பெண்





(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதவு தட்டப்பட்டதும் அவள் வந்தாள் திறப்பதற்காக. நகர்ந்து வருகிற ஒளிக்கோடு மாதிரி.
கம்பிகள் இடைவெளியிட்டிருந்த அளிக் கதவு அவளை அவன் கவனிப்புக்குப் புலப்படுத்தியது. வெள்ளை ஆடை பளீரென்று அவன் பார்வையில் பட்டது.
அவள் கதவருகில் வந்தாள். அழுக்கற்ற வெண்மை யான வெள்ளைச் சீலையில், ஒரு புனிதத்தின் வடிவமாகப் பிச்சிப்பூ போல் வெளீர் எனத் துலங்கிய மெல்லிசான ரவிக்கை அவளது வெண்மையை அதிகப்படுத்திக் காட்டியது. வாட்டமுற்ற வெண்தாமரை போல் தென்பட்டது அவள் முகம்.
கதவருகில் நின்றாள். சோகத்தின் பிம்பமாக, உட் புறத் தாள் நீக்கி, கதவைத் திறந்து, ‘ஐயா, வா’ என்று கூறி ஒதுங்கி நின்றாள் எளிமையின் உயிர்ப்பாக.
இனிய, எளிய, தனக்கெனத் தனிவடிவமும், வசீகரமும் பெற்ற வெண்மையான புனித நந்தியாவட்டை மலரின் நினைப்பு அவன் மனதில் படர்ந்தது.
‘வா, உள்ளே வா’- அவள் குரல் எப்போதும் போல் மென்மையாக ஒலித்தது. அதில் சோகம் இழையோடியிருப்ப தாக அவன் கருதினான்.
உயர்ந்து, விசாலித்து பல அறைகளைக் கொண்டிருந்த அந்தப் பெரிய வீடு இருண்டிருந்தது. சன்னல் கதவுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. ஒளிவீச்சு உள்ளே புக இயலாது வெளியிலேயே முடங்கிக் கிடந்தது. அந்த வீடு அவளது வாழ்க்கையின் ஒரு ‘ஸிம்பாலிசம்’ (குறியீடு) போல அவனுக்குப்பட்டது.
உள்ளே போனான். ‘உட்காரு’ என்று அவள் உப சாரமாகக் கூறவும், ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். சூழ்நிலையின் வெறுமை அவன் பிரக்ஞையில் உறுத்தியது.
விசாலமான அறையின் பெரிய சுவர்கள் வெறுமையாய் வெளீரிட்டு நின்றன. அழகு செய்யும் படங்களோ, விகாரப் படுத்தும் காலண்டர்களோ, விதம் விதமான மனிதர்களின் போட்டோக்களோ இல்லாத வெறும் சுவர்களின் ஓரமாக பெரிய பெரிய நாற்காலிகள் கிடந்தன. வெறுமையை அதிக மாய் எடுத்துக் காட்டும் கருவிகள் போல.
அங்கே உயிர்ப்பின் சலனங்கள் இல்லை. உணர்ச்சிகளின் கலீரிடல்கள் இல்லை. குழந்தை இயக்கங்களின் சிதறல்கள் இல்லை. இயற்கை ஜீவன்களின் – குதித்துக் கு மாளியிட் டுக் கூச்சல் போட்டுத் திரியும் குருவிகளின்-உற்சாகச் சிரிப் புகள் கூட இல்லை. சுத்தம், ஒழுங்கு, அமைதி கொலு இருந்தன நெடுகிலும்.
போன முறை அவன் வந்திருந்த போது- ஒன்றிரண்டு வருடங்கள் ஓடி விட்டன டைவேளையாக – அவள் கணவன் இருந்தார். சீக்காளியாய்க் கிடந்தார், அந்த அறையின் ஒரு அங்கம் போல. ஒரு நோயாளியைச் சார்ந்து இருக்கக் கூடிய அனைத்தும் அங்கே இருந்தன. அவர் சதா ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். அவரைப் பார்ப்பதற் கென்று யாராவது வந்து போனார்கள். அவர்கள் பேச்சும், சிரிப்பும், கோப வெடிப்புகளும் அந்த வீட்டுக்கு ஜீவன் தந்து கொண்டிருந்தன. இப்போது அவர் இல்லை. வீட்டின் ஜீவன் ஓய்ந்து விட்டது. அவள் ஒடுங்கிப் போனாள். தன்னுள் தானே குறுகிக் கொண்டிருக்கும் சிற்றொளி மாதிரி.
ஒரு சுவரின் ஓரமாக ஒண்டி அமர்ந்திருந்தாள் அவள். பெரிய கூண்டினுள் ஒரு மூலையில் சேர்ந்து உட்கார்ந்தி ருக்கும் சிறுபறவையின் தோற்றம் அவள் மனசுள் சலன மிட்டது. அவள் சதா காலமும் இப்படி ஒதுங்கி, ஓய்ந்து, செய்வதற்கு எதுவும் இல்லாதவளாய் பேசுவதற்கு எதுவும் அற்றவளாய் பொழுது போக்கிற்கும் கவன ஈர்ப்புக்கும் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று கூட இல்லாது, தனி மையைச் சுமந்து கொண்டு உட்கார்ந்திருப்பாள். அன்றாட அலுவல்களையும், அவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்த பிறகு உட்கார்ந்து அலுத்துப் போனால், படுத்துக் கிடப்பாள். அவளது வாழ்க்கையின் பெரும் பாகம் ஒரு தினுசாகக் கழிந்து விட்டதென்றால் எஞ்சியுள்ள பாகம் வேறு விதமாக ஊர்ந்து நகரக் கனத்துக் கவிந்து கிடக்கிறது.
ராத்திரி நேரங்களில் ஒருவிதமான பயம் கூட இவ ளுக்கு துணை இருக்கும் இந்த இருண்ட சூழலில்; தன்னந் தனித்த பெரிய வீட்டில் என்று அவன் எண்ணிக் கொண்டான்.
அவள் முகத்தைப் பார்த்தான்.
ஈரப் பசையை இழந்து விட்ட முட்டகோசு மாதிரித் தோன்றியது அது. கண்கள் ஆழத்தில் கரை காண முடியாச் சோகம் மினு மினுப்பதாகப் பட்டது.
அவன் மனப் பதிவு, மறதிப் புழுதியில் மங்கிப் போய் விடாத ஒரு இளமைத் தோற்றத்தை இப்போது அவனுள் வெளிச்சப் படுத்தியது. சிரிக்கும் செந்தாமரை. ஒளி குறு குறுக்கும் கரிய விழிகள், குழந்தைத்தனமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அறியும் அவாவும் உணர்வு மெருகேற்றிய குமரிப் பெண் முகம்.
‘மாம்பழ மங்கை’ கதையைக் கேட்பதில் அவளுக்கு மிகுந்த ஆர்வம். ராஜா. குழந்தை பெறாத ராணிகள். ராஜாவின் தபசு. ஒரு முனிவரின் கிருபை. ஒரு மாம்பழம். இதை முழுவதும் தின்று விட வேண்டும்; கொட்டையைக் கூட; அப்ப குழந்தை கிடைக்கும் என்ற அருள். இளைய ராணி மாம்பழத்தின் சுவைப் பகுதிகளைத் தின்றுவிட்டு, கொட்டையைக் கிணற்றில் போட, அதிகாலையில் கிணற்றுக் குள்ளிருந்து அதிசயமான ஒரு மணம் வர, அந்தப் பக்கமாக வந்த மூத்த ராணி உள்ளே எட்டிப் பார்க்கிறாள்.
அற்புதமான ஒரு தாமரைப் பூ. இதழ்கள் விரித்து, அழகாகப் பெரிசாக, சிரிப்பது போல் மலர்ந்திருக்கிறது. அதன் நடுவில் ஒரு குழந்தை. கின்னஞ்சிறுசாய்; சிங்கார மாய்ச் சிரித்தபடி தாமரைப் பூ மேலே வருகிறது. ராணி பிள்ளையை ஆசையோடு எடுத்துக் கொள்கிறாள். அதுதான் மாம்பழ மங்கை… இப்படி வளரும் கதை.
அதை அவள் சொல்கிறபோது, கிணற்றினுள் ஒளிரும் தாமரையை வர்ணிக்கையில் அவள் முகமே ஒரு தாமரைப் பூவாகிவிடும். ஒளி சுடரும் அவள் விழிகளில் சந்தோஷமும், அதிசய பாவமும், மின்னி மிளிரும், சிறு உதடுகள் பிரிந்து நிற்க, அப்புறம்? அப்புறம்? என்று கதை கேட்கும் ஆர்வமுகம்…
அது அவனுள் நீங்காத நினைவு முகம். ஜீவனுள்ள தாமரைப்பூ.
இப்போது அது அழுத்தம் பெற்று நினைவில் சிலிர்க்க… அவன் வாடிய பூ முகத்தை எதிரே பார்த்தான். காலமும் வாழ்க்கையும் பாதித்திருந்ததால் பழுத்துக் கனிந்து விளங்கிய முதுமை முகம். இதுவும் தனி ஒரு அழகு பெற்றிருக்கத்தான் செய்தது.
அவள், இறந்து போனவரைப் பற்றி, அவரது கடைசி அனுபவங்கள் பற்றி, அவருக்குப் பார்த்த பாடுகள் பண்டுவங் கள், வந்து பார்த்த டாக்டர்கள், வாங்கிய மருந்துகள் பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனிடம் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகவும் வந்திருப்பவன் ‘துக்கம் விசாரிக்கத்தான்’ வந்திருப்பான். அவனிடம் சம்பிர தாய ரீதியில் அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற கடமை உணர்வினாலும், அவள் பேசினாள்.
அவன் காதுகள் அவ்வொலி அலைகளைக் கிரகித்துக் கொண்டிருந்த வேளையிலேயே அவன் மனம் அவள் சம்பந்த மான இறந்த கால நிகழ்வுகளை நினைவொளிக் காட்டி உள் வெளியில் உயிர்ப்பித்தவாறு இருந்தது.
அவள் அவனுக்கு அறிமுகமான சமயம் அவளுக்குப் பதின்மூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும். பருவ மலர்ச்சியின் விளிம்பிலே நின்றாள். அவனுடைய அம்மா வைத் தேடி வீட்டுக்கு வந்திருந்தாள். வர்ணம் வெளிறிய பாவாடையும், பழந்துணித் தாவணியும் அணிந்து உயர மாய், ஒல்லியாய், ஒளிக்கதிர் போல் காட்சி தந்தாள். அவ ளின் அந்தத் தோற்றத்தை அவன் மறக்க முடிந்ததில்லை. அப்போது அவனுக்கு வயது எட்டு. சுற்றி வளைத்த ஒரு உறவில் பெரியம்மாவின் மகளாக இருந்த அவள்-அவளின் அக்கா ஆனாள். அக்கா இல்லாத அவனுக்கு அவனிடம் ஒரு பற்றுதலும், தம்பி இல்லாத அவளுக்கு அவனிடம் ஒரு பிரியமும் பாசமும் வளர்ந்து வந்தன.
ஓடிய காலம் அவள் வாழ்க்கை ஏட்டில் புதிய புதிய அத்தியாயங்களை எழுதியது. விசேஷங்களும் நிகழ்ச்சிகளும் மலர்ந்தன. ‘வசதியான இடம், என்று கருதப்பெற்ற பெரிய வீட்டில் அவளுக்குக் கல்யாணம் நிகழ்ந்தது. ஏழ்மை நிலையிலிருந்து போதுமான வசதி வளம் என்ற களத்தில் அவள் அடி எடுத்து வைத்தாள். சந்தோஷங்கள் பூத்துக் குலுங்கின. பெண் குழந்தை பிறந்தது. மேலும் பெண்கள். பையன்… நல்லவனாகத் தோன்றிய கணவன் அவளுக்குச் சோதனையாக மாறினான். சூதாட்டப் பிரியன் ஆனான். புதுமையாக நாட்டிலே புகுந்து வளர்ந்த சினிமாக்கலையில் மோகம் கொண்டான். படம் பிடிக்கப் போவதாகத் திரிந்தான். பணத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொண்டான். பிசினஸ் பண்ணுவதாகச் சொல்லி, நகரவாசியாகி மேலும் பணத்தை விரயமாக்கினான். உடல் நலமும் சீரழிந்தது. வீட்டோடு வந்து முடங்கினான். பெண்களுக்குக் கல்யாணம் நடந்தது. அவரவர் வாழ்க்கையும் தனித் தனி ‘அரிச்சந்திர புராணம்’ ஆயிற்று. மகன் சோம்பேறியாய், வீணனாய். பொய்ய னாய், குடியனாய் வளர்ந்து அவளுக்குத் தொல்லையானான். சகல பொறுப்புகளும் சுமைதாங்கியுமாக வசித்த அவள் தனது அறுபத்தைந்தாவது வயசில் கணவனை இழந்தாள். வாழ்வில் நிம்மதியற்று, நிஜமான சந்தோஷத்தை உணராது, கஷ்டப்பட்டு நாளோட்டுகிற நிலைமை இப்போது.
இதை எல்லாம் எண்ணிய அவன் காதுகளில் அவள் தனது குறைகளைக் கூறிக் கொண்டிருப்பது கேட்டது. தன் பெண்களின் துயரங்களைச் சொன்னாள். மகனின் இயல்புகளைக் குறை கூறி வருத்தப்பட்டாள். தனது இயலாமைக்காக நொந்து கொண்டாள்.
“இவ்வளவு பெரிய வீட்டிலே ராத்திரி நேரங்களில் தனியாக இருக்க எனக்கு என்னவோ பயமாயிருக்கு. சரி யான தூக்கம் கிடையாது. ஏகப்பட்ட கவலைகள். இப்படி எல்லாம் சங்கடப்படுவதைவிட செத்துப் போவதே நல்ல துன்னு அடிக்கடி தோணுது, என்ன சாவு என்றும் தோணுது. மனசு கெடந்து புண்ணா உலையுது” என்றாள் அவள்.
தரையைப் பார்த்தபடி உட்கார்ந்து விட்டாள்.
அவளுக்குத் தன்னால் எவ்வித ஆறுதலுங் கூற இயலாது என்று அறிந்தவனாய், எந்தவித அனுதாபமும் அறிவிக்க சக்தி அற்றவனாய் உட்கார்ந்திருந்தான்
வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? பெண்களின் நிலைமை ஏன் இவ்வாறு இருக்கிறது? சமுதாயத்தில் பெண்ணுக்குத் தனித்த வாழ்க்கை இல்லை. ஆணைச் சார்ந்து தான் அவள் வாழ வேண்டியிருக்கிறது. இனிய கனவுகளோடும், சந்தோஷ எதிர்பார்த்தல்களுடனும் வாழ்வின் மலர்ச்சியில் துணைவன் ஒருவனோடு முன்னேற அடி எடுத்து வைக்கிற பெண்கள் அநேகரது ஆசைகள் கருகி விடுகின்றன. அவர்களது விருப்பங்களும், சந்தோஷங்களும் ஆண்களது போக்கினால் தீய்க்கப்பெறுகின்றன. பலர் ஏமாற்றங்களோடு, துன்பங்கள், வேதனைகள், அடி உதை கள், அவமானங்கள் குற்றச்சாட்டுகள், மற்றும் பல தண் டனைகளையும் அனுபவித்து அல்லல் உறுகிறார்களே, இதெல்லாம் ஏன்?
“என்ன தம்பி, குருகுருன்னு உட்கார்ந்திட்டே? உன்னைப்பத்தி நான் கேட்கவே இல்லையே! எப்படியிருக்கிறே?” என்று அவள் விசாரித்தாள்.
அவன் பதிலளித்தான்.
“நீ ஏன் இப்படி இருக்கிறே, உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிட்டு? எல்லாரையும் போல, நீயும் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு வீடும் வாசலுமா இருக்கலாமில் லையா? அதை விட்டுப் போட்டு, ஊர் ஊரா திரிஞ்சுக்கிட்டு- இதிலே நீ என்ன சுகத்தைக்கண்டே?” என்றாள் அவள்.
‘கல்யாணம் செய்துகொண்டு வீடும் வாசலுமாக இருந்து நீ என்ன சுகத்தையும் சந்தோஷத்தையும் கண்டு விட்டாய்’ என்று அவளிடம் கேட்க விரும்பினான். ஆனால், கேட்கவில்லை. ‘உன் மகள்களின் வாழ்க்கை என்ன சுகமாக அமைந்தது? நமக்கெல்லாம் தெரிந்த எத்தனையோ பெண்கள், ஆண்கள் வாழ்க்கையில் என்ன சுகத்தைக் கண்டிருக்கிறார்கள்?’ இப்படி எல்லாம் பேச அவன் ஆசைப்பட்டான். ஆனால் பேசவில்லை.
“மனிதர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா – அர்த்தத்தைக் காண முடியுமா தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் உண்டா என்று தேடிக் கொண்டு திரிகிறேன்” என்றான்.
“நல்லா அலைஞ்சே போ!” என்றாள் அவள். “கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு, ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்தி, குழந்தைகளோடு வீடும் வாசலுமா இருப்பது தான் வாழ்க்கை. அதிலே கஷ்டங்களும், தொல்லைகளும் வருவது சகஜம். அதை எல்லாம் சகித்துக் கொண்டு இருக்கிறதுதான் வாழ்க்கையின் அர்த்தம். நீ என்ன புதுசாக் கண்டு பிடிக்கப் போறே இதிலே!” என்று சொன்னாள்.
‘கொஞ்சம் இரு. காப்பி போட்டுக்கிட்டு வாரேன்” என்று எழுந்து உள்ளே போனாள்.
”அக்கா, நீ பெண்மையின் சரியான பிரதிநிதிதான்” என்றி அவன் எண்ணிக் கொண்டான். அவன் பார்வை அந்தப் பெரிய வீட்டின் வெறுமையில் நீந்தியது.
– தினமணி கதிர், 14-11-1980.
– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.