பெருந்தகைமை




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மக்களிற் புல்லிய மனத்தர் எனப்படுவார் சிலர் உண்டு. அவர்கள் எடுத்தவற்றிற்கெல்லாம் சிறு பொருட் களாயினும் குற்றங் காண்பர்; தெரியாமற் செய்த சிறு தீங்கையும் பெரிதாக எண்ணிச் சினங்கொள்வர்; வாணி பத்திலோ, கைத்தொழிலிலோ, அலுவலிலோ உடனுள் ளார்மேற் பொறாமைப்படுவர்; எவனுக்கும் ஏதாவ தொன்று கிடைப்பின் அவன்மேற் பொறாமை கொள்வர்; தங்களுக்கு ஒருவன் ஒரு சிறு தீங்கு செய்தாலும், அது நாட்பட்டுப்போயும், ஏனையோர் அதனை மறந்து போய் விட்டாலும், தாங்கள் வன்மம் வைத்துக்கொண்டு செவ்வி கண்டபோது பழிவாங்க எதிர்பார்த்து இருப்பர்.

பெருமன துடையோர் எடுத்ததற்கெல்லாம் பதறிக் குற்றங்கண்டு சினங்கொள்ளமாட்டார்கள்; தாங்கள் தாழ் 1 நிலையிலிருந்தாலும், பிறருடைய செழிப்புநிலை கண்டு மனம் உவப்பர். அவர்கள் பிறருடன் ஈடுபட்ட நிலையி லிருக்க விரும்பினாலும், அவ்விருப்பம் தாராளத் தன்மை யோடுகூடிய போட்டியேயாகும். பெருமனத்தர் பிறர் தம் நோக்கங்களுக்கு விட்டுக்கொடுப்பர்; அவை தங்கட்கு ஊறுபாடு கொடுப்பவைகளாக இருந்தாலும், அவற்றை மன்னித்துக்கொள்வதற்குத் தயங்கமாட்டார்கள்; இத் தகையோர் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டி வஞ்சனை, தந்திரம் முதலிய இழிசெயல்களுக்கு இணங்கமாட்டார்கள். தாழ்நிலையிலிருந்தும் உண்மை யுடையவர்களை இகழ்ந்து வெறுப்பவரல்லர். பிறரை இழி நிலையோரென்றும் தீவினையாளர் என்றும் கற்பனையாக எண்ணிக்கொண்டு வீண் மனவருத்தப்பட இடங்கொடுக்க மாட்டார்கள். இப்படிப்பட்டதே பெருந்தகைமை என் பது. இஃது இவ்வுலகில் அருமையினும் அருமையான குணமென்று மக்களால் உச்சிமேற் கொள்ளப்படுகின்றது.
1. மாசிடன் அரசர் பிலிப்
ஆதென்ஸ் வல்வாயர்கள் பிலிப் அரசரைப்பற்றி அவதூறாகப் பேசுகின்றனர் என்னும் செய்தி பலரறிய நாடெங்கும் பரவி வந் அரசர் பெருந்தகையராதலால் தம்மை நிந்தைசெய்தோர் பால் வன்மனங் கொண்டாரில்லை. ஆனால் அவர் ஒன்று சொன் னார்: “என்னுடைய வாழ்க்கை நடவடிக்கையினாலும், இதர செய்கைகளினாலும், அவர்கள் பொய்யர்கள் என்று மெய்ப்பிக்க யான் கவலை கொண்டிருக்கவேண்டும்,” என்பதாம்.
தன்னைப் பழித்துப்பேசிய ஒரு குடியை நாட்டைவிட்டகற்றி விடவேண்டுமென உடனாளர் பிலிப் அரசருக்கு அறிவுறுத்த, அவர், “அவன் அவ்வாறு செய்ய இடங்கொடுத்தேமா என்பதை யாம் முதலில் பார்க்கவேண்டும்,” என்று சொன்னாராம். அவர் ஆராயச்சிக் கேள்வியினால், அவன் ஒருகால் தமக்கு ஒருதவி செய்த தாகவும், அதற்கு அவன் யாதொரு கைம்மாறும் பெறாமற் போனதாகவுந் தெரிந்து, உடனே குற்றம் தம்முடையதேயென அதனை ஒத்துக் கொண்டு அவனுக்கு நன்கொடையாக ஒரு தொகை கொடுக்க உத்தரவிட்டார்.
2. அரசர் உவில்லியமும் குலமகன் கொடால்பினும்
இங்கிலாந்தில் ஒருகால் நாட்டுப் பெருங்கலகம் நடந்தது. அப் போது இரண்டாவது ஜேம்ஸ் அரச நிலையினின்றுந் தள்ளப்பட் டான். அப்பால் மூன்றாம் உவில்லியம் என்னும் அரசன் அரி யணை யேறியிருந்தான். அக்காலத்தில் நாடுதுறந்த அரசனுடன் கடிதப் போக்குவரத்து செய்வதுபேரரச இரண்டகம் என்றுவிதிக் கப்பட்டிருந்தது. இங்கிலாந்துப் பெருமக்களிற்சிலர் அவ்விதியை மீறி நடக்கலாயினர். அவர்களில் ஒருவர் கொடால்பின் என்னுங் குலமகனார். உவில்லியம் அரசர் அவரைப் பெருந்தன்மையாகவே திருத்த எண்ணினார். அரசர் அவரை வரவழைத்துத் தமதரண் மனையில் ஓர் உள்ளறையில் வைத்துக்கொண்டு, “நீர் ஜேம்ஸ் அரச ருக்கு மறைவாக எழுதிய கடிதங்கள் கண்டுபிடித்தெடுக்கப்பட்டு இதோ என்னிடம் இருக்கின்றன; எவ்வளவு குற்றமுடையதாயி னும் உமக்கு அவர்மேலிருக்கும் மிக்க பற்றினையான் மெய்ச்சுகின் றேன்; இனியும் உம்மை நண்பராகவே யான் கருதுகின்றேன்,” என்று சொல்லி, அவர் மனம் இடர்ப்படாமலிருக்க அக்கடிதங்ளை அவர் முன்னிலையிலேயே நெருப்பிற் போட்டுவிட்டார். அரசர் காட்டிய பெருந்தன்மையினால் மனமடங்கிப்போய், அக்குலமகனார். அன்றுமுதல் அரசருக்குப் பிரியா நண்பராயினார்,
3. காதலர் இருவர்
பாரிஸ் நகரின்கண் வில்லாசர்ப்பி என்னும் ஒரு குலமகட் சிறுமியும், பெஸ்ட்டா என்னும் ஓர் அறுவை மருத்துவரும் ஒருவருக்கொருவர் அவ்வவர் அழகினைப்பற்றிப் பாராட்டிக் கொண் டிருந்தனர். ஆனால் அவரவர் நிலைமை வேறுபாடே அவர்தம் திருமணத்திற்குத் தடையாய் நின்றது. இவ்வாறு பலநாட்கள் செல்ல மருத்துவர் அச் சிறுமியை அடிக்கடி காணுவதை நிறுத்தி விட்டார்; மணம் என்பதே அவர்தம் மனத்தை விட்டகன்றது. இப்படியிருக்க வில்லாசர்ப்பிக்குச் செந்நீர் கழிக்கவேண்டியதான ஒரு கொடிய நோய் கண்டது; அதற்காகப் பெஸ்ட்டாவே அக் குலமகளிடம் போக நேர்ந்துவிட்டது. மருத்துவர் அவளைக் கண்டபோது மனக்கலக்கமும் உடல் நடுக்கமும் அடைந்து விட்ட யடியால், நெஞ்சுப்பைக்குச் செல்லும் நரம்பைத் திறந்துவிடு வதை விட்டுவிட்டு அதிலிருந்துவரும் நரம்பை அறுத்துத் திறந்து விட்டார். இவ்வாறு செய்வது உயிருக்குக் கேடுவிளைவிக்கும் குற்ற மாகும்.
இரண்டு மூன்று நாட்களில் அவ்வம்மையாருடைய தோளை யும் எடுத்துவிட நேர்ந்தது. ஆனாலும் கடுகடுப்பும் வெடுவெடுப்பும் கொள்ளாமல் அமைதியாகவே அக்குலமகளார் அவரை உடனிருந்து உதவிசெய்து கொண்டிருக்க வேண்டிக்கொண்ட னர். அம்மருத்துவர் இரண்டொரு நாட்களில் அவ்வம்மையார் ஒருநாட் பொழுதே உயிரோடிருக்கக்கூடுமென்று கண்டுகொண் டார். இச்செய்தியை வில்லாசர்ப்பி அவர்தம் முகக்குறியால் அறிய லாயினர். மருத்துவர் தம் காதலியின் பேரிரக்க நிலையறிந்து மன வேதனையினால் துடி துடித்துக் கொண்டிருக்க இறக்குந் தறுவாயிலிருந்த அக் குலமகள் மன அமைதியோடு சாக்காட்டு முறியொன்றை யெழுதி முடித்துவிட்டாள் உடனே அண்டையி லிருந்தோரையெல்லாம் அகற்றிவிட்டுப் பெஸ்ட்டாவைத் தனியே கூப்பிட்டு வைத்துக் கொண்டு, “யானோ இவ்வுலகத்தைத் துறக்குந் தறுவாயிலிருக்கின்றேன்; உம்முடைய மருத்துவத் தவற்றைப்பற்றி யான் எள்ளளவும் மனம் வருந்தவில்லை; அஃது விரைவில் என்னை விண்ணுலகடையச் செய்ததைப் பற்றி மகிழ்கின்றேன்; அத்தவறைப் பிறர் அவ்வாறு கொள்ள மாட்டார் கள்; உம்முடைய தவறு உம்முடைய தொழிலுக்கு ஊறுபாடு செய்யக்கூடும்; அதனால் நீர் நலிவடையாதிருக்கவேண்டி என்னுடைய சாக்காட்டு முறியில் ஓர் ஏற்பாடு செய்துள்ளேன்; போய் வருகிறேன்,” என்றாள்.
குலமகள் வில்லாசர்ப்பியை மரிக்கச்செய்த மருத்துவர் அவர் தம் உரிமைப்பொருளிற் பெரும்பங்கு பெற்றார். இஃதன்றோ பெருந்தகைமை!
4. ஓவியச் சிறுவர் மூவர்
இத்தாலி நாட்டில் ஓவியக்கலைக்கென்று ஒரு கல்லூரி இருந் தது. அதனில் உழைப்பும் நுண்ணறிவுங் கொண்ட வர்மன் என்னு ஒரு சிறுவன் அக்கலையிற் பயின்றுவந்தான். ஒருநாள் அவன் தீட்டிய சில சித்திரங்களைப் பார்த்து ஆசிரியர்கள் எல்லோரும், “இவன் எப்போதும் இப்படியே இக்கலையைப் பயின்று வருவ யின் இக்கலையின் உச்சிமேல் நிற்பன்,” என் றுமெய்ச்சிக் கொண்டனர்.
அக்கலூரியில் பயின்றுவந்த சர்மன் என்னும் மற்றொரு மாணாக்கனுக்கும் அச்சித்திரக்கலையில் வர்மனுக்கு அடுத்தபடி நல்ல பெயருண்டு. ஆசிரியர்கள் வர்மன் ஓவியங்களைப்பற்றி மிக மேன்மையாகப் பேசினதைக் கண்டு இவன் மன மடிவும் வன்மமுங் கொண்டு பொல்லாத உட்பகை யடைந்துவிட்டான்; வர்மன் பெற்ற பெருமையெல்லாம் தன்னால் வந்ததுவே என எண்ணிவிட் டான். மேலும் அவன் தன்னுடன் பயிலும் மாணாக்கரிடத்திலெல் லாம், வர்மனுக்கு ஓவியத்தில் என்ன பயிற்சியுண்டு; அவனுக் கென்ன தெரியும்? சிறந்ததெனப்புகழப்பட்ட ஓவியங்களெல்லாம் அவனுடைய ஆசிரியர்கள் திருத்திக்கொடுத்தனவே; அவனுக்கு அப்பெயர் கிடைத்தது அவனுடைய நல்வினைப்பயனே; அதற்கு அவன் தகுதியுடையவனன்று, என்று மறைவிற் சொல்லி வந்தான்.
அக்கலாசாலையிலேயே குப்தன் என்னும் இன்னொரு மாணாக்கனிருந்தான். அவன் கற்றுக்குட்டியாயினும் வர்மனின் வேலைத்திறத்தை நன்கறிந்து அவனைமெய்ச்சிக் கொண்டுவந்தான். வர்மன் ஆசிரியர்களாற் புகழப்படுதைப்பற்றிப் பெருங்களிப் படைந்து, தானும் அவனைப்போல் ஆகவேண்டுமென்று பேராவல் கொண்டான். ஆகவே வர்மனைத் தனக்கு மேல் வரிச் சட்டமாக வைத்துக்கொண்டான். குப்தன். வர்மன் பேச்சென்றால் குப்தனுக்குப் பேரின்பம். சர்மன் வர்மனை இழித்துப் பேசுவது அவனுக்குப் பிடிக்காது.
குப்தன் வர்மனை மெய்ச்சிக்கொண்டதோடு நிற்கவில்லை. அவன் இரவும் பகலும் தீட்டித்தீட்டி உழைத்து ஆசிரியர் மன நிறைவடைய அழகிய ஓவியவேலைகள் செய்துவந்தான். நாளேற நாளேற வர்மனைப் போல் ஆகாவிட்டாலும் ஏறக்குறையப் பிறர் மெய்ச்சும் ஓவியங்கள் தீட்டவல்லவனாகலாம் என்னுந் துணிவு அவனுக்கு உண்டாய்விட்டது.
அக்கலாசாலையில் ஆண்டுக்கொருமுறை சித்திரப்படக்காட்சி யொன்று வைப்பது வழக்கம். அப்போது எல்லாவற்றிற்கும் சிறந்த தோர் ஓவியத்திற்குப் பரிசளிப்பதுண்டு. அக்காட்சிக்காக வர்மன் மேன்மையிற் சிறந்ததோர் ஓவியந் தீட்டிக் காட்சிக்கூடத்தில் மற்ற வைகளுடன் காட்சிக்கென்று குறித்தநாளுக்கு முன் மலையில் ஓரிடத்தில் நாலவிட்டிருந்தான். எற்பாட்டுக்குப் பின் சர்மன் அக் கூடத்துக்கு மறைவாக வந்து வர்மன் படத்தின்மேல் ஏதோ ஒரு தைலத்தைக் கண்டபடி தெளித்துவிட்டுப் போய்விட, அவ்வோவியம் முற்றும் அழகிழந்து கிடந்தது.
குப்தனும், தன்னாற் கூடியவரை உழைத்துத் தீட்டிய சிறந்த தோர் ஓவியத்தை அக்காட்சிசாலையில் ஓரிடத்தில் தொங்கவிட்டு வைத்திருந்தான். மறுநாள் காட்சிசாலை திறக்கப்பட்டது. மக்கள் சுற்றிச்சுற்றிப்பார்த்து நல்லது அல்லதைப்பற்றிப் பேசிக்கொண்டு வந்தனர். நடுவர்களும் சுற்றிப் பார்த்துக்கொண்டு வர்மன் படத் தைப் பார்க்க ஆவல்கொண்டு அதனைக் கண்டு, “இஃதோ வர்மன் கைச் செயல் ! இவ்வளவு கேடுகெட்டதாகவா இருக்கும்,” என்று மருண்டு நிற்க, அதற்குள்ளாக வர்மனே வந்து, தன் சித்திரப்படத் தைப் பார்த்து, “யான் மோசம் போனேனே ! கேடுகெட்டவனா னேனே !” என்று கண்ணீருங் கம்பலையுமாய்த் தன்னை மறந்துநின் றான். சர்மனோ ஒரு மூலையில் உள்ளுக்குள்ளே பொய்வெற்றிக் களிப்புக்கொண்டு தலைசாய்த்து நின்றான். குப்தன் ஓடிவந்து நடுவர் களைப் பார்த்து, ‘என்ன சித்திரம்? இஃது அவனுடையதுதான். அதனை வர்மன் தீட்டிக்கொண்டிருக்கும்போது யான் பார்த் தேனே ! எவ்வளவு அழகாயிருந்தது! எவனோ வே வணுமென் ஏதோ தைலத்தை ஊற்றிக் கெடுத்து விட்டிருக்கின்றான்!” என்று கூறிக் கண்ணீர் ததும்ப நடுவர்களைப் பார்த்துக்கொண்டு வருந்து முகத்துடன் நின்றான். காட்சிகாண வந்தோரும், “என்ன வாய்ப்பற்றவன் வர்மன் ! என்ன தீவினையாளனவன்!” என்று பேசினர். நடுவர் வர்மன் ஓவியத்துக்கு எவ்வாறு பரிசளிக்க முடியும்! மற்றச் சித்திரங்களையும் நடுவர் பார்த்து, “குப்தனது ஓவியமே எல்லாவற்றிலும் சிறந்திருக்கின்றது; அதற்கே பரிசளிக்க வேண்டும்,” என்றனர். அப்போது குப்தன் அவர்களைப் பணிந்து, “தைலப் புள்ளிகளை மனத்தைவிட்டகற்றி மூலப்படத்தைத் தனிப் பட நோக்கிப்பாருங்கள்; அப்போது உங்களுக்கு அதன் சிறப்பு விளங்கும்; அடியேன் ஓவியமோ அதற்குமுன் நிற்காதே!” என்று பேசினான்.
குப்தனின் பெருந்தன்மையும் உண்மையுங்கொண்ட வாக்கு, நடுவர்களை மனமிரங்கச் செய்தது. அவர்கள் கூடிப்பேசிச் செய்த தீர்மானமாவது:-“இவ்வாண்டு இரண்டு பரிசுகள் கொடுக்கவேண் டும்; ஒன்று வர்மனின் மேன்மைக் கைத்திறமைச் சிறப்புக்கும், மற்றொன்று குப்தனின் உண்மை நன்னெறிச் சிறப்புக்கும்”- என்பதாம்.
5. ஆவென ஆட்சியாளர்
1746 -ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டுக்கும் ஸ்பெயின் காட்டுக்கும் கடற்போர் நடந்துகொண்டிருந்தது. அக்காலத்தில் ஒரு போது எலிசபெத் என்னும் இலண்டன் கப்பல் ஒன்று விலை உயர்ந்த வாணிபப் பண்டங்களுடன் ஸ்பெயின் நாட்டுக்கரு கடலிற் பயணஞ் செய்துகொண்டிருந்தது. அஃது ஓட்டைகண்டு இடுக்கணிலையில் இருந்தது. ஸ்பெயின் நாட்டாரால் தாங்கள் “பிடிப்பட்டுப்போனாலும் போகின்றோம், உயிரைக் காப்பாற்றிக் கொண்டாற் போதும்,” என்றுதுணிந்து, அக்கப்பலிலுள்ளவர்கள் அக்கப்பலை நடத்திக் கொண்டுபோய் ஸ்பெயின் நாட்டு ஆவெனா துறையிற் சேர்த்தனர்.
அக்கப்பல் தலைவர் ஆவென ஆட்சியாளரிடஞ் சென் “ஐயா! எங்கள் கப்பலுக்கு ஊறுபாடு ஏற்பட்டு உங்கள் கரைக்குக் கப்பலுடன் வந்து அடைக்கலமாகச் சேர்ந்துவிட்டோம். நாங்கள் எங்கள் கப்பலைப் பழுதுபார்த்துக்கொண்டு எங்கள் வழியே போய் விடுகின்றோம். அதுவரையில் எங்களைச் சிறைப்படுத்தாமல் நொதுமலர் போல் நடத்தவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கின் றேன்,” என்றார்.
அவ்வேண்டுகோளுக்கிரங்கி ஆவெனா ஆட்சியாளர், அக்கப்பல் தலைவரின் மனப்படியே கப்பலைப் பழுதுபார்த்துக்கொண்டு எவ்வித ஊறுபாடுமின்றித் தமது நாடுபோய்ச் சேரலாமென்று உத்தரவளித்ததுந் தவிர, அவர்கள் அங்குத் தங்கியிருக்கும் வரை யில் அவர்கட்கு வேண்டிய உதவிகளையுஞ் செய்துவந்தார்.
இவ்வாறு அவ்வெலிசபெத் என்னும் கப்பல் புத்துயிர்பெற்று ஆவெனத் துறையினின்றும் எல்லா நலத்துடனும் தேம்ஸ் நதித் துறைபோய்ச் சேர்ந்தது. பகையாளரிடமும் பெருந்தகைமை காட் டிய ஆவெனா ஆட்சியாளரின் செய்கை புகழத் தக்கதொன்றன்றோ?
க. பகையாளியை அடியோடழிக்க வல்லமையிருந் தும், செய்யா பெருந்தகைமையால் அவ்வாறு தவன் வெற்றியாளனாக இருப்பதற்கென்றே பிறந்தவனாவான். -இலவேந்தர்.
௨. பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. -வள்ளுவர்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |