பேருந்தில் வந்த பேரழகி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 5,983 
 
 

அலுவலகத்திலிருந்து களைத்து வீடு திரும்பியபோது எனக்காகக் காத்துக் கொண்டிருந்தான் நண்பன் பிச்சமுத்து.

“வாடா, ஏன் தாமதம்..?” என்றான்.

“அலுவலகத்துல எனக்கு மேலே இருந்த அதிகாரி திடீர்னு வேலையை ராஜினாமா பண்ணிட்டார். இப்ப எல்லா வேலையும் என் தலையில விழுந்துடுச்சு.” என்றவாறே காலணிகளைக் கழற்றினேன்.

“அப்ப உனக்கு கூடிய சீக்கிரம் பதவி உயர்வு கிடைக்கப்போகுதுன்னு சொல்லு.” என கிண்டலடித்தான் பிச்சமுத்து.

“அதெல்லாம் அவ்வளவு லேசுல கொடுத்துடமாட்டானுங்க. மாடு மாதிரி உழைக்கணும்…” என்று நான் சொல்லிக்கொண்டே நாற்காலியில் அவனுக்கெதிரில் அமரவும், ஆவி பறக்கும் காபியோடு அம்மா சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.

“உன்னோட நண்பன் ஒரு நல்ல செய்தியோடு வந்திருக்கான். அவனை இவ்வளவு நேரம் காக்கவெச்சுட்டியே..?” என்றாள் அம்மா.

காபியை வாங்கி உறிஞ்சிக்கொண்டே, “அடடா… அப்படி என்னடா அந்த நல்ல சேதி..?” என்றேன் அவனைப் பார்த்து.

“வர்ற ஞாயிற்றுக்கிழமை எனக்காகப் பொண்ணு பார்க்கப் போறாங்கடா. நீயும் என்கூட அவசியம் வரணும்.” என்றான் அவன்.

“அப்படிப்போடு அருவாள. என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.” என்றவாறு அவன் கையைப் பற்றிக் குலுக்கினேன்.

“நீ கூட இருந்தா எனக்குக் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்.”

“எப்பப் போறதா சொன்னே..?”

“வர்ற ஞாயிற்றுக்கிழமை.”

நான் நாட்காட்டியைப் பார்த்தேன்.

“அச்சச்சோ… என்னால வரமுடியாதுடா…” என்றேன்.

“ஏண்டா, என்னாச்சு..?” என பதறினான் பிச்சமுத்து.

“அலுவலக விஷயமா திருப்பத்தூருக்குப் போகணும்.”

“ஞாயிற்றுக்கிழமையிலுமா..?”

“ஆமாண்டா. திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு ஒரு ஆலோசனைக் கூட்டம் இருக்கு. அதனால ஒரு நாள் முன்னதா போய் விடுதியில் தங்கிட்டு அடுத்த நாள் கூட்டத்தில் கலந்துக்கணும். இது எங்க மேலதிகாரியோட உத்தரவு.”

பிச்சமுத்துவின் முகம் ‘பொசுக்’கென்று சுருங்கிப்போனது.

“நீ கண்டிப்பா வருவேன்னு எதிர்பார்த்தேன்…” – ஏமாற்றத்தின் அடையாளம் அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

“என்னடா பண்றது? அலுவலக வேலையாச்சே, தட்டமுடியுமா?”

“சரிடா, நான் கௌம்பறேன்.”

அவனை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தேன்.

அடுத்து வந்த நாட்களில் நான் அலுவலகப் பணியில் ஒன்றிப் போனேன். நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

ஒரு மாதம் கழித்து பிச்சமுத்துவைப் பார்த்தேன்.

“என்னடா, எப்ப கல்யாணச் சாப்பாடு போடப்போறே..?” என்று கேட்டேன்.

“ப்ச்… அதுக்கு இன்னும் நாள் கூடி வரலைடா.” என்றான், விரக்தியாய்.

“ஏண்டா, பொண்ணு பார்க்கப்போனியே, என்னாச்சு..?”

“அதை நிராகரிச்சுட்டேன்.”

“ஏண்டா..?”

“பொண்ணு பிடிக்கலை.”

“அப்படியா? சரி விடு. வேறு பொண்ணு அமையாமலா போகப் போகுது?” என்றேன் ஆறுதலாய்.

“கல்யாணம்னாவே பயமா இருக்குடா…” என்றான் அவன்.

“ஏண்டா..?”

“நல்ல பெண்ணை தேர்ந்தெடுக்கறது அவ்வளவுச் சுலபமான வேலையா எனக்குத் தோணல. கல்யாணங்கறது ஆயிரங்காலத்துப் பயிர். அதனால, ரொம்ப, ரொம்ப ஜாக்கிரதையாத்தான் செயல்படணும். எடுத்தேன், கவிழ்த்தேன்னு செயல்பட முடியாது.”

நான் அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ஒரு பொருள் நமக்குப் பிடிக்கலைன்னா அதை எடுத்து வீசிடலாம். ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு பொண்ணு பிடிக்கலைன்னா அவ்வளவு சுலபமா அவளை உதறிவிட முடியாது. அதனாலத்தான் ஒரு பெண்ணை வாழ்க்கைத்துணையா தேர்ந்தெ டுக்கறதுக்கு முந்தி பல விதத்துல யோசிக்க வேண்டியதா இருக்கு…”

அவன் ஏதோ உளறுவதாகப்பட்டது எனக்கு.

இருந்தாலும், பிச்சமுத்துவை எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும். எந்தப் பொருளை வாங்கினாலும் நன்கு அலசி, ஆராய்ந்துதான் வாங்குவான். அழகான பொருளைப் பார்த்துவிட்டால் போதும், அதை உடனே வாங்கிவிடுவான். விலையைப் பற்றி துளியும் கவலைப்படமாட்டான். அழகை ஆராதிப்பவன்.

அப்பேர்ப்பட்டவன் ஒரு பெண்ணை நிராகரித்திருக்கிறான் என்றால் கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்கும். அவளுக்கு மாறு கண்ணோ, நிறம் கம்மியோ அல்லது வேறு ஏதும் குறைபாடோ இருக்கலாம். என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ஒரு வேலை விஷயமாக குடியாத்தம் போக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன்.

திடீரென என் தோள் மீது ஒரு கை…

திடுக்கிட்டுத் திரும்பினேன்.

நண்பன் பிச்சமுத்துதான்.

“அட, நீயா? நான் யாரோன்னு பயந்துட்டேன்.” என்றேன்.

“சரி, எங்கே கிளம்பிட்டே?” என்று கேட்டான்.

“குடியாத்தத்தில் ஒரு சின்ன வேலை. அதான்…”

“நீ எங்கே புறப்பட்டுட்டே..?”

“நான் ஆற்காடு வரை போறேன்.” என்றான்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பேருந்து வந்து நின்றது.

பயணிகள் ஏற ஆரம்பித்தனர்.

திடீரென பிச்சமுத்து என் காதில், “டேய், குடியாத்தம் போற பேருந்துல ஜன்னலோரமா ஒரு பொண்ணு உட்கார்ந்திருக்கா பார்…” என்று கிசுகிசுத்தான்.

நான் ‘சட்’டென தலையை உயர்த்திப் பார்த்தேன்.

பார்த்தமாத்திரத்தில் மயங்கிப்போனேன்.

படபடக்கும் மான் விழிகள்…

தேன் நிரம்பிய இதழ்கள்…

ஆப்பிள் கன்னங்கள்…

‘பளீர்’ அழகில் காண்போரை சொக்கவைத்துக்கொண்டிருந்தாள் அவள்.

ஒரு குறையும் இல்லாத இந்த தேவலோக சுந்தரியை நிராகரித்திருக் கிறானே..? அப்படி இவளிடம் என்ன குறையைக் கண்டிருப்பான் பாவி? ஊரிலிருந்து திரும்பியதும் இந்தப் பிச்சமுத்துவைப் பிச்சியெடுத்துடறேன். மனதுள் தீர்மானித்துக் கொண்டேன்.

பேருந்து நகரத்தொடங்கியதும், “சரிடா, நான் வர்றேன்…” என்றவாறு தாவிச் சென்று ஏறினேன்.

சொல்லிவைத்தாற்போல் அந்த அழகியின் பின்புற இருக்கைத்தான் கிடைத்தது எனக்கு.

பயணச் சீட்டு எடுத்துக்கொண்டு மீண்டும் அவளை கவனித்தேன்.

நெருக்கத்தில் பார்க்கும்போது இன்னும் அழகாக இருந்தாள் அவள்.

நானாக இருந்திருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ‘சரி’ என்று சொல்லி இருப்பேன். ‘மவனே, உன்னை வந்து கவனிக்கறேன் இரு.’ ஆத்திரமாய் வந்தது.

பள்ளிகொண்டாவில் பேருந்து நின்றபோது நான்கு பேர் இறங்க, இருபது பேர் ஏறினார்கள். பேருந்தில் நெரிசல் கூடியது. இளைஞன் ஒருவன் இருக்கையைப் பிடிக்கும் சாக்கில் அந்த அழகியின் தோளை உரசினான். அவளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை. மாறாக, அவள் அவனை நிமிர்ந்து நோக்கிப் புன்னகைப் பூத்தாள். இந்த சமிக்ஞை போதாதா அந்த மன்மதனுக்கு? அவனுடைய சில்மிஷங்கள் அத்துமீறத் தொடங்கின.

நிற்பதற்குச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த மூதாட்டியொருத்தியை உட்கார வைத்து விட்டு அந்த அழகி எழுந்து நின்றுகொண்டாள். அவளுடைய அந்தச் செயல் திட்டமிட்டுச் செய்ததாகவே தோன்றியது எனக்கு. அதன் பிறகு கேட்கவா வேண்டும்?

குடியாத்தம் வரை இடித்தல், உரசுதல் போன்ற இன்னபிற கண்றாவிச் செயல்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன.

எனக்கு ஒரே ஆச்சரியம். பார்ப்பதற்கு எவ்வளவு நாகரீகமாய்த் தோன்றுகிறாள்? ஆனால், செயலில் மட்டும் ஏன் இந்தக் கீழ்த்தரம்? நல்ல குடும்பப்பாங்கானப் பெண் என நினைத்தால், சரியான காமப் பிசாசாக அல்லவா இருக்கிறாள்?

நான் கண்டு மயங்கியது இவளின் வெளித்தோற்றத்தை மட்டுமே. பிச்சமுத்துவோ இவளின் அக அழகை அல்லவா ஆராய்ந்துப் பார்த்திருக்கிறான்?

வெறும் வெளித் தோற்றத்தை வைத்து எந்த ஒரு பெண்ணையும் அவ்வளவு எளிதில் எடை போட்டுவிடக்கூடாது. அவளுடைய அக அழகையும், குண நலன் களையும் அலசிப் பார்க்கவேண்டும் என்பதை வாழ்க்கையில் முதல் முறையாக, அதுவும் அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன்.

நண்பன் பிச்சமுத்து ஓர் அறிவாளி என்பதை நிரூபித்துவிட்டான். சிறிது நேரத்துக்கு முன் நான் அவன் மீது ஆத்திரப்பட்டதற்கு இப்போது வருந்தினேன். அவன் மூலம் இன்று எனக்கு ஒரு நல்ல படிப்பினை கிடைத்ததற்கு மானசீகமாய் அவனுக்கு நன்றியும் சொல்லிக்கொண்டேன்.

– இச்சிறுகதை 20-06-2020 தேதியிட்ட “மக்கள் குரல்” நாளிதழில் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *