பேய்கள் ஜாக்கிரதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 510 
 
 

(அஸ்ஸாம் பழங்குடிக் கதை)

ஓண்டா என்னும் வறிய யாசகர் தனது கிராமத்தில் மனைவி மற்றும் நிறையக் குழந்தைகளோடு வசித்துவந்தார். அன்றாடமும் காலையில் நேரத்திலேயே எழுந்து அண்டை கிராமங்கள் தோறும் பிச்சை எடுக்கச் சென்று, இருட்டும் முன்பு வீடு திரும்பிவிடுவார். அவர் பெறும் யாசகத்தில்தான் மொத்தக் குடும்பமும் அரை வயிறு உண்டபடி வாழ்ந்துகொண்டிருந்தது.

ஒரு நாள் அவர் யாசகத்துக்காக வெகு தூரம் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இரவாகிவிட்டது. அன்று அமாவாசையானதால் கருகும்மென இருட்டு. வழியில் மயானம் ஒன்றைக் கடக்க வேண்டியிருந்தது. அவரது வீட்டுக்குச் சேல்ல அதைத் தவிர வேறு பாதை இல்லை.

பகல் பொழுதில் வெளிச்சமாக இருக்கும் என்பதால் அப்போது மயானத்தைக் கடப்பதில் ஓண்டாவுக்கு பயமிராது. பொதுவாக பேய்கள் பகலில் வெளியே வராது. இரவில்தான் வெளியே வரும். அதுவும் அமாவாசை இரவென்றால் பேய்களுக்குக் கொண்டாட்டம். அன்றைய தினத்தில் அவற்றின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, அன்று பேய் பிசாசுகள் சுடுகாட்டில் ஒன்று கூடி மாநாடு நடத்தவும் செய்யும். அதிலும் அன்றைய தினத்தில் ஏதேனும் பிணம் புதைக்கப்பட்டிருந்தால் அவற்றின் உற்சாகம் சொல்லி மாளாது. எனவே, மயானத்தைக் கடக்க ஓண்டாவுக்கு பயமாக இருந்தது. பேசாமல் எங்காவது தங்கிவிட்டு, காலையில் வீடு திரும்புவதே நல்லது என எண்ணினார். ஆனால், தன்னை எதிர்பார்த்து ஏழு குழந்தைகளும் பசியோடு காத்திருப்பார்களே என்னும் எண்ணம் அவரை வீடு நோக்கி உந்தியது.

மயானத்தை நெருங்கும்போதே கடுமையான பிண வாடை அடித்தது. மூக்கைப் பொத்தியபடி சென்றார். பல விதமான பேய் பிசாசுகள் ஒன்று கூடிக் களிவிருந்து நடத்திக்கொண்டிருப்பது நெருப்பு வெளிச்சத்தில் தெரிந்தது. சில தினங்களுக்கு முன்பு புதைக்கப்பட்டிருந்த ஒரு பிணத்தைத் தோண்டி எடுத்து அவை தின்றுகொண்டிருந்தன. கொள்ளிவாய்ப் பிசாசு, நெருப்புச் சுவாலைகள் கசியும் வாயால் மனிதப் பிணத்தின் கையைக் கடித்துக்கொண்டிருந்தது. ரத்தக் காட்டேரி, சதை அழுகி உதிரும் மனிதக் காலைச் சுவைத்துக்கொண்டிருந்தது. குறளிப் பேய் தனது நீண்ட நாவைப் பிணத்தின் மண்டையோட்டுக்குள் நுழைத்து நக்கிக்கொண்டிருந்தது. வாய்க்கு வெளியே நீண்டு வளைந்த கோரைப் பற்கள் கொண்ட யட்சிணி என்னும் பெண் பேய் தொடை எலும்புகளைக் கடித்து நொறுக்கிக்கொண்டிருக்க, இடாகினி என்னும் பெண் பேய் தரையை எட்டும் கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு நடனமாடிக்கொண்டிருந்தது. குட்டி பூதங்கள் பிணத்தின் கண்களைப் பிடுங்கி வீசிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன.

ஓண்டாவுக்கு இந்தக் கோரக் காட்சிகளைக் கண்டு உடல் வெலவெலத்தது. அவர் திரும்பி ஓடலாமா என யோசிக்கையில் நான்கு கண் வேதாளம் அவரைப் பார்த்துவிட்டது.

“அதோ பாருங்கள், உயிருடன் ஒரு மனிதன்! அவனது ரத்தமும், புதிய மாமிசமும் இன்றைய நமது விருந்துக்கு சிறப்பு உணவாகட்டும்!” என அது சொன்னதைக் கேட்டு கிலியில் அவருக்குக் கீழாடை கிட்டத்தட்ட நனைந்தேவிட்டது.

ஆனால், சட்டென அவருக்கு ஒரு யோசனையும், குருட்டு தைரியமும் ஏற்பட்டது. கைத் தடியை இறுகப் பற்றிக்கொண்டு அந்தப் பேய்க் குழுவை நோக்கி விறுவிறுவெனச் சென்றார்.

வட்டமாகக் குழுமியிருக்கும் அவற்றின் மத்தியில் நின்றுகொண்டு ஆவேசத்தோடு தடியைச் சுழற்றியபடியே, “எல்லாக் கடன்காரர்களும் ஒட்டு மொத்தமாக இங்கே வந்து கூடியிருக்கிறீர்களா? மிக நல்லதாகப் போயிற்று. மந்திரவாதியை அழைத்து வந்து மாந்தரீக பூஜை செய்து உங்கள் ஒவ்வொருவரையும் பிடித்து, நான் கொடுத்த கடனை வட்டியும் முதலுமாக வசூலிக்க வேண்டும் என்றிருந்தேன். அதற்கு அவசியமில்லாமல் தாமாகவே அகப்பட்டுக்கொண்டீர்கள். இனி என்னிடமிருந்து நீங்கள் ஒருவரும் தப்ப முடியாது! ஹா – ஹா – ஹா…!” என்று எக்காளமாகச் சிரித்தார்.

அவரது ஆவேசத்தையும், தடி வீச்சையும், மிரட்டலையும், எக்காளச் சிரிப்பையும் கண்டு பேய் பிசாசுகள் அஞ்சி நடுங்கின.

அவற்றுக்கு அவர் யார் என்று தெரியவில்லை.

“என்ன கடன், ஏது கடன்…?” என்று கேட்டன.

“என்னது? என்ன கடனா?” என்று கைத் தடியை ஓங்கியவர், “பேய் என்றும் பார்க்க மாட்டேன்; பிசாசு என்றும் பார்க்க மாட்டேன்! ஒரே போடாகப் போட்டு, மண்டையைப் பிளந்துவிடுவேன். யாரிடம் காட்டுகிறீர்கள் உங்கள் பாச்சாவை? நீங்கள் எம லோகத்துக்கே சென்று ஒளிந்துகொண்டாலும், தேடி வந்து பிடித்து, கொடுத்த பணத்தை வசூலிக்காமல் விட மாட்டேன்!” என்று கர்ஜித்தார்.

பிசாசுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டன. “நான் இந்த மனிதனிடம் கடன் வாங்கவில்லையே! நீங்கள் யாராவது வாங்கினீர்களா?” என்று ஒன்றையொன்று கேட்டுக்கொண்டன.

“அங்கே என்ன முணுமுணுப்பு?” தடியைத் தரையில் பலமாகத் தட்டி சத்தம் எழுப்பியபடி அதட்டினார்.

அவை பதறிப் பம்பிக்கொண்டு, “நாங்கள் யாரும் உங்களிடம் கடன் வாங்கவில்லையே! அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றன.

“நீங்கள் வாங்காவிட்டால் என்ன? உங்களின் தந்தைகளும், அண்ணன்களும் என்னிடமிருந்து ஏராளமாகக் கடன் வாங்கியிருக்கின்றனர்.

நான் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தேன்! உங்கள் குடும்பத்தாருக்குக் கடன் கொடுத்துத்தான் போண்டியாகிவிட்டேன். படுபாவிகள், வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்டாமல், அசலையும் திருப்பித் தராமல் செத்துப் போய், எம லோகத்துக்கே சென்றுவிட்டார்கள். அதனால் உங்களிடம் வசூலிக்கலாம் என்று பார்த்தால், நீங்களும் செத்துப் போய், பேய் பிசாசுகளாக ஆகிவிட்டீர்கள். ஆனால், நீங்கள் இன்னும் எம லோகம் செல்லவில்லை என்பது தெரிந்தது. பன்னிரண்டு ஆண்டுகளாக உங்களைத் தேடி அலைந்து, பிச்சைக்காரனாகவே ஆகிவிட்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தந்தாக வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உங்கள் பெற்றோரின் திருமணத்தைப் பார்ப்பீர்கள். என்ன, புரிகிறதா?”

தடியை ஒவ்வொரு பேய்களின் முகத்துக்கு முன்பாகவும் நீட்டி ஆட்டியபடி அவர் மிரட்ட, அவைகளும் ஆமோதித்துத் தலையாட்டின.

“சரி; அப்படியானால் என் வீட்டுக் கூரை உச்சியில் ஏழு கூஜாக்களைத் தொங்க விடுவேன். அவற்றை நீங்கள் பணத்தால் நிரப்ப வேண்டும். கூஜாக்கள் அனைத்தும் நிரம்பினால் உங்கள் கடன் தீர்ந்துவிட்டது என்று அர்த்தம். அப்படிச் செய்யாமல் தப்பிக்கலாம் என எண்ணினால், மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்!”

‘பூசாரியாகவோ, மந்திரவாதியாகவோ இல்லாமல் ஒரு சாதாரண மனிதனாக இருந்தும் இவன் இப்படி மிரட்டுகிறானே! உண்மையில் இவனிடம் ஏதோ பலமான சக்தி இருக்க வேண்டும்’ என எண்ணிய பேய்கள், எதற்கு வம்பு? பேசாமல் அவன் கேட்டதைக் கொடுத்துவிடுவோம் என முடிவு செய்து, அவரது நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டன.

அவரும் கம்பீரமாக நடந்து வீடு திரும்பினார்.

அடிப்பாகத்தில் ஓட்டை போட்ட ஏழு கூஜாக்களைத் தன் வீட்டுக் கூரை உச்சியில் கட்டித் தொங்கவிட்டார். அதில் ஓட்டை இருப்பது பேய்களுக்குத் தெரியாது. அவை அதில் பணம் போடப் போட, அவை யாவும் குடிசைக்குள் விழுந்தன. ஓண்டாவும் குடும்பத்தாரும் ஆளுக்கு ஒரு மூட்டைகளில் அவற்றைப் பிடித்து நிறைத்துக்கொண்டிருந்தனர்.

கூஜாவில் பணம் நிறையாததால், பணம் போதவில்லை போலும் என நினைத்த பேய்கள் மென்மேலும் பணத்தைக் கொட்டிக்கொண்டே இருந்தன. அதனால் ஓண்டாவின் குடிசை முழுக்கப் பண மூட்டைகளால் நிரம்பியது.

விடியலை நெருங்கும் சமயமாயிற்று. அந்த வெளிச்சத்தால் பேய்களின் கண்கள் கூசின. பகலில் அவை மனிதர் உலகில் புழங்கவும் இயலாது. எனவே, “எங்களால் இயன்ற அளவு பணம் கொடுத்துவிட்டோம். தயவு செய்து இனி எங்களை விட்டுவிடுங்கள்!” என்று கூரைக்கு மேலிருந்து கெஞ்சின.

“இது அசல் மட்டும்தான். இன்னும் வட்டி பாக்கியிருக்கிறது. இருந்தாலும் இப்போதைக்கு நீங்கள் போகலாம்!” அண்ணாந்து பார்த்துக் குரல் கொடுத்தார் ஓண்டா.

பேய், பிசாசு, பூதங்கள் உற்சாகக் கூச்சலிட்டு, “நாம் தப்பித்துவிட்டோம்! நாம் தப்பித்துவிட்டோம்!” எனக் கூக்குரலிட்டபடி காற்றில் மறைந்தன.

பேய்களிடம் பெற்ற பணத்தினால் ஓண்டா குடும்பம் பெரும் செல்வந்தர்களாகி, மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

பிச்சைக்காரராக இருந்த அவருக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்று ஊரார் கேட்கும்போது, “ஒரு குருட்டு தைரியத்தில்தான்!” என்று சொல்லிச் சிரிப்பார் ஓண்டா. “கொடுக்கிற தெய்வம் மட்டுமல்ல; பேய் – பிசாசுகளும் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்!” என்பாள் அவரது மனைவி.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *