பெயிண்ட் – ஒரு பக்க கதை






“என்னப்பா அரைகுறையா பெயிண்ட் அடிச்சிருக்கே…? உன்னோட சூப்ரவைசர்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணி கூலியை குறைக்கச் செல்றேன்…’ என்று பெயிண்டர் ஆறுமுகத்திடம் கோபமாக கத்தினேன்.
உள்ளே வந்து அந்தச் சுவற்றை எட்டிப் பார்த்து, “ஓ அதுவா… அங்க நான் வேணும்னுதான் பெயிண்ட் செய்யலை. அதுக்கு காரணத்தைத் தெரிஞ்சுக்கணும்னா நீங்க அந்த இடத்தை சற்று உற்றுப் பார்க்கணும். அதற்குப் பிறகும் அங்க பெயிண்ட் தேவைன்னா நான் உடனே அடிச்சுடறேன்…’ என்றான் ஆறுமுகம் அழுத்தந்திருத்தமாக.
விளக்கைப் போட்டு அங்கு உற்றுப் பார்த்தேன்.
“ஐ லவ் அம்மா. ஐ லவ் அப்பா. ஐ லவ் காட்’ என்று பென்சிலால் கிறுக்கிய வார்த்தைகள் மின்னின.
“இது உங்க மகன் சின்ன குழந்தையா இருந்தப்போ எழுதினதா இருக்கும். நினைவு தெரிந்த பிறகு சுவரில் எழுதச் சொன்னாகூட எழுத மாட்டான். இதுமாதிரி சுவரில் கிறுக்க எனக்கு ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கிகிட்டு இருக்கேன். இதெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் சார். வேண்டாம்னா அங்கேயும் பெயிண்ட் பண்ணிடறேன்’ என்று சொல்லி
பிரஷ்ஷை எடுக்கப் போனான் ஆறுமுகம்.
நான் அவனைத் தடுத்தேன்.
– மார்ச் 2011