பூனை வலியும்… ஞான எலியும்!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 192

(கதைப்பாடல்)
கேக்கும் பன்னும் விற்றிடும்
கிழவி ஒருத்தி கடையிலே
பார்க்கு மிடம் எங்கிலும்
பவனி வந்தன எலிகளாம்!
எலிகள் தம்மை விரட்டிடும்
எண்ணம் கொண்ட கிழவியும்
புலியைப் போலொரு பூனையை
வாங்கி வந்தாள் கடையிலே..!
எலிகள் எதையும் தின்றிடாது
இளைத்து வந்த தாலவை
ஒன்று கூடி ஓர்தினம்
உபாயம் தேடிப் பேசின!
‘கொல்லும் பூனை வருகையால்
குலைப் பசியால் சாகிறோம்!’
வெல்ல வல்ல மார்கத்தை
விளம்பச் சொல்லிப்பேசின!
உள்ளதிலே குட்டியாய்
உள்ள வொரு சுண்டெலி
நல்ல மணி ஒன்றினை
நாமும் வாங்கிப் பூனையின்
கழுத்தில் இறுகக் கட்டினால்
பூனை நடக்கும் போதெல்லாம்
ஒலிக்கும் மணி சப்தத்தில்
ஓடி ஒளியக் கூடும்நாம்!
என்று சொல்ல யாவுமே
நன்று என்று களித்திட….!
தின்று கொழுத்துப் பருத்தவோர்
குண்டு எலியும் சொன்னதாம்:
“பூனை கழுத்தில் மணியினைப்
புனைந்துவிடும் எலியுமே
இருக்குதெனில் நமக்குள்ளே
எதிரில் வருக!” வென்றதாம்.
சொல்லுதல் யார்க்கும் எளிய
அரியவாம் சொல்லிய வண்ணம்செயல்!
என்று கருத்தை வைத்ததாம்
மூத்த எலிதன் ஞானத்தால்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
