புலியும் மருத்துவனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 10, 2018
பார்வையிட்டோர்: 7,140 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்டில் இருந்த ஒரு புலிக்கு வயிற்றில் நோய் கண்டிருந்தது. அது பொல்லாத நச்சு நோய். அந்த நோய் ஏற்பட்டிருந்ததால், அதனால் எவ்விதமான உணவும் உட்கொள்ள முடியவில்லை. நாளுக்கு நாள் மெலிந்து வந்தது. அப்படியே நோய் வளர்ந்து வந்தால், தான் இறந்துபோக நேரிடுமென்ற அச்சம் புலிக்கு உண்டாகியது.

தன் நோயை எவ்வாறு தீர்ப்பது என்று புலி சிந்தனை செய்துகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது. புலி அதனிடம் தன் நோயைத் தீர்க்க ஒரு வழி கூறும்படி கேட்டது.

“பக்கத்து ஊரில் ஒரு மருத்துவன் இருக்கிறான். அவன் இது போன்ற நச்சு நோய்களைத் தீர்ப்பதில் வல்லவன். அவனைப் போய்ப் பார்” என்று கூறி விட்டு, நரி தன் வழியில் சென்றது.

புலி மெல்ல மெல்ல நடந்து மருத்துவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தது.

அந்த நச்சு மருத்துவன் புலியின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கினான். அதற்குத் தகுந்த மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்தினான்.

நோய் தீர்ந்தவுடன் புலிக்குப் பசியெடுத்தது. அத்தனை நாட்களாக ஒன்றும் தின்னாமல் இருந்த தால் பசி அதிகமாயிருந்தது. உடனடியாக ஏதாவது தின்ன வேண்டும் போலிருந்தது.

தன் நோயைத் தீர்த்தவன் என்று சிறிதுகூட எண்ணிப்பாராமல் புலி, மருத்துவன் மீது பாய்ந்தது, அவனை அறைந்து கொன்று, உடலைக் கிழித்துத் தின்றது.

நன்றிக் குணம் இல்லாத கொடிய புலிக்கு உதவி செய்த மருத்துவன் அதற்கே இரையானான்.

கருத்துரை: கொடிய புலிக்கு உதவிய மருத்துவன் அதற்கே இரையானான்; நல்லறிவில்லாத தீயவர்களுக்குச் செய்யும் உதவிகளும் இது போலத் தீமையாகவே முடியும்.

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *