பூபாளராகம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 8,123 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புளரிக்காலத்து மென் இருட்டைக் கிழித்துக்கொண்டு இங்கே வெண்பனி கொட்டிக்கொண்டிருக்கிறது. அடித்து விட்ட பஞ்சு போன்று குட்டி மேகங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நீந்திக் கொண்டிருக்கின்றன.

‘மழை இல்லை’ இப்படித்தான் அவன் கடிதத்தை முடித்திருந்தான். அவளுடைய பதில் நீண்டதாக இருந்தது.

‘குட்டி மேகங்கள் நீந்திக் கொண்டிருக்கின்றனவா…? ஹாய்… ஹாய்…. உங்கள் ஜன்னலின் கம்பியைப் பிடித்த படியே உற்றுக் கேளுங்கள். பூபாளராகம் கேட்கும்…. என்ன… பூபாளராகம் கேட்கின்றதா?

கடிதத்தை எத்தனை தடவைகள் படித்தானோ அவனுக்கே தெரியாது, இன்பக் கிளுகிளுப்பு……. உச்சி மலையிலிருந்து ஊற்றெடுத்துக் கட்டுகடங்காமல் கொட்டும் தேனருவியாக மனவோடையில் ஓடிக்கொண்டேயிருந்தது.

காதல் என்பது இத்தனை இதமான இன்பமா?சுகம் இனம் புரியாத சுகம்

ஓ! மதுர… நீ ஒரு எழுதாத கவிதை.

அந்தக் கவிதையை எழுதி முடிக்க முடியாமற் போன போதும் அவன் தன் பாதையைப் புரிந்து கொண்டமையினால் வேதனையுறவில்லை. விரக்தியடையவில்லை. அவளும் கூடத்தான்.

‘காதல் என்பது ரசமான ரம்மியமான வேதனைதானா?’ அவன் கேட்ட பொழுது அவள் தன்னுடைய பெரிய விழிகளால் நிதானமாக நோக்கி, ‘இல்லை. நீங்க உங்கள் சரியான பாதையில் பயணத்தைத் தொடருங்கள் என்று கூறினாளே. அப்பொழுது அவளது பார்வையில் ஜனித்த தீட்சணியம் வார்த்தையில் தெறித்த சத்தியத்தின் பொறி, தொலைவுமிக்க அவனுடைய பாதையில் நிதானத்துடன் நடக்க ஒளிவிளக்காக ஆனபோது அவன் உண்மையில் உறுதி பெற்றான்.

அவன் எப்பொழுதும் சுறுப்பாகத்தான் இருப்பான். இளமையிலே அவனிடம் படிந்துவிட்ட இயல்பது. சோம்பல் என்பது துளிகூட அவனிடத்தில் அணுகியது கிடையாது. வகுப்பில் முதல் மாணவன் விளையாட்டிலும் மகா கெட்டிக்காரன்.

ஆனால் தோல்வியை சகித்துக் கொள்ளவே மாட்டான். தொட்டதற்கெல்லாம் அடம் பிடிப்பான். தனக்காக நியாயங்களை வகுத்து அர்த்தங்களைக் கற்பித்து வாதாடத் தயங்க மாட்டான். அப்படி ஒரு பிடிவாதமுடைய அவனின் இயல்பே இது.

‘விக்கெட்’ ‘அம்போ’ என சாய்ந்தால் தான் ‘அவுட்’ என்று மனம் கப்பி வெளியேறுவான். அதில் கூட அவனுக்கு திருப்தியிராது.

ஜி.. சி. ஈ. பரீட்சை எழுதியவுடன் என்ன செய்வதென யோசிப்பதற்கு முன்பே அதிர்ஷ்டம் போல் வேலை அவனைத் தேடி வந்துவிட்டது.

பிறந்து வளர்ந்த ஊர் பழகிக் களித்த சூழ்நிலை…. விட்டுப் போவது என்னவோ மனதிற்கு வருத்தமாகத்தான் இருந்தது…… ஆனால் கொழும்புக்குப் போனவுடன் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன. தீபாவளி, ஊரில் தேர்த்திருவிழா இப்படி முக்கிய அழைப்புகளுக்குத் தட்ட முடியாமல் வருஷத்தில் இரண்டொரு தடவை வந்து போனான். மற்றப்படி அவனுடைய நினைவில் இருப்பவைகள் எல்லாம் ‘கால்பேஸ்’ கடற்கரையும், சினிமாத் தியேட்டர்களும், கொச்சிக்கடை பீஸ்ட் முதலான விழாக்கள் மட்டுமேதான்.

இரண்டு வருடங்கள் எப்படிக் கழிந்தன என்று தெரியவில்லை.

பரபரப்பும் ஆரவாரமும் மிக்க கொழும்புச் சூழ்நிலை அவனுடைய இயல்பிற்கு மேலும் வலுவூட்டின. விவேகமானவர்களினதும், வித்தியாசமானவர்களினதும் நட்பு பல துறைகளிலும் அவனை இறங்கச் செய்தது. இலக்கியக் கூட்டங்கள், பாராட்டு வைபவங்கள், பேனா நண்பர் தொடர்பு என்றெல்லாம் இன்பமாகக் காலம் ஓடியது.

இவ்வேளையில்தான் அவனுக்கு மதுராவின் தொடர்பு ஏற்பட்டது.

ஓ!… மதுரா…

அவளை… எங்கே… எப்படி முதலில் சந்தித்தான்? வானொலி நிலையத்திலா….? அல்லது பத்திரிகைக் காரியாலயத்திலா? எப்பொழுது முதலில் சந்தித்தான் என்று இப்பொழுது சரியாக நினைவில் இல்லை.

ஆனால், அந்தத் தொடர்பு பிணைப்பு மிகவும் சூட்சுமமானது. அதில் எவ்வித வெளி வேஷமோ, நடிப்போ கிடையாது. காதல் என்பது அவளைப் பொறுத்தவரை தெய்வீகமானதாகப்பட்டது. வெறும் பொழுது போக்கிற்காகவும் தேவைக்காகவும் பழகுபவர்களையும் சூட்சுமமாக கூறி துாற்றினாள்.

அவன் தன் தந்தையார் அகால மரணமடைந்த போது குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டியவனானான். இத்தனை காலமும் செல்லப்பிள்ளையாக இருந்துவிட்டு திடீரென குடும்பப் பொறுப்பை சுமந்து நிலை கலங்கிய போது, அவளின் அன்பு மட்டும் இல்லாதிருந்தால் பைத்தியக்காரனாயிருப்பான்.

துன்பம் தொடர்ந்த வேளையில் அவள் மீட்டிய இதய வீணையால் அவன் புதிய உற்சாகமும் தைரியமும் பெற்றான்.

அவள் செய்த உதவிகள் மறக்க முடியாதவை.

இவர்களுடைய காதல் அவள் வீட்டிற்குத் தெரியவந்த போது ஒரு பூகம்பமே வெடித்துச் சிதறியது.

எனினும் அவன் நிலை கலங்க வில்லை. நிதானத்துடனும் சிந்தனை தெளிவுடனும் நடந்து கொண்டான்.

அப்பாடா அவளுக்குத்தான் எத்தனை நெஞ்சுறுதி…….. இரை தேடும் வௌவால்களாக பருவகாலத்துக்கு மரங்களை நாடும் அவலங்களுக்கு மத்தியில் அவள் ஒரு… மூச்சு விட மறந்திடினும் முடிவுமாறாப் பெண் என்று அவள் தீர்க்கமாக எழுதி…… தந்த உறுதியில் அவன் பித்துப் பிடித்துப் போனான்.

இப்பொழுது அவனுக்குத் தேவையாக இருந்தது. புகழ்…. புகழ் அவள் முன் தான் ஒரு காவிய நாயகனாகத் திகழவேண்டுமென்று பம்பரமாகச் சுழன்றான். எங்கு கூட்டமோ அங்கு அவன் நின்றான். ஆராவாரம் பத்திரிகைச் செய்தி…. படப்பிடிப்பு…. ஆலாய்ப்பறந்தான்.

அந்த ஆரவாரங்களும், திடீர் எழுச்சிகளும், வெளிவேஷங்களும் அடங்கித் தணிந்தபோது….

நிதானமாக யோசித்தான்…… மாலைகள், ஊர்வலங்கள், கோஷங்கள், ஆளுங்கட்சி செல்வாக்கு…… யார்யாரோ அவனைப் பயன்படுத்தி பலனடைந்து போனார்கள். பலன் ஒன்றுமில்லை. வக்கரித்த சுயநலங்கள், பருவகால மரங்களை நாடும் வௌவால்கள் சிறகடித்த கோலத்தை உணர்ந்து தன்னுள்ளே புழுங்கி அவிந்து மனம் நொந்தான்.

குடும்பப் பொறுப்பு, பொருளாதார சுமை, மேலும் சிந்திக்க வைத்தன. அவன் புதியவனானான்.

மதுரா! நீயும் நானும் அலைகடலைத் தழுவி வீசும் தென்றலில் மிதந்தபடியே ‘ஐஸ்கிறீம்’ சுவைத்தது கால்பேஸ் கடற்கரையில்…. உலாவி….. எழுபது மில்லிமீட்டர் ஈஸ்ட்மன் கலர் திரைப்படத்தை, கைகளை இறுகப் பிணைத்தபடியே பார்த்து ரசித்து…… அல்லது……

பொங்கிவரும் மகாவலி புதுப்புனலை ரசித்தபடியே கொக்கோ தோட்டத்து நிழலில் நடந்து களித்து மாமாவை ஏமாற்றி தெமோதரைக்குப் போய் ஒரு வாரம் வைத்திய லீவில் தங்கிவிடுவதால்…

நிரந்தரமாக எல்லோரையும் ஏமாற்றிவிடலாமா? அல்லது பிரச்சினைகள் நிச்சயமாக தீர்த்துவிடுமா? வளர்ந்து வரும் நெருக்கடிகளுக்கு புடம் போடும் பிரச்சினைகள் தானே அவைகள்,

ஒரு தடவை பாணந்துறைக்குச் சென்று வரும்போது, அந்தத் தோழரின் நட்பு அவனுக்கு கிடைத்தது. அவர் பேச்சின் இறுதியில் தன்னை ‘என்ஜினியர்’ என்று அறிமுகம் செய்து கொண்ட போது உண்மையில் அவனால் நம்ப முடியாமல் இருந்தது.

எத்தனை எளிமை…. கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துக்கூறும் இயல்பு. அதே வேளையில் உள்ளத்தை உருக்கி ஈர்க்கும் ஆகர்சிப்பு… அவனை அடிக்கடி சந்தித்து கருத்துத் தெளிவு பெற்றான். தீர்க்கப்படாத பொருளாதார பிரச்சினைகளும், முரண்பாடுகளும் ஏற்படுத்தும் தாக்கங்களையும் விளைவுகளையும் புரிந்துகொண்டான். அந்த நல்ல கருத்துக்களையெல்லாம் செயற்படுத்தும் நாடி நரம்பானான்.

அவனுக்கு உலகின் உண்மை தெரிந்தது. சத்தியம் புரிந்தது. அவன் புதியவனானான். பொய்யானதும், பிழையானதுமான தன்னுடைய நடவடிக்கைகளையிட்டு தானே வருந்தினான்.

தனக்கே உரித்தானா பிரச்சினைகள், தனது சமூகத்துக்கே உரித்தான பிரச்சினைகள், மனித குலத்திற்கே உரித்தான பிரச்சினைகள் எல்லாம் அவனுக்கத் தெளிவாகப் புரிந்தது.

அந்த தோழர் என்ஜினியர் பட்டம் பெற்றவர். தான் மட்டும் வாழ நினைத்தால் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டு எப்படியெல்லாமோ வாழலாம். ஆனால் அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை?

உலகைப் புரிந்து கொண்டமையினாலா…? அல்லது தன் பாதை தெரிந்து நடக்கின்ற படியினாலா?

கஷ்டங்கள் தனக்கு மட்டுமா? பிரச்சினை தன்னுடைய குடும்பத்திற்கு மட்டுமா…? தன்னோடு வேலை செய்யும் சக தொழிலாளர்கள் படும் துயரங்கள்…?

பரப்புக் காணியை அடகு வைத்து பட்டம் பெற்று குடும்பத்தை கரையேற்றத் துடிக்கும் இளைஞர்கள்… குடியிருக்க வீடும், ஒரு வேளை உணவும்இல்லாது துயரப்படும் தொழிலாளர்கள், உழைத்துக் களைத்து ஆதரிப்பாரின்றி வாடி வதங்கும் முதியோர்கள்…

வேலை தேடி அலையும் ஆயிரமாயிரம் இளைஞர்கள் யுவதிகள்.

உழைக்காமலே உப்பரிகையில் வாழ்ந்து கொண்டு குறுகிய இன, மத, குரோதங்களை அப்பாவி மக்களிடையே பரப்பிவிட்டு சுயலாபமடையும் கும்பல்களின் போக்குகள்.

அவனுக்கு எல்லாமே தெளிவாகத் தெரிந்தது. அவன் செல்ல வேண்டிய பாதை தெளிவாகப் புரிந்தது…… அது மனித குலத்தின் விடிவிற்காக அவன் செல்லும் திவ்விய யாத்திரை.

அவனில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அவள் புரிந்து கொண்டபோது, அவள் தனக்காக துயரப்படவில்லை. மகிழ்ச்சியுற்றாள். ஏனெனில் அந்தப் பாதையின் முடிவில் ஒலிக்கும் பூபாளராகம்…… அவள் இசைப்பதே.

மாத்தளை வடிவேலன்

மலையகம் தந்த சிறுகதைப்படைப்பாளி மாத்தளை வடிவேலன் ஆவார். பூபாளராகம் பிஞ்சு உலகம் போன்ற நல்ல சிறுகதைகளைத் தந்துள்ளார்.மலையக மக்களின் துயரப்பக்கங்களைத் தன் படைப்புகளில் காட்டியுள்ளார்

– 02.03.1980, ஈழநாடு.

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *