கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 5, 2025
பார்வையிட்டோர்: 3,328 
 
 

(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20

11. ஆற்றில் அருக்காணித் தங்கம் 

ஆரிச்சம்பட்டியை நோக்கிப் புறப்பட்ட ரத வண்டி; செல் லாண்டியம்மன் கோயில் திருவிழாப் பந்தலை விட்டு வேக மாகக் கிளம்பியது. அந்த வண்டியில் முன்னிருக்கையில் வையம் பெருமான் அமர்ந்திருந்தான். அடுத்த வரிசையில் சிலம்பாயி யும் அவளுக்கு இருபுறமும் முத்தாயி பவளாயியும் வீற்றிருந்தனர். காவிரிக் கரையோரமுள்ள கரடுமுரடான சாலையில் குளித்தலை வழியாக வந்து தென் கிழக்குத் திசையில்தான் ஆரிச்சம்பட்டியெனும் மணியங்குரிச்சிக்குச் செல்லவேண்டும். 

தனது அண்ணன் மக்களை அருகே வந்து வழியனுப்ப இயலாவிடினும் விழாப் பந்தலுக்குள்ளிருந்தவாறு தாமரை நாச்சியார் உள்ளத்தால் வாழ்த்திக் கொண்டு, ரத வண்டி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஓவியங்கள் உயிர் பெற்றது போன்று அழகுக் காவியங்களாய்த் திகழும் முத்தாயி, பவளாயி இருவரும் தாமரைநாச்சியாரின் கண்களை விட்டு அகலவில்லை. பந்தலை விட்டு அந்த ரத வண்டி தொலை தூரம் சென்ற பிறகும் அந்த இளங்கிளிகளின் முகம் தாமரை நாச்சியின் முன்னால் தோன்றி கொத்துப்புன்னகையை கொற்கை முத்துப்புன்னகை என உதிர்ப்பது போல் இருந்தது. 

தாமரையின் மனத்திரைக் காட்சி, அவளது முகப்பொலிவை மெருகூட்டிக் காட்டியது என்றாலும் திடீர் மின்னலாக ஒரு வேதனை ரேகை அந்தப் பொலிவைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது. நெல்லியங்கோடனை மணந்தபோது ஆரிச்சம் பட்டியில் தனக்கும் தனது அண்ணனுக்கும் நடைபெற்ற சூடான உரையாடல் அவளது நினைவு அலைகளில் மிதந்து குலுங்கியது. 

‘அண்ணா! என் சகோதரனான உன் முன்னால் என்னைப் பெற்றெடுத்த என் தாயின்மேல் ஆணையாக தந்தை மேல் ஆணையாகச் சொல்கிறேன் – பந்தபாசம் இன்றுடன் முடிந்து விட்டது என்றாயே, நிச்சயம் முடியாது! முடியவே முடி யாது! சீர்வரிசையை வைக்க வீடு வாசல் கிடையாது என்று கிண்டல் செய்த அண்ணனே!நானும் என் அத்தானும் மாடமாளிகையில் இருப்பதை நீ பார்க்கத்தான் போகிறாய்! பந்தபாசம் எரிந்துவிட்டது என்ற என் அருமைச் சகோதரனே, நான் பெற்றெடுக்கிற சிங்கக்குட்டி மகனுக்கு உன் பெண் ணைக் கட்டிவைக்க நீ வந்து என்னைச் கெஞ்சத்தான் போகிறாய்!’ 

இப்படித் தாமரை முழக்கமிட்டவுடன், 

‘பெறுவதுதான் பெறுகிறாய், இரண்டு சிங்கக்குட்டிகளாகப் பெற்றுப் போடு! இரண்டையும் கொண்டு வந்து என் வீட்டு வாசலில் நாய்களைப் போல் காவலுக்குக் கட்டி வைக்கிறேன்’ என்று சின்னமலைக் கொழுந்து ஏளனமாகப் பதில் அளித்ததும்! 

‘பெறுகிறேன் அண்ணா; பெறுகிறேன்! நீயும் இரண்டு பெண்களைப் பெற்றுக்கொண்டு அந்தச் சிங்கங்களைத் தேடிக் கொண்டு வரப்போகிற காட்சியை நான் கண்டு களிக்கத்தான் போகிறேன்!’ என்று தாமரைநாச்சியார் சூளுரைத்ததும்; ஏதோ இப்போதுதான் நிகழ்வது போல் இருந்தது அவளுக்கு! 

அந்த உணர்வில் அவள் சோக பிம்பமாக நின்றாள். அன்று கூறிய சூளுரைப்படி அவளும் இரண்டு சிங்கக்குட்டிகளைப் பெற்றாள். ஆனால் அந்த சிங்கக்குட்டிகள் பிறந்து வளர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளே எங்கு போயின என்றே தெரியா மல் அவளும் அவள் அன்புக்கண்வன் குன்றுடையானும் வேண் டாத தெய்வமில்லை -கும்பிடாத கோயில் இல்லை ஆடாத தீர்த்தமில்லை! 

அண்ணன் சின்னமலைக்கொழுந்தின் பெண்களிருவரையும் பார்த்தது முதல் தாமரைநாச்சியின் ஏக்கம் பெரிதாயிற்று. 

“அன்று சொன்னபடி அண்ணனுக்கும் இரு பெண்கள் பிறந்து விட்டனர். ஆனால் அவர்களை மணந்து கொள்ளு மாறு அண்ணன் வந்து மன்றாடிக் கேட்பதற்கு நான் பெற்ற மக்கள் இல்லையே! அம்மா தாயே! உனக்கு எத்தனை வருஷமாக பிரார்த்தனை செய்கிறோம்; உன் மனம் இரங்கவில்லையா?” என்று வாய்விட்டுக் கதறியவாறு தாமரையாள். செல்லாண்டியம்மனைத் தொழுது நின்றாள். 

மனைவியின் இதயத்திலிருந்து பீறிட்டுப் பொங்கிய அந்த வார்த்தைகள் குன்றுடையானைக் கலக்கவே அவன் தனது கண் களில் எட்டிப் பார்த்த நீர்த்துளிகளை அவளுக்குத் தெரி யாமல் துடைத்துக் கொண்டே; அவள் தோளில் கைவைத்து, “என்ன தாமரை! சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாய்? உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதேயென்று எத்தனை முறை சொல்வது?’ என்று கெஞ்சுகிற தோரணையில் செல்லமாகப் பேசினான். 

”நாச்சியாரம்மா! உங்கள் நல்ல மனசுக்கும் உங்கள் கணவரின் வெள்ளை மனசுக்கும் ஒரு குறையும் வராது. கவலைப்படா மல் இருங்கள். இரவும் பகலும் மாறி மாறி வருவது போல கெட்டதும் நல்லதும் மாறி மாறி வரும். அதுதான் வாழ்க்கை. இரவு இருந்தால்தானே பகலுக்குப் பெருமை. அது மாதிரி கெட்டது இருப்பதால்தான் நல்லதுக்குப் பெருமை. இப்போது உங்கள் வாழ்க்கையில் இருள் – இது பகலாக நிச்சயம் மாறும் பாருங்கள்! என்று திடமான தொனியில் அருகிலிருந்த தனக்கோடி செட்டியார் ஆறுதல் அளித்தார். 

அப்போதும் குன்றுடையான்; தனது வெள்ளை உள்ளத்தை எடுத்துக்காட்டும் வண்ணம் செட்டியாரைப் பார்த்து; “அடேடே, ஆதிசெட்டிப் பாளையத்தாருக்கு ஆரூடம் கூடத் தெரியுமா?” என்று கேலியாகக் கேட்டான். 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அதில் எனக்கு நம்பிக் கையுமில்லை. என் சொத்தை ஆள்வதற்கு பத்து குழந்தை பிறக்குமென்றான் ஒரு ஆரூடக்காரன். இதுவரை ஒரு சொத்தைக் குழந்தை கூடப் பிறக்கவில்லை. அதனால் நான் இப்போது சொல்வது ஆரூடமல்ல. பொதுவாக வாழ்க்கையைப் பற்றிய ஒரு கணிப்பு; அவ்வளவுதான்!” என்றார் செட்டியார். 

அவர்கள் உரையாடலைத் திசை திருப்பும் வகையில் குதிரை யொன்று வேகமாக வரும் குளம்படி ஓசை அந்தக் கோயிலுக் கருகே கேட்டது. 

“திடீரென்று குதிரையில் யார் வருவது? நமது குடையூர் அரண்மனையிலிருந்து யாராவது வருகிறார்களா? அல்லது நெல்லிவளநாட்டிலிருந்து மாந்தியப்பன் வந்திருந்தானே;அவ னுக்கு ஏதாவது அவசரச் செய்தி கொண்டு வருகிறார்களா?’ என்று தனக்குத் தானேயும் தாமரைநாச்சியையும், தனக்கோடி செட்டியாரையும் பார்த்துக் கேட்டுக் கொண்டும், குன்றுடையான்; குளம்படியோசை நெருங்கி வருவதை உணர்ந்து இரண்டடி முன் சென்று பந்தலுக்குள்ளிருந்தவாறு உற்றுப் பார்த்தான். 

விழாப் பந்தலின் முகப்பில் குதிரை வந்து நின்றுவிட்டது என்பதற்கு அடையாளமாக குளம்படி ஓசைகள் மெல்ல மெல் லக் குறைந்து தேய்ந்தன! 

குதிரையிலிருந்து இறங்குவது யார் என்று விழாப் பந்தலில் இருந்தோர் அனைவரும் கவனித்தனர் எனினும், குன்றுடையான் மட்டும்தான் அப்படியிறங்கியவரை ஆச்சரியத்தோடு பார்த்தான். 

தூய வெள்ளை அங்கி அணிந்து, கருமை கலந்த வெண் தாடி அசைய இயற்கையான கம்பீரத் தோற்றத்துடன், கனிவு ததும்பும் பார்வையைப் பந்தல் பக்கம் செலுத்தியவாறு குதிரை யிலிருந்து மாயவர் இறங்கினார். மின்னலெனும் ஒரு திகைப் பால் தாக்குண்டான் எனினும் உடனே தன்னை சமாளித்துக் கொண்டு குதிரையில் வந்தது மாயவர்தான் என்பதைக் குன் றுடையான் புரிந்து கொண்டான். தாமரைநாச்சியாரையும் தனக்கோடி செட்டியாரையும் ஆவலுடன் நோக்கி, “தலையூர்க் காளியின் அமைச்சர் வருகிறார். அமைச்சர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மிகப் பெரிய மனிதர். உயர்ந்த மனிதர்” என்று குன்றுடையான் கூறிவிட்டு, மாயவர் வரும் திக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான். 

ஒரு அடி இடைவெளி கூட இல்லாத தொலைவில் இரு வரும் எதிர் எதிரே நின்றனர். ஒருவரையொருவர் பார்த்த வாறு அசைவற்று நின்றனர். அந்த நிலை நீண்ட நேரம் நீடிக்க வில்லை. “வணக்கம்” என்று கூறிக்கொண்டே குன்றுடை யான் மாயவர் முன் தலைதாழ்த்திக் குனிந்தான். அவனது தோள்பட்டைகளை இரு கரங்களாலும் பற்றித் தூக்கியவாறு, என்ன; நெல்லியங்கோடா! நலமா?” என்று மாயவர் அன் பொழுகக் கேட்டார். 

“தலையூர் அமைச்சர் தாங்கள்! கோயில் திருவிழாவுக்கு வரும்போது அந்தப் பதவிக்குரிய சிறப்புக்கள் எதுவுமின்றி வந் துள்ளீர்களே?” என்று குன்றுடையான் எழுப்பிய வினாவுக்கு முதலில் மாயவர் ஒரு இளநகையைப் பதிலாகத் தந்தார் என்றாலும் அதைத் தொடர்ந்து அவனிடம் சிரித்துக் கொண்டே பேசவும் செய்தார். 

“அமைச்சர் வருவதென்றால் எப்படி வரவேண்டுமென்கிறாய்? ஆனைப்படை குதிரைப்படை முன்னால் வரவும் காலாட்படை அணி வகுத்துப் பின்னால் வரவும் அதன் நடுவே அமைச்சர் ஆடம்பரமாக வரவேண்டுமோ? நானாவது அமைச்சர்; நீயோ பல குன்றுகளைக் கட்டியாளும் எல்லைக் காவலன்! நீயும் இங்கு ஆடம்பரமாக விஜயம் செய்திருப்பதாகத் தெரியவில்லையே!” 

மாயவரின் கூற்றுக்கு, குன்றுடையான், தனக்கே இயல்பாக அமைந்த அடக்கத்துடன் பதிலளித்தான். 

”நானும் என்னைப்போன்ற சிலரும் வெறும் எல்லைக் காவல் ஆட்சி புரிபவர்கள். தாங்கள் அப்படியல்லவே! தலை யூர்ச் சிற்றரசின் மந்திரியார் அல்லவா? மந்திரி மட்டுமா? மகாமேதையுங்கூட! தங்களின் பதவிப் பெருமைக்குத் தகுந்த வாறு சுற்றுச் சூழல், பாதுகாப்பு ஏற்பாடு – எல்லாமே இருக்க வேண்டுமே என்றுதான் கேட்டேன்.” 

“என்னைப்பற்றித்தான் உனக்குத் தெரியுமே! எளிமையான வாழ்வுதான் எனக்குப் பிடிக்கும். என் போன்ற அமைச்சர்கள் வெளியில் போகும்போதெல்லாம்; ஏதோ யுத்தத்திற்குப் போவது போல ஆனை சேனைகளை அணிவகுக்கச் சொல் லிப் போக முடியுமா? நீ நினைக்கிறபடி இப்போது கூட நான் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரவில்லை. முக்கியமாக உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்!” 

“அப்படியா? என்னையா? உண்மையாகவா?” என்று வியப்பு மேலிடக் கேட்டான் குன்றுடையான். 

“ஆமாம்! ஏன் இவ்வளவு ஆச்சரியம்? உன்னைப் பார்க்க வரக்கூடாதா? விளைந்த கதிர் அறுத்துக் குவித்து, யானை களைக் கட்டித் தாம்படித்து பொதி அளக்கும் கொங்குவேளா ளப் பெருங்குடி மகன் நீ! உழைத்திடும் உழவர்களுக்கு அவர் களுக்கு வேண்டிய மட்டும் தானியத்தை ஊதியமாக வழங் கிடும் உத்தமன் நீ! வரகுண்ணாப் பெருங்குடி வேளாளர் மர பின் பெருமையை உயர்த்த வந்தவன் நீ! எதிர்ப்பு நெருப்பிலே கூட இனிய இதயத்தால் நீந்திக் கரையேறியவன் நீ! உன்னை யும் உன் மனைவி தாமரை நாச்சியார்; அதாவது தமிழ் பெண் களின் குலத் தலைவியாகத் திகழும் இந்தத் தாய் இவர் களையும் பார்க்கத்தான் வந்தேன். உங்களைத் தேடி, குடையூர் மாளிகைக்குப் போனேன். அங்கில்லை; இங்கு வந்து விட்டீர்கள் எனக் கேள்விப்பட்டதும்; காடுமேடு நிறைந்த கஷ்டமான வழியென்றாலும் கவலையில்லையென்று வந்துவிட்டேன்.”

மாயவர், குன்றுடையானைப் புகழ்ந்து பேசும்போது உச்சி குளிர்ந்து உடம்பெல்லாம் இன்பத் தேனாறு பெருக்கெடுக்க அருகேயிருந்த தாமரைநாச்சியார்; மாயவர் தன்னைப் பற்றியும் சில நல்ல வார்த்தைகள் சொன்னதும்; தன்னையறியாமல் அவ ரைக் கையெடுத்துக் கும்பிட்டு, மெத்தவும் மரியாதையுடன் பந்தல் கால் ஓரமாக ஒதுங்கி நின்றாள். 

“எத்தனை வருஷமாகிறது உங்களைப் பார்த்து!” என்று குன்றுடையான் பெருமூச்சு கலந்து கூறிவிட்டு; மாயவருக்கு தனக்கோடி செட்டியாரை அறிமுகப்படுத்தி வைத்தான். 

மாயவரின் தோற்றம் அவரது தாடி உடை அசைவு உரையாடிய இனிமை – எல்லாமே தனக்கோடி செட்டியாரை மெய்மறக்கச் செய்திருந்தது. 

“எல்லோரும் எங்களைக் கைவிட்டு விட்ட நேரத்தில் இந்தச் செட்டியார்தான் எங்களுக்குத் தங்க இடமே கொடுத்தார். இவ ருடைய ஆதரவும் உதவியும் பெற்றுத்தான் உழவுத் தொழிலை வளர்த்து – அதன் வாயிலாகப் பல வளமும் பெற்றது எங்கள் குடும்பம். இவரை நாங்கள் மறக்கவே முடியாது” என்று தனக்கோடி செட்டியாரைப் பற்றிப் பரவசத்தோடு குன்றுடை யான், மாயவரிடம் பாராட்டினான். 

அந்தப் பாராட்டுக்கு உரியவர் தானல்ல என்பதை தனது கூச்சத்தால் வெளிப்படுத்திய செட்டியார்; “என்னை ஏன் வீணாகப் புகழுகிறீர்கள்? இதோ நிற்கிறாரே; இந்தப் பெரிய வர் மாயவர்; உங்களுக்காக தலையூர் மன்னனிடம் கோபித் துக் கொண்டே போய் விடவில்லையா? சுகமான பதவியைத் துறந்து இருபது வருஷங்களுக்கு மேலாக இவர் கஷ்டப்பட்டு அலைந்து திரிந்தார் என்றால்; அது உங்களுக்காகத்தானே! நன்மையல்லாத காரியம் ஒரு கடுகளவு நடந்தாலும் அதை எதிர்த்து வாதாடுகிற பெரும் உள்ளம் யாருக்கு வரும்? அந்த நல்லெண்ணத்துக்குச் சொந்தக்காரரான மாயவரின் சிறப்போடு ஒப்பிட்டால் என் சிறப்பு அவரது கால் தூசுக்குக்கூட சமமாகாது!” என்றார்! அப்போது அவர் கண்கள் கலங்கின. 

“நிற்க வைத்தே பேசிக் கொண்டிருக்கிறீர்களே; அதோ அந்த மண்டபத்தில் உட்கார்ந்தாவது பேசலாமே!” என்று கொங்குச் சீமையின் பண்பு விளங்க தாமரைநாச்சியார், தனது கணவனைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னாள். 

“ஆமாம் அதுதான் நல்லது. வாருங்கள்” என்று மாய வரைக் குன்றுடையான் அழைக்கவே அவரும் அந்த மண்ட பத்துக்குச் சென்றார்; செல்லாண்டியம்மனைப் பற்றியும் பெரிய காண்டி அம்மனைப் பற்றியும் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபமாக அது இருந்தது. கரகம் விடும் விழாவைப் பற்றி ஓடக்காரன், பொன்னர் சங்கருக்குச் சொன்ன கதை முழுதும் சித்திரங்களாக அந்த மண்டபத்தில் தீட்டப்பட்டிருந்தன. 

கைலாசமலையில் நாகமலையென்ற பகுதி சித்திரத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. அடுத்த ஓவியமாக ஒரு ஐந்து தலைப் பாம்பு சிவனை நினைத்து கடுந்தவம் செய்து கொண் டிருப்பது போல் எழுதப்பட்டிருந்தது. பிள்ளை வரம் கேட்டு அந்த நாகம் தவம் செய்தது. அடுத்த படத்தில் பரமசிவனும் பார்வதியும் இருந்தார்கள். ஐந்து தலை நாகத்திற்குப் பிள்ளை யாகப் பிறக்க பார்வதி ஒப்புக் கொண்டு புறப்படுவது போல ஒரு சித்திரம் இருந்தது. பார்வதியைப் பரமசிவன் விடை யளித்து அனுப்புகிற காட்சி ஒரு படத்தில் இடம் பெற்றிருந் தது. அடுத்த ஓவியம், ஐந்து தலை நாகம்; ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது போல! அடுத்த ஓவியத்தில் அந்தக் குழந்தை பெரியகாண்டி அம்மனாக வளர்ந்து காட்சி தருவது போல! அடுத்ததாக பெரியகாண்டி தனது’ வியர்வையை விரலால் வழித்தெறிய அதிலிருந்து ஏழு கன்னியர்கள் தோன்றுவதாக ஒரு ஓவியம்! பெரியகாண்டியம்மன் வாழவந்திச் சீமைக்கு வருவதாக ஒரு காட்சி! பிறகு தொட்டியம் வழியாக காவேரி யைக் கடக்க பெரியகாண்டி பூஜை செய்ய முடிவு செய்வதாக வும் அதற்கு கரகம் வேண்டுமென்றும் கன்னியர்களை அனுப்பு கிற படம்! ஒரு மண்ணுடையான் கன்னியரிடம் கரகம் இல்லை யென்று பொய் சொல்லுகிற ஓவியம்! பொய் சொன்ன மண் ணுடையான் வீட்டில் உள்ள எல்லாக் கரகங்களிலும் பாம்பு நெளியுமாறு பெரியகாண்டி சபிப்பது போல ஒரு பெரிய ஓவியம்! மண்ணுடையான் பெரியகாண்டியிடம் மன்னிப்புக் கேட்டு மண் கரகம் ஒன்று கொடுக்கும் ஓவியம்! ஓடக்காரன் ஒருவன் ஏழு கன்னியரைக் கேலி செய்வது போல ஒரு படம்! அது கண்டு பெரியகாண்டி அவன் ஓடத்தைத் தீப்பற்றி எரியச் செய்யும் ஒரு படம்! பிறகு பெரியகாண்டியும் செல்லாண்டி யம்மனும் பந்தயம் போட்டுக் கொண்டு மண் கரகம் பொன் கரகம் விடுகிற படம்! இரு அம்மன்களும் சமாதானமாகிற படம்! செல்லாண்டியம்மனின் பெருமையைப் பெரியகாண்டி அம்மன் விளக்குகிற படம்! 

இப்படியொரு புராதனச் சித்திரக் கூடமாக அந்த மண்டபம் இருந்ததை மாயவர் வைத்த விழி வாங்காமல் பார்த்தார். பிறகு, குன்றுடையான் காட்டிய இருக்கையில் அமர்ந்து தன் னருகே குன்றுடையானையும் அமரச் செய்தார். தனக்கோடி செட்டியாரும் தாமரைநாச்சியாரும் மண்டபத்துக்கு வராமல் பந்தலிலேயே இருந்தனர். தாமரைநாச்சியார், அம்மனுக்குப் படைத்த மாவிளக்கு மாவை ஒரு சிறிய வெள்ளித்தட்டில் வைத்து ஒரு குவளையில் மோரை மொண்டு கொண்டு; அதை மாயவருக்குக் கொடுத்தனுப்ப அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். 

”ஏனம்மா! இங்கே கொடு நான் கொண்டு போகிறேன்’ என்று கையை நீட்டினார் செட்டியார். தாமரை தயங்கினாள். என்ன இருந்தாலும், செட்டியாரைப் போய் அந்த வேலைக்குப் பயன்படுத்துவதா? என்றுதான் அவள் தயங்கினாள். மண்டபத் திலிருந்த மாயவர்; சற்று உரத்த குரலில் ‘தனக்கோடி செட்டியார் அங்கே இருக்கட்டும். தாமரைநாச்சியார் மட்டும் இங்கே வரலாம். நானும் குன்றுடையானும் குடும்ப விஷயம் பேசப் போகிறோம்” என்றார். கையில் எடுத்த தட்டு குவளை யுடன் தாமரைநாச்சியார் மண்டபத்துக்கு வந்தாள். தன் எதிரே வெள்ளித் தட்டில் இருந்த மாவிளக்குமா, மிகவும் சுவையாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே முழுவதையும் தீர்த்து விட்டார் மாயவர். 

கணவனுக்குப் பின்புறமாக மண்டபத்தில் தாமரை உட்கார்ந்து கொண்டாள். மாயவர், தாமரையைக் குளிர்ந்த விழிகளால் உற்றுப் பார்த்தார். அவர் முகத்தில் ஒரு பெருமிதம்.அவர் உதட்டிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் ஆலங்கட்டி மழை போல அழுத்தம் திருத்தமாக இருந்தன. 

“இந்தக் குணவதியிடம் போய் அந்த மாந்தியப்பன் தவறாக நடந்து கொள்ள எப்படித்தான் துணிந்தானோ?” 

மாயவர்; வேதனையுடன் இந்தக் கேள்வியை எழுப்பிய போது; தாமரைக்குப் பழைய நினைவு நெஞ்சில் அலை பாய்ந்தது. 

செல்லாத்தாக் கவுண்டரிடம் தங்கள் உரிய உடைமைகளைக் கேட்டுத் தாமரையும் அவள் கணவனும் சென்ற போது மாந்தியப்பன் ஒரு மிருகத்தைப் போலத் தன்னிடம் நடந்துகொள்ள முயற்சித்ததை நினைக்கவே இப்போது பயமாக இருந்தது தாமரைக்கு! 

குன்றுடையான்; மாயவரிடம் அமைதியாகக் கேட்டான் மாந்தியப்பன் இப்போது நல்லவனாக மாறியிருப்பான் அல் லவா? முன்பு இளைஞன்! இப்போது பொறுப்பு அதிகம்! இளவரசனாக இருந்தாலும் ஆட்சி நிர்வாகம் முழுதும் அவன் தானே கவனிக்கிறான். அதனால் திருந்தியிருப்பான் இல்லையா?” 

மாயவர் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்; “பொறுப்பு வந்தால் எல்லோரும் திருந்திவிடுவார்களா என்ன? கோழியின் காலில் சலங்கையைக் கட்டினால் அது நடனமா ஆடும்? குப்பையைக் கிளறத்தானே போகும்? அப்படித்தான் மாந்தியப்பனும்!” 

‘எவ்வளவு அறிவும் நேர்மையும் கொண்ட அமைச்சர் மாயவர்’ இப்படி எண்ணிக்கொண்டு பெருமூச்சு விட்டாள் தாமரை நாச்சியார்! 

‘ஏன் வந்துள்ளார் மாயவர்? என்ற பேச்சை எப்படி ஆரம்பிப்பது?’ என்று தனக்குள் எண்ணித் தவித்துக் கொண்டிருந்த குன்றுடையான்;. மனத்தை திடப்படுத்திக் கொண்டு அவரிடம் பேசினான். 

“மன்னிக்க வேண்டும். வந்தவரை எங்கே வந்தீர்கள் என்று கேட்க கூடாது! இருந்தாலும் தாங்கள் வந்த வேலையைக் கவ னிக்காமல் நான் வீணாகக் காலம் கடத்துகிறேனோ என்ற சந்தேகத்தில் கேட்கிறேன்; என்னிடம் ஆக வேண்டிய காரியங்கள் ஏதேனும் உள்ளதா?” 

குன்றுடையான் இவ்வாறு கேட்டதும், மாயவர் அவனை ஏற இறங்கப் பார்த்தார். 

“வந்த காரியத்தைச் சொல்லாமலா போய்விடுவேன்?” என்று சிரித்தவர், கையிலிருந்த குவளையை வாயில் கவிழ்த்து மோர் குடித்துத் தாக சாந்தி செய்து கொண்டார். 

அப்போது, “அய்யோ! ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்!” என்று தனக்கோடி செட்டியார் அலறும் குரல் கேட்டு குன்றுடையானும், தாமரையும் மண்டபத்திலிருந்து வெளியே வேகமாக விரைந்து வந்தனர். 

மாலை மயங்கும் நேரமாக இருந்ததால் உருவங்கள் தெளி வாக தெரியவில்லை. சிலர், காவிரி ஆற்றை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். தாமரையும், குன்றுடையானும் செட்டி யாரைப் பார்த்து, என்ன? என்ன? என்று கேட்டனர். “அருக்காணித் தங்கம் ஆற்றிலே வீழ்ந்து விட்டாள்” என்று செட்டியார் கத்திக் கொண்டே, மீண்டும் ஆற்றை நோக்கி ஓடினார். அதற்குள் விரைந்து ஓடி வந்த மாயவர், “என்ன நடந்தது? யார் வீழ்ந்தது ஆற்றில்?” என்று பரபரப்புடன் கேட்டார். 

“எங்கள் மகள் அருக்காணித் தங்கம்தான்” என்று தாமரையும் குன்றுடையானும் ஒரே குரலில் சொல்லிக் கொண்டே ஆற்றை நோக்கி ஓடினர். மாயவர் ஒரு கணம்கூடத் தாமதிக்காமல் ஓடிச்சென்று ஆற்றில் குதித்தார். அப்போது குதிரை யொன்று அந்தப் பகுதியிலேயிருந்து விர்ரென்று புறப்பட்டு காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடியது. 

12. பூவையின் போர்க்கோலம்

மாயவர் ஆற்றில் குதிக்கும் அந்த மின்னல் வேகத்திலும் கூட, ஆற்றோரமிருந்து குதிரையில் தாவி ஏறிச் சென்றவன் யார் என்பதைப் பார்க்கத் தவறவில்லை. மாந்தியப்பன்தான் அவன். பொழுது சாய்ந்து கொண்டிருந்த அந்த வேளையிலும் அவரால் அவனைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதைப்பற்றிச் சிந்திக்க முடியாமல்; பகலில் சிறகடித்து வானில் பறக்கும் கருடனின் நிழல் பூமியில் பட்டுச் செல்வது போல் அந்த நினைவு அகன்று விட; அவர் ஆற்றில் நீச்சல் அடித்தார். 

கரையின் அருகாமையிலேயே ஆற்றின் சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் தலை, தண்ணீருக்குள் மூழ்குவதும் வெளியில் சற்றுத் தெரிவதுமாக இருந்தது. அது தன் மகள் அருக்காணித் தங்கம் தான் என் பதை உணர்ந்த தாமரைநாச்சியார்,”தங்கம்! தங்கம்!” என்று ஓலமிட்டு கதறியழுதாள். அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டே குன்றுடையான் ஆற்றில் குதிப்பதற்கு கரைமுனைக் குத் தாவினான். அந்தச் சுழலில் நீந்திச் சமாளிக்க முடியாமல் தன் கணவன் சிக்கிக் கொள்ளக்கூடும் என அஞ்சிய தாமரை; பதட்டமிகுந்த அந்தச் சூழலிலும் கணவன் மீது கொண்ட பாசத்தால் நிதானத்துடன் ஓடிச்சென்று அவனை ஆற்றில் குதிக்காமல் தடுத்து நிறுத்தினாள். குன்றுடையானுடன் வந்தி ருந்த ஆட்கள், காவலர்கள் மளமளவென ஆற்றில் குதித்து அருக்காணித் தங்கம் தவித்துக் கொண்டிருக்கும் இடம் நோக்கி விரைந்து நீந்தினர். 

அனைவரையும் முந்திக் கொண்டு மாயவர்; அவளைத் தூக் கிக் கொண்டு கரை நோக்கி நீந்தி வந்தார். இளமை கடந்து, நடுத்தர வயதையும் தாண்டி விட்ட அந்த முதியவர்; இப் போதும் எவ்வளவு வலிமையுடனும் துணிவுடனும் விளங்குகிறார் என்பதை, கரையோரம் கூடியிருந்தோர் அனைவரும் கண்டு ஆச்சரியத்தில் அமிழ்ந்து போயினர். செல்லாண்டியம் மன் கோயிலுக்கு எதிரில் இருந்த மண்டபத்தில் அருக்காணித் தங்கத்துக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. நிரம்ப நீர் குடித்து மயங்கியிருக்கிறாள் என்பதை உணர்ந்து அவளைக் குப்புறப் படுக்க வைத்து முதுகையும் தோள் பட்டையையும் பலமாக அழுத்தினாள் தாமரைநாச்சியார். மூச்சுத் திணறுகிற அளவுக்கு உட்புகுந்திருந்த தண்ணீர். வாய் வழியாக வெளிப் பட்ட பிறகு; அருக்காணித் தங்கம் மெல்லக் கண் விழித்தாள். அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு, தங்கம்! தங் கம்!” என்று ஆவலுடன் விம்மி விம்மித் தாமரைநாச்சியார் அழத்தொடங்கினாள். “அழாதேம்மா! நான் நன்றாக இருக் கிறேன்” என்று தனது மலர்க்கொடி போன்ற கையால் தாயா ரின் கன்னத்தில் உருண்டு கொண்டிருக்கும் கண்ணீர்த்துளி களைத் துடைத்து விட்டாள் அருக்காணி! 

“கூட்டம் போடாதீர்கள். எல்லோரும் போய் விடுங்கள். நல்ல காற்று வரட்டும்” என்று மாயவர், அந்த மண்டபத்துக் குள் குழுமியிருந்தவர்களை வெளியில் போகச் செய்தார். அவரும் குன்றுடையானும் தாமரையும் மட்டுமே அருக்காணி யின் அருகில் இருந்தனர். 

“உனக்குத்தான் நீந்தத் தெரியாதே அம்மா பின் எதற்காக இந்த வேலை செய்தாய்! அதுவும் ஆற்றுச் சுழலில் போய் யாராவது நீந்துவார்களா? ஏ. அப்பா! எவ்வளவு பெரிய மடு அது!” என்று குன்றுடையான், தனது மகளைப் பார்த்து உருக் கத்துடன் கேட்டார். 

”மசைச்சாமி என்பது சரியாக இருக்கிறது பார்! நீந்து வதற்கா அவள் ஆற்றில் குதித்தாள்?” என்று மாயவர், தனக் குத்தானே கேட்டுக் கொண்டு குன்றுடையானின் வெள்ளை மனத்தை எண்ணி உள்ளூரச் சிரித்துக் கொண்டார். 

“அருக்காணி! என்னம்மா நடந்தது? யார் உன்னைத் துரத்தியது?” 

மாயவர், மிகுந்த கனிவுடன் அவளைப் பார்த்துக் கேட்ட பொழுது; அவள் பதில் ஏதும் சொல்லாமல் கண்ணீர் வடித் தாள். நீர் வடிந்தது கண்களில் என்றாலும் கூடவே நெருப்புப் பொறியும் பறந்தது. அதை மாயவர் கவனிக்காமல் இல்லை. தான் பார்த்ததை அவள் பார்க்காதது போல மறைத்துக் கொண்டு; ‘அழாமல் சொல்லம்மா! உன்னைத் துரத்தி வந்த அந்த துஷ்டன் குதிரையில் ஏறி வேகமாகப் போனதை என் கண்களால் கண்டு விட்டுத்தான் கேட்கிறேன்; என்ன நடந்தது சொல்!” என்று மாயவர், அருக்காணியை வலியுறுத்திக் கேட்டார். சற்று நேரத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி அருக்காணி யின் அகக்கண்களில் நிழலாடிற்று. 

அம்மன் விழாவுக்குத் தாய் தந்தையருடன் வந்திருந்த அருக் காணித் தங்கம் திருவிழாவையொட்டி வைக்கப்பட்டிருந்த கடைகளை, வேடிக்கை பார்த்துக் கொண்டு உல்லாசமாக நடந்து கொண்டே கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தாள். பிரகாரத்தின் பல பகுதிகளில் சுவரில் செதுக்கப்பட்டும் – தனி யாக அழகிய பீடங்களில் வைக்கப்பட்டுமிருந்த சிலைகளின் கவர்ச்சியில் மனத்தைப் பறி கொடுத்து சிற்ப வேலைப்பாடு களை வியந்தவாறு களிப்பு பொங்க வந்து கொண்டிருந்தாள். சிவபார்வதி நடனச்சிலைகளைக் கண்டபோது அந்தச் சிலை களைப் போலத் தானும் அபிநயம் பிடித்து அசைந்தாடி மகிழ்ந் தாள். ஒவ்வொரு சிலையாக உற்றுக் கவனித்து முன் மண்ட பத்தூண்களின் பக்கம் வந்தபோது, ஒரு தூணில் அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த கல்மணியைக் கைகளால் தட்டிப் பார்த் தாள். அந்தக் கல்மணியோ வெங்கலமணியின் ஓசை தந்தது. அதைக் கேட்டதும் அவளுக்கு உற்சாகம் தாங்கவில்லை. செங் காந்தள் மலர்களை விரல்களாகச் சொருகி தாமரை இதழ் களால் உருவாக்கப்பட்டது போன்ற அவளது கைகள் மீண்டும் மீண்டும் அந்தக் கல்மணியைத் தட்டின. அதன் ஓசையின்பம் அந்த இளநங்கையைக் கிளுகிளுக்க வைத்தது. 

அப்போது அடுத்துள்ள தூண்மறைவிலிருந்து முத்தாயி பவ ளாயி இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த மாந்தியப்பன்; அருக்காணியைப் பார்த்துவிட்டான். தூண்மறைவிலிருந்த வாறே அவள் அழகைக் கண்களால் உண்டு மகிழ்ந்தான். 

கோயில் பிரகாரத்திலும் சரி, மண்டபங்களிலும் சரி; எத் தனையோ வாளிப்பான உடல் கொண்ட சுந்தரிகளின் சிலைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தச் சிலைகளில் ஒவ் வொன்றிலும் ஒரு சிறந்த அழகை எடுத்து அனைத்தையும் மொத்தமாகத் தொகுத்த அழகாக அவள் விளங்குவதை உணர்ந்து, உடல்தகிக்க நின்றான். ஏற்கனவே முத்தாயி, பவளாயி இரு வரையும் வட்டமிட்டுக் கொண்டிருந்த அவன் – அவர்கள் தங் கள் தாய்தந்தையருடனேயே இருந்தமையால் சற்று சலிப்புற்று; அந்தக் கிளிகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைவுடனோ என்னவோ; கையருகில் தனியாக வந்துவிட்ட வெண்புறாவை விடக்கூடாதென்று; வறண்டு போன தொண் டையை உமிழ்நீர் கூட்டி நனைத்துக் கொண்டு காத்திருந்தான். 

கல்மணியைத் தட்டிவிட்டு, அந்த மணி அமைக்கப்பட்டுள்ள கல்தூணில் காதை வைத்துக் கேட்கும்போது ஒரு இனிய சங் கீதநாதமே எழுவது கண்டு அவள் ஆனந்தத்தில் மெய்மறந்து போனாள். அந்தச் செவிக்குச் சுவையும் சிந்தைக்குத் தெம்பும் ஊட்டும் நாதத்தை விட்டு வர அவளுக்கு மனமில்லை. அந்தத் தூண் மீதே காதை வைத்து ஒய்யாரமாகச் சாய்ந்து கொண் டாள். சற்று தொலைவில் நின்று பார்த்தால் அந்தப் பெருந் தூணில் ஒரு எழில்மிகு சிலை வடித்திருப்பது போலவே தோன்றியது. 

உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் இளமையின் பூரிப்பு செழித்துக் குலுங்கிடும் வண்ணமயிலாள் தூணில் சாய்ந்து நிற் கும் கோணமும் – அவள் காட்டும் எழிற்கோலமும் – முற்றும் துறந்த முனிவரைக் கூடச் சற்று சலனப்படுத்துமென்றால்; உரலுக்கு ஒரு சேலை கட்டியிருந்தால் கூட அதனை எச்சில் ஒழுகிட உற்றுப் பார்க்கும் இயல்பு கொண்டவனான மாந்தி யப்பனால் காமக்கனலில் இருந்து மீள முடியுமா? 

கல்மணித் தூணை விட்டு அகலாமல் மணியோசையை அனுப வித்துக் கொண்டிருந்த அருக்காணித் தங்கத்தின் கண்ணில் மாந்தியப்பன் மறைந்திருந்த தூண் பட்டது. ஆனால் அவள் கண்களில் மாந்தியப்பன் படவில்லை. அந்தத் தூணிலும் மணிச்சிற்பம் ஒன்றிருப்பதைப் பார்த்து விட்ட அருக்காணி, அந்தச் சிற்பத்தின் சிறப்பையும் தெரிந்து கொள்ளவும் அந்தக் கல்மணியின் நாதம் வித்தியாசமாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும் விரும்பி அந்தத் தூணுக்குத் தாவினாள். 

தாவிய வேகத்தில் தன்னருகே மாந்தியப்பன் நின்றதை அவள் கவனிக்கவில்லை. 

‘மெல்ல! மெல்ல! பார்த்து! பார்த்து!” என்ற ஆணின் குரல் கேட்டுத் திடுக்கிட்டவள்; அவனை நோக்கி, “யார் நீங்கள்?” என்று குரலை உயர்த்திக் கடுமையாகக் கேட்டாள். 

“நான் நிற்குமிடத்துக்கு வந்துள்ள உன்னைப் பார்த்து நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ என்னைப் பார்த்துக் கேட்கிறாய்! பரவாயில்லை; ஒரு பாவை கேட்கும்போது அதற்கு பதில் சொல்லாமல் இருப்பது தர்மமில்லை. நான்தான் மாந்தி யப்பன்! நெல்லிவளநாட்டுக் காவல் ஆட்சியாளரும், தலை யூர்க்காளியின் புரவலருமான செல்லாத்தாக் கவுண்டரின் அருந்தவப்புதல்வன் இளவரசன் மாந்தியப்பன்!” என்று ஆர்ப் பாட்டமாக விடையளித்து விட்டு, அவளையே விழுங்கி விடத் தீர்மானித்தவன் போல நெருங்கினான். 

நெல்லிவளநாடு -செல்லாத்தாக் கவுண்டர் – மாந்தியப்பன் ஆகிய பெயர்கள், தனது தாய் தந்தையர்களால் மட்டுமல்ல; உற்றார் உறவினர் மற்றும் குடையூர் மக்களால் பலமுறை உச்சரிக்கப்பட்டு -அவை வெறுப்புக்குரிய பெயர்களாக அருக் காணியின் உள்ளத்தில் ஏற்கனவே ஆழப்பதிந்திருந்த காரணத் தால் அந்த இடத்தில் ஒருக்கணமும் நிற்க அவள் விரும்பாமல் முகக்குறிப்பால் அகக்குறிப்பை வெளிப்படுத்திவிட்டு விருட் டென்று அங்கிருந்து அவள் நடக்கத் தொடங்கினாள். இள மானைப் போலிருந்த அவளது தோற்றம் திடீரெனப் புலியின் தோற்றங் கொண்டது. அவளைப் போக விடாமல் மாந்தியப் பன் குறுக்கே பாய்ந்து ஒரு சுவர்போல இரு கைகளையும் விரித்தவாறு நின்று கொண்டு, ‘ஏனிப்படித் துடித்துப் போகி றாய்? நான் என்ன; உன்னைக் கடித்தா தின்று விடுவேன்?” என்று கேலிச்சிரிப்பைக் கொட்டினான். அந்தச் சிரிப்பில் விரகதாப நெருப்பும் எரிந்துகொண்டிருந்தது. ஆத்திரத்தால் பதறிய அருக்காணியின் அங்கங்களும் – பெருமூச்சால் உப்பித் தணிந்து மீண்டும் உப்பிய சுவாசப்பையின் மாறுதல் உரு வாக்கிய அவளது மேனியின் மாற்றமும் மாந்தியப்பனின் உடலை மேலும் சூடு பண்ணியதால் ; 

”நீ என்னம்மா தேவலோகத்திலிருந்து திருவிழா காண வந்தவளா? ஊர்வசியா? ரம்பையா? திலோத்தமையா? வழி தெரியாமல் தவிக்கிறாய் என்று நினைக்கிறேன். என் தோளில் தொத்திக் கொண்டால் தொல்லையில்லாமல் உனக்கு வழி காட்டுவேன். சாதாரண வழியல்ல! இன்ப லோகத்துக்கு வழி!” என்றபடி தனது முரட்டுக்கரத்தால் அவளது கரத்தைப் பற்றினான். 

ஒரு பெண்; தன்னுயிரைப் பாதுகாத்துக் கொள்ள எதிர்த் துப் போராடும்போதே தனிப்பலம் பெறுவாள் என்கிறபோது உயிரைவிட மேலான கற்பைக் காத்துக் கொள்ள அதைவிட அதிக பலத்துடன் தானே எதிர்ப்பைக் காட்டுவாள்! 

அவனது இரும்புப் பிடியிலிருந்து அருக்காணி தனது கையை ஒரு முறுக்கு முறுக்கி விடுவித்துக் கொண்டாள். அப்போது அவளது முன் கையும் விரல்களும் இரத்தச்சிவப்பாகி, பச்சை நரம்புகள் எல்லாம் வெளியே தெரிந்தன. 

“நீயெல்லாம் ஒரு மனிதனா? சீ!” என்று சப்தம் போட்டுக் கத்தினாள் அருக்காணி! 

“என்னைப் பார்த்தால் மனிதனாகத் தெரியவில்லையா?” இப்படிக் கேட்டுக் கொண்டே மீண்டும் நெருங்கினான் மாந்தியப்பன். 

“இல்லை! நீ மனிதனே இல்லை! எவனோ ஒருவன் கூடு விட்டுக் கூடு பாய்கிற வித்தை தெரிந்தவன் மனித உடலை விட்டு விட்டு வேறு பிராணியின் உடலில் புகுந்த நேரம் பார்த்து அந்த மனித உடலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்துள்ள மிருகம்தான் நீ!” என்று ஆங்காரமாகப் பதிலுரைத்து விட்டுத் திரும்பினாள் அருக்காணி! 

“மரியாதையாகப் பேசு! நான் யார் தெரியுமா?” என்று அதட்டினான் மாந்தியப்பன். 

“அதுதான் சொன்னேனே மிருகமென்று! இன்னுமா தெரிய வேண்டும் உன்னைப்பற்றி? முட்டாளே! நான் யார் தெரியுமா உனக்கு? குன்றுடையான் தாமரைநாச்சியார் பெற்ற குலக்கொடி அருக்காணித் தங்கம்! இதை அறிந்து கொண்ட பிறகாவது இங்கிருந்து அகன்று விடு!” 

“அடடே – அப்படியா? இதை நீ சொன்ன பிறகு தான் எனக்கு ஆசையே அதிகமாகிறது! தாயார் தாமரை தான் கிடைக்கவில்லை – அவள் மகள் இந்த அல்லியாவது கிடைக்கட்டுமே!” 

”சே! உன்னை மிருகம் என்று சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பார்த்தாயா? பண்பாட்டுப் பெருமை கொண்ட கொங்கு வேளாளர் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு தான் நீ என்பதை நிரூபித்து விட்டாய்! உம்; விலகி வழிவிடு!” 

கனல் தெறிக்க அருக்காணி சொற்களை வாரியிறைத்து விட்டு அவனை மீறி அங்கிருந்து போக முனைந்த போது, 

“முடியாது; உன்னைப் போக விட முடியாது! அதோ நிற்கிறது என் குதிரை! உன்னைத் தூக்கி வைத்துக் கொண்டு அதில் போகப் போகிறேன். வா!” என்று மூர்க்கத்தனமாகக் கூறிக்கொண்டே, கடல் நண்டின் கால்களைப் போல் நீண்டிருந்த தன் கைகளால் அவளை இறுகத் தழுவினான். 

அவள், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு நழுவிக் கொண்டு ஓடினாள். அவன் விடவில்லை. ஓடிய வேகத்தில் அருக்காணி, விழாப் பந்தலுக்கு மேல்புறத்தில் மண்டிக்கிடந்த புதர்களுக்கு மத்தியில் மறைந்து கொண்டாள். எனினும் மாந்தி யப்பன் அவளை விடவில்லை. தொடர்ந்து துரத்தினான். புதர் மறைவுக்குள் புகுந்து புகுந்து அங்குமிங்கும் ஓடியவளை அவ னும் முன்னும்பின்னுமாக ஓடித் தத்தளிக்கச் செய்தான். 

ஓடிக் கொண்டிருந்த அருக்காணி, அங்கு நின்றிருந்த மாந்தி யப்பனின் குதிரையருகே போய்க் கீழே விழுந்தாள். எழுந் தாள். பார்த்தாள். அந்தக் குதிரையின் பக்கத்திலிருந்து அவளை வாரியணைத்துத் தூக்க மாந்தியப்பன் குனிந்தான். கொஞ்சம் ஏமாந்தாலும் காரியம் கெட்டு விடும் என்றுணர்ந்த அருக் காணி, தனது உயிருக்கும் மேலாக மதித்த கற்புச் செல்வத் தைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து ஆற்றோரம் ஓடினாள். 

கால் தரையில் படுவது கூடத் தெரியாமல் மிக வேகமாக ஓடக் கூடியது மான் எனினும் குறுக்கே ஓடி அதன் குரல் வளையைப் பிடித்துக் குதறக் கூடிய திறமை வேங்கைப் புலிக்கு உண்டல்லவா; அதுபோலத்தான் ஆற்றோரம் ஓடிக் கொண்டி ருந்த அருக்காணியைப் பிடித்து அனுபவிக்க மாந்தியப்பன் குறுக்கே ஓடினான். இனித் தப்பித்துக் கொள்ள வழியில்லை யென்று கண்ட அருக்காணி, ஆற்றில் குதித்து விட்டாள். 

ஒரு பெண் பதறிப் போய் ஓடி ஆற்றில் விழுந்ததை ஆற் றோரம் நின்ற சிலர் பார்த்துக் துடித்தனர். பழி தன்னைச் சேராமல் பாதுகாத்துக் கொள்ள மாந்தியப்பன் குதிரையி லேறிப் பறந்து விட்டான். 

பெரிய ஆபத்திலிருந்தும், விபத்திலிருந்தும் அருக்காணித் தங்கம் தப்பித்துக் கொண்டாள் என்ற மகிழ்ச்சியொருபுறம் தாமரைக்கும் குன்றுடையானுக்கும் இருந்தாலும்கூட செல்லாத் தாக் கவுண்டர் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தைப் பழி வாங்குவதிலும் சீரழிப்பதிலும் இன்னமும் கண்ணுங்கருத்து மாகச் செயல்படுகிறார்களே என்ற வேதனை அதிகரிக்க ஒரு வரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

அப்போது மாயவர் குன்றுடையானைத் தட்டிக்கொடுத்து, “நெல்லியங்கோடா! உணர்ச்சி வயப்படாதே! தலையூர்காளி தன் பக்கமிருக்கிற தைரியத்தில் செல்லாத்தாக் கவுண்டரும் அவர் மகனும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும், தலையூர்க் காளியையும் நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிந்து கொள்ளவைக்கவும் முடியுமென்ற நம்பிக்கையுடன் தான் நான் திரும்பியே வந்து தலையூரில் பொறுப்பை ஒப்புக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். 

தாமரை நாச்சியாரின் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. தங்களுக்குரிய நில புலம் முதலிய சொத்துக்களை யும் ஆட்சி உரிமையையும் திரும்பக் கேட்கத் தானும் தன் கண வனும் செல்லாத்தாக் கவுண்டர் மாளிகைக்குச் சென்றிருந்த போது தனது கணவனின் உயிருக்கும் தனது கற்புக்கும் தகப் பனும் மகனும் ஏற்படுத்த இருந்த ஆபத்தை நினைவுக்குக் கொண்டு வந்த தாமரைநாச்சியாருக்கு இருதயமே இப்போது வெடித்து விடும் போலிருந்தது. மாயவரைப் பார்த்து அவள் அழுதவாறு சொன்னாள் என்றாலும் அவள் நெஞ்சில் தீப் பொறிகள் பறந்து கொண்டிருப்பதை மாயவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. 

“அய்யா! நாங்கள் பெற்ற பிள்ளைகளில் இவள் ஒருத்தி தான் மிச்சமிருக்கிறாள்; இவளையும் பறி கொடுத்து விட்டு நாங்கள் என்ன செய்வோம்! எப்படி உயிரோடு வாழ்வோம்!” 

மாயவர் அருக்காணித் தங்கத்தை அன்பு பொங்கப் பார்த் தார். தாமரை வெளியிட்ட சோகம் அவரைக் கலக்க மடையச் செய்யவில்லை. காரணம்; தாமரைக்கும் குன்றுடையானுக்கும் பிறந்த பிள்ளைகளில் அருக்காணி மட்டுமே மிச்சமிருக்கிறாள் என்பது தவறான கணக்கு என்பதை அவர் தெரிந்து கொண்டி ருந்தார். அவர்களின் பிள்ளைகளான ஆண் மக்கள் பொன் னர் சங்கர் இருவரும் உயிரோடு இருக்கிறார்கள் என்ற விப ரத்தை மாரிக்கவுண்டன் பாளையத்தில் ராக்கியண்ணன் மாய வரிடம் கூறியிருந்ததால் மாயவருக்கு தாமரையின் சோகத்தில் பங்கு கொள்ளக் கூடிய அக்கறை ஏற்படவில்லை. 

ஆனால் ஒன்று; தாங்கள் பெற்ற பொன்னரையும் சங்க ரையும் குழந்தைப் பருவத்திலேயே இழந்துவிட்டதை மட்டுமே அறிந்து சோகத்தில் மூழ்கியிருக்கிறார்களேயல்லாமல் எப்படி அந்தக் குழந்தைகளை இழக்க நேரிட்டது என்பதையோ அல்லது யாரால் அந்த இழப்பு நேரிட்டது என்பதையோ தாம ரையும், குன்றுடையானும் அறியாதவர்களாகவே இருக்கிறார் கள் என்பதை மாயவர் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிந்தது. 

தாயின் மடியில் படுத்துக் கொண்டும் பின்னர் அவள் தோளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டும், ஓரளவு தன்னிலை யைச் சரிப்படுத்திக் கொண்ட அருக்காணி தங்கம் களைப்பு நீங்க மெல்ல எழுந்து நின்றாள். 

அழுது கொண்டிருக்கும் தாயாரையும், அவளைப் பார்த்துக் கண்கள் கலங்கிட அமர்ந்திருக்கும் தந்தையையும் நோக்கி வீரா வேசமாகப் பேசினாள். 

“அண்ணன்மார்கள் இருவரை நான் இழந்து விட்டேன். நீங் களும் ஆண் பிள்ளைகள் இருவரை இழந்து விட்டீர்கள். அம்மா! அப்பா! நான் ஒருத்தி மிச்சமிருக்கிறேன்! இழந்து விட்ட அண்ணன்மார்கள் இருவரின் வலிமையையும், துணி வையும், நான் ஒருத்தி ஏன் பெறக் கூடாது? நம்மைப் பழி வாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு அலையும் செல் லாத்தாக் கவுண்டர் குடும்பத்தையும் அவர்களுக்குத் துணை நிற்கும் தலையூர் ஆட்சியையும் இனி நானே எதிர்த்துப் போராட எனக்கு அனுமதி கொடுங்கள்! இன்று நடந்துவிட்ட இந்த அக்கிரமமான நிகழ்ச்சிக்குப் பிறகும் பொறுமையாக இருப்பது கோழைத்தனம். அநியாயத்தை எதிர்த்து நாம் நடத் தப்போகும் தர்மயுத்தத்தில் நமது குடும்பமே பூண்டற்றுப் போனாலும் சரி; ஒரு புனித காரியத்துக்காக அழிந்து போனோம் என்று எதிர்கால வரலாறு நமக்காக ஒரு புதிய அத்தியாயத் தைச் சேர்க்கட்டும். அனுமதி கொடுங்கள்!” 

சீற்றம் பொங்கப் பேசிக் கொண்டிருந்த அவளது தலையைக் கோதி விட்டவாறு மாயவர், அம்மா; அருக்காணி! அவசரப் படாதே! பொன்னரும் சங்கரும் இல்லையென்பது உறுதிப்பட் டால்தானே; நீ போர்க்கோலம் பூண வேண்டும்!” என்றார் புன்னகை மலர்ந்த முகத்துடன்! 

“என்ன சொல்கிறீர்கள்? பொன்னரும் சங்கரும் இருக்கிறார் களா? நான் பெற்ற செல்வங்கள் உயிரோடு இருக்கிறார்களா?” என்று ஆவலின் முகட்டுக்கே சென்று தாமரைநாச்சியார், மாயவரைப் பார்த்துக் கேட்டாள். 

13. வழியில் வந்த விபரீதம் 

“பொன்னரும் – சங்கரும் உயிரோடிருக்கிறார்களா?” என்று தாமரை நாச்சியார் மாயவரைப் பார்த்துக் கேட்டபோது. “ஆம்” என்றும் சொல்லாமல் “இல்லை” என்றும் சொல்லாமல் அவர் ஒரு புன்னகையை இதழோரத்தில் நெளியவிட்டார். அந்தப் புன்னகை கூட; நீண்டு, அடர்ந்து வளர்ந்திருந்த அவரது தாடி மீசைக்கிடையே ஒளிந்து கொண்டுதான் கருமேகம் கிழித்து வரும் கவின் நிலவு போல வெளிப்பட்டது. 

”நான் உங்களோடு குடையூருக்கு உங்கள் மாளிகைக்கு வருவதாக இருக்கிறேன். பொன்னர் சங்கர் பற்றி இந்த மண்டபத்தில் பேசுவதை விட அந்த மாளிகையில் பேசுவது சிலாக்கியமெனக் கருதுகிறேன். நான் வரலாமல்லவா? என்று மாயவர், குன்றுடையானைப் பார்த்துக் கேட்டார். 

“தாராளமாக வாருங்கள். இப்போதே புறப்படலாம்” என்று மகிழ்ச்சி பொங்கக் குன்றுடையான் பதிலளித்தான். 

பொன்னரும் சங்கரும் ஆரிச்சம்பட்டி மணியங்குரிச்சியில் சின்ன மலைக்கொழுந்துவின் இனிய உபசாரத்தில் மகிழ்ந்து இருக்கிறார்கள் என்பது செல்லாண்டி அம்மன் கோயில் மண்ட பத்திலிருக்கும் தாமரைக்கோ அல்லது குன்றுடையானுக்கோ எப்படித் தெரிய முடியும்? அவர்களைப்பற்றி தேன் துளி போன்ற ஒரு செய்தியைச் சொன்ன மாயவருக்கே கூட அவர் கள் மணியங்குரிச்சி மாளிகையில் இருப்பது தெரியாதுதானே! 

தனது பெண்கள் முத்தாயி, பவளாயி இருவரையும் பேரா பத்திலிருந்து காப்பாற்றிய பொன்னர் – சங்கரையும் அவர் களது உற்ற நண்பன் வீரமலைச் சாம்புவனையும் சின்ன மலைக்கொழுந்து மிக்க நன்றியுணர்வோடு வரவேற்றது மட்டு மல்ல; சங்கரின் காயத்திற்கு மருத்துவர்களைக் கொண்டு நல்ல மூலிகைச் சாறுகளைத் தடவி குணப்படுத்துவதிலும் அக்கறை காட்டினார். 

வலியையும், எரிச்சலையும் போக்கி, ரத்தக் கசிவை உடனடி யாக நிறுத்தக் கூடிய பச்சிலைச்சாறு என்ற காரணத்தால் சங்கர் நன்றாக எழுந்து நின்று வழக்கம்போல் கம்பீரமாக கண்ணொளி சிந்திப் பொன்னரைப் பார்த்தபோது; பொன் னர் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான். அவர்களது பாச உணர்வைக் கண்ட சின்ன மலைக்கொழுந்து அவருக்குத் தெரிந்த புராண கதாபாத்திரங்கள் நினைவுக்கு வரவே; 

”ஏ அப்பா! ராம லட்சுமணர் மாதிரி சகோதர பாசத் தோடு இருக்கிறீர்களே?” என்று மூக்கின் மீது விரலை வைத் துக் கொண்டார். உடனே வீரமலைச் சாம்புவன் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே, 

“ஆமாம்! நான்தான் இந்த ராம லட்சுமணருக்கு அனுமார்!” என்றான்! மாளிகைக் கூடத்திலிருந்த எல்லோருமே கலகல வெனச் சிரித்து விட்டனர். 

“வால்தான் பாக்கி!” என்றான் சங்கர்; குறும்புப் புன்னகையுடன்! 

“இத்தோடு நிறுத்துங்கள் ராமாயணத்தை! இதற்கு மேல் வனவாசம் அசோகவனம் இலங்காதகனம் யுத்த காண்டம் என்றெல்லாம் போய்விடாதீர்கள் என்று பொன்னர் கூறியபோது, அந்தப் பேச்சில் இருந்த நிதானத்தையும் அடக் கத்தையும் சின்ன மலைக்கொழுந்து கவனிக்கத் தவறவில்லை. 

அவர்களின் உரையாடலின் நடுவே சமையல்காரன் நுழைந்து; ”எஜமான்! உணவு தயார்!” என்று மெத்த மரியாதையுடன் குனிந்து நின்றவாறு சொன்னான். கைகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வெள்ளிச் செம்புகளில் தண்ணீர் கொண்டு வந்து தரப்பட்டது. 

”உம்! வாருங்கள்; சாப்பிடலாம்!” என்று சின்னமலைக் கொழுந்து இன்முகத்துடன் அழைத்தார். 

எந்தத் தாமரைநாச்சியாரும் அவள் கணவனும் இனி வீட்டுக் குள் இருக்கக் கூடாது என விரட்டியடிக்கப் பட்டார்களோ; அந்தத் தாமரைநாச்சியின் செல்வப்புதல்வர்கள் பொன்னர் சங்கர் இருவரும் அதே வீட்டில் ராஜ உபசாரத்துடன் நடத்தப் படுகிறார்கள்! 

இந்த உண்மை சின்னமலைக்கொழுந்துக்கும் தெரியாது; பொன்னர்-சங்கருக்கும் தெரியாது; அவர்களின் பெற்றோருக்கும் தெரியாது. 

பொன்னருக்கும் சங்கருக்கும் நடுவிலே உட்கார்ந்து கொண்டு, பரிமாறுகிறவனின் பாத்திரத்திலேயுள்ள பண்டங்களைத் தானே தனது கைகளால் எடுத்து அவர்களது இலைகளில் வைத்து; உம்! நிறைய சாப்பிடுங்கள்! மணியங்குரிச்சியில் கிழங்கு வறுவல் மிக நன்றாக இருக்கும்! இங்கே போடுகிற வடவத் துக்கே ஒரு தனி ருசிதான்! மிளகுச்சாறு காரமில்லாமல் இருக் கும்! ஜீரணத்துக்கு மிகவும் நல்லது! பொதுவாகக் கொங்கு நாட்டில் கட்டித் தயிருக்குக் கேட்க வேண்டியதில்லை அதி லும் மணியங்குரிச்சி தயிருக்கு ஒரு அலாதி மகிமை உண்டு!” என்று சின்னமலைக்கொழுந்து அடுக்கிக் கொண்டே போனார். 

“சாப்பிடுவதைக் காட்டிலும்; நீங்கள் சொல்வதைக் கேட்பது மிகவும் சுவையாக இருக்கிறது!” என்றான் சங்கர்! தம்பியின் கேலியை வெகுவாக ரசித்து மகிழ்ந்தான் பொன்னர்! 

“ஆமாம்; நீங்கள் வந்து எவ்வளவு நேரமாகிறது! காவிரிக் கரையில் கேட்ட போதும் சொல்லவில்லை; வழியில் பயணத் தின் போதும் சொல்லவில்லை; இப்போதாவது உங்கள் பெயர்களைச் சொல்லக்கூடாதா?” என்று சின்னமலைக்கொழுந்து ஆவல் ததும்பிட அவர்களைப் பார்த்துக் கேட்டார். 

சிரிப்பு தழைக்க உணவருந்திக் கொண்டிருந்த அவர்கள் மௌனமாகிவிட்டனர். “ஓ! வாயில் சோறு இருக்கிறதோ?” என்று சின்னமலைக்கொழுந்து யதார்த்தமாகக் கேட்பது போலக் கேட்டார். 

எல்லோரும் பொன்னர் சங்கர் வாயசைவை உற்று நோக் கிக் கொண்டு உணவருந்துவதைக் கூட மறந்திருந்தனர். ஆனால் அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. ஒரு வழியாக சாப்பாட்டு நிகழ்ச்சி முடிவுற்று, அனைவரும் எழுந்து வந்து கைகழுவிக் கொண்டு, மாளிகையின் முன்கட்டில் பட்டு மெத்தை தைக்கப்பட்ட நாற்காலிகளில் அமர்ந்தனர். 

வெள்ளித் தட்டுகளில் தாம்பூலம் கொண்டு வந்து வைக்கப்பட்டது. பொன்னர் – சங்கர் இருவரும் தாம்பூலத்தட்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வீரமலைச் சாம்பு வன் அருகே வந்து, தாம்பூலத்தை எடுத்து அவர்களுக்கு மடித் துக் கொடுத்தான். இருவரும் அதனைப்பெற்றுக் கொள்ளத் தயங்கினர். “தாம்பூலம் போடும் பழக்கம் கிடையாதா?” என் றார் சின்னமலைக்கொழுந்து! 

“பழக்கம் இல்லாவிட்டாலும் இப்போது போட்டாக வேண் டும். அப்போதுதான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல் வாயைக் குதப்பிக் கொண்டிருக்க முடியும்!” என்றான் வீர மலைச்சாம்புவன். 

“பயப்படத் தேவையில்லை! நான் இனிமேல் பெயர் கேட் டுத் தொல்லை கொடுக்கமாட்டேன்! ஓய்வெடுக்க வசதியான அறைகள் இருக்கின்றன! உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பார்கள்” சற்றுப்படுத்துக்களைப்பாறுங்கள்’ என்று சின்னமலைக்கொழுந்து வேண்டிக் கொண்டார். 

பொன்னரும் சங்கரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு வீரமலைச்சாம்புவனையும் பார்த்தனர். அவர்கள் முன்னால் ராக்கியண்ணன் நிற்பது போல் தோன்றியது. எதிர்பாராமல் இவ்வளவு தொலைவு வந்து விட்டோம்; ஆசானுக்கும் எந்தத் தகவலும் அனுப்பவில்லை; அதனால் உடனே திரும்புவது தான் நல்லது என்ற முடிவுடன் மணியங்குரிச்சியாரைப் பார்த்து, தயவு செய்து எங்களுக்கு விடை கொடுங்கள்! நாங்கள் புறப்படுகிறோம்” என்றனர். 

உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த மணியங்குரிச்சிக் கவுண் டர் திடீரென எழுந்தவாறு; “நல்ல காரியம் செய்தீர்கள்! என் மனைவி சிலம்பாயியும், மகன் வையம்பெருமானும் உங்களால் காப்பாற்றப்பட்ட என் பெண்களும் இந்நேரம் பாதி வழியைத் தாண்டியிருப்பார்கள். அவர்கள் வந்து நீங்கள் எங்கேயென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? உங்களைப் பார்க்கவும் பரிந்து உபசாரம் செய்யவும் அவர்களுக்கு எவ்வளவு ஆசை இருக்கும் தெரியுமா?” என்று ஒரு சிறிய சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார். 

“எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். எங்கள் ஆசானைப் பிரிந்து இவ்வளவு தொலைவு வந்ததும் இவ்வளவு நேரம் இருந்ததும் கூட எங்கள் பாசறை வாழ்க்கையில் புதுமையான ஒன்று! எங்களைப் பற்றி அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ? எப்படிக் கவலைப்படுகிறாரோ? எங்கெல்லாம் தேடுகிறாரோ? அதனால் விரைவில் நாங்கள் மாரிக்கவுண்டன் பாளையம் போய்ச் சேர வேண்டும்” என்று தம்பியையும் அணைத்தவாறு எழுந்து கொண்டான் பொன்னன். 

“உங்கள் ஆசான் ராக்கியண்ணனைப் பற்றி எனக்குத் தெரி யாதா என்ன? இளமைக்காலத்தில் அவர் எப்படிப்பட்டவர் என்பதையும், எவ்வளவு முரட்டு சுபாவம் உடையவர் என்ப தையும், அப்போதெல்லாம் அவருக்குக் கோபம் மூக்கிலேயே நிற்கும் என்பதையும் நான் நன்றாக அறிவேன். நான்கூட அவரிடத்தில் சில காலம் போர்ப்பயிற்சி பெற்றவன்தான். அப்போதுதான் அப்படி எரிமலையாகவே இருப்பார். இப் போது ஒரு நீரோடை போல நிதானங் கொண்டவராக ஆகி விட்டார். எங்கே போனீர்கள் என்று அவர் கடிந்து கொண் டால் கூட; மணியங்குரிச்சி சின்னமலைக்கொழுந்து மாளி கைக்கு என்று தெரிவிப்பீர்களேயானால் மெத்தவும் மகிழ்ச்சி அடைவார். தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். செல்லாண்டியம்மன் கோயிலில் இருந்து திரும்பி வருகிற என் குடும்பத்தார் வந்ததும் – அவர்களைப் பார்த்து விட்டு உடனே நீங்கள் புறப்பட எந்தத் தடையும் சொல்லமாட்டேன்’ எனப் பொரிந்து தள்ளிய மணியங்குரிச்சியாரின் பேச்சுக்கும் சற்று மதிப்புக் கொடுத்து உட்காரலாமா என்று பொன்னரும் சங்க ரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

அவர்களுக்குப் போகவும் வேண்டுமென்ற அவசரம் -அதே சமயத்தில் அந்தப் பெண்கள் முத்தாயி, பவளாயி இருவரும் திரும்பி வந்ததும் ஒருமுறை பார்க்க வேண்டுமென்ற இனமறி யாத உணர்வு ஒரு புறம் இந்த ரகசியத்தை அங்கிருந்தவர் களில் சரியாகப் புரிந்து கொண்டவன் வீரமலைச்சாம்புவன் மட்டுமே! 

சுழன்றடித்த சூறாவளிக்கும் சுற்றி வளைத்த மலைப்பாம் புக்கும், முதலைக்கும் ஈடுகொடுத்துத் தங்களை மீட்டுக் கரை யேற்றிய இணையற்ற வாலிபர்களை இருவிழி கொட்டாமல் அந்த மலர்க்கொடி மகளிர் பார்த்த காட்சியை வீரமலைச் சாம்புவன் காணத்தவறவில்லை. முரட்டுத்தனமான வீரமும் ஆண்மையும் மாத்திரமே குடிகொண்டிருந்த பொன்னர் சங்கர் இருவரின் முகங்களிலும் பாசமும் அன்புப் பிரவாகமும் ஒரு பாறையின் மீது படர்ந்த பனிப்படலம் போல் கெட்டி யாகப் படர்ந்ததையும் வீரமலைச்சாம்புவன் கண்டான்; கணக் கிட்டுக் கொண்டான். அதனால்; போக வேண்டுமென்று இருவரும் துடித்தாலும் கூட இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வற்புறுத்தி அந்த மயில்கள் வரும் வரையில் தங்கச் செய்து விடமாட்டார்களா என்ற ஆவலும் அந்த வாலிப இதயங்களில் வண்ணக் கோலமிட்டிருப்பதை வீரமலையினால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவன் தனது நண்பர்களுக் காகப் பேச முனைந்து; சின்னமலைக்கொழுந்துக் கவுண்டருக் காகப் பரிந்து பேசுவது போல நன்றாக நடித்தான்; 

“நடந்த விஷயங்களையெல்லாம் நமது ஆசானிடம் விவர மாக எடுத்துச் சொன்னால் அவர் ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டார். நான் அவரிடம் சொல்ல வேண்டிய முறையில் சொல்லி சமாதானப்படுத்துகிறேன். மணியங்குரிச் சியார், பேச்சைத் தட்ட ண்ேடாம். இன்னும் சிறிது நேரம் தாமதிக்கலாம் என்று வீரமலை கூறியவுடன்; அது பிடிக்காத வர்கள் போல பொன்னரும் சங்கரும் அலுத்துக் கொண்டார் கள் என்றாலும் மனதுக்குள் “நண்பன் என்றால் இவன்தான் நண்பன்” என்று பாராட்டியதோடு அவனுக்கு இதயமார வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டார்கள். 

செக்கச் சிவந்த செந்தூரப் பொடி வெண்மையான ஆடை யில் பட்டு விட்டால் என்னதான் ஓங்கியடித்துத் தட்டினாலும் அது அந்த ஆடையை விட்டு அகலாது! துடைக்கத் துடைக்கப் பலமாகப் பிடித்துக் கொண்டு விடும்! அதுபோல பொன்னர் மனத்தில் முத்தாயியின் உருவமும், சங்கர் மனத்தில் பவளாயி யின் உருவமும் படிந்து விட்டன என்றே கூற வேண்டும். 

இவர்களுக்கு என்ன நிலையோ; அதே நிலைதான் மணியங் குரிச்சி நோக்கி ரத வண்டியில் வந்து கொண்டிருக்கும் முத் தாயி பவளாயி நிலையும்! 

அரும்பாடுபட்டு விசாரித்தும் அர்ச்சனை செய்வதற்கு அவர் கள்பெயர் தெரியாமலே போய்விட்டதால்; வேறு வழியின்றி விளையாட்டாக வையம்பெருமான் சொன்னது போல; பெரியாண்டான், சின்னாண்டான் என்ற பெயர்களுக்கே அம் மனுக்கு அர்ச்சனை செய்து முடிக்கப்பட்டது. அம்மனின் ஆயி ரம் நாமங்களை உச்சரித்துப் பூசாரியார் அர்ச்சனை முடித்துத் தூப தீபங்களைக் காட்டும் போதும்-தட்டில் குங்குமம் வைத்து எடுத்து வந்து கொடுத்தபோதும் அம்மனுக்கு சாத்தியிருந்த பூச்சரத்தைக் கிள்ளி வழங்கிய போதும் சிலம்பாயியின் மனம்; அந்தப் பிள்ளையாண்டான்கள் நன்றாக இருக்க வேண்டும் தாயே!” தீக்காயுளுடன் வாழவேண்டும் தாயே!’ என்று பிராத்தனை செய்த அதே வேளையில்; முத்தாயி பவளாயி இருவரின் இதயத்து உதடுகள்; “அந்த அடலேறு களுக்கு வாழ்க்கைப்பட அம்மன் அருள் புரிவாளா? என்று தான் உச்சரித்துக் கொண்டிருந்தன. காதல் உச்சரிப்பு அல் லவா? அதனால் யார் காதிலும் அது விழவில்லை! 

வழியில் வண்டியில் வரும்போது அதே நினைப்புத்தான் அவர்களுக்கு! ரத வண்டியின் முன்னும் பின்னும் பாதுகாப் புக்கான வீரர்கள் பலர் குதிரைகளில் சென்று கொண்டிருந்த னர். இருள் மெல்லத் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டதால் பயணம் மெதுவாகவே நடை பெற்றுக் கொண்டி ருந்தது. 

தன் மகள்கள் இருவரும் தாமரை நாச்சியாரையும் அவள் கணவன் குன்றுடையானையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்த சிலம்பாயி; பயணத்தில் சிறிது தூரம் வரையில் அதைப்பற்றியே பேசிக் கொண்டு வந்தாள். 

சிலம்பாயி, மணியங்குரிச்சி மாளிகைக்கு மருமகளாக வரு வதற்கு முன்பே தாமரைநாச்சியின் திருமணத்தகராறு நடந்து முடிந்து விட்டபடியால் அந்த புயலைப்பற்றி அதிகம் தெரி யாதவளாகவும்; நேரடியான பாதிப்புக்கு ஆளாகாதவளாகவும் இருந்தாள். தனக்கு பிறக்கும் பிள்ளைகளுக்குத் தனது சகோ தரன் பெண்களை மணமுடிப்பேன் என்று தாமரையாள் சப தம் செய்திருந்ததை அவள் கேள்விப்பட்டிருந்தாள். தாமரை யாளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த சேதியும் மிகக் குறுகிய காலத்தில் அந்தக் குழந்தைகள் காணாமற் போய் விட்ட சேதியும் சிலம்பாயியின் செவிகளிலும் விழுந்திருந்தன! அந்தக் குழந்தைகளின் மூலம் மீண்டும் குன்றுடையான் குடும் பத்துக்கும் மணியங்குரிச்சிக்கும் உறவு மலரக் கூடும் என்ற கனவும் பொய்த்து விட்டது. தாமரைநாச்சியாருக்கு ஒரு பெண் இருப்பதாக சிலம்பாயிக்குத் தெரியும். அந்தப் பெண்ணைத் தனது மகன் வையம்பெருமானுக்கு மணமுடித்து வைத்தால் பழையபடி சொந்த பந்தம் உயிர்பெற வழியுண்டு. 

அப்படியொரு ஏற்பாட்டுக்குத் தனது கணவன் ஒப்புதல் தருவாரா? அவரே ஒப்புக் கொண்டாலும் தாமரைநாச்சியார் சம்மதிப்பாளா? நாச்சியாரின் பிள்ளைகளுக்கு மணியங்குரிச் சிப் பெண்களைக் கட்டுவதுதானே அவளது குறிக்கோளாகவும், சபதமாகவும் இருந்தது; அது நிறைவேறாத நிலைமையில் தனது ஆசையை நிறைவேற்ற தாமரைக்கு எப்படி அக்கறை வரப்போகிறது? 

இப்படியெல்லாம் பல்வேறு சிந்தனைகளுடன் சிலம்பாயி வண்டியில் அமர்ந்திருந்தாள். 

பொன்னரின் வாட்டசாட்டமான உருவம் – பொலிவு நிறைந்த முகம்  – வீரத்தை முரசு கொட்டி அறிவிக்கும் மீசை – யானை மத்தகத்தைப் பிளந்து இருபுறமும் வைத்தது போன்ற தோள்கள் உற்றுப் பார்த்தால் சிங்கம் உயரத் தலையைத் தூக்கினால் வேங்கை; நினைத்து நினைத்து நெஞ்சை இனிப் பாக்கிக் கொண்டிருந்தாள் முத்தாயி! 

என்னே எஃகு போன்ற உறுதியான உள்ளம்! இதழ்களுக்கு மேலே ஈட்டியின் முனைகள் இரண்டை வைத்தது போல் மீசை! தேர்த்தட்டோ? மார்போ? எனத் திகைக்க வைக்கும் தேகக்கட்டு! அர்ச்சுணன் அபிமன்யு இந்திர ஜித்தன் என்று புராணவீரர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவர்களில் ஒருவரை நேரிலே காணும் பாக்கியமல்லவா இன்று எனக்கு கிடைத்தது! இப்படியெண்ணிப் பெருமூச்சு விட்ட பவளாயின் நெஞ்சகம் விம்மிப்புடைத்தது! 

கறுப்புக் கோடுகளால் நெருக்கிப் பின்னும் இரவின் நெச வுக்கிடையே அவர்களின் ரத வண்டி, காவிரியின் தென்கரை யில் குளித்தலை வரையில் கிழக்கு நோக்கி மெதுவாகவே சென்று; குளித்தலையிலிருந்து தெற்கு நோக்கி சற்று வேக மாகப் போகத் தொடங்கியது. ஆற்றோரச் சாலையைக் கடந்து விட்டப்படியால் ஆரிச்சம்பட்டிப் பாதை அகலமாக இருந்த தாலும் – மேடு பள்ளங்கள் அதிகமில்லாததாலும் குதிரைகள் சிரமமின்றி ஓடுவதற்கு வசதியாக இருந்தது. 

நல்ல பாதையானாலுங்கூட இடையிடையே அடர்த்தியான பெரும் புதர்களை கடக்க வேண்டியிருந்தது. புதர்கள் இருபுற மும் வரும் போதெல்லாம் ரத வண்டிக்கு முன்னால் பாது காப்புக்குச் சென்ற குதிரை வீரர்கள் உரக்கச் சத்தமிட்டு, “வேல்! வேல்! வீரவேல்!’ என்று கூறிக் கொண்டு போனார் கள். அந்தப் பெரும் ஒலி கேட்டு, புதர்களில் பதுங்கியிருந்த நரிக்குட்டிகள், காட்டு முயல்கள், ஒரு புதரிலிருந்து மற்றொரு புதருக்குச் சல சலப்பு காட்டி ஓடிக் கொண்டிருந்தன. நடுச் சாலையில் ஓடிய வேகத்தில் கீரிப்பிள்ளைகள் சிலவும், முயல்கள் சிலவும் குதிரைகளின் குளம்படிகளுக்கும் பலியாயின. 

எல்லாப் புதர் அடர்ந்த வழிகளையும் கடந்தாயிற்று மிச் சம் ஒரே ஒரு இடந்தான்! மிகமிக அடர்த்தியாகவும் நீளமாக வும் புதர் மண்டிய பகுதி – அந்த இடத்தை ரத வண்டி கடந்த போது, “வேல்! வேல்! வீரவேல்! என்று சத்தம் கேட்டது. அந்த சப்தம் பாதுகாப்புக்குச் சென்ற குதிரை வீரர்களின் சப் தம் மட்டுமல்ல; மேலும் ஏராளமான குதிரை வீரர்கள் சூழ்ந்து கொண்டு எழுப்பிய சப்தமாக இருந்தது. 

அந்த ஒலியுடன் வாட்கள் ஒன்றோடொன்று மோதிய ஒலி களும் எழுந்தன! “ஆ! அய்யோ!” என்று கூவிக்கொண்டு அடங்கிப் போகும் மரண ஒலிகளும் அதில் கலந்திருந்தன. 

“நிறுத்தாதே! வண்டியை வேகமாக ஓட்டு!’ என்று வையம் பெருமான் கத்தினான். அவன். உத்திரவுப்படி ரத வண்டி வேகமாக ஓட்டப்பட்டது. ஆனால் முடியவில்லை! ஏராளமான குதிரை வீரர்கள் வண்டிக்கு முன்னால் நின்று வண்டியைப் போக விடாமல் தடுத்து விட்டனர்! 

தடுத்துச் சூழ்ந்த அந்த வீரர்கள் மீது மணியங்குரிச்சியின் பாதுகாப்பு வீரர்கள், தங்கள் உயிரைப்பற்றிக் கவலைப்படா மல் பாய்ந்தனர். பயனில்லை. உயிரிழந்து கீழே சாய்ந்தனர்! 

வேல்கள், கேடயங்களில் மோதிய ஒலியும் வாட்கள் ஒன்றோ டொன்று உரசி எழுந்த ஒலியும் அந்தப் பகுதி முழுதும் எதிரொலித்தது. பகல் முழுதும் இரைதேடிப் பறந்து திரிந்து மரப்பொந்துகளிலும் கிளைகளிலும் புதர்களிலும் அடங்கிக் கிடந்த பல்வேறு பறவைகளும் அந்தப் பயங்கர ஒலியின் அதிர்ச்சியால் வெளிக் கிளம்பிச் சிறகடித்து வேறிடம் நோக்கி விரைந்து கொண்டிருந்தன. 

காவலுக்கு வந்த வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாத அள வுக்குப் பிணமாயினர் சிலர்! குற்றுயிரும் குலை உயிருமாக உருண்டு புரண்டனர் சிலர்! செத்தோமோ பிழைத்தோமோ எனத் தெரியாமல் சிதறிப் போயினர் சிலர்! 

ரத வண்டியைச் சுற்றி முற்றுகை பலமாயிற்று! முற்றுகை யிட்டவர்கள் யாரென்று வண்டியிலிருப்பவர்களுக்குத் தெரிய வில்லை. புதர்களில் இருந்து வளைத்துக் கொண்டு தாக்கி சூழ்ந்து நிற்கும் அந்த வீரர்களில் ஒருவன் கூட வாய் திறந்து எதுவும் பேசவில்லை! வண்டியிலிருந்த வையம்பெருமான் தனது வாளை உருவிக்கொண்டு கீழே பாய முனைந்தான். 

தன் தாயாரையும், சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டும்; அல்லது அந்த முயற்சியில் செத்து மடிய வேண்டும் என்ற ஒரே உறுதியுடன் சிங்கக் குட்டி போல் சீறிய அவனைச் சிலம் பாயி தடுத்து வண்டிக்குள் தள்ளத் தன் பலம் முழுவதையும் உபயோகித்தாள்; அவனோ அன்னையை மீறிக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கி விட்டான். ‘வேண்டாம் அண்ணா! வேண்டாம்! என்று அலறியவாறு அவன் தங்கைகள் இரு வரும் அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட னர். அவர்களை உதறி விட்டு அவன் தங்கள் மீது பாய்ந்திடக் கூடும் என எதிர்பார்த்து; குதிரையில் இருந்த வீரர்கள் அனை வரும் தங்கள் கைகளில் இருந்த வேல்களையும், வாட்களையும் ஓங்கியவாறு அந்த வண்டியை மேலும் நெருக்கமாகச் சுற்றி வளைத்தனர். 

14. ராச்சாண்டார் மலைநோக்கி… 

வண்டியை வளைத்துக் கொண்டு நெருங்கிய அந்த வீரர்கள் எதிர்பார்த்தபடியே வையம்பெருமான்; தன்னைத் தடுத்து நிறுத்திட முற்பட்ட தங்கைகளை உதறிவிட்டுப் புயலெனப் பாய்ந்தான் வாளைச் சுழற்றிக் கொண்டு! பகைவர்களோ பல ராக இருந்தனர்! அவனோ ஒருவன்! அவனை மோதியவர் களும் பல்வேறு படைக்கலன்களைத் தங்கள் கைகளில் ஏந்தி யிருந்தனர். வையம்பெருமான், தன் கையிலுள்ள வாளை மட் டும் நம்பவில்லை அதை விடப் பலம்வாய்ந்த ஆயுதமாகத் தனது நெஞ்சுறுதியை நம்பினான். அதனால் மூர்க்கத்தன மாகத் தாக்கிய எதிரிகள் சிலர் அவனது வாள் வீச்சில் மூளை சிதறிச் சாய்ந்தனர். ‘இரண்டொருவர் கை கால்களை இழந்து குதிரைகளின் மேலிருந்து குப்புற வீழ்ந்தனர். 

ஒருவர் முகம் ஒருவருக்குச் சரியாகத் தெரியாத அந்த இருட் டில் பல பேர் சூழ்ந்து கொண்டு தாக்கும்போது கொஞ்சமும் அஞ்சிடாமல் வையம் பெருமான் எதிர்த்துப் போரிட்டதற்குக் காரணம்; உயிரை விட மேலான தனது குடும்பத்து மானத் தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகவே! அதனால் அவன் மீது குத்துண்டவேல்கள் உண்டாக்கிய காயங்களைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. அவனது கைவாளை மீறிக் கொண்டு அவன் விலாப்புறத்திலும் நெஞ்சகத்திலும் பட்ட எதிரிகளின் வாள்முனைகளால் ஏற்பட்ட வலியை அவன் பொருட்படுத்தவில்லை. 

எதிர்த்துப் போர்புரிந்து அந்த வாலிப வீரனை வீழ்த்த முடியாது எனத் தெரிந்து கொண்ட அந்த முரட்டுக் கூட்டம் ஏதாவது தந்திரம் செய்தே வெற்றி பெற வேண்டுமென முடிவு கட்டிக் கொண்டு செயல்பட்டது. 

ரத வண்டி தடுத்து நிறுத்தப்பட்டிருந்த புதர்களடர்ந்த அந் தச் சாலையின் மேடு பள்ளங்களையொட்டி பெரும்பாறை யொன்று! அந்தப் பாறையை ஒட்டினாற் போல ஒர் ஆழ மான குழிப்பள்ளம் – அந்தப் பள்ளம் தெரியாத அளவுக்கு புதரின் இலைதழைகள் மறைத்துக் கொண்டிருப்பதை – அந்தப் பாறைக்கருகே இருந்து வையம்பெருமானைத் தாக்கிக் கொண் டிருந்த எதிரிகள் பார்த்து விட்டனர். அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு வையம்பெருமானுடன் சண்டை யிட்டுக் கொண்டே பின் வாங்குவது போல மெல்ல மெல்ல அவர்கள் நகர்ந்தனர். ஆவேசத்திலும் ஆத்திரத்திலும் பாய்ந்து பாய்ந்து அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்த வையம்பெரு மான் தனக்கு முன்னேயிருந்த குழிப்பள்ளத்தை அந்த வேகத் தில் கவனிக்காமல் இரண்டு கால்களையும் அதில் வைத்து விட்டான். 

அடுத்த கணம்; குழிப் பள்ளத்தில் சிறைப்பட்டவனைப் போலச் சிக்கிக் கொண்டான். கையிலிருந்த வாளுடன் மேலே தாவினான்; முடியவில்லை! அதற்குள் அவனிடமிருந்த வாளை அந்த முரட்டு வீரர்கள் பறித்துக் கொண்டனர். அது மட்டுமா? அவனது இரு கரங்களையும் அழுத்தமாகப் பிடித்து அவனைக் குழிப்பள்ளத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். 

“அய்யோ! அவனைக் கொன்று விடாதீர்கள்!” என்று கத்திக் கொண்டே சிலம்பாயி அருகே ஓடி வந்தாள். 

“உங்கள் மகனுக்கு மட்டுமல்ல; உங்களில் யாருடைய உயி ருக்கும் எங்களால் ஆபத்து வராதம்மா!” என்று ஒரு கம்பீர மான குரல் கேட்டது. குரல் வந்த திசையை வையம்பெரு மானும் சிலம்பாயியும் கூர்ந்து நோக்கினர். தன் பக்கமிருந்த வீரர்களை விலக்கிக் கொண்டு மாமிசமலை போலிருந்த ஒரு மொட்டைத் தலை மனிதன் நெருங்கி வந்தான். அவன் கையில் ரத்தம் தோய்ந்த வாள் இருந்தது. ரதவண்டியின் இருபுறங்களி லும் மாட்டப்பட்டிருந்த தீவட்டிகளின் வெளிச்சத்தில் அவ னைப் பார்க்கவே பயந்து முத்தாயி, பவளாயி இருவரும் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். 

அந்த மாமிச மலை; தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். 

“என்னைத் தெரியவில்லையா? நான்தான் திருமலை! ராச் சாண்டார் திருமலையின் காவலன்! தலையூர் மன்னர் காளி யின் தளகர்த்தர்களில் ஒருவன்! ராச்சாண்டார் திருமலை எனது பொறுப்பில் இருப்பதால் தலையூர் மன்னர் என் பெயரையும் திருமலை என்றே அழைப்பது வழக்கம்!”
 
இவ்வளவு விபரமும் அவன் சொல்லாமலே அவனைப் பற்றி வையம் பெருமான் அறிந்து கொண்டிருக்கிறான் என்பது அவனது முகபாவத்திலேயே தெரிந்தது. 

திருமலை என்ற அந்த மாமிச மலை தொடர்ந்து பேசினான். 

“தலையூர் மன்னர் காளியின் உத்திரவை நிறைவேற்றுவதே என் கடமை! செல்லாண்டியம்மன் திருவிழா முடிந்து ஆரிச்சம் பட்டி அரண்மனைக்குத் திரும்பும் வழியில் சின்னமலைக்கொழுந் துக் கவுண்டரின் அழகான பெண்கள் இருவரையும் அவர்களுடன் துணைக்கு வருபவர்களையும் கூண்டோடு கைது செய்து ராச் சாண்டார்மலையில் உள்ள தலையூர் மாளிகையில் அடைத்து வைக்க வேண்டும் என ஆணையிடப்பட்டது. அதை நான் செயல்படுத்தவே வந்துள்ளேன்.” 

பூதாகாரமான உடல் கொண்ட அந்த மனிதனின் பேச்சில் இப்பொழுது கடுமை குறைந்து விட்டது. மேலிடத்தின் கட்டளையை நடைமுறைப்படுத்துவதில் அவனுக்கிருந்த அளவு கடந்த அக்கறை மட்டுமே வெளிப்பட்டது. 

வீரர்களின் கரத்தில் சிக்குண்டிருந்த நிலையிலும் வையம் பெருமான் அச்சமென்பது எள் முனையளவுமின்றி, தன் னெதிரே நிற்கும் திருமலையைப் பார்த்து நிமிர்ந்த தலை குனியாமல் கேட்டான்; “எங்களை எதற்காகக் கைது செய்து, ராச்சாண்டார் மலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்? உங் கள் தலையூர்க்காளி; பெண்களுடனும் விளையாட ஆரம்பித்து விட்டாரா?” என்று! 

வையம்பெருமானின் கேள்விக்குத் திருமலை சிரித்துக் கொண்டே பதில் அளித்தான். 

“தம்பி; அவர் விளையாடுவதற்காக இந்தக் காரியம் செய்ய வில்லை! தலையூர் ஆட்சியின் புரவலரும், நெல்லிவளநாட்டு எல்லைக்காவல் ஆட்சியாளருமான செல்லாத்தாக் கவுண்ட ருக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகவே இந்த முயற்சி! 

திருமலையின் விளக்கம் கேட்டு வெகுண்ட வையம்பெரு மான் பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டு உரக்கக் கத்தினான். 

“என்ன சத்தியம்? அதிசயமான சத்தியம்? செல்லாத்தாக் கவுண்டருக்கு சத்தியம் செய்து கொடுத்தால் அதற்குத் திருடர் களைப் போல இரவு நேரத்தில் வழி மறித்துத் தாக்குவது தான் வீரமோ? ஆண்மையுள்ளவர்கள் என்றால் படையெடுத்து வருகிறோம் என அறிவித்துவிட்டு பட்டப்பகலில் அல்லவா மோதியிருக்க வேண்டும்?” 

“தம்பி; இளம் ரத்தம் மிகவும் சூடேறிக் கொதிக்கிறது! தலையூர்க்காளியின் படையில் ஒரு பகுதி புறப்பட்டு வந்தாலே, உங்கள் ஆரிச்சம்பட்டி அரண்மனை புழுதி மேடாகி விடும்! படையெடுத்து உங்கள் ஆட்சியைத் தலையூரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்பது எங்கள் மன்னர் காளி யின் நோக்கமல்ல! அவரது எண்ணமெல்லாம் தனது புரவல ராகவும் நண்பராகவும் திகழும் செல்லாத்தாக் கவுண்டருக்கு விசுவாசமுடன் நடப்பதுதான்!” 

“உங்கள் மன்னர் தலையூர்க்காளி; யாருக்கு வேண்டுமானா லும் விசுவாசமாக நடக்கட்டும்! எங்கள் வழியில் குறுக்கிட வேண்டிய அவசியம் என்ன வந்தது?” 

“அவசியமின்றி எமது அரசர் எதிலும் தலையிட மாட்டார்! செல்லாத்தாக் கவுண்டர் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் ஆரிச்சம்பட்டியில் தலையூர் மன்னர் காளிக்கு முன் பாகவே அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்! என்ன தம்பி; புரியவில்லையா? உன் தந்தை சின்னமலைக்கொழுந்துவுக்கு இந்த விபரம் நன்றாகத் தெரியும்! அவருடைய தங்கை தாமரை நாச்சிக்கும் செல்லாத்தாக் கவுண்டரின் மகன் மாந்தியப்பனுக் கும் நடக்க இருந்த திருமணத்தை உன் தாத்தா மணியங்குரிச் சிக் காணியாளர் மலைக்கொழுந்துக் கவுண்டர் நடுவிலேயே நிறுத்தி விட்டார். அன்று ஏற்பட்ட அவமானத்தினால் மாந்தி யப்பன் இதுவரையில் திருமணமே செய்து கொள்ளவில்லை. தங்கையைத்தான் மாந்தியப்பனுக்குக் கொடுக்கவில்லை; தான் பெற்ற பெண்களையாவது கொடுப்பதற்குத் தடை சொல்லா மல் இருந்திருக்கலாம் அல்லவா? செல்லாத்தாக் கவுண்டர் பல முறை பெண் கேட்டு அனுப்பியும் உன் வீட்டார் அலட்சியப் படுத்தி விட்டார்கள் என்ற கோபத்தில்தான் தலையூர் மன்னர் துணையோடு உங்களைக் கைது செய்யும் திட்டத்தை வகுத்து; உங்களை ராச்சாண்டார் மலைக்கு அழைத்துச் செல்லவும் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.” 

“ராச்சாண்டார் மலைக்கு எங்களை அழைத்துச் சென்று மாந்தியப்பனுக்குப் பெண் கொடுக்க ஒப்புதல் வாங்கப் போகிறீர்களா?” 

“பெண் கொடுக்க -என்று ஒருமையில் சொல்லாதே தம்பி; பெண்களைக் கொடுக்க – என்று பன்மையில் சொல்லு! உன் சகோதரிகள் முத்தாயி பவளாயி இருவரையுமே மாந்தியப்பனுக்கு மணமுடித்தாக வேண்டும்! சுமார் இருபது ஆண்டுக்கால வஞ்சம் – பழி வாங்க வேண்டுமென்ற சபதம் – நெல்லிவளநாட்டுக்கு இருக் கிறது! அந்தச் சூளுரையை முடிப்பதற்கு ஆரிச்சம்பட்டி அரண் மனைக்காரர்களாகிய நீங்களே முன் வந்து உதவலாம்! முடியா தென்று மறுப்பீர்களேயானால் எப்படியும் ராச்சாண்டர் மலையில் மாந்தியப்பன்; முத்தாயி பவளாயி இருவரையும் மணக்கத்தான் போகிறான்.” 

வையம்பெருமானைப் பார்த்து, திருமலை அழுத்தம்திருத்த மாகவும் திட்டவட்டமாகவும் இப்படிச் சொன்னதும்; அது வரையில் கண்ணீர் வழியக் கேட்டுக் கொண்டிருந்த சிலம் பாயி; திடீரெனத் தீயை மிதித்தவளைப் போல அதிர்ச்சியுற்று, அதுதான் நடக்காது! ராச்சாண்டர் மலையில் எங்கள் பிணங் களை வேண்டுமானால் பார்க்கலாமே தவிர, உங்கள் இஷ்டத் துக்கு மணவிழா நடத்துவதை ஒருக்காலும் அனுமதிக்கமாட் டோம்!” என்று உரக்கக் கத்தி விட்டாள். 

சிலம்பாயின் கூச்சல் கேட்டு திருமலை அசைந்து கொடுக்க வில்லை. கலகலவெனச் சிரித்தான். அந்தச் சிரிப்பினூடே அவனுடன் வந்த வீரர்களின் வளையம் முன்னிலும் குறுகி நெருங்கி ரத வண்டியையும் வையம் பெருமான் மற்றும் அந்த மகளிரையும் சூழ்ந்து கொண்டது. திருமலை, சிரிப்பை நிறுத் திக் கொண்டு முடிவாக அவர்களைப் பார்த்துச் சொன்னான். 

“நீங்கள் பெண்கள் என்பதற்காகப் பரிதாபப்படுகிறேன். ஆனால் உங்கள் தலையில் எழுதியதை மாற்றி எழுத முடி யாது. அந்தத் தலையெழுத்து கூட நல்ல எழுத்தாக இருக்கும் போது எதற்காக மறுக்க வேண்டும்? உடனடியாக இப்போதே உங்களை வற்புறுத்திச் சம்மதம் வாங்குவதாக யாருக்கும் உத்தேசமில்லை. நீங்கள் முரண்டு பிடிக்காமல் எங்களுடன் ராச்சாண்டார் மலைக்கு வருகிறீர்கள். அங்கு தலையூர் அரசுக் குச் சொந்தமான அழகான மாளிகை ஒன்றிருக்கிறது. அந்த மாளிகையில் நீங்கள் சிறை வைக்கப்படுகிறீர்கள். நாளைய தினம் சின்னமலைக்கொழுந்து கவுண்டருக்குச் செய்தி அனுப் பப்படும். அவர் திருமணத்துக்குச் சம்மதித்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இல்லாவிட்டால், இடக்கு செய்தால், ஆரிச்சம்பட்டியின் மீது நெல்லிவளநாடு படை யெடுக்கத் தலையூர்க்காளியின் துணை கிடைக்கும். ஆரிச்சம் பட்டிக்கவுண்டரும் அவர் மகன் நீயும் அடிமையாவீர்கள்! முத்தாயி பவளாயி இருவரும் மாந்தியப்பன் மனைவியாவார்கள்!” 

திருமலை பேசி முடிப்பதற்குள்ளாக முத்தாயியும் பவளாயி யும் ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு, அது நடக்காது! நடக்கவே நடக்காது!” எனக் கண்களில் கனல் தெறிக்கக் கத்திக் கொண்டே ஆளுக்கொரு கட்டாரியைத் தங்கள் கரங்களில் எடுத்து, அவற்றைத் தமது நெஞ்சுக்கு நேராகக்குறி பார்த்து ஓங்கினர். இமைகொட்டும் நேரம் அனு மதித்திருந்தால் கூட இரண்டு குயில்களின் பாட்டு ஓய்ந்து போயிருக்கும். அதற்குள் அந்த மாமிசமலையாம் திருமலை தனது துதிக்கைகள் போன்ற கைகளை விரைவாக நீட்டி கட் டாரிகள் இரண்டையும் பறித்துக் கொண்டான். 

தாய் கலங்கி நிற்கிறாள் தங்கையர் இருவர் தவித்துத் துடிக்கின்றனர் அவனோ அசைய முடியாமல் முரடர்கள் வசம் பிடிப்பட்டிருக்கிறான்; அப்போது இடி முழக்கம் போலத் திருமலையின் ஆணை பிறந்தது! 

“உம்! வீரர்களே! ராச்சாண்டார் மலைக்குப் புறப்படுங் கள். பெண்கள் ரதத்தில் ஏறிக் கொள்ளலாம். ரத வண்டியைச் சுற்றி வேலி வைத்தாற் போல வீரர்கள் அணி வகுத்திடுங்கள்!” 

என்று முழக்கிய திருமலை ; வையம் பெருமானைப் பார்த்து. 

“தம்பி! நீ வீரர்களால் பிணைக்கப்பட்ட நிலையில் இனி ஏதும் செய்ய இயலாது. உங்கள் அனைவரையும் மிகுந்த கவுர வத்துடன் நடத்த வேண்டுமென்பதே எனக்களிக்கப்பட்டுள்ள உத்திரவு! ஆனால் சங்கிலியால் உன்னைக் கட்டி ரத வண்டி யில் கொண்டு போக வேண்டியுள்ளது. ராச்சாண்டார் மலைக் குப் போய்ச் சேரும் வரையில் பொறுத்துக் கொள்” என்றான். 

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே சில வீரர்கள் சிலம் பாயியையும் முத்தாயி பவளாயியையும் மிக்க மரியாதையுடன் நெருக்கமாக வந்து சுற்றி வளைத்தனர். அதற்குள் அவர்களா கவே ரத வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டனர். தங்களை அந்த முரட்டு வீரர்கள் எதுவும் செய்து விட முடியாது என்ற தைரியம் அந்தப் பெண்களின் முகத்தில் ஒளி விட்டது. உயிரை விடுத்து மானத்தைக் காத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட எவருக்கும் ஏற்படக் கூடிய நெஞ்சத் துணிவே அவர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. வையம்பெருமானின் கைகால் களிலும் இரும்பு வளையங்கள் பூட்டப்பட்டன. அதுவும் போதாதென்று சங்கிலியால் பிணைக்கப்பட்டு ரத வண்டியில் ஏற்றப்பட்டான். 

செல்லாண்டியம்மன் கோயிலில் இருந்து குளித்தலைப் பாதையாக ஆரிச்சம்பட்டிக்குச் செல்வதற்கு நங்கவரம், பனை யூர் ஆகிய ஊர்களைக் கடக்க வேண்டும். ஆரிச்சம்பட்டியி லிருந்து ராச்சாண்டார் திருமலை என்கின்ற அந்த ஊர் சில கல் தொலைவுதான் என்றாலுங்கூட தலையூர்க்காளியின் தள கர்த்தனான திருமலை ஆரிச்சம்பட்டியைக் கடந்து ராச்சாண் டார் மலைக்குச் செல்ல விரும்பவில்லை. தொலைவு அதிக மானாலுங்கூட குளித்தலைப் பாதையிலிருந்து வேறு வழியா கத் தோகைமலை சென்று அங்கிருந்து ஆரிச்சம்பட்டி செல்லா மலே ராச்சாண்டார்மலைக்கு அவர்களைக் கொண்டு போகவே திட்டம் போட்டிருந்தான். ஆரிச்சம்பட்டியைக் கடப்பதாக இருந்தால் சின்னமலைக் கொழுந்துவின் படை பலத்தை அங்கே சமாளிக்க வேண்டியிருக்கும். அதனால் அவர்கள் கண்ணில் படாமலேயே ராச்சாண்டார்மலைக்குப் போய் விடுவதென முன்கூட்டியே செய்த ஏற்பாட்டை செயல்படுத்தத் திருமலை கட்டளையிட்டான். ரதவண்டியை ஓட்டுவற்குத் திருமலை வேறு ஒரு ஆளைப் பணித்தான். திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. ரத வண்டியும், அதைச் சுற்றி வீரர்களும் தோகை மலைப்பாதையில் புறப்பட, அதற்குத் தலைமைவகித்து ஒரு குதிரையில் அமர்ந்து முன்னே சென்று கொண்டிருந்தான் தளகர்த்தன் திருமலை! 

இருதரப்பிலும் காயமுற்றவர்கள்; பெரும்பாலும் ஆரிச்சம் பட்டி வீரர்கள் குற்றுயிரும் குலை உயிருமாக அந்தப் பாதை யோரத்திலும் – பாறை அருகிலும் முனகிக் கொண்டு புரண்ட படி இருந்தனர். உயிரற்று அசைவற்றுப் போன உடல்களும் சிதறிக்கிடந்தன. இருளில் அந்தச் சாலையில் உருண்டு கொண் டிருந்த வீரர்களில் ஒருவன், தனது விலாப்புறத்தில் ரத்தம் கொட்டிக் கொண்டிருப்பதையும் ஒரு கட்டாரி ஆழமாகக் குத்திக் கொண்டிருப்பதையும் பற்றிக் கவலை கொள்ளாமல் மெல்ல ஊர்ந்து ஊர்ந்து பாறையின் ஓரத்தில் களைப்புற்று நின்று கொண்டிருந்த ஒரு குதிரையின் அருகே வந்து கொண் டிருந்தான். அவன் ஆரிச்சம்பட்டியைச் சேர்ந்த வீரன்தான் அந்தக் குதிரையும் அவன் ஏறி வந்த குதிரை தான்! அதனால் தான் அந்தக் குதிரை; அவனை நோக்கி நடந்து வந்தது. அவ னால் ஊர்ந்து வரக் கூட முடியவில்லை என்பதை உணர்ந்தது போல அவனிடம் வந்து நின்றது. அந்த வீரன் தட்டுத் தடு மாறி அந்தக் குதிரையின் மீது ஏற முயற்சி செய்தான். முடிய வில்லை. குதிரையோ அவனை மிக்க அனுதாபத்துடன் பார்த் தது. பிறகு அது, சற்று உயர்ந்த ஒரு பாறையின் பக்கம் போய் நின்று கொண்டு அவனைப் பார்த்துத் தலையை ஆட்டி யது. சாலையில் ஊர்ந்து கொண்டிருந்த ஆரிச்சம்பட்டி வீரன், மேலும் ஊர்ந்து அந்தப் பாறை வரையிலும் சென்று – அந்தப் பாறையிலும் ஊர்ந்து குதிரையின் மட்டத்திற்கு ஏறி; அதிலிருந் தவாறு குதிரையின் மீது தொத்திக் கொண்டான். அப்போதும் அந்த வீரனால் குதிரையின் மேல் நிமிர்ந்து உட்கார முடிய வில்லை. அதன் முதுகில் குப்புறப்படுத்துக் கொண்டு, தலைப் பகுதியை இரு கரங்களாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். 

அவன், தனது முதுகில் பத்திரமாக இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்ட அந்தக் குதிரை, ஆரிச்சம்பட்டியை நோக்கி மெல்ல ஓடத் தொடங்கியது. 

குதிரையொன்றில் ஆரிச்சம்பட்டி வீரன் குற்றுயிரும் குலை உயிருமாக அரண்மனை நோக்கி வருகிறான் எனக் கேள்வி யுற்ற சின்னமலைக் கொழுந்து அதிர்ந்து போனார். பொன்னர் – சங்கர் வீரமலைச் சாம்புவன் ஆகிய மூவருடனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அவர் வேகமாக எழுந்து மாளிகையின் வாயிற்பக்கம் விரைந்து சென்றார். 

தங்களை அன்புடன் அழைத்து வந்து விருந்து வைத்த அவ ருக்குத் திடுமென ஏற்பட்ட அதிர்ச்சி பற்றி அறிந்து கொள்ள வும் அவருக்கு விளைந்த துன்பத்தில் பங்கு கொள்ளவும் பொன்னரும் சங்கரும் வீரமலைச் சாம்புவனும் அவரைப் பின் தொடர்ந்து மாளிகையின் வாசலுக்கு வந்தனர். 

குதிரையின் மீது ரத்த வெள்ளத்தில் இருந்த அந்த வீரனை, சின்னமலைக்கொழுந்து ஓடிச் சென்று கைத்தாங்கலாகத் தூக்கினார். அவனால் இன்னும் ஓரிரு விநாடிகள்கூட உயிர் பிழைத்திருக்க முடியாது. அதற்குள் அவருக்குத் தகவல் சொல்லி விட வேண்டுமென்று அந்த வீரன் துடித்தான். வாயைத் திறந் தால் நா எழவில்லை. குழறிற்று. கண்களோ ஒளியிழந்து கொண்டிருந்தன. 

“ஏய், தண்ணீர் கொண்டுவா!” என்று சின்னமலைக்கொழுந்து கத்தினார். ஒரு வீரன் தண்ணீர்க் குவளையுடன் ஓடி வந்தான். சின்னமலைக்கொழுந்து காயம்பட்ட அந்த வீரனைத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு, அவன் முகத்தில் தண் ணீர் தெளித்து, வாயிலும் சிறிது ஊற்றினார். 

“என்னப்பா நடந்தது? வையம் பெருமான் எங்கே? சிலம் பாயி முத்தாயி பவளாயி என்ன ஆனார்கள்? வந்து கொண்டிருக்கிறார்களா?” என்று அவனைப் பார்த்துப் பரபரப்புடன் கேட்டார். அவனோ, இல்லையென்பது போல தலையசைத்து விட்டு; கண்ணீர் சிந்தினான். 

“என்ன தான் நடந்தது சொல்லு!” எனக் கேட்ட சின்ன மலைக்கொழுந்தின் குரல் தழுதழுத்தது. 

அந்த வீரன் வாயிலிருந்து உடைந்தும் நொறுங்கியும் வார்த் தைகள் சிதறின. 

“‘தலையூர்க்காளி… அவன் தளகர்த்தன் திருமலை வையம் பெருமானைக் கைது செய்து… எல்லோரையும் ராச்சாண்டார் மலைக்கு… மாந்தியப்பனுக்கு இரண்டு பெண்களையும் திரு மணம் செய்ய…” 

இந்த வார்த்தைகளுடன் அந்த விசுவாசமுள்ள வீரனின் உயிர் முடிந்தது போயிற்று! 

”என்ன?’ என்று ஆர்ப்பரித்தவாறு எழுந்தார் சின்னமலைக் கொழுந்து! 

15. புறப்பட்டது போர்ப்படை

சின்னமலைக்கொழுந்தின் ஆர்ப்பரிப்பைத் தொடர்ந்து ஆரிச் சம்பட்டிக் கோட்டையின் முகப்பு முரசம் முழங்கிற்று. அந்த முரசம் ஒலித்தாலே அரண்மனையின் அவசர அழைப்பு என்று தெரியுமாதலால் பாசறைகளில் ஓய்வு கொண்டிருந்த வீரர் களும், போர் நேரங்களில் மற்றும் படையில் இணைந்து பணி யாற்றும் அந்தப் பகுதியின் வீர வாலிபர்களும் கச்சை கட்டிக் கொண்டு படைக்கலன்களை ஏந்தியவாறு கோட்டை வாசலில் குழுமிவிட்டனர். 

அணிவகுத்து நிற்கும் அவர்கள் அனைவரும் காணத்தக்க வகையில் அந்த முகப்பின் முன்னே கருங்கற்களால் கட்டப் பட்டிருந்த உயர்ந்ததோர் பீடத்தில் சின்னமலைக்கொழுந்து ஆவேச உருவமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தார். வரிசை யாக எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீரர்கள்ஏந்தியிருந்த ஈட்டிகளின் முனைகளும், வாட்களின் கூர்மையும், கேடயங்களின் முன் பகுதிகளும் பளபளவென மின்னிக் கொண்டிருந்தன! சின்னமலைக் கொழுந்து, அகன்று நீண்டதோர் கனமான வாளைத் தனது வலது கையில் ஓங்கிப் பிடித்தவாறு சூழ்ந்து நிற்கும் படையினரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். 

சினம் பொங்கும் எரிமலையாக மட்டுமல்லாமல் தனது மனைவி மக்களுக்கு ஏற்பட்டு விட்ட பேராபத்தின் காரண மாகவும்; ஆரிச்சம்பட்டிக்கு விடுக்கப்பட்ட அறைகூவலின் காரணமாகவும்; நொறுங்கிப் போயிருந்த அவரது நெஞ்சி லிருந்து புறப்பட்ட வார்த்தைகள், தணலாகவும் தழுதழுத்த நிலையிலும் வந்து விழுந்தன! 

“நெல்லிவளநாட்டுச் செல்லாத்தாக் கவுண்டர் ஆரிச்சம்பட்டி யுடன் மோதுவதென்று தீர்மானித்து விட்டார். தலையூர்க்காளியின் துணையிருப்பதால் மிகச் சிறிய பூபாகம் தானே ஆரிச்சம்பட்டியென்ற அலட்சிய மனப்பான்மையில் நமக்கு அறைகூவல் விடுத்துவிட்டார்! நெல்லி வளநாடு நம்மோடு ஒப்பிடும்போது பெரிய நாடு நம்மை விடப் பரந்த நிலப் பரப்பை ஆளுகின்றவர்கள் அவர்கள் – நம்மைப் போலப் பல மடங்கு படை பலமும் அவர்களிடம் உண்டு – அதனால்தான் இத்தனை நாளும் அவர்களுடன் ஒத்துப்போகும் நிலையெடுத்து உறவு முறிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம். அவர் களோ தாமரைநாச்சியார் திருமணம் தடைபட்டதை மனத்தில் வைத்துக் கொண்டு நம்மீது பாய்வதற்கு எத்தனையோ சந்தர்ப் பங்களை உருவாக்கிப் பார்த்தனர். கடைசியாக அவர்கள் ராச்சாண்டார் மலை வளநாட்டுக்குத் தான் சொந்தமென்று ஏதோ பழைய ஆவணங்களையெல்லாம் சான்றாகக் காட்டி வாதிட்டனர். அந்த ஆவணங்கள் முழுமையாக நம்ப முடியாத வைகள் என்று நமக்குத் தோன்றியபோதிலும் கூட அதைப் பெரிதுபடுத்தாமல் ; வீணாக ஒரு போர் வேண்டாமென்ற நினைப்பில் ராச்சாண்டார் மலையை அவர்களுக்கே விட்டுக் கொடுத்து யுத்தத்தைத் தவிர்த்துக் கொண்டோம். இரண்டு ஆண்டுக் காலமாக செல்லாத்தாக் கவுண்டர், தன் மகன் மாந்தியப்பனுக்கு முத்தாயி, பவளாயி இருவரையுமே பெண் கேட்டுப் பல தூதுக்களை அனுப்பினார். என் தங்கை தாமரை நாச்சியை அவனுக்குத் திருமணம் முடிக்காத காரணத்தால் அவன் திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதாகவும் ஆரிச்சம்பட்டியில் அவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பரிகாரமாக என் மகள்கள் இருவரையும் மாந்தியப்பனுக்குத் தாரைவார்க்க வேண்டுமென்றும் – வளநாட்டுக்காரர் தொடர்ந்து வற்புறுத்தினார். இரண்டு பெண்களையும் ஒருவருக்குக் கட்டி வைப்பதென்கிற பேச்சுக்கே இடமில்லையெனக் கூறி அவரது கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்து விட்டேன். இருவரில் ஒரு பெண்ணையாவது மாந்தியப்பனுக்குக் கொடுக்கலாமா என நான் எண்ணியபோது, அவனைப் பற்றி வந்த செய்திகள் மிகப் மிகப்பயங்கரமாக இருந்தன! இப்போதும் அவனைப் பற்றி அப்படித்தான் செய்திகள் வருகின்றன! எப்போதும் மதுக் கிண்ணமும் கையுமாக இருக்கின்றானாம். அந்த மயக் கத்தில் எந்தப் பெண்ணைக் கண்டாலும் அவள் தனது மஞ் சத்திற்கு உடனே வந்தாக வேண்டுமென்று நினைக்கிறானாம். அவன் கண்ணிற்படவே பெண்கள் அஞ்சி நடுங்குகிறார்களாம். அப்படிப்பட்ட ஒரு மனித மிருகத்துக்கு என் மகளைக் கொடுக்க நான் எப்படி சம்மதிக்க முடியும்? அதனால்தான் இரண்டு பெண்ணல்ல ஒரு பெண்ணைக் கூடத் தர முடியாது என மறுத்து விட்டேன். எனது மறுப்பை மனதிலேயே வைத்துக் கொண்டு வஞ்சம் தீர்ப்பதற்கு சமயம் பார்த்திருக்கிறார் செல் லாத்தாக் கவுண்டர் என்பது எனக்குத் தெரியாமலே போய் விட்டது! தெரிந்திருந்தால் செல்லாண்டியம்மன் கோயில் திரு விழாவிலிருந்து என் குடும்பத்தார் திரும்பி வருவதற்கு ஒரு பெரும் படையையே பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருப்பேன். இதோ நிற்கிறார்களே இந்த இளம் சிங்கங்கள் இவர்கள் பெயர் எனக்குத் தெரியாது; ஆனால் என்றைக்குமே மறக்க முடியாதவர்கள் கரகம் விடும் விழாவில் என் பெண்களைக் காவேரியாற்றுக்குப் பலியாகாமல் காப்பாற்றியவர்கள் – இவர் களை அழைத்துக் கொண்டு நான் முன்னதாக அரண்மனைக்கு வந்து விட்டேன். விழா முடிந்து அம்மனை தரிசித்து விட்டு அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த என் மனைவியையும், மகன் வையம்பெருமானையும், பெண்கள் முத்தாயி பவளாயி யையும் குளித்தலைக்கருகே வழி மறித்து வேறு பாதையில் ராச்சாண்டார் திருமலைக்குக் கொண்டு போய் விட்டார்கள் தலையூர்க்காளியின் ஆட்கள்! அவர்களை எதிர்த்துப் போரிட்டு நமது. வீரர்கள் பிணமாகி விட்டார்கள். எஞ்சிய ஒரு வீரன் படுகாயத்துடன் இங்கே வந்து செய்தியைக் கூறி விட்டு அவ னும் வீர மரணமடைந்தான். தலையூர்க்காளியின் தளபதி திருமலை அறிவித்துள்ள திட்டப்படி என் குடும்பத்தார் ராச் சாண்டார் மலையில் சிறைவைக்கப்படுவார்கள். மாந்தியப்ப னுக்கும் என் பெண்களுக்கும் கட்டாயக் கல்யாணம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதற்கு என் பெண்களோ, என் மனைவியோ, என் மகனோ சம்மதிக்கப் போவதில்லை! அந்தத் திருமணத்தை விடத் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போவதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். இப் போது நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். அதற்காகத் தான் உங்களை அழைத்திருக் கிறேன், சமாதானமாகப் போய்விடுவோம்; நீங்கள் கோரிய படி என் பெண்களை மாந்தியப்பனின் மனைவிகளாக்கு கிறேன் என்று செல்லாத்தாக் கவுண்டருக்கு ஓலை அனுப்பச் சொல்கிறீர்களா? அல்லது எது நேர்ந்தாலும் சரியென்று அவர் களோடு மோதச் சொல்கிறீர்களா? பணிந்து போவதா? படையெடுப்பதா?” 

சின்னமலைக்கொழுந்து விளக்கமளித்து; இறுதியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டவுடன் சூழந்திருந்த ஈட்டிகளும் வாட்களும் விண்ணோக்கி உயர்ந்து ஆடின! 

‘படையெடுப்போம்! பணிய மாட்டோம்!’ என்று ஒருமித்த குரல் ஓங்காரக் குரலாகக் கிளம்பியது. 

“அவர்கள் படை பலமிக்கவர்கள். பக்கத்துணையாகத் தலை யூர்க்காளி வேறு இருப்பதை மறந்து விடாதீர்கள்!” 

என்று சின்னமலைக்கொழுந்து எச்சரிப்பது போலப் பேசினார்.

“தோல்வியைப் பற்றிக் கவலையில்லை! நாம் தோற்றோம் என்பது நமது மார்பிலிருந்து கொட்டும் ரத்தத்தால் எழுதப்பட வேண்டுமே தவிர, நமது முதுகுப் பலகையில் சரணாகதி என்ற எழுத்துக்களை வைரக் கற்களைக் கொண்டு பதித்தாலும் அதில் பெருமையில்லை! அது அவமானச் சின்னமாகத்தான் இருக்கும்!” 

என்று ஒரு குரல் கேட்டது! அந்தக் குரலில் வீரத்தின் நாதம் இருந்தது! குரல் வந்த பகுதியை சின்ன மலைக்கொழுந்து உட்பட அனைவரும் திரும்பிப் பார்த்தனர். 

வீரமலைச் சாம்புவன்தான் அப்படிப் பேசினான். அவனைப் பொன்னரும் சங்கரும் புன்னகையுடன் நோக்கினர். இருவருமே அவனைத் தழுவிக்கொண்டனர். அந்த மூன்று ளைஞர்களையும் கோட்டை முகப்பில் கூடியிருந்த அந்த வீரர் கூட்டம் வைத்த விழி வாங்காமல் பார்த்தது. 

தங்களால் சூறைக் காற்றிலிருந்தும், மலைப்பாம்பு, முதலை யிடமிருந்தும் காப்பாற்றப்பட்ட முத்தாயி பவளாயி இருவருக் கும் இப்படியொரு விபத்து ஏற்பட்டிருப்பதையும் இப்போது அவர்களை மீட்பதாக இருந்தால் பெரியதோர் யுத்தத்தையே சந்திக்க வேண்டியிருப்பதையும் – பொன்னரும் சங்கரும் எண் ணிப்பார்த்து; அவர்களை மீட்கும் போரில் தங்களுக்கும் அழைப்பு கிடைக்குமா என எதிர்பார்த்திருந்தனர். 

அவர்கள் அப்படி நினைக்கக் கூடிய நிலைக்கு ஆளானவர்கள் என்பதை அறிந்து கொண்டிருந்ததால்தான் வீரமலை யும்; சின்னமலைக்கொழுந்தைப் பார்த்து சரணாகதி” என்ற வார்த்தை அவமானச் சின்னம் என அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். 

சின்னஞ்சிறு பிரதேசத்துக்குச் சொந்தக்காரர் என்றாலும் சின்னமலைக்கொழுந்து அற்புதமான ராஜதந்திரியாகச் செயல் பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். 

இல்லாவிட்டால் தனது குடும்பத்தார் சிறைப்பட்டனர் எனக் கேள்வியுற்றதும், படையெடுப்பதற்கு ஆயத்தமாகி முரசறைந்து அழைப்பு விடுத்தவர் அழைக்கப்பட்டவர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு; அவர்களைப் பார்த்தே படை யெடுக்கலாமா வேண்டாமா?’ என்று ஆலோசனை கேட்பாரா? 

அந்த ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாக ஆரிச்சம் பட்டி வீரர்களும், குடிமக்களும் பணிவது” என்ற பேச் சுக்கே இடமில்லை என்று கூறி சின்ன மலைக்கொழுந்தின் ஆணைக்குக் காத்திருந்தார்கள் என்றாலும் கூட அந்தப் போரில் தனக்கும் தனது குடும்பத்தார்க்கும் தன் ஆளுகையில் உள்ள மக்களுக்கும் கிடைக்கப் போவது வீர மரணமும் தோல்வியும் தான் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்! 

அவருக்கிருந்த ஒரேயொரு நம்பிக்கை; உடனே சென்று ராச்சாண்டார்மலையைத் தாக்கினால் அங்கிருந்து ஆரிச்சம் பட்டிப் படையை எதிர்கொள்வது தலையூர்த் தளபதி திருமலை யும் அங்குள்ள படைவீரர்களும் அவர்களுடன் நெல்லி வள நாட்டுப் படையும்தான் என்ற எதிர்பார்ப்பேயாகும்! 

தலையூர்த் தளபதி திருமலையை வெல்வது என்பது எளி தல்ல எனினும்; தலையூர்ப்படை முழுதும் வந்து சேர்ந்து மோதுவதற்குள் ஆர்ச்சம்பட்டிப் படை ராச்சாண்டார் மலைக்குள் நுழைந்துவிட்டால் வெற்றிக்கு ஓரளவு வாய்ப்பு உண்டு என்பது சின்னமலைக்கொழுந்தின் கணிப்பு! 

எதற்கும் தனது படை பலத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் அந்த மூன்று இளைஞர்களின் துணையைப் பெற வேண்டுமென்ற உள்ளுணர்வு அவரைத் தூண்டியது. 

வீரமலையின் வீரங் கொப்பளிக்கும் வார்த்தைகளையே அந்த இளைஞர்களை நெருங்கிடும் நூலேணியாகப் பயன் படுத்திக் கொண்டு சின்னமலைக்கொழுந்து; பொன்னர் சங்கர், வீரமலை மூவரையும் நோக்கி ‘நீங்கள் மூவரும் இந்த பீடத்துக்கு வாருங்கள். உங்களின் ஒளி முகங்களையும், திரண் டுயர்ந்த திண்தோள்களையும், ஈட்டிகளும் வேல்களும் போர் முனையில் பாய்ந்து வந்தாலும் இமை கொட்டாத விழிகளை யும் எங்கள் ஊரார் காணட்டும்! தயவு செய்து வாருங்கள்!’ என்றழைத்தார். 

இதயத்தில் குடியேறிக் கொடிகட்டி ஆதிக்கம் செலுத்து கின்ற இன்பவல்லிகளைச் சிறை மீட்கும் போரில் ஈடுபட வேண்டுமெனத் துடிக்கும் தோள்களுடன் நின்று கொண்டிருந் தாலும் அதை எப்படி வெளியே சொல்வதென்று பொன் னர் தனது தம்பி சங்கருக்காக வெட்கப்பட்டது போலவே சங் கரும் தனது அண்ணன் பொன்னருக்காகத் தயங்கி மயங்கி யிருந்தது என்னவோ உண்மை! 

அந்த வெட்க உணர்வையும் தயக்கத்தையும் போக்கிடும் வண்ணம், சின்னமலைக்கொழுந்தின் அழைப்பு அமைந்தது. 

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதோடு இருவருமிணைந்து வீரமலையையும் பார்த்தனர். அவர்கள் இத யத்தில் எழுதியிருப்பதைத் தெளிவாகவே படித்துக்கொண்ட வீரமலை; புன்னகையை நெளிய விட்டுக் கொண்டே அவர்க ளுடன் அந்தப் பீடத்துக்குப் போகலாமென்று விழியால் ஜாடை காட்டினான். 

மூவரும் பீடத்தில் ஏறி நின்றதும் சின்னமலைக்கொழுந்தைச் சுற்றி மூன்று புலிக்குட்டிகள் இருப்பதைப் போன்ற காட்சி! சூழ்ந்திருந்தோர் தமது படைக்கலன்களை உயர்த்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். 

சின்னமலைக்கொழுந்து வீரமலையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்டார்; என்ன சொன்னாய்? தோல்வி என் பது நமது மார்பிலிருந்து கொட்டும் ரத்தத்தால் எழுதப்பட வேண்டும். நமது முதுகுப் பலகையில் சரணாகதி என்ற எழுத் துக்களை வைரக் கற்களைக் கொண்டு பதித்தாலும் அதில் பெருமையில்லை; என்று சொன்னாயல்லவா? தம்பி; தோல்வி என்ற வார்த்தைக்கும் சரணாகதி என்ற சொல்லுக்கும் இடமே இல்லாமல் நிச்சயமாக வெற்றிதான் என்று நிர்ணயித்துக் கொண்டு களத்தில் இறங்க எனக்கு ஒரே ஒரு வழியிருக்கிறது நம்பிக்கையான வழி எள் முனையளவும் சந்தேகமில்லாத வழி அந்த வழி வகுத்துக் கொடுக்க உங்கள் மூவரால் முடியும்! நீங்கள் அந்த வழியை வகுத்துக் கொடுப்பீர்களா?” 

சின்னமலைக்கொழுந்து, வீரமலையைப் பார்த்துத்தான் அந் தக் கேள்வியைக் கேட்டார் என்றாலும் அதற்குப் பதில் அளிக் கும் விதமாகப் பொன்னர்-சங்கர் இருவரும் ஏக காலத்தில் தங்கள் கரங்களை உயர்த்திச் சம்மதம் தெரிவித்தனர். 

சின்னமலைக்கொழுந்தின் உற்சாகம் கரை புரண்டது. ராச் சாண்டார் மலைக்கோட்டை கொத்தளங்கள் மீது ஆரிச்சம்பட் டிப் படையின் தாக்குதல் நடக்கும். எதிர்த்தாக்குதலில் ஆரிச் சம்பட்டி தோல்வியைச் சந்திக்கும். வீர மரணமே விளைவாக இருக்கும். எதுவாயினும் நெஞ்சுறுதியுடன் எதிர்கொண்டு தானே ஆக வேண்டுமென்ற முடிவுடன் இருந்த அவருக்கு, பொன்னர்-சங்கர், வீரமலை ஆகியோரின் துணையும் கிடைத்து விட்ட பிறகு படையெடுப்பின் விளைவு குறித்து சிறிதும் ஐயப் பாடு எழவில்லை. 

“விரைவில் தயாராகுங்கள் வீரர்களே!” எனக் கட்டளை பிறப்பித்த சின்னமலைக்கொழுந்து; கோட்டை முகப்பின் பீடத்திலிருந்து இறங்குவதற்கு முன்பாக மற்றொரு பிரகடனத் தையும் வெளியிட்டார். அந்தப் பிரகடனத்தை வெளியிடுவ தற்கு முன்பு; அவர் பொன்னரை ஒரு பக்கத்துத் தோளிலும், சங்கரை ஒரு பக்கத்துத் தோளிலும் அணைத்துக் கொண்டார். 

“இந்தப் படையெடுப்பில் வெற்றி பெற்று – செல்லாத்தாக் கவுண்டரின் சூழ்ச்சியை முறியடித்து – ராச்சாண்டார் மலை யில் சிறைப்பட்டுள்ள என் குடும்பத்தாரையும் மீட்டு விட்டால்; என் பெண்கள் முத்தாயியை இதோ இந்த இளைஞனுக்கும், பவளாயியை இதோ இந்த இளைஞனுக்கும் வாழ்க்கைத் துணை வியராக ஆக்குவதாக உறுதியளிக்கிறேன்! ராச்சாண்டார் மலை நோக்கிப் புறப்படும் நமது படையின் தளபதிகளாக இவர்களே பொறுப்பு ஏற்பார்கள்!” 

சின்னமலைக்கொழுந்தின் அறிவிப்பு கேட்டு ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்! ‘வீரவேல்! வெற்றி வேல்!’ என்ற பேரொலியால் ஆரிச்சம்பட்டி கோட்டையே அதிர்ந்தது. 

தளபதிக்குரிய படைக்கலன்களை எடுத்துக் கொள்ளவும், உடைகளை அணியவும் பொன்னரும் சங்கரும் வீரமலையுடன் ஆரிச்சம்பட்டி தளவாட அறைக்குள் நுழைந்தனர். 

நுழைந்த வேகத்திலேயே போர் உடை பூண்டு, உருவிய மீது சின்னமலைக் கொழுந்து காத்திருந்தார்; பொன்னர், வாளுடன் வெளிவந்தனர். அவர்கள் வருகைக்காக ஒரு குதிரை 

சங்கர், வீரமலை மூவருக்குமாகத் தயார் நிலையில் இருந்த குதிரைகள் மீது அவர்களும் தாவிப் பாய்ந்து ஏறி அமர்ந்து கொண்டனர். 

சின்னமலைக்கொழுந்து; அணிவகுத்துள்ள வீரர்களைக் கம்பீரமாகப் பார்த்து வாளை உயர்த்திக் கொண்டே ‘வீர வேல்!’ என உரிக்கக் கூறினார். ‘வெற்றி வேல்” என பெரு முழுக்கம் இடியொலியென எழுந்தது. ஆரிச்சம்பட்டி கோட் டையை விட்டுப் படை கிளம்பிற்று! 

தீப்பந்தம் ஏந்தியோர் -வாள் ஏந்தியோர் -வில்லம்பு ஏந்தியோர் – வேல் ஏந்தியோர் – ஈட்டி ஏந்தியோர் குதிரைகளில் அந்த இருட்டில் பாதையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ராச்சாண்டார் மலைக்குச் செல்லும் வழியை ஆக்ரமித்துக் கொண்டனர். 

ஆரிச்சம்பட்டியிலிருந்து, நேர்வழியில் ராச்சாண்டார்மலை அதிக தொலைவு இல்லாத காரணத்தால் விடிவதற்குள்ளாகவே, குதிரைப்படையினர் அந்தப் பகுதிக்குள் சென்று விட்டனர். 

ஆரிச்சம்பட்டியினர் சமாதானத்துக்குத்தான் வருவார்கள்; படை கொண்டு வர மாட்டார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த தலையூர்த் தளபதி திருமலைக்கு இந்தச் செய்தி வியப்புக்குரியதாக ஆயிற்று! 

ஒருக்கணம் கூடத் தாமதிக்காமல் அவன் தனது படைவீரர்களுக்குக் கட்டளை பிறப்பித்து விட்டான்! 

விற்போரில் யாராலும் வெல்ல முடியாது என்ற கீர்த்தி பெற்ற தலையூர்க்காளியின் படைவீரர்கள், ராச்சாண்டார் மலைக்கோட்டைக்குள்ளிருந்தவாறு ஆரிச்சம்பட்டிப் படையின் மீது அம்புமாரி பொழிய ஆரம்பித்து விட்டனர்! 

கோடை மழையின் பெருந்துளிகளைப் போல் கொட்டுகின்ற அம்புகளின் தாக்குதல் கண்டு சின்னமலைக் கொழுந்து திகைத் துப் போனார். கோட்டையை நோக்கி வீரர்களுடன் முன்னேறிக் கொண்டிருந்த தளபதிகள் பொன்னரும் சங்கரும் சற் றுத் தயங்கி, தங்கள் குதிரைகளை இழுத்துப் பிடித்தனர். 

– தொடரும்…

– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 17-07-1987, குங்குமம் இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *