பேசும் பதினாறு






(1981ல் வெளியான பாக்கெட் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2
என்னை உங்களுக்குத் தெரியும்.

ஏற்கெனவே ஒரு நெகட்டிவ் திருடுபோன சிக்ரெட் கேஸை, ‘கண்டுபிடி கண்ணே’என்று கேட்டதனால், கண்டுபிடித்துக் கொடுத்தேன்.
என் பெயர் ராஜா. அரவிந்த ராஜா. என் கொள்ளுத் தாத்தா, தாத்தா அப்பா பேர்களோடு சொன்னால் (பல் ஆட்டம் இல்லாதவர்களுக்கு மட்டுமே அடுத்த வரி.)
ராகவேந்திர ருக்மாங்கத சபாபதி அரவிந்த ராஜா என்று முழுசாகப் பெயர் சொல்லி நீங்கள் கூப்பிடுமுன் நான் ரயிலேறிப் போயிவிடுவேன்: அதனால்-
சிக்கனமாக என்னை, ‘ராஜா’ என்றே கூப்பிட உங்களை அனுமதிக்கிறேன்.
‘ராஜா துப்பறியும் ஃபாக்டரி’ என்று சொந்தத்தில் பிரைவேட் ‘ஐ’ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன்.
உங்களிடம் கண்டு பிடிக்க வேண்டிய சங்கதி ஏதாவது இருந்தால், உடனே என்னைத் தேடி வாருங்கள்.
விலாசம் கண்டுபிடிப்பது சுலபம்.
நேரே சென்னைக்கு வாருங்கள். சென்னை பதினேழு எனப்படும் தி.நகரின் மையப் பகுதியில் நின்று, ‘காக்காத்தாள் தெரு’ என்று கேளுங்கள். சுலபமாக வழிகாட்டி விடுவார்கள். (லெப்ட்லே திரும்பி, நேரே போய், திரும்பி நின்று, நேரா வந்துரு’ என்பார்கள்.)
(வழிசொல்லத் தெரியாதவர்கள் நரகத்துக்குப் போகக் கடவது!)
அந்தத் தெருவில் ஆறாம் நம்பர் வீட்டுக்கு வாருங்கள். இப்போது வேண்டாம்.
ஆட்கள் தூசுதட்டி, பெருக்கி, மெழுகி, சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
காரணம்?
கொஞ்ச நாளாகப் பூட்டி வைத்திருந்தேன். கொஞ்ச நாளாகத்தான். அதாவது, 1981, ஏப்ரல் மாத கடைசியிலிருந்து.
நோ. நோ. வியாபாரம் இல்லாததனால் அல்ல. நான் (ஊரில்) இல்லாததனால். முதல் வழக்கு முடித்த கையோடு லண்டனுக்குப் போய்விட்டேன்.
சொந்த வீடு என்பதனால் காலி செய்யும் பிரச்சினை வரவில்லை.
லண்டனில் இத்தனை நாள் தங்கியிருந்தேன்.
‘ஸ்கார்ட்லாண்ட்யார்ட்’ துப்பறியும் நிறுவனத்தில், பம்மென்று உப்பிய ரோஸ் நிறக் கன்னங்களும், பழுப்பு நிறக் கண்களுமான பிரிட்டிஷ் நிபுணர் ஒருவரிடம் துப்பறியும் தொழிலை ‘தரோ’வாகக் கற்றுக் கொண்டு வந்தேன்.
நூதனமான நிறைய சாதனங்களை வாங்கி வந்திருக்கிறேன்.
மெட்டல் டிட்டாடர் ஒன்று. ஏரோடிராமில் உங்கள் உடம்பு முழுவதும் தடவிப் பார்த்துச் சிலிர்த்து – சிரிக்க வைத்துப் பார்ப்பார்களே, அதுதான்.
சைஸ் சிறியது. கச்சிதமாகக் கைக்கு அடக்கமாக இருக்கும். அதனால் இரண்டு முறை முகத்தை வருடி விட்டால், எவனுக்கும் பொய் சொல்ல வராது.
உங்கள் எதிரே சட்டென்று நான் சட்டைப் பித்தானைத் திருகினால், அலட்சியமாகப் பார்க்காதீர்கள். அது பட்டன் அல்ல – காமரா! உங்கள் உருவத்தை, உங்கள் செயலை, சத்தியமாகப் படமாக்கிக் கொண்டு விடும்.
ஆபத்தே இல்லாத துப்பாக்கி. கையால் சுட மாட்டேன். உங்கள் கண்ணில்கூடத் தென்படாது. பூட்ஸுக்குள்ளே ஒளிந்திருக்கும்.
வலது கால் கட்டை விரல் அருகே சின்னதாக ஒரு பித்தான் இருக்கும். காலால் ஒரே மிதி –
எதிரிஆளின் முழங்காலின் கீழே, குண்டு பாய்ந்து விடும். ஓட முடியாமல் தங்கி விடுவான். தப்பில்லை.
தற்காப்புக்காக முழங்காலுக்குக் கீழே சுடுவதில் தப்பில்லை என்கிறது சட்டம்.
ஞாபகமாக எல்லாம் வாங்கி வந்த நான், கொண்டு போனதில் மிக முக்கியமான ஒன்றைத் தவற விட்டுவிட்டேன். லண்டனிலேயே விட்டுவிட்டுத் திரும்பினேன்.
சீமா! 1981-ல் என் இனிய காரியதரிசி
கல்யாணம் செய்து கொள்ளுவதாக உத்தேசித்திருந்தேன். ஆனால், இப்போது இல்லை.
இப்போது அவள் லண்டனிலேயே பிங்க் கலர் பன் ரொட்டி கன்னமும், பழுப்புக் கண்களுமான பிரிட்டிஷ் ஆள் மெத்தானமர்த்தியைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டாள்.
அதற்கு அவள் சொன்ன காரணம்?
‘சென்னையில் இப்போதெல்லாம் வெயில் வறுத்தெடுக்கிறது.. லண்டனில் பனிரெண்டு மாதமும் இளம் குளிர் சீதோஷ்ணம் எனக்குப் பிடிக்கிறது’ என்றாள்.
‘லண்டனில் இருந்தாலும் வாழ்க’ என்று பரணி பாடி விட்டு, அவளை அங்கேயே ‘செட்டிலா’க்கி விட்டுத் திரும்பி விட்டேன்.
இப்போதெல்லாம் துப்பறிதல் மிக சுலபமாக வருகிறது சார்.
உங்கள் தேவைகளுக்கு அணுகவும்.
ராஜா துப்பறியும் ஃபாக்டரி.
எனக்கு உடனடியாக ஒரு பதினாறு வேண்டும். நிறையப் பேசும் பதினாறு.
நோ. நோ. நீங்கள் நினைப்பது தவறு. உதவியாளராகப் பெண் வேண்டும்.
தனிமை, ‘போரடி’க்கிறது என்பது வேறு விஷயம். துப்பறியும்போது நான் செத்துவிட்டால், அட்லீஸ்ட் ‘போயிட்டீங்களே பாஸ்’ என்று அழவாவது ஒரு ஆள் வேண்டாமா,
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நீங்கள் தயாரா? அனுஷா? பிரகதா யூ? சின்னியம்மா? நீங்கள் ஏன் அப்ளிகேஷன் அனுப்பக் கூடாது மிஸ் பத்மா? வாட் அபவுட் யூ வத்ஸலா?
முக்கியமான குவாலிஃபிகேஷன்: துணிச்சல்.
சத்தியமாகக் குத்தப்பட்ட இடத்தில் ரத்தம் பொங்கு வதைப் பார்த்துப் ‘பே’ என்று அலறக் கூடாது. கண்கள் பிதுங்க கழுத்து அறுபட்ட பிணத்தின் அருகில் நின்று மணிக்கணக்கில் சுற்றிச் சுற்றி வந்து தடயம் கண்டுபிடிக்கத் துணிச்சல் வேண்டும்.
இப்போது புரிகிறதா மிஸ் லக்ஷ்மி – எதற்காகப் பேசும் பதினாறு கேட்கிறேன் என்று?
எப்போதும் இளம் கன்றுகள்தான் பயமறியாது. இப்போது ஸ்வப்னா என்கிற பெண்ணைத் தாற்காலிகமாக வைத்துக் கொண்டு இருக்கிறேன். (காரியதரிசியாக சார்!)
ரொம்பவும் பயந்த சுபாவம்.
திடீரென்று காலிங் பெல் அலறினால்கூட-‘பா ஆஆ ஆ.ஆ ..ஸ்’ என்று என்னைக் கட்டிப் பிடிக்கிற ஜாதி.
போன் மணியடித்தால், அக்கறையாகக் கதவைத் திறந்து நான் போனையெடுத்துப்பேசுவதும் புரியாமல்-‘பாஸ்! காலிங் பெல் அடிக்கிறது. கதவைத் திறந்து பார்த்தால். யாரையுமே காணோமே! பேயாக இருக்குமா?’ என்று கேட்குமளவு மக்கு.
சரியான சினிமா பைத்தியம். கமலஹாசன் விசிறி; கண்மூடித்தனமான விசிறி. கமல், சரிகா பற்றி கிசுகிசு ஏதாவது சொல்லி விட்டால் நாளைக்குக் காலைவரை விடாமல் சண்டை போடும் ஜாதி.
‘போனை எடு’ என்றேன்.
எடுத்துப் பேசியவள் பூரி பூரி என்று பூரித்துப் போனாள்.
‘ஐயோ நீங்களா? நீங்கள் தானா மேடம்? நிஜம்..ம்..மா நீங்களா?” என்று திரும்பத் திரும்பக் கேட்கவே –
போனை பிடுங்கினேன்.
“ஸ்ரீதுளசி! நடிகை” என்றாள் ஸ்வப்னா பூரிப்பாக.
“எஸ் மேடம்.”
“பிஸியாயிருக்கிறீர்களா?”
“இல்லே, பசியாயிருக்கேன். காலை நேர அவசரத்தில் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட மறந்து போச்சு. இப்ப குடலைப் பிடுங்குது. “
“தென் ஹாவ் யுவர் ப்ரேக்ஃபாஸ்ட் வித் மீ ” என்றவளின் குரலில் – குழல் ஊதியது இனிமையாக.
“விலாசம் சொல்லுங்க.”
“எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்” என்று ஸ்வப்னா குதிக்க-
“சரி. இன்னும் பதினைந்தே நிமிஷத்தில் அங்கே இருப்பேன்” என்று நான் சொல்ல-
போனை பிடுங்கி, “கடைசி வார்த்தையில் திருத்தம், இருப்போம்” என்றாள் ஸ்வப்னா. “நான் உங்க விசிறி மேடம். உங்களை நேரில் பார்த்தால் பரவசப்படுவேன்.”
மெலிதாகத் தலையிலடித்துக் கொண்டு கிளம்பினேன்.
உடனடியாக உதவியாளர் பெண்ணை நியமித்தாக வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன்.
நீங்கள் ஏன் முன்வரக் கூடாது யாமினி ஐயர்? ஷீலா? ஷியாமா? முனீஸ்புரி?
ஐயோ! யாராவது முன்வந்து ஸ்வப்னாவிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்களேன். ப்ளீஸ்!
காரில் போகும்போது ஸ்வப்னா குதித்துக் கொண்டிருந்தாள்.
“நாலஞ்சு வருஷத்துக்கு முந்தி ரஜினிக்கும் அவங்களுக்குமாகத்தான் கிசுகிசு வந்தது. நல்ல வேளை கமலோட இல்லே” என்றாள் பூரித்துப் போய்.
கார் நின்றபோது-
அந்தப் பெண்ணைப் பார்த்தேன். காஸெட் டேப்பை அலறவிட்டு, நின்ற இடத்தில் நில்லாமல், கைகளை உயர்த்தி, திருகி. உடம்பை ஒடித்து, திருப்பி, நிமிர்த்தி, ஸ்டேன்ஸ் ஆடினாள். ஆடிய படியே முன்னால் வந்து, பின்வாங்கி பக்கவாட்டில் நகர்ந்து, என்னென்னமோ செய்து கொண்டிருந்தாள்.
எங்களை உணர்ந்ததும் முதலில் ஆட்டத்தை நிறுத்தி, டேப்பை நிறுத்தினாள்.
கொஞ்சமாக விழித்தாள்.
“ஹல்லோ மிஸ் துளசி” என்று நான் சொல்ல ஸ்வப்னா இடுப்பில் தனது முழங்கையால் இடிக்க-
“அது எங்கம்மா…” என்ற அந்தப் பெண்ணின் முகம் சொத்தைக் கடலையை மென்றது போலப் போயிற்று. முகம் சுளித்தாள்.
“உள்ளே போங்க” என்றாள்.
நாங்கள் உள்வாசலைத் தாண்டியதும், காஸெட் ட்ரம்ஸை உதறத் துவங்கியது.
“வாருங்கள்” என்று சேவித்த அந்த துளசிதான் வெளியே பார்த்த அந்தப் பெண்ணுக்கு அம்மா என்பதை நம்புவதில் எனக்குச் சிரமமிருந்தது.
தொளதொளவென்ற மாக்ஸி அணிந்திருந்தாலும், அந்த இடுப்பின் வளைவுகளும், மார்புகளின் கன பரிமாணங்களும் அடையாளம் காட்டி மயக்கின. வயதைக் கணிசமாகக் குறைத்தன.
பெரிசு பெரிசான கண்களில் மாதவியும், மூக்கில் (ஆப்ரேஷனுக்கு முந்தைய) ஸ்ரீதேவியும், சிரிப்பில் கே.ஆர்.விஜயாவும் இருந்தார்கள் – கலவையாக.
”துளசி-‘சங்கராபரண’த்தில்சின்னப் பையனாகப் பார்த்திருக்கேன்” என்று நான் சொன்னதும் –
உதட்டை அழுத்தி வெட்கமாகச் சிரித்தாள்.
“அது நானில்லே. ஜூனியர் துளசி. நான் ரிடையராகி ஃபீல்டை விட்டதும் புதுசாக வந்தாள். நானும் கண்டுக்காம விட்டுவிட்டேன்.”
ஸ்வப்னாவைப் பார்த்தேன். வழிந்தாள்.
“ஐயோ, போன் வாரம்கூட ‘உயிர்’ புதுப்பட போஸ்டரைப் பார்த்தேனே?”
“அது எழுபத்தொன்பதிலேயே வரவேண்டிய படம். தாமதமாக வந்திருக்கு. நான் ஃபீல்டை விட்டு அஞ்சு வருஷமாச்சு.”
“இப்ப என்ன பண்றீங்க?’
“நிம்மதி தேடி அலைஞ்சுகிட்டிருக்கேன். தலைவலிக்கு மருந்து தேடறேன்.”
“வாசல்லே உங்க மகளைப் பார்த்தேன்”.
“என் தலைவலியே அவள்தான். வாங்க, பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்.”
டைனிங் டேபிளுக்குப் போகும்போது கேட்டேன்: “கேஸ் விவரம் சொல்றீங்களா?”
”சொல்றேன். என் மகளை நீங்க ஆராயணும்” என்றதும்-
‘திக்’கென்றது. நிமிர்ந்தாள் ஸ்வப்னா: “ஜீரணிக்க கஷ்டமான ஆபாச வார்த்தை” – பல்லைக் கடித்துச் சொல்லும் அவளை அடக்கினேன்.
“புரியல்லே மேடம்!”
“அவ உடம்பை ஆராயச் சொல்லல்லே. அவளையறியாமலே அவள் நடவடிக்கைகளை ஆராயணும்னு சொன்னேன். கொஞ்ச நாளாக அவள் நடவடிக்கைகளில் நிழலான தன்மை அதிகம் தெரிகிறது.”
“அப்படி என்ன செய்கிறாள்?”
”திடீர் திடீரென்று காணாம போயிடறாள்.”
“எங்கே போயிடறாளாம்?” என்று கேட்ட ஸ்வப்னா-
“அது தெரிஞ்சா உங்களை நான் ஏன் கூப்பிடறேன்?” என்றதும்,
-சங்கடமாக நெளிந்தாள்..
“மிஸ்டர் ராஜா. நீங்க இன்னமும் கொஞ்சம் புத்திசாலியான பெண் உதவியாளரை வைத்துக் கொண்டால் நலமாயிருக்கும்.”
கோபமாக எழுந்து நின்ற ஸ்வப்னாவை இழுத்துப் பிடித்து அமர்த்தினேன்.
“மகளின் பேரில் என்ன சந்தேகம் உங்களுக்கு? ஏதும் காதல் விவகாரம்னு நினைக்கிறீங்களா?”
“நினைக்க வேண்டியதில்லை. அவள் காதலை மடக்கிப் போட்டுட்டேன். அவன் இனிமேல் இவள் கண்ணில்பட மாட்டான். எங்க மகள்தான் எங்கோ போகிறாள். அதை நீங்க கண்டுபிடிச்சே ஆகணும் மிஸ்டர் ராஜா.”
“எந்த காலேஜ் படிக்கிறாள்?”
சொன்னாள்.
“காலேஜுக்கு எத்தனை மணிக்குப் புறப்படுகிறாள்?”
“காலையில் ஏழு மணிக்கெல்லாம் எழுந்து ஓடி விடுகிறாள்.”
“ஏழு மணிக்கா? பெருக்குகிறவள்கூட அந் நேரத்துக்கு வரமாட்டாளே, ஏன் ஸ்வப்னா?” என்று நான் கேட்க-
அவள் முகத்தை எங்கேயோ திருப்பிக் கொண்டாள்.
“ஒரு வேளை விளையாடப் போகிறாளோ என்னமோ? பாட்மிண்டன் – பிங்பாங்?”
“அதெல்லாமொண்ணுமில்லை. நாலரை மணிக்குக் குட்டை நிஜாரும் பனியனும் போட்டு, பீச் ரோடில் ஜாகிங் ஓடிட்டு வருவாள். உடல்பயிற்சி அதோட சரி. வேற ஆட்டத்திற்கு சாயங்காலம்தான் போவாள். அதில் எனக்கு சந்தேகமில்லே. காரணம்-தினம் ஒரு புகார் வருகிறது.”
“ஏன்?”
“பேசிப்பேசியே எதிர் ஆட்டக்காரியை ஏமாத்தி பாயிண்ட் எடுக்கிறாளாம். தினம் எட்டு மணிக்கு அவ சிநேகிதிங்க புகார் சொல்லுவாங்க.”
“பின்னே எதில்தான் சந்தேகம் வருகிறது உங்களுக்கு?”
“‘சமயத்தில் காணாமல் போய் விடுகிறாளே!”
“எந்த சமயத்தில்?”
“முக்கியமான சமயத்தில். ‘வீட்டில் விருந்தாளிங்க வருவாங்க. எங்கேயும் போயிடாதே’ன்னு சொன்னால், அந்த நேரம் பார்த்து வேணும்னே காணாம போயிடுவாள்.”
“ராத்திரி பனிரெண்டு மணியானாலும் திரும்பமாட்டாள் கேள்வி கேட்கிறவங்களைச் சமாளிக்கிறது பெரிய சங்கடமாயிருக்கு”
“எங்கேதான் போகிறாளாம்?”
“கண்டுபிடியுங்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லே. எப்படியாவது கண்டுபிடியுங்கள் சார், ப்ளீஸ். இது என் கெளரவப் பிரச்சினை.”
எனக்குள் ஏமாற்றம் வழிந்தது.
“உற்சாகமான வேலையை எதிர்பார்த்தேன்.”
”ஏன்? இந்த வேலையில் உற்சாகக் குறைவுக்குக்காரணம்?”
“மறுபடியும் தொழில் ஆரம்பிச்சு இதுதான் முதல் வேலை. கொஞ்சம் ஸ்பைசியாக கொலை, கொள்ளை என்று பயங்கரமான விஷயமா எதிர்பார்த்தேன். சுறுசுறுப்பாக இருக்கும்.”
“ப்ளாக் காஃபி சாப்பிடறீங்களா? சுறுசுறுப்பா இருக்கும்.” – சிரித்தாள். “இது நல்லாயிருக்கே. உங்களுக்கு ஸ்பைசியா கேஸ் அமையணும்கிறதுக்காக நான் கொலை எல்லாம் செய்ய முடியுமா என்ன?”
“அதுக்கில்லே. உற்சாகக் குறைவான வேலை என்றேன்.”
“ஆனால், பணம் வரும் வேலை பாஸ்.”
“ஷட் அப் ஸ்வப்னா. சரி. பார்க்கிறேன் மேடம்.”
“வேண்டாவெறுப்பாகவா?”
”இல்லே. உற்சாகம் வருகிறதா என்று பார்க்கிறேன்.”
“காஃபி?”
“இல்லே, வேண்டாம்” என்று புறப்பட்டோம்.
“ஒரு விஷயம். உங்களை நியமிச்சது அவளுக்குத் தெரிய வேண்டாம். கொஞ்சம் – மறைவாக – நிழலாக-”
“என் வேலை எனக்குத் தெரியும்.”
அவசரமாகக் கிளம்பி வெளியே வந்து அவளைத் தேடிய போது-
அவள் இல்லை.
காஸெட் பிளேயர் மட்டும் ‘மாமாமியா’ என்றது.
சுற்றுமுற்றும் தேடியவாறு காரில் ஏறிக் கொண்டோம்.
– தொடரும்…
– 1981, பேசும் பதினாறு (பாக்கெட் நாவல்), முதற் பதிப்பு: ஜூன்2013, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.