பேராசை பெருநஷ்டம்!
நடேசன் ஒரு பேராசைக்காரன். ஊர் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்தான்.
ஒருநாள் அவன் வசிக்கும் பகுதிக்கு ஒரு துறவி வந்தார்.
அவரைச் சந்தித்த நடேசன், “”எனக்கு இன்னும் அதிகமாகப் பணம் வேண்டும்… அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
“”நீ உனது வீட்டுக்கு வரும் பிச்சைக்காரனுக்குத் தினமும் பிச்சை போடணும்… நீ எவ்வளவு கொடுக்கிறாயோ, அது இரட்டிப்பாகி, என் அருகே இருக்கும் இந்த மந்திரப் பையில் இருக்கும்! நீ தினமும் மாலையில் வந்து அதைப் பெற்றுக் கொள்ளலாம்…” என்றார்.
நடேசனுக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது.
“நாம் போடும் காசெல்லாம் இரட்டிப்பாகும் என்றால், எவ்வளவு பணம் கிடைக்கும்? ம்… நாம் ரொம்ப அதிர்ஷ்டசாலி’ என்று எண்ணிக் கொண்டே வீட்டுக்குச் சென்றான்.
மறுநாள் காலையில், ஒரு பிச்சைக்காரன் வந்து வீட்டு வாசலில் நின்றான். அவனுக்கு 5 ரூபாய் கொடுத்தான் நடேசன். மாலையில் துறவியிடம் போனான். அவர் நீட்டிய மந்திரப் பைக்குள் பத்து ரூபாய் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, தாங்க முடியாத மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.
இதே போல பல நாட்கள் சென்றன. தினமும் பிச்சைக்காரன் வந்தான். நடேசன் போடும் பணத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே வந்தது. அதற்கு இரண்டு மடங்காக அவனுக்குத் திருப்பிக் கிடைத்தும் வந்தது.
ஒருநாள்… அதிகாலை நேரம்… துறவி அவனிடம் தான் அடுத்த நாள் வேறு ஊருக்குச் செல்லப் போவதாகக் கூறினார். நடேசனுக்கு வருத்தமாகப் போய்விட்டது. அவர் போய்விட்டால் பணம் பெருகுவது நின்று போய்விடுமே என்று எண்ணினான்.
அவர் போவதற்குள் முடிந்த அளவு மந்திரப் பை மூலம் பணம் திரட்டி விடவேண்டுமேன்று தீர்மானித்தான்.
தனது சொத்துக்களையெல்லாம் விற்று, அனைத்துப் பணத்தையும் காலையில் வந்த பிச்சைக்காரனுக்குப் போட்டான்.
மாலையில் துறவியின் இருப்பிடத்துக்குச் சென்றான். அங்கே துறவியும் இல்லை மந்திரப் பையும் இல்லை. ஒரு கடிதம் மட்டுமே இருந்தது.
“”உன் சொத்து முழுவதையும் எனக்குத் தந்ததற்கு நன்றி! நீ புத்திசாலியாக இருந்திருந்தால், இதுவரை கிடைத்தது போதும் என்று நினைத்து சந்தோஷமாக இருந்திருப்பாய். உன் பேராசை உன் சொத்து முழுவதையும் இழக்கச் செய்துவிட்டது. இனிமேலாவது பேராசையின்றி புத்தியோடு பிழைத்துக் கொள்…” என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
நடேசன் அதிர்ந்து போனான்.
– கா.முருகேஸ்வரி (அக்டோபர் 2012)