பேய்! பேய்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 5,574 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எங்கள் ஊரிலிருந்து மேற்கே சுமார் நாற்பது மைல் தூரத்தில் மஹாலிங்க மலை இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அது ஒரு குன்று. அங்கு மஹாலிங்கர் கோயில் இருக்கிறது. ஆடி அமாவாசையன்று அங்கு பெரும் உற்சவம் ஒன்று நடக்கும். உற்சவத்திற்கு ஒரு வாரம் இருக்கும்பொழுதே எங்களூரிலிருந்து மொட்டை வண்டி, கூட்டு வண்டி, வில் வண்டி முதலியவை நூற்றுக்கணக்கில் புறப்படும். ரயில், கார் முதலிய எவ்வகைப் போக்குவரவு சாதனமும், மஹாலிங்கமலை போவதற்குப் பிரயோஜனப்படுவதில்லை. இவ்வருஷம் என் தங்கை லக்ஷ்மியையும் மாப்பிள்ளையையும் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தோம். சாந்திக் கல்யாணம் ஆனபிறகு லக்ஷ்மி இப்பொழுதுதான் பிறந்தகம் வந்திருந்தாள். மாப்பிள்ளை ராமநாதன் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஏஜெண்டு. அவருக்கு மலைப் பிரயாணம் என்றால் வெகு பிரியமாம். எங்கள் ஊரிலிருந்து மஹாலிங்க மலைக்கு வண்டிகள் போவதைக் கண்டதும் அவரும் போக விரும்பினார். ஆகையால் நாங்களும் இவ்வருஷம் ஆடிமாதம் மலைக்குப் பிரயாண மானோம். 

ஒரு வில் வண்டி வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நான், என் தங்கை, மாப்பிள்ளை, அம்மா எல்லோரும் புறப்பட்டோம். புறப்படும்பொழுது இரவு சுமார் எட்டு மணி இருக்கும். எங்கும் மையிருள் சூழ்ந்திருந்தது என்றாலும் வண்டிகள் நூற்றுக் கணக்கில் போய்க் கொண்டிருந்ததால் எங்களுக்குச் சிறிதும் பயமில்லை. அம்மாவுக்கு உடம்பு சௌகரியமில்லை. ஆகையால் கொஞ்ச நேரத்தில் வண்டியிலேயே முடக்கிப் படுத்துக் கொண்டாள். லக்ஷ்மி என்னை ‘ஒரு கதை சொல்லண்ணா’ என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். நானும் அவள் தொந்தரவு பொறுக்கமாட்டாமல், “ஆகட்டும்” என்றேன். 

இதற்குள் மாப்பிள்ளை திடீரென்று, “பேய் பிசாசு உண்டென்று நம்புகிறீர்களா?” என்றார். 

நான் அநாயாசமாக, “பேயாவது பிசாசாவது? மனப்பேய்தான் பேய்” என்றேன். 

“ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் விஷயம் வேறு” என்றார் ராமநாதன். 

“இல்லாமல் என்ன அண்ணா? போன வருஷங்கூட எதிர்த்தாத்து ரங்கத்துக்குக் கறுப்புப் பிடிச்சு, படாத பாடு படுத்தலையோ?” என்றாள் லக்ஷ்மி. 

ராமநாதனை நோக்கி, “நீங்கள் பேய் உண்டென்று நம்புகிறீர்களா என்ன?” என்றேன். 

“நானும் சென்ற வருஷம் குற்றாலம் போகும் வரையில் பேயாவது மண்ணாங்கட்டியாவது என்று தான் இருந்தேன். ஆனால் அங்கு நடந்த ஒரு சம்பவம் என் அபிப்பிராயத்தை மாற்றிவிட்டது” என்றார். 

“என்ன சம்பவம்? சொல்லுங்களேன் கேட்போம்” என்றேன். 

“மிக்க பயங்கர சம்பவம்; சொல்வதற்குக்கூடப் பயமாக இருக்கிறது” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார். 

2

சென்ற வருஷம் ஊரில் எனக்குத் தொழிலே சரியாய் நடக்கவில்லை. என்னடா செய்வது என்று நான் மிகவும் கவலையுடன் இருக்கும்பொழுது குற்றாலத்தில் சாரல் ஆரம்பித்தது. எனக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. குற்றாலத்தில் அநேக பிரபுக்கள் வந்திருப்பார்கள். அங்கே சென்றால் ஏதாவது தொழில் நடக்கும். மேலும் மந்தமாருதத் தென்றற் காற்றையும் அநுபவித்தாற் போல இருக்கும் என நினைத்துக் குற்றாலத்திற்குப் பிரயாணமானேன். அங்கே சென்று பார்த்த பொழுது இருப்பதற்கு ஜாகை எங்கும் கிடைக்கவில்லை. நான் குற்றாலம் முழுவதும் சுற்றி அலைந்தேன். ஆனால் பிரயோஜனமில்லை. கடைசியில் நான் வாடகை வீடு தேடிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒரு குள்ள மனிதன் என்னை நோக்கி வந்தான். 

“ஸார்! ஓர் அழகான வீடு இருக்கிறது. சொற்ப வாடகைதான். உங்களுக்கு வேண்டுமா?” என்றான். 

நான் மிகவும் சந்தோஷத்துடன், ”அதற்காகத் தான் அப்பா இவ்வளவு நேரமாய் அலைகிறேன்” என்றேன். 

குள்ளன் வேறொன்றும் பேசாமல் என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெகு வேகமாகச் சென்றான். கடைசியில் ஒரு வீட்டின் வாசலை அடைந்ததும், சற்று நேரம் தயங்கி நின்றுகொண்டிருந்தான். பின்னும் தனக்குள்ளேயே ‘கிடைக்கும்’ என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தான். நானும் அவன் பின்னால் சென்றேன். நாற்காலியில் ஒரு கிழவனார் உட்கார்ந்து பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார். 

“ஐயா! நமஸ்காரம்” என்றேன். 

அவர் என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்தார். “என்ன சங்கதி? எங்கு வந்தீர்?” என்று கேட்பது போல இருந்தது அவருடைய பார்வை. இதற்குள் என்னைக் கூட்டி வந்த குள்ளன், “ஐயா வீட்டுக்காக வந்திருக்காக ” என்றான். 

“நம்மிடத்தில் வீடு காலியில்லையே” என்றார் கிழவனார். 

என் சந்தோஷத்தில் மண் விழுந்தது. 

“அருவிக் கரையோரத்து வீடு?” என்றான் குள்ளன். 

உடனே கிழவனார் குள்ளனையும் என்னையும் ஆச்சரியத்துடன் பார்த்து, “அதுதான் இருக்கிறதே!” என்றார். 

“அதைத்தான் ஐயா கேட்கிறார்” என்றான் குள்ளன். 

மீண்டும் என்னைக் கிழவனார் மிகுந்த ஆச்சரியத்துடன் நோக்கினார். பின்பு  வீட்டைக் காண்பிப்பதற்குத் திறவுகோலை எடுத்துக் கொண்டு வந்தார். அது உண்மையிலேயே வெகு அழகான வீடாய்த்தான் இருந்தது. ஆனால் அதைத் திறந்து வெகு நாட்களானது போல் தோன்றியது. கிழவனார் வீட்டைச் சுத்தம் செய்து கொடுப்பதாகச் சொன்னார். 

“என்ன வாடகை?” என்றேன். 

“என்ன கொடுப்பீர்கள்?. நீங்கள் தான் சொல்லுங்களேன்” என்றார். 

“எங்களூரிலெல்லாம் இம்மாதிரி வீட்டிற்குப் பத்து ரூபாய் கொடுப்போம்” என்றேன். 

“சரி, அப்படியே கொடுங்கள்” என்றார். 

என் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. குற்றாலத்தில் ஐம்பது ரூபாய் கொடுத்தாலும் அம்மாதிரி வீடு கிடைக்காது. அறுபதுக்கு மேல் கிறுகிறுப்பு என்பார்களே. அப்படி ஏதாவது கிழவனாருக்கு உண்டு போலும் என நினைத்து மிக்க மகிழ்ச்சியுடன் குள்ளனை நோக்கிக் கண்ணைச் சிமிட்டினேன். அவனும் கண் ஜாடை காட்டினான். உடனே நானும் மறு வார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்டேன். கிழவனார் சாவியை என்னிடம் ஒப்பித்துவிட்டுப் போகும் பொழுது ஓர் அறையைச் சுட்டிக் காட்டி, “அதை மட்டும் திறக்கவேண்டாம்” என்றார். 

வீடு கிடைத்த மகிழ்ச்சியில், அவர் என்ன சொல்கிறார் என்பதையே நான் கவனிக்கவில்லை. 

3

அவ்வீட்டில் நான் குடியேறி இரண்டு மூன்று நாட்கள் ஆயின. நான் சிறிது சிறிதாக என் தொழில் வேட்டையை ஆரம்பித்தேன். ஒரு நாள் நான் அருவியில் ஸ்நானம் செய்யச் சென்றேன். செல்லும் வழியில் ஒரு கனவானைச் சிநேகம் பிடித்தேன். என்னுடைய தொழிலே பிறருடைய நட்பையும் அறிமுகத்தையும் பொறுத்த தாகையால், எங்கள் நட்பை வளர்ப்பதற்குரிய வழிகளை நான் தேடிக் கொண்டிருக்கும் பொழுது, அவருக்குத் தமிழ்ப் பைத்தியம் உண்டென்று கண்டேன். உடனே மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகளைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து, “வ.வே.சு.ஐயரின் நடையே ஒரு தனி தினுசு. அம்மாதிரி நடையழகு இக்காலத்தில் யாருக்கு வரும்?” என்றேன். 

“நானும் எதிரொலியாள், அழேன் ழக்கே முதலிய இரண்டொரு கதைகள் படித்திருக்கிறேன். ஆனால் அப்புத்தகம் முழுவதும் படித்ததில்லை” என்றார் அக்கனவான். 

“நான் வேண்டுமென்றால் கொடுக்கிறேன்; படித்துப் பாருங்களேன்?” என்றேன். 

பின்பு ஸ்நானம் முடிந்ததும், புத்தகம் கொடுப்ப தற்காக அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். நான் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டிருக்கும் பொழுது அவர் திடுக்கிட்டு, “தாங்கள் இவ்வீட்டிலா வசிக்கிறீர்கள்?” என்றார். அவர் முகம் பீதியுற்றிருந்தது. 

“ஆம், உள்ளே வாருங்கள்” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே, அவர், “வேஷ்டி ஈரமாய் இருக்கிறது. நான் அப்புறம் வருகிறேன்” என்று சொல்லி நழுவிவிட்டார். 

வலையில் அகப்பட்ட பக்ஷி தப்பித்துக்கொண்டதே என்று நான் மிகவும் வருந்தினேன். 

பின்பு அவர் என் வீட்டிற்கு வரவே இல்லை. 

“ஸார்! சீட்டு விளையாடலாம் வருகிறீர்களா?” என்றார் எதிர்வீட்டு நண்பர் ஒருவர். 

“அதற்கென்ன, விளையாடலாம். நம்ம வீட்டிற்கு வாருங்களேன்?” என்றேன். 

“பரவாயில்லை. இங்கேயே வாருங்கள். இதர நண்பர்களும் இருக்கிறார்கள்” என்றார். 

சீட்டாட்டம் என் தொழிலுக்கு உதவி புரியும் உபகரணங்களில் ஒன்று. ஆகையால் நான் வேறு ஒன்றும் ஆக்ஷேபம் சொல்லாமல் சென்றேன். என்னைக் கண்டதும் சீட்டுக் கோஷ்டியாருள் ஒருவர் திடுக்கிட்டு. “நம்ம எதிர்த்த வீட்டு நண்பரையா கூப்பிட்டீர்கள்? சரி, பரவாயில்லை. எனக்கு அப்பொழுதே பிடித்துத் தலை வலித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் விளையாடுங்கள்” என்று எழுந்து போய்விட்டார். “மூன்று பேர்களுக்குள் என்ன ஆட்டம் போடுவது?” என்று மற்ற இருவரும் எழுந்து போய்விட்டார்கள். 

அவர்களுடைய நடத்தையைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். என்னை அவர்கள் ஒரு தீண்டாதான் எனக் கருதியதுபோலத் தோன்றியது. அவர்கள் மட்டுமல்ல, இதர ஜனங்களும் என்னைப் புறக்கணித்தார்கள். நான் வலியச் சென்று பேசினாலும் சிலர் பேச மறுத்தார்கள். என்னை யாவரும் சமுசயப் பார்வையுடன் நோக்கினார்கள். ஜனங்கள் என் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரி புதுமையாகத் தோன்றியது. நான் வாடகைக்குக் கேட்டபொழுது, கிழவனார்  என்னை ஆச்சரியத்துடன் நோக்கியது, மிகக் குறைந்த வாடகைக்கு அவ்வீட்டை எனக்கு விட்டது. அதில் ஓர் அறையைத் திறக்கக்கூடாது என என்னை எச்சரித்தது, காலையில் கனவான் வீட்டிற்குள் வர மறுத்தது, இப்பொழுது சீட்டுக் கோஷ்டியார் என்னைப் புறக்கணித்தது எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்கையில், அவ்வீட்டில் ஏதாவது விசேஷம் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று. ஆகையால் அதன் மர்மத்தை அநேகரிடம் விசாரித்துப் பார்த்தேன். ஒருவரும் ரகசியத்தைச் சொல்ல முன்வரவில்லை. இறுதியில் ஒருவர் பின்வரும் கதையைச் சொன்னார்: 

இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் அந்த வீட்டில் ஒரு முதலியார் வந்து குடியேறியிருந்தார். அமாவாசை இரவு. ‘கும்’ என்ற இருள் எங்கும் சூழ்ந்திருந்தது. சுமார் பத்து மணி இருக்கும். வெளியில் சாரல் பெய்து கொண்டிருந்தது. அச்சமயம் ஒரு வைர வியாபாரி இருப்பதற்கு இடம் எங்கும் கிடைக்காமல், தெருக்களில் அலைந்துகொண்டே இருந்தார். கடைசியில் அவ் வீட்டுக்கு வந்ததும், அன்றிரவு அங்கேயே தங்கி இருந்துவிட்டுக் காலையில் வேறு இடம் பார்க்கலாம் என்று நினைத்துக் கதவைத் தட்டினார். கதவு திறந்தது. முதலியார் வெளியே வந்தார். வைர வியாபாரி நனைந்து கஷ்டப் படுவதைக் கண்டு முதலியார் மனமிரங்கி அவரை உள்ளே அழைத்துச் சென்று கொஞ்சம் சூடான பால் அவருக்குச் சாப்பிடக் கொடுத்தார். வியாபாரி பாலை அருந்திவிட்டுச் சற்று உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். 

முதலியார் அவரிடம் வந்து, “செட்டியாரையா நான் ஒரு ஜதை வைரக் கடுக்கன் கட்டவேண்டும். தங்களிடத்தில் நல்ல கற்கள் இருந்தால் கொஞ்சம் காட்டுங்களேன்” என்றார். 

“அதற்கென்ன, பாருங்கள்” என்று சொல்லிச் செட்டியார் தம்மிடத்திலுள்ள வைரப் பட்டைகளை எல்லாம் எடுத்துக் காட்டினார். 

அவைகளைப் பார்த்தவுடன் முதலியார் கண்களில் பேராசை ஒளி பிரகாசித்தது. பின்னர், “செட்டியாரையா, உங்களுக்கு அதிகக் கஷ்டம் கொடுத்துவிட்டேன். வைரத்தின் பாகுபாடெல்லாம் பகலில் பார்த்தால்தான் தெரியும். இப்பொழுது எடுத்து வையுங்கள். படுக்கப் போகலாம்” என்றார். 

செட்டியார் அறையில் படுத்துக்கொண்டார். முதலியார் முற்றத்தில் படுத்துக்கொண்டார். 

மறுநாள் காலையில் அருவிக் கரையில் ஒரு பிணம் கிடந்தது. பிரேத விசாரணை செய்தோர், ‘அருவியில் விழுந்து மரணம்’ என்று குறித்துக்கொண்டு போய் விட்டார்கள். 

அன்றைத் தினத்திலிருந்து முதலியார் நாளுக்கு நாள் உடம்பு மெலிந்தார். அவருடைய முகத்தில் அச்சக்குறிகள் தோன்றின. அநேக தடவைகள் நடு ராத்திரியில் எழுந்து கொண்டு, “பேய்! பேய்!” என்று கத்தி வீட்டைத் திறந்துகொண்டு ஓடுவார். அவருடைய செய்கையைக் கண்டு ஜனங்கள் அதிசயித்தார்கள். கடைசியில் ஒரு நாள் காலை அவர் வீடு திறக்கப்படவில்லை. மத்தியான்னம் வெகு நேரம் வரை வீடு மூடப்பட்டிருந்தது. ஜனங்களுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. வீட்டுக் கதவைத் தட்டினார்கள். ஒரு பதிலும் இல்லை. கடைசியில் போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றார்கள். முதலியார் படுத்த படுக்கையிலேயே இறந்து கிடந்தார்! முகம் ஒரு புறமாக வலித்துக் கொண்டு பார்க்கப் பயங்கரமாய் இருந்தது. கால்கைகள் எல்லாம் சுளித்துக்கொண்டிருந்தன. மின்சார சக்தி பாய்ந்து இறந்தவனைப்போல் தோன்றியது. 

அதிலிருந்து அவ்வீட்டிற்கு ஒருவரும் குடி வருவதில்லை. நான் செல்லும் வரை அது அடைக்கப் பட்டே இருந்தது. 

நான் பேய் பிசாசுகளில் நம்பிக்கை இல்லாதவன். என்றாலும் அந்தக் கதையைக் கேட்டபின் தனியே அவ்வீட்டில் இருப்பதற்குப் பயமாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக அவ்வீட்டை விட்டுச் செல்வது கோழைத்தனம் என நினைத்தேன். ஆகையால் ஒரு சமையற்காரனை வைத்து, வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவதெனத் தீர்மானித்தேன். எங்கும் சமையற்காரன் அகப்படவில்லை. ஒன்றிரண்டுபேர் அகப்பட்டவர்களும், நான் அவ்வீட்டில் இருக்கிறேன் என்று அறிந்தவுடன் என்னிடம் வேலை செய்ய மறுத்துப் போய்விட்டார்கள். கடைசியில் கிராமப் புறத்து வாலிபன் ஒருவன், அவ்வீட்டின் மர்மம் தெரியாதவன் அகப்பட்டான். நான் சாதாரணச் சம்பளத்திற்கு இரண்டு மூன்று ரூபாய் அதிகமாகத் தருவதாகச் சொல்லவே, அவன் வெகு சந்தோஷத்துடன் சம்மதித்தான். அவன் பார்வைக்கு நல்ல திடகாத்திரமான வாலிபனாகத் தோன்றினான். உடனே அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று, வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்யச் சொல்லி விட்டு, நான் அவனுக்கு வேண்டிய சாமான்களெல்லாம் வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தேன். சாமான்களை எல்லாம் அவன் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “நீங்கள் சுக்கு வாங்கிக்கொண்டு வரவில்லை போலிருக்கே” என்றான். 

“இல்லை” என்றேன். 

“வீட்டில் சுக்கு இல்லாமல் இருக்கக்கூடாது. வாய்வுக்குத்து, வயித்துவலி, எதுக்குமே அது கைகண்ட மருந்து. திடீரென்று வாயிலே, வவுத்துலே வந்திருச்சுண்ணா, அது கைவசம் இருந்து தீரணும்” என்றான். 

நான் அவன் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. 

அன்றிரவு போஜனம் முடிந்ததும் நாங்கள் படுக்கச் சென்றோம். 

சமையற்காரன் அந்த அறைக் கதவைத் திறந்து, “நான் இதில் படுத்துக்கொள்கிறேன்” என்றான். 

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரிய வில்லை. “ஏன், நீ என்னோடு படுத்துக்கொள்ளேன்” என்றேன். 

“இல்லை, நான் இவ்வறையில் படுத்துக்கொள்கிறேன். பயம் ஒன்றுமில்லை ” என்றான். 

நான் அதுவரையும் அவ்வறையைத் திறந்ததே இல்லை. கிழவனார் எச்சரிக்கைக்காக அல்ல. என்றாலும் அதைத் திறக்கவேண்டிய அவசியமே எனக்கு ஏற்படவில்லை. அவனுக்கு அவ்வறையைப் பற்றிய மர்மங்கள் ஒன்றும் தெரியாமல் இருப்பதே நலம் என நினைத்து, நான் வேறு ஆக்ஷேபம் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டேன். அவன் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுப் படுத்துக்கொண்டான். 

நானும் முற்றத்தில் படுத்துக்கொண்டேன். சுமார் அரைமணி நேரம் சென்றிருக்கும். அறைக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. என்னுடைய ஹிருதயம் தக், தக் என்று அடித்துக்கொண்டது. அறையினின்றும் ஓர் உருவம் வெளியே வந்தது. நான் போர்வையை இழுத்து மூடிக்கொண்டேன். 

“நீங்கள் சுக்கு அப்புறம் வாங்கிக்கொண்டு வரவில்லையா?” என்று சப்தம் எழுந்தது. அது சமையற்காரனுடைய குரல்தான். எனக்குத் தைரியம். பிறந்தது. 

“இல்லை” என்றேன். 

சமையற்காரன் சிறிது அதிருப்தியுடன் “ச்சு” என்றான். 

கதவு மீண்டும் தாழிடப்பட்டது. சமையற்காரன் படுக்கும் சப்தம் கேட்டது. நான் தூங்கிவிட்டேன். 

காலையில் துயிலெழுந்தேன். அறைக்கதவு இன்னும் சாத்தப்பட்டிருந்தது. முதல் நாள் வேலைக் களைப்பினால், சமையற்காரன் அயர்ந்து தூங்குகிறான் போலும் என நினைத்து, நான் அருவிக்கு ஸ்நானம் செய்யச் சென்றேன். ஸ்நானம் முடித்துக்கொண்டு திரும்பிவந்து பார்த்த பொழுது அறைக்கதவு இன்னும் சாத்தப்பட்டிருந்தது. எனக்குச் சந்தேகம் ஒரு புறம், பயம் ஒரு புறம். உடனே போலீசுக்கு ரிப்போர்ட் செய்தேன். சப் இன்ஸ்பெக்டரும் சில போலீசார்களும் வந்து சேர்ந்தார்கள். அறைக் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தோம். சமையற்காரன் படுக்கையில் பிணமாய்க் கிடந்தான்! கொடிய வேதனையால் இறந்தவன் போல் அவனுடைய முகம் விகாரம் அடைந்திருந்தது. பார்த்தோர் அனைவரும் பயந்து நடுங்கிவிட்டார்கள். 

இவ்விடத்தில் லக்ஷ்மி, “ஆ!” என்று அலறி என்னைச் சேர்த்துக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். 

“அப்புறம்?” என்றேன் நான்.

“அப்புறம் என்ன? உடனே வீட்டைக் காலி பண்ணிவிட்டு, அன்று மத்தியான்ன ரெயிலிலேயே ஊர் வந்து சேர்ந்தேன். இப்பொழுது என்ன சொல்கிறீர்? பேய் உண்டென்று நம்புகிறீர்களா?” 

“முதலியார் சாவுக்கும், சமையற்காரன் சாவுக்கும் வேறு காரணங்களும் சொல்லலாம் அல்லவா?” என்றேன் நான். 

“என்ன காரணம்? சொல்லுங்களேன் பார்ப்போம்.” 

“முதலியார் சாவுக்குக் காரணம் வெறும் பயந்தான். தன் வினை தன்னைச் சுடும். வைர வியாபாரியைக் கொன்றது அவரே ஆதலால், தான் கொலைகாரன் என்ற எண்ணமே அவரைக் கொன்றது. அது மனப் பேயே ஒழிய, மனிதப் பேயல்ல. சமையற்காரன் இறந்ததற்குக் காரணம் வேறு. அவன் சுக்கு வாங்கிக்கொண்டு வரச் சொல்லி மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதிலிருந்து, அவன் வாய்வுக்குத்து வியாதிக்காரன் என்று நாம் ஊகிக்க இடமுண்டு. மேலும் அவன் கொடிய வேதனையால் இறந்தது போல் சொன்னீர்கள். அதிலிருந்தும் அவன் வாய்வுக் குத்தினால்தான் இறந்திருக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்” என்றேன்.

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *