பெரிய பிள்ளை
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சின்னையாப் பிள்ளையை சிவபுரம் காரர்கள் பெரிய பிள்ளை என்றே குறிப்பிட்டு வந்தார்கள்.
சின்னையாப்பிள்ளை அந்த ஊரில் ஆக்கினைகள் செய்து வைக்கும் பெரிய தனக்கரரர் ஒன்றுமில்லை. பெரிய வீட்டைச் சேர்ந்த மூத்தவரோ, வயசினால் பெருமை பெற்றவரோ இல்லை அவர். ஆள் தண்டியும் சதையுமாய் பெரியவராக இருக்கவுமில்லை.
ஒல்லிதான். ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். தலைமுடியை எப்பவும் ‘சம்மர் கிராப்’ மாதிரி ஒட்டவெட்டி, ஒட்டிய கன்னங்களும் துருத்திய மோவாயுமாக பார்ப்பதற்கு சாதாரணமாகத் தான் இருப்பார். சதா சளசள என்று பேசிக் கொண்டிருப்பார்.
எந்த விஷயமானாலும் தனது எண்ணத்தை உரத்த குரலில் ஓங்கி அடிப்பார்.ஊர் பிரச்னையானாலும் சரி; தனி நபர்களின் குடும்ப விவகாரமானாலும் சரி; தனிப் பட்ட விஷயமாயினும் சரியே -எதைக் குறித்தும் யோசனை கள் சொல்லாமல் இருக்கமாட்டார் அவர். ஐடியாக்களை உலுப்பித் தள்ளுவார். திட்டங்கள், தீர்மானங்களை எல்லாம் வகுத்து, விளக்கங்களை விளாசி விடுவார்.
இந்த சுபாவம் தான் அவருக்கு பெரிய பிள்ளை பட்டத்தைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும் என்று உள்ளூர் விஷயம் அறிந்த வட்டாரத்து அண்ணாச்சி ஒருவர் ஊகித்துச் சொன்னார். அதுவே சரியான காரணமாகவும் இருக்கலாம்.
எதைப் பற்றியும் தாராள அபிப்பிராயங்களை முந்திரிக் கொட்டைத் தனமாகக் கொட்டி வந்ததனாலும், மற்றவர் கருத்துக்களை தூக்கி எறிந்து பேசியதாலும், எந்தச் சிக்கலுக்கும் தீர்வுக்கான வழிவகுத்துக் காட்ட முன் வந்த தாலும், மற்றவர்கள் முதலில் கிண்டலாக, ‘பெரியவாள் என்ன சொல்லுதாக?’ ‘பெரியவாள் அபிப்பிராயம் என்னவாம்?’ என்ற தன்மையில் பேசினார்கள். ‘பெரிசு என்ன சொல்லுது?’ ‘பெரியவர் ஏதாவது ஐடியா வச்சிருப்பாரோ!’ என்று எடக்காகக் கூறியிருப்பார்கள். ‘பெரியவாள் ஒரு வழி சொல்லட்டும்’ என்று கோரினார்கள்.
இதனால் எல்லாம் பெரியவர், அண்ணாச்சியாபிள்ளை, பெரியபிள்ளை என்று குறிக்கப்பட்டு, சின்னையாபிள்ளை நிரந்தரமாக அந்த ஊரின் பெரியபிள்ளை’ ஆகிப் போனார். பெரியவர்களும் சின்னவர்களும், ஆண்களும் பெண்களும், சகல தரத்தினரும் அவரை ‘பெரியபிள்ளை’ என்றே கூறினார்கள்.
ஊரில் வயது முதிர்ந்தவர்கள், சின்னய்யாவா? அவனை லேசுப்பட்ட ஆளுன்னு எண்ணிப் போடாதே. பெரிய பெரிய வேலைகள் எல்லாம் செஞ்சுபோட்டு, இப்ப இப்படி இருக்கானாக்கும். பெரிய ஆசாமிதான் அவன். ஆயிரத்தை அரையே மாகாணி ஆக்கிவிட்டு, இப்போ பண் டாரம் கணக்கா இருக்கான்’ என்று சொல்வார்கள்.
சின்னையாப் பிள்ளைக்கு ஒரு காலத்தில், தாத்தாவும் அப்பாவும் விட்டுச் சென்ற சொத்து நிறையவே இருந்தது. வீடு வாசல்,வயல், தோப்பு துரவு, வில்வண்டி, விலை உயர்ந்த காளைகள், பசுமாடுகள், ஏவிய வேலைகளைச் செய்வதற்கு எடுபிடி ஆட்கள் எதுக்கும் குறைவிருந்த தில்லை.
கால வேகத்தில் அவை அனைத்தும் எப்படிப் போயின என்று தெரியாத விதத்திலே பறந்தோடிப் போயின.
அவரும் அவர் மனைவியும் தாராளமாக செலவு பண்ணினார்கள். இறைத்த கிணறுதான் ஊறும்’, இருந்தப்பன் தின்றால் அந்தப்பன் கொடுப்பான்’, ‘செலவு பண்ணப் பண்ண செந்தூரான் தருவான்’ என்று சொல்லிச் சொல்லி வாரி வழங்கினார்கள்.
சின்னையாப்பிள்ளை தினசரி சிவபுரத்திலிருந்து பக்கத்து டவுனுக்குப் போய் ஓட்டல்களில் உல்லாசமாகச் சாப்பிட்டும், சினிமா டிராமா என்று செலவு செய்தும் ஜாலியாக வாழ்ந்தார். அவர் தனியாகவா போவார்?. கூட இரண்டு மூன்று பேர்களையும் ஜமா சேர்த்துக் கொண்டு போவார். எல்லோருக்கும் தாராள சப்ளை தான்.
அவர் மனைவி செல்லம்மாளோ, ஊர்ப் பெண்கள் சொன்னது போல, ‘நெய்யிலே மிதந்த அப்பம். வடம் வருத்தம் தெரியாதவள்’. தினந்தோறும் அடை என்றும், வடை என்றும், மைசூர் பாகு, திரட்டுப்பால் அது இது என்றும் செய்வதில் அவளுக்குத் தனி ‘இன்ட்ரஸ்ட்’ எதை யும் நெய்யிலே செய்வதில் விசேஷ உற்சாகம். ‘நான் பெற்ற இன்பம் பெறுக நம்ம தெருக்காரர்கள்!’ என்ற நல்லெண்ணம் உடையவள் அவள். அதனாலே அக்கம் பக்கத்தில் வசித்த அக்காமார்கள், தங்கச்சிக்காரர்கள், அத்தை அரசிகள், மதனிகள், என்று அனைவருக்கும் வாரி வழங்கி மகிழ்ச்சி அடைந்தாள்.
வாங்கித் தின்றவர்கள் அவள் முன்னே புகழ்ந்தார்கள். ‘செல்லம்மா கைக்கே தனி ருசி தான். அவ எது செஞ் சாலும் அமிர்தமா இருக்கும்’ என்று ஐஸ் வைத்தார்கள். அவள் இல்லாத போது, ‘இந்தப் போக்குப் போனா எத்தனை காலத்துக்கு தாக்கு பிடிக்க முடியும்? செக்களவு பொன்னு இருந்தாலும் செதுக்கிச் செதுக்கித் தின்னா எவ் வளவு காலம் நீடிக்கும்னு சொல் வடை சொன்னவங்க சும்மாவா சொன்னாங்க!’ என்ற ரீதியில் பேசினார்கள்.
‘அய்யாப்பிள்ளையும் அம்மாளும் இப்படி கணக்குப் யாராமல் காலி பண்ணினால், ஒரு நாளைக்கு தலையிலே கை வச்சுக்கிட்டு உட்கார வேண்டியதுதான்’ என்றார்கள். அவர் கள் அப்படி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்.
சின்னையாப்பிள்ளை துணிந்து புதுமைகள் பண்ணத் தயங்கமாட்டார். யாரும் செய்யத் துணியாத விதத்தில், அவர் திடீரென்று தனது வயல்களில் புகையிலை பயிரிட்டார். “அவ்வளவும் தங்கம்! பணமாக் காய்ச்சுத் தள்ளப் போகுது வாரு!’ என்று அளந்து கொண்டிருந்தார். ஏகப்பட்ட பணம் செலவு பண்ணினார்.
அவருடைய ‘போதாத காலம்’ புகையிலைப் பயிரில் நோய் விழுந்து, இலை உரிய முறையில் வளராமல், சுருட்டை சுருட்டையாகிக் கெட்டுப்போச்சு, இம்முயற்சியில் பல ஆயிரம் ரூபாய் கடன் சேர்ந்தது.
பணம் புரட்டி விடலாம் என்று நம்பிக்கையோடு, எல்லா வயல்களிலும் வாழை பயிரிட்டார் அவர். ‘வாழ வைக்கும் பயிர் வாழை, இரண்டு வருடத்தில் பத்தாயிரக் கணக்கில் பணம் திரட்டிவிட முடியும். இந்தக் கடன் எல்லாம் தூசு!’ என்று வாய்ப்பறை அறைந்தார் அவர்.
வாழை வைத்து லாபம் கண்டவர்கள் அந்த ஊரில் இருந் தார்கள். ஆனால் சின்னையாவுக்கு வாழை கை கொடுக்க வில்லை. புயல், மழை என்று கெடுத்தது ஒரு வருடம்.மறு வருடம் மழை, தண்ணீர் இல்லாமல் காரியம் கெட்டது. இதிலும் அவருக்குப் பெரும் நஷ்டம்.
இப்படியே மஞ்சள் என்றும், இஞ்சி என்றும், வெங்காயம் என்றும் மாற்றி மாற்றி சோதனை பண்ணினார். எதுவும் கை கொடுக்கவில்லை. ஆகவே, வயல்கள், வண்டி மாடு. உழவு மாடுகள் எல்லாவற்றையும் விற்று, கடனை அடைத்தார்.
அவருடைய வளர்ச்சியை கிண்டல் பண்ண விரும்பிய உள்ளூர் நையாண்டிப் புலவர் இப்படி ஒரு பாட்டுப் பாடினார்-
‘வாழவே வைக்கும்’ என்று
வாழையை வைத்தாய் – போற்றி!
வாழை போய் மஞ்சளே கண்டாய் போற்றி!
மஞ்சள் போக்கி விட்டு,
இஞ்சியை வைத்தாய் போற்றி!
இஞ்சியும் உள்ளி போல் நின்றதாலே,
உள்ளியை வைத்தாய் நீயும்.
உள்ளியும் உள்ளடங்கிப் போனதாலே
நீயும் உள்ளேயே போனாய் போற்றி!
சின்னையாப்பிள்ளை நல்ல ரசிகர். இந்தப் பாடலை ரசித்து, ‘சபாஷ்டா பாண்டியா!’ என்று பாடியவரின் முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர்.
சின்னையாப்பிள்ளை சிவபுரத்தின் இளவட்டங்களுக்கு வழிகாட்டும் பெரியவராகவே வளர்ந்து வந்திருந்தார்.
ஒரு சமயம் அவர் வட்டாரத்துப் பையன்களை எல்லாம் சேர்த்து ‘சடுகுடு சங்கம்’ அமைத்தார். தினசரி ஆற்று மண லில் போய் மணிக்கணக்கில் ஆடிக் களித்தார்கள். பிறகு ஒரு சிலரை யோகாசனப் பயிற்சியில் ஈடுபடுத்தினார். ஆசனங்கள் பயில்வதற்கும் ஆற்று மணல்பரப்பு நல்ல தளமாக உதவியது.
ஊருக்குள்ளேயே, கோயிலுக்கு முன்புறமும், பிரகாரத்தி லும் பந்தாட்டத்தில் ஈடுபட்டார்கள் இளைஞர்கள். பெரியவ ரின் தூண்டுதலினால்தான்.
ஒரு காலத்தில், நாடகங்கள் போடுவது என்று பெரிய பிள்ளையும் ஊர் பிள்ளையாண்டான்களும் தீர்மானித்து அமர்க்களப்படுத்தி ஏதோ ஒன்றிரண்டு நாடகங்களும் நடித் தார்கள். நாடக ஒத்திகைக்கெல்லாம் அவர் வீடு இடம் கொடுத்தது.
அவர் வீட்டில் எப்பவும் பல பேர் கூடியிருப்பார்கள் சரியான சோம்பல் மடம் அது. படுத்துத் தூங்குகிறார்களும், படித்துப் பொழுது போக்குகிறவர்களும் போக மற்றப் பேர் சீட்டாடி அந்த இடத்தைக் கலகலப்பாக வைத்திருப்பது வழக்கம்.
பிள்ளை மனைவி தடை எதுவும் சொல்வதில்லை. பிறகு அவள் செத்துப் போனாள். பெரியபிள்ளை வைத்தது சட்டம் என்றாகி விட்டது.
திடீர் திடீர் என்று அவர் கோஷ்டி சேர்த்துக் கொண்டு குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் என ஊர் சுற்றக் கிளம்பி விடுவார். திருவனந்தபுரத்துக்குக்கூட ஒரு சமயம் போய் வந்தார்கள்.
அப்புறம் பிள்ளைக்கு ஒரு ஐடியா உதயமாயிற்று. சுற்று வட்டாரத்தில் உள்ள மலைகள் மீதெல்லாம் ஏறி பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார். கூட வருவதற்கு ஐந்தாறு வாலிபர்கள் சேர்ந்தார்கள்.
அருகில் இருந்த வெள்ளிமலை, நத்தம் மலை என்று ஆரம்பித்து, சில மைல்கள் நடந்து போய் பல்லிக்கோட்டை மலை, வல்லநாட்டு மலை என்றெல்லாம் ஏறி பார்த்தார்கள். அவர்களுடைய உற்சாகம் அதிகரித்தது. தூரத்துப் பெரிய மலைகள் மீது ஏறிப் பார்ப்பது என்று திட்டம் தீட்டினார்கள் அவ்வப்போது ‘வேன்’ அமர்த்திக் கொண்டு பயணம். திருக் குறுங்குடி மலை, களக்காட்டு மலை, மேற்கு தொடர்ச்சி மலை மீது சில இடங்கள் என்று ஏறி மகிழ்ந்தார்கள். இரவு நேரங் களை மலை மேலேயே தங்கிப் போக்குவதற்கு அவ்விடங் களில் வசதிகள் இருந்தன. அதை எல்லாம் கவனித்து, தகுந்த முன்னேற்பாடுகள் செய்வதில் சின்னையா வல்லவராக இருந் தார். அதனாலும் அவரை ‘பெரிய ஆளுதான்’ என்று மற்ற வர்கள் வியந்து பாராட்டினார்கள்.
கால ஓட்டத்தில், பெரியபிள்ளையின் போக்குகளில் மாறு தல்கள் தாமாகவே தோன்றின. சில மாதங்களுக்கு ஒருமுறை விடுவார். பல அவர் சிவபுரத்திலிருந்து காணாமல் போய் வாரங்கள் அல்லது சில மாதங்கள் போன பிறகு திடீரென்று வந்து நிற்பார்.
‘காஞ்சிபுரம் போனேன்… சென்னையில் கொஞ்ச நாள் தங்கியிருந்தேன்… பெங்களூர் போனேன்… மைசூர் போய் இருந்தேன்’ என்று குதூகலம் பொங்கும் குரலில் சொல்லுவார். தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக விவரிப்பார்.
சுவையாகச் சொல்வதற்கு ரசமான விஷயங்கள் அவரிடம் நிறையவே இருந்தன. அதனால் அவரைச் சுற்றி எப்பவும் சில பேர் காணப்படுவது வழக்கம்.
வரவர அவர் விசித்திரமான எண்ணங்களை வெளியிடு வதாக மற்றவர்கள் கருதலானார்கள்.
பாபநாசம் மலைமீது ஏறி, மேலே மேலே போய், தாமிரவர்ணி நதி பிறக்கிற இடத்தைக் காணவேண்டும். அங்கேயிருந்து புறப்பட்டு ஆற்றின் ஓரமாகவே நடந்துவந்து, அது போய் கடலில் கலக்கிற சங்கம் இடம் வரை போய் தரிசிக்க வேண்டும்.
பொதிகை மலை மீது, எங்கோ ஒரு இடத்தில் அகத் தியர் இருந்து தவம் செய்ததாக சொல்கிறார்கள். இப்ப கூட அவர் இருப்பதாகப் பேசப்படுகிறது. அந்த இடத்தில் புதர் புதராகச் செடி கொடிகள் மண்டிக் கிடப்பதாகவும், கடந்து என்கிற விஷவண்டுகள் மொய்ப்பதாகவும் சொன்னார்கள். அது எவ்வளவு தூரம் நிசம் என்பதைக் கண்டறிய வேண்டும். யாராவது என் கூட வரத் தயாரா என்று கேட்பதை வழக்க மாக்கினார் அவர்.
எவரும் தயாராக இல்லை.
மீண்டும் ஒருநாள் பெரியபிள்ளை என்கிற சின்னயாப் பிள்ளை சிவபுரத்தில் இருந்து மறைந்து போனார். மாதக் கணக்கில் அவர் தலைகாட்டவேயில்லை.
‘பெரிசு பொதிகை மலையில் ஆராய்ச்சி நடத்திக் கொண் டிருக்கும்!’ என்று சிலர் நக்கலாகப் பேசினார்கள்.
‘அகஸ்தியர் இடத்துக்கே போய் கடந்து கொட்டி செத்து போயிருப்பார் பெரியவர்’ என்று சில பேர் அபிப்பிராயப்பட் டார்கள்.
‘தாமிரவர்ணியின் மூலத்தைக் காணப் போய் அவரே “எங்காவது சறுக்கி விழுந்து ஐயோன்னு போயிருப்பார்’ என்றும் சிலர் சொன்னார்கள்.
எல்லோரும் ஏமாந்து போனார்கள் ஒருநாள். யாருமே எதிர்பார்க்காத – எதிர்பார்க்க முடியாத- ஒரு காரியத்தைச் செய்திருந்தார் பெரியபிள்ளை.
திடீரென்று ஒருநாள் அவர் ஊருக்கு வந்து சேர்ந்தார். தனியாக அல்ல. ‘கேரள நன்னாட்டிளம் பெண்’ ஒருத்தியும் அவருடன் ஜோடி சேர்ந்து வந்திருந்தாள்.
‘பெரியபிள்ளை அழகான கிளியைப் புடிச்சிட்டு வந்திருக்காரே!’ என்று ஊர்க்காரர்கள் அதிசயித்தார்கள்.
‘அறுபத்தஞ்சு – அறுபத்தாரு வயசு ஆகுதே இவனுக்கு. இந்த வயசிலே இவனுக்கு இப்படியா புத்தி போகணும்!?’ என்று ஊர்ப் பெரியவர்கள் அங்கலாய்த்தார்கள்.
அந்த அழகியை பார்த்து, பெரியபிள்ளையின் அதிர்ஷ்டத்தை எண்ணி, பெருமூச்சு விடாதவர்கள் அந்த ஊரில் யாருமே இல்லை என்று சொல்லலாம்.
‘சின்னையாப்பிள்ளை பெரிய ஆளுதான்!’ என்றே பலரும் குறிப்பிட்டார்கள்,
– சௌராஷ்டிரமணி, தீபாவளி மலர் 1988.
– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.