கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 21, 2025
பார்வையிட்டோர்: 4,043 
 
 

அத்தியாயம் 4.1-4.3 | அத்தியாயம் 4.4.-4.6

4.4 கனி

ராஜ வைத்தியத்தையே கபளீகரம் செய்துவிடக் கூடிய ‘டியூபர் குலோஸிஸ்’ வியாதி ஏழைக் குமாஸ்தாவான அப்பாவின் எளிய உடலிலே மட்டிலாத மோகம் கொண்டிருந்தது. கூடத்திலே கிடந்த பழைய விசி பலகையில் மெத்தென்று அம்மா தயாரித்த படுக்கையில் அவர் படுத்திருந்தார். டாக்டர் தருமத்துக்குக் கொடுத்திருந்த ‘பினைல்’ தண்ணியின் வாசனை உள்ளே நுழையும் போதே மூக்கில் நெடி ஏறியது. என்னையும் அத்தையையும் கண்டவுடனேயே அம்மா, “மாபாரதமாகப் படுத்துக் கொண்டு விட்டாரே! கணையும் காங்கையும் மனுஷர்களுக்கு வருவதில்லையா? நகை வேண்டாம், நாணயம் வேண்டாம், அந்த மனுஷர் உடம்பில் தெம்புடன் வளைய வருவதே பெரிய பாக்கியம் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு எனக்குச் சமானமில்லை என்று இருந்தேனே! தெய்வம், ‘அப்படியா நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்கிறதே!” என்று மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள்.

“அப்புறம்? டாக்டர் வந்து பார்க்கிறாரா இல்லையோ? ஆறு மாசத்துக்கு முன் உடம்பு சரியில்லை, இருமுகிறது என்று எழுதியிருக்கிறான் என்று அவர் சொன்னார். சூடு, நாலு நாளைக்குப் போஷாக்காக வைத்துக் கொண்டால் சரியாகிவிடும் என்று எண்ணிக் கொண்டேன். இத்தனை பெரிசு என்று எப்படித் தெரியும்? டாக்டர் என்ன தான் சொல்கிறார்?” என்றாள் அத்தை.

“தினம் அவரும் வருகிறார். தேவலை ஆகிவிடும் என்கிறார். நேற்றைக்கெல்லாம் பார்க்கப் பயமாக இருந்தது. பயந்து தந்தி அடிக்கச் சொன்னேன். நீங்களும் அங்கே வந்திருப்பீர்கள் என்று ஆசையுங்கூட. ஒரு சமயம் தெம்பாகப் பேசுகிறார். இன்னொரு சமயம் மனசு திக்திக்கென்று அடித்துக் கொள்கிறது” என்று அம்மா புடவைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

கழுத்திலே மஞ்சள் பூச்சு ஏறாமல் அழுக்குப் படிந்திருந்த தாலிச் சரடு. இடுப்பில் பல இடங்களில் கரைந்து சாயம் போன புடைவை. கவலையும் எக்கமும் மண்டிக் கிடக்கும் உலர்ந்த முகம். ‘இதுவா என் அம்மா?’ அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதற வேண்டும் போல இருந்தது எனக்கு.

அப்பா, அப்பாவா அவர்? இல்லை, கொஞ்ச நஞ்சம் இருந்த இவருடைய சதையையும் சாப்பிட்டு விட்டு எலும்புருக்கி நோய்தான் படுத்திருந்தது. பொந்துக்குள் கிடந்த அவ்விரு கண்களும் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு நீரில் மிதந்தன. அப்பா அவர் என்ற அந்தத் தடையம் நான் அவர் நோயாளி என்பதையே மறக்கும்படி செய்துவிட்டது.

“ஐயோ அப்பா!” என்று எலும்புக் குச்சியாக இருந்த அவர் தோளைப் பிடித்துக் கொண்டு என்னையும் மீறிய உணர்ச்சியிலே கதறி விட்டேன். என் தந்தையை எனக்கு நினைப்பூட்டக் கூடிய இன்னொரு தடையமாக அவரது மெல்லிய குரல், “சுசீ? அழாதேயம்மா. எனக்குச் சீக்கிரம் தேவலையாகிவிடும்” என்று தழுதழுத்தது. அவருடைய வறண்ட கைகள் என் முதுகைத் தடவின.

இந்த நிலையில் வைத்தியர் வந்திருக்கிறார்.

“இதென்னம்மா? நோயாளி அருகிலே இவ்வளவு நெருக்கமாக? நீயா அழுகிறாய்? எப்போதம்மா வந்தாய், சுசீலா? படித்த பெண்ணாகிய நீயே இப்படி மனம் தளர்ந்து போகலாமா? அம்மாவுக்குத் தேறுதலாக இருப்பதை விட்டு…? சே சே! எழுந்திரம்மா!” என்று அவர் கடிந்து கொண்டார். ஆஸ்பத்திரியில் முன்பு இருந்த வைத்தியர் தாம் அவர்.

உஷ்ணமானியை வைத்துப் பார்த்தார். அப்புறம் ஊசி மூலம் ஏதோ மருந்து போட்டார். அவர் திரும்பும் சமயம் கூடவே வாயில் வரை சென்ற நான், “அப்பாவுக்கு இப்போது எப்படி இருக்கிறது டாக்டர்? தேவலையாகி விடுமா?” என்று குழந்தை போல் கேட்டேன்.

“ம்…?” என்று அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார்.

தெய்வத்திடம் வரம் கேட்பவன் நோக்கும் நிலையில் நான் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

“உன்னிடம் உண்மையைச் சொல்லியே ஆகவேண்டும். உன் புருஷன் வந்திருக்கிறாரா அம்மா?” என்று அவர் கேட்டார்.

“இல்லையே டாக்டர். உண்மையைச் சொல்லுங்களேன். அப்பாவுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று நான் பதறினேன்.

“இந்த வியாதி இப்படியெல்லாம் கவனித்தால் தீரக் கூடியது இல்லை அம்மா. முதலிலே இந்த இடத்தை விட்டு நல்ல ‘ஸானிடோரியம்’ ஒன்றில் சேர்த்திருக்க வேண்டும். வெறும் மருந்துகளால் குணமடையக் கூடிய வியாதி அல்ல இது. ஆரோக்கியமான உணவு, காற்று, சுற்றுப்புறம் இவை தேவை. இவை சரியாக இல்லாததனாலேயே வியாதி இத்தனைக்கு முற்றி விட்டிருக்கிறது. ஆனால் அம்மா என்ன பண்ணுவார்கள், சுசீலா? ஆயிரக்கணக்கில் பணம் செலவிட்டுப் பார்க்க வேண்டிய நோயாயிற்றே இது? எல்லாம் யோசித்துத்தான் உன் புருஷர் வந்திருக்கிறாரா என்று கேட்டேன். உம்…” என்றார் அவர் நிதானமாக.

என் பரபரப்பு, தந்தையின் உடல்நிலை அவர் கையில் இருக்கிறது என்று குழந்தை போல் நினைத்த என் அசட்டுத்தனம், எல்லாவற்றுக்கும் அவருடைய இந்தப் பதில் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

“ஆனால் அவரை வரவழைக்கட்டுமா டாக்டர்?” என்று நான் கேட்டேன்.

“அதுதானம்மா உசிதம்” என்று மொழிந்த அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார்.

“டாக்டர் என்ன சொன்னார் சுசீ? தங்கமானவர். இந்த அஞ்சு மாசகாலமாக கோடி ரூபாயைக் கட்டி கொடுத்தால் கூட அப்படி வந்து பார்க்க மாட்டார். அப்படி வருகிறார். அவருந்தாம் மாற்றி மாற்றி ஊசி போடுகிறார். மருந்து கொடுக்கிறார். நம் போதாத வேளை எப்போது அகலும் என்று யாருக்குத் தெரியும்?” என்றாள் என் தாய்.

பாவம்! அவளுக்கு இந்த வியாதியைப் பற்றி என்ன தெரியும்? ஊசி போடுகிறார். பெரிய வைத்தியம் நடக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறாள். மலையை விழுங்கிவிட்டவனுக்குச் சுக்குக் கஷாயம் போல், இந்தச் சிகிச்சை எம்மாத்திரம்? பணம்! அவரிடம் எந்த உதவியையும் நாடக்கூடாது என்று இந்தச் சமயத்தில் என் வைராக்கியத்தை நிலை நாட்டிக் கொண்டு அப்பாவின் உயிரைப் பணயம் வைப்பதா? ஊராரின் மனத்திலே சுசீலா செயலாக இருக்கிறாள் என்று தோன்றும் எண்ணத்தின் பிரதிபலிப்புப் போல்தானே டாக்டர், “உன் புருஷர் வந்திருக்கிறாரா?” என்று என்னிடம் கேட்டார்? அப்போது எனக்குப் பெருமையாக இருந்ததே!

என் தந்தை இங்கே போஷாக்குக்கு மன்றாடுகையில் நான் எண்பது ரூபாயில் ‘டீ செட்’ என்ன, பட்டுப் புடவைகள் என்ன, இப்படி ஆடம்பரத்துக்குச் செலவிட்டேனே! கையில் வைத்திருந்த பொருளையெல்லாம் என் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வாரி இறைத்துவிட்டு, முழுக்க முப்பது ரூபாய் கூடக் கையில் இல்லாமல் நிற்கிறேனே!

அவருக்கு எழுதினால் உதவமாட்டாரா? இங்கே அவருக்கு இருக்கும் மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளப் புறப்பட்டு வரமாட்டாரா?

உடலில் சக்தி இருக்குமட்டும் அப்பாவும் ஓடி ஓடி உழைத்தார். இப்போது அவர் ஓய்ந்துவிட்ட பிறகு நான் என்று நாதனாக யாரும் இல்லையே! சுந்து அந்த வருஷந்தான் பள்ளிப் படிப்பை முடிக்கும் பரீட்சை எழுதியிருந்தான். பாவம் வண்ணான் வெளுத்த சட்டைக்குக் கூட அவன் கொடுத்து வைக்கவில்லை. இளமையில் எழும் இந்த அற்ப ஆசைகளைக் கூட உள்ளே அடக்கிக் கொண்டு அவன் கிணற்றடியில் சட்டை துவைப்பதைக் காண எனக்குச் சகிக்கவில்லை. உலகம் இன்னும் தெரியாத பதினைந்து வயசுப் பாலகனான அவனால் அப்பாவின் இந்த வியாதிக்கு எப்படிப் பரிகாரம் தேட முடியும்? அவனாலானது ஆஸ்பத்திரித் தண்ணீரை வாங்கி வந்து வைப்பதுதான். வீட்டுக்கு வாடகை பாக்கியாதலால் வீட்டுக்காரன் வீட்டைப் பழுதுபார்க்கவில்லை. கண்ட இடங்களிலெல்லாம் காரையும் மண்ணும் உதிர்ந்தன. லீவு இல்லாமல் அப்பா அரைச் சம்பள லீவில் இருந்ததால் குடும்பமே அரைப் பிராணனாக இருந்தது.

அத்தை வந்திருக்கிறாளே, கட்டாயம் அவள் சமயத்தில் உதவி புரிவாள் என்று நான் நிச்சயமாக நம்புவதற்கு இல்லாமல் அம்மா அவளிடம் குடும்ப நிலவரங்களை மூடி மூடியே வைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் தான் இந்த டாக்டரின் சிகிச்சைக்கு மேல் ஒன்றுமே இல்லை என்று எண்ணியிருக்கிறாளே. அத்தையாக உணர்ந்து உதவுவாளா?

அவள் அன்று என்னிடம் கிணற்றடியில் கேட்டது என் கொஞ்ச நம்பிக்கையையும் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டது.

“பார்த்தாயா சுசீலா? இவ்வளவு மோசமாகும் வரை எங்களுக்கு எழுதக் கூடாது என்று இருந்திருக்கிறாளே! பெற்றவள் இருக்கிறாள், அவளுக்கு கூடத் தெரிவிக்க வேண்டாம் என்று தானே இத்தனை பெரிய வியாது வந்து வைத்தியம் பண்ணுவதை எழுதாமல் இருந்திருக்கிறாள்? உடன் பிறப்பில்லையா? நாளைக்கு ஏதாவது நேர்ந்தால் என்னை நாலு பேர் கரிக்க மாட்டார்களா? இப்படி இவள் இருக்கும் போது நானாக அத்திம்பேரிடம் ஏதாவது சொன்னால் செருப்பைக் கழற்றி என் மூஞ்சியில் அடிப்பார்! ஆறு மாசம் முன்பு எழுதினேன் என்று மழுப்புகிறாளே! சாதாரணமாக இருமுகிறது என்று அவனே எழுதியிருந்தான். அதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லையா?” என்று என்னிடம் அம்மாவின் மேல் குற்றப் பத்திரிகை படித்தாள். எனக்குக் கூட இது சரியெனப் பட்டது.

அப்பாவின் உயிருக்கு மேலா இவர்களுடைய மரியாதை, கௌரவம் எல்லாம்? அம்மா முதலிலேயே அத்தைக்குத் தெரிவிக்க வேண்டாமா? நமக்குப் பெரிய உதவி தேவையாக இருக்கும் போது சில்லரை அவமதிப்புக்களைக் கவனிக்கலாமா? ஏதோ நாலு வார்த்தை பேசினாலும் அத்திம்பேர் கவனித்து ‘ஸானிடோரியம்’ ஒன்றில் சேர்த்திருக்க மாட்டாரா? புக்ககத்து மனிதர்களுடன் இணைந்து போக வேண்டும் என்று எனக்குப் புத்தி கற்பித்த அம்மாவுக்கு ஏன் தெரியவில்லை?

அத்தையின் உதவி இல்லாமலே, இந்த அழகான மாப்பிள்ளையான சாய்காலிலே உதவி பெற்று விடலாம் என்று அம்மாவின் அசட்டு வீம்பு எனக்கு அன்று தான் வெளியாயிற்று.

“மாப்பிள்ளை வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் சுசீ. இங்கே சமயத்தில் உதவுவார் யாரும் இல்லையே! அந்த இரண்டு மாப்பிள்ளைகளும் சுகமில்லை. மாமாவோ சம்சாரி. இந்த ஆசையிலேதான் இத்தனை நாட்களாக உனக்குத் தெரிவித்தால் கவலைப்படுவாய் என்றே பேசாமலிருந்தவள், டாக்டர் முதற் கொண்டு எல்லோரும் சொன்ன பிறகு தந்தியடிக்கச் சொன்னேன். அப்பாவுடைய அரைச் சம்பளம் மருந்துக்கே காணவில்லை” என்று தனிமையில் என்னிடம் ரகசியமாக வெளியிட்டாள்.

நான் ஜாடையாக, “ஏனம்மா? அத்தைக்கு நீங்கள் கடிதமே போடவில்லையா?” என்று கேட்டேன்.

ஆத்திரம் பொங்கியது அவளுக்கு.

“போடவில்லையாவது? உடம்பு சரியில்லை. இங்கே நல்ல ஆஸ்பத்திரி இல்லை. அங்கே வந்து வைத்தியம் பார்க்கலாமா என்று வெட்கத்தை விட்டு அப்பா நாலு கடிதம் எழுதினார். என்று வந்துவிடப் போகிறார்களோ என்று அத்தனைக்கும் பிடிகொடுத்தே எழுதவில்லை. இப்போது இவளை யார் வரச் சொன்னார்கள்? இந்தக் கரைசல் யாருக்கு வேண்டும்? தெய்வம் கண் திறக்க வேண்டும். எனக்கும் மாங்கல்ய பலம் இருக்க வேண்டும்!” என்றாள். நான் எதை நம்புவேன்?

அம்மா என்னிடம் இதைக் கூறுமுன்பே நான் என் கணவருக்கு அவளுக்குத் தெரியாமலே இங்குள்ள நிலையைத் தெரிவித்து உதவி கோரி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். போட்டு விட்டு மறுநாள் இல்லை, மறுநாள் காலை வண்டியிலேயே அவர் வந்துவிடுவார் என்று வாயிலில் வந்து நின்று எதிர்பார்த்தேன். அது தவறியதும் பகல் தபாலை எதிர் நோக்கினேன்.

டாக்டர் கூட உரிமையுடன், “மாப்பிள்ளை எப்போது வருவாரம்மா?” என்று விசாரித்து விட்டார். அவரோ அனுதாபமாகக் கூட ஒரு கடிதம் போடவில்லை! என் நம்பிக்கை மழைக் காலத்து மண் சுவர் போலச் சரியலாயிற்று. வந்து பத்துத் தினங்கள் ஆகிவிட்டனவே. அத்தை, “நான் அப்படியே ஓடி வந்தேன். போய் அம்மாவை ஒரு நடை வரச் சொல்கிறேன். தைரியமாக இரு மன்னி. கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறிவிட்டுக் கிளம்பி விட்டாள். பெண்ணாக ஏன் பிறந்தேன் என்று நான் எத்தனையோ முறைகள் என்னைப் படைத்த ஈசனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போது இந்த நேரத்தில் உச்ச நிலைக்கு வந்தது.

நான் மட்டும் ஆண்பிள்ளையாக இருந்தால் அப்பாவை இந்தக் கதியில் காண்பேனா? என் வயசுக்குக் குடும்பத்தைத் தாங்கக் கூடிய ஜீவனாக இருக்க மாட்டேனா? முதலில் குடும்பம் இந்த நீரில்லாக் குளமாக வறண்டு போனதன் காரணமே நான் பெண்ணாக அவதரித்ததனால்தானே?

அடாடா! நான் விவாகம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் சுயமாக என் தந்தையை ஆதரிக்கும் நிலையில் இருக்க மாட்டேனா? ‘சுசியைக் காலேஜில் சேர்த்து விடுங்கள். அவளுக்குக் கல்யாணம் பண்ன வேண்டாம்’ என்று கூறியவர்களை எக்களிப்புடன் நோக்கிவிட்டு என்னை மணம் செய்வித்தேன் என்று பெருமைப்பட்டாரே. அந்த ஜீவனுக்கு இன்று பாராமுகமாக இருப்பதுதானா என்னாலான கைம்மாறு? எனக்குச் சுகமா? அவருக்குச் சுகமா?

சூரிய ஒளி சரியாக இல்லாததனால் வளைந்து வளைந்து செல்லும் செடியைப் போன்று என் எண்ணங்கள் எங்கெங்கோ நோக்கிச் சென்றன.

இனிமேல் தான் என்ன? அன்பு செய்யாத கணவன் வீட்டிலே போய் மனம் புழுங்கிக் காலம் தள்ளுவதை விட நான் விவாகத் தளையிலே அகப்படாதவள் போன்று காலத்தை ஓட்டிவிடக் கூடாதா? நாலு பெண்களுக்குச் சங்கீதம் பயிற்றுவித்தால் கூட எத்தனையோ உபயோகமாக இருக்கும். ஆனால் திடீரென்று நான் வழி மாறுவது அம்மாவுக்கும் – ஏன் படுக்கையில் இருக்கும் அப்பாவுக்கும் கூட அதிர்ச்சியாக இருக்குமே!

மாப்பிள்ளை வந்து தாங்குவதைப் பெருமையாகக் கருதும் மனம் படைத்தவர்கள், பெண் தன் உழைப்பைக் கொண்டு தாங்குவதை ஏன் கேவலமாக எண்ண வேண்டுமோ? மணம் புரிந்து கொண்டு, தன் உரிமைகள் அனைத்தையும் இழந்து விடுவதுதான் பெண்ணுக்குப் பெருமையா?

அவரிடமிருந்தோ உதவி ஏதும் வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல என் தந்தையின் நோய் வலுத்தது. குடும்பத்தின் சீர்கேடுகள் வலுத்தன. கணவன் வீட்டுக்குத் திரும்பக் கூடாதென்ற வைராக்கியமும் வலுத்தது. இரவின் தனிமையிலே ஏதேதோ யோசனையில் புழுங்கிய எனக்குச் சட்டென்று ஓர் எண்ணம் உதித்தது.

ஒன்றும் அதிகம் இல்லை என்றாலும், என் மீதுள்ள நகைகள் சில நூறு ரூபாய்களாவது பெறுமே!

காலையில் என் சங்கிலியைக் கழற்றி அம்மாவிடம் கொடுத்து, “இதை விற்று வரச் சொல் அம்மா. அப்பாவின் உடல் சரியானால் போதும்” என்றேன். என் செய்கை அவளுக்கு விசித்திரமாகப் பட்டது போலும்!

“என்னடி சுசீலா? வெகு அழகுதான்! மாப்பிள்ளைக்குக் கடிதம் எழுதினாலும் பயன் உண்டு. நகையை விற்பதாவது? அசடு போல் பேசாதே?” என்று நான் வாயைத் திறக்க வொட்டாமல் ஒரே போடாகப் போட்டுவிட்டாள். அவளுடைய அழகான மாப்பிள்ளை பதில் கூடப் போடாமல் இருக்கும் லட்சணத்தையும், நான் அவரிடம் வாழும் லட்சணத்தையும் அவிழ்க்க அதுவா சமயம்?

பாட்டி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தாள். பெற்ற பாசம் செல்வத் திரையைக் கிழித்துக் கொண்டு அப்போதுதான் பீறி எழுந்தது போல் இருக்கிறது. “எப்படி இருந்த உடம்புடா? இப்படி எப்படி ஆயிற்றடா அது? நான் பெற்றவள் ஒருத்தி இருக்கிறேன் என்ற நினைவு அற்று விட்டீர்களேடா! ஒரு நாலு வரிக் கடிதம் எழுதக் கை வரவில்லையே?” என்றெல்லாம் என் தந்தையின் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு அதுதான் சமயம் என்பதைப் போல் அம்மாவிடம் அடக்கி வைத்திருந்த மனத்தாங்கலையெல்லாம் சொல்லிச் சொல்லிப் பிரலாபித்தாள்.

என் தந்தையிடம் இவளுக்கு இருக்கும் அக்கறை, மனைவிக்கு இல்லையா? ஏதோ தான் புரட்டிவிடுவது போலவும், அவள் கவனிக்கவில்லை என்ற மாதிரியிலும் ஏன் சொல்லிக் காட்ட வேண்டும்? மனைவிக்குத்தான் கணவனிடம் முதல் உரிமை என்பதை ஏன் இவர்கள் மறந்து விடுகிறார்கள்?

பெரும்பாலான நம் குடும்பங்களில் மனைவியின் அந்தஸ்து இன்னும் அதல பாதாளத்திலேயே இருக்கிறது. சிறு பெண்ணாக, அநுபவம் முற்றாமல் புதிதாகக் குடும்பத்தில் நுழைபவளாக இருந்தால் பெரியவர்கள் அவள் தவறான வழியில் செல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியந்தான். ஆனால் மருமகள் என்றும் பெரியவர்கள் என்றும் இருந்தால் அவளைக் கண்டிப்பதும் குறை கூறுவதுமே பெரியவர்களுக்கு அழகு என்று தங்களுக்குள்ளே அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தால் என்ன செய்ய?

அடங்காப் பிடாரிகளாக இருக்கும் பெண்களைப் பற்றி இங்கே கூற வரவில்லை நான். என் தாய் நேற்றுத்தான் கணவன் வீடு வந்தாளா? பாட்டியின் நடத்தை என் மனத்திலே கோபத்தை உண்டு பண்ணியது.

தபாலை எதிர்பாராமலே விரக்தியுடன் தூணிலே சாய்ந்து நின்ற என் பெயரைச் சொல்லித் தபால்காரன் கடிதம் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனான். ‘டைப்’ செய்யப் பெற்றிருந்த விலாசம் என் கணவரிடமிருந்து வந்திருக்கிறது என்பதை அறிவித்தது. ‘கனக்கிறது; நன்றாக முற்றியிருக்கும்’ என்று பறிக்கும் மட்டைத் தேங்காயை உரித்து உடைத்தவுடன் ஒன்றுமே இல்லாமல் ஏமாற்றம் கொடுப்பது உண்டு. என் ஆவலை அவருடைய கடிதத்தில் கண்ட ஏமாற்றம் அப்படித்தான் வளரச் செய்தது. கல்கத்தா தலைமைக் காரியாலயத்திலிருந்து அவர் எழுதியிருந்தார்.

“நான் இப்போது இங்கே இருக்கிறேன். அப்பா உடம்பு எப்படி இருக்கிறது? நீ வருவதற்கு இன்னமும் நாட்களாகுமா? எனக்கு வேலை மிகவும் அதிகம் இப்போது. கடிதம் போடு. ராமு” இதுதான் கடிதத்தில் காணப்பட்ட செய்தி. இந்தக் கடிதம் போடவில்லை என்று யார் அழுதார்கள்? தாம் அங்கே சென்று எத்தனை நாட்களாயின என்று அவர் தெரிவிக்கவில்லை. என் கடிதத்தைப் பார்த்தார் என்று வைத்துக் கொள்வதா, இல்லை என்று வைத்துக் கொள்வதா? பார்க்கவில்லை என்றால் ‘நீ போய் ஒரு மாதம் ஆகிறதே? ஏன் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை? என்ன உடம்பு’ என்று விவரம் விசாரித்திருக்கிறாரா? பார்த்துத்தான் பட்டுக் கொள்ளாமல் எழுதியிருக்கிறார்.

என்ன கல் நெஞ்சம்? என்னால் ஏதும் உதவுவதற்கில்லையே என்ற அநுதாப வார்த்தை கூட எனக்குக் கிடையாது! இப்பேர்ப்பட்ட மனிதரிடம் நான் எதற்காகப் பணிவிடை செய்து கொண்டு வாழ வேண்டும்? கணவன் என்ற பெயருக்கு அவர் என் மீது காட்டும் இந்த அழகான அன்புக்கும் சலுகைக்கும் நான் மட்டும் உண்மையான மனைவி என்று ஊரறிய எதற்காகக் குடித்தனம் நடத்த வேண்டும்? மாபெரும் கடலுக்கும் ஓர் எல்லையுண்டு. பொறுமையில் சிறந்த பூமிதேவி கூடத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உஷ்ணத்தை வரம்பு மீறினால் ஒவ்வொரு சமயம் வெளியிட்டு விடுகிறாள். நான் அவருக்குப் பந்தமுற்றவள், அவருடைய மனைவி என்று நினைக்கும் போதே என்னுள்ளே பொங்கி வரும் அளவுக்கு நானும் கொதிப்பு அடைந்து விட்டேன்.

கடிதத்தை அப்படியே சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறியும் வண்ணம் ஆத்திரம் துடிதுடித்தது. இரண்டாகக் கிழித்து எடுத்துக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றேன். அடுத்த தாழ்வரையில் அம்மா சுந்துவிடம் கூறிக் கொண்டிருந்த வார்த்தைகள் என் காதுகளில் விழுந்தன.

“அவர் தங்கந்தான். நமக்கு வாய்த்திருக்கும் பெண்ணே இப்படி இருக்கிறாளே சுந்து? அதற்கென்னமா, கடுதாசி போடுகிறேன் என்று சொல்ல மாட்டாளோ? ஆத்திரப்படுவது போலச் சங்கிலியைக் கழற்றிக் கொடுக்கிறாளே! பிக்கு இல்லை, பிடுங்கல் இல்லை. ஒரு வார்த்தை அதட்டிச் சொல்லும் புருஷன் கூட இல்லை. இன்னொரு பெண்ணாக இருந்தால் பிறந்த வீட்டைத் தாங்க மாட்டாளா? அவளுக்கே இஷ்டமில்லையே? உம். பெண்கள் சுரண்டுவதுடன் சரி!”

என் செவிகளை என்னால் நம்ப முடியவில்லை. தாயுள்ளம் படைத்த என் அன்னையா இப்படிப் பேசுகிறாள்? பணம் காசுதானா அவளுடைய தாயன்புக்கும் அஸ்திவாரம்?

அன்றே என் கணவன் வீடு சுகமில்லை என்று நான் காட்டிக் கொண்டதை அவள் ஏன் நம்பவில்லை? அவள் பெற்று வளர்த்துப் பெரியவளாக்கியிருக்கும் நான் பொய் புகழுவேனா என்று ஏன் சந்தேகிக்கவில்லை? ‘அப்போதே குழந்தை போக மாட்டேன் என்று ஜாடையாகச் சொன்னாளே, இப்போது எப்படி இருக்கிறாளோ, என்ன கஷ்டமோ?’ என்று தாயுள்ளத்திற்கே இயல்பானதாக நான் எண்ணியிருக்கும் தணதணப்பு ஏன் அவளுக்கு என் மீது இல்லை?

என்றோ நிலத்தில் விழுந்துவிட்ட முளைக்காத வித்து வேண்டுமானால் நாளடைவில் மட்கி மண்ணோடு மண்ணாகிவிடும். ஆனால் மனத்தில் என்றோ விழுந்து விட்ட வித்து அப்போது அமுங்கிவிட்டால் கூடச் சரியான உரம் போன்ற சம்பவங்களும் சூழ்நிலையும் கிடைத்துவிட்டால் வேர்விடத் தொடங்கிவிடும்.

என் தாய்க்கு என் மீது அன்பு இல்லை என்று என் குழந்தை உள்ளத்தில் பதிந்திருந்த எண்ணம் இச்சமயம் பலமாகவே வேரூன்றலாயிற்று.

மனம் ஓடி வரும் நீரைப் போன்றது. உவர் நிலத்திலே ஊறி வரும் நீர் உவப்பாக இருக்கும். வண்டல் மண்ணிலே ஓடி வரும் நீர் அதன் சாரங்களைக் கிரகித்துக் கொண்டு வரும். சுண்ணாம்புச் சத்தானால் அதையும் இழுத்து வரும். நிறமும் மணமும் குணமும் ஒட்டாத நன்நீரைப் போல் அப்பட்டமாக மனம் இருப்பது மிக மிக அரிது. எந்தச் சூழ்நிலையிலே அது முதிர்ச்சி அடைகிறதோ, எந்த எந்த மனப்பான்மையுடைய மக்களினூடே அது பண்படைகிறதோ, என்ன என்ன நிகழ்ச்சிகள் அதற்கு உரமாக இருக்கின்றனவோ அவை அத்தனையின் சாராம்சமும் அதைச் சுபாவிகமான தனித் தன்மையினின்றும் வெகுதூரம் கொண்டு வந்து விடுகிறது. ‘நான் அதிருஷ்ட மற்றவள், அன்பு செலுத்தக் கூடியவர் எவருமே என்னிடம் தவறி விட்டனர். என் வாழ்வு என்றுமே இருட்டுத்தான்’ என்று நம்பிக்கை ஒளியையே முற்றும் இழந்து விட்டிருந்த என் மனம், ‘அன்னையும் என் மீது அன்பைச் செலுத்தவில்லை. இவ்வுலகின் இயல்புக்கே அப்பாற்பட்ட மாதிரியில் என்னிடம் அவளும் தன் கடமையை மறந்து விட்டாள்’ என்றெல்லாம் என் கற்பனைகள் வளர்த்து இன்னும் இருளாக்கிக் கொண்டு குறுகிய நோக்கத்தில் இனமறியாத சமாதானம் அடைந்தது. இத்தகைய நிலையிலே, நானாக எதுவும் முயன்று என் தந்தைக்கோ குடும்பத்துக்கோ உதவு முன்பு, யாருடைய ஒத்தாசையும் எனக்குத் தேவையில்லை என்று என் தந்தை – வாழ்நாளிலே சுகமே அறிந்திராத என் தந்தை கண்ணை மூடிவிட்டார். அவர் ஒருவரே என் மீது உண்மையான பாசம் வைத்திருந்தார். என் நலனிலே சிரத்தை வைத்திருந்த ஒரே ஜீவன் – ‘தின்றால் பழம் புளிக்கும்’ என்று என் வாழ்க்கையை அறிந்தால் மனம் கசிந்துவிடக் கூடிய ஒரே ஜீவன் போய் விட்டது!

நான் தான் எத்தகைய அன்புக்கும் ஆகாதவனாயிற்றே! அதனாலேயே அவர் இந்த வியாதிக்கு ஆளானார்!

அம்மா, பாட்டி எல்லோரும் அழுது துடித்தார்கள். நான் மட்டும் கண்ணீர் பெருக்கவில்லை. ஏன்? எனக்குக் கண்ணீரே வரவில்லை. துக்கம், மகிழ்ச்சி இரண்டுக்கும் ஒரு வரம்பு உண்டு. எல்லை மீறிவிட்டால் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான். எனவே எனக்கு அழுவதற்கு இனி என்ன இருக்கிறது. வாழ்வின் போது மேடுபள்ளங்களால் வேறுபட்டிருந்தவர்கள் கூட துக்கத்துக்கும் அநுதாபத்துக்கும் ஒன்று கூடுவது இயல்பு.

வீட்டிலே என் தந்தையின் மறைவுக்காக யாரெல்லாமோ வருவதும் போவதுமாக இருந்தனர். இந்தக் கும்பலிலே என் கணவரும் ஒருநாள் வந்தார். நேரிலே அவரைக் கண்டதும், பொங்கிக் கொண்டிருந்த என் ஆத்திரமெல்லாம் குப்பியில் அடைபட்டிருந்த குமுறும் வாயுவெனச் சீறி எழுந்தது. ‘சமயத்தில் உதவி செய்ய இஷ்டப்படாதவரை, சாவு என்றவுடன் யார் வரச் சொன்னார்கள்?’ என்று பொருமிக் கொண்டு அவர் கேட்டதற்கெல்லாம் எரிந்து விழுந்தேன். பத்துத் தினங்களுக்குள் ஜகது, மாமியார் மாமனாருடன் வந்தாள். சம்பிரதாயமாகத் துக்கம் விசாரித்துவிட்டுப் போய்விட்டாள். அத்தை அத்திம்பேரில்லாமல் வந்தாள். பாட்டியுடன் கிளம்பி விட்டாள். பெரிய அக்கா தங்கமும் அம்மாவைத் தேற்றிவிட்டுப் புறப்பட்டு விட்டாள். மதுரையிலிருந்து வந்திருந்த மாமாதாம் சுந்துவுக்கு ஒரு வழிகாட்டி. அம்மாவையும் கூட அழைத்துப் போவதாகத் தீர்மானம் செய்தார்.

நான் – நான்?

புறப்படு முன் என் கணவர், “நீ தயாராக இல்லையா சுசீ?” என்று கேட்டார்? போவதா வேண்டாமா?

கேள்விக்குறி என் மண்டை முழுவதும் வளர்ந்து விசுவரூபம் எடுத்து விட்டது போல் கனகனத்தது. போகாமல் என்ன செய்வது? போய்த்தான் என்ன கிழிக்கப் போகிறேன்? தனி வாழ்க்கையில் கொஞ்சமாவது விச்ராந்தி இருக்காதா?

“நான் ஒன்றும் இப்போது உங்களுடன் வரப் போவதில்லை” என்றேன் வெடுக்கென்று.

“சுசீ! கோபித்துக் கொள்ளாதே! உன் கடிதம் வந்த சமயம் நான் கல்கத்தா போய்விட்டேன். நான் இங்கே வரும் போதுதான் வீட்டின் உள்ளே கிடந்தது, பார்த்தேன். அப்புறமாவது நீ எனக்கு இன்னொரு கடிதம் போட்டிருக்கக் கூடாதா சுசீ? சமயத்தில் என்னால் பிரயோஜனம் இல்லையே என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது. உனக்கு வர இப்போது இஷ்டமில்லை என்றால், நான் நிர்ப்பந்தம் செய்யவில்லை. நீ எப்போது வரப் பிரியப் படுகிறாயோ அப்போது வா. உன் மனம் சமாதானப்படும் வழியிலே நான் குறுக்கே நிற்கவில்லை சுசீலா!” என்று புகன்றுவிட்டு அவர் போய்விட்டார். இந்தக் குழைவிலே என் கண்ணை மறைக்கப் பார்த்திருக்கிறார்.

நான் வராவிட்டால் பாதகமில்லை என்பதை உருகுவது போல் நாசுக்காக எடுத்து உரைக்கும் அவர் தனிச் சாமர்த்தியத்துக்கு நான் வியப்பேனா? அல்லது ஏன் வரவில்லை என்று கூறினோம் என்று பெண் புத்தி பின் புத்தியானதற்கு வருந்துவேனா?

“ஏண்டி சுசீலா? நீ அவருடன் போகவில்லையா?” என்று பொருள்பட என்னை எல்லோரும் நோக்கினார்கள். அம்மா கேட்டே விட்டாள்.

‘நான் அவரிடம் போகப் போவதில்லை. என்னை எப்படியோ காப்பாற்றிக் கொள்வேன்’ என்று சொல்லும் தைரியம் அவள் முகத்தையும் கேள்வியையும் காணும் போதே அடைத்து விடுகிறதே!

சுந்துவின் ‘ரிஸல்ட்’ வந்து ‘சர்ட்டிபிகேட்’ வாங்கிப் போகவும், ஊரில் உள்ள கணக்குப் பாக்கிகளைத் தீர்த்துச் சாமான்களை ஒழித்துக் கட்டவும் ஒரு மாதம் போல் ஆயிற்று. அவனுடன் நானும் வேண்டா விருந்தாளியாகச் செல்லுவேனா?

ஆகா, பெற்ற மகள் தான் நான். சுந்துவைப் போல அதே தாய்க்கும் தகப்பனுக்கும் உதித்தவள் தான் நான். ஆனால் வேறொருவருக்கு உரிமைப் பொருளாக ஆன எனக்கு அந்த வீட்டில் யாதொரு சலுகையும் உண்மையில் இல்லையே? கணவன் வீட்டுப் பெருமைதான் பிறந்த இடத்தில் மதிப்பைக் கொடுக்கிறது. இல்லாவிட்டால் பிறந்த வீடென்று சொல்லிக் கொள்ளவும் நாக் குன்றி விடுகிறது.

‘வேறு புகலில்லை. வேண்டாதவளாக அவர்களுடன் செல்வதை விட அந்த அலுத்த வாழ்க்கை குன்றிவிடாது போக வேண்டியதுதான்’ என்று ஒரு வழியாக ஒரு மாதத்தில் முடிவு கட்டினேன்.

இந்தச் சமயத்தில் அங்கே என் பெயருக்கு வானொலி நிலையத்திலிருந்து வந்த கடிதம் ஒன்றை என் கணவர் திருப்பியிருந்தார். வருகிற மாதம் நிகழ்த்தப்பட இருக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்ள எனக்கு அழைப்பு வந்திருந்தது! என்னைச் சூழ்ந்திருந்த போராட்டங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு மறுநாளே நான் தன்னந்தனியாகப் பயணமானேன்.

4.5 கனி

பொட்டல் செல்லும் வெளியிலே சூனியப் பாதை வண்டி ஓட்டிக்கு உற்சாகமாக ஒத்துழையாத சகா. பாதை எப்போது முடியுமோ, கலகலப்பான காட்சிகள் கண்களில் படுமோ படாதோ என்று உறங்கிய வண்ணம் நம்பிக்கை இழந்தவனாக வண்டியோட்டி கடனே என்று செலுத்திக் கொண்டு போகையில் சற்றும் எதிர்பாராத வண்ணமாக் நீள நெடுக்க கலகலப்புக் கூடிய வேறொரு பாதைத் தென்படுகிறது. சிரித்த முகத்துடனே வேற்று ஆள் ஒருவன், ‘அவளை இறக்கிவிட்டு என்னை ஏற்றிக் கொள். உனக்குத் துணையாக வருகிறேன். இந்த வழியிலே வெகு சந்தோஷமாகச் செல்லலாம் என்று அழைக்கும் போது வண்டியோட்டிக்குப் பழைய வழியில் தளர்ச்சி தென்படாமல் இருக்குமா? ஆனால் ஒத்துழையாமற் போனாலும் அந்த ஆள் நம்பகம் உள்ளவன். சூனியமானாலும் நாலு பேர் நம்பிக் காட்டிக் கொடுத்த வழி அது. புதியவன் எப்படியோ? புதிய வழியில் அபாயம் இருக்காது என்று நம்பிவிட முடியுமா? எங்கே கொண்டு போகுமோ?

ஆதி அந்தமற்ற பரம்பொருளுடன் ஜீவன் ஐக்கியமானதைச் சிருங்கார ரசத்தில் விளக்கும் ஜயதேவ மகாகவியின் கீதகோவிந்த காவியத்தை இசை நிகழ்ச்சியாகத் தயாரித்திருந்தவன் வரதனேதான். பிரதம பாகமாக கண்ணன் பாத்திரத்தை ஏற்றுக் கீதங்களை அவன் இசைக்க, நான் ராதையாகப் பாட வேண்டும். வந்திருந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டேன். ஆம். சமய சந்தர்ப்பங்கள், முன்னேறியிருக்கும் என்னுடைய சரள மனப்பான்மை, கூட என் சகியாகப் பங்கு கொள்ள வந்திருக்கும் சரளா இருக்கும் தைரியம், எல்லாமாக என்னை ஒப்புக் கொள்ளச் செய்ய, ஓர் ஒத்திகைக்கும் போய் வந்துவிட்டேன்.

அவரோ? என்னைப் புகைவண்டி நிலையத்திலிருந்து அழைத்து வந்ததுடன் சரி. முன் போலக் காலை ஒன்பது மணிக்குக் காரியாலயம் சென்றால் இரவு ஒன்பது மணிக்கு வீடு, சாப்பாடு, பத்திரிகை, தூக்கம் என்ற வரையறையிலிருந்து இம்மி கூட இப்படியோ அப்படியோ அசையவில்லை. வானொலி நிலையத்திற்கு நான் எப்போதும் சரளாவுடன் கூடத்தான் செல்லுவது வழக்கம். இப்போதும் நான் வருவதை அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தவள் நான் ஊருக்கு வந்த அன்றே என்னைச் சந்தித்து விட்டாள்.

“இசை நிகழ்ச்சியா? உனக்கு என்ன பங்கு? கூட யார் பாடுகிறார்கள்? இன்று ஒத்திகையா?” என்று அவர் என்னை ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லை. யார் யார் எல்லாமோ என் குயிலிசையைப் புகழ்கிறார்கள். ஆனால் என் கணவர் என் உடலுக்கும் உள்ளத்துக்கும் தலைவராய். அவர், என் கானத்தை ரசித்தோ ரசிக்காமலோ கூட ஒரு முறையேனும் விரும்பிக் கேட்கவில்லையே! என்னை எப்படி வேண்டுமானாலும் அவர் நிராகரிக்கட்டும். ஆனால் என் கலையில் கொஞ்சங் கூடத் தாரமாக அவர் ஆர்வங் கொள்ளாத குறை, எல்லாக் குறைகளையும் விட மாபெருங் குறையாக இருக்கிறதே! ஆனால் நான் வருந்தி என்ன பயன்?

‘நானாகப் போய் அவரிடம் என்னைப் பற்றியும், இசை நிகழ்ச்சியைப் பற்றியும், ஏன், வரதனைப் பற்றியும் கூடத்தான் எதற்காகக் கூறவேண்டும்? அவர் அவ்வளவு அலட்சியமாக இருக்கும் போது நானும் பொருட்படுத்தாமலே தான் இருக்க வேண்டும். அவர் மட்டும் தம் விஷயங்களை, முக்கியமாக எனக்குத் தெரிவிக்க வேண்டிய காரியாலய மாற்றம் போன்ற சங்கதிகளை, என்னிடம் கூறாமல் மறைத்து வைக்கவில்லையா! இப்போது இது என் சொந்தக் காரியம் என்று அவர் தலையிடாமல் இருக்கும் போது நானாக ஏன் தெரிவிக்க வேண்டும்’ என்று சிறுவர் சிறுமியர் வீம்பு கொண்டு குரோதம் பாராட்டுவது போலக் குரோதத்தை வளர்த்துக் கொண்டேன்.

என்றாலும் வரதன், நகரத்துக்கு வந்திருப்பவன் இங்கு வராமல் இருந்து விடுவானா? இல்லை, தமையன் வீட்டிலே அவர் அவனைச் சந்திக்காமல் இருந்திருப்பாரா? எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் வரதனுடன் பாடுகிறேன் என்று பட்டுவும் மாமியாரும் வேறு அவரிடம் என்ன என்ன எண்ணங்களைக் கற்பிக்கக் கூடுமோ!

என் உள்ளே வித்திட்டிருந்த அச்சம் மெல்லத் தலை தூக்கி என்னைக் கிடுகிடுக்க வைத்தது. ‘வரதனுடன் நீ ராதையாகப் பாட ஒப்புக் கொண்டது பிசகு!’ என்று ஒரு குரல் என்னை இடித்தது. அதற்கு உரமூட்டுவது போல முன்னாள் நடந்த ஒத்திகை என்னுள்ளே படம் எடுத்தது.

தன்னைச் சினம் கொண்டு வெருட்டிய ராதையிடம் தாபம் கொண்டு கெஞ்சும் கண்ணனாக அவன் என்னை நோக்கிப் பாடிய போது, அவன் குரலிலே இருந்த குழைவு, விழிகளிலே தோன்றிய கனிவு எல்லாம் பாடலுக்கு உணர்ச்சியூட்டுவதுடன் மட்டுமா நின்றன?

அந்தக் கீதத்துக்குரிய பாத்திரமாக அவன் அவ்வளவு பாவத்துடன் இசைத்தது, நானும் அவனுக்குச் சற்றும் குன்றா வகையில் பாட வேண்டும் என்ற ஆர்வத்தை அன்றோ தூண்டி விட்டது? அந்த நிமிஷத்தில் என் கண் முன் அவன் மாதவனாகவும் நான் ராதையாகவும் மனத்துக்குத் தோன்றவில்லை எனினும், நான் கேட்ட குரல் – உருக்கம் நிறைந்த, உணர்ச்சி செறிந்த குரல் – என்னை ராதையாகக் கிளர்த்தித்தான் விட்டது. ஒத்திகையிலே நான் என்னை மறந்து இசைத்தேன்.

‘இந்தக் கிளர்ச்சிக்கு நீ இடம் கொடுக்கலாமா?’ என்று என் அந்தராத்மா இப்போது நியாய ஸ்தலத்து வழக்கறிஞர் போடும் கேள்வியைப் போலக் குறுக்குக் கேள்வி விடுத்தது.

‘ஏன் ஒப்புக் கொண்டது பிசகு? பிசகா? பிசகாகுமா? இல்லை. கலை உலகு இந்த விபரீதங்களை அடிப்படையாகக் கொண்டதன்று. அதுவும் இந்த உயரிய காவியம், மிகவும் சிறந்த பொருளைக் கொண்டதாயிற்றே! இனிய இசையிலும் உருக்கம் கொண்ட கீதத்திலும் யார் மனமும் இளகிவிடுவது சகஜம். ரசிகத் தன்மையும் கலைப் பண்பும் பெற்ற என் உள்ளம் இளகியதில் தவறு இல்லையே! அவன் குரலுக்கு எதிர்க் குரலாக, பக்திப் பரவசத்திலே தன்னை மறந்த ராதையைப் போல என்னை நினைத்துக் கொண்டு நான் கானம் செய்ததில் கல்மிஷத்திற்கு எங்கே இடம் இருக்கிறது?’

‘இந்தக் கலைப் பிணைப்பையன்றி வரதனிடம் வேறு எனக்கு என்ன பேச்சு இருக்கிறது? பார்க்கப் போனால் அவன் சாதாரணமாக க்ஷேமம் விசாரிப்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. ‘ராமுவை வந்து பார்க்க வேண்டும். வருகிறேன் ஒருநாள். வேறு வேலைகள் இருக்கின்றன. இரண்டு மாதங்கள் நான் இங்கே தான் இருப்பேன்’ என்பதுடன் முடித்துக் கொண்டான் அவன். யோசித்துப் பார்த்ததில் முந்திய வளவளக்கும் வரதனாகவே தோன்றவில்லை. உண்மையில், “நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று மறுத்து இருந்தால் தான் என் பிற்போக்கான மனப்பான்மை நகைப்புக்கு இடமாக இருந்திருக்கும். கலைச் செல்வத்தை வைத்துக் கொண்டு முற்போக்குக்கு முட்டுக்கட்டை போடும் மனம் படைத்திருப்பது கண்டு வரதன் என்னைக் கேவலமாக எண்ணியிருப்பான்’ என்றெல்லாம் என் கூனிய மனத்தை நிமிர்த்திக் கொண்டேன். என்னதான் நான் நிமிர்ந்து நின்றாலும், என் குறைக்குச் சப்பைக் கட்டுக் கட்டியதாகவே எனக்குத் தோன்றியது.

அவர் மட்டும் வரதனைப் போல் இருந்தால்? ஆகா! அந்த வாழ்வு எனக்கு எப்படி இருக்கும்! வரதனுடைய குரல் கிளர்ச்சியை உண்டாக்கியது. என் மனசாட்சியை இடிக்கிறதே இப்போது! அந்தச் சக்தி அவர் குரலுக்கு இருந்து விட்டால்? அந்த ராதையைப் போலவே என்னை என் நாயகருடன் ஒன்றுபடுத்தி விடாதா? என்னிடம் அன்பு கொள்ளாமல் அவர் உள்ளம் இருந்தால் கூட இருவருக்கும் ஒன்றாக இருக்கும் கலை உணர்ச்சி இருவரையும் எந்த வகையிலேனும் ஒன்று சேர்க்க ஏதுவாக இருக்காதா? விழுந்து விழுந்து ஜாதகப் பொருத்தம் பார்க்கும் பெரியவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

தம்பதிகள் இருவருக்கும் ஒருவிதத் தன்மையுடைய மனப்பான்மை இருக்க வேண்டும். கூடுமானவரை இருவருடைய விருப்பு வெறுப்புகளும் ஒற்றுமை உள்ளனவாகவே இருப்பது நல்லது. வாழ்க்கையை வெற்றிகரமாக்கும் முக்கியமான அடிப்படை அம்சங்கள் இவை.

எங்கள் இல்லற வாழ்வின் மத்தியிலே இருக்கும் மாபெரும் பிளவு இந்த வேறுபட்ட இயல்புகளாலேயே பெரியதாக அகன்று வருகிறது.

வானொலிப் பெட்டியின் அருகில் உட்கார்ந்து கொண்டு ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்த என்னை, படுக்கையில் சாய்ந்து கொண்டு பத்திரிகையை மடித்துவிட்டுக் கூப்பிட்டார். “ஏன்?” என்று நான் திரும்பிப் பார்த்தேன்.

“வரதன் இன்று காரியாலயத்தில் என்னைப் பார்த்தான். நீ என்னிடம் சொல்லவேயில்லையே! அவன் தயாரித்திருக்கும் இசை நிகழ்ச்சியிலே நீ பங்கு கொள்கிறாயாமே? ஏன் சுசி? என்ன பெயர் அதற்கு? ஏதோ சமஸ்கிருத காவியம் என்று கூறினான். அதற்குள் மறந்து விட்டேனே!” என்று அவர் தலையைத் தடவிக் கொண்டு யோசனை செய்தார்.

இந்த வகையிலே அவருடைய ஒன்றுமறியாத தன்மை என்னைப் பின்னும் கோல் கொண்டு குத்தியது. “கீதகோவிந்தம் என்று பெயர். நீங்களாக விசாரிக்கவில்லை. நானும் அசிரத்தையாகச் சொல்லவில்லை. இன்றுதானா அவரைப் பார்த்தீர்கள்? அண்ணா வீட்டில் பார்க்கவில்லை, இதற்கு முன்பு?” என்று நான் வினவினேன்.

“இல்லையே. அவன் அங்கே தங்கியிருக்கவில்லையே! எங்கோ ஹோட்டலில் இருப்பதாக அல்லவோ சொன்னான்? பாவம்! லீலா இப்படி நடந்து கொள்ளுவாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பெண்களுக்கு இத்தனை தான் தோன்றித்தனும் துடுக்குத்தனமும் இருக்கக் கூடாதுதான்” என்று எங்கோ ஆரம்பித்தவர் எங்கோ கொண்டு போய் முடித்தார்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. லீலாவைப் பற்றி நான் அது நாள் வரை சிந்திக்கவேயில்லையே? என் தந்தையின் முடிவின் போது வந்திருந்த போதே என் கணவர், “லீலா காசி சர்வகலாசாலையில் வேலையாகப் போய் விட்டாள், தெரியுமா” என்று கேட்டார். அப்போதைய மன நிலையில் அதையும் அலட்சியமாக நினைத்து நான், ‘உம்’ கொட்டினேன். நான் அவளைப் பற்றி நினைக்கவில்லை. ஆனால் அவர் அவளையே எண்ணிக் கொண்டு இருக்கிறாரே? மனத்திலே எது தாண்டவமாடுகிறதோ அதுதானே சொல்லிலும் வெளிப்படும்.

வரதனுடன் அவள் விவாகம் என்ன ஆயிற்று? மூர்த்தி இங்கு வந்திருக்க வேண்டும்! அத்தை கூட அங்குமிங்கும் அலைந்ததனால் ஹேமாவின் கல்யாணம் இன்னும் நிச்சயப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டாளே!

இந்தக் கேள்விகளெல்லாம் என்னுள் எழுந்தன.

“ஏன், சாதாரணமாகத்தானே லீலா வேலைக்குப் போய் விட்டாள் என்கிறீர்கள்? பின் எம்.ஏ. படித்து விட்டு ஒருத்தி அடுப்பங்கரையில் சரண் புகுவாளா? இது தான் தோன்றித்தனமாக்கும்!” என்றேன்.

“இல்லை, சுசி. நான் அதைச் சொல்லவில்லை. அவள் வரதனை மணம் செய்து கொள்ள மறுத்து விட்டாள். மறுநாளே கிளம்பியும் போய் விட்டாள். பெரியவர்களை முறித்துக் கொண்டு, ‘நான் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன்’ என்று அவள் போயிருக்கக் கூடாது. படித்து விட்டாலே சில பெண்களுக்கு இத்தகைய துணிச்சல் வந்து விடுகிறது” என்று இன்னும் ஏதோ கூற வந்தவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார்.

நான் ‘வெடுக்’கென்று பதில் கூறினேன்.

“ஏன்? அவளுக்கு அவரை மணந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். அதனாலேயே கல்யாணம் வேண்டாம் என்று கூறியிருக்கக் கூடாதா? அதைத் தான் தோன்றித்தனம் என்பதா? பெண்களுக்குச் சுதந்திரம், சமத்துவம் எல்லாம் படிக்கவும் வெளியே வாசலில் செல்லவும் கொடுத்தால் மட்டும் போதாது. இத்துடன் மண விஷயத்திலும் சுதந்திரம் கொடுக்க வேண்டும். பண்டைய நாளைப் போல ஐந்து வயசிலேயா விவாகம் செய்து கொள்கிறார்கள்? அவரவர்கள் வயசு வந்த பின், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் சக்தி வந்த பின், ‘இவளைத்தான் மணந்து கொள்ள வேண்டும்’ என்ற நிர்பந்த முறை ஏற்படுத்துவது தவறு” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய என்னை அவருடைய விழிகள் உற்றுக் கவனித்தன.

பிறகு, “நீ கூறுவது சரிதான் சுசீலா” என்று எங்கோ பார்த்துக் கொண்டு நெடுமூச்செறிந்தார்.

உலைக்களத்து உஷ்ணத்தைப் போல அவருடைய நெடுமூச்சு என்னை வேதனைக்கு உள்ளாக்கியது. எதற்காக இப்படி ஏதோ பறிபோனது போல நெடுமூச்சு எறிய வேண்டும்? லீலா கை நழுவிவிட்டாளே என்றா? பேச்சை மறைத்து நான் “மூர்த்தி இங்கே என்று வந்தார்? எத்தனை தினங்கள் எல்லோரும் இருந்தார்கள்?” என்று கேட்டேன்.

“நீங்கள் சென்ற மறுதினமே வந்தான். அடுத்த இரண்டு நாட்களுக்குள் கிளம்பியும் விட்டார்கள். எனக்கும் அடுத்த தினமே தலைமைக் காரியாலயத்துக்குச் செல்ல வேண்டி வந்துவிட்டது. ஒரு நாளிலேயே நான் கவனித்தேன். ஹேமாவை மணந்து கொள்ள அவனுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்று எனக்குத் தோன்றியது. இரண்டு வருஷங்களுக்கு முன் எப்படி இருந்தானோ அப்படியேதான் சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கிறான். மேல்நாட்டு வாசம் அவனை ஒன்றும் மாற்றிவிடவில்லை. முதல் முதலாக ‘சுசீ பெரிய இசைக் குயிலாக ஆகிவிட்டாளாமே?’ என்று உன்னைப் பற்றிக் கடிதங்கூட எழுதியிருந்தான் போல் இருக்கிறதே?” என்றார் அவர்.

“ஆமாம்” என்ற நான் ஆவலுடன், “ஹேமாவை மணக்க விருப்பம் இல்லை என்று உங்களிடம் அவன் ஏதாவது பிரஸ்தாபித்தனா?” என்று விசாரித்தேன்.

“இல்லை, பார்த்தால் எனக்குத் தோன்றுகிறது” என்று முணுமுணுத்த மாதிரியில் பதிலளித்த அவர், பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார். “விளக்கை அணைத்து விடுகிறாயா?” என்று அவர் விடுத்த வேண்டுகோள் அதற்கு மேல் அவர் ஏதும் பேச விரும்பாததை அறிவித்தது.

ஜ்வாலை அணைந்தவுடன் புகை சூழ்வதைப் போல என் மனத்தில் பழைய சந்தேகப் புகைகள் சூழ்ந்து கொண்டன. லீலா மூர்த்தியைக் காதலிக்கிறாள் என்ற உண்மையை அவரிடம் அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே நான் அவளுக்கு வரதனை மணந்து கொள்ள இஷ்டமில்லாமல் இருக்கலாம் என்று கோடி காட்டினேன். லீலா என்னிடம் நெருங்கிப் பழகுபவள். அந்தரங்கமான நேசம் கொண்டவள் என்பது அவர் அறியாததல்லவே! நான் கோடி காட்டியதும் என்னிடம் மேற்கொண்டு தூண்டி விடப்பட்டவராக, “அப்படியா சுசீ! அவள் அபிப்பிராயம் உனக்குத் தெரியுமா?” என்று என்னிடம் ஏனோ கேட்கவில்லை. அப்படி எதிர்பார்த்துத் தானே நான் மெல்ல ஆரம்பித்தேன்? ஆனால் அவரோ ஆவலெல்லாம் வறண்டவராக, சப்பென்று, ‘நீ சொல்வது சரி’ என்று நெடுமூச்செறிகிறார்! ஒரு நாளில் மூர்த்திக்கு ஹேமாவிடம் பிடிப்பு இல்லை என்பதைக் கண்டுவிட்டவருக்கு லீலாவின் போக்கை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லையாம். அவர் மனம் தடுமாடுகிறது என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி வேண்டும்?

கதவிடுக்கு வழியாகச் சிறு வெளிச்சம் தென்பட்டாலே போதும், உள்ளிருக்கும் சாமான்கள் ஒவ்வொன்றாகத் தென்பட்டுவிடும். அவள் என் கணவரை எப்போதுமே அந்த நிலையில் நினைத்திருக்க மாட்டாள். ஆனால் அவர் விஷயம் அவளுக்கு முன்னமேயே தெரிந்திருப்பதால் தான் என்னிடம் அளவுக்கு மீறிய அனுதாபம் கொண்டு அன்பு காட்டியிருக்கிறாள். கடைசியாக அவள் என்னைச் சந்தித்துப் பேசிய போது கூட அவள் காட்டிய அக்கறையின் மர்மம் எனக்கு இப்போது தானே வெட்ட வெளிச்சமாக விளங்குகிறது.

லீலாவிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. என் தந்தையின் மறைவுக்கு என்னிடம் அநுதாபம் விசாரித்து விட்டு, பழைய தோரணையிலேயே மூர்த்தி அவளை ஏமாற்றி விட்டதை வைத்துக் கொண்டு ஓர் அத்தியாயம் ஆண் வர்க்கத்தைக் கடிந்து கொட்டியிருந்தாள். அவன் அவளைக் கடைசித் தறுவாயிலும் தனியே சந்திப்பான் என்று நம்பி எதிர்பார்த்து இருந்தாளாம். ‘அவராக எனக்கு ஒரு கல்யாணப் பத்திரிகை அனுப்பாவிட்டாலும், நீயாவது ஒன்று கேட்டு வாங்கி அனுப்பு’ என்று என்னைக் கேட்டிருந்தாள். ஏனோ இத்தனை ஆதுரம்?

“நான் தைரியமாக வரதனை மறுத்து விட்டேன், சுசீ. பெண்ணான எனக்கு இருக்கும் உறுதி கூட இல்லாத கோழையான அவர் தம் காதலை அந்தரத்திலே பறக்க விட்டு விட்டு உன் அத்தை மகளை மணக்கப் போகிறார்? என்னுள் ஊறியிருக்கும் அன்பை விட அவர் அன்பு லேசானது என்று எனக்கு இப்போதானே தெரிகிறது. எனக்கு அவர் தகுதியானவர் அல்ல. அவரை நான் மணந்து கொண்டிருந்தால் கூடப் பின்னால் எங்களுக்குள் எத்தனையோ வேற்றுமைகள் மனஸ்தாபத்துக்கு அடிகோலுபவையாக இருக்கும்” என்று அவள் கூறுவதிலும் உண்மை இருக்கத்தானே இருக்கிறது?

மூர்த்தி ஏன் இப்படி இருக்கிறான்? அவன் மீது எனக்குச் சீற்றம் பெருகியது.

கையிலே கடிதத்துடன் நேரம் போனதே தெரியாமல் உட்கார்ந்திருந்த எனக்குக் கடிகாரத்தில் மணி இரண்டு அடித்த பின் தான் வீட்டு வேலை நினைவுக்கு வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. முன்னறையில் ஏதோ காகிதங்களைப் பார்த்துக் கொண்டிருந்த என் கனவர், மூன்று மணிக்குக் காபியருந்திவிட்டுக் காரியாலயம் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். எழுந்து சென்றேன். காபி தயாரித்து அவர் முன் கொண்டு வைத்துவிட்டு, பின் கட்டில் வேலைக்காரி வந்திருந்ததால் அங்கே போய்விட்டேன். சாதாரணமாக அவர் வெளியே செல்லும் போது சொல்லிக் கொண்டு போவது வழக்கமில்லை. நான் வேலையெல்லாம் முடித்து விட்டு, சரளாவைப் பார்க்கக் கலா மந்திரம் செல்லுவதாக இருந்தேன். ஒரு மணி கழித்து வந்து பார்த்த போது அவர் வெளியே போய்விட்டார் என்று சாத்தியிருந்த அறைக் கதவு அறிவித்தது. வெளியே இழுத்துத் தாழிட்டு விட்டுக் கிளம்பலாம் என்ற யோசனையுடன் வந்த நான் ஒரு விநாடிக்குள் யோசனையை ஏனோ மாற்றிக் கொண்டு விட்டேன். மனமே குரங்குதானே.

உள்ளறையிலே ஒத்திகையில் இசைத்த கீதங்களைப் பாடிப் பார்க்கும் நோக்கத்துடன் உட்கார்ந்தேன். விரல்கள் தம்புராத் தந்தியை ஜீவனற்று மீட்டினவே ஒழிய மனசு குறளி அந்தத் திசையிலும் செல்லாது போல் இருந்தது.

‘அவருக்கு இசை நிகழ்ச்சியில் நானும் வரதனும் எந்த எந்தப் பாகங்கள் கொள்கிறோம் என்று தெரிந்தால்?’

‘தெரிந்தால் என்ன? அவர் தாம் விசால நோக்குக் கொண்டவராயிற்றே. இருந்தாலும் நான் சொல்லாமல் இருப்பது ஏமாற்றுவது போல ஆகுமா?’ மனம் கொட்டிக் கொண்டிருந்தது.

டக்டக்கென்று ஜோட்டின் ஒலி என் விரல்களின் அசைவை நிறுத்தியது. கண்கள் பின்புறம் திரும்பிப் பார்த்தன. வெளியே செல்லும் போது அவர் வாசல் கம்பிக் கதவைப் பூட்டிப் போவது உண்டு. ஏனெனில் நான் உள்ளே வேலையாக இருந்திருப்பேன், கவனிக்க மாட்டேன். என்னிடம் ஒரு சாவியும் அவரிடம் ஒரு சாவியும் இருப்பது வழக்கம்.

‘இன்று மறந்து விட்டாரோ? ஒருக்கால் அவரே வருகிறாரோ என்னவோ! அவர் ஜோடு சத்தமே கேட்காதே.’

நான் எழுந்திருக்காமல் சிந்திக்கும் போதே, வரதன் என் முன் காட்சி அளித்தான்.

நிஜார்ப் பைகளில் கைகளை விட்டுக் கொண்டு புன்னகை செய்த அவன், “கதவு திறந்திருக்கிறது. நீ இங்கே உன்னை மறந்து உட்கார்ந்திருக்கிறாய்! யாராவது வந்து கொள்ளை கொண்டு போனால் கூடத் தெரியாது போல் இருக்கிறதே! ராமு இல்லையா?” என்று கேட்டான்.

“அவர் ஒரு மணி முன்புதான் ஆபீஸுக்குப் போக வேண்டும் என்று போனார். கதவைப் பூட்டிப் போவாரே? மறந்து விட்டார் போல் இருக்கிறது. உட்காருங்கள். நீங்கள் இன்று வருவதாகக் கூறியிருந்தால் இருந்திருப்பாரே!” எனக் கூறிக் கொண்டே நான் எழுந்தேன்.

நாற்காலியில் அமர்ந்து அவன், “நான் சொல்லியிருந்தால் தான் இருப்பானாக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை யாயிற்றே, வீட்டில் இப்போது வந்தால் தான் இருப்பான். இன்னும் சற்றுப் போனால் இருவருமாக எங்காவது கிளம்பி விடுவீர்களோ என நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால்… எப்போது வருவான்?” என்று வினவினான்.

என் உள்ளம் படபடத்தது.

‘தனிமையில் வந்திருக்கிறானே; இம்மாதிரி கேள்வியிலிருந்து இன்னும் என்ன என்ன வளர்த்துவானோ!’ என்று அச்சமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை, வரதனைக் காணும்போது எனக்கு அப்படி இனந்தெரியாத பயம் தோன்றியது.

“இல்லை, அவருக்குச் சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை இருக்கும். அதுவும் இன்று சபாவில் கூட எனக்குப் பிடிக்காத நடனக் கச்சேரி. மெதுவாகவே வழக்கம் போல் ஒன்பது மணிக்கு வந்தாலும் வருவார்” என்றேன்.

இப்படிக் கூறினால் அவன் நாசூக்காகப் போய்விடுவான் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.

“உம். இன்னும் அப்படியேதான் இருக்கிறான். எங்கே எழுந்து விட்டாய், சுசீலா! நான் வந்துவிட்டேன் என்றா? ஒத்திகையில் பாடிய கீதங்களைப் பாடிக் கொண்டிருந்தாயா?”

“இல்லை, தம்புராச் சுருதி கலைந்திருந்தது” என்று நான் முணுமுணுத்தேன்.

“பரவாயில்லை, நான் வந்தது சௌகரியமாகப் போய்விட்டது. அந்த கீதங்களை இன்னொரு முறை பாடு” என்றான் அவன்.

“அதுதான் சரியாக வந்துவிட்டதே; எதற்கு உங்களுக்கு வந்த இடத்தில் சிரமம்?” என்று நான் நழுவப் பார்த்தேன்.

“சிரமமா? எனக்கு என்ன சிரமம்? உன் குரலைக் கேட்டாலே சிரமம் பறந்து விடுமே!” என்று அவன் நகைத்தான்.

ஐயோ! இப்படிப் பிற புருஷன் புகழவா நான் இனிய சாரீரமும் கலையும் படைத்திருக்கிறேன்.

“நீங்கள் அளவுக்கு மீறிப் புகழுகிறீர்கள். எனக்கு இதுதான் பிடிப்பதில்லை” என்றேன் கோபம் தொனிக்க.

“உண்மைக் கலைஞர்களுக்குப் புகழ் பிடிக்காதுதான். ஆனால் என்ன செய்வது சுசீலா? அவர்களை நாடித்தானே அது வருகிறது. என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் உன் குரலை இசைத் தட்டிலே பதிய வைக்க வேண்டும் என்று நேற்று என்னிடம் வந்து மன்றாடினார். ‘நான் சொல்லுகிறேன். அவள் ஒப்புக் கொள்வாளோ, மாட்டாளோ?’ என்று கூறி அனுப்பி வைத்தேன். ஒன்றும் இல்லாதவர்கள் எல்லோரும் கந்தர்வ ரூபிணி, கோகில சரஸ்வதி என்று முன்னுக்கு வந்து தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். உயர்தரமான பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு இன்னும் இருட்டறையிலேயே உட்கார்ந்திருக்கிறேன் என்கிறாயே? எனக்கு இதுதான் பிடிக்கவில்லை” என்றான் அவன்.

வசிய மருந்து, மயக்கம் என்றெல்லாம் சொல்லுபவர்கள் மீது எனக்கு என்றுமே நம்பிக்கை இல்லை. ஆனால் இந்தப் புகழ் வார்த்தைகள் வசிய மருந்தாக இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம் தோன்றுகிறது. எவ்வளவு கெட்டியாக மனத்தை வைத்துக் கொண்டிருந்த போதிலும் இதன் சக்தியிலே பிடி தளர்ந்து விடுகிறது. கடுமையான பேச்சு ஏதும் எழாதபடி நான் நின்றேன்.

“சுசீலா, அன்று நீ நிலையத்திலே மாதவனை அழைத்து வரச் சொல்லத் தோழியிடம் கெஞ்சும் கீதத்தை இசைத்தாயே, அதில் நான் நிஜமாக என் மனத்தை முற்றும் பறிகொடுத்து விட்டேன். கவிதையின் பெருமை அதை இசைப்பதில் தான் முழுக்க இருக்கிறது என்பதை நிதரிசனமாக நீ காட்டிவிட்டாய். எப்போதுமே உருக்கமும் சோகமும் உன் குரலில் அலாதிச் சோபையுடன் மிளிர்கின்றன சுசீலா!” இப்படி அவன் கூறிய போது என் மனம் குருடாகி விட்டது. புகழ், நெருப்பின் ஜ்வாலையைப் போன்றது. அதன் அருகிலே அண்டாமல் இருக்கும் வரைக்கும் ஒளி மனத்துக்கு உவப்பாகத்தான் இருக்கும். ஆனால் அறியாமை நிறைந்த குழந்தை விட்டிற் பூச்சியைப் போல் அதைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறதில்லையா?

என்ன பேசுகிறோம் என்று அறியாமலே, “என்னைச் சொல்கிறீர்களே, நீங்களும் அன்று உணர்ச்சி வசப்பட்டுக் கவிதையிலே லயித்துத்தான் பாடினீர்கள். என்னை மட்டும் வறட்டு வறட்டென்று புகழாதீர்கள். இனி மேல் நானும் அத்தனையையும் உங்களுக்கே திருப்பி விடுவேன்” என்று மெல்ல நகைத்தேன்.

“அப்படியா சுசீலா! உன்னுடைய வாயிலிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையிலே நான் இப்போதெல்லாம் என்னை மறந்துதான் விடுகிறேன். என் கண்முன் பாதையாக நீ தோன்றும் போது என்னை எனக்கு அறியாமலே பாவம் வந்து விடுகிறதே” என்று கூறி அவன் என்னை ஊடுருவிப் பார்த்தான்.

ஜ்வாலையைத் தொட்டு விட்டேன். ‘சுசீ’ என்று என்னுள் நெருப்புப் பட்டு உறைத்து விட்டது. திடுக்கிட்டு நடுநடுங்கித் தடுமாறினேன்.

“ஏன் இப்படி நடுங்குகிறாய் சுசீலா! என் மனத்தை நீ வெகுவாகக் கவர்ந்து விட்டாய். என்னுடைய லட்சியப் பெண்ணுக்கு எந்த எந்த அம்சங்கள் இருக்க வேண்டும் என்று நான் கனவு கண்டிருந்தேனோ, அவை அத்தனையும் உருக்கொண்டவளாக நீ இருக்கிறாய். போற்றிக் கொண்டாடுபவரிடத்திலேதான் கலை வளரும். அதன் அருமையை, ஏன், உன் அருமையை உணராதவனிடத்திலே நீ வாடிக் கிடப்பதை நினைக்குங்கால் என் உள்ளம் நோகிறது, சுசீலா! கணவன், மனைவி, இருவருக்கும் விருப்பு வெறுப்புக்களும், குணங்களும் ஒரே தன்மையாக இல்லாவிட்டால் மன ஒற்றுமை எங்கிருந்து வரும்! ராமுவுக்கு ஏற்ற மனைவி நீ அல்ல. உனக்கு ஏற்றவன் அவன் அல்ல. கலாவல்லியான மனைவியின் அருமையை உணராத ஜடமாக அல்லவோ அவன் நேற்று, ‘அப்படியா, என்னது! இசை நிகழ்ச்சியா!’ என்கிறானே! இவ்வளவு சிரத்தை கூட இல்லாமலா இருப்பான் என்று நான் நம்பவில்லை.”

‘என்னுள்ளே தோன்றுவதெல்லாம் இவனுக்கும் தோன்றியிருக்கிறதே! நான் அவருக்கு ஏற்றவள் அல்லவா!’

யாரோ வெளியே நடமாடுவது போலத் தோன்றியது. பிரமையோ, என்னவோ! ஒருவேளை அவர் வந்துவிட்டாரோ! வரட்டுமே! தூணாக அசைவற்று நின்ற எனக்கு என்ன நினைக்க வேண்டும், ஏது செய்ய வேண்டும் என்று எதுவுமே புரியவில்லை.

“ஏன் சுற்றி வளைக்க வேண்டும். சுசீலா? என் உள்ளக் கோயிலிலே நீ இஷ்ட தெய்வமாக உறைந்து போயிருக்கிறாய். லீலா என்னை மணந்து கொள்ள மறுத்தாள். நானும் அவளை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அதுதான் முன்னமே கூறினேனே, கணவன் மனைவி இருவரும் ஒரே இயல்பினராக இருந்தால் தான் வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் விழ ஏது இருக்காது என்று.”

என்னால் பொறுக்க முடியவில்லை. எங்கிருந்தோ துணிச்சலும் தைரியமும் என் குரலை எழுப்பின.

“வரதன்! நீங்கள் ஏதேதோ பேசுகிறீர்கள். கலை நட்பின் வரம்பிலிருந்து நழுவி விட்டீர்கள்! உயர்ந்த நோக்குடன் பார்க்கிறீர்கள் என்றல்லவா நான் எண்ணியிருந்தேன்! நான் பிறன் மனைவி என்பதை மறந்து இந்த விதத்தில் என்னுடன் பழக வருவீர்கள், அதற்குச் சந்தர்ப்பங்களைக் கருவியாக உபயோகித்துக் கொள்வீர்கள் என்று நான் அறியாமற் போனேனே! உங்கள் கலை கிலை எல்லாம் வேஷந்தானா?” என்று கத்தினேன்.

அவன் மெதுவான குரலில் நகைத்தான்.

“கோபித்துக் கொள்ளாதே, சுசீலா. நான் கேவலமாக எண்ணிக் கொண்டு உன்னிடம் பேசவில்லை. விலை மதிப்பு அற்ற ரத்தினம் ஒன்றைப் பெற நான் கனவு கண்டேன். அதன் அருமையை அறியாமல் சாதாரணக் கல்லாக மதிக்கும் ஒருவனிடத்தில் அது ஒளியிழந்து இருக்கும் போது நான் அதைப் பெற ஆவல் கொள்வது இயற்கைதானே! நீயே உண்மையைச் சொல், சுசீலா! ராமு உன்னிடம் அளவிட முடியாத அன்பு கொண்டா நடத்துகிறான்! பெண்மையைப் போற்றி மதிக்கும் உயர் குணம் அவனுக்கு இருந்தால் உன்னை கேசவனுக்கும் பட்டுவுக்கும் அடிமை போல் உழைக்க விட்டிருப்பானா; அன்று நான் உன்னிடம் அவன் பேசிய தோரணையைக் கேட்கவில்லையா! நீ ஏதும் என்னிடம் ஒளித்துப் பயனில்லை சுசீலா!” என்றான்.

“நீங்கள் கூறுவது உண்மை. அவருக்கு என் மீது அன்பு இல்லை. நிம்மதியில்லாத வாழ்விலே நான் உழலுகிறேன்” என்ற வார்த்தைகள் என்னை அறியாமல் வெளி வந்திருக்கும். ஒரு நிமிஷ நெகிழ்ச்சியில் மாபெரும் பிழையை, மன்னிக்க முடியாத பிழையை நான் இழைத்திருப்பேன். ஆனால் மனக் குதிரையின் லகானைப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தேன்.

இந்தப் போராட்டத்தை என்னால் தாள முடியவில்லை. குழந்தை போல முகத்தைக் கண்களால் மூடிக் கொண்டு தேம்பினேன். என்னுடைய இந்த நிலையும் அவனுக்குச் சாதகமாகிவிட்டது. தான் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்தான்.

“என்ன சுசீலா இது! பாவம்! உன் நிலைமை எப்படி இருக்கிறதென்று எனக்கு இப்போதல்லவா தெரிகிறது? அழாதே. இதோ பார். உன்னை நான் மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன். என்றும் உனக்கு நன்மை புரிய நான் காத்திருப்பேன். மனம் முதிருமுன்பே சுவைக்கு உதவாத சாஸ்திரமும், யோசனை செய்யத் திறனில்லாத சுற்றமும், அதற்கேற்ற மெருகடையாத கிராமத்துச் சூழ்நிலையும் உன்னை விவாக பந்தத்திலே மாட்டித் தகுதியில்லாத கணவனுடன் சிறை வைத்தால் அதற்கு நீ பந்தப்பட்டவளா? நீயே யோசித்துப் பார் சுசீலா. ராமநாதனை நீ மணம் புரிந்து கொண்ட போது சுயமாக இது சரி, இது நல்லது, இது தவறு என்று நிர்ணயித்துக் கொள்ள உனக்குச் சக்தி இருந்ததா? இயற்கையாக இருவரும் அன்பு வசப்பட்டிருந்தீர்களானால், இத்தகைய நிலையிலா இருப்பாய்?”

ஆம், அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. ‘இவன் தான் உன் கணவன். இவனிடந்தான் நீ உன் வாழ்நாளைக் கழிக்க வேண்டும்’ என்று பெரியவர்கள் சுட்டிக் காட்டினார்கள். வழிவழியாக வந்த குலப் பண்பாடு, எங்களுக்குள் பிணைப்பை உண்டு பண்ணி வைக்கக் கூடிய புனித ஒப்பந்தம் எல்லாமாக எனக்கு, ‘அவரே தெய்வம், அவரைப் போற்ற வேண்டும்’ என்று மனத்தை ஒரு முகப்படுத்தின. ஆனால் காதல் – அன்பு – இயற்கையாக எனக்கு, அவர் மீது எழுந்ததா?

அவருடைய மனத்தை ஆராய்ந்து அலுத்துப் போன என்னையே நான் ஆராய இப்போது வழி வைத்து விட்டான் வரதன்.

“சுசீலா, யோசிக்கிறாயா?” என்று அவன் மீண்டும் நான் இருக்கிறேன் என்று குரல் கொடுத்தான்.

“யோசனை என்ன? நீங்கள் இம்மாதிரிப் பேசுவது தவறு. நடந்து கொள்வது தவறு. அவர் இப்போது வந்தால் என்ன நினைத்துக் கொள்ள மாட்டார்? இந்த வகையிலே நீங்கள் சிநேகம் பாராட்டுவதனால் இப்போதே வெளியே போங்கள், மரியாதையாக!” என்றேன் கடுமையாக.

“அநாவசியமாக நீ பயப்படுகிறாய். அவனுக்கு ஒரு நீதி, உனக்கு ஒரு நீதியா? உன்னை அங்கே உதகையில் தனியே விட்டு விட்டு, லீலா இங்கே தனிமையில் இருக்கிறாள் என்று தானே வந்தான்? அது சரியா? நான் உன்னை என் மனைவியாக்கிக் கொள்ள எந்த நிலையிலும் சித்தமாக இருக்கிறேன். உன் மனத்தைப் பொறுத்தது.”

பூமி பிளந்து என்னை அப்போது விழுங்கி இருக்கக் கூடாதா? அல்லது கூரை இடிந்து என் மீது விழுந்திருக்கக் கூடாதா?

“என்னைத் தனிமையில் விட்டுப் போக மாட்டீர்களா!” என்று ஆத்திரத்துடன் நான் கிறீச்சிட்டேன்.

“நான் போகிறேன், சுசீலா. போகிறேன். நான் கூறியவற்றில் தவறு இருக்கிறதா என்று ஆற அமர வேண்டுமானால் யோசியேன்” என்றான் அவன்.

“போக மாட்டீர்களா!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு நான் வெகுண்டேன். அடுத்த கணம் டக் டக் என்ற ஜோட்டொலி, வாயிற் கதவு திறக்கும் ஓசை எல்லாம் அவன் போய் விட்டான் என்று எனக்கு அறிவித்தன.

நிமிர்ந்து அறையை வெறித்து நோக்கினேன். மேஜை மீது கிடந்த லீலாவின் கடிதம் என்னைத் தாயற்ற குழந்தை போல் பரிதாபமாக நோக்கியது. தொப்பென்று மேஜை மீது கவிழ்ந்து கொண்ட நான் நெஞ்சு பிளக்க விம்மினேன்.

கண்ணீர் மேஜையை நனைத்தது.

இரண்டு மூன்று விநாடிகள் தாம் சென்றிருக்கும். மெதுவான காலடிச் சத்தம் என் கவனத்தைத் தாக்கியது.

‘அவர் தாம் வந்து விட்டாரோ?’ என்று துணுக்குற்று நான் நிமிர்ந்தேன்.

மூர்த்தி! மூர்த்தி எப்போது வந்தானோ தெரியாது.

அநுதாபம் தோய்ந்த விழிகளில் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

4.6 கனி

“சுசீலா!” என்று மெதுவான குரலில் அவன் அழைத்தான்.

என் விழிகளில் தேங்கியிருந்த கண்ணீர் கீழே சிந்தி விடாதபடி அடக்கிக் கொள்ள முயன்றவளாக நான் அவனுடைய இரக்கம் மேலிட்ட முகத்தை நோக்கினேன்.

“எப்போது வந்தீர்கள்?” என்று நான் கேட்க நினைத்த வார்த்தைகள் வெளியே வர மறுத்தன. அவனாகவே அதே தணிந்த குரலில், “நான் அப்போதே வந்துவிட்டேன், சுசீ! வரதன் இங்கு இருக்கும் போதே வந்துவிட்ட நான் திடுக்கிட்டு வெளியிலேயே நின்றிருந்தேன் இந்நேரம். நீ கிறீச்சிட்ட போது நான் உள்ளே நுழைந்திருப்பேன். ஆனால் அடுத்த விநாடியே அவன் வெளியே வந்ததைக் கண்ணுற்று விட்டேன். என்னைக் கவனியாமலே அவன் சென்றான். உம். ராமநாதன் எங்கே போயிருக்கிறார், சுசீலா?” என்று கேட்டான்.

நான் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனேன்.

அப்போதே யாரோ ஆள் அரவம் கேட்டது போல் இருந்ததே? உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ பேசிய வரதன் தான் கவனிக்கவில்லை என்றால், குழம்பிய நிலையில் இருந்த நானும் பிரமை என்று எண்ணினேனே?

அவன் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. வெறித்துப் பார்த்தேன். கன்னங்களிலே வழிந்த கண்ணீர் காய்ந்து தோலை இழுத்தது. பேச்சு, சிந்தனா சக்தி எல்லாம் எனக்குத் தடைப்பட்டு விட்டன போல் இருந்தது.

“சுசீலா!” என்று மறுபடியும் அவனுடைய வாஞ்சை ததும்பும் குரல் என் செவிகளில் விழுந்தது. நான் மீண்டும் அவன் முகத்தை நிமிர்ந்து நோக்கினேன்.

ஆம். அவனுடைய முக விலாசம் எனக்கு நடுக்கத்தை உண்டு பண்ணவில்லை. வரதனைப் போல் அல்ல அவன். என் நெஞ்சத்திலிருந்து உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு வந்தது. பொலபொலவென்று கண்கள் முத்துக்களைச் சிந்த முதல் தடவையாக அவனை நான் “அண்ணா!” என்று அழைத்துக் கதறி விட்டேன்.

அவனும் பதறித்தான் போய்விட்டான். பரபரப்பாகப் பேசினான். “என்னம்மா சுசீலா? எனக்கு எதுவுமே புரியவில்லையே? வரதனின் நடத்தையைக் குறித்து வருத்தப்படுகிறாயா? ஞாயிற்றுக்கிழமைகளில் கூடவா ராமநாதன் ஆபீசுக்குப் போகிறார்? அவர் உன்னிடம் அன்பாக இருக்கவில்லையா, சுசீலா? நான் அப்போதே கேட்ட போது மழுப்பினாயே? இப்போது நீ சந்தோஷமாக இருக்கிறாய் என்று நான் நினைத்ததற்கு மாறாக, ஒரே அதிர்ச்சி தரும் அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறதே? என்னிடம் சொல்லு, சுசீ!” என்று சொல்லி அவன் என் அருகிலே உட்கார்ந்தான்.

ஆதரவிழந்த அநாதைக் குழந்தை அன்பு தோய்ந்த முகத்தைக் கண்டால் ஒட்டிக் கொள்வதைப் போல நான் விம்மலுக்கு நடுவே, “எனக்கு தந்தை இல்லை. தாயும் மற்றவர்களும் என்னை அறியாதவர்கள் ஆகி விட்டார்கள். அன்றே நீங்கள் சொன்னீர்கள். எனக்கு மூத்த சகோதரன் நீங்கள் தாம். இந்தச் சமயம் எனக்கு ஆறுதல் கூற உங்களைத் தவிர யாருமே இல்லை” என்று நாத் தழுதழுக்க நான் கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

“சுசீ. நான் தான் உன்னை மஞ்சு என்று எண்ணியிருக்கிறேன் என்று அன்றே கூறினேனே? என்ன நடந்தது என்று விவரமாகச் சொல்லு, சுசீலா! ராமநாதன் உன்னை அன்பாக நடத்தவில்லை என்பதை அறியவே எனக்குத் தூக்கி வாரிப் போடுகிறது” என்று அவன் கேட்டான். மனத்திலே பொங்கி எழுந்த துயரத்தை, அத்தனை நாட்களுக்குப் பிறகு நான் தாளாமலே அவனிடம் கொட்டி விட்டேன்.

“கடந்த மூன்று வருஷ வாழ்க்கை வெளிப் பார்வைக்குத்தான் நன்றாக இருந்திருக்கிறது. என்னை மணந்து கொண்டுவிட்ட கடனுக்காக அவர் என்னை மனைவியாக நடத்துகிறாரே ஒழிய, உல்லாசமில்லை, சல்லாபமில்லை, சண்டையில்லை, சச்சரவில்லை, கோபமில்லை, தாபமில்லை. இந்தப் பாலைவன வாழ்க்கையில் வெம்பி நான் சாகவுங் கூடச் சில சமயங்களில் எண்ணம் கொண்டு விடுகிறேன். அவர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லையே? என் கண்ணீருக்கு முன் அவர் வாயிலிருந்தே ஒரு நாள், ‘உன்னை நான் மணந்து கொண்டு மாபெரும் தவறு இழைத்து விட்டேன்’ என்று வந்துவிட்டது. அதன் அர்த்தம் அப்போதைய சூழ்நிலையில் எனக்கு ஒரு விதமாகப் புரிந்தது. இப்போது ஒரு விதமாகப் புரிகிறது. என்றாலும், அவருக்கு என் மீது கடுகளவும் அன்பு இல்லை!”

மூர்த்தியின் கண்கள், உதடுகள் எல்லாம் அசைவற்றுப் போயின. என்னைப் பார்த்துக் கொண்டே மனத்திலே எழுந்த பிரமிப்பைச் சமாளிக்க வகையறியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான். நான் தொடர்ந்தேன். “என்னை நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள். வரதன் நடந்து கொண்ட முறையும் பேசிய முறையும் தவறு தான். ஆனாலும் அவன் கூறிய சில விஷயங்கள் முற்றும் உண்மை என்று எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய உணர்ச்சிகளையும் விருப்பு வெறுப்புகளையும் கொஞ்சமாவது அறியும் இயல்பினராக அவர் இருந்தால் என் வாழ்வு சீர்ப்பட நம்பிக்கை இருக்கும். நான் அவரை அந்தக் காலத்திலே என் இருதய பீடத்தில் அமர்த்திக் கிடைத்தற்கரிய கணவர் என்று போற்றினேன். அவர் என் மீது கரை காணாத காதல் கொண்டிருக்கிறார் என்று நம்பி அவருக்காக எந்த விதமான தியாகத்தையும் செய்யச் சித்தமாக இருந்தேன். என் நம்பிக்கையை ஒரே வெட்டாக வெட்டி வீழ்த்திய அவர், இந்த நாட்களில் என் மனத்தை உடைத்து விட்டார். சித்திரவதையையும் விடக் கொடிய தான இந்த மனநோவைச் சகிக்க முடியாமலே தான் நான் ஆறுதலை நாடி என் சங்கீத அறிவைக் கொண்டு வேறு பாதையிலே செல்லலானேன். அதிலே வரதன் வந்து இப்படிக் குறுக்கிடுவான் நான் எண்ணியிருக்கவில்லையே? அவன் பேசியவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்களே?” என்று கேட்டவாறு நான் படபடப்பைத் தணித்துக் கொள்ளும் வகையில் சற்று நிறுத்தினேன்.

“இதற்கு முன் இந்த வகையில் அவன் பேசியிருக்கிறானா சுசீ?” என்று மூர்த்தி சட்டென்று கேட்டான்.

அவன் கேள்வி ஏனோ எனக்குத் தணதணப்பைக் கொடுத்தது. என் மனம் ராமநாதனின் மனைவி என்ற வரையறையிலிருந்து நழுவும் வகையில் ஆட்டம் கண்டிருக்கும் என்பதை அவன் ஊகித்துக் கொண்டு விட்டானா என்ன? எத்தனை உறுதியான கற்கோட்டையாக இருந்தாலும் காவலாளிகள் சரியாக இல்லை என்றால் பகையாளி உள்ளே நுழைந்து விடச் சுலபமாகி விடுகிறதல்லவா? அவர் மனைவி தான் நான். வழி வழியாகக் கணவனைத் தெய்வமாகப் போற்றும் மங்கையர் மரபிலே நான் வந்தவள் தான். எனினும் இந்த உறுதிக் கோட்டையை ஏதும் பக்கபலமின்றிக் காக்கும் என் ஒடிந்த இருதயம் வரதனுடைய எதிர்ப்புக்கு முன் சமாளிக்க முடியாது போல் தளர்கிறதே? நினைக்கவே நெருப்பைத் தொட்டது போல் சுரீலிடுகிறது. என்றாலும் ஊடே ஒரு குறுக்குப் புத்தி, வரதன் கூறியவைகளிலே உண்மை இருக்கிறது, உண்மை இருக்கிறது என்று ஏன் தாளம் போட வேண்டும்.

“ஏன் சுசீலா? நான் கேட்டதற்குப் பதில் கூறவில்லையே?” என்று மூர்த்தி மறுபடியும் கேட்டான்.

“உம், உம்! இல்லை. வானொலி நிலையத்திலே நடக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றிலே அவனுடன் நானும் பங்கு கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆம், தலைவனுடன் தலைவி பாகமாக. என்னைப் போலக் கலை உள்ளம் கொண்டவன், ரசிக உணர்ச்சி படைத்தவன் என்று உயர்ந்த நோக்கிலே நான் அவனிடம் மதிப்பு வைத்து அதற்கு ஒப்புக் கொண்டேன். அந்த முறையிலே இருந்து அவன் இப்போது…” என்று மேற்கொண்டு முடிக்காமல் நான் நிறுத்தி விட்டேன்.

சில விநாடிகள் மூர்த்தி மௌனம் சாதித்தான். பிறகு நிறுத்தாமல் கடல் மடை திறந்தது போல் ஆரம்பித்தான்.

“ராமநாதன் ஒன்றுமே விசாரிப்பதில்லை. வரதன் உன்னுடன் பழகுவதைச் சரளமாக அனுமதிக்கிறார், இல்லையா சுசீ? நீ உன் மனத்தைத் தளர விட்டு விட்டாய் என்று எனக்குத் தோன்றுகிறது. அது தவறு. அவர் உன் மீது அன்பு பாராட்டவில்லை என்பது நிச்சயமாக உனக்குப் பட்டால், அதற்குரிய வழியை முயல வேண்டுமே ஒழிய, புனிதமான மணப் பிணைப்பிலிருந்து நழுவும் வழியிலே உன் மனத்தை விட்டு விடலாமா? ஒரு காலத்தில் அவரை இருதய பீடத்தில் வைத்துப் பூசித்தேன் என்றாயே, அத்தகைய அன்பும் காதலும் உண்மையாகக் கொண்டிருந்த நீ, தியாக புத்தி கொண்டவளாக இருந்தால் வழியில் ஏற்பட்ட முள்ளைக் கண்டுபிடித்துக் களைய அன்றோ முயல வேண்டும்? நீ நம் இந்தியப் பெண் குலத்தின் தர்ம வழுப்பாட்டிலிருந்து பிறழ்ந்து விடும் நிலைக்கு வருவாய் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.”

“சுசீலா, நீ உன் மனத்தையே புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் குழந்தையைப் போல வரதனின் அலங்காரச் சொல்லில் குழம்பிப் போகிறாய். அவன் சொற்களில் உண்மை இருக்கிறது என்றாயே? என்ன உண்மை இருக்கிறதாம்? கணவனும் மனைவியும் விருப்பு வெறுப்புகளில் மன ஒற்றுமை கொண்டு இருக்க வேண்டும் என்றானே? அதைப் போலத் தவறு வேறில்லை. அவனுக்கு ரசிகத்தன்மை இருக்கிறது. உனக்கு கலைப்பற்று இருக்கிறது. இதனாலே மன ஒற்றுமை என்று அவன் முடிவு கட்டுகிறான் இல்லையா? இன்னும் எத்தனையோ பேரிடம் அவன் இந்த ஒற்றுமையைக் காணலாம். இதிலிருந்து காதல் வந்து விட்டது என்று கூறுவது மடத்தனம். உன் கண்களைக் கட்ட அவன் கையாளும் தந்திரம், இது. வெளித் தோற்றங்களிலேயும் நாட்டங்களிலேயும் மலையும் மடுவும் போன்ற வேற்றுமை கொண்டவர்கள் மனமொத்து வாழ முடியாது என்பது முழுத் தவறு. உண்மையில் அவர்களுடைய வாழ்க்கை தான் ஒளிவிடும். அவனுக்குப் பரிச்சயமில்லாத விஷயத்திலே அவள் தேர்ச்சி பெற்றிருந்தால் அவனுக்கு ஆச்சரியம் கொடுக்கும். அதன் மூலம் அவனுக்கு அவளிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அவள் விஷயமும் அப்படியே. பரஸ்பரம் இந்த வேற்றுமை அவர்களிடையே பிரேமையை அதிகரிக்க உதவுமே ஒழிய குன்றிவிடச் செய்யாது. அவன் சொல்லும் மாதிரியிலே ஒற்றுமை இருந்தால் தான் ஆபத்து. விவாதங்களுக்கும், மனத்தில் போட்டி பொறாமைக்கும் இடம் ஏற்பட ஏதுவாகும். எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் தம்பதிகள் இருந்தார்கள். அவளுக்குக் கெட்டிக்காரி, கைராசிக்காரி என்ற புகழ் ஏற ஏற அவனுக்குப் பொறாமை ஏறியது. அதன் விளைவு, இப்போது இருவரும் மன வாழ்விலிருந்தே பிரிந்து ஜன்ம விரோதியாகி விட்டார்கள். இந்த ஒற்றுமைக்கு என்ன சொல்லுகிறாய், சுசீ? வாழ்க்கையில் ஒளியை ஊட்ட உறுதுணையாக உள்ளது ஒற்றுமையுமல்ல, வேற்றுமையுமல்ல. அன்புதான் ஆதாரம்” என்று ஆராய்ச்சி முடிவிலே வெளியிடும் நீண்ட அறிக்கையைப் போல் அவன் தன் அபிப்பிராயத்தை வெளியிட்டான்.

வரதனின் பேச்சில் உண்மை இருக்கிறதென்று ஆமோதித்த உள்ளம், இப்போது மூர்த்தியின் அபிப்பிராயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொண்டது.

“வரதன் விஷயத்தை விட்டுத் தள்ளுங்கள். ஆனால் நீங்கள் இப்போது கடைசியாகக் கூறியது போல ஆதி காரணமாகிய அன்பு இல்லையே அவருக்கு? இருக்கிறாயா? இரு. வெளியே போகிறாயா? போ. இது என்ன குடித்தனம்? என் மனம் தளர்ந்து போனதற்கு நீங்கள் என் மீதே குற்றம் சாட்டுகிறீர்களே? அவரால் தானே நான் மனமுடைந்து போனேன்? அவர் வேறு எந்த மங்கையிடமாவது மன நாட்டம் கொண்டிருந்தால் அதை வெளிப்படையாகக் கூறி என்னிடமிருந்து விடுதலை பெற்றுப் போகட்டும். என் கண் முன் நடமாடி என்னை நோகச் செய்வதை விட அது எனக்கு ஒரே துயரமாகிவிடும். அவருடைய இந்த வேற்று நடத்தை தானே வரதன் என்னிடம் இத்தனை துணிகரமாக வார்த்தையாடத் தைரியமளித்து விட்டது? நான் என்ன செய்வேன்? எனக்குத் தெரியவில்லை. ஆமாம், எது நன்மை, எது தீமை என்று எனக்குப் புரியவில்லை. வருஷக் கணக்கில் மனமும் அறிவும் போராடிப் போராடி நான் அலுத்து ஓய்ந்து விட்டேன்.”

“இப்போது சிந்தித்துப் பார்த்தால் ஒருவரை ஒருவர் அறிந்து பழகி, காதல் மணம் செய்து கொள்கிறார்களே, அதுவே சிலாக்கியம் என்று நான் நினைக்கிறேன். என் மணப் பருவத்தில் எனக்கு இத்தனை அறிவு பதப்பட்டிருக்கவில்லை. அவர் ‘அப்படி இருப்பார், இப்படி இருப்பார்’ என்று விளையாட்டுப் போலக் கோட்டை கட்டினேன். எல்லாம் பிரமையாக முடிந்து விட்டது. எனக்கு அவர் மீது ஏற்பட்ட அன்பு கூடப் பிரமையோ, இயற்கையாக எழுந்ததில்லையோ என்று எண்ணும் அளவுக்கு நான் வந்து விட்டேன். தர்ம வழி, அது இது எல்லாம் இந்த என் போன்ற அன்பில்லாத சூழ்நிலையிலே தரித்து நிற்க முடியாது. கணவனை விட்டு விலகுவதை மனத்தால் கருவதையே, பத்தினிப் பெண்டிரின் தர்மத்திலிருந்து பிறழ்ந்து விட்டதாக எண்ணும்படியான மகளிரிடையே வளர்ந்தவள் தான் நான். ஆனால் இந்த உறுதி நிலைத்து நிற்கக் காதல் வேண்டும். வாழ்விலே ஒருவரை ஒருவர் பிணையுமுன்பு இந்த அஸ்திவாரம் அவசியம். எங்களுக்குள் இது இல்லாததால் தான் இன்ப மாளிகை எழவில்லை. அவரையும் குற்றம் சாட்டுவதற்கில்லை. எனக்கும் அவருக்கும் இருந்தக் கணவன் – மனைவி மேல் பூச்சு நாடகம் தீராத வேதனையையும் நோயையும் தருகிறது. லீலாவுடன் அவரைச் சேர்த்து வரதன் மட்டுந்தானா கூறினான்? ஜயம் மன்னி கூட என்னிடம் ஜாடைமாடையாக வந்து எச்சரித்தாள். நான் அவளையே கேட்டிருப்பேன். ஆனால் அவள் இங்கு இருக்கும் போது எனக்கு இந்தச் சந்தேகம் மனத்தில் உறைக்கவில்லை. அவர் என்னை நடத்தும் விதத்துக்கு வேறு ஏதேதோ உப்புக்கு உதவாக் காரணங்களைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தேன். இப்போது அதுவும் உண்மையாக இருக்குமோ என்று கூட எனக்குக் கலங்குகிறது” என்று தோன்றியதை யெல்லாம் நான் அவனிடம் கூறிவிட்டேன்.

வார்த்தைகளை முடித்த பின் தான் சட்டென்று மனத்திலே அவனிடம் ஏன் இப்படியெல்லாம் கூறினோம் என்று வெட்கம் முட்டுக் கட்டை போட்டது. கண நேர நெகிழ்ச்சியிலே மனத்திலே பட்டதையெல்லாம் பொழிந்து விட்டேனே? அப்படித்தான் என்ன, அவன் அநுபவம் முற்றி வாழ்க்கையில் அடிபட்டவனா? எனக்குத் தெரிந்து லீலாவை ஏமாற்றி விட்டு செல்வத்திலும் அந்தஸ்திலும் மோகம் கொண்டு ஹேமாவை மணக்க முற்பட்டவன். பெண் புத்தி பின் புத்தி என்பது ஒவ்வொரு தடவையிலும் மெய்யாகும்படி நான் நடந்து விடுகிறேனே?

ஆனால் அவன் மீது லீலா விஷயமாக என்ன கோபம் எழுந்தாலும், கடுமையான வார்த்தைகள் கூற வேண்டும் என்று எண்ணியிருந்த போதிலும் சமயத்தில் மறந்து விட்டனவே? அவன் வாஞ்சை ததும்பும் முகத்துக்கு முன் என்னை அறியாமல் ஏனோ பாசம் இழுக்கிறது? அவனைச் சகோதரனாக அங்கீகரித்ததில் மனப் பளு குறைந்து விட்டது போல் ஏனோ நான் ஆறுதல் காண வேண்டும்? இந்தப் பிறப்பில் இல்லாத ரத்தப் பந்தம் முற்பிறப்பில் இருந்ததோ? மனச்சுமையை ஓர் உறுதியுடன் இறக்கி விட்டேன். உறுதியுடன் ஒரு செயல் புரிந்தால் பின்பு தடுமாறக் கூடாது. அடுப்பு எரியவில்லை என்று விறகை இழுத்து மாற்றிக் கொண்டே இருந்தால் நெருப்பு எப்படிப் பிடிக்கும்? எனக்குள்ளேயே அது சரியில்லை இது சரியில்லை என்று குழம்புவதில் என்ன பயன்?

இத்தனை நேரம் வாய் திறவாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த மூர்த்தி, “சுசீலா, நான் ஒரு தரம் அல்ல பத்து தரம் சொல்லுகிறேன். உன் மனத்தை நீ புரிந்து கொள்ளவில்லை. ஏமாற்றத்தாலும் நிராசையாலும் வாடிப் போயிருக்கிறாய். அதனால் தான், ‘அவரிடம் நான் அன்பு கொண்டது பிரமை’ என்கிறாய். முதன் முதலிலே நான் உன்னை ஊருக்கு அழைத்து வந்த போது, ராமநாதனின் பேச்சை எடுத்தாலே உன் மனம் விம்மியதை முகம் எப்படிக் காட்டியது என்பதை இன்னமும் என் நினைவில் வைத்திருக்கிறேன். ஆச்சரியமாகக் கூட இருந்தது. எனக்கு அப்படி இருந்த நீ இன்று எப்படி என்னிடம் விவாதிக்கும் நிலைக்கு வந்து விட்டாயே! உன்னை மணந்தது ஏன் தவறு என்று நீ கேட்டாயா சுசீ?” என்று என்னைக் கேட்டு மடக்கினான்.

நான் ஆத்திரத்துடன் பதிலளித்தேன். “கேட்க வேண்டுமாக்கும்! அன்று பகல் அவர் மதனி என்னைக் கடிந்து கொள்ள மனஸ்தாபம் நேரிட்டிருந்தது. என் கண்ணீரைக் கண்டதும் தமையனுக்கும் மதனிக்கும் கடமைப்பட்டிருந்த அவரைப் பிளவு ஏற்படும் வகையில் நான் குறுக்கிட்டு வந்திருக்கிறேன் என்று உணர்ந்து அப்படிச் சொன்னார் என்று நம்பினேன். இதெல்லாம் நான் ஏன் சுற்றி வளைக்க வேண்டும்? உண்மையாக அவர் காதல் உள்ளம் படைத்தவராக இருந்தால் நான் மாபெரும் குற்றம் செய்தாலும் மன்னித்து விடமாட்டாரா? நான் ஏமாந்தேன். வாழ்விலே பெருந் தோல்விதான் என் பாக்கியம். அவர் ஒரு நாளின் பெரும் பகுதியை வெளியிலே கழித்து விடுகிறார். எங்கே போகிறார், என்ன செய்கிறார், என்னைப் போல வேதனைப் படுகிறாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதே வகையில் நானும் இருக்க முடியாது என்பதை இதோ வரதனுடைய குறுக்கீடே காண்பித்து விட்டது. நான் அவரிடமிருந்து விலகி வாழ்வதை யாருமே ஆதரிக்க மாட்டார்கள். ஏன், என்னைப் பெற்ற தாயே ஒப்புக் கொள்ளாமல் இடிப்பாள். பெண்ணாய்ப் பிறந்தவள், புருஷனுடைய எத்தகைய கொடுமைக்கும் என்றென்றும் அடி பணிந்து தலை கொடுக்க வேண்டியது தான் என்ற மனப்பான்மையில் ஊறிய அவள், நானும் அப்படியே இணைந்து போக வேண்டும் என்றே விரும்புகிறாள். அது போல அவரிடம் சரணாகதி அடைந்து விட என்னால் முடிய வில்லையே? பூமிக்கு வெகு அடியிலே மறைந்து கிடக்கும் தண்ணீரைக் கூட பாறைகளைப் பிளக்கும் வெடிகளும் மனிதனுடைய இடைவிடாத் தோண்டுதலும் காண்பித்துக் கொடுப்பதில்லையா? அப்படி அறியாமையும், என்னை நானே தாழ்த்திக் கொள்ளும் வறுமை மனப்பான்மையும் என்னுடைய கொஞ்சம் சுயமதிப்பைக் கூட மூடி விட்டிருந்தன. ஆனால் வெடி மருந்துகள் போன்று என் நாட்களிலே எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும் அவமதிப்புகளும், எனக்கும் சுயமதிப்பு உண்டு, அன்புக்கு அடி பணியலாமே ஒழிய ஆணவத்திற்கு அசையக் கூடாது என்ற விழிப்பை வெளிக் கொணர்ந்து விட்டனவே! அது வலியப் போய் அவரிடம் சரணடைய வொட்டாமல் தடுக்கிறதே!”

“புரியாத விஷயத்தை நேரிலேயே கேட்பது சரணாகதி அடைவது என்று அர்த்தமா, சுசீ? உன் மனம் திரிந்து விட்டதற்கு வருத்தப்படுகிறேனே ஒழிய, உன்னை நான் குற்றம் சாட்டவில்லை. நீ கேட்க வேண்டாம். எனக்குத் தெரிந்து விட்டது. நானே ராமநாதனிடம் நேராகக் கேட்டு விடுகிறேன். லீலாவைப் பற்றிய வம்புகளிலே எனக்குச் சிறிதும் நம்பிக்கை எழவில்லை என்றாலும் நீ கூறும் மாதிரி…”

அவன் தொண்டை கரகரத்தது.

என்னால் வாளா இருக்க முடியவில்லை. லீலாவின் கடிதம் நினைவில் வந்தது.

“எனக்கும் லீலாவை அப்படி நினைக்கவே மனம் கூசுகிறது. நீங்கள் கைவிட்டு விட்டீர்கள் என்று மனமுடைந்து விட்டாள். எனக்கு ஆறுதல் நாடுவது கிடக்கட்டும். முதலிலே நீங்கள் செய்த செய்கையின் பலனைப் பாருங்கள். பணக்கார மாமாவின் ஆதரவிலே மேல் நாடு சென்று திரும்பி விட்டீர்கள். செல்வத்திலே கொழிக்கும் ஹேமாவை மணக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இது நியாயமாக்கும்! உங்கள் மீதுள்ள காதலின் மிகுதியால் வரதனையும் செல்வத்தையும் சுற்றத்தையும் கூட வெறுத்துவிட்டு அவள் வெளியேறி விட்டாள்!” என்று முகம் கொதிக்கக் கூறிய நான் அவள் கடிதத்தை அவனிடம் வீசி எறிந்தேன்.

அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவன் லேசாக நகைத்தான்.

“சுசீ. பெண்ணே பொறுமையற்றவள். என் வாயால் நான் என்றாவது ஹேமாவை மணந்து கொள்ளப் போகிறேன் என்று கூறினேனா? அதற்குள் நெய்யில் விழுந்த ப்பம் போல ஆத்திரப்பட்டால் நான் என்ன செய்ய? ஏதும் வாயை விட்டுக் கேட்காமல் திடீரென்று கோபித்துக் கொண்டால் எனக்கு எப்படிப் புரியும்? ஊரை விட்டுப் போகும் போது லீலாவைச் சந்தித்து என் யோசனைகளைக் கூற வேண்டும் என்று ஆன மட்டும் முயன்றேன். அவள் பிடி கொடுக்கவே இல்லை. எனக்கும் வேறு சந்தேகம் தட்டியது. ராமநாதன் அவளை அடிக்கு ஒரு முறை மிஸஸ் வரதன் என்று பட்டம் கட்டி அழைத்தாரே? அவர்கள் விருப்பத்துக்கு வளைந்து போகக் கூடிய நிர்பந்தமாக்கும். அதனால் தான் அவள் எனக்கு முகம் கொடுக்கவில்லையாக்கும் என்று எனக்கு விரக்தி உண்டாயிற்று. நான் புறப்பட்டுச் செல்லும் போது மனம் என்ன பாடுபட்டுக் கொண்டு போனேன் என்பதை அறிவாளா அவள்? மாமா, மாமியிடம் உங்கள் வருங்கால மாப்பிள்ளையாக நான் இருக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பண உதவி பெற்றுக் கொள்ளவில்லையே? அவர்கள் அந்த நம்பிக்கையிலே வெளியே டமாரம் அடித்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளியா? கிட்டி முட்டிக் கல்யாணம் என்ற பிரஸ்தாபம் நான் இங்கு வந்த பிறகேதான் என் வரைக்கும் வந்தது. நான் முன்பே திட்டமிட்டிருந்தபடி, எங்களுக்கு இருந்த ஒரே வீட்டை விற்று, அவர்களிடம் நான் கடனாகப் பெற்றுக் கொண்டிருந்த தொகையைத் திருப்பி விட்டேன். ‘உங்கள் பெண்ணுக்கு நான் தகுதியானவன் அல்ல’ என்ற என் எண்ணத்தையும் உடைத்துக் கூறிவிட்டேன். என் தாய் தந்தையருக்குக் கூட நான் ஹேமாவை மறுத்ததில் கோபமில்லை. ஏனெனில் அவளுடைய அதீதமான நாகரிகம் அவர்களுக்குக் கூடப் பிடிக்கவில்லை. மேல்நாடு செல்லும் ஆசையிலே, அவசரத்துக்கு அவர்களிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டது தவறாகுமா? நேற்றுத்தான் ரெயில்வே தொழிற்சாலையில் வேலையை ஒப்புக் கொண்டேன். இவ்வளவு சுலபமாக லீலா என்னை நம்பிக்கையற்றவனாக ஆக்கிவிட்டதற்கு நீயும் ஒத்துப் பாடுகிறாயே, சுசீலா? பெண்ணே ஆத்திரப்பட்டவள். மனத்திலே உள்ளதை வெளிப்படையாகவும் கேட்க மாட்டாள். ராமநாதனை நான் கேட்டால் கூட இப்படித்தான் ஏதாவது சொல்லப் போகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று மூர்த்தி விவரித்தான்.

“ஆமாம்! உங்களைப் புரிந்து கொள்ளும்படியும் நடக்க மாட்டீர்கள். பிறரையும் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! பிறகு பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று குற்றம் சாட்டுவீர்கள்?” என்று நான் இன்னும் ஏதேதோ ஆத்திரத்துடன் கூற வாயெடுத்தேன். கதவு இடிபடும் சப்தம் என்னை உலுக்கியது.

திடுக்கிட்டுத் திரும்பிய நான் அறை முழுவதும் பார்த்தேன். நான் இழுத்துத் தாழிட்டிருந்த முன்னறைக் கதவு தான் உட்புறமிருந்து இடிபட்டது.

திகைப்பூண்டை மிதித்தவள் போல் நான் பேச்சு மூச்சற்று நிற்கையிலேயே மூர்த்தி, “என்ன சுசீ? ராமநாதன் ஆபீசுக்குப் போய்விட்டார் என்றாயே? உள்ளே யார்? அவரை வைத்தா தாழிட்டாய்” என்று கேட்ட வண்ணம் கதவைத் திறந்தான்.

கூர்மையான பார்வையை என் மீது பதித்த கனிந்த விழிகளுடன் என் கணவர் தாம் அறை வாயிற்படியிலே நின்றார்.

என்னுள்ளே ஒரு பிரளயம் வந்துவிட்டது போல் இருந்தது.

அவர் எல்லாவற்றையும் கேட்டிருப்பார்! கேட்டிருக்கட்டுமே? ஒரு நாள் இல்லாது போனால் ஒரு நாள் துயர் தாங்காமல் நான் உடைத்தெறிந்துவிடக் காத்திருந்தேனே, தானாகவே இன்று சந்தர்ப்பம் வந்து விட்டது!

நான் என்ன முயன்றாலும், அவர் மீது கனலை வளர்த்துக் கொள்ள அவருடைய அநீதிகளை எவ்வளவுதான் துணை தேடினாலும், அவரை நேருக்கு நேர் காணும் போது ஏனோ குற்றவாளி போல நான் தலை குனிகிறேன்? தைரியமாக நேருக்கு நேர் உதாசீனம் செய்ய என் உள்ளம் மறுப்பானேன்? பழக்க தோஷமா? அல்லது கணவன் என்று வேரூன்றிய எண்ணத்திலே எழும்பிய அர்த்தமற்ற மதிப்பா? அல்லது நான் அவர் மீது கொண்ட அன்பு பிரமை என்று எண்ணுவதும் பிரமை தானோ?

“தூங்கினீர்களா என்ன? நீங்கள் ஆபீசுக்குப் போய்விட்டீர்கள் என்று சுசீ கதவைச் சாத்தித் தாழ் இட்டுவிட்டாள்!” என்று மூர்த்தி கலகலவென ஒலிக்க நகைத்தான்.

புது நடுக்கம் ஒன்று என்னுள்ளே புகுந்து கொண்டு அவர் முன் என்னை அசல் குற்றவாளியாக ஆக்கியது. அவர் வீட்டில் இல்லாததை நான் வரவேற்பது போலும், வரதனை நான் எதிர்பார்த்திருப்பது போலும், என் செய்கை ஒருவேளை அவருக்குக் கற்பித்திருக்குமோ? சே! என்ன அசிரத்தை எனக்குத்தான்! கதவைத் திறந்து பார்த்துவிட்டுத் தாழிட மாட்டேனா?

ஏன் அவர் தாம் ஆகட்டும், வரதன் வந்து அத்தனை நேரம் முறை தவறிப் பேசியிருக்கிறான்! மூர்த்தி வந்து வேறு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. குரல் கேட்டவுடனேயே கதவை இடிக்க மாட்டாரா? என்னைச் சோதிக்கத் திட்டமிட்டது போல் பேசாமல் மூச்சுக் காட்டாமல் இருந்திருக்கிறாரே!

“எல்லாம் நன்மைக்கே என்ற அறிவுரை எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. நான் ஆபீசுக்குப் போய்விட்டேன் என்று சுசீ நினைத்ததும் நல்லதாகவே ஆகிவிட்டது. போவதாகவே இருந்தது. உள்ளே இருந்து துணி துவைக்கும் சத்தமும், மாவரைக்கும் சத்தமும் காதிலே விழுந்து தூங்க இடைஞ்சல் விளைவிக்கிறதென்று கதவைச் சாத்திக் கொண்டு படுத்தேன். அப்படியே தூங்கியிருக்கிறேன். சுசீலா தாழிடுவது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. வரதனின் பேச்சுக் குரலில் விழித்துக் கொண்டு விட்ட நான், ஜன்னல் வழியே, நீ உள்ளே செல்லுவதையும் கவனிக்க நேர்ந்து விட்டது” என்று நிறுத்திய அவர் என் அருகில் வந்து அமர்ந்து என்னை நோக்கிப் புன்னகை பூத்தார்.

பொங்கி வந்த அவமானத்தால் எழும்பிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு நான், “அதுதான் வேண்டுமென்று வெளியே என்ன பேசுகிறார்கள் என்று கேட்க உளவறியும் நாடகம் ஆடினீர்களாக்கும்! என் மனத்தை முறித்து இத்தனை கோலத்திற்குக் கொணர்ந்தது போதாது என்று இந்த விதத்திலும், ‘இவள் என்ன செய்கிறாள் பார்க்கலாம்’ என்று தானே நெஞ்சழுத்தத்துடன் உட்கார்ந்திருந்தீர்கள்?” என்று கேட்டதும் குபீரென அழுகை வெடித்துக் கொண்டு வந்தது எனக்கு. நான் சற்றும் எதிர்பாராத விதமாக அவருடைய கரம் என் முகத்தை மூடியிருந்த கைகளை அகற்றியது.

“நான் செய்த எத்தனையோ தவறுகளுடன் அறிந்து செய்த இந்தத் தப்பையும் மன்னித்துக் கொண்டு விடு சுசீ! நான் அப்படி உடனே கதவைத் திறந்து கொண்டு வந்திருந்தால் இவ்வளவு தெளிவாக எது வைரம், எது கண்ணாடிக் கல் என்று புரிந்திருக்காது. வரதன் குரல் மட்டும் கேட்டு மூர்த்தியின் குரல் கேட்காமலிருக்கவே, அவனும் என்னைப் போல வெளியே நிற்கிறான் என்று அறிந்து கொண்டு முதலில் பேசாமல் இருந்தேன். என் துடிக்கும் ஆவலைத் தடைக்கட்டிக் கொண்டு நான் மறைந்திருந்ததற்கு, உங்கள் தூய உள்ளம் எனக்கு வெளிப்பட ஏதுவாக இருந்த சம்பாஷணையை நான் முழுவதும் கேட்க விரும்பியதுதான் காரணம் சுசீலா. என்னைக் காணும் போதெல்லாம், ‘நீ ஒரு சுத்த மடையன்’ என்ற அடைமொழி இல்லாமல் வரதன் பேச மாட்டான். நான் மடையன் தான். சந்தர்ப்பக் கோளாறுகளால் நிகழ்ந்த சம்பவங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஆதாரம் இல்லாத பிரமை ஒன்றில் மூடிப் போய் என்னையும் வருத்திக் கொண்டு உன்னையும் குலைத்தேன்!” என்றார்.

என் உள்ளம் புல்லரித்தது.

‘நிஜந்தானா நடப்பது?’ என்ற பிரமிப்பிலே அசைவற்றுச் சிலையானேன்.

மறுபுறம் மூர்த்தியிடம் திரும்பினார்.

“என் பிரமைத் திரையை நீ அகற்றியவன் மட்டுமல்ல மூர்த்தி! எனக்குச் சரியான புத்தி புகட்டி விட்டாய். உள்ளன்பு பரிணமிக்கும் போது பிறருடைய வம்புகளில் மிதக்கும் செய்திகளில் நம்பிக்கைக் குறைவுக்கு இடம் கொடுக்காத உயர்ந்த மனம் படைத்த உன் முன் உண்மையைக் கூறவே எனக்குக் கூசுகிறது” என்று புதிர் போட்டார்.

“என்ன சுசீலா இது? அவர் மீது நீ அத்தனை குற்றம் சாட்டினாய்? அவரானால் ஏதேதோ பேசுகிறார்? அவர் உன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்றாய். நீயுந்தான் அவரைப் புரிந்து கொண்டிருக்கவில்லை! எல்லாம் கிடக்க, என்னை ஏதேதோ முகஸ்துதி செய்கிறார். எனக்கு ஒன்றுமே விளங்காமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கிறதே?” என்றான் மூர்த்தி.

“உம். நினைத்தால் எனக்கே ஒரு புறம் சிரிப்புத்தான் வருகிறது! உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டு, மாபெரும் தியாகம் செய்வதாக எண்ணிக் கொண்டு, ஒவ்வொரு விநாடியும் உள்ளப் போராட்டத்திலே சுழன்று வீணே கஷ்டப்பட்டேனே?” என்று கூறிய அவர் உள்ளே சென்றார்.

அலமாரியிலுள்ள டிராயரைத் திறந்து மூன்று குறிப்புப் புத்தகங்களைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். “இதிலே சிவப்புக் கோடிட்டிருக்கும் தேதிகளைப் படித்துப் பார், சுசீலா!” என்றார்.

“நீங்கள் மூவரும் சேர்ந்து என்னை முழு முட்டாளாக்கி விட்டீர்கள். லீலா இத்தனை அழுத்தல் ஆசாமியாக இருப்பாள் என்று நான் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. நேற்றிரவு கூட சுசீ, நான் மூர்த்திக்கு ஹேமாவை மணந்து கொள்ள இஷ்டமில்லை போல் இருக்கிறது என்று கூறிய போது, நீ மறைத்துதானே வைத்தாய்? நீயும் லீலாவும் கூடிக் கூடிப் பேசும் போது என்ன தான் ரகசியம் இருக்குமோ என்று ஆச்சரியப்படுவேன். எனக்கு மறைத்து வைத்துதான் இத்தனை விபரீதங்கள் நிகழ்ந்ததற்கே காரணம்!” என்று கூறிய அவரைக் குறுக்கிட்டு நான், “ஆமாம், நான் அதைச் சொல்லலாம் என்று தான், லீலாவுக்கு வரதனை விவாகம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமலிருக்கலாம் என்று கோடி காட்டினேன்! நீங்கள் சிரத்தை காட்டாததால் நான் வேறு விதமாக எடுத்துக் கொண்டேன்” என்றேன்.

நாங்கள் பேசிக் கொள்ளும் அழகைப் பார்த்தோ என்னவோ, மூர்த்தி அடக்க முடியாமல் சிரித்தான்.

“நீ சிரிப்பாய் அப்பா! உனக்கு நகைப்பாய்த்தான் இருக்கும் இப்போது. சுசீ நான் வருவதற்குள் நீ அந்தக் குறிப்புகளைப் படித்து விடு. நான் இவனை இழுத்துக் கொண்டு கொஞ்சம், தபாலாபீஸ் வரை போய் வருகிறேன்” என்று சட்டையை மாட்டிக் கொண்டு அவர் கிளம்பினார்.

மூர்த்திக்கு என்ன தெளிந்ததோ என்னவோ, மறுவார்த்தை கூறாமல் அவரைப் பின் தொடர்ந்தான்.

என் கைகள் நடுங்க, என்ன என்னவோ எண்ணங்கள் மனத்தைப் படபடக்க, நான் டயரியைப் பிரித்துப் புரட்டினேன்.

ஸெப்டம்பர் 4 : என்னால் நம்ப முடியவில்லை. என் சுசீலாவா இத்தனைக் கண்டிப்பாக என்னை நிராகரித்தாள்? என் இருதய அந்தரங்கத்திலே வீற்றிருக்கும் என் சுசீலாவா என்னை வெருட்சியுடன் பிடித்துத் தள்ளினாள்? உலகமே அந்த நிமிஷத்தில் என் கண்முன் பஸ்மீகரமாகப் போய்விட்டது போல் இருந்தது. ‘போங்கள்!’ என்று அவள் படாரென்று கதவைத் தாழிட்டது என்னைப் புகவிடாமல் அவள் மனக் கதவைத் தாழிட்டு நிராகரிப்பது போலல்லவா இருந்தது? ஏமாற்றமும் அதிர்ச்சியும் என்னால் தாளத்தான் முடியவில்லை.

‘என்னைத் தொடாதீர்கள்! போங்கள்!’ என்ற இரண்டு சொற்களும் என்னை ஒவ்வொரு கணமும் மனத்திலே நெருப்புப் பொறிகள் போல வேதனை செய்கின்றன. அவள் ஏன் அப்படிச் சொன்னாள்? அவள் நடத்தைக்குக் காரணந்தான் என்ன? சந்தர்ப்பங்கள் குறுக்கே புகுந்து தடையிட்டதனால் அதிகரித்துத் துடிக்கும் ஆவலுடன் முதல் முதலாக நெருங்கும் கணவனை – அன்பு கொண்டவனை – ஒரு மங்கை இத்தகைய அதிர்ச்சியுடன் வரவேற்க வேண்டுமானால்…? புரியவில்லை. மனம் குழம்பிக் கொந்தளிக்கிறது. ஆயினும் நான் எப்படியோ அடக்கிக் கொள்ள வேண்டும்.

ஸெப்டம்பர் 13 : அவள் நடத்தையின் காரணம் இன்று எனக்குப் புலனாகிவிட்டது. ஆம். அவள் என் சுசீலா அல்ல! என் வாழ்விலே நான் மகத்தான தவறுதல் செய்துவிட்டதை உணர்ந்து விட்டேன். என் மேஜையின் மேலே இருந்த அந்தப் புத்தகம் – உயிரோவியம் – வேண்டுமென்றே நான் படிக்க வேண்டும் என்று தான் – சுசீலா வைத்திருக்க வேண்டும். அலைபாயும் மனத்தைச் சமாதானம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் தான் நான் அதைப் படிக்க ஆரம்பித்தேனே ஒழிய, என் கண்ணைத் திறந்து, பெரியதோர் உண்மையைப் புலப்படுத்திவிடும் என்று நான் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. நான் அதைப் படிப்பதைப் பார்த்து விட்டு, சுசீலா மறுநாள் என்னிடம் அந்தப் புத்தகம் எங்கே என்று கேட்டாள். நான் அதை அவளிடம் கொடுத்து விட்டேன். ஆனால் ஜீவா என்ற ஆசிரியர் எழுதிய அதில் வந்த விஷயங்கள்? பாடம் கற்பிக்க வந்த ஆசிரியனை மாணவி காதலிக்கிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமலே அன்பு கொண்டு விட்டதை, அறிந்தோ அறியாமலோ, தந்தை மகளை வரவேற்றான். ஒருவனுக்கு மணம் செய்து கொடுக்கிறான். மணம் நிகழ்ந்த தினம் மன அதிர்ச்சியால் மங்கை மூர்ச்சித்து விழுகிறாள். (சுசீலாவும் அன்று மூர்ச்சித்து விழுந்தாளே?) ஆசிரியன் மனம் குமுறி மணம் நிகழ்ந்த காதலியைத் தனியே சந்தித்து மனம் தளர விடுகிறான். ஆனால் அவள் தன் செம்மை மொழிகள் மூலம் அவனை உறுதிப்படுத்தி, தான் வேறொருவனுக்குச் சொந்தம் என நினைப்பூட்டுகிறாள். அவளுடைய உயர்ந்த பண்பிலே ஒளி பெற்ற காதலன் உறுதி கொண்டு திரும்புகிறான். இவர்கள் சந்திப்பை அறியாமல் கவனித்த கணவன் அவர்களுடைய உயர்ந்த காதலுக்கு வியந்து, மகத்தான தியாகம் செய்கிறான். தான் மணந்து கொண்ட கன்னியைச் சகோதரி போல நடத்த உறுதி கொள்கிறான்.

காதலர்களை விட அந்தக் கணவனின் தியாகமே என் மனத்தில் வெகுவாகப் பதிந்து விட்டது. சுசீலா என்னுடையவள் அல்ல! அதனாலேயே குறிப்பாக இந்தப் புத்தகத்துக் கணவன் போல நான் நடக்க வேண்டும் என உணர்த்தியிருக்கிறாள். அன்று புடவைகள் கொண்டு கொடுத்த மூர்த்தியைப் பற்றி மன்னி ஒருவிதமாகப் பேசினாள். ‘வாசல் வரை கொண்டு விட்டு வந்தாள் சுசீலா. எனக்குப் பிடிக்கவில்லை. உள் வரை வந்து பேசி விட்டுப் போக அவன் என்ன அண்ணனா, தம்பியா?’ என்று அவள் அப்போது கூறிய போது எனக்குக் கோபந்தான் வந்தது. ஆனால் அவன் ஊரிலிருந்து நேற்று வந்தான். சுசீலா அவன் தங்கை இறந்ததற்கு துக்கம் விசாரித்து விட்டு போகிறீர்களா? என்று வாயிற்படியில் வந்து கேட்ட போது விழிகளில் ஏக்கமும் சோகமும் தென்படுவானேன்? மன்னி கூறுவது போல் அவன் கிட்டிய உறவில்லை. என்றாலும் ‘சுசீலா, சுசீலா!’ என்று அவ்வளவு பாசத்துடன் பேசுவானேன்? ஆகா! அந்த முதல் இரவில் அவள் கண்களில் நீர்த்திரை இட்டதன் அர்த்தம்? மூர்த்தி புடவையுடன் முதல் தடவை வந்த அன்று நான் அவனைப் பற்றி விசாரித்த போது அவள் சுரத்தே இல்லாமல் பதிலளித்ததன் காரணம் என்ன? அன்றொரு நாள் ஊரை நினைத்து அவள் குலுங்கக் குலுங்க அழுததன் அர்த்தம் என்ன? எல்லாம் பளிச்சென்று புலனாகிறதே? ஆய்ந்து விசாரியாமல் நான் அவர்களுக்குத் தீங்கு இழைத்து விட்டேன். கதையில் வரும் கணவனாக நான் தியாகம் செய்தே ஆக வேண்டும். ஆனால் எத்தனை அடக்கினாலும் மனம் கட்டுக்கு அடங்காமல் அவளை நோக்கிப் பாய்கிறதே? நினைத்தாலே நெஞ்சம் வெடித்து விடும் போல இருக்கிறதே?

அடுத்த குறிப்புப் புத்தகம்:

ஏப்ரல் 18 : நானும் சமனப்படுத்த முடியாமல் தவிக்கும் என் நெஞ்சத் துடிப்பைத் தவிர்க்க, சுசீலாவுடன் என் பழக்கத்தையே குறைத்துக் கொண்டும் பார்க்கிறேன். அவளைக் காணாமல் இருந்தால் அமைதி நிலவுமே என்று இருந்த எண்ணம் முற்றும் தவறு என்னும்படியாக அவள் ஊரில் இருந்த இரண்டு மாதங்களும் நான் பட்ட பாடு! அப்பா! ஆனால் கண்முன் அவள் நடமாடுவது இன்னும் வேதனையை அதிகரிப்பது போல் இருக்கிறது இப்போது. எல்லோரும் பிருந்தாவனம் செல்லும் போது நான் அவள் வராமலிருப்பதை விரும்பினேன். ஆம், என் மனம் நிச்சயமாக நெகிழ்ந்து போயிருக்கும். நாங்கள் இல்லாத சமயம் மூர்த்தி வந்திருக்கிறான். அவளும் அவனும் ஏற்கனவே காதலில் பிணைபட்டவர்கள் என்பதை எனக்கு நன்றாகத் தெரிவிக்கும் வகையில், இரவு நான் ஏதோ காரியமாகக் கீழே வந்த போது சுசீலாவின் பாட்டி, அவள் மூர்த்தியுடன் தனிமையில் வராந்தாவில் நின்று பேசியதற்குக் கடிந்து கொண்டாள். என் மனநிலையை என்னால் விவரிக்கவே இயலவில்லை.

ஏப்ரல் 19 : காலையிலே மூர்த்தி வந்தான். படபடப்பாக அவன் பேசியது, எங்கள் மனஸ்தாபத்தைத் தீர்த்து வைக்கும் முறையில் என்னை அவளை அழைத்துப் போகும்படி தூண்டியது, எல்லாம் நான் கொண்டிருந்த உறுதியைப் பலப்படுத்தும் வகையில் அமைந்து விட்டன. நீங்களும் வருகிறீர்களா?” என்று சுசீலா மூர்த்தியைக் களையிழந்தவளாகக் கேட்பானேன்? ஹேமாவையும் அவனையும் சேர்த்து நான் பரிகாசம் செய்த போது அவன் அப்படி வெறித்து நிற்பானேன்? அவன் நடத்தை எனக்கு, மனமுடைந்த அவளை உறுதிப்படுத்த முயலும் உத்தமக் காதலன் அவன் என்றே அறிவிக்கிறது. என்னையும் அவனையும் பிருந்தாவனத்தில் நிறுத்தி வைத்துப் படம் பிடித்தான் அவன். என் அருகில் குனிந்து நின்ற அவளை நான் ஒரே ஒரு முறை ஆவல் தாங்காதவனாகத் திரும்பிப் பார்த்தேன். மனவேதனை பிரதிபலித்த அவள் முகம் என்னைப் பிளந்து விடும் போல் இருந்தது. நான் தனிமையில் சென்று மனத்தை அமைதி செய்து கொள்ளாது போனால், என் இனமறியாத உணர்ச்சிகளுக்கு நிச்சயம் அடிமையாகியிருப்பேன். அவன் அவளிடம் மன வேதனையைக் கிளர்த்திக் கொண்டிருக்கிறான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. திரும்பி வரும் போது அவன் வலுவிலே காட்டிய உற்சாகம் குன்றிக் களையிழந்தவனாக ஆகிவிட்டான். வரதனுடைய வளவளப்பிலும் நான் அவனைக் கவனியாமல் இருக்க முடியவில்லையே? சுசீலாவுக்குத்தான் இன்னும் எந்த விதத்தில் நான் ஆறுதலளிப்பேன்? என்னுடைய மனத்தை எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்வேன்?

ஏப்ரல் 21 : நான் என் உறுதியை நிலைநாட்டிக் கொள்ள அவளிடமிருந்து அதிகப் பேச்சு வார்த்தைகளைக் கூடக் கத்தரித்துக் கொள்ளும் முயற்சிக்கு இந்த வரதன் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறான். அவன் என்ன கண்டான்? சுசீலாவிடம் வர வர அளவுக்கு மீறி மன்னி அதிகாரம் செலுத்துவதை என்னால் பொறுக்க முடியவில்லை. அவள் தான் எத்தனை பொறுமையும் சகிப்புத் தன்மையும் வாய்ந்தவள்? உள்ளத்தில் ஒருவனைக் கொண்டு, வேற்று ஒருவனுக்காக, வேற்று வீட்டில், வேற்று மக்களுக்காக ஓடி ஓடி வேலை செய்யும் அவள் பொறுமை இன்னும் என்னைப் பித்தனாக்குகிறது. மன்னி கடிந்து கொண்டவுடன் அவளுக்கு எத்தனையோ விதத்தில் ஆறுதல் கூற நான் துடிதுடித்தேன். ஆனால் அநுதாபம் என்று இளகிவிட்டால், ‘தொடாதே’ என்ற அவளுடைய ஆணையை மீறி இன்னும் நான் அவளுக்குத் தீங்கிழைத்து விட்டால்? இரவு அவள் கண்ணீருக்கு முன் நான் கரைந்து போய் விட்டேன். ‘அறியாமல் நான் தவறு இழைத்து விட்டேன். மன்னித்து விடு’ என்று மனம் விட்டுக் கேட்ட பின் அவள் சற்று ஆறுதலடைந்தவள் போல் எனக்குத் தோன்றியது.

ஜூன் 22: அவளைப் பார்த்துக் கொண்டு பாயும் மனத்தைச் சமாதானம் செய்து கொள்வது சிரமமாக இருக்கிறதென்று அப்போது தோன்றுகிறது. ஆனால் கண் முன் காணாத சமயங்களிலோ, கண்டாவது தேறுதல் கொள்ளலாம் போல மனம் துடிக்கிறது. அப்படி நினைத்துத்தான் பித்தனைப் போலக் கோவைக்கு வந்தவன் உதகை புறப்பட்டு வந்தேன். வரதன் வந்ததும் வராததுமாக அவளுடைய சங்கோச மனப்பான்மையைக் குறித்து நான் தெளிய வைக்காததற்காகக் குற்றம் கூறினான். ஒவ்வொரு சிறிய சம்பவமும் எனக்கு, மூர்த்தியும் அவளும் காதலர்கள் என்பதையும் நான் தவறிழைத்தேன் என்பதையும் அறிவுறுத்தும் மாதிரியிலா அமைய வேண்டும்? மூர்த்தியுடன் சங்கோசமின்றிப் பழகும் அவள், இயற்கையாகவே லீலாவைப் போல அந்தச் சுபாவம் படைத்திருந்தால் வரதன் ஏன் இந்தக் குற்றம் சாட்டுகிறான்? மூர்த்தி மேல்நாடு செல்லப் போகிறான் என்று நான் அறிவித்ததும் அவள் முக மலர்ச்சியை முகம் எப்படிக் காட்டியது!

அக்டோபர் 3 : பாவம்! மன நோயைத் தவிர்க்க அவள் தான் கற்றிருக்கும் கலையை விருத்தி செய்து கொள்வதில் ஈடுபட்டிருக்கிறாள். விடியற் காலையிலே என் அருகில் அமர்ந்து அவள் தன் இனிய குரலில் கானம் செய்யும் போது நான் ஒவ்வொரு நாள் மனவெழுச்சியை அடக்கிக் கொள்ள இயலாமல் எழுந்து எங்காவது போய்விடலாமா என்று கூட எண்ணி விடுகிறேன். ஏற்கனவே நொந்த அவள் இருதயத்தை மன்னி கோலிடும் பாவனையில் புண்படுத்தினாள். வீட்டிலே விவரிக்க இயலாத சகிப்புத் தன்மையுடன் நடமாடும் அவள் மீது மன்னிக்கு ஏனோ இத்தனை எரிச்சல்? நானும் அவர்களுடைய கோள்களுக்குச் செவி சாய்த்துப் பொறுமை இழந்து விட்டேன். இனி, தனியாகப் போக வேண்டியதுதான்.

கடைசிக் குறிப்புப் புத்தகம்.

ஏப்ரல் 30 : தனியாக வந்து நாட்கள் ஓடிவிட்டன. ஆயினும் பழக்கத்தில் சாந்தி அடையாமல் இன்னமும் அதிகரித்துக் கொண்டே அல்லவா போகிறது என் கொந்தளிப்பு? மூர்த்தி திரும்பி வரப் போகிறான் என்ற நினைப்பில் அவளுக்கு எத்தனை மகிழ்ச்சி? அவளும் சந்தோஷமடைய வெளி உலகிலே தன் கலையுதவி கொண்டு கலந்து பார்த்தாள். பத்திரிகைகளின் விமரிசனங்களிலிருந்து புகழுங்கூட அவளுக்குக் கிட்டியிருப்பதை நான் காண்கிறேன். இத்தனையிலும் இயற்கையாகச் சந்தோஷம் காணாத பேதையாக இருந்தவள், மூர்த்தி வருவான் என்று அறிந்ததும் மகிழ்வுடன் அலங்கார வேலைகளில் கூடச் சிரத்தை கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

மே 3 : அண்ணாவை விட்டு உத்தியோகத்தினின்றும் விலகி விட்டதைக் கூட சுசீலாவிடம் நான் தெரிவிக்காததைக் குறித்து இன்று லீலா என்னை வெகுவாகக் கடிந்தாள். குடும்பத்திலிருந்து பிரிந்த பின் உத்தியோகப் பிடிப்பினின்றும் சிக்கலறுத்துக் கொண்டால் நலம் என்று பட்டது. வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்ட பின் அதை இழக்காமல் உபயோகித்துக் கொண்டேன். அவளிடம் நெருங்கிப் பேசவே அச்சமுற்ற நான் அசிரத்தையாக இருந்து விட்டதை லீலாவிடம் தெரிவிக்க முடியுமா?

இதற்கு மேல் டயரியில் குறிப்பு எதுவுமே எழுதியிருக்கவில்லை. படிக்கப் படிக்க அனலிட்டுக் காய்ச்சப்படும் மெழுகைப் போல என் உள்ளம் கண்ணீராக உருகியது.

கடினமான ஓட்டை கொண்ட தேங்காயில் இனிய பருப்பும் நன்னீரும் உண்டு என்றறியாது வீசி எறியும் பேதையைப் போல் அவருடைய உவமை கூற இயலாத உள்ளத்தைக் கல் நெஞ்சம் என்று இகழ்ந்தேனே? நான் என் வெறுப்பை அவரிடம் எத்தனையோ முறை காட்டிக் கொண்டேன். எரிந்து விழுந்தேன். தாமாகவே நேர்ந்தவைகளை அவராக வேண்டுமென்று செய்தார் என்று அவரை புண்படுத்தும் முறையிலே அலட்சியம் செய்தேன். அப்பா இறந்து போனபோது வந்திருந்தாரே, அப்போதுதானே நான் அவரை வெகுண்டு, கடிந்து உதாசீனம் செய்தது? அவருடைய மாறுதல் எனக்குக் கற்பித்த பொய்யைப் போன்று, என்னுடைய கண நேரக் குழப்பமும், முட்டாள் நம்பிக்கையின் மூலம் வளர்ந்த ஆத்திரமும் அவர் மனத்திலே எத்தகைய பிரமையை நெய்ய இழையிட்டு விட்டன.

புத்தகம்? எனக்கு அது ஏது, எது என்றே நினைவுக்கு வரவில்லை! லீலா எப்போதாவது, “இது நன்றாக இருக்கிறது சுசீ, உனக்குப் படிக்க என்று கொண்டு வந்தேன்’ என்பாள். படிக்க எங்கே பொழுது இருந்தது? இரண்டு நாட்கள் வைத்திருந்து விட்டோ, பாதி படித்து விட்டோ கொடுத்து விடுவேன். அதுவும் அவர் பிரஸ்தாபித்து இருக்கும் புத்தகம் நான் எப்போதோ படித்ததாகக் கூட நினைவில்லை!

பெரிய பெரிய முத்தர்களாலும் சித்தர்களாலும் கூட மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவர் காதலுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையிலே எத்தனை உறுதியைக் கைக் கொண்டும் சலனமற்றிருப்பது போலக் காட்டிக் கொண்டிருக்கிறார்? வரதனுடைய அலங்காரச் சொல்லிலே தளர்ச்சி கண்ட நான் அவருடைய மாசற்ற காதல் இருதயத்துக்கு உகந்தவள் தானா? அவர் காலடியில் வீழ்ந்து அவருடைய பாதங்களைக் கண்ணீரால் கழுவினால் கூட நான் மனத்தில் அவரைத் தவறாக நினைத்து இகழ்ந்ததற்குப் பிராயச் சித்தம் ஆகுமா?

செருப்பு ஒலி கேட்டது.

நான் எப்படி அவர் முகத்தில் விழிப்பேன்? குறிப்புப் புத்தகமும் கையுமாகச் சிலையாக அயர்ந்திருந்த நான் நிமிர்ந்து பார்க்கவே கூசிக் குறுகினேன்.

“சுசீ!” என்ற அந்த அன்புக் குரல். பழைய அன்புக் குரல், என் செவிகளில் அமுதத்தை வார்த்தது.

அவர் கரம் என் முகத்தை நிமிர்த்தியது.

“என்னை மன்…னி…ப்…பீர்களா…?”

வார்த்தைகள் தொண்டையில் நிரடின. என் வசமிழந்த நான் அவரது மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குழந்தை போல் தேம்பினேன்.

“சுசீ, தவறு என்னுடையது. நடந்ததைக் கனவென்று மறந்து விடுவோம். அழாதே. பெண்ணுள்ளத்தை நான் புரிந்து கொள்ள ஏதேதோ ரீதியில் சென்று பலத்த துணைகள் கொண்டு ஆராய்ந்ததன் பலன் இது. பட்டுப் புழுவின் கூட்டைப் பார்த்திருக்கிறாயா சுசீ? பட்டு நூல் அதிலே மிக நுண்ணியதாகச் சுற்றப்பட்டிருக்கும். நுனியை மட்டும் ஜாக்கிரதையாக எடுத்து கவனமாகப் பிரித்தால் சுலபமாகப் பிரிந்து விடும். பிரிப்பது மிகவும் கஷ்டம் என்று பார்வையிலேயே தளர்ந்து அளவுக்கு மீறிய சக்தியைப் பிரயோகித்தால் நூல் சிக்குண்டு அறுந்தும் போகும். இந்த வழியிலே நான் சென்று உன்னை எவ்வளவு கொடிய வேதனைக் குள்ளாக்கி விட்டேன் என்பது இப்போதுதான் புலப்படுகிறது. வரதனின் முறை தவறிய நடத்தைக்கும் நானே தான் காரணம். இனி நானும் உன் கலை வளர்ச்சியில் ஒத்துழைக்கிறேனா இல்லையா, பாரேன்?”

நான் சட்டென நிமிர்ந்தேன். “நான் இசை நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இயலாது என்று தெரிவித்து விடப் போகிறேன். மூர்த்தியைப் போலத் தூய மனம் படைத்தவர்களாகவே வெளி உலகிலே தலை நீட்டும் பெண்களை எல்லாரும் மதித்து விடுவதில்லையே? இந்த அபாயம் தெரிந்த பின்னும் நான் உணராமல் நடப்பது ஆபத்து!” என்று கூறிய நான் அவருடன் மூர்த்தி வரவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன்.

“மூர்த்தி எங்கே? அப்படியே போய்விட்டானா என்ன?”

“வழியில் யாரோ நண்பன் அகப்பட்டான். இருவருமாகப் பேச்சில் இறங்கினார்கள். நான் வந்து விட்டேன். நீ அப்படிப் பின் வாங்கி விடக் கூடாது சுசீலா! கலை வளர்ச்சி, ஆண், பெண் இருவரும் ஒத்துழைக்க வேண்டிய துறை. வரதன் இனியும் அம்மாதிரி நடக்க நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? நீ தான் அவனுக்கு வேண்டியபடி கடும் சொற்களால் வெருட்டி அடித்தாயே? இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்துவிட்டு, விட்டு விடுவது கோழைத்தனம்.”

விலை மதிப்பற்ற முத்துச் சிப்பியைக் கிளிஞ்சல் என எண்ணி அவமதித்தேனே? நான் எத்தனை தரம் நொந்து கொண்டாலும் சமாதானமாகுமா?

“லீலாவுக்குத் தந்தி கொடுக்கலாம் என்று எண்ணித்தான் அவனையும் அழைத்துப் போனேன். பேசிக் கொண்டே சென்றதில் விலாசம் கொண்டு போக மறந்தது தெரியவில்லை. உனக்குத்தானே கடிதம் எழுதியிருந்தாள்? எங்கே அது? மூர்த்தி ஆயிரத்தில் ஒருவன், சுசீ! வரதனை நான் எவ்வளவோ உயர்வாக மதித்திருந்தேன். ஆனால் கிட்ட நெருங்கிப் பார்த்தால் தான் வைரத்தின் ஜாஜ்வல்யமும் போலிக் கல்லின் தன்மையும் தெரியவரும்.”

அவர் கூறிக் கொண்டே இருக்கையிலே, “அதற்குள் வந்துவிட்டாரா என்ன? தெருவிலே என்னை நிற்க வைத்து விட்டுக் குடுகுடுவென்று வந்து விட்டார் சுசீலா! நான் என்ன சொன்னேன்?” என்று கேட்டவாறு மூர்த்தி வந்து விட்டான்.

“நீ பேசிக் கொண்டிருக்கையிலே நான் லீலாவின் விலாசத்தைக் கேட்டு வாங்கி வரலாம் என்று தான் ஓடி வந்தேன்!” என்று அவனைப் பார்த்து முறுவலித்தார் என் கணவர்.

“சுசீலா, பெண்மையை அவர் போற்றவில்லை, காதலுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்று நீ குற்றம் சாட்டினாய். அவர் எல்லாவற்றிலும் ஒரு படி மிஞ்சி விட்டார்! தபாலாபிஸுக்கு என்று எதற்காக அழைக்கிறாரோ என்று போனவனை எங்கெல்லாமோ சுற்ற வைத்து அவர் உன்னைப் புரிந்து கொண்ட லட்சணத்தைச் சொல்ல ஆரம்பித்ததிலிருந்து எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது. லீலாவின் விலாசம் இதோ என்னிடம் இருக்கிறது! என்னிடம் கேட்காமல் அதற்காக சுசீயிடம் ஓடி வந்தீர்களாக்கும்?” என்று சட்டைப் பையிலிருந்து நான் கொடுத்த அவள் கடிதத்தை எடுத்துக் காட்டிய மூர்த்தி, “நீங்கள் ஞாயிற்றுக்கிழமையும் தானுமாக இன்று தந்தி கொடுக்கவா கூப்பிட்டீர்கள்? கோபித்துக் கொண்டு காசி யாத்திரை சென்றிருக்கும் பெண்ணைப் புது நாளைய மாப்பிள்ளையாக லட்சணமாக நானே அடுத்த வாரம் போய் அழைத்து வரப் போகிறேன்!”

நாங்கள் இருவரும் அவனுடன் சேர்ந்து மனம் விட்டு நகைத்தது, அறையிலே கலகலவென ஒலித்தது.

முடிவுரை

இசையுலகில் சுடர்விடும் நட்சத்திரமாக ஒளிரும் ஸ்ரீமதி சுசீலா ராமநாதன் ஏற்கனவே எனக்குப் பழக்கமானவள் என்பதை எப்படியோ அறிந்திருந்த பெண்கள் சங்கக் காரியதரிசி, அவள் கோடைக்காக உதகைக்கு வந்திருக்கிறாள் என்று அறிந்ததிலிருந்து சங்கத்தின் கட்டிட நிதிக்காக உதவும் ஓர் சங்கீதக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யக் கோரி என்னைத் தொந்தரவு செய்தாள். எனவே நான் சுசீலாவைத் தேடிப் போனேன். நான் எங்கள் சங்கத்தைப் பற்றி அவளிடம் பேச்சை ஆரம்பித்ததுதான் தாமதம் – கோபம் அவளுக்கு அசாத்தியமாக வந்து விட்டது. “ஓகோ! பெண்கள் முன்னேற்றத்துக்காகக் கைப்பையைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக ஏறி இறங்கி உதவிக் கச்சேரிக்கு டிக்கெட் விற்பனை செய்து உழைக்கும் பெண்கள் திலகங்களில் நீயும் ஒருத்தியா?” என்று எடுத்த எடுப்பில் அவள் கேட்டதும் நான் அயர்ந்து போய் விட்டேன்.

அவள் அத்துடன் விடவில்லை.

“ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஏற்றத் தாழ்வு மனப்பான்மைகளைக் களைந்து ஒற்றுமையுடன் குடும்பப் படகை வலித்துச் செல்வது தான் பெண்கள் முன்னேற்றத்தில் முதல் முக்கியமான அம்சம் என்று தெரியுமா உங்களுக்கு? வெளி உலகில் வந்து ஆண்களுடன் சரிசமமாகப் போட்டியிடும் நீங்கள், அப்படிப் பழகும் போது ஏற்படும் சுழல் போன்ற அபாயங்களிலே அகப்படாமல், பெண்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் துறைகளிலே முன்னேற வழி சொல்வீர்களா?” என்றெல்லாம் ஆவேசமாக அடுக்கிக் கொண்டு போனவள், விடுவிடென்று உள்ளே சென்று, ஒரு காகிதக் கற்றையைக் கொண்டு வந்து என் முன் போட்டாள்.

“இதைப் படித்துப் பார்! பொய்யும் புனை சுருட்டுமாக நீயும் எழுதுகிறாயே? இந்தக் கதையைப் படித்துவிட்டு எப்படி இருக்கிறதென்று சொல்!” என்றாள்.

அந்தக் கதைதான் பெண் குரல்.

ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு நான் மறுநாளே சுசீலாவைத் தேடிப் போனேன். என்னைக் கண்டதுமே வேலைக்காரன் ஒரு கடித உறையை நீட்டி, “அம்மாவும் ஐயாவும் காலமே மைசூர் புறப்பட்டுப் போனாங்க. உங்களிடம் இந்தக் கடிதாசைக் கொடுக்கச் சொன்னாங்க” என்றான்.

நான் பரபரப்பாக உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுக்கப் போனேன். ஒரு திருமண அழைப்பிதழ் கீழே விழுந்தது. அழைப்பிதழின் முகப்பிலே, சௌ. ஹேமா – சிரஞ்சீவி வரதராஜன் என்ற ஆங்கில எழுத்துக்கள் மின்னின.

வியப்புடன் கடிதத்தைப் பிரித்தேன்.

“கல்யாணத்துக்குத்தான் புறப்பட்டுப் போகிறோம். நாளது ஜூன் 10ந் தேதி மணமக்கள் இங்கு வருகிறார்கள். வரவேற்பு வைபவத்துக்கு அவசியம் வந்து சேர். பெண் குரலில் நீ சந்தித்த, மூர்த்தி, லீலா மற்றும் எல்லோரையுமே அநேகமாக நீ நேர் அறிமுகம் செய்து கொள்ள முடிவதுமின்றி, பிரபல் டென்னிஸ் நட்சத்திரமான ஹேமாவும் வரதனும் காதல் மணம் புரிந்து கொள்வதற்குக் காரணமான விவரங்களையும் அறிய முடியும். அதற்குக் கண், காது, மூக்கு வைத்தாயானால் ஒரு கதையாகுமே உனக்கு” என்று சுசீலா எழுதியிருந்தாள். நான் உள்ளூற நகைப்பும் மகிழ்ச்சியுமாக வீடு திரும்பினேன்.

(பெண் குரல் முற்றும்)

– நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது – 1953.

– பெண் குரல், முதல் பதிப்பு: 2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *