பெத்த மனசு
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு தாயிக்கு ஒரு மகன். அந்த மகனக் கஸ்டப்பட்டு வளத்தா. வெளிய என்னா கெடச்சாலுங் கொண்டு வந்து குடுத்து, நல்ல அம்போட வளக்குறா. பெத்த மனசு, பிள்ளய வாடவிடுமா? வாட விடாம வளக்குறா.
வளக்கயில், பெரியாளா ஆயிட்டர். மகனுக்கு, ஒரு கல்யாணத்த முடிச்சு வைக்க நெனச்ச, ஒரு மகராசி மகளக் கல்யாணம் முடிச்சு வச்சிட்டா. கல்யாணம் முடிச்சு வைக்கவும், பொண்டாட்டி பேச்சக் கேட்டுக்கிட்டு, பெத்த தாய்க்குக் கஞ்சி ஊத்த மாட்டேண்ட்டா.
ஊத்த மாட்டேண்டு சொல்லவும், பாவம், இந்தப் பெத்தவ, வீட்ட விட்டு வெளியேறிப் போயி, சத்ரஞ் சாவடில் இருந்துகிட்டா. இருந்துகிட்டு அங்கன ரெண்டு வீட்ல எடுத்துக் குடிச்சுக்கிட்டு இருக்றா. எடுத்துக் குடிக்கக் கூடத் தபாயம் இல்லாமப் போச்சு. எந்திரிச்சுப் போக முடியாம தவந்துகிட்டுப் போயி, அங்கன ரெண்டு வீட்ல வாங்கி, வகுத்த நெரப்பிக்கிறது. அந்தச் சாவடில நொடக்கிக்கிறது. இப்டியுமா இருக்கா.
இருக்கயில, ஒருநா, செத்துப் போனா. செத்துப் போகவும், பாத்தவக போயி இவங்கிட்ட, ஒங்கம்மா செத்துப் போனாண்டு சொன்னாக. செத்துப் போனாளாண்ட்டுப் போறா. போயி, தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டு வாரா.
வரயில, இவன, ஊரே எச்சியக் காரித் துப்புது. பெத்த தாய்க்குக் கஞ்சி ஊத்தாம தன்னால விட்டவ், இண்ணக்கி இப்டி செய்யலண்டா நாங்க ஊருக்காரு, ஒரு சீல எடுத்துப் போட்டு தானஞ் செய்ய மாட்டமாண்டு சொல்றாங்க.
அதயும் மீறி, வீட்டுக்குக் கொண்டு வந்து, பொன்தேருக் கட்றா. பூப்பந்தப் போடுறா, கொட்டுறா, மொழக்றா, கும்மறச்சம் போடுறா. இப்ப, தொலதூரத்ல் வாக்கப்பட்டிருந்த தங்கச்சிக்கு ஆள்விட்டு, அவ அழுது வாரா. எப்டிண்டா:
சத்திரத்த தூத்தாத்தா
சாவடியக் காத்தாத்தா
சந்த மடஞ் சாவடியே ஒனக்கு
தண்ணி குடுக்க நாதியில்ல – இண்ணக்கி
ஒனக்கு கொட்டேது – மொழக்கேது
கோல வர்ணத் தேரேது – ண்டு
அழுது வாரா. தங்கச்சி வாராண்டு சொல்லவும், இங்க போட்டுட்டு, எதுக்க ஓடுறர். அப்ப, பாத்தவங்க, தங்கச்சிகிட்ட, தாயி செத்ததச் சொல்லி, அழுகத்தர் போறானாக்கும்ண்டு நெனக்கிறாங்க. இவ் எதுக்க ஓடி, எப்டிம்மா தங்கச்சி அழுது வர்ர. இப்டி அழுதா எனக்கு அசிங்கமில்லயா? அப்டி அழுகாதமா
பாண்டியனவ காத்தா
பாலு விக்கிச் செத்தா ண்டு
அழுமாண்டு சொல்றா. “அப்பப்பா!” “பாலுஸ்டர் வேட்டி கட்டணும்ண்டு அப்டிக் கொட்றா”, “கஞ்சி ஊத்தாத படுவா. பூப்பந்த போடுறானோ? “செத்த பெறகு இதெல்லாம் கேக்குதா”, இப்படிக் கதை கேட்டவர்கள் பேசிக் கொண்டார்கள்.
பெறகு அழுதுகிழுது, தூக்கி தானஞ் செஞ்சுண்ட்டுப் போனானாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.