பேசும் பதினாறு





(1981ல் வெளியான பாக்கெட் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-9 | அத்தியாயம்-10
“ஜமதக்னீ” என்று யாரோ யாரையோ கூப்பிட்டது கேட்கவே-
ஹோட்டல் தனியறையிலிருந்த என் கவனம் சிதைந்தது. (ஃபன்னீ நேம்)

மெல்ல எழுந்தபோது ஸ்வப்னா ஆட்சேபித்தாள்: “ஆர்டர்கூட பண்ணல்லே. அதுக்குள்ளே எழுந்துட்டா எப்படி பாஸ்?”
எரிச்சலுடன் மீண்டும் அமர்ந்தேன். கதவைத் திறந்து எட்டிப் பார்த்த சப்ளையர் என்னைவிட பெண்களை அதிகம் ஆராய்ந்தான்.
“என்ன கேட்கிறாங்களோ, அப்படியே கொண்டு வந்து கொட்டு” என்றேன்.
ஸ்வப்னா மட்டும் அது இது என்று சொல்ல – மேஜை மேல் சுருண்டு சரிந்தாள் கலையரசி.
“ஹேய், நீ ஆர்டர் பண்ணல்லே?”
“ப்த்சு.”
“ஏம்மா! பசிக்கல்லே. கவலைப்படாதே கொலைகாரனை-“
“ஸ்ஸூ” என்று நிமிர்ந்தாள்: “நல்லாயிருக்கு, உங்க லண்டன் ஸ்டடி. சில விஷயங்களைப் பொது இடத்தில் பேசக் கூடாது. துப்பறியும் ஃபாக்டரி நடத்த முக்கியமான குவாலிஃபி கேஷன் அதுதான், புரியுதா?”
சங்கடமாக நெளிந்தேன்: “சரி,நீயே ஆர்டர் பண்ணு.”
“வேண்டாம்.”
“ஏம்மா?”
“மனசாட்சி மரத்துப்போன மரக்கட்டையே! செத்துப் போனவள் எங்கம்மா. இந் நேரம் ஐஸ்கட்டிமேலே படுக்க வைச்சுட்டு அறுக்கிறாங்களோ, சிதைக்கிறாங்களோ… நான் சாப்பிடணுமா?”
ஸ்வப்னாவுக்கே என்னமோ மாதிரி ஆகிவிட்டது போலிருக்கிறது.
“ஆளுக்கொரு காஃபி கொண்டு வாப்பா. மிச்சமெல்லாம் கேன்சல்” என்றாள்: “ஸாரி. மறந்துட்டேன்” என்று கலங்கும்போது-
“பரவாயில்லே. நீதான் பசிபசின்னு பறக்கிறீயே. சாப்பிடேன்” என்று கலை சொல்லும்போது-
“ப்த்சு, வேண்டாம்” என்று ஸ்வப்னா மறுக்கும் போதுதான்-
பக்கத்து அறையில் பேச்சுக் கேட்டது.
“நீ சொன்ன மாதிரி அந்த ஸ்ரீதுளசி வீட்டிலே அவள் மகள் யாருமே இல்லையே ஜமதக்னீ?”
“இப்ப அதுவா முக்கியம்? போன காரியம் வெற்றிகரமா முடிஞ்சுதே; அதே போறும் முத்திருளாண்டி.”
“முடிஞ்சுதே. ஈவ்னிங் தமிழ் பேப்பர் எல்லாத்திலே யுமே எட்டு ‘காலம்’ நியூஸ் போட்டிருக்கானே. அநேகமா, டி.வி. நியூஸ்லேயும் வரும். போட்டோ காட்டுவாங்களா, இல்லே, அவங்க நடிச்ச பாட்டைப் போடுவாங்களா?”
“பின்னே, உன் போட்டோவையா போடுவாங்க? ‘இறந்து காணப்பட்டார்’னு போட்டிருக்கானுங்க. கொலை செய்யப்பட்டார்ன்னு நிச்சயமா போடமாட்டானுங்களே.”
“அதெப்படி, கொலையா, தற்கொலையான்னு போலீஸ் சொல்லாம இவங்க இஷ்டத்துக்குப் போட முடியாதே. இப்ப உனக்குத் தெரியும் கொலைன்னு. அவங்களுக்கு எப்படித் தெரியும்?”
நிமிர்ந்தேன். நான் எழ முயன்றபோது கையமர்த்தினாள் ஸ்வப்னா.
வாயைப் பொத்திக் காட்டிவிட்டு எழுந்து போனாள். அவள் போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம்-
ஒரே களேபரமான ஓசை கேட்டது.
“விடும்மா… அட, விடும்மா” என்றார்கள் அச்சமாக.
“நீ சும்மா இருய்யா. இந்த ஆளு போனவாரம் எங்கிட்டே வந்து காசு குடுக்காம ஓடிட்டான். எடுய்யா காசை…”
“அடே, விடும்மா. விடு, அவனை … நீ நினைக்கிற ஆளு இவனில்லே. இவன் போனவாரம் அந்தமான்லேயில்லா இருந்தான்..”
“அந்தமானா? அட போய்யா, இந்த ஆளேதான். இவன் பேருகூட கோபாலு”
“கோபாலுமில்லே, கசமாலனுமில்லே. இவன் பேர் முத்திருளாண்டி. போர்ட் ப்ளேயர்லே யாவாரம்”.
“ஐயோ, இவுக மாதிரியே இருந்துதே.”
“பார்த்தா பெரிய இடத்துப் பொண்ணு மாதிரியிருக்கே. சுத்த கேஸு மாதிரி கத்தறியே, போ…போ…”
“யாரு சொன்னது பெரிய இடத்துப் பொண்ணுன்னு. நான் கேஸுதான்யா. நவுரு. எனக்கு ஒரு டீ சொல்லு. கூச்சல்லே தொண்டை காய்ஞ்சு போச்சு. இதென்னது பேப்பர்? ஆங்! பிரபல நடிகை ஸ்ரீதுளசி மரணம். போயிட்டாளா! இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா, சண்டாளியை நானே கொலை பண்ணியிருப்பேன்!”
புரியாமல் பார்த்த கலையரசியைக் கையமர்த்தினேன். அங்கே ஸ்வப்னாவின் பேச்சு தொடர்ந்தது.
“அத்தை ஏன்யா கேட்கறீங்க? முத்துராமன் சார், ராஜசேகர் சாரு எல்லாரும் ஹீரோயின் ரோலு தரேன்னாங்க. இந்தம்மா தான் போன் பண்ணிட்டு, ‘வாணாம் விஜியைப் போடு, சுலக்ஷணாவைப் போடு’ன்னு கலைச்சிட்டாங்க. எனக்குத் தெரியும் என்னைக் காவது எவனோ வந்து மாட்டித் தொங்க உட்டுடப்போறான்னு…”
“யாரோ இல்லே” – கிசுகிசுப்பாகக் குரல் கேட்டது:
“நான்தான். நானேதான்.”
“நீயா? ஐயோ, தாங்க்ஸு. கையைக் குடு குடு” என்ற ஸ்வப்னாவின் குரலைக் கேட்டதும் கிளம்பினேன். என்ன நடக்கு மென்று எனக்குத் தெரியும்.
என் எதிர்பார்ப்பு சரி.
அவன் கையைத் திருகி, முதுகோடு ஒட்ட வைத்து (அடுத்தவன் சுவர் ஓரமாக அமர்ந்திருந்ததனால், செயலற்றுப் போயிருந்தான்.) அலற விட்டுக் கொண்டிருந்தாள்.
“கராத்தே எக்ஸ்பர்ட் என்கிட்டேயா வித்தை காட் ஆடறே?” – என்னைப்பார்த்து வெற்றியாகச் சிரித்தாள்: “பாஸ், இந்தாங்க, உங்க கொலைகாரன். பிடியுங்க.”
“நடங்கடா” என்று நான் அவர்களைக் கடத்தும்போது-
ஹோட்டல்காரர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து-
நான், “இது கொலை கேஸ்; பேசாதே” என்றதும்-
சட்டென்று அடங்கிப்போனார்.
போலீஸுக்கு போன் செய்து எனக்கு உதவினார்.
“ஐயோ, எனக்கு ஒண்ணும் தெரியாது. நான் கொலையே செய்யல்லே” என்று கத்தும் முத்திருளாண்டியின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டாள் ஸ்வப்னா.
“பொய் சொல்றே? அப்போ நீதான் கொலையைச் செய்தேன்னு இந்த ஆள்கிட்டேயும் சொன்னே, என்கிட்டேயும் ஒத்துக்கிட்டே”.
“நிஜமாதான் சொல்றேன். நான் கொலை செய்யல்லே. நான் போகிறச்ச அந்தம்மா செத்துப்போயி ஃபானிலே தொங்கிட்டிருந்தாங்க. ஃபானைச் சுற்ற விட்டுட்டு ரசிச்சுப் பார்த்து ஒடிவந்துட் டேன். இதான் நடந்தது. நான் கொலை பண்ணல்லே”.
“பின்னே எதுக்காகப் பொய் சொன்னே…?”
“காரணமாத்தான். நான் கொலை செய்யல்லேன்னு தெரிஞ்சா, கொடுத்த பணத்தைப் பிடுங்கிப்பாங்களே. அதனாலதான் இவன் கிட்டே மட்டும் பொய் சொன்னேன். நீயும் முன்னே பின்னே தெரியாதவளா இருக்கவே, உன்கிட்டேயும் சொல்லி இவனுக்கு கன்ஃபர்ம் பண்ணினேன்”.
“அப்போ சொன்னது நிஜமோ, பொய்யோ எனக்குத் தெரியாது. ஆனா, இப்ப நீ சொல்றது மட்டும் அப்பட்டமான பொய்”.
“இல்லீங்க. நிஜம்.”
“அதைத் தீர்மானிக்கிற பொறுப்பை போலீஸ்கிட்டேயே விட்டுடலாமே?”
“சார்.”
”வாங்க சார்” என்றேன், வந்துநின்ற ஏ.ஸி.யிடம். போலீஸ் அவர்களைத் தள்ளிக்கொண்டு போயிற்று. அவர்களை ஜீப்பில் ஏற்றி அனுப்பிவிட்டுத் திரும்பி வந்து நின்ற அந்த அசிஸ்டண்ட் கமிஷனர் முறைத்தார்.
“மிஸ்டர். போலீஸ் வேலையில் குறுக்கிடுவது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?”
“தெரியும் மிஸ்டர். மிஸ்டர்.” – அவர் மார்புப்பட்டையைப் படித்தேன்.”எஸ். மிஸ்டர் ராஜவேலு. எனக்கு சட்டம் தெரியும். அரவிந்த ராஜா எம்.ஏ. எம்.எல். ஐ யாம். போலீஸுக்கு உதவுவது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கடமை. அது தெரியுமில்லையா?”
கொஞ்சம் வாயடைத்துத்தான் போனார்.
கடைசி இடைச்செருகல்:
ஜட்ஜ் சீனிவாசராகவன் கெஞ்சிப் பார்த்தும், சாப்பிட வரமறுத்தார் சாமியார்.
“என்னதான் இருந்தாலும் எனக்கென்று ஒரு வாரிசை உருவாக்கித் தந்தவள். அவள் பிணம் இருக்கும்வரை நான் எதையும் உண்ணுதல் கூடாது. தீட்டுக் காத்தல் வேண்டும்.”
“பழங்களாவது…”
மறுத்தார். அவர் வாசலுக்கு வந்தபோது போன் அவர் கண்ணில் பட்டது.
“மன்னியுங்கள் ஜட்ஜ் சார். நான் உங்கள் போனை பயன்படுத்தலாமா?”
“கறுப்பு போனை உபயோகியுங்கள். அது என் சொந்த டெலிபோன்.'”
எடுத்து டயலைச் சுழற்றியவர் வாய் திறக்கும்முன்-
யாரோ. இரண்டுபேர் குறுக்கே பேசும் ‘கிராஸ் டாக்’ கேட்டது.
“அதெல்லாம் முடியாது. விடியறதுக்கு முன்னால் ரொக்க பத்துலட்சம் வந்தே ஆகணும்”.
“பத்து லட்சம் ரொம்பவும் அதிகம். நடிகை, அதுவும் ஒரு மாஜி நடிகையின் உயிருக்கு அவ்வளவு விலை தருவதற்கில்லை.- ஸாரி. நான் கொடுத்ததே அதிகம்.”
“நேரில் பேசவருகிறேன்.’
“வேண்டாம். கடல் ஓர மாளிகைக்குப் போகப் போறேன்.”
“பிடிவாதம் பிடிக்கும் பெரியமனிதனே! நீர் நாளைக்கு கைதாகப் போகிறீர்?”
“அதிகம் பேசாதே. ஏதோ டயல் செய்கிற சத்தம் கொஞ்சம் முன்னால் கேட்டது. எவனாவது ஓவர் ஹியர் பண்ணுகிறானா என்னமோ போனை வை.”
தொடர்ந்து போன் குரல் அறுபட்டது.
‘யார் பேசினார்கள்? நடிகை கொலை என்கிறதை வைத்து ஸ்ரீதுளசியின் கொலை சம்பந்தமானது என்கிற வரை தெரிகிறது.’
மீண்டும் முயன்றார்.
“கலையரசி இருக்கிறாளா?”
“இப்போதுதான் வந்தோம். நீங்கள் யாரு?”
“கலை. நான்தான் உன் அப்பா.”
”சாமியாரா?”
“எதை வேண்டுமானாலும் சொல்லு. உடனே உன் சிநேகிதன், அந்த துப்பறியும் ஆளை – பேரென்ன?”
“ராஜா!”
“அவனை நான் பார்க்கவேண்டும்?”
“எதுக்கு?”
”அவசரம்மா.”
‘இருங்க. தரேன். ராஜா, சாமியார் பேசுகிறார்.”
“ராஜா. உனக்கொரு செய்தி. உன் திறமைக்கு ஒரு சவால். செய்கிறாயா?”
”சொல்லுங்க.”
“கடல் ஓர மாளிகையாம். அதைக் கண்டுபிடி.”
“இந்த ராத்திரியிலா?”
“அவசரம். உடனே புறப்பட்டுப் போ”
“அங்கே என்ன வேலை?”
“கொலைகாரன் அங்கேதான் போயிருக்கான்:ஹர்ரீயப்…சீக்கிரம், கிளம்பு”
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“போனில் அவன் பேசினதை ஒட்டுக்கேட்டேன். ‘மாஜி சினிமா நடிகையைக் கொல்ல எல்லாம் கொடுத்த தொகை போறும்’ என்கிறான்”.
“அது எங்கே இருக்கோ? ஒரு ராத்திரிக்குள்ளே கண்டு பிடிக்கிறதாவது?”
”நான் சொல்கிற இடத்துக்குப் போ. அநேகமாக, அந்த இடமாகத்தான் இருக்கும்”.
“சொல்லுங்க.”
”சாஸ்திரி நகரில் கடற்கரை தொட்டு கடல் ஓர மாளிகைன்னு ஒரு இடம் பார்த்ததாக நினைவு”.
‘உங்களுக்கெப்படி தெரியும்?. இருங்க.நீங்க சொல்ல வேண்டாம்; நானே சொல்றேன். உங்களை அந்த வீட்டுக்குப் பூஜையோ, பாதபூஜையோ செய்யறதுக்காக கூப்பிட்டிருப்பாங்க.”
“வெரிகுட். நீ புத்திசாலி. கொஞ்சநாளில் ஸ்கார்ட் லண்ட்யார்டைத் தின்பாய்.”
“போயிருக்கறீங்கன்னா யார் வீடுன்னு தெரிஞ்சு வைச்சிருப்பீங்களே?”
“தெரியும். அதை நான் சொல்கிறதைவிட நீயே நேரில் உணர்ந்தால், ஆச்சரியம் அதிகம். போ.”
போனை வைத்துவிட்டார்.
“ஹேய்” ” – கலையரசி என்னைத் துரத்திவந்தாள்.
“உங்க பர்ஸை விட்டுட்டுப் போகிறீங்க…”
”பர்ஸ்? ஸாரி. நான் பர்ஸைப் பயன்படுத்துவதில்லை. இது யாருதோ?”
வாங்கிப் பிரித்துப் பார்த்தேன்.
கற்றை கற்றையாகக் கருக்கழியாத புது நூறுரூபாய் நோட்டுக்கள்.
விலாசச்சீட்டை உருவிப் பார்த்தேன்.
‘இளம் பரிதிமால் கலைஞன்’ என்றது. நீட்டினேன். “இவர் யார் தெரியுமா?”
“தெரியும். என் அம்மாவின் பிசினஸ் பார்ட்னர் மட்டுமில்லாமல், வேறு சில நிழலான சங்கதிகளுக்கும் அம்மா நம்பின ஆள். நிறையவே சொல்லி இருக்காங்க. ‘ப்ராடு. கணக்கில கோளாறு செய்து கோடிக்கணக்கில் ஏமாற்றப் பார்க்கிறான். நான் அறிய ஹிட் ஆன படங்களுக்கும் நஷ்டக்கணக்கு எழுதி இருக்கான். பாஸ்டர்ட்’ன்னு அம்மா அடிக்கடி திட்டுவாங்க. இது அவன் அசல் பேரில்லே. புனைபெயர். அவன் பேரு ரொம்ப விசித்திரமாயிருக்கும். இருங்க, ரீகலெக்ட் பண்ணப்போறேன்.”
”காரில் போகும் போதே யோசிக்கலாம், வா.”
போலீஸில் புகார் செய்துவிட்டுக் கிளம்பினேன்.
“கடலோரப்பங்களாவுக்கு அப்புறம் போகலாம். முதலில் இந்த விலாசத்துக்குப் போகலாம். வா” – பங்களா பூட்டியிருக்கவே சாஸ்திரிநகரை நோக்கிப் பறந்தோம்.
சாஸ்திரி நகருக்குப் போகும் பாதையில் திரும்பிய போது, பார்க் நடுவே பால்கோவா விற்கும் ‘ஆவின்’ கடை இருட்டில் மூழ்கியிருந்தது.
முன்னேறினோம்.
கூரான புதுக்கோயில் தெரிந்தது, மறைந்தது. ஒடித்துத் திரும்பியதும் வரிசைவரிசையான பங்களாக்களில் தேடினேன்.
‘கடல் ஓரப் பங்களா’.
ப்ரேக்கை அழுத்தி உள்ளே போனவர்கள், நின்றோம்.
தாடியுடன், அமைதியாக அமர்ந்திருந்தார் பாலபகவானந்தா. அவரைச் சுற்றிலும் வீரா, தில்லைநாயகி, சமையல்காரம்மா என்று ஒரு பட்டாளமே இருந்தது.
விழித்தோம்.
சிரித்தவாறு வெளியே வந்து நின்றாள் ஸ்வப்னா: “ஹாய், குட் டே” என்றாள்.
“நீ எப்படி இங்கே வந்தே?”
“வீட்டுக்குப் போகிறதாகத்தான் கிளம்பினேன் பாஸ். அப்புறம்தான் அந்த ஜமதக்னி போராடினப்ப என் கைப்பை அவனோட போயிட்டது நினைப்புக்கு வந்தது. போலீஸ் ஸ்டேஷன் வாசல்லேயே இவனைப் பார்த்தேன். அந்த முத்திருளாண்டிக்கு சிநேகிதன் என்கிறதைத் தவிர, இவன் மேலே குற்றச்சாட்டு ஒண்ணும் இல்லேன்னு பெயில் வாங்கிட்டு வந்தான். என் பர்ஸைக் கேட்டு கலாட்டா பண்ணினேன்.
அங்கே ஓட்டல்லேயே விட்டுட்டதாகச் சொன்னான். ‘அதுலே ஆயிரம் ரூபா பணமிருந்தது அதைக் கொடு. இல்லேன்னா, போலீஸ்லே புகார் தருவேன். மறுபடியும் உள்ளே தள்ளுவேன்’னதும் பயந்துட்டான்.
“சரி. வீட்டுக்கு வா, பணம் தரேன்’னான் வீட்டுக்குப் போனதும் போன் வந்தது.
“அதிலே சின்ன கொலை; அதுவும் மாஜி நடிகை கொலைக்கு எல்லாம் அந்த பணம் போறும்’னான். விஷயம் புரிஞ்சு போச்சு விட்ட அடி – உதையிலே உண்மையைக் கக்கிட்டான்.
“இவன் பேரு என்ன தெரியுமா பாஸ்? கே.ஏ. இளம்பரிதி மால் கலைஞனாம். கே.ஏ. மீன்ஸ் கொலை ஏஜெண்ட்! அந்த அப்பாவி ஆளை அந்தமான்லேர்ந்து வரவழைச்சு, செய்யற கொலையை இவனே செய்துட்டு, அவன் பேர்ல சந்தேகத்தைப் போகவிட்டுட்டு, தப்பிச்சுக்கப் பார்த்தான். புனைபெயர் ஜமதக்னியாம். ஸ்ரீதுளசியோட ஃபிலிம் கம்பெனியில் ஆயிரம், லட்சமா சுருட்டின கொள்ளைக்காரன் அவங்க கணக்குக் கேட்க ஆரம்பிச்சதும் அவங்க கணக்கையே தீர்த்துட்டான்.
“ஒத்துக்கிட்டதும் போலீஸ் வந்து, மறுபடியும் கூட்டிட்டுப் போயிடுச்சு. நான் யாரு என்ன ஆளு? ஸ்கார்ட்லாண்ட் யார்ட் புகழ்…”
“ஆங்!”
“மிஸ்டர் ராஜாவோட செகரெட்டரியாச்சே! என்னை ஏமாத்த முடியுமா?”
“நீ நிறைய பேசறே?” என்றேன் பொறாமையாக.
“இப்ப. பதினாறிலே பேசாம, பின்னே அறுபத்தொண்ணிலா பேசுவேன்? அடிக்கடி, ‘மக்கு’ன்னு சொல்லி, வேற ஆளை செகரட்டரியா சேரச் சொல்லிக் கெஞ்சினீங்களே, இப்ப என்ன சொல்றீங்க?”
“நீயே என் நிரந்தர செகரெட்டரி…” – பூரிப்புடன் கேட் டேன்: “ஆமாம், கிராஸ்டாக்கில் இந்த ஜமதக்னியோட பேசினது யாரு?”
”அதுவும் என் செட் அப்தான். இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி, அந்த அந்தமான் முத்திருளாண்டியை வச்சே மிரட்டச் சொன்னேன். உங்க கேஸும் முடிஞ்சுது. பிரிஞ்ச இவங்க குடும்பமும் இணைஞ்சது.”
‘மவளே!’ என்ற தில்லைநாயகியைக் கதறிக்கொண்டே அணைத்துக் கொண்டாள் கலையரசி.
”வாட் கலை? உங்க கேஸை நான் முடிக்கிறேன்னு சொன்னேனே! முடிச்சுட்டேன்; பீஸ் கிடைக்குமா?”
”அப்படி சொல்லாதே.” – ரகசியமாகச் சொன்னேன்: ”அவ, கொடுத்த கேஸ் அவங்கம்மாவைக் கொல்லணும்னு. நீ சாதிச்சேன்னா விபரீத அர்த்தமெல்லாம் வரும்.”
‘ஙே’ என்று விழிக்க ஆரம்பித்தாள் ஸ்வப்னா.
(முற்றும்)
– 1981, பேசும் பதினாறு (பாக்கெட் நாவல்), முதற் பதிப்பு: ஜூன்2013, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.