பேஞ்சாக்கா மழைத்துளியா…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2025
பார்வையிட்டோர்: 5,903 
 
 

பேஞ்சாக்கா மழைத்துளியா மண்ணோடு -நான்
வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு -மூச்சு
ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு – என்
ஏத்தத்துக்கும் எறக்கத்துக்கும் என்ன குறை – நான்
சேத்துக்குள்ள பூத்துவந்த செந்தாமரை – ஒன்ன
ஒருதலையா காதலிச்சா தறுதலையா சொல்லுதொர…பேஞ்சாக்கா…

பென்..டிரைவில் கங்காரு படப்பாடலை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிட்டுத் தன்னையே மறந்தபடி லயித்துப்போயிருந்தாள் பாமினி. வைரமுத்துவின் நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் பாடலுக்கு அடுத்ததாக பாமினிக்குப் பிடித்துப்போன பாடல் பேஞ்சாக்கா..

கிராமிய வாழ்வியலைத் தன் கவிதையின் மூலம் தத்ரூபமாகப் படம் பிடிப்பதில் கவிப்பேரரசுக்கு நிகர் எவருமே இல்லை.. என்பது பாமினியின் அபிப்பிராயம்… அறையில் நண்பிகளோடு அரட்டை என்றால்கூட கவிதையும் பாட்டுமாகத்தான் கதைப்பாள்.

“அடியேய் பாமினி.. உந்த லப்டொப்ப வைச்சிட்டு கெதியா வெளிக்கிடடி.. பேஞ்சாக்கா.. பேஞ்சாக்கா எண்டு பாட்டு போட்டுக்கொண்டு இருந்தியெண்டால்.. நல்லாத்தான் பேயப்போவுது மழை. ரேடியோக்காரர் வேற அடிக்கடி பயப்படுத்திக்கொண்டு இருக்கினம். மழை காத்து இடி மின்னல் அது இதெண்டு சொல்லுகினம். உன்ர பாட்டுச் சத்தத்தில ஒண்டும் தெளிவா கேட்குதும் இல்ல. உப்பிடியே இருந்தியெண்டால்.. பொங்கல் பொங்கினமாதிரிதான் இருக்கும்..”

கிருஷாந்தி அவசரப்படுத்திக்கொண்டிருந்தாள்.

பாமினிக்கு எதன்மீதும் அக்கறையில்லை. தவளையும் கத்தும் மழையும் பெய்யும் என்பதைப்போல்.. அவளுக்கு கிருஷாந்தியும் அவளது பேச்சும்.

பேஞ்சாக்கா மழைத்துளியா மண்ணோடு… நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு..மீண்டும் பாடல் வரிகளை உதடுகள் உரச.. நெஞ்சுக்குள் கனலாய் எரிந்துகொண்டிருக்கும் அவளது கனவுகள் கண்கள் வழியே கண்ணீரை உகுத்தன.

எந்த ஒரு பொங்கல் நாளிலும் பாமினி இப்படி இருந்ததில்லை. பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே எல்லா ஆயத்தங்களையும் செய்து விடுவாள். தம்பி தங்கைகளுக்கு உடை வாங்குவது.. அம்மாவுக்கு சேலை வாங்குவது என எல்லாவற்றையுமே முன்கூட்டியே செய்துவிடுவாள். பாமினியுடன் அறையில் ஒன்றாகத் தங்கும் கிருஷாந்தியும் லக்ஷிகாவும்கூட இவளைப் பார்த்து எத்தனையோ விடயங்களில் திருந்தியிருக்கிறார்கள். ஆனால் அவர்களே இவளுக்குப் புத்திமதி சொல்லும் அளவுக்கு பாமினியை ஆக்கிவிட்டிருக்கிறது இந்தப் பொங்கல். எல்லாவற்றுக்கும் காரணம் அவளின் அத்தை மகன் பாலுதான். அத்தை மகன் என்றால்.. அப்படியொரு நெருக்கமான உறவு. அவளின் தாயின் சகோதரன்தான் அத்தையின் கணவன். தந்தையின் சகோதரிதான் அத்தை. ஆகவே, அம்மானினதும் மாமியினதும் மகன் என்ற பதமே சரியானது. அம்மாவின் சகோதரன் அம்மான் அல்லவா.. அவனின் மனைவி மாமி என்ற நெருக்கத்திற்கு மேலதிகமாக அத்தை என்ற உறவும் அவளுக்கு இருக்கிறது. அவனுக்கும் அப்படிதான். அதே உறவுதான். ஆகையால் பாலு மீது அப்படியொரு பிடிப்பு அவளுக்கு. அவளுக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து அவள் மூச்சே பாலுதான். கைகளில் புத்தகத்தையும் மனதில் பாலுவையும் சுமந்தே பாடசாலைக்குச் சென்றதையெல்லாம் நண்பி கிருஷாந்தியிடம் கதை கதையாய் சொல்லுவாள். அவனின் கடைக்கண் பார்வையும் குறும்புத்தனமும் நகைச்சுவை பேச்சும் பாமினியைச் சொக்க வைக்கும். சிரித்தான் என்றால் கிறங்கிப்போவாள். இவளும் இலேசுப்பட்டவள் அல்லள். இரட்டை சடைபின்னி, பாவாடை தாவணியில் சென்றாள் என்றால்.. அம்மன் ‘கோவில் தேரு.. அசைந்து வந்தது பாரு’ என்பான் பாலு.

அந்த ஊரில் பாமினியின் அம்மம்மாதான் பேரழிகியாம். அப்படியென்றால், தாய் எப்படி? பிள்ளை எப்படி? என்பது உங்களுக்கு விளங்கும். சுண்டிவிட்டால் சிவந்துவிடும் கன்னம் என்பார்களே அப்படி. சிரித்தாள் என்றால் கன்னத்தில் விழும் குழியில் வீழ்ந்து பலபேர் செத்துப்போவார்கள் என்றுகூடச் சொல்லலாம். ஒற்றை விரலால் விபூதி பூசி மேலே பொட்டு இட்டிருப்பாள். கொலுசு சத்தத்தை வைத்தே பாமினிதான் என்று அறிந்துவிடலாம். ஜிமிக்கியும் சின்னதாய் ஒரு மூக்குத்தியும் அவளுக்குக் கொள்ளை அழகு. யாராவது குறும்புக்காக ஏதாவது சொன்னால் பதில் பேசமாட்டாள். மெல்லிய ஒரு புன்னகையை உதிர்த்து கொன்றுவிடுவாள். இப்படிப்பட்ட பேரழகியைப் பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டதோ என்னவோ பாலு பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டான். சிலவேளை அவளைவிட அவன் படிப்பிக்கும் பாடசாலையின் ஆசிரியைகள் அழகாக இருப்பார்களோ தெரியவில்லை. என்றாலும் பாமினியுடன் சிரித்துப் பழகி மனம்விட்டுப் பேசுவான். ஆனால், பாலுமீது பாமினி கொண்டிருப்பது அன்பா, வெறியா என்று புரியாத அளவுக்கு அவனிடம் வீழ்ந்துபோயிருந்தாள். எனினும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பாமினி தன் சுயத்தை இழந்திடமாட்டாள்.

இவர்கள் இருவரும் கதைப்பதைப் பார்த்து அத்தை உள்ளூர மகிழ்ந்துபோவாள். தம் தம்பியின் மகனுக்கு பாமினியைத் திருமணம் செய்து பார்ப்பதற்கு அவள் கனவுகண்டு கொண்டிருக்கிறாள். என்றாலும் தம்பியின் மனைவிக்கும் அவளுக்கும் எந்நேரமும் ஏழாம் பொருத்தம்தான். ஒரு நாள் பாலுவும் பாமினியும் கதைத்துக்கொண்டிருந்ததைக் கண்டுவிட்டுப் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்திவிட்டாள்.

“இங்க பாருடி.. அவங்களோட சகவாசமே வேணானுதான் நான் இருக்கிறேன். ஆடு பகை குட்டி உறவாடலாம்னு மட்டும் நினைக்காத.. நான் அத்தா அத்ததுதான்..மானம் மரியாதையா நடந்துக்க. இல்லன்னா..” என்று பத்ரகாளியாகிவிட்டாள்.

பாமினியின் தந்தை மனிதநேயமிக்க ஒரு கல்வியாளர். எனினும் கொழும்பில் கடை வைத்திருந்து ஆகா ஓகோ என வாழ்ந்தவர். எண்பத்து மூன்று கலவரம் அவரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது. ஆதலால், பாமினியின் தாய் குடும்பச் சுமையைச் சற்று அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டாள். ஆயினும் பாமினி தன் கல்வியைத் திறம்படத் தொடர்ந்து இன்று கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் கெளரமாகத் தொழில் செய்கிறாள். பாமினியின் தந்தை காலமானதன் பின்னர் தாயும் தன்னுடைய இறுக்கமான போக்கை மாற்றிக்கொண்டுவிட்டாள்.

கொழும்புக்கு வந்த இந்த ஐந்து வருடங்களில் ஒரு நாளாவது அவள் தன் நடை, உடை பாவனையை மாற்றிக்கொண்டது கிடையாது. கிராமங்களில் இருந்து கொழும்புக்கு வந்துள்ள பெண்டுகள் எல்லாம் இப்போது சிறிது சிறிதாக மாறி வருவதைப்பற்றி எத்தனையோ முறை கிருஷாந்தியிடமும் லக்ஷிகாவிடமும் வாக்குவாதப்பட்டிருக்கிறாள். அவர்கள் வந்த புதிதில் டெனிமும் ரீ ஷேர்ட்டுமாகத்தான் திரிந்தார்கள்.

கொழும்பில் சில பெண்களைப் பார்த்தால் எதையெதை எல்லாம் மறைக்கவேண்டுமோ அவற்றைவிட்டுவிட்டு, மறைக்க அவசியமில்லாததை மறைத்துக்கொள்வார்கள். “அதென்னடி..பின்னழகு தெரியிற மாதிரி இறுக்கமா போடுaங்க.. பிறகு நடக்கும்போது கஷ்டப்பட்டு இழுத்துவிட்டுக் கொள்aங்க?” என்று ஒரு நாள் லக்ஷிகாவிடம் சண்டையே பிடித்துவிட்டாள். அன்றிலிருந்து அவர்களும் இவளைப்போலவே வெளியில் சென்றால் சல்வாருக்கும் சேலைக்கும் மாறிவிட் டார்கள். மூன்று பெண்களும் வெவ்வேறு பிரதேசத்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மனங்கள் ஒன்றித்துப்போனமையால்.. இணைபிரியா தோழிகளாகிவிட்டார்கள். பாமினி இந்திய கலாசார மரபுகளுடன் ஹட்டனில் பிறந்து வாழ்ந்தவள். யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்தவள் கிருஷாந்தி. வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கொழும்புக்கு வந்து கடந்த இரண்டு வருடங்களாக எதுவுமே நடக்காததால் பாமினியின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். லக்ஷிகா மீன்பாடும் தேன் நாட்டைச் சேர்ந்தவள். கொழும்பில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்துகொண்டு இருந்துவிட்டு அங்கு மனக்கசப்பு ஏற்பட்டதால் இவர்களுடன் அறையில் இணைந்துகொண்டாள். அதனால், மூவரின் மனதில் உள்ள கதைகளை பரஸ்பரம் வாசித்தறிந்துவைத்திருக்கிறார்கள். திருமண வயதைக் கடந்துவிட்ட வயதுதான் மூவருக்கும். என்றாலும் பாமினியின் அழகான காதல் கதை, கல்யாணம் அவர்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. இந்தப் பொங்கலுக்குத்தான் பாலுவுக்கும் பாமினிக்கும் நிச்சயம் செய்கிறார்களாம். அதற்கு முன்னோடியாக இருவரும் ஹட்டனில் தன் வீட்டுக்கு வர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டிருந்தாள் பாமினி. அதனால், இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்றுவிட வேண்டும் என்ற முடிவோடு கடந்த இரண்டு வாரத்தில் இருந்தே தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் மூவரும்.

அன்று சொன்னாள்தான். ஆனால் இன்று பாமினிக்கு ஏற்பட்டிருக்கிற நிலை அவர்களுக்குப் புரியுமா? புரிய வைக்கத்தான் முடியுமா? “எப்படியெல்லாம் கனவுகண்டுகொண்டி ருந்தேன். என்றென்றும் பசுஞ்சோலையாக என் வாழ்க்கை பூத்துக்குலுங்க வேண்டும் என்ற நினைப்பில்.. நான் என்னையே ஏமாற்றிக் கொண்டு விட்டேனே! இந்தப் படுபாவி அத்தை மகன் பொங்கலுக்கு வீட்டுக்கு வருவதா கச்சொல்லி இப்போது என் கனவுகளை யெல்லாம் தவிடி பொடியாக்கி விட்டானே” பாமினிக்கு நினைக்க நினைக்க அழுகை அழுகையாக வருகிறது. “எப்படியெல்லாம் உன்னை உயர்வாய் இவர்களிடம் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறேனடா.. இன்று என் முகத்தில் கரியைப் பூசிவிட் டாயே பாவி..

‘பாமினி.. என்னை மன் னிச்சிடு.. நம்ம கல்யாணம் நடக்காதுபோல இருக்கு. பொங்கலுக்கு நிச்சயம் செய்றதா அம்மா சொல்லி இருந்தாங்க. ஆனால், மட்டக் களப்பில உள்ள ஒரு ரீச்சர் இங்க படிப்பிக்கிறாங்க. அவங்க நிறைய சீதனமும் தருறாங்களாம். அதனால எங்கம்மா நான் அவவதான் கட்டணும்ணு பிடிவாதமா இருக்காங்க. சோ.. என்ன தவறா நினைக் காத.. நீ மனச குழப்பிக்காத.. நாம என்னா காதலிச்சமா இல்லையே.. அத்தை மகன் மாமன் மகள் அவ்வளவுதான. “பி ஹெப்பி குட்டி..பாய்.”

என்று படபடவெனச் சொல்லிவிட்டு செல்போனை வைத்துவிட்டான். நல்ல வேளை நண்பிகள் யாரும் இல்லாத வேளை அவன் தொலைபேசியை எடுத்திருந்தான். அவர்கள் வரும்வரை அழுது தீர்த்தவள்.. ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு மனதைக் கல்லாக்கிக் கொண்டிருக்கிறாள். இந்த விடயத்தைத் தெரியாதவர்கள் அவளை புறப்படுமாறு வற்புறுத்துகிறார்கள்.. பாமினியால் என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ஒரு முடிவுக்கு வந்தவளாய் மீண்டும் பாடலை ஒலிக்கவிட்டாள்…

“அடியேய் நாங்கள் உனக்கு எத்தின முற சொன்னனாங்கள்.. நீ என்ன எங்கள விட்டிட் டுப்போற நோக்கம்போல.. நீ இப்பிடி செய்வாய் எண்டு தெரிஞ்சிருந்தால்.. நாங்கள் எங்கட வீட்டுக்காச்சும் வெள்ளன வெளிக்கிட்டுப் போயிருப்பமல்லே..”

பாமினிக்கு இனியும் பொறுக்க அவகாசம் இல்லை. பாடலை சட்டென நிறுத்திவிட்டு,

“கொஞ்சம் பொறுங்கடி.. என்ன நடந்ததின்னா…”

“அதை நாங்க சொல்றோம்” ஆண் குரல் கேட்டுத் திடுக்கிட்டாள் பாமினி.

அவளால் நம்ப முடியவில்லை. பாலுவும் அவளின் அன்பு அத்தையும்.. நின்றிருந்தார்கள்..

“என்னடி பாமி குட்டி.. ஆச்சரியமா பார்க்கிற.. உனக்கு பொங்கலுக்கு உடுப்பு எடுக்கணும்கிறதால.. உன்னய கூட்டிக்கொண்டே போகலாம்னு பாலு சொன்னான். அதான் உனக்குப் போன் போட்டுச் சொல்லச்சொல்லிச் சொன்னேனே..இவன் சொல்லலயா.. உன்னோட பிரண்ட்ஸ் வாறாங்களா.. எல்லாரும் நம்ம வேன்லயே போகலாம் கெதியா புறப்படுங்க..” என்றாள் பாமினியின் அத்தை.

பாலு குறும்புக்காரன்தான்.. ஆனால், இப்படியொரு குறும்பைச்சொல்லி அதிர்ச்சி வைத்தியம் செய்திட்டானே.. அத்தை மட்டும் இல்லாவிட்டால்..

அவனை அப்படியே இறுகக்கட்டிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது பாமினிக்கு..

‘பேஞ்சாக்கா மழைத்துளியா மண்ணோடு..’ பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டாள் கிருஷாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *