பெருமாளும் சதாசிவமும்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 471
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் சதாசிவம் என்ற ஒருவன் இருந்தான். அவனுக்கு அண்ணன்மார் இருவர்; தம்பி ஒருவன். தந்தை இறந்தபின் உடன் பிறந்தவர்கள் அவர் தேடி வைத்த செல்வத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டனர். தந்தையின் செல்வத்தில் ஒவ்வொருவனுக்கும் கால் பங்குதான் கிடைத்தது.
அதே ஊரில் பெருமாள் என்ற ஒருவன் இருந்தான். அவன் சதாசிவத்தின் நண்பன். அவனுக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லை. அவன் தந்தை சதாசிவத்தின் தந்தையளவு செல்வம் படைத்தவர் அல்லர். இருந்தாலும் அவர் தேடி வைத்த செல்வம் முழுவதும் பெருமாளுக்கே உரிமையாயிற்று. ஆகையால் பெருமாள் சதாசிவத்தைக் காட்டிலும் பெரும் பணக்காரனானான்.
பெருமாளைப் பார்க்கும் போதெல்லாம் சதாசிவத்துக்குத் தான் குறையுடையவன் என்ற எண்ணம் தோன்றும்.
பெருமாளைப் போல் தனி மகனாகப் பிறந்திருந்தால் தனக்குத் தன் தந்தையின் செல்வம் முழுவதும் சேர்ந்திருக்கும். தான் பெரும் பணக்காரனாகியிருக்க முடியும் என்று எண்ணினான் சதாசிவம்.
நண்பன் என்ற முறையில் அவன் ஒரு நாள் பெருமாளைச் சந்தித்து வரச் சென்றான்.
பெருமாள் படுத்திருந்தான். சதாசிவம் அருகில் சென்றபின்தான் அவன் நோயுற்றுப் படுத்திருக்கிறான் என்று அறிந்தான்.
சதாசிவம் ஆதரவான குரலில் பெருமாளை நோக்கி, “மருந்து வாங்கிச் சாப்பிட்டீர்களா?” என்று கேட்டான்.
“மருந்து வாங்கி சாப்பிடத்தான் வேண்டும். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. வீட்டில் துணைக்கு ஒருவரும் இல்லை…” என்று சொல்லிக் கலங்கினான் பெருமாள்.
“கலங்காதீர்கள், இதோ நான் போய் மருத்துவரை அழைத்து வருகிறேன்” என்று சொல்லி சதாசிவம் விரைந்து சென்றான்.
மருத்துவர் வந்து பார்த்து, மருந்து கொடுத்துச் சென்றார். அதன்பின் பெருமாள் சதாசிவத்தை நோக்கி, “நண்பரே, அண்ணன் தம்பியரோடு பிறந்த நீங்கள், என்னையும் உங்கள் உடன் பிறந்தவன் போல் பாவித்துச் செய்த உதவியை நான் மறக்கமாட்டேன்” என்று கூறினான்.
தான் அண்ணன் தம்பியருடன் பிறக்கவில்லையே என்ற குறை அவன் பேச்சில் வெளிப் பட்டது. அதைக் கேட்டு சதாசிவம் உருகிப் போனான்.
கருத்துரை:- உடன் பிறப்பில்லாத வாழ்வு சிறந்ததாகாது
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.