கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 6,026 
 
 

(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 51-55 | அத்தியாயம் 56-61

56. படுகளம் தொடக்கம்

இதுதான் சங்கரின் படையைத் தாக்கிச் சாய்த்திடச் சரியான நேரம் என்று கருதிய செல்லாத்தாக் கவுண்டர் ஆகாயத்தை நோக்கித் தனது வில்லை வளைத்து அதில் நாணேற்றிச் செலுத்த ஒரு அம்பையும் கையில் எடுத்து விட்டார். அந்த அம்பு ஆகா யத்தில் கிளம்புவதை அடையாளமாகக் கொண்டு உடனே தலையூர்ப்படை, தனது தாக்குதலைத் தொடங்கவேண்டுமென் பது முன்னரே வகுக்கப்பட்ட ஏற்பாடல்லவா அந்த ஆணை பிறப்பிக்க செல்லாத்தாக் கவுண்டர் தயாராகிவிட்டது கண்ட தலையூர்க்காளி மன்னன், அவரை நோக்கிக் கையமர்த்தி சற் றுப் பொறுமையாக இருக்குமாறு பணித்துவிட்டான். எரிந்து கொண்டிருக்கும் ஒரு காட்டுக்குள் மரக்கிளையில் அமர்ந்து ஒரு குயில் எந்தச் சஞ்சலமுமின்றி பாடிக்கொண்டிருப்பது போல விரோத நெருப்பு மூண்டெழுந்து பற்றி எரிந்து கொண்டிருந்த அவனது நெஞ்சத்தில் மாயவரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் அந்தக் குயிலின் பாட்டாக இசைத்துக் கொண்டிருந்தன. மாய வருக்காக ஒரு சமாதி தயாரிக்கிறார்கள் வளநாட்டு வீரர்கள். அந்தப் பெருங்குழியில் அவரது உடலைக் கிடத்தி அடக்கம் செய்து முடிப்பதற்குள்ளாக சங்கரின் மீது தாக்குதலைத் தொடர்ந்து விட்டால் இரு படைகளின் மோதுதலுக்கிடையே மாயவரின் உடல் அனாதைப் பிணமாக அலைக்கழிய நேரிடும். என்னதான் எதிர்முகாமுக்கென மாயவர் வாதாடிக் கொண்டிருந்தாலும் அந்த நாட்டுக்காரராகவே ஆகிவிட்டாலும் அவரால் தலையூர் அரசு பெற்றிருந்த நன்மைகளை மறந்துவிட இயலவில்லை காளி மன்னனால்! அவர்பால் அவன் கொண்டிருந்த ஆழ மான நட்பு, இடையில் இருந்து கலகம் விளைத்தவர்களால் முழுமையாக அழிந்து போய்விடவில்லை! என்ன இருந்தாலும் தலையூருக்கு எதிராக அவர், பொன்னர் சங்கர் பக்கம் போயி ருக்கக்கூடாது என்ற கருத்து, காளி ‘மன்னனிடம் சிலரால் நயமாக உரைக்கப்பட்டபோதும் -நச்சு எண்ணத்துடன் உரைக் கப்பட்டபோதும் மாயவர் மீது அவனுக்குக் கோபம் ஏற் பட்டது உண்மையெனினும் அவரை இழந்துவிட்டோமே என்ற ஆதங்கம் அவன் உள்ளத்தை எத்தனையோ சமயங்களில் ஆக்ர மித்ததுண்டு. 

இவ்வாறு அமைந்த அவன் இதயத்தின் அடித்தளத்திலிருந்து மாயவரின், உடலுக்கு எந்தச் சேதமோ அல்லது களங்கமோ ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கி உயர்ந்தது. அதனால்தான் அந்த அனுபவக்களஞ்சியமும் அறிவு மேதையு மான மாயவரின் உடல் அடக்கத்தைச் சங்கரும் அவனது படையினரும் செய்து முடிக்கும்வரையில் பொறுத்திருக்க வேண்டுமென்று அவன் முடிவு செய்தான். அவன் அந்த முடி வில் உறுதியாக இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட செல்லாத்தாக் கவுண்டர், ஆகாயம் நோக்கித் திருப்பிய வில் லையும் அம்பையும் தாழ்த்திக் கையிலே வைத்துக்கொண்டார். 

தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதைக் காளி மன்னனும் மற்றும் புதர் மறைவுகளிலும் பாறை மறைவுகளிலும் ஒளிந் திருந்த தலையூர் வீரர்களும், ஆவலுடனும் பரபரப்புடனும் கவனித்துக்கொண்டிருந்தனர். 

மரகதப்பச்சை மாணிக்கக்கிளியை அந்தக் குழிக்கு வெளியே ஒரு மண்மேட்டில் வைத்துவிட்டு சங்கர், வீரமலை, வையம் பெருமான் முதலியோர் மாயவரின் உடலைக் குழிக்கு அருகே கொண்டு வந்து வைத்தனர். சில வீரர்கள் அவசர அவசரமாக காட்டுப் பூக்களைத் தங்கள் கைகளில் நிறைத்துக்கொண்டு வந்தனர். அந்தப் பூக்களின் ஒரு பகுதியை மாய்வரின் உடலின் மீது தூவினான் சங்கர்! அவனைத் தொடர்ந்து வீரமலை, வையம்பெருமான் மற்றும் துணைத்தளபதிகள் தூவினர்! 

மாயவரின் உடல் குழிக்குள் மெதுவாக இறக்கி வைக்கப் பட்டது. மண்மேட்டில் அவரது உடலுக்கருகே கிடத்தப்பட் டிருந்த வாளை எடுத்து சங்கர் முத்தம் கொடுத்துவிட்டு, அந்த வாளை மாயவர் உடலின் இடப்புறத்தில் வைத்து வணங்கி நின்றான். அப்போது அவன் கண்களில் இருந்து பொலபொல வென நீர்பொழிந்தது. வீரமலையினாலும் வையம்பெருமானா லும் துக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தலையூர்க் காளியின் நிலையும் அதுவேதான். 

பகையொழிக்கவும் – பங்காளிக்காய்ச்சலின் விளைவுகளால் ஏற்படும் வேதனைகளைத் தடுக்கவும் பண்பு நலன்கள் பாழ் படாமல் பாதுகாக்கவும் – வேட்டுவர் வேளாளர் என்ற பேத விரோதங்களை அகற்றவும்- கடைசி மூச்சுள்ள வரையிலே பாடுபட்ட பெருந்தகையாம் மாயவரின் பூத உடலை சங்கர் அள்ளிப் போட்ட கண்ணீரில் நனைந்த அந்த மண் மறைக்கத் தொடங்கி, சற்று நேரத்திற்கெல்லாம் குழியில் சரிக்கப்பட்ட மண்ணில் அந்த உடல் மறைந்தே போயிற்று. தற்காலிகமாக ஒரு சமாதி அங்கே உருவாக்கப்பட்டுவிட்டது. அப்போது சங்கர் நினைத்துக்கொண்டான், போரில் வெற்றி நமக்கென்று ஆகுமாயின் மாயவரின் சமாதியைப் பளிங்குக்கற்கள் கொண்டு அழகுற அமைக்க வேண்டும் என்று! தலையூர்க்காளியும் கூடத் தனக்கு வெற்றி கிட்டுமேயானால் மாயவரின் சமாதியை ஒரு சிறு மாளிகை போலவே கட்ட வேண்டுமென்று எண்ணிக் கொண்டு களத்தில் நின்றிருந்தான். 

மாயவரின் கல்லறையைச் சூழ நின்றுகொண்டு சங்கரும் அவனது படையினரும் கண்களை மூடியவாறு மெய்மறந்து வீர வணக்கம் செலுத்தினர். தொலைவிலிருந்து தலையூர்க்காளியும் கண் மூடியபடி வீர வணக்கம் செலுத்தினான். 

இதைவிடச் சரியான நேரம் அமையாது என்று செல்லாத் தாக் கவுண்டர் இமைப்பொழுதில் தீர்மானித்துக்கொண்டார். கையில் படைக்கலன்கள் இருப்பினும் கண்மூடி மௌன அஞ் சலி செலுத்துகிற எதிரிகளைத் தாக்கிக் தோற்கடிக்கக் கடவுளே பார்த்துத் தலையூருக்கு நிர்ணயித்துக் கொடுத்த நேரம் இது தான் என்று அவரது உதடுகள் முணுமுணுத்தன. ஒரு வேளை இன்னும் சிறிது பொறுத்திருக்கலாம் என்று காளி மன்னன் கருதலாம்! அவனது கருத்தை அறியத் தேவையில்லை! அதனால் லாபமில்லை! தானே ஆணையிட்டுவிட்டு அதன் காரணமாக வெற்றியும் ஈட்டித் தந்துவிட்டால் அந்த மகிழ்ச்சியில் தலை யூர்க்காளி மிதப்பானே தவிர, இதையொரு பொருட்டாக எண்ணி கேள்வி கேட்டுக்கொண்டிருக்க மாட்டான். 

எனவே அடுத்த நொடியில் செல்லாத்தாக் கவுண்டர் விடுத்த அம்பு ஆகாயம் நோக்கிக் கிளம்பியவுடனே, திடீரெனக் கடல் கொந்தளித்த பெரு முழக்கத்துடன் தலையூர் வீரர்கள் சங்கரின் படை மீது அம்புகளையும் ஈட்டிகளையும் பறக்கவிட்டனர். 

இந்தத் தாக்குதலைச் சிறிதும் எதிர்பாராத சங்கர், வீரமலை, வையம்பெருமான் ஆகியோர், மெத்தப் பரபரப்படைந்து எதிர்த் தாக்குதலுக்குத் தங்கள் வீரர்களை அவசர அவசரமாக அணிவகுத்தனர். அந்த நேரத்திலும் சங்கருக்கு அருக்காணித் தங்கத்தின் ஞாபகம் மாறவில்லை. அங்கு கிடந்த மரகதப் பச்சை மாணிக்கக்கிளியை எடுத்து வையம்பெருமானிடம் கொடுத்து, 

“இந்தப் போரில் நம் மூவரில் யார் மிச்சமிருக்கிறோமோ அவர்கள் கொண்டு போய் இந்தக் கிளியை என் தங்கையிடம் சேர்க்கலாம். ரதத்தில் வை!” என்று கூறிக்கொண்டே வானத்தில் வட்டமிடும் கழுகு, தரையில் கண்ட இரையின்மீது சடா ரென்று தாவிடுவதுபோல தலையூர்ப் படைகளை நோக்கித் தாவினான். 

தங்களை நோக்கி வரும் அம்புகளும் ஈட்டிகளும் எந்தப் பக்கமிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிய இயலாமை யினால் சிறிது நேரம் வரையில் வளநாட்டுப் படை வீரர்கள், தங்களைச் சூழ்ந்துள்ள புதர்கள் மீதும், பாறைகள் மீதுமே தாக்குதலை நடத்தவேண்டியிருந்தது. இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தலையூர்க் காளியும் செல்லாத்தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் ஒளிந்திருந்து தங்களை வீழ்த்திடப் படை குவித்துப் போரிடுகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள சங்கருக்கு அதிக நேரமும் பிடிக்கவில்லை. தனது குதிரை யின்மீது தாவி ஏறிக் கொண்டான். வலிமை வாய்ந்த கேட யத்தை இடக்கரத்தில் பிடித்துக்கொண்டு, வாளைச் சுழற்றிக் கொண்டே ஒரு பாறையின் மீது குதிரையை நிறுத்திக்கொண்டு, அதிலிருந்தவாறே அவனிட்ட முழக்கம் வீரப்பூர் காட்டையே குலுங்கி அதிரச் செய்தது! 

“நேராக நின்று இந்தச் சங்கரை எதிர்க்க முடியாமல் கோழை களைப்போல ஒளிந்திருந்து போரிடுகிற உங்களை வீர தேவதை காரி உமிழ்கிறாள் என்பதை வெட்கமில்லாமல் ஒப்புக்கொள்ளுங்கள்! துரோகம் செய்து பழக்கப்பட்டவர் செல்லாத்தாக் கவுண்டர்! காட்டிக் கொடுப்பதில் கைகாரர் மாந்தியப்பன்! இந்தப் போர் முறையை அவர்கள்தான் வகுத் துத் தந்திருக்கக்கூடும்! அதை நானறிவேன்! அஞ்சா நெஞ்சன் அடலேறு ஆனை பலம், வேங்கை பலம் உண்டென்று ஆர்ப்பரிப்பவன் தலையூர்க்காளி மன்னன் கூடவா இந்தத் தலைகுனியும் போருக்கு உடன்பட்டான்! சே! மானக்கேடு! வரப்போரத்தில் சிங்கம் நடந்தால் அந்த வரப்பின் வளைகளுக் குள் பதுங்கிக் கொண்டு எட்டிப் பார்த்துக் கிடக்கும் நண்டு களின் கதியல்லவா தலையூர்ப் படைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது! வில்வித்தையிலும் அம்பு எய்வதிலும் எங்களைவிடப் பெரும் பயிற்சி பெற்றவர்கள் தலையூர்க்காரர்கள் என்ற தைரியத்தில் இப்படியொரு சூழ்ச்சிப் போராட்டவியூகம் வகுத்துள்ளீர்கள்! இதையும் முறியடிக்கும் ஆற்றல், என் வாளுக்கும் வளநாட்டு வீரர்களுக்கும் உண்டு என்பதை இப்போதே இக்கணமே நிரூபித்துக் காட்டுகிறேன்.” 

சங்கர் வீர உரை ஆற்றிக்கொண்டிருக்கும்போதே, தலையூர்க் காளி மலைக்கூடொன்றிலிருந்து வெளிப்பட்டு முதலில் சங்கரை வீழ்த்திட வில்லின் துணையை நாடினான். காளியின் வில்லில் இருந்து கடுங்கணைகள் புறப்பட்டு சங்கரை இலக்கு வைத்து தாக்க ஆரம்பித்தன. 

”விட்ட சரம் அம்பாகி விரைந்து கடல் குமுறி
மின்னல்ஒளி போல வெளிச்சமிட்டுக் கண்பறித்து
ஆவி தணல் வீசி அறுபது வேங்கை மரம் கருகி
வீரமரம் தட்டுருவி விரைந்தும் அது போகையிலே
ஆவி தணல் வீசியப்போ வேங்கை மரம் பட்டதப்போ!
வாரதொரு அம்பைச் சங்கர் வகையாகத் தான் பார்த்து,
வந்ததொரு அம்பைச் சங்கர் வலது கையில் தான் பிடித்து,
அம்பு வந்த திசை பார்த்து குதிரையை அப்போ 
திருப்புகிறார்” 

நெருப்புமிழும் வேகத்தில் தன்னை நோக்கி வந்த அம்பு களைக் கேடயத்தால் தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, பல கணைகளைத் தனது வாளைச் சுழற்றியே முறியடித்துப் பொடிப் பொடியாக்கி தலையூர்ப் பகை நோக்கிப் புயல் வேகத்தில் குதிரையைச் செலுத்தினான். 

திடீர்த் தாக்குதல் நடத்தி வளநாட்டு வீரர்களை ஒருக்கணம் திகைக்க வைத்திட முடிந்ததேயல்லாமல் தலையூர் வீரர்களால் பாறைகள் மறைவிலும் புதர்களின் மறைவிலும் நெடுநேரம் இருந்திட முடியவில்லை. அவற்றைவிட்டு வெளிக் கிளம்பி வளநாட்டுக்காரர்களை அந்த வனப் பகுதியில் சந்திப்பது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. 

சிலர் பகைவர் மேல் அம்பைச் செலுத்தினர். அதற்கு எதி ராக விடுத்திட கையில் அம்பு இல்லாத காரணத்தினால் வேறு சிலர் தங்களிடமுள்ள வில்லை மட்டுமே சுழற்றினர். அப்போது எதிரி எய்த அம்பு தமது மார்பில் ஊடுருவிடவே அந்த அம்பு களை எடுத்துத் தம்மிடம் உள்ள வில்லில் பூட்டி எதிரி மீது தொடுத்தனர் என்பதை 

“நேர்முனையில் தொடுத்த பகழிகள் 
நேர் வளைவில் சுழற்றும் அளவினில்
மார்பிடையில் குளித்த பகழியை 
வார்சிலையில் தொடுத்து விடுவரே” 

என்று கலிங்கத்துப் பரணி கூறும் போரின் சிறப்பை ஒத்ததாக அமைந்தது வீரப்பூர் காட்டினிடையே நடந்த போர்! 

தளபதி வீரமலையை ஒரு பகுதியிலும் வையம்பெருமானை மற்றொரு பகுதியிலும் வளைத்துக் கொண்டு, சங்கருக்குப் பக்கபலமாக அவர்களிருவரும் இல்லாத அளவுக்குப் பிரித்து விட்டால் சங்கரைத் தலையூர்க்காளி எளிதில் வீழ்த்திவிட முடி யும் எனக் கருதிய செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் தமது படைவீரருடன் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டு தாக்கினர். செல்லாத்தாக் கவுண்டரின் சூழ்ச்சிக்கு ஏற்ப தலை யூர்க் காளியும் சங்கரும் வேறொரு முனையில் கடும் போர் புரிந்தனர். சங்கர் சுழற்றும் வாளின் வேகத்தில் தலையூரான் விடுத்திட்ட சுடு ஈரங்கள் அனைத்தும் பொடிபட்டுப் புழுதித் துகள்களாக அந்தக் களத்தில் விழுந்து சிதறிக்கொண்டே யிருந்தன. 

வீரமலையையும் வையம்பெருமானையும் மிகச் சுலபமாகத் தோற்கடித்துவிடலாமென வியூகம் வகுத்த செல்லாத்தாக் கவுண்டர் திணறிப் போனார். அந்த இருவரின் மின்னல் வேகத் தாக்குதல் கண்டு மாந்தியப்பன் திகைத்தான். தன் தந்தையை நோக்கி ‘அப்பா! ஆபத்தில் சிக்கிக்கொண்டோம் போலிருக்கிறதே!” என வாய்விட்டு அலறிவிட்டான். வீர மலை, வையம்பெருமான் இருவரையும் வெகுவேகமாக எதிர்த்து வளநாட்டு வீரர்கள் பலரைக் கொன்று குவித்து, அதற்கு ஈடாகத் தன் பக்கமும் பல வீரர்களைப் பலி கொடுத்துவிட்ட செல்லாத்தாக் கவுண்டர் ஒரு கட்டத்தில் வீரமலையை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் அவனோடு மோதாமல் தனது குதிரையில் அப்படியே அசைவற்று அமர்ந்து, தன் கையிலிருந்த வாளைத் தாழ இறக்கிக் காட்டினார். செல் லாத்தாக் கவுண்டர் சமரசத்துக்கு வருகிறார் அதனால்தான் வாளைத் தாழ இறக்கிக்காட்டுகிறார் எனக் கருதிய வீரமலை, உடனே போரை நிறுத்தி விட்டு “என்ன?” என்று அவரைப் பார்த்துக் கேட்டான். செல்லாத்தாக் கவுண்டரையொட்டியே வந்த மாந்தியப்பனும் அங்கு வந்துவிட்டான் உடலில் பல காயங்களுடன்! 

“சரணாகதிப் படலமா?” என்று வையம்பெருமான், அவர் களிருவரையும் அலட்சியமாகப் பார்த்துக்கொண்டே கேட்டான். 

“இல்லை! நமக்குள்ளே ஒரு சமாதானம்!” என்று பல்லை இளித்தார் செல்லாத்தாக் கவுண்டர். அதற்குப் பொருள் புரியாமல் வீரமலையும் வையம்பெருமானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

“நமக்குள் ஒரு சமாதானம் செய்துகொள்ளலாம்” என்று செல்லாத்தாக் கவுண்டர் மேலும் புதிர் போட்டார். 

“போர் நடப்பது சங்கருக்கும் தலையூர்க்காளிக்கும்! அவர்க ளிருவரும் ஒப்புதல் தராமல் நமக்குள்ளே எப்படி ஒரு தனி சமா தான ஒப்பந்தம் ஏற்பட முடியும்?” என்று வீரமலை கேட்டான். 

“சங்கருக்கும் தலையூர்க்காளிக்கும் தமது வீரர்கள் அழி வதைப் பற்றிக் கவலையில்லை. அவர்களது கௌரவம், குலப் பெருமை இவைகளைக் காப்பாற்றிக்கொண்டால் போதும். நமக்கேன் இந்தத் தேவையில்லாத சிக்கல்? நானும் என்மகன் மாந்தியப்பனும் எங்கள் பின்னால் உள்ள வீரர்களுடன் உங் கள் படையுடன் இணைந்துவிடுகிறோம். சங்கருக்கும் காளிக் கும் நடைபெறும் போரில் யார் ஜெயிக்கிறார்களோ, அவர்கள் பக்கம் நாம் சேர்ந்துவிட்டால் பிறகு எந்தக் கவலையுமில்லை! என்ன சொல்லுகிறாய் வீரமலை?” என்று பழம் நழுவிப் பாலில் விழுவது போல பசப்பினார் செல்லாத்தாக் கவுண்டர்! 

“அய்யா! தாங்கள் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட் டீர்களா? குறைந்தபட்சம் இந்த உலகத்தில் ஒரே ஒரு மனிதன் நீங்கள் இதயசுத்தியோடு விசுவாசம் காட்ட வேண்டியவன் தலையூர்க்காளி! அவன் எவ்வளவோ பரவாயில்லை. தங்களின் தர்மவிரோதமான காரியங்களையெல்லாம்கூட அவன் தாங் கிக்கொண்டு, தங்களிடம் நன்றி விசுவாசம் காட்டி இப்போது அழிந்துகொண்டிருக்கிறான். அவனையும் ஆபத்தில் கைவிடு கிறேன் என்றும் ஜெயிப்பவர் பக்கம் சேருவோம் என்று எங்க ளையும் துணைக்கு அழைக்கிறீர்களே, உங்கள் பாதம் பட்ட இடத்தில் இருக்கும் பசும்புல்கூட கருகிப் போய் விடுமய்யா!” என்றான் வீரமலை ஆத்திரம் கொப்பளிக்க! உணர்ச்சி கொந்தளிக்க! 

சமாதானப் பேச்சிலும் ஒரு சதி மறைந்திருந்த காரணத்தி னால் வீரமலையும், வையம்பெருமானும் செல்லாத்தாக் கவுண் டருக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மாந்தியப்பன் கீழே தாழ்த்தி வைத்திருந்த தனது வாளை ஓங்கி வீரமலையை ஒரே வெட்டில் வெட்டி வீழ்த்திட வீரமலையை நோக்கிப் பாய்ந்தான். இதுபோன்ற ஒரு விபரீதத்தை எதிர்பார்த்திருந்த வையம்பெருமான் வீரமலைக்கு முன்னால் திடீரெனப் பாய்ந் தோடி தனது வாளால் மாந்தியப்பனின் வாளைத் தட்டிவிடும் நோக்கத்தோடு சீறிப்பாய்ந்தான். அந்த வேகத்தில் மாந்தி யப்பனின் வாள் மட்டுமல்ல, அந்த வாளைப் பிடித்திருந்த அவனது கை விரல்களும் துண்டிக்கப்பட்டுத் தரையில் சித றின. அதற்கு மேல் அங்கு நின்றால் தன்னுயிருக்கே ஆபத்து என உணர்ந்து நடுங்கிய மாந்தியப்பன் ஒரே தாவாகத் தன் குதிரையில் தாவி, போர்க்களத்தை விட்டே ஓடிவிட்டான். மகனின் வலது கை விரல்கள் தன்காலுக்கருகே சிதறிக்கிடப் பது கண்ட செல்லாத்தாக் கவுண்டர், அடிபட்ட புலியைப் போலச் சீறிக் கிளம்பி, தனது கைவாளை வையம்பெருமானின் நெஞ்சில் நுழைத்துவிட்டார். அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு இடிமுழக்கம் செய்துகொண்டு கிளம்பிய வீரமலையைத் தலையூர் வீரர்கள் சூழ்ந்து கொண்டனர். வாழ்க வளநாடு! வாழ்க சங்கர்!” என்று ஒலியெழுப்பியவாறு வையம் பெருமான் கீழே சாய்ந்தான். அந்த வீர இளைஞனின் உடலை மிதித்துக்கொண்டு தலையூர் வீரர்களும் வளநாட்டு வீரர்களும் மீண்டும் மிக உக்கிரமாக. மோதத் தொடங்கினர். தலையூர் வீரர் களை உற்சாகப்படுத்திக் கொண்டே செல்லாத்தாக் கவுண்டர் வீரமலையை எப்படியும் வீழ்த்திட வேண்டுமென்று வெகு வேசமாகப் போர் புரிந்தார். பொன்னர் சங்கர் எனும் ஈடு இணையற்ற மாவீரர்களின் தளபதியான வீரமலை செல்லாத் தாக் கவுண்டரின் வெறித்தனமான போர் கண்டு அஞ்சவில்லை. 

மற்றொரு பகுதியில் தலையூர்க் காளியும் சங்கரும் போர்க் களத்தில்! இருதரப்பு வீரர்களின் உடல்கள் கைகால்கள் அறு பட்டும் -தலைகள் துண்டிக்கப்பட்டும் ரத்தத் தடாகத்தில் மிதந் தன. பாறைகளில் மோதும் ஈட்டிகள் எழுப்பிடும் பெருஞ் சப்தம்! வாட்கள் ஒன்றோடொன்று மோதிக் கிளம்பும் ஒலி! வில்லில் இருந்து விருட்டென்று பறக்கும் கணைகளின் ஆர வாரம்! இருபுறமும் வீரர்களை உற்சாகப்படுத்த அதிரும் முர சங்கள்! இவை குறித்துக் கவலைப்படாமல் கழுகுகளும், காகங் களும், நரிகளும், பருந்துகளும், பிண விருந்துண்டு மகிழ் வதிலும், விழுந்த பிணங்களின் அவயங்களை வாயில் கௌவிக் கொண்டு ஓடுவதிலும் பறப்பதிலும் கண்ணுங்கருத்துமாயிருந்தன! 

“எடும், எடும், எடும் என எடுத்தது ஓர் 
இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே. 
விடு விடு, விடு பரி கரிக் குழாம் 
விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே 

வெருவர வரிசிலை தெரித்த நாண் 
விசைபடு திசைமுகம் வெடிக்கவே…
செருவிடை அவரவர் தெரித்தது ஓர் 
தெழி உலகுகள் செவிடு எடுக்கவே…” 

என்பதாகக் கலிங்கத்துப் பரணியில் வில்லில் இருந்து புறப் படும் கணைகளால் அந்த நாண் ஓசையால் திக்குகள் பிளந் தன என்றும், குதிரைகளை ஏவுக! யானைகளை ஏவுக! என்ற போர்க்களத்து ஆணைகளால் உலகம் செவிடுபடுகின்றன என்றும், ஜெயங்கொண்டார் குறிப்பிட்டது போல வீரப்பூர் பகுதியே படுகளமாயிற்று! தங்களின் வாய்களில் புகுந்துவிட்ட வேல்களைக் கைகளால் இழுத்தெடுப்பதற்காக முயற்சித்துக் கொண்டே களத்தில் விழுந்து கிடக்கும் வீரர்களைப் பார்த் தால் அவர்கள் ஊது கொம்பு ஊதுவது போலத் தெரிகிறது என்று வர்ணிக்குமே, கலிங்கத்துப் பரணி அதுபோன்ற காட்சிதான் வீரப்பூர் படுகளத்தில்! 

இதன் முடிவுதான் என்ன? சங்கரின் துடிப்பும் வீரமும் மிகுந்த தாக்குதலைத் தலையூர்க் காளியினால் நேருக்கு நேராக நின்று சமாளிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் பின் னோக்கிச் செல்வதுபோலப் பாவனை செய்து மீண்டும் ஒரு மலைப்பாறையில் மறைந்து கொண்டான். அப்போது வீர மலையும் செல்லாத்தாக் கவுண்டரும் போர் நிகழ்த்தும் இடத் தில் ஒரு பெரும் ஒலி! போரில் செல்லாத்தாக் கவுண்டர் வீரமரணம் அடைந்ததையொட்டி, தலையூர் வீரர்கள் களத்தை விட்டு ஓடத்தொடங்கினர். அந்த ஒலி முழக்கம் தலையூர்க் காளியைக் கிறு கிறுக்கச் செய்துவிட்டது. வீரமலையின் கையில் வெற்றிக்கொடி ஓங்கி உயர்ந்துவிட்டது கண்ட சங்கர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; தன்னை மன்னன் என்பதையும் வீரமலை அவனது தளபதி என்பதையும் மறந்து; சங்கர் – “தளபதி வீரமலை வாழ்க!” என்று இதயம் திறந்து வாழ்த்து முழக்கமிட்டான். வளநாட்டுப் படைவீரர்கள் அனைவரும் வாழ்த்தினர்! அந்த மகிழ்ச்சிப் பெருவெள்ளத்திடையே ஒரு பெரும் அதிர்ச்சி! பாறைச்சரிவில் மறைந்திருந்த தலையூர்க் காளி நாணேற்றி விடுத்த அம்பு, சங்கரின் நெற்றியில் தாக்கி யது!சங்கர் நெற்றிப் பொட்டில் தாக்குண்டதால் குதிரையி லிருந்து தலைகுப்புற வீழ்ந்தான் வீரமலை ஓடோடி வந்து சங்கரைத் தூக்கிக் கொண்டான். 

பகழி = அம்பு 
வார்சிலை = வளைந்த வில் 

57. தொடருதே படுகளம் 

சங்கரின் நெற்றியில் பொட்டு வைத்தது போல் காளி எய்த கணை தைத்துக் கொண்டிருந்தது. சங்கரை வீரமலை தூக்கிக் கொண்டபோது, இதுதான் தக்க தருணமென்று உணர்ந்த தலையூர்க் காளி மன்னன் மளமளவென பல கணைகளை வில்லில் வைத்து நாணேற்றி வீரமலையின் உடல் முழுதும் பொழிந்து தள்ளிவிட்டான். அத்தனை அம்புகள் வீரமலையைத் தாக்கி அவனுடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்த போதி லும் அவற்றில் ஒரு அம்பு கூட சங்கரின் மேனியில் படாமல் பாதுகாத்த அவனது பற்று பாசத்தைக் கண்டு தலையூர்க் காளி அயர்ந்து போனான். தலையூர்க்காளி, எந்தப் பாறை மறை விலிருந்து கணைகளைப் பொழிகிறான் என்பதைக் கண்டு கொண்ட வளநாட்டு வீரர்கள் அந்தப் பாறையை நோக்கி ஆவேசமாகக் கிளம்பினர். 

ஊழிக் காலத்தில் எப்படிக் கடல் பொங்கிடும் என்பதை யாரோ சொல்லி இளமைக் காலத்தில் கேட்டவனே தவிர நேரில் பார்த்தவனல்ல! ஆனால் இப்போது வளநாட்டுப் படை வீரர்கள் தன்னை நோக்கி வருவதைக் கண்ட போது ஊழிக்காலத்துக் கடல் கொந்தளிப்பை ஒப்பிட்டுக் கற்பனை செய்துகொண்டான். தலையூர்ப் படை பாதிக்கு மேல் அழிந்து சிதைந்துவிட்ட நிலையில், உணர்ச்சிப் பிழம்புகளாகத் தன்னை அழிக்க விரைந்து வரும் வளநாட்டு வீரர்களிடம் சிக்கினால் உயிருக்கு ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டு, உடனடியாகக் குதிரையில் தாவி – போர்க்களத்தை விட்டுத் தலையூர் நோக்கி ஓடத் தொடங்கினான். 

தலையூர் திரும்பி அங்குள்ள படைகளையும் – தனது ஆதிக் கத்தில் உள்ள பதினெட்டுச் சிறுநாடுகளின் படைகளையும் ஒன்று திரட்டி முதலில் தலையூர் கோட்டையை மீட்க வேண் டும் அதனைத் தொடர்ந்து வளநாட்டுப் படையை எதிர் கொண்டு வெற்றிவாகை சூடி, வளநாட்டையும் தன்னகப் படுத்த வேண்டும் – இந்தத் திட்டத்துடன் காளி மன்னன் காற்றி னும் கடிய வேகத்துடன் தலையூர்ப் பாதையில் போய்க்கொண் டிருந்தான். சங்கர் காயமுற்றானே தவிர, கொல்லப்படவில்லை பொன்னரும் இன்னும் போர்க்களத்துக்கு வந்து சேரவில்லை! எனவே அவர்களை எதிர்த்து வீழ்த்திட தலையூர்க் கோட்டைக் குச் செல்வதே சரியென்று காளி மன்னன் கருதினான். அவன் கருத்தறிந்தது போல குதிரையும் நாணில் அழுந்திக் கிளம் பும் அம்பு போல வேகங்காட்டிச் சென்றது! 

சங்கரை மெய் சேர அணைத்தபடி வீரமலை, தரையில் சாய்ந்தான். கண் கட்டி விளையாடும் சூதாட்டப் பலகையில் வீசப்பட்ட கூரிய முட்களைப்போல, காளி மன்னன் விடுத்த அம்புகள், சூதறியாத சூரன் வீரமலையின் உடல் முழுதும் குத்தித் தொத்திக்கொண்டிருந்தன. நெற்றியில் தைத்த அம்பின் வழியாக ரத்தம் குபுகுபுவெனப் பெருகிக் கொண்டிருந்த நிலையிலும் சங்கர், வீரமலையின் உயிர் அமைதியாகவும் அஞ்சாத் தன்மையுடனும் பிரிந்திடும் காட்சி கண்டு பதறிப் போனான். 

பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து தங்கள் குடும்பத்தில் ஒன்றிக் கலந்து வாழ்வின் உயர்வு தாழ்வுகளில் சமபங்கு ஏற்று உண்மையாகப் பழகிய சோழன் தோட்டி குடும்பத்தின் வழித் தோன்றலாம் வீரமலை, தனது மடியில் சவமாகப் படுத்திருக் கிற காட்சியை சங்கரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொன்னர் சங்கர் என இரண்டு சகோதரர்களில்லை, வீர மலையையும் சேர்த்து மூன்று சகோதரர்கள் என எண்ணிப் பெருமைப்பட்டவர்கள் அல்லவா? அந்த மூவருக்கும் தங்கை யாகத்தானே அருக்காணி விளங்கினாள் அவர்களில் ஒரு சகோதரன் இதோ சவமாக! போர்க்களத்தில் உயிர் துறந்து புகழின் உச்சியில் ஏறிவிட்ட புலிப் போத்தாக! 

“வளநாட்டுத் தளபதியே! எங்கள் வாழ்வில் இணைபிரி யாத உடன் பிறப்பே! என்னைக் காத்திட உன்னைத் தந்துவிட் டாயா? களத்தில் காயம்பட்டுவிட்ட நான் எதற்காக உயிர் வாழவேண்டுமென நீ நினைத்தாய்? போரில் புண் பெற்ற பின் னர் வாழ்வது வீரர்களுக்கு அழகோ? முதுகில் காயம்பட்டால் தானே மானப்பிரச்சினை நெற்றியில்தானே காயம் என்று என்னால் மனநிறைவு கொள்ள முடியவில்லையே! எனக்கு உயிருக்கு உயிராய் எங்கள் குடும்பத்துக்கு, அரணாய் பாதுகாப்பதில் பத்து மாதம் சுமந்த தாயாகவும் – பண்பு போதிப்பதில் பற்றுக் குறையாத் தந்தையாகவும் – பயிற்சியளிப்பதில் குருநாதனாகவும் விளங்கி, நண்பனுக்கு நண்ப னாய், சகோதரனுக்குச் சகோதரனாய்த் திகழ்ந்த வீரமலையே போய்விட்ட பிறகு எதற்காக நான் வாழ வேண்டும்? அதுவும் நெற்றியில் பட்ட காயத்துடன்? எங்கள் எதிரி காளி மன்னன் எங்கோ ஓடித் தொலைந்துவிட்டான் போர்க்களம் விட்டு புறமுதுகு காட்டி! களத்தில் பெற்ற வெற்றியினைக் கொண் டாட இந்தப் பெரும் வெற்றிக்குக் காரணமான வீரமலை இல் லையே. என் செய்வேன்! எப்படி இந்த இழப்பைத் தாங்கிக் கொள்வேன்!’ என்று கதறினான் சங்கர்! போர்க்களத்தில் மாண்டு கிடக்கும் வீரமலையின் மீது விழுந்து அழுவதற்கு அவனுக்கு ஒரு மனைவியில்லாத குறையைப் போக்குவது போல அவனது உடலைத் தழுவிக் கொண்டு புலம்பினான் சங்கர்! 

ஒரு வீரவேங்கையின் களச்சாவுக்காக கண்ணீரை அபி ஷேகித்துக் கொண்டிருந்த சங்கர், திடீரெனத் தனது சோகத்தை உதறிவிட்டு எழுந்து நின்றான். நெற்றியில் தைத்திருந்த பகை யாளியின் கணையைத் தானே இழுத்துக் கீழே எறிந்தான். வீர மலையின் உடலைச் சுற்றி வளநாட்டு வீரர்கள் சோக உருவங் களாக நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து சங்கர் சொன்னான் 

“எங்களில் ஒருவராக இருந்த இல்லை! இல்லை! நம்மில் ஒருவராக இருந்த வீரமலை வீர மரணமடைந்த இந்த இடத் துக்கு வீரமலை என்று பெயர் சூட்டுகிறேன். வீரப்பூர் காட்டையொட்டிய இந்தப் பகுதி இனிமேல் வீரமலையென்றே அழைக்கப்படட்டும்! 

இதைச் சங்கர் கூறி முடிப்பதற்குள்ளாக, “வீரமலை வாழ்க!’ என்ற முழக்கத்தை வளநாட்டு வீரர்கள் உணர்ச்சி பொங்கிட எழுப்பினர். 

“வீரர்களே! நீங்கள் அனைவரும் வளநாடு திரும்புங்கள்! அண்ணன் பொன்னரிடம் போர்க்களச் செய்தி சொல்லுங்கள்! தலையூர்க் காளி தப்பியோடித் தலைநகருக்குப் போய்விட்டான் என்பதையும் கூறுங்கள்! இப்போது நாம் பெற்றிருப்பது தற் காலிக வெற்றிதான்! நிலையான வெற்றிபெறத் தலையூர்க் காளியை வீழ்த்த வேண்டும்! இனியும் அவனை உயிருடன் விடு வதற்கு காரணமே இல்லை! அண்ணன் பொன்னர், என்ன திட்டங்கள் வகுத்துக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை! ஒரு வேளை அவர் வகுக்கும் போர் முறைக்கு மேலும் வீரர்கள் தேவைப்படக்கூடும்! ஆகையால் நீங்கள் அனைவரும் வள நாடு நோக்கித் திரும்புவதுதான் நல்லது. என்னுடன் நாலைந்து வீரர்கள் இருந்தால் போதுமானது! தலையூர்க் காளியைத் தொடர்ந்து தலைவனில்லாத களத்தில் நிற்க அஞ்சிய தலையூர் வீரர்களும் ஓடிப் போய்விட்டனர்! அதனால் என்னுடன் நாலைந்து பேர் இருப்பதே போதுமானது! நானும் அவர்களும் வீரமலைக்கு இறுதிச் சடங்குகளை இங்கேயே நடத்தி விடுகிறோம்!” 

தங்கள் அரசனின் ஆணை கேட்டுத் துணைத் தளபதிகளும், வீரர்களும் வளநாட்டுக்குத் திரும்பி பெரிய மன்னன் பொன்ன ரிடம் போய்ச் சேர சம்மதித்துப் புறப்படத் தயாராயினர். அப் போது இரண்டு வீரர்கள் வேறொரு பகுதியில் விழுப்புண் பட்டு வீழ்ந்து பிணமாகிச் சிதறுண்டுபோன வையம்பெரு மானின் உடலைத் தூக்கிக் கொண்டு அங்கே வந்தனர்! 

“வையம்பெருமான்! நீயும் வீர மரணமடைந்து விட்டாயா?” என்று தனது நெஞ்சில் ஓங்கி அறைந்து கொண்டான் சங்கர்! சிறிது நேர அமைதிக்குப் பிறகு அங்கு அணி வகுத்து நின்ற படையினைச் சங்கர் பார்த்தான். இன்னும் புறப்படவில் லையா?” என்ற கேள்விக்குறியாக இருந்தது அந்தப் பார்வை! வளநாடு நோக்கிப் படை புறப்பட்டுவிட்டது. 

சங்கர் தனக்குத்தானே பேசிக் கொண்டான்! நானும் வீர மலையும் வையம்பெருமானும் படைத் தலைமையேற்றுப் புறப் பட்டோம்! என்னைத் தவிர இருவரும் போர்க்களத்தில் சாவை நட்டுப் புகழ் மலையின் உச்சியிலே கொடி ஏற்றி விட்டார்கள்! களச்சாவு, யாசித்துப் பெறவேண்டிய ஒன்று என்பார்கள்! ஆனால் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை! மாறாக, நெற்றியிலே புண்பட்டுக் கிடக்கிறேன் – அது மட்டுமா? என்னுடன் வந்த வீரமலையும் வையம்பெருமானும் மாண்ட பிறகு கூட நான் உயிர் வாழ்கிறேன் அதுவும்-எப்படி? மாற் றானின் கணையினால் தாக்குண்டபிறகும் உயிர் வாழ்கிறேன்! இது எனது மான மரபுக்கு ஏற்றதல்ல! வீரமலை எங்கே? என்று அண்ணன் பொன்னர் என்னைக் கேட்பதற்கு முன்பு – வையம்பெருமான் என்ன ஆனான்? என்று மாமா சின்ன மலைக்கொழுந்தார் என்னைக் கேட்பதற்கு முன்பு – இருவர் உயிரைப் பாதுகாக்கமுடியாத நீ அவர்களுக்கும் சேர்த்து படைத்தலைமை வகித்து என்ன பயன் கண்டாய்? என என்மீது பழிசுமத்துவதற்கு முன்பு, நான் என் வாழ்வை முடித்துக் கொண்டாக வேண்டும்!” 

சங்கரின் சிந்தனை ஆழமாக மட்டுமல்ல, அகண்ட கடல் பரப்பாகவும் விரிவடைந்துகொண்டே போனது. 

“அந்த இரு தளபதிகளுக்கும், இரு தரப்பினைச் சேர்ந்த கணக்கற்ற வீரர்களுக்கும் கிடைத்த வீரமரணப் புகழ் எனக்கும் கிடைத்தாக வேண்டும்! அது தானாக என்னை வந்தடையா விட்டாலும் நானாக அதைத் தேடிப் போக வேண்டும்.” 

சங்கரின் வார்த்தைகள் வச்சிரத்தில் வார்த்தெடுக்கப்பட்ட வலிமையோடும் உறுதியோடும் வெளிப்பட்டன. தன்னைச் சுற்றி நின்ற வீரர்களைப் பார்த்தான். அவர்கள், சங்கரின் சொற்களைக் கேட்டு எதுவும் புரியாத நிலையில் திகைத்துப் போயிருந்தனர். 

”வீரர்காள்! வெற்றி அல்லது வீரமரணம் எனச் சூளுரைத் துப் போருக்குப் புறப்பட்ட நான், உங்கள் போன்றவர்களின் உறுதுணையால் வெற்றி பெற்றேன்! விரட்டி விட்டேன் தலை யூர்க் காளியை! ஆனால் அவன் அடிபட்ட நாகம்! அதை மறக்கவில்லை நான்! அவனை அறவே ஒழிக்கும் கடமையில் எனக்கும் பொறுப்பு உண்டு. ஆனால் களத்தில் காயமுற்றுக் கீழே சாய்ந்த நான் மறவர் குடிப்பெருமைக்கு ஒரு மாசாக வந்து விட்டேன் என்பதை உணருகிறேன்! எனவே வீரமர ணத்தை வலிய ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டேன்!” 

சங்கரின் இந்த கர்ச்சனை கேட்டுக் கதிகலங்கிய அந்த வீரர் கள், அவன் காலில் விழுந்து கெஞ்சியவாறு, ‘அரசே! அண்ணன்மார் இருவரும் செய்துள்ள சபதத்தை மறந்துவிட்டீர் களா? உங்கள் குருநாதர் ராக்கியண்ணர் கட்டளையை நிறை வேற்றத் தலையூர்க்காளியையும் அவனுக்குத் துணை நின்ற துரோகிகளையும் பழி வாங்குவதாக அன்றைக்குச் செய்த சப தம், நீர் மேல் எழுதிய எழுத்தாக ஆகலாமா? மாயவர் முன் னிலையில் உரைத்த சூளுரையாயிற்றே அது! நினைவில் லையா? அதையெல்லாம் தட்டிக் கழித்து விட்டு தாங்கள் வீரசொர்க்கம் புக வேண்டுமென விரும்புவது சுயநலமாகப்பட வில்லையா?” எனக் கேட்டு அழுது புலம்பினர். 

“களத்தில் காயம்பட்ட நான், அந்தக் காயத்தை உருவாக்கிய எதிரியை அதே இடத்தில் தீர்த்துக் கட்டியிருந்தால் நான் பெற்ற விழுப்புண்ணுக்குப் பெருமையுண்டு! ஆனால் அவனை நான் தப்பவிட்டு விட்டேனே! ஒரு வகையில் பார்த்தால் அது எனக்குற்ற பெருந்தோல்விதானே! அதனால்தான் எனக்கேற்பட்ட களங்கத்தைக் கழுவிக்கொள்ள வீர மரணத்தை நான் விரும்புகிறேன்.” 

அழுத்தம் திருத்தமாகப் பேசினான் சங்கர்! 

“அரசே! எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்! ஒரு போர் நடக்கும் போது இடையிலே சில களங்களில் வெற்றி கிட் டாமற் போகலாம்! தோல்வியும் கிடைக்கலாம்! களங்களில் ஏற் படும் தொய்வு மொத்தமாகப் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வியென்று கணக்கிடுவது சரியாகுமா? இதைவிட முக்கிய மாக அன்றெடுத்த சபதத்தை நிறைவேற்றுவதென்பதில் தங் களுக்கு அக்கறையில்லாமற் போகலாமா? எவ்வகையிலும் தாங்கள் வீரமரணத்தை இப்போதே வலுவில் தழுவுவது என் பதை எங்களால் ஏற்றுக்கொள்ளவே இயலாத ஒன்று அரசே!” என்று துணைத் தளபதியொருவனும் அவனுடனிருந்த சில வீரர்களும் மன்றாடும் தோரணையில் சங்கருக்கு வேண்டு கோள் விடுத்து, அவன் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளு மாறு கேட்டுக் கொண்டனர். சங்கரோ, அவர்களின் வேண்டு கோளைப் பிடிவாதமாக மறுத்துப் பேசினான்

“சபதத்தை நிறைவேற்ற என் அண்ணனால் இயலாது என்று என்னை நம்பச் சொல்கிறீர்களா? நிச்சயம் அவர் சபதத்தை நிறை வேற்றி முடிப்பார்! இதனை இதனால் இவன் முடிக் கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” என்ற குறளுக் கேற்ப அந்த நாள் சபதத்தை முடிக்கக் கூடிய ஆற்றலும், அறி வும், வீரமும் தீரமும் யாருக்கு உண்டென்பதும் – அவரிடமே அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதும் – எனக்கு நன்றாகவே தெரியும்! அந்த வெற்றி வீரர் அண்ணன் பொன் னராகத்தான் இருக்கமுடியும்! இருக்க வேண்டும்! துணைக்கு வந்த தளபதி வீரமலையை இழந்தேன்! வையம்பெருமானை இழந்தேன்! எதிரியைத் தப்பி ஓடுமளவுக்கு விட்டு விட்டு என் நெற்றியிலும் காயத்தை தாங்கியவனாக ஆகிவிட்ட எனக்கு இனி ஒருக்கணமும் உயிர் வாழ விருப்பமில்லை!” 

சங்கர் முடிவாகச் சொன்ன பதிலைக் கேட்டு அவனைச் சுற்றி நின்றவர்கள் “அரசே!’ என அதிர்ந்து போய்க் கூவி விட்டனர்! 

“ஆளுக்கு ஆள் அறிவுரைகளைப் பரிமாறிக் கொள்ளவோ – தர்க்கவாதம் செய்துகொள்ளவோ நேரமில்லை! சின்னஞ்சிறு பிள்ளைப் பருவத்தில் காலில் கிண்கிணி அணிந்து ஐந்து பகை நாடுகளை எதிர்த்து வென்ற தலையாலங்கானத்துச் செறு வென்ற நெடுஞ்செழிய பாண்டியனின் வீரத்தை எண்ணிப் பார்க்கிறேன்! இலங்கையைப் படை கொண்டு வென்ற இராஜ ராஜ சோழனையும், கடாரம் வரை கப்பற்படை நடத்தி வெற்றிக் கொடிநாட்டிய இராஜேந்திரசோழனையும் நினைத் துப் பார்க்கிறேன்! இமயமலைப் பகுதியில் குயிலாலுவம் வரை சென்று கனக விசயரை வென்று கண்ணகி தேவிக்குச் சிலை வடிக்கக் கல்கொண்டு வந்த சேரன் செங்குட்டுவனின் வரலாற் றையும் மறந்தேனில்லை! அந்த வீரர்கள் பிறந்து வாழ்ந்து புகழ் செதுக்கிய இந்தத் தமிழ் மண்ணில் முதுகிலே காயம் பட்டல்ல, நெற்றியிலே பட்ட விழுப்புண்ணுக்காக நாணிய ஒருவன், போர்க்களத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டு வீரமரணம் அடைந்தான் அவன் பெயர் சங்கர்! பொன்னரின் தம்பி குன்றுடையாரின் மகன் – கோளாத்தாக் கவுண்டரின் பேரன் கொங்கு மண்டிலத்து மைந்தன்! – என்று எதிர்கால வரலாற்று வரிகள் ஒளிவிடுமல்லவா? அது போதும் எனக்கு!” என்றவன் போர்வாளைத் தன் கையில் ஏந்திக் கொண்டான். 

துணைத் தளபதியும் மற்றவர்களும் துடித்துப்போய், “வேண்டாம் அரசே! வேண்டாம்!” என்றலறினர். 

“இதுவரையில் பேச்சு! இனி என் ஆணைக்கு அடங்கி நடப் பதே உங்கள் கடமை!” என்று கடுங்கோபமாகக் கூறினான் சங்கர்! அவர்கள் அச்சடித்த பதுமைகளாகி விட்டனர். 

அப்போ குதிரைமேல் போட்டிருந்த குங்குமப் பட்டெடுத்து 
பட்டை விரித்தெடுத்து சங்கர் பாங்காய் மடித்து வைத்து.
பூமியிலே நாமிறந்தால் பொன்மேனி புழுதி படியுமென்று,
பாறை மேல் பட்டு அதைப் பாங்காய் விரித்து வைத்து,
அதன்மேல் வலது காலை ஊன்றி வைத்து இடது கால் 
மண்டியிட்டு.. 

பாறையொன்றின் மீது பட்டினை விரித்து அதிலேறி அமர்ந்து கொண்ட சங்கர் “வாழ்க வளநாடு!” என மூன்று முறை முழங்கினான். ‘வளநாட்டு மண்ணின் பெருமை காத்திடவும் உரிமை நிலைநாட்டிடவும் இன்னுயிர் ஈந்த எனது மக்களுக்கும் வீரர்களுக்கும் தலைதாழ்ந்து வணக்கம் செலுத்துகிறேன்” என்று கம்பீரக் குரலெடுத்து உரைத்திட்டான். பின்னர் ஓங்கிப் பிடித்தான் போர்வாளை! வானத்தை நோக்கி நிமிர்ந்தான்! தலையைப் பின்னோக்கிச் சாய்த்தவாறு மார்பகத்தில் அணிந்தி ருந்த கவசத்தைத் அவிழ்த்துக் கீழே எறிந்தான்! கையிலிருந்த போர் வாளைத் தனக்கு மேல் விண்ணோக்கி எப்படியோ ஒருவகைத் திறனோடு கழற்றி வீசினான்! 

அவன் வீசிய முறை விசித்திரமாக இருந்தது! மேலே சென்ற அந்த வாள் கார்காலத்து மின்னல் இறங்குவது போலக் கீழே இறங்கியது! சற்றும் அதன் குறி தவறிப் போய்விடாதவாறு சங் கர், தனது நெஞ்சை நிமிர்த்தி அந்த வாளை ஏந்திக் கொண் டான்! நெஞ்சுக்குள் நுழைந்த வாளை அவன் புன்னகை தவழப் பார்த்த அந்தப் பார்வையிருக்கிறதே, அதைத்தான் வீரப் பார் வைக்கு இலக்கணமாக எடுத்துக் கொள்ளவேண்டும். 

பின்னர் பேச்சில்லை மூச்சில்லை! சங்கர் அந்தப் பாறை யில் சவமாகச் சாய்ந்தான்! அந்தக் காட்சியைக் கண்ட வீரர் களோ நிற்கும் பிணங்களாகத் தோற்றமளித்தனர்.

சண்டமாருதமெனச் சுழன்ற சகோதரர் இருவரில் ஒரு வனின் வாழ்வு முடிந்துவிட்டது! வீரத்தின் நிலைக்களமாய் விளங்கியவன், அந்த வீரத்துக்குக் கடுகிலோர் பாதியளவு களங்கமும் விளைவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த படுகளத்தில் என்றும் அழியாத சரித்திரத்தைத் தீட்டி விட்டான்! அதுவரையில் காற்றின் அசைவில் சலசலத்துக் கொண்டிருந்த அந்தக்காட்டு மரங்கள் கிளைகளையோ இலை களையோ கூட அசைக்காமல் அமைதி காட்டி நின்றன! களத் தில் இறையுண்டு களித்திட வந்த காகம், கழுகு, பருந்து, நாய், நரிகள் அனைத்தும் ஏதோ ஒரு திகைப்பில் அவை அவைகள் இருந்த இடத்திலேயே குந்திக் கொண்டன! 

கொங்குச் சரித்திரப் புத்தகத்தின் ஒரு வீரதீரப் பொன்னேடு படிக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டது! 

அரண்மனை எரிந்து தணிந்து – அதற்குள்ளேயிருந்த அண் ணியார்களும் வெந்து மடிந்து – அந்த நெருப்பை விடக் கடும் நெருப்பாக உருமாறி வந்துகொண்டிருக்கிறாள் தலையூரை நோக்கி வீரப்பூர் காட்டு மார்க்கத்தில் அருக்காணித் தங்கம்! 

பட்டு நிலம் தூர்ந்து வர அம்மா
பாடகங்கால் சிலம்பு கொஞ்ச
முத்து நிலம் தூர்ந்து வர அம்மா
முன் நெற்றி வேர்த்துதிர 
பவழத்திருமேனியிலே கண்ணீரைப் 
பக்கமெலாம் சோரவிட்டு”. 

அருக்காணித் தங்கத்தின் கன்னங்களில் உருண்டு வழியும் கண்ணீர்த்துளிகள் உலைக்களத்தில் காய்ச்சப்பட்ட இரும்புப் பிழம்பின் துண்டங்களைப் போலவே தரையில் விழுந்து தெறித்தன! 

அவளும் அவளது தோழிகளும் போர்க்கோலம் பூண்டு நடந்து வரும் அந்தக் காட்டு வழியில் கல்லும் முள்ளும் நிறைந்த ஓர் ஓர் ஒற்றையடிப்பாதை! அந்தக் குறுக்கு வழிப்பாதையில் கோதையர் பட்டாளம் கோபாக்கினி பொழிந்தவாறு வந்து கொண்டிருந்தபோது விரல்களில் ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு குதிரையிலமர்ந்து மாந்தியப்பன் எதிரே விரைந்து வந்தான். அந்தக் குதிரையில் அவனுக்கு முன்னால் மரகதப் பச்சை மாணிக்கக்கிளியுள்ள வெள்ளிப்பேழை வைத்துக் கட்டப்பட்டி ருந்தது! மாந்தியப்பனின் கண்களில் அருக்காணித் தங்கம் பட்டு விட்டாள்! 

வேட்டாம்பட்டி அ. பழனிசாமி தொகுத்த “பொன்னர்- சங்கர் வரலாற்றில் காணப்படும் புலவர் பிச்சையின் பாடல் இது! 

58. படுகளம் நோக்கி பாவை! 

போர்க்களமாம் படுகளத்தைவிட்டு உயிர்பிழைக்க ஓடிய போதே, மரகதப்பச்சை மாணிக்கக்கிளியை மாந்தியப்பன் அங்கிருந்து எடுத்துக்கொண்டு விட்டான். உயிரைத் துச்ச மெனக் கருதி இருதரப்பு வீரர்களும் மோதிக் கொண்டிருக்கும் அந்தக் களத்தில் மாந்தியப்பனைப் போன்ற ஒரு வஞ்சக நெஞ்சக் கோழை மனிதன் நடத்துகிற திருட்டைப்பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள். அதனால் அவனது வேலை அவனுக்கு எவ்வித இடையூறுமின்றி எளிதாக இருந்தது. 

வளநாட்டு வீரர்களிடமிருந்து உயிர் தப்பி ஓடிவந்தான் எனினும் எதிரே வளநாட்டு வீராங்கனைகள் அருக்காணித் தங்கத்தின் தலைமையில் படைக்கலன்களுடன் அவனைச் சூழ்ந் திடுவார்கள் என அவன் எதிர் பார்க்கத்தானில்லை! 

அவர்களுக்கு முன்னால் தன்னை எதிரியாகக் காட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை. எதிர்ப்பு உணர்வுகளை அறவே தனது உள்ளத்திலிருந்து அகற்றி விட்டு, அருக்காணி யின்மீதும், அவளது அண்ணன்மார்கள்மீதும் அன்பைப் பொழி பவனாக நடித்தால்தான் அந்த நேரத்திற்குத் தப்ப முடியும் என்பது அவன் திடீர்த் திட்டம்! 

அருக்காணியும் அவளது தோழிகளும் அவன்மீது இரக்கம் காட்டுகிறவர்களாகத் தோன்றவில்லை. கம்பீர நடை போட்ட வாறு அவன் அமர்ந்திருந்த குதிரையைச் சூழ்ந்து கொண்டு எரிக்கும் விழிகளால் அவனையே உற்று நோக்கினர். 

“ஏன் என்னை இப்படிப் பார்க்கிறீர்கள்? நெருப்புக் கண் களால் நீங்கள் என்னைச் சுட்டெரித்துப் புடம் போட்ட தங்க மாக்குவதற்கு முன்பே பங்காளிப் பகையினால் கொங்கு வேளிர் குலத்துக்கு எவ்வளவு பெரிய வேதனை ஏற்பட்டு விட்டது என்ற கவலையே என்னைச் சுட்டெரித்துப் பத்தரை மாற்றுத் தங்கமாக்கிவிட்டது. அதனால்தான் படுகளத்திலிருந்து பொன்னரைத் தேடிக் கொண்டு வேகமாக ஓடி வருகிறேன். பொன்னரைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு, அவருக்குத் துணையாக நானும் கிளம்புவதற்கு முன்பு உனக்குரிய இந் தக் கிளியை உன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்பதும் எனது ஆசை! நல்லவேளையாக நீயே எதிரில் வந்துவிட்டாய்! இதோ ஏற்றுக்கொள், மரகதப்பச்சை மாணிக்கக் கிளியை!” என்று பல்லை இளித்துக்கொண்டு கூறியவாறு அந்த வெள்ளிப் பேழையைக் குதிரையிலிருந்தவாறு அருக்காணித்தங்கத்தை நோக்கி நீட்டினான். 

ஆனால் அவளோ அதனைப் பரபரப்புடன் வாங்கிப் பரி வுடன் அவனுக்கு நன்றி கூறுவாள் என அவன் எதிர்பார்த்த தற்கு மாறாக தனது கையிலிருந்த வாளினால் அவன் நீட் டிய அந்தக் கிளிப் பேழையை ஓங்கி அடித்தாள். அடித்த வேகத்தில் பேழை தூளாயிற்று! தங்கக்கூண்டு சிதறிப்போய் தரையில் இறைந்து நிறைந்தது! மரகதப்பச்சைக் கிளி மட்டும் முழு உருவத்துடன் தனியே போய் விழுந்தது! அந்தக் கிளியை எடுத்து அருக்காணித்தங்கம் தன் கையில் வைத்துக்கொண்டாள்! 

செம்பகுலன் கொண்டுவந்தது போலிக் கிளியல்ல, ராக்கி யண்ணர் தனது மரண சாசனத்தில் குறிப்பிட்டிருந்த அதே அசல் கிளிதான் என்ற நம்பிக்கை அருக்காணிக்கு ஏற்பட்டது! அதற்காக அவள் மாந்தியப்பனை நம்பத் தயாராக இல்லை! 

“எல்லாம் தனக்கேயிருக்க வேண்டும். எதிரிக்கு இடம் கொடுத்தாலும் பரவாயில்லை தனக்குப் பிடிக்காதவன் தம்பியாகவோ அண்ணனாகவோ இருந்தாலும் கவலையில்லை அவனுக்குத் துரோகம் செய்யத் தயங்கமாட்டேன் என்று கங் கணம் கட்டிக்கொண்டு காட்டிக் கொடுப்பதில் உமக்கும் உமது தந்தைக்கும் என்னதான் தனி ருசியோ? தலையூர்க்காளி வள நாட்டுக்கு எதிரிதான் என்றாலும் சொந்த நாட்டுக்காரர்க ளாகிய உங்களுக்கிருக்கும் தீய எண்ணம், ஒரு குலத்தில் பிறந்த உங்களுக்கிருக்கும் சூது மதி, ஏன் – ஒரு குடும்பத்தில் உதித்த பங்காளிகளாகிய உங்களுக்கிருக்கும் பழிவாங்கும் மனப்பான்மை அவனுக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்! அப் படியே இருந்தாலும், அது உங்களால் அவன் உடலில் சிறுகச் சிறுக ஏற்றப்பட்டிருக்கும் விஷமேயாகும்!” எனச் சீறினாள் அருக்காணித்தங்கம். 

“இன்னுமா என்னை நம்ப மறுக்கிறாய்? இந்த உலகமே இப்படித்தான்! திருந்தியவனை ஏற்றுக் கொள்ளாது!” எனக் குழைந்தான் மாந்தியப்பன். அவனது அப்போதைய தேவை, அந்த ஆத்திரம் நிறைந்த பெண்களிடமிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள வேண்டுமென்பதுதான்! 

“இதோ பார், வீரப்போரில் என் விரல்களைக்கூட இழந்து விட்டேன்! இனியும் தலையூரான் பக்கம் இருப்பது நமது குலத் துக்குச் செய்யும் துரோகம் என்றுதான் ஓடோடி வந்திருக்கிறேன்!’ 

“முட்களை இழந்துவிட்ட ஊமத்தங்காய், விஷத்தையுமா இழந்துவிடுகிறது?? அதுபோலத்தான் விரல்களை இழந்துவிட்ட உணர்வையும் இழந்துவிட்டிருப்பாய் என நாங்கள் நம்புவதும் ஆகிவிடும்!” 

“அய்யோ!, அருக்காணித்தங்கம் – நமது கொங்கு வேளாளர் குலதெய்வத்தின்மீது ஆணை! என்னை நம்பு! நான் இப்போது திருந்திய மாந்தியப்பன்!” 

“சே! குலத்தைப் பற்றிப் பேசவும், குலதெய்வத்தின்மீது ஆணையிடவும் உனக்கென்ன தகுதியிருக்கிறது? உனக்கும் எனக்கும் என்ன உறவு முறையென்று தெரிந்திருந்தும் சுட்டெரித்த காமத்தீயில் ‘கருகிப்போன பிண்டமாக வரைமுறை கடந்து என்னிடம் நடந்து கொள்ளத் துணிந்தாயே, செல்லாண்டி யம்மன் கோயில் திருவிழாவில் – நினைவிருக்கிறதா? அல்லது எத்தனையோ விகாரமான நித்திய நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்றாக மறந்துபோய்விட்டதா? சுயநலத்துக்காக சுகபோக வாழ்வுக்காக – குடும்பத்தைக் குலைத்த கோடரிக் காம்புகளாக மாறிவிட்டதுமன்னியில், பங்காளிப் புகைச்சல் முற்றிப் போய் பழிவாங்கும் பாம்புகளாகப் படமெடுத்தாடும் உனக்கும் உன் தந்தைக்கும் மன்னிப்பு வழங்குவதைவிட முட்டாள்தனம் உல கத்தில் எதுவுமே இருக்க முடியாது!” 

அருக்காணியின் கரத்திலிருந்த வாள் அவள் தலைக்கு மேலே உயர்ந்து பளபளத்தது! அவள் கண்களோ தீ ஜுவாலை யைக் கொட்டிக் கொண்டிருந்தன! 

“அருக்காணியம்மா, நான் சொல்வதைக் கேள்! நான் இப் படியொரு முடிவுக்கு வந்ததற்கே காரணம் என்ன தெரியுமா? அதைச் சொன்னால் நீ மிகவும் கலங்கிப் போய்விடுவாய் என்பதினால்தான். சொல்லத் தயங்கினேன். இப்போது அதை யும் சொல்லிவிடுகிறேன். நமக்குள்ளே ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்திக்கொண்டு என்னடா பெரிய வெற்றியென்று விரக்தியடைந்த நான் களத்தை விட்டு வெளியேறிவிட்டாலுங் கூட ஓரிடத்தில் நின்று நடப்பதைக் கவனித்தேன். வையம் பெருமான் வெட்டுண்டு பிணமாக வீழ்ந்ததைக் கண்டேன். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் வீரமலையின் பிணம் விழுந் தது. இறுதி வெற்றி உன் அண்ணன் சங்கருக்குத்தான் என்றா லும் களத்தில் தோற்றோடிய தலையூர்க்காளி மன்னன், சங்கரின் நெற்றியை அம்பால் துளைத்துவிட்டான். அதனால் சங்கரும் உயிரோடு இருப்பது சந்தேகமே! இந்தப் போரில் என் தந்தை செல்லாத்தாக் கவுண்டரையும் இழந்துவிட்டேன். இத்தனை கொடூர விளைவுகளைக் கண்டபிறகு இந்தக் குலப்பெருமை காத்திட உறவாடுவதற்கு ஓடோடி வருகிற என்னை வரவேற்பதற்குப் பதிலாக வசைபாடுவது நியாயமா?” 

என்னதான் மாந்தியப்பன் பாராங்கல்லொன்று பசுவெண் ணெய் போல உருகுவதாகப் பேசினாலும் அவனையும் அவன் பேச்சையும் அருக்காணி நம்புவதற்குத் தயாராக இல்லை. 

‘படுகளம் நோக்கிப் போகின்ற இந்தப் பாவையிடம் உன் பசப்பு மொழிகள் எவையும் எடுபடமாட்டா என்பதை அறிந்து கொள்! எனக்குற்றார் உறவினர், அருமை அண்ணன் சங்கர், அஞ்சாநெஞ்சத் தளபதி வீரமலை அனைவரும் காலமாகினர் அல்லது நாயமுற்றனர் என்பதை நான் நம்ப வேண்டுமென்ப தற்காக உன் தந்தையும் மாண்டுவிட்டதாகக் கதை கட்டுகிறாய்! களம் சென்றார் வீழ்ந்தார் எனும் சோகச் செய்தி கேட்டுச் சோர்ந்து விடுபவள் அல்ல தமிழச்சி என்பதறிந்தும் எஞ்சி யுள்ளோரையும் ஏன், இளம் மழலையையுங்கூட போருக்கு அனுப்பிவைக்கும் புலிக்குணம் கொண்டவள் என்றறிந்தும் எதற்காக இங்கு நடித்துக்கொண்டிருக்கிறாய்? நடுங்குகிறது உனது தேகம்! ஒடுங்கப் போகிறது உனது உயிர்! காட்டிக் கொடுக்கும் கயவர்கள் வாழ்ந்ததுமில்லை, அவர்களை நாங்கள் வாழவிடப்போவதுமில்லை! “

அருக்காணி போர்வாளை உயர்த்திக்கொண்டு மாந்தியப் பனை நோக்கிப் பாய்ந்தாள். ஆனால் அவன் தனது குதிரை யைத் தட்டிவிடவே, அது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவன் உயிரைப் பாதுகாத்துக் கொடுத்தது. தன் வாள்முனையிலிருந்து அவன் தப்பிவிட்டதைக் கண்ட அருக்காணி, தனது தோழி களுக்கு உடனடியாக ஆணை பிறப்பித்தாள் அவனை வளைத்து வீழ்த்துமாறு! 

தோழிகள் ஈட்டிகளையும், வாட்களையும் மாந்தியப்பனை நோக்கி வீசியும், குறி பார்த்தும் ஆவேசமாகப் போர் புரிந்த போது – அவனைச் சுமந்துகொண்டிருந்த குதிரை, வெறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது! அருக்காணியின் தோழிகள் விட வில்லை! துரத்திக் கொண்டே சென்றார்கள். அருக்காணி, மரகதக்கிளியை ஒரு கரத்திலும், வாளை ஒரு கரத்திலும் ஏந்தியவாறு மாந்தியப்பனைத் தனது தோழிகள் வளைத்துத் தாக்குவதைச் சினம் கொப்பளிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

மாந்தியப்பனின் குதிரை அவனது கட்டுப்பாட்டுக்கு அடங் காமல் திசைமாறி ஓடிற்று! எழும்பி எழும்பிக் குதித்தது! அவனைக் கீழே தள்ளிவிட்டுத் தான் மட்டும் எப்படியாவது தப்பிவிட வேண்டுமென்று தவியாய்த் தவித்துத் தடுமாறியது! களத்திலிருந்து தான் மட்டும் தப்பி வந்தால் போதுமென்று நினைத்து ஓடி வந்தவனின் குதிரைக்கும் அதே நினைப்புத்தான்! 

அருக்காணியின் தோழிகளோ அந்தப் பகுதியின் பாறைகள், புதர்கள், கற்கள், முட்கள், எவை பற்றியும் கலங்கிடாமல் மாந்தியப்பனை வளைத்து வீழ்த்த வேண்டுமென்பதிலேயே குறியாக இருந்தனர். ஒன்றிரண்டு ஈட்டிகள் குதிரையின் விலாப்புறத்திலும், தொடைப்பகுதியிலும் குத்தித் தாக்கவே குதிரை, முற்றிலுமாக மாந்தியப்பனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு ஒரு பாறையின் உச்சிக்கு ஓடி, அங்கு காலூன்ற இடமின்றி அவனோடு சேர்ந்து கீழே உருண்டது! 

குதிரையின் பிணம் – அதைக் கட்டிப் பிடித்துக்கொண்டு மாந்தியப்பனின் பிணம்! 

பாறையின் கீழே குருதி வெள்ளத்தில் மிதக்கும் மாந்தி யப்பனின் கண்கள் இறுதியாக மூடிக்கொண்டதைப் பார்த்துக் கலகலவென சிரித்தாள் அருக்காணித்தங்கம்! அந்தச் சிரிப்பின் ஒலி அங்குள்ள பாறைகளில் மரங்களில் எதிரொலித்தது. 

அந்தச் சிரிப்பினூடே, ஒரு கேள்வி! மாந்தியடபன் சொன் னது ஒருவேளை உண்மையாக இருக்குமா? தளபதி வீரமலை வீர மரணம் அடைந்திருக்கக் கூடுமா? வையம்பெருமானும் இந்த வையம் விட்டுச் சென்றாரோ? அய்யகோ, எனது சின்ன அண்ணன் சங்கருக்கு நெற்றிலே அம்பு துளைத்துவிட்டதா? இவையனைத்தும் உண்மையாக இருந்தால் நான் என்ன செய் வேன்? பெரியண்ணா பொன்னரையும் காணவில்லையே? ] அருக்காணி, தனது தோழிகளுடன் படுகளம் நோக்கி நடக்கலானாள்! 

வாள் வீரனைத் தேடி உத்தமி வீரமலை வனத்தில் 
வாரபோது 
ஆனை நெருஞ்சி முள்ளு அண்ணா அதிலே அடிவைத்து 
வாராளிப்போ! 
கோரிரண்டம் முள்ளு அந்த வனத்தில் குறுக்கே கணவாயாம் 
சில்லென்ற காடும் செடியும் வனாந்திரமும்
கல்லும் மலையும் அண்ணா அதைக் கடக்கவென்றால் வெகுதூரம்!
எண்ணாது எண்ணியேதான் உத்தமி புண்ணாய் மனது நொந்து, 
நான் ஒருத்தி வழிநடப்பதற்கு நீங்கள் உற்ற துணை வர வேண்டும் 
நான் பெண் பிறந்த பேதையெனக்கு பெரிய துணை வரவேணும்! 
நான் வனத்தில் நடப்பதற்கு நீங்கள் வாய்த்த துணை வரவேணும்! 
நான் காட்டில் நடப்பதற்கு நீங்கள் கடிய துணை வரவேணும்.” 

அருக்காணியுடன் அவள் தோழிகளும் அயர்வறியாது தொடர்ந்து நடந்தனர் படுகளம் நோக்கி! 

அண்ணியார்களைப் பறிகொடுத்த தங்கை அருக்காணி, வீரப்பூர் படுகளம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறாள் வீரப்பூர் களத்திலோ அன்புத் தம்பி ஆருயிர்த் தம்பி அணுப்பொழுதும் தன்னை விட்டு அகலாத அருமைத் தம்பி மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந் தர். அவர் வழி வந்தோர் பூனைகள் அல்லரீ புலிநிகர் தமிழ் மாந்தர் எனும் இலக்கணத்திற்கொப்ப வீரமரணத்தை வலுவில் அழைத்து வாரித் தழுவிக்கொண்டான் என்ற செய்தி, இவையனைத்தும் வழியிலே கிடைக்கிறது; போர்ப்படையுடன் வந்துகொண்டிருக்கும் பொன்னருக்கு! 

“தம்பி, தங்கை யாராயினும் பிறகு வந்து பார்த்துகொள்ளலாம் – முதலில் தலையூர் நோக்கிச் செல்லட்டும் படைகள்!” என ஆணை பிறப்பித்தான் பொன்னர்! 

அதற்கிடையே தலையூரில் காளி மன்னரின் ஆதிக்கத்திற் குட்பட்ட பதினெட்டு நாட்டுப் படைகளும் தலையூர் நகருக்கு வந்து குவிந்தன. 

முதலில் தலையூர் தலைநகரைக் காப்பது! பொன்னர் கொண்டு வரும் படைகளின் முற்றுகையைத் தகர்ப்பது! அதைத் தொடர்ந்து பொன்னரையும் அவனது படையையும் புறங்காட்டி ஓடச் செய்வது! ஓடும் பொன்னரை விடாமல் துரத்துவது! அவனை யும் வீழ்த்துவது! வளநாட்டு நிலப்பரப்பு முழுவதையும் தலை யூர் கொடிக்குக் கீழே கொண்டுவருவது! 

பதினெட்டு நாட்டின் தலைவர்களும் கூடிப் பேசி, பொன்ன ரைப் பொறியில் மாட்டவைக்கும் போர்த்திட்டத்தை வகுத்தனர். 

“பழிக்குப் பழி!” என்ற ஒரே வெறியுடன் பொன்னரின் படை தலையூர் நோக்கி! 

தணலில் தங்கமெனப் பாவையாள் அருக்காணி, படுகளம் நோக்கி! 

புலவர் பிச்சையின் – அண்ணன்மார் சுவாமி பாட்டிலிருந்து. 

59. தலையூர்ப் படுகளம்! 

‘பூத்தமரம் அத்தனையும் உத்தமியின் கண்ணீரைப் பார்த்து பூ உதிர்ந்து போய்விடுமாம்! காய்த்த மரம் அத்தனையும் கன்னிகையின் கனல் விழியைப் பார்த்து காய் உதிர்ந்தே போய்விடுமாம்! 

பழுத்த மரம் அத்தனையும் தங்கை அருக்காணி துயர்பார்த்து பழம் உதிர்ந்தே போய்விடுமாம்! 

(அங்கே) கூகை குளறுதம்மா கொடும்பாம்பு சீறுதம்மா! கூகையென்றும் பாராமல் குறிஞ்சி வனம்தான் பார்த்து மூங்கில் வனம் பார்க்க உத்தமி மிதித்தேறி வாராளே! (அதிலே) மூங்கில் நெறுநெறுங்க முதுகரடி அபயமிட எண்ணாது எண்ணியே என்ன செய்வாள் நல்லதங்கம்?” 

படுகளம் நோக்கித் தோழியருடன் அருக்காணித்தங்கம் ஆவேச மாக நடந்துகொண்டிருக்கும்போது, பொன்னரின் படையை எதிர்க்கத் தலையூர் தயாராகிக் கொண்டிருந்தது. காளி மன் னன் விடுத்த தாக்கீதையடுத்து அவனுக்குக் கட்டுப்பட்ட பதி னெட்டு நாட்டுப் படைகளும் தலையூரில் வெள்ளம் புகுந்தது போல் புகுந்துவிட்டன. பொன்னரின் முற்றுகையை எவ்வாறு தகர்க்க வேண்டும். எவ்வாறு பொன்னர் படையைத் துரத்தி யழிக்க வேண்டும், என்ற திட்டங்களை வகுத்துக்கொண்ட பதினெட்டு நாட்டுத் தலைவர்களும் தங்கள் தங்களின் அணி வகுப்புக்களுக்குத் தலைமை வகித்து அமராவதி நதிக்கரையின் நெடுகலும் படைகளை நிறுத்தி, தென்பகுதிக் கரையில் பொன் னர் படை வரும் பொழுதே அதனை அடியோடு அழித்துப் பிணங்களை அமராவதி ஆற்றில் தெப்பங்களாக மிதக்க விட வேண்டுமெனச் சூழ்ச்சி வகுக்கப்பட்டது. தலையூர்க்காளி வகுத் துள்ள போர் வியூகத்தைப் புரிந்துகொண்ட பொன்னர், தனது படை முழுவதையும் அமராவதிக் கரையில் கொண்டுபோய்க் குவிக்காமல் ஒரு பகுதியை மட்டும் ஆற்றங்கரை முற்றுகைக்கு அனுப்பி வைத்தான். 

அமராவதி ஆற்றில் தண்ணீர், கரை மோதிக்கொண்டு ஓடியது. கடந்து வருவதற்கென இருந்த நீண்ட நெடிய மரப் பாலங்களைத் தலையூர்க்காரர்கள் திட்டமிட்டுத் தகர்த்தெறிந்து விட்டனர். ஆற்றில் இறங்கி நீச்சலடித்துத்தான் அடுத்த கரையை அடைந்து, தலையூருக்குள் நுழைய முடியும். அதற்குள் கரை மேலிருந்து தலையூர்ப் படை வீசும் கணைகளையும், ஈட்டி களையும் சமாளிக்க வேண்டும். அவற்றையும் சமாளித்து ஆற்றையும் கடந்திட வேண்டும். அது மிகக் கடினமான காரியம் என்பதைப் பொன்னர் உணராமல் இல்லை. 

இருந்தாலும் சூழ்ச்சியைச் சூழ்ச்சியால்தான் முறியடிக்க வேண்டுமென்று தலையூர்ப் படைகளின் கவனத்தைத் திருப்பு கிற வகையில், தனது படையின் ஒரு பகுதி வீரர்களை அமரா வதி ஆற்றில் இறங்கி தலையூர் நோக்கி நீந்திச் செல்லுமாறு ஆணையிட்டான். அப்படி நீந்தத் தொடங்கியவர்களை ஆற் றின் வடபகுதிக் கரையிலிருந்த பதினெட்டு நாட்டுப்படைகளும் சுற்றி வளைத்து ஈட்டிகளையும் அம்புகளையும் வீசித் தாக்கி னர். நீச்சலடித்துக் கொண்டே பொன்னரின் படைவீரர்கள் வீசிய ஈட்டிகள் கரையிலிருந்த எதிரிகளைத் தாக்கின. மொத் தத்தில் அமராவதி ஆற்றின் தண்ணீர் செந்நீராக மாறி ஓடிக் கொண்டிருந்தது. பொன்னரின் படைகள் முன்னேறிக் கரை யேறித் தலையூரை நெருங்கி விடக் கூடாது என்பதிலே துடிப் புடன் செயல்பட்ட தலையூர்ப்படைத் தளபதிகளும் தலையூர் மன்னனும் ஆற்றில் ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் போதே பொன்னர் வேறு வழியாக தனது மற்றொரு பகுதிப் படையுடன் புயல் வேகத்தில் வருவதைக் கவனிக்கத் தவறி விட்டனர். புரவியிலேறிப் பறக்கும் பொன்னரைத் தொடர்ந்து அவன் வேகத்துக்குச் செல்ல முடியாமல் அவனது படையே கூடத் திணறியது! 

பொன்னரின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்! வளநாட்டை முற்றாக அழித்துத் தனது குலத்தை நாசம் செய்த தலையூர்க் காளியைப் பழி தீர்ப்பது! தலையூரைத் தரைமட்டமாக்குவது! இதனை எதிர்த்துக் குறுக்கிடுவோர் யாராயினும் அவனது வாளின் முன்னே சிதறுண்டு தூளாகிப் போவார்! அமராவதி ஆற்றில் படைகளுடன் இறங்கித் தலையூர்ப் பகுதிக்கு பொன்னர் வருவான் -சுலபமாக வளைத்துப் போட்டு ஆற்று நீரில் அவன் பிணத்தை மிதக்க விட்டு விடலாமென தோள்தட்டிக் கொண்டி ருந்தவர்களை ஏமாற்றி விட்டு பொன்னரின் புரவி வேறு வழி யாகத் தலையூர் நோக்கி அக்கினியாஸ்திரம் போல வந்து கொண்டிருந்தது. 

“வட்டமிட்டுத்தான் திரும்பி வருகுதே அப்புரவி 
வெட்டுவாத்துறை வழியாய் மதுக்கரையும் தான் கடந்து,
விண்பறந்து – மண்பறந்து – புரவி, மேகமெல்லாம் 
தட்டைய நாடும் தாராபுர நாடும் தாண்டி வரும். 
பள்ளிப் பொதிநாடு பருத்திப் பொதிநாடு 
வெத்திநாடு வேங்கலநாடு இவையெல்லாம் வெட்டியே 
ஆத்தூரு பின்னம் அடுத்த பவுத்திரமும் 
காங்கய நாடும் கருவூர்ப் பதிநாடும் 
பூந்துறை நாடும் புகழ் பெரிய நன்னாடும் 
ஓமல நாடு ஓங்கு புகழ் அறையநாடு
கிழக்கு வளநாடு கீர்த்தியுள்ள மேனாடு 
பெரிய மலையாளம் பெருந்துறையும் நன்னாடு
வேடுதளம் உள்ளதெல்லாம் 
பொன்னர் வெட்டித் தகர்த்தெறிந்து : 

பொன்னர், வெற்றிமேல் வெற்றி குவித்திட்டான். தலை யூர்ப் பகுதியில் மட்டும் வெகு தொலைவுக்கு அமராவதி ஆற் றின் கரையில் வேலிபோல் நிறுத்தப்பட்டிருந்த படையை ஏமாற்றி விட்டு, பலதிசைகளிலும் பொன்னர் படை நுழைந்து, அமராவதி நதியின் அக்கரைக்கு வந்துவிட்டது. ஆனால் அதற் காக வளநாட்டு வீரர்கள் பலரை அமராவதி ஆற்றுக்குப் பலி கொடுக்க வேண்டியிருந்தது. வேடுதளங்களில் இருந்து அம்பு களை மழை போலப் பொழிந்து எதிரியைத் திணற அடிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற தலையூர்ப் படை வீரர்கள், பொன்ன ரின் பலமுனைத் தாக்குதலைச் சந்திக்க முடியாமல் திக்குமுக் காடிப் போயினர். 

எரிமலை குமுறிக் கொண்டிருக்கிறவரையில் பரவாயில்லை, ஆனால் அது வெடித்துக் கிளம்பி வானோக்கி நெருப்புக் குழம்பை வாரி வீச ஆரம்பித்தபிறகு -அது, தானாக அடங்கு கிற வரையில், யார் போய் அதனை அணைத்து நிறுத்த முடியும்! அப்படித்தான் பொன்னர் நடத்திய போர் இருந்தது! குதிரை களோடு வீரர்கள் அவன்மீது பாய்ந்தனர் -எனினும் பாய்ந்த வேகத்தில் குதிரைகளும் அவர்களும் இருகூறுகளாக வீழ்ந்து மாய்ந்தனர்! அடுக்கடுக்காக பத்து, ஐம்பது, நூறு எனக் கணை கள் பொன்னரைச் சூழ்ந்து பறந்து வந்தன எனினும், அவை வந்த மாத்திரத்திலேயே பொன்னரின் வாள் பட்டுப் பொடிப் பொடியாகப் புழுதியில் மறைந்தன! வந்து வந்து தாக்கும். 

(புலவர் பிச்சையின் ‘அண்ணன்மார் சுவாமி” பாடலில் சிறு திருத்தங்களுடன்) 

வாட்களையும் ஈட்டிகளையும், ஏதோ வரவேற்பு விழாவில் தன்மீது பெய்திடும் மலர்களைப்போல அலட்சியப்படுத்தியவாறு சுழன்று கொண்டிருந்தான் அந்த மாவீரன் பொன்னர்! 

குன்றுடையார் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமை தந்தையின் வேதனை தாயாரின் துயரம் மாயவருக்கு நேராக ராக்கியண்ணருக்குத் தந்த வாக்குறுதி – ஏற்றுக் கொண்ட சூளுரை – தம்பி சங்கரின் அன்பு முகம் வீரமலையின் திரு வுருவம் – வையம்பெருமானின் வீழ்ச்சி -குப்பாயி மறைவு அருக்காணியின் கண்ணீர் இத்தனையும் பளீர் பளீர் எனப் பொன்னரின் இதயத்தில் தோன்றித் தோன்றி மறைந்தன! மறைந்து மறைந்து தோன்றின! பின்னர் மறையவே இல்லை! தோன்றியவை தோன்றியவைகளாகவே நிலைத்தன! 

அமராவதி ஆற்றங்கரையில் தலையூர்ப் படைகளும் நாட்டுப் படைகளும் தலைகளைப் பந்தாடி – கால்கைகளை வெட்டி உருட்டி – உயிரற்ற முண்டங்களை மிதக்க விட்டுக் கொண்டிருந்தபோது, பொன்னர், தனக்குத் துணையாக குறைந்த எண்ணிக்கையே உள்ள குதிரைவீரர்கள் சிலருடன் தலையூர்க் கோட்டை முகப்புக்கு வந்து விட்டான். ஊழிக் காலத்து அழிவு என்பார்களே. அதுவே ஓர் உரு எடுத்து வந்ததுபோல புரவியேறி வந்த பொன்னரின் வாள் வீச்சின் சுழற்சியை எதிர்கொள்ள எவராலும் இயலவில்லை. கோட் டைக்குள்ளும் நுழையப் போகிறான் பொன்னர் எனக்கேள்வி யுற்ற தலையூர்க்காளி தனது பதினெட்டு நாட்டுப் படைத் தலைவர்களையும் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து போர் முனையை மாற்றச் சொல்லி ஆணை பிறப்பித்தான். அனைத் துப்படைகளும் தலையூர்க் கோட்டையை நோக்கித் திரும்பின. 

அதற்குள்ளாக, பாய்ந்ததோ அல்லது, பறந்து சென்றதோ தெரியவில்லை – பொன்னரின் புரவி எப்படித்தான் தலையூர்க் கோட்டையின் முகப்புக் கொத்தளத்தில் ஏறி நின்றது என்று யாராலும் கணிக்க முடியவில்லை. அந்தப் புரவியின் மீது பொன்னர், வாளை ஓங்கிப் பிடித்த கையுடன் அமர்ந்து வெற் றிச் சிரிப்பு சிரித்தான்! ஆனால் அது, இதயத்தின் அடித்தளத் திலிருந்து பீறிட்டுக் கிளம்பிய மகிழ்ச்சியின் எதிரொலி அல்ல! ஆத்திரத்தின் முழக்கம்! ஆவேசத்தின் பேரொலி! 

என்னே ஆச்சரியம்! தலையூர்க் காவலன் காளி மன்னனும் அவன் பரிபாலனத்திற்குட்பட்ட பதினெட்டு நாட்டுத் தலைவர் களும் கோட்டையைச் சுற்றி நிற்கிறார்கள்! அந்தக் கோட்டையின் முகப்பின் மீதோ குதிரையிலமர்ந்து பொன்னர் கொக் கரிக்கிறான்! 

காளி மன்னனும் பதினெட்டு நாட்டுத் தலைவர்களும் தமது படைவீரர்களை நோக்கி, ‘உம்! வளைத்துக் கொள்ளுங்கள் பொன்னரை! அவன் வாளும் உடலும் துண்டு துண்டாகிற வரையில் விடாதீர்கள்!’ என வீர கர்ச்சனை செய்தார்கள்! 

ஆனால் பொன்னரோ, தன்னை நோக்கிச் சூழ்ந்து வரும் படை வீரர்களை நோக்கிப் பேசத் தொடங்கினான்! 

“உங்களை எதிர்க்க நான் அஞ்சவில்லை! உங்கள் அனை வரையும் அழித்தொழித்து விட்டுத்தான் இந்தத் தலையூரை விட்டு நான் திரும்புவேன்! என் கையிலிருக்கும் வாளைவிட வலிமை வாய்ந்தது என்னுள்ளம் என்பதை மறந்து விடாதீர் கள்! நான் அமர்ந்திருக்கும் புரவியின் வேகத்தைக் காட்டிலும் கோடிக்கணக்கான மடங்கு வேகத்துடனே உங்கள் படைகளின் மீது பாய்ந்து தாக்கும் பலம் எனக்குண்டு! இந்த சக்தி எனக்கு எப்படி வந்தது என்று கேட்கிறீர்களா? மாயத்தால் அல்ல- மந்திரத்தால் அல்ல மனிதன்தான் நான்! இந்த மனிதனுக்கு மட்டும் இவ்வளவு சக்தி எப்படி ஏற்பட்டது? பல நாள் பொறுமையின் விளைவு இது! சகித்துச் சகித்துப் பார்த்து இனி சகிப்பதற்கே இடமில்லை என்ற நிலையில் வெடித்துக் கிளம்பிய சக்தி இது! என் தந்தை தலையெடுக்கத் தொடங்கியது முதல் பங்காளிக் காய்ச்சலுக்கு ஈடு கொடுக்க எத்தனை கஷ் டப்பட்டார் என்பதை நீங்கள் எல்லாம் அறியமாட்டீர்களா? கொங்குச் சீமையில் வேளாளர்களும் வேட்டுவர்களும் ஒரு கொடியில் இரு மலர்களாய் ஒரு கிளையில் இரு கனிகளாய் குலுங்கிட வேண்டுமென்ற குறிக்கோளுக்கெதிராக – எங்கள் குலத் தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்புகள், தமது சுய நலம் -சுக போகம் – பதவி – பவிசு – அதிகாரம் – அந்தஸ்து – இவற்றையே -பதவி-பவிசு கொள்கைகளென வகுத்துக்கொண்டு, தமக்குச் சரியான துணை யென எதற்கும் தலையாட்டுகிற தலையூர்க்காளியைப் பயன் படுத்திக் கொண்டார்கள்! தனக்கொரு கண் போனாலும் எதி ரிக்கு இரு கண் போகவேண்டுமெனக் கருதுகிற கயவர்களின் சேட்டை, காலா காலத்திற்கும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது! அந்தக் கயமையின் உருவங்கள், ஆம், எமது பங் காளிக் கூட்டத்தார் -குழந்தைப் பருவத்திலேயே என்னையும் என் தம்பி சங்கரையும் தீர்த்துக்கட்டிவிடத் தலையூர்க்காளியிடம் தூபம் போட்டார்கள்! எங்களைக் காத்திடத் தன் குழந்தை களைத் தியாகம் செய்தார் எங்கள் குருநாதர் ராக்கியண்ணன்! இரு குலத்தாரின் மோதுதலைத் தவிர்க்க கேட்பார்புத்தி கேட்டுக் கருத்தழியும் காளி மன்னனின் செங்கோலை நிமிர்க் கப் பெரும்பாடுபட்ட பெரியவர் மாயவரோ இரு குலத்தார்க் கும் என்றென்றும் மறையாத மாணிக்க ஜோதியாகி விட்டார்! ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை! இப்பொழுது நான் பேசுவது, உங்களிடம் நியாயம் கேட்டு யுத்தத்தை முடித்துக் கொள்வதற்காக அல்ல! இனிமேல் என்னால் இந்த யுத்தத்தை நிறுத்த முடியாது! அதற்கென ஏற்பட்ட வாய்ப்புகளின் கதவு களையெல்லாம் எங்கள் குலத்தின் குணக்கேடர்கள் செல்லாத் தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் அடைத்து மூடிவிட்டு, அவர் களும் அழிவை அணைத்துக்கொண்டு விட்டார்கள்! வேட்டை யைத் தொழிலாகக் கொண்ட வேட்டுவர் குலம் வேளாண் மையைத் தொழிலாகக் கொண்ட வேளிர் குலம் இப்படிப் பல தொழிலில் ஈடுபட்டுப் பற்பலக் குலங்கள் இருப்பினும் எல்லாமே தமிழ்க் குலம்தான்! எம் குலம் மட்டுமல்ல, எல் லாக் குலத்தினருமே ராக்கியண்ணன் பாசறையில் பயின்றவர் கள்தான்! வள நாட்டுப் படை தலையூர்ப்படை என எதி ரெதிரே நிற்கின்ற இரு படையின் தலைவர்களுமே ராக்கி யண்ணனைக் குருநாதராக ஏற்றவர்கள்தான்! ஆனால் அந்தக் குருநாதருக்கே – அவரது கோட்பாடுகளுக்கே எதிராக குறுக் குச்சால் ஓட்டியவர்கள் யார்? செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் அல்லவா? அவர்கள் சொல்லுக்குச் செவி மடுத்துச் சிந்திக்க மறந்துவிட்ட இந்தக் காளிமன்னன் அல்லவா? என் கேள்விகள், அனுதாபம் பெறத் துடிக்கும் அற்பத்தன மான கெஞ்சல் அல்ல! இறுதியாக நான் நடத்தப் போகும் யுத்தத்திற்கு முன்பு, பதினெட்டு நாட்டுத் தலைவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை! காளி மன்னனுடன் சேர்ந்து நீங்கள் அழிந்து போவதற்குத் தயார் என்றால், உங்கள் படைகளும் உங்கள் நாடும் உங்கள் மக்களும் ஒழிந்து மறைந்து போவதற்குத் தயார் என்றால், என்னோடு போர் நடத்துங்கள்! காளி மன் னன், கடைசி நேரத்தில் யோசித்திருந்தால் கூட, அவனது பதினெட்டு நாட்டு மக்களை அழியாமல் பாதுகாத்திருக்க முடியும் அதையும் தவறவிட்டு அவனது வேட்டுவர் குலத் தின் பேரழிவுக்கே காரணமாகிவிட்டான்” என்ற அவப் பெய ருக்கு ஆளாகிவிட்டான் என்ற வருங்காலத்தின் கோபத்தை அவனது வரலாற்றில் இப்போதே செதுக்கி வைத்துக் கொள் ளத் தயாராகிவிட்டால் எனக்கு அக்கறையில்லை! நான் தயார்! தாக்குங்கள் என்னை! பதினெட்டுப் படைகளையும் பார்க்கிறேன் ஒரு கை! படு சூரணமாக்குகிறேன்!” 

பிரளயத்தின் பிரகடனமாகப் பொன்னர் பேசி முடித்ததும்- பதினெட்டு நாட்டுத் தலைவர்களும் அவனை வளைத்து எதிர்த்து அழிக்கப் போர் வெறி கொண்டு கிளம்பினார்களே தவிர, தலை குனிந்து தமது தவறுணர்ந்து அடங்கிப் போக விரும்ப வில்லை! 

ஆனால் அவர்களுக்கு முன்னால் அதிவிரைவாகக் குதிரையி லமர்ந்தவாறு வந்து நின்றான் தலையூர்க் காளி மன்னன்! 

“பதினெட்டு நாட்டுத் தலைவர்களே! நான் சொல்வதைக் கேளுங்கள்! பொன்னர் சொன்னது அனைத்தும் நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே! எதையும் மறுத்திடும் துணிவு எனக் கில்லை- என் மனச்சாட்சியை நான் மதிக்கிறேன்! வேட்டுவரும், வேளாளரும் அடியோடு அழியக் காரணமாக இந்த யுத்தம் அமைந்திட வேண்டாம்! சிறு பகையுண்டு இரு பிரிவார்க்கு மிடையே! அதனைப் பெரும் பகையாக வளர்த்த பெருமை யாருக்கு உண்டு என்பதைப் பொன்னர் சொல்ல எல்லோரும் கேட்டீர்கள்! எனவே, பதினெட்டு நாட்டுத் தலைவர்களும் படை வீரர்களும் படைக் கலன்களைக் கீழே போடுங்கள்! ஒன்று மட்டும் உறுதி! நான் ஏதோ பொன்னரிடம் உயிர்ப் பிச்சை கேட்டு மண்டியிடப் போவதாக மட்டும் நினைத்து விடாதீர்கள்! பொன்னரின் சக்திக்கும் ஆற்றலுக்கும் நானொன் றும் சளைத்தவனல்ல! ஆனால் இந்த யுத்தம் நானும் பொன் னரும் மட்டும் தனித்து மோதி அத்துடன் முடிய வேண்டும்! இருவர் மட்டுமே போரிடுகிறோம் இந்தப் போரில் நான் வீழ்ந்தால் தலையூரில் வளநாட்டுக் கொடி பறக்கட்டும்! பொன்னர் வீழ்ந்தால் வளநாட்டில் தலையூர்க் கொடி பறக்கட்டும்! எப்படி யிருந்தாலும் எங்கள் யுத்தம் தவிர்க்க முடியாதது! இந்தக் கீட்டத்தில் சமாதானம் என்பது என் மானத்திற்கு விடப்படும் அறைகூவலாகி விடும்! பொன்னரும் தனது சபதத்தை நிறை வேற்ற என்னை எதிர்ப்பது என்பது கட்டாயமாகிவிட்ட ஒன்று! எனவே இருவரும் எங்கள் முடிவை இங்கே நிர்ணயித் துக் கொள்கிறோம்! இருதரப்பிலும் உள்ள மற்றவர்கள் ஒதுங் கிக்கொள்ளுங்கள்! எங்கள் கைகளில் உள்ள படைக்கலன் களுக்கு மட்டுமே இனி வேலை!” 

இப்படி உரக்கக் கூறிக் கொண்டு, தனது குதிரையைப் பொன்னர் மீது தட்டிவிட்டான் காளி மன்னன்! இரு வீரர் களும் புரவிகளில் இருந்தவாறே வாட்போர் புரிந்தனர்! பின் னர் அவற்றிலிருந்து இறங்கி – கோட்டை முகப்புக் கொத்தளத் தில் பல்வேறு ஆயுதங்களை ஏந்திப் போரிட்டனர்! பின்னர் ஆயுதங்களின்றி ஒருவரைத் தூக்கியொருவர் பந்தாடிப் போரிட் டனர்! பொன்னரின் குரல்வளையைப் பிடித்து நெறித்துக் கோட்டை முகப்பிலிருந்து கீழே உருட்டிவிடப் போகிறான் காளி மன்னன் என்ற ஒரு கட்டத்தில் வளநாட்டு வீரர்கள் வாய்விட்டலறிவிட்டனர். ஆனால் முடிவு நேர்மாறாக அமைந்தது! பொன்னர், காளி மன்னனை ஒரு உதை கொடுத்துக் கொத்த ளத்திலேயே கீழே தள்ளி விட்டான். விழுந்த காளி மன்னன் மீண்டும் ஒரு வாளை எடுத்துக்கொண்டு பொன்னர் மீது பாய்ந்தான்! அதற்குள் பொன்னரின் கையில் ஒரு வாள்! அந்த வாள் தலையூர் மன்னனின் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு மிக ஆழத்தில் இறங்கிவிட்டது! தலையூரானின் தலை சாய்ந்தது! நிலை தடுமாறினான்! இமைகள் மூடத் தொடங்கின!அவன் கை வாள் கீழே விழுந்தது! கடைசி மூச்சு விடுவதற்கு முன்பாக, தனது கையை மெதுவாக நீட்டி, பொன்னரின் கையைக் குலுக்கினான் காளி மன்னன்! பொன் னரும் கண்கலங்கிட, காளி மன்னனின் கையைக் குலுக்கி னான்! இருவரும் தழுவிக் கொண்டனர்! சவமாகி விட்ட தலையூர்க் காளி மன்னனை அந்தக் கொத்தளத்துப் பீடத்தி லேயே மெல்லப் படுக்க வைத்தான் பொன்னர்! 

60. படுகளம் முடிவு 

படுகளம் வந்தடைந்த அருக்காணியின் கண்கள் அண்ணன் சங்கர் எங்கே எங்கேயென்று சுழன்றன. வையம்பெருமான் வீழ்ந்து கிடக்கும் கோரக் காட்சியைக் கண்டாள். தனக்குத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லாவிடினும் தன்னை மணந்துகொள்ள விரும்பியவன் மணக்கோலத்திற்குப் பதிலாகப் பிணக்கோலம் பூண்டிருப்பது காண அவள் நெஞ்சை ஏதோ ஒரு உணர்வு அடைத்ததால் திகைத்து நின்றாள்.மேலும் நடந்தபோது செல்லாத்தாக் கவுண்டரின் உடல் உயிரற்றுக் கிடந் ததைக் கண்ணுற்றாள். எல்லாமே இவரது இதயத்தில் கொழுந்து விட்டெரிந்து துரோகத்தீயின் விளைவன்றோ என எண்ணிய போது அருக்காணியின் சுவாச கோசங்களிலேயிருந்து நெருப் புப் பெருமூச்சுதான் வெளிப்பட்டது. அங்கிருந்து தொலைதூரத் தில் வீரமலை, தனது உடலெங்கும் அம்புகளும் ஈட்டிகளும் தைத்திருக்கக் களச்சாவென்னும் புகழ்ப் படுக்கையில் சயனித் திருப்பதைப் பார்த்தவுடன் அவளையறியாமல் அலறிவிட்டாள். அண்ணன்மார் இருவர்மீதும் அவள் கொண்டுள்ள பாசத்திற்கு சிறிதும் குறைந்ததல்ல, அவள் வீரமலையின் மீது வைத்திருந்த பாசம். 

சோழன் தோட்டியென்னும் வீரமலையின் தந்தையும் – அவனது பாட்டனாரும் குன்றுடையார் பரம்பரையின் பற்றுக் குறை யாத ஆதி திராவிடப் பெருமகன்கள் அல்லவா? அவர்கள் வழி வந்த வீரமலை வேறு, பொன்னர் சங்கர் வேறு, என்ற வித்தியா சமே பாராட்டாத நிலையில் அந்தக் குடும்பபாச உணர்வு கொடி கட்டிப் பறந்ததல்லவா? 

குன்றுடையார் குடும்பத்துக்காகத் தான் ஆற்றிட வேண்டிய கடைசிக் கடமையையும் ஆற்றி முடித்தாயிற்று என்ற நிம்மதியுடன் வீரமலை நீள் துயில் கொண்டிருப்பது போலவே இருந்தது! 

வீரமலைக்குச் சற்று அருகாமையில் பீடம் போன்ற ஒரு பாறைச் சரிவில் நெஞ்சில் பாய்ந்த வாளுடன் சிரித்த முகத் துடன் சாவை அணைத்துக்கொண்டு படுத்திருந்தான் சங்கர்! 

“சின்ன அண்ணா!’ என்று கதறினாள் அருக்காணி அவளு டன் வந்த தோழிகளும் கதறியழுதுவிட்டனர்! அந்த ஒலி வீரப் பூர் படுகளம் முழுவதும் எதிரொலித்தது! 

சங்கரின் உடல் மீது விழுந்து புலம்பினாள். அந்தப் புலம்பல் – இன்னமும் வீரமலைப் பகுதியில் – வீரப்பூர் படுகளப் பகுதி யில் – ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. 

“ஆனை போல் நீ இருந்து அண்ணா அரசாளும் அரண்மனையில்
பூனை போல் நானிருந்து புலம்புகிறேன் பாரண்ணா!
தென்னை நிறைந்திருக்கும் அண்ணா தெரு வீதி பூத்திருக்கும்!
தென்னை தலை சாய்த்தே என் பிறவி சோர்ந்து விழப் போனீரே! 
மஞ்சள் வளர்ந்திருக்கும் சின்னண்ணா மருதாணி பூத்திருக்கும் 
வயல் எல்லாம் நெல் வளரும் சின்னண்ணா வாடுகிறேன் நான் தனியாய்! 
இஞ்சி வளர்ந்திருக்கும் சின்னண்ணா எலுமிச்சைக் குலுங்கி நிற்கும்
இளங்கொடியாள் நான் தனியே இங்கிருந்து புலம்புகிறேன்!
ஊரெங்கும் பட்டாளம் சின்னண்ணா ஓடி வந்த வேடுதளம்
ஓடி வந்த வேடுதளம் அண்ணா நீ ஒரு நொடியில் சாய்த்தாயே! 
நாடெல்லாம் பட்டாளம் சின்னண்ணா,
நடுங்கி வந்த வேடுதளம்! 
நடுங்க வந்த பகைவரையே அண்ணா, நலிவடையச் செய்தாயே! 
குப்பாயி சிறை பிடித்துக் கொள்ளையிட்ட கொடியவரை 
தப்பாமல் சங்கரித்து சின்னண்ணா 
தவிடு பொடி செய்தாயே! 
பச்சனா முதலி மகள் சின்னண்ணா, பருவமுள்ள குப்பாயி 
பக்கம் அழுத குரல் 
உன்னைப் பதைபதைக்க வைத்ததுவே! 
ஒக்கப் பிறக்கணுமா? சின்னண்ணா, ஒருதாய் 
முலைப் பால் பருகணுமா? 
பக்கம் ஒரு பெண்ணழுதால் உன் பட்டாளம் சீறுமண்ணா! 
தனித்துப் பிறந்த அண்ணா தனியொருத்தி வேறுபட்டேன்!
தண்ணீர்த் துறையிலேதான் அண்ணா தனிப்பிரிந்த மானது போல் 
உங்களைப் பிரிந்து அண்ணா உயிர் துடித்து வாழ மாட்டேன்! 
தங்கம் நல்ல தங்கம் இனித் தவிதவித்து வாழ மாட்டேன்!” 

அருக்காணித் தங்கத்தின் உள்ளத்தில் ஏதோ ஒரு உறுதி – ஆம் – இனி வாழத் தேவையில்லை என்ற உறுதி சின்ன அண்ணன் சங்கரை இழந்துவிட்டதற்கு யார் வந்து என்னதான் ஆறுதல் கூறினாலும் – அந்த இனிய சகோதரனின் பிரிவைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவுக்கு அவளது இதயம் வலிமை வாய்ந்ததாக இல்லை! அதைவிடத் தனது உயிரைப் போக்கிக் கொள்வதில் அவள் தைரியமாக இருந்தாள். எனவே அந்த உறுதிதான் அவளது மனத்தில் எந்த சக்தியாலும் அசைக்க முடியாத பலம் பெற்றுப் பேருருக் கொண்டது. 

பாறையில் பட்டு விரித்து அமர்ந்து மானமறவன் என்பதை விளக்க மார்பை நிமிர்த்தித் தனது போர்வாளுக்குத் தன்னுயி ரைப் பரிசாக அளித்துவிட்ட சங்கர் சவமாகப் படுத்திருக்கும் அந்தக் காட்சி அருக்காணித் தங்கத்தை அளவுக்கு மீறி உருக்கி விட்டது. 

அஞ்சடுக்குப் பஞ்சு மெத்தை சின்னண்ணா, உனக்கு அது மேல் தூளி மெத்தை! 
பஞ்சு மெத்தை மேலிருக்க அண்ணா நீ மெத்தை அழுந்துதென்பாய்! 
மெத்தை அழுந்துதென்பாய், உன்மேனியெல்லாம் நோகுதென்பாய்! 
நித்திரையும் வல்லை யென்று அண்ணா நீ நிட்டூரம் சொல்லுவாயே! 
பூமியிலே சவமிருந்தால் மேனியிலே புழுதி அணையுமென்று
பாறைமேல் பட்டு வைத்து அண்ணா – அதன்மேல் பாங்காக மண்டியிட்டு,
கல்லின் மேல் பள்ளி கொண்டு அண்ணா நீ கண்ணுறக்கம் ஆனாயோ? 

நல்லதங்கம் அருக்காணியின் புலம்பலினூடே குதிரைகள் பல விரைந்து வரும் குளம்படி ஓசை வீரப்பூர் படுகளத்தை மேலும் அதிரச் செய்தது. தொலைவில் வரும் குதிரைகளின் முழு உருவங்கள் தெளிவாகத் தெரியாத நிலையில் அந்தக் குதிரைகள் கிளப்பும் புழுதி மண்ணில் படுகளம் நோக்கி வரு வோர் யார் எனச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் அருக்காணித் தங்கம், தனது வாளைக் கையில் எடுத்துக் கொண்டு எதிர்ப்புக்குத் தயாரானாள். அவளது தோழிகளும் போர் புரியத் தயாராகிவிட்டனர். 

சோகத்தின் சுமை தாங்கமுடியாமல் தத்தளித்த போதிலும் – வீரக்குலம் விளங்க வந்தவர்கள் ‘அந்த வீராங்கனைகள் என் பதை மெய்ப்பிப்பது போல எதிர்வரும் அணிகளின் வரவு நோக்கி ஓங்கிய வாட்களுடனும், வேல்களுடனும் நின்றனர். குதிரைகளின் குளம்படி ஓசையோ ஆயிரம் முறை இடை விடாது உறுமும் பேரிடிகளின் தொகுப்பு ஓசையாகச் செவி களைப் பிளந்து கொண்டிருந்தது! எனவே வருவது மிகப் பெரும்படைதான். அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது இயலாத ஒன்று எனினும் அண்ணன் சங்கருக்குப் பக் கத்தில் வீர மரணமடைந்து விழலாம் என்ற பெரும் திருப்தி அருக்காணிக்கு! 

தொலைவில் கேட்ட அந்த ஒலி, படுகளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அருக்காணி, தனது தோழிகளைப் பார்த்து “உம்! தயாராகிக் கொள்ளுங்கள்! வெற்றி அல்லது சாவு! இரண்டுமின்றி எதிரிகளிடம் சிக்கிக் கொண்டால், ஒரு பெண் ணின் கதி என்ன ஆகும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு போரிடுங்கள்!’ என முழக்கமிட்டாள். அவளும் அவள் தோழி களும் அந்தக் குதிரைப் படை வருகிற ஓசையைக் கவனித்துக் கொண்டிருந்தபோது – தன்னந்தனியாக ஒரு குதிரை அந்தப் படுகளத்தை நோக்கி விரைந்து வந்து கொண் டிருந்ததைப் பார்க்கத் தவறிவிட்டார்கள்.அவர்கள் பார்க்கவில்லையே என் பதற்காக அந்தக் குதிரை, படுகளத்திற்குள் நுழையாமல் வேறு பாதையாகச் சென்று விடவில்லை. 

தனியாக வந்து கொண்டிருந்த அந்தக் குதிரையில் பொன் னர் அமர்ந்திருந்தான்! குதிரை படுகளத்திற்குள் வந்துவிட்டது! இப்போதுதான் அருக்காணி தனது பெரிய அண்ணனைப் பார்த்தாள்! சிறிது தொலைவில் நெருங்கிக்கேட்டுக்கொண்டிருந்த குதிரைகளின் ஓசையில் இப்போது அவள் மனம் செல்லவில்லை! 

பொன்னரைக் கண்டவுடன் “அண்ணா!” எனத் தாவிப் பாய்ந்து அவன் கால்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். பொன்னர், தன் அன்புத் தங்கையை ஆரத் தழுவி மெல்லத தூக்கித் தனது நெஞ்சோடு அணைத்துக்கொண்டு படுகளத்தை அங்கிருந்தவாறே பார்த்தான். சங்கர், வீரமலை, வையம்பெரு மான், இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் மடிந்து கிடக்கும் அந்தக் கொடுமையான காட்சியைக்கண்டு அவன் கண்ணீர் வடிக்கவில்லை. தனது துக்கத்தை வெளிப்படுத்தினால் தனது தங்கை அருக்காணியின் நெஞ்சம் வெடிக்கும் எனவே அவ ளையும் இழந்துவிட அவன் தயாராக இல்லை! அருக்காணி யின் உச்சந்தலையில் தனது முகத்தைப் பதிய வைத்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல்மொழி கூறினான். 

“அருக்காணீ! அரச பரம்பரைகள் என்றால் போர் செய்து தான் தீரவேண்டுமென்று கட்டாயமில்லை! அந்தத் தேவையில் லாமலே அரசுகள் நடக்கலாம்! ஆனால், தேவையில்லாதது என்று நாம் எண்ணுகிற யுத்தம், சில சமயங்களில் தவிர்க்க முடியாததாகிவிடுமேயானால் வீரர்கள் அதனைப் புறக்கணித்து ஒதுங்கிவிட முடியாது! வீரர்கள் என்பவர்கள் ஏதோ படைப் பிரிவுகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள் அல்ல! மான் உணர்வுக்குத் தங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பவர் கள்! அப்படிப்பட்டவர்கள் வலியவரும் யுத்தத்தைக் கண்டு மிரளமாட்டார்கள்! மிரளக் கூடாது! அத்தகைய யுத்தங்களில் வெற்றி தோல்வியென்பதுகூட முக்கியமில்லை! களத்தில் காட்டப்பட்ட மான உணர்வுமிக்க வீரம்தான் முக்கியம்!அப் படியொரு வீரமரணத்தைத் தலையூர்க்காளி தழுவிக் கொண்டு விட்டான்! நான் நடத்திய சமருக்கு வெற்றி! செய்த சபதத் திற்கு வெற்றி! இருந்தபோதிலும் தோற்றுப்போய்க் களத்தில் வீழ்ந்துவிட்ட தலையூர்க் காளியின் வீரத்தை மதிக்காமல் போற்றாமல் இருக்க முடியாது! ஒரு போரின் வெற்றிக்கோ – தோல்விக்கோ பல உயிர்களை விலையாகக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது! இதோ வீழ்ந்து கிடக்கிற இருதரப்பு வீரர் களையும் பார்க்கும்பொழுது அவர்களில் ஒருவனாகத்தான் தம்பி சங்கரை நான் கருதவேண்டும்! வீரமலையை வையம் பெருமானை -நான் அப்படித்தான் கருத வேண்டும்! நமது வளநாட்டுக்காக உயிர் கொடுத்த வீரர்களின் பெயர்கள் ஆம், பலரது பெயர்கள் பிரபலமானவைகளாக இல்லாமல் இருக்கலாம்! ஆனால் சொந்த மண்ணின் மானங்காக்க உயிர் கொடுத்த எல்லா வீரர்களையும் நான் என் தம்பி சங்க ராகத்தான் கருதுகிறேன்! அருக்காணி! நீயும் என்னைப்போலத் தான் கருத வேண்டும் – இந்தப் படுகளத்தில் உயிரற்றுக் கிடக் கும் எண்ணிறந்த உடல்களில் சங்கரின் உடலுக்கு மட்டும் தனித்தன்மை காட்டி அழுது புலம்புவது சரியல்ல! இப்படி நான் சொல்வதால் சங்கராகட்டும், வீரமலையாகட்டும், வையம் பெருமானாகட்டும், எல்லாருடனும் சேர்த்து எண்ணக்கூடிய சராசரியான வீரர்கள் என்று அர்த்தமல்ல! பேராற்றல் பெற்ற போர்வீரன் என் தம்பி சங்கர் அதனால்தான் தலையூர்க் காளியை யுத்த களத்தை விட்டே அவனால் ஓடச் செய்ய முடிந்தது! இருப்பினும் நமது நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களில் அவனும் ஒருவன் என்ற பட்டியலில் தானே இடம் பெறுகிறான்! அவனுக்கு நானோ, அல்லது நீயோ தனி முக்கியத்துவம் அளித்துத் துக்கப்பட்டால் – இந்தப் படுகளத் தில் சிதறிக் கிடக்கும் இத்தனை வீரர்களுக்காகத் துயரப்பட யார் இருக்கிறார்கள்? அதனால் மனதைத் தேற்றிக் கொள்! எந்தச் சபதத்தை நிறைவேற்றச் சங்கர் என்னுடன் இணைந்து தோள் தட்டினானோ, அந்தச் சபதம் நிறைவேறிவிட்டது! ஆறுதல் பெறு அருக்காணி!” 

இவ்வாறு பேசிக்கொண்டிருந்த பொன்னரின் முகத்தைத் திடீரெனத் திகில் கப்பிக் கொண்டது. தன் தங்கையின் தலை மீது பதித்திருந்த தனது முகத்தைத் தூக்கி அவளைக் கூர்ந்து பார்த்தான். அவளை அணைத்திருந்த தனது கரங்களை முழு மையாக அல்ல, மெல்லத் தளர்த்திப் பார்த்தான். அருக் காணி, அவனது அணைப்பிலிருந்து கீழே சரிந்து கொண் டிருந்தாள். மீண்டும் அவளைப் பொன்னர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அருக்காணி!’ என்று நிதானமாகக் கூப் பிட்டுப் பார்த்தான். அவள் எப்போது அண்ணா என்று அலறி அவனைக் கட்டிப் பிடித்தாளோ – அப்போதே அவள் உயிர் அவளது உடலை விட்டு நீங்கியதை, இப்போதுதான் பொன்னரால் உணரமுடிந்தது! 

அருக்காணிக்கு அவ்வளவு ஆறுதல் சொன்னவனுக்கு இந்த நிலையில் யார் ஆறுதல் சொல்வது? 

அவன் கண்களில் நீர் இல்லை முகம் மட்டும் கறுத்துப் போயிற்று! தரையில் கிடக்கும் தங்கத் தங்கையின் முகத்தையும், தம்பியின் முகத்தையும், வீரமலை முகத்தையும், வையம்பெரு மான் முகத்தையும் படுகளத்தில் சிதறிக் கிடந்த வீரர்களின் முகத்தையும் பார்த்தான். தன்னருகே நின்ற தனது குதிரையைத் தட்டிக் கொடுத்தான். தனது வாளை எடுத்து சிறிது தொலை வில் பூமியில் நட்டான். கைப்பிடி தரையிலும் வாளின் முனை வான்நோக்கியும் இருக்குமாறு நட்டான். 

சிறிது தூரம் நடந்து வந்தான் “எல்லாம் போய்விட்டது! பங்காளிக்காய்ச்சல் – பதவிக்காக நடத்தப்பட்ட துரோக நாடகம் – இவைகளால் எல்லாமே போய்விட்டது!” என்று சொல்லிக் கொண்டே பொன்னர், அந்த வாளின் முனை மீது பாய்ந்தான் – ஆனால், அவன் அப்படிப் பாய்வதற்குள், அந்த வாளைக் கையில் எடுத்துக் கொண்டு அக்களதேவச் சோழர் அவன் எதிரே நின்றார்! 

குதிரைகளின் குளம்படி ஓசை பெரிதாகக் கேட்டதே உறையூர்ச் சோழரின் படை வரிசை கிளப்பிய ஓசைதான் அது என்பது – அங்கிருந்தோருக்குப் புரிந்தது! 

“சோழ மன்னரா? என்ன இது? என்னை ஏன் தடுக்கவேண் டும்? இவ்வளவுக்கும் பிறகு நான் ஏன் வாழ வேண்டும்?’ 

பொன்னரின் இந்தக் கேள்விக்குப் பதிலாக ஒரு சோக இழையோடும் புன்னகையை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டு அக்களதேவச் சோழர், பொன்னரைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். 

“வீரத்தம்பி! நிலைமையை விளக்கி சோழ நாட்டு உதவி யைக் கேட்டிருந்தால் எளிதில் தலையூரைப் பணிய வைத்திருக் கலாமே! இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்காதே! பரவாயில்லை, நடந்தது நடந்து விட்டது! மேலும் விபரீதம் நடக்கக் கூடாது என்றுதான் நானே படையுடன் நேரில் வந்தேன்! உன் உற்றார் உறவினர் தம்பி தங்கை வீரர்கள் மாண்டுள்ளனர் இந்தப் போரில்! உன்னை நம்பி மக்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே! வேட்டுவ குலத் தலைவர்கள் பதினெட்டு நாட்டுக்காரர்களையும் நண்பர்களாகப் பெற்று கொங்கு வேளிர் ஆட்சியை வளநாட்டு மண்ணில் மீண்டும் தொடர என்றைக்கும் சோழ அரசு உனக்குத் துணை நிற்கும்! உன் வெற்றியைப் பிர கடனப்படுத்தும் இடம் தலையூர்! உன் தம்பியின் மானமிகு வீரத்தையும் – உன் படை வீரரின் ஆற்றலையும் உன் தங்கை யின் பாசத்தையும் பிரகடனப்படுத்தும் இடம், இந்தப் படுகளம்! இந்த நினைவுகள் என்றும் அழியாமல் பசுமையாகக் காக்கப்பட, உன் ஆட்சி தொடரட்டும்! இது என் வேண்டுகோள்! உன்னை நானும் இந்த நாடும் பொன்னர் எனத் தனித்துப் பெயர் கூறி அழைக்கமாட்டோம், “பொன்னர் சங்கர்” என்றுதான் அழைப்போம்! 

பொன்னர் பதில் ஏதும் கூறாமல் சிலை போல நின்றான்! 

சோழர் படையினர் “பொன்னர் சங்கர் வாழ்க!” என பேரொலி எழுப்பினர். 

61. பழைய கதையும் புதிய வரலாறும்!

அன்புள்ள 

வாசகப் பெருமக்களுக்கு! 

வணக்கம். 

ஓராண்டு காலத்திற்கு மேலாக ‘குங்குமம்” இதழில் நான் எழுதி வந்த “பொன்னர் சங்கர் (அண்ணன்மார் வர லாறு) தொடர்கதை கடந்த வாரத்துடன் முற்றுப்பெற்றுள்ளது. கவிஞர் சக்திக்கனல் அவர்கள் தொகுத்து வெளியிட்டதும், புலவர் பிச்சை அவர்கள் எழுதியதுமான அண்ணன்மார் சுவாமி கதை என்ற நூலிலும் வேட்டாம்பாடி திரு.அ. பழனிசாமி அவர்கள் எழுதிய “வரகுண்ணாப் பெருங்குடிக் கூட்டம் பொன்னர் சங்கர் வரலாறு” என்ற நூலிலும் உள்ள கதைக் குறிப்புக்களை இப்போது உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.இந்தத் தொடர்கதையின் தொடக்கத்தில் நுழை வாயில் என்ற தலைப்பில் இந்த வரலாற்றுக்கான பின்னணி குறிப்புகளையும் கருத்துக்களையும் விளக்கமாக வழங்கியிருக் கிறேன். அறுபது வாரங்களுக்கு மேலாக ஒரு வரலாற்றுப் புதினமாக நான் எழுதியுள்ள இந்தத் தொடர்கதைக்கு முன்ன தாக தமிழகத்தில் புழக்கத்தில் இருந்துவரும் பழைய கதையின் சுருக்கம் என்ன என்பதை உங்கள் முன்வைக்கிறேன். வேட் டாம்பாடி பழனிசாமி அவர்களும், புலவர் பிச்சை அவர் களின் அண்ணன்மார் சுவாமி பாடல்களைத் தொகுத்து வெளி யிட்ட கவிஞர் சக்திக்கனல் அவர்களும் தந்துள்ள இணைந்த கதை அம்சம் பின்வருமாறு 

வாங்கலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் கோளாத்தாக் கவுண்டர். இவர் ஒரு சிற்றரசனைப் போல் வாழ்ந்தவர். இவரது மனைவி பெயர் பவளாத்தா. மதுக்கரை என்னுமிடத்தில் செல்லியம்மனுக்கு கோயில் எடுத்தவரும், வெள்ளாங்குளம் ஏரியைக் கட்டியவரும் இவரே. அப்பொழுது சேர, சோழ,பாண்டிய அரசர்களுக்குள் எல்லைத்தகராறு இருந்தது. இந்தத் தகராறைத் தீர்த்துக் கொள்ள மூன்று அரசர் களும் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் கூடிப் பேசி னார்கள். இவர்கள் மூவருக்கும் இடையே அமர்ந்து சமரசம் பேசி, சிக்கலைத் தீர்த்து வைத்தவரும் கோளாத்தர்தான். இத னால் மகிழ்வுற்ற சோழ அரசன் கோளாத்தருக்கு திருக்காம் புலியூருக்கு அருகில் 70 வள்ளம் பூமி கொடுத்து மணியம், கணக்கு அதிகாரமும் கொடுக்கிறான். 

கோளாத்தாக் கவுண்டர் மகன் நெல்லியங்கோடன், வரத் தால் பெற்றெடுக்கப்பட்டவன். சாந்த குணம் கொண்டவன். சுயநலம் இல்லாதவன். பரம சாதுவான இவன் மசச்சாமி என்றும் அழைக்கப்பட்டான். 

இவனது வெகுளித்தனத்தைக் கண்டு பெற்றோர் பெரும் துயர் அடைகின்றனர். இதனால் கோளாத்தாக் கவுண்டர் தனது தம்பி செல்லாத்தாக்கவுண்டரையும், குடும்ப வேலை களைச் செய்து வந்த சோழன் தோட்டியையும் அழைத்து தனது மகனை வளர்த்து ஆளாக்கி, பவளாத்தாவின் பிறந்தக மான மணியங்குரிச்சி. (ஆரிச்சம்பட்டி) மலைக்கொழுந்தார் வீட்டிலுள்ள உரிமைப் பெண் தாமரைநாச்சியை, நெல்லியங் கோடனுக்கு கட்டி வைக்குமாறு உறுதிமொழி வாங்குகிறார்! பிறகு உறையூர் சோழ அரசன் மணியமாக அளித்த பொறுப்பை அந்த அரசனிடமே ஒப்படைத்துவிட்டு காலமாகிறார். 

இதன்பிறகு பங்காளிகள் அனைவரும் சேர்ந்து நெல்லியங் கோடனுக்கு பலவித தொல்லைகள் கொடுக்கின்றனர். தொல்லை பொறுக்கமுடியாத நெல்லியங்கோடன், அங்கிருந்து தப்பி, மணியங்குரிச்சிக்கு ஓடுகிறான். அங்கு நெல்லியங்கோடனை அன்புடன் உபசரிக்கின்றனர். ஆடுகளை மேய்த்து பட்டியில் அடைப்பது அவன் வேலை. ஒரு நாள் பட்டியில் ஆட்டுக் குட்டி ஒன்று குறையவே பண்ணை காரியஸ்தன் அவனை சவுக்கால் அடிக்கிறான். நெல்லியங்கோடன் திரும்பவும் தனது பங்காளிகளிடம் ஒட அவர்களும் அவனை அங்கே தங்க விடாது அடித்து விரட்டுகின்றனர். கடைசியில் அவன் ஆதிச் செட்டிப்பாளையம் செட்டியார் ஒருவரது வீட்டினை அடைகிறான். 

பங்காளிகள் நெல்லியங்கோடன் தொலைந்து போனது போல்தான் என்று அவனது சொத்துக்களையும் தனதாக்கிக் கொள்கிறார்கள். நெல்லியங்கோடனின் சிற்றப்பனான செல் லாத்தாக்கவுண்டர் தனது மகனுக்கு தாமரை நாச்சியை மண முடிப்பது என்று முடிவெடுக்கிறார். மலைக்கொழுந்தாரும் தனது மகளை செல்லாத்தாக்கவுண்டர் மகனுக்கு கொடுப்பது என்று முடிவெடுக்கிறார். 

இது விஷயம் சோழன் தோட்டிக்கு தெரிய வர, அவன் நேரே நெல்லியங்கோடனிடம் சென்று செய்தியைத் தெரிவிக் கிறான். உடனே இருவருமாக மணியங்குரிச்சிக்குச் செல்கிறார் கள். மணப்பெண் இருக்கும் வீட்டினருகில் வந்து பிச்சை கேட்கிறான் நெல்லியங்கோடன். அவன் அத்தை ஒருபடி கம்பு போடும்படி சொல்கிறாள். அப்பொழுது நெல்லியங்கோடன் தான் பிச்சை வாங்க வரவில்லை என்றும், தாமரை நாச்சி யைப் பரிசம் போட வந்தேன் என்றும் கூற, அங்கே வந்த மலைக்கொழுந்தார் நெல்லியங்கோடனை நையப்புடைத்து செல்லரிக்கும் கொட்டகையில் போட்டு பூட்டச் சொல்கிறார். இது கேட்ட தாமரை நாச்சி கொதித்து எழுகிறாள். தனது முறை மாப்பிள்ளையான நெல்லியங்கோடனையே மணப் பேன் என்று கூறி, தனக்குப் பூட்டியிருந்த மணப்பெண்ணுக் குரிய நகை நட்டுக்களை வீசியெறிகிறாள். 

மலைக்கொழுந்தார், தாமரை நாச்சியை கடைசியில் நெல்லி யங்கோடனுக்கு மணமுடித்து வைக்கிறார். இது அறிந்த செல் லாத்தாக்கவுண்டர் பொங்கியெழுகிறார். கை கலப்பு நேரும் நிலையில் அங்கிருந்து அவர்களை ஊருக்கு அனுப்பி வைக் கிறார் மலைக்கொழுந்தார். 

இருப்பினும் தனது மகளின் பிடிவாதத்தில் மலைக்கொழுந் தார் கொண்ட கோபம் தணியவில்லை. தகப்பன் போக்கில் வெறுப்புற்ற தாமரையாள், “என் வயிற்றில் சிங்கம் போல இரு மகன்கள் பிறப்பார்கள். உன் வீட்டில் உமக்கு பேத்திகள் இருவர் பிறப்பர். அவர்கள் இருவரையும் என் மக்கள் மணந்து காண்டு சிறையில் போடுவார்கள்” என்று சபதமிடுகிறாள். நெல்லியங்கோடன் தனது நிலையை சோழ அரசனிடம் சொல்லி முறையிடுகிறான். அவர் நெல்லியங்கோடனுக்கு முற்றிலும் மோசமான, கரடு முரடான முட்களும் கள்ளியும் நிறைந்த ஒரு பகுதியைக் கொடுத்து பிழைத்துக் கொள்ளச் சொல்கிறார். தாமரையாள் அந்தக் கரடு முரடான பகுதியை தனது கணவனுடனும், சோழன் தோட்டியுடனும் சேர்ந்து பண்படுத்துகிறாள். 

நல்ல மழை பெய்தபடியால் சோளப் பயிர் முளைத்தெழு கிறது. பாழாய்ப்போய்க் கிடந்த காடு சோளப் பயிர்க் காடாக மாறி விடுகிறது. 

நெல்லியங்கோடன் மிகப் பெரிய செல்வந்தன் ஆகிறான். பல குன்றுகளுக்கு அதிபதியாகும் அவன் குன்றுடையான் என அழைக்கப்படுகிறான். எல்லாவளமும் பெற்றும் அவர் களுக்கு மகப்பேறுதான் கிட்டவில்லை. இதனால் குன்றுடை யானும் தாமரையும் வேண்டாத தெய்வம் இல்லை. மதுக்கரை செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு தேர் செய்து, தேரோட்டம் நடத்துகிறார்கள், அப்போதும் பிள்ளை பிறக்கவில்லை. சிதம்பரம் சென்று நடராஜரை தரிசித்தால் பிள்ளை வரம் கிட்டும் என்று சொல்கிறார்கள். மேனாட்டு அரசனிடம் நிலபுலன் ஆபரணங்களைக் கொடுத்துவிட்டு சிதம்பரத்துக்கு செல்ல நினைத்து அவனை அணுகவே, மேனாட்டு வேட்டுவ அரசன் தாமரையைக் கைப்பற்ற திட்டமிட்டு நகையையும் பறித்துக் கொள்வது என்றும் குன்றுடையானை கொலை செய்வது என்றும் சதி செய்கிறான். இதை அறிந்து தங்களது திரவியங் களைத் தரும்படி வேட்டுவ அரசனிடம் கேட்க, அவன் கொடுக்க மறுத்து அடித்துத் துன்புறுத்துகிறான். அப்போது தாமரையாள் நம்பிக்கை மோசடிக்காக பிண மலையைக் குவிப்பேன் என்று சபதம் செய்கிறாள். தாமரை, குன்றுடையான் இருவரும் சிதம்பரம் போகிறார்கள். 

இறைவன் தாமரைக்கு அருள் பாலிக்க அவள் கருவுற்று விடுகிறாள். இதை அறிந்த பங்காளிகள் மருத்துவச்சி ஒருத் தியை அனுப்பி ஆண்குழந்தை பிறந்தால் கழுத்தை ஒடித்துக் கொன்றுவிடும்படியும், பெண் குழந்தை பிறந்தால் எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டி வளர்க்கும்படியும் சொல்கிறார்கள். அப்பொழுது பொன்னர் தாமரை நாச்சியின் வலது விலாவி லிருந்தும், சங்கர் இடது விலாவிலிருந்தும் பிறக்கிறார்கள். இவர்கள் இருவரையும் கொல்வதற்குக் காத்திருந்த மருத்துவச் சியை அந்த குழந்தைகள் எட்டி உதைக்கிறார்கள். பிறகு பொன்னர் சங்கர் காணாமல் போய் விடுகிறார்கள். அதே சமயம் குன்றுடையான் மைத்துனர் சின்னமலைக்கொழுந்தார் மனைவிக்கு இரண்டு பெண்கள், மூன்று ஆண்குழந்தைகள் பிறக்கின்றன. சோழன் தோட்டிக்கு வீரமலை சாம்புவன் பிறக்கிறான். 

பின்பு தாமரையாள் அருக்காணி நல்ல தங்கம் என்ற பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். ஒரு நாள் மடியில் பெண் குழந்தையைப் போட்டுக் கொண்டு அண்ணன்மார் இருவருக் கும் நேர்ந்த கதையைச் சொல்லி, அவர்கள் என்ன ஆனார் களோ என்று தாமரை புலம்புகிறாள். அப்போது இதுதான் சமயம் என்று அதுவரையில் நிலவரையில் ஒளிந்திருந்த பொன் னரும் சங்கரும் வெளியே வந்து தாயார் முன் நிற்கிறார்கள். 

பங்காளிகளால் தனது குடும்பத்துக்கு ஆபத்து நேரிடும் என்று உணர்ந்த தாமரையாள் கணவனுடனும் பிள்ளைகளுட னும் ஆதிச்செட்டிப்பாளையம் போகிறாள். அங்கே குழந்தைகள் வளர்ந்து ஆளாகிறார்கள். மாரிக்கவுண்டன் பாளையத்தில் பொன்னர் சங்கர் இருவரும் ராக்கியண்ணனிடம் கல்வியுடன் வாட்பயிற்சி, சிலம்பம் முதலியவற்றை பயிலுகிறார்கள். அருக் காணியோ தன் தாயாரிடம் கல்வி பயில்கிறாள். பயிற்சி முடிந்ததும் குடையூருக்கு வந்து பெற்றோருடன் சேர்ந்துகொள் கின்றனர். ஒருநாள் தாமரையாள் பங்காளிகளால் தான் பட்ட ஷ்டத்தை தன் மகன்களிடம் சொல்லி அழுகிறாள். இதனால் வெகுண்டெழுந்த பொன்னர்-சங்கர் இருவரும் பங்காளிகளை அஞ்சு மணிக்கயிறு என்னும் சவுக்கால் அடிக்கிறார்கள். பங் காளிகளின் மனைவிமார்களையும் தண்டிக்கிறார்கள். இதள் பிறகு பங்காளிகள் தங்களால் பொன்னர் சங்கர் இருவரையும் வெற்றி கொள்ள முடியாது என்று முடிவு செய்கின்றனர். தனது பாதுகாப்புக்கருதி செல்லாத்தாக்கவுண்டர் வேட்டுவகுல தலைவனான தலையூர்க் காயியிடம் சரண் அடைகிறார். தலை யூர்க் காளியுடன் சேர்ந்துகொண்டு தொடர்ந்து தொந்தர கொடுக்கிறார். 

பொன்னர் சங்கருக்கும் வேட்டுவ இனப் பிள்ளைகளுக்கும் கடும் போட்டி ஏற்படுவதுண்டு. ஒவ்வொரு போட்டியிலும் வேட்டுவ இன பிள்ளைகள் தோல்வி அடைகின்றனர். இத னால் பொன்னர் சங்கருக்கும் தலையூர்க் காளிக்கும் கடும் பகை ஏற்பட்டு தலையூர்க்காளி பொன்னர் சங்கரைத் தீராத பகையாளியாகக் கொள்கிறான். சேவல் கட்டு சண்டைக்கு பொன்னர் – சங்கரை அழைக்கிறான் காளி. பின்னால் நடக்க இருப்பதை முன்கூட்டியே கனவு மூலம் அறிபவள் அருக்காணி. அவள் இந்த சேவல் போட்டியைப் பற்றி எச்சரிக்கை செய்கி றாள். அத்துடன் அவள் ஆசீர்வதித்துக் கொடுத்த சேவல், சண்டையில் வெற்றி பெறுகிறது. 

பொன்னர் – சங்கர் பெற்றோருடன் வளநாட்டுக்கு மீண்டும் திரும்புகிறார்கள். அங்கு மணியம் வசூலித்து உறையூர்ச் சோழ னுக்கு அனுப்பி வைக்கின்றனர். தங்களுக்குகென்று அரண் மனை ஒன்றைக் கட்டி முடிக்கிறார்கள். குன்றுடையானும் தாமரையாளும் ஒரே சமயத்தில் உயிர் துறக்கின்றனர். பெற் றோர்களின் இழப்பால் அருக்காணி மிகுந்த துயருறுகிறாள். அவள் விருப்பத்திற்கேற்ப, அவள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டி பஞ்ச வர்ணக்கிளியும் மற்றும் சில பறவைகளும் சங்கர் கொண்டு வந்து கொடுக்கிறான். அருக்காணி தேறுதல் அடைந்து, தபசில் நேரத்தைச் செலவிடுகிறாள். இதன் மூலம் முக்கால மும் உணரும் சக்தி பெறுகிறாள். சங்கர் வேட்டையாடப் போகும் போது வேங்கை ஒன்றைக் கொல்கிறான். இதையறிந்த தலை யூர்க் காளி கோபமுறுகிறான். சங்கர், வேங்கையை வேட்டை யாடிய பகுதி தலையூர்க் காளியின் எல்லைக்குட்பட்ட இ இட மாகும். காளி தனது படை பலத்துடன் வந்து வளநாட்டு எல்லையோரப் பகுதிகளில் அட்டூழியம் புரிகிறான். அருக் காணி என எண்ணி பச்சன முதலி மகள் குப்பாயியை காளி யின் ஆட்கள் கடத்திச் செல்கிறார்கள். சங்கர் தனது படை யுடன் சென்று குப்பாயியை மீட்டு வருகிறான். குப்பாயி யாரும் அறியாதபோது மான உணர்வுடன் தற்கொலை செய்து கொள்கிறாள். 

தலையூர்க் காளி மீண்டும் வளநாட்டுக் குடிகளுக்கு தொந்த ரவு செய்கிறான். குடிமக்கள் உறையூர்ச் சோழனிடம் சென்று செய்தி தெரிவிக்கிறார்கள். அரசனோ பொன்னர் சங்கரின் சாதனைகளைக் கேள்விப்பட்டு அவர்களை அரண்மனைக்கு அழைக்கிறான். இவர்களும் செல்கிறார்கள். பொன்னர் சங் ர சிற்றரசர்களாக அங்கீகரிக்கிறான். தனது தாயார் சபதம் றைவேற அருக்காணி, அண்ணன்மார் திருமணம் முடிக்கப் பட வேண்டுமென்று எடுத்துரைக்கிறாள். அதன்படி சின்ன மலைக்கொழுந்தார் மகள் இருவரையும் பொன்னரும் சங்கரும் மணந்து கொள்கின்றனர். (முத்தாயியை பொன்னரும், பவ ளாயியை சங்கரும் மணீக்கின்றனர்). 

நாளடைவில் அண்ணன்மார் புகழ் வேட்டுவ குடி மக்க ளிடம் பரவுகிறது. இதனால் காளி வெறுப்புற்று பொன்னர் சங்கரை பழி முடிக்க எண்ணுகிறான். செம்பகுலன் என்ற பொற்கொல்லன் மூலம் பொன்னர் மீது பொன் வள்ளம் திருடியதாக அபாண்டம் சுமத்துகிறான். அதனை பஞ்சாயத்தார் நம்புகிறார்கள். பொன்னர் தனது நேர்மையை நிலைநாட்ட எந்தப் பரீட்சைக்கும் தயார் என்று சொல்ல, செம்பகுலன் பொன்னரை வெள்ளாங்குளத்து ஏரியில் உட்குமிழி வழியாக நுழைந்து புறக்குமிழி வழியாக வெளியே வரவேண்டும் என்று சொல்கிறான். பொன்னர் புறப்படும் முன் காளி எந்தச் சமய மும் படையெடுத்து வரலாம் என்று தனது மைத்துனரையும் வீரமலை சாம்புவனையும் சங்கரையும் கோட்டையை விட்டு வெளியேற வேண்டாம் என்று சொல்கிறான். ஏனென்றால் பொன்னர் வெள்ளாங்குளம் ஏரி செல்லும் சமயம் பார்த்து காளி படையெடுத்து வருகிறான். அத்தைப்பிள்ளைகள், வீர மலை சாம்புவன் ஆகிய நால்வரும் போருக்குக் கிளம்புகிறார் கள். தலையூர்க் காளியின் படைகளை புறமுதுகு காட்டி ஓடும்படி செய்து வெற்றிக்களிப்பில் திரும்புகிறார்கள். வழியில் தாகம் எடுக்க ஆற்றில் (தடாகத்தில்) இறங்கி நீர் அருந்து கிறார்கள். தண்ணீரில் தலையூர்க்காளியின் ஆட்கள் நச்சு கலந் திருந்ததனால் அத்தைப் பிள்ளைகள் உயிர்விட நேருகிறது. வீரமலை சாம்புவன் மட்டுமே உயிர்தப்புகிறான். இதை அறிந்த சங்கர் கொதித்தெழுந்து அங்கிருந்து கிளம்புகிறான். அப் போது விஷ்ணு அவதாரமான மாயவர் தலையூர்க் காளி போல் வேடமிட்டு மறைந்திருந்து சங்கரைத் தாக்குகிறார். காயம்பட்ட சங்கர் இனிவாழப் பொறுக்காமல் வடக்கிருந்து தன் மீது அம்பு பாய்ச்சிக் கொண்டு இறக்கிறான். அது கண்டு வீரமலை சாம்புவன் மனம் துடித்து வாள் மீது விழுந்து தானும் உயிர் துறக்கிறான். 

இதே நேரம் வெள்ளாங்குளம் ஏரியில் பொன்னர் உட் குமிழிபுகுந்து வெளியே வருகிறான். அப்போது செம்பகுலன் புறகுமிழ்புகுந்து வெளியே வந்தால்தான் சத்தியம் நிறைவேறும் என்று அழிச்சாட்டியம் செய்கிறான். அவ்வாறு புகுந்து வெளியே வரும் போது வீரமலை சாம்புவன் முழக்கிய முரசின் ஒலி பற்றி கேள்விப் பட்டு அதே சிந்தனையில் மதகை விட்டு வெளி யேற முயன்ற பொன்னர் தலைமீது பிள்ளையார் சிலையைத் தூக்கிப் போடுகிறான் செம்பகுலன். அதைக் கண நேரத்தில் உணர்ந்த பொன்னர் தனது மந்திர வாளை எடுத்து அவன் மீது வீசிக் கொல்கிறான். 

பொன்னர், படுகளத்தில் சங்கர், அத்தை பிள்ளைகள், வீரமலை சாம்புவன் முதலானோர் இறந்த செய்தி அறிந்து, தனது படைகளுடன் சென்று காளியைக் கொன்று வெற்றி காணுகிறான். சங்கரின் பிரிவைத் தாங்க முடியாத பொன்னர் தானும் மார்பில் அம்பு பாய்ச்சி இறக்கிறான். இது கேட்ட அருக்காணி தனது அண்ணியார்களை அழைக்கிறாள். அவர் களோ தாங்கள் தாலி கட்டிக் கொண்டோமே தவிர இல்லற வாழ்வைத் துவக்கவில்லை என்று சொல்கிறார்கள். இது கேட்ட அருக்காணி மனம் நொந்து தனது கண்ணீரை நெருப் பாக்கி அரண்மனையையே எரிக்கிறாள். அதில் அண்ணியார் இருவரும் கருகி விடுகின்றனர். இது புலவர் பிச்சை அவர் களது நூலில் உள்ள பாடலில் வருகிறது. 

ஆனால் அவர்கள் தலையூர்க்காளியின் கையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று கற்பைக் காக்க அரண்மனைக்குத் தீயிட்டுக் கொண்டு அதில் சிக்கி இறந்தார்கள் என்று வேட் டாம்பாடி அ. பழனிசாமி அவர்கள் எழதிய நூலில் குறிப் பிடப்பட்டிருக்கின்றது. 

பின்னர் அருக்காணி படுகளம் நோக்கி செல்கிறாள். அழுது புலம்புகிறாள். அப்போது பெரியகாண்டி அம்மன் அவள் முன் மாறுவேடத்தில் தோன்றி தேறுதல் சொல்கிறாள். சங்கர் வாளேந்தி மரணமுற்ற இடம் நோக்கி வருகிறாள். சங்கரது உடலில் ஏற்பட்ட காயங்களை ஊசி நூல் கொண்டு தைக் கிறாள். மந்திரம் சொல்லி தண்ணீர் தெளித்ததும் சங்கர் உயிர் பெறுகிறான். அதுபோலவே பொன்னரையும், வீரமலை முதலியோரையும் எழுப்புகிறாள். 

ஆனால் அதன்பிறகு பொன்னர் குதிரை மீது வருவதாக வேட்டாம்பாடி அ.பழனிசாமி தனது நூலில் தெரிவிக்கிறார். இவரது கருத்துப்படி பொன்னர் சாகாமல் உயிரோடிருப்ப தாகவே ஆகிறது. பிறகு பொன்னர் தாங்கள் மானிடப் பிறவி எடுத்து பூலோகத்துக்கு வந்த பணி முடிந்து விட்டதாகவும், அதனால் ஓமகுண்டம் வளர்த்து அதில் இறங்கி பரமபதம் அடைவோம் என்றும் கூறி அதுபோலவே செய்ய முற்படு கையில், பெரியகாண்டி அம்மன் தனது சுயரூபத்தைக் காட்டி அருள் புரிகிறாள். 

உறையூர் சோழ மன்னன், பொன்னரும் சங்கரும் சத்தியப் போர் செய்து வென்று, தெய்வாம்சம் பெற்றதை அறிகிறான். அவர்களுக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்கிறான். அங்கு தவம் செய்துகொண்டிருந்த எழுவகாரியான் என்ற தவசியிடம் பொன்னும் பொருளும் கொடுத்து கோயில் கட்டி பூஜை செய்யச் சொல்கிறான். 

தொடர்ந்து எனக்கு ஆதரவு வழங்கி வரவேற்பு நல்கிய வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கமும், நன்றியும். 

அன்புள்ள, 
மு. கருணாநிதி

(முற்றும்)

– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1987, குங்குமம் இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *