பெரீய – மொதலாளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2025
பார்வையிட்டோர்: 261 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல பெரீய மொதலாளி, பத்து ஏருக்கு சொந்தக்கார். பெரீய மொதலாளி,அந்த ஊருக்கே மொதலாளி. அப்ப, ஊர்ல நல்லது கெட்டது அறியுறதுக்காக, பரமசிவன் பூலோகத்துக்கு வாராரு. வர்ற வழில, பத்து ஏரு உழுகுது. மொதலாளி, கொடயப் புடுச்சு வரப்போரத்ல நிக்கிறாரு. 

பரமசிவன் நேரா அங்க போறாரு. பத்து ஏருக்கார உழுகுறா. அவங்கிட்டப் போனாரு, ஏதாவது நம்ம பசிய ஆத்துவாண்ட்டு, நேரா அங்க போறாரு. 

மொதலாளி கொடயப் புடுச்சு வரப்புல நிக்கிறா. அவங்கிட்ட வழிபோக்க மாதிரி போராரு. போயி, நெடுந்தூரத்ல இருந்து நடந்து வர்ரே. கடும்பசி, இந்த ஏழயோட பசியத் தீக்கணும்ண்டு கேக்குறாரு. 

அப்ப, அந்தப் பத்து ஏருக்கார் சொல்றா. ஏப்பா ஒனக்கு கஞ்சி ஊத்தணும்ண்டா, இந்தப் பத்து ஏரயும் நிப்பாட்டணும். அது முடியாது. வேற எடத்தப் பாருண்டு சொல்லிட்டா.

ஏ…ங்க மொதலாளி!! நீங்க பணம் நெறஞ்சவங்க. நீங்க பசி தீக்கலனா, வேற யாரு தீக்குறதுண்டு சொல்லிக் கெஞ்சிக் கேக்குறாரு.

ஏய்யா! சாமியாரு! நிய்யி வாயில சொன்னா கேக்கமாட்டேண்ட்டு, ஏரு உழுதவங்கிட்டச் சாட்டக்கம்ப வாங்கி, எண்ணிக்கிட்டே பத்தடி அடிச்சசர். மனித ரூவத்ல இருந்த பரமசிவன் பத்தடியயும் வாங்கிக்கிட்டு, யப்பா!! என்னோட பசி தீந்து போச்சு. நா வர்றேண்டு சொல்லிட்டு விறுவிறுண்டு நடந்து வாராரு. 

வரயில, இங்கிட்டு ஒருத்த, ஒரு தொத்த ஏருக்கட்டி உழுதுகிட்டிருக்கா. பரமசிவன், நேரா அவங்கிட்ட வாராரு. அவங்கிட்ட வந்து, ஐயா! எனக்குக் கடும் பசிண்டு சொல்றாரு. சொல்லவும், பசியாயா? அப்டி செத்த ஒக்காருங்க, எந்தொத்த மாடுக எளப்பாராட்டும்ண்ட்டு மாட்டக் கழத்திவிட்டுட்டு, மரத்து நெழல்ல போயி ஒக்காந்தாங்க. 

அங்க, கம்மங் கஞ்சியக் கரச்சு வச்சுக்கிட்டு, பொண்டாட்டி ஒக்காந்திருக்கா. ரெண்டு பேருக்கும் ஊத்துனா. நல்லாக் குடிச்சாரு. யாரு? இந்த மனுச ரூவத்ல வந்த சிவன் குடிச்சிட்டு, ஒனக்கு நல்ல புண்ணியங் கெடைக்கும்ண்டு சொல்லிட்டு பெறப்படயில. 

அங்க பத்தேரு கட்டி உழுகுறானே! மொதல்ல, அவங்கிட்டப் போயிப் பசிக்குதுண்டு கஞ்சி கேட்டே, நல்லாப் பத்து அடி குடுத்தீர். பாவம் நிய்யி, தொத்த ஏருக்கார் ஏ…ம் பசியப் போக்குன. அதனால ஒனக்குப் புண்ணியங் கெடைக்கும்ண்டு சொல்லிட்டுப் போயிட்டாரு. அப்ப, இந்தத் தொத்த ஏருக்கார், ஏய்யா! அவங்கிட்ட ஏயா போனீங்க? அவ் பெத்த தாயக்கூட அடிப்பானேண்டு சொல்றா. சொல்லவும், மவராச்! நீ நல்லாயிருப்பே, ஒனக்கு புண்ணியம் கெடைக்கும்ண்டு சொல்லிட்டுப் போயிட்டாரு. 

அண்ணக்கி ராத்ரியே, காத்து மழயுங் கனத்த வானமுமாப் பேய் மழ பேஞ்சு, தொத்தேருக்கார், அவ் பொஞ்சாதி, பிள்ள குட்டிங்க, மாடு, வீடு எல்லாந் தண்ணில முங்கி அழிஞ்சு போச்சு. 

தொத்தேருக்கார தங் குடும்பத்தோட செத்துச் சிவலோகம் போறாக. அங்க, எதுக்கால, சிவனாகப் பட்டவரு, இவங்கிட்டக் கஞ்சி வாங்கிக் குடிச்ச வேசத்துல நிக்கிறாரு.

பாத்தா. பாத்திட்டு, தொத்தேருக்கார், நீதானே எங்கிட்டக் கஞ்சி வாங்கிக் குடிச்சவண்டு கேட்டர். ஆமாண்டு சொன்னாரு. நீ வந்த அண்ணைக்கே மழ பேஞ்சு, தண்ணி முங்கிச் செத்தோம். அதுக்குள்ள நீ எப்டி இங்க வந்தே. எங்கிட்ட கஞ்சி வாங்கிக் குடிச்சுப்புட்டு, நல்ல புண்ணியம் கெடைக்கும்ண்டு சொல்லிட்டு வந்தயில? ஆமா. அண்ணக்கி ராத்திரியே மழ பேஞ்சு நானு, பொண்டாட்டி, பிள்ள குட்டிங்களா செத்துப் போயி, இப்ப இங்க வந்திருக்கோம்ண்டு, தொத்தேருக்கார் சொன்னா. 

அப்ப: நாந்தாப்பா சிவன், அண்ணக்கி மனுச் ரூவத்ல பூலோகத்தப் பாக்க வந்தேண்டு சொன்னாரு. சொல்லவும் கால்ல விழுந்து வணங்கி நிண்டர். நிக்கயில, சிவன் சொல்றாரு. 

அண்ணக்கிப் பசிச்சு வந்த எனக்கு, கஞ்சிய ஊத்தி, என்னோட பசியத் தீத்தயில, அதர் இண்ணக்கி ஒனக்கு சிவலோக பதவி கெடச்சிருக்கு. 

அந்தப் பத்தேர் சம்சாரிக்கு, மேலும் பத்தேரக் குடுத்திருக்கேன். அவ் உழுது – உழுது, தாய் மொகத்துல பிள்ள முளிக்காம, பிள்ள மொகத்ல தாய் முளிக்காம, பாவச் செமைகளோட சாவாண்டு, ஈசுவரன் சொன்னாரு. பெத்த தாயிக்குக்கூட கஞ்சி ஊத்தாம, சொத்து சேத்து எதுக்கு? அது என்னத்துக்கு ஆகும்? பணக்காரன், எங்கிட்ட வர முடியாது. ஏழதர், எங்கிட்ட வரமுடியுமண்டு சொல்லிட்டு, அதனாலதர் ஒனக்கு விமோசனங் கெடச்சிருக்கு. 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *