பொன்னர்-சங்கர்






(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45
36. உறையூர் இளவரசி உதய நந்தினி!

அந்தி சாயும் நேரம்… புலிக்கொடி கலசத்தில் பறந்திட வேக மாக வந்து கொண்டிருந்த அழகான ரதம், வளநாட்டின் கோட்டை முகப்புக்கு முன்னால் – ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளை சார்தி இழுத்துப் பிடித்ததின் காரணமாக ஒரு குலுங்கு குலுங்கி நின்றது. ரதத்தின் இரு புறமும் காவலுக்கு வந்து கொண்டிருந்த குதிரை வீரர்களும் அந்த ரதத்தை ஒட் டிய நிலையில் நின்றுவிட்டனர். வளநாட்டுக் கோட்டைக் காவலன் மிகுந்த பரபரப்புடன் ரதத்தின் அருகே சென்று தனது பார்வையினாலேயே. யார்? என்ற கேள்வியைத் தொடுத்தான். ரதத்தைச் சுற்றி மூடப்பட்டிருந்த நீலநிறப் பட் டுத் திரையை விலக்கிக் கொண்டு ஒரு தலை எட்டிப் பார்த்தது.
அந்தத் தலைக்குரிய உருவம் மலைபோல் பெருத்திருந்ததை கோட்டைக் காவலன் கவனித்தான். அந்த உருவத்தின் பாதி முகத்தை, தாடியும், மீசையும் மறைத்திருந்தன. அந்த உருவம் தனது மார்பகத்தில் அணிந்திருந்த இரும்புக் கவசத்தை நன்றா கக் காணுமாறு கோட்டைக் காவலனுக்கு சைகை மூலம் தெரி வித்தது. காவலனும் ஆமை ஓடு போன்ற அந்தக் கவசத்தை நோக்கினான். கவசத்தில் சோழனின் புலிச்சின்னம் ஒளி விட்டுக் கொண்டிருந்தது.
அந்த உருவம் தனது அகலமான பற்களைக் காட்டிப் புன் னகை புரிந்தவாறு, எதிர்ப்புறமாக நீல நிறப் பட்டுத் திரை யைச் சிறிது விலக்கிக் காட்டிய போது வளநாட்டுக் கோட் டைக் காவலன் திடுக்கிட்டான்.
விலை மதிப்பில்லா நவரத்தின மாலைகளை அணிந்து கொண்டு ஒரு அழகி எதிரேயுள்ள இருக்கையில் லாவகமாகச் சாய்ந்து அமர்ந்திருந்தாள். நட்சத்திரங்களைப் போல மாணிக் கக் கற்கள் மின்னுகின்ற பச்சை வண்ணப்பட்டுத் துணியொன்று அவள் உடலைப் போர்த்திக் கொண்டிருந்தது. நெற்றிக்கு மேலே தலையில் முத்துச் சரமொன்று சூடிக் கொண்டிருந் தாள். அவளது விழியசைவும் – தோற்றமும் அவளையொரு அரண்மனை மங்கையாக முரசறைந்து தெரிவித்துக் கொண்டி ருந்தன. “ஏன் ரதம் நின்று விட்டது?” என்று அவள் எழுப் பிய வினாவில் கம்பீரம் கொடி கட்டிப் பறந்தது.
“ஒன்றுமில்லை அம்மணி! வளநாடு வந்து விட்டோம். கோட்டைக் காவலர்கள், நாம் யார் என்று தெரிந்து கொள்ள ரதத்தை நிறுத்தியுள்ளார்கள்.”
அந்தப் பெருத்த உருவம் இவ்வாறு விளக்கமளித்ததும் அவள் வெகுண்டாள்….
“என்ன? கோட்டைக் காவலர்கள் நமது ரதத்தை நிறுத்தி, யார் என்று கேட்கிறார்களா? ஏன்; செய்தி முன் கூட்டியே வரவில்லையா உறையூரிலிருந்து நான் வருவதாக?”
அவளுக்கும் அவனுக்கும் நடந்த உரையாடல் கேட்டு கோட் டைக் காவலன் திகைத்து விட்டான்.
“மன்னிக்க வேண்டும். என் கடமையை நான் செய்கிறேன். தாங்கள் உறையூரிலிருந்து…” என அவன் இழுத்தாற் போல் கேட்டு முடிப்பதற்குள் அந்த பருத்த உருவத்தினன் பதில் கூறி விட்டான்!
“ஆமாம் உறையூரிலிருந்துதான் வருகிறோம். ரதத்தில் பறக்கும் புகழ் பெற்ற சோழ நாட்டுப் புலிக்கொடி கூட உனக்குத் தெரியவில்லையா? நீ தடுத்து நிறுத்தியுள்ள இந்த ரதத்தில் இருப்பது உறையூர் இளவரசி உதயநந்தினி தேவியார்! நான் மெய்க்காப்பாளன் வாணவராயன்! இளவரசி வருகிற செய்தி காலையிலேயே ஓலைமூலம் அனுப்பப்பட்டதே; அந்தச் சோழ வீரர்கள் வந்து சேரவில்லையா?”
கோட்டைக் காவலன், ரதத்தில் அமர்ந்திருந்த இளவரசி உதய நந்தினிக்குப் பணிந்து வணக்கம் தெரிவித்தான்.
“தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்! தெரியாமல் நடந்து விட்டது. ஆனால் ஒன்று; சோழ இளவரசி வருகிற செய்தி எதுவும் முன்கூட்டி அறிவிக்கப்படவில்லை. தாங்கள் கூறியபடி சோழ நாட்டு வீரர் யாரும் ஓலை கொண்டு வரவும் இல்லை!”
இவ்வாறு காவலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கையில் புலிக்கொடி ஏந்தியவாறு குதிரையொன்றில் ஒரு வீரன் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு மூச்சு வாங்கியது. அவன் ஏறி வந்த குதிரைக்கு வியர்த்துக் கொட்டியது. மெத்தக் களைப்புற்ற நிலையில் அவன் குதிரையிலிருந்து கீழே இறங்கினான்.
ரதத்திலிருந்த மெய்க்காப்பாளன் வாணவராயன் அவனைப் பார்த்து, “ஏய்! என்ன நடந்தது? ஏன் இவ்வளவு பரபரப்பு?” என்று வியப்புடன் கேட்டான். இளவரசியின் ரதத்தைச் சுற் றிப் பாதுகாப்பாக வந்த வீரர்களும் அவனையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னை மிகவும் கஷ்டப்பட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு அந்த வீரன், மெய்க்காப்பாளன் அருகே வந்து பேசினான்…
“இளவரசி வருகையைத் தெரிவிக்க உறையூர் அரண்மனை யின் ஓலையைக் கொண்டுவந்து கொண்டிருந்தோம்; நானும் மற்றொரு வீரன் மலையனும்! வழியில் தலையூர்க் காளியின் படைவீரர்கள் பத்துப்பேர் எங்களை மறித்துத் தாக்கினர். எதிர்ப்பை சமாளிக்க முடியாத நாங்களிருவரும் குறுக்குப் பாதையில் காட்டு வழியில் ஓடினோம். மலையனின் குதிரை, பாறையொன்றில் கால் இடறிக் கீழே உருண்டது. தலையூர் வீரர்களிடம் சிக்கிக் கொண்ட மலையன் அந்த இடத்திலேயே பிணமாகச் சாய்ந்தான். அவனிடமிருந்த உறையூர் அரண்மனை ஓலையைக் கைப்பற்றிக் கொண்டு தலையூர் வீரர்கள் என் னைத் துரத்தினார்கள். நான் அவர்களிடம் மாட்டிக் கொள் ளாமல் வெகு தொலைவு ஓடி இறுதியாகத் தப்பித்து வள நாட்டுச் சாலைக்கு வந்து சேர்ந்தேன். இளவரசியாரின் ரதம் வருவதைப் பார்த்து விட்டுப் பின்னாலேயே ஓடிவருகிறேன்.”
வீரன் கூறிய தகவல்களைக் கேட்டு, மெய்க்காப்பாளன் வாணவராயன் ஆத்திரமுற்றான். அடர்ந்து வளர்ந்திருந்த தாடி மீசையைத் தடவிக்கொண்டு, இளவரசியைப் பார்த்து; கேட் டீர்களா இளவரசி, இந்தக் கேடு கெட்ட செயலை! தலையூர்ப் படை வீரர்களால் நமக்கே ஏதாவது தொல்லை வரக்கூடு மென்றுதான் பாதுகாப்பு சற்று பலமாக இருக்கட்டுமென்று இத்தனை பேரை அழைத்து வந்தேன்! பாவம், மலையன் உறையூர் அரண்மனையில் விசுவாசமுள்ள வீரன் – அவனை இழந்தது எனக்கு மட்டுமல்ல; நமது மன்னருக்கே பெரும் கவலையைத் தரக் கூடிய செய்தியாகும்!” என்றான்.
“முதலில் தப்பி வந்தவன் இளைப்பாறட்டும்! மற்ற விஷயங் களை மாளிகைக்குள் சென்ற பிறகு யோசிக்கலாம். எதற்கும் நம்முடன் வந்த வீரர்களில் ஒருவனை அனுப்பி என் தந்தை யாரிடம், நடந்த விவரங்களைத் தெரிவிக்கச் செய்யவேண்டும்.”
இளவரசி இவ்வாறு கூறியதை, மெய்க்காப்பாளன் ஆணை யாக பாவித்து ஏற்றுக்கொண்டு,”அப்படியே ஆகட்டும் இள வரசி!’ எனக்கூறினான்.
இப்போது கோட்டைக் காவலன், ரதத்திற்கு வழி விட்டு ஒதுங்கி நின்று கொண்டதுமல்லாமல் – தனக்குக் கீழுள்ள சில வீரர்களை மாளிகைக்குள் அனுப்பி -உறையூர் இளவரசியார் வந்திருக்கும் செய்தியை குன்றுடையானுக்கும் தாமரைநாச்சி யாருக்கும் மற்றவர்களுக்கும் உடனடியாகத் தெரிவிக்க ஏற் பாடு செய்தான்.
கோட்டை முகப்பைக் கடந்து இளவரசியின் ரதம் மெதுவாக ஆடி அசைந்து கொண்டு, வளநாட்டு அரண்மனையின் உட் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த வழியாகப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் சில இடங்களில் காவல் புரிந்து கொண்டுமிருந்த வீரர்கள் புலிக்கொடி பறக்கும். ரதத்தைக் கண்டு, வணக்கம் தெரிவித்தனர், ஏற்கனவே வளநாட்டுப் படையுடன் கலந்திருந்த சோழ வீரர்கள் பலரும் தங்கள் நாட் டுப் புலிக்கொடியுடன் வரும் ரதத்தில் இளவரசியார் இருக் கிறார் எனக் கேள்வியுற்று தொலைவிலிருந்தே மகிழ்ச்சி தெரி வித்து வணக்கம் செலுத்தினர்.
அரண்மனையின் உள் முகப்பை ரதம் நெருங்கிய போது, எதிரே மங்கல வாத்தியங்கள் முழங்கிட, குன்றுடையானும் தாமரைநாச்சியாரும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களு டன் அருக்காணித் தங்கம், முத்தாயி, பவளாயி, குப்பாயி முதலியோரும் மலர்ந்த முகத்துடன் வந்தனர். மகளிர் பலர் அழகிய வெள்ளித்தட்டுகளில் பூ, பழம், சந்தனம், குங்குமம் ஆகியவற்றை நிரப்பிக் கொண்டு மயில் கூட்டம் போல நடந்து வந்தனர்.
உள்முகப்பு வாசலருகே ரதம் நின்றது. தாமரைநாச்சியார் ரதத்திடம் சென்று நீலப் பட்டுத் திரையை விலக்கிக் கொண்டே புன்னகை தவழ இளவரசியை வரவேற்றாள். இளவரசிக்கு எதிர் இருக்கையில் உட்கார்ந்திருந்த மெய்க்காப்பாளன் வாண வராயன் ரதத்திலிருந்து குதித்து குன்றுடையானுக்கு முன்பு சென்று, ”நான்தான் இளவரசியாரின் மெய்க்காப்பாளன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். இளவரிசி உதய நந்தினியிடம் தாமரைநாச்சியார் தன்னை யார் என்று கூறி விட்டு மற்றவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். முத் தாயி, பவளாயி இருவரையும் அறிமுகப்படுத்தியபோது இள வரசி; அவர்களை இறுக அணைத்துக் கொண்டு – “மாவீரர் களின் மனைவிகள் இப்படிப்பட்ட வீரர்களை மணக்கப் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்று புகழ்ந் துரைத்தாள். இவள்தான் என் மகள் அருக்காணித் தங்கம். இவளை என் கணவர் நல்ல தங்கம் என்றுதான் கூப்பிடுவார்!” என்று தாமரை நாச்சியார் சொன்னபோது, குன்றுடையான் புளகாங்கிதமுடன், “நான் மட்டுமல்ல ஊரே என் மகளை நல்ல தங்கம் என்றுதான் கூறும்!” என்றான்! இளவரசி, அருக்காணியையும் தழுவிக்கொண்டு “ஆயிரம் ஜென்மங்கள் எடுத்தாலும் இது மாதிரி அண்ணன்மார்களைப் பெற முடியாதம்மா நீ பெரிய அதிர்ஷ்டசாலி!’ என்று பாராட்டியதோடு – தாமரை நாச்சியாரிடம், “அம்மா! நீங்கள் என்ன தவம் செய்தீர்களோ தெரியவில்லை பீமசேனன் அர்ச்சுனன் இரண்டு பேருடைய பலத்தையும் உங்களுடைய இரண்டு மகன்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே பெற்றிருக் கிறார்கள். சாட்சாத் ரதி தேவியே உங்கள் வயிற்றில் அவ தரித்தது மாதிரி ஒரு பெண்ணையும் பெற்றிருக்கிறீர்கள்! என்னை நீங்களும் உங்கள் கணவரும் ஆசீர்வதியுங்கள் தாயே!” எனக் கூறி, தாமரைநாச்சியார் குன்றுடையான் இருவர் காலிலும் விழுந்து வணங்குவதற்கு மண்டியிட்டுக் குனிந்தாள். தாமரைநாச்சியார் திடுக்கிட்டு இளவரசியைத் தூக்கி அணைத் தவாறு. என்ன காரியம் செய்தாய் அம்மா! சோழ சாம்ராஜ் யத்தின் ராஜகுமாரி நீ! உங்களுக்குக் கட்டுப்பட்ட ஒருநாட்டில் வந்து இப்படி தலைவணங்கி வாழ்த்துப் பெறுவதா? கூடாது! கூடாது!” என்று சொல்லிக்கொண்டே அவள் கூந்தலைத் தடவிக் கொடுத்தாள்.
அப்போது இளவரசி கலகலவென சிரித்து விட்டு, தனது மெய்க்காப்பாளனைப் பார்த்து, வாணவராயா! என்ன பேசா மல் மீசையையும் தாடியையும் வருடிக் கொண்டு நிற்கிறாய்? இவர்கள் சொல்வதைக் கேட்டாயா? சோழ நாட்டுக்கு வள நாடு கட்டுப்பட்ட நாடாம்? உறையூர் கொலுமண்டபத்தில் என்ன நடந்தது சொல்லேன்!” என்றாள்.
வாணவராயன் பெருமிதமாக சிரித்தான், குன்றுடையான் தாமரை மற்றுமுள்ளோர்களையெல்லாம் தனது விழிகளை சுழற்றி ஒரு நோட்டம் விட்டான்.
“எல்லோரும் நின்று கொண்டே பேசிக்கொண்டிருப்பதா? பொன்னர் – சங்கரின் பெருமையைச் சொல்வதென்றால் ஒரு நாள் இரு நாள் போதுமா? இளவரசியார் அதைத்தானே சொல்லும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்!” என்றான்.
“மெய்க்காப்பாளர் சொல்வதும் சரிதான். வாருங்கள், மாளிகைக் கூடத்தில் அமர்ந்து பேசலாம். எனக்கூறிய குன் றுடையான், தாமரையிடம், “தாமரை! இளவரசியாருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் பழரசம் தயார் செய்யச் சொல்! எல்லோருக்கும் அறுசுவை உணவு தயாராகட்டும்!” என்றபடி இளவரசியை அழைத்துக் கொண்டு கூடத்திற்குள் நுழைந்தார்.
இளவரசி, அருக்காணித் தங்கத்தைத் தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு, உண்மையிலேயே நீ ரதிதான்! நான் புகழ் வதற்காகச் சொல்லவில்லை!” என்று வர்ணித்துக் கொண்டே கூடத்திற்கு வந்தாள். அருக்காணிக்கு இயல்பான நாணம் அவள் தலையைக் குனியச் செய்தது. கூடத்துக்குள் அனைவரும் வந்ததும் அருக்காணி, இளவரசியை விட்டு மெல்ல நகர்ந்து குப்பாயியிடம் வந்தாள். குப்பாயி, அருக்காணியைக் குறும் பாகப் பார்த்துக் கொண்டே, ளவரசியின் காலடி மண்ணை எடுத்து உனக்கு திருஷ்டி சுற்றிப்போட வேண்டியதுதான்!” என்றாள்! “போடி! என்ற அருக்காணி, குப்பாயியைச் செல்லமாகக் கடிந்து கொண்டு சிரிப்பையும் வெளிக் காட்டாமல் அடக்கிக் கொண்டாள்.
வாணவராயன் உறையூர்க் கொலுமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிகளை வர்ணிக்கத் தொடங்கினான்.
“எதிரிகளைக் கண்டு இமை கொட்டுவது கூட கோழைத் தனம் என்று கருதக் கூடிய மகாவீரர் சோழ மன்னர்! யாரை யும் அடக்கிப் பழக்கப்பட்டவரே தவிர, யாருக்கும் அடங்கிப் போனவரல்ல! அவரையே தங்கள் வழிக்குக் கொண்டு வருகிற அளவுக்கு பொன்னர் . சங்கர் காட்டிய வீரமும், நடத்திய விவேகமிக்கி வாதமும் உறையூர்க் கொலுமண்டபத்தையே உலுக்கிவிட்டது! யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம் யார் கட்டளைக்கும் கீழ்ப்படிந்து எங்கள் கொங்குமண்டிலக் கொடி பறக்காது – என்று பொன்னர் பேசியதையும், சங்கர் முழங்கியதையும் கேட்ட எமது மன்னர் அக்களதேவச் சோழர் மெய் மறந்து போனார்! வளநாடு, சோழநாட்டுக்கு அடிமையல்ல! நட்பு நாடாக அங்கீகாரம் பெறுகிறது என்று கூறி, செப்புப் பட்டயத்தையே மாற்றி அமைத்து விட்டார். அது மட்டுமா? உங்கள் புதல்வர்களின் பேராற்றலைக் கண்டு வியந்த சோழ மன்னர் அவர்களை உறையூர் அரண்மனை விருந்தினர்களாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அது மட்டுமல்ல; இள வரசியாரை இங்கு அனுப்பியிருப்பதே குன்றுடையாரையும் தாமரைநாச்சியாரையும் உறையூருக்கு அழைத்து மரியாதை செய்வதற்காகவேதான்!”
சோழ நாட்டு மெய்க்காப்பாளன் உரை கேட்டு சொக்கிப் போன குன்றுடையான், எங்களை அழைப்பதற்கு இளவரசி நேரில் வர வேண்டுமா? ஓலை கொடுத்து ஒரு வீரனை அனுப்பினால், வந்திருக்க மாட்டோமா?’ என்று கேட்டு, மசைச்சாமி” என்ற தனது பட்டப் பெயரை இப்போதும் ஒரு முறை நிலைநிறுத்திக் கொண்டான்.
“கப்பம் கட்டும் நாடாக இருந்தால் ஓலை மூலம் அழைப்பு வந்திருக்கும்! இப்போது; அதாவது உங்கள் புதல்வர்களின் காலத்தில் இது நட்பு நாட்டின் தகுதியைப் பெற்று விட்டதே! அதனால்தான் இளவரசியே நேரில் வந்து தங்களையும் தாமரை நாச்சியாரையும், பொன்னர் – சங்கரின் ராணிகளையும், உங்கள் அருமைப்புதல்வியார் அருக்காணித் தங்கத்தையும் அழைத்துப் போக இருக்கிறார். ஒரு தவறு நடந்து விட்டது. இளவரசி இங்கு வர இருப்பதை தங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க சோழ நாட்டு மன்னர் ஓலை கொடுத்து அனுப்பினார். வரும் வழியில் ஒரு வீரன் கொல்லப்பட்டு விட்டான்!’
வாணவராயன் சொல்லி முடிப்பதற்குள்; குன்றுடையான் பரபரப்படைந்து,”என்ன… என்ன! சோழநாட்டு வீரன் கொல்லப்பட்டு விட்டானா? ஏன்? எதற்காக? எப்படி?’ என்று வினாக்களை அடுக்கினான்.
“எல்லாம் தலையூர்க் காளியின் வேலைதான்! அவனுடைய தளபதி பராக்கிரமனின் சகோதரன் விக்ரமனைத் தூண்டிவிட்டு, உறையூரில் பொன்னர் – சங்கருக்கு அவமானம் விளைவித்து அதன் காரணமாக சோழநாட்டுக்கும் வள நாட்டுக்கும் பகையை உருவாக்க தலையூர்க்காளி சூழ்ச்சி செய்தான்! கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல், பகை வளர்வதற்குப் பதிலாக சோழ நாட்டுக்கும் வளநாட்டுக்கும் நட்பு மலர்ந்து விட்டது! இளவரசியார், தங்களை அழைப்பதற்கு மரியாதை சந்திப்பாக வரப்போகிற விஷயம் எப்படியோ தலையூர்த் தளபதி பராக் கிரமனுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் வளநாட்டுக்கு நாங்கள் வருகிற வழியில் தலையூர் படை வீரர்கள் காத்தி ருந்து எங்களைக் கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனை அறிந்த நான். முன் எச்சரிக்கையாக சரியான பாது காப்புடன் இளவரசியை அழைத்து வந்து விட்டேன். எங்கள் வருகைக்காகக் காத்திருந்த தலையூர் வீரர்கள்; உறையூரிலிருந்து ஓலை கொண்டு வந்த வீரர்களை மடக்கி ஒரு வீரனைக் கொன்று ஓலையையும் அபகரித்து கொண்டு போயிருக்கிறார் கள். அந்த எதிர்பாராத சலசலப்பு நிகழ்ச்சியால் நாங்கள் எப்படியோ எதிர்ப்பு எதுவுமின்றி இங்கு வந்து சேர்ந்து விட் டோம்” என்று விவரித்து முடித்தான் வாணவராயன்!
“அப்பாடா! எப்படியோ கடவுள்தான் உங்களையெல்லாம் காப்பாற்றியிருக்கிறார்” என்று குன்றுடையான் பக்திக்களை சொட்ட சொட்ட பவ்யமாகச் சொன்னான்.
இளவரசி வருகையை முன்னிட்டு எல்லோருக்கும் பழ ரசம் வழங்கப்பட்டது. குப்பாயிதான் முன்னின்று அனைவருக்கும் பழரசம் தருகின்ற ஏற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்தாள். அவளது துடிப்பையும் துள்ளலையும் கண்ட இளவரசி ; தாமரை நாச்சியாரிடம், ஏனம்மா, இந்தப் பெண் யார் என்றே எனக்கு அறிமுகப்படுத்தவில்லையே! உங்கள் மகள் அருக் காணித் தங்கம் மாதிரியே இருக்கிறாள்! ஏறத்தாழ இருவரும் அணிந்திருக்கும் உடை, நகை எல்லாமே ஒன்று போலிருக் கிறது!” என்று ஆச்சரியப்பட்டாள்.
“இவள் பெயர் குப்பாயி! திருக்காம்புலியூர் பச்சனா முதலி யார் என்பவரின் மகள்! சிறு வயதிலிருந்தே அருக்காணித் தங்கத்துக்கு உயிர்த் தோழி! யாரைப் பார்த்தாலும் இவள் என்ன இரட்டைக் குழந்தையாக அருக்காணியுடன் பிறந்தவளா? என்று கேட்கத் தவற மாட்டார்கள்! நானும் இவளை என் மகளைப் போலத்தான் நினைக்கிறேன்” என்று கூறிய தாமரை ஏ,குப்பாயி இங்கே வா! இளவரசி உன்னைப் பார்க்க வேண்டுமாம்!’ எனக் கூப்பிட்டதும், குப்பாயி வெட்கத்தால் துள்ளிக் குதித்து அந்தக் கூடத்தை விட்டே ஓடி விட்டாள். ஏ! ஏ! நில்லு! நில்லு!” என்று கத்திக் கொண்டே அவளைப் பிடிக்க அருக்காணித் தங்கமும் அங்கிருந்து போய் விட்டாள்.
வாணவராயன் இரண்டு மூன்று தடவை பழரசம் பருகி அவனையும் மீறி வந்த ஏப்பங்களைச் சுதந்திரமாக வெளியேற அனுமதித்துக் கொண்டிருந்தான்!
இளவரசி, தனது பவளம் போன்ற இதழ்களில் பழரசக் கோப்பை பட்டதும் படாததுமாக வைத்து அதனை அருந்து வது போல பாவனை செய்து கொண்டிருந்தாள். ‘கொஞ்ச மாவது சாப்பிடம்மா!” என்று தாமரைநாச்சியார் கொஞ்சினாள்.
பழரசத்தை ருசி பார்த்து கொண்டிருந்த குன்றுடையான் திடீரென வாயிற்புறம் பார்த்து, அடடே! வீரமலை… வந்து விட்டாயா?” என்று ஆர்வத்துடன் கேட்டான். அவனது கேள் வியைத் தொடர்ந்து வீரமலை, அந்த மாளிகைக் கூடத்துக்குள் நுழைந்தான்.
சற்றும் தாமதிக்காமல் குன்றுடையான், வீரமலைக்கு; சோழ நாட்டு இளவரசியையும் அவளது மெய்காப்பாளனையும் அறி முகப்படுத்தி வைத்து நடந்தவற்றையும் ளவரசி வந்துள்ள நோக்கத்தையும் விரிவாக எடுத்துரைத்தான்.
வீரமலை, அந்தக் கூடத்தில் நுழைந்த போதே அவனது கம்பீரமான உடல் அமைப்பில் தன்னையறியாமல் உள்ளத் தைப் பறிகொடுத்து விட்ட நிலையில் அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் இளவரசி!
“இவர்தான் வீரமலை!” என்று குன்றுடையான் சொன்ன வுடன், இளவரசியின் மார்பகம் விம்மிப் புடைத்து மெல்லத் தணியும் அளவுக்கு ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. இளவரசி, தன்னைக் கண்டவுடன் ஒரு மாதிரி ஆகிவிட்டதை வீரமலையும் ஜாடையாகக் கவனித்து விட்டான்.
“அப்படியானால் உறையூருக்கு எப்போது புறப்பட வேண்டும்?” என்று கேட்டான் வீரமலை! கடைக்கண்ணை அவன் மீது வீசியிழுத்த இளவரசி, குன்றுடையானையும் தாமரை யையும் நோக்கி.
“இரவில் அந்தப் பாதையில் செல்ல எனக்கும் பயமாக இருக்கிறது; காலையில் புறப்படலாம் என்று கருதுகிறேன். புறப்படுவதற்கு உங்களுக்கு எப்போது வசதிப்படும்?” என்று கேட்டாள். அப்படிக் கேட்கும்போது, அவள் கன்னங்கள் சிவப்பு மலர்களாகக் காட்சியளித்தன!
“காலையிலேயே புறப்படுவோம்! இரவு இளவரசி நன்றாகக் களைப்பாறட்டும்!” என்றான் குன்றுடையான்!
“இளவரசிக்குரிய எந்த வசதிகளும் குறையாமல் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அரண்மனைப் பணியாட்கள் அனைவருக்கும் குன்றுடையானும் தாமரைநாச்சியாரும் ஆணை பிறப்பித்தார்கள்.
மாலைப் பொழுது அடையாளம் தெரியாமல் மறைந்து, இருளின் ஆதிக்கம் பரவியது வளநாட்டுக் கோட்டையிலும், அரண்மனையிலும்!
அரண்மனையில் வழக்கமாகக் கொளுத்தி வைக்கப்படும் தீப்பந்த விளக்குகளும், பெரும் பெரும் அகல் விளக்குகளும் தங்களாலியன்ற ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன!
“வளநாட்டு அறுசுவை உணவை அளவுக்கு மீறி ஒரு பிடி பிடித்து விட்டேன்! தூக்கம் கண்ணைச் சுற்றுகிறது!” என்று வீரமலையிடம் கூறிவிட்டு சோழ நாட்டு மெய்க்காப்பாளன் வாணவராயன், அவனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று கட்டிலில் உருண்டு விட்டான். அவனுடன் வந்த வீரர் களும் அவனது அறையைச் சுற்றிப் படுத்துக் கொண்டார்கள். அவர்களில் சில வீரர்களது குறட்டைச் சப்தம் அந்த அரண் மனைச் சுவர்களையே அதிர வைத்துக் கொண்டிருந்தது.
எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் கோட்டைக் காவலர்கள் விழிப்புடன் காவல் புரிகிறார்களா என்பதை அறிய வீரமலை மட்டும் கோட்டைச் சுவர்களிலும் – தாழ்வாரங்களிலும் மெல்ல நடைபயின்று கொண்டிருந்தான்.
ஆடம்பரமும் வசதிகளும் நிரம்பிய அறையொன்று ஒதுக்கப் பட்டிருந்தும் கூட இளவரசிக்கு மட்டும் ஏனோ தூக்கம் வர வில்லை. அப்போது “இன்னும் தூங்கவில்லையா?” என்று கேட்டுக் கொண்டே அகிற்புகை எழும் தூபம் ஒன்றை அந்த அறையில் கொண்டு வந்து வைத்தாள் குப்பாயி!
”ஏதேதோ நினைவுகள்! இப்போது தான் தூக்கம் கண் களைத் தொட ஆரம்பித்திருக்கிறது!” என்றாள் இளவரசி.
“தூங்குங்கள், வருகிறேன்!” என்று சொல்லிவிட்டுப் போனவளை இளவரசி, “குப்பாயி! இங்கு வாயேன்!” என அழைத்தாள்! குப்பாயியும் இளவரசியின் படுக்கையருகே வந்து, “என்ன இளவரசி?” என்று கேட்டாள்!
“ஒன்றுமில்லை! இந்த வீரமலை இரவு முழுவதும் கோட்டை கொத்தளங்களைச் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருப்பாரா? இரவில் தூங்கவே மாட்டாரா?”
குப்பாயிக்கு தூக்கி வாரிப் போட்டது! ஓகோகோ! இளவர சிக்குத் தூக்கம் வராத காரணம் புரிந்துவிட்டது! என்று அவ ளது மனம் மௌன மொழி பேசிற்று!
“இல்லை இளவரசி! கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்து விட்டு, பிறகு ஓய்வெடுப்பார்! ஆனால் திடீர் திடீரென்று விழித்துக் கொண்டு கோட்டை கொத்தளங்களைச் சுற்றிப் பார்க்கப் போய் விடுவார்!”
இளவரசி, அந்த பதிலைக் கேட்டு நிம்மதியடைந்தவளைப் போலக் காணப்பட்டாள்! இருந்தாலும் அவளிடம் இன்னொரு கேள்வி கேட்டுவிடத் தீர்மானித்தாள்!
“குப்பாயி! எனக்கு கேட்கவே வெட்கமாயிருக்கிறது! தவ றாக எடுத்துக் கொள்ளாதே! வீரமலையின் அறை எங்கிருக்கிறது?”
“அதோ… அரண்மனை முகப்பு வாயிலுக்கு அருகே; மாலையில் உங்களை வரவேற்போமே, அந்த இடத்துக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது!”
இந்தப் பதிலை சொல்லி விட்டு, குப்பாயி இளவரசியின் முகத்தைப் பார்த்தாள். இளவரசி இளநகை புரிந்தாள். ”சரி! போ குப்பாயி!” என்றாள். குப்பாயிக்கு இதயத்தில் பல மின்னல்கள்! ‘கண்டதும் காதலா?” இப்படியொரு திடீர்க் கேள்வி! ஒருவேளை பல நாள் காதலா?” அல்லது பழகிப் போன காதலா?’ அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கால்கள் ஒன்றையொன்று பின்னிட அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
இளவரசி, படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். தூக் கம் வரவில்லை. தலையணையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்துப் பார்த்தாள். மீண்டும் எழுந்து பலகணிப்பக்கம் வந்து நின்றாள்.
யாரோ அவள் அறையை நோக்கி வருவது போல் தெரிந் தது. அரண்மனைத் தாழ்வாரத்து விளக்குகளின் ஒளி மங்கலாக இருந்ததால் யார் என்று இளவரசிக்கு சரியாகத் தெரியவில்லை.
வந்த உருவம், இளவரசியின் அறைக் கதவுப் பக்கம் வந்து நின்றது. பலகணி வழியே தலையை நீட்டி இளவரசி உற்றுப் பார்த்தாள். அது வேறு யாருமல்ல; வீரமலையேதான்! ஓடிப் போய், கதவைத் திறந்தாள் ஓசையின்றி! ஆனால் வீரமலை அவளது அறையைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அவள் திறந்திருந்த கதவின் வழியாக அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அரண்மனைத் தாழ்வாரம் முழுமையும் கடந்து, வீரமலை தனது அறைக்குள் சென்றான். அவனது அறையில் மெல்லிய தாக எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் திரியை நெருடி விட்டு ஒளியைப் பெருக்கினான். அப்போது கதவுப் பக்கம் ஏதோ ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தான். குனிந்த தலை நிமிராமல் கொள்ளை வெட்கத்துடன் இளவரசி நின்று கொண்டிருந்தாள்.
37. வீரமலையை வீழ்த்திய காதல்
சற்றும் எதிர்பாராத வகையில் இளவரசி உதயநந்தினி அந்த நேரத்தில் தனது அறைக்குள் நுழைந்து நாணம் தலையைப் பிடித்து அழுத்திக் கவிழ்த்திட, ஒளியுமிழும் இரு விழிகளை மட்டும் மேலே தூக்கித் தன்மீது படர விட்டவாறு நிற்பதைக் கண்ட வீரமலை, ‘என்ன இது? இந்த நேரத்தில்?” எனக் கேட்டுக் கொண்டே அவளருகில் வந்தான். ஏன்? வரக் கூடாதா?’ என்று கேட்டுக் கொண்டே இளவரசி அங்கிருந்த தூணில் முகத்தை மறைத்துக் கொண்டு தனது வெட்கத்தை விளம்பரப்படுத்தினாள்.
“எனக்கு ஒன்றுமே புரியவில்லை இளவரசி! திடீரென இங்கு எதற்காக வந்தீர்கள்?” என்றான் வீரமலை.
இளவரசி, அவனுக்கு உடனே விடையளிக்கவில்லை. மேல் வாய்ப் பற்களை மெல்ல அழுத்திக் கீழ் உதட்டை கடித்துக் கொண்டே இடை நெளித்து அசைப்பு காட்டிக் கொண்டே தூணின் மறைவிலிருந்து வெளிப்பட்டாள். வீரமலையும் வைத்த விழி வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
“ஏன்; நான் வந்தது பிடிக்கவில்லையா? போ என்று சொன்னால் போய் விடுகிறேன்.”
“இல்லை இளவரசி; இந்த நேரத்தில் தங்களை யாராவது இந்த இடத்தில் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”
“என்ன நினைப்பார்கள்? நான் உறையூர் இளவரசி! நீங்களோ வளநாட்டின் தளபதி! ராஜீய விஷயங்களைக் கலந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொள்வார்கள்!”
“அப்படியென்ன அவசரடான ராஜீய விஷயம்? எதைப் பற்றி என்னிடம் பேச வந்தீர்கள்?”
“உறையூருக்கும் வள நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள உறவு மேலும் பலப்பட வேண்டுமென்பதற்காக நாமிருவரும் விவாதித்து ஒரு முடிவு எடுப்பது கூட ராஜீய விஷயந்தானே!”
“கொஞ்சம் புரியும்படி சொன்னால் பரவாயில்லை.”
“பொன்னர்-சங்கர் இருவருக்கும் திருமணமாகாமல் இருந் திருந்தால் – என் தந்தை என்னை அந்த இருவரில் ஒருவருக்கு மணமுடித்து; உறையூர் வளநாட்டு உறவை வலுப்படுத்தியிருப் பார்!”
“நடந்ததைப் பற்றி இனிமேல் பேசுவானேன்?”
“நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசலாம் அல்லவா?”
இப்போது இளவரசியின் கண்கள் வீரமலையின் மீது மோகனாஸ்திரங்களாகச் சென்று பாய்ந்தன! அவளே தொடர்ந்து பேசினாள். “பொன்னருக்கும் சங்கருக்கும் தானே திருமணம் முடிந்துள்ளது! இன்னமும் வீரமலைக்குத் திருமணம் முடியவில்லையே!” இதைக் கேட்டதும் வீரமலை திகைத்துப் போய் விட்டான்.
ஒரு பெண் – அதுவும் சாதாரணப் பெண்ணல்ல மன்னரின் மகள் அவளா இப்படிப் பேசுகிறாள்? பலாப்பழம் தனக்குள்ளிருக்கும் சுளையை மூடி மறைத்து வைத்துக்கொள்ள எத்தனை போர்வைகள்! அவற்றுக்கு மேலே எவ்வளவு முள் நிறைந்த கனமான தோல்! பெண்கள் அப்படித் தானே தங்கள் உள்ளத்தில் உள்ளதை எளிதில் யாரும் புரிந்து கொள்ள முடி யாமல் மூடி மறைத்துக் கொண்டிருப்பார்கள்! இவள் என்னமோ; மாலையில்தான் வந்தாள்! இரவிலே அறையில் நுழைந்தாள்! சிறிதுகூடத் தயக்கமின்றி திருமணப் பேச்சுக்கே அடிகோலி விட்டாளே!
வீரமலைக்கு ஒரே குழப்பம்! இளவரசியை மீண்டும் உற்றுப் பார்த்தான்!
”இளவரசீ! எண்ணுவதெல்லாம் நடந்து விடுவதில்லை! அதுவும் உங்கள் எண்ணம் ஒரு வழிப்பாதையாக இருக்கிறது!”
“பொய் சொல்லாதீர்கள்! மாலையில் உங்களை நான் பார்த்த போதே உங்கள் மனம் எனக்குப் புரிந்து விட்டது! கண்ணும் கண்ணும் சந்தித்து விட்டால் வாய்ச்சொற்களால் எந்தப் பயனுமில்லை!’
“ஒரு அழகிய காட்சி – ஒரு அற்புத ஓவியம் – பார்வையில் பட்டால் அவற்றைப் பார்ப்பது போலத்தான் இளவரசியையும் பார்த்திருப்பேன். அந்தப் பார்வைக்கு விபரீத அர்த்தம் எடுத் துக் கொண்டதற்கு நான் பொறுப்பாக முடியுமா?”
“அழகிய காட்சி என்பது என்ன? நீலவானம் – அதிலே நீந்தும் நிலவு -அந்த ஒளி பொழியும் மணல்வெளி – அல்லது ஒரு அருவி அதன் பக்கமெல்லாம் மணம் வீசும் மலர்க்கொடிகள் – ஆனந்தத் தென்றல் அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டே அந்த இடத்திலேயே இருப்பதற்கு ஆசை தோன்றுவது இயற்கைதானே!”
“
ஆசை தோன்றும்; கவிஞனாக இருந்தால்! அல்லது காத லியை அங்கு தேடி வரும் காதலனாக இருந்தால்! நான் அப்படி யல்ல! கடமையை நிறைவேற்ற நடத்தும் பயணத்தில் காலில் படுவது முள்ளாக இருந்தால் எடுத்தெறிந்து விட்டுச் செல் கிறேன்! கண்ணில் படுவது மலராக இருந்தால் பார்த்துக் களித்து விட்டுப் போகிறேன்! அதைப் பறித்துப் போக வேண்டு மென்று கருதுவதில்லை!”
“அற்புத ஓவியம் என்றீர்கள்! அந்த ஓவியம் உயிர் பெற்று உங்களருகே ஓடி வரும் போது உதைத்துத் தள்ளி விட்டு ஒதுங்கி விடுவீர்களா?”
“எனக்கு மிகவும் வியப்பாகவும் இருக்கிறது! திகைப்பாகவும் இருக்கிறது! ஒரு நாட்டின் இளவரசி இன்னொரு நாட்டின் அதுவும் மிகச்சிறிய நாட்டின் சாதாரணத் தளபதி மீது இப்படி யொரு அன்பை இவ்வளவு வெளிப்படையாக, இவ்வளவு அவசரமாக வெளியிடுவது வேடிக்கையாகக் கூட இருக்கிறது!”
“பல நாள் கஷ்டப்பட்டு பூமியைத் தோண்டி மிக ஆழத்தி லிருந்து கிணற்று நீர் எடுக்கிறோம்! அதிகம் தோண்டாமலும் சிரமப்படாமலும் ஆற்று மணலில் ஊற்று நீர் எடுக்கிறோம்! உடனே விரைவில் கிடைத்து விட்டது என்பதற்காக ஊற்று நீர் ருசியில்லாமல் போய்விடுமா? ஒரு இருதய அன்பு எளிதில் கிடைக்கிறது என்பதற்காக அதனைக் குறைத்து எடை போட்டு விடலாமா?”
“இவ்வளவு நேரம் நாம் பேசிக் கொண்டிருப்பது கூட பெரும் தவறு!”
“அரண்மனையே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது! யாரும் கவனிக்க மாட்டார்கள்!”
”யாரும் கவனிக்காமலிருக்கலாம். ஆனால் என் மனசாட்சி என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறதே; அதை அலட்சியப்படுத்த முடியுமா?
“இதில் என் குற்றம் எதுவுமில்லை! நான் வந்தது என் னவோ குன்றுடையார் குடும்பத்தை உறையூர் விருந்தினர் களாக அழைத்துச் செல்வதற்குத்தான்! இடையில் உங்களைப் பார்த்ததால் வந்த வம்புதான் எல்லாம்! உறையூர் அரண்மனை யில் பொன்னரையும் சங்கரையும் பார்த்தேன். இங்கே வந்த வுடன் முத்தாயி, பவளாயி இருவரையும் பார்த்து என்னை யறியாமலே பொறாமை கொண்டேன். திடீரென உங்களைப் பார்த்தவுடன் அந்தப் பொறாமை ஓடிப் போய் விட்டது. முத்தாயிக்கும் பவளாயிக்கும் எதிராக என்னாலும் போட்டி போட முடியும் என்ற துணிச்சல் எனக்கு ஏற்பட்டு விட்டது! அப்படியொரு முடிவுக்கு என்னை அவசர அவசரமாக வரச் செய்தது, இதோ என் முன் நிற்கும் இந்த ஆஜானுபாகுவான உருவம்தான்! தேக்குமர தேகத்துக்குரியவராக நீங்கள் இல்லாம லிருந்தால் எத்தனையோ ஆண்கள் என் கண்ணில் படுவது போலத்தான் நீங்களும் பட்டிருப்பீர்கள்! கோயில் காளையின் திமிலைப்போல் உயர்ந்து நிற்கும் உங்கள் தோள்களில் சாய வேண்டுமென்று எந்தப் பெண்தான் ஆசைப்பட்டு உருக மாட்டாள்!’
“நீங்கள் இளவரசி! இப்படியெல்லாம் பேசக் கூடாது!”
“இளவரசியென்றால் அவள் இருதயம் மட்டும் தங்கத்தால் செய்து வைரம் பதிக்கப்பட்டிருக்கிறதா? அதெல்லாம் ஒன்று மில்லை! என் இருதயத்தில் பூஜை மாடம் கட்டப்பட்டு விட் டது! தயவுசெய்து அதில் ஒரு விக்கிரகமாகக் குடியேறுங்கள்!” என்று கூறிக் கொண்டே, வீரமலையின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் இளவரசி! என்ன செய்வதென்று அறியாமல் தத்தளித்த வீரமலை, அவளது கரங்களின் பிடியிலிருந்து கால்களை விடுவித்துக் கொண்டு நகர்ந்து சென்றான்.
“இளவரசியைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என் னைத் தொடாதீர்கள். எவ்வளவோ உயரத்தில் இருக்கும் ராஜ குலம் எங்கே சோழன் தோட்டியின் மகன் இந்த வீரமலை எங்கே?”
“குலம், கோத்திரம்,உயர்வு, தாழ்வு இவைகளையெல்லாம் கணக்கெடுத்துக் கொண்டு காதல் மலர்வதில்லை. அப்படி மலர்ந்தால் அதற்குக் காதல் என்று பெயருமில்லை. இப்போது இந்த அறையில் நின்று கொண்டிருப்பவர்கள் சோழ நாட்டு இளவரசியும் வள நாட்டு தளபதியும் அல்ல! உங்கள் மீது உயிரையே வைத்து விட்ட உதயநந்தினியும் – அவளது உயிரைக் காப்பாற்றுகிற பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய அவளது காதலன் வீரமலையும்தான்!”
“என்னைப்பற்றிச் சொல்லி விடுகிறேன். குன்றுடையார் குடும்பத்துக்கு மிகவும் கடமைப்பட்டது என் குடும்பம். என் தந்தையார் காலத்துக்கு முன்பிருந்தே கோளாத்தாக் கவுண்டர் குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்த குடும்பம். இன்றைக்கும் எனது உயிரான கடமை இந்தக் குடும்பத்திற்கு எல்லா வகை யிலும் விசுவாசமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதுதான்! இளவரசியின் எண்ணத்தை நிறைவேற்றுகிற எந்தவொரு முடி வையும் நானே எடுக்க முடியாது! எனக்குத் தாயாகவும் தந்தை யாகவும் இருக்கிற தாமரைநாச்சியாரும் குன்றுடையாரும் எனது சகோதரர்களாக விளங்குகிற பொன்னர் சங்கருந்தான் என் னைப் பற்றி எந்த முடிவையும் எடுக்க உரிமை படைத்தவர்கள்!’
“அப்படியானால் அவர்கள் சம்மதம் கொடுத்தால் உங்களுக்கு மறுப்பு ஏதும் இல்லையே?”
“மின்னல் வெளிச்சத்தில் படிக்கச் சொல்வது போல இருக் கிறது இந்தத் திடீர் கேள்விக்கு என்னிடம் பதிலை எதிர் பார்ப்பது!”
“மின்னலாவே தெரிகிறது! எதிரே இருப்பது நிலவாகத் தெரியவில்லையா?”
வீரமலை உமிழ்நீரை விழுங்கிக் கொள்கிற ஒலி கூட மெது வாகக் கேட்டது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள மிகுந்த பிரயத்தனப்பட்டான்.
“வளநாட்டில் உள்ளவர்கள் சம்மதம் கிடைத்தாலும் கிடைக் கலாம். ஆனால் உறையூர்ச்சோழர் உடைவாளை உருவிக் கொண்டு கிளம்புவார். மாயவர் முயற்சியினால் இன்றைக்கு இரு நாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கிற நட்பும் நல்ல எண்ணமும் நம்மால் நாசமாகி விடக்கூடாதல்லவா?”
“அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். என் தந்தையை ஒப்புக் கொள்ள வைப்பது என் பொறுப்பு. நாளையதினம் குன்றுடையார் குடும்பத்துடன் நீங்களும் என்னுடன் உறையூர் வருகிறீர்கள்! அதாவது சோழமன்னரின் விருந்தினராக வரு கிறீர்கள் – திரும்பும்போது சோழ மன்னரின் மருமகனாக வரப் போகிறீர்கள்! சரிதானா?”
“என்னால் நம்ப முடியவில்லை இளவரசி!”
“நம்ப முடியாதவைகள் சிலநேரங்களில் நடப்பதால்தானே ஆண்டவனின் செயல் என்று அதற்குப் பெயர் வைக்கிறோம். நாளைக்கு என்னுடன் வந்து பாருங்கள்! நடக்கிறதா இல்லையா என்று!”
”சரி; வர முயற்சிக்கிறேன்! முதலில் தாமரைநாச்சியாரிடமும் குன்றுடையாரிடமும் பேசுகிறேன்”.
“அந்தச் சிரமம் கூட உங்களுக்கு வேண்டாம். விடிந்ததும் விடியாததுமாக நானே அவர்களிடம் பேசி அவர்களை இணங்க வைக்கிறேன். பிறகு நீங்கள் எங்களுடன் உறையூருக்கு வருகிறீர்கள்!”
“சரி, வருகிறேன்!”
“நாளைக்கு உறையூர் வரலாம். இப்போது என் அறை வரையில் வாருங்கள்!”
”ஏன்?”
“தனியாகவா அறைக்குத் திரும்புவது?”
“தனியாகத்தானே வந்தீர்கள்?”
“வரும்போது தனியாகத்தான் வந்தேன்!இப்போது விலை உயர்ந்த பொருள் ஒன்றை இருதயத்தில் சுமந்து கொண்டு செல்கிறேனே!”
வீரமலை தயங்கினான். வலது கை கட்டை விரலையும் ஆட் காட்டி விரலையும் விரித்து மீசையைத் தடவிக் கொண்டான். இளவரசி, கொடியென நெளிந்து அசைந்து அவனை நெருங்கி னாள். அவன் விலகிக் கொண்டான்.
“தொடக்கூடாது என்று கூறியிருக்கிறீர்கள். துணைக்கு வருவதாயிருந்தால் தொடமாட்டேன். இல்லாவிட்டால் இப்போது தொட்டு விடுவேன். மறுத்தால் உங்கள் மடியிலேயே துவண்டு விழுவேன்.”
“சரி… சரி… இதோ வருகிறேன்” என்று வீரமலை அவளுடன் புறப்பட்டான். இருவரும் அரண்மனைத் தாழ்வாரப் பாதையில் அருகருகே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தீப்பந்த விளக்குகள் அரண்மனைச் சுவர்களில் சொருகப்பட் டிருந்தவை ஓரளவு வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருந்தன. அரண்மனைக்காவலர்கள் நீண்ட நெடிய மதில்சுவர்களின் மேல் வாட்களை உயர்த்தியவாறு அங்குமிங்கும் நடந்து காவல் புரிந்து கொண்டிருந்தனர்.
தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருந்த இளவரசியின் காலில் ஏதோ சிறுபொருள் ஒன்று தடுக்கினாற்போலிருந்தது. அதில் அவள் தள்ளாடிக் குப்புற வீழ்வது போல் சாய்ந்து – சாய்ந்த வேகத்தில் வீரமலையின் மீது மோதிக் கொண்டாள். ஆபத் துக்குப் பாவமில்லை என்பதற்கொப்ப அவனும் அவளைத் தாங்கிப் பிடித்து. சரியாக நடக்க வைத்தான். அந்த ஒருகணம் வீரமலையின் நாடி நரம்புகள் உலைக்களத்து நெருப்பில் உள்ள இரும்புக்கம்பிகள் போல் ஆயின. அவன் உடலை அவனே தொட்டுப் பார்த்துக்கொண்டு இளவரசியுடன் நடந் தான்.
“நீங்கள் முன்னால் செல்லுங்கள். நான் பின்னால் வருகிறேன்” என்று அவளாகவே ஒதுங்கி நின்று அவனுக்குப் பின்னால் மிக மிக நெருக்கமாக நடந்து சென்றாள்.
அரண்மனைத் தாழ்வாரம் மேடும் பள்ளமும் குண்டும் குழி யுமாக இருந்தது. “ஏன் இப்படி சீர் கெட்டுக் கிடக்கிறது?” என இளவரசி வீரமலையைக் கேட்டாள்.
“எல்லாம் மாந்தியப்பன் ஆட்சி புரிந்த அழகு! அவனுக்கும் அவன் தகப்பனாருக்கும் கோட்டையைக் கவனிக்கவோ, நாட் டைக் கவனிக்கவோ நேரம் எங்கேயிருந்தது? கேளிக்கை, உல் லாசம், பொழுதுபோக்கு இப்படி ஊதாரித்தனங்கள்தானே நடைபெற்றுக் கொண்டிருந்தன!”
என்று சொல்லி வீரமலை வாய் மூடுவதற்குள் – ”ஹா!” என்று மெல்லிய குரலில் கத்தியபடி ஏதோ ஒன்றில் கால் தடுக்கிய சாக்கில் இளவரசி அவனது முதுகின் மீது விழுந்து, அவன் தோள்கள் இரண்டையும் தனது புஜங்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டாள். வீரமலைக்கு அதிர்ச்சி! ஆனந்த உணர்ச்சி! இளவரசியின் மார்பகம் அவனது முதுகில் பட்டதுமட்டுமல்ல; கொஞ்ச நேரம் ஒட்டியும் கொண்டதால் வீரமலை மெய் மறந்து போனான். அவனாக அவளை விலக்கிவிட முயன்றிட வில்லை. அவன் தன்னிடம் தோற்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட இளவரசி; அவளாகவே தன்னை விலக்கிக்கொண்டு நடந்தாள். இருவரும் மௌனமாகவே அறையை நோக்கி நடந்தனர்.
அறைக்கு அருகில் உள்ள ஒரு பெரிய தூணின் மறைவில் யாரோ ஒருவன் ஒளிந்து கொண்டு அவர்களிருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெருந்தூணில் சொருகப் பட்டிருந்த தீப்பந்தம் அணைந்து கருகியிருந்ததால் அவன் ஒளிந்திருப்பதை வீரமலை கவனிக்கவில்லை. வீரமலை இளவரசியையே பார்த்துக் கொண்டு அவளது அறையை நோக்கி அவளுடன் நடந்தான். இன்னொரு முறை தாழ்வாரத்தில் அவள் எதிலாவது கால் வைத்து தடுக்கி விழமாட்டாளா என்ற ஆசை இப்போது வீரமலைக்கு!
முதலில் இளவரசி அறைக்குள் கால் எடுத்து வைத்தாள். தூணின் மறைவிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த உருவம் மெல்ல வெளியே வந்து அறையையே உற்று நோக்கிக் கொண் டிருந்தது. தொலைவிலிருந்த தூணில் அமைந்த தீப்பந்த வெளிச்சத்தில் அந்த உருவம் மெய்க்காப்பாளன் வாணவராயன்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
அறைக்குள் சென்ற இளவரசி, படியில் கால் வைக்கும் போதே மீண்டும் ஒரு முறை, ஆ என்று கூச்சலிட்டுக் கொண்டே கீழே விழுந்து விட்டாள். அறைக்குள் விழுந்தவளை, அறைக்கு வெளியே நின்ற வீரமலை ஒரே பாய்ச்சலில் பாய்ந்து தூக்கி நிறுத்தினான்.
“பயந்து விட்டீர்களா?” என்று கேட்டுக் கொண்டே அவள் கலகலவென்று சிரித்து அவனைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.
“ஊஹூம்! என்ன இளவரசி இது? வேண்டாம்; விட்டு விடுங்கள்!”
“இன்னும் என்ன இளவரசி என்ற மரியாதை? நான் இப்போது தளபதி வீரமலையின் காதலி!”
“அந்த அறையில் பேசி முடிவு செய்ததை இந்த அறையில் மாற்றி விடலாமா? கூடாது! கூடவே கூடாது! வளநாட்டுக் குடும்பத்து சம்மதமும் – உறையூர்க் குடும்பத்து சம்மதமும் இல்லாமல் நாம் தவறு செய்து விட்டால்; இரு நாடுகளுக்குமே இருவருமே துரோகம் செய்தவர்களாகிவிடுவோம்”
வீரமலையின் நெஞ்சம், பருவ காலத்துக்கடலின் அலைகள் உயர்ந்தும் தாழ்ந்தும் ஒன்றோடொன்று மோதிச்சிதைவது போல; ஒருநேரம் அவள்மீது மயங்கியும் அடுத்த நேரம் தயங்கியும் குழம்பிக் கலங்கிக்கொண்டிருந்தது.
“கொஞ்ச நேரம் உட்காருங்களேன். பேசிக் கொண்டிருக்கலாம்!’”
“இல்லை இளவரசி; எனக்கு பயமாயிருக்கிறது! வருகிறேன்!”
வீரமலை, அவளை ஆசை தீர ஒரு முறை பார்த்துவிட்டு வெளியே செல்ல அறைக்கதவின் பக்கம் வந்தான்.
“அய்யோ… சொன்னால் கேளுங்கள்! நான் ஒன்றும் உங் களைக் கடித்துத் தின்று விட மாட்டேன்” என்றுரைத்த இளவரசி, அவனை இறுக அணைத்துத் தழுவிக் கொண்டே, அறைக் கதவைத் தாழிட்டு விட்டாள்.
அவன், ‘என்ன இது?’ என்று சொல்லித் தாழ் போட்ட கதவிடம் நெருங்குவதற்குள் அவனை இழுத்துக் கட்டில் பக்கம் கொண்டு போய்விட்டாள்.
தூணில் மறைந்திருந்து வெளிப்பட்ட வாணவராயன், தாளிடப்பட்டிருந்த அந்த அறையின் கதவை வெளிப்புறமாக ஒரு பூட்டு மாட்டிப் பூட்டினான். அவனது கண்கள் அந்தக் குறைந்த வெளிச்சத்தில் காட்டுப்பூனையின் கண்களைப் போலப் பள பளத்தன.
அப்போது அந்த அறைக்குள்ளிருந்து ஒரு பெரும் சப்தம்! பெண்ணின் குரல்தான்! “அய்யோ! என்னைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று பயங்கரக் கதறல்! அது அந்த இளவரசியின் குரல்தான்!
வெளியில் அறைக்கதவைப் பூட்டிக் கொண்டு உருட்டி விழித்துக் கொண்டிருந்த வானவராயன்; தன் இடுப்பில் சொருகியிருந்த ஒரு ஊதுகுழலை எடுத்துப் பரபரப்புடன் ஊதினான்!
அடுத்த கணம் அந்த அரண்மனை முழுதும் அல்லோலகல் லோலப்பட்டது!
38. குன்றுடையான் குழப்பம்
இளவரசியிருந்த அறைக்குள்ளிருந்து கதவைத் திறப்பதற் கான முயற்சியில் வீரமலை மிகத் தீவிரமாக ஈடுபட்டான். ஆனால் தாழ்ப்பாளைத் தொட விடாமல் அவள், அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டே; “அய்யோ! என்னைக் காப்பாற் றுங்கள்! என்று தொடர்ந்து அலறிய வண்ணமிருந்தாள். வீர மலை, ஆத்திரத்துடன் அவளைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டு தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறக்க முனைந்த போது அவன் நினைத்தபடி கதவு திறக்காமல் வெளியே வாணவராயன் மாட்டிய பூட்டு தடுத்து விட்டது.
ஏற்கனவே வாணவராயனின் ஊதுகுழல் ஒலி கேட்டு அரண்மனை வீரர்கள் அந்த அரண்மனை முழுதுசிதறியோடிய சமயத்தில், வாணவராயனுடன் இளவரசிக்குப் பாதுகாப்பாக வந்த சோழ நாட்டு வீரர்கள்; அவர்களைத் தாக்கிப் பலத்த காயமுறச் செய்து வீழ்த்தினர். இதைக் கண்டு வளநாட்டுப் பாதுகாப்புக்காக முன்னரே வந்திருந்த சோழ நாட்டு வீரர்கள் வியப்பும் திகைப்பும் கொண்டனர். வாணவராயனுடன் வந்த சோழ வீரர்களுக்கும் மாயவரால் அழைத்து வரப்பட்டிருந்த சோழ வீரர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் வளநாட்டு வீரர் கள்; பொதுவாக எல்லா சோழ வீரர்களுடன் மோதிச் சண்டை யிட்டனர். அதனால் வளநாட்டு உள் அரண்மனையிலும், கோட்டைக்குள்ளும் பெருங்குழப்பம் ஏற்பட்டது. அந்த இரு ளில் ஆங்காங்கு வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்த தீப் பந்தங்களும் வாணவராயனின் ஆட்களால் தூக்கி எறியப்பட்டு அணைந்து விட்ட காரணத்தால் யார் யாருடன் போரிடுகிறார்கள் என்று தெரியாமலே ஒரே கூக்குரல் சப்தம் மட் டுமே அந்தக் கோட்டைக்குள் கேட்டுக் கொண்டிருந்தது.
குன்றுடையான் கையில் வாளேந்திக் கொண்டு சில வீரர்கள் ஓங்கிய ஈட்டிகளுடன் பின் தொடர வேக வேகமாக இளவரசி யிருந்த அறையை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அவன் வருவதைப் பார்த்து விட்ட வாணவராயன், தனது வீரன் ஒருவனின் காதில் அவசர அவசரமாக எதையோ சொல்லிவிட்டு, அங்குள்ள பெருந்தூண்களில் மறைந்து மறைந்து அந்த இடத்தை விட்டு, புயல் போலப் போய் விட்டான்.
இளவரசியின் அறைக் கதவுக்கு முன்னால் வந்துவிட்ட குன்றுடையானை நோக்கி, அரசே! இந்த அநியாயத்தைப் பாருங்கள்! உங்கள் தளபதி வீரமலை எங்கள் இளவரசியிடம் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார் பாருங்கள்! என்று கதறியவாறு வாணவராயனின் ஆள்; அவனது கால் களைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.
குன்றுடையான், அந்த ஆளின் தோள்களைப் பற்றி நிற்க வைத்து “என்ன நடந்தது சொல்!” என்று பதற்றத்துடன் கேட்டான்.
“இனி என்ன நடக்க வேண்டும்? எல்லாம் இளவரசியே சொல்லுவார்! உங்கள் தளபதி வீரமலை இளவரசியின் அறைக்குள் புகுந்து அவரைப் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இளவரசி கூச்சல் போடவே நான் ஓடி வந்து கதவைப் பூட்டி விட்டேன். இல்லா விட்டால் நீங்கள் வருவதற்குள் வீரமலை இங்கிருந்து ஓடி விடுவார் அல்லவா? இப்போது உங்கள் கண் முன்னால் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டார்!”
என்று அவன் சொல்லிக் கொண்டே கதவில் மாட்டியிருந்த பூட்டை அகற்றினான். குன்றுடையான் கதவை ஓங்கி உதைத்து விட்டு உள்ளே சென்றான், தனது வீரர்களுடன்!
அங்கே குன்றுடையான் கண்ட காட்சி அவனை சினத்தின் சிகரத்துக்கே கொண்டு சென்றது.
வீரமலை ஏதோ ஒரு அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான். இளவரசியோ, ஆடைகள் நிலை குலையவும் அவள் அணிந்திருந்த ஆரங்கள் தரையில் சிதறிக் கிடக்கவும் – அரை நிர்வாணமாகவும் கட்டிலின் ஓரத்தில் நடுநடுங்கிக் கொண்டி ருந்தாள். குன்றுடையானையும் வீரர்களையும் கண்டவுடன், அவள் பாய்ந்து சென்று படுக்கையிலிருந்த போர்வையொன்றை இழுத்து, தனது நிர்வாணத்தை மறைத்துக் கொண்டாள்.
தனது அரண்மனைக்கு வந்த இளவரசிக்கு இப்படியொரு மானபங்கமா? இந்தச் செய்தி அறிந்தால் உறையூர்ச் சோழர் எவ்வளவு கோபம் கொள்வார்? அதனால் ஏற்படும் விளைவு கள் எவ்வளவு விபரீதமாக இருக்கும்? இப்படி தொடர்ச்சியாக மின்னல் கிளம்புவது போல் குன்றுடையான் மனத்தில் கேள்வி கள் எழுந்து குடைந்தன!
வீரமலையோ இருதயமே நின்று விட்டதைப் போல; தரையில் பொத்தென்று விழும் நிலையில் இருந்தான்.
‘என்ன இது; எல்லாம் புதிராக இருக்கிறது? இவள் தானே என் அறைக்கு வந்தாள்! இவள்தானே என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள்! இவள்தானே என்னைக் கட்டிப்பிடித்தாள்! இவள்தானே இந்த அறைக்குத் துணையாக என்னைக் கூட்டி வந்தாள்! இப்போது இப்படி நடிக்கிறாளே; இவள் உண்மையிலேயே உறையூர் இளவரசிதானா? அல்லது பகை நாட்டிலிருந்து உளவறிய வந்தவளா?’
இத்தனை வினாக்களும் வீரமலையின் உடைந்து போன உள்ளத்திலிருந்து ஒன்றன் பின் ஒன்றாகக் கிளர்ந்தெழுந்தன. எனினும்; அவனால் வாய் திறந்து பேச முடியவில்லை.
“வீரமலை? இதெல்லாம் என்ன அக்கிரமம்? என் எதிரே நிற்பது நீ தானா? அல்லது பச்சைத் துரோகத்தின் வடிவமா?”
குன்றுடையான் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வீரமலை அசைவற்று நின்றான்.
“அம்மா; இளவரசி! என்னம்மா நடந்தது? சீக்கிரம் சொல்லம்மா; எனக்குத் தலை சுற்றுகிறது!”
என்று குன்றுடையான் இளவரசியைப் பார்த்துக் கேட்டவுடன்; அவள் விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள்.
“அழாதே இளவரசி! நடந்ததைச் சொன்னால் இந்தக் கணமே தண்டனை வழங்குகிறேன்.”
“எப்படி என் வாயினால் சொல்லுவேன்? அகில் புகை தூபத்தைக் கொண்டு வந்து வைத்து விட்டுக் குப்பாயி இங்கிருந்து போனாள். எனக்குத் தூக்கம் வந்து விட்டதால் அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு படுக்கலாமென்று கதவருகே சென்றேன். அப்போது, உங்கள் தளபதி வீரமலை கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்து விட்டான்.”
அவள் இப்படிச் சொன்ன போது வீரமலை குறுக்கிட்டு, “இல்லை! இல்லை!” எனக் கூறிக் கொண்டு, குன்றுடையானுக்கு அருகே ஓடி வந்தான்!
”சே! நீ பேசாதே!”
என்று குன்றுடையான் சீறி விழுந்தான். இளவரசி மீண்டும் அழத்தொடங்கினாள்.
“தயவுசெய்து அழாமல் சொல்லம்மா! எங்கள் குலத்தின் தன்மானத்துக்கும் பண்பாட்டுக்கும் விடப்பட்ட அறைகூவலம்மா இது! இதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். எனவே எதையும் மறைக்காமல் சொல்!” என்றான் குன்றுடையான்.
“அவன் சொன்ன வார்த்தைகளைத் திருப்பிச் சொல்லவே என் நாக் கூசுகிறது.”
“பரவாயில்லை – நடந்ததைச் சொல்லத்தானே வேண்டும்.”
“அறைக்குள்ளே வந்த வீரமலை என் அழகைப் புகழ்ந்தான். ரம்பையாம் நான்! ஊர்வசியாம் நான்! மேனகையாம் நான்! இப்படிப் பைத்தியம் பிடித்தவன் போல் உளறினான். என்ன இருந்தாலும் உங்கள் தளபதியாயிற்றே; புத்தி பேதலித்து அவன்தான் காமாந்தகாரனாக நின்று உளறுகிறான் – நாமும் பதிலுக்குக் கடுஞ்சொல் கூறக்கூடாது அது குன்றுடையா ரையே அவமதிப்பதாகிவிடும் என்று எண்ணி நான், அவ னைப் பார்த்து அறிவுரை கூறி வெளியே போகுமாறு கேட்டுக் கொண்டேன். அவன் என்னை அனுபவிக்காமல் திரும்ப மாட் டேன் என்று என் கையைப் பிடித்து இழுத்தான். கதவைத் தாளிட்டான். நான் இந்த அறைக்குள்ளே ஒரு பூனைக்கு முன்னால் கிளி அகப்பட்டுக் கொண்டது போல அகப்பட்டுத் தவித்தேன்.
‘அடப்பாவி! வீரமலை! உன்னை என்னுடைய பிள்ளை களைப் போலக் கருதியிருந்தேனே; அதற்கு இதுதான் நீ காட்டும் நன்றியா?”
குன்றுடையானின் உடல் முழுதும் நடுங்கிற்று. உணர்ச்சி வசப்பட்டுக் குன்றிப் போனான் என்பதை குன்றுடையானின் தழுதழுத்த பேச்சே விளக்கிற்று.
“தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்!” என்று வீரமலை கெஞ்சும் தோரணையில் குன்றுடையானுக்கு முன்னே மண்டியிட்டுக் கதறினான். ஆனால் இளவரசி அவனைப் பேச விடவில்லை.
“அவன் என்னிடம் நடந்து கொண்டது கூட எனக்கு கவலையைத் தரவில்லை. என்னை அடைவதற்காக அவன் கூறிய ஆசை வார்த்தைகளை நினைத்தால் அவன் இந்த நாட்டுக்கும் உங்களுக்கும் உங்கள் மகன்களுக்கும் எவ்வளவு பெரிய துரோகம் செய்ய இருந்தான் என்பது இப்போது கூட என்னைப் பயமுறுத்துகிறது!”
“அப்படியா? என்ன சொன்னான் இளவரசி; என்ன சொன்னான்?”
“இந்த வீரமலையை சாதாரண தளபதியென்று நினைத்துக் குறைத்து எடை போடாதே! இன்னும் சில நாட்களில் குன் றுடையானையும், பொன்னர் – சங்கரையும் கூண்டோடு அழித்து விட்டு, வளநாட்டு ஆட்சியை அபகரிக்கவே திட்டம் வைத் திருக்கிறேன். இன்றைய சோழ நாட்டு இளவரசி உதயநந்தினி வெகு விரைவில் வளநாட்டு மகாராணியாகப் போகிறாள் என்று சொன்னான்.”
“அப்படியா? அதைக் கூட இவன் செய்திருக்கலாம். என் னையும் என் பிள்ளைகளையும் தீர்த்துக்கட்டி விட்டு இந்த ராஜ்யத்தைக் கூட இவன் எடுத்துக் கொள்ளலாம். அதற்காக நான் கலங்கமாட்டேன். ஆனால் என் அரண்மனையில் என் பாதுகாப்பில் உள்ள சோழநாட்டு ராஜகுமாரியிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறானே இவனுக்கு ஆயுட் காலம் வரையில் சிறை தண்டனையே அளிக்கலாம்.”
என்று சினங்கொண்ட வேங்கையாக உறுமிய குன்றுடையான், இளவரசியிடம் மிகத் தாழ்ந்த குரலில்
”அம்மா! உனக்கு வேறு எதுவும் அசம்பாவிதம் ஏற்பட வில்லையே?”
என்று பவ்யமாகவும் பரிவுடனும் கேட்டான்.
“ஏதோ என் தாய் தந்தையர் செய்த தவத்தின் மகிமை யாலும், எங்கள் குல தெய்வத்தின் அருளாலும் என் கற்பு நூலிழையில் காப்பாற்றப்பட்டு விட்டது.”
எனச் சொல்லி இளவரசி உதயநந்தினி தேம்பித் தேம்பி அழுதாள்!
“அடேடே! கற்பு காப்பாற்றப் பட்டதற்காக ஏனம்மா அழுகிறாய்!”
என்று கேட்டு குன்றுடையான் தனக்கு ”மசச்சாமி” என்ற பட்டம் எவ்வளவு பொருத்தமானது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் கொண்டான்.
இதற்கிடையே அரண்மனை முழுதும் வாட்கள் ஒன்றோ டொன்று உராய்வதும், ஈட்டிகள் சுவர்களில் பேரொலியுடன் பாய்வதும் காயம் பட்ட வீரர்கள் அலறுவதும் – குதிரைகள் யானைகள் பயங்கரச் சப்தம் எழுப்புவதுமாக – ஒரே குழப்ப மாக இருந்தது.
குன்றுடையான், வீரமலையைக் கொண்டு போய்ச் சிறையில் தள்ளுமாறு தனது வீரர்களுக்குக் கட்டளையிட்டான். வீரமலை, குன்றுடையானிடம் உண்மையை விளக்கிட எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவனை அரண்மனை வீரர்கள் பரபரவென இழுத்துச் சென்றனர்.
“இனி ஒருக்கணம் கூட இங்கேயிருக்க முடியாது! குன்றுடை யார் அவர்களே; நான் வருகிறேன்! ஏய் எங்கே வாணவரா யன்? என் ரதத்தைக் கொண்டு வாருங்கள். இப்பொழுதே உறையூருக்குப் புறப்பட வேண்டும்.”
என்று இளவரசி, ஆர்ப்பாட்டமாகக் கத்தினாள். அவளுடன் வந்த ஒரு வீரன், “அம்மா! வாணவராயனைக் காணவில்லை! ரதம் தயார்! அதனை ஓட்டும் சாரதியாக நானே இருக்கிறேன்.’ என்று அவளுக்கு நேரே ஓடி வந்து சொன்னான். “அந்த வாணவராயன் எங்கே தொலைந்து விட்டான்?” என்று முணு முணுத்தபடியே இளவரசி, சரேலென அந்த அறையை விட்டு வெளியேறி “எங்கே ரதம்?” என அதட்டினாள். அதோ”! அதோ!” என்று சொல்லிக் கொண்டே வீரன் அவளை அந்த இருட்டில் ரதத்தின் பக்கம் அழைத்துச் சென்றான்.
திகைத்துப் போன குன்றுடையான், செய்வதறியாது கை பிசைந்து நின்றான். அந்த இருளைக் கிழித்துக் கிளம்பும் கூச்சலில் சிக்கித் தவித்த அரண்மனையில் என்ன நடக்கிறதென்றே அவனுக்குப் புரியவில்லை. பிணமாக விழுந்து கொண்டிருந்த வீரர்களின் பெருங்கூச்சல் ஒரு பக்கம் அவனது காதைத் துளைத்திட பிறிதோர் பக்கம் இளவரசியின் ரதம் அந்த அரண்மனையை விட்டு மிக வேகமாகப் புறப்பட்டுப் போன ஒலியும் அந்தக் காரிருளில் அதிர்ச்சி தரத்தக்கதாய் இருந்தது.
குன்றுடையான், தனது வலிமை முழுவதையும் ஒன்று திரட் டிப் பெருங்குரலெடுத்து ‘நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!’ என்று ஆவேசமாகக் கத்தினான். பெருமழை, தூறலாகச் சிறுத்தது போல வாட்கள் ஈட்டிகள் மோதிக் கொண்ட ஒலி, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு அமைதி திரும்பிற்று! ஆனால் அந்த அமைதியையும் மீறிக் கொண்டு காயம்பட்ட வீரர்களின் முனகல் ஒலி, விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது.
குன்றுடையான் மெய் சோர்ந்த நிலையிலும் கடமையாற்றும் உள்ளத்துடன் தனது காவலர்களுக்கு ஆணை பிறப்பித்தான். தீப்பந்தங்களைக் கொளுத்தி முதலில் வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள் என்பதுதான் அந்த ஆணை! தீப்பந்தங்கள் மளமள வெனச் சில கொளுத்தப்பட்டுத் தூண்களில் பழையபடி வைக் கப்பட்டன.
மீண்டும் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு குதிரை யொன்று அரண்மனைக்குள்ளிருந்து கோட்டை முகப்பை நோக்கி ஓடுவது போல் தெரிந்தது. குன்றுடையானும் அவ னைச் சுற்றியிருந்த வீரர்களும் பரபரப்படைந்து அந்தக் குதிரை யைக் கவனித்தனர்.
”யார்? உறையூர் மெய்க்காப்பாளன் வாணவராயனா?” என்று குன்றுடையான் கேட்டான்; அவனது பருத்த உருவத்தைப் பார்த்து விட்டு ஒரு யூகமாக!
“ஆமாம். வாணவராயனாகத்தான் வந்தேன். ஆனால் இப்போது தலையூர்த் தளபதி பராக்கிரமனாகத் திரும்புகிறேன்! வெறுங்கையோடு திரும்பவில்லை. வந்த வேலையை நானும் வடிவழகியும் வெற்றிகரமாக முடித்து விட்டுத்தான் திரும்பு கிறோம். இதோ என்னுடன் குதிரையில் இருப்பது யார் தெரிகிறதா?”
தலையூர்த் தளபதி பராக்கிரமன் தந்திரமாகத் தங்களை ஏமாற்றி விட்டான் என்பதைப் புரிந்து கொள்ள குன்றுடைய னுக்கு அதிக நேரமாகவில்லை!
அவனுடன் குதிரையில் இருக்கும் பெண் யார் என்பதைத் தெரிந்து கொள்ள உற்றுப் பார்த்தான். அதே நேரம் அவனது வீரர்கள், பராக்கிரமனை நோக்கிப் பாய்ந்தோடினர்.
“வேறு யாருமல்ல; உமது மகள் அருக்காணித் தங்கம்தான்!’ என்று கூறிக் கொண்டே பராக்கிரமன், ஒரு கையால் அந்தப் பெண்ணின் வாயை மூடிக் கொண்டு, மற்றொரு கையால் குதிரையை நாலு கால் பாய்ச்சலில் செலுத்துவதற்குக் குத்தினான்.
குதிரை பறந்து சென்ற வேகத்தில் குன்றுடையானின் வீரர் களால் பராக்கிரமனை நெருங்க முடியவில்லை.
கோட்டை முகப்பை விட்டுக் குதிரையில் வெளியேறிய பராக்கிரமன் தப்பி விட்டான் என்பதறிந்து வெட்கிப் போன குன்றுடையான், “அப்படியானால் அவளும் இளவரசியல்லவா?” என்று தனக்குத் தானே புலம்பினான்.
“அவள் பெயர் என்னமோ வடிவழகி என்று சொன்னானே!” என ஒரு வீரன் தெளிவுபடுத்தினான்.
”சே! விசாரிக்காமலே வீரமலையை சிறையில் போடச் சொல்லி விட்டேனே! உடனே அவனை விடுவித்து அழைத்து வாருங்கள்!” என்று மற்றொரு ஆணை பிறப்பித்தான் மசச்சாமி குன்றுடையான்!
வீரர்கள் சிலர் வீரமலையைச் விடுவித்து அழைத்து வர சிறைச்சாலைக்கு ஓடினர்.
குழப்பம் தலையைச் சுற்றக் குன்றுடையான் மெல்ல நடந்து, குற்றுயிர் குலை உயிராகக் கிடக்கும் வீரர்களைக் கவனித்துக் கொண்டிருந்தபோது “அப்பா! அப்பா!” என்றலறியவாறு அருக்காணித் தங்கம் ஓடி வந்தாள்!
குன்றுடையானுக்கு மேலும் குழப்பம்! தன் மகள் அருக் காணியைத்தான் பராக்கிரமன் தூக்கிக் கொண்டு போய் விட் டானே, இப்போது எப்படி அரண்மனைக்குள்ளிருந்து வந் தாள்? கண்களை அகல விரித்து அவளைப் பார்த்தான். அருக்காணித் தங்கமேதான்!
‘என்னம்மா?’ என்று ஓடிப் போய் அவளை அணைத்துக் கொண்டான்!
“அப்பா! அம்மாவை கொன்றுவிட்டார்கள்!” என்று கதறிய படி குன்றுடையானின் காலில் அருக்காணி தங்கம் விழுந்து விட்டாள்.
“ஆ! தாமரை! தாமரை!”
எனக் கண்ணீர் கரை புரள குன்றுடையான் அந்த இருளில் ஓடினான். அருக்காணியும் அவனைத் தொடர்ந்து ஓடினாள்.
39. பாசப் பறவைகள்
தாமரைநாச்சியார், தனது படுக்கையறையில் ரத்த வெள் ளத்தில் மயக்கமுற்றுக் கிடந்தாள். அவளருகே முத்தாயி பவ ளாயி இருவரும் கண்ணீர் கரை புரளத் தேம்பியழுது கொண் டிருந்தனர். அரண்மனையில் உள்ளோர் அனைவரும் அந்த அறைக்குள் வேகவேகமாக மிக்க பரபரப்புடனும் அழுது புலம் பியவாறும் நுழைந்து கொண்டிருந்தனர். அருக்காணியுடன் அங்கு வந்த குன்றுடையான், தனது ஆருயிர்த் துணைவியின் நிலை கண்டு நிலை குலைந்தான்.
“தாமரை! தாமரை!” என்று குன்றுடையான் கதறி, தாமரை நாச்சியாரின் தலையை அசைத்து அசைத்து அழுதபோது உடலில் உயிர் இழைந்து கொண்டிருந்த காரணத்தால் ஓரளவு மயக்கம் தெளிந்த தாமரை மெல்லக் கண் திறந்து தனது கண வனை மெத்த பரிவுடன் நோக்கினாள்.
தாமரையின் முகத்தில் மரண பயம் துளியளவு கூடத் தென் படவில்லை. “என்ன தாமரை இது? அய்யோ, இந்த விபரீதம் எப்படி ஏற்பட்டது?” என்று நடுங்கிடும் குரலில் கேட்டுக் கொண்டே குன்றுடையான், “மருத்துவர்கள் எங்கே? உடனே அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
அதற்குள் தாமரை, குன்றுடையானின் கரங்களைப் பற்றிக் கொண்டு, ”மருத்துவர் வேண்டாம். என் முடிவை யாராலும் தடுக்க முடியாது. நான் உங்களையும் என் பிள்ளைகளையும் என் மருமகள்களையும் எல்லோரையும் விட்டுப் பிரிந்து கொண்டிருக்கின்றேன்” என்றாள். அப்போது அவள் முகத்தில் மெல்லிய புன்னகை ஒளியே நிறைந்திருந்தது.
தாமரை நாச்சியாரையே குன்றுடையான் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான். தன் மீது கொண்ட தூய அன்புக்காக தாய் தந்தையரையும் தமையனையும் பகைத்துக் கொண்டு, செல்வச் செழிப்பையெல்லாம் ‘சீ’ என இகழ்ந்துரைத்து விட்டு – எத் தனை எத்தனையோ இன்னல்களையெல்லாம் ஏற்றுக் கொண்டு இல்வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் எல்லாம் இணை பிரியாதிருந்து தனக்கு வாழ்க்கைத் துணைவியாக மட்டு மின்றி வரும் பொருளுரைத்திட்ட அமைச்சரைப் போலவும் துணை நின்ற தாமரைநாச்சியார்: வாழ்க்கையின் கோடை காலம் முழுவதும் தனக்குத் துணையாக இருந்து விட்டு – இப் போது வாழ்க்கையின் வசந்த காலமாக வளநாட்டு ஆட்சியும், அந்த ஆட்சியைப் பரிபாலித்திட இரு ஆண் சிங்கங்கள் வழித் தோன்றல்களாகவும் விளங்குகிற இந்த நேரத்தில் இப்படி யொரு முடிவை நோக்கித் தள்ளப்பட்டு விட்டாளேயென்ற தாங்க முடியாத சோகத்துடன் குன்றுடையான் அவளது கை களை இறுகப் பற்றிக் கொண்டு, தாமரை என்னம்மா இப் படி? அய்யோ! என்ன நடந்தது?” என்று விம்மியழுதான்.
அப்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரமலை, நெஞ்சில் வேல் பாய்ந்தது போன்ற துடிதுடிப்போடு அங்கு வந்து சேர்ந்தான். தாமரைநாச்சியாரைக் கண்டதும் ‘அம்மா! அம்மா!’ என அவன் அலறிய ஒலி, அங்கிருந்தோர் அனை வரையும் கதறிக் கதறி அழுதிடச் செய்தது.
வீரமலையைத் தாமரைநாச்சியார் கை ஜாடை செய்து தன் னருகே அழைத்தாள். அவளருகே சென்று பணிந்து குனிந்து, அவள் என்ன சொல்லுகிறாள் என்பதை வீரமலை ஆவலுடன் கேட்டான்.
“உறையூர் இளவரசியென்று சொல்லிக் கொண்டு வந்தவள் இளவரசியே அல்ல! தலையூர்க் காளியின் தளபதி பராக்கிரமனும், அவனோடு வந்த ஒரு வேஷக்காரியும் நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்.”
இதைத் தாமரைநாச்சியார் சொன்ன போது வீரமலையின் மனசாட்சி, அவனை நூறாயிரம் சவுக்குகளைக் கொண்டு தாக் கியது. அத்தனை அடிகளும் அவன் இதயத்தில் ரத்தம் கசிகிற அளவுக்கு விழுந்தன.
“எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். இத்தனன நாள் கட்டிக்காத்து வந்த கடமையுணர்வு எவளோ ஒரு கைகாரியின் கடைக்கண் வீச்சுக்கு முன்னால் கல்லறைக்குப் போய் விட்டதே! குற்றம் அவள் மீதா? இல்லவே இல்லை! கண் வீசுவது அவள் கற்ற கலை! அந்த வகையில் சிக்கிய குற்றம் என்னுடையதே தவிர அவளுடையதாக எப்படி இருக்க முடியும்? உறையூர் இளவரசியாக இருந்திருந்தால் அவள் என்னை எப் படி விரும்பியிருக்க முடியும் என்றுகூட நினைத்துப் பார்க்க முடியாமல் அவளது அங்க அசைவுகளுக்கு அடிமையாகி மான பங்கப்பட்டு விட்டேனே! அழகு, ஆபத்தானது என்பார்கள் அழகு போல ஒப்பனை செய்து கொண்டு வந்த ஆபத்தையே நான் நம்பி மதி மோசம் போய் விட்டேனே! சே! இப்படியும் பெண்களா? உடலை யாருக்கு வேண்டுமானாலும் விருந்தாக அளித்துக் காரியம் சாதித்துக் கொள்ளக் கொஞ்சமாவது கூச்ச ‘நாச்சமிருக்காதா? அதைவிடக் கேவலம்; இப்படி சிகப்புத் தோல் போர்த்திய சிங்காரிகளை வைத்துத் தனது சிம்மாசனச் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள நினைக்கும் மானங்கெட்ட மனிதர்களும் இருக்கிறார்களே என்பதுதான்! அந்த மனிதப் பிண்டங்களையும் அவர்களின் கையாட்களாகப் பயன்படும் இந்த மயக்கு மோகினிகளையும் குறைசொல்லிப் பயன் என்ன? வெண்புறாக்களின் சிறகையொட்டிக் கொண்டு வட்டமிடும் இந்த வல்லூறுகளின் வஞ்சகக் கொஞ்சலில் ஏமாந்து போகும் என்னைப் போன்ற முட்டாள்களையல்லவா தண்டிக்க வேண் டும்! அரசரின் மகள் என்றாள்! ஆள் மயக்கியாக வந்து வென்றாள்! அதில் தோற்றது நானல்லவோ? என் தோல்வி என் இதயத்தில் கண நேரம் மின்னி மறைந்த காதல் உணர் வால் ஏற்பட்ட களங்கமல்லவா? காதல் உணர்வா அது? இல்லை! காமச் சூறாவளி – நிச்சயமாகக் காதலெனும் பூங்காற்று அல்ல! நானாகத் தேடிக் கொண்ட தோல்வியினால் அல்லவா – என் தந்தை போன்ற குன்றுடையார் என்னைச் சிறையிலிட ஆணை யிட்டார். வளநாட்டுக் கோட்டையிலே அமளி – என் தாய்; இதோ மரணத்தோடு போராடுகிறார்கள்! அனைத்துக்கும் என் அறியாமையன்றோ காரணம்!”
‘சுளீர்! சுளீர்!’ இப்படி விழுந்தன சவுக்கடிகள், வீரமலையின் இதயத்தில்.
வீரமலையுட்பட அனைவரும் தாமரைநாச்சியாரின் உதடு கள் அசைவதையே கவனித்துக் கொண்டிருந்தனர்.
“குப்பாயி இளவரசியின் அறைக்கு அகிற்புகைத் தூபம் கொண்டு போய் வைக்கப் போனவள், இளவரசியாக இருந்த வளின் பேச்சைப் பார்த்து ஏதோ சந்தேகப்பட்டிருக்கிறாள். வீரமலையைப்பற்றி அவள் விசாரித்தது ஏன் என்று குப்பாயிக் குப் புரியவில்லை. அதனால் குழப்பமடைந்த குப்பாயி, இள வரசியின் மெய்க்காப்பாளன் வாணவராயன் தங்கியிருந்த அறையின் பக்கம் வந்து மெதுவாக கவனித்திருக்கிறாள். அறைக்குள் ஏதோ பேச்சுக்குரல் மட்டும் கேட்டிருக்கிறது. அதாவது அருக்காணித் தங்கத்தைப் பற்றிய பேச்சு. அருக் காணி தங்கம் படுத்திருக்கும் அறை எது என்று பேச்சு நடந் திருக்கிறது. அருக்காணி அவளுடைய தாயார் தாமரைநாச்சி யாருடன்தான் படுத்துறங்குவது பழக்கமாம் என்று அந்த அறைக்குள்ளிருந்த ஒருவன் கூறியிருக்கிறான். உடனே குப் பாயிக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அருக்காணித் தங்கத் துக்கு ஏதோ ஆபத்து என்று உணர்ந்திருக்கிறாள். உணர்ந்த தும் என் அறைக்கு ஓடி வந்தாள். அம்மா! அம்மா! இன் றைக்கு நான் உங்களோடு படுத்துறங்கப் போகிறேன்’ என் றாள். ‘அருக்காணி தங்கம் படுத்துத் தூங்கி விட்டாளே’ என் றேன். அவளே அருக்காணியை எழுப்பி அவளைத் தனது அறையிலே போய்ப் படுக்கச் சொன்னாள். அருக்காணி தூக்க மயக்கத்தில் இருந்தாள். பிடிவாதமாக அவளைக் குப்பாயி அழைத்துக் கொண்டு போய்த் தனது அறையிலே படுக்க வைத்து விட்டு வந்தாள். என்னடியம்மா குப்பாயி இதெல் லாம்? நீயேன் திடீரென்று என்னுடன் படுத்துறங்க ஆசைப் படுகிறாய்?” என்று கேட்டேன். முதலில் சரியான பதில் சொல்லாமல் சமாளித்தாள். பிறகு நான் விடாமல் கேட்கவே அப்போதுதான் சொன்னாள்; அருக்காணியைப் பற்றி வாண வராயன் அறையில் பேசப்பட்ட விபரத்தை! அதற்காக நீயேன் இங்கு படுத்தாய்? என்று கேட்டேன். அருக்காணிக்கு ஆபத்து விளைவிக்க எண்ணுகிறவர்கள்; தன்னை அருக்காணியென்று எண்ணிக் கொள்ளட்டும் எப்படியோ அருக்காணி தங்கம் தப்பித்துக் கொண்டால் சரி என்றாள். நான் பதைத்துப் போனேன்! ‘முட்டாள் பெண்ணே! இவ்வளவு பெரிய ஆபத் தான செய்தியை நீ முந்தானையில் முடிந்து வைத்துக் கொண் டால் நல்லது அல்ல உடனே வீரமலையிடம் சொல்லி, ஆக வேண்டியதைப் பார்க்கலாம். நீ இப்போதே போய் வீரமலையை அழைத்து வா’ என்றேன். அவளும் புறப்பட ஆயத்தமாகி அறைக் கதவைத் திறந்தாள். அதற்குள் யாரோ சிலர் மளமள வென அறைக்குள் நுழைந்த சப்தம் கேட்டது. திடுக்கிட்டேன். குப்பாயி வீறிட்டுக் கத்தினாள். அதற்குள் அவளது வாயை அடைத்து விட்டார்கள். அறைக்குள்ளிருந்த தீப்பந்தங்கள் தூக்கி வீசப்பட்டு அணைந்து போயின. குப்பாயி சப்தம் போட்ட இடம் நோக்கி ஓடினேன். என்னை ஒரு முரட்டுக் கரம் பிடித்துத் தடுத்தது. ‘அடே யாரடா நீ’ என்று அதட்டிக் கேட்டேன். நான்தான் தலையூர்த் தளபதி பராக்கிரமன். உனது மகள் அருக்காணி தங்கத்தைச் சிறையெடுத்து தலையூர் மாளி கைக்குக் கொண்டு போகிறேன் என்றான். நான் ஓடிப்போய் அந்த இருளில் சுவரில் மின்னிக் கொண்டிருந்த வாளையெடுத்து அவன் மீது ஓங்கினேன். அதற்குள் என் வயிற்றிலும், கழுத்தி லும் தலையிலும் கட்டாரிக் குத்துக்கள் – அரிவாள் வெட்டுகள் அந்தக் கொடியவன் பராக்கிரமன் குப்பாயியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.”
விழியோரம் நீர் வழிய இந்த விபரங்களைச் சொன்ன தாமரை நாச்சியார், அதற்கு மேல் பேச முடியாமல் திணறினாள். குன் றுடையான் அவள் கரத்தை இறுகப் பிடித்துக் கொண்டு தழு தழுத்த குரலில் கேட்டான்.
“அடே! நீ தூக்கிப் போவது அருக்காணியல்ல; அவள் குப் பாயி என்று நீ சொல்லியிருக்கக்கூடாதா? நமது பெண்ணைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எனது நண்பர் பச்சனா முதலி யாரின் பெண்ணைக் காட்டிக் கொடுத்து விட்டதாகப் பெரும் பாபம் வந்து சேருமே!”
இந்தக் கேள்வியில் குன்றுடையானின் வெள்ளை உள்ளம் மட்டுமல்ல; நல்ல உள்ளம் நம்மால் பிறருக்குக் கேடு வரக் கூடாது; நமக்கு வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம் என்ற நேர் மையான உள்ளம் பட்டை தீட்டப்பட்ட வைரம் போல் ஒளி யுமிழ்ந்தது. இந்த உள்ளம்தான் குன்றுடையானுக்கு “மசச் சாமி’ என்ற பட்டத்தை வாங்கித் தந்தது போலும்.
”நான் அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும்? அருக் காணியைக் காப்பாற்றுவதற்காக குப்பாயி இப்படியொரு ஏற் பாடு செய்வாள் என்றே எனக்குத் தெரியாதே! நான் பல முறை கேட்ட பிறகுதானே கடைசியில் விஷயத்தைச் சொன் னாள்! நான் வீரமலையைக் கூப்பிடச் சொல்வதற்குள் தான் எல்லாம் முடிந்து விட்டதே!’
தாமரை; தனது உடலில் இருந்து மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பேசு வது போல இந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டு, குன்று டையானை அன்பு ததும்பும் புன்னகை புரிந்து அருகே, மிக அருகே தன் முகத்தருகே வருமாறு கரங்கொண்டு அவன் கழுத்தை வளைத்து, “எப்படியாவது குப்பாயியைக் காப்பாற் றுங்கள். வளநாட்டு மக்களை வாழ வையுங்கள். எனக்கு ஒரு குறையுமில்லை. எனக்கு விடை கொடுங்கள் நான் போய் வருகிறேன். இதோ இந்த மாங்கல்யத்துக்கு ஒரு முத்தம் கொடுங் கள்” என்று கூறிக்கொண்டே தாமரை நாச்சியார் மஞ்சள் பூசப்பட்ட தனது உள்கழுத்து நூலைக் கை நடுங்க எடுத்து குன்றுடையான் உதடுகளின் அருகே காட்டினாள். குன்றுடை யான் அந்த மாங்கல்ய நூலையும் தனது பாசமிகு மனைவியின் முகத்தையும் ஒரு சேரப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
பழைய நினைவு தாமரை நாச்சியாருக்கும் மாந்தியப்ப னுக்கும் திருமண ஏற்பாடு – மேளதாளங்கள் முழங்குகின்றன! முரசுகள் அதிர்கின்றன! ஏழை எளியோர்க்குத் தாமரைநாச்சி யார் உணவு தானியங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
அப்போது கிழிந்த கந்தலாடை பரட்டைத் தலை – தாடி மீசை நடக்கக் கூட சக்தியற்ற வாலிபன் அவன்தான் குன் றுடையான். அவனை அடையாளம் தெரிந்து கொள்ளாத தாமரையின் தாயார் பெருமாயி அம்மாள், என்னப்பா வேண்டும்? அரிசியா? கம்புவா? வரகா?” என்று கேட்கிறாள். அதற்கு குன்றுடையான், கம்பு சோளம் வரகு வாங்க வர வில்லை அத்தை கணவனாக உன் மகள் கழுத்தில் தாலி கட்ட வந்தேன் அத்தை!” என்று பதில் அளிக்கிறான். அப் போது புத்துயிர் பெற்றவளைப் போல தாமரை நாச்சியார். அங்குள்ள பெருங்கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் சரே லென அவன் மீது பாய்ந்து அத்தான் எனக் கூவியழைத்து அவனைத் தழுவிக் கொள்கிறாள்…
அந்தப் பழைய நிகழ்ச்சி அடடா… மல்லிகை போல் மலர்ந்து, தாழம்பூ போலத் தளிர் மேனி கொண்டு தன்னைத் தழுவி மகிழ்ந்த தாமரையின் இளம் பருவக்காலம் – தன்னை அவள் இதயத்தில் வழிபடு தெய்வமாகக் கொண்டிருந்த அந்த உணர்ச்சி மிகு நிகழ்ச்சி – குன்றுடையானின் கண்களில் பிரள யத்தையே பொங்கி வழியச் செய்தது.
கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறான் குன்றுடையான் ஆம், அப்போது குன்றுடையான் அல்ல – நெல்லியங்கோடன் அவன் பெயர் குன்றுகள் அவனுக்குச் சொந்தமில்லை அதற்கு மாறாக அந்தக் கொட்டடியில் குன்று போல் கரை யான் செல்லுப்பூச்சிகள் குவிந்திருக்கின்றன. அவற்றின் பயங் கரமான படையெடுப்புக்குப் பயந்து கொட்டடியில் உள்ள உத் திரத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறான் – அப்போதும் அந்தப் பூச்சிகளின் கோரத் தாக்குதல் – வேறு வழியில்லை வேட்டியைக் கிழித்து ஒரு பாதியை உடுத்திக் கொண்டு மற் றொரு பாதியை உத்திரத்தில் கட்டித் தூக்குமாட்டிக் கொண்டு சாக முடிவு செய்கிறான் அப்போது, அத்தான்! என்ன வேலையிது?” என்று கதறியழுதபடி ஓடி வந்து கட்டிக் கொண்டு அவனை விடுவிக்கிறாள் தாமரைநாச்சியார்!
குன்றுடையான் அந்த நிகழ்ச்சியில் நினைவைப் பதித்தவாறே மனைவியின் முகத்தையும் மாங்கல்யத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
தாமரையின் விருப்பப்படியே திருமணம் நடைபெறுகிறது. குன்றுடையானின் கரம் பிடித்து மணப்பந்தலில் மகிழ்ச்சியுடன் இருக்கும் தாமரையை அவளது தந்தை இழிமொழி கூறி வெளி யேற்றுகின்றார். அண்ணன் சின்னமலைக்கொழுந்து தாமரைக் குப் பதில் சொல்லும்விதத்தில் ஆவேசமாக, “பெறுவதுதான் பெறுகிறாய், இரண்டு சிங்கக்குட்டிகளாகப் பெற்றுப் போடு! இரண்டையும் கொண்டுவந்து என் வீட்டு வாசலில் நாய் களைப் போல் காவலுக்குக் கட்டிவைக்கிறேன்” என்கிறான். அதற்குத் தாமரை சிறிதும் கலங்காமல் “பெறுகிறேன் அண்ணே பெறுகிறேன்! நீயும் இரண்டு பெண்களைப் பெற்றுக்கொண்டு அந்தச் சிங்கங்களைத் தேடிக் கொண்டு வரப்போகிற காட்சியை நான் கண்டு களிக்கத் தான் போகிறேன்’ எனச் சூளுரைக் கிறாள்.
அம்மவோ; அந்த முகம் வீராங்கனையின் முகமன்றோ!
தென்றலாய் – தேன்பாகாய் – தெவிட்டாத அமுதமாய் – திரு விளக்காய் தியாகச்சுடராய் – வாழ்வின்சோலை பாலை – வாழ்ந்த இல்லத்து அரசியாய் – வாழ்க்கைத் துணைநலமாய் இரண்டையும் சமமாகக் கருதி இணைபிரியாது விளங்கிய – அந்த மங்கைநல்லாளின் மாங்கல்யத்தைக் குன்றுடையான் முத்த மிட்டான். முத்தமிட்டுக் கொண்டேயிருந்தான்.
பொன்னரும் – சங்கரும் வந்து விட்டார்களா? இந்தக் கேள்வியைத் தாமரை கேட்கவில்லை. ஆனால் மங்கலாகிக்கொண்டிருந்த அவளது விழிகள் அவர்களைத் தேடின. அவர்களிருவரும் இந்தச் சம்பவம் எதுவும் அறியாமல் உறை யூர் அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்தனர். முத்தாயி, பவளாயி, அருக்காணி மூவரும் தன்னருகே வர வேண்டுமென்று தாமரை விரும்புவதை அவளது விழிகள் அறிவித்தன. விம்மி யழுதவாறு அந்த மூவரும் தாமரை நாச்சியாரின் கால்களில் தங்களது முகங்களைப் பதித்துக் கொண்டனர்.
தனது கணவனின் தலையை வருடிக் கொண்டே – அதில் ஒரு தனி ஆனந்தம் கண்டு கொண்டிருக்கும் போதே தாம் ரையின் வலது கை, தடார் எனக் கீழே விழுந்தது!
“தாமரை!” என்று குன்றுடையான் அலறியது அந்த அரண் மனை முழுதும் எதிரொலித்தது.
அந்த அலறலுடன், தாமரையின் நெஞ்சின் மீது கவிழ்ந்து பதிந்த குன்றுடையானின் தலை பிறகு அசையவே இல்லை! ஆமாம்; குன்றுடையானின் உடல் கூட அசையவில்லை!
உறையூர் அரண்மனையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பொன்னர்-சங்கர் இருவரும் தங்கள் தலையில் உறையூர் அரண் மனையே இடிந்து விழுந்தது போன்ற அதிர்ச்சியுடன்;
அம்மா!
அப்பா!
என்று அலறிக்கொண்டு எழுந்தனர்!
40. மனித மிருகமும் மான்குட்டியும்
வள நாட்டு அரண்மனையும் கோட்டையும் மட்டுமல்ல; வள நாடு முழுமையுமே கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. பொன்னரும் சங்கரும் தங்களின் அருமைப் பெற்றோர்களின் உடல்களின் அருகே வாளின் கைப்பிடியை அழுத்திப் பிடித்த வாறு அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவர் உள்ளிட்ட அனை வரையும் தழுதழுத்த குரலில் ஆறுதல் கூறி அமைதிப்படுத்தும் முயற்சியில் மாயவர் ஈடுபட்டிருந்தார். வீரமலை, தனது மன உறுதி ஒருக்கணம் குலைந்துபோனதால் இவ்வளவு பெரிய விபரீதம் தடுக்கப்பட முடியாமல் போயிற்றேயென்ற வெட்கம் கலந்த வேதனையில் தென்னை மரத்தின் பழுப்பு மட்டையைப் போல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒரு மூலை யில் சாய்ந்து நின்றான். சோழ மன்னன் அக்கள தேவன் அனுப்பி வைத்திருந்த அமைச்சர்கள் இருவர் சோழ அரசின் சார்பில் குன்றுடையானின் உடலுக்கும், தாமரை நாச்சியாரின் உடலுக்கும் புலிச்சின்னம் பொறித்த பொன்னாடைகளைப் போர்த்தி இறுதி வணக்கம் தெரிவித்தனர்.
பூந்துறை நாடு, காங்கேய நாடு, பொங்கலூர் நாடு, தென் கரை நாடு, ஆறை நாடு, வாரக்க நாடு,திருவாவினன் குடி நாடு, தலைய நாடு, தட்டைய நாடு, பூவாணி நாடு, அரைய நாடு, ஒடுவங்க நாடு, வடகரை நாடு, வாழ வந்தி நாடு, கிழங்கு நாடு, நல்லுருக்கா நாடு, அண்ட நாடு, ஆனைமலை நாடு, வெங்கால நாடு, காவடிக்க நாடு, ராசிபுர நாடு, காஞ் சிக் கோயில் நாடு, குறுப்பு நாடு, மண நாடு,ஆகிய கொங்கு இருபத்தி நான்கு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் வகுப்பு வேறுபாடின்றி வள நாட்டில் வந்து குழுமினர்.
குன்றுடையானின் வெள்ளை உள்ளத்தைப் பற்றி அந்த மக்கள் கும்பல் கும்பலாகக் கூடி நின்று புகழ்ந்துரைத்தனர். எரிமலைக் குழம்பு போன்ற இன்னல்கள் சூழ்ந்த போதும்; ஏதோ அருவியில் குளிப்பது போன்ற உணர்வுடன் கணவனின் அருகிருந்து வாழ்ந்து முடித்த தாமரை நாச்சியாரின் கற்பின் சிறப்பையும் பண்பாட்டுப் பெருமையையும் ஏற்றிப் போற்றாதார் எவருமேயில்லை.
தக்காரா? தகவிலரா? என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் என்பதற்கேற்ப வள நாட்டு மாந்தரும் துக்கம் கேட்பதற்குப் பெருந்திரளாய்க் கூடிய கொங்குச் சீமையின் பல பகுதிப் பெரு மக்களும் வெள்ளமாய்ப் பரவிட அந்த வெள் ளத்தின் மீது நீந்தும் படகு போல குன்றுடையானையும் தாமரை நாச்சியாரையும் சுமந்து கொண்டு இறுதி ஊர்வல ரதம் சென்றது.
இறுதிச் சடங்குகள் முடிவுற்று மக்கள் வெள்ளம் வற்றிய தைத் தொடர்ந்து வள நாட்டுக் கோட்டைக்குள் ஆழமான அமைதி!
கோட்டை அரண்மனையின் உள்மண்டபத்தில் எதிர் காலத் தைப் பற்றிய தீவிர சிந்தனையுடையவராக மாயவர் தனது தாடியைத் தடவிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். பொன்னர், சோகமே உருவாகக் காட்சியளித்ததும் அண்ணன் வாயிலி ருந்து என்ன ஆணை பிறக்குமென எதிர் பார்த்தவாறு சங்கர், வாளின் உறையை விரல்களால் மெல்லத் தட்டிக் கொண்டி ருந்ததும் வீரமலை தனது கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு; தான் செய்துவிட்ட தவறுக்கு எப்படிப் பிராயச் சித்தம் செய்து கொள்வது என்பது போலக் கவலைக்குறி காட்டியதும் ஏதோ ஒரு முடிவெடுக்க வேண்டிய அவசியத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக்கின.
முத்தாயி, பவளாயி இருவரும் அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையின் மறைவில் அமர்ந்து கண்கள் கலங்கிட என்ன முடிவு எடுக்கப்பட இருக் கிறது என்பதை ஆவலுடன் எதிர்நோக்கிக கொண்டிருந்தனர்.
அப்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அங்கே அருக்காணித் தங்கம் திடீரெனத் தோன்றினாள். அவள் அங்கு வந்தது பற்றி யாருக்கும் ஆச்சரியமில்லை. ஆனால் அவள் வந்து நின்ற தோற்றம்தான் அங்கு பெருங் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு போர் வீரனுக்குரிய உடை! கையில் வாள்! கண்களில் கனல்!
“அருக்காணீ!” என்று ஒரே சமயத்தில் பொன்னரும் சங்க ரும் அலறிவிட்டார்கள்! திரை மறைவில் இருந்த முத்தாயி பவளாயி இருவரும் திகைத்துப் போய் வெளி வந்தனர்.
“அண்ணா! அண்ணா!” என்றழைத்தவாறு அருக்காணி தங்கம், பொன்னர் சங்கர் இருவரிடமும் நெருங்கினாள். தங்கை ஏன் இந்தக் கோலம் கொண்டாள் என்று கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு முன்னரே; அவளே விடையளிக்கத் தொடங்கி விட்டாள்.
“தாயையும் தந்தையையும் இழந்து விட்டோம் பெரும் இழப்புத்தான்! அவர்களுக்காக அழுது புலம்பிவிட்டோம் – நம் ஆயுள் முடியும் வரையில் அவர்களின் நினைவு நமது நெஞ் சில் நிறைந்திருக்கும் – அவர்களின் பொன்னுடலை மண்ணில் கலந்து விட்டோம் – அவர்களை இவ்வளவு விரைவில் நம்மிட மிருந்து பிரிப்பதற்குக் காரணமான பகைவர்களைப் பழிவாங்க வேண்டும் அது பெரிய விவகாரம்! அதைப்பற்றி நீங்கள் மந்திராலோசனை நடத்துங்கள்! பகைவர்களைப்பழி வாங்கி விடுவதால் நாம் இழந்து விட்ட தாய் தந்தையை நாம் திரும் பப் பெற்று விடப் போவதில்லை! ஆனால், நாம் திரும்பப் பெற்றுத் தீர வேண்டிய ஒன்றை மறந்து விட்டோமே! நாம் என்று என்னையும் சேர்த்துச் சொல்வது தவறு! திருத்திக் கொள்கிறேன்! நீங்கள் மறந்து விட்டீர்கள்! நான் மறக்க வில்லை. மறக்க மாட்டேன். என் பாசமுள்ள தோழி குப் பாயியை நான் மறக்க மாட்டேன். அண்ணா! எனக்கு அனு மதி கொடுங்கள்! அவளை மீட்டு வரப் புறப்பட்டுவிட்டேன்! எனக்குத் துணையாக சில வீரர்களை மட்டும் அனுப்பினால் போதும் – குப்பாயியை மீட்கும் முயற்சியில் வெற்றி பெற் றால் மட்டுமே திரும்பி வருவேன் – இல்லையேல் அந்த முயற் சியில் செத்து மடிவேன்! அனுமதி கொடுங்கள்!”
ஆருயிர்த் தோழி, குப்பாயிக்காக அருக்காணித் தங்கம் வாளேந்தி எழுந்துள்ளது கண்டு, அவர்களது நட்பின் சிறப்பை மனதுக்குள் பாராட்டினாலும் கூட; அந்த முயற்சியில் அருக் காணியினால் வெற்றி பெற இயலாது என்பதை பொன்னரும் சங்கரும் உணராமல் இல்லை. வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் எதிரியை சந்திக்க வாள் பிடித்து நிற்கும் அருக்காணி ; தங்களின் தங்கை என்பதை நிரூபித்து விட்டாள் என்பதிலே அண்ணன்மார்களுக்கு ஒரு பெருமிதம்!
பொன்னர் அருக்காணியின் கன்னத்தில் அன்புடன் தட்டிக் கொடுத்து; “தங்கம்! உன் தோழி குப்பாயியை நாங்கள் மறந்து விடவில்லை! அவளை விடுவித்து வருவதற்கு சங்கரை அனுப்புவது பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் நீ அவசரப்பட்டு விட்டாய்!” என்றான்.
சங்கரும், அருக்காணியிடமிருந்த வாளைத் தன் கையிலே வாங்கிக் கொண்டு ‘அருக்காணி! நீ ஓங்கியவாள் – என் கையிலே இருக்கட்டும்! நீ எந்த வாளை எடுத்தாயோ; அதே வாள் கொண்டு குப்பாயியை மீட்டு வருகிறேன்” என்று வீரக் குரல் எழுப்பினான்.
அண்ணன்மார்களின் பேச்சை ஒரு வேளை அருக்காணி தங்கம்; அவள் தோழியின் மீது கொண்டுள்ள அன்பின் காரண மாக மறுத்து விடுவாளோ என்று அஞ்சிய முத்தாயி பவளாயி இருவரும் விரைந்து வந்து அருக்காணியைத் தழுவிக் கொண்டு கண்ணீர் பெருக்கினர்!
சங்கர்; பவளாயியைப் பார்த்து ”உம் அருக்காணியைப் பத்திரமாகக் கவனித்துக் கொள்!” என்று கூறிவிட்டு, தங்கை யிடமிருந்து பெற்ற வாளை நிமிர்த்திப் பிடித்தபடி அண்ணன் பொன்னரையும், மாயவரையும் வீரமலையையும் பார்த்து, விழி களாலேயே விடை பெற்றுக் கொண்டு இரை தேடும் வேங்கை, குகை விட்டுக் கிளம்புவது போல அந்த மண்டபத்திலிருந்து கிளம்பினான். அண்ணன் சங்கர் அடலேறு நடை போட்டுப் போவது கண்டு அருக்காணியின் நெஞ்சில் ஆறுதல் உணர்வு ஊற்றெடுத்தது எனினும்; அவளையுமறியாமல் “குப்பாயி” எனக் குமுறிக் கதறி விட்டாள்.
குப்பாயியைக் குதிரை மீதமர்த்தி, அவளை அப்புறம் இப் புறம் அசைய வொட்டாமல் அந்த இருளில் கடத்திச் சென்ற பராக்கிரமன் வடிவழகி வரும் ரதத்தை எதிர்பார்த்து வீரப் பூர் காட்டில் ரகசிய மண்டபம் ஒன்றில் காத்திருந்தான். ஏற் கனவே வடிவழகிக்கு அடையாளம் காட்டப்பட்ட பாதை! அடையாளம் காட்டப்பட்ட ரகசிய மண்டபம்! மண்டபத்தில் அடைக்கப்பட்ட குப்பாயி, தன்னை பராக்கிரமனிடம் அருக் காணி தங்கம் என்றே அடித்துச் சொன்னாள்! பராக்கிரமனுக் குப் பாதி சந்தேகம் -பாதி நம்பிக்கை! இருவரும் ஏறத்தாழ ஒரே வயது – கிட்டத்தட்ட ஒரே முகபாவம் -இருவர் அணி வதும் ஒரே மாதிரி உடை தாமரை நாச்சியாரின் படுக்கை யறையில் அவளுக்கருகே படுத்துறங்குவது என்றால்; அது அருக்காணியாகத்தானே இருக்க வேண்டும்! ஆகையால், தலை யூர் மன்னன் அனுபவிக்கப் போகும் அவளை, பராக்கிரமன் மிக்க மரியாதையுடன் நடத்தினான். அவள்தான் அந்த மரியா தையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு மனிதமிருகத்திடமிருந்து கிடைக்கும் மரியாதையும் கௌரவமும்
அதனைக் கொடுப்பவரைக் காட்டிலும், ஏற்றுக் கொள்பவருக்குத்தான் மிகக் கேவ லம் என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தாள்.
அவளை, மண்டபத்துக்குள்ளேயுள்ள வசதியும் ஆடம்பரமும் நிறைந்த அறையொன்றில் அடைத்துப் பூட்டி விட்டு – பராக் கிரமன், மண்டபத்து வாயிற்புறம் வந்து; வடிவழகியின் ரதம் வருகிறதா என்று எதிர்பார்த்துக் கொண்டு நின்றான்.
மண்டபத்தைச் சுற்றியுள்ள வீரப்பூர் காட்டில் மரங்கள் காற்றில் அசையும் ஒலியும் – தொலைவில் கேட்கும் நரிகளின் ஊளையும் அந்த ஊளைச்சப்தம் கேட்டு, மரக்கிளைகளில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பல்வேறு வகைப் பறவைகள் சிறகடிக்கும் ஓசையும் – காட்டின் இரவு நேர அமைதியைக் கிழித்துக் கொண்டிருந்தன.
கண் வலியெடுக்க வடிவழகியின் ரதத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த பராக்கிரமன் காதுகளில் குதிரைகள் வரும் குளம்படிச் சப்தம் கேட்டது. அந்தச் சப்தம் வெகு விரைவில் மண்டபத்தின் அருகே வந்து விட்டது. பாதுகாப்புக்காக சோழ நாட்டு வீரர்களைப் போல உடையணிந்து வந்த, தலையூர்க் குதிரை வீரர்கள் புடை சூழ புலிக்கொடி பறக்கும் வடிவழகி யின் ரதம் மண்டபத்து வாசலில் வந்து நின்றது!
பராக்கிரமன் ஏகடியமாகச் சிரித்துக் கொண்டே, வடிவழகிக்குக் கை கொடுத்து ரதத்திலிருந்து அவளைக் கீழே இறக்கி விட்டு; உறையூர் இளவரசியாரே! வருக! வருக!!” என்றான்.
அவளும் தனது மார்பகம் பராக்கிரமனின் முதுகில் அழுந் திட அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, “ஆமாம்! போங் கள்!’ என்று கூறிக் கலகலவெனச் சிரித்தாள். அந்தக் காட் சியை; இருளை விரட்ட முயற்சிக்கும் மங்கலான தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த தலையூர் வீரர்கள், வேறு பக்கம் திரும் பிக் கொள்வது போலப் பாவனை செய்து கடைக்கண்ணால் கண்டு களித்துப் பெருமூச்சு விட்டனர். தாங்க முடியாதவர்கள் சிலர் குதிரை மேலிருந்த தங்கள் கால்களை அவற்றின் உடலின் இருபுறமும் அழுத்தினர். சிலர் உதட்டைக் கடித்துக் கொண்டனர்.
பராக்கிரமனும் வடிவழகியும் மண்டபத்துக்குள் ஒருவரை யொருவர் தழுவியவாறே நுழைந்தனர்.
”எப்படியிருக்கிறாள் அருக்காணித் தங்கம்?” என்று வடி வழகி, பராக்கிரமனின் பாறை போன்ற கன்னத்தில் அழுந்த ஒரு முத்தம் கொடுத்துக் கொண்டே கேட்டாள்.
பராக்கிரமனோ அந்த முத்தச் சுவையில் மயங்கி அவளை அப்படியே இடுப்பின் பக்கமும், மார்பகப் பக்கமும் கை கொடுத்துத் தூக்கித் தன் மடியில் கிடத்தியவாறு, அங்கிருந்த ஒரு பளிங்கு மேடையில் அமர்ந்தான்.
“அருக்காணி எப்படியிருக்கிறாள் என்றா கேட்கிறாய்? கடைந்தெடுத்த சிலை போல இருக்கிறாள். கசங்காத மலராக இருக்கிறாள். இனிமை – இளமை புதுமை மூன்றும் நிறைந்த புதையலாக இருக்கிறாள். சுருக்கமாகச் சொன்னால்; நீ மாங் கனி! அவள் மாவடு! சிறு பிராயத்தில் மாவடுக்களை மரத்தி லேறிப் பறித்து சாப்பிட்டிருக்கிறேன். அதில் கொஞ்சம் உப் பும் கலந்து சாப்பிட்டால் அடடா; என்ன ருசி! என்ன ருசி!”
“நான் அருக்காணியின் கட்டழகைப் பற்றிக் கதையளக்கச் சொல்லவில்லை! கடத்திக் கொண்டு வந்திருக்கிறோமே; கலங் கிப் போயிருக்கிறாளா? கண்கள் வீங்க அழுது கொண்டிருக் கிறாளா?” என்றுதான் கேட்டேன்
“ஓ! அதைக் கேட்கிறாயா? வேடனிடம் பிடிபட்ட மான் குட்டி போல திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறாள். சின்னஞ் சிறுசுதானே – உன்னைப் போலவா? எத்தனை பேர் தொட்டுத் தூக்கினாலும் இன்னும் பத்து பேர் தொட்டுத் தூக்க மாட்டார்களா என்று ஏங்குவாய் நீ!”
“அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இந்தப் பண்பெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் உங்களைப் போன்ற ஆண்களுக்குப் பெண்களால் ஈடுகொடுக்க முடியுமா?”
பராக்கிரமன் வெறியோடு தனது உதடுகளை அவளது இதழ் களில் பதித்து -அவள், ஹா! வலிக்குது” என்று வீறிட்டுத் துடிக்கிற அளவுக்கு முத்தமொன்று கொடுத்தான். பின்னர், அவளை அணைத்தவாறு அழைத்துக் கொண்டு வா, வடி வழகி – அருக்காணியைப் பார்க்கலாம்! அவளை நீயே மெது வாக வழிக்குக் கொண்டு வா! உன்னாலும் முடியாவிட்டால் அவளை ரதத்தில் கட்டிப் போட்டு தலையூர் அரண்மனைக் குக் கொண்டு போக வேண்டியதுதான்!” என்று சற்று மிரட்டு கிற குரலில் கூறியவாறு குப்பாயி இருக்கும் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். வடிவழகியும் அவனைப் பின் தொடர்ந்து அறைக்குள் வந்தாள்.
குப்பாயி,; அந்த அறையின் ஒரு மூலையில் தலை கவிழ்ந்த நிலையில் சுவரின் பக்கம் திரும்பிக் கொண்டு சுருண்டு படுத் திருந்தாள்.
“இதோ பாரம்மா அருக்காணி; உறையூர் இளவரசி வந் திருக்கிறார்கள்” என்றான் பராக்கிரமன்! அந்த வாசகம் காதில் விழுந்தவுடன், குப்பாயி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் வடிவழகி திகைத்துப் போனாள்.
‘யார்? யார்?’ என்று வடிவழகியின் உதடுகள் முணுமுணுத்தன!
பின்னர் அவளே சென்று அந்த அறையின் சுவரில் சொரு கப்பட்டு எரிந்து கொண்டிருந்த தீப்பந்தத்தை எடுத்து, குப் பாயியின் முகத்துக்கு நேரே பிடித்துக் கொண்டு அவளை உற்றுப் பார்த்தாள்.
குப்பாயி இப்போது வெற்றிக்களிப்பில் பயங்கரமாகச் சிரித் தாள்! ‘ஏமாந்து விட்டீர்களா எத்தர்களே’ என்று கேட்டுக் கேலிச் சிரிப்பு சிரித்தாள்!
இவள் அருக்காணித் தங்கமல்ல! குப்பாயி! குப்பாயி!’ என்று வடிவழகி கத்தினாள்! பராக்கிரமன் அசைவற்றுப் போனான். அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவன் ஏமாந்து போய் அருக்காணிக்குப் பதிலாகக் குப்பாயியைக் கொண்டு வந்து விட்ட முட்டாள் தனத்தை எண்ணி வெட்கப் படுவதற்கு பதிலாகக் கோபப்பட்டான். தன்னை, ஒரு சாதாரணப் பெண் இந்தக் குப்பாயி ஏமாளியாக்கி விட்டாளே யென்று கொதித்தான்!
வடிவழகியைப் பரபரவென இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
வடிவழகி அஞ்சி நடுங்கினாள். அவளைப் பார்த்து பராக் கிரமன் பயப்படாதே!” என்று கூறி மீண்டும் ஒரு முறை உடல்கள் அழுத்திடத் தழுவிக் கொண்டான். பராக்கிரமனின் போக்கு, வடிவழகிக்கு ஒன்றுமே புரியவில்லை.
”வடிவழகி! நான் ஏமாற்றப்பட்டதிலும் ஒரு ஆதாயம் உண்டு! இவளை அருக்காணி என்று நம்பியதால் இவள்; தலையூர் மன்னருக்கு உரியவளாயிற்றே என்று தயங்கினேன்! இவள் கொள்ளையழகை, தலையூர் மன்னன் அனுபவிக்கப் போகிறானேயென்றெண்ணி ஏங்கினேன்! இப்போது எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை! இதே மண்டபத்தில் – இன்றிரவே -இவளை எனது விருந்தாக ஆக்கிக் கொள்ளப் போகிறேன்! மிச்சமிருக்கும் இரவுப் பொழுது முழுதும் இவளை அனுப விப்பேன்! பிறகு இவள் எச்சிற் பண்டம்!” என்று கூறிய பராக்கிரமன், வடிவழகிக்கு இன்னுமொரு முத்தம் கொடுத்து குப்பாயி இருந்த அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான்.
“வராதே! வந்தால் உன் உயிர் உனக்கில்லை!’’ என்று உறுமிக்கொண்டே குப்பாயி, அந்த அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு குத்துவாளைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
“பெண்ணே! மலையை உளியால் பிளக்க முடியாதடி! வெடி கொண்டு கூடப் பிளக்க முடியாத பர்வதமடி இந்தப் பராக்கிரமன்! தலையூர் மன்னரின் மஞ்சத்தை அலங்கரிக்க ஒரு பஞ்ச வர்ணக் கிளியைப் பிடிக்க வந்தோம்! பச்சைக் கிளி நீ அகப்பட்டுக் கொண்டாய்! இருந்தாலும் என் இச்சைக் குகந்த கிளி! இங்கிருந்து தப்ப முடியாது நீ! பிணமாகலாம்; ஏன் தொல்லை? மணமாகாத உன்னை நீ மனம் வைத்தால் நான் மணக்கவும் தயார்! இணங்கி விடு கண்ணே இரவு வீணாகிறது!”
பராக்கிரமன், அவளை நெருங்கினான். குப்பாயி, தன் கையிலிருந்த குத்துவாளை ஓங்கி அவன் நெஞ்சில் குத்தினாள். அவன் அதைத் தடுத்துக் கொண்டு, அவள் கையை முறுக்கிக் குத்துவாளைக் கீழே வீழ்த்தினான். அவளையும் இறுக அணைத் துக் கொண்டான். அவளோ, தன்னைக் கட்டிப் பிடித்த கையைப் பலங்கொண்ட மட்டும் பல்லால் கடித்து அவனிட மிருந்து விடுபட்டாள். பராக்கிரமன் ரத்தம் கசியும் தனது கையை ஒருமுறை பார்த்துக் கொண்டான். காமவெறியில் அவனுக்கு அந்த வலி ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
அறைக்குள் அவள் எங்கே ஓடி தப்பித்துக் கொள்ள முடியும்? முட்டிக் கொண்டாள்! மோதிக் கொண்டாள்! அவளது ஆடையை இழுத்து அவளை அலங்கோலமாக்கினான். அந்த அலங்கோலக் காட்சி அவன் இதயத்தில் எரியும் காமத்தீக்கு எண்ணெய் ஊற்றியது போலாயிற்று!
அவளை அப்படியே வாரித் தூக்கி, ஒரு மலர்ச்செண்டை வீசுவது போல் படுக்கையில் வீசினான்.
அப்போது அறைக்கு வெளியே மண்டபத்திற்குள் ஏதேதோ வித்தியாசமான ஒலிகள்!
மஞ்சத்தில் வீசப்பட்ட குப்பாயி மீது பராக்கிரமன் தாவினான்.
படார் என்ற பயங்கர ஓசையுடன் அறையின் கதவுகள் தூள் தூளாகச் சிதறி விழுந்தன!
பராக்கிரமன், வெறியுணர்வுடன் திரும்பிப் பார்த்தான்!
வேலொன்று பராக்கிரமனின் நெஞ்சைப் பிளந்து கொண்டு, முதுகுப் புறம் எட்டிப் பார்த்து நின்றது!
பராக்கிரமன் தள்ளாடினான்! தடுமாறினான்! வேல் வீசியது யார் என்று பராக்கிரமனின் ஒளி மங்கிக் கொண்டிருந்த விழிகள் உற்றுப் பார்த்தன!
உற்றுப் பார்த்தவன் அதிர்ச்சிக்கு ஆளானான்!
”அரசே! நீங்களா?” என்று பராக்கிரமன் அலறினான்! கதறினான்!
“ஆமாம்; நானேதான்!” என்று கூறிக் கொண்டு தலையூர்க் காளி மன்னன் தனது முக்காட்டை விலக்கிக் கொண்டு நின்றான்.
– தொடரும்…
– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1987, குங்குமம் இதழ்.