பொன்னர்-சங்கர்






(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35
26. திடீர்த் திருமணங்கள்!
வேகமாக வீசப்பட்ட கத்திகள் மின்னல் வெட்டுக்கள் நிறைந்த காரிருளைக் கிழித்துக் கொண்டு செல்வது போல மூன்று வெண்புரவிகள் சங்கரமலையை நோக்கிச் சென்று கொண்டி ருந்தன. முதலாவதாகவும் நடுநாயகமாகவும் ராக்கியண்ணன் ஒரு குதிரையில் அமர்ந்திருந்தார். இருபுறமும் இரு குதிரை களில் பொன்னரும் சங்கரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

அந்த இருவர் உள்ளத்திலும் தங்களிருவரிடமும் ராக்கி யண்ணன் கையடித்துப் பெற்றுக் கொண்ட சூளுரை நிகழ்ச் சியே சுழன்று கொண்டிருந்தது. தங்களின் ஆசானுக்கு மிஞ்சி எதுவுமில்லையென்கிற அளவுக்கு ராக்கியண்ணனிடம் அவர் களுக்கு முழுமையான அன்பும் பற்றும் இருந்த போதிலும் தங்களை வாழ்க்கைத் துணைவர்களாக அடைந்து இல்வாழ்வு தொடங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கும் முத்தாயி பவளாயி இருவரும் இந்த திடீர் திருப்பமான செய்தி கேட்டால் எப்படி அதிர்ந்து போவார்கள் என எண்ணிக் கவலைப் பட்டார்கள்.
தன்னிடம் எவ்வளவு நன்றியுணர்வுடன் கூடிய விசுவாசம் வைத்திருந்தால் உயிராக மதிக்கும் காதலிகளை மறந்து திரு மணத்தைத் துறந்து தனது சபதம் நிறைவேறும் வரையில் பிரம் மச்சாரிகளாகவே வாழ்வதாக சத்தியம் செய்து கொடுத்திருப் பார்கள் என எண்ணியவாறு ராக்கியண்ணன் குதிரையில் பறந்து கொண்டிருந்தார்.
ஆசானைச் சந்திக்கச் சென்றவர்கள் இன்னும் திரும்பி வர வில்லையே; மாயவராவது ஏதாவது செய்தியனுப்பியிருப்பார் அவரிடமிருந்தும் எந்தச் செய்தியும் வரவில்லையே என்று குன்றுடையானும், தாமரைநாச்சியாரும் வீரமலையிடம் கவ லைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களது திகைப்பையும் வேதனையையும் அதிகப்படுத்து கிற அளவுக்கு ஆரிச்சம்பட்டியை வளநாட்டுப்படை வீரர்கள் மாந்தியப்பன் தலைமையில் முற்றுகையிட்டு முன்னேறிக் கொண் டிருக்கிறார்கள் என்ற செய்தியும் கிடைத்து விட்டது. சங்கர மலையில் உள்ள ஆரிச்சம்பட்டி வீரர்களை அழைத்துக் கொண்டு வீரமலையே அந்த முற்றுகையைத் தகர்ப்பதற்குச் செல்லலாமா என்ற யோசனை தெரிவிக்கப்பட்டு அதற்கு வீரமலையும் தயாராகிவிட்டான் என்றாலும்; அவன் சங்கரமலைக்கோட் டையை விட்டு அப்போது புறப்படுவது என்பது அவ்வளவு சரியல்ல என்ற அச்சமும் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டு அந்தத் திட்டம் கைவிடப்பட்டு விட்டது.
“போர்முனையில் ஆரிச்சம்பட்டி’ “போனவர்கள் இன் னும் திரும்பவில்லை’ இத்தகைய குழப்பச் சூழலில் குன் றுடையான் குடும்பத்தினரும், சின்னமலைக்கொழுந்து குடும் பத்தினரும் சிக்கியிருந்தபோது அந்தக் குதிரைகள் மூன்றின் குளம்படிச் சப்தம் உரக்க ஒலிக்கவே அரண்மனைக்குள்ளிருந் தோர் செவிகள் அனைத்தும் ஒலி வந்த திக்கில் திரும்பின.
பொன்னர் – சங்கர் ஆசானுடன் வருகிறார்கள் எனக் கேட்டு அனைவரும் ஆறுதல் பெருமூச்சு விட்டுக் கொண்ட னர். கோட்டைக்குள் நுழைந்து அரண்மனைப் பகுதியைக் கடந்து வந்த குதிரைகளில் இருந்து மூவரும் இறங்கினார்கள். முதலில் இறங்கிய ஆசானிடம் குன்றுடையான் ஓடிச் சென்று அவரை இறுகத் தழுவிக் கொள்ளவே ஆசானின் கண்கள் கலங்கின. இருவரும் சிறிது நேரம் பேச முடியாமல் தவித்த னர். வீரமலையும் மாயவரும் சொன்ன கடந்த கால நிகழ்ச் சிகள், அங்கிருந்தோர் அனைவரின் மனத்திரையில் மீண்டும் ஒரு முறை ஓடின. அந்த நினைவோடு அவர்கள் ஆசானை ஒரு புதிய மதிப்புடன் பார்த்தனர். ஏற்கனவே கொண்டிருந்த மரி யாதையை விட மேலும் மரியாதை பெருகி எல்லைக்கோட் டையே தாண்டிவிட்டது என்றே கூறலாம். அவரை ஒரு வீரர், ஆசான், துணிச்சல்மிக்க மனிதர், எல்லோராலும் பாராட்டப் படக் கூடியவர் என்றெண்ணித் தரப்பட்ட மரியாதை இப் போது பல மடங்கு உயர்ந்ததற்குக் காரணம் அவரது தன்ன லங்கருதாத தியாக மனப்பான்மையே ஆகும்.
“எங்கள் குடும்பத்துக்கு நீங்கள் செய்துள்ள உதவிக்கு ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் எங்களால் ஈடு செய்ய முடியாது! என்று தாமரைநாச்சியார் தழுதழுத்த குரலில் கூறிக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டு நின்றாள். தனது மகள் அருக்காணி தங்கத்தை அருகழைத்து ராக்கியண்ணனின் காலில் விழுந்து வணங்கச் சொன்னாள். அவளை ஆசான் வாழ்த்தி நிமிர்வதற் குள் முத்தாயி பவளாயி இருவரும் வந்து அவரது காலைத் தொட்டு வணங்கினர். கேள்விக்குறியுடன் திரும்பிய ஆசா னுக்கு உடனடியாக விளக்கமளித்து விட்டான் குன்றுடையான்.
“இந்தப் பெண்கள்தான் மருமகள்களாக வரப் போகிற வர்கள். இதைப்பற்றிப் பேச நானும் தாமரையும் மாரிக்கவுண் டன்பாளையம் பாசறைக்கே வருவதற்கு இருந்தோம்’.
ஆசான், குன்றுடையானின் பேச்சை முடிக்க விடாமல் குறுக்கிட்டு; “அதற்குத்தான் நானே இவர்களுடன் வந்து விட் டேன்! பொன்னர் சங்கரிடமும் மாயவரிடமும் எல்லா விபரங்களும் கூறியிருக்கிறேன். மாயவர் அவசரமாகத் தலை யூர் போக வேண்டுமெனக் கூறிப் போய்விட்டார். இல்லை யேல் அவரே வந்து உங்களிடம் பேசியிருப்பார்” என்றார்.
“என்னதான் நாங்கள் அப்பா அம்மாவாக இருந்தாலும் பெற்றோர்கள் என்ற பெயரைத் தவிர வேறென்ன பெருமை எங்களுக்கிருக்கிறது? நீங்கள்தானே பொன்னர் சங்கருக்கு தாய், தந்தை, ஆசான் தெய்வம் எல்லாமே! அதனால் அவர் கள் திருமணத்துக்கு உங்கள் சம்மதம் மிக மிக முக்கியமல்லவா?”
குன்றுடையானின் பேச்சில் உருக்கமிருந்தது. உண்மையு மிருந்தது. சின்னமலைக்கொழுந்து, சிலம்பாயி, வையம்பெரு மான், வீரமலை ஆகியோர் ராக்கியண்ணன் என்ன சொல்லப் போகிறார் என்று மெத்த மரியாதையுடன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். தாமரையும் அருக்காணித் தங்க மும்; ஆசான் பொன்னர் சங்கரை அருகழைத்து அவர்கள் தலையைத் தடவிக் கொடுத்து சிரித்த முகத்துடன் ஆசீர்வாதம் வழங்குவார் என்று எதிர்பார்த்தனர். முத்தாயி பவளாயி இரு வரின் கால் பெருவிரல்கள் பூமியில் புள்ளியில்லாக் கோலம் போட்டுக் கொண்டிருந்தன. மணவிழாவுக்கான ஒப்புதல் வார்த்தைகள் ஆசானிடமிருந்து வெளிப்படும் போது அவற் றைத் தமது காதுகள் மட்டும் கேட்டால் போதுமென்று கண் களை நிலத்தில் பதித்திருந்தனர் அவர்கள்!
“பொன்னர் சங்கரைக் காப்பாற்றுவதற்காக என் புதல்வர் களையும், மனைவியையும் இழந்து விட்டவன் நான்! என்மீது நீங்கள் எல்லாம் கொண்டுள்ள மதிப்பு எள்முனையளவும் குறையாது என்ற நம்பிக்கையுடன் கூறுகிறேன்; என் குழந்தைகளைக் கொன்றவர், கொல்வதற்குக் காரணமாக இருந்தவர் பழிவாங்கப்பட வேண்டும். அந்தப் பணியை இந்தப் பொன்னர் – சங்கர்தான் நிறைவேற்ற வேண்டும். அதுவரையில் இவர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருக்க வேண்டும். என் மனைவியின் பிணத்தின் முன் நின்று இவ்வாறு சபதம் செய்த வன் நான்! என் சபதத்தை நிறைவேற்றுவதாகவும் அது வரை யில் பிரம்மச்சாரியாக இருப்பதாகவும் பொன்னர் சங்கர் என்னிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதற்கு மாயவரும் சாட்சி!’ என்று ஆசான் சொன்னவுடன் பொன்ன ரும் – சங்கரும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு, அவரது முழங்காலைப் பற்றிக் கொண்டு, ‘அய்யனே! இதற்கு சாட்சி எதற்காக? நாங்கள் செய்த சத்தியத்தை இல்லையென்று மறுக் கவா போகிறோம்?” என்று பதற்றமுடன் கேட்டனர்.
“பிரம்மச்சாரியாக வாழ்வது!”
இந்தச் சொற்றொடர் அங்கிருந்தோர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது எனினும், முத்தாயி பவளாயி இரு வரையும் திகைப்புத் தீயிலேயே தூக்கி எறிந்து கருக்கத் தொடங் கியது. நொடிக்கு ஒரு திருப்பமாக இன்பமும் துன்பமும் அவர் களின் இதயத்தில் மாறி மாறி வலம் வருவது ஏன் என்று கலங்கித் துடித்தனர். தங்களை மணக்கவே பிறந்தவர்கள், தங்களின் அன்பு நெஞ்சத்தை அள்ளிக் கொண்டவர்கள் பிரம் மச்சாரிகளாக வாழ்வது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாமல் திணறினர். ஆசானின் சபதம் எப்போது நிறைவேறப் போகிறது? அதை நிறைவேற்றும் பணியில் என்ன விளைவுகள் ஏற்படுமோ? இந்தக் கேள்விகளும் முத்தாயி பவ ளாயி இருவரையும் திக்குமுக்காடச் செய்தன. அம்மனுக்கு எடுத்த கரக விழாவிலேயே சூறைக்காற்றில் ஆற்றுடன் போயி ருக்கக் கூடாதா – அல்லது அந்த முதலைக்கோ மலைப்பாம் புக்கோ இரையாகியிருக்கக்கூடாதா என்று வேதனைக் கண் ணீர் வடித்தனர். ஆசானின் காலில் விழுந்து, அந்தக் கால் களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, எங்களுக்காக இரக்கம் காட்டுங்கள்” என்று கெஞ்ச வேண்டும் போல் இருந் தது. ஆனால் பேச நா எழாமல் உடலும் அசைவற்றுப் போனது போல அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டனர்.
சின்னமலைக்கொழுந்தின் முகத்தை சிலம்பாயி தாங்க முடி யாத வருத்தமுடன் பார்த்தாள். தன் மனைவியின் மனம் படும் பாட்டை சின்னமலைக்கொழுந்து புரிந்து கொண்டார். ஆகை யால் ஆசானிடம் பேசிப் பார்த்தால் பயன் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன் அவர் பக்கத்தில் சென்றார்.
“ஆசான் அவர்களே! தாங்கள் எடுத்துள்ள சபதம் தேவை யானது.நிறைவேற்றப்பட வேண்டியது. அதற்கு என்னாலான உதவியைக் கூடச் செய்யத் தயாராக இருக்கிறேன்”.
இந்த வார்த்தைகள் ஆசானின் இதயத்தில் சிறிதளவு சினத்தை எழுப்பியிருக்க வேண்டும். அதனால் அவர் முகம் கறுத்தது. பதிலிலும் கடுமையிருந்தது.
“என்னால் கூட முடியும்! உமது உதவியைக் கூடப் பெற முடியும்! ஆனால் எனது சபதம்; என்னால் வளர்க்கப்பட்ட என்பிள்ளைகள் பொன்னரும் சங்கருமே என் சபதத்தை நிறை வேற்ற வேண்டும் என்பது என் விருப்பம்!”
சின்னமலைக்கொழுந்து ஆசானின் சினத்தையறிந்து தனது கோரிக்கையை விட்டு விடத் துணியவில்லை. தனது பெண் களின் வாழ்க்கை பாலைவனமாகி விடக் கூடாது என்பதில் அவருக்கிருந்த அக்கறையினால் வராத புன்னகையைத் தானாக வந்தது போல் வரவழைத்துக் கொண்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.
“ராச்சாண்டார்மலையில் சிறைவைக்கப்பட்ட என் பெண் களை மீட்டுத் தந்தால் அவர்களைப் பொன்னர் – சங்கருக்கு மண முடிப்பதாக நான் தந்த வாக்குறுதி – இதோ என் தங்கை தாமரைநாச்சியார் திருமணக்கோலத்தில் தன் மகன்களுக்கு என் பெண்களைத் திருமணம் முடிப்பதாக செய்திட்ட சபதம் – இரண்டுமே இணைந்து நிறைவேறுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் கவனிக்கும்போது இப்படியொரு எதிர்பாராத தடை யென்றால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?”
சின்னமலைக்கொழுந்து பேச்சை முடிக்க முடியாமல் விம்மி யழுதே விட்டார். அந்த இடத்தில் மிக ஆழமான ஒரு மௌனம்! ஆசான் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அங்கு மிங்கும் உலவினார். பிறகு பொன்னர் சங்கரிடம் வந்து நின்றார். தனது உயர்ந்த தோள்களை மேலும் உயர்த்திக் குலுக்கினார். உரம் வாய்ந்த கரங்களைத் தூக்கித் தனது அன்பு மாணவர்களின் தோள்களை அழுத்திப் பிடித்துக் கொண்டார். மெல்லச் சிரித்தார்.
இதற்கு நீங்கள் தானப்பா பதில் சொல்ல வேண்டும்!” என்றார்.
சபதத்தை நிறைவேற்றுவதற்காகப் பிரம்மச்சாரிகளாக இருக்க முடியாது. அது தேவையுமில்லை என்று பொன்னரும் சங்கரும் கூறிவிட மாட்டார்களா என முத்தாயியும் பவளாயியும் ஒருக் கணம் துடித்தார்கள் என்றாலும்;
அய்யோ! அப்படிக் கூறிவிட்டால் அவர்கள் வாக்குறுதி தவறிய வாய்மையற்றவர்கள் என்ற பழிக்கு ஆளாகி விடு வார்களே; வேண்டாம் வேண்டாம் அவர்கள் தங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் உலகத்தின்முன் உறுதியற்ற உள்ளம் படைத்தவர்கள் என்ற அவப்பெயர் அவர்களை அணுக வேண் டாம்!’ என்று தங்கள் நெஞ்சத்து உதடுகளால் பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.
ஆசான், தங்களது தோளைப் பிடித்துக் கொண்டு “நீங்களே பதில் சொல்லுங்கப்பா” என்றுரைத்தவுடன் பொன்னர்- சங்கர் இருவரும் சின்ன மலைக்கொழுந்திடம் வந்தனர்.
“எங்களுக்காக உங்கள் பெண்கள் காத்திருக்கத் தேவை யில்லை. அவர்களுக்கு வேறு நல்ல இடமாகப் பார்த்து மணம் முடியுங்கள். ஆசானிடம் நாங்கள் செய்து கொடுத்துள்ள சத்தியத்தைக் காப்பாற்றுவதே எங்கள் வாழ்வின் முக்கியமான லட்சியம்!”
இந்த பதிலை அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் முத்தாயி யும் பவளாயியும் ஆவேசம் வந்தவர்கள் போல அலறிவிட்ட னர். அந்தக் கூடத்தில் அவ்வளவு பேர் நிற்கிறார்களே என்ற நாணமோ அச்சமோ அவர்களைத் தடுத்திடவில்லை. ஓடோடி வந்து சின்னமலைக்கொழுந்து சிலம்பாயி இருவரின் கால் களையும் பிடித்துக் கொண்டு கதறியழுதனர்.
“அப்பா! அம்மா! நாங்கள் வாழ்வதாகயிருந்தால் அவர் களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறோம். இல்லா விட்டால் சாவது ஒன்றே நல்ல வழி எங்களுக்கு! நீங்களும் எங்கள் அத்தையும் நினைத்தபடியே திருமணம் நடக்கட்டும். அவர்கள் ஆசானின் சபதத்தை நிறைவேற்றும் வரையில் உடலுறவு இல்லாமலே இல்வாழ்க்கை நடத்துகிறோம். இப் போதே எங்கள் திருமணத்தை நடத்தி விடுங்கள். அத்தான் இருவரும் ஆசானின் சபதம் முடிக்கும்வரையில் பிரம்மச்சாரி களாக இருக்கட்டும். மணவிழா என்பது இவர்களோடுதான் எங்களுக்கு; இல்லையேல் – எங்கள் பிணங்களைத்தான் பார்க்க முடியும்!
முத்தாயி பவளாயி கதறல் கேட்டுமட்டுமல்ல; அவர்கள் பொன்னர் சங்கரை மணந்து கொண்டு உடலுறவு இல்லா மலே இல்வாழ்க்கை நடத்துவதாகக் கூறியதில் உள்ள உண்மை யான இதய அன்பின் மகிமையை உணர்ந்து கொண்ட ஆசான் அங்கிருந்தோரைப் பார்த்து அகமலர்ச்சியுடன்; இப்போதே திருமணத்தை முடித்துக் கொண்டு என் சபதம் நிறைவேறும் வரையில் பொன்னர் சங்கர் பிரம்மச்சாரிகளாக வாழ்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை” என்றார்! அது கேட்டு சின்னமலைக்கொழுந்து மகிழ்ந்தார் என்றாலும், ‘இப் போதே திருமணம் என்றால் எப்படி முடியும்?” என வியப்பு தெரிவித்தார்.
உடனே குன்றுடையான், “ஏன் முடியாது? இன்று பொழு துக்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிக்க எவ்வளவோ ஆட்கள் இருக்கிறார்கள். திருமணம் மட்டும்தானே நடத்தப் போகிறோம். மற்ற விஷயங்கள்தான் இப்போது எதுவும் இல் லையே!” என்று தனது வெகுளி உள்ளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினான்.
“ராஜகுடும்பத்துத் திருமணமென்றால் ஆடம்பரமாக நடத்த வேண்டும்; உற்றார் உறவினரை மாத்திரமல்லாமல் ஊரார் அனைவரையும் கூட்ட வேண்டும் என்பதற்காக நான் சொல்ல வில்லை. குறைந்த பட்சம் ஆரிச்சம்பட்டி அரண்மனையில் உள்ளவர்களாவது வர வேண்டாமா? அதுபோலக் குடையூர் மாளிகையில் உள்ளவர்கள் வந்து கலந்து கொள்ள வேண் டாமா? இந்தக் கூட்டமெல்லாம் தேவையில்லையென்றாலும் மாயவருக்கு அழைப்பு அனுப்பி அவர் வந்திருந்து திருமணத் தில் மணமக்களை வாழ்த்த வேண்டாமா?
அன்றைக்கே திருமணம் நடத்துவதற்குத் துளியளவு கூடச் சம்மதமில்லாத சின்னமலைக்கொழுந்து சொன்ன இந்தக் கருத் துக்கு சிலம்பாயியும் தலையசைத்தாள். தாமரைநாச்சியாருக் கும் அது சரியென்றே பட்டது.
“ஆரிச்சம்பட்டியார் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது” என்று குன்றுடையான் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு “மசச்சாமி’ என்ற அழகான அடைமொழிக்கு தான் உரியவன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் கொண்டான்.
திருமணத்தைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவதற்குள்ளாக சின்னமலைக்கொழுந்தைத் திடுக்கிட வைக்கும் செய்தியொன்று வந்து விட்டது. செய்தியைச் சுமந்து கொண்டு வந்தவன் ஆரிச்சம்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயி! வாலிப வயதினன்! போர் வீரனுக்குரிய உடையெதுவும் அணியாவிட் டாலும் அவன் கையில் ரத்தம் தோய்ந்த ஈட்டியொன்று இருந் தது. அவனை அழைத்துக் கொண்டு வந்த சங்கரமலைக் கோட்டை வீரர்கள், அவனை சின்னமலைக் கொழுந்தும் மற்ற வர்களும் உரையாடிக் கொண்டிருந்த கூடத்தில் விட்டுச் சென்றனர்.
”நான் ஆரிச்சம்பட்டியிலிருந்து வருகிறேன்!”
“அப்படியா? ஈட்டியில், ரத்தம் தோய்ந்திருக்கிறதே; என்ன காரணம்?”
”நான் ஊரிலிருந்து தங்களுக்குச் சேதி சொல்ல ஓடி வரும் போது வளநாட்டு வீரன் ஒருவன் எதிர் நின்று தடுத்தான். அவன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி அவனைக் குத்திச் சாய்த்து விட்டு ஓடி வந்தேன்”
“என்ன செய்தி சொல்ல வந்தாய்?”
“வளநாட்டு மாந்தியப்பன் படையை ஆரிச்சம்பட்டி வீரர் களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.”
“அதனால் என்ன ஆயிற்று?”
“மாந்தியப்பன் நமது அரண்மனைக்குள் நுழைந்து விட்டான். வளநாட்டுக் கொடி நமது கோட்டை முகப்பில் பறக்க விடப் பட்டு விட்டது. ஆரிச்சம்பட்டியைக் கைப்பற்றிய வளநாட்டு வீரர்கள் நடத்தும் அக்கிரமங்களுக்கு எல்லையே இல்லை. வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கிறார்கள். வீதிகளில் பெண் கள் நடமாட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் அழுகுரல் தான் கேட்க முடிகிறது.”
”ஆ! என்ன ஆரிச்சம்பட்டிக்கு இப்படி ஒரு அவலமா? அய்யோ! கேட்கவே முடியவில்லையே இந்தக் கொடுமையை!”
“வெற்றி விழா நடத்தப் போகிறானாம் மாந்தியப்பன்… நமது ஆரிச்சம்பட்டி அரண்மனையில்! அந்தக் கேளிக்கை களியாட் டத்தில் அவனது படுக்கைக்கு நல்ல பக்குவமான பருவமடைந்த அழகிய பெண்கள் பத்து பேர் கொண்டு வரப்பட வேண்டு மாம். அவர்களில் அவனுக்குப் பிடித்தமான ஒருத்தியை இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து கொள்வானாம். மிச்சமுள்ளவர் களை அவனது தளபதிகள் எச்சில் படுத்துவார்களாம்.இப்படி பகிரங்கமாகவே அறிவித்து விட்டுப் பாவையர்களை வேட்டை யாடுகிறார்கள் பாவிகள்!”
ஆரிச்சம்பட்டியிலிருந்து வந்த விவசாயக் குடும்பத்து வாலி பன், சின்னமலைக்கொழுந்திடம் கூறிய செய்தி கேட்டு ராக்கி யண்ணனின் கண்கள் கோவைப் பழங்களாயின. மீசை துடிக் கப் பல்லை நறநறவென்று கடித்தார்.
“அந்த நாச காரியத்தை அனுமதிக்கவே முடியாது. நானே போகிறேன். ஆரிச்சம்பட்டியை மாந்தியப்பனிடம் இருந்து மீட்கும் போராட்டத்தில் நான் மடிந்தாலும் பரவாயில்லை; போர் வீரர்கள் புல்லர்களாக மாறிச் சேட்டைகள் செய்வதை சகித்துக் கொண்டிருக்க முடியாது!” என்று இடியென ஒலித் தார். அப்போது பொன்னரும் சங்கரும் தங்களின் ஆசானை அமைதிப்படுத்தி:
“நாங்கள் இருவரும் சென்று அந்த மாந்தியப்பனுக்குப் புத்தி புகட்டி வருகிறோம். ஆணையிடுங்கள் ஆசான்!” என்று வேண்டிக் கொண்டனர்.
“என் வேண்டுகோளை சின்னமலைக் கொழுந்தார் உட்பட அனைவரும் தயவுசெய்து கேளுங்கள்; சங்கரமலைக் கோட் டைக்கு வந்துள்ள ஆரிச்சம்பட்டிப் படை வீரர்களுக்குப் பொன் னரும் சங்கரும் தலைமை வகித்து உடனே ஆரிச்சம்பட்டி சென்று மாந்தியப்பனின் வளநாட்டுப் படைகளைச் சந்திக்கட் டும்! இருவரும் புறப்படுவதற்கு முன்பாக இப்பொழுதே அவர் களின் திருமணத்தை இங்கே நடத்தி வைப்போம் என்று ஆசான் உணர்ச்சி பெருக்குடன் கூறினார்.
“போர்முனைக்குப் போகும்போது திருமணமா? களத்தில் எங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதன் பிறகு முத்தாயி பவ ளாயி கைம்பெண்களாக நிற்க நேரிடாதா?’
பொன்னர் இப்படிக் கூறியதும் முத்தாயி, தனது விழிகளில் வழிந்திடும் நீரைத் துடைத்தவாறு; களத்தில் அல்ல; அடுத்த கணமே அவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டுப் போய் விடு வார்கள் என்றாலும் எங்கள் கழுத்தில் அவர்கள் கரங்களினால்தான் மாங்கல்யம் ஏறிட வேண்டும்” என்றவாறு தேம்பித் தேம்பி அழுதாள். சகோதரி அழுவதைக் கண்டு பவளாயியும் விம்மியழத் தொடங்கினாள். தாமரைநாச்சியார் தழுதழுத்த குரலில் சிலம்பாயியை பார்த்து, ‘திருமணத்தை இப்போதே முடிக்க எனக்குச் சம்மதமே” என்றாள். சிலம்பாயி மறுப்புச் சொல்லவில்லை.
“இரு இல்லத்து அரசிகளும் சொன்ன பிறகு அதற்கு மறுப்பு ஏது?” என்றான் சிரித்துக் கொண்டே குன்றுடையான்.
அடுத்த நொடியில் அந்த அரண்மனை அவசரத் திருமண ஏற்பாடுகளால் திணறியது.
27. இருபுறம் பெரும்படை!
ஆரிச்சம்பட்டியில் மணமகள்களின் அரண்மனையில் முறைப் படி நடைபெற வேண்டிய திருமணம் சங்கரமலைக்கோட்டை யில் போர்ச்சூழலுக்கிடையே நடைபெற்றாலும் மரபுக்கேற்ப மணவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.உடனே நிச்சயதார்த்தம் – உடனே மணவிழா என்ற நிலையில் ஒரே பரபரப்பு!
பொன்னர் முத்தாயி – சங்கர் பவளாயி திருமண நிச்சயம் செய்து வெற்றிலை பாக்குப் பரிசம் போடப்பட்டது. அழகிய பந்தலொன்று மணவிழாவுக்கென அமைக்கப்பட்டு மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. புதுமணல் பரப்பி வாழை மரங்கள் வரிசையாக வைக்கப்பட்டன. பொன்னர்-சங்கர் இருவரின் உடனிருந்து வையம்பெருமானும் வீரமலையும் மண மகன்களுக்குரிய அலங்காரங்களைச் செய்தனர். அருக்காணித் தங்கமும் அவளது அருமைத் தோழி குப்பாயிக்குச் சொல்லி யனுப்பி பக்கத்து சிற்றூரில் இருந்த அவள் மணமகள்கள் இரு வருக்கும் தேவையான ஆடை அணிகளுடன் வந்து சேர்ந்து விட்டாள். அருக்காணித் தங்கம் குப்பாயி இருவரும் மணமகள் களின் தோழிப் பெண்களாகச் செயல்பட்டு மணவிழாப் பணி களைச் பம்பரமெனச் சுழன்று ஆற்றிக்கொண்டிருந்தனர். சங்கரமலைக்கோட்டை வாழ் பெரியவர்களும் அவர்களுடன் ராக்கியண்ணனும் மணப்பந்தலில் அமர்ந்து மணமக்களை அகமும் முகமும் மலர வாழ்த்திக் கொண்டிருந்தனர். பொன்னர் – சங்கர் இருவரையும் குதிரைகள் மீதேற்றி கோட்டையைச் சுற்றிவரச் செய்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நாணத் தால் முகம் சிவந்திருந்த முத்தாயி பவளாயி இருவரும் குனிந்த தலை நிமிராமல் மணமேடையில் வந்தமர்ந்தனர். தாமரை நாச்சியாரும் சிலம்பாயியும் எத்தனையோ வேதனைகள் உள் ளத்தில் அழுத்திக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒருக் கணம் மறந்து விட்டு, தங்கள் மக்களின் மணக் கோலத்தைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அருமைப் பெரியவர் எனப்படும் அருமைக்காரர் இறைவழி பாடு செய்து மணவிழாவைத் தொடங்கினார். ஒரு கலம் நிறைய வைக்கப்பட்ட அரிசியில் மணமகன்களின் கையையும் மைத்துனன் வையம்பெருமானின் கையையும் கோத்து வைத்து வெற்றிலை பாக்கு கொடுக்கப்பட்டு மங்கல வாழ்த்து பாடப் பட்டது. வாழ்த்து முழக்கம் – வாத்திய முழக்கங்களுக்கிடையே முத்தாயி கழுத்தில் பொன்னரும், பவளாயி கழுத்தில் சங்கரும் மங்கல நாண்களை அணிவித்தனர். அப்போது ராக்கியண் ணன் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தபடி மணமக்கள் மீது மலர் களைத் தூவினார். குன்றுடையானும் சின்னமலைக் கொழுந் தும் தங்களையும் மீறி விழிகளில் எட்டிப்பார்க்கும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்தவாறு மணமக்களுக்கு வாழ்த்துக் கூறிய தோடு அவர்களுக்காக ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டனர்.
அவசரத் திருமணமாக இருந்த போதிலும் வேளாளர் குல மரபுகள் எதையும் விட்டுவிடாமல் அடையாளத்திற்காகவாவது அத்தனையும் செய்து முடிக்கப்பட்டன. மணமக்கள் கைகளில் கட்டப்பட்ட கங்கணங்களை அவிழ்த்து மணவிழா மங்கல நிகழ்ச்சி இனிது நிறைவேறியவுடன் விழாவுக்கு வந்திருந்தோர் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. விருந்து மண்டபத் துப் பணிகளை தாமரைநாச்சியார், சிலம்பாயி, அருக்காணித் தங்கம், அவள் தோழி குப்பாயி ஆகியோர் முன்னின்று கவ னித்தனர்.
போர் முனைக்குப் புறப்படும் நேரத்தில் ஒரு மணவிழா அதுவும் ஆசானின் சபதம் நிறைவேறும் வரையில் உடலுறவு கொள்ளாமல் மணமக்கள் பிரமச்சரியம் கடைப்பிடிக்க வேண் டும் என்ற நிலையில் நடைபெற்ற மணவிழா -எல்லோருமே பொன்னர் சங்கரின் வீர தீரத்தில் கொண்டுள்ள நம்பிக்கை யில் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொள்ளாவிடினும் ஏதோ ஒரு பதற்றத்தில் இருந்தனர்.
மணக்கோலம் மாற்றிப் போர்க்கோலம் பூணுவதற்கு பொன்னரும் சங்கரும் அந்தக் கோட்டையில் படைக்கலன் களும் போர் உடைகளும் உள்ள அறைக்குச் சென்றனர்.
ஒட்டியாணம் பூட்டெடுத்து
இடையில் பதித்து அப்போ
வாங்கு பிடி சூரி வளைதடியும் சக்கரமும்
சுருட்டு முத்துப் பட்டா சூரவாள் கேடயமும்
ஈட்டி கோல் வலையமும் எரி ஈட்டி நேரிசமும்
கம்பு கத்தி சமுதாடு சமுக்குலா பட்டாவும்
தூக்கும் பரிசையோட நிலம் தூத்துவரும் சல்லிகளும்
பத்துக் கட்டி போட்டடித்த பாரமான கேடயமும்
எட்டுக் கட்டி போட்டடித்த ரணங்கண்ட மந்திரவாள்
பதினெட்டு ஆயுதமும் அண்ணர் இருவரும்
பாங்காகத் தானெடுத்து…
அறையிலிருந்து வெளியே வந்தனர்.
களம்புகு வீரர்களாகத் தங்கள் கண்மணிகள் வந்து நிற்பது கண்டு குன்றுடையானும் தாமரைநாச்சியாரும் நெகிழ்ந்து போயினர். ஆசான் ராக்கியண்ணன் தனது மாணவர்களாக வும் மகன்களாகவும் வளர்ந்த அந்த அரிமாக்களைக் கண்டு அப்படியே மலர்ந்து போய் நின்றார். ஆசான் கால்களிலும் பெற்றோர் கால்களிலும் பொன்னர் – சங்கர் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். சின்னமலைக் கொழுந்து சிலம்பாயி இரு வரும் தங்கள் மனத்துக்குள் தெய்வத்தை வேண்டிக் கொண்டு பொன்னர் சங்கர் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினர். அப்போது அருக்காணித் தங்கம் தனது அண்ணன்மார்களின் வீரஞ்செறிந்த முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின் றாள். அவளை கவனித்து விட்ட பொன்னர் சங்கர் அவ ளருகே சென்று அவள் தலையைக் கோதியவாறு, “என்னம்மா தங்கம்?” என்று அன்பொழுகக் கேட்டனர்.
“அண்ணிகள் காத்திருக்கிறார்கள் அண்ணா! அவர்களிடம் சொல்லிக் கொள்ள மறந்து விடாதீர்கள்!” என்று கண்கலங்கக் கூறினாள் அருக்காணித் தங்கம்.
தங்கையின் வேண்டுகோளைச் செவிமடுத்த இருவரும் தங் களின் ஆசான் முகத்தைப் பார்த்தனர். மனைவிகளிடம் போய் விடைபெறுவதென்றால் அவர்கள் உடனே விடை கொடுத்து விடமாட்டார்களே; அதனால் அது தேவையா? என்பது போல் இருந்தது அந்தப் பார்வை! ஆசானுக்கும் அது புரியாமல் இல்லை!
“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை” என்ற திருக்குறள் நினைவுக்கு வந்து விட்டதோ? அதாவது நீ பிரிந்து போகாதிருப்பதாயின் என்னிடம் சொல்லிக்கொள்! போய்த்தான் தீரவேண்டு மெனில் நீ திரும்பி வரும்பொழுது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிக்கொள்! என்பது போல உங்கள் துணைவியர்கள் சொல்வார்களோ என அஞ்சுகிறீர்களா? முற்றாக நிலைமைகளை உணர்ந்துள்ள முத்தாயியும் பவளாயியும் அப்படிச் சொல்லமாட்டார்கள்!”
என்று ஆசான் புன்னகை புரிந்தவாறு கூறினார். ஆசானின் உரையைக் கேட்டபிறகும் அவர்களுக்கு ஒரு தயக்கம். ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆசானை நிமிர்ந்து நோக்காமல் அவரது கால்களையே உற்று நோக்கினர்.
“ஓகோ பிரமச்சரியம் என்ன ஆவது என்று யோசிக் கிறீர்களா? பார்ப்பது பேசுவது இவற்றால் எந்தப் பாதக மும் இல்லை – என் சபதம் நிறைவேறும் வரையில் உட லுறவுதான் கூடாது!”
என்று ஆசான் விளக்கம் தந்து, பொன்னர் சங்கர் இருவரது கரங்களையும் பரிவுடன் பற்றிக் கொண்டு,
”உம்! போய் சொல்லிக்கொண்டு புறப்படுங்கள்.”
என்றார். அதைக் கேட்ட அருக்காணித் தங்கத்துக்கு பூரிப்பு தாங்கவில்லை. குதித்தோடிச் சென்று குப்பாயியைத் தழுவிக் கொண்டாள். பிறகு அவளை விட்டு அண்ணிகள் இருவரும் இருக்கும் அந்தப்புரம் நோக்கிப் பறந்தாள்.
“அண்ணி! அண்ணன் வருகிறார்! அண்ணன் வருகிறார்!”
என்று முத்தாயியிடமும் பவளாயியிடமும் ஓடோடிச் சென்று செய்திகளைச் சொன்னாள்.
அந்தப்புரக் கதவின் மீதே பார்வையைப் பதிய வைத்து நின்று கொண்டிருந்த முத்தாயியின் இதயம் படபடத்தது. தனது அருமைக் கணவன் பொன்னர் வரப்போகிறான் தன்னுடன் பேசப்போகிறான் என்பதை விட; வருபவன் திரு மணம் முடித்தவுடனேயே போர்க்களத்துக்குப் புறப்படும் செய் தியைச் சொல்வதற்காக அல்லவா வரப்போகிறான் என்பதை எண்ணிடும்போது அவளது வேதனை எல்லை கடந்தது. கத வைத் திறந்து கொண்டு பொன்னர் வந்து நின்றான். சிலிர்த்துக் கொண்டு நிற்கும் ஒரு சிங்கத்தின் செம்மார்ந்த தோற்றம். விரிந்து பரந்த மார்பில் கவசம் பூண்டு, இடுப்பில் தொங்கிய உறைவாளின் மீது ஒரு கையை வைத்தவாறு அவன் நின்ற காட்சி கண்டு முத்தாயி பெருமிதம் கொண்டாள். கட்டழகன் மட்டுமல்ல, களங்காணத் துடிக்கும் காளையைக் கணவனாகப் பெற்றோமேயென்று களிபேருவகை கொண்டாள். அவன் முன்னால் தனது கலக்கத்தைக் காட்டிக் கொள்வது கூடாது என்ற நினைப்பில் தலையைக் குனிந்து கொண்டு விழிகளை மட்டும் மேலுயர்த்தி அவனைப் பார்த்தாள்.
“போய் வருகிறேன்”
பொன்னர் உதடுகளைக் கடந்து வெளிப்பட்டது வார்த்தைகள் தான் என்றாலும் அந்த வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் ஈட்டியாக உருவெடுத்து அவள் நெஞ்சைத் துளைத்திடத் தவற வில்லை. சமாளித்துக் கொண்டாள். குங்குமத் திலகமிருந்த தட்டை எடுத்து வந்து அவன் முன்னால் நீட்டியபடி நின்றாள். பொன்னர் அந்தத் தட்டிலிருந்த குங்குமத்தை விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டான். மீண்டும் ஒரு முறை சொல் லிக் கொண்டான். “வருகிறேன்” என்று! வெற்றியோடு திரும்புங்கள்” என்று முத்தாயி சொன்னாள். ஆனால் அந்தச் சொற்றொடரின் ஒவ்வொரு எழுத்தும் கடுங்குளிரில் நடுங்கும் சிசுவைப் போல் நடுங்கின. பொன்னர் அந்தப்புரத்திலிருந்து கிளம்பினான். முத்தாயியின் விழிகள் அவன் தோள்களில் தொத்திக் கொண்டன.
பவளாயி, முத்தாயியை விடக் கொஞ்சம் துணிவுடையவள். சங் கர் அவளது அந்தப்புரத்தில் நுழைந்தவுடனேயே, ‘புறப்பட்டு விட்டீர்களா?” என்று கேட்டுக் கொண்டே எதிர் வந்து நின் றாள். நின்றவள் கண்ணுக்கு நேரே நெடுங்குன்றமொன்று படைக் கலன்களுடன் போருடை அணிந்து நிற்பது போல சங் கர் வந்து நின்றான்.
“ஆமாம் பவளம்; புறப்பட்டு விட்டேன்!” என்றான் சங்கர்!
“உங்கள் வெற்றிக்காக நான் தவமிருப்பேன் என்றாள்!
“வரம் கேட்டுத்தான் எனக்கு வெற்றி கிடைக்க வேண்டுமா? என் நெஞ்சுரத்தில் உனக்கு நம்பிக்கையில்லையா?’ என்று கேலி செய்தான் சங்கர்!
“நிச்சயம் வெற்றியுடன்தான் திரும்புவீர்கள். அதில் சந் தேகமில்லை” எனக் கூறிக் கொண்டே குங்குமத் தட்டெடுத்து வந்து அவன் முன்னே நீட்டினாள். சங்கர் அவளைப்பார்த்துக் கொண்டே, குங்குமத்தை எடுத்து நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு மீண்டும் ஒரு முறை அவளிடம், “வருகிறேன் பவளம் என்றான். அவளும் சரியென்று தலையசைத்தாள். அவன் அங்கிருந்து அகன்ற பிறகு அவளுக்கு அந்த அறை ஒரு இருளாகத் தெரிந்தது. தன் கண்களை அவனோடு காவலுக்கு அனுப்பி விட்டதைப் பின்னர்தான் அவளால் உணர முடிந்தது.
ஆரிச்சம்பட்டி வீரர்கள் சங்கரமலைக் கோட்டைக்கு எதிரே குதிரைகளில் அணிவகுத்து நிற்க, அங்கே பொன்னரும் சங் கரும் வந்தனர். அவர்கள் ஏறிச் செல்ல வேண்டிய குதிரை களில் ஒன்றில் வீரமலையும் மற்றொன்றில் வையம்பெரு மானும் ஏறிவந்து அவர்களுக்கு எதிரே நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினர். பொன்னரும் சங்கரும் குதிரைகளைத் தட்டிக் கொடுத்து விட்டு கம்பீரமாக ஏறி அமர்ந்தனர். போர் வீரர் களை உற்சாகப்படுத்தும் இசைக் கருவிகள் முழங்கின. போர் முரசங்கள் அதிர்ந்தன. பொன்னர் சங்கர் இருவரையும் பின்பற்றி ஆரிச்சம்பட்டி வீரர்கள் தங்கள் மண்ணைக் காத்திட விரைந்தனர்.
படை செல்லும் வழியைப் பார்த்தவாறு ராக்கியண்ணன், சின்னமலைக் கொழுந்து, குன்றுடையான், வீரமலை, வையம் பெருமான், மற்றும் சங்கரமலைக்கோட்டை வீரர்கள் நின்றிருந் தனர். தூசிப் புழுதியால் படை சென்ற வழி மறைந்து போயிற்று.
கைப்பற்றப்பட்ட ஆரிச்சம்பட்டியை மீட்பதற்குச் சங்கர மலைக் கோட்டையிலிருந்து படை புறப்பட்டு விட்டது என்ற செய்தி கேட்டு ஆரிச்சம்பட்டியை வசப்படுத்தியிருந்த மாந்தி யப்பன் கடுங்கோபம் கொண்டான். ஆரிச்சம்பட்டி நோக்கி வரும் அந்தப் படையை எதிர்த்து நொறுக்குவதற்குத் தனது தளபதிகளுக்கு கட்டளையிட்டான். ஆரிச்சம்பட்டி எல்லையில் இருபடைகளும் மோதிக்கொண்டன. பொன்னர் சங்கர் போர் புரிவதில் மட்டுமல்ல, போர்த் தந்திரத்திலும் மிகவும் வல்லவர்கள் என்பதைக் காட்டிக் கொண்டனர். எப்படியோ அவர்களது தலைமையில் வந்த போர் வீரர்கள் சிலர் ஆரிச்சம் பட்டியில் உள்ள சாதாரண பொதுமக்களைப்போல வேட மணிந்து ஆரிச்சம்பட்டிக்குள் நுழைந்து விட்டனர். அவர்களது வாக்குத் திறமையினால் ஆரிச்சம்பட்டிப் பொதுமக்களை எழுச்சி கொள்ளச் செய்தனர். வளநாட்டுப் படை வீரர்களின் கொடுமை கண்டு அஞ்சி நடுங்கி ஒடுங்கிக் கிடந்த பொதுமக்கள் ஆர்த் தெழுந்தனர். தங்களை அடிமை கொண்ட வளநாட்டு வீரர்களுக்கு ஊருக்குள் எவ்வளவு தொல்லை கொடுக்க முடியுமோ அவ் வளவு தொல்லைகள் கொடுத்தனர். வெளியிலிருந்து பொன்னர் சங்கர் தலைமையில் நடத்தப்படும் தாக்குதலையும் ஆரிச்சம்பட்டியில் திடீரென மக்கள் கொண்ட எழுச்சி காரண மாக விளைந்த தாக்குதலையும் சமாளிக்க முடியாமல் மாந்தி யப்பனின் படை தத்தளித்தது. பொன்னர் சங்கர் புயல் வேகத்தில் எதிரிப் படை வீரர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தினர். ஆரிச்சம்பட்டி நகர எல்லை, பொன்னர் – சங்கர் வசமாயிற்று. எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு, ஆரிச்சம்பட்டிக் கோட்டைக்குள் நுழைவதற்குப் பொன்னர் சங்கர் முன்னேறி வருகிறார்கள் எனக் கேள்வியுற்றதும் மாந்தி யப்பன் தனது படைகளுடன் கோட்டையிலிருந்து வெளியேற முடிவு செய்தான். பொன்னர் சங்கர் படைகளுடன் கோட் டைக்குள் நுழைவதற்கும், மாந்தியப்பன் தனது வீரர்களுடன் வெளியேறுவதற்கும் சரியாக இருந்ததால் அவன் தப்பித்துக் கொண்டான். ஆரிச்சம்பட்டியும் கோட்டை கொத்தளங்களும் மீட்கப்பட்டன. மாந்தியப்பன் தனது படைகளுடன் வளநாட்டுக்கு விரைந்தோடினான்.
சங்கருக்குப் போர்த்தினவு தீரவில்லை. மாந்தியப்பனை வளநாடு வரையில் விரட்டிச் சென்று வளநாட்டையும் கைப் பற்ற வேண்டுமென்ற ஆசை தோன்றியது. அதைப் பொன்ன ரிடம் சொன்னபோது பொன்னர் தயங்கினான்.
“தம்பி; வளநாட்டுப்படை மிகவும் வலிவுடையது. ஓரளவு படைவீரர்களுடன் மாந்தியப்பன் ஆரிச்சம்பட்டியை வளைத்த காரணத்தினால் இப்போது நம்மிடம் தோற் றோடியிருக்கிறான். அவன் மீண்டும் படைதிரட்டிக் கொண்டு இங்கு வருவான். அவனையும் வளநாட்டுப் படையையும் இங்கு எதிர்த்து முறியடிப்பதே நமக்கு சுல பம். அவன் கோட்டைக்குள் சென்று மாட்டிக் கொள்வது நல்லதல்ல!”
பொன்னரின் இந்த அறிவுரை சங்கரின் காதில் ஏறவில்லை.
“இல்லையண்ணா; நான் மறுத்துச் சொல்வதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எதிரிகள் அடிபட் டுப்போகும் போதுதான் மேலும் அடி கொடுக்க வேண் டும். இல்லாவிட்டால் பாம்பை அடித்து விட்டு விட்டது போலாகிவிடும். இதே வேகத்தில் வளநாட்டைத் தாக்கி அதனை நம் பிடியில் கொண்டு வரவேண்டும். இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது”
என்று சங்கர் பிடிவாதம் பிடிக்கவே; பொன்னரும் சிறிது நேரம் மறுத்துப் பார்த்து விட்டு பிறகு சங்கரின் திட்டத்துக்கு இணங்கினான்.
ஆரிச்சம்பட்டியை மீட்டதற்கான வெற்றி முழக்கம் அடங்கு வதற்குள்ளாக வளநாடு நோக்கித் தென்திசையில் பொன்னர் சங்கர் புறப்பட்டனர். ராச்சாண்டார் மலைத் தோல்வி ஆரிச்சம்பட்டித் தோல்வி இந்த இரண்டு நிகழ்ச்சிகளாலும் துவண்டு போயிருந்த வளநாட்டு வீரர்களை நம்பிப் பொன்னர் சங்கரை எப்படி எதிர்க்க முடியும் என்ற மந்திராலோசனை மாந்தியப்பனின் வளநாட்டு அரண்மனையில் நடந்தது. உடனே தலையூர்க்காளி மன்னனுக்கும், அங்கு தங்கியுள்ள செல்லாத் தாக் கவுண்டருக்கும் செய்தி அனுப்பி தலையூர்ப்படையை வள நாட்டுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்வதென முடிவெடுக் கப்பட்டது. அதுவரையில் பொன்னர் சங்கர் படையை வள நாட்டு எல்லையில் எதிர்த்துத் தாக்குப் பிடித்துக் கொண்டிருந் தால் போதுமானது என்றும் போர்த்தந்திரம் வகுக்கப்பட்டது.
பொன்னர் – சங்கர் ஆரிச்சம்பட்டிப் படையுடன் வளநாட்டு எல்லையை முற்றுகையிட்டனர். வளநாட்டு வீரர்கள் மிக மூர்க்க மாக எதிர்த்து நின்றனர். ஆனால் பொன்னர் சங்கரின் நேர டித் தலைமையில் போர் நடைபெற்றதால் அவர்கள் இருவரின் வலிமை, திறமை இவற்றுக்கு முன்னால் வளநாட்டுப்படை நிற்க முடியவில்லை. இருந்த போதிலும் வளநாட்டுப் படை யினர் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் பொன்னர் சங்கர் மிக எளிதாக அந்த எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றிட இயலவில்லை. ஆரிச்சம்பட்டி வீரர்களை நூற்றுக் கணக்கில் பலி கொடுக்க வேண்டியதாயிருந்தது. ஒரு கட்டத்தில் பொன்னர் சங்கரைப் பார்த்து, “தம்பி, நான் சொன்னதைக் கேட் டாயா? வளநாட்டுப் படை வீரர்களின் எண்ணிக்கைக்கும் நமது வீரர்களின் எண்ணிக்கைக்கும் எவ்வளவு வித்தியாசம் பார்!” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். கவலைப்படா தீர்கள் அண்ணா! இந்த வாள் வெற்றி மலர் சூடும்!” என்று கர்ச்சனை செய்தான் சங்கர்!
அப்போது ஆயிரக்கணக்கான வீரர்கள், குதிரைகள், தேர் கள் கொண்ட பெரும் படையொன்று வளநாடு நோக்கி விரைந்து வரும் ஒலி செவிகளைப் பிளந்தது.
“தம்பி, தலையூர்க்காளியின் படையாகத்தானிருக்கும். நாம் இப்பொழுது ஒரு புறம் வளநாட்டுப் படைக்கும் மற்றொரு புறம் தலையூர்ப்படைக்கும் இடையிலே சிக்கிக் கொண்டோம்!” என்று பொன்னர் சங்கரைப் பார்த்துச் சொன்னான். சங்கர் திகைப்புடன் அந்தப் படை வரும் திசையை நோக்கினான்.
28. புலிக் கொடியும் பொன்னர் நிபந்தனையும்
பெரும் புயலில் எழும்பிக் குதித்து கரைதாண்டி உயர்ந்து வரும் கடலின் பேரலைகளைப் போல் அந்தப் படை வந்து கொண்டிருந்தது. சங்கருக்கும் சரி பொன்னருக்கும் சரி அந்தப் படை யாருக்குரியது என்பதை எளிதில் தெளிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. அவர்களது யூகம் மட்டும் அது தலை யூர்க்காளியின் படையாக இருக்குமென்றே உணர்த்தியது. படையின் முகப்பில் வீரர்கள் தங்கள் கரங்களில் ஏந்திவந்த கொடிகளில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம் என்னவென்று தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அந்தப்படை தொலை வில் வந்து கொண்டிருந்தது. சங்கர், பொன்னரைப் போல் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. ஒரு துளி அச்சமும் இல்லா தவனாகப் பொன்னரை நோக்கிச் சொன்னான்:
“அண்ணா! நான் மட்டும் அந்தப்படைக்கு எதிரில் சென்று பார்க்கிறேன்.”
தம்பியின் வீரத்தையெண்ணித் தனக்குள் மகிழ்ந்து கொண் டான் பொன்னர் என்றாலும்; அதில் விவேகமிருப்பதாக அவ னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“சங்கர்! வந்துகொண்டிருப்பதோ எண்ணற்ற வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய சேனையாகத் தோன்றுகிறது. அதனை எதிர்கொண்டு பார்க்கிறேன் என்பது அறிவுடைமையாகாது! மீண்டும் சொல்கிறேன்; ஒருபுறம் வளநாட்டுப் படையிருப் பதை மறந்துவிடக் கூடாது. இப்போது புதிதாக வருகிற இந்தப் படையையும் வளநாட்டுப் படையையும் நாம் எப்படி சமா ளிப்பது என்பது குறித்து யோசித்து விரைவில் முடிவு எடுப் பதே நல்லது.”
பொன்னர் தடுத்துரைத்ததையும் கேளாது சங்கர் அவனைப் பார்த்து, ‘அண்ணா! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்! இதோ சில நொடிகளில் திரும்பி விடுகிறேன்” என்று கூறிக் கொண்டே ஓங்கிய வாளுடன் குதிரையைத் தட்டிவிட்டான்.
காற்றைக் கிழித்துக்கொண்டு புரவியில் செல்லும் தம்பி சங்கரின் துணிச்சலைப் பார்த்து வியந்த பொன்னர், அவனுக்கு எதிர்வரும் பெரும்படையினால் என்ன விபத்து நேருமோ எனக் கலங்கினான். அந்தச் சிறிது நேரத் தயக்கத்தைப் பயன் படுத்திக் கொண்டு வளநாட்டுப் படையினர் ஆரிச்சம்பட்டிப் படைமீது மேலும் மூர்க்கத்தனமாக மோதினர். அது கண்ட பொன்னர் வெகுண்டெழுந்து தனது தம்பியைப் பற்றிய கவலையை ஒதுக்கி வைத்துவிட்டு ஆரிச்சம்பட்டி வீரர்களை எழுச்சிகொள்ளச் செய்து, அவனே படைமுகப்பின் முன் னின்று வளநாட்டுப் படைகளைத் தாக்க முற்பட்டான்.
தனியொருவனாகக் குதிரையில் சென்ற சங்கர், எதிரில் வரும் படையின் முகப்பில் பறந்து கொண்டிருந்த கொடியின் சின்னத்தை அறிந்து கொள்ள எவ்வளவோ முயன்றும் முடிய வில்லை. குதிரைகளின் குளம்படிகள் கிளப்பும் புழுதிமண் டிலத்தில் அந்தக் கொடிகள் தெளிவாகத் தெரியவில்லை. அவன் சென்ற பாதையில் பாறையொன்று தென்படவே குதிரையுடன் சென்று அதில் மறைந்து நின்று பார்ப்பது உசிதமெனக் கருதினான். எதிரே வருவது தலையூர்க்காளியின் படையாக இருந்து, அந்த வீரர்களில் யாராவது தன்னைக் கண்டுவிட்டால் அந்த இடத்திலேயே தன்னைப் பொடிப் பொடியாக ஆக்குவதற்குத் தயங்கமாட்டார்கள் என்பது அவ னுக்குத் தெரிந்திருந்தும் அவனைப் பய உணர்வு தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தப்படை அவன் ஒளிந்திருந்த பாறையின் அருகே வந்து விட்டது. அப்போது அப்படை முகப்பில் பறந்துகொண்டிருந்த கொடி மட்டுமல்ல; படைக்குத் தலைமை வகித்து வந்தது யார் என்பதும் சங்கருக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது.
உடனே சங்கர், பாறையிலிருந்து குதிரையுடன் வெளிப் பட்டுப் பாதையின் நடுவே வந்து நின்றான்.
சோழநாட்டுப் படையின் புலிக்கொடி படைமுகப்பில் போர்க்கோலம்பூண்டு அமர்ந்திருப்பவரோ மாயவர்! ஆம்; தலையூர்க்காளியின் அமைச்சர் மாயவர்! ஆச்சரியத்தினால் அயர்ந்து போன சங்கர், குதிரையிலிருந்து இறங்காமலே, அவரை கம்பீரமாக நோக்கினான். மாயவர், தனது கரத்தை உயர்த்தி தன்னைத் தொடர்ந்து வரும் படையினரை நிறுத்தினார்.
“என்ன சங்கர்! ஏன் எங்களை தடுக்கிறாய்?” என்ற மாயவரின் கேள்வியில் மிடுக்கு இருந்தது.
“நண்பராக வருகிறீர்களா? பகைவராக வருகிறீர்களா? என் பதைத் தெரிந்து கொள்ளலாமா?’
சங்கர் விடுத்த எதிர்க்கேள்வியில் இளமையின் துடிப்பும் வீரமும் துள்ளியது.
“பகைவராக வருகிறோம் என்று சொன்னால் உன்னால் என்ன செய்ய முடியும்? என்னைத் தொடர்ந்து வரும் குதிரைப் பட்டாளம் காலாட்படை எம்மிடமுள்ள படைக்கலன்கள் இவைகளுக்கு ஈடுகொடுக்க உன்னாலும் உன் அண்ணன் பொன்னராலும் அல்லது உங்கள் தலைமையில் உள்ள ஆரிச் சம்பட்டிப் படையினராலும் முடியுமென்று நம்புகிறாயா?’
“போர்க்களம் புகுந்தபிறகு முடியுமா முடியாதா என்று யோசிப்பதே கோழைத்தனம் என்றுதான் எங்கள் குருநாதர் போதித்திருக்கிறார். இந்தப் பெரும்படையையோ அல்லது தங்களையோ எதிர்ப்பதா கூடாதா என்பது பற்றி நாங்கள் யாரிடமும் ஆரூடம் கேட்கமாட்டோம். தலையூர்க்காளியின் படைபலம் போதாமல் தங்கள் தலைமையில் சோழநாட்டுப் படையும் வளநாட்டைக் காப்பாற்ற வந்திருக்கிறது என நான் எண்ணிக் கொள்ளலாமா என்றுதான் கேட்கிறேன்.
“அதற்குப் பதிலாக இப்படி எண்ணிப் பாரேன்! வளநாட்டை மீட்பதற்காக நீயும் பொன்னரும் நடத்துகிற போருக்குத் துணை யாக சோழநாட்டு மன்னன் எனது தலைமையில் படைகளை அனுப்பியிருக்கிறான் என்று!”
“இது பெரும் புதிராக இருக்கிறது எனக்கு! தாங்களோ தலையூர்க்காளியின் அமைச்சர்! வளநாட்டை ஆள்பவர்களோ அந்தக் காளியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள்! அவர்களது வளநாட்டுக்கு ஆபத்து என்கிறபோது தலையூர்க்காளி அதில் தலையிடுவது இயற்கை! தாங்களோ தலையூர்க்காளியின் அமைச்சராக இருப்பவர்!”
“இருப்பவர் என்று சொல்லாதே! இருந்தவர் என்று சொல்! சங்கர்; நான் கூறுவதைக் கவனமாகக் கேள்! வளநாட்டு ஆட்சிக்காவலரும் தலையூர்க்காளியின் புரவலருமான செல் லாத்தாக் கவுண்டரின் பொல்லாத போதனைகளே காளிமன்ன னுக்கு புனித வேதமாகிவிட்டது. உங்களிருவரையும் மாரிக் கவுண்டன்பாளையத்தில் விடுத்துப் பிரிந்துசென்ற நான் நேராகத் தலையூர்தான் சென்றேன். எனது நோக்கம் தலையூர்க்காளி யைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்பது. ஆனால் திருந்தக்கூடிய அளவுக்கு பக்குவம் பெற்ற அவனது உள்ளத்தைச் செல்லாத்தாக் கவுண்டர் விஷப்பொய்கையாகவே மாற்றி விட்டார். குடையூரில் தலையூர்க்காளியின் படைகள் பிரவேசிக்க வேண்டுமாம் ஆரிச்சம்பட்டியும் தலையூருக்கு அடிமையாக வேண்டுமாம் – சங்கரமலைக்கோட்டையில் உள்ள வர்கள் – தாய் தந்தையர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப் பட்டுத் தலையூர் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படவேண்டுமாம் இத்தனை உத்திரவுகளையும் ஏற்று தலையூர்ப் பெரிய தளபதி பராக்கிரமன் படையெடுப்புகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டான். என்னுரையில் எதையும் ஏற்றுக்கொள்ளாத காளிமன்னனிடம் இனிப் பணி யாற்றுவதில் பயனில்லையென்று பதவி துறந்தேன். உறையூர்ச் சோழ மன்னனிடம் சென்றேன். உதவிப் படையைப் பெற் றேன். ஓடோடி வந்துள்ளேன். உங்களுக்குத் துணைநிற்பதற்காக!”
மாயவரின் சொற்களைக் கேட்ட சங்கர் நன்றிப்பெருக்குடன் குதிரையை விட்டு இறங்க முயன்றான். ஆனால் மாயவர் அவனைத் தடுத்து, வேண்டாம் சங்கர்! நாம் இங்கே தாம திக்கும் ஒவ்வொரு கணமும் தலையூர்க்காளியின் படைகள் இங்கு வந்து சேர்வதற்கு வழிவகுத்து விடுவதாக இருக்கும். எனவே விரைந்து செல்வோம் போர்முனைக்கு!” என்றார்.
“நான் முதலில் சென்று அண்ணனிடம் தகவல் தெரிவித்து விபரம் கூறுகிறேன்.’
என்றுரைத்த சங்கர், தனது குதிரையை முன்னிலும் பல மடங்கு வேகமாக வளநாட்டு எல்லையில் பொன்னர் போர் புரிந்து கொண்டிருக்கும் இடம் நோக்கிச் செலுத்தினான்.
“தம்பி சங்கர்; சோழநாட்டுப் பெரும்படை துணைக்கு வந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைந்து விடாதே! சோழமன்னன் என்ன நிபந்தனையோடு படையுதவி செய்துள்ளான் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்!”
என்று சங்கரின் உற்சாகத்திற்கு அணைபோட்டுத் தடுத்தான் பொன்னர்.
அதற்குள் மாயவர் தலைமையில் சோழநாட்டுப் படை அங்கு வந்து சேர்ந்தது. பொன்னர் மாயவருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்றான் என்றாலும் சங்கரைப்போல் அளவு கடந்த மகிழ்ச்சியுடையவனாக அவன் காணப்படவில்லை.
“தம்பி சங்கர் விபரமனைத்தும் சொன்னான். மிகவும் நன்றி. ஆனால் ஒரு சந்தேகம். அதனை நீக்காவிடில் சோழப்படையின் உதவியைப் பெறுவதில் நாங்கள் தயக்கம் காட்ட வேண்டி யிருக்கும்.’
வீரவடிவத்தில் சங்கரையும், விவேகத்தின் உருவமாகப் பொன்னரையும் கண்டுகளித்த மாயவர், தனது வழக்கமான புன்னகையை நெளியவிட்டுக் கொண்டே, என்ன பொன்னர் உனக்குச் சந்தேகம்? அதுவும் இந்த நேரத்தில்? ஆரிச்சம் பட்டியை மீட்டதோடு நிற்காமல் வளநாட்டையும் கைப்பற்ற வந்த நீங்கள் தலையூர்க்காளியின் வலிமைவாய்ந்த படைகளைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் வலியவரும் சோழப்படையின் உதவியைப் புறக்கணிக்கிற அளவுக்கு அப் படியென்ன சந்தேகம்?” என்று வினவினார்.
அருகே ஆரிச்சம்பட்டிப்படையும் வளநாட்டுப்படையும் மோதுகிற ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கிறது. பிணமாகும் வீரர்கள் எழுப்புகிற கடைசிக் குரல் காற்றில் கலந்து கொண் டிருக்கிறது. வாட்களோடு வாட்கள் ஈட்டிகளோடு ஈட்டிகள் உராயும் சப்தம் காதுகளைச் செவிடுபடச் செய்து கொண்டிருக் கின்றன. இறுதிவெற்றி வளநாட்டுக்குத்தான் கிட்டும் என்பதற் கான அறிகுறிகள். ஆரிச்சம்பட்டிப்படையினால் வளநாட்டுப் படையின் எதிர்ப்பைத் தாக்குப்பிடிப்பது எளிதல்ல என்ற நிலைமை. அந்தச் சூழலிலும் பொன்னர் அமைதியிழக்காமல் நிதானமாகப் பேசினான்.
‘சோழப்படையின் உதவியைப் பெற்று நாங்கள் வளநாட்டை செல்லாத்தாக் கவுண்டரின் ஆதிக்கத்திலிருந்து மீட்டுவிடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். அதற்குப்பிறகு, நாங்கள் சோழ மன்னனின் ஆதிக்கத்தில் அவருக்குக் கப்பம் கட்டுகிறவர்களாக வும் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாகவும் வள நாட்டில் ஆட்சி செலுத்த வேண்டியிருக்குமென்றால்; அந்த நிபந்தனையுடன் கூடிய படை உதவி எங்களுக்குத் தேவையில்லை. அதற்குப் பதிலாக நாங்கள் போரில் வீழ்வதே மேல்.”
பொன்னரின் உறுதி கண்டு மாயவர் மெய்சிலிர்த்துப் போனார். இருந்தாலும் பொன்னரின் உறுதியான உள்ளம் எவ்வளவு ஆழமுடையது என்பதை அறிய விரும்பியவர் போல மேலும் சில கேள்விகளை எழுப்பினார்.
“சோழமன்னரின் ஆதிக்கத்தில் வளநாடு இருக்க விரும்ப வில்லை என்கிறாய்; சரி! அப்படியானால் இது வரையில் வளநாடும் அதன் ஆட்சிக்காவலர் செல்லாத்தாக் கவுண்டரும் வேட்டுவமன்னன் தலையூர்க்காளியின் ஆதிக்கத்தில் இருப்பதை மறந்து விட்டாயா?”
பொன்னர் இந்தக் கேள்விக்கு ஒரு நொடிகூடத் தயங்காமல் பதில் அளித்தான்.
“வேட்டுவரில் தலையூர்க்காளியைப் போல ஆதிக்க உணர்வு கொண்டவர்களும் இருக்கிறார்கள். தங்களைப் போன்ற அன் பும் பரந்த மனப்பான்மையுமுள்ள பெரியவர்களும் இருக் கிறார்கள். கொடிய மனங்கொண்டவர் செல்லாத்தாக் கவுண்டர் என்பதால் கொங்குவேளாளர் குலத்துக்கே ஒரு கோடரிக் காம்பாக வாய்த்துவிட்டார். எங்கள் தந்தை குன்றுடையாரைப் போன்ற குணவான்கள் நிறைந்த கொங்குவேளிர் குலத்துக்கே ஒருகேடாக வந்த பிறந்த செல்லாத்தாக் கவுண்டர் வழியும் அவர் மகன் மாந்தியப்பன் வழியும் எங்கள் வழியாக இருக்க முடியாது. யாருக்கும் அடிமையாக இருந்து அரண்மனை வாழ்வு வாழ்வது செல்லாத்தாக் கவுண்டருக்கு விருப்பமான கொள் கையாக இருக்கலாம். தலையூர்க்காளியைவிட வலிமை வாய்ந்த அரசு சோழ அரசு எனினும் அதற்கு அடிமையாக வளநாடு வாழ வேண்டுமென்றால் அந்த நாட்டில் எங்களுக்கு வெற்றி தேவையில்லை. வீழ்ச்சியையே பெருமையாகக் கருதுவோம்!”
“அப்படியானால் வளநாட்டில் நீ விரும்புவது?”
“கொங்குவேளாளரின் தனியாட்சி எங்கள் தலைமையில் நடைபெற்றாக வேண்டும். அது எந்த நாட்டுக்கும் தலைவணங் காத ஆட்சியாக இருத்தல் வேண்டும்.
பொன்னரின் கம்பீரமானதும் சலனமற்றதுமான இந்தப் பதிலைக் கேட்ட மாயவர், அவனை ஆரத்தழுவிக்கொண்டு உச்சிமோந்தார்.
“உன் விருப்பம் போல் தனியாட்சி – எந்த நாட்டுக்கும் தலைவணங்காத ஆட்சி! உனது நிபந்தனையை ஏற்று சோழப் படை உதவி புரியத் தயார்! ஆனால் ஒரே ஒரு வேண்டு கோள்; நிபந்தனையல்ல – அதை நீங்களிருவரும் நிறைவேற்றிட வேண்டும்!
மாயவர் இருவீரர்களின் முகத்தையும் பார்த்தார். இதற்கும் அண்ணனே பதில் கூறட்டும் என்று கருதியவனாய் சங்கர் மௌனமாகவே நின்றான்.
“என்ன வேண்டுகோள்? சொல்லுங்கள்!” என்றான் பொன்னர்.
“வளநாட்டைக் கைப்பற்றிய பிறகு நீங்களிருவரும் சோழ மன்னர் தரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண் டும். வெற்றிவிழா விருந்தில் சோழமன்னர் தரும் விருதினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக இளஞ்சிங்கங்களான உங்களைச் சோழமன்னர் காண விரும்புகிறார்.”
மாயவரின் அந்த வேண்டுகோளைப் பொன்னர் ஏற்றுக் கொண்டான். மன்னரின் விருப்பம் நிறைவேற்றப்படுமென்றான். பிறகு பேச்சுக்கு இடமில்லாமற் போயிற்று. சோழன் அனுப் பிய படை ஆரிச்சம்பட்டிப் படையுடன் இணைந்து கொண்டது. மாயவர் ஒரு பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டார். பொன்னர் ஒருபுறமும் சங்கர் ஒருபுறமும் தலைமையேற்று வளநாட்டு எல்லை கடந்து கோட்டையைச் சூழ்ந்து கொண்டனர். தலை யூர்க்காளியின் படையினர் வளநாட்டில் பொன்னர் – சங்கர் தாக்குதல் நடைபெறக்கூடும் என்பதைச் சற்றும் எதிர்பார்க்காத காரணத்தால் ஆரிச்சம்பட்டிக்கு ஒரு சிறுபகுதி அனுப்பப்பட்டது போக வேறு இரு பெரும் பகுதி வீரர்கள் குடையூர் நோக்கியும், சங்கரமலைக்கோட்டை நோக்கியும் சென்று விட்டனர். அத னால் வளநாட்டை நெருங்கிவிட்ட பொன்னர் சங்கரையும் சோழப்படையுடன் வந்துவிட்ட மாயவரையும் எதிர்த்து வாகை சூடுகிற அளவுக்குத் தலையூர்ப் படையின் எண்ணிக்கை அமைய வில்லை. ஆரிச்சம்பட்டியிலிருந்து மாந்தியப்பன் விரட்டப் பட்ட காரணத்தால் தலையூர்ப்படை அங்கும் தனது வலிமை யைக் காட்டமுடியாமல் வளநாடு வந்து சேர்ந்தது. அது வரு வதற்குள் பொன்னர் – சங்கர் சோழப்படையுடனும் ஆரிச்சம் பட்டிப் படையுடனும் வளநாட்டுக் கோட்டைக்குள் புகுந்து விட்டனர். கோட்டையில் பறந்த வளநாட்டுக் கொடிமரம் அடி யோடுவெட்டிசாய்க்கப்பட்டது.உயிர் தப்பினால் போதுமென்று மாந்தியப்பன் சில வீரர்களுடன் சுரங்கப்பாதையொன்றின் வழியாகக் கோட்டையிலிருந்து வெளியேறி வளநாட்டை விட்டே ஓட்டம் பிடிக்கவேண்டியதாயிற்று. இத்தனையும் முடிந்தபிறகு அங்குவந்து சேர்ந்த தலையூர்ப்படை எண்ணிக் கையில் மிகக் குறைவாக இருந்தபடியால் – எதிர்பார்த்ததை விட பெரும்பலத்துடன் வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருந்த பொன்னர் – சங்கர் இருவரையும் எதிர்த்து முன்னேற முடியாமல் திரும்பிச் சென்றது.
வளநாடு வசப்பட்டது என்ற பெருமகிழ்ச்சி பொங்கிட பொன்னரும் சங்கரும் மாயவருடன் அந்த மாளிகைக்குள் நுழைந்தனர்.
மாளிகையின் எந்த அறையை நோக்கினும் அவிழ்ந்து கிடக் கும் ஆரணங்குகளின் ஆடைகள், கவிழ்ந்து கிடக்கும் மதுக் கலயங்கள் இவைகளே பெருங்காட்சியாக இருந்தது. அனைத் தும் அரை நாழிகைக்குள் தூய்மைப்படுத்தப்பட வேண்டு மென மாயவர் ஆணை பிறப்பித்தார். ஆரிச்சம்பட்டி வீரர் களும் சோழப்படை வீரர்களும் மாயவரின் ஆணையேற்று மாளிகையில் நிறைந்திருந்த அத்தகைய மாசுகளை அகற்றினர்.
கோட்டை கொத்தளம் – அரண்மனைப் பகுதிகள் அனைத் திலும் பொன்னர் சங்கர் தமது வீரர்களைக் கொண்டு காவலைப் பலப்படுத்தினர். வளநாட்டு வீரர்கள் பலர் பொன் னர் – சங்கர் முன்வந்து வீழ்ந்து தங்களை மன்னித்தருளுமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டனர்.
வளநாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கோட்டை முகப் பில் குழுமினர். அநியாய ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட மகிழ்ச்சியை விழாவாக எடுத்தனர். எங்கணும் “பொன்னர் . சங்கர் வாழ்க!’ என்ற முழக்கம்!
இருமருங்கிலும் பொன்னர் -சங்கரை அணைத்தவாறு மாய வர் கோட்டைமுகப்பின் உச்சியில் வந்து நின்றார். குழுமியிருந்த மக்கள் வான்முட்ட வாழ்த்தொலியெழுப்பினர். மாயவர் அனைவருக்கும் கேட்கும்படியாக ஓங்கிய குரலில் பேசினார்.
“அநீதி – அராஜகம் – பழிவாங்கும் தன்மை – அடிமை மனப்பான்மை – காட்டிக் கொடுக்கும் கயமை – கொடுங்கோன்மை – எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு இன்று முதல் உண்மையான சுதந்திர ஆட்சி வளநாட்டில் மலர்கிறது. இந்த ஆட்சியைக் கட்டிக்காக்க இருக்கும் இணையற்ற வீரர்கள் இதோ! இவர்களை உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்!”
மாயவர் வாழ்த்துடன் பல்லாயிர மக்களும் தமது வாழ்த்துக் களையும் இணைத்தனர். பொன்னர் சங்கர், தங்கள்பால் அன்புமழை பொழியும் வளநாட்டு மக்களைப் பார்த்துக் கைகளை அசைத்து நன்றியுணர்வை வெளிப்படுத்தினர்.
அப்போது கோட்டைக்குள்ளே ஒரு குதிரை மிக வேகமாக வந்து நுழைந்தது. அதைக் காவலர்கள் தடுத்து நிறுத்துவதை பொன்னர் சங்கர் பார்த்து விட்டனர். குதிரையில் இருப்பது வையம்பெருமான் என்பதறிந்து உள்ளே அனுமதிக்குமாறு உத்திரவிட்டனர். உத்திரவை எடுத்துச் சென்ற வீரன் காவலர் களிடம் தகவலைக் கூறி வையம்பெருமானை உள்ளே அழைத்து வந்தான்.
வையம்பெருமான் கொண்டு வந்த செய்தி, பொன்னர் சங்கரை ஆவேசத்தின் உச்சகட்டத்திற்கே தூக்கிச் சென்றது.
29. அம்பு மழையில் ஆசான்
“அமராவதி ஆற்றைக் கடந்து வந்த தலையூர்ப்படை குடை யூரை முற்றுகையிட்டுக் கைப்பற்றிக் கொண்டதோடு, குடையூர்; தலையூரின் ஆட்சிக்குக் கீழே வந்துவிட்டது என்பதை அறிவிக் கத் தலையூர்க் காளி மன்னனின் கொடியும் பறக்க விடப்பட் டுள்ளது. தலையூர்ப் படைக்குத் தலைமையேற்றுள்ள தளபதி பராக்கிரமன் அடுத்ததாக சங்கரமலைக்கோட்டை நோக்கி வரு கின்றான். காளி மன்னனின் கட்டளைப்படி சங்கரமலைக் கோட்டையில் உள்ள குன்றுடையார் குடும்பத்தினரையும், ஆரிச்சம்பட்டி குடும்பத்தினரையும் கைது செய்வதே பராக்கிர மனின் குறிக்கோள்!’
வையம்பெருமான் வாயிலாக இச்செய்தி கிடைத்ததும் விலாப்புறத்தில் கணை பாய்ந்த சிங்கம் கர்ச்சனை செய்வது போல சங்கர் முழக்கமிட்டான்:
“இப்போதே நாம் படையுடன் சங்கரமலைக்கோட்டைக்குச் செல்ல வேண்டும். பராக்கிரமனைப் பிடித்து கோட்டைக் கொடி மரத்தில் கட்ட வேண்டும். ஆணையிடுங்கள் அண்ணா!” எனத் துடித்த சங்கரின் உணர்ச்சிக்கு இம்மியளவும் குறைந்த தல்ல பொன்னரின் உணர்ச்சியென்றாலும் கூட அந்த உணர்ச் சியை ஓரளவு கட்டுப்படுத்திக் கொண்டு அவன் சிந்திக்கத் தொடங்கினான். பொன்னர் சிந்திக்கும் போதெல்லாம் அவ னது நெற்றியில் கோடுகள் விழுகிற அழகைக் கண்டு பூரித்த வன் சங்கர். இப்போது பூரிப்பு வெளிப்படவில்லை. மாறாக சங்கர் பொறுமையிழந்து காணப்பட்டான். அவனது மனோ நிலையைப் புரிந்து கொண்ட மாயவர்; “சற்று அமைதியாக இரு சங்கர்! அண்ணனின் தயக்கத்துக்கு ஏதாவது அர்த்த மிருக்கும். இந்தத் தயக்கம்; செய்கிற காரியத்தைச் செம்மை யாகச் செய்ய வேண்டுமென்பதற்கானதே தவிர அச்சத்தின் விளைவல்ல!” என்று கூறினார்.
பொன்னரும் தம்பியை அருகழைத்து ‘ஆமாம் தம்பி! மாய வர் கூறுவதுதான் சரி! இப்போதுதான் ஆரிச்சம்பட்டியில் போர் நடத்தி முடித்து விட்டு நமது வீரர்கள் களைப்பாறக் கூட நேரமின்றி வளநாட்டுப் போரையும் முடித்திருக்கிறோம். இரண்டிலும் வெற்றிவாகை சூடியிருக்கிறோம். என்றாலும் உட னடியாகத் தலையூர்க் காளியின் தாக்குதலை எதிர்த்து முறி யடிக்க சங்கரமலைக்கோட்டைக்குப் போவதென்றால் அதற் கான திட்டத்தை எப்படி வகுப்பது என்று தான் யோசிக் கிறேன். நமது படை முழுவதும் சங்கரமலைக்குப் போவதென் றால் வளநாட்டுக் கோட்டையின் பாதுகாப்பை எப்படிக் கவ னிப்பது என்பதும் பெரிய பிரச்சினையல்லவா? அதனால் நீ இங்கேயிருந்து வளநாட்டைப் பாதுகாத்துக் கொள்! உனக்குத் துணையாக மாயவர் இருப்பார்! சோழப் படைகளும் இருக் கும்! நான் ஆரிச்சம்பட்டிப் படையுடன் சங்கரமலைக்கோட் டைக்குச் சென்று பராக்கிரமனின் படையை எதிர் கொள் கிறேன்” என்று பொன்னர் கூறியதை சங்கர் ஏற்றுக் கொள்ள வில்லை.
“அண்ணா! நம்மில் ஒருவர் பராக்கிரமனின் படையை எதிர்த்து முறியடிக்கச் செல்ல வேண்டும் என்பதை ஏற்கிறேன். அந்த ஒருவன் நானாக இருக்க வேண்டும். தாங்கள் இங்கி ருந்து வளநாட்டுப் பரிபாலனத்தையும் பாதுகாப்பையும் கவ னிக்க வேண்டும். பராக்கிரமனை வென்று, தலையூர்ப் படையை புறமுதுகிடச் செய்து விட்டு தாய் தந்தையையும் நமது குடும்பத் தினரையும் வளநாட்டுக்கு அழைத்து வரும் பணியை என் பொறுப்பில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
சங்கரின் இந்த வேண்டுகோளில் உறுதியும் இருந்தது. அண் ணனிடம் காட்டும் உருக்கம் மிகுந்த பணிவும் இருந்தது.சங் கரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுமாறு மாயவரும் பொன்னரை வலியுறுத்தினார். பொன்னருக்கோ தம்பியைத் தனியாக அனுப்புவதில் விருப்பமில்லை. சங்கர் ஒரு காட் டாற்று வெள்ளம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் போர் முனையில் புகுந்திடும் இயல்பு கொண்டவன். தலையூர்க் காளி யின் படையினர் ஏற்கனவே பெற்றுள்ள தோல்வியின் காரண மாக வெறி கொண்டு தாக்குவர். அதில் சங்கரையே இழந்து விட நேரிட்டால்? அதைப் பொன்னரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதனால்தான் சங்கருக்குப் பதிலாகத் தானே படை நடத்திச் செல்ல பொன்னர் விரும்பினான். உடன்பிறப்பின் பாசப் பெருக்கைப் புரிந்து கொண்டிருந்த தம்பி சங்கரும்; தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அண்ணனின் உயிரைப் பற்றியே கவலைப்பட்டான்.
“யார் படை நடத்திச் செல்வது? என்பதில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நேரத்தைக் கடத்தி விட்டால்; அதற்குள் பராக்கிரமன் சங்கரமலைக்கோட்டையை முற்றுகை யிட்டு விடக் கூடும். விரைவில் ஒரு முடிவு எடுங்கள்!” என்று மாயவர் அவர்களைத் துரிதப்படுத்தினார்.
“தாங்களே ஒரு முடிவு சொல்லுங்கள்!” என்று பொன்னர் மாயவரைக் கேட்டான்.
“எதற்கு வம்பு? திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்து விட லாமே! என்ற மாயவரின் யோசனை ஏற்கப்பட்டது. இரண்டு ஓலைகளில் மாயவரே பெயர்களை எழுதி திருவுளச் சீட்டு தயாரித்தார். பொன்னரும் சங்கரும் தங்கள் பெயரே வர வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டனர். மாயவர் அந்தச் சீட்டுகளைக் குலுக்கிப் போட்டு வையம்பெருமானை விட்டு எடுக்கச் சொன்னார். இரண்டு சீட்டுகளில் ஒன்றை வையம்பெருமான் எடுத்தான். அதை வாங்கி மாயவர் பிரித் தார். பிரித்துப் படிக்கும் வரையில் பொன்னருக்கும் சங்க ருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. மாயவர் உரக்கப் படித் தார். சீட்டில் சங்கர் பெயரே வந்தது. அண்ணா!” என்று உணர்ச்சி பொங்கப் பொன்னரைச் சங்கர் தழுவிக் கொண் டான். பொன்னரின் கண்கள் கலங்கின.
பொன்னரைப் பார்த்து மாயவர், “ஆறுதலாக இரு! தம்பி யைப் பற்றி உனக்குக் கவலை தேவையில்லை. சங்கருடன் நானும் செல்கிறேன். என்னுடன் சோழ நாட்டுப் படையில் ஒரு பகுதியும் வருகிறது” என்றார். அதன் பிறகு பொன்னர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
சங்கரும் மாயவரும் வையம்பெருமானும் முன் வரிசையில் குதிரைகளில் அமர்ந்து வழி நடத்தப் படை புறப்பட்டது சங் கரமலையை நோக்கி!
வளநாட்டிலிருந்து சங்கரமலைக்குப் போய்ச் சேரும் தொலை வும், குடையூரிலிருந்து சங்கரமலைக்குப் போய்ச் சேரும் தொலை வும் ஏறத்தாழ ஒன்றேதான்! இருந்தாலும் கூட, குடையூரில் தலையூர் கொடியை நாட்டி விட்டு தளபதி பராக்கிரமன் சங்கரமலையை நெருங்குவதற்கு முன்பு சங்கர் தலைமையில் சென்ற படைகள் அங்கு போய்ச் சேர நேரம் போதுமானதாக இல்லை.
சங்கரமலைக்கோட்டையும் அந்தக் கோட்டையிருக்கும் சிறிய நகரமும் பராக்கிரமனின் படையால் சூழப்பட்டு விட்டது. கோட்டைக்குள்ளே தாமரைநாச்சியார் சிலம்பாயி இருவரின் பாதுகாப்புடன் முத்தாயி, பவளாயி, அருக்காணித் தங்கம் அவளது தோழி குப்பாயி ஆகியோரை இருக்கச் செய்து விட்டு ராக்கியண்ணனும், குன்றுடையானும் சின்னமலைக் கொழுந் தும் போர்க்கோலம் பூண்டு தலையூர்ப் படையுடன் மோதுவதற் குத் தயாராயினர்.
எவ்வளவு தொலைவிலிருந்தும் வில்லில் அம்புகளைப் பூட் டிக் குறி பார்த்து எதிரிகளைக் கொல்லுவதில் தலையூர் வீரர் கள் திறமைசாலிகள். அந்த வில் வீரர்களை சங்கரமலைக் கோட்டை முகப்பிலிருந்து எதிர்த்தவர்களிடம் ஈட்டி, வாள் போன்ற படைக்கலன்கள்தான் அதிகம்! அவற்றை வைத்துக் கொண்டே தலையூர்ப்படையை சமாளித்துப் பார்த்தனர். இரு புறத்திலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் பிணங்களாகச் சாய்ந் தனர். காயம்பட்ட வீரர்கள் கதறிக்கொண்டே விழும் ஒலி அந்தக் கோட்டைக்குள்ளே எதிரொலித்தது. அந்தப்புரத்தில் அடைபட்டுக் கிடந்த தாமரைநாச்சியார், எந்த நேரத்திலும் அங்குள்ள பெண்களுக்கு ஆபத்து நேரக் கூடும் என்ற ஜயப் பாட்டுடன் உருவிய வாள் ஒன்றுடன் அவர்களுக்குப் பாது காப்பாக நின்று கொண்டிருந்தாள்.
தலையூர்ப் படை சங்கரமலைக் கோட்டையை மிக வேகமாக நெருங்கி வளைத்துக் கொண்டிருக்கும் போது தளபதி பராக் கிரமன் தனது படை வீரர்களின் பக்கம் திரும்பி, கையமர்த்தி நிறுத்தி விட்டு அவன் மட்டும் ஒரு குதிரையிலமர்ந்து கையில் ஓங்கிப் பிடித்த வாளுடன் தனியாகக் கோட்டை முகப்புக்கு வந்தான். ராக்கியண்ணன், குன்றுடையான், சின்னமலைக் கொழுந்து ஆகிய மூவரும் அவனது செயலுக்கு அர்த்தம் புரியா மல் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். பராக்கிர மன் கம்பீரமான தோரணையில் பேசினான்.
“உங்கள் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லாமல் இந்தப் போரை முடிக்க விரும்புகிறேன். தலையூர் மன்னன் எனக்கு ட்டுள்ள ஆணையை நிறைவேற்றுவதே என் லட்சியம்! அதன் படி குடையூர் கைப்பற்றப்பட்டு விட்டது. அடுத்ததாக உங்கள் அனைவரையும் கைது செய்து தலையூருக்கு அழைத்துச் செல்ல வேண்டும். உங்களையெல்லாம் உயிரோடு தலையூருக்கு அழைத் துச் செல்ல வேண்டுமென்பதே என் விருப்பம். என்ன சொல் கிறீர்கள்?’
போரில் தோற்றுப் போய் கையில் ஆயுதங்கள் ஏது மின்றி சரணாகதி அடைவதற்குத் தயாராக இருப்பவர்களைப் பார்த்துப் பேசுவது போன்ற ஆணவமும் அலட்சியமும் பராக் கிரமனின் ஒவ்வொரு வார்த்தையிலும் பொதிந்திருப்பதை யுணர்ந்த குன்றுடையான் கோபம் கொப்பளிக்க “பேசாதே நிறுத்து!” என்று கத்தினான். அப்படிக் கத்தியவன் தலையூர் தளபதியிடம் தனது குதிரையைத் தட்டிவிட்டுக்கொண்டு வந்து நின்றான். வெகுளியென்றும் மசச்சாமி என்றும் அழைக்கப் படும் குன்றுடையானா இவ்வளவு துணிச்சலுடன் தன்னருகே வந்து நிற்கின்றான்? அவனா தன்னைப் பார்த்து, “பேசாதே நிறுத்து என்று ஆணையிடுகின்றான்? என்ற ஆச்சரியம் பராக்கிரமனை ஒரு உலுக்கு உலுக்கியது.
“தலையூர்த் தளபதி பராக்கிரமா! எங்களைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது உங்கள் மன்னனுக்கு?”
குன்றுடையானின் இந்தக் கேள்விக்குப் பராக்கிரமனால் விளக்கமளிக்க முடியவில்லை. அதனால் அவன் ஒரே வரியில் பதில் அளித்தான்:
“இந்தக் கேள்வியை எங்கள் மன்னரிடமே நேரில் கேட் கலாம்!”
தளபதியளித்த பதிலுக்கான பொருளைக் குன்றுடையான் எளிதில் புரிந்து கொள்ளவில்லை.
“ஓகோ! உங்கள் மன்னன் இப்போது இங்கே வரப் போகி றானா?” என்று கேட்டு, ‘மசச்சாமி’ என்று பட்டத்துக்கு எத் துணை பொருத்தமானவன் என்பதை நிரூபித்துக் கொண்டான்.
“நீங்கள் போர் செய்து மாண்டுவிடாமல் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு உங்கள் குடும்பத்தாருடன் தலையூருக்கு வருவீர்களேயானால் அங்கே எமது மன்னன் உங்களைக் கைது செய்ததற்கான காரணத்தைக் கூறுவார் என்கிறேன். இது கூடவா புரியவில்லை” எனச் சொல்லி, தளபதி பராக்கிரமன் கேலி யாகச் சிரித்தான். குன்றுடையான், ராக்கியண்ணனையும் சின்னமலைக்கொழுந்தையும் திரும்பிப் பார்த்து, “தளபதி பராக்கிரமன் கூறுவது வேடிக்கையாக இல்லை?” என்று கேட் டுக் கொண்டே அவர்களருகே வந்தான். “கைது செய்வதாம்! அதற்கு நாமும் கைகளை நீட்டுவதாம்! நான் நல்லவனாக இருப்பதாலேயே வல்லவனாக இருக்க மாட்டேன் என்று தலையூர்க்காளியும் அவன் தளபதியும் எண்ணி விட்டார்களே!’ என்று கூறி குன்றுடையான் குலுங்கக் குலுங்கச் சிரித்தான்.
“உங்களோடு விவாதித்துக் கொண்டிருக்க எனக்கு நேர மில்லை. என் மன்னரது ஆணையை நிறைவேற்ற வேண்டும். இப்போது கைதாக ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?”
சீறினான் தலையூர்த் தளபதி! குன்றுடையானின் மீசைகள் துடித்தன. அவன் கையிலிருந்த வாளின் பிடியை மேலும் இறு கப் பிடித்துக் கொண்டான்.
“என் பிணத்தையும் என் குடும்பத்தார் பிணங்களையும் வேண்டுமானால் கைது செய்து கொண்டு போ!’ என்று குன்றுடையான் செய்த முழக்கம் இருபுறமும் நின்ற படை வரி சையில் எதிரொலித்தது. இவ்வளவு நேரம் பராக்கிரமனும் குன்றுடையானும் பேசியதைக் குமுறும் நெஞ்சத்துடன் பொறு மையாகக் கேட்டுக் கொண்டிருந்த ராக்கியண்ணன் தலையூர்த் தளபதியை ஏற இறங்கப் பார்த்தார். வைரம் பாய்ந்த பனை மரம் போன்ற வலிவான உடல். நெருப்புப் பொறிகளைக் கக்கிக் கொண்டிருக்கும் கண்கள். பாறைகளிரண்டைப் பெயர்த் தெடுத்துப் பொருத்தியது போன்ற தோள்கள். உதடுகளின் மேலே இரண்டு கட்டாரிகளை வைத்தது போல் மீசை. உயர்ந்து வளர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் குதிரையே கூட அவ னைத் தாங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு பார்வையிலேயே தளபதி பராக்கிரமனின் வலிமையை முழு மையாக உணர்ந்து கொண்ட ராக்கியண்ணன் அவனிடம் பேச் சுக் கொடுத்தார்:
“தலையூர்த் தளபதியே! எங்களையெல்லாம் கைது செய்து கொண்டுவர வேண்டும் என்பதுதானே உனது மன்னன் விருப்பம்?”
“உங்களைக் கைது செய்வதற்கு மாரிக்கவுண்டன்பாளையம் செல்ல வேண்டுமேயென எண்ணியிருந்தேன். அந்த வேலை யும் இல்லாமற் போய் விட்டது.”
மிகவும் நன்றி! என்னையும் சேர்த்துத்தான் எங்களை யெல்லாம்” என்று குறிப்பிட்டேன். நாங்கள் கைதாவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் ஒன்று; தலையூர்க் குடும் பத்து இளைஞர்களுக்கு; ஏன் உனது மன்னன் உட்பட பல ருக்கு போர்ப் பயிற்சி அளித்த பாரம்பரியத்தில் வந்தவன் நான்! எனவே என்னைக் காட்டிலும் ஒரு பெரிய வீரன் என் னைக் கைது செய்வதாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைந் திருப்பேன்!’
“உமது கேலியும் கிண்டலும் எனக்குப் புரிகிறது. உம்மைக் காட்டிலும் ஒரு பெரிய வீரன் உமது எதிரில் நிற்கிறான் என் பதை இன்னமும் நீர் உணர்ந்து கொள்ளாதது பெரிய வேடிக்கை!”
“வேடிக்கையாகக் கூட உன்னை ஒரு வீரன் என்று வர்ணித் துக் கொள்ளாதே! என்னைக் காட்டிலும் நீ பெரிய வீரன் என்பது உண்மையானால் அதை இப்போதே இங்கேயே நிரூ பித்துக் காட்ட வேண்டும்.நிரூபித்தால் நாங்கள் அனைவருமே உன் பின்னால் கை கட்டிக் கொண்டு கைதிகளாகத் தலையூர் வருவதற்குத் தயார்!”
“எப்படி நிரூபிக்க வேண்டும்?”
”நீ கொண்டு வந்துள்ள பெரிய படையும், இங்குள்ள சிறிய படையும் மோதுவதால் உனது வீரத்துக்குப் பெருமையில்லை. என்னை விட நீ வீரத்தில் சிறந்தவனா என்ற கேள்விக்கு விடையளிக்க உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். நாம் இரு வரும் தனியாக மோதிப் பார்ப்போம். அதாவது மற்போர் புரிவோம். நான் உன்னிடம் தோற்று விட்டால் எங்கள் அனை வரையும் கைது செய்து கொண்டு போக உனக்கு தடையின்றி அனுமதி அளித்ததாக அர்த்தம்! என்ன சொல்லுகிறாய்?”
“ராக்கியண்ணரே! என் உடல் வலிவையும் உள்ளத்து உறுதி யையும் ஈசற்பூச்சியின் சிறகுகள் என்று கருதி விட்டீர்! என் னிரு கரங்களும் ராஜாளிப் பறவையின் இறக்கைகள் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறேன். உமது நிபந்தனையை ஏற்க நான் தயார்!”
தலையூர்த் தளபதி தனது கையிலிருந்த ஆயுதங்களைக் கீழே வீசி விட்டுக் குதிரையிலிருந்து குதித்து மற்போருக்கு ஆயத்த மாகத் தோள் தட்டி நின்றான். ராக்கியண்ணனும் தன்னிட மிருந்த வாள், ஈட்டி, கேடயம் ஆகியவற்றைக் கீழே போட்டு விட்டு மற்போருக்கு முன் வந்தார். குன்றுடையானும் சின்ன மலைக்கொழுந்தும் ராக்கியண்ணன் பராக்கிரமனுடன் மோது வதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு அசைவற்று நின்றனர். கோட்டையைக் காத்து நின்ற படை வரிசையும், எதிரே கோட்டையைத் தாக்க வந்த தலையூர்ப் படை வரிசை யும்; திடீரென அங்கு அமைந்து விட்ட அந்த மற்போரைக் கவனிக்கத் தொடங்கின.
இருமலைகள் மோதுவது போல பராக்கிரமனும் ராக்கி யண்ணனும் மோதினர். முற்றாத இளம் வயதுடைய பராக்கிர மன்; முதிர்ந்து தோன்றும் ராக்கியண்ணன் மீது மான் குட்டி போலத் துள்ளிப் பாய்ந்து புலி போலக் கட்டிப் புரண்டான். இப்படிப் பல்வேறுவிதமான மற்போர் முறைகளைப் பலருக் குக் கற்றுத் தந்த ஆசானல்லவா ராக்கியண்ணன்; அதனால் அவனது துள்ளலையும் துடுக்குத் தனத்தையும் அவரால் சமா ளிக்க முடிந்தது. இருவரும் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து உருட்டிட முனைந்த போது; நாட்டுச்செக்கு சுழலும்போது எழும் ஓசையை நினைவுபடுத்தியது.
இப்படியோர் போர் கோட்டை முகப்பில் நடைபெறுவதைக் கேள்வியுற்று கோட்டைக்குள்ளிருந்து தாமரைநாச்சியார், சிலம் பாயி, முத்தாயி, பவளாயி, அருக்காணித் தங்கம், குப்பாயி ஆகியோர் பரபரப்புடன் ஓடிவந்து பலகணி வழியாகப் பார்வையைச் செலுத்தி பதற்றமுடன் நின்று கொண்டிருந்த னர். எத்தகைய நிபந்தனையுடன் அந்த மற்போர் நடைபெறு கிறது என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டதால் ராக்கி யண்ணன் வெற்றியடைய வேண்டுமென்பதில் பேரார்வம் காட் டினர். அவருக்குக் கிடைக்கும் வெற்றியில்தான் தங்களின் எதிர் கால வாழ்வே இருக்கிறது என்பதால் செல்லாண்டியம்மனுக் குப் பிரார்த்தனை செய்து கொண்டு மற்போரை உற்று நோக் கியவண்ணமிருந்தனர். ராக்கியண்ணனின் லாவகமான பிடி யில் சிக்கிக் கொண்ட பராக்கிரமன் தரையில் விழுந்து விடக் கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்து, இறுதியில் அந்தப் பிடியைத் தளர்த்தி அவரை உதறிவிட்டு சிலிர்த்து நின்றான். அப்போது குன்றுடையானும் மற்றவர்களும் அதிர்ச்சியடைந் தனர். ஆனால் ராக்கியண்ணன் கடுகளவுகூட மனந்தளர்ந்தவ ராகக் காணப்படாமல் மதயானையொன்று அடிபட்ட வேகத் தில் பிளிறுவதைப் போல ஒலியெழுப்பிக் கொண்டு பராக்கிர மன் மீது பாய்ந்தார்.
அவர் பாய்ந்த வேகத்தில் அவரைப் பந்தாடி விட வேண்டு மென்று திட்டமிட்டு பராக்கிரமன் உயர எழும்பி அவர் தலைக்கு நேராக கால்களை உயர்த்தி, கால்களாலேயே அவ ரது கழுத்தைக் கத்தரிப்பிடி போட்டு நசுக்கிவிடத் தீர்மானித் தான். அவ்வாறே ராக்கியண்ணனின் கழுத்து அவனது இரு கால்களுக்கிடையே சிக்கிக் கொள்ள இருந்தது. இதை எதிர் பார்த்தவர் போல அவர், தனது பலம் பொருந்திய கைகளைத் தனது கழுத்தருகே கோத்து வைத்துக் கொண்டு, ராக்கியண்ண னின் கால்கள் கழுத்தைப் பின்னிட முனைந்த போது; அவை களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு சுழற்றத் தொடங்கினார். ராக்கியண்ணனிடம் வசமாக மாட்டிக் கொண்ட பராக்கிரமன் ராட்டினம் சுழல்வது போலக் கரகரவெனச் சுழன்றான். இன் னும் ஓரிரு விநாடிகள்தான் பாக்கி; ராக்கியண்ணன், பராக்கிர மனை வயலோரக் களத்தில் கதிர் அடிப்பது போல அடிக்கப் போகிறார் என்பதைத் தலையூர்ப்படை வீரர்கள் உணர்ந்து கொண்டு பதைத்துப் போயினர். அவர்கள் எதிர்பார்த்தபடியே பராக்கிரமனை ராக்கியண்ணன் பூமியில் ஒரு மோது மோதி னார். அந்த மோதலில் அவன் போட்ட சப்தம் பயங்கரமாக இருந்தது. அடுத்து ஒரு சுழற்சி! அதைத் தொடர்ந்து இன் னொரு மோதல்! மேலும் ஒரு சுழற்சியையும் மோதலையும் பராக்கிரமன் தாங்க மாட்டான்; பிணமாகி விடுவான் என்பது எல்லோருக்கும் தெளிவாகி விட்டது.
அந்த நேரத்தில் தலையூர்ப் படையின் துணைத் தளபதிகள் தங்கள் வீரர்களைப் பார்த்து கையை அசைத்தனர். வீரர்கள் தயாராயினர். துணைத் தளபதிகள் தங்கள் வில்லில் கணை களைப் பூட்டி ராக்கியண்ணன் மீது பாய விட்டனர். தலை யூர்ப்படை வீரர்கள் அனைவரது வில்லிலிருந்தும் கொடிய கணைகள் பறந்தன. அத்தனை கணைகளும் ராக்கியண்ணன் உடலில் தைத்தன. ஒன்று, இரண்டு, பத்து, நூறு எனக்கணைகள் தாக்கிடவே ராக்கியண்ணன் நிலை தடுமாறினார். அவர் கெட்டியாகப் பிடித்துச் சுழற்றிக் கொண்டிருந்த பராக் கிரமன் விடுபட்டு எழுந்தோடித் தனது படை வீரர்களுடன் சேர்ந்து கொண்டான்.
அம்பு மழையில் உடலெங்கும் சல்லடைக் கண்களாக ரத்தம் வழிய வழிய ராக்கியண்ணன் ஆகாயத்தை நோக்கியவாறு பூமி யில் சாய்ந்தார்.
அவர் சாய்ந்த அடுத்த கணமே சங்கர் தலைமையில் வள நாட்டிலிருந்து புறப்பட்ட படையும் அங்கு வந்து சேர்ந்தது.
சங்கரமலைக்கோட்டையை நோக்கித் தலையூர்ப்படையினர் அம்புகளைப் பொழிவதை மட்டுமே கண்ட சங்கர், தனது படைகளுக்கு ஆணையிட்டான்; தலையூர்ப்படையின் மீது விரைந்து தாக்குதல் நடத்தும்படியாக!
தலையூர்ப்படையின் கணை வீசும் திறமைக்கு ஈடு கொடுக் கும் வகையில் சங்கருடனும் மாயவருடனும் வந்த சோழப் படையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பராக்கிரமன் திணறி னான். திடீரென சோழப்படை வந்திருப்பதும், அப்படையின் ஒரு பகுதிக்கு மாயவர் தலைமையேற்றிருப்பதும் பராக்கிர மனைப் பெருங்குழப்பத்திலாழ்த்தவே, தனது படையைப் பின் வாங்கச் செய்வதைத் தவிர வேறு வழி தெரியாமல் திகைத்தான்.
சிறிது நேரத்தில் தலையூர்ப் படை பின்வாங்கி ஓட ஆரம் பித்தது. அவர்களைத் துரத்திச் சென்று முழுமையாக அழித் தொழிக்க வேண்டுமென்று தீர்மானித்துக் குதிரையைத் தட்டி விட்ட சங்கரின் கண்ணெதிரே குருதி வெள்ளத்தில் ராக்கி யண்ணன் கிடப்பது தெரிந்தது.
30. கண் விழித்தார்; கடமை உணர்ந்தார்!
தாயாகத் தந்தையாகத் திகழ்ந்து ஆளாக்கி விட்ட ஆசான் ராக்கியண்ணன் படுகாயமுற்று மயக்கம் தெளியாத நிலையில் சங்கரமலைக் கோட்டையில் மருத்துவர்கள் சூழ மரணப் படுக் கையில் இருக்கிறார் என்ற செய்தி கேட்டுப் பொன்னர் வள நாட்டிலிருந்து உடனடியாக வந்து சேர்ந்தான். கோட்டை மாளிகையின் காற்றோட்டமிக்க தனி அறையொன்றில் ராக்கி யண்ணனுக்குத் தேவையான சிகிச்சைகள் அனைத்தும் செய்து அவரை எப்படியாவது உயிர் பிழைக்க வைத்திட வேண்டு மென்று குன்றுடையான் இட்ட கட்டளையை நிறைவேற்ற மருத்துவர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தனர். அவரது உடலில் கணைகளால் துளைக்கப்பட்டு குருதி வழிந்து கொண் டிருந்தது போலவே அவர் நிலை கண்டு பொன்னர் – சங்கர் கண்களிலும் நீர் வழிந்து கொண்டிருந்தது.
போர் முரசத்தின் ஒலியும், வாட்கள் ஈட்டிகள் மோதிய ஒலி யும், கோட்டைச் சுவர்களின்மீது அம்புகள் பாய்ந்த ஒலியும், வீரர்கள் முடுக்கி விட்ட குதிரைகள் எழுப்பிய குளம்பொலி யும்… இப்போது அடங்கிப் போய் சங்கரமலைக் கோட்டை யின் உள்ளும் புறமும் அமைதி குடி கொண்டிருந்தது. ஆசான் உயிர் பிழைத்துக் கொள்வாரா? எப்போது உணர்வு திரும்பும்? ஒரு வேளை உணர்வு திரும்பாமலே உயிர் பிரிந்து விடுக் கூடுமோ? இந்தக் கவலையால் தாக்குண்டு குன்றுடையான் குடும்பத்தாரும் ஆரிச்சம்பட்டி குடும்பத்தாரும் ஆசான் இருந்த அறையைச் சூழ்ந்தே அமர்ந்திருந்தனர். அவர்களில் யாருக்கும் பசியெடுக்கவில்லை. தூக்கம் வரவில்லை. அச்சடித்த பதுமை கள் போல் அவர்கள், ‘ஆசான் பிழைத்துக் கொள்ள வேண் டும்” என்ற ஒரே பிரார்த்தனையுடன் அந்த அறையை ஒட்டிய தாழ்வாரத்தில் இருந்தனர். குப்பாயி ஒருத்தி மட்டுமே தைரி யத்துடன் அங்குமிங்கும் ஓடி மருத்துவர்களுக்கு உதவியாக அவர்கள் கேட்ட சிகிச்சைப் பொருட்களை கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் இதயத்தையும் துயரம் அழுத்திக் கொண்டிருந்த போதிலும், தேவையான கடமை களைச் செய்யாமல் தானும் சோர்ந்து கிடக்கக் கூடாது என்ற தெம்பு அவளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. மருத் துவர்கள் ஆசான் பிழைத்துக் கொள்ளக்கூடும், அதற்கான அறிகுறிகள் இருக்கின்றன என்று எவ்வளவோ நம்பிக்கை தெரிவித்துக் கூறியும் கூட பொன்னர் சங்கர் இருவரும், ஆசான் கிடத்தப்பட்டிருந்த கட்டில் அருகே சிலைகளைப் போல் நின்றவர்கள் நின்றவர்கள்தான் ! அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை. அவர்களது மனக்கண் முன்னே கடந்த கால நிகழ்ச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஆசானின் தோளி லும் மடியிலும் தவழ்ந்து விளையாடியது அவர் அருகில் உட்கார்ந்து உண்டது – அவர் பக்கத்தில் படுத்து உறங்கியது அவர் கல்வி புகட்டியது களம்புகு வீரர்களாக அவர்களை ஆக்குவதற்குப் பயிற்சி அளித்தது அன்பு காட்டியது அர வணைத்து மகிழ்ந்தது – அறிவுரை கூறியது – இவையனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிழலாடியதால் நெஞ்சுத் துடிப்பு இரட்டிப்பான நிலைமையில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
குன்றுடையானும் தாமரை நாச்சியாரும் ஒவ்வொரு மருத்து வராக ஓடியோடி சந்தித்து; எப்படியிருக்கிறது? எப்படியிருக் கிறது? என்று கேட்பதிலே பரபரப்பு காட்டினர். மருத்துவர் கள் என்ன பதில் சொல்லியிருப்பார்கள்? நல்ல பதிலா? அல்லவா? என்பதை குன்றுடையான், தாமரை இருவரின் முக பாவங்கள் மூலமாக அறிந்து கொள்ள மற்றவர்கள் துடித் தனர். ஆசான் அடிபட்டு வீழ்ந்து உணர்விழந்து ஒரு முழு நாளும் முடிந்து அடுத்த நாளும் வந்து விட்டது; இன்னமும் அவர் கண்ணிமைகள் அசையக் கூட இல்லை. சுவாசம் மட் டுமே ஓடிக் கொண்டிருந்தது.
மறுநாள் நள்ளிரவு! அதுவரையில் அந்தக் கோட்டைக்குள் யாரும் உண்ணவுமில்லை, உறங்கவுமில்லை! மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகாமல் ஆசானின் உடலில் ஒரு அசைவு தெரிந்தது. மெல்லிய முனகல் சப்தமும் எழுந் தது. தங்களின் முயற்சிக்கு வெற்றி கிட்டுகிறது என்ற மகிழ்ச்சி யுடன் மேலும் விரைந்து சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற் கொண்டனர். சிறிது நேரத்திற்குப் பிறகு பெரிய மருத்துவர்; பொன்னர் – சங்கர் இருவரையும் அருகழைத்து குரல் கொடுத் துப் பார்க்கச் சொன்னார்.
தழுதழுத்த குரலில் அவர்கள் இருவரும், “அய்யா! அய்யா!” என்று அழைத்தனர். அப்போது துயரத்தை அடக்க முடியாமல் விம்மி அழுதே விட்டனர். தனது அருமை மாணவர்கள் மட்டு மல்ல; வளர்ப்பு மகன்களின் குரல் கேட்டு ஆசானின் விழி கள் மெல்லத் திறந்தன! அந்த விழிகளையே நோக்கியவாறு பொன்னரும் சங்கரும் தமதுடல் பதற வாய் விட்டுக் கதறி விட்டனர். கரங்களைத் தூக்கி அவர்களை அமைதிப்படுத்த முடி யாத அந்த நிலையிலும், ஆசான் தனது விழியசைவின் மூலம் அவர்களைக் கவலைப்படாதிருக்குமாறு கேட்டுக் கொண்டார். ஏதோ பேச வேண்டும் போலிருந்தது அவருக்கு! ஆனால் பேச முடியவில்லை.
அதற்குள் மருத்துவர்கள் ஆசானைப் பார்த்து அமைதியா யிருக்கும்படி சைகை மூலம் கேட்டுக் கொண்டனர். ஆசானின் விழிகள் பொன்னர் சங்கரையும் அவர்களருகே, சற்று தொலைவில் நின்று தன்னையே கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் முத்தாயி, பவளாயி இருவரையும் நோக்கின! ஏனோ தெரியவில்லை அப்போது ஆசானின் கண்களும் கலங்கின! கலங்கிய விழிகளில் எட்டிப் பார்த்த நீர்த்துளிகளை அருகில் இருந்த குப்பாயி, தனது விரலால் துடைத்து விட்டாள்.
பெரிய மருத்துவர், பொன்னர் – சங்கரின் தோள்களைப் பிடித்து அணைத்தவாறு அழைத்துக் கொண்டு குன்றுடை யான், தாமரை, சின்னமலைக் கொழுந்து மற்றும் குடும்பத்தார் இருக்கும் இடத்துக்கு வந்தார். அவர்கள் அனைவரும் பெரிய மருத்துவரின் வாயசைவையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஆசானுக்கு உணர்வு திரும்பியுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி. அவர் உயிர் பிழைத்து விடக் கூடும் என்பதில் எனக் குப் பெரும் நம்பிக்கையே ஏற்பட்டுள்ளது. அதனால் நீங்கள் எல்லோரும் சிறிது பசியாறி உறங்கி ஓய்வெடுத்துக் கொள்ளுங் கள். அவர் அருகிலேயே இருக்க வேண்டுமென்று உங்களுக்கு ஆசை இருக்கும். அது இந்தச் சமயம் அவரது உடல் நிலைக்கே ஏற்றதல்ல! உங்களையெல்லாம் பார்க்கும்போது அவர் உணர்ச்சி வயப்படக் கூடும்! அது இயல்பு! அப்படி உணர்ச்சி வயப் படுவது அவரது நலத்துக்குத்தான் கேடு! தயவுசெய்து நீங்கள் அனைவரும் இங்கிருந்து சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங் கள். காலையில் அவர் வாய் திறந்து பேசக் கூடிய அளவுக்கு நலம் பெறுவார்.”
மருத்துவரின் இந்த வேண்டுகோள், எல்லோருடைய வயிற் றிலும் பால் வார்த்தது போலிருந்தது. தாமரைநாச்சியார் மட்டும் மருத்துவரைப் பார்த்து, “அய்யா! நாங்கள் யாராவது ஒருவர் இங்கு உதவி ஒத்தாசைக்கு இருக்கிறோமே?” என்று கேட்டாள். அதற்குள் குப்பாயி முந்திக் கொண்டு, ‘அதுதான் நானிருக்கிறேனே!” என்றாள். பெரிய மருத்துவரும்,’ஆமாம்! ஆமாம்! இந்தப் பெண் ஒருத்தி போதும்; படு சுட்டி! இந்தப் பெண் இருந்தாலே பத்து மருத்துவர்கள் பக்கத்தில் இருப்பது போல!” என்று குப்பாயியைத் தட்டிக் கொடுத்தார்.
குப்பாயியை மட்டும் ஆசானின் பக்கத்தில் விட்டு விட்டு மருத்துவரின் வற்புறுத்தலின் பேரில் அங்கிருந்து செல்வதற்கு மனமின்றி மற்றவர்கள் அந்த இடத்தை விட்டகன்று அவரவர் கள் அறைகளை நோக்கி நடந்தனர். அருக்காணித் தங்கம், குப்பாயியைக் கூப்பிட்டு அவள் காதோடு காதாக, உனக்குக் களைப்பாயிருந்தால் என்னைக் கூப்பிடு! நான் வந்து கவனித் துக் கொள்கிறேன்” என்றாள். ”எனக்கொன்றும் களைப்போ அலுப்போ வராது! தேவையானால் கூப்பிடுகிறேன் போ!” என்று கூறி, குப்பாயி அருக்காணித் தங்கத்தை அனுப்பி வைத்தாள்.
நள்ளிரவு நகர்ந்து, காலம்; விடியற்பொழுதை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. ஆசான், உணர்வு திரும்பியவராக ஓரளவு நலம் பெற்றவர் மருத்துவர்களின் யோசனைப்படி தூங்குவதற்கான மருந்து கொடுக்கப்பட்டு நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். உதவி மருத்துவர்கள் மிகக் களைப் புற்றிருந்த காரணத்தால் அவர்களையெல்லாம் பெரிய மருத்து வர், பக்கத்து அறையில் சென்று ஓய்வெடுக்கக் கூறியிருந்தார். அத்துடன் அவரும் குப்பாயியிடம் கூறி விட்டுச் சற்று கண்ண யர; ஆசான் படுத்திருக்கும் கட்டிலையொட்டிய திரைமறை வில் ஒரு சாய்வுப் பலகையில் கால் நீட்டிப் படுத்துக் கொண் டார். ஏறத்தாழ இரண்டு முழு நாட்கள் ஒருக்கணமும் ஓய் வின்றி சிகிச்சையில் ஈடுபட்டிருந்ததால் பெரிய மருத்துவர் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினார். அந்தக் குறட்டைச் சப்தம் கேட்டு குப்பாயி குழம்பிப் போனாள்.
”பாவம்! மிகுந்த அயர்வு காரணமாக இப்படிக் குறட்டை விடுகிறார். எழுப்பினாலோ தூக்கம் கலைந்து விடும். அத னால் எழுப்பவும் சங்கடமாக இருக்கிறது. அதே நேரம் அந்த ஒலியினால் ஆசான் விழித்துக் கொள்ளக் கூடும். இப்போது என்ன செய்வது?”
இந்தக் குழப்பம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை! காரணம்; அதற்குள் ராக்கியண்ணன் விழித்துக் கொண்டது மட்டுமல்ல தலையை இப்படியும் அப்படியும் அசைத்து, தன்னருகே குப் பாயி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். குப்பாயி, முகம் ஏதோ மந்திர தந்திரத்தில் மலர்ந்தது போல் திடீரென மலர்ந் தது. ஆர்வத் துடிப்புடன் மெல்லிய குரலில் அவரைப் பார்த்து அய்யா!” என்றாள்! என்னம்மா!” என்று ஆசான் மிகச் சன்னமான தொனியில் கேட்டதும் அவளுக்கு இருப்பு கொள்ள வில்லை. உடனடியாக ஓடி பெரிய மருத்துவரைக் கூப்பிட வேண்டும் போல் தோன்றியது. அதனால் பரபரப்பாக எழுந் தாள். அவளது துடிப்பை உணர்ந்து கொண்டவர் போல, ஆசான் அவளைப் பார்த்துக் கையசைத்து, “வேண்டாம்; அவர் தூங்கட்டும்; நீ உட்கார்!” என்றார்.
இத்தனை வார்த்தைகளை ஆசான் பேசியது கேட்டு, குப் பாயி அதிர்ந்து போனாள்! உடலில் ஒரு இடம் கூட மிச்ச மின்றி அம்புகள் பாய்ந்து, அந்த அம்புகள் இழுத்துப் பறித்து எடுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் ரத்தம் கசிந்து கொண்டி ருப்பது இன்னமும் அறவே நிற்காத இந்த நிலையில் ஒரு மனிதர், உணர்வு திரும்பப் பெற்று – சரளமாகப் பேசக்கூடிய வலிமையும் கொண்டிருக்கிறார் என்றால்; ஏ, அப்பா! எத் துணை உள்ள உரம் பெற்ற வீரராக, தீரராக இருக்க வேண்டு மென்று ஆச்சரியத்தில் மூழ்கினாள்! ஒருவேளை அணையப் போகும் சுடர் என்பார்களே; அப்படி ஏதாவது? அய்யோ அவளால் அந்த எண்ணத்தை நெஞ்சில் சுமக்கவே முடிய வில்லை. அவளையறியாமல் தனது கரங்கள் கொண்டு ஆண்ட வரைத் தொழுது கொண்டே பிரார்த்தனை செய்தாள். பிறகு ஆசானைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அவர் ஏன் தன்னை உட்காரச் சொன்னார் என்ற கேள்விக் குறி ஆவலுடன் எழுந்து நின்றது. மீண்டும் ஒரு முறை ஆசானை நோக்கி, ‘அய்யா! ஒரு கிண்ணம் பால் சாப்பிடுங்கள்!” என்றாள். சொல்லிக் கொண்டே பால் கிண்ணத்தை அவரது இதழ் களின் இடுக்கில் மெல்லக் கவிழ்த்தாள். அவருக்கும் நா உலர்ந் திருந்ததால் சிறிது பாலருந்தித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அவரது முகத்தையே குப்பாயி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆசான் மீண்டும் பேசினார். ‘குப்பாயி! பொன்னர் சங்கர் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக் கிறார்களா?” இதைக் கேட்கும்போது அவர் கண்களில் பாச ஒளி படர்ந்து பிரகாசித்தது. கவலைப்படாமல் இருப்பார் களா? இரண்டு நாட்களாக இங்கேயே தான் அன்ன ஆகார மின்றி நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் மட்டுமா? இந்தக் கோட்டையிலே யாருக்கும் நிம்மதி இல்லை! மருத்துவர்களின் பிடிவாதத்தினால் கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் எல்லா ருமே இங்கிருந்து போனார்கள்” என்றுரைத்த குப்பாயி; ஆசா னிடம், அய்யா! அவர்களைக் கூப்பிட வேண்டுமா?” என் றும் கேட்டாள்.
“வேண்டாம் அம்மா! பொழுது நன்றாக விடிந்த பிறகு கூப்பிடலாம். அதற்குள் உன்னிடம் நான் ஒன்று கேட்க வேண் டும். ஒளிக்காமல் உண்மையைச் சொல்வாயா?
என்றார் ஆசான்! இப்பொழுதும் பெரிய மருத்துவரின் குறட்டை ஒலி அந்த அறையின் சுவர்களை அசைத்துப் பார்த் துக் கொண்டுதானிருந்தது.
“என்னய்யா கேட்கிறீர்கள்; தாராளமாகக் கேளுங்கள்!” என்று மிகுந்த பரிவுடன் பதில் கூறினாள் குப்பாயி!
“என் மீது முத்தாயி பவளாயி இருவருக்கும் வருத்தம் உண்டல்லவா?”
”ஏன்? எதற்காக? அவர்களுக்கு உங்கள் மீது வருத்தம் ஏற் படக் காரணமே இல்லையே! அவர்களுங்கூட இவ்வளவு நேரம் இங்கேயிருந்து நீங்கள் நலம் பெறத்தானே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்!”
“பிரார்த்தனை செய்திருப்பார்கள்! நான் இல்லையென்று சொல்லவில்லை! என்ன இருந்தாலும் அவர்களின் கணவர் களது ஆசானல்லவா நான்! அதனால் நான் உயிர் பிழைக்க பிரார்த்தனை செய்திருப்பார்கள். இருந்தாலும் அவர்களுக்கு என் மீது ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்யும்!’
“அய்யா! நீங்கள் சொல்லுவது எனக்குப் புரியவில்லை.”
“புரியும்படி சொல்கிறேனே! என்னுடைய சபதத்தைப் பொன்னர் சங்கர் நிறைவேற்ற வேண்டுமென்றும் அப்படி நிறைவேற்றி முடிக்கும் வரையில் அவர்கள் திருமணமாகியும் கூட பிரமச்சாரிகளாக இருக்க வேண்டுமென்றும் நான் விதித்த நிபந்தனையினால் முத்தாயி பவளாயிக்கு என்மீது வருத்தம் இருக்கத்தானே செய்யும்?’
“திருமணமாகியும் இல்வாழ்க்கை சுகத்தை அடைய முடிய வில்லையே என்ற வருத்தம் இந்த நிலைமையிலே உள்ள எந் தப் பெண்ணுக்கும் இருக்கத்தான் செய்யும்! ஆனால், அதற் காக அவர்கள் உங்கள் மீது வருத்தப்படவே மாட்டார்கள். தங்கள் ஆசானுக்குச் செலுத்த வேண்டிய நன்றிக் காணிக் கையைத் தங்களின் கணவர்கள் செலுத்துவதற்காக அவர்கள் இந்தக் கடுமையான பத்தியத்தைக் கடைபிடிப்பதில் வருத்தப் பட மாட்டார்கள்!
“குப்பாயி! ஒரு உண்மையை ஒத்துக் கொண்டாய்! அந்தப் பெண்களுக்கு என் மீது வருத்தமில்லை என்பது சரி! ஆனா லும் வண்டையும் மலரையும் அருகருகே வைத்து விட்டு இடை யிலே ஒரு கண்ணாடிப் பலகையை நிறுத்தியது போல் என் நிபந்தனை வந்து சேர்ந்ததே என்றெண்ணி – பிரிவுத் துன்பத் தால் அவர்கள் பெரிதும் வருந்துவார்கள் என்பது மறுக்க முடி யாத உண்மையல்லவா?”
“பிரிவுத் துயரால் வேதனைப் படுவார்கள். நான் இல்லை யென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக உங்கள் மீது வருத்தப்பட மாட்டார்கள் என்பதுதான் என் அழுத்தமான கருத்து.
குப்பாயியின் இந்தப் பதிலுக்குப் பிறகு ஆசான் மௌன மாகவே படுத்திருந்தார். ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என் பதை அவரது முகம் உணர்த்தியது. ஆம்; அவரது எண்ண அலைகள் எழுந்து, விரிந்து, பரந்து, வீழ்ந்து இதயக்கரையில் மோதத் தொடங்கின.
பொன்னர் – சங்கரைக் கொண்டு எனது சபதத்தை முடிப் பேன் என்று அழகுநாச்சியாரை அடக்கம் செய்தபோது எடுத் துக் கொண்ட உறுதி நியாயமானதுதான்! ஆனால் அது வரையில் அந்தப் பிள்ளைகள் பிரமச்சாரிகளாக இருக்க வேண்டுமென்று எதற்காக எனக்கு நானே ஒரு நிபந்தனை விதித்துக் கொண்டேன்? அந்த நிபந்தனை எனக்குள்ளேயே அமுங்கி அழிந்து போகாமல் எதற்காக அதை அந்தப் பிள்ளை களிடமும் வெளியிட்டேன்? திருமண நேரத்தில் கூட அந்த நிபந்தனையில் நான் கண்டிப்பாக இருந்து விட்டது, நான் எவ் வளவு கடின உள்ளம் கொண்டவன் என்பதை எனக்கே இப் போது உணர்த்துகிறதே! பிரமச்சாரிகள்தான் வீரர்களாக விளங்க முடியுமா? அவர்களால்தான் மன உறுதியுடன்; தங் கள் சூளுரைகளை நிறைவேற்ற முடியுமா? மணம் புரிந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேர் மகா வீரர்களாக திகழவில்லையா? “பிரமச்சரியம்” மன உறுதிக்கு மேலும் வலிமை சேர்க்குமென்றாலும் இல்வாழ்க்கை அந்த வலிமையை அளிக்காது என்பதற்கு என்ன ஆதாரம் இருக் கிறது? நான் செய்த சபதம் சரி! பொன்னர் சங்கரிடம் அந்தச் சபதத்தை முடிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததும் சரி! ஆனால்… ஆனால்… அந்த இளம் பெண்களின் ஆசைக் கனவுகளைக் கலைத்தது பெரும் பாபம்! இதற்கு நான் நிவா ரணம் தேடியாக வேண்டும். இப்போதே பொன்னர், சங்கர் முத்தாயி, பவளாயி அவர்களின் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி, சபதத்தை நிறைவேற்ற பிரமச்சரிய நிபந்தனை தேவையில்லை என்று சொல்லியாக வேண்டும்.’
இப்படி ஆசானின் உள் மனம் உணர்த்தியது. அதனால் அவர்களை அழைத்து வரச் சொல்ல வேண்டுமென்று இதயம் துடித்தது.
”குப்பாயி!” என்றார்.
“அய்யா!’ என அன்பொழுகக் கேட்டாள் குப்பாயி!
“உடனே போய் பொன்னர் சங்கர் மற்றும் எல்லோரையும் அழைத்து வா!’ என்றார்.
குப்பாயி, பெரிய மருத்துவரை எழுப்பி விட்டு, ஆசா னைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் அனைவரையும் அழைத்து வருகிறேன்” என ஓடினாள்.
ஓடியவள்; கோட்டைக்குள் எல்லா அறைகளுக்கும் சென்று, ‘ஆசான் நன்றாகப் பேசுகிறார், நலமுடன் இருக்கிறார். உங் களை அழைத்து வரச் சொன்னார்” என்று மெத்தப் பரபரப் புடன் அழைப்பு விடுத்தாள்.
எல்லோரும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து ஆசான் இருந்த அறைக்கு ஓடி வந்தனர். அப்போது மருத்துவர்கள் ஆசானின் கட்டிலை சூழ்ந்து நின்றனர். பொன்னர் சங்கரும் அவர் களைத் தொடர்ந்து எல்லோரும் வருவதைக் கண்ட பெரிய மருத்துவர் அவர்களின் எதிரே நின்று சோகத்துடன் தலை யைக் குனிந்து கொண்டார். பொன்னரும் சங்கரும் அவரைப் பார்த்து, ‘மருத்துவரே!” என்றலறினர். மருத்துவர் அமைதியாகச் சொன்னார் “ஆசான் அமரராகி விட்டார்!” என்று!
– தொடரும்…
– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1987, குங்குமம் இதழ்.