கொண்ட புலி போல மலைக் கொழுந்தாக் கவுண்டர் அவர்கள் எதிரே வந்து நின்றார்.
3. மகிழ்ச்சியும் மருட்சியும்
“எங்கே அந்த மசச்சாமி?”
மலைக்கொழுந்தாக் கவுண்டரின் இடி முழக்கம் போன்ற அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் பெருமாயி அம்மாளும் தாமரைநாச்சியும் வாயடைத்துப் போய் நின்றனர்.
“இதோ இருக்கிறேன் மாமா!” என்றவாறு; அங்கு தொங்கிக் கொண்டிருந்த பட்டுத் திரையின் பின்னாலிருந்து நெல்லியங்கோடன் வெளியே வந்தான். அவன் முகத்தில் அச்சம் இல்லை. அத்தையும், அன்புக்குரிய தாமரையாளும் அருகே யிருக்கிறார்கள் என்ற அசட்டுத் துணிச்சல் போலும்!
“உன்னைக் கொட்டடியில் போட்டது மட்டும் போதாது! கொலையே செய்திருக்க வேண்டும். வீட்டில் நல்ல காரியம் நடக்கிறதே என்பதற்காக இந்த அளவோடு விட்டது என் தவறாகப் போயிற்று!” எனச் சீறிப் பாய்ந்து அவன் தலை முடியைப் பிடித்து உலுக்கினார்.
“விடுங்கள் அவனை!” என்று அவரது கையைப் பிடித்து இழுத்துத் தள்ளினாள் பெருமாயி அம்மாள். “அப்பா! முதலில் என்னைக் கொன்று விட்டு பிறகு அவரைக் கொல்லுங்கள்!” என்று கத்திக் கொண்டே குறுக்கே வந்து நின்றாள் தாமரையாள்!
“இந்த வீட்டில் பெண்கள் ராஜ்யம் நடத்துகிறீர்களா? உங்கள் இருவரின் செய்கையால் நாளைக்கு இந்த ஊர் மட்டுமல்ல; பக்கத்து நாடுகள் எல்லாம் கூட என்னைக் காறித் துப்பும்” என்று கோபாவேசமாகக் குதித்தார் மலைக்கொழுந்தாக் கவுண்டர்
“நாங்கள் என்ன செய்து விட்டோம்? நீங்கள்தான் செல்லாத்தாக் கவுண்டர் பேச்சைக் கேட்டுக் கொண்டு இவன் எங்கேயோ போய் செத்துத் தொலைந்தான் என்று முடிவு கட்டி தாமரைக்குத் திருமணம் நிச்சயம் செய்தீர்கள். இப்போது இவன் உயிரோடு இருக்கிறான். இவனுடைய உடைமைகளையெல்லாம் தன்னுடையதாக்கிக் கொண்டு இவனை அடித்தும் உதைத்தும் ஆடுமாடு மேய்க்க வைத்தும் இனிமேல் இருந்தால் உயிருக்கே ஆபத்து வருமென்று பயந்து ஓடிப்போய், இப்போதுதான் பிள்ளையாண்டான் வந்திருக்கிறான். இவன் மீது பாய்ந்து விழுகிறீர்களே; இது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!” என்று பெருமாயி அம்மாள் கண்களில் நீர்வழியக் கேட்கவே; ஒரு கணம் மலைக்கொழுந்தாக் கவுண்டர் அசைவற்று நின்றார். பிறகு பேசத் தொடங்கினார்.
“வந்துவிட்டான் சரி; ஆனால் மனநிலை சரியில்லாத பித்தனாக அல்லவா வந்து தொலைந்திருக்கிறான்.”
இதைக் கேட்ட நெல்லியங்கோடன் மெல்லப் புன்னகை புரிந்தவாறு ”மாமா!’ என்று பாசம் பொழிய அழைத்து;
“சூதுவாது கள்ளம் கபடம் தெரியாதவன் என்றால் அவன் பைத்தியமா? கொத்த வரும் பாம்பைக்கூடத் தடியெடுத்து அடிக்க நினைக்காமல் கையெடுத்துக் கும்பிட்டுப் போய்வா; என்னை ஒன்றும் செய்யாதே! என்று கேட்டுக் கொள்வேன். கொத்தியே தீருவேன் என்று அந்தப் பாம்பு வந்தால் சரியென்று அதையும் தாங்கிக் கொள்வேன். இதற்குப் பெயர் பைத்தியமா மாமா?” என்று உருக்கமுடன் கேட்டான்.
“பார்த்தீர்களா? எவ்வளவு நல்ல மனசு பார்த்தீர்களா? இவனைப் போய் கொட்டடியில் அடைத்துக் கொடுமைப்படுத்தியது அக்கிரமம் அல்லவா?”
பெருமாயி அம்மாள். கணவனின் கால்களைப் பிடித்துக் கொண்டு மெழுகாக உருகினாள்.
“சரி; நடந்தது நடந்துவிட்டது. இனி என்ன செய்யமுடியும்? காலையில் திருமணத்திற்கு ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கலாம்” என்ற மலைக்கொழுந்தாக், கவுண்டரிடம் மீண் டும் கெஞ்சிடும் குரலில் பெருமாயி கேட்டாள், ”இவனுக்கும் நமது பெண்ணுக்கும்தானே?” என்று!
ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு; அவர், தனது மனைவி யின் தோளை உலுக்கியபடி, “தாமரையைத் தவிர இன்னொரு பெண் நமக்குப் பிறக்கவில்லையே!” எனக் கேலியாகக் கேட்டார்.
“அப்பா! சிறுவயதிலேயே என்னை அத்தானுக்கென்று நிச்சயித்து விட்டீர்கள். நானும் அவரை என் இதயத்தில் வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறேன். மாந்தியப்பனுக்கு என்னை மணமுடிக்க நீங்கள் தீர்மானித்திருந்த போதிலும் கூட, என் அத்தான் எப்படியும் வந்துவிடுவார் என்றே எதிர் பார்த்திருந்தேன்- நான் நினைத்தபடி வந்துவிட்டார். இனியும் மறுப்பு சொல்லாமல் எங்களுக்கு மணவிழாவை நடத்தி வையுங்கள் அப்பா!” தாமரையாளின் பேச்சில் தவிப்பு இருந்தது.
“மாமா! நீங்கள் கொடுமைப்படுத்தியதையெல்லாம் மறந்து விட்டு நானும் இவளைக் கட்டிக் கொள்கிறேன்!” என்று, மறப்போம் மன்னிப்போம் என்ற பாணியில் நெல்லியங்கோடன் பேசினான்.
“ஓகோ! போனால் போகிறது என்று தயை புரிந்து என் மகளைக் கட்டிக் கொள்ள சம்மதம் தருகிறாயா?” என்று உறுமினார் மணியங்குரிச்சிக் கவுண்டர்.
“எப்போதுமே உங்கள் மருமகன் இப்படி விளையாட்டாகத் தானே பேசுவான். இதையொரு பொருட்டாக எடுத்துக் கொள்கிறீர்களே! சரி; அதை விடுங்கள்! காலையில் தாமரை நாச்சி விருப்பம்போல் திருமணத்தை நடத்த சம்மதம் கொடுத்தேன் என்று சொல்லுங்கள்!” கெஞ்சினாள் பெருமாயி அம்மாள்!
“ஆமாம் மாமா! இப்போது நீங்கள் அத்தை சொன்னது மாதிரி சொல்லிவிட்டீர்களே யானால் நானும் தாமரையும் தனித்தனி அறையிலே தனித்தனி கட்டில்களிலே படுத்துக் கொண்டு இன்று இரவெல்லாம் இன்பக் கனவுகள் காண்போம்! அந்தக் கனவில் வானத்தில் உள்ள மேகங்கள் எல்லாம் தோணிகளாக மிதக்கும்! வானவில் இருக்கிறதே அது ஒரு அலங்காரப் படகாக வரும். அந்தப் படகில் நட்சத்திரங்களையெல்லாம் கோத்து நகைகளாக மாட்டிக்கொண்டு தாமரையாள் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டிருப்பாள். சந்திரமண்டலத்து இளவரசனான நான்; அங்கிருந்து திடீரென்று அந்த அலங்காரப் படகில் குதிப்பேன். என்னைப் பார்த்ததும் தாமரை ஓடிவந்து…ஓடிவந்து…”
நெல்லியங்கோடனின் முழு வர்ணனையும் முடிவதற்குள் அவன் அத்தை குறுக்கிட்டு; “இதெல்லாம் கலியாணம் முடிந்த பிறகு தாமரையிடம் பேசிக் கொள்ளலாம்” என்று சாதுர்யமாகத் தடுத்துவிட்டாள்.
கதவை உடைத்துக் கொண்டு கனல் கக்கும் எரிமலையாக உள்ளே நுழைந்த மலைக்கொழுந்தாக் கவுண்டர்; பெருமாயி அம்மாள் நெல்லியங்கோடனிடம் கொண்டுள்ள உறவின்பாச ணர்வையும், அவனையே மணப்பதற்குக் காத்திருந்ததாகக் கூறிய தாமரைநாச்சியின் காதல் நெஞ்சத்தையும் புரிந்து கொண்டு அவர்களின் மனத்தை மாற்றுவதற்கு வேறுவகையான உத்தியைக் கையாள முயன்றார்.
“செல்லாத்தாக் கவுண்டர் நம்மை விடப் பலமடங்கு சிறப் பும் செழிப்பும் உள்ளவர். ஒரு சிற்றரசுக்குச் சமமான செல் வாக்கும் ஆள் அம்பும் உடையவர். அவரைப்போய் விரோதித்துக் கொள்வது நமக்கு நல்லதா?”
இப்படியொரு கேள்வியை எழுப்பியவுடன்; நெல்லியங் கோடன், தனது முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு – “மாமா சொல்வதும் சரிதான்! செல்லாத்தாக் கவுண்டர் எமன் என்றால் அவர் மகன் மாந்தியப்பன் இருக்கிறானே; அவன் எமகிங்கரன்! இருவரின் பகையைத் தேடிக் கொண்டால் பிறகு மணியங்குரிச்சிக்கு ஆபத்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. எதற்கும் யோசித்து முடிவு செய்யுங்கள்” என்றான். தனது அத்தானின் பேச்சு அசட்டுத்தனமாகப் போவதை எண்ணி வருந்திய தாமரை “அப்பா! அத்தான் எவ்வளவு நல்லவர் என்பது இப்போதாவது புரிகிறதா? இப்படியொரு உத்தமருக்கு நான் எப்படியப்பா துரோகம் செய்ய முடியும்?” என்று விம்மியழத் தொடங்கி விட்டாள்.
“எல்லாம் சரியம்மா ; நம்முடைய மணியங்குரிச்சியின் மானப் பிரச்சினையும் இதில் அடங்கியிருக்கிறது என்பதை மறந்து விடாதே!”
“மகளின் வாழ்க்கைப் பிரச்சினையை உங்கள் கௌரவப் பிரச்சினைக்காக அலட்சியப்படுத்துவது நியாயந்தானா அப்பா?”
இப்போது அமைதியாகப் பெருமாயி அம்மை தலையிட்டாள்.
“செல்லாத்தாக் கவுண்டரிடம் உண்மையான விபரத்தைச் சொல்லி அவரை சமாதானப்படுத்தி, அவரையும் இருந்து இந்தக் கலியாணத்தை நடத்தச் சொல்லக் கூடாதா?”
மனைவியின் இந்தக் கருத்தைக் கேட்டதும் மலைக்கொழுந்தாக் கவுண்டர் சிடுசிடுவென முகத்தை மாற்றிக் கொண்டு ஏதோ முணுமுணுத்தவர்; அறைக்குள் அங்குமிங்கும் உலவிக் கொண்டேயிருந்து விட்டுப் பிறகு மனைவியையும் மகளையும் பார்த்து தனக்குற்ற சங்கடமான நிலையை விளக்க ஆரம்பித்தார்.
“இதோ பாருங்கள் பெருமாயி! தாமரை! மாந்தியப்பன் தான் மாப்பிள்ளையென்று நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு சுமங்கலிப் பெண்களிடம் அருமைப்பெரியோர் சீர்த்தட்டங்களை நீர் சுற்றிக் கொடுத்தாயிற்று! முப்புரித்தாலிக்கான பொன்னும் வழங்கி பொற்கொல்லரும் அதனைத் தயாரித்து அனுப்பி வைத்துவிட்டார். நெல் வேகவைத்து உலர்த்தும் சடங்கும் மணவீட்டில் நடந்துவிட்டது. பாலுள்ள மரத்துக்குப் பால்விட்டுப் பூஜை செய்து ஒரு கிளையை வெட்டி மூன்று கட்டுக்கட்டி மணவிழா மண்டபக் கூரையின்மீது காயப் போட்டாகி விட்டது. இரு வீட்டாரும் இருகூடை உப்பு மாற்றியாகி விட்டது. மணவறையில் மேடையிட்டுப் பூசி மெழுகப் புற்று மண்ணும் சம்பிரதாயப்படி எடுத்தாயிற்று. இருபத்தி நாலு நாட்டில் உள்ள பெரியவர்களையும் வாழ்த்து வழங்க வரு மாறு அழைத்து அவர்களும் பெரும்பாலோர் வந்திறங்கிவிட்டார்கள். மாப்பிள்ளை தலையில் தொங்கவிட்டுக் கட்டிச் சிங்காரிக்க உருமாலையும், வால்கோவணம் போட்டு உடுத் திட பட்டு வேட்டியும், மாலையணிவித்து அழைத்துவர வாட்ட சாட்டமான குதிரையும் மாப்பிள்ளையின் மைத்துனன்; அதாவது நமது மகன் சின்னமலைக்கொழுந்து தயாரித்துவிட்டான். திருமணச் செய்தி; சோழன்தோட்டி மூலமாக எல்லா ஊர் களுக்கும் முரசு ஒலியால், ‘குப்பாரிகொட்டித்’ தெரிவிக்கப் பட்டாகிவிட்டது. மாப்பிள்ளை வீட்டார் நமது வீட்டுக்கு மரபுப்படி நாழியரிசிக் கூடை அனுப்பி வைத்தது மட்டுமல்ல; ‘பொன் பூட்டிக் குலம் ஓதுதல்’ என்ற சடங்கு செய்யவும் மணமகனின் உறவுப் பெண்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்குப் ‘புதுக்கலத்துண்ணல்’ என்ற விருந்தும் நம் வீட்டில் நடைபெற்றாகி விட்டது. இத்தனைக்கும் பிறகு: செல்லாத்தாக் கவுண்டரிடம் இந்தத் திருமணம் நின்றுவிட்டது என்று எப்படி முகம் பார்த்துச் சொல்ல முடியும்? வளநாட்டிலிருந்து வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டார் மட்டுமல்ல; பிற நாட்டிலிருந்து வந்து குழுமியிருக்கும் கொங்கு மக்கள் எல்லோரும் நமது முடிவைக் கேட்டால் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க மாட்டார்களா? பெருமாயி! உன்னை மணந்த குற்றத்திற்காகவும் – தாமரை! உன்னை மகளாகப் பெற்ற குற்றத்திற்காகவும் இந்த மணியங்குரிச்சி மலைக்கொழுந்தானின் மானம் கப்பலேற வேண்டுமென்று சொல்வீர்களேயானால் அது எனக்கு சம்மதம் தான்!”
இப்படிப் பேசிக் கொண்டிருந்தவருக்கு; மேலும் பேச நா எழவில்லை. தோளில் புரண்ட பட்டுப் பீதாம்பரத்தையெடுத் துக் கண்களைத் துடைத்துக் கொண்டார். அவரது நிலை கண்டு பதறிப்போன நெல்லியங்கோடன் அவரது கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு; “மாமா! எனக்குக் கல்யாணமே வேண்டாம். நான் பிரமச்சாரியாகவே இருந்துவிடுகிறேன். என்னால் உங்கள் குடும்பப் பெருமைக்குக் குந்தகம் வரவேண்டாம்!” என்று உணர்ச்சி பொங்கக் கூவினான். அவனது செயலை அணுவளவுகூட ஒப்புக்கொள்ள மனமில்லாத தாமரைநாச்சி தன்னையும் மறந்து ஆவேசமாகக் கத்தினாள்!
“அப்பா! அம்மா! அத்தான்! நீங்கள் மூவரும் சேர்ந்து ஏதோ ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆனால் அதே நேரத்தில் என் முடிவையும் கேட்டுக் கொள்ளுங்கள். மணந்தால் என் அத்தான் நெல்லியங்கோடனைத்தான் மணப்பேன். இல்லை யென்றால்; உங்கள் விருப்பப்படியே மலரும் காலைப்பொழு தில் இந்தத் தாமரைநாச்சியின் பிணத்துக்கு மாந்தியப்பனை விட்டு மங்கலநாண் பூட்டச் சொல்லுங்கள்!”
தாமரையின் கண்களில் பறந்த தீப்பொறியையும் அவள் நெஞ்சில் நிறைந்த வைராக்கியத்தையும் உணர்ந்த மலைக் கொழுந்தாக் கவுண்டர் தூணோடு தூணாக அசைவற்று நின்று விட்டார்.
“தாமரை!” என்று அவளது பேச்சைத் தடுத்திடக் குறுக்கிட்டான் நெல்லியங்கோடன்!
“சும்மா இருங்களத்தான்!” என்று அவனை ஒருமுறை தாமரை முறைத்துப் பார்த்ததும் அவன் எதுவும் பேசாமல் நின்றுவிட்டான். தாமரைநாச்சி அவன்மீது கொண்டுள்ள அன்பின் ஆழம் அவனுக்குப் புரிந்ததால் அப்படியே நெகிழ்ந்து போய்விட்டான்.
புயலுக்குப்பின் ஏற்பட்ட அமைதியென அந்த அறையில் சிறிது நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது.
தூணாக நின்ற மலைக்கொழுந்தாக் கவுண்டர் ஒரு துளி அசைந்தார். பெருமாயியையும், தாமரையையும் தனது ஒளிமங் கிய விழிகளால் உற்று நோக்கினார்.
“உங்கள் இஷ்டப்படியே காலையில் நெல்லியங்கோடன் தாமரைநாச்சி திருமணம் நடக்கும். நான் இப்போதே சென்று செல்லாத்தாக் கவுண்டரை சமாதானம் செய்கிறேன்.”
இதைச்சொல்லி அவர் வாய் மூடுவதற்குள் தாயும் மகளும் மகிழ்ச்சிப் பெருக்கில் அவர் காலில் விழுந்து வணங்கினார் கள். நெல்லியங்கோடன் மட்டும் தலையைச் சொரிந்தவாறு நின்று கொண்டிருந்தான். காலில் விழுந்து வணங்கியவர் களைத் தூக்கி நிறுத்தி அவர்களின் விழியில் கொட்டிய ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துவிட்டு, ‘வாழ்க! வாழ்க!’ என்றுரைத்தவாறு மலைக்கொழுந்தாக் கவுண்டர் அந்த அறையிலிருந்து வெளியேறினார். தாமரை, தன் தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவள் கன்னங்களில் முத்தங்களைப் பொழிந்து தள்ளி விட்டாள். அதையே பார்த்துக் கொண்டிருந்த நெல்லியங்கோடன்; தனது உடலெல்லாம் புல்லரிக்கத் தனது கன்னத்தை மெல்லத் தடவிக் கொண்டான். அதை கவனித்துவிட்ட தாமரையின் கன்னங்கள் சிவந்தன. நாணம்; அவள் கழுத்தைப் பிடித்துத் தள்ள தலையைக் குனிந்து கொண்டு மானைப்போலத் துள்ளி தனது மஞ்சத்தில் விழுந்து தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.
நெல்லியங்கோடன் தாமரை நாச்சியார் திருமணத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லையென்றுணர்ந்த மலைக்கொழுந்தாக் கவுண்டர், மணமகன் வீட்டார் தங்கியிருக்கும் விருந்தினர் விடுதியில் மனமொடிந்தவராக நுழைந்தார். நல்ல தூக்கத்தில் இருந்த செல்லாத்தாக் கவுண்டரை அவரது பணியாட்கள் சென்று எழுப்பினார்கள். கட்டிலில் எழுந்து அமர்ந்த செல்லாத்தாக் கவுண்டர், மலைக்கொழுந்தாக் கவுண்டரை உள்ளே அழைத்து வருமாறு ஆணையிட்டார். மிக்க மரியாதையுடன் உள்ளே நுழைந்த மணியங்குரிச்சியார்; செல்லாத்தாக் கவுண்டரின் தலையசைப்பின் குறிப்பையறிந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்தார்.
“என்ன விசேஷம் இந்நேரத்தில்?” செல்லாத்தாக் கவுண்டரின் கனத்த கம்பீரமான குரல் இப்படி ஒலித்தது.
“ஒன்றுமில்லை. உங்களிடம் மன்னிப்புக் கேட்டு கொள்ள வந்தேன்.”
“ஏன்? என்ன தவறு செய்து விட்டீர்? நமது கொங்குப் பெருமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய திருமண முறைகள் அனைத்தையும் வெகு சிறப்பாகச் செய்துள்ளீர்கள்; பிறகு எதற்காக மன்னிப்புக் கேட்கிறீர்கள்?”
“அதில் எல்லாம் நான் எந்தக் குறையும் வைக்கவில்லை!”
“பிறகென்னதான் குறை? மனம் விட்டுச் சொல்லும்!”
“எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை; என் அழைப்பை யேற்று எல்லா நாட்டுப் பெருமக்களும் மணவிழாவுக்கு வந்து விட்டனர். இன்னும் சிலர் வந்து கொண்டுமிருக்கின்றனர்!”
“ஆமாம்! ஆமாம்! ஓ; ஒன்று உம்மிடம் சொல்ல மறந்து விட்டேனே! நமது மேனாட்டு சிற்றரசர் தலையூர்க்காளியும் கூட என் அழைப்பின் பேரில் வருகிறார்! அதில் ஒன்றும் ஆட்சேபணையில்லையே உமக்கு?”
“ம்… வந்து…வந்து…”
“ஓகோ தலையூரார் வருவதில் உமக்கு இஷ்டமில்லை போலும். அதைச் சொல்ல முடியாமல்தான் இப்படி மென்று விழுங்குகிறீர்! மணியங்குரிச்சியாரே; ஒன்றை மறந்து விடக் கூடாது! வளநாட்டுக்கும் இளஞ்சிங்கம் தலையூர்க் காளிக்கும் என் காலத்தில் ஏற்பட்டுள்ள உறவு மிகவும் அழுத்தமானது. மிக நல்ல இளம் நண்பர். சில நேரங்களில் என் கருத்து அவருக்குப் பிடிக்காவிட்டாலுங்கூட என்னிடம் கொண்டுள்ள நட்புக்காக என்னை விட்டுக் கொடுக்கமாட்டார். எனக்காக எதையும் செய்யக்கூடிய உத்தம நண்பர். அவர் இல்லாமல் என் மகனின் திருமணம் நடப்பது நல்லதல்ல என்பதால்தான் அவரை அழைத்திருக்கிறேன். வந்து சேருவதாக அவரிடமிருந்தும் ஓலை வந்துவிட்டது. அவர் தங்குவதற்கு ஏற்ற இடம் ஒன்றை ஏற்பாடு செய்யத் தவறிவிடாதீர்!”
“எனக்கு அவரைப்பற்றித் தெரியாதா என்ன? குறுநில வேந்தர் மட்டுமல்ல; குன்றுகளைப் பந்தாடும் குன்றாத வீரம் படைத்த இளைஞர் நன்றி மறவாத நண்பர் தங்களுக்கும் அவருக்குமுள்ள நட்பு யாராலும் அசைக்க முடியாதது! எல்லாம் எனக்குத் தெரியும். அவர் திருமணத்திற்கு வருவது எனக்கும் பெருமைதான். ஆனால் நான் இந்த நேரத்தில் தங்களைக் காணவந்த காரணம் வேறு!
எள் முனையளவு சலனமடைந்தவராகச் செல்லாத்தாக் கவுண்டர் உடலை குலுக்கிக் கொண்டு, மீசையை வருடியவாறு ஆவலை முகத்தில் தேக்கி;
“வேறென்ன காரணம்?” என்றார் கடுமையான குரலில்!
மலைக்கொழுந்தாக் கவுண்டருக்கு நாக்கு உலர்ந்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு நிலைமையை விளக்கிவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.
“மன்னித்துக் கொள்ளுங்கள்!”
“விஷயத்தை சொல்லாமலேயே மன்னித்துக் கொள்ளுங்கள் என்றால் எதற்காக மன்னிப்பது? ஏன் மன்னிப்பது?”
சலித்தவாறும் சிலிர்த்தவாறும் செல்லாத்தாக் கவுண்டர் இந்தக் கேள்வியைக் கேட்டபோது;
“அப்பா! நான் சொல்லுகிறேன்” என்று தணலை மிதித்தவன் போல மாந்தியப்பன்; தனது நண்பர்களுடன் அங்கே நுழைந்தான்.
”ஒன்றுமில்லையப்பா! காரணம் இதுதான்! எங்கிருந்தோ நெல்லியங்கோடன் வந்துவிட்டான். இவர் மகளை அவனுக்குக் கட்டி வைக்கத் தீர்மானித்துவிட்டார்.”
மாந்தியப்பனின் வாயிலிருந்து இந்தச் சொற்கள் தீயிடை வீழ்ந்து ஆழ்ந்து வெளிப்பட்ட இரும்புத்துகள்களின் கனலோடு புறப்பட்ட அந்தக் கணமே; ”ஆ! என்ன?” என்று புலி போல எழுந்து; தனது படுக்கையருகேயிருந்த வாளையெடுத்து மலைக்கொழுந்தாக் கவுண்டரை நோக்கி ஓங்கினார் செல்லாத்தாக் கவுண்டர்.
மின்னல் போலப் பாய்ந்து ஒருகரம் செல்லாத்தாக் கவுண்டரின் வாளின் பிடியைத் தடுத்து நிறுத்தியது. எல்லோரும் ஆச்சரியத்துடன், பதட்டத்துடன் பார்த்தார்கள். தடுத்து நிறுத்தியது தலையூர்க்காளி என்பதைக் கண்டு மகிழ்ச்சி – மருட்சி – இவற்றுக்கிடையே அசைவின்றி அனைவரும் நின்றார்கள்.
4. இனிய சூழலும் புதிய சோகமும்
“யார்? தலையூர்த் தம்பியா?”
செல்லாத்தாக் கவுண்டர் வியப்பு நிறைந்த வினாவை எழுப்பிய அதே சமயத்தில் மணியங்குரிச்சியில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணியவராய்த் தலைகுனிந்து நின்றார்.
தேக்குமரத் தேகம் தேளின் கொடுக்கு போன்ற மீசை தீட்டிய வாளின் ஒளி உமிழும் கண்கள் – உயரமான தோற்றம் உயர்ந்த நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பட்டுத் துணியால் ஆன தலைப்பாகை போன்ற மகுடம் இருபது அல்லது இரு பத்தி ஐந்து வயது மட்டுமே மதிக்கத் தகுந்த இளமைத் துடிப்பு இத்தனைக்கு மிடையே எதையும் நிதானத் தன்மையுடன் ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய உள்ளம் படைத்தவன் என்பதற்கான முக பாவம் இவ்வளவுக்கும் சொந்தக் காரனான மேனாட்டுச் சிற்றரசன் தலையூர்க்காளி; மெல்லத் தனது கையைச் செல்லாத்தாக் கவுண்டரின் தோளில் வைத்து;
“பெண் கொடுக்கும் சம்பந்தியையே பிணமாக்கத் துணியு மளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது?” என்று கேட்டான். பஞ்சு போன்ற மிருதுவான நெஞ்சம் படைத்த நெல்லியங்கோடனையே தனது வஞ்சக மூளையின் பலத்தால் வள நாட்டை விட்டுத் துரத்தி விட்ட செல்லாத்தாக் கவுண்டர்; தலையூர்க்காளியை இந்தச் சூழ்நிலையில் முழுமையாகத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு – மலைக் கொழுந்தாக் கவுண்டரை மிரட்டிப் பணிய வைப்பதற்காக, வடிகட்டிய பொய்யை வாரியிறைக்கத் தொடங்கினார்.
“மேனாட்டுச் சிற்றரசர் தலையூர்க்காளிக்கு அழைப்பு அனுப்பியுள்ளேன். அவரும் மணவிழாவுக்கு வருகிறார்; என்று சொன்னேன். உடனே மணியங்குரிச்சியார் மலைக்கும் மடுவுக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார். யாரைக் கேட்டுக் கொண்டு அழைப்பு அனுப்பினீர் என்று ஆத்திரப்பட்டார். என் இனிய நண்பர் – அவரை என் மகன் திருமணத்துக்கு அழைக்க எவரையும் கேட்கத் தேவையில்லையென்றேன். தலையூர்க்காளி; திருமணத்துக்கு வருவதாக இருந்தால் என் மகள் தாமரையை மாந்தியப்பனுக்கு மணமுடிக்க இயலாது; இப்பொழுதே எல்லோரும் திரும்பிப் போய்விடலாமென்று கேவலமாகப் பேசி விட்டார்! தலையூர்த் தம்பீ; என்னை இவர் இழித்துப் பேசியிருந்தாலும் பரவாயில்லை – வளநாட்டுக்கு உற்ற நண்பராகத் திகழும் மேனாட்டுச் சிற்றரசையல்லவா என் முன்னால் தாழ்த்திப் பேசிவிட்டார். பிறகு இவர் தலை இருக்கலாமா? அதனால்தான் வாளை வீசினேன்! உயிர், கெட்டி இவருக்கு உங்கள் குறுக்கீட்டால் தப்பி விட்டார்!”
செல்லாத்தாக் கவுண்டரின் இந்தப் பதில் செவியில் விழுந்த மாத்திரமே; தலையூர்க்காளி, தனது வாலிபமிடுக்கின் காரணமாகத் துள்ளிக் குதிப்பான் என்று அங்கிருந்தோர் எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் ஓசைப்படாமல் நகைத்துக் கொண் டான்.
“மணியங்குரிச்சி பெரிய காணியாளருக்கு நான் இந்த விழாவுக்கு வருவது சாதாரணமாகப் பட்டிருக்கலாம். நான் வருவதால் அவரது பெருமைக்கு இழுக்கு ஏற்படுமென்று கருதியிருக்கலாம். அல்லது என்னைப் போன்ற ஒரு சிற்றரசனை அழைப்பதால் இந்த ஊரில் தங்க வைக்கவோ, வசதிகள் செய்து கொடுக்கவோ தன்னால் இயலாதே என்று அவர் கருதியிருக்கலாம். இப்படி யொரு சிறிய விஷயத்தைத் தாங்கள் பூதாகாரப்படுத்திக் கொண்டு மங்கல விழா நடைபெறுகிற இடத்தை அமங்கலமாக்கிட முன் வரலாமா?”
தலையூர்க்காளியின் நிதானமிகுந்த இந்தப் பேச்சில் ராஜ கம்பீரம் முதலிடம் பெற்றிருந்தது.
சூதுவலை பின்னி விட்டார் செல்லாத்தாக் கவுண்டர் என் பதையுணர்ந்து பதைத்துப் போன மலைக்கொழுந்தாக் கவுண்டர், தலையூர்க்காளியிடம் நெருங்கி வந்து நின்று; “இதை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார்.
“செல்லாத்தாக் கவுண்டர் எது சொன்னாலும் அதை நம்புவதையே என் ஜென்மம் எடுத்த பயனாகக் கருதக் கூடியவன் நான்! அவருக்கு உம்மீது இவ்வளவு ஆத்திரம் ஏற்பட்டுக் கொடுவாளை ஓங்கியிருக்கிறார் என்றால்; அதற்குக் காரணம் அவருக்கு என் மீதுள்ள அளவற்ற அன்பும் மரியாதையும்தான் என்பதை நான் அறிவேன். மணியங்குரிச்சியார் அவர்களே! ஆனால் ஒன்று; நீங்கள் என்னை அழைக்காதது பற்றியோ அல்லது ஏன் அழைத்தீர் என்று செல்லாத்தாக் கவுண்டரைக் கேட்டது பற்றியோ எனக்குத் துளியும் வருத்தமில்லை. கோபமில்லை. எனக்குள்ள மனச் சங்கடமெல்லாம் என்னை மையமாக வைத்து உங்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அதனால் மாந்தியப்பன் – தாமரை மணவிழாவே தடைப்பட்டுப் போகிறதே என்பதுதான்.”
அமைதியாக விளக்கமளித்த தலையூர்க் காளியின் கரங்களைப் பற்றிக் கொண்டு மணியங்குரிச்சியார், “நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். நெல்லியங்கோடன் என் மருமகன் என்பது உங்களுக்குத் தெரியும். தாமரை அவனுக்கு முறைப் பெண். திடீரென்று எங்கிருந்தோ வந்து விட்டான். மணந்தால் அவனைத்தான் மணப்பேன் என்று என் மகள் பிடிவாதம் பிடிக்கிறாள். அதைச் சொல்லிச் சமாதானப்படுத்தவே செல்லாத்தாக் கவுண்டரிடம் வந்தேன். அவர் தங்களிடம் கதையையே மாற்றிச் சொல்லுகிறார்” என்று உண்மையை எடுத்துரைத்தார்.
பொய்களாம் நெருஞ்சில் முட்கள் படர்ந்து கிடக்கும் மேடையில் உண்மையின் நடன அரங்கேற்றத்தை நடத்துவது இயலுமோ?
அப்படியொன்று தப்பித் தவறி நடந்து விடக்கூடாது என் பதிலே கண்ணுங் கருத்துமாயிருந்த செல்லாத்தாக் கவுண்டர், தூபமிடுங்கலையிலும் தூண்டி விடும் தொழிலிலும் தனக்கிருந்த பயிற்சியை அணுவும் பிசகாமல் பயன்படுத்திக் கொண்டார்.
“மணியங்குரிச்சியாரே! இப்பொழுதும் கேட்கிறேன். கடைசியாகக் கேட்கிறேன். எனது தோழரும் எனது வளநாட்டுக்கு வலிமை மிக்க துணைவருமான தலையூர்ப் பெருமகன் காளியின் வருகையினால் நீர் மனத்தாங்கல் கொள்ளவில்லை; மாறாக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறீர் என்பது உண்மையானால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிச்சயிக்கப்பட்டது போல நடத்துவதற்குத் தயாராக இருக்கிறீரா?”
இந்தக் கேள்விக்கு – அல்ல! அல்ல! அறைகூவலுக்குப் பதிலுரைக்க முடியாமல் மலைக்கொழுந்தாக் கவுண்டர் திணறினார்.
மலையொன்று மனித உருவெடுத்தாற் போன்று விளங்கிடும் மணியங்குரிச்சியின் பெரிய காணியாளர், தனது முகத்தில் அடர்ந்து பரவியிருந்த மீசையைத் தடவிக் கொண்டே; “அந்த முடிவு இப்போது என் கையில் இல்லை” என்று சொன்ன போது கூனிக் குறுகினார்.
“முடிவெடுக்கத் துணிவும் தெம்பும் இல்லாத நீங்கள் முதலில் மணமகளின் விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமலே இவ்வளவு பெரிய இடத்தில் பெண் கொடுக்க ஒப்புதல் தருவானேன்? இப்போது ஏற்பட்டுள்ள நிலையை அப்படியே தலைகீழாகக் கற்பனை செய்து பாருங்கள்! மாந்தியப்பனைத் தன் மணவாளனாக மனதில் நினைத்துக் கொண்டிருந்து விட்டு; காலைத் திருமண விழாவுக்காக உங்கள் மகள் காத்திருக்கும் போது மாந்தியப்பன், தனது மனத்தை மாற்றிக் கொண்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறிவிட்டால் உங்கள் உள்ளம் எப்படிக் கொதித்துப் போயிருக்கும்? அதனால் நீங்கள், என் வருகையின் காரணமாக ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு எடுத்த முடிவினைப் பரிசீலனை செய்யுங்கள். நான் வேண்டுமானால் இப்பொழுதே கூட திரும்பிப் போய் விடுகிறேன். மேனாட்டில் தலையூரின் மாளிகையில் இருந்தபடி மணமக்களை வாழ்த்துகிறேன். அதில் கூட உங்கள் கௌரவம் குறைந்து விடுமென்றால் வாழ்த்தாமலே கூட வாய் மூடிக் கிடந்து விடுகிறேன். என்பொருட்டு ஒரு நல்ல காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள்”
தலையூர்க்காளி மணியங்குரிச்சியாரிடம் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும்பொழுது “அய்யோ! இது என்ன அநியாயம்? எனக்காக நீங்கள் இவ்வளவு இறங்கிப் போய் முறையீடு செய்வதா? வேண்டவே வேண்டாம்! இனி இந்த வீட்டில் சம்பந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! தலையூர்த் தம்பி; இந்தத் திடீர் முடிவில் ஏதோ ஒரு பயங்கர சூழ்ச்சி மறைந்து கிடக்கிறது என்பது மட்டும் நிச்சயமான உண்மை! அது போகப் போகத் தெரியும். அதைப் பிறகு தங்களிடம் சொல்லத்தான் போகிறேன். இல்லாவிட்டால் உங்களையே எதிர்க்கிற தைரியத்தை இந்த மணியங்குரிச்சி மலைக்கொழுந்தாக் கவுண்டர் பெற்றிருக்க மாட்டார்” என்று செல்லாத்தாக் கவுண்டர் தலையூர்க்காளியின் தோளைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டு சொன்னவுடன்; அதுவரையில் குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்து விட்டது போல மாந்தியப்பன் வெகுண்டெழுந்து சீறினான்.
“இவ்வளவு தொலைவு ஆகிவிட்ட பிறகு இனி இந்த வீட்டில் நின்று கொண்டிருப்பது கூட நமது பெருமைக்கு இழுக்கு! தலையூர் சிற்றரசுக்கு ஒரு கடுகளவு எதிர்ப்பு காட்டப்பட்டாலும் அந்த எதிரியை சம்பந்தியாக ஏற்றுக் கொள்வதற்கு எனது இருதயம் இடம் தராது! மணியங்குரிச்சியாரின் பெண் என்ன; பெரிய ரம்பை ஊர்வசியாகவே இருந்தாலும் – இனி அவளே வந்து என் காலில் விழுந்தாலும் நான் அவளை என் மனைவியாக வரிக்க மாட்டேன். ஆனால் ஒன்று; இன்று ஏற்பட்ட இந்த அவமானத்துக்கு மணியங்குரிச்சி வெகு விரைவில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இதன் பயனை வெகு விரைவில் பயங்கரமாக அனுபவிக்க வேண்டியிருக்கும்.”
இப்படி படபடத்துக் கொண்டே, “வாருங்கள் அப்பா; வள நாடு திரும்பலாம்!” என்று கர்ச்சனை செய்தான்.
“விதியென ஒன்றிருக்கும் பொழுது அதை மாற்றி எழுதிட முடியுமா?” என்று, விருந்து மண்டபத்தின் மேற்கூரையை அண்ணாந்து பார்த்தவாறு முணுமுணுத்த தலையூர்க்காளி செல்லாத்தாக் கவுண்டரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படுவதற்கு முன் சற்று கேலியான தோரணையில் மனத்தில் உள்ள புழுக்கத்தின் சாயலை சிறிதளவு வெளிப்படுத்தும் வகையில் மணியங்குரிச்சியாரை நோக்கி, “இவ்வளவு நேரம் உங்களூரில் நான் தங்கியிருந்ததை பொறுத்துக் கொண்டதற்கு நன்றி” என்றான்.
மாந்தியப்பனைத் தழுவியவாறு, ”நீ எடுத்துள்ள முடிவு, தவிர்க்க முடியாத முடிவு. வரவேற்கிறேன். வேறு வழியில்லை. உறவினர்களுடன் உடனே திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்க. காலையில் சுப காரியம் நடக்கப் போகிற வீடு. அதனால் அசம்பாவிதம் எதுவுமின்றி அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். இது வளநாட்டுடன் நட்பு கொண்டுள்ள மேனாட்டுக் கோரிக்கை. என்ன சரிதானா?” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்; காளி!
செல்லாத்தாக் கவுண்டருடன் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தோர் அனைவருமே பயணத்திற்குத் தயாராயினர். அந் தக் கும்பலிலும், அது; பயணத்துக்குத் தயாரான சலசலப்பிலும் அவர்கள் ஒருவரோடொருவர் மணியங்குரிச்சியாரைப் பற்றி கேலியாகவும், கிண்டலாகவும், எதிர்ப்புக் குரலிலும், ஏகடியத்தொனியிலும் பேசிக் கொண்டது எதுவும் அங்கே அசைவற்று நின்று கொண்டிருந்த மலைக்கொழுந்தாக் கவுண்டரின் காதுகளில் தெளிவாக விழவில்லை. விடிவதற்குள்ளாக வளநாட்டுக்காரர்கள் அனைவரும் மணியங்குரிச்சியை விட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டனர்.
சூரிய உதயத்திற்கு முன்பாக இந்தச் செய்தி அந்தப்பகுதி முழுவதும் பரவி விட்டது. வைகறைப் பொழுதில் இந்த விப ரங்கள் அனைத்தையும் தெரிந்த கொண்ட சின்னமலைக் கொழுந்து தனது தந்தையிடம் சென்று தாமரையின் இஷ்டப்படி நடந்து கொண்டதால் ஏற்படப் போகும் விளைவுகள் மிக விபரீதமாக இருக்குமென்று எச்சரித்தான். ‘போயும் போயும் ஒரு பைத்தியக்காரனைப் போய்க் கட்டிக் கொண்டு நீ அழியப் போவதுமில்லாமல் மணியங்குரிச்சியின் எதிர்காலத்தையும் இருளாக்கிவிட்டாய்” என்று தங்கை தாமரையிடம் அனலைக் கொட்டினான். சீற்றம் தணியாதவனாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த சின்னமலைக் கொழுந்துக்கு எந்த பதிலும் சொல்லாமலே தாயும் தந்தையும் திருமண வேலைகளில் ஈடு பட்டிருந்தனர். தந்தையின் முகத்தில் மகிழ்ச்சியின் அடையாளமே இல்லை. தாயின் முகம் மகளின் மணவிழாவையெண்ணிப் பூரித்துப் போயிருந்தது எனினும் வைடூரியக் கல்லில் ஓடும் ஒரு கோடு போல ஏதோ ஒரு உணர்வு நெஞ்சில் அசைந் தாடுவது அந்த முகத்தில் தெரியத்தான் செய்தது.
என்ன ஆனாலும் சரி; எண்ணியபடி அத்தான் நெல்லியங் கோடனையே மணக்கப் போகிறோம் என்பதில் ஏற்பட்ட புள காங்கிதத்தில் தாமரை நாச்சியார் தண்புனலில் மலர்ந்து விரிந்த தாமரையின் முகமுடையவளாகவே காட்சி தந்தாள்.
நெல்லியங்கோடனின் முகம், மல்லிகை மொட்டுப்போல் குவிந்து சோகமாக இருந்தாலும், அந்த மொட்டுக்குள் இருக்கும் மணம் போல இதயத்தில் இன்பம் நிறைந்திருந்தது.
மணவிழாவில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை சோழன் தோட்டி கொங்குப் பெருமக்களின் வழக்கப்படி குப்பாரி கொட்டி முழுப் பொழுதும் விடிவதற்குள்ளாக முடிந்த வரையில் எல் லாப் பகுதிகளுக்கும் தெரிவித்த போது மக்கள் கூட்டம் கூடி ஆங்காங்கு இந்தத் திருமணத்தைப் பற்றியே கருத்துப் பரிமாற் றங்கள் செய்து கொள்வதில் மெத்தப் பரபரப்பு காட்டினர்.
குப்பாரி கொட்டி அறிவிப்பதில் சோழன் தோட்டிக்கு ஒரு தனி உற்சாகம். காரணம்; சோழன்தோட்டியின் யோசனைப்படிதான் நெல்லியங்கோடன் மணியங்குரிச்சிக் குள் மாறு வேடத்தில் நுழைய முடிந்தது. தன் மனதுக்குகந்தவளை மணக்கவும் ஏற்பாடுகள் நடந்தன. அதனால் சோழன் தோட்டி புதுக்களையுடன் சோர்வகற்றிப் பம்பரம் போலச் சுழன்றபோது எவ்வளவு விசுவாச மிக்க ஒரு நெஞ்சம் என்று நெல்லியங்கோடன் ஆனந்தப் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
கொங்குப் பெருமக்களின் மணவிழா கம்பர் பாடியதாகக் கூறப்படும் மங்கல வாழ்த்து முறைப்படி நடைபெறுவதற்கு ஏற்றவகையில் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டார் அவர்களது உறவினர் என்று பலர் இருந்திட வேண்டியது அவசியம் எனினும் – இப்போது இந்தத் திருமணத்தில் சோழன் தோட்டியே மணமகன் வீட்டார் சார்பில் செயல்பட்டு மணமகனுக்குரிய மணவிழாச் சடங்குகளில் பங்கு பெற உறவினர்களைத் திரட்ட வேண்டியதாயிற்று. வளநாட்டிலிருந்து திரு மணத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பகுதியினர் செல்லாத் தாக் கவுண்டர் புறப்பட்டவுடன் அவருடன் சேர்ந்து கிளம்பி விட்டனர் என்றாலும், நெல்லியங்கோடனுக்கு நெருங்கிய உறவினர்கள் சிலர், அண்ணன் தம்பி முறையுடையோர், அக்காள் தங்கை முறையுடையோர் இப்படிப் பல்வேறு உறவுமுறையுடையோர் ஒரு அனுதாபத்தின் அடிப்படையில்; “பாவம்- ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த குடும்பத்துப் பிள்ளையாண்டான்! அவனுடைய அப்பா கோளாத்தாக் கவுண்டரோ அம்மை பவளாத் தாளோ இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இந்தத் திருமணம் நடந்திருக்கும்!” என்று ஆதங்கப்பட்டவர்களாக மணி யங்குரிச்சியில் தங்கிவிட்டிருந்தனர். அவர்களை அணுகி ஒப்புதல் பெற்று மங்கல விழாச் சடங்குகளில் பங்கு பெற வைப்பதற்குச் சோழன்தோட்டி அந்த அவசர நேரத்தில் எடுத்துக் கொண்ட முயற்சிகளை பங்கு பெறச் சம்மதித்த உறவினர்களே பாராட்டத் தவறவில்லை.
எப்படியோ குறித்த நேரத்தில் மணவிழா நிகழ்ச்சிகள் களை கட்டத் தொடங்கிவிட்டன. இரு வீட்டைச் சார்ந்த உறவினர்களும் பந்தலில் கூடியவுடன் முதல் சீர் எனப்படும் முகூர்த்தக் கால் நாட்டப்பட்டது. மஞ்சளில் நனைக்கப்பட்ட துணியில் நவதானியங்களை முடிந்து, அரச மரக்கிளையொன்றால் அமைந்த முகூர்த்தக்காலில் கட்டி அருமைக்காரர் பால் வார்த்து அதற்குரிய பூசைகளை நிறைவேற்றி வைத்தார். மணமகன் நெல்லியங்கோடனை மணவறையில் அமர்த்தி பிரமசரிய விர தம் கழிக்கப்பட்டது. வெற்றிலை கட்டுதல் என்னும் முறைப்படி வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், கண்ணாடி, சீப்பு, விரலி மஞ்சள், எலுமிச்சம்பழம், பூ, சந்தனம், கூரைச் சேலை, ரவிக்கைத்துணி முதலியவற்றை ஒரு வேட்டியில் மூட்டை யாகக் கட்டி, அதற்கு அருமைக்காரர் பூசை செய்து பின்னர் அதனை மேளதாளத்துடன் பிள்ளையார் கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து கொண்டு வந்து மணவறையில் வைத்து அதற்கு நீர் சுற்றி அவிழ்த்து மணப்பெண் தாமரைநாச்சிக்கு கொடுக்கச் செய்து அவளும் முறைப்படி அந்த வெற்றிலைக் கூரைச்சேலையை அணிந்து பெரியவர்கள் மூவரை வணங்கி எழுந்தாள். நெல்லியங்கோடனை ஒரு முக்காலியின் மீது உட்கார வைத்து செஞ்சோற்றை சுற்றிப் போட்டு தண்ணீர் வார்த்து திருஷ்டிப் பரிகாரம் செய்யப்பட்டது. கணுவேயில்லாத விரலி மஞ்சளை மஞ்சள் தடவப் பெற்ற நூலில் கட்டி அதற்குத் தூப தீபம் காட்டி அருமைப் பெரியோர் எனப்படும் அருமைக்காரர் மணமக்கள் இருவரின் வலது கரங்களிலும் கட்டி விட்டார். சுற்றத் தார் சூழ்ந்து வர மணமகன் குதிரை மீது அமர்த்தப்பட்டு மேள தாளங்கள் முழங்கிட பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தேங் காய் உடைத்து வணங்கி வந்தான். பெண் வீட்டார், நாட்டார் சபையெனப்படும் கொங்குப் பெருமக்கள் கூடியிருக்கும் இடத்துக்கு வந்து, வாருங்கள் எல்லோரும்” என முறைப்படி அழைத்திடும் சடங்கும் இனிது நிறைவேறியது. மணமகளுக்கு மாமன் முறையுள்ளோர் அனைவரையும் அழைத்து புதுவேட்டி வழங்கி, சந்தனம் பூசி, பால் பழம் அருந்துமாறு செய்யப்பட்டது. நிறை நாளி சுற்றப்பட்டு ஐந்து செஞ்சோற்று அடைகளையும் அகற்றி மணமகளுக்கும் அருமைக்காரப் பெண்மணி திருஷ்டி கழித்து முடித்தாள்.
மணவறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாழை கமுகு மரங்கள் கட்டப்பட்ட மணவறையின் நடுவில் இரண்டு கரகங்கள் வைக்கப்பட்டு, அவற்றில் ஒன்றில் நிறைய நெல்லும் மற்றொன்றில் நிறைய நீரும் நிரப்பப்பட்டன. கரகங்களுக்கு முன்னால் மஞ்சளில் பிள்ளையாரும். ஆயிரப்பெருந்திரியும். பூதக்கலச் சாதமும், வெற்றிலை பாக்கு மற்றும் அச்சு வெல் லக் குவியலும் காட்சி தந்தன.
குதிரை மீது அமர்த்தி அழைத்து வரப்பெற்ற மணமகன் நெல்லியங்கோடன் மணவறைக்கு வந்து சேர்ந்ததும் மங்கல நாண்சூட்டும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. குடிமகன் எனப் படுவோன் “கம்பர் மங்கல விழா வாழ்த்து” எனும் பாடலை அழுத்தமான குரலில் சொற் சுத்தம் கெடாமல் பாடிய போது அந்தப் பந்தலே உணர்ச்சிமயமாக இருந்தது. முறைப்படி எல்லா சடங்குகளும் நடத்தப்பட வேண்டுமென்ற அக்கறையுடன் பெருமாயி அம்மாளும், அந்த அம்மைக்குத் துணையாக மலைக்கொழுந்தாக் கவுண்டரும் ஈடுபட்டிருந்த போதிலும் அவசரத்தில் ஒன்றிரண்டு வழக்கமான சடங்குகள் முன்னும் பின்னுமாகவே நடந்தேற வேண்டியிருந்தது. அதற்கு முக்கிய காரணம் திருமணத்தில் ஏற்பட்ட திடீர்த் திருப்பந்தான் என் பதை விழா காண வந்திருந்தோர் அனைவரும் உணர்ந்தேயிருந்தனர்.
அருமைக்காரர் மணமகள் தாமரை நாச்சியை கிழக்கு முகமாகவும், அவளை நோக்கிய நிலையில் மணமகன் நெல்லியங்கோடனை மேற்கு முகமாகவும் நிறுத்தி வைத்து மாலை மாற்றிக் கொள்ளச் செய்தனர். கங்கணம் அகற்றிய பிறகு, அருமைப்பெரியோர் கொடுத்த மங்கல நாணை மிகுந்த பவ்யத்துடன் வாங்கி, மங்கல ஒலி முழங்கிடும் பந்தலில் தாமரை நாச்சியின் கழுத்தில் நெல்லியங்கோடன் கட்டினான்.
குடிமகன் என்போன் பாடத் தொடங்கிய மங்கல வாழ்த்துப் பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
மணமக்கள் மகிழ்ச்சியில் திளைத்தவராக மலைக்கொழுந்தாக் கவுண்டரிடமும், பெருமாயி அம்மாளிடமும் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றார்கள். பெருமாயி அம்மையின் கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத் தோடிக் கொண்டிருந்தது. மலைக்கொழுந்தாக் கவுண்டரின் உள்ளத்தில் எத்தகைய எண்ண அலைகள் மோதுகின்றன என்பதை அறிவிக்க இயலாத ரசம் போன கண்ணாடியாக அவரது முகம் தோற்றமளித்தது. தாய் தந்தையர் காலில் விழுந்து வணங்கிய தாமரையாள், தன் சகோதரன் சின்னமலைக்கொழுந்தின் காலில் விழுவதற்கு அவனருகே சென்ற போது – அதுவரையில் அரைகுறை மனத்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சின்னமலைக் கொழுந்து பலநூறுபேர் பந்துமித்திரா குழுமியிருக்கிற பந்தலில் இருக்கிறோம் என்பதையும் நினைத்துப் பார்க்க இயலாதவனாக ஆத்திரம் தொண்டையை அடைக்க ‘சீ! அடங்காப்பிடாரி!’ என உரக்கக் கத்தி விட்டு புயலைப் போன்ற வேகத்தில் வெளியேறினான். இனிய சூழலில் இருந்த அந்த மணவிழாப் பந்தலை ஒரு பயங்கர சோகம் கப்பிக் கொண்டு விட்டது; சின்னமலைக்கொழுந்துவின் அந்தச் சீற்றம் எங்கு போய் முடியுமோ என்ற கவலையில் பெருமாயி அம்மாள், “பெரியகாண்டியம்மா நீ தான் துணை!’ என்று வாய்விட்டுக் கதறிவிட்டாள்.
5. தாமரைநாச்சியின் சபதம்
அண்ணன் சின்னமலைக் கொழுந்து சென்ற திசையையே வைத்த விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் தாமரைநாச்சியார். மணவிழாவையொட்டிய விருந்தில்கூட உறவினர்கள் பெரும்பாலோர் கலந்து கொள்ள மனமின்றிச் செல்வதுபோல பந்தலிலிருந்து கலைந்து சென்று கொண் டிருந்தனர் “மொய்க்களரி” யெனும் சம்பிரதாயத்திற்கு மதிப் பளிக்கும் எண்ணமுடன் ஒரு சில உறவினர்கள் மட்டும் மொய் வைத்து முடித்த கையுடன் விடைபெற்றுப் புறப்படலாயினர். மணமகனின் மைத்துனன் மணவிழாவின் எல்லா நிகழ்ச்சி களும் நிறைவடையும் வரையில் இருந்து அருமைக்காரர்கள் “அருகுமணம்” எடுத்து ஆசீர்வாதம் புரியும் வரையில் அரு கிருக்க வேண்டியவன். ஆனால் நெல்லியங்கோடனின் மைத் துனன் சின்னமலைக்கொழுந்தோ; அதைப்பற்றியெல்லாம் கவ லைப்படாமல் தனது தங்கை தாமரையின் நெஞ்சில் ஈம்மட்டி கொண்டு அடித்ததுபோல சொற்களை வீசிப் போய்விட்ட பிறகு; உற்றார் உறவினர்களுக்கு மட்டும் என்ன வந்தது? ஏதோ அனுதாபப்பட்டவர்கள், மணியங்குரிச்சியாருக்குச் சிறிது ஆறுதலாக இருக்கட்டுமென்று உடனே சொல்லிக் கொண்டு புறப்படாமலிருந்தார்கள். திடீரென்று மணவிழா வில் மணமகன் மாற்றப்பட்டதிலேயே சலிப்பு கொண்டவர்கள் மேலும் முகத்தை அதிகமாகச் சுளித்துக் கொண்டு ஒரு வரோடொருவர் விமர்சனங்களில் ஈடுபட்டவாறு தங்கள் தங் கள் வசதிக்கேற்ப கொண்டு வந்திருந்த வாகனங்களில் ஏறி ஊர் திரும்புவதில் அவசரம் காட்டினர். அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவைபோல் தாமும் நடந்துகொண்டு ஒருவர்க்குத் துன்பம் வரும்போது அவரை விட்டு ஓடிவிடுவது மனிதத் தன் மையே ஆகாது எனும் நினைப்புள்ளவர்கள் ஒரு சிலர் மட்டுமே மணவீட்டில் தங்கி “உறவு’ என்ற சொல்லுக்குரிய உயர்வை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள்.
மணமக்கள், தங்களது தாய் தந்தையரின் பாதங்களில் நீர் ஊற்றிக் கழுவி, மலர்களைத்தூவி வணங்கிட வேண்டும் என் பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி! மணமகள் தாமரையாள், தனது தந்தை மலைக்கொழுந்தாக் கவுண்டருக்கும் தாயார் பெருமாயி அம்மாளுக்கும் பாதபூசை செய்து எழுந்தாள். நெல் லியங்கோடன் கண்களில் நீர் அருவியெனக் கொட்டிற்று. தன் தந்தை கோளாத்தாக் கவுண்டரும், தாய் பவளாத்தாளும் இல் லையே; இருந்து வாழ்த்தவில்லையே; அவர்களுக்குப் பாத பூசை செய்யும் பாக்கியத்தைத் தன்னால் பெற முடியவில் லையே என்ற ஏக்கம் – துக்கம் கணைகளென அவன் உள் ளத்தைத் துளைத்தெடுத்தன!
நெல்லிவள நாட்டைச் செழுமை கொழிக்கும் பூமியாக மாற் றித் தனது செல்வாக்கைப் பரவலாக்கிக் கொடி கட்டி வாழ்ந்த கோளாத்தாக் கவுண்டரின் பிள்ளை; இப்போது நகைப்புக்கிட மான சூழ்நிலையில் நலிந்தும் மெலிந்தும் – அதனை வெளிக் காட்டிக் கொள்ள முடியாமல் வெட்கத்தால் தளர்ந்தும் நிற்ப தைச் சிந்தித்துப் பார்க்கும்போது; அவன் கண்கள் நீர்வீழ்ச்சிகளாக மாறியதில் வியப்பிருக்க முடியாதல்லவா?
மலைக்கொழுந்தாக் கவுண்டரையும், பெருமாயி அம்மாளையும் கையெடுத்துக் கும்பிட்டு, “தாய் தந்தையை இழந்துவிட்ட எனக்கு இனிமேல் நீங்கள்தான் தாயும் தந்தையும்!” என்று தழுதழுத்த குரலில் நெல்லியங்கோடன் கூறினான். மாமனாரும் அத்தையும் மனங் கலங்கினர். பெருமாயி, எதுவும் பேச முடியாமல் இதயக்குமுறலை அடக்க முனைந்தது புரிந்தது. ஆனால்; தன்னைமீறி எல்லாம் நடந்துவிட்டதே என்ற உளைச் சலில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார் மலைக்கொழுந்தாக் கவுண்டர் என்பதும் தெரிந்தது. மௌனமாகப் பெருமூச்சு விட்டபடியே பெருமாயி அம்மாள்; தனது மகள் தாமரையைக் கட்டித் தழுவிக் கொண்டு அவளது கன்னங்களில்; காலைப் புல்லின் நுனிமீது கருக்கொண்டிருக்கும் பனித்துளிகளைப் போல உருண்டு வழிந்துகொண்டிருக்கும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்துவிட்டாள். ஆனால் அதுவோ ஊற்றுப் பெருக்காயிற்று!
அந்த நிலையிலுங்கூட மணவிழாவையொட்டிய சில சடங்கு களை உறவுப் பெண்டிரும். பெரியோரும் தங்குதடை வராமல் நடத்திக் கொண்டிருந்தனர்.
மணமக்களுக்கென புதிதாகத் தயாரிக்கப்பட்ட காலணிகளைத் கொண்டுவந்து வீதிவாசலில் போடப்பட்டிருந்த முக்காலியில் வைத்து, மணமக்களை மங்கல இசை முழங்க அழைத்துச்சென்று அந்தக் காலணிகளை அணியச்செய்தனர். இரும்பினால் ஆக்கப்பட்ட சட்டுவத்தை மணமகள் தாமரையின் கையில் தந்து தட்டில் உள்ள சோற்றுக்குவியலை அந்த சட்டு வத்தால் மணமகன் நெல்லியங் கோடனுக்குத் தள்ளுமாறு செய்து சுற்றிலும் நின்றுகொண்டு உறவுமுறைப் பெண்கள் கேலியும் கிண்டலும் செய்து மகிழ்ந்தனர். அந்த உற்சாகமான நிகழ்ச்சிகளில் இதயத்துள்ளலுடன் மணமக்களோ அல்லது மணியங்குரிச்சியாரோ அவரது மனைவியோ கலந்து கொள்ள முடியவில்லை எனினும் ஒப்புக்காக அவற்றையெல்லாம் நடத்தி முடித்தனர்.
இத்தனைக்கும் பிறகு பந்தலில் இருந்து மணமக்களை வீட் டுக்குள் அழைத்துச் சென்று அமரவைத்தனர்.
ஒரே மகளுக்கு மணவிழா நடைபெற்றதைப் பெருமையுடன் எண்ணிக்களிக்க முடியாமல் பெருமாயி அம்மாள் தவித்தாள். தனது மகன் சின்னமலைக்கொழுந்து மணப்பந்தலில் இவ் வளவு அநாகரிகமாக நடந்து கொள்வான் என்று அந்தத் தாய் எதிர்பார்க்கவேயில்லை. சுளீர் சுளீர் என சவுக்கடிகள் விழும் போது, “அய்யோ அம்மா!” என்று வாய்விட்டு அலறுவதும் குற்றமாகக் கருதப்பட்ட காலத்தில் அடி வாங்குபவன் வலி யைப் பொறுத்துக் கொண்டு உடலை மட்டும் நெளிப்பது போல பெருமாயி அம்மாள் நெளிந்தும் நெகிழ்ந்தும் மண விழாத் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டிருந்தாள். மண மக்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தபோது அவளும் அவர்களுடன்தானிருந்தாள். அப்போது அங்கே மலைக்கொழுந்தாக் கவுண்டர் இல்லை. பெருமாயி அம் மாளின் கண்கள், “கணவர் எங்கே?” என்று சுற்றிலும் சுழன்று கொண்டிருந்தன.
அப்போதுதான் மலைக்கொழுந்தாக் கவுண்டர்,”அவசரம்” என்று தலைப்பிட்டு; தனக்குவந்த மடல் ஒன்றைப் பரபரப் புடன் பந்தலில் மணவறைக்குப் பக்கத்தில் நின்று படித்துக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் பயத்தின் சாயல் படிந் திருந்தது. அவரையும் ஓலையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு, சின்னமலைக் கொழுந்து அருகில் நின்ற காரணத் தால் அவன்தான் அந்த மடலை அவரிடம் கொண்டுவந்து கொடுத்திருக்க வேண்டுமென்பது உறுதியான ஒன்று!
தலையூர்க்காளியிடமிருந்து வந்த மடல் அது! அந்த மட லைப் படிக்கும் மலைக்கொழுந்தாக் கவுண்டரின் கைகள் நடுங் கிக் கொண்டிருந்தன!
“மதிப்புக்குரிய மணியங்குரிச்சியாருக்கு, மேனாட்டுச் சிற் றரசு தலையூர்க்காளி எழுதுவது; தங்களூரில் தங்களால் நான் அவமானப்படுத்தப்பட்டதில் எனக்கொன்றும் மனவருத்த மில்லை. நான் அதைப் பொருட்படுத்துபவனுமல்ல. ஆனால் எனக்காக எனது நாட்டின் நண்பரும் தனிப்பட்ட முறையில் எனது புரவலருமான வளநாட்டுச் செல்லாத்தாக் கவுண்டர் தான் பெரிதும் புண்பட்டுப் போயிருக்கிறார். எனக்கும் அவ ருக்குமுள்ள தோழமையையும் எனது நாட்டுக்கு அவரது ஆளு கையின் கீழுள்ள பகுதியின் உதவி எந்த அளவுக்குத் தேவைப் படுகிறது என்பதையும் தாங்கள் முழுமையாக அறியமாட்டீர் கள். காட்டுவளங் கொண்டது என் ஆட்சியில் உள்ள பகுதி. நிலவளம் நிறைந்தது செல்லாத்தாக் கவுண்டரின் ஆதிக்கத்தில் உள்ள வளநாட்டுப் பகுதி! என் பகுதி மக்களைப் போர்க் குணம் கொண்டவர்களாகவே பயிற்றுவித்துள்ளோம். அவர் களுக்குத் தேவையானதுபோக மீதமுள்ள போர்க்கருவிகளை வளநாட்டுக்கும் வழங்குகிறோம். அதற்குப் பதிலாக வளநாட்டி லிருந்து எங்கள் மேனாட்டுக்குத் தேவையான உணவுதானியங்களைப் பெற்றுக் கொள்கிறோம். இப்படியொரு உறவு எங் கள் இரு நாடுகளுக்குமிடையே இருந்து வருகிறது. என் தந்தை பெரியகாளி மன்னர் இறந்துபோகும்போது நான் மிக இளை ஞன். அவர் உயிருடனிருந்த போதே என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை செல்லாத்தாக் கவுண்டரிடம்தான் விட்டிருந்தார்.சிறு வயது முதலே செல்லாத்தாக் கவுண்டரி டம் வளர்ந்து, அவரது அரவணைப்பில் பற்பல ராஜீய அனுபவங்களைக் கற்றுக் கொண்டவன் என்ற முறையில் அவரை எனது புரவலராகவே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். கோளாத் தாக் கவுண்டரின் ஆதிக்கத்திலிருந்த நிலப்பரப்பையும், அங்கு வாழும் குடிமக்களையும் அவருக்குப் பிறகு கட்டிக் காத்திடக் கூடிய வலிமையும், ஆற்றலும், அறிவும், தெளிவும் ஒரு சிறிது கூட நெல்லியங்கோடனுக்கு இல்லாமற் போனதால் தான் அவனிடமிருந்து அந்தப்பகுதியை செல்லாத்தாக் கவுண்டருக்கு உரிமையாக்க நான் பெரிதும் உதவினேன். தனக்கேயுரிய ராஜ தந்திரத்தாலும் – அறிவுச் செழிப்பாலும் இன்றைக்கு வளநாட்டைச் செல்லாத்தாக் கவுண்டர் பரிபாலித்து வருகிறார். தங்கள் மகள் தாமரைக்கும் செல்லாத்தாக் கவுண்டர் மகன் மாந் தியப்பனுக்கும் நடக்க இருந்த திருமணத்தினால் தங்களுக்கும் செல்லாத்தாக் கவுண்டருக்கும் மட்டுமல்லாமல் எனக்கும் தங்களுக்குமிடையேகூட புதிய நட்புறவு ஏற்பட்டிருக்கக்கூடும்! ஏதோ விதிப்பயன் காரணமாக அது நடைபெற முடியாமல் போய் விட்டது! இப்போது எனக்கும் செல்லாத்தாக் கவுண்டருக்கும் உருவாகியிருக்கக்கூடிய சந்தேகம் அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல! நெல்லியங்கோடனைத் தங்களின் மருமகனாக ஆக்கிக் கொள்வதில் பெரும் சூதும் சூழ்ச்சியும் அடங்கியிருப்ப தாகவே நாங்கள் கருதுகிறோம். அதாவது செல்லாத்தாக் கவுண்டர் என்ன கருதுகிறாரோ; அதையே நானும் கருதுவ தாக அர்த்தம்! சுருக்கமாகக் கூறவேண்டுமானால்; உங்கள் மரு மகன் நெல்லியங்கோடனுக்குப் பெண்ணை மட்டும் கொடுக்க வில்லை தாங்கள்! அவன் இழந்த மண்ணையும் மீட்டுக் கொடுக் கத் துணை நிற்கப்போகிறீர்கள்! அப்போதுதானே உங்களின் செல்வி தாமரைநாச்சியார் ஒரு அரசிபோல வாழமுடியும்! தாமரைநாச்சியார் அப்படித் திகழ வேண்டுமானால்; நெல்லி யங்கோடன் நெல்லிவளநாட்டைச் செல்லாத்தாக் கவுண்டரிட மிருந்து மீட்டு அந்த பகுதியின் குறுநில மன்னனாக ஆக வேண்டாமா? அதற்குத்தான் திட்டமிட்டு திடீரெனத் திருமணத் தில் மணமகனை மாற்றிவிட்டீர்கள் என்பது எங்களின் முடி வான கணிப்பு! இந்த கருத்தை நீங்கள் மறுக்கக்கூடும்! அப்படி மறுப்பது உண்மையானால் அதைத் தாங்கள் செயல்மூலம் காட்ட வேண்டும்! இல்லையேல்; தாங்கள் நெல்லியங்கோட னுக்கு ஆதரவாக வளநாட்டுச் செல்லாத்தாக் கவுண்டரிடம் மோதத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் எடுத்துக் கொள்ள வேண்டும்; எனது புரவலருக்கு அப்படியொரு எதிர்ப்பு தோன்றுமேயானால் தலையூர்க்காளியின் படைகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது! வந்தபின் காப் போம் என்பதைவிட வருமுன் காப்போம் என்பதற்கேற்ப நான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்த நட வடிக்கையின் முதற்கட்டம் தலையூர்க்காளியின் படை மணியங் குரிச்சியை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றுவதாகத்தா னிருக்கும்! அப்படியொரு இக்கட்டான நிலைமையைத் தாங் கள் தவிர்க்க வேண்டுமேயானால்; நெல்லியங்கோடனுக்கும் தாமரைக்கும் மணமுடித்ததோடு சரி; இனி எந்த ஆதரவும் தர மாட்டீர்கள் என்பதைச் செயலில் காட்ட முன்வர வேண்டும்! இந்த மடலை; வேண்டுகோளாகவோ அல்லது எச்சரிக்கையா கவோ எடுத்துக் கொள்வது தங்கள் விருப்பத்தைப் பொறுத் தது இங்ஙனம் தலையூர்க்காளி;” என்று கையொப்பமிட்டு, மேனாட்டுச் சிற்றரசின் முத்திரையும் பொறிக்கப்பட்டு எழுதப் பட்ட நீண்ட மடலைப் படித்துவிட்டு மணியங்குரிச்சியார் நெருப்பில் நிற்க வைத்ததுபோல் தவித்தார்.
“சின்னமலைக்கொழுந்து! நீ சொன்னது சரியாகிவிட்டது! மணியங்குரிச்சிக்கே ஆபத்து வந்துவிட்டது” என்று அதிர்ச்சி யுடன் தனது மகனின் தோளைப் பிடித்துக்கொண்டு கூறினார்.
“அப்பா! என் பேச்சை அலட்சியப் படுத்தினீர்கள்! அம்மா வும் பெண்ணும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு; மணியங் குரிச்சியின் எதிர்காலத்தையே மண்ணாக்கிவிட்டீர்கள்! தலை யூர்க்காளி மேனாட்டுச் சிற்றரசன்! செல்லாத்தாக் கவுண்டர் கிழித்த கோட்டைத் தாண்டாதவன்! அவனையும், வளநாட்டுக் கவுண்டரையும் விரோதித்துக் கொண்டு நாம் எப்படி வாழ் வது?” என்றான் சின்னமலைக் கொழுந்து!
”வா; வா! என்னோடு!” என்று அவன் தோளைத் தழுவி அழைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளே சென்றார் மலைக்கொழுந் தாக் கவுண்டர்
அவர்களிருவரையும் கண்ட தாமரை; உறவுப் பெண்களுக்கு நடுவே “நலங்கிடுதல்’ நிகழ்ச்சிக்காக மணமகன் நெல்லியங் கோடனுக்குப் பக்கத்தில் உட்கார வைக்கப்பட்டுள்ளதையும் மறந்துவிட்டு; ‘அண்ணா!அப்பா!’ என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் கொண்டு ஓடினாள். அண்ணன் சின்னமலைக்கொழுந்து வாய்திறப்பதற்குள்ளேயே தாமரையே மளமளவெனப் பேசத் தொடங்கிவிட்டாள்.
”என்னண்ணா; என்மீது உனக்கு அவ்வளவு கோபம்? அத் தனை பேருக்கு மத்தியில் அப்படிப் பேசிவிட்டுப் போய் விட் டாய்? என் வாழ்க்கையைப்பற்றி ஒரு நல்ல முடிவு செய்து கொள்ளக்கூடிய உரிமைகூட எனக்கு கிடையாதா அண்ணா? காலமெல்லாம் யாரைக் கணவனாக என் மனத்தில் வரித்துக் கொண்டிருந்தேனோ; அவரை மணந்ததில் என்ன அண்ணா தவறு? ஏன் என்னை மணவிழாப் பந்தலில் அப்படி அவமானப்படுத்தினாய் அண்ணா?”
தாமரை நாச்சியாள் கதறியழுதாள். விம்மினாள். அவன் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தேம்பினாள். அவளைத் தூக்கி நிறுத்தி அழுகையை நிறுத்தச் சொல்லி தாயார் பெருமாயி அம்மாள் ஆறுதல் சொன்னாள்.
“என்னம்மா தாமரை; அண்ணன்தானே கோபித்துக் கொண்டான் – அதனால் என்ன? நீர் இடித்து நீர் விலகிவிடுமா? ஏதோ இந்தக் கல்யாணம் அவனுக்குப் பிடிக்கவில்லை; அதற்காகத் தங்கச்சியை விட்டுக் கொடுத்துவிடுவானா? நீ பிறந்தது முதல் எவ்வளவு பிரியத்தோடு உன் அண்ணன் உன்னை வளர்த்திருக்கிறான் தெரியுமா?” பெருமாயி; தாமரைக்கு ஆறு தல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சின்னமலைக்கொழுந்து குறுக்கிட்டு, ”அம்மா! அந்தப் பழைய கதையெல்லாம் எதற்கு? இதோ அப்பா, புதிய கதை சொல்லப்போகிறார்; அதைக் கேளுங்கள்!” என்று சினம் கொப்பளிக்கக் கூச்சலிட்டான். அதுவரையில் நலங்கு நிகழ்ச்சிக்காக மனையொன்றில் அமர்ந்திருந்த நெல்லியங்கோடன், திடுக்கிட்டு எழுந்து நின்றான்.
“நான் ஒன்றும் சொல்லவில்லை! சின்னமலைக்கொழுந்து! நீயே எல்லாவற்றையும் சொல்லு!” என்று அந்தச் சுமையைத் தூக்கி மகனின் தலைமீது வைத்தார் மணியங்குரிச்சியார். அத னைப் பெரும் பாரமாகக் கருதாத அளவுக்கு இருதயத்தை இரும்பாக்கிக் கொண்ட சின்னமலைக்கொழுந்து; தாமரையிடம் நெருங்கி வந்து அழுத்தம் திருத்தமாகவும், திட்டவட்ட மாகவும் சில செய்திகளைச் சொன்னான்.
“வெள்ளித் தொட்டிலில் போட்டு கையில் தங்கக் கிலு கிலுப்பை கொடுத்து சீரோடும் சிறப்போடும் உன்னை வளர்த் தோம். இப்போது நீ இந்த வீட்டைவிட்டுப் போகப்போகி றாய்? எங்கே போகிறாய்? அதுதான் வேதனை! வீடு வாசலே இல்லாத ஒரு நாடோடியுடன் எங்கேயோ போகிறாய்! பரவா யில்லை; நீயாகத் தேடிக்கொண்ட சொர்க்கம் அது! உனக் காகச் சீர்வரிசை என்ற பெயரால் என்னென்ன தர வேண் டுமோ; அவற்றையெல்லாம் வாசலில் அடுக்கி வைத்திருக் கிறோம்! தங்கத் தட்டுகள், வெள்ளிக்குடங்கள், உனக்குக் குழந்தை பிறந்தால் பயன்படுத்த வைரப்பிடி போட்ட தங்கப் பாலாடை, தந்தத்தால் ஆன கட்டில், நவரத்தினமிழைத்த நாற் காலிகள், பட்டுமெத்தை இப்படி எல்லாச் சீர்வரிசையும் குவிக்கப்பட்டிருக்கிறது. அவைகளை எடுத்துக்கொண்டு, நீயும் உன் கணவனும் இந்தக் கணமே இந்த வீட்டை விட்டுப் புறப் படவேண்டும். ஆனால் ஒன்று; அந்தச் சீர்வரிசைகளை ஏற் றிச் செல்ல வண்டி வாகனங்களை நீங்களேதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்! இன்னொரு முக்கியமான சிக் கல்; இந்த விலை உயர்ந்த சீர்வரிசைப் பொருள்களையெல் லாம் கொண்டு போய் வைத்து அழகுபார்க்க உங்களுக்கென்று ஒரு இடம் கிடையாது! பாவம்; பரிதாபப்படுகிறேன்! பரவா யில்லை! அப்பாவின் சார்பில் சொல்லுகிறேன் – இப்போதே இங்கிருந்து நீயும் உன் கணவனும் புறப்படுகிறீர்கள்!”
அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே பெருமாயி அம் மாள், “தம்பீ! என்னப்பா சொல்லுகிறாய்? என்னங்க; உங்களுக்கும் இது சம்மதமா?” என்று தனது கணவனின் காலில் விழுந்து கேட்டாள்.
“என் சம்மதத்தோடுதான் என் மகன் பேசுகிறான்”. என்றார் மலைக்கொழுத்தாக் கவுண்டர்!
‘அப்பா’ என்று அலறினாள் தாமரை!
‘இனி இந்த வீட்டில் உனக்கும் உன் கணவனுக்கும் வேலையில்லை! உனக்கும் எங்களுக்குமுள்ள பந்த பாசமெல்லாம் எரிந்து சாம்பலாகிவிட்டது!” என்று கத்தினான் சின்னமலைக் கொழுந்து!
வெறிபிடித்தவளைப்போல ஆனாள் தாமரைநாச்சியார்!
“அண்ணே இன்று எங்களை வெளியேற்றி விடலாம் – பரவாயில்லை; நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் கொடுத்துள்ள சீர்வரிசைகளையெல்லாம் இங்கேயே வைத்துக்கொள்ளுங்கள்; ஏனென்றால்; அவைகளை வைக்கத்தான் எங்களுக்கு வீடு வாசல் இல்லையே! ஆனால் ஒன்று அண்ணா; என் சகோதரனான உன் முன்னால்; என்னைப் பெற்றெடுத்த என் தாயின் மேல் ஆணையாக – தந்தைமேல் ஆணையாகச் சொல்லுகிறேன். பந்தபாசம் இன்றோடு முடிந்து விட்டது என்றாயே; நிச்சயம் முடியாது! முடியவே முடியாது! சீர்வரிசையை வைக்க வீடு வாசல் கிடையாது என்று கிண்டல் செய்த என். அண்ணனே; நானும் என் அத்தானும் மாட மாளிகையில் இருப்பதை நீ பார்க்கத்தான் போகிறாய்! பந்தபாசம் எரிந்துவிட்டது என்ற என் அருமைச் சகோதரனே; நான் பெற்றெடுக்கிற சிங்கக் குட்டி மகனுக்கு உன் பெண்ணைக் கட்டி வைக்க நீ வந்து என்னைக் கெஞ்சத்தான் போகிறாய்!” என்று உரத்த குரலில் சபதம் செய்த தாமரையைப் பார்த்து:
“பெறுவதுதான் பெறுகிறாய்; இரண்டு சிங்கக்குட்டிகளாகப் பெற்றுப்போடு! இரண்டையும் கொண்டு வந்து என் வீட்டு வாசலில் நாய்களைப் போல் காவலுக்குக் கட்டிவைக்கிறேன்.”
இப்படிக் கேலிபுரிந்தான் சின்னமலைக்கொழுந்து!
”பெறுகிறேன் அண்ணே; பெறுகிறேன்! நீயும் இரண்டு பெண்களைப் பெற்றுக்கொண்டு அந்தச் சிங்கங்களைத் தேடிக் கொண்டு வரப்போகிற காட்சியை நான் கண்டுகளிக்கத்தான் போகிறேன்” என்று மீண்டும் சூளுரைத்த தாமரை. “வாருங்கள் அத்தான், போகலாம்!’ என்று நெல்லியங்கோடனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே வெளியேறினாள்.
அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டு மலைக்கொழுந்தாக் கவுண்டரும் அவர் மகன் சின்னமலைக்கொழுந்தும் நின்றார்கள்.
பெருமாயி அம்மாள், மயக்கமுற்றுக் கீழே கிடந்த பாயில் சாய்ந்ததை இருவருமே கவனிக்கவில்லை.
வாயிற்புறத்தைத் தாண்டி தாமரையும் நெல்லியங்கோடனும் கால் நடையாகவே மணியங்குரிச்சிப் பெரியகாணியாளரின் வீட்டைவிட்டு வெகு தொலைவு சென்று விட்டனர்.
தாமரைக்கு; அளிக்கப்பட்ட தங்கத்தாலும், வெள்ளியாலும், தந்தத்தாலும் ஆன சீர்வரிசைப் பொருள்கள்; மணியக்குரிச்சி யார் வீட்டுவாசலில் கேட்பாரற்றுக் கிடந்தன.
– தொடரும்…
– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 17-07-1987, குங்குமம் இதழ்.