பூக்காத மாலை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 1,235 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொழுவத்தில் கட்டிக் கிடந்த எருமை மாடு “ம் ம் மே….ஏ…ஏ…” என்று ஏக்கமாய்க் கதறியது. 

கதறிய கதறலில், அதன் பருத்த வயிறு விம்மித் தணிந்தது. இடி முழக்கமாய் நீண்ட அதன் கதறலில்… அந்தத் தெருவே அதிர்ந்தது. 

காடியில் புல்லோ – கூளமோ, ஒரு துரும்புகூட இல்லை. மதியத்திலிருந்து அதற்கு இரை இல்லை. புல்லறுத்துப் போடுகிற ராசாத்தியை எதிர்பார்த்து எதிர்பார்த்து, ஆவலோடு அதன் கருங்கண்கள் வாசலைப் பார்த்தன. 

வீட்டை விட்டு வெளிவர முடியாமல் வெட்கப்பட்டுப்போய் உள்ளேயே கிடந்தாள், ராசாத்தி. வெம்பலும் விசும்பலுமாய்… கசியும் கண்களுமாய், வெட்டுப்பட்ட கொடியாய்த் துவண்டு கிடந்தாள். ஊர் முகத்தை ஏறிட்டுப் பார்க்க அவளுக்குத் தைரியமில்லை. எப்படி அவள், ஊர் முகத்தைப் பார்க்க முடியும்? அய்யாதான் அவளை மூக்கறுத்து மூலையில் தள்ளிவிட்டாரே! 

அய்யாவும் வாய்க்கு வாய் ஆசையோடு சொல்வார். “இந்த வருஷ வெள்ளாமையிலே… எப்படியாச்சும் ஒனக்கு அஞ்சு பவுன் நகை வாங்கிப் போடணும். எந்தச் செலவை நிறுத்தினாலும் சரி… நகை கட்டாயமாக வாங்கிடணும்.” 

அவர் ஆசையும், ஆர்வமும் போலியல்ல. ஏமாற்றமல்ல. உண்மையானவைதான். ஆனால் மிளகாயும், பருத்தியும் வருஷா வருஷம் விளையத்தான் செய்கிறது. வியாபாரிகளிடம் போய்ச் சேர்கிறது. கடைசியில் கணக்குப் பார்க்க, ஒன்றும் இருக்காது. கைக்கு எட்டினால் வாய்க்கு எட்டாது.வாய்க்கு எட்டினாலும் வயிற்றுக்கு எட்டாது. என்னதான் மாயமோ,இது! 

வருஷம் என்பது வருஷங்களாகி… அதுவும் ஏழு எட்டு என்றாகிவிட்டது. அஞ்சு பவுன் நகை வாங்க முடியவுமில்லை. அய்யா ஆசையாய்ச் சொல்வதை நிறுத்தவுமில்லை. 

இப்போ- 

செடிப் பருவத்தில் நிற்கிற மிளகாய்ச் செடி, சுருட்டையடித்துக் கிடக்கிறது. பூச்சி மருந்து அடிக்கணும், உர உப்புப் போடணும், முதல் தண்ணீர் பாய்ச்சணும். அய்யாவும் சூறாவளியாய் ஓடிப்பார்த்தார். 

‘அங்கு, இங்கு’ என்ற குருட்டு ஈயாய்ப் பறந்துபார்த்தார். முட்டி மோதி, அலைந்து, அலுத்துச் சோர்ந்த நிலையில்- 

ராசாத்தி காதிலும், மூக்கிலும் கிடந்த கம்மலையும், மூக்குத்தியையும் கழற்றும்படியாகிவிட்டது. 

மூளியாகிப்போன முகத்தோடு எப்படி வெளியே தலை காட்டுவது? ஊர் மூகத்தை எப்படி ஏறிட்டுப் பார்ப்பது? காதையும், மூக்கையும் பார்த்தவர்கள், என்ன நினைப்பார்கள்? முதுகுக்குப் பின்னால் கெக்கலி பண்ணி, நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கமாட்டார்களா? 

ராசாத்திற்கு உள்ளுக்குள் குத்திக் குடைந்தது. எந்த வேலையும் செய்ய விருப்பமில்லாமல், உயிரற்ற மனத்தோடு வெட்டுண்டு கிடந்தாள். 

அம்மா உயிரோடு இருந்திருந்தால்… இவளை இப்படி குறைகோலமாக்கிக் குப்புறக் கிடத்தவிட்டிருப்பாளா? ராசாத்தியை இன்னும் இந்த வீட்டில் இருக்கவா விட்டிருப்பாள்? அடுத்த வீட்டுக்குக் காலா காலத்துலே மாலையும் கழுத்துமாய் அனுப்பி வைத்து, பேரன் பேத்தி என்று பூப்பிஞ்சுகளைப் பார்த்துப் பூரித்திருக்கமாட்டாளா? 

அய்யா, இவளை ஒரு கடமை -சுமை- என்று நினைக்கத்தான் செய்கிறார்; இறக்கி வைக்கவேண்டும் என்று ஆசைப்படத்தான் செய்கிறார். ஆனால் … அதற்கான முன்முயற்சி எடுக்கத் தெரியவில்லையே… 

அம்மா இருந்திருந்தால் இவரைக் குத்திக் குடைந்து முடுக்கிவிட்டிருப்பாளே… புலம்பிப் புலம்பித் துரிதப் படுத்தியிருப்பாளே. ‘ கன்னி கழியாத புள்ளையை எம்புட்டு நாளைக்கு வீட்டிலே வைச்சிருக்கிறது’ என்று நச்சரித்து, நச்சரித்து… அய்யாவை ஏதாச்சும் ஏற்பாடு செய்ய வைத்திருப்பாளே… 

இப்ப யாரு அய்யாவை நச்சரிக்கிறது? 

பாவம், தூண்டிப் பத்த ஆளில்லாத மாடுபோல… தன் நடையாய் நடக்கிறார். வெள்ளத்தில் மிதக்கிற மரக்கட்டையைப்போல் தன்போக்கில் புரண்டு கொண்டிருக்கிறார்… 

ஊரில் இருக்கிற இரக்கப்பட்ட பெரிய மனிதர்கள்… இரண்டு தடவை ‘ஏற்பாடு’களுக்கு அய்யாவுடன் பேசிப் பார்த்தனர். 

முதல் தடவை, “எட்டு பவுன் நகை முடியுமா” என்றனர். இரண்டாவது தடவை, “அஞ்சு பவுன் நகையாச்சும் போட முடியுமா” என்று கேட்டனர். 

அய்யா வெறும் கையைப் பிசைந்தார். ஏக்கப் பெருமூச்சுடன் சப்புக் கொட்டினார். அவ்வளவுதான்! 

‘சந்தைக்கு வராத மாடு இது’ என்று சுத்தமாகக் கைகழுவி விட்டனர். இப்போ? 

ராசாத்தியோடு அஞ்சாம் கிளாஸ்வரை ஒன்றாகப் படித்தவள் ராமா. இதோ… அவளது மகன் மூணாம் கிளாஸ் போய்க் கொண்டிருக்கிறான்! 

இவள் சடங்காகி, மூலையில் பதினாறு நாள் இருந்தபோது, பாவாடைச் சிறுமியாக வந்து, மூட்டாள்தனமாய்ப் பல்லாங்குழி விளையாடிய கமலா, தலைப் பிள்ளையைப் பெற்றெடுத்துத் தாய் வீட்டில் வாங்கித் தந்த புதுச் சேலை, தொட்டில், வேட்டியோடு, போன வாரம்தான் புருஷன் வீட்டுக்குப் போகிறாள்… 

இவள் தாவணி போட்ட அதே மாதத்தில் பிறந்த பேச்சியம்மா வளர்ந்து, மலர்ந்து, பெரிய மனுஷி முகூர்த்தம் வைத்திருக்கிறார்கள்… 

இவளைச் சுற்றிக்கொண்டு காலம் ஓடுகிறது. கண்ணாமூச்சி காட்டுகிறது. எல்லாவற்றையும் தழுவி வளர்க்கிறது. சிறு செடியை, பெரிய செடியாக்கி, மொட்டுகளை அரும்ப வைத்து, பிஞ்சாக்கி, காயாக்கி, கனியவைத்து, பறிக்கவைத்து, விதையாக்கி… 

மாய்மாலம் செய்கிற காலம், இவளை மட்டும் பூத்த நிலையிலேயே நிற்க வைத்துவிட்டது. 

காலமும் வாழ்க்கையும் இவளை விட்டுவிட்டு… தன் போக்கில் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. 

ராசாத்தி, கைத்துப் போன மனசோடு குமுறிக் குமுறி அழுதாள். சத்தமில்லாமல் அழுதாள். நெஞ்சின் ஆழத்தில் நைந்து கிடந்த ரகசிய உணர்ச்சிகளெல்லாம் பொங்கிப் பீறிட்டு, அவளை உலுக்கியெடுத்தன. அழுந்திக் கிடந்த அவலச் சோகம் விசுவரூபமெடுத்து… அவளை அடித்துப் புரட்டியது. 

உள்ளுக்குள்ளேயே கொத்திக் குதறுகிற சோகம்; அடுத்த ஜீவனிடம் பகிர்ந்துகொள்ளமுடியாத ஊமைச் சோகம்; சுமையாய் அழுத்தித் திணறடிக்கிற சொந்தச் சோகம்; மனத்தின் மெல்லிய ஜவ்வுகளைக் கிள்ளிக் கிள்ளித் துடிக்க வைக்கிற சோகம்; அவமானத்தில் குன்றிக் கூசிக் குறுகச் செய்கிற கொடிய சோகம். 

“அம்மா…தாயே” என்று வெடித்துக் கதறிவிட்டாள். 

“என்னை இப்படித் தவிக்க விட்டுட்டு, நீ மட்டும் போய்ச் சேர்ந்துட்டியே” என்று புலம்பலோடு அழுதாள். மனத்தில் மண்டிக் கிடந்த அவலமெல்லாம், கண்ணீரில் கலந்து கரைந்தது. அழுது அழுது… விம்மி, விசும்பி… மெல்ல மெல்ல அடங்கினாள்… 

”ம்ம்ம்மேஹ்ஹ் ஏ… ஏ…” 

எருமையின் விடாப்பிடியான கதறல், இவளை நச்சரித்தது. ‘பாவம் வாயில்லாச் சீவன்’ என்று பரிவோடு சிந்திக்க வைத்தது. தாய்மை ததும்பும் அவளின் பெண்மை உள்ளம், வாயில்லாச் சீவனின் பசியை நினைத்துப் பதைத்தது. 

தாயை விழுங்கிய சாமியையும், தகப்பனைக் கையாலாகாத நிலையில் நிற்கவைத்த வாழ்க்கையையும் சபித்துக்கொண்டே எழுந்தாள். முகத்தைக் கழுவி, அழுந்தத் துடைத்துக்கொண்டாள். கலைந்து கிடந்த தலைமுடியைக் கோதி, ஒழுங்குபடுத்திக்கொண்டாள். ! 

கடாப் பெட்டியையும், பன்னரிவாளையும் எடுத்துக் கொண்டாள். வெளியே வந்து பார்த்தாள். மஞ்சள் வெயிலில் நிழல்கள் நீளமாய்ப் படுத்துக்கிடந்தன. பொழுது, மேற்கு மலையின் முதுகை உரசிக் கொண்டிருந்தது. மேகங்கள், காயம்பட்ட ரத்தக் கசிவோடு மிதந்தன. 

கதவைச் சாத்தினாள், எருமையின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். ராசாத்தியைப் பார்த்ததும் ஆவலோடு தறிய முறிய விழுந்தது, எருமை. 

“பொறுத்துக்க… இன்னும் அஞ்சு நிமிசத்துலே ஒனக்குப் புல்லைக் கொண்ணாந்துருவேன்… பொறு பொறு…” என்று சமாதானம் சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கினாள். 

நடுத்தெருவுக்குள் நுழைந்தாள். டீக்கடையில் டேப்ரிக்கார்டு, காதல் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தது-அப்போதுதான் வந்த டவுன் பஸ்ஸில் இறங்கி, புத்தம் புதிய கல்யாணத் தம்பதியோடு உறவினர் குழு ஒன்று இவளைக் கடந்தது. 

மடத்துத் திண்ணையில் சிலர் உட்கார்ந்திருந்தனர். மாடசாமியும் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருந்தான். கடாப் பெட்டியோடு வந்த இவளை, அவன் பார்த்தான். 

அவன் சும்மாதான் பார்த்தானோ… காரியமாய்ப் பார்த்தானோ… ஆனால், ராசாத்திக்கு, அவன் பார்வையில் ஏதோ அர்த்தம் தொனிப்பதுபோலிருந்தது. காரியமும் கபடமும் ஒளிந்திருப்பது போலத் தோன்றியது. இரைக்காக ஒற்றைக் காலில் காத்து நிற்கிற கொக்கின் தாகம், அவன் கண்களுக்குள் பதுங்கியிருப்பதுபோல… இவளுக்குத் தோன்றியது. 

மனத்துக்குள் படபடவென்று அடித்துக்கொண்டது. திகிலாகவும், திகைப்பாகவும் இருந்தது. பறவையின் இறக்கையைப் போல் துடித்தது, மனசு. 

நாலு பக்கமும் ஆள் உயரத்திற்கு மேல், சோள நாற்றுப் புஞ்சை.சுவர்போல அடர்த்தியான நாற்று. நடுவில் பருத்திப் புஞ்சைகள். இங்கே கொலையே நடந்தாலும் வெளியே தெரியாது. 

பொழிகளில் காடாய் வளர்ந்து கிடந்த அருகம் புல்லையும், மத்தாங்கப் புல்லையும் பரட்பரட்டென்று வேக வேகமாய் அறுத்துக் கொண்டிருந்தாள். உள்ளுக்குள் இனம் புரியாத பதைப்பு. பரபரப்பாய் அறுத்துப்போட்ட புல்லில் பெட்டி நிறைந்தது. இரு கைகளாலும் அமுக்கி அமுக்கி நிறையப் புல்லைத் திணித்தாள். 

மனசுக்குள் மர்மமான படபடப்பு… 

மஞ்சள் வெயிலும் மறைந்துவிட்டது. மேகத்து வெளிச்சம் மட்டும் மிஞ்சி நின்றது. கருகருவென்று இருட்டு துரத்திக்கொண்டு வந்தது. 

ராசாத்தி துரிதமானாள். விறுவிறுவென்று பெட்டியைத் தூக்கக் குனிந்தபோது- 

உரசிக் கொண்டு பின்னால் யாரோ நிற்பது போன்ற, பதற்ற உணர்வு. 

திரும்பிப்பார்த்தால்…மாடசாமி. 

அவனது சூடான மூச்சு, இவளது தோளில் சுடுகிறது. 

நிதானிப்பதற்குள்- 

அவன், அவளைச் சுற்றித் தழுவிக் கொண்டான். முரட்டுத்தனமாய்ச் சேர்த்து, அணைத்தான். 

திமிறினாள். தப்பிக்க முயன்று போராடினாள். திமிறிய திமிறலில், அலம்பி மல்லாக்க விழுந்தாள். 

நுகர்ந்து அறிந்திராத ஆண் வாடை; தொட்டு உணர்ந்திராத ஆண்மையின் உஷ்ணம்; அனுபவித்தறியாத ஆணின் மூர்த்தண்ய உணர்ச்சி… ஆற்று மணலை அள்ளி விழுங்குகிற புதுவெள்ளத்தின் வெறி வேகம்… 

மலத்தை மிதித்துவிட்ட அருவெருப்பில் அவள் திமிறினாள். 

“டேய்… விடுடா… என்னை… விடுடா… ஐயோ… கேவலப் படுத்திடாதேடா.. விடுடா..” என்று அலறிக்கொண்டே போராடினாள். 

“அங்க யார்டா அது?” என்ற வேற்றுச் சத்தத்தில், மாடசாமி ஸ்தம்பித்துப் போனான், பதறிப்போய் எழுந்தான்… அரை நிர்வாணமாய் – அலங்கோலமாய் ராசாத்தி. உயிரையே அறுப்பதுபோல அவமானத்தில் துடித்தாள். 

பரபரவென்று துணியைச் சுற்றிக்கொண்டு எழுந்தாள். நனைந்த கோழிக் குஞ்சாக நடுங்கினாள். 

ஓட முயன்ற மாடசாமியை, வந்து சேர்ந்த மேலத்தெரு சின்னையா, திமிற விடாமல் பற்றி, இறுகப் பிடித்துக்கொண்டார். ராசாத்தி, தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். 

மாடசாமி அவரிடம் கெஞ்சி அழுதான். விட்டு விடும்படி காலில் விழுந்து அர்த்தமில்லாத வார்த்தைகளை மிழற்றினான். அவர் அவனை அதட்டலான குரலில் சத்தம் போட்டார். 

“ஏலேய்… ஒனக்கு ராசாத்தி வேணும்னுதானடா… இம்புட்டுத் தூரம் வந்தே? படுவா ராஸ்கல், பயப்படாதே. ஊர்க் கூட்டத்துலே உங்களைக் கொண்டுபோய் நிறுத்துறேன். ஊரறிய ராசாத்தியை ஏத்துக்கணும் நீ…” 

உறுமினார். குற்றவாளியாய்த் தலைகுனிந்தான். அவரது மீசைக்கடியில் ஒரு பெருமிதப் புன்னகை. 

“நீ என்னம்மா சொல்றே? ஒனக்குச் சம்மதமா?” 

அவள் மௌனமாய் அழுதுகொண்டிருந்தாள். காயம்பட்ட ரணத்தோடு கதறிக்கொண்டிருந்த அவளுக்கு, அவரது அதட்டலான கேள்வி ஆறுதலாய் இருந்தது… 

கல்லில் மோதிய கால் பெருவிரல், சுரீரென்று வலித்தது. ராசாத்தி பிரக்ஞையுற்று, காலைப் பார்த்தாள். நகத்தைச் சுற்றி மெல்லிய ரத்தக் கசிவு. வலி சுண்டி இழுத்தது. 

இன்னும் மஞ்சள் வெயில்தான் அடிக்கிறது. இடுப்பில் வெற்றுக் கடாப்பெட்டியோடு நடுத்தெருவின் இறுதி நுனியைக் கடக்கிறபோது, திரும்பிப் பார்த்தாள். 

மடத்துத் திண்ணையில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருந்த மாடசாமி, எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். 

கண்ட கனவில் மனசு கசந்து அழறியது. வெட்கத்திலும், அவமானத்திலும் மனசு குன்றிக் குறுகித் தவித்தது. 

‘ச்சே… இந்தக் கொரங்கு மனசு, எம்புட்டு வெக்கங்கெட்டுப் போய் அலையுது’ என்று தன் மனசைத் தானே சபித்துக்கொள்ளும் போது… அவளுக்குள் ஓர் ஆழ்ந்த வேதனை சூழ்ந்துகொண்டு… நெரித்தது. 

– கல்கி, பிப்ரவரி 1988.

– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு:  2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *