பொன்னர்-சங்கர்






(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25
16. போர்முறை புதிது?
தங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆரிச்சம்பட்டி வீரர்களை நோக்கிப் பொன்னர் உரத்த குரலெடுத்துப் பேசினான்.

“வீரர்களே! அப்படியே நின்று கேடயங்கள் கொண்டு அம்பு களைத் தடுத்திடுங்கள்! எதிரிகளிடமுள்ள அம்புகளில் பெரு மளவு தீர்ந்த பிறகே நமது எதிர்ப்பு தொடங்க வேண்டும்! அதுவரையில் எதிர்ப்பைத் தடுக்கவும் தாங்கிக் கொள்ளவும் மட்டுமே நமது வலிமையைப் பயன்படுத்த வேண்டும்.’
பொன்னரின் இந்த யோசனை ஆரிச்சம்பட்டி வீரர்களுக்குப் புதுமையாக இருந்தது. எதிரி மோதும்போது பதிலுக்கு நாமும் உடனடியாக மோதுவதை விடுத்து எதிரியின் பலத்தைப் பாதி யளவாகக் குறைக்கிற அளவுக்குக் களைப்புறச் செய்து அதன் பிறகு எதிரியைத் தாக்கும் போர்முறை கற்ற பொன்னரும் சங்கரும் கூறிய யோசனையின் உட்பொருள் முதலில் புரியா விட்டாலும்; தளபதியின் கட்டளையென்ற முறையில் ஆரிச்சம் பட்டி வீரர்கள் அதற்குக் கட்டுப்பட்டுச் செயல்பட்டனர்.
ராச்சாண்டார்மலைக் கோட்டைக்குள்ளிருந்து தலையூர்க் காளியின் தளபதி திருமலை, தனது வீரர்களுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தான். திருமலைக்குப் பக்கத்தில் கையில் ஒரு மதுக்கிண்ணத்துடன் மாந்தியப்பன் அட்டகாச மாகச் சிரித்தவாறு மதுவைக் கொப்பளித்துக் கொப்பளித்து விழுங்கிக் கொண்டிருந்தான்.
இருவரும் அமர்ந்து வீரர்களுக்கு ஆணையிட்டுக் கொண்டி ருந்த இடத்திற்கு அருகாமையில் ஆடம்பரமாக அலங்கரிக்கப் பட்டிருந்த அறையொன்றில் வையம்பெருமான் கனத்த சங்கிலி களால் பிணைக்கப்பட்டு ஒரு பெரிய தூணில் கட்டப்பட்டிருந் தான். அவனை யாரும் நெருங்க முடியாதபடி இரண்டு முரட்டு வீரர்கள் கொடுவாட்களைக் கையில் பிடித்தவாறு தூணுக்கு இருபுறமும் கொட்டை கொட்டையாக விழித்தவாறு நின்று கொண்டிருந்தனர்.
தந்தங்களால் ஆன கால்கள் அமைக்கப்பட்ட இரண்டு தேக்கு மரக்கட்டில்கள் அந்த அறைக்குள் போடப்பட்டிருந்தன. அவற் றில் ஒரு கட்டிலில் சிலம்பாயி சோகமே உருவாக உட்கார்ந் திருந்தாள். அவளுக்கெதிரே முத்தாயி முழங்காலைக் கட்டிக் கொண்டு கண்களில் நீர் தளும்ப அமர்ந்திருந்தாள். இன் னொரு கட்டிலில் பவளாயி முழங்காலில் தலையைச் சாய்த்த வாறு கன்னங்களில் நீர்த்துளிகள் வழிந்திட உட்கார்ந்திருந் தாள். கோட்டைக்கு வெளியே போர் நடக்கும் ஆரவாரம் அவர்களின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது. சின்ன மலைக்கொழுந்துதான் படையெடுத்து வந்திருக்க வேண்டு மென்று அவர்களுக்குத் திண்ணமாகத் தெரியும்.
துரோகம் செய்தும் – கலகம் செய்தும் – மிருகத்தனமாக நடந்து கொண்டும் -எப்படியாவது தன்னலத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ வேண்டுமென முடிவு கட்டிக் கொண்டிருக் கின்ற செல்லாத்தாக் கவுண்டர், மாந்தியப்பன் போன்றோர் உலவினாலும் கூட; கொங்கு வேளாளர் குலத்தின் கீர்த்திமிகு வரலாற்று ஏட்டில் வாழ்ந்தால் வீரத்தோடும் மானத்தோடும் வாழ வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ள சின்ன மலைக்கொழுந்துகளும் ஏராளமானோர் உண்டு என்ற அந்த உறுதியான நம்பிக்கையின் அடிப்படையிலேதான் கோட்டை யைச் சுற்றிப் படை கொண்டு வந்திருப்பது அவராகத்தானி ருக்கும் – ஆம்; அவரேதான் என முடிவு கட்டிக் கொண்டனர்.
அதற்காக அடைபட்டுக் கிடக்கும் அவர்களால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஆறுதல் கொள்ளவும் இயலவில்லை. ஏனெனில் ராச்சாண்டார்மலையில் திருமலையின் தலைமை யில் குவிக்கப்பட்டுள்ள படை வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத ஆரிச்சம் பட்டிப் படையினால் தளபதி திருமலையைத் தோற்கடித்து கோட்டையைக் கைப்பற்றி – தங்களையும் மீட்டிட முடியாது என்று அவர்கள் திட்டவட்டமான முடிவுக்கு வந்திருந்தனர்.
மாந்தியப்பன், திருமலை அமர்ந்திருந்த பகுதிக்கு ராச்சாண் டார் மலை வீரர் சிலர் அவசரமாக ஓடி வந்தனர். என்ன? என்ன? ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்?” என்றான் திருமலை!
“ஆரிச்சம்பட்டி வீரர்கள் முன்னேறி வரவே இல்லை! அப் படி அப்படியே குதிரைகள் மீது நின்ற இடத்திலே நிற்கின்ற னர்! புற்றீசல் போலப் புறப்பட்டுச் செல்லும் நமது அம்பு களைக் கேடயங்களால் தடுத்திட மட்டுமே அவர்களால் முடி கிறது!” என்றனர் அந்த வீரர்கள்! மதுவுண்ட வெறியில் மாந்தியப்பன் ‘சபாஷ்!’ எனக் கத்திக் கடகடவெனச் சிரித் தான். ஓநாய் போல பயங்கரத்தொனியில் கத்தினான்.
“பயல்கள் நடுங்கிப் போயிருப்பார்கள்! ஒரு அடி கூடமுன்னால் எடுத்து வைக்க முடியாமல் திணறிப் போயிருப்பார் கள்! தளபதி திருமலையா கொக்கா? இதோ நான் வருகிறேன். கோட்டைக் கொத்தளத்தின் சாளரத்தின் வழியாக அந்தப் பரிதாபக் காட்சியைப் பார்த்துக் களிக்கிறேன்’ என்று கூறி, திருமலையின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு மாந்தி யப்பன் அங்கு வந்த வீரர்களில் இருவரை அழைத்துக் கொண்டு கொத்தளத்தின் முகப்பு நோக்கிச் சென்றான்.
பலகணியை விடச் சற்று சிறியதாகவும் உள்ளிருந்து வெளியே பார்த்தால் பரந்த வெளிப்புறம் தெளிவாகத் தெரியக் கூடிய தாகவும் அமைக்கப்பட்டிருந்த அந்த சாளரத்தின் வழியே விழி களைச் செலுத்திய மாந்தியப்பன் சற்று வியப்புற்றுத் திகைப் படைந்தான்.
ஆரிச்சம்பட்டிப் படைகளின் அணி வகுப்புக்கு முன்னால் சின்னமலைக்கொழுந்தும், அவருக்கு அருகே ஆற்றில் குதித்து முத்தாயி பவளாயி இருவரையும் காப்பாற்றிய அந்த வாலிபர் கள் இருவரும், அவர்களுடன் மற்றொரு வீரனும் அவன் கண் களில் தென்பட்டதே அந்தத் திகைப்புக்குக் காரணம்! சூறா வளிக் காற்றையும் பொருட்படுத்தாமல் அவர்கள் புரிந்த சாக சம்; மலைப்பாம்பு, முதலைகளுடன் அவர்கள் நடத்திய மர ணப் போராட்டம்…! இவையெல்லாம் அவன் நினைவுக்கு வரவே, திருமலையின் படை பெரியதாயினும் நெஞ்சுரம் கொண்ட அவர்கள் முன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா? என்ற சந்தேகமும் அவனை ஆட்கொண்டது!
ஆரிச்சம்பட்டிப் படையினரை விடுத்து விழிகளைத் திருப்பி, நிமிர்ந்து நின்று யோசித்துக் கொண்டிருந்த மாந்தியப்பனிடம் அவனது பணியாள் மற்றொரு மது நிறைந்த கிண்ணத்தை நீட்டினான். அதனை அவன் வயிற்றுக்குள் அனுப்பிய சில நொடிகளில் அவனுக்குத் திடீரென ஏற்பட்ட அச்சம், ஐயம் எல்லாம் பறந்தோடிப் போயின. மதுவின் கிறுகிறுப்பு அவன் உள்ளத்துக்குப் புதிய தெம்பையும் அசாத்தியத் துணிச்சலையும் வாரி வழங்கியது.
அங்கிருந்து திருமலையிடம் வந்தான். திருமலையோ,அம்பு மழையைக் கோட்டையிலிருந்து இடைவிடாது பொழியத் தனது வீரர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டே, அது செயல்படுவதைக் கம்பீரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆரிச்சம்பட்டிப் படையை அந்த வாலிபர்கள் தலைமை யேற்று நடத்தி வந்திருப்பதை மாந்தியப்பன்; தளபதி திருமலை யிடம் கூறினான். பெயர் தெரியாத காரணத்தால் கரகம் விடும் திருவிழாவில் காவேரியாற்றில் நடந்த நிகழ்ச்சியை விவரித்து, அந்த வாலிபர்களின் திறமையைக் குறைத்து மதிப் பிடக் கூடாது என்றும் மாந்தியப்பன் எச்சரித்தான். மாந்தி யப்பனுக்கு மதுவின் போதையினால் ஏற்பட்டிருந்த துணிவை விட; திருமலைக்கு அதிகார போதையினால் ஏற்பட்டிருந்த துணிவு அதிகமாகவே இருந்தது!
“எவன் வந்தால் என்ன? எலிக்குஞ்சுகள்; இந்த இமயமலை யிடம் என்ன செய்ய முடியும்? எங்கே நசுங்கிச் செத்தன; என்று கூடத் தெரியாமல் போய் விடும்!” என ஆர்ப்பரித் தான் திருமலை! “உம்! ஆகட்டும்!’ எனத் தனது வீரர்களுக்கு அவன் கட்டளையிட்டான் மீண்டும்!
கோட்டைக்குள்ளேயிருந்து கண நேரம் கூடத் தயங்காமல் கணைகள் ஆரிச்சம்பட்டிப் படையை நோக்கிப் பொழிந்த வண்ணமிருந்தன!
கேடயங்களால் கணைகளைத் தடுத்துக் கொண்டிருந்த ஆரிச் சம்பட்டி வீரர்கள்; ஒருவர் – இருவர் – பின்னர் பத்துப்பேர் நூறு பேர் என்று குதிரைகளில் இருந்து கீழே விழுந்து கொண்டிருந்தனர். வீரர்கள் விழுந்ததும் குதிரைகள் சில ஓடத் தொடங்கின. சில அம்புபட்டு அங்கேயே வீழ்ந்து துடித்தன.
இந்தச் செய்திகள் அடுக்கடுக்காக வரவர; மாந்தியப்பன் தாங்க முடியாத அளவுக்கு வெறிக் கூத்தாடியவாறு ஆரிச்சம் பட்டிக் குடும்பத்தார் அடைபட்டிருந்த அறை நோக்கிப் பீடு நடை போட்டுச் சென்றான்.
அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே தாழ்ப்பாளும் போடப்பட்டிருந்தது. கதவோரமிருந்த கண்ணாடிப் பலகணி வழியாக மாந்தியப்பன் உள்ளேயிருந்தவர்களைப் பார்த்துக் கெக்கலி கொட்டினான். அவர்கள் வெறுப்பை விழிகள் வழியே நெருப்பாகக் கொட்டினர். அந்தக் கோபத்தில் மாந்தியப்பன் பலகணியின் கண்ணாடியைத் தனது கைவாளின் பிடியினால் ஓங்கியடித்து உடைத்தெறிந்தான்.
இப்போது அவன் பேசுவது அறைக்குள்ளிருந்தவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது.
“என்னை மணப்பதற்கென்றே மாயனால் படைக்கப்பட்ட மங்கையர் திலகங்களே! உங்களை மீட்டுக் கொண்டு போவதற் காக உங்கள் முட்டாள் தகப்பன் மட்டுமல்ல; முதலையோடும் மலைப்பாம்போடும் சண்டை போட்டு உங்களைக் காப்பாற் றிய அந்த முரட்டு வாலிபர்களும் வந்திருக்கிறார்கள்.”
இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் முத்தாயி, பவளாயி இருவருக்கு மட்டுமல்ல – சிலம்பாயிக்கும் வையம்பெருமானுக் கும் கூட ஒரு ஆறுதல்! ஒரு நம்பிக்கை!
அவர்களின் முக மாற்றத்தை உணர்ந்து கொண்ட மாந்தி யப்பன் அலட்சியமாகச் சிரித்து; மதுக் கிண்ணத்தை முத்த மிட்டுக் கீழே வீசி விட்டு “ஓகோ! அந்தப் பயல்கள் வந்திருப் பதால் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள் எனக் கருதுகிறீர்களா? அதுதான் நடக்காது! இங்கேயுள்ள படை, காவேரியாற்று முத லையோ மலைப்பாம்போ அல்ல! கோட்டையிலிருந்து நாங் கள் நடத்தும் தாக்குதலில் உங்கள் ஆரிச்சம்பட்டிப் படை பாதிக்கு மேல் அழிந்துவிட்டது! இன்னும் சிறிது நேரத்தில் சின்னமலைக்கொழுந்தும், அவருக்குத் துணை வந்துள்ள அந் தச் சின்னப் பயல்களும் சிறை பிடிக்கப்படுவார்கள்! அதற் கடுத்து எனது திருமணம்! ஒரு பக்கம் முத்தாயி -இன்னொரு பக்கம் – பவளாயி பாமா ருக்மணிக்கு நடுவில் பகவான் கண்ணபரமாத்மா போல நான் நிற்பேன்!”
அறைக்குள்ளிருந்த அவர்கள் யாரும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களுக்கு ஏற் பட்டிருந்ததால் அவனிடம் வீணாகப் பேசி வார்த்தைகளை விழலுக்கிரைத்த நீராக்க வேண்டாமெனக் கருதி அமைதியாகவே இருந்தனர்.
வெற்றிக் களிப்பும், மது வெறியின் உசுப்பலும் போட்டி போட்டுக் கொண்டு மாந்தியப்பனை ஆட்டிவைத்ததால் அந்த அறையின் பலகணியை விடுத்துத் தளபதி திருமலை இருக்கும் பகுதிக்கு வந்தான்.
திருமலையோ மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டான்! காரணம்; ஆரிச்சம்பட்டிப் படை வீரர்கள் – ஏதோ தற்கொலை செய்து கொண்டு களச்சாவை யாசித்துப் பெறுவதற்கு வந்த தைப் போல ராச்சாண்டார் மலைப்படையினரின் தாக்குதலில் சுருண்டு விழுந்து கிடந்தனர். கொத்தளப் பகுதியிலிருந்து கடைசியாக வந்த ஒரு வீரன் சொன்னான்;
“சின்னமலைக்கொழுந்து அப்படியே அசைவற்றுக் குதிரை யில் அமர்ந்திருக்கிறார். அவருக்குத் துணையாகவும், படைக் குத் தலைமையேற்றும் வந்த வாலிபர்கள் மூவரும் கூட அவ் வாறே அவர்களின் குதிரைகளில் அமர்ந்திருக்கிறார்கள். நாம் விடும் அம்புகளை மட்டும் அவர்கள் தமது கேடயங்களால் மிக லாவகமாகத் தடுத்துக் கொண்டு சமாளித்தவாறு இருக் கிறார்கள்! மற்றபடி; ஆரிச்சம்பட்டிப் படை அறவே அழிந்து விட்டது!”
அந்த வீரனைத் திருமலை தட்டிக் கொடுத்து பெரும் சிரிப் பொலி செய்தான்! தொடர்ந்து, திருமலை தனது படைவீரர் களுக்கு புதியதோர் ஆணை பிறப்பித்தான்!
“போதும்! அம்பு பொழிவதை நிறுத்துங்கள்! சின்னமலைக் கொழுந்தைக் கொன்று விட வேண்டாம்! அவரும் அவரோடு வந்த ஓரிருவரும் பிழைத்துப் போகட்டும்! பெண்களின் திரு மணத்தைப் பெற்றவர் பார்க்க வேண்டாமா? வாழ்த்த வேண் டாமா?”
தமது தளபதி ஆணைப்படி ராச்சாண்டார் மலைக்கோட்டை யிலிருந்து அம்பு பொழிவது நிறுத்தப்பட்டது.
மாந்தியப்பன்; தளபதி திருமலையிடம் தனக்குள்ள ஒரு ஆசையை வெளியிட்டான்.
“திருமலை! நமது கோட்டைக்கு வெளியே ஆரிச்சம்பட்டி யார் நிற்கிறார்! இப்போதே முத்தாயி பவளாயி இருவரையும் கோட்டை கொத்தளத்துக்கு அழைத்து வந்து; அவர் கண் ணுக்கு நேராகவே அந்தப் பெண்கள் இருவர் கழுத்திலும் நான் மாலையணிவித்து விடுகிறேன்! இப்படித்தான் ஆரிச்சம் பட்டியாரை மானபங்கப்படுத்த வேண்டும்!”
மாந்தியப்பனின் அந்த ஆசைக்குத் திருமலை இணங்கவில்லை!
“எப்படியும் உங்களுக்கும் ஆரிச்சம்பட்டி இளவரசிகளுக்கும் திருமணம் நடக்கத் தான் போகிறது! அதற்குள் எதற்காக அவ சரம்? அவசரம் மட்டுமல்ல; அது பண்பாடும் ஆகாது! தலை யூர்க்காளி எதுவும் முறைப்படி நடப்பதைத்தான் விரும்புவார்! இதைக் கேள்விப்பட்டால் என் மீது சீறி விழுவார்! எனவே நான் சம்மதிக்க மாட்டேன்!’
திருமலையின் இந்தப் பதிலைக் கேட்டு மாந்தியப்பன் அசடு வழிய நின்றான்.
அப்போது ராச்சாண்டார் மலைக்கோட்டையை நோக்கி தலையூர் வீரனொருவன் குதிரையில் வருகிற செய்தி தளபதி திருமலைக்குக் கூறப்பட்டது. வந்துள்ள வீரன், கோட்டையின் முகப்பில் தலையூர் முத்திரை மோதிரத்தைக் காட்டி விட்டு உள்ளே வந்து கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து அறிவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து சில நொடிகளில் தலையூர் வீரன் ஓலைச்சுருள் ஒன்றை தளபதி திருமலையின் கையில் கொடுத் துப் பணிந்து வணங்கி, ஒதுங்கி நின்றான்.
தளபதி பரபரப்புடன் ஓலையைப் படித்து முடித்தான். மாந்தியப்பன்; “என்ன அவசர ஓலை?” என்பது போல தளபதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ராச்சாண்டார் மலையிலிருந்து முத்தாயி பவளாயி முத லியவர்களை உடனடியாகத் தலையூருக்கு அழைத்து வந்து விட வேண்டுமாம். திருமணம் தலையூரில்தான் நடக்க வேண்டுமாம். இந்த ஏற்பாடுதான் தலையூர் மன்னருக்குப் பாதுகாப்பான ஏற்பாடாகத் தோன்றுகிறதாம். உடனே ஆரிச்சம்பட்டி குடும் பத்தாரை அழைத்துக் கொண்டு தலையூருக்கு வரக் காளி மன்னர் கட்டளையிட்டுள்ளார்.
திருமலை, கடிதத்தில் உள்ளதைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு; தலையூர் மன்னர் உத்திரவை நிறைவேற்ற ஆயத்தமானான்.
கோட்டை வாசலில் ரத வண்டி கொண்டு வந்து நிறுத்தப் பட்டது. வண்டியைச் சுற்றிப் பாதுகாப்புக்குச் சில வீரர்கள் குதிரைகளில் சூழ்ந்திருந்தனர்.
ஆரிச்சம்பட்டிக் குடும்பம் அடைபட்டிருந்த அறைக்குத் திரு மலை சென்றான். வெளிப்புறமாகக் கதவு திறக்கப்பட்டது. அறையின் உள் தாழ்ப்பாளைத் திறக்க முடியவில்லை. திறப்ப தற்கு உள்ளே இருந்தவர்களும் சம்மதிக்கவில்லை. புதிய ஆபத்து வருவதை உணர்ந்து நடுங்கினர். தாங்கள் காப்பாற்றப் படவில்லை என அறிந்து நினைவு தடுமாறினர். ஏற்கனவே உடைக்கப்பட்டிருந்த பலகணியின் வழியாகக் கையை உள்ளே விட்டுக் கதவின் உட்தாழ்ப்பாளைத் திறந்தனர் வீரர்கள்!
திருமலை உள்ளே நுழைந்தான். அவர்களிடம் மரியாதை யுடன் செய்தியைச் சொன்னான். மாந்தியப்பன், தலைகால் தெரியாமல் ஆடிக் கொண்டிருந்தான்.
“தலையூர் புறப்படுகிறோம்! ஆரிச்சம்பட்டிப் படை அழிந்து விட்டது! உங்களை மீட்க வந்தவர்கள் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறார்கள்! அவர்களையும் கைது செய்யாதது அவர்கள் செய்த பாக்கியம்! மங்களகரமான மணவிழா தலையூரில் நடை பெறும்போது உங்கள் தந்தையும் வருகை தந்து வாழ்த்த வேண்டு மென்கிற பெரு விருப்பத்துடன் தலையூர் மன்னர் காளி இருக் கிறார். தயவுசெய்து புறப்படுங்கள்! தகராறு செய்யாதீர்கள்!”
திருமலையின் இந்தச் சொற்களைக் கேட்டு அவர்கள் சோகப் பதுமைகளாக நின்றார்களே தவிர தகராறு எதுவும் செய்யவில்லை!
கோட்டை முகப்பில் நிறுத்தப்பட்டிருந்த ரத வண்டிக்குச் சிலம்பாயி, முத்தாயி, பவளாயி மூவரும் கொண்டு வரப் பட்டார்கள். அவர்களை ரத வண்டியில் உட்கார வைத்த பிறகு வையம்பெருமானையும் சங்கிலியால் பிணைத்தபடியே அந்த வண்டியில் ஏற்றினார்கள்.
இரு கம்பீரமான குதிரைகளில் தளபதி திருமலையும், மாந்தி யப்பனும் ஏறி அமர்ந்தனர்.
இந்தக் காட்சியைக் கோட்டைக்கு வெளியே தொலைவில் குதிரைகளில் இருந்தவாறு சின்னமலைக்கொழுந்தும் பொன் னர், சங்கர், வீரமலை ஆகியோரும் கண்கொட்டாமல் பார்த் துக் கொண்டிருந்தனர். ரதவண்டி, கோட்டை முகப்பிலிருந்து வேகமாகக் கிளம்பிற்று.
முகப்பைத் தாண்டி, கோட்டையின் இரண்டாவது சுற்றடைப் புச் சுவரைத் தாண்டி அடுத்த முகப்பு வாயிலின் வழியாக வண்டி நுழைந்தபொழுது; வேல்! வேல்! வீரவேல்! வெற்றி வேல்!’ என்று ஒரு பெரும் ஒலி! ஆம்; பொன்னர்-சங்கர் – வீரமலை மூவரும் எழுப்பிய ஒலி!
அந்த ஒலி அடங்குவதற்குள் கோட்டைக்கு வெளியே வீழ்ந்து கிடந்த ஆரிச்சம்பட்டி வீரர்கள் ஓரிருவர் தவிர அனைவரும் நிமிர்ந்தெழுந்தனர். எழுந்த வேகத்தில் ரத வண்டியைச் சுற்றிச் சூழ்ந்து வந்த ராச்சாண்டார்மலை வீரர்கள் மீது தாக்குதல்!
பொன்னர் – சங்கர் இருவரும் உருவிய வாளுடன் அந்த வீரர் கூட்டத்தில் புயல் போலப் புகுந்தனர். சங்கரைத் தளபதி திருமலை மடக்கிக் கொண்டான். பொன்னர் ஆரிச்சம்பட்டி வீரர்களுடன் ராச்சாண்டார் மலைவீரர்களை எதிர்த்துப் போர் புரிந்தான். இடையில் வீரமலை, ரதவண்டியில் பாய்ந்து வையம் பெருமானைப் பிணைத்திருந்த சங்கிலியை அறுத்தெறிந்தான்! தளபதி திருமலையின் வாள் சங்கரின் தலையைப் பிளந்து விடக் கூடும் என அஞ்சிப் பதறி சின்னமலைக்கொழுந்து துடித்துப் பதறியபோது சங்கர் அந்த மாமிசமலையின் நெஞ் சில் தனது வாளைப் பாய்ச்சிக் கீழே வீழ்த்தினான்.
தளபதி பிணமானது கண்டு, ராச்சாண்டார்மலை வீரர்கள் சிதறியோடினர். கோட்டைக்குள்ளிருந்து வீரர்கள் வருவதற்கு முன்பாக ரத வண்டியை வையம்பெருமான் செலுத்த, அதற் குப் பின்னால் பொன்னர், சங்கர், வீரமலை, சின்னமலைக் கொழுந்து மற்றும் ஆரிச்சம்பட்டி வீரர்கள் தொடர்ந்தனர்.
ரத வண்டி, காற்றிலும் கடுவேகமாகப் பறந்தது.
அந்த அமளியில் மாந்தியப்பன் தானேறியிருந்த குதிரையில் தலை தெறிக்க ஓடி எப்படியோ தப்பித்துக் கொண்டான்.
17. சங்கரன்மலையில் சந்திப்பா?
ராச்சாண்டார்மலையிலிருந்து ஒரு கல் தொலைவு கூட சென்றிருக்க முடியாது; அதற்குள் பொன்னர், சங்கர், வீர மலை ஆகிய மூவரின் குதிரைகள்; வையம்பெருமான் ஓட்டி வந்த ரத வண்டிக்கு முன்னால் வந்து விட்டன.
“நாங்கள் போகும் பாதையிலேயே வண்டியும் வீரர்களும் தொடரட்டும்!” என்று பொன்னர் ஆணையிடும் தொனியில் கூறினான்.
சின்னமலைக்கொழுந்து, தனது குதிரையை சற்று இழுத்துப் பிடித்த படி; இது காட்டுப்பாதையாயிற்றே?” என்று இழுத்தாற் போல் கேட்டார்.
“காட்டுப்பாதைதான்! கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான்! போக வேண்டும்! காட்டுப்பாதை மட்டுமல்ல; கரடு முரடான பாதை யும் கூட! எதிரிகள், நாம் ஆரிச்சம்பட்டிக்குப் போவதாக எண் ணிக் கொண்டு பின் தொடரக் கூடும்! நாம் பாதையை மாற் றிக் கொள்வது தான் இந்த சூழ்நிலைக்கு ஏற்றது! என்றான் பொன்னன்.
“அப்படியானால் நாம் எங்கே போகிறோம்?” என்று சின்ன மலைக்கொழுந்து வியப்பை விழிகளில் வெளிப்படுத்திக் கேட்கவே;
“சங்கரன்மலைக்கு!” என்று பொன்னர் பதில் அளித்தான்!
“சங்கரன்மலைக்கா?” என்று சின்னமலைக் கொழுந்து எழுப்பிய வினாவில் பொருளில்லாமல் போகவில்லை.
பல்வேறு குன்றுகளுக்கு உரிமை படைத்தவனான குன்றுடையானின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் ஒன்று சங்கரன் மலை!
தனக்கும் குன்றுடையானுக்கும் தனது தங்கை தாமரைநாச்சி யின் திருமணம் காரணமாக ஏற்பட்டிருந்த மனக்கசப்பு இன்ன மும் நீங்காத நிலையில்; குன்றுடையானுக்குச் சொந்தமான சங்கரன்மலைக்கு எப்படிச் செல்வது என்ற தயக்கம் சின்ன மலைக் கொழுந்துவுக்கு!
அந்தப் பழைய நிகழ்ச்சியை அந்த வீர வாலிபர்களிடத்திலே இப்போது விளக்கிச் சொல்வதற்கு அவரே வெட்கப்பட்டார்.
செல்லாத்தாக் கவுண்டரும் அவரது மகன் மாந்தியப்பனும் மக்களிடத்திலே தொடர்ந்து பெற்று வருகிற வெறுப்பும் மனிதாபிமானமற்ற முறையில் வெளிப்படுகிற அவர்களது சேட்டைகளும் சின்னமலைக்கொழுந்துவின் உள்ளத்தில் அவர் களைப் பற்றிய ஒரு பயங்கரத் தோற்றத்தை உருவாக்கியிருந்த மையால்; எப்படியோ அன்றைக்குத் தனது சகோதரி தாமரை யின் மணவிழாவில் ஏற்பட்ட திடீர் மாற்றமும் அவளைப் பொருத்த வரையில் நலமாகவே முடிந்தது என அவர் சில நேரங்களில் எண்ணிக்கொள்வார்! இருந்தாலும் கூட; தனது தங்கை, பிறந்து வளர்ந்த குடும்பத்தை ஒரு நொடியில் அலட் சியப்படுத்திவிட்டு நெல்லியங்கோடனுடன் இல்லறம் நடத்தப் புறப்பட்டு விட்ட அந்த அதிர்ச்சி அவர் இதயத்திலிருந்து அறவே நீங்கியபாடில்லை!
பொன்னரின் வார்த்தைக்கு மறுவார்த்தை கூற அவருக்கு மனம் வரவில்லை. திடீர் திடீரென வந்த ஆபத்துக்களில் ருந்து தனது குடும்பத்தையே காப்பாற்றிய அந்த தீரமிகு இளைஞர்களின் மீது அவர் கொண்டிருந்த மதிப்பினாலும், அன்பின் ஆழத்தினாலும் பொன்னரின் யோசனையை அப் படியே ஏற்றுக் கொண்டு பின் தொடர்ந்தார், ஆரிச்சம்பட்டி வீரர்களுடன்!
நெருக்கமாக மரங்களடர்ந்த காட்டுப்பாதை – ராச்சாண்டார் மலையிலிருந்து வடக்கு திசை நோக்கிச் செல்லும் அந்த பாதையில் பொன்னர், சங்கர், வீரமலை மூவரும் குதிரை களில் முன்செல்ல அவர்களையொட்டி சின்னமலைகொழுந் தின் குதிரை செல்ல -பின்தொடர்ந்து ரத வண்டியும், வண்டி யைச் சுற்றி வீரர்களும் புடைசூழ்ந்து வர வேகமான பயணம் ஆரம்பமாயிற்று!
ஓரிரு கல் தொலைவு சென்றதும், குதிரையிலிருந்தவாறே சின்னமலைக்கொழுந்து பொன்னர், சங்கர் இருவரையும் நோக்கி; ‘சங்கரன்மலையில் ஏற்கனவே உங்களுக்கு யாரும் அறிமுகம் உண்டா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தார்.
அதற்குப் பொன்னர் பதில் சொன்னான். “எங்கள் ஆசான் ராக்கியண்ணன் இரண்டொரு முறை எங்களை அந்த இடத் துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நெல்லியங்கோடன் எனப் படும் குன்றுடையாக் கவுண்டருக்குச் சொந்தமான இடம் அது என்று சொல்லியிருக்கிறார். எப்போதாவது குன்றுடையார் சங்கரன்மலைக்கு வந்து அங்குள்ள மாளிகையில் தங்குவது உண்டாம். எங்கள் ஆசான் ராக்கியண்ணன் அந்த மாளி கைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும், எத் தனை நாள் வேண்டுமானாலும் தங்கலாமென்றும் குன்றுடை யார் அனுமதி வழங்கியிருப்பதாக எங்கள் ஆசானே சொல்லி யிருக்கிறார். அந்த அடிப்படையில் எமது ஆசான் எங்களை அங்கு அழைத்துச் சென்றுள்ளார். எனவே கடந்த கால அனுப வத்தை வைத்துத்தான் இப்போது நாம் அங்கு போவது உசித மென முடிவெடுத்தோம். சங்கரன்மலை மாளிகையில் நாம் போய் தங்கிவிட்டால் எதிரிகள் அவ்வளவு சுலபத்தில் உள்ளே நுழைந்து விட முடியாது. மாளிகையைச் சுற்றியுள்ள அரணும், அரணைச் சுற்றியுள்ள அகழியும் பகைவர்களின் பலத்தை நசுக்கக் கூடியவை.
பொன்னரின் பதிலைக் கேட்டும் நிம்மதியடையாமல் சின்ன மலைக் கொழுந்து மற்றொரு சந்தேகத்தை எழுப்பினார்.
“திடீரென்று, நாம் ஒரு படையுடன் சங்கரன்மலைக்கோட் டைக்குள் நுழைந்தால் அங்குள்ள தளபதிகளோ வீரர்களோ நம்மை அனுமதிப்பார்களா?”
“அந்தக் கவலையே தேவையில்லை! நான்தான் முன்பே சொன்னேனே; எங்களுக்குப் பழக்கமான இடமென்று! நமது ஆரிச்சம்பட்டிப் படை வீரர்களைக் கோட்டையைச் சுற்றி நிறுத்திவிட்டு, நாங்கள் அங்குள்ள காவலர்களிடம் நிலை மையை விளக்கினால் தங்குதடையின்றி வரவேற்று உபசரிப் பார்கள்.”
முழுமையான திருப்தி சின்னமலைக்கொழுந்துக்கு ஏற்பட வில்லையென்பதை அவரது முகம் காட்டியது. அதைப் புரிந்து கொண்டு சங்கர் அவரிடம் பேசினான்.
“ராச்சாண்டார்மலையிலிருந்து நாம் நேராக ஆரிச்சம்பட் டிக்கே கூடப் போயிருக்கலாம்! ராச்சாண்டார்மலைவீரர்கள் நம்மைப் பின்தொடர்ந்து ஆரிச்சம்பட்டிக்குத்தான் போவார்கள்! சிதறியோடியோர் போக மிச்சமிருப்போர் ஆரிச்சம்பட்டிக்கு செல்லும் வழியில் சிறிது தொலைவு சென்று விட்டு, நம்மைக் காணாமல் திகைத்துப் போய் வேறு பாதையைத் தேர்ந்தெடுப் பதற்குள் நாம் சங்கரன்மலைக்குச் சென்றுவிடலாம்.
சங்கரின் விளக்கத்தில் இருந்த தந்திரத்தை சின்னமலைக் கொழுந்து மனதுக்குள் பாராட்டிக் கொண்டார் என்றாலும்; அடுக்கடுக்காகப் பல ஐயப்பாடுகள்; அலைகளாக எழுந்து மோதிக்கொண்டுதானிருந்தன.
தாக்குண்டு ஓடிய மாந்தியப்பன் செல்லாத்தாக் கவுண்டரிடம் சென்று நடந்ததைச் சொல்லுவான்! அவர் தனது மகனையும் கூட்டிக் கொண்டு, தலையூர்க்காளிடம் ஓடுவார்! தலையூர்க்காளி மன்னனின் கோபத்தைக் கிளறிட ஒரு பெரிய சம்பவமே இருக் கிறது! அது தான் அவனது தளபதிகளில் ஒருவனான திருமலை கொல்லப்பட்ட நிகழ்ச்சி! எப்படியும் தலையூர்க்காளியின் படை, ஆரிச்சம்பட்டியை நோக்கி சில நாட்களில் வரக்கூடும். இப்படி நடக்கக்கூடுமே என எண்ணிய சின்னமலைக்கொழுந்தின் இத யம் படபடத்தது எனினும்; அதேநேரம் மானத்தைக் காப்பாற் றிக் கொள்ள எதையும் சந்தித்துத்தானே தீர வேண்டுமென்ற உறுதியும் ஆணிவேராகச் சென்று ஆழமாகப் பதிந்து நின்றது!
ரத வண்டியில் அமர்ந்திருந்த முத்தாயி பவளாயி இருவரின் கண்கள், தங்கள் வண்டிக்கு முன்னே குதிரைகளில் பெருமித நோக்குடன் சென்று கொண்டிருந்த பொன்னர், சங்கரை மொய்த்திருந்தன!
நடுவழியில் ஏற்பட்ட விபத்தினால் தங்கள் வாழ்க்கையே நாசமாகும் ஆரிச்சம்பட்டி குடும்பமே அழிந்து போக நேரி டும் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தாலும்: அந்த விபத்தி னால்தானே அதிலிருந்து தங்களைக் காத்திட வந்த அந்த வீரர்களை மீண்டுமொரு முறை தங்கள் விழிகளுக்கு விருந் தாக்கிக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது என்றெண்ணி அந்த இளமான்களின் விழிகள் ஒளியுமிழ்ந்தன!
உடல் வலிமையினாலும் -அசாதாரணச் துணிச்சலினாலும் சூறைக்காற்றை எதிர்கொண்டார்கள்; மலைப் பாம்பை வீழ்த்தினார்கள்; முதலையைப் புறம் கண்டார்கள்; என்று நினைத்திருந்த அந்தக் கட்டழகுப் பெட்டகங்கள் அந்த வாலி பர் இருவரும் பெரும்படையினை எதிர்த்துக் களம் காணும் போரிலும் வெற்றி வீரர்களாகத் திகழ்வதறிந்து சொக்கிப் போய் அதிலும் ஒரு சுகம் கண்டார்கள்.
பொன்னரை விழிக்கு விருந்தாக்கிக் கொண்டு இதயச் சிம்மாசனத்தில் அவனை அமரவைத்து, அவன் முழங்காலில் முகம் பதித்து வீரம் செறிந்த அவனது மார்பகத்தைத் தனது மலர்க்கரத்தால் தடவிக்கொடுத்து இன்பம் அனுபவிப்பது போல் கற்பனை செய்து பார்த்த முத்தாயி; எங்கே தன்னைத் தன் தங்கை பவளாயி பார்த்து விடுவாளோ என்று கடைக் கண்ணால் அவளை நோட்டமிட்டுத் தனக்குத்தானே நாண் முற்றுத் தலைகுனிந்து கொண்டாள்.
சங்கரின் மீசையழகில் தன்னைப்பறிகொடுத்து – அவனுடன் இணையாக அந்தக் குதிரையில் அமர்ந்து, தனது கரங்களால் அவனது தேக்குமரத் தேகத்தை வளைத்துப் பிடித்துக் கொண் டது போல் கனவுலகில் திரிந்த பவளாயி; எங்கே தன்னைத் தனது அக்காள் பார்த்துச் சிரித்து விடுவாளோ என நாணிக் கோணித் தலையைச் சாய்த்துக் கொண்டு விட்டாள்.
குதிரையில்; ரத வண்டிக்கு முன்னால் சென்ற பொன்ன ருக்கு ஆண்டவன் மீது கோபம்! தனக்கு முகத்தில் ஒரு கண் ணையும், பிடரியில் ஒரு கண்ணையும் அவன் படைத்திருந்தால் – ஒரு கண்ணால் பாதையையும், இன்னொரு கண்ணால் வண் டியில் உள்ள பாவையையும் பார்த்துக் கொண்டே பயணம் செய்யலாம் அல்லவா?
இப்படி ஒரு கற்பனை அவனுக்கு! சங்கர்தான் என்ன? அவ னுக்குத் தோன்றியதும் சாதாரண கற்பனை அல்ல! தனது உள்ளங்கையை உயர்த்திப் பார்க்க வேண்டுமாம்! அது உடனே ஒரு கண்ணாடியாக மாற வேண்டுமாம்! அதில் ரத வண்டியில் உள்ள பவளாயியின் முகம் தெரிய வேண்டுமாம்! அவனும் அந்தக் கைக்கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்வானாம்!
ராச்சாண்டார்மலைக்குப் படை கிளம்புவதற்கு முன்பு, ஆரிச்சம்பட்டிக் கோட்டையின் முகப்பில் சின்னமலைக் கொழுந்து அறிவித்த செய்தியும் அவர்கள் நெஞ்சில் பொன் னூசல் ஆடிக் கொண்டிருந்தன!
வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுப்பார்களேயானால் இந்த வீரர்களுக்கு; நான் பெற்ற கனிகளைத் தருவேன் என்று அவர் முழங்கியதை அந்தச் சிங்க இளைஞர்கள் நினைத்து நினைத் துத் தங்கள் இதயத்தை இன்ப ஊற்றால் நனைத்துக் கொண்டார்கள்:
அதோ ; சங்கரன்மலைக்கோட்டை அருகாமையில்தான் இருக் கிறது என்பதை அறிவிப்பது போல ஆலயத்தின் கோபுர உச்சி தெரிகிறது!
கோட்டைக்குள்ளிருப்பது யார் என்று தெரியாமலே சின்ன மலைக்கொழுந்தும், அவர் மனைவி மக்களும், அவர்களுக்குத் துணையாகப் பொன்னர் சங்கரும், வீரமலையும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
செல்லாண்டியம்மன் கோயில் மண்டபத்திலிருந்து குடையூர் சென்று குன்றுடையாக் கவுண்டர் அரண்மனையில் எல்லா வற்றையும் விபரமாகப் பேசலாம் என்று மாயவர் கூறியதை ஏற்றுக்கொண்டு குன்றுடையான் புறப்பட்டாலுங் கூட; வண்டி யிலேறி அமர்வதற்கு முன்பு; மாயவரிடத்திலே ஒரு மாற்று யோசனையை வெளியிட்டான்!
“மாயவரே! காணாமற் போன எங்களின் குழந்தைகளைப் பற்றி நல்ல செய்தி சொல்லப் போகிறீர்கள்! அதற்காக எங் கள் மாளிகைக்கே வருவதாகக் கூறுகிறீர்கள்! ஆனால் ஒன்று; எங்கள் குழந்தைகள் எங்கே காணாமற் போயினவோ; அந்த இடத்துக்கே எங்களுடன் வாருங்கள்! காணாமற் போன கண் மணிகள் எங்கேயிருக்கிறார்கள் என்ற களிப்பான செய்தியை அந்தக் குழந்தைகள் காணாமற்போன இடத்திலேயே சொன் னால்; எந்த இடத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டுக் கதறியழுதோமோ; அந்த இடத்திலேயே அந்தக் குழந்தைகள் உயிரோடிருக்கும் விபரத்தை உங்கள் வாயிலாகக் கேட்டுப் பூரிப்படைகிறோம்!”
“எங்கே அழைக்கிறாய்; நெல்லியங்கோடா?”
“எங்குமில்லை மாயவரே; எனக்குரிமையுடைய சங்கரன் மலைக்குத்தான் அழைக்கிறேன்!”
“குடையூர் மாளிகைக்குச் சென்றால் உனக்கு என்னால் என்ன தொல்லை ஏற்படுமென தயங்குகிறாய்?'”
“சே! சே! அப்படியொன்றுமில்லை – இங்கிருந்து குடையூரை விட சங்கரன்மலை அருகாமையில் இருக்கிறது! சங்கரன் மலையைத் தாங்களும் பார்க்க வேண்டுமென்று நான் ஆசைப் பட்டேன்! அங்குள்ள மாளிகை அமைப்பும் அரண் வலிவும், அகழியின் தோற்றமும் தங்களை மிகவும் கவரும்! என் யோசனை தங்களுக்குப் பிடித்தமில்லையென்றால் குடையூருக்கே போக லாம்; எனக்கு அதிலொன்றும் ஆட்சேபணையில்லை!”
மாயவர், குன்றுடையானை இடைமறித்து; ‘இல்லை! இல்லை! வேண்டாம் வேண்டாம்! சங்கரன்மலை மாளிகைக்கே போவோம்! குழந்தைகள் காணமற் போனது அந்த இடத்தில் தான் என்கிற போது; எனக்கும் அந்த இடத்தைப் பார்க்க ஆவலாக இருக் கிறது – அங்கேயே போகலாம்!” என்றார்.
செல்லாண்டியம்மன் கோயிலில் இருந்து தென்மேற்காகச் சென்று அமராவதி ஆற்றின் தென்கரையில் உள்ள குடை யூருக்குச் செல்வதைக் காட்டிலும், அந்தக் கோயிலில் இருந்து சற்றுத் தென்கிழக்காகத் திரும்பி மதுக்கரையைத் தாண்டிச் சென்றால் மிக விரைவில் சங்கரன் மலையை அடைந்துவிட லாம். மாயவரும் அங்கேயே போகலாம் என்று விருப்பம் தெரிவித்தவுடன் குன்றுடையான் தாமரைநாச்சியாரையும் அருக்காணியையும் பார்த்து வண்டியிலேறுமாறு கண்களால் பணித்தான்.
சங்கரன்மலைக்குத் தனது கணவனுடன் ஐந்தாறு முறை தாமரைநாச்சியார் வந்திருக்கிறாள் என்றாலும் ஒவ்வொரு முறையும் அவள் வந்த போது அந்த ஊர் மாளிகையில் தனது குழந்தைகள் காணாமற்போன நிகழ்ச்சி அவளைப் பெரிதும் வாட்டியிருக்கிறது. ஒரு தாயின் இதயம், இழந்துவிட்ட குழந்தை களுக்காக எப்போதுமே புலம்பிக் கொண்டிருக்குமெனினும் அவற்றைப் பறிகொடுத்த இடத்திற்கு வரும்போது; அந்தக் குழந்தைகளுக்காகக் கட்டப்பட்ட சமாதிகளைக் காணுவது போன்ற உணர்வைத் தானே பெற்றுத்தவிக்கும்! அதனால் தாமரை தனது கணவன் அழைத்த போது சில நேரங்களில் சங்கரன்மலைக்கு வருவதைத் தவர்த்திருக்கிறாள். ஆனால் இப்போது தனது கணவனின் யோசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
என்றைக்கோ இழந்து விட்ட செல்வங்கள் உயிரோடிருக்கி றார்கள் என்று சூசகமாகத் தெரிவித்த மாயவர்; அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் எப்படியிருக்கிறார்கள் என்ற முழுச்செய்தியைச் சொல்லப் போகிறார் – அதுவும் அந்தச் செல் வங்கள் தனது கையை விட்டுப் போன அதே சங்கரன்மலை யில் சொல்லப் போகிறார் என்றதும் தாங்கொணாதமகிழ்ச்சி யால் நெஞ்சம் கனத்துப் போயிருந்தாள். அண்ணன்மார் இரு வர் குழந்தைப் பருவத்திலே காணாமற்போய்விட்டார்கள் என்பதைத் தாயாரின் இடைவிடாத சோகக் கண்ணீரால் எழு தப்பட்டதைப் படித்தறிந்திருந்த அருக்காணித் தங்கமும் ஏதோ சில முக்கியமான விபரங்களுடன் மாயவர், சங்கரன்மலைக்குத் தங்களோடு வருகிற சம்பவத்தைப் பெரிய வாய்ப்பாகவே கருதி உற்சாகமடைந்தாள்.
குடையூர் மாளிகை வண்டியில் குன்றுடையான், தாமரை நாச்சியார், அருக்காணித் தங்கம் ஆகியோர் ஏறி அமர்ந்து கொள்ள; வண்டிக்கருகாமையில் தனது குதிரையில் மாயவர் பயணம் செய்ய பாதுகாப்பு வீரர்கள் சிலர் குதிரைகளில் வர அன்றிரவே அவர்கள் சங்கரன்மலை மாளிகைக்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.
அவர்கள் மாளிகைக்குள் இருப்பது பற்றிய தகவல் எதுவும் தெரியாமல் தான் பொன்னர் சங்கர் இருவரும் சின்னமலைக் கொழுந்துவையும் ஆரிச்சம்பட்டி குடும்பத்தினர், மற்றும் வீரர் களையும் அந்த ஊரின் முகப்புக்குள் அழைத்து வந்து சேர்ந்தனர்.
சங்கரன்மலை மாளிகை வாசல் முகப்பில் வழக்கத்திற்கு மாறாக வீரர்களின் நடமாட்டமும் காவலர்களின் பந்தாக்களும் அதிகமிருப்பதைக் கண்ட பொன்னரும் சங்கரும் வீரமலைச் சாம்புவனைத் திரும்பிப் பார்த்தனர்.
“சற்று நேரம் தாமதியுங்கள்; நான் உள்ளே சென்று யார் வந்திருக்கிறார்கள் என்று விபரமறிந்து வருகிறேன்”
இவ்வாறு கூறிவிட்டு வீரமலைச் சாம்புவன், தனது குதி ரையை சங்கரன்மலைக் கோட்டை வாசலை நோக்கித் தட்டி விட்டான்.
கோட்டை வாசலில் வீரமலை சாம்புவனை அடையாளம் தெரிந்து கொண்ட சங்கரன்மலை வீரர்கள் அவனுக்குத் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து கோட்டைக்குள் செல்ல அனு மதி மட்டுமல்ல; அவனை அழைத்துக் கொண்டே கோட்டைக் குள் சென்றார்கள்.
கோட்டைக்கு வெளியே மர நிழல்களில் பொன்னர், சங்கர், சின்னமலைக்கொழுந்து குதிரைகளில் அமர்ந்தவாறு காத்தி ருந்தினர். முத்தாயி பவளாயி இருந்த ரத வண்டியும் ஒரு வேப்பமரத்து நிழலில் நிறுத்தப்பட்டிருந்தது. வையம்பெரு மான், வண்டியிலிருந்து கீழே இறங்கி வண்டிக்கு அருகாமை யில் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தான். ஆரிச்சம்பட்டி படைவீரர்கள் தொலைவில் வரிசையாகக் குதிரைகளில் வீற்றிருந்தனர்.
”நாமும் ஒரு பகுதியின் எல்லைக்காவல் ஆட்சியாளர்தான் நாம் நமது வீரர்களுடன் நம்மைப் போன்ற இன்னொரு எல்லைக் காவல் ஆட்சியாளரின் கோட்டை வாசலில் இவ் வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறதே!” என்று தனக் குள்ளாக சிலம்பாயி ஆதங்கப்பட்டுக் கொண்டு, ரத வண்டி யில் சாய்ந்திருந்தாள். ராச்சாண்டார்மலைக் கோட்டைக்குள் அடைபட்டிருந்த போது, “உயிர் தப்பி வெளியே செல்லு வோமா?” என்ற கவலை! இப்போதோ, “இவ்வளவு நேரம் வெளியே காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளதே!” என்ற கெளரவப் பிரச்சினை!
சற்றுத் தாமதமானது உண்மைதான் என்றாலும் எப்படியோ பொங்கும் இனிய உணர்வின் அடையாளமாகப் புன்னகை புரிந்தவாறு; வீரமலைச்சாம்புவன் – குதிரையை மெல்ல நடத் திக்கொண்டு கோட்டைக்கு வெளியே வந்தான். அவன் பக்கத் தில் வந்ததும், சின்னமலைக் கொழுந்து அவனைப் பார்த்து, “என்ன ஆயிற்று?” என்று ஆவலுடன் கேட்டார்.
“கோட்டைக்குள் குன்றுடையாரும் அவரது மனைவியும் மகளும் தங்கியிருக்கிறார்கள்” வீரமலையிடமிருந்து இப்படிப் பதில் வந்தவுடன் சின்னமலைக் கொழுந்து திடுக்கிட்டு, என்று அவரையுமறியாமல் கொஞ்சம் உரக்கவே கூச்சலிட்டு விட்டார்.
18. சபதமா? வாக்குறுதியா?
சின்னமலைக்கொழுந்தின் திகைப்பும், வியப்பும், தயக்கமும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக்கொண்டு அவரை மெய் மறக்கச் செய்வதற்கு முன்பே, சங்கரன்மலைக் கோட்டை வாச லில் மங்கல வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. ஆலவட் டங்கள் புடைசூழ குன்றுடையான் வந்து கொண்டிருந்தான். வாளும் வேலும் ஏந்திய வீரர்கள் சிலர் அவனுக்கு இரு புற மும் வந்து கொண்டிருந்தனர். சின்னமலைக்கொழுந்து அசை வற்ற நிலையில் அவன் வருவதையே பார்த்துக் கொண்டி ருந்தான். பொன்னர், சங்கர், வீரமலை மற்றும் ஆரிச்சம் பட்டி வீரர்கள் முகங்களில் மகிழ்ச்சியின் ரேகைகள் ஒளிவிட் டுக்கொண்டிருந்தன.
குன்றுடையான், தனது பரிவாரங்களுடன் அவர்களை வர வேற்று, கோட்டைக்குள் அழைத்துச் செல்லவே வந்திருக் கிறான் என்பதறிந்த சின்னமலைக்கொழுந்தும் மற்றவர்களும் குதிரைகளில் இருந்து கீழேயிறங்கி நின்று குன்றுடையானையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். குன்றுடையான், குறுநகையை உதடுகளில் தேக்கியவாறு சின்னமலைக்கொழுந்துவுக்கு நேராக வந்து நின்றான்.
இதழ்களில் புன்னகை தவழ்ந்தாலும் இமைகளின் ஓரங் களில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன இருவருக்குமே!
இருவருமே பேச முடியாமல் தவித்தனர்! ஆனால் ஒரே நேரத்தில் இருவரும் தழுவிக்கொண்டு ஒருக்கணம் கற்சிலை களாக காட்சி தந்தனர்!
“வாருங்கள் உள்ளே போகலாம்! பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமா? எத்தனை ஆண்டுகால பிரிவு?” என்று மெல்லிய தழுதழுத்த குரலில் கூறிய குன்றுடையான், சின்ன மலைக்கொழுந்தின் கரங்களைப் பற்றிக் கொண்டான். சின்ன மலைக் கொழுந்தும் உணர்ச்சிவசப்பட்டவராக குன்றுடையா னுடன் நடக்கலானார். குன்றுடையானின் பார்வை பொன்னர் சங்கர் இருவர் மீதும் விழத்தவறவில்லை. அப்படி விழுந்த பார்வை; ஏனோ அவர்களை விட்டுப் பிரியாமல் அவர் களையே பிணைத்துக் கொண்டது என்பது அந்த வீர இளை ஞர்களுக்குப் புரியவில்லை.
இருவரும் பணிவுடன் குன்றுடையானுக்குத் தலை வணங்கி வணக்கம் தெரிவித்து விட்டு சின்னமலைக் கொழுந்துவைப் பின் தொடர்ந்து கோட்டைக்குள் நடந்தனர்.
கோட்டை முகப்பைக் கடக்கும் போது; குன்றுடையான் தனது வீரர் இருவரைப் பார்த்து ஆரிச்சம்பட்டியிலிருந்து வந்துள்ள அனைவருக்கும் உணவு வசதி, தங்கும் வசதி அனைத் தும் உடனடியாகத் தயாராகட்டும்!” என்று ஆணையிட்ட வாறு; சின்னமலைக் கொழுந்தையும் மற்றவர்களையும் கோட் டைக்குள்ளிருக்கும் மாளிகை மண்டபத்தை நோக்கி அழைத்துச் சென்றான்.
பரந்த அளவில் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட கோட்டை யும் மாளிகையும் அது அல்ல என்றாலுங்கூட மிகப் பலம். வாய்ந்ததாகத் தோற்றம் அளித்தது. எப்போதாவது ஓய்வெடுக் கத் தங்குகிற இடம்தான் என்பதால் குன்றுடையானின் குடை யூர் மாளிகைக்கு அடுத்தபடியாகத் திகழக்கூடியதுதான் சங்கர மலைக் கோட்டையும் மாளிகையும்!
மாளிகை மண்டபத்தில் நுழைந்ததும் சின்னமலைக்கொழுந் தின் உடம்பெல்லாம் சிலிர்த்திடக்கூடிய உணர்ச்சி மயமான நிகழ்ச்சியொன்று அவரே எதிர்பார்க்காமல் திடீரென நடந்து விட்டது! ஆம்; அவரது தங்கை தாமரைநாச்சியாரும், தங்கை யின் மகள் அருக்காணித் தங்கமும், ஓடி வந்து அவர் காலில் விழுந்து கண்ணீர் பெருக்கினர்! சின்னமலைக் கொழுந்து, ‘தாமரை!” என்று கதறியவாறு சகோதர பாசத்தைப்பொழிந்து அவளைத் தூக்கி நிறுத்தினார்.
ஆண்டுகள் பல ஓடினாலும் ஆழமாக அவர்கள் இதயத்தில் பதிந்திருந்த ஆத்திரம் – அதன் காரணமாக ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட சுடுசொற்களில் வேகம் எல்லாமே பட படவென உதிர்ந்து போய் இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது பாச உணர்வு மட்டுமே ஓங்கி உயர்ந்தது!
“தாமரை! இதோ இவன்தான் வையம்பெருமான்; என் மகன்! இவர்கள் என் மகள்கள்; முத்தாயி, பவளாயி!” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் தாமரை நாச்சியார்; கரைபுரளும் உற்சாக வெள்ளத்துடன் ‘தெரியுமே! செல் லாண்டியம்மன் கோயில் திருவிழாவிலேயே பார்த்தோமே!’ என்று கூறிக்கொண்டே அவர்களிருவரையும் தன்னருகே இழுத்து அணைத்துக்கொண்டாள்!
“என் பெயர் அருட்கன்னி! என் அம்மாவும் அப்பாவும்; ஏன் எல்லோரும் என்னைச் செல்லமாக அருக்காணி தங்கம் என்று அழைப்பார்கள்’ என்று முந்திக் கொண்டாள் அருக் காணி தங்கம்! அவளருகே பாசமுடன் சென்று அவளது தலை யைக் கோதி உச்சி மோந்தார் சின்னமலைக் கொழுந்து! அதற் குள் சிலம்பாயி, அருக்காணியைத் தன் பக்கம் இழுத்துத் தழுவிக் கொண்டாள்.
குன்றுடையானின் விழிகளைப் போலவே தாமரைநாச்சி யின் விழிகளும் பொன்னர் சங்கர் இருவரையும் மொய்த் துக் கொள்ளத் தவறவில்லை! நெடுநாள் பகை கொண்டிருந்த இரு குடும்பங்கள் ஒன்று கூடி மகிழ்வது கண்ட மாயவர்: மெளனமாக அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டு ஒரு ஓர மாக ஒதுங்கியிருந்தார். குன்றுடையான். தாமரை நாச்சியார் இருவரைக் காட்டிலும் அவரது விழிகள்தான் பொன்னர் சங்கர் இருவரையும் விட்டுச் சிறிதும் அகலாமல் அப்படியே அவர்களது தோற்றத்தையும் அழகையும் கம்பீரத்தையும் பருகிக் கொண்டிருந்தன என்று சொல்ல வேண்டும்.
அவர்களும் மாயவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அன்று மாரிக் கவுண்டன்பாளையத்தில் காட்டுப் பன்றிகளுடன் அவர் கள் போரிட்டபோது அங்கு வந்து, தங்கள் ஆசானின் பாச றைக்கு வழி கேட்டவர் அல்லவா; அவர் எங்கே இங்கு வந் துள்ளார் என்ற ஆச்சரியம் அவர்களுக்கு!
என்ன மாயவரே; ஒதுங்கி நிற்கிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே அவரிடம் நெருங்கிச்சென்ற குன்றுடையான்; சின்ன மலைக் கொழுந்தைப் பார்த்து “மைத்துனரே! இவரைத் தெரிகிறதா?” என வினவியதும் – உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாத தவிப்பை சின்னமலைக் கொழுந்து, தனது அசடு வழியும் முகத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார்.
“இவர், தலையூர்க் காளியின் அமைச்சர்! பெயர் மாயவர்! இவரைப் பார்த்ததேயில்லையா? அல்லது கேள்விப்பட்டது கூடக் கிடையாதா?”
இப்படிக் குன்றுடையான் கேட்கவே; சின்னமலைக் கொழுந்து தன்னை சமாளித்துக்கொண்டு;
“அட்டா! அவரா? கேள்விப்பட்டது மாத்திரமா? நான் பார்த்திருக்கிறேனே! தாடியும் மீசையும் இப்போது அவரை அடையாளமே தெரியாமல் மாற்றிவிட்டது! பல ஆண்டு காலம் நமது தெற்குச்சீமையை விட்டே….” என்று பேச்சை முடிப்பதற்குள் மாயவர், புன்னகை புரிந்தவாறு அவரைப் பார்த்து;
“பல பகுதிகளில் அலைந்து திரிந்து விட்டு திரும்பத் தலை யூருக்கே வந்து விட்டேன்!” என்று பதில் அளித்தார்.
“எல்லோரும் உட்காருங்கள்! களைப்பாக இருக்கும்! முதலில் சிற்றுண்டி ஏதாவது அருந்திக் கொண்டே பேசலாம்!” என்று உபசரிக்கத் தொடங்கினான் குன்றுடையான்!
மாளிகையின் எழில் ததும்பும் அந்தக் கூடத்திலேயிருந்த இருக்கைகளில் அனைவரும் அமர்ந்தனர்.
பொன்னர், சங்கர், வீரமலை நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்ட சின்னமலைக் கொழுந்து, ‘ஏன்? நீங்களும் உட்காருங்கள்!” என்று அன்பு பொங்கச் சொல்லவே; மீண் டும் ஒரு முறை அனைவரது விழிகளும் பொன்னர் சங்கரை வட்டமிட்டன!
தாமரைநாச்சியின் விழிகள் அவர்களை நோக்கிய காட்சி; கடற்கரையில் காணாமற் போய் மண்ணில் புதைந்து விட்ட முத்துப் பதித்த கம்மல்களை எடுப்பதற்குக் கரங்கள் கொண்டு கடற்கரை மணலைத் தோண்டுவது போல் இருந்தது!
குன்றுடையானின் விழிகள் அவர்களை நோக்கிய காட்சி; தனது உருவம் இரண்டாகப் பிளந்து எதிரில் உள்ள நிலைக் கண்ணாடியில் தெரிவது எப்படி என்று வியப்புடன் கேட்பது போல் இருந்தது!
மாயவர் விழிகள் அவர்களை நோக்கின! அந்த விழிகள் தெளிவான ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன!
“இந்தப் பிள்ளையாண்டான்கள் பெயருக்கு அர்ச்சனை பண்ண வேண்டுமென்றுதானே இவர்கள் பெயர்களைக் கேட்டு செல்லாண்டியம்மன் கோயில் திருவிழாவில் அலைந்தீர்கள்? -என்று குன்றுடையான்; வையம் பெருமானையும் – முத்தாயி. பவளாயியையும் பார்த்துக் கேட்டுவிட்டான். வெள்ளை உள் ளம் படைத்த நெல்லியங்கோடன் அல்லவா? அதனால் மன தில் எந்த மாசு மருவுமின்றி எல்லோருக்கும் முன்னால் அந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்திவிட்டான்!
பதிலேதும் விளக்கமாகப் பேசினால் ஆபத்தாக முடியு மென்ற வெட்கத்துடன் முத்தாயி – பவளாயி இருவரும் தலையை மட்டும், “ஆமாம்” என்பது போல அசைத்தனர். வையம் பெருமானும் தனது தலையை ஆட்டி வைத்தான்.
‘தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய அலைந்தார்களா? ஓ! அப்படியானால் ஆரிச்சம்பட்டியின் இந்த அழகோவியங் களுக்கு அப்போதே நம் மீது காதல் அரும்பி விட்டிருக்கிறது!’ என்ற இன்ப நினைவில் பொன்னரும் சங்கரும் திளைத்துப் போயினர். கயிறு போட்டு இழுத்தும் கேட்காமல் கட்டு மீறி ஓடும் குதிரைகளைப் போல அவர்களது கண் பார்வைகள் முத்தாயி பவளாயி இருவரையும் நோக்கிப் பாய்ந்தன!
பலரும் குழுமியிருக்கும் இடத்தில் காதல் இதயங்களின் உதடுகளாகவும் நாக்குகளாகவும் இருந்து யாருமறியாமல் பேசக்கூடிய வித்தை கற்றவை விழிகள்தானே! அந்த விழிகள் அந்த வேலையை இப்போதும் செய்தன!
“நான் கூட இந்தப் பிள்ளையாண்டான்கள் இந்த மாளி கைக்கு வந்து போவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! மாரிக்கவுண்டன் பாளையத்து ஆசான் ராக்கியண்ணன் இந்தக் கோட்டைக்கு எப்போது வேண்டுமானாலும் வருவார் போவார்! அவருடன் இவர்களும் வருவதுண்டாம்!”
குன்றுடையான் அந்த வாலிபர்களைப் பற்றிய விபரம் சொல்லத் தொடங்கியதும் மாயவர் குறுக்கிட்டு; ஆனால் இவர்கள் பெயரை மட்டும் சொல்ல மாட்டார்கள்!’ என்று கூறியவர் அவர்களைப் பார்த்து, “ஏன் தம்பிகளே! அப் படித்தானே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
“ஆம்” என்று பொன்னர் சங்கர், தலையை மட்டும் அசைத்துப் பதில் கூறினர்.
“பெயர் சொல்லாததற்கு என்னப்பா காரணம்? ஒருவேளை உங்கள் பெற்றோர் பெயரே வைக்கவில்லையா?”
அவர்களை விடாமல் மாயவர் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன்;
எங்கள் பெயரை யாரிடமும் சொல்லக் கூடாது என்று எங்கள் ஆசான் ராக்கியண்ணன் கட்டளை!” என்றான் பொன்னன்!
அப்போது, சின்னமலைக் கொழுந்து சிறிதாக ஒரு கனைப் புக் கனைத்துக் கொண்டு ஏதோ சொல்வதற்கு முனைந்தார்.
அந்தச் சமயம், அருக்காணி தங்கம் நாலைந்து பெண்களு டன் சிற்றுண்டிகளை எடுத்து வந்து அவளே முன்னின்று அங் குள்ளவர்களுக்குப் பரிமாறச் செய்தாள். அந்த நேரம் சின்ன மலைக் கொழுந்து, தனது துணைவி சிலம்பாயியின் காதில் ஏதோ ரகசியமாகக் கூறிவிட்டு, அவளுடைய பதிலுக்காக அவ ளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது யோச னைக்குப் பிறகு சிலம்பாயி, கணவனிடம் ரகசியமாகவே ஏதோ சந்தேகம் கேட்டாள். அதற்குரிய பதிலையும் சின்ன மலைக் கொழுந்து அவள் காதில் சொன்னார். சிலம்பாயி, ஆழமாக சிந்திப்பது புரிந்தது. பிறகு அவள் அவரிடம் தலையை ஆட்டிக் கொண்டு தனது ஒப்புதலை அவர் காதிலேயே கூறினாள்.
சிற்றுண்டி பரிமாறிய பெண்கள் அந்த இடத்தை விட்டு அகன்ற பிறகு, சின்னமலைக் கொழுந்து மீண்டும் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“இந்த வாலிபர்கள் பெயரைச் சொல்லாவிட்டாலும் உலகில் பெயரை நிலைநாட்டப் போகிறவர்கள் என்று இப் போதே எனக்குத் தெரிகிறது! விளையும் பயிர் முளையிலே என்பதற்கு இவர்களே உதாரணம்! கரகம் விடும் விழாவில் செல்லாண்டியம்மன் கோயிலில் சூறைக்காற்றில் படகோடு காவேரியில் போயிருக்க வேண்டிய என் பெண்களை இவர் களே காப்பாற்றினர்! அது மட்டுமல்ல; செல்லாத்தாக் கவுண் டர் மகன் மாந்தியப்பன், தலையூர் தளபதி திருமலையின் துணையோடு என் பெண்களை வழிமறித்து ராச்சாண்டார் மலையில் கொண்டு போய் வைத்து விட்டான். இந்த சிங்கக் குட்டிகள் இருவரும் இல்லாவிட்டால் என் பெண்கள் வாழ்வும் பட்டுப்போயிருக்கும். ஆரிச்சம்பட்டிக் குடும்பமும் அழிந்து தொலைந்திருக்கும். ராச்சாண்டார் மலையில் திருமலையை வென்று என் பெண்களை மீட்டுத் தந்தால் – என் பெண்களை இவர்களுக்கு மணமுடிப்பதாக நான் அறிவித்திருக்கிறேன். இப் போது எனது வாக்குறுதியை நான் நிறைவேற்ற வேண்டியவ னாக இருக்கிறேன். நல்லவரும் வல்லவருமான மாயவர் முன்னிலையில் – எனது அன்பு மைத்துனர், அருமைத் தங்கை ஆகியோர் முன்னிலையில்; என் முடிவுக்கு அனைவரும் ஒப்பு தல் அளிக்க வேண்டுகிறேன்!”
சின்னமலைக்கொழுந்து பேசி முடிந்ததும் மாயவர் கேட்டார்.
“நீங்களே ஒரு பரிசு அறிவித்து நீங்களே முடிவும் எடுத்து விட்டீர்களா? உங்கள் பெண்களின் கருத்தை அறிந்தீர்களா? அல்லது அந்தப் பிள்ளையாண்டான்களின் கருத்துக்களை யாவது கேட்டீர்களா?”
மாயவரின் இந்தக் கேள்விக்கு சின்னமலைக் கொழுந்து விடையளிப்பதற்கு முன்பு, பொன்னர் முத்தாயி – சங்கர் பவ ளாயி -இந்த இரு இணைகளின் கன்னங்கள் சிவந்து, கண் களிலே புத்தொளி பிறந்து, மௌன மொழியிலேயே தங்கள் சம்மதத்தை வெளிப்படுத்திவிட்டனர்!
“ராக்கியண்ணர் எங்கள் ஆசான்! அவர் ஒப்புதல் கேட் காமல் எதுவும் நடக்காது” என்று வீரமலை ஒரு கல்லைத் தூக்கித் போட்டான்!
அந்தக் கல்லின் மீது இன்னொரு பெரிய கல்லைத் தூக்கித் தாமரைநாச்சியார் போட்டாள்.
“அண்ணா! திருமண நாளன்று நான் செய்த சத்தியத்தை மறந்து விட்டாயா? நானும் என் அத்தானும் மாட மாளிகை யில் இருப்பதை நீ பார்க்கத்தான் போகிறாய்! நான் பெற் றெடுக்கிறேன் இரண்டு சிங்கக்குட்டி மகன்களை! நீயும் இரண்டு பெண்களைப் பெற்றுக்கொண்டு அந்த சிங்கக்குட்டிகளைத் தேடிக்கொண்டு வரத்தான் போகிறாய்! என்று சூளுரைத்திருக் கிறேன் அண்ணா! அதை நீ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்!”
தாமரைநாச்சியாரின் பேச்சில் ஆவேசம் இருந்தது! அதே சம யம்; பழைய பகை அகன்று ஒரு பாச உணர்வு வேகமாகப் பொங்கிக் கொண்டிருந்தது!
தாமரையைப் பார்த்து மென்மையான குரலில் சின்னமலைக் கொழுந்து கேட்டார்;
“ஏனம்மா தாமரை! உன் சத்தியம் நிறைவேற வேண்டு மென்று எனக்கு கூட ஆசைதான்! நிறைவேறினால் நமது குடும்பங்களின் நீண்ட கால விரோதம் ஒழிந்திருக்கும். ஆனால்; நீ அன்று சொன்ன அந்த சிங்கக் குட்டிகள் பிறந்தது உண்மை! அவைகள் இறந்து போய் விட்டதும் உண்மைதானே அம்மா!” என்று.
அதைக் கேட்டதும் தாமரை நாச்சியார் பரபரப்படைந்தாள்!
”யார் சொன்னது? என் பிள்ளைகள் உயிரோடு இருக்கி றார்கள். விரைவில் அவர்களை நான் காண்பேன். அண்ணா! நீ உன் முடிவை மாற்றி உன் பெண்களை என் பிள்ளைகளுக் குத்தான் மண முடிக்க வேண்டும். நீ மறுத்தாலும், என் சப தத்தை நான் எப்படியும் நிறைவேற்றுவேன்!”
தாமரை சீறினாள்.
அப்போது மாயவர் சற்று உரத்த குரலில் “இப்போது பிரச்சினை; தாமரையின் சபதம் நிறைவேறுவதா? அல்லது சின்னமலைக் கொழுந்தின் வாக்குறுதி நிறைவேறுவதா? என் றல்லவா ஆகி விட்டது!” என்று ஒரு புதிய குழப்பத்தை உருவாக்கினார்.
19. உண்மையின் ஊர்வலம்
“என் தங்கையின் சபதம் நிறைவேற வேண்டுமென்றால் அவள்பெற்ற குழந்தைகள் இப்போது உயிரோடு இருக்க வேண்டுமே!”
மாயவரைப் பார்த்து மட்டுமல்ல; தாமரையையும் ஓர விழி களால் நோக்கியவாறு சின்னமலைக்கொழுந்து கேட்டார்.
அந்தக் கேள்விக்கு விளக்கமாகவே விடையளிக்கும் முனைப் போடு மாயவர்; கனைத்துக் கொண்டு நிமிர்ந்தார்.
“தாமரை பெற்ற குழந்தைகள் உயிரோடிருப்பதாகத்தான் நான் நம்புகிறேன். அப்படி அவர்கள் இருந்தால், நாமெல் லோரும் சேர்ந்து தாமரை நாச்சியின் சத்தியம் நிறைவேறுவதற் குத்தான் ஒத்துழைக்க வேண்டும்”.
மாயவரின் இந்தப் பீடிகையைக் கேட்டதும் சின்னமலைக் கொழுந்து சிறிது அதிர்ந்து போனார்.
“அது எப்படி? அந்தக் குழந்தைகள் உயிரோடிருப்பதாக, நம்புவதாக, ஓர் அனுமானம் செய்து கொண்டு அதற்காக நான் அளித்த வாக்குறுதியை நட்டாற்றில் விட்டு விடுவது நியாயம் ஆகுமா? இந்த இளம் வீரர்கள் எனது வாக்கு நாண யத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்?”
சின்னமலைக்கொழுந்து, தனது வாக்குச் சுத்தத்திற்கு ஊறு வந்து விடக் கூடாது என்பதிலே எவ்வளவு அக்கறை காட்டு கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மாயவர்;
“அந்த வாலிபர்கள் என்ன கருதுகிறார்கள்? என்பதை இப் படி சுற்றி வளைத்து அறிந்து கொள்ளப் பார்க்கிறீர்கள்! உங்களுக்கும் எனக்கும் ஏன் சிரமம்? அந்த வாலிபர்களே சொல் லட்டுமே; வாக்குறுதியைக் காக்க வேண்டுமா? சபதத்தை நிறைவேற்ற வேண்டுமா? என்று!” என்பதாகப் புதிர் ஒன் றைப் போட்டார்.
அப்போது பொன்னர், சங்கரின் முகத்தைப் பார்த்தான். சங்கர் தனது சார்பில் பொன்னர் கருத்துக் கூற உரிமை படைத்தவன் என்பதைத் தனது பார்வையால் தெளிவுபடுத்தி னான். அதனால் பொன்னரே; அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணமுன்வந்தான்!
“நானோ என் தம்பியோ வரமாகப் பெற்றதல்ல அந்த வாக்குறுதி! ஆரிச்சப்பட்டியார் அவராகவே அப்படியொரு பிரகடனத்தைச் செய்தார்! நாங்கள் அதுபோல ஒரு வாக்குறுதி கேட்டு அதற்காகத் தரப்பட்டதுமல்ல! தசரதன் கைகேயிக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதன் பிறகு சங்கடப்பட்ட தைப் போல யாரும் சங்கடப்படத் தேவையில்லை. நாங்கள் அவர்களுக்கு செய்த உதவி எதுவும் கைம்மாறு கருதி செய்யப் பட்டதல்ல! அதனால் என்சார்பிலும் என் தம்பியின் சார்பி லும் திறந்த மனத்துடன் தெரிவிக்கிறேன்; வாக்குறுதியை நாங்கள் யாரும் வலியுறுத்தப் போவதில்லை!”
இந்தச் சொற்கள் பொன்னரிடமிருந்து வெளிப்பட்ட போது, முத்தாயியும் பவளாயியும் பெரும் ஏமாற்றத்துக்காளாயினர்.
வாக்குறுதி கிடக்கட்டும்; வளர்த்துக் கொண்ட காதலின் கதி என்ன ஆவது? அடேடே! எவ்வளவு சாதாரணமாகத் தங்களிருவரையும் அந்த இளம் வீரர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள்! அத்தை தாமரைநாச்சியாரின் புதல்வர்கள், “இதோ நாங்கள் உயிரோடிருக்கிறோம்!” என்று எதிரே வந்து நின்றாலும் என்ன செய்ய முடியும்? அதற்காக, மனதை மாற் றிக் கொள்ள முடியுமா? இவர்கள் இருவரையும் சந்திப்பதற்கு முன்பு; ஒருவேளை அத்தையின் பிள்ளைகள் வந்திருப்பார் களேயானால் அது வேறு விவகாரம்! உண்ட உணவின் சத்து. ரத்தத்தில் கலப்பதை விட வேகமாகவும் பரவலாகவும் உட லின் ஒவ்வொரு அணுவிலும், உள்ளத்தின் முழுப் பரப்பிலும் இந்த அற்புத வாலிபர்களின் மீது கொண்ட காதல் மகாத் மியம் இரண்டறக் கலந்து விட்டதே; இந்த நிலையில் தந்தை தந்த வாக்குறுதியை வலியுறுத்தப் போவதில்லையென்று இந்த இனியவர்கள் பின்வாங்குகிறார்களே; இது எந்த வகையில் நியாயமாகும்?
இவ்வாறு முத்தாயி, பவளாயி இருவருமே எண்ணி விம்மினர்!
அந்தப் பெண்களின் மனப்புயலை; மாயவர் தொலைவி லிருந்தே அவர்களின் முக மாற்றத்தின் மூலம் புரிந்து கொண் டார். அதன் அறிகுறியாக மெல்லிய புன்னகை அவருக்கு இழையோடிற்று. அந்தப் புன்னகையில் முதிர்ச்சி கலந்த குறும் புத்தனமும் நிழலாடிற்று. சின்னமலைக்கொழுந்தின் தோளில் கையை வைத்தார். தலையூர் மன்னனின் அமைச்சர் என்ற முறையில் அவரிடம் கொண்டிருந்த மரியாதையின் காரணமாக சின்னமலைக்கொழுந்து நெகிழ்ந்து போனார். மாயவர், எல்லோரையும் பார்த்து ஒருமுறை கண்களை சுழலவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்.
“தாமரைநாச்சியாரின் உணர்வுகளை நாம் சாதாரணமாக மதித்து ஒதுக்கி விட முடியாது. நான் தாமரைநாச்சியாரிடமும் அவளது அன்புக் கணவன் குன்றுடையானிடமும் கேட்டறிந்த உண்மைகளை ஆரிச்சம்பட்டியாரும் அறிந்து கொள்வது நல் லது! அன்றைக்கு ஏதோ, செல்லாத்தாக்கவுண்டர் வீட்டு சம் பந்தம் திடீரெனச் சிதறிப் போனதற்கும், தலையூர்க்காளியின் பகையைச் சம்பாதித்துக் கொள்வதற்கும் தாமரையாள் எடுத்த முடிவு. காரணமாக இருந்ததையொட்டி சின்னமலைக் கொழுந்து சினம் கொண்டிருக்கலாம்! ஆனால், தாமரையும் குன்றுடையானும் அன்று திருமண மண்டபத்தை விட்டு வெளி யேறியது முதல் பட்டுள்ள வேதனைகள் கொஞ்சமல்ல! இந்தக் கொங்கு வேளாளர் குலச் செல்வி; தான் கொண்ட கொள் கையைக் காப்பாற்றி – எதிர் வந்த எத்தனையோ துன்ப துய ரங்களைக் கடந்து – யார் தன்னையும் தன் கணவனையும் வீட்டை விட்டு விரட்டினார்களோ; அந்த அண்ணன் குடும் பத்தை அணிதேர்ப் புரவிகளுடன் வரவேற்று உபசரிக்கும் அளவுக்கு இன்றைக்கு உயர்ந்து நிற்கிறாள் என்றால் இது பெண்மையின் திண்மைக்குக் கிடைத்த வெற்றியல்லவா?’
மாயவரின் பேச்சு அவரது உடலையே புல்லரிக்க வைத்தது! சற்றுக் குரல் கூட தழுதழுத்தது! அப்போது தாமரை நாச்சியார் தனது கண்களில் அரும்பிய நீர்த்துளிகளை யாரும் பார்க்கா மல் மறைத்துக்கொள்ள ஆகாயத்தைப் பார்த்து நிமிர்ந்து கொண்டாள்! மாயவரோ பேச்சை நிறுத்தவில்லை!
“அரண்மனையில் பிறந்த மாதரசி! நெல்லியங்கோடனிடம் வைத்த அன்பைமாற்றி; வேறொருவனுக்கு மனைவியாக விரும்பாமல் தன்னையொரு தியாகவல்லியாகவே ஆக்கிக் கொண்டாள்! கண்ணுக்கெட்டாத தொலைவு பரந்து கிடக்கும் காணிகளில் இருந்து தனது பணியாட்கள் பாடுபட்டுப் பயி ரிட்ட தானியங்களைக் கொண்டுவந்து குவித்திடும் வசதிமிக்க வாழ்வைத் துச்சமென உதறித் தள்ளி விட்டு, தானே தனது கணவனுடன் வயலில், காடுமேடுகளில், உடல் கருக உழைத்து வேளாண் குடிமகளின் பெருமைக்கோர் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தப் பெருமாட்டி, பெற்ற பிள்ளைகளை இழந்து தவித்திடும் வேதனையை எப்படி விவரிக்க முடியும்? தவ மிருந்து பெற்ற பிள்ளை என்பார்கள்! அது ஒரு சம்பிரதாயத் துக்காகச் சொல்லப்படுவதல்ல என்பதை மெய்ப்பிக்கும் வண் ணம் உண்மையிலேயே தவமிருந்து தங்களை வருத்திக் கொள்ப வர்களை விட அதிக அளவுக்குத் தன்னை வருத்திக் கொண்ட சிறப்பு இந்த நாச்சியாருக்கு உண்டு! ஏமாற்றும் குள்ள நரிகள் நிறைந்த இந்த உலகத்தில் எதையும் எளிதில் நம்பும் குன்றுடை யானைத் தனது ஆற்றலாலும், அறிவுத் திறனாலும் பாதுகாத் துப் பலரும் போற்றும் வண்ணம் குன்றுகள் நிறைந்த பகுதி களுக்குத் தலைவனாக்கிய தாமரைநாச்சியார். தங்கள் குடும்பத் துக்கு வாரிசு விளக்குகள் தோன்றவில்லையே என்று பெருங் கவலைப்பட்டாள். அதற்காகக் கணவனும் மனைவியும் ஆடாத தீர்த்தமில்லை! கும்பிடாத கோயில் இல்லை! பிள்ளையில்லா மல் இவர்கள் படும் கவலையை அறிந்த செல்லாத்தாக் கவுண் டர் என்ன செய்தார் தெரியுமா?”
மாயவர், அவரே கேள்வி கேட்டுக் கொண்டு அவரே அதற் கான பதிலைச் சொல்வதற்கு முன் அனைவரும் அவருடைய முகத்தையே ஆவலுடன் பார்த்தனர். தாமரைநாச்சியார் தலை யைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள். குன்றுடையானும் தனது வாழ்க்கை ஏட்டின் கடந்த காலப் பக்கங்களை மாயவர் புரட்டிப் படித்துக் காட்டுவதை ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருந்தான். மாயவர் மீண்டும் தொடர்ந்தார்!
“சில சோதிடர்களைத் தயார் செய்து செல்லாத்தாக் கவுண் டர் இவர்களிடம் அனுப்பினார். எங்கிருந்து வந்த சோதிடர் கள் என்று தெரியாத இவர்களிருவரும் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்கள் கேட்ட தட்சணையும் ஏனைய பொருள் களும் கொடுத்து; குழந்தை பாக்கியம் உண்டா என்பது பற்றி சோதிடம் கேட்டனர். மதுக்கரை செல்லியம்மனுக்குத் தேர் செய்து வைத்து, அதில் அம்மனை அலங்கரித்துத் தேரோட்டம் நடத்தினால் உடனே புத்திரபாக்கியம் உண்டாகும் என்று சோதிடர்கள் புளுகிவிட்டுப் போனார்கள்.
“அதை நம்பிய குன்றுடையானும் தாமரைநாச்சியாரும் உடனே செல்லியம்மனுக்குத் தேர் செய்யும் ஏற்பாடுகளை கவனித்தனர். தனது சூழ்ச்சித் திட்டத்தில் ஏமாந்து விட்ட தாமரையையும் குன்றுடையானையும் பழி வாங்க இதுதான் சமயமென்று தேர் செய்யும் தச்சர்களில் ஒருவரைப் பிடித்து செல்லாத்தாக் கவுண்டர் மற்றொரு சூழ்ச்சிக்கு வித்திட்டார்! அதன்படி தேர் ஓடும்போது திடீரென சிக்கிக் கொள்வது போல யாருக்கும் தெரியாமல் ஒரு பயங்கர சதி உருவாக்கப் பட்டது. தேர்த் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. ஆனால் விழா நாளன்று புறப்பட்ட தேர், வீதியில் சிறிது தூரம் ஓடிய பிறகு நின்றுவிட்டது! அப்போதும் செல்லாத்தாக் கவுண்டரால் அனுப்பப்பட்ட அந்த சோதிடர்கள் வந்தார்கள். அவர்கள் ஏதோ அம்மன் குற்றம் நடந்து விட்டதென்றும் அத னால்தான் தேர் ஓடவில்லை சிக்கிக் கொண்டதென்றும் பயமுறுத்தினர்! அது மட்டுமல்ல; தேர் முழுமையாக ஓடி நிற்காவிட்டால் அந்த ஊர் மக்களுக்கே ஆபத்து என்றும் மிரட்டினர்! அதற்குப் பரிகாரம் என்னவென்றால் தேர்ச் சக் கரத்தில் யாராவது ஒரு சுமங்கலி தனது தலையைக் கொடுத்து பலியாக வேண்டும். இல்லையேல் ஊரே அழிந்து விடும் என்று அபாண்டப் பொய் ஒன்றை அவிழ்த்துக் கொட்டினர். தங்கள் குடும்பம் அழிந்தாலும் பரவாயில்லை; தான் அழிந் தாலும் பரவாயில்லை தங்களை நம்பி வாழும் ஊர் மக்க ளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று கூறி, தாமரைநாச்சியார் – தானே தேர்க்காலில் தன்னைப் பலி கொடுத்துக் கொள்ளத் தயாரானாள். நீயே போகும்போது நான் மட்டும் என்ன; இருவரும் ‘சேர்ந்தே போவோம் என்று தாமரையுடன் தேர்க்காலில் படுத்துச் சாகக் குன்றுடையானும் தயாராகவே அதைத் தடுக்க ஊரே முனைந்து நின்றது! இவர்களோ கேட்க வில்லை! அன்பு வடிவம் அருள் பொழியும் உருவம் எனப்படுகிற அம்பாள்; தனது மக்களை அழிப்பாளா; என்ற எண்ணமே இவர்களுக்கு வரவில்லை! சோதிடத்தை நம்பினார் கள். செல்லாத்தாக் கவுண்டர் சூழ்ச்சி வலையில் சிக்கினார் கள். ஊராரை மீறிக்கொண்டு தேர்ச் சக்கரங்களில் போய்ப் படுத்துக்கொண்டு; தங்கள் மீது தேரை இழுக்குமாறு ஆணை யிட்டார்கள்! அப்போது அங்கே ராக்கியண்ணன் வந்துவிட் டார். அவர் செல்லாத்தாக் கவுண்டரின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார். குன்றுடையானையும், தாமரை நாச்சியையும் பார்த்து முதலில் நீங்கள் தேர்க்காலை விட்டு எழுந்திருங்கள்; நான் இந்தத் தேரை எந்தப் பலியும் கொடுக்காமலே ஓட வைக் கிறேன் என்றார்! சொன்னபடி செய்தார்! தேரில் நடத்தப்பட்டிருந்த சதி வேலையைக் கண்டுபிடித்துச் சரி செய்தார் – பிறகு தேர் ஓடிற்று!
“இப்படிக் கோயில்,குளம்,தேர், திருவிழா, அர்ச்சனை, பிரார்த்தனை என்று க்ஷேத்திரங்களுக்கு அலைந்து திரிந்து கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, குடையூர் மாளிகையிலேயே தங்கியிருங்கள்; அல்லது சங்கரன்மலையில் உள்ள அரண் மனையில் தங்குங்கள் ஆண் பெண் உறவில் உருவாகக் கூடிய இனவளர்ச்சிக்கு ஆண்டவன் மீது பழியைப் போடாதீர் கள்” என்று ராக்கியண்ணன் சிரித்துக் கொண்டே சொன்ன போது குன்றுடையானுக்கும் தாமரைநாச்சியாருக்கும் ஏதோ ஒரு அவநம்பிக்கை தான் இருந்தது. பிறகு அவர்களே யோசித் துப் பார்த்தார்கள். சங்கரன்மலையில் உள்ள அரண்மனையில் வந்து தங்கிக் கொண்டார்கள். திருமணமான புதிதில் பட்ட ஷ்டங்கள் நீங்கி; தாமரைநாச்சியாரின் “தற்காத்துத் தற் கொண்டான் பேணி” என்ற குறள்மொழிக்கொத்த செயற் பாடுகளின் விளைவாக வளமான வாழ்வு பெருகியதை அவர் கள் வீணாக்க விரும்பவில்லை. சங்கரன்மலைப்பகுதி ஒரு காலத்தில் இயற்கையின் தொட்டிலாகவே இருந்த இடம்! இளம் இதயங்களில் உணர்ச்சி அலைகளை எழும்பிடச் செய் யும் வகையில் சலசலத்து ஓடும் அருவிகளின் ஓரத்தில் ஆடும் மயிலினங்கள் பாடும் குயிலினங்கள் துள்ளி ஓடும் மானினங்கள் – இவை சேர்ந்து இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் ஏராளம்! ஏராளம்! இன்று அவ்வளவு இல்லாவிடினும் இரு பது ஆண்டுகளுக்கு முன்பு குன்றுடையானும் தாமரைநாச்சி யாரும் அக்காட்சிகளில் மயங்கினார்கள்! அவர்களை இப் போது பிள்ளைகுட்டி பெற்ற பெருமக்களாக எதிரே உட்கார வைத்துக்கொண்டு; சங்கரன்மலையின் இயற்கையின்பச்சார லால்தான் இல்லற சுகத்தின் அருமையை அவர்கள் உணரத் தலைப்பட்டார்கள் என்பதோ அதை மேலும் விவரிப்பதோ அழகல்ல! உணர்ந்ததின் தொடர்ச்சியாக தாமரைநாச்சியார் கர்ப்பமுற்றது கண்டு குன்றுடையானுக்குக் கொள்ளை மகிழ்ச்சி! குடையூரிலும் விழா எடுத்துக் கொண்டாடினான்!
“சங்கரன்மலையும் விழாக்கோலம் பூண்டது! தாமரைநாச்சி யார் கருவுற்றிருக்கிற செய்தி ஆரிச்சம்பட்டிக்கும் வழக்கப்படி தெரிவிக்கப்பட்டது. அப்படி சொல்லியனுப்பியதில் தாம ரைக்கு விருப்பமில்லையென்றாலும் எதையும் மனதில் வைத் துக்கொண்டு அதற்காக அலட்டிக்கொள்ளாத குன்றுடையான் அந்தத் தகவலை உரிய முறையில் சம்பந்தி வீட்டுக்குத் தெரி வித்து விட்டான். ஆனால் கொங்கு வேளாளர் குல முறைப்படி கர்ப்பமுற்ற ஏழாவது மாதம் பண்டம் பலகாரங்களுடனும் பல்வகைக் கட்டுச் சாதங்களுடனும் சென்று பெரிய விருந்தும் நடத்தி பெண்ணைத் தாயார் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆரிச்சம்பட்டிக்காரராகிய நீங்கள் வருவீர்கள் என்று குன்றுடையான் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததுதான் மிச்சம்!”
இவ்வாறு கூறிக்கொண்டே மாயவர் சின்னமலைக்கொழுந்தை உற்று நோக்கியபோது, அவர் தனது கடந்த காலப் போக்கை எண்ணித் தலையைக் கவிழ்ந்து கொண்டார்.
“காலங்கடந்தாவது செய்து விட்ட தவறுக்காக வருந்தினால் அதைப் பாராட்டத்தான் வேண்டும்” என்று உவகை பொங்க மாயவர் கூறியதோடு, தனது விளக்கத்தையும் தொடர்ந்தார்.
“தாமரை கருவுற்று ஏழு மாதம் ஆகிவிட்டது என்ற செய்தி, வளநாட்டில் செல்லாத்தாக்கவுண்டருக்குக் கிடைக்காமல் இருக் குமா? குன்றுடையானுக்குக் குழந்தை பிறந்தால் எதிர்காலத் தில் வளநாட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்கக் கூடும் என்ற அச்சம் செல்லாத்தாக் கவுண்டருக்கு ஏற்பட்டது! குன்றுடை யானோ, தனக்குச் சேரவேண்டிய நிலப்பரப்பு சேரவில்லை யென்றாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல், இருப்பதை வைத்துக் காவல் ஆட்சி நடத்துகிறவன் – அவனுக்குப் பிறக்கிற குழந்தைகளும் அவனைப் போலவே மசையாக இருப்பார் கள் என்று யார் கணிக்க முடியும்? அதனால் குன்றுடையா னுக்கு குல விருத்தியே கூடாது – அது எதிர்காலத்தில் தனக் குப் பெரும்பகையாக விளங்கக்கூடும் என்று செல்லாத்தாக் கவுண்டர் முடிவு கட்டினார். தாமரை நாச்சியாருக்கு பிள் ளைப்பேறு மருத்துவம் பார்ப்பதற்காக இரண்டு மருத்துவச்சி கள் தயாரிக்கப்பட்டார்கள். செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தி யப்பனும் அந்த மருத்துவச்சிகளுக்குப் பல திட்டங்களை சொல் லிக் கொடுத்து அதற்கு வெகுமானமாக ஒரு பொற்கிழியும் அளித்து அனுப்பினார்கள். தாமரைக்குப் பிரசவ நேரம் வந்து விட்டது! வலி பொறுக்கமுடியாமல் கத்திக்கொண்டிருந்த போது குன்றுடையான் என்ன செய்வதென்று புரியாமல் மனைவியின் துடிப்பைப் பார்த்து துவண்டு போனான். அந்த வேளையில்தான் மருத்துவச்சிகள் இருவர் வந்திருப்பதாகக் குன்றுடையானுக்குச் செய்தி வந்தது. மனைவி படும் துயரத் தைக் கண்டு ஆண்டவன்தான் மருததுவச்சிகளை அனுப்பி வைத்திருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான். உண்மை யில் அந்த மருத்துவச்சிகளை அனுப்பி வைத்த செல்லாத்தாக் கவுண்டரின் திட்டம் என்ன என்பதுதான் முக்கியம்! அந்த மருத்துவச்சிகள் என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு சூழ்ச்சி வகுத்து வழங்கப்பட்டு விட்டது.
தாமரைநாச்சியார் புயல் வீசுவது போன்ற பிரசவ வலிக்கு ஆட்பட்டுக் கதறினாலும்கூட பிள்ளை பிறந்தவுடன் ஒரு அமைதிக்கு ஆளாகி; மிகவும் களைப்புற்றுக் கிடப்பாள். அந் தச் சில விநாடிகளில் தாமரையின் குழந்தையை மறைத்து விட வேண்டும். குன்றுடையான் குழந்தையைப் பார்க்க ஓடி வரு வான். அவனிடம் குழந்தையே பிறக்கவில்லையென்றும் கருப்பையிலிருந்து உதிரம்தான் பெருகியதென்றும் – வயிற்றி லேயே குழந்தை சிதைந்து விட்டதால் ஏற்பட்ட விபரீதம் என் றும் அந்த மருத்துவச்சிகள் கூறிவிட வேண்டும்.
இந்தத் திட்டத்துடன் பிரசவ அறைக்குள் அந்த மருத்துவச்சி கள் இருவரும் நுழைந்தார்கள். தாமரைநாச்சியார் வலி பொறுக்க மாட்டாமல் கூச்சலிட்டுக் கத்திக் கொண்டிருந்தாள். அரண் மனையில் உள்ள பெண்கள் பதட்டத்துடன் பிரசவ அறைக்குள் வர முயன்ற போதிலும் மருத்துவச்சிகள் மிகவும் கண்டிப்பாக அவர்களையெல்லாம் தொலைவில் போய் இருக்கச் சொல்லி விட்டனர். குன்றுடையான் தவித்துப் போய் பிரசவ அறை யைச் சுற்றி சுற்றி வந்தான். மருத்துவச்சிகள் அவனைப் பார்த்து “நாங்கள் எங்கள் வேலையை ஒழுங்காகப் பார்த்து அம்மா வுக்கு சுகப் பிரசவம் நடக்க வேண்டுமென்று நீங்கள் நினைத் தால் தயவுசெய்து உங்கள் இடத்தில் போய் அமருங்கள். இல்லாவிட்டால் நாங்கள் போய் விடுவோம். இப்படிச் சொல் வதற்காக எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். இடையூறு எதுவுமில்லாமல் எங்கள் கடமையை சரியாகச் செய்ய வேண்டு மென்பதற்காக இதனைக் கூறுகின்றோம்.” என்று பவ்யமாகக் கூறியதும், குன்றுடையான் சரி! சரி! எப்படியாவது தாம் ரைக்கு சுகப் பிரசவம் ஆனால் சரி! உங்கள் மீதும் ஆண்டவன் மீதும் பாரத்தைப் போட்டு விட்டுப் போகிறேன்” என்றுரைத்து விட்டுக் கலங்கியிருந்த கண்களைத் துடைத்தவாறே அந்த இடத்தி லிருந்து அகன்றான்.
நீண்ட நேரம் தாமரைநாச்சியார் பிரசவ வேதனையால் துடித்த பிறகு உச்ச கட்ட வலியொன்றுடன் குழந்தை பிறந்து விட்டது! ஆண் குழந்தை! தாமரையாள் மயக்கமுற்றுத் துவண்டு கிடந்தாள். பெரிய மருத்துவச்சி சின்னமருத்துவச்சியிடம் குழந் தையைத் தூக்கிக் கொடுத்து; மறைத்து எடுத்துக் கொண்டு ஓடச் சொன்னாள். அவளும் அந்த சிசுவைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். சின்ன மருத்துவச்சி ஓடிய சிறிது நேரத்துக்கெல் லாம் பெரிய மருத்துவச்சிக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.
தாமரை நாச்சியார் மீண்டும் பிரசவ வேதனையால் துடிக்க ஆரம்பித்தாள். அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது! அதை யும் பெரிய மருத்துவச்சி தூக்கிக்கொண்டு சின்னவள் போன வழியிலேயே ஓடினாள்!
இருவரையும் எதிர்பார்த்துக் கொண்டு கரும்போர்வையால் தன்னை மூடிக் கொண்டிருந்த ஒரு உருவம்; அந்த இரண்டு குழந்தைகளையும் தனது கைகளில் வாங்கிக் கொண்டது.
தாமரைநாச்சியார் இரு குழந்தைகளைப் பெற்ற களைப்பில் சோர்வுற்று மயக்கம் தெளியாமல் படுத்திருந்தாள். பிரசவ அறையில் எந்த சப்தமும் கேட்கவில்லையே என்ற சந்தேகத் துடன் குன்றுடையான் மெல்ல நடந்து வந்து எட்டிப் பார்த் தான். அப்பொழுதுதான் கண் விழித்த தாமரைநாச்சியார், தன்னருகே குழந்தையில்லாதது கண்டு – “என் குழந்தை? என் குழந்தை? எங்கே என் குழந்தை?’ என்று கதறியழத் தொடங்கினாள். குன்றுடையானுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் அங்கு சூழ்ந்துவிட்ட அரண்மனைப் பெண்களைப் பார்த்து, ‘குழந்தை எங்கே?” அந்த மருத்துவச்சிகள் எங்கே?” என்று அவன், ஆவேசமாகக் கத்தினான். குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என யூகித்துக் கொண்ட தாமரை, “என் குழந்தையை என்ன செய்தீர்கள்?” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.
“ஒரு குழந்தையல்ல அம்மா! பிறந்தது இரண்டு குழந்தை! இரண்டும் இரண்டு சிங்கக் குட்டிகள்! என்றவாறு கையில் இரு குழந்தைகளையும் ஏந்திக் கொண்டு அந்த கரும் போர்வை யணிந்த உருவம் பிரசவ அறையின் வாசலில் வந்து நின்றது. அந்த உருவத்துக்கருகே மருத்துவச்சிகள் இருவரும் விலங்கு களால் பிணைக்கப்பட்டு நின்றனர்.
“என்ன இதெல்லாம்?” என்று குன்றுடையான் பதறினான்.
“குழந்தைகளைக் கொல்லத் திட்டம்! குழந்தையே பிறக்க வில்லையென்று சொல்லத் திட்டம்! அந்தத் திட்டத்தைத் தவிடு பொடியாக்கி விட்டேன்! சதிகாரிகளையும் கைது செய்திருக்கிறேன்!”
இப்படி கம்பீரமாக பதிலளித்தது அந்தக் கரிய உருவம்!
தாமரை, பிள்ளை பெற்ற களைப்பை எங்கேயோ தூக்கி எறிந்து விட்டு எழுந்தோடி வந்து குழந்தைகளைத் தனது கையில் வாங்கிக் கொண்டாள்.
கரிய உருவம், தன்னை மறைத்திருந்த கரும் போர்வையை விலக்கியது போர்வைக்குள்ளிருந்தது ராக்கியண்ணன்!.
குன்றுடையான், மெய்மறந்து ராக்கியண்ணனைக் கட்டித் தழுவிக் கொண்டான்!”
மாயவர் இந்த நிகழ்ச்சியை வர்ணித்தபோது குன்றுடையான் தாமரைநாச்சியார் இருவர் கண்களும் நீரைப் பொழிந்தன. மற்றவர்கள் நீண்ட பெருமூச்சு விட்டனர். மாயவர் மேலும் தொடர்ந்தார்.
காணாமற் போக இருந்த குழந்தைகளை ராக்கியண்ணன் காப்பாற்றிய கட்டம் வரையில் சொன்னேன். அந்தக் குழந்தை கள் மீண்டும் காணாமற் போனது எப்படி என்பதையும் சொல்லி விடுகிறேன்” எனத் தொடங்கினார் அவர்!
20. அம்மன் அருள்வாக்கு
மாயவர் விரித்துரைத்த கடந்த கால நிகழ்ச்சிகளும் காணா மற்போக இருந்த குழந்தைகளை ராக்கியண்ணன் மீட்டுக் கொடுத்த சம்பவமும்; குன்றுடையானும் தாமரைநாச்சியாரும் மாயவருக்குக் கூறி – அவர் அதனையே திரும்பக் கூறிய கார ணத்தால், அந்த நிகழ்ச்சிகளோடு ஒன்றிய தங்கள் உணர்வின் பிரதிபலிப்பை மட்டுமே வெளிப்படுத்திய குன்றுடையானும் தாமரைநாச்சியாரும், இப்போது மாயவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
செல்லாத்தாக் கவுண்டரின் சூழ்ச்சித் திட்டப்படி தங்கள் குழந்தைகளைக் கொல்வதற்காகத் தூக்கிச் சென்ற மருத்துவச்சி களை மடக்கிப் பிடித்து; அடையாளம் தெரியாமல் கரும் போர்வைக்குள் புகுந்து கொண்டு குழந்தைகளைக் காப்பாற்றிக் கொடுத்த ராக்கியண்ணன்; குழந்தைகளைக் காப்பாற்றியது யார் என்று யாரிடமும் தெரிவிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டு விடை பெற்றார்.
அதுவரையில் நடந்தவைகளை விவரித்த மாயவர்; அங் குள்ளவர்களைப் பார்த்து, “இனிமேல் நான் சொல்லப் போவது மாரிக்கவுண்டன்பாளையத்துப் பாசறையில் ராக்கி யண்ணனைச் சந்தித்த போது அவர் வாயிலாகத் தெரிந்து கொண்ட உண்மைகளாகும்” என்று பீடிகை போட்டுக் கொண்டு ஆரம்பித்தார்.
“குழந்தைகளைத் தூக்கிச் சென்று கொல்வதற்காக ஏவி விடப்பட்ட மருத்துவச்சிகள் உடனடியாகச் சங்கரன் மலையில் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ராக்கியண்ணன் தலையிட்டுத்தான், தாங்கள் சிக்கிக் கொண்டோம் என்று அந்த மருத்துவச்சிகளுக்குத் தெரியாது. செல்லாத்தாக் கவுண்டரின் திட்டப்படி அந்தக் குழந்தைகளை வாங்கிக் கொண்டு செல்லத் தயாராகக் காத்திருந்த கருப்புப் போர்வைக்காரனான வளநாட்டு வீரனை ராக்கியண்ணன் கொன்றுவிட்டு, அந்தப் போர்வையால் அவர் தன்னை மறைத்துக் கொண்டு நின்றார். ஏற்பாடு செய்யப்பட்டபடி காத்திருக்கும் வளநாட்டு வீரன் தான் என எண்ணி மருத்துவச்சிகள் ஏமாந்து விட்டனர். மருத்துவச்சிகள் இருவரும் பாதாள சிறைக்கு அனுப்பிவைக்கப் பட்ட பிறகு, ராக்கியண்ணன், குன்றுடையானிடமும் தாமரை நாச்சியாரிடமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விடை பெறும்போது. ‘எச்சரிக்கையாக இருங்கள்! எந்த நேரமும் இந்தக் குழந்தைகளுக்கு ஆபத்து வரக்கூடும்!’ என்று அறி வித்து விட்டே சென்றார்.
எய்தவனிருக்க அம்பைக் குறை கூறி என்ன பயன்? என்ற கேள்வி ஏக காலத்தில் குன்றுடையான், தாமரை இருவர் உள்ளத்திலும் எழுந்ததால் சில நாட்கள் கழித்து இருவருமே பாதாள அறைக்குச் சென்று அங்கே அடைபட்டிருக்கும் மருத் துவச்சிகளைச் சந்தித்தனர்.
நன்றாகச் சமைக்கப்பட்டு சுவையான உணவு அவர்களுக்கு அளிக்கப்பட்டாலும் கூட அந்த உணவு தங்கள் அகோரப் பசிக்குப் போதுமானதாக இல்லையென்று அவர்களிடம் மருத் துவச்சிகள் முறையிட்டனர். உடனே குன்றுடையான் சிறைக் காவலருக்கு ஆணையிட்டு, அந்த மருத்துவச்சிகள் போதும் போதும் என்கிற அளவுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய் தான். இவ்வளவு வெள்ளை உள்ளம் படைத்த ஒரு நல்லவ னின் குழந்தைகளைக் கொல்ல வந்தோமே என்ற குற்ற உணர் வால் அவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். ‘இன்னா செய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ எனும் குறளுக்கு இலக்கணமாகத் திகழும் குன்றுடையான் மீது அவர் களுக்கு ஒரு தனி மரியாதையே ஏற்பட்டது. இருவரும் குன்று டையான் தாமரைநாச்சியார் கால்களில் விழுந்து தங்களை மன்னித்து விடும்படி கெஞ்சிக் கதறினர். எல்லாமே செல்லாக் கவுண்டரின் சதியே என்பதையும் அந்த மருத்துவச்சிகள் விளக் கிக் கூறினர். குன்றுடையான் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, பாதாள சிறையிலிருந்து விடுதலை செய்தான். செல்லாத்தாக் கவுண்டரால் தங்களுக்கு ஆபத்து நேரும் என்று மருத்துவச் சிகள் பயந்து நடுங்கியதைக் கண்ட தாமரைநாச்சியார், அவர் களுக்குத் தேவையான அளவு பொன் கொடுத்து வேறு நாட் டுக்கு எங்காவது ஓடிப் போய்ப் பிழைத்துக் கொள்ளுமாறு அனுப்பி வைத்தாள்.
இந்தச் செய்திகளை எல்லாம் ராக்கியண்ணனுக்குத் தெரி விக்க ஒரு இளைஞன் இருந்தான். அவன் பெயர் வீரமலை. ராக்கியண்ணன் பாசறையில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், ராக்கியண்ணனின் உத்திரவுப்படி அடிக்கடி சங்கரன் மலைக்கும் குடையூருக்கும் சென்று அந்தக் குழந்தை களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி வந்து ராக்கியண்ண னுக்குத் தந்து கொண்டிருந்தான். அந்தக் குழந்தைகள் விஷயத் தில் ராக்கியண்ணன் இவ்வளவு அக்கறையோடு இருப்பதற்கு என்ன காரணம் என்று அந்தச் சிறுவன் வீரமலை மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான்.
அவன் அப்படிக் குழப்பத்திலிருக்கிறான் என்பது ராக்கியண் ணனுக்கும் தெரியும். அதற்காக அவர் எந்தவொரு விளக்கத்தை யும் வீரமலைக்குச் சொல்ல வேண்டுமென்று நினைக்கவில்லை. யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்க வேண்டுமென்று மனதால் நினைப்பது கூடப் பெரும் பாபம் எனக் கருதும் குன்றுடை யான் போன்ற அப்பாவிகளுக்கு வலுவில் சென்றாவது துணை நிற்க வேண்டுமென்பதுதான் ராக்கியண்ணனின் கொள்கையாக இருந்தது.
‘குழந்தைகளுக்கு இன்று விலை உயர்ந்த பட்டுச் சொக்காய் தைத்துப் போட்டிருக்கிறார்கள்.’
‘குழந்தைகளுக்கு இன்று தங்கத் தொட்டில்கள் இரண்டு செய்து தொங்க விடப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு இன்று முத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன.
குழந்தைகளுக்கு இன்று வைரமிழைத்த தண்டைகள் பூட்டப்பட்டன.
இப்படி அவ்வப்போது வீரமலை, ராக்கியண்ணனுக்குத் தகவல்கள் கொடுத்துக் கொண்டேயிருந்தான்”.
மாயவர் இதைச்சொல்லும்பொழுது வீரமலையின் உள்ளம் நெகிழ்ந்தது. ஆனால் தன்னை அடையாளம் காட்டிக் கொள் ளக் கூடாது என்ற உறுதியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல்; யாரோ ஒரு இளைஞனைப் பற்றி மாயவர் சொல்வதைக் கேட்பது போல கேட்டுக் கொண்டிருந்தான். வீரமலையின் திடத்தை; உள்ளுக்குள் பாராட்டியவாறு பொன்னரும் சங்கரும் அவனைப் பார்த்தனர். அவன் உறுதியை வியந்தனர்.
அடுத்து மாயவர் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் என்னவென்று அறிவதிலே அனைவரும் அவசரம் காட்டினர்! மாயவர் தொடர்ந்தார்.
“ராக்கியண்ணனுக்கு ஒருநாள் தலையூரிலிருந்து ஒரு ஓலை வந்தது. தலையூர் அரண்மனையிலிருந்து வந்த ஓலையென்ப தால் அதை அந்த அரண்மனையின் முக்கியமான வீரனொரு வன் கொண்டு வந்திருந்தான். தலையூர்க் காளிக்கும் ராக்கி யண்ணன் வில்வித்தை, வாள்வித்தை முதலியவற்றைக் கற்றுத் தந்த ஆசான் அல்லவா? அதனால் தலையூர் அரண்மனையி லிருந்து அந்த ஓலை அலட்சியப் போக்காக அனுப்பப்படாமல் மதிப்பு மிக்க நிலையில் அனுப்பப்பட்டிருந்தது. தலையூர் மன் னர் குடும்பத்தின் குலதெய்வமான காளி கோயில் திருப்பணி மிகப் பெரும் பொருட் செலவில் முடிவுற்று அந்தக் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்புதான் அந்த ஓலை! ராக்கி யண்ணன், அந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்துப் பதில் மடல் எழுதி, தலையூர் வீரனிடமே கொடுத்தனுப்பினார். ஓலையில் குறித்திருந்தபடி தலையூர்க்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஏக ஆடம்பரமாக ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. காளி கோயில் பூசாரியும், வணிகனுமான “செம்பகுலன்” முன்னின்று கும்பாபிஷேகத் திருவிழாக் காரி யங்களை கவனித்தான். அந்தக் கோயிலைப் பொறுத்தவரை யில் பூசாரி, தர்மகர்த்தா, மேலாளர் எல்லாமே செம்பகுலன் தான்! தங்கள் குல தெய்வமான காளி கோயில் பற்றிய பொறுப்புகள் அனைத்தையுமே தலையூர் மன்னர்கள் செம்ப குலன் குடும்பத்தாரிடமே ஒப்படைத்திருந்தனர். அந்தப் பரம் பரையில் வந்த செம்பகுலன் பொன் வணிகத்திலும் ஈடுபட்டு – அதேசமயம் காளிகோயில் நிர்வாகத்திலும் முக்கியஸ்தனாகத் திகழ்ந்தான். கோயில் திருப்பணி – கும்பாபிஷேகப் பொறுப்பு அனைத்துமே செம்பகுலனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பாதிப் பணத்துக்கு மேல் பொய்க் கணக்கு எழுதியே, தன் வாயில் போட்டுக் கொண்டவன் அவன்!
தெய்வத்துக்கு விரோதமாக அதன் கோயில் திருப்பணியி லேயே திருடும் அந்தச் செம்பகுலன், தனது கொள்ளையை மறைக்க – கும்பாபிஷேகத் திருவிழாவைக் காண்போர் மலைத் துப் போகும் வண்ணம் நடத்தினான். அழைப்பையேற்று ராக்கியண்ணனும் கும்பாபிஷேகத்துக்காகத் தலையூர் சென்றி ருந்தார். தனது ஆசான் என்ற முறையில் தலையூர்க்காளி அவரை மெத்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்தான். அவருக்கு முன்பே தலையூர்க்காளியின் புரவலரான செல்லாத்தாக் கவுண்டரும் அவரது மகன் மாந்தியப்பனும் தலையூருக்கு வந்து விட்டனர். செல்லாத்தாக்கவுண்டருக்கும் மாந்தியப் பனுக்கும் தனித்தனியாக விருந்தினர் விடுதிகள் ஒதுக்கப்பட்டி ருந்தன.தந்தையையும் மகனையும் ஒரே விடுதியில் தங்கிடச் செய்யாததற்கு ஒரு காரணம் இருந்தது. தலையூர்க்காளியும் மாந்தியப்பனும் ஏறத்தாழ சம வயதுடைய வாலிபர்கள் என்ப தால் அவர்களிருவரும் தனித்திருந்து அளவளாவிடவும், மது பானம் அருந்தவும் அந்த ஏற்பாடு! கும்பாபிஷேகத்துக்கு முதல் நாள் இரவு ; அந்தக் கூத்தை ராக்கியண்ணனே தனது கண் களால் பார்த்திருக்கிறார். அவர்களது விருந்தினர் விடுதிக்கு அடுத்தாற்போலத்தான் ராக்கியண்ணன் தங்கியிருந்த விடுதி – அதனால் அவருக்கு அந்த சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. தலை யூர்க்காளி ஒரு கிண்ணம் மதுவை அருந்தி முடிப்பதற்குள் மாந்தியப்பன் ஒன்பது கிண்ணம் மதுவை அருந்தி முடித்து விட்டானாம் தலையூர்க்காளி அளவோடு குடித்து விட்டு; மாந்தியப்பனைத் தடுத்தும் பயனில்லாமற் போய் விட்டதையும் ராக்கியண்ணன் பார்த்திருக்கிறார். மாந்தியப்பன் மயங்கித் தனது படுக்கையில் சாய்ந்ததும் – தலையூர்க்காளி அந்த அறை யிலிருந்து வெளியேறி விட்டிருக்கிறான். அதற்குப் பிறகு நடந் ததுதான் விரசமான வேடிக்கை. அந்த அறையில் ஒரு அழ கான பெண்ணின் சிலை இருந்திருக்கிறது. மயக்கமுற்றிருந்த மாந்தியப்பன் கண்களுக்கு அந்தச் சிலை ஒரு உயிருள்ள மங் கையாகவே தெரிந்திருக்கிறது போலும்? சிலை, நடனமாடுவது போலவும் – அவனைக் கண்டு நெளிவது போலவும் அவன் தோளில் துவண்டு விழுவது போலவும் அவனுக்கு ஒரு கற் பனை! அந்தக் கற்பனையின் வேகத்தில் சிலையைத் தழுவிக் கொண்டு குடிவெறியில் கொஞ்சத் தொடங்கி, இறுதியில் சிலையும் அவனுமாகத் தரையில் விழுந்திருக்கிறார்கள். அதைக் கண்ட ராக்கியண்ணனுக்கு செல்லாத்தாக் கவுண்டர் குடும்பத் தின் மீதிருந்த வெறுப்பு மேலும் ஒரு மடங்கு அதிகமாயிருக் கிறது…
மாந்தியப்பனின் மிருக வெறித்தனத்தை மாயவர் குறிப்பிட்ட போது; அருக்காணித் தங்கத்துக்கு அந்த மாந்தியப்பன், தன்னிடம் நடந்து கொண்ட கொடுஞ்செயல் நினைவுக்கு வரத் தவறவில்லை!
கொங்கு மண்டலத்தில் எங்கும் எவருக்கும் ஏற்படாத கீழ்த்தரக்குணம் ஏன்; மனநோய் கொண்ட ஒருவனுக்குக் கூட ஏற்படாத கீழ்த்தரமான எண்ணம் மாந்தியப்பனுக்கு ஏற்பட்டு; அவன் தன்னைத் துரத்திய அந்தக் கொடூர நிகழ்ச்சியை அவளால் மறக்க முடியவில்லை! மிருக இனத்தில் மனி தப் பண்பு கொண்டோர் பிறக்கிறார்களோ இல்லையோ; மனித இனத்தில் மிருகப் பண்பு கொண்டோர் ஒருசிலர் பிறந்து விடுகிறார்கள் என்பதற்கு மாந்தியப்பனே உதாரணம் என்று எண்ணி அருக்காணித் தங்கம் பெருமூச்சு விட்டாள். கொங்கு வேளாளர் குலப் பெருமையைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு என அவள் உதடுகள் முணுமுணுத்தன.
மாயவரோ, ராக்கியண்ணன் தன்னிடம் கூறிய விபரங்களை தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.
“பொழுது விடிந்தது. தனது நண்பனைக் கும்பாபிஷேகத் துக்கு அழைத்துச் செல்ல தலையூர்க் காளி வந்திருக்கிறான். நண்பன் மாந்தியப்பனோ அந்தச் சிலையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். தலையூர்க் காளிக்கு வந்த ஆத்திரத்தில் ஒரு குடம் தண்ணீரை மாந்தி யப்பன் மீது கொட்டச் செய்திருக்கிறான். போதை தெளிந்த மாந்தியப்பனுடன் தலையூர்க் காளி புறப்பட்டு, செல்லாத்தாக் கவுண்டர் தங்கிருந்த விடுதிக்குச் சென்று அவரையும் அழைத் துக் கொண்டு அதன்பிறகு ராக்கியண்ணன் தங்கியிருந்த விடு திக்குச் சென்று அவரையும் அழைத்துக் கொண்டு கும்பாபி ஷேகத்துக்குச் சென்றிருக்கிறான்.
செம்பகுலன் முன்னின்று அனைத்தையும் கவனிக்க கும்பாபி ஷேகம் முடிவுற்றிருக்கிறது. அதன் பிறகு காளியம்மன் கோயில் கர்ப்பகிருக மண்டபத்துக்கு தலையூர்க் காளி, ராக்கியண்ணன், செல்லாத்தாக் கவுண்டர், மாந்தியப்பன் ஆகியோர் போயிருக் கிறார்கள். செம்பகுலன், காளியம்மனுக்கு பூஜை செய்து தூப தீப நைவேத்தியங்கள் காட்டி, விபூதி குங்குமம் முதலிய பிர சாதங்களுடன், முதலில் தலையூர்க் காளி மன்னனுக்குத் தந்திட வந்தவன்; திடீரென ஆவேசம் வந்து ஆடியிருக்கிறான்.
“அடேடே அம்பாள் ஆவேசம் வந்து ஆடுகிறாள்! ஏதாவது அருள் வாக்கு சொல்லுவாள்! தாயே! சொல்லு தாயே; சொல்லு! தலையூர் மன்னருக்கு நல்ல வாக்கு சொல்லு தாயே!’ என்று செல்லாத்தாக் கவுண்டர், செம்பகுலனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு பயபக்தியுடன் கேட்டிருக்கிறார்.
ஆவேசம் வந்து ஆடும் செம்பகுலன்; “நல்வாக்கு சொல்ல முடியாது! என் குழந்தைக்கு ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது” என்று ஓங்காரக் கூச்சலிட்டிருக்கிறான்.
“எந்தக் குழந்தைக்குத் தாயே? என்னம்மா ஆபத்து? சொல் லடி காளிகாதேவி!” என்று செல்லாத்தாக் கவுண்டர் பர பரப்புடன் கேட்டிருக்கிறார்.
“எனக்கு ஒரே குழந்தைதான்; இதோ இந்தத் தலையூர் மன்னன்தான்! இந்தக் குழந்தைக்குத்தான் ஆபத்து!’
அதைக் கேட்டதும் தலையூர் மன்னனுக்கே தாங்க முடியாத அதிர்ச்சி! காளியம்மன் காரியத்தில் ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்று கலங்கிப் போய் நின்றிருக்கிறான்.
“தலையூர்க் குடும்பத்தை அழிக்க குன்றுடையான் மாளிகை யிலே இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன! அந்தக் குழந் தைகள் வளர்ந்து பெரிய பிள்ளைகள் ஆனால் அவர்களால் தலையூர்காளி வம்சத்துக்கே அழிவு! பேரழிவு!”
செம்பகுலனின் கண்கள் காளிவிக்ரகத்தின் கண்களைப் போலவே பயங்கரமாக மின்னிக் கொண்டிருந்ததால் காளி தேவியே எதிரே வந்து நிற்பதாகக் கருதிய தலையூர் மன்னன்; தழுதழுத்த குரலில் மிகுந்த பணிவுடன்,
‘தாயே! காளியம்மா! அந்த ஆபத்தைத் தடுப்பது எப்படி? நீயே வழி சொல்லு தாயே! உனக்கு தங்கக் கவசம் செய்து அணிவிக்கிறேன்!” என்று கூறித் தொழுதிருக்கிறான்! காளி தேவியாகவே மாறிவிட்டிருந்த செம்பகுலன்;
உன் உற்ற நண்பர்களோடு உட்கார்ந்து ஆலோசனை செய்! முள் மரத்தை முளையிலேயே கிள்ளி எறியாதவன் முட்டாள் என்பதை மறவாதே!” என்று சொல்லிக் கொண்டே சுற்றிச் சுழன்று விபூதி குங்குமத்தை வாரி வீசியபடி கீழே விழுந்திருக்கிறான். அம்பாள் மலையேறிவிட்டாள் என்று செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் செம்பகுலனைத் தூக்கி ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்கள்.
தலையூர் மன்னர் கவலை தோய்ந்த முகத்துடன் காளி கோயிலை விட்டுப் புறப்பட்டுத் தனது ரதத்தில் ஏறி மாளி கைக்குச் சென்றிருக்கிறான்.
செம்பகுலன் மீது காளி ஆவேசம் வந்து ஆடிய நிகழ்ச்சியில் ஏதோ மர்மம் இருக்கிறது என்ற சந்தேகம் ராக்கியண்ணனுக்கு ஏற்படவே; அவரும் கோயிலை விட்டுப் போவது போலப் போக்குக் காட்டி அங்குள்ள கல் தூணின் மறைவில் ஒதுங்கியிருந்து கவனித்திருக்கிறார். அப்போது செல்லாத்தாக் கவுண்டர் ஒரு பையை எடுத்து பூசாரி செம்பகுலனிடத்தில் நீட்டி, “இந்தா செம்பகுலா! நான் சொன்னபடி நாடகத்தை நன்றாக நடத்திவிட்டாய்! இதோ என் வாக்கு மாறாமல் நூறு பவுன்!’ என்று பாராட்டி, அவன் முதுகில் அன்போடு தட்டி, அந்தப் பையைக் கொடுத்திருக்கிறார்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியைத் தொடர்ந்து அன்று மாலையே தலையூர்க் காளியின் ஆலோசனை மண்டபத்தில் மன்னன் காளி, செல்லாத்தாக் கவுண்டர், ராக்கியண்ணன், மாந்தி யப்பன் ஆகியோர் கூடியிருக்கிறார்கள்.
“குழந்தைகளால் உனக்கு என்ன ஆபத்து ஏற்படுத்த முடி யும்? அதை நினைத்துக் கலக்கமடையத் தேவையில்லை!’ என்று தலையூர் மன்னனிடம் ராக்கியண்ணன் கூறியதை உடனடியா கக் குறுக்கிட்டு செல்லாத்தாக் கவுண்டர் மறுத்திருக்கிறார்.
“குழந்தையென்றால் சாதாரணமாக எண்ணி விட முடியுமா? கம்சனைக் கொல்லக் கிருஷ்ணன் பிறக்கவில்லையா? அந்தக் கிருஷ்ணனைச் சரியாக அடையாளம் கண்டு அவன் சிசுவாக இருக்கும்போதே கொன்றிருந்தால் கம்சன் செத்திருக்க வேண்டிய தில்லையே!”
இது செல்லாத்தாக் கவுண்டரின் வாதம்! இறுதியாக அந்த வாதமே வலிவானது என்று தலையூர்க்காளி மன்னனும் ஒப்புக் கொண்டிருக்கிறான்.
”சரி; அப்படியானால் அந்தக் குழந்தைகளை யார் கொல்வது?’
இது தலையூர் மன்னன் கேள்வி! இந்தக் கேள்விக்கு ராக்கி யண்ணன் உடனே பதில் சொல்லியிருக்கிறார்.
“தலையூர் மன்னா! என் மாணவனாகிய உனக்கு குன்றுடை யானின் இரண்டு குழந்தைகளால் உயிருக்கே ஆபத்து என்றால் – அந்தக் குழந்தைகளை நானே கொன்று விடுகிறேன்.”
தன்னைக் காப்பாற்ற தனது ஆசான் ராக்கியண்ணனே முன்வந்து விட்டார் என்பது கண்டு தலையூர்க்காளி அவர் காலில் விழுந்து வணங்கியிருக்கிறான்.
அப்போது செல்லாத்தாக் கவுண்டர் கூறிய யோசனைதான், ராக்கியண்ணனைத் திடுக்கிட வைத்திருக்கிறது.
குழந்தைகளைக் கொண்டு வந்து தலையூர் மன்னரிடமே ஒப்படைக்க வேண்டும். அவைகளைக் காளியின் முன்னால் பலி கொடுக்கிற பணியை தலையூர் மன்னரே நிறைவேற்ற வேண்டும்!”
இவ்வாறு செல்லாத்தாக் கவுண்டர் கூறியதும், “ஆமாம் அதுதான் சரி!” என்று தலையூரான் தலையசைத்திருக்கிறான். ராக்கியண்ணனுக்கோ, ஆயிரம் சம்மட்டி அடிகள் தலையில் விழுந்தது போல் இருந்திருக்கிறது!”
மாயவர் இதைச் சொல்லி, கலங்கியிருந்த தனது கண்களைத் துடைத்துக் கொண்ட போது; அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே அசைவற்றுப் போயினர்.
– தொடரும்…
– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1987, குங்குமம் இதழ்.