பூதம் (கதைக்குள் கதை)




ஒரு காட்டில் இரண்டு உயிர் நண்பர்கள் விறகு வெட்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது தலை தெறிக்க அங்கு ஓடி வந்த துறவி ஒருவர் அவர்களை தாண்டி ஓடிக்கொண்டிருந்தார். சட்டென அவரை நிறுத்திய இவர்கள் சாமி ஏன் இப்படி தலை தெறிக்க ஓடி வருகிறீர்கள்? அவர் மூச்சு வாங்கிக்கொண்டே அந்த காட்டுக்குள் பூதம் ஒன்று மரத்துக்கு கீழே பதுங்கியிருக்கிறது, அதை கண்டவுடன் பதறி அடித்து ஓடி வருகிறேன்.
பூதமா? எனக்கு தெரிந்து இந்த காட்டுக்குள் அப்படி ஒன்றும் இல்லை, சொன்னான் ஒரு விறகு வெட்டி.
நான் சொன்னது முக்காலும் உண்மை, இன்னும் சற்று தூரம் சென்று பார் அங்கு மகிழ மரம் ஒன்று இருக்கும் அதனடியில்தான் அது வாசம் செய்கிறது.
அப்படியா இப்பொழுதே பார்க்கிறோம், இருவரும் கோடாரியுடன் அங்கு கிளம்பினர்.

வேண்டாம் சொல்வதை கேளுங்கள், அது உங்கள் ஒருவரை ஒருவர் அடித்து சாப்பிட்டு விடும், தயவு செய்து உங்கள் வேலையை பாருங்கள்.
விறகு வெட்டி நண்பர்கள் அவரை கிண்டலாய் பார்த்து எங்களுக்கு வேலையே இப்பொழுது அந்த பூதத்தை சந்திப்பதுதான். விறு விறுவென அந்த காட்டுக்குள் நுழைந்தனர்.
இப்பொழுது மிகப்பெரிய சோகத்தில் இருக்கிறேன், எனக்கு அவசரமாய் பத்து இலட்சம் தேவைப்படுகிறது. என்ன செய்வது என்று விழி பிதுங்கி யோசித்து கொண்டிருக்கிறேன். பத்து இலட்சம் ரூபாய் என்பது எனக்கு பெரிய தொகை அல்ல, ஆனால் இப்பொழுது எனக்கு தேவையாக இருக்கிறது,
நான் ஒரு ஏஜண்ட் (அதாவது உண்மையை சொன்னால் புரோக்கர்) நாங்கள் வாடிக்கையாளர்களிடம் ஏஜண்ட் என்றே அறிமுகப்படுத்திக்கொள்வோம். அதுவும் நில புலன்களை விற்பது வாங்குபவர்களுக்கு வாங்கி தருவது எனது தொழில், சில வேளைகளில் கொஞ்சம் வன்முறை, கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சம் அவனை குளிப்பாட்டல் (தண்ணியில்தான்) இப்படி அடாத காரியங்கள் செய்து எங்களது வாடிக்கையாளரை திருப்தி செய்து அவர்கள் விட்டெறியும் பணத்தை லாவகமாய் பெற்று எங்கள் வங்கி கணக்கை உயர்த்திக்கொள்வது எங்கள் தொழில். இதில் இரக்கமே பார்க்க கூடாது (வாங்குபவனாய் இருந்தாலும், விற்பவனாய் இருந்தாலும்) ஆனாலும் நாங்கள் அவனுக்கு சாதகமாய் பேசுவோம் (நடிப்போம்) எங்களுக்கு தேவை இரு பக்க கமிஷன், அதை பெறுவதில் மிக மிக நேர்த்தியாய் காய் நகர்த்துவோம். அப்பாடி என்னை பற்றி சொல்லி விட்டேன், இப்பொழுது பத்து இலட்சம் ஏன் எனக்கு தேவை என்று சொல்லி விடுகிறேன்.
அருமையான ஒரு இடம் வந்திருக்கிறது. ஒரு ஏழை விவசாயி கடைசியாய் இருந்த அவனது “இருபது செண்ட்” இடத்தை விற்கிறான், “கடைசியாய்” என்று சொன்னதற்கு காரணம் ஏற்கனவே அவனிடமிருந்த இரண்டு ஏக்கராவையும் “ஜிகினா வேலைகள் காட்டி விற்க வைத்து விட்டேன், அதனால் எனக்கு கிடைத்த கொள்ளை கமிஷனை நான் உங்களுக்கு சொல்ல போவதில்லை. அவ்வளவு பணத்தை விற்று வாங்கிய அவன் ஏன் இந்த இருபது செண்டை விற்கிறான் என்கிறீர்களா?
பணம் சார், பணம், இந்த பணம் இருக்கிறதே, அது எப்பொழுதுமே உங்களிடம் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அதுவும் நமது வயசும் ஒன்றுதான், இரண்டு கரைந்து போய்க்கொண்டேதான் இருக்கும்., நமக்கு தெரியாமலே, ஒரு சில நேரங்களில் பணம் அடாத வேலைகளை செய்ய சொல்லும், வயசும் இளமையாய் இருந்தால் அடாத வேலைகளை செய்ய சொல்லும். நிற்க..நான் தத்துவத்தில் நுழைந்து விட்டேன்,
சரி விற்ற பணத்தை முழுவதும் செலவு செய்த விவசாயி அடுத்து தனக்கு இருந்த கடைசி சொத்தை விற்க முன்வந்தான், அதுவும் என்னையே கூப்பிட்டு (அவனுக்கு ஏழரை என்பது தெரிந்தும்) நான் முதலில் “பிளாட்” கனவை ஊட்டினேன். உனக்கு இரண்டு வீடுகள் (அசந்து விட்டான்) அதுவும் நவ நாகரிகத்துடன். அடுத்த அடி கையில் கொஞ்சம் பணம் (இப்பொழுது சுருண்டே விட்டான்) சரி அவனிடம் பத்து இலட்சம் கொடுத்து பத்திரம் என் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் அதற்குத்தான் இந்த பணம் தேவை.
ஏன் நீ ஒரு பெரிய புரோமோட்டரை பார்க்கலாமே என்று கேட்கிறீர்கள், அதுதான் முடியாது, நிலம் என் பெயரில் வந்த பின்னால் “புரோமோட்டருடன்” என்னால் பிசினஸ் தொகையை உயர்த்த முடியும், (இடத்துக்காரனுக்கே இரண்டு வீடு, கொஞ்சம் பணம் என்றால் ஒன்றுமே போடாமல் வாயடிப்பவனுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் )அவனிடம் சரண்டர் ஆகி விட்டால் அவன் பெயருக்கு மாற்றித்தரவேண்டும். அதன் பின்னால் எனக்கு என்ன வருமானம்?
கவலையில் “ரியல் ஏஸ்டேட்ஸ்” என்று போட்டிருந்த என் அலுவலக அறையில் உட்கார்ந்து மண்டை உடைத்துக்கொண்டிருக்கிறேன். அப்பொழுது நண்பன் ஆறுச்சாமி “மச்சான்” சந்தோச முகத்துடன் அங்கு வந்தான். என்ன ஒரே சந்தோசமா இருக்கிறே?
கேட்டவன் மனதிற்குள் எவனாவது இளிச்சவாயன் மாட்டியிருப்பான் நினைத்துக் கொண்டேன். சரியான பார்ட்டி ஒண்ணு சிக்குச்சு, அமுக்கிட்டேன், இப்பத்தான் “ரிஜிட்ரேசன் முடிஞ்சுது” எவ்வளவு தேறுச்சு, என் கேள்வியில் சுரத்து குறைந்து ஒலித்தது (காரணம் பொறாமை) பெரிய நோட்டு பத்து கிடைச்சுது, அப்படியே வீட்டுல கொண்டு போய் வச்சுட்டேன், பாங்குக்கு போனா ஆயிரம் காரணம் கேட்பான், எனக்கு மூச்சே நின்று விட்டது, பெரிய நோட்டு பத்து என்பது இலட்ச கணக்கு, (எங்களுக்குள் பேசிக்கொள்ளும் இரகசிய குறியீடு)
இப்பொழுது அந்த பத்து இலட்சம் எனக்கு தேவை, அவனிடம் எப்படி கேட்பது? கேட்டால் காரணம் கேட்பான், உண்மையை சொல்ல முடியாது (தொழிலில் நம்பிக்கை வைக்க மாட்டோம்) சரி அவன் வீட்டிற்கு சென்று காயை நகர்த்தலாம்.
மாப்பிள்ளை தங்கச்சி நல்லாயிருக்கா? பேச்சை வீட்டுக்கு மாற்றினேன். அதை ஏன்ப்பா கேட்கிறே? சோகமாகி விட்டான், கோபிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டா, நான் போய் கூப்பிட்டுகிட்டு வரணும், அவ இல்லாம அம்போன்னு இருக்கு.
ஏம்ப்பா குழந்தைங்க? அவங்களும் அவங்க அம்மா பின்னாடியே கிளம்பி போயிட்டாங்க, நானும் கண்ட்ரோல் பண்ணித்தான் பாக்கிறேன், குடிக்கறதை விட முடியலையே என்ன செய்ய ? இதனால நிதம் சண்டை கடைசியில அவங்களை எல்லாத்தையும் கூட்டீட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா.
இப்பொழுது எனக்கு ஒரு சங்கடம், அவனை சமாதானப்படுத்தி சம்சாரத்தையும் குழந்தைகளையும் அவன் வீட்டிற்கு கூட்டி வர உதவி செய்வதா? இல்லை இதையே சாக்காட்டி அவனை தண்ணீரில் குளிப்பாட்டி அந்த பணத்தை வாங்கி விடுவதா? என்னை போன்றவர்களுக்கு எது முதலில் என்பது உங்களுக்கு புரியும். இருந்தாலும் என் வாய் சாமார்த்தியத்தை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமே?
ஏன் மாப்பிள்ளை இப்படி குடிச்சு குடிச்சு அழிஞ்சு போறே? நான் சொல்றேன் தங்கச்சி கிட்டே, வா போய் பாக்கலாம் (மனதுக்குள் அவன் இதற்கு ஒத்துக்கொள்ளக்கூடாது) எதிர்பார்த்தது போலவே வேண்டாம் மச்சான், எங்க மாமனாரு கோபக்காரரு, காலை உள்ளே வச்சா வெட்டி போடுவேன்னு ஒரு முறை மிரட்டியிருக்காரு. அப்படி எல்லாம் பார்த்தா முடியுமா? வா நான் உன் கூட வர்றேன், வேண்டாம் அவ வேலைக்கு போயிருப்பா, குழந்தைகளும் ஸ்கூலுக்கு போயிருப்பாங்க.இப்ப போயி என்ன பிரயோசனம்? பின் வாங்கினான் (வெரி குட் அதுதான் எனக்கு தேவை) சரி வா உன் வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் பேசிகிட்டாவது இருப்போம். பேசிகிட்டுன்னா? சும்மாதாம்ப்பா உனக்கு மனசு கொஞ்சம் ஆறுதலா இருக்குமில்லை. சரி வா, எழுந்தான், அவசர அவசரமாய் அலுவலகத்தை பூட்டினேன்.
காட்டுக்குள் நுழைந்த அவர்கள் துறவி சொன்ன மகிழம்பூ மரத்தை கண்டு பிடித்தனர். அதனருகில் சென்று பார்த்த பொழுது பூதன் இருப்பதாக காட்சிக்கு தெரியவில்லை, அப்புறம் ஏன் அந்த துறவி பூதம் என்று சொன்னார்? யோசித்து கொண்டு கீழே பார்த்த பொழுது தங்க காசு ஒன்று மரத்துக்கடியில் கிடந்தது, ஐய்..தங்க காசு பொறுக்கிய ஒருவன், மீண்டும் கீழே குனிந்து பார்க்க மண்ணுக்குள் கலைந்தும் கலையாமல் இரண்டு தங்க காசுகள் கிடந்தன. அவ்வளவுதான் ஆவலுடன் அந்த மண் மேட்டை கலைத்து பார்க்க ஒரு குழி ஒன்றை கண்டு பிடித்தனர். அதனுள் கைவிட்டு துழாவ ஒரு சொம்பு ஒன்று கைக்க்கு தட்டுப்பட்டது. ஆவலுடன் அதை எடுத்து பார்க்க அதனுள் தங்க காசுகள் நிறைந்து காணப்பட்டது. இருவரும் மகிழ்ச்சியுடன் தனது வேட்டியை உருவி கீழே கொட்டி அந்த சொம்பை கவிழ்த்தனர். கீழே சிதறிய தங்க காசுகளை கூட்டு சேர்த்து எண்ணி பார்த்தனர். நூறு காசுகள் இருந்தன. ஆளுக்கு ஐம்பதாய் பிரித்துக் கொண்டவர்கள், சரி வா ஊருக்கு போவோம் என்று நடையை கட்டினார். நடக்கும்போது இருவர் மனசிலும் “கள்ள” எண்ணம் புகுந்திருந்தது. இவன் அவனை முடித்து விட்டால் அவன் வைத்திருக்கும் ஐம்பது காசுகளையும் எடுத்துக்கொள்ளலாம், இப்படி இருவருமே நினைத்துக்கொண்டு ஊர் எல்லையை அடைந்தனர். ஒருவன் சரி நான் இந்த மர நிழலில் இளைப்பாறுகிறேன், நீ நம் வீட்டுக்கு போய் நமது துணி மணிகளை மட்டும் எடுத்து வா. நாம் இப்படியே வெளியூருக்கு சென்று இந்த காசுகளை விற்று பணமாக்கிக்கொண்டு வரலாம். சரி என்று ஒருவன் மட்டும் ஊருக்குள் கிளம்பினான்.
நான் வீட்டுக்குள் வந்து அமர்ந்து சற்று நேரம் கழித்து மெல்ல பேச்சு கொடுத்தேன், மாப்பிள்ளை எனக்கு கொஞ்சம் அவசரமா பணம் தேவைப்படுது, பத்து பெரிய நோட்டு தேவைப்படுது, மூணு மாசம் பொறுத்துக்கோ, அப்படியே ஒரு பெரிய நோட்டு கூட போட்டு கொடுத்துடறேன்.
என்னை மன்னிச்சுக்க மச்சான், இந்த பணத்தை ஒரு பார்ட்டிக்கு நாளைக்கு கொடுத்து இடத்தை முடிக்க வச்சிருக்கேன், இல்லையின்னா உனக்காக தாராளமா கொடுப்பனே…
இப்படி ஆரம்பித்த எங்கள் பேச்சு நீண்டு கொண்டே போயும், ஒரு முடிவுக்கு வரவில்லை.
சரி இனி இவனை முடித்து விட வேண்டியதுதான், ஆனால் இவன் என்னை விட பலசாலி என்ன செய்யலாம்? யோசித்து முடிவு செய்தவன், சரி மாப்பிள்ளை, உன் பணம் அது நீயே வச்சுக்கோ, இவ்வளவு நேரம் இரண்டு பேரும் பேசிகிட்டு இருந்த்தாலே கொஞ்சம் தாக சாந்தி பண்ணலாமா?
இரு நானே சரக்கு வச்சிருக்கேன் எடுத்தாறேன், அவன் உள்ளே இருக்கும் அறைக்குள் நுழைந்தான். போய் பத்து நிமிடம் ஆயிற்று, நான் மெல்ல வெளியில் வந்து அங்கிருந்த வாகான ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு அவன் இருந்த அறைக்குள் நுழைய அவன் இரண்டு பாட்டில்களை எடுத்துக்கொண்டு திரும்ப எத்தனித்தான். கண் சிமிட்டும் நேரம் என் கையில் இருந்த கட்டை அவன் மண்டையில் இறங்க….
இவன் போய் ஊரிலிருந்து துணிமணிகளை எடுத்து வருவதற்குள் வாகான ஒரு கல்லை எடுத்துக்கொண்டு மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். ஊருக்குள் சென்றவன் துணி மணிகளுடன் சாப்பாட்டு பொட்டலம் ஒன்றையும் கட்டி எடுத்து வந்தான், அதில் விஷம் கலந்து. எப்படியும் அவனை சாப்பிட வைத்து விட்டால், அவன் சாப்பிட்டு மரணமடைவான், நாம் அவனிடமிருந்த ஐம்பது தங்க நாணயங்களையும் எடுத்துக்கொண்டு போய் விடலாம் என்பது அவன் கணக்கு.
மரத்துக்கு கீழே வந்து துணி மணிகளை வைத்து விட்டு அவனை சுற்று முற்றும் தேட மரத்தின் மேலிருந்து கல்லை அவன் இவன் தலையில் போட….
மரத்தை விட்டு இறங்கியவன் செத்து கிடக்கும் அவனருகில் சென்று, அவனிடமிருந்த தங்க காசுகளை எடுத்துக்கொண்டு திரும்பியவன் சாப்பாட்டு பொட்டலத்தை பார்த்து விட்டு சரி போறதுதான் போறோம்..சாப்பிட்டு விட்டு போகலாம்..முடிவு செய்து கொண்டு சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்து சாப்பிட ஆரம்பித்தான்……..
மண்டையில் அடிபட்டு இரத்தம் வழிய சரிந்தவனை பார்த்து, ஒதுங்கிக் கொண்டு அப்படியே பர பரவென தேடினேன், பணத்தை எங்கு ஒளித்து வைத்திருப்பான்? கட்டில், பீரோ, அண்டா குண்டா அனைத்தையும் அலசி பணத்தை கண்டு பிடித்தவன் அப்பாடி வெற்றி எக்களிப்புடன் திரும்பியவன் கண்ணில் விழுந்து கிடந்தவன் கையில் இருந்த பிராந்தி பாட்டிலை முழுசாய் இருப்பதை பார்த்து விட்டு. அதை அவனிடமிருந்து பிடுங்கியவன் அப்படியே மடக்..மடக்கென வாயில் வைத்து குடிக்க ஆரம்பித்தேன்……. ( அதற்குள் ஏதோ மருந்து வாசனை அடித்தும் )
(அவனும் இந்த விவசாயிடம் பத்து இலட்சம் ரூபாய் கொடுத்து பேரை மாற்ற பிசினஸ் பேசியிருப்பது தெரியாமல்)
இரண்டுக்கும் முடிவு ஒன்று !
ஐயோ..பூதம்..பூதம்..எல்லோரையும் கொன்று விடும்… பூதம்..அலறிக்கொண்டே ஓடினார் அந்த துறவி !