பொன்னர்-சங்கர்






(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-50 | அத்தியாயம் 51-55
46. மாயவருக்கு வரவேற்பு விழா

மாயவரின் எதிர்பாராத முடிவு கண்டு அதிர்ந்து போன வீரமலை அந்தக் காட்டுப் பன்றிகளின் தாக்குதல் திட்டமிட்டு நடைபெற்ற ஒன்றாகவே இருக்க முடியும் என்ற தீர்மானத் துடன் அவைகளை உசுப்பி விடுவதற்காக எந்தப் புதரிலிருந்து ஒலியெழுந்ததோ அந்தப்புதரின் பக்கம் வாளை ஓங்கிக் கொண்டு ஓடினான். அவனையும் மீறிக் கொண்டு ஆவேசக் குரல் கிளப்பியவாறு பாய்ந்து வந்த அவனது பிடியில் சிக் குண்டால் சிதறிப் போய்விட வேண்டுமென நடுங்கிய செம்ப குலன் ஒரே பாய்ச்சலாகத் தன் குதிரையின் மீது பாய்ந்து அங்கிருந்து பறந்தான். வயல்கள், வரப்புகள், காடுமேடுகள், பள்ளங்கள் என்று பாராமல் குதிரை மிக வேகமாக அவனைச் சுமந்து கொண்டு ஓடியது.
எவனோ ஒரு கோழைத்தனம் கொண்ட கயவன் தன்னிட மிருந்து உயிர் தப்பிவிட்டான் என்ற ஏமாற்றத்துடன் வீரமலை மாயவரின் உடல் கிடக்கும் இடத்திற்கு வந்தான். துணைக்கு வந்த வீரர்களில் ஒருவன் விலாப்புறத்தில் காயமுற்று ரத்தம் வழிய ரத வண்டியில் சாய்ந்து கொண்டிருந்தான். மற்றொரு வீரனை வீரமலை உதவிக்கு அழைத்து மாயவரின் உடலைத் தூக்கி ரத வண்டியில் வைத்தான். அவனும் ரதத்தில் அமர்ந்து மாயவர் உடலைத் தன் மடி மீது படுக்க வைத்துக் கொண் டான். அப்போது அவன் கண்களில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது! காயம்பட்ட வீரனை ரத வண்டியில் ஏறிக் கொள்ளச் சொல்லிவிட்டு மற்றொரு வீரனை ரத வண்டியை ஒட்டுமாறு பணித்தான். அந்த வீரன் ஏறி உட்கார்ந்து வீர மலையை சோகத்துடன் பார்த்தவாறு, “வளநாட்டுக்குத்தானே?’ என்று கேட்டான்.”
“இல்லை! வளநாட்டுக்கு இல்லை! தலையூருக்கு ஓட்டு! மாயவரின் முடிவுக்கு என்ன பதில் சொல்கிறான் தலையூர் மன்னன்? என்பதை நான் தெரிந்து கொண்டாக வேண்டும்!
“தன்னந்தனியாக இந்த நிலையில் அங்கே செல்வது உசிதமாகத் தெரியவில்லையே!” என்றான் அந்த வீரன்.
“திரும்பிவளநாடு சென்று பொன்னர் சங்கர் முகத்தில் எப்படி விழிப்பது? மாயவரை அழைப்பது போல அழைத்து அவரது உயிரை அழிப்பதற்குத் திட்டம் போட்டிருக்கிறான் தலையூரான்! அந்தத் திட்டத்தில் வெற்றியும் பெற்றுவிட்டான். மாயவரின் உயிரைக் காப்பாற்ற முடியாதவனாகிவிட்ட நான், இனிமேல் அதற்கு மாற்றாகத் தலையூரான் தலையைக் கொண்டு செல்ல வேண்டும். இல்லையேல் என் பிணமும் தலையூரில் விழ வேண்டும். அஞ்சாதே! தலையூர் நோக்கி ரதத்தை ஓட்டு!”
வீரமலை உணர்ச்சி பொங்கக் கூவினான். அதற்கு மேல் எது பேசினாலும் எடுபடப் போவதில்லையென்று புரிந்து கொண்ட அந்த வீரன், ரத வண்டியைத் தலையூர்ப்பாதையி லேயே செலுத்தினான்.
”மன்னித்துக் கொள்ளுங்கள்! இப்படி ஆகி விட்டது என்ற செய்தியையாவது வளநாட்டுக்குச் சொல்லி அனுப்புவது நல்ல தல்லவா?”
மெத்தப் பணிவுடன் அந்த வீரன், வீரமலையிடம் கேட்டான்.
“செய்தி அனுப்பலாம்! ஆனால் யாரிடம் அனுப்புவது?’ என்று வீரமலை யோசித்தவாறு கூறிக் கொண்டே காயம்பட்டு ரதத்தில் சாய்ந்து கிடக்கும் இன்னொரு வீரனைப் பார்த்தான். அவன் பயணத்திற்குத் தகுதியுள்ளவனாக இல்லை என்பதை இருவரும் உணர்ந்து கொண்டனர்.
“இவன் நலமாக இருந்து இவன் மூலம் வளநாட்டுக்கு செய்தி அனுப்பினால் என்ன ஆகும்? உடனே சங்கர் தலையூர் மீது போர் தொடுக்கக் கூடும். போருக்கான ஆயத்தங்கள் எதுவுமே முடிவு பெறாமல் அவசரப்பட்டுப் படையெடுத்தால் அதன் விளைவு விபரீதமாகிவிடும். என்ன நடந்தாலும் சரி, மாயவர் மட்டுமல்ல அவருக்காக நியாயம் கேட்டு வீரமலையும் அப் படிக் கேட்டதற்கான விலையை உயிராகவே கொடுத்தான் என்ற செய்தியும் சேர்ந்து போகட்டும் வளநாட்டுக்கு!”
உயிரை வெறுத்து சபதம் எடுத்துக்கொண்ட வீரமலையின் கண்கள் மாயவரின் உயிரற்ற உடலை ஆழ்ந்த வேதனையுடன் நோக்கின!
புதரிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோமென்று குதிரையேறிப் பறந்த செம்பகுலன் தலையூர் நாட்டுக்குள் நுழைந்து வடிவழகி யின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். குதிரையை வாயிற் புறத்தில் ஒரு மறைவான இடத்தில் கட்டிவிட்டு மளமளவென வடிவழகியின் அறைப் பக்கம் சென்றான். அறைக் கதவு திறந் தும் திறவாத நிலையில் இருந்தது. வடிவழகியின் ஆடையும் அப்படித்தான் இருந்தது. அவளது முழு உருவையும் அந்தக் கோலத்தில் செம்பகுலன் காண முடியாமல் அவளது மடி மீது மாந்தியப்பன் படுத்துக்கொண்டு, அவள் கையில் உள்ள கிண் ணத்து மதுவை உறிஞ்சிக் கொண்டிருந்தான். செம்பகுலனைக் கண்டு அவளொன்றும் நாணிக் கோணி எழுந்து விடவில்லை. நாணம் என்பது அவள் விருப்பங்கொண்டு காட்டக் கூடிய ஒரு நடிப்பே தவிர, இயற்கையான குணமாக அது, ஒரு வேளை சிறுமியாக இருந்தபோது இருந்திருக்கலாம்! மாந்தி யப்பனும் தடித்த தோலுடையவன் – செம்பகுலன் அதைவிட முரட்டுத் தோல் படைத்தவன்! எனவே அந்த மூவரிடையே வெட்கம் என ஒன்று எதிர் நிற்கவே வெட்கப்பட்டு விலகி விட்டது!
“செம்பகுலா! சென்ற காரியம் என்ன ஆயிற்று?” என்று கேட்டுக் கொண்டே மாந்தியப்பன், வடிவழகியின் கன்னத்தைத் தன் கன்னத்தோடு சாய்த்துக் கொண்டான்.
“செம்பகுலன் எங்கு சென்றாலும் அது ஜெயம்தான்! பாவம், நமது ராஜா வளர்த்த காட்டுப் பன்றிகள் இரண்டும் செத்து விட்டன!”
“என்ன சொல்கிறாய்? காளி வளர்த்தது ஒரேயொரு பெரிய காட்டுப்பன்றிதானே! நீ இரண்டு பன்றிகள் என்கிறாயே?”
“நான் சரியாகத்தான் சொல்கிறேன். உண்மையிலேயே மன்னர் ஒரு காட்டுப் பன்றி வளர்த்தார்-மாயவர் என்ற ஒரு மதியூக அமைச்சரை வளர்த்தாரே, அதுவும் ஒரு காட்டுப் பன்றிதானே!”
“சபாஷ்! சபாஷ்! செம்பகுலா, சரியாகச் சொன்னாய்!’ என்று கலகலவென சிரித்துக்கொண்டே வடிவழகியின் ஆடை நழுவியிருந்த தோளை ஒரு கடி கடித்தான் மாந்தியப்பன்.
“அந்த இரண்டு காட்டுப் பன்றிகளும் செத்து விட்டனவா? நமது திட்டம் நிறைவேறி விட்டதா?”
வடிவழகியின் மடியை விட்டெழுந்து மாந்தியப்பன் அந்த அறைக்குள் நடனமாடத் தொடங்கிவிட்டான்.
”இதோ… நீ செய்த அபூர்வமான காரியத்துக்கு இவளையே இன்றிரவு பரிசாக ஏற்றுக் கொள்!” என்று கத்தினான்!
செம்பகுலன் அந்தப் பரிசு கண்டு பல் இளிப்பவனாகத் தெரியவில்லை.
“பெண் தேவையில்லை எனக்கு! எனது ஆசையெல்லாம் பொன்! பொன்! அதைக் கொடுங்கள் போதும்!” எனப் பல்லை இளித்தான்.
மாந்தியப்பன் ஒருக்கணம் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்துவிட்டு, செம்பகுலனின் தோளைத் தட்டியவாறு, ‘நமது திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்து விட் டது. இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்டம் ஆரம்பமாக வேண்டும்’ எனக் கூறியவன் வடிவழகியைப் பார்த்து ‘நீ சற்று நேரம் வெளியில் இரு! நானும் செம்பகுலனும் தனித் துப் பேசவேண்டும்!” என்றான். அவளும் இடையை நெளித்து அபிநயநடை போட்டுக் கொண்டு அடுத்த அறைக்குக் கிளம்பி னாள். அப்போதும் மாந்தியப்பன் அவளை விடாமல் இறுக அணைத்து முத்தமழை பொழிந்து பிறகு அவளை அந்த அறைப் பக்கம் இழுத்துக் கொண்டு போய் விட்டு வந்தான். செம்பகுலன், மாந்தியப்பனிடம், “செல்லாத்தாக் கவுண்ட ரய்யா என்ன சொன்னார்? எனக்குச் சேர வேண்டிய பொன்னை என் வீட்டில் சேர்த்தாகி விட்டதா?” எனக் கேட்டான்.
“அதெல்லாம் அப்போதே கொண்டு போய்க் கொடுத்தாகி விட்டது. இதோ அப்பாவின் யோசனைப்படி அடுத்த வேலை உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வேலையைத் திறமையாக முடிப்பதற்காக அச்சாரமாக நூறு பொன்னை முடிந்து கொடுத்துப் போயிருக்கிறார்”.
மாந்தியப்பன் ஒரு சிறிய பொன் முடிச்சை செம்பகுலனிடம் கொடுத்தவுடன், அவன் நாக்கில் நீர் சொட்ட வேண்டியது தான் பாக்கி! கையூட்டுப் பெற்றுக்கொண்டு யார் கழுத்தையும் அறுப்பதற்கு மார்தட்டுகிற மனிதர்கள் எலும்புத்துண்டு கண்ட நாய்களை விடக் கேவலமாகத்தானே ஆகிவிடுகிறார்கள்.
“அடுத்த வேலை என்ன? அதைச் சொல்லுங்கள்!”
“செம்பகுலா! உன் ஆற்றல் முழுதும் காட்ட வேண்டிய வேலை அது! மாயவர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடன் பொன்னரும் சங்கரும் நாங்கள் எதிர்பார்க்கிறபடி தலையூர் மீது படையெடுப்பார்கள்! இருவரும் இணைந்து படை நடத்தி வந்தால் அவர்களை வீழ்த்துவது கடினம்.
“அவர்களைப் போரில் பிரிக்க முடியாதே! அவர்களை எதிர்த்துத்தானே தீர வேண்டும்!”
“பொன்னரையும் சங்கரையும் பிரிப்பதற்குத்தான் உன் அறிவும் சாகசமும் பயன்பட்டாக வேண்டும். கொஞ்சம் பொறு! அதற்குத் தேவையான கருவி தயாராக இருக்கிறது!” என்ற வாறு மாந்தியப்பன் அந்த அறையிலிருந்த ஒரு பெட்டியைத் திறந்தான். அதற்குள்ளிருந்து இன்னொரு பேழையை வெளியே எடுத்தான். பளபளவென மின்னுகிற ஒரு கிளி ஒரு அழகான கூண்டுக்குள்!
“என்ன! இது? என்ன இது?’ கண்களை அகல விரித்துக் கொண்டு செம்பகுலன் ஆச்சரியத்தில் அமிழ்ந்து போனான்.
“இதுதான் மரகதப் பச்சை மாணிக்கக் கிளி! இதன் உட லைப் பார்த்தாயா? முழுவதும் மரகதம்? அலகு, விரல், நகம், கொண்டை அனைத்தும் மாணிக்கத்தால் ஆனது! இது சாதாரணக் கூண்டு அல்ல, வைரம் இழைத்த தங்கக் கூண்டு! பேழையோ வெள்ளி! இதைத்தான் அந்த ராக்கியண்ணன் பெரிய ரகசியமாக மூடிவைத்திருந்தான். என் தந்தை செல்லாத்தாக் கவுண்டரிடம் அவன் தந்திரம் செல்லுபடியாகுமா? எப்படியோ இதைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்துவிட்டார்! இந்தா, இதை எடுத்துக் கொள்!”
“என்ன? எனக்கா? உண்மையாகவா? என்ன சொல்லுவது என்றே எனக்குப் புரியவில்லையே!”
“புரியும்படி சொல்வதற்காக என் தந்தை தனது மாளிகையில் காத்துக் கொண்டிருக்கிறார். இதை எடுத்துக் கொண்டு அவரிடம் இப்போதே போ! அவர் எல்லாம் சொல்வார்!”
”மரகதம்! மாணிக்கம்! வைரம்! தங்கம்! இவ்வளவு விலை உயர்ந்த பொருளை என்னை நம்பிக் கொடுக்கிறீர்களே. எனக்கே என்னை நம்ப முடியவில்லையே!”
“ஆமாம் மிக விலை உயர்ந்த பொருள்தான்! உன்னை நம்பித்தான் கொடுக்கிறோம் அப்பாவிடம் போனால் அதற்கான விளக்கம் உனக்குக் கிடைக்கும்!”
இதைச் சொல்லிக்கொண்டே மாந்தியப்பன் மரகதப் பச்சை மாணிக்கக் கிளியை வைரமிழைத்த தங்கக் கூண்டுடன் வெள் ளிப் பேழையில் வைத்து அந்தப் பேழையை ஒரு மரப் பேழையில் மூடி அதைத் தூக்கி, செம்பகுலனிடம் கொடுத் தான். அவனும் அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி னான். அவன் போவதைப் பார்த்துக்கொண்டே மற்றொரு அறையிலிருந்த வடிவழகி, அவன் போய் விட்டான் என்பதை அவனது குதிரையின் குளம்படி ஓசையின் மூலம் தெரிந்து கொண்டு மாந்தியப்பன் இருந்த அறைக்கு ஆடி அசைந்து வந்து சேர்ந்தாள். அவளை இழுத்துப் படுக்கையில் தள்ளி விட்டான். அவளோ அவனையும் இழுத்துக்கொண்டு படுக் கையில் வீழ்ந்தாள்.
மாலைப்பொழுது வானத்தில் செவ்வண்ணம் பூசிக் கொண் டிருந்தது. கருமை, வெண்மை, மஞ்சள், சிகப்பு எனப் பல நிறங்களில் தோய்த்தெடுத்த பஞ்சுப்பொதிகளை வாரி இறைத் தது போல மேகங்கள் விண்ணில் ஊர்ந்து கொண்டிருந்தன. அந்த வேளையில்தான் மாயவரின் உடலைச் சுமந்து கொண்டு வளநாட்டின் ரத வண்டி, தலையூர்க்கோட்டை வாயிலில் நுழைய முற்பட்டது! அந்த வண்டியை யார் பார்த்தாலும் உயிரற்ற ஒரு உடல் கிடத்தப் பட்டிருப்பதாக நினைக்க மாட் டார்கள். மாயவர் அசதிமிகுதியினால் ரதத்தில் தூங்கிக் கொண் டிருப்பது போலவே காணப்பட்டார். காயம் பட்டுச் சோர்ந்து போயிருந்த அந்த வீரனையும் ரதவண்டியில் காணவில்லை. ரதவண்டியை ஓட்டுகிறவன் மற்றும் வீரமலை இருவர் மட்டுமே இருந்தனர்.
ரத வண்டியையும் வளநாட்டுக்கொடி. அதன் முகப்பில் பறப்பதையும் கண்ட தலையூர்க் கோட்டைக்காவலர்கள், அந்த வண்டியைத் தடுக்காவிடினும் அமைதியாக அருகில் சென்று மரியாதையாக விசாரணை செய்தார்கள்.
“வளநாட்டிலிருந்து வருகிறீர்களா?”
வீரமலை பொறுமையாகவும் நிதானமாகவும் பதில் சொன் னான். அவன் இதயம் கொதிக்கும் கொப்பரையாக இருந்தது. எனினும் அதை மறைத்துக் கொண்டு பேசினான்.
“தலையூர் மன்னர் அழைப்பின் பேரில் மாயவர் வந்திருக்கிறார். இதை உங்கள் மன்னருக்கு அறிவியுங்கள்.”
“மாயவரா? ஆமாம், மாயவரேதான்! எங்கள் மாயவரை எங்களுக்குத் தெரியாதா, என்ன? அது சரி, மாயவர் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறார்! அவருக்குத் தூங்கி வழிகிற பழக்கமே கிடையாதே!”
கோட்டைக் காவலர்கள் விளக்கம் பெற ஆவல் காட்டினார்கள்.
“தூங்காதவர்தான்! என்னதான் இருந்தாலும் வயது என ஒன்றிருக்கிறதல்லவா? பயணக் களைப்பு அதனால் சற்றுக் கண்ணயர்கிறேன். தலையூர் மன்னரிடம் சென்ற பிறகு எழுப் பினால் போதுமென்று உத்திரவிட்டுள்ளார்! அவர் விழித்துக் கொண்டிருந்தால்தான் அனுமதிப்பீர்கள் என்றால், அவரது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் எழுப்பி விடுகிறேன்!”
“அய்யோ! வேண்டாம் வேண்டாம்! ரதத்தைக் கொஞ்சம் மெதுவாகவே ஓட்டிக் கொண்டு வாருங்கள்! நாங்கள் மன்னரிடம் சென்று செய்தி தெரிவிக்கிறோம். மன்னர், மாயவரை வரவேற்று உபசரிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறிவிட்டு இரண்டு தலைமைக் கோட்டைக் காவலர் கள் குதிரைகளில் ஏறி கோட்டைக்குள் விரைந்தார்கள்! எஞ்சி யிருந்த காவலர்களில் எட்டுக் காவலர்கள் மாயவரின் ரத வண்டியைச் சூழ்ந்த வண்ணம் குதிரைகளில் அமர்ந்து, ரதத் தின் வேகத்திற்கேற்ப மெல்லச் சென்று கொண்டிருந்தார்கள்.
விரைந்து சென்ற தலைமைக்காவலர்கள் காளி மன்னனின் ஆலோசனை மண்டபத்தில் நுழைந்து அவனுக்குத் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்தனர். நெடுநேரமாகக் காத்துக் கொண்டிருந்த காளி மன்னன், அந்தக் காவலர்களை ஆவ லுடன் நோக்கி ‘“என்ன மாயவர் வந்து விட்டாரா?” எனக் கேட்டான்.
“ஆம்! வந்து விட்டார் – கோட்டை முகப்பு கடந்து, அரண்மனை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்!”
“அப்படியா? இதோ வந்து விட்டேன் அவரை வர வேற்க நமது அரண்மனை வாத்தியக் குழுக்கள் தயாராகட்டும்! அவர் வரும் வழியில் இருபுறமும் அரண்மனைத் தாழ்வாரத் தில் பெண்கள் நின்று மலர் தூவிடச் சொல்லியிருந்தேனே, அவர்களையெல்லாம் தயாராக நிற்கச் சொல்லுங்கள்! அரண்மனையின் மங்கல முரசம் கொட்டப்படட்டும்! அவருக்கு அணிவிக்க முத்தாரம் எங்கே?”
முத்தாரம் இருந்த தட்டு ஒன்று தலையூர்க் காளிக்கு முன் னால் நீட்டப்பட்டது. அதைத் தனது கையில் எடுத்துக்கொண்டு மன்னன், மாயவரின் கழுத்தில் அணிவித்து வரவேற்க அரண் மனை வாசலுக்கு வந்துவிட்டான்.
மங்கல வாத்தியங்கள் – பேரிகைகள் முழங்கத் தொடங்கின!
மாயவரை வரவேற்பதற்காக முரசு அதிர்ந்தது!
மாயவர் இருந்த ரத வண்டி அரண்மனை வாசலுக்கு அருகே வந்து விட்டது.
47. மீண்டும் ஒரு சமரசத்தூது!
வாசலில் தலையூர்க்காளியைப் பார்த்த வீரமலை, தனது நெஞ்சில் வெடித்துக் கொண்டிருக்கும் எரிமலையை மிகவும் சிரமப்பட்டு வெளிக்காட்டாமலே ரத வண்டியிலிருந்து கீழே இறங்கினான்.
“நான்தான் வீரமலை! வளநாட்டுத் தளபதி!’ எனத் தன் னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டவன், ‘மாயவர் வருகைக்காகக் காத்திருக்கிறீர்கள் போலும்!” என்று கேட்டான். ‘ஆம்!” என்று தலையூர்க்காளி தலையசைத்துப் புன்னகை புரிந்தவாறே ரத வண்டியை நோக்கினான்.
“உங்கள் விருப்பப்படியே மாயவரைக் கொண்டு வந்திருக் கிறேன்!” என்று வீரமலை சொன்னதும் காளி மன்னனுக்குத் தூக்கி வாரிப்போட்டது!
“என்ன? கொண்டு வந்திருக்கிறாயா? உன் பேச்சுக்குப் பொருள் புரியவில்லையே!”
“புரியாது மன்னா; புரியாது! மாளிகைகள் பல சூழ்ச்சிக் கிடங்குகளாக மாறியுள்ள கதைகளை நான் கேட்டிருக்கிறேன்! அதிலும் தலையூர் மாளிகை, தர்மத்துக்குக் கல்லறை எழுப்பி விட்டு அந்தக் கல்லறை மீதமர்ந்து ராஜதந்திரங்களை வகுக்கக் கூடியது என்பதை அறிந்துமிருக்கிறேன். ஆனால் எவரிடம் அரசியலைக் கற்றுக்கொண்டாயோ எவர் தந்த பயிற்சியினால் ஆட்சிக் கோலேந்தும் ஆற்றலைப் பெற்றாயோ -எவர்; நீயும் இந்த நாடும் வீண் ஆரவாரங்களாலும், விரோத உணர்வு களாலும், பழிவாங்கும் போக்கினாலும் வீழ்ந்துபோய் விடக் கூடாது எனக் கவலைப் பட்டாரோ, அவரையே உனது சதிக்கு இலக்காக ஆக்கிடுவாய் சவமாகச் சாய்த்து மகிழ்ந்திடுவாய் என நான் எதிர்பார்க்கவே இல்லை!”
வீரமலையின் ஆவேசச் சொற்களைக் கேட்டுக் காளி மன் னன் துடித்துப் போனான்! என்ன? என்ன? என்று கேட்டுக் கொண்டே ரதவண்டியில் ஏறி, மாயவர் உடலைப் பரபரப் புடன் தொட்டான். வீரமலையினால் சாய்த்து வைக்கப்பட்டி ருந்த மாயவரின் உடல் ரதவண்டிக்குள் சரிந்தது. காளி மன்ன னின் நெற்றிப்பொட்டில் ஆயிரம் சம்மட்டி அடிகள்! நெஞ்சில் இடி,மின்னல்,புயல்!
“வீரமலை! இது எப்படி நடந்தது? மாயவர் உண்மையி லேயே இறந்து விட்டாரா?”
“பிறகென்ன? கூடு விட்டுக் கூடு பாய்ந்து விட்டாரா? திட்ட மிட்டு வரும் வழியிலேயே அவரைத் தீர்த்துக்கட்டியதுமில்லா மல் மிகத்திறமையோடு நடித்து வேறு காட்டுகிறாய்!”
“இல்லையப்பா இல்லை! வீரமலை! என்னை நம்பு!அப் படி எந்தத் திட்டமும் இல்லை! மாயவருக்கும் எனக்குமிடையே மனக்கசப்பு வளர்ந்ததுண்டு – அதன் காரணமாக அவர் மாற் றார் முகாம் வந்தடைந்ததும் உண்டு – ஆனால் எந்தவொரு சமயத்திலும் அவரை நான் மதிக்கத் தவறியதுமில்லை. மரியா தைக் குறைவாக நினைத்ததுமில்லை! இப்போதும் அவரைக் கொண்டு இரு நாட்டுப் பகையைத் தீர்த்துக்கொள்ள எண்ணி யது உண்டே தவிர, அவரையே தீர்த்துக்கட்ட வேண்டுமென்ற கொடுஞ் சிந்தை இல்லவே இல்லை!”
“தலையூர் மன்னா! மாயவரின் சாவுதான் உன் லட்சிய மென்றால் அவர் இங்கே வந்து உன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது அவர் மார்பில் உன் வாளை நுழைத்துக் கொன்று குவித்திருக்கலாம் அல்லது விருந்து வைப்பதாகச் சொல்லி விஷத்தைக் கலந்து அவரை மாய்த்திருக்கலாம். உன் கோட்டைக்குள்ளே அவரைக்கொல்வதற்கு எத்தனையோ வழி யிருக்கக் கேவலம் காட்டுப் பன்றிகளை ஏவிவிட்டு அவர் வாழ்வை முடித்துவிட்டாயே, இதைவிடக் கோழைத்தனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?”
“காட்டுப்பன்றிகளா? நான் ஏவிவிட்டேனா? இல்லை! நிச்சயமாக இல்லை! வீரமலை. நீ சொல்வது எனக்குப் புதிராக இருக்கிறது. என்ன நடந்தது? விளக்கமாகச் சொல்!”
“மன்னா! மலையை விழுங்கிவிட்டு எலியை விழுங்கிய வனைப் போல ஏப்பம்விட உனக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்! உன் ஏமாற்று நாடகம் -எத்தனுக்கு மட்டுமே உரிய வித்தகப்பேச்சு இவைகளால் என்னை முட்டாளாக்கி விட முடியாது! மாயவர் வரும் வழியில் மதுக்கரையோரமுள்ள காடு கழனிகளில் நீ காட்டுப்பன்றிகளைக் கொண்டு அவரை வளைக்கச் சொன்னது பொய்யா? பன்றிகளின்மீது பழியைப் போட்டு ஒரு நல்லவரை – வல்லவரை – தலைசிறந்த ராஜதந்தி ரியை ஒழித்துக்கட்ட வலைபின்னியதும் பொய்யா? சிறந்த மேதையொருவரை சிறு பூச்சிபோல சிக்கவைத்து இருந்த இடத்திலிருந்தே அவரை இரையாக்கிக்கொண்ட சிலந்தி நீ! இந்தக் கொடுமைக்கு நீ பதில் சொல்லியே ஆகவேண்டும்! மாயவரைப் பத்திரமாகத் திரும்பவும் வளநாட்டுக்கு அழைத் துச்செல்ல முடியாதவனாகிவிட்ட நான், பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் தலையூர்க்காளியின் தலையோடுதான் பொன்னர் சங்கரைப் போய்ப் பார்ப்பேன்! இல்லாவிட் டால் மாயவரைப் போல என் பிணம்தான் இந்த மண்ணில் விழும்!”
சிங்கமென கர்ச்சித்துக் கொண்டு வீரமலை தலையூர்காளியை நோக்கி ஓங்கிய வாளுடன் பாய்ந்தான். அதற்குள் தலையூர் வீரர்கள் அவனையும், காளி மன்னனையும் சூழ்ந்து கொண்டு வளையம் அமைத்து நின்றுவிட்டனர். தலையூர் வீரர்களின் வாட்கள் வீரமலையின் நெஞ்சை நோக்கி நிமிர்ந்து நின்றன!
காளி மன்னன் எவ்விதப் பரபரப்பும் அடையாதவனாகத் தனது மெய்க்காப்பாளர்களைப் பார்த்து, “பொறுமையாக இருங்கள்! வீரமலையை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ எனக் கையமர்த்தினான். ஆனால் வீரமலையின் ஆவேசம் பன் மடங்கு அதிகமாயிற்றே தவிர குறையவில்லை! எத்தனை பேர் என்னை முற்றுகையிட்டாலும் கவலையில்லை! நான் இப்போது காட்டாற்று வெள்ளம் கரையுடைத்துப் புறப்படுவேன்! காளி மன்னா! உன் தலையுடைத்த பிறகே அமைதி அடைவேன்!” என்று கத்திக்கொண்டு, தன்னைச் சுற்றியிருந்த வீரர்களை உதைத்துத் தள்ளி முன்னேற முயன்றான்.
“வீரமலை! நான் சொல்வதைக் கேள்! என் விளக்கம் உனக் குத் திருப்தியளிக்காவிட்டால் பிறகு நமது வாட்கள் பிரச் சினையைத் தீர்க்கட்டும்!” என்று உரத்த குரலில் காளி மன் னன் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளத் தயாராயில்லை.
“சமாதானம் பேச அழைத்து சதி வலை பின்னிய உனக்கு அறிவுரை ஒரு கேடா? ஆண்மையிருந்தால் எடுத்துக்கொள் உன்வாளை!’ என்று முழங்கிக் கொண்டே, காளி மன்னனை நோக்கிப் போனான் அவன்! அதற்கு மேலும் அவனை அனு மதித்தால் நிலைமை விபரீதமாகிவிடுமென எண்ணிய தலையூர் மெய்க்காப்பாளர்கள் வீரமலையின் மீது திடீரெனப் பாய்ந்து அவனைப் பிடித்துக் கொண்டனர். அப்படியொரு தாக்குதலை எதிர் பார்த்தவனைப் போல வீரமலை, தனது வாளைச் சுழற்றி அந்த வீரர்களை எதிர்த்துப் போராடினான். அவர் களது பிடி தளர்ந்தது. வீரமலையை விடுத்துச் சிதறி விழுந் தனர். விழுந்தவர்களும், விழுந்தவர்கள் போக எஞ்சியிருந்த வர்களும் தேன்கூட்டிலிருந்து ஏக காலத்தில் கிளம்பிய தேனீக் களைப் போல வீரமலையைச் சுற்றிக்கொண்டனர். அவர்களது வாட்கள் ஒரே சமயத்தில் வீரமலையின் உடலைத் துளைத்துக் கீழே தள்ளிவிடும் என, காளி மன்னனே கூட அதிர்ச்சியடைந்த போது, வீரமலை தனது போர்த் திறம் காட்டி ஒரே வீச்சில் அத்தனை வாட்களையும் பறந்தோடச் செய்தான். வாட்களை இழந்தோர் வீரமலையை விட்டுவிடவில்லை. தங்கள் உட லில் ஏற்படும் மின்னல் வேகக் காயங்களைப் பொருட்படுத்தா மல் சிலர் உயிரிழந்தாலும் பரவாயில்லையென்று அவனை மிக நெருக்கமாகச் சூழ்ந்து கொண்டனர். அந்த இக்கட்டி லிருந்து தப்புவதற்கு வீரமலை, தரையில் காலை வேகமாக ஊன்றி அத்தனை பேருடைய தலைகளுக்கு மேலாக எழும்பிக் குதித்து மேலே கிளம்பியபோது காளி மன்னன் அவனைக் குறி பார்த்து வீசிய அழுத்தமான சுருக்குக் கயிற்றில் சிக்கிக் கொண்டான். கயிறு, வீரமலையின் உடலைப் பிணைத்ததுதான் தாமதம். தலையூர் வீரர்கள் மளமளவென அதனை இறுக்கி, வீரமலையை அசையவொட்டாமல் செய்துவிட்டனர்.
கட்டுண்டுவிட்ட வீரமலையை நோக்கி காளி மன்னன் நிதான மாக நடந்து வந்தான்.
“இப்போதுகூட வளநாட்டுத் தளபதியை என் வாளுக்கு இரையாக்க முடியும்! ஆனால் யுத்த தர்மத்தின் மீது நான் கொண்டுள்ள விசுவாசம் அதைத் தடுக்கிறது! சமாதானம் பேச அழைத்து, அதற்கிணங்க வந்தவர்களைக் கொல்லக் கூடா தல்லவா?”
காளி மன்னன் பேசியதை வீரமலை மிக அலட்சியமாகக் கேட்டான்! தனது வலது காலைத் தரையில் ஓங்கி உதைத்துக் கொண்டே மன்னனைப் பார்த்து அடிபட்ட புலி போல உறுமினான்!
“யுத்த தர்மம்! அதைக்கூடத் தலையூரில் படித்திருக்கிறீர்களா? அதைப் படித்துக் கிழித்த பலன் தான் பாதி வழியில் பன் றியை விட்டு எங்கள் பண்பாளர் மாயவரைக் கொலை செய்யத் தூண்டியதோ?”
“உண்மையை உணர முடியாமலும் உணர்த்துவதற்கு முயன்றாலும் அதை ஏற்காமல் திரும்பத்திரும்பச் சொன்ன தையே சொல்லிக் கொண்டிருப்பதும் நேரத்தை வீணாக்கு வதில்தான் போய் முடியும்! இனிப் பேச்சில்லை! வீரமலை யைக் கொண்டு போய் பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் வளநாட்டுத் தளபதி என்கிற மரியாதைக்கு இம்மியளவு குறைவும் வராமலும் சிறையில் வையுங்கள்!”
காளி மன்னன் கட்டளையை ஏற்று மெய்க்காப்பாளர்களும் தலையூர் வீரர்களும் வீரமலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
“காளி மன்னா! இதுதான் உன் கடைசி ஆணையாக இருக் கும்! நான் அடைபடப்போகும் சிறையில் நீ அடைபடு வதற்கான நாள் அதிக தூரத்தில் இல்லை! என்று வீரமலை ஒலித்தது அந்த அரண்மனைச் சுவர்கள் அனைத்தையும் அதிரச் செய்தது.
தலையூர்க் காளியோ பதில் ஏதும் கூறாமல் வீரமலையை வீரர்கள் அழைத்துக்கொண்டு போவதையும் அவன் ஏறு போல் மிடுக்குடன் நடந்து செல்வதையும் கூர்ந்து கவனித்துக் கொண் டிருந்தான். அவனது பார்வையிலிருந்து வீரமலையும் வீரர் களும் மறைந்த பிறகு அவன் மிகுந்த வேதனையுடன் சோகம் ததும்பிய முகத்தினனாக மாயவர் உடலிருக்கும் ரதவண்டி யிடம் வந்தான். சற்றுத்தொலைவில் முத்துமாலையுடன் தட் டேந்தி நின்றவனை ஜாடைகாட்டி அருகழைத்தான். தட்டில் இருந்த முத்து மாலையை மீண்டும் கையில் எடுத்தான். மாய வரின் நிலை கண்டு அவன் கரத்திலிருந்த முத்தாரம் மீண்டும் தட்டுக்குச் சென்றபோது இருந்த வேகம் இப்போது இல்லை. சோக இழையோடும் பின்னணியில் அந்த முத்துமாலையை மாயவரின் கழுத்தில் அணிவித்தான். அவன் விழிகளில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன.
தனக்குத் தெரியாமல் ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்ற மனக்குழப்பத்தில் அவன் தள்ளாடித் தடுமாறினான். அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாமல் செயலற்றுப் போய்விட்டதாக அவன் உணர்ந்தான்.
அப்போது மிகவும் பதைத்துப் போனவர்களாக நடித்துக் கொண்டு செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் அங்கு வந்து சேர்ந்தனர். செல்லாத்தாக்கவுண்டர், காளி மன்னனிடம் எதுவும் பேசாமல் நேரே மாயவரின் உடலருகே சென்று சிறிது நேரம் தலைகுனிந்து நின்றார். தன்னுடலில் போர்த்தியிருந்த பட்டுப் பீதாம்பரத்தின் முனையை எடுத்து வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுவது போல் பாசாங்கு செய்தார். மாந்தியப்பனோ தனது விஷக்கண்களை பூமியை நோக்கிச் செலுத்திக்கொண்டு சோகமே உருவமாக நிற்பது போல அசைவற்று நின்றான். அவர்களது நடிப்பைக் கவனிக் காதவனாகக் காளி மன்னன். மாயவரின் முகம் மரணத்திற்குப் பிறகும் அருள் மழைபொழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். செல்லாத்தாக்கவுண்டர், காளி மன்ன னின் தோளில் கை வைத்து அவனை மெல்ல அசைத்தார். மன்னனும் அப்போதுதான் நினைவு வந்தவனாக அவரைப் பார்த்தான். செல்லாத்தாக் கவுண்டர் காளி மன்னனிடம் மிக நெருங்கி வந்து சோகத்தைப் பகிர்ந்து கொள்வது போல அவனைத் தழுவிக்கொண்டே பேசினார்.
”நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்து விட்டது!”
பெருமூச்சும் பேச்சும் கலந்து வந்தது – அப்போது மாந்தி யப்பன் மிகுந்த உருக்கமுடன் தனது தந்தையைப் பார்த்து, “அப்பா! மாயவர் மரணம் எப்படி ஏற்பட்டது என்பதை நீங்களே விளக்குவது நல்லது!” என்றான். செல்லாத்தாக் கவுண்டர், மாயவர் மரணம் குறித்து என்ன விபரம் கூறப் போகிறார் என்று காளி மன்னன் ஆவலுடன் எதிர்பார்த்து அவரது முகத்தையே உற்று நோக்கினான்.
“ஒன்றுமில்லை! விதி விளையாடிவிட்டது! வளநாட்டுடன் தலையூர் நாடு சமரசம் செய்து கொண்டு வேளாளர்களும் வேட்டுவர்களும் அமைதியான நல்வாழ்வு பெறவேண்டுமென்று தான் நல்லெண்ணத்துடன் அரிய முடிவு ஒன்றை எடுத்தோம். மாயவர் மட்டும் உயிருடன் நமது தலையூர், மாளிகைக்கு வந்திருப்பாரேயானால் எல்லாம் நாம் நினைத்தது போல் நன்மையாகவே முடிந்திருக்கும். ஆனால் யாரும் எதிர்பாராமல் விதி விளையாடிவிட்டதே என் செய்வது?”
இதைக் கேட்ட காளி மன்னன், அவரைப் பார்த்து, “எப்படி விதி விளையாடியது? என்னதான் நடந்தது? அதைச் சொல்லுங்களேன்!” என்று பரபரப்புக் காட்டினான்!
“சொல்லுகிறேன் – சொல்வதற்குத்தானே அவசரமாக வந் தேன்! சொல்வதுதானே என் கடமை! மாயவரை காளியம்மன் கோயிலில் வரவேற்றுப் பூஜை நடத்தும் ஏற்பாடுகளை கவ னிக்க செம்பகுலன் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தபோது அவ னது பாதுகாப்பில் இருந்த நமது காட்டுப்பன்றிகள் கொட்டடி களை உடைத்துக்கொண்டு வெளிக்கிளம்பி விட்டன. அவற் றைத்தேடிக் கொண்டுபோன செம்பகுலன் அவற்றைக் காணா மல் திரும்பிவந்து, மீண்டும் தேடுவதற்காக வேறு திசையில் ஓடியிருக்கிறான். அதற்குள், பன்றிகள், மதுக்கரையோர முள்ள பயிர் பச்சைகளைத் தின்றும் நாசமாக்கியும் ஆர்ப்பாட் டம் செய்துகொண்டிருந்திருக்கின்றன. அந்த வழியாக வந்து கொண்டிருந்த மாயவர் கண்களில் அந்தக் காட்சி பட்டு விடவே உடனே அவர் ரதத்தை விட்டிறங்கி பன்றிகளை விரட் டியிருக்கிறார். நமது அரண்மனை பன்றியைத் தாக்கினால் அது சும்மாயிருக்குமா? காயம் பட்ட வேகத்தில் அது மாய வரின் உயிரைக் குடித்துவிட்டுத் தானும் அதே இடத்தில் மாண்டுவிட்டது! பாவம். பயிர்பச்சைகள் நாசமாகக் கூடாது என்று பரிவு காட்டப் போய் அந்தப் பரிவு மாயவரின் உயி ருக்கே எமனின் பாசக்கயிறாக மாறி விட்டிருக்கிறது!”
காளி மன்னன் ஓரளவு ஆறுதல் பெற்றான்! மாயவர் சாவுக்கு எந்த சதித் திட்டமும் காரணமாக இருந்திருக்க முடியாது என்பதைச் செல்லாத்தாக் கவுண்டரின் விளக்கத்திலிருந்து அவன் தீர்மானித்துக் கொண்டதால் தனது மனச்சாட்சி அறிய மாயவரின் சாவுக்கு அவனோ அல்லது தலையூரோ பொறுப் பல்ல என்பதில் அவனுக்கு ஒரு நிம்மதி! செல்லாத்தாக் கவுண் டரிடம் மேலும் ஒரு விபரமறிய அவன் விரும்பினான்.
“இந்த உண்மை எப்படித் தெரிய வந்தது தங்களுக்கு?”
“இதே ரத வண்டியில் காயம் பட்டுக்கிடந்த ஒரு வீரன் – அதா வது வளநாட்டு வீரன் அவனை நமது தலையூர் மருத்துவர் வீட்டில் வீரமலை சிகிச்சைக்காகச் சேர்த்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறான். அந்த வீரனிடம் விசாரித்தேன். அவன்தான் வழியில் நடந்த விஷயங்களையும் -விதி எப்படி விளையாடி விட்டது என்பதையும் சொன்னான். பயிர்பச்சைகளை துவம் சம் செய்துகொண்டிருந்த பன்றிகளை விரட்ட மாயவர் மட்டும் முனையாமல் இருந்திருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டேயிருக்காது!”
“நடந்தது ஒன்று ஆனால் வீரமலை நினைப்பது ஒன்று! மாயவர் மரணம் – வீரமலையைச் சிறையிட்டிருப்பது – இந்தச் செய்திகளைக் கேட்டால் பொன்னர் சங்கர் பொங்கியெழுந்து போருக்குத் தானே புறப்படுவார்கள்!'”
“ஆமாம்! ஆனால் ஒன்று – அவர்களுக்குத் தவறான செய்தி போய்ச் சேருவதற்குள் சரியான தகவலை அவர்களுக்கு நாம் அனுப்பியாக வேண்டும். அது மட்டுமல்ல, இன்னமும் தலை யூர் நாடு வளநாட்டுடன் சமாதானம் செய்து கொள்ளவே விரும்புகிறது என்பதைப் பொன்னர் சங்கருக்குத் திட்ட வட்டமாகத் தெரிவிக்கவேண்டும்.”
‘ஓலையனுப்பி மாயவரை அழைத்தோம் – அது இப்படியாகிவிட்டது! இனியொரு தூதுவரை அனுப்பி சமாதானப் பேச்சுக்குத் தயார் என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?”
“மாயவர் கொல்லப்பட்டது எதிர்பாராதது என்பதையும் அவராலேயே அவருக்கு முடிவு ஏற்பட்டது என்பதையும் அதைத் தவறாகக் கருதவேண்டாம் என்பதையும் பழிக்குப் பழி என்று கர்ச்சிக்கும் வீரமலையை வேறு வழியின்றிதான் சிறையில் வைத்திருக்கிறோம் என்பதையும் – சமாதானப் பேச் சின் முதல் கட்டமாக வீரமலையை விடுதலை செய்யத் தயா ராக இருக்கிறோம் என்பதையும் உடனடியாகப் பொன்னர் சங்கருக்கு அறிவித்தாக வேண்டும்!”
“இதனை அவர்களுக்கு யாரை அனுப்பி அறிவிக்கலாம்? யாரை அனுப்பினால் நம்புவார்கள்? எனக்கு ஒன்றுமே புரிய வில்லையே! தலையூரான் யுத்த தர்மம் தவறி செயல்படுகிறான் என்ற களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவே நான் இன்னமும் கவலைப் படுகிறேன்!”
“அப்படியொரு கவலையே வேண்டாம்! போர் வேண்டாம் என்று பொன்னர் சங்கரிடம் தெரிவிக்கவும் – சமாதானக் கொடியைப் பறக்கவிட அவர்களின் சம்மதத்தைப் பெறவும் – நம்மிடம் ஒரு சரியான ஆள் இருக்கிறான்!”
”யார் அது?”
“சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்! நண்பர்களை அனுப்பு வதைக் காட்டிலும் – யாரைப் பகையென்று கருதுகிறார்களோ அவர்களை அனுப்பினால் அவர்களிடம் பொன்னர்-சங்கர் பவ்யமாக நடந்து கொள்வார்கள் என்பது நிச்சயமான உண்மை!”
“யாரை அனுப்பலாம் என்கிறீர்கள்?”
“என் மகன் மாந்தியப்பனையே அனுப்பலாம்!”
”என்ன? மாந்தியப்பனையா?”
“ஆமாம்-அவனே போய் தலையூர்த் தூதன் என்ற முறையில் பொன்னர் சங்கரை நேரிலே சந்தித்து, எங்களுக்கு இனி வளநாட்டு ஆட்சி வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் – என்று முடிவாகச் சொல்லி விட்டால், விட்ட தடா தொல்லையென்று அவர்கள் சமாதானப் பேச்சுக்குத் தயார் என சம்மதம் அளிப்பார்கள். அப்படி அவர்கள் உடன் படுவார்களேயானால் – சமாதானத்துக்குப் பிறகு அவர்கள் வரும்வரையில் மாயவரின் உடலை அடக்கம் செய்யாமல் இங்கேயே பதப்படுத்தி வைக்கப்படும் என்றும் மாந்தியப்ப னிடமே சொல்லி அனுப்பலாம். அவர்கள் மாயவரின் சவ அடக்கத்துக்கு வருவதற்குமுன்பே வீரமலையை விடுதலை செய்வதாக மாந்தியப்பனே அவர்களுக்கு உறுதி மொழியும் கொடுக்கலாம்!”
“எல்லாம் சரி, மாந்தியப்பனை அனுப்புவதுதான் எனக்குச் சரியாகப்படவில்லை ஏதாவது மாந்தியப்பனுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டால்?”
உடனே மாந்தியப்பன் குறுக்கிட்டான்.
“எனக்காகக் கவலைப்படவேண்டாம். தலையூர்க் காளிக் காக என் உயிரே போவதாக இருந்தாலும் நான் தயங்க மாட் டேன். எங்களுக்கும் பொன்னர் சங்கருக்கும் பங்காளிச் சண்டைதானே; அதனால் என்னை நேரில் பார்த்தால் பகை விலகும்! பங்காளி உறவுதான் மேலோங்கி நிற்கும்! நானே வளநாடு செல்கிறேன்-மாயவர் மரணத்தால் இரு நாடுகளுக்கு மிடையே புதிய பகை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டி யதும் உறவு மலர்ந்திடப் பாடுபட வேண்டியதும் என் பொறுப்பு! அதற்காக உயிரைப் பரிசாக வழங்க வேண்டு மெனில், கடவுள் சித்தம்! அப்படியே ஆகட்டும்!”
இதைச் சொல்லிவிட்டு மாந்தியப்பன் தனது கண்களைத் துடைத்துக் கொண்டான்.
தர்மத்தைப் பற்றிய சிந்தனை -தந்திரக்காரர்களின் அணுகுமுறை இரண்டுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்த தலையூர்க்காளி மன்னன், செல்லாத்தாக் கவுண்டரின் யோச னையை ஏற்றுக் கொண்டான்.
மாயவர் உடலைப் பத்திரப் படுத்த வேண்டிய பணிகளை செல்லாத்தாக் கவுண்டரை கவனிக்குமாறு கேட்டுக்கொண்டு மாந்தியப்பனிடம் வளநாட்டுக்கு ஓலை கொடுத்து அனுப்பு வதற்காக அவனை அழைத்துக்கொண்டு காளி மன்னன் அரண் மனைக்குள் வேகமாகச் சென்றான். மாந்தியப்பனை செல்லாத் தாக் கவுண்டர் கடைக்கண்ணால் நோக்கினார். அந்தப்பார்வை மாந்தியப்பனுக்குப் பல செய்திகளைக் கூறியது! தந்தையின் திட்டப்படி நடப்பேன் என்பது போல அவன் தலைநிமிர்ந்து வெற்றி நடை போட்டுக்கொண்டு காளி மன்னனைப் பின் தொடர்ந்தான்!
48. முதல் முயற்சி வெற்றி!
மாந்தியப்பன், தலையூர்க்காளியிடம் ஓலையைப் பெற்றுக் கொண்டு வளநாடு நோக்கிப் புறப்படுவதற்குள்ளாகவே மர கதப் பச்சை மாணிக்கக் கிளியுடன் செம்பகுலன் வளநாட்டு எல்லையை மிதித்துவிட்டான். தலையூர்க் காளியம்மன் கோயில் பூசாரி செம்பகுலனாக அவன் தோற்றமளிக்கவில்லை. வேட்டை யாடுவதையே தொழிலாகக் கொண்ட வேடன் உருவில் அவன் தோற்றமளித்தான். தலையில் வேடர்கள் கட்டிக்கொள்ளும் உருமாலை! கழுத்தில் சங்குகள் கோக்கப்பட்ட மாலை! தோளில் தொங்கிய நிலையில் ஒரு வில்! மற்றொரு தோளில் அம்புக் கூடு! மரகதப்பச்சை மாணிக்கக்கிளியின் கூண்டு அடங்கிய வெள்ளிப் பேழையை மூடிக்கட்டப்பட்ட ஒரு துணி மூட்டை அவன் கையில் இருந்தது! தலையூரிலேயே அவனை யாராவது திடீரெனப் பார்த்தால் செம்பகுலன் என்று அடையாளம் காண இயலாது அந்த அளவுக்குத் தன் தோற்றத்தை மாற் றிக்கொண்டு குதிரையை மிக வேகமாகத் தட்டி ஓட்டிச் சென்ற அவன், வளநாட்டு எல்லைப் பகுதி வந்ததும் குதிரையை விட் டிறங்கி, கானகத்திலிருந்து – நகர் நோக்கிச் செல்லும் ஒரு வேட னைப் போலவே கால்நடையாக வந்துகொண்டிருந்தான்.
அவனுடைய உள்ளம் செல்லாத்தாக் கவுண்டர் சொல் லிக் கொடுத்திருந்த சூழ்ச்சித் திட்டங்களில் ஆழமாகப் பதிந் திருந்தது. முதல் கட்டமாக பொன்னரையும் சங்கரையும் பிரித்து வைப்பதற்கான சூழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும். அதற்குத் தனது திறமையை எப்படிக் காட்டுவது? பொன்னரும் சங்கரும் அரண்மனையில் இருந்தாலும் வெளியில் உலவச் சென்றாலும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதில்லை – அப்படிப்பட்டவர்கள் தலையூர் மீது போர் தொடுத்துவிட்டால் நிச்சயம் பிரிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அப்படி ஒரு போருக்கு முன்பே அவர் களைப் பிரித்து வைக்கும் சூழ்ச்சியில்தானே தலையூரின் வெற் றியே இருக்கிறது. அந்த சூழ்ச்சி நிறைவேறுவதற்கு செல்லாத் தாக் கவுண்டர் வகுத்துக் கொடுத்துள்ள திட்டப்படியே முள் முனை கூட முறிந்து விடாமல் நடக்கவேண்டுமெனத் தீர் மானித்துக்கொண்டு முதலில் பெரிய காண்டியம்மன் கோயி லுக்குப் போவதென்று முடிவு செய்தான்.
வளநாட்டு எல்லையையொட்டிய பகுதியில் பெரியகாண்டியம்மன் கோயில் இருந்தாலும் வளநாட்டு அரண்மனைக்கு மேற்குத் திசையில் சற்று தொலைவில் அமைந்த இடம் அது என்பதை அறிந்திருந்த செம்பகுலன், வழியில் வந்த சிலரிடம் எதற்கும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்களைப் பார்த்து அந்தக் கோயி லுக்கு எந்தப் பாதையில் போக வேண்டுமென்று விசாரித் தான். அவர்களில் ஒருவன், செம்பகுலனை ஆச்சரியத்துடன் நோக்கி, “உன்னைப் பார்த்தால் வேடனைப் போல் தெரி கிறது. உனக்கென்ன பெரியகாண்டி கோயிலில் வேலை?” என்று கேட்டான்.
”ஏன்? அந்தக் கோயிலில் வேடர்களுக்கு அனுமதி கிடை யாதா அம்மனை வணங்க?” என்று செம்பகுலன் திருப்பிக் கேட்டான்.
“வேடர்கள் என்ன, ஆண்களாகப் பிறந்தவர்கள் யாருமே இப்போதெல்லாம் அந்த ஆலயத்துக்குள் நுழையமுடியாது! பொன்னர் சங்கர் மட்டுமே போகலாம் இது அரண்மனை உத்திரவு!” என்று சொல்லிக் கொண்டே வழியில் வந்தவர்கள் போய் விட்டார்கள்.
ஒருக்கணம் நின்று செம்பகுலன்யோசித்தான். ஆயிரக்கணக் கான தேள் கொடுக்குகளால் ஆன அவனது மூளையில் விஷச் சிந்தனைக்குத் தடை ஏது? அவனையறியாமல் ஒரு சிரிப்பு! பெரியகாண்டியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் வேக மாக நடந்தான்.
”ஏய்! யாரது? நில்!” என்று ஒரு பெண்ணின் குரல் கோப மாக ஒலித்து அவனைத் தடுத்து நிறுத்தியது. ஆலயத்து வாச் லில் காவலுக்கு நின்ற கன்னிப் பெண்ணின் குரல்தான் அது! செம்பகுலனுக்குப் புரியாமல் இல்லை அருக்காணித் தங்கமும் அவளது தோழிகளும் இருக்கும் அந்த இடத்துக்குள் ஆண்கள் எவரும் நுழையக் கூடாது என்பதற்காக நிற்கின்ற காவல்கார வீராங்கனைதான் அவள் என்ற உண்மை! ஆனா லும் அவன் வேண்டுமென்றே அவளையும் மீறி ஆலயத்துக்குள் நுழையத் தொடங்கினான். அதைச் சற்றும் எதிர்பாராத அந்தப் பெண், தன் கையிலிருந்த வாளை நீட்டி அவனைத் தடுத் துக் கொண்டே உள்ளேயிருப்பவர்களின் காதில் விழக்கூடிய அளவுக்கு உரக்கக் குரல் கொடுத்தாள். அவளது கூச்சலைக் கேட்டு அருக்காணித் தங்கமும், மற்ற பெண்களும் கையில் படைக்கலன்கள் ஏந்தியவாறு வாசற்புறத்துக்கு ஓடி வந்தனர்.
செம்பகுலனோ, கொஞ்சமும் அதிர்ச்சியடையாதவனாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றான். அருக்காணி அவ னைப் பார்த்து ‘யார் நீ? அத்துமீறி ஆலயத்துக்குள் நுழையக் காரணம் என்ன?” என்று அதட்டினாள்.
“பெரியகாண்டியம்மன் எனக்கும் தாய்தான்! என் தாய்க்கு நான் செய்துகொண்ட பிரார்த்தனையை நிறைவேற்ற வந்திருக்கிறேன்.”
“என்ன பிரார்த்தனை செய்து கொண்டாய்? பெண்கள் மட் டுமே இந்தக் கோயிலில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தும் வேண்டுமென்றே விஷமத்தனமாக பிரார்த்தனை என்ற பெய ரால் ஏதோ பித்தலாட்டம் செய்ய வந்திருக்கிறாய்!”
“இல்லையம்மா இல்லை! சத்தியமாக இல்லை! இதோ இந்த மரகதப்பச்சை மாணிக்கக்கிளியை என்கண்ணில் கிடைக்கு மாறு அம்பாள் அருள்பாலித்து விட்டால் அவளுக்கு என் இரண்டு கண்களில் ஒரு கண்ணை காணிக்கையாகச் செலுத்து வது என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்! அந்தப் பிரார்த் தனை வெற்றியானது! அதை நிறைவேற்றி என் கண்ணில் ஒன்றை தேவிக்குக் காணிக்கையாக்க வந்துள்ளேன்!’
இந்த வார்த்தைகள் செம்பகுலனிடமிருந்து வெளிப்பட்டதும், அருக்காணிக்குத் தூக்கி வாரிப்போட்டது.
மரகதப் பச்சை மாணிக்கக் கிளி மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் வீரப்பூர் காட்டுப் பகுதியில் எங்கேயிருக்கிறது என்ற ரகசியக் குறிப்பு ராக்கியண்ணன் கொடுத்தது தன்னிடம் பத்திரமாக இருக்கும் போது, இந்தச் சாதாரண வேடன் அதை எப்படி எடுத்து வரமுடிந்தது? என்ற கேள்வி அருக்காணியின் உள்ளத்தைக் குடைந்தது.
அவள் வியப்பில் மூழ்கியிருப்பதைப் புரிந்துகொண்ட செம் பகுலன் இதுதான் தக்க தருணமென்று மூட்டையைப் பிரித்து வெள்ளிப் பேழையைப் முதலில் எடுத்தான். பிறகு பேழையைத் திறந்து மரகதப் பச்சை மாணிக்கக் கிளியைக் கையில் எடுத்துக் காட்டினான். பளபளக்கும் அந்தக் கற்களின் ஜோதி மழையில் அந்தக் கிளியும் கூண்டும் பேழையும் அந்தப் பெண் களின் கண்களைப் பறித்தன!
“இதை ஏன் நீ தேடிச் சென்றாய்? உன் கையில் இது கிடைக்க ஏன் பிரார்த்தனை செய்து கொண்டாய்? உன்னால் இதை எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது?”
அருக்காணித் தங்கம் ஆவல் பொங்கிட வினாக்களை அடுக் கினாள்.
“ராக்கியண்ணரின் இறுதிச் சடங்கின்போது அவர் எழுதி வைத்திருந்த மரண சாசனம் படிக்கப்பட்டபோது அந்தப் பெருங் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்! எனக்கு ராக்கியண்ணர் மீது ஒரு மதிப்பு, மரியாதை, பக்தி எப்போதும் உண்டு! சிறு பிராயத்தில் அவரிடம் வில்வித்தை கற்றுக்கொண் டவன் நான்! இந்தக் கிளி, மாரிக்கவுண்டன் பாளையத்தில் அவரது பாசறையிலேயே அவரது நினைவுச் சின்னமாக வைக் கப்பட வேண்டுமென்பது என் ஆசை! இதை வளநாட்டின் இன்றைய மன்னர்களான பொன்னர் சங்கர் எடுத்துத் தங்கள் தங்கைக்குப் பரிசாக அளிப்பதற்கு முன்பே நான் கண்டு பிடித்து எடுத்து மாரிக்கவுண்டன்பாளையத்தில் ராக்கியண் ணன் பாசறையில் வைப்பதென்று முடிவு செய்தேன். வீரப்பூர் காட்டிலும் அதனையொட்டிய பகுதிகளிலும் வேட்டைக்குச் செல்லும்போதெல்லாம் இதைத் தேடி அலுத்தேன்! பிறகுதான் பெரிய காண்டியம்மனுக்குப் பிரார்த்தனை செய்து கொண் டேன். தேவி கருணை காட்டி என் வேண்டுதலை நிறைவேற்றி வைத்தாள். நான் தேவிக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும். தயவு செய்து வழிவிடுங்கள்!”
“இதற்காக போய் ஒரு கண்ணைப் பறிகொடுப்பார்களா?”
“தலையையே அறுத்துக் கொடுத்து ஆண்டவனை நினைத்து தவம் செய்தவர்கள் எல்லாம் உண்டு தாயே!”
“வேடனே! உன் மன உறுதியைப் பாராட்டுகிறேன் – உன் பெயர் என்னவோ?”
“வேலப்பன் என்பார்கள் – அதாவது தான் வேலைக் குறி பார்த்து வீசினால் அந்தக் குறி தப்பாது என்பதால் எனக்கு அப்படியொரு பெயர்!”
”சரி வேலப்பா! முதலில் இந்தக் கிளியுடன் நாம் வள நாட்டு அரண்மனைக்குப் போய் என் அண்ணன்மார்களைச் சந்திப்போம்!”
”அய்யோ! வேண்டாம் வேண்டாம் அவர்கள் இதைப் பிடுங்கிக் கொண்டு என்னை அடித்து விரட்டி விடுவார்கள்!”
“அப்படியெல்லாம் என் அண்ணன்மார்களைப் பற்றித் தவறாக நினைக்காதே! ராக்கியண்ணர் பாசறையில் இந்தக் கிளியை நினைவுச் சின்னமாக வைப்பதென்றால் அவர்கள் எந்தத் தடையும் சொல்லமாட்டார்கள். மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்! வா எங்களோடு! அரண்மனைக்குப் போகலாம்!”
“பெரியகாண்டிக்கு நான் செலுத்த வேண்டிய காணிக்கை யைச் செலுத்தாமல் இங்கிருந்து ஒரு அடி கூட நகர மாட்டேன்! தேவியின் கோபம் பொல்லாதது! பிறகு அவள் என் இரண்டு கண்களையும் அணைத்து விடுவாள்!”
“நீ காணிக்கை வழங்குவதை நாளைக்குப் பெரிய பூஜை நடத்தியே அம்மன் கோயிலில் நிறைவேற்றலாம்! முதலில் அண்ணன்மார் இந்தக் கிளியைக் காணட்டும்!”
செம்பகுலன் யோசித்தான். பிறகு கைகளைத் தலைக்கு மேலே தூக்கி அம்மன் சந்நிதியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டே ‘அம்பிகே! என்னை மன்னித்து விடு! அரண் மனை உத்திரவுக்கு அடங்கி நான் நடக்கவேண்டியிருக்கிறது! நாளைக்கு வந்து என் காணிக்கையை உன் காலடியில் செலுத்து கிறேன்!” என்று பக்திரசம் சொட்டச் சொட்டக் கூவினான்.
வளநாட்டு அரண்மனைக் கூடத்தில் மரகதப்பச்சை மாணிக் கக் கிளி, பட்டு விரித்த ஒரு மேடையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் அழகான வேலைப்பாடுகளை பொன்னரும் சங்கரும் வெகுவாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அருக்காணி தங்கம். முத்தாயி, பவளாயி, மற்றும் அருக்காணி தங்கத்தின் தோழிகள் அனைவரின் விழிகளும் அந்தக் கிளியின்மீதே மொய்த்திருந்தன! ஒரு தூணின் ஓரமாக வேலப்பன் வேடத்தி லிருக்கும் செம்பகுலன் மெத்த மரியாதையுடன் அடங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்தான். பொன்னர் வேலப்பனை நோக்கி,
“வேலப்பா!! உன்னுடைய அசாத்திய முயற்சியினால் இந்த அற்புதமான கிளியைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்திருக் கிறாய்! உன் விருப்பப்படியே இதை ராக்கியண்ணர் பாசறை யில் நினைவுச்சின்னமாக வைப்பதில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! காரணம் உன்னைப் போலவும் – சொல்லப்போனால் உன்னை விட அதிகமாகவும் நாங்கள் அவருக்குக் கடமைப் பட்டிருக்கிறோம்! எனவே உன் இஷ்டப்படி இந்தக் கிளி, ராக் கியண்ணர் பாசறையில் இருக்கட்டும்! ஆனால் ஒரு வேண்டு கோள்! உன் கண்ணைக் காணிக்கையாகத் தருவதாக பெரிய காண்டிக்கு பிரார்த்தனை செய்திருக்கிறாயே, அதை மட்டும் மாற்றிக்கொள்க!” என்றான்!
உடனே வேலப்பன், துடித்துப் போனவனாக பதறிப்போன வனாக நடித்து
“ஆகா! என்ன காரியம் செய்யச் சொல்கிறீர்கள்! பெரிய காண்டியம்மனுக்குத் துரோகம் செய்வதா? அந்தப் பாவம் ஏழேழு ஜன்மத்துக்கும் என்னை விடாது! என் கண்ணைத் தானே நான் காணிக்கை தரப் போகிறேன் அதற்காகக் கவலைப்படாதீர்கள்!” என்று பெருங்கூச்சலிட்டு விட்டான்.
”நீ உணர்ச்சி வேகத்தில் குதிக்கிறாய்! சொல்வதைக் கேள்! கண்ணையோ காலையோ கையையோ அம்பாள் காணிக்கை யாகப் பெற்றுக்கொள்கிறாள் என்று கூறுவது அம்பாளையே இழிவுபடுத்துகிற விஷயமாகும்! தன்னிடம் பக்தி செலுத்துகிற வர்களின் உடலுக்குத் துன்பம் நேருவதை தாயின் ஸ்தானத் தில் இருக்கிற அம்மன் விரும்புவாளா? தயவு செய்து நான் சொல்வதைக் கேள்! இந்தக் கிளியின் பொருட்டு நீ செய்து கொண்ட பிரார்த்தனைக்காக உனது கண்ணுக்கு ஈடாக எவ் வளவு பெரிய காணிக்கை வேண்டுமானாலும் செலுத்தலாம் – நீயே சொல்! அதைப் பெரிய காண்டியம்மனுக்கு நாளைக்கே வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.”
பொன்னரின் வேண்டுகோளைக் கேட்டு மிகக் குழப்ப மடைந்தவனைப் போலக் கைகளைப் பிசைந்து கொண்டு, வேலப்பன் அங்குமிங்கும் நடந்தான். “தேவி! தேவீ!” என்று இரண்டொருமுறை கத்தினான்.
“அண்ணன் சொல்வதை அலட்சியப்படுத்தாதே வேலப்பா! அம்பாள் ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டாள்! சரி யென்று ஒத்துக்கொள்!” என்றான் சங்கர். வேலப்பனோ தீவி ரமாக யோசிப்பது போலப் பெரும் பாசாங்கு செய்தான்.
“அம்பிகே! என்னை மன்னித்து விடு -உன்மீது பாரத்தைப் போட்டு என் கண் காணிக்கைக்குப் பதிலாக மாற்று யோசனை சொல்லப் போகிறேன்!’
என்று மீண்டும் கத்தினான். அவன் மாற்று யோசனை என்ன சொல்லப் போகிறான் என்பதை அனைவரும் ஆவ லுடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.
வளநாட்டு மன்னர் இருவரும் கட்டளையிடுவதால் அதற்கு இணங்கித் தலை குனிகிறேன். என் கண்ணைப் பெரியகாண் டிக்குக் காணிக்கையாகத் தரக்கூடாது எனக் கூறிவிட்டீர்கள். அதற்குப் பதிலாக நான் வைக்கும் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வீர்களா?”
“என்ன வேண்டுகோள் வைத்தாலும் ஏற்றுக்கொள்வோம்! கண்ணைத் தோண்டுவது – காணிக்கையாகத் தருவது போன்ற காரியங்களை எங்கள் அரசாங்கமும் அனுமதிக்காது! அதைத் தவிர என்ன செய்ய விரும்புகிறாயோ, அதைச் சொல்!”
சங்கர், கண்டிப்பாகவே இதைச் சொன்னான்.
“அப்படியானால் – அதுதான் அம்பாளின் சித்தமென்றால் இந்த மரகதப்பச்சை மாணிக்கக் கிளியின் விலை என் னவோ, அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் அதைக் கொண்டு அம்பாள் கோயிலுக்குக் கும்பாபிஷே கம் செய்து வைக்கிறேன்!’
பொன்னர் முகத்திலும் சங்கர் முகத்திலும் மற்றும் அங் கிருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியொளி பிறந்தது! வேலப்பன் வீணாகக் கண்ணை இழக்கப் போவதில்லை என் பதில் அவர்களுக்கு ஒரு ஆறுதல்!
“என்ன விலையாகும் இந்தக் கிளி? கேள் – அந்தத் தொகையைத் தருகிறேன்!”
“அய்யோ! எனக்கா கேட்கிறேன்! பெரியகாண்டி கோயி லைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்யவல்லவா கேட்கிறேன்!”
“அது தெரிகிறது வேலப்பா! அதற்காகத்தான் கேட்கிறேன். எவ்வளவு விலை இந்தக் கிளியென்று!”
“அதை நீங்களும் நானும் எப்படி நிர்ணயிக்க முடியும் அரண்மனையிலுள்ள பொற்கொல்லாகளை அழைத்து அவர் களைப் பார்க்கச் சொல்லி விலை நிர்ணயம் செய்யுங்கள்! இப்போது ஒன்றும் அவசரமில்லை நாளைக்குக் காலையிலே கூட அதைப் பார்த்துக் கொள்ளலாம்!”
“அதுவும் சரிதான்! நாளைக்குக் காலையில் நமது பொற் கொல்லர்களைக் கொண்டு இந்தக் கிளியின் விலையை நிர்ண யிப்போம்! வேலப்பா! இன்றிரவு நீ இந்த அரண்மனையி லேயே தங்கிக் கொள்ளலாம் கிளியைக் கூட நீ தங்கியி ருக்கும் அறையிலேயே உன் பொறுப்பில் வைத்துக் கொள்ளலாம்.”
“அடடே! என்ன இப்படி சொல்லி விட்டீர்கள் கிளி தங்கள் வசமே இருக்கட்டும்! இத்தனை நாள் இந்தக் கிளிக்காக அலைந்த களைப்பில் இன்றிரவு நிம்மதியாகத் தூங்குகிறேன்!”
சரியென்று பொன்னர் தலையசைத்தான்!
அப்போது அருக்காணித் தங்கம், சங்கரைப் பார்த்து “இந் நேரம் மாயவர் மட்டும் இங்கிருந்தால் இந்தக் கிளியின் விலையை நிர்ணயித்திருப்பார். பொற்கொல்லர்களே தேவைப்பட்டிருக் காது!” என்றாள்.
“ஆமாம் – சங்கர்! மாயவரும் வீரமலையும் தலையூர் சென் றவர்களைப் பற்றி எந்தச் செய்தியும் இன்னமும் வரவில்லையே” என்றான்.
பழம் நழுவிப் பாலிலே விழுகிறது என எண்ணியவனாக வேலப்பன் வேடத்திலிருக்கும் செம்பகுலன் அவர்களது பேச்சில் குறுக்கிட்டு
”மன்னிக்க வேண்டும் – நான் சொல்வது தவறான தகவலா கக்கூட இருக்கலாம் – மாயவரும், வீரமலையும் வீரப்பூர் காட் டில் ஆள் மயக்கிப்பாறைக்கருகே விழுந்து கிடப்பதாக யாரோ வழியில் சொன்னார்கள்!” என்று மிகுந்த உருக்கத்துடன் சொன்னான்.
“தம்பீ!” என்றான் பொன்னர்.
“அண்ணா!” எனத் துடித்தெழுந்தான் சங்கர்!
“வேலப்பன் சொல்வது உண்மைதானா? என்று உடனே சென்று பார்த்து வா!” என்றான் பதட்டத்துடன்!
சங்கர், அந்த இடத்தை விட்டு எப்போது அகன்றான் என்று தெரியாமல் அவ்வளவு வேகமாக வெளியேறி விட்டான்.
அண்ணன்மார்களைப் பிரித்து விடும் முதல்கட்ட சூழ்ச்சியில் வெற்றி பெற்றுவிட்ட களிப்பில் செம்பகுலன் சிரிப்பை வெளியில் காட்டாமல் இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமோ என்ற நிலையில் அடக்கமாக நின்று கொண்டிருந்தான்.
49. பொறியில் சிக்கிய புலி!
குதிரைமீது குதித்தோடி அமர்ந்து தட்டி விட்டதுதான் தாமதம். குளம்படிகளின் ஓசை, இடியோசையென முழங்கிட அந்தக் குதிரை, ஆள்மயக்கிப் பாறைக்குப் போகும் பாதையில் நாலு கால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கியது. தங்களின் இளைய மன்னன் எங்கே இவ்வளவு வேகமாகப் போகிறார் என்று வள நாட்டு வீதிகளிலும், சாலைகளிலும் சென்றுகொண்டிருந்த மக் கள் பரபரப்புடன் கவனித்து விஷயம் எதுவும் புரியாமல் ஒரு வரையொருவர் வியப்புடன் பார்த்துக்கொண்டு திகைத்து நின் றனர். ஆள்மயக்கிப் பாறை சங்கருக்குப் புதிய இடமல்ல! அந்தப் பாறைக்கு அருகாமையில் தான் குப்பாயியைத் தலை யூர் வீரர்களிடமிருந்து மீட்ட நினைவு அவனுக்கு வராமல் போகவில்லை.
அந்த வேடன் வேலப்பன் கேள்விப்பட்டது உண்மையாக இருக்குமா? மாயவரும், வீரமலையும் தாகவிடாய் தீர்த்துக் கொள்வதற்காக ஆள்மயக்கிப் பாறைத் தண்ணீரை அருந்தி யிருப்பார்களோ? அதனால் மயங்கி விழுந்திருப்பார்களோ? தலையூரின் அமைச்சர் பெருமகனாக இருந்து அந்த வட்டாரம் முழுவதையும் நன்கு அறிந்து வைத்துள்ள மாயவருக்கு ஆள் மயக்கிப் பாறையின் நீரினால் ஏற்படக்கூடிய ஆபத்து தெரி யாமலா இருந்திருக்கும்!
குழப்பத்துடன் சங்கர் அந்தப் பாறைக்கு அருகே வந்த பொழுது காரிருளில் அந்தப்பகுதியே ஆழ்ந்திருந்ததை கவ னித்தான். குதிரையை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, இறங்கிய சங்கர் அந்த இருட்டில் தனது கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பாறையைச் சுற்றியுள்ள இடத்தில் மாயவரையும், வீரமலையையும் தேடினான். அவர்கள் அங்கு மயங்கி விழுந்து கிடப் பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பாறைக்கு அரு கில் வேறு எங்காவது இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்துடன் குதிரையை ஒரு கையால் பிடித்துக் கொண்டே மெல்ல நடந்தான்.
அந்த இருளைக் கிழித்துக் கொண்டு ஒரு ஒளி -அந்த ஒளி வந்த திசையில் சங்கரின் கால்கள் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஒரு தீப்பந்தத்தின் வெளிச்சம்தான் அது என்பதை அவன் புரிந்து கொண்டான். அந்த வெளிச்சத்தை நோக்கி நடந்தான். கரடுமுரடான ஒற்றையடிப் பாதையில் இருபுறங்களிலும் நீண்டுயர்ந்த செடிகளுக்கிடையில் அந்தத் தீப்பந்த வெளிச்சம் வேறு திசையில் போய்க்கொண்டிருந்தது.
”யாரது? கொஞ்சம் நில்லுங்கள்!” என்ற சங்கரின் குரல் கேட்டதும் தீப்பந்த ஒளி அங்கிருந்து அதற்குமேல் நகரவில்லை. சங்கர், அந்த இடத்திற்கு விரைந்து சென்றான்.
சாம்பல் நிறப் போர்வையொன்று அந்த உருவத்தின் தலை யில் முக்காடாக அமைந்து, உடலையும் மறைத்துக் கொண் டிருந்தது. விகாரமான முகம்! அதில் வெள்ளைத் தாடி வேறு! வயது முதிர்ந்த சன்னியாசி போன்ற தோற்றம்! வில்லைப் போல வளைந்திருந்த முதுகின் கூனல் அந்த உருவத்தை மேலும் அலங்கோலமாக்கிக் காட்டிக் கொண்டிருந்தது. சங்கரின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்து அப்படியே நின்றுவிட்ட அந்த உருவம், தனது கையில் இருந்த தீப்பந்தத்தை, சற்றுத் தூக்கிப் பிடித்து முன்னால் நீட்டியவாறு யார் அது?’ என்று திருப்பிக் கேட்டது. அந்தக் குரலில் இனிமையில்லை என்பது மட்டு மல்ல, கேட்பதற்கே கர்ணகடூரமாக இருந்தது.
இருண்ட சூழல் இடையே தீப்பந்த வெளிச்சம் அந்த வெளிச்சத்தில் பளபளக்கும் பயங்கரக் கிழவன் ஒருவனின் முகம் அந்த முகத்தைக் கண்டு சங்கர் வெறுப்படைந்தான் எனினும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமலே “அய்யா! பெரியவரே! தாங்கள் இந்தப் பகுதியில் வசிப்பவர்தானே! அப்படியானால் இந்த வட்டாரத்தில் இன்றோ நேற்றோ ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி உண்டா?” என்று வினவினான்.
“இப்படிப் பொதுவாகக் கேட்டால் எப்படி? நான் இந்தப் பகுதியில் ஒரு குக்கிராமத்துக் கிழவன்! எங்கள் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை நேற்றைக்கு -மிகவும் விமரிசையாக நடைபெற்றது – வேறு என்ன நிகழ்ச்சியை நீ கேட்கிறாய் என்று எனக்குத் தெரியவில்லையே தம்பி!”
தழுதழுத்த குரலில் திக்கித் திக்கி நடுங்கும் உடலுடன் அந்தக் கிழவன் பதில் அளித்தது சங்கருக்குத் திருப்தி தர வில்லை.
பெரியவருக்கு எந்த ஊர் என்று நான் தெரிந்து கொள்ள லாமா?”
“அவசியம் தெரிய வேண்டுமோ? வெண்முடி என்ற ஊர்! அந்த ஊருக்குப் புறத்தேயுள்ள ஒரு குக்கிராமம்! அதையும் வெண்முடி என்றுதான் நாங்கள் அழைத்துக் கொள்வது வழக் கம் எனக்கே தலையும் தாடியும் வெண்முடியல்லவா, அதனால் என் ஊரும் வெண்முடியென்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறதல்லவா?”
“நல்ல பொருத்தம்தான்! நான் தங்களிடம் கேட்கும் விபரம் முக்கியமானது! வளநாட்டிலிருந்து மாயவரும் வீரமலையும் தலையூருக்குச் செல்வது குறித்து தாங்கள் ஏதாவது கேள்விப் பட்டிருப்பீர்களே!”
“ஆமாம் கேள்விப்பட்டேன்! எந்தச் செய்தியையும் ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக வெளியே விட்டு விடுவேன். ஆனால் இந்தச் செய்தி கிடைத்தவுடன் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! இது என்னடா பெரிய கூத்தாக இருக்கிறது தலையூர்க் காளியையும் அவனருகே இருந்து அவனை ஆட்டிப் படைக்கிற செல்லாத்தாக்கவுண்டர், அவரது மகன் மாந்தியப்பன் ஆகியோரையும் பழிவாங்க சபதம் செய்து கொண்டிருக்கிற பொன்னர் சங்கர் என்ற புலிகள் எப்போது -ஏன்-எப்படி புழுக்களாக மாறிவிட்டன? என்று ஆச்சரியப் பட்டேன்! ஆறாத்துயரமடைந்தேன்! பதவியென ஒன்று வந்து விட்டதால் வளநாட்டைப் பரிபாலிக்கும் வாய்ப்பு பெற்று விட்டதால் இனிமேல் அதை அனுபவித்தால் போதும், வீணாக வீரத்தைக் காட்டி துன்பத்தைச் சுமக்கத் தேவையில் லையென்ற முடிவுக்குப் பொன்னர் சங்கர் வந்து விட்டார்களே யென்று நினைத்து, அவர்கள்மீது நான் வைத்திருந்த மதிப்புக் காக எனக்கு நானே வெட்கப்பட்டுக் கொண்டேன்!”
“பெரியவரே! நீங்கள் அப்படி நினைத்தால் அது பெருந் தவறு! பொன்னரின் வீரமோ, சங்கரின் வீரமோ பதவிகளுக் காக விலை போய்விடக் கூடியவை அல்ல! அழைப்பு அனுப் பியதே தலையூர்க்காளிதான்! என்னதான் பேசுகிறான் என்பதை அறிந்து கொள்வதற்காகவே மாயவர் அந்த அழைப்பை ஏற்றார். அவருக்குத் துணையாக வீரமலை சென்றான். இத னால் பொன்னரும் சங்கரும் கொண்டுள்ள குறிக்கோளுக்கு எள்முனையளவு சேதமும் என்றைக்கும் ஏற்படாது! ஏற்றுக் கொண்ட சபதம் எப்படியும் நிறைவேற்றப்பட்டே தீரும்!”
“இவ்வளவு திட்டவட்டமாகச் சொல்கிறாயே, அப்படியா னால் நீ யார் தம்பி?”
“நான்தான் சங்கர்!”
“ஆ! சங்கரா? பொன்னருக்குத் தம்பியாகப் புயலொன்று பிறந்திருக்கிறது எனக் கேள்விப்பட்டிருக்கிறேனே, அந்தச் சங்கரா?”
கிழவனின் சரீரம் கிடுகிடுவென ஆடியது தள்ளாடித் தள்ளாடி சங்கரின் அருகே வந்து மகிழ்ச்சி தாங்க முடியாமல் ஒரு கையில் தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டே, மற்றொரு கையால் சங்கரின் கன்னத்தை வருடவே, சங்கரும் உணர்ச்சி வயப்பட்டு அந்தக் கிழவனின் கையை மெல்லப் பிடித்துக் கொண்டான்.
“இங்கு நடந்த நிகழ்ச்சியை யாரிடத்தில் சொல்லி அனுப் புவது என்று தவித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை கடவு ளாகப் பார்த்து உன்னையே அனுப்பி வைத்து விட்டார். தெய் வமே! தீமையிலும் ஒரு நன்மை! சங்கரே இங்கு வந்துவிட்டது சர்வேஸ்வரா! நீயே இங்கு வந்துவிட்டதைப் போலத்தான்!”
“என்ன சொல்கிறீர்கள் பெரியவரே? சீக்கிரம் சொல்லுங்கள்!”
“சங்கர்! நீ மாயவரையும் வீரமலையையுந்தானே தேடிக் கொண்டு வந்திருக்கிறாய்?”
“ஆமாம் அவர்களுக்கு ஆள்மயக்கிப் பாறைக்குப் பக்கத்தில் ஏதோ ஆபத்து என்று யாரோ சொன்னதாக ஒரு வேடன் சொன்னான்.”
“ஓ! ஒரு வேடன் சொன்னானா? அந்த வேடன், தனது பெயரைக்கூட வேலப்பன் என்று சொல்லியிருப்பானே?”
“ஆமாம்! வேலப்பன் என்றுதான் சொன்னான்! ஏன்? அதில் ஏதாவது மர்மம் இருக்கிறதா?”
“மர்மங்கள் நிறைந்ததுதானே இந்த மாயா உலகம்! வேலப் பன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் உண்மை யிலேயே வேடன் அல்ல! அது ஒரு வேடம்! அந்த வேடந் தாங்கி யார் தெரியுமா? தலையூர்க்காளியம்மன் கோயில் பூசாரி செம்பகுலன் என்று கேள்விப்பட்டிருப்பாயே?”
“என்ன செம்பகுலனா?”
“அவனேதான்! அவனை வைத்துத்தான் செல்லாத்தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் குழந்தைப் பருவத்திலேயே உங்களிருவர் உயிரையும் போக்கிவிடுவதற்குத் தலையூர்க்காளி யிடம் சூழ்ச்சி செய்தனர்! இப்போதும் அவர்கள் அவனைத் தான் பயன்படுத்தி உங்களிடம் அனுப்பியுள்ளனர். அவன் தான் வேடனைப் போல வள நாட்டு அரண்மனைக்கு வந்திருக்கிறான்.”
கிழவனின் சொல் கேட்டு சங்கர் அதிர்ச்சியுற்றான்.
“அப்படியா? இப்போதே போய் அவனுக்குரிய தண்டனையை வழங்குகிறேன்” எனக் கூறிக் கொண்டே குதிரையில் பாய்ந்து ஏறிடப் போனான்.
“பொறு சங்கர், பொறு! நீ வந்த வேலையை மறந்துவிட்டாயே! மாயவரும் வீரமலையும் என்ன ஆனார்கள் – எங்கே யிருக்கிறார்கள் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டாமா? அதைத் தெரிந்து கொண்டு அதன்பிறகு செம்பகுலனிடம் போ!”
“பெரியவரே! உடனே சொல்லுங்கள், மாயவரும், வீரமலையும் எங்கேயிருக்கிறார்கள்?”
“சொல்லத்தானே போகிறேன்! சொல்வது மட்டுமல்ல, அவர்கள் இருக்குமிடத்தைக் காட்டவும் போகிறேன். அதற்குள் இன்னொரு சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள விரும்புகிறேன். வேடன் வேடத்தில் வந்திருக்கும் செம்பகுலன் மரகதப்பச்சை மாணிக்கக்கிளியுடன் வந்திருப்பானே?”
“ஆமாம், அந்தக் கிளியைக் கூண்டுடன் கொண்டு வந்திருக்கிறான்”.
“அது மரகதமும் அல்ல மாணிக்கமும் அல்ல! அது ஒரு போலிக் கிளி! பொன்னரையும் உன்னையும் பிரித்துவிட்டு தலையூர்க் காளியை வளநாட்டின் மீது படையெடுக்க வைப் பதற்காக அந்த செல்லாத்தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் பின்னுகிற வலை பெரிதாகிக் கொண்டே போகிறது! அதில் நீங்களும் ஏமாந்து விட்டீர்கள்!”
“பெரியவரே! அடுக்கடுக்காக அதிர்ச்சியூட்டும் செய்தி களையே தருகிறீர்களே, நான் இப்போதே வளநாடு சென்று என் அண்ணனிடம் எல்லா விபரங்களையும் சொல்லியாக வேண்டும்!”
“எல்லா விபரங்களும் என்றால், வீரமலை மாயவர் இரு வரையும் பற்றிய விபரங்களைத் தவிரவா? நீ உடனே வள நாட்டுக்குப் போக வேண்டியது முக்கியம் – அதற்குள் மாயவர் வீரமலையின் நிலையையும் அறிந்து கொள்ள வேண்டியது அதைவிட முக்கியம்!”
“அவர்கள் என்ன ஆனார்கள்?”
“ஆள்மயக்கிப் பாறையில் இளைப்பாற எண்ணினார்கள். அந்தப் பாறையில் பெருகி வரும் நச்சுத் தண்ணீரை அளவுக்கு அதிகமாகவே அருந்திவிட்டார்கள். அதன் விளைவு-மாயவர், வீரமலை, அவர்களுடன் வந்த வளநாட்டு வீரர்கள் கடுமை யான மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்!”
“இப்போது அவர்கள் எங்கேயிருக்கிறார்கள்? அவர்களை நான் பார்த்தாக வேண்டும்!”
‘பாறையோரத்தில் அவர்கள் மயங்கிக் கிடந்ததை நானும் எனது கிராமத்தினர் சிலரும் பார்த்துப் பதைத்துப் போனோம்! மயக்கநிலையில் பாறையருகே கிடந்தால் ஒருவேளை இரவு நேரத்தில் மிருகங்களினால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற் படக் கூடுமென அஞ்சி, அவர்கள் அனைவரையும் பக்கத்தில் உள்ள ஒரு பாதுகாப்பான மண்டபத்தில் பத்திரமாகக் கொண்டு சேர்த்துள்ளோம்! அவர்களுக்குத் தேவையான மூலிகைகள் சிலவற்றைப் பறிப்பதற்கே இந்நேரத்தில் நான் இங்கு வந்தேன்” என்று கூறிய கிழவன், தன் மடியிலிருந்து சில பச்சிலைகளை எடுத்துக் காட்டினான்.
“நான் இப்போதே அவர்களைப் பார்த்தாக வேண்டும்” என்று சங்கர் துடித்தான்.
“என் தீப்பந்த வெளிச்சத்தை தொடர்ந்து வந்துகொண்டே யிரு, அந்த மண்டபத்தில் அவர்களைப் பார்க்கலாம் – ஒரு வேளை உன் அதிர்ஷ்டம், அவர்கள் இந்நேரம் மயக்கம் தெளிந்து கண் விழித்திருக்கவும் கூடும்!”
கிழவன், தீப்பந்த ஒளியில் அந்தக் காட்டுப் பாதையில் செடி கொடிகள் புதர்களை விலக்கி விட்டுக்கொண்டு முன்னே நடந் திட -தொடர்ந்து குதிரையை கையில் பிடித்தவாறு, சங்கரும் நடந்தான்.
கிழவன் குறிப்பிட்ட அந்த மண்டபத்தை அடைந்தனர்! ஏற் கனவே பராக்கிரமனால் குப்பாயி அடைத்து வைக்கப்பட்ட அதே மண்டபந்தான்! ஆனால் சங்கருக்கு அது தெரியாது!
குதிரையை வாசலில் நிறுத்திவிட்டு சங்கர், சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கிழவனைத் தொடர்ந்து மண்டபத்திற்குள் நுழைந்தான். மண்டபத்தைச் சுற்றியிருந்த தழை மண்டிய புதர் களில் யாரோ சிலர் மறைந்துகொள்ள யத்தனிக்கும் ஓசை மட்டும் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தது. சங்கர் உள்ளத்தில் ஏதோ ஓர் உணர்வு தோன்றவே ஓங்கிய வாளுடன் எச்சரிக்கை யாகவே மண்டபத்திற்குள் போனான். இருண்டு கிடந்த அந்த இடத்துக்குள் தீப்பந்த வெளிச்சம் வரவே, சில மூலை முடுக் குளில் இருந்த வௌவால்கள் படபடவென இறக்கையை அடித்துக்கொண்டு அங்குமிங்கும் பறந்தன.
”பெரியவரே! எங்கே இருக்கிறார்கள் மாயவரும் வீரமலை யும்? இந்த இருட்டு மண்டபத்தில் அவர்களால் மூச்சுக்கூட விட முடியாதே!”
இதைக் கேட்டு, சங்கர் வாய் மூடுவதற்குள் அந்தக் கிழவன் பயங்கரமாக சிரிக்கத் தொடங்கினான். அதற்குள் மண்டபத் தின் வாசற்கதவு வெளிப்புறமிருந்து மூடப்பட்டது. சங்கர், ஏதோ ஒரு சதியில் சிக்கிவிட்டதாக முடிவு செய்து கொண்டு ஓங்கிய வாளுடன் வாசற்பக்கம் பாய்ந்தோடி அந்தக் கதவைக் காலால் உதைப்பதற்குள், ஒரு இரும்புச் சங்கிலி அவன் உடலை அழுத்திப் பின்னுக்குத் தள்ளியது. அந்தச் சங்கிலிப் பிணைப்பை அறுத்தெறிந்திட வாளைக் கீழே வீசிவிட்டு இரு கரங்களையும் சங்கர் பயன்படுத்திட முனைந்தபோது மற்றொரு இரும்புச் சங்கிலி! இப்படி ஒன்றின்மீது ஒன்றாக இரும் புச் சங்கிலிகள் சங்கரைப் பிணைத்திடவே அவன் அத்தனை சங்கிலிகளையும் தனது கைகளால் அழுத்திப்பிடித்து, தன்னை விடுவித்துக் கொள்ள முழு வேகத்தையும் காட்டியபோதுதான் அந்தச் சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு, ஐம்பது வீரர்கள் தன்னை அங்குள்ள தூணோடு தூணாக இறுக்குவது தெரிந்தது. மண்டபத்தின் பின்புற வாசல் வழியாகவும் ஏராளமான வீரர் கள் உள்ளே நுழைந்து வாள், வேல், ஈட்டி போன்ற ஆயுதங் களுடன் சங்கரைச் சூழ்ந்து கொண்டனர். ஏராளமான இரும் புச் சங்கிலிகளால் தூணில் கட்டுண்டுவிட்ட சங்கரை நோக்கி இடியொலியெனச் சிரித்துக்கொண்டே வந்தான் அந்தக் கிழவன்!
”சங்கர்! என்னைத் தெரியவில்லையா உனக்கு?”
“ஏன் தெரியாது? நேருக்கு நேர் எங்களை எதிர்க்க முடி யாமல் யாரோ ஒரு கோழை, வஞ்சக வயோதிகனாக வந்து ஏமாற்றியிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது!”
இதோ பார்! இன்னும் உனக்குத் தெளிவாகவே தெரி யும்! பிரியமாக அழைத்தாயே, பெரியவர் என்று அந்தப் பெரியவர் யார் தெரிகிறதா? நான்தானடா மாந்தியப்பன்!’
கிழவன், தனது தாடியை அகற்றி, முகத்தில் பூசியிருந்த வண்ணத்தை அழித்து, நிமிர்ந்து நின்று மாந்தியப்பனாகத் தோன்றி மீண்டும் பயங்கரமாகச் சிரித்தான்.
”முட்டாளே! என்னை நம்பிவிட்டாய் அல்லவா? செம்ப குலன், வேடன் உருவத்தில் வந்திருக்கிற செய்தியையும் மரகதப்பச்சை மாணிக்கக்கிளி, ஒரு மாயை என்பதையும் உன்னிடத்தில் எப்படிச் சொன்னேன் என்று ஆச்சரியப்படுவாய் இப்போது? அந்த உண்மையைச் சொன்னதால்தான் நீ என்னை நம்பினாய! நீ என்னிடம் சிக்கிவிட்டால் மீண்டும் போய் செம்பகுலன் சூழ்ச்சியை அம்பலப்படுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும்! அதனால்தான் அந்த ஒரு உண்மையைத் தூண்டில் முள் தீனியாக வைத்து உன்னை வசமாகச் சிக்க வைத்து விட்டேன்.”
இனி எதுவும் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்ட சங்கர், மாந்தியப்பனைப் பார்த்து ஏளனமாகப் புன் னகை புரிந்தவாறு “ஆகா! உன் அதி அற்புதமான வீரத்தை நான் பாராட்டுகிறேன்” என்றான்.
வெற்றி மிதப்பில் எல்லையற்ற இறுமாப்புடன், தலையூர் வீரர்களைப் பார்த்த மாந்தியப்பன், “உம்! ஜாக்கிரதை! இவன் தப்பி விடக்கூடாது! தப்பிவிட முயற்சித்தால் இவன் தலை இவன் கழுத்தில் இருக்கக்கூடாது!” என்று உரக்கக் கத்திக் கூச்சலிட்டுவிட்டு அந்த இடத்தை விட்டகன்றான்.
அந்த மண்டபத்தின் வாசலில் கட்டப்பட்டிருந்த குதிரை. சங்கருக்கு உள்ளே ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டது போலும்! தன்னைக் கட்டியுள்ள இடத்தி லிருந்து எப்படியாவது அறுத்துக்கொண்டு வளநாடு போய்விட வேண்டுமென அது கருதியது! சங்கர் இல்லாமல் தனியாக தான் சென்றாலே, சங்கருக்கு ஏதோ ஆபத்து என்பதை வள நாட்டில் அனைவரும் புரிந்து கொள்வார்கள்! அதற்காக, அது கட்டவிழ்த்துக்கொண்டு ஓட பெருமுயற்சி செய்தது!
இரவு முழுவதும் முயற்சித்தும் கூட அதனால் முடியவில்லை.
50. வெள்ளாங் குளத்தில் விஷப் பரீட்சை!
பொழுது விடிந்தது. ஆனால் தயங்கித் தயங்கி விடிந்தது. காரிருள் அகற்றிக் கதிர் கிளம்பிற்று என்றாலும் கிழக்குத் திசையை முற்றுகையிட்டிருந்த கன்னங்கருத்த முகில்களை விலக்கிக் கொண்டு வெளிவரவும் ஒளி தரவும் ஏனோ தயக்கம் காட்டிற்று!
வளநாட்டு அரண்மனையின் அலங்காரக் கூடத்தில் பொற் கொல்லர்கள் எழுவர் அமர்ந்திருந்தனர், அடக்கமே உருவெடுத்தவர்களாக! ஒரு மூலையில் வேடன் வேலப்பன் மிகுந்த பவ்யமாக ஒடுங்கி நின்று கொண்டிருந்தான். பொன்னர், அருக்காணித் தங்கத்துடன் கூடத்தில் பிரவேசித்தான். முத் தாயி, பவளாயி இருவரும் அந்தக் கூடத்தின் ஒரு பகுதியில் திரையிடப்பட்ட மாடத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த னர். பொன்னர் வந்தமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மரகதப் பச்சை மாணிக்கக் கிளி இருந்த பேழை பொன்னரின் அந்தப் புரத்திலிருந்து அந்த அலங்காரக் கூடத்திற்குக் கொண்டுவரப் பட்டது. பொன்னர் பொற்கொல்லர்களிடம் சொன்னான்.
“இந்தப் பேழைக்குள்ளிருக்கும் கிளி மரகதத்தினாலும், மாணிக்கத்தினாலும் தங்கத்தினாலும் செய்யப்பட்டது. அதன் விலையை மதிப்பிட்டு நீங்கள் சொல்வீர்களேயானால் – அதற் குரிய பொன் நாணயங்களை இதோ இந்த வேடன் வேலப் பனுக்கு நான் கொடுத்து விடுவேன். அந்தப் பணத்தைக் கொண்டு நமது பெரிய காண்டியம்மன் கோயிலுக்கு இவன் கும்பாபிஷேகம் செய்யப்போகிறான்.”
பொற்கொல்லர்கள் எழுந்து வணங்கிப் பொன்னரைத் தொழுது விட்டு, அந்தப் பேழையைத் திறந்தனர். ஒளிமழை கொட்டும் மரகதப் பச்சை மாணிக்கக் கிளியைக் கண்டதும் ஆச்சரியத்தால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பொன்னர், மேலும் தொடர்ந்து பேசினான்.
அரண்மனையில் நாம் விலைக்கு வாங்கப் போகிறோம் என்பதற்காக மதிப்பைக் குறைத்துக் கூறிவிடாதீர்கள்! உரிய விலை எதுவோ அதனை மறைக்காமல் சொல்லுங்கள்!’
“அப்படியே ஆகட்டும் அரசே!” எனப் பொற்கொல்லர்கள் ஏழு பேரும் ஒரே நேரத்தில் கூறிவிட்டு அந்தக் கிளியை நோட்டம் விட்டனர். ஒரு பொற்கொல்லர், தன் கையில் வைத்திருந்த நாய்த் தோல் துண்டு ஒன்றினால் கிளியின் கால் நகங்களாக அமைக்கப்பட்டிருந்த மாணிக்கக் கற்களைத் தேய்த் துப் பார்த்தார். இன்னொருவர் பூதக்கண்ணாடி போன்ற ஒரு கருவிகொண்டு கிளி உருவத்தில் பதித்துள்ள எல்லா கற் களையும் மிக கூர்மையாக ஆராய்ச்சி செய்தார். ஒருவர், கிளி இருந்த அந்த தங்கக் கூண்டினைத் தரையிலிருந்து ஒரு முழ உயரம் தூக்கிக் கொத்து மதிப்பாக அதன் எடையை உன்னிப் பாகக் கணக்கிட்டார். இவ்வாறாக ஒவ்வொரு பொற்கொல்ல ரும் தங்களின் ஆய்வுகளைச் செய்து கொண்டே ஒருவருக் கொருவர் வியப்பு மேலிட விழிகளால் ஏதோ சாடை செய்து கொண்டனர். அந்த ஏழு பேருடைய பார்வையும் அந்தக் கூடத்து மூலையில் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்த வேடன் வேலப்பன் மீது ஒருசேரப் பாய்ந்ததைப் பொன்னர் கண்டு விட்டு,”என்ன? இவ்வளவு விலை உயர்ந்த பொருள் இந்த வேடனுக்கு எப்படிக் கிடைத்தது என்று பார்க்கிறீர்களா? என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
பொற்கொல்லர்கள் மீண்டும் ஒருவரையொருவர் நோக்கிய வாறு, ‘நீர் சொல்லும்!” ”நீர் சொல்லும்!” என்று முடுக்கி விட்டுக் கொண்டிருந்தனர் சைகைகள் மூலமாக!
”ஏன் தயக்கம்? எவ்வளவு தொகையானாலும் பரவாயில்லை. தருவதற்கு நான் தயார்! சொல்லுங்கள் விலையை!” என்று வலியுறுத்தினான் பொன்னர். அதற்கு மேலும் பேசாம லிருப்பது சரியல்ல என்ற துணிவுடன் அவர்களில் மூத்தவரான ஒரு பொற்கொல்லர் முன்வந்து பொன்னருக்குப் பதில் அளித்தார்:
“அரசே! இந்தக் கிளி மரகதப் பச்சையுமல்ல, மாணிக்கமும் அல்ல! எல்லாமே போலி! மட்டமான கற்களுக்குப் பட்டை தீட்டி -வெள்ளியால் செய்து தங்க முலாம் பூசிக் கொண்டு வரப்பட்டிருக்கிறது!”
பொன்னர், ஆத்திரத்துடன் ‘என்ன?’ என்று கர்ச்சித்துக்கொண்டே எழுந்துவிட்டான். ” நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்பது போல மற்ற பொற்கொல்லர்களை நோக்கி னான். அவர்களும் “ஆமாம் அரசே! அவர் சொல்வதே சரி! வெள்ளிக்கு வேண்டுமானால் விலை மதிப்பிடலாம் மற்ற படி மரகதம், மாணிக்கம், தங்கம் என்பதெல்லாம் பொய்! முழுப் பொய்!” என்று ஒன்று போலக் கூறினர்.
பொன்னர், தனது பாதங்களை அந்தக் கூடத்துத் தரை அதிர ஊன்றி வேலப்பனை நோக்கி நடந்து வந்து என்னப்பா இது சூழ்ச்சி?” என்று உறுமினான்.
“சூழ்ச்சியா? சூதுவாது கள்ளம் கபடம் அறியாத இந்த வேடனுக்கு சூழ்ச்சி என்பது சுட்டுப் போட்டாலும் வராத குணம் அய்யா! நேற்று சாயங்காலம் நான் உங்களிடம் கொடுத்த கிளியும் கூண்டும் அசல் மரகதம்! அசல் மாணிக்கம்! அசல் தங்கம்! அய்யா பொற்கொல்லர்களே மறுபடியும் ஒருமுறை நன்றாகச் சோதனை செய்யுங்கள்! அவசரப்பட்டு எதுவும் முடிவு செய்து விடாதீர்கள்! நான் கொடுத்ததும் அரசர் வாங் கிப் பத்திரமாக வைப்பதாகச் சொன்னதும் விலை. மதிப்பே யில்லாத மரகதப்பச்சை மாணிக்கக்கிளியேதான்! அதுவும் தங் கக் கூண்டில்! வெள்ளிப் பேழையில்! தயவுசெய்து மீண்டும் பாருங்களய்யா, உங்களுக்குப் புண்ணியம் உண்டு!’ என்று வேலப்பன் அந்தக் கூடத்தில் கூத்தாடி தீர்த்துவிட்டான்.
மூத்த பொற்கொல்லர், தனது பொக்கைவாய் தெரியச் சிரித்துக்கொண்டே பத்து முறை உரைத்துப் பார்ப்பதால் பித்தளை, தங்கமாகிவிடுமா? எத்தனை முறை பார்த்தாலும் எங்கள் முடிவு ஒரே முடிவுதான் – இது போலி! போலி! போலி!” என்று சப்தம் போட்டுச் சொன்னார்.
“அப்படியானால் நான் அரசரிடம் ஒப்படைத்த அசல் கிளி எங்கே?”
வேடனின் வினாவுக்குப் பொன்னர் அளித்த விடை, “இதுதான் நேற்று மாலை நீ என்னிடம் ஒப்படைத்த கிளியும் கூண்டும்!” என்பதுதான்.
“இல்லையரசே இல்லை! அய்யா பொற்கொல்லர்களே! நீங் களே சொல்லுங்கள் – இது நான் கொடுத்த கிளியா? அந்தக் கிளி அழகான கிளி! அம்சமான கிளி! அத்தனையும் மரகதப் பச்சை! கண்ணைப் பறிக்கும் மாணிக்கக் கல்! தகதகக்கும் தங்கம்!”
வேலப்பன் அலறி அழுதுவிட்டான் அந்த அபாரமான நடிப்பை உணர்ந்துகொள்ள இயலாத மூத்த பொற்கொல்லர், அது என்னவோ நீ அரசரிடம் கொடுத்த கிளியைப் பற்றி எமக்குத் தெரியாது! ஆனால் இந்தக் கிளி மரகதமுமல்ல மாணிக்கமுமல்ல – வெறும் மண்ணாங்கட்டிக் கிளி!” என்று சிடுசிடுத்தார்.
வேலப்பன் அந்த அலங்காரக் கூடத்தின் உச்சியில் தலை முட்டிக் கொள்ளுமோ என்று அஞ்சுகிற அளவுக்கு எழும்பிக் குதித்தான்.
“அரசே! ஒரு ராத்திரிக்குள் எப்படி என் கிளியை அபகரித் துக் கொண்டு, அதேமாதிரி ஒரு போலிக் கிளியைத் தயாரித்து என்னை ஏமாற்றப் பார்த்தீர்கள்?”
‘என்ன சொல்கிறாய் நீ? என்னைத் திருடன் என்றா சொல் கிறாய்? மோசக்காரன் என்றா மொழிகிறாய்?”
“சொல்லவில்லை அரசே! ஆனால் அப்படி நினைக்கும் படிச் செய்துவிட்டீர்களே! குன்றுடையார் குடும்பம் என்றால் பண்பாளர் குடும்பம் என்று கொடிகட்டிப் பறந்த காலம் போய் – இந்தப் பரிதாபத்துக்குரிய வேடனின் பாபத்தைக் கொட்டிக் கொள்ளலாமா அரசே?”
“என் கோபத்தைக் கிளறாதே! நீ கொடுத்த கிளி இதுவே தான்!”
“இல்லை அரசே இல்லை! என்னுடைய அசல் கிளியை மறைத்து விட்டுப் போலிக் கிளியைச் செய்து ஏமாற்றுகிறீர்கள்! அரசே! என்னை ஏமாற்றினாலும் பரவாயில்லை பெரிய காண்டியம்மனுக்கு நான் செய்து கொண்ட பிரார்த்தனையை நிறைவேற்ற முடியாமல் வீணாகப் பெரும் பழியைத் தேடிக் கொள்கிறீர்கள்!
“வேடனே! அந்தப் பெரிய காண்டியம்மன் மீது சத்திய மாகச் சொல்லுகிறேன் – இதுதான் நேற்று மாலை நீ என்னி டம் கொடுத்த கிளி!”
“நானும் பெரிய காண்டியம்மன் சத்தியமாகச் சொல்லு கிறேன். நான் கொடுத்த கிளி வேறு – இது வேறு!”
“என்னுடைய நேர்மையையும் நாணயத்தையும் கேள்விக் குறியாக்கி இதோ என் ராஜ்யத்துப் பொற்கொல்லர்கள் முன்னிலையில் என்னைக் கேடுகெட்டவனாகவும் ஆக்க முயற்சிக்கிறாயா?”
அப்போது மூத்த பொற்கொல்லர் குறுக்கிட்டார்:
“அரசே! ஒரு சாதாரண வேடனுக்குச் சமமாகத் தாங்களும் சத்தியம் செய்து என்ன செய்து என்ன பலன்? தங்கள் சொல்வதுதான் உண்மையென்றால் இவனை அடித்து விரட்ட வேண்டியது தானே? அல்லது நமது கோட்டைச் சிறையில் இந்தப் பொய்ய னைத் தள்ள வேண்டியதுதானே!”
பொன்னர், சிறிது சினம் தணிந்தவனாக அந்தப் பொற் கொல்லர்களைப் பார்த்து விளக்கமளித்தான்:
“நீங்கள் சொல்வதை ஒரு நொடியில் செய்துவிடலாம்! ஆனால் இவனால் என் நாணயத்தின் மீது எழுப்பப்பட்டுள்ள சந்தேகத்திலிருந்து நீங்களேகூட விடுபட மாட்டீர்களே அதனால்தான் யோசிக்கிறேன்!”
அப்போது வேலப்பன் தனது கை ஓங்கிவிட்டது என்ற தைரியத்தில் மனதுக்குள் மகிழ்ச்சியுற்று – ஆனால் பெரும் இழப்புக்கும் மோசத்துக்கும் ஆளானவனைப் போல முகத்தை வைத்துக் கொண்டு,
“அய்யா பொற்கொல்லர்களே! பெரிய காண்டியம்மன்மீது நானும் சத்தியம் செய்திருக்கிறேன். அரசரும் சத்தியம் செய்தி ருக்கிறார். உண்மை என்னவென்றால் பொருளை இழந்து நிற் பவன் நான். அதை அபகரித்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி நிற்பவர் அரசர்! அதனால் அரசர்தான், தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்!” என்று உரக்கக் கூவினான்.
“நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க எந்த சோதனைக்கும் உட்படத் தயாராக இருக்கிறேன்’ என்று பொன்னர், அந்தக் கூடத்திலிருந்த பெரிய தூணில் ஓங்கி அறைந்தான். அப்போது அருக்காணித் தங்கம் துள்ளிக் குதித்து அவன் முன்னால் வந்து நின்று “என்ன அண்ணா, நீங்களே இப்படி ஆலோசிக்காமல் அவசரப்படுகிறீர்கள்? எவனோ ஒரு எத்தன் – யாராலேயோ தூண்டிவிடப்பட்டு களங்கமற்ற உங்கள் மீது ஒரு கற்பனையான குற்றச்சாட்டை சுமத்துகிறான் அதிலிருந்து விடுபட அந்தக் கயவனிடமே வழி கேட்பது நியாயமா அண்ணா? வேண்டாம்! வேண்டாம்!” என்று கதறினாள். அவளை அணைத்துக் கொண்டு அமைதியாகப் பொன்னர், ‘அருக்காணி! கவலைப் படாதே! கற்பனையாகவோ எப்படியோ என்மீது ஒரு பழி சுமத்தப்பட்டு விட்டது! இதை இந்தப் பொற்கொல்லர்கள் நம்பமாட்டார்கள் என்றாலும் ஏதோ ஒரு உறுத்தல் இவர் களில் ஒருவரது உள்ளத்திலாவது இருந்தே தீரும்! அதையும் போக்கிக்கொள்ள வேண்டியது என் கடமை! தயவுசெய்து குறுக்கே நிற்காதே!’ என்றவன், வேலப்பனைப் பார்த்து – “நீ என்னப்பா சொல்லுகிறாய்?” என்று கேட்டான்.
“நான் கொடுத்த கிளி இதுவல்ல அது அசல்! இது போலி! இதை எத்தனை கோயில்களில் வேண்டுமானாலும் சத்தியம் செய்ய நான் தயாராயிருக்கிறேன். ஆனால் அரசர் என் பொருளை அபகரிக்கவில்லையென்பது உண்மையானால் அதற்கு ஒரே ஒரு சோதனை!”
“என்ன சோதனை? அதைச் சொல்!”
வேலப்பன் சிந்திப்பதுபோல் பாவனை செய்துவிட்டுச் சொன்னான்:
“வெள்ளாங்குளம் ஏரிக்குப் போய் அங்கே ஏரியின் வெண் கல மதகில் உட்குமுழியில் புகுந்து வெளிக்குமுழியில் எழுந்து வரவேண்டும். பெரிய காண்டியம்மன்மீது சத்தியம் செய்து விட்டு உட்குமுழியில் மூழ்க வேண்டும். பிறகு வெளிக் குமுழி யில் வரவேண்டும். பொய் சத்தியம் செய்தால், அந்த உட் குமுழியே தங்கள் உயிரை வாங்கி விடும் என்ற வேடன் வேலப்பனின் வார்த்தையைக் கேட்டு, பொன்னர் தனது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, “இதோ! நான் இப்போதே புறப்படுகிறேன்!” என்று கிளம்பிவிட்டான்.
“அண்ணா!” என்று திகைப்புற்ற அருக்காணித் தங்கம் மீண்டும் அவனைத் தடுத்திட முனைந்தாள்.
“பெரிய காண்டியம்மன் என் நேர்மையை நிலைநாட்ட வைத்துள்ள பரிட்சையில் நான் வெற்றி பெற்று வருவேன்’ என்று அவளை சமாதானப்படுத்திவிட்டு, கூடத்து மாடத்தில் சோக உருவங்களாகக் காட்சியளித்த முத்தாயி பவளாயி இரு வரையும் பார்த்தான். “அஞ்சாதீர்கள்” என்பதுபோல அவர்களை நோக்கிக் கையசைத்துவிட்டு கூடத்தை விட்டு அகன் றான் அரிமா நடை போட்டப்படி!
அவனைத் தொடர்ந்து வேடன் வேலப்பனும் பொற்கொல்லர்களும் சென்றனர்.
அண்ணன் போவதையே கண்கள் கலங்கிடப் பார்த்துக் கொண்டு நின்ற அருக்காணியிடம் முத்தாயி பவளாயி இரு வரும் பரபரப்புடன் ஓடி வந்தனர். அவர்களது கண்களிலும் குளங்கள், இமைக்கரைகளை உடைத்துக்கொண்டு காட்சி தந்தன.
“எங்களுக்கென்னமோ மிகவும் பயமாக இருக்கிறது. உன் அண்ணன் சிறிதுகூட யோசித்துப் பார்க்காமல் அந்த வேடன் விரித்த வலையில் விழுந்து விட்டாரே!”
தேம்பியழத் தொடங்கிய முத்தாயியை அருக்காணி சமா தானப்படுத்த முயற்சி செய்தாள் எனினும் அவளையும் ஒரு இனந்தெரியாத அச்சம் ஆட்டிப்படைத்துக் கொண்டுதானிருந் தது. வெள்ளாங்குளம் ஏரியின் வெண்கல மதகின் உட்குமுழி என்பது படுபாதாளத்திற்கு ஆட்களை சுழற்றி இழுக்கக் கூடி யது. அத்தகைய பயங்கரமான சக்திவாய்ந்த உட்குமுழியை எதிர்கொள்ளப் பொன்னரை அந்த வேடன் சம்மதிக்க வைத்த தில் பெரியதோர் சதித் திட்டம் இருப்பதாகவே அவள் கருதி னாள். இருந்தாலும் அதில் உள்ள ஆபத்தைத் தனது அண்ணி யார்களிடம் தெரிவித்தால் அவர்கள் மிகவும் துடித்துப் போவார்கள் என நினைத்துத் தன்னை சமாளித்துக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல். கூறினாள்.
“நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்! பெரிய காண்டியம்மன் நமக்கு ஒரு குறையும் வைக்கமாட்டாள். மாயவரைத் தேடிப் போன சின்ன அண்ணாவும் சீக்கிரம் வந்துவிடுவார். அவர் வந்ததும் அவரிடம் விபரத்தைச் சொல்லி வெள்ளாங்குளம் ஏரிக்கு அனுப்பி வையுங்கள். நான் பெரிய காண்டியம்மாளின் பாதங்களில் விழுந்து அண்ணனுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளப் போகிறேன்.
அருக்காணி இதைச் சொன்னதும் முத்தாயி பவளாயி இரு வரும் கண்களை மூடிக்கொண்டு கரங்கள் குவித்து “அம்மா தாயே – பெரியகாண்டி தேவி! அவரைக் காப்பாற்று!’ எனத் தொழுதனர். அவர்களின் விழிகளில் இருந்து பொல பொல வென நீர் கொட்டியது. தனது கண்களைத் துடைத்துக் கொண்டு, அருக்காணித் தங்கம் அப்போதே பெரிய காண்டியம்மன் கோயிலைத் தேடி விரைந்தாள்.
கோயிலுக்குள் நுழைந்ததும், அவளையுமறியாமல் ”அம்மா!” என்று ஓலமிட்டு அழுது கொண்டு பெரிய காண்டியின் சிலை முன்னர் விழுந்தாள்.
– தொடரும்…
– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1987, குங்குமம் இதழ்.