பூஜாவும் பவனும் – ஒரு பக்கக் கதை





அவர் ரொம்ப நேரமாய் தயங்கித் தயங்கி நின்றிருந்தார்.
‘போம்மா.. அந்த தாத்தாக்கு என்ன வேணும்னு கேளு’ என்றேன் இரண்டரை வயது பூஜாவிடம்.
கையில் வைத்திருந்த விளையாட்டு பொம்மையுடன் (பெயர் பவன்) போனாள்.
‘தாத்தா என்ன வேணும்..’
அவருக்கு இவளிடம் கேட்கலாமா, வேண்டாமா என்ற யோசனை.
‘சொல்லுங்க.. என்கிட்டே சொல்ல வேண்டாம்னா பவன் கிட்ட கேளுங்க’
அது யாரு பவன் என்று விழித்தார்.
‘பவன் தெரியாதா.. ’
கையில் வைத்திருந்த பொம்மையை உயர்த்திக் காட்டினாள்.
‘இவன் தான்.. அவனுக்கு எல்லாரும் ப்ரெண்ட்ஸ்’
வந்தவர் ஏதோ கேட்க, அந்த வீட்டுச் சிறுமியின் பேரைத் தற்செயலாகச்
சொன்னதும் பூஜாவே கொண்டு போய் விட்டாள்.
அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிற யாரைப் பற்றி கேட்டாலும் அவளுக்குத் தெரிகிறது.
புவனாவிடம் சொன்னேன்.
‘பாரேன்.. இந்த வாலு அத்தனை பேரையும் தெரிஞ்சு வச்சிருக்கு..’
புவனா கொடுத்த நோஸ்கட்..
‘உங்களையே பூஜா அப்பான்னாதான் தெரியும்.. இங்கே.. பேங்க் மேனேஜர்னு அலட்டல் செல்லாது.. ‘
திரும்பிப் பார்த்தேன்.
சாயம் போன ‘பவனுடன்’ பூஜா ரொம்ப சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்தாள்.
குழந்தைகளின் உலகம் இனிமையானது..
(எதிர் வீட்டு குழந்தையை கவனித்ததில் கிடைத்த கதை)
– செப்டம்பர் 2011