புலவர் செய்த சோதனை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 11, 2022
பார்வையிட்டோர்: 8,944
(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“கொங்கு நாட்டிலிருந்து ஒரு புலவர் வந்திருக்கிறார், ஆணுாரில் உள்ள சர்க்கரை என்ற வள்ளலின் அவைக்களப் புலவராம்” என்று அறிவித்தான் காவலன்.
“புலவரா! அவரை நான் அல்லவா எதிர் கொண்டு அழைக்கவேண்டும்?” என்று சொல்லியபடியே அந்தச் செல்வர் தம்முடைய வீட்டு வாசலுக்கே வந்து விட்டார்.
புலவரும் உபகாரியும் சந்தித்தார்கள். இருவரும் மாளிகையின் உள்ளே சென்றார்கள். செல்வர் புலவருக்கு உபசாரம் செய்து அமரச்செய்தார். இருவரும் உரையாடத் தொடங்கினர்.
தொண்டை நாட்டில் உள்ள செங்குன்றுர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த எல்லப்பர் என்னும் வள்ளல் அச்செல்வர். புலவர்களின் பெருமையை அறிந்து பாராட்டிப் பரிசளிக்கும் பெருந்தகை. தமிழ் நயந்தேரும் சதுரர். அவருடைய புகழ் தமிழ்நாடெங்கும் பரவியிருந்தது. வேறு ஊர்களில் உள்ள புலவர்கள் அவ்வப்போது அவரைத் தேடிக்கொண்டு வருவார்கள். அவ்ருடன் பேசிப் பொழுது போக்குவதிலே இன்பம் காண்பார்கள். அவர் அளிக்கும் பரிசைப் பெற்று அளவற்ற மகிழ்ச்சியுடன் ஊர் செல்வார்கள். எப்போது பார்த்தாலும் புலவர்களைப் பராமரிப்பதும் தானதர்மம் செய்வதுமாகப் பொழுது போக்கும் எல்லப்பரைப் புலவர்கள் சும்மா விட்டு வைப்பார்களா? நன்றியறிவு மீதுரக் கவிபாடி அவர் புகழை வளர்த்தார்கள். அவர்கள் பாடிய பாடல்கள் தமிழ்நாடெங்கனும் உலவிச் செங்குன்றுார் எல்லப்பருடைய வள்ளன்மையைத் தெரிவித்தன.
‘ஆலமரம் இருக்கும் இடத்தில் பறவைகளைப் பார்க்கலாம். திருமால் இருக்கும் இடத்தில் திருமகளைக் காணலாம். எல்லப்பன் இருக்கும் இடத்தில் இரவலரைக் காணலாம்” என்று ஒரு புலவர் பாடினர்.
ஆல்எங்கே அங்கே அரும்பறவை; ஆல்துயிலும்
மால் எங்கே அங்கே மலர்மடந்தை ;-சோலைதொறும்
செங்கே தகைமணக்கும் செங்குன்றை எல்லன்எங்கே
அங்கே இரவலர்எல் லாம்.
எல்லப்பரைப் போலவே தமிழருமை அறிந்து புலவரைப் போற்றிப் புகழ் பெற்றவராக விளங்கினர், ஆணுார்ச் சர்க்கரை என்ற உபகாரி. கொங்கு நாட்டில் மாடுகளுக்குப் பெயர் போன பழைய கோட்டை என்ற ஊர் இருக்கிறது. அதற்கு அருகில் இருப்பது ஆணூர். அவ்வூரில் இருந்தவர் சர்க்கரை. ஆணுார்ச் சர்க்கரையின் ஆதரவில் பல புலவர் தமிழ் வளர்த்தனர். அவர்களில் ஒருவரே தொண்டை நாட்டுக்குச் சென்று அங்குள்ள தமிழ்ப் பெருமக்களைக் கண்டு வரலாம் என்று புறப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் போற்றிப் புகழும் எல்லப்பரைக் காண்பதே முக்கியமான காரியமாக வைத்துக் கொண்டார். ஆணுார்ச் சர்க்கரையைப் போன்ற தர்மவானை எங்கும் காணமுடியாது என்பது அவர் கருத்து. சர்க்கரையின் தமிழ் ஆசை ஒருபுறம் இருக்க, அவருடைய நற்குணங்களைப் பார்த்து வியப்பவர் பலர். அவருடைய பொறுமையை வேறு எவரிடமும் காண்பது அரிது. உடல் வலியும் உளவலியும் ஒருங்கே அமைந்த அவ்வுபகாரியின் பொறுமை புலவர் பாராட்டுக்கு உரியதாயிற்று.
“நம்முடைய சர்க்கரையைப் போல இனிப்பவர் யாரும் இல்லை. அவருடைய பொறுமைக்குப் பூமியும் நிகர் இல்லை” என்ற எண்ணத்தில் ஊறிய புலவர், செங்குன்றுரர் எல்லப்பரிடத்தில் உள்ள பொறுமையையும் சோதிக்க எண்ணினர்.
புலவரும் எல்லப்பரும் பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு மூன்று நாள் புலவரைத் தங்கச் செய்து அளவளாவினார் எல்லப்பர். பிறகு புலவர் விடைபெற்றுக் கொள்ளும் போது அவ் வுபகாரி, பரிசில் வழங்கினர். புலவர் அதைத் தம் இடக்கையை நீட்டி வாங்கினர். அப்போது அருகில் இருந்தவர் திடுக்கிட்டனர். ‘கொங்குப் புலவருக்கு மரியாதை தெரியவில்லையே! இடக் கைக்கும் வலக் கைக்கும் வித்தியாசம் தெரியாத இந்த முரட்டு மனிதர் தமிழ்ப் புலவரென்று சொல்லிக் கொள்ளும் தகுதியில்லாதவர்’ என்று சிலர் எண்ணினர்.
எல்லப்பருக்கும் புலவர் செயல் தவறா கவே பட்டது. அவர் கண்கள் சிவந்தன. “இடக் கையால் வாங்குவதுதான் கொங்கு நாட்டார் வழக்கமோ?” என்று படபடப்புடன் கேட்டார். புலவர் யோசனை சிறிதுமின்றிப் புன்முறுவல் பூத்தபடி உடனே விடை கூறிஞர்: “வலக் கை ஆணுார்ச் சர்க்கரையின் அன்புப் பரிசிலப் பெறும் தனி உரிமையை உடையது. அவர் முன் நீட்டும் கையைப் பிறர் முன் நீட்டுவதில்லை என்ற விரதம் உடையவன் நான். புலவர் பரிசில் பெறுவது முக்கியமே ஒழிய வலக்கையில் தான் பெற வேண்டும் என்ற வரையறை தொண்டை நாட்டுச் சான்ருேருக்கு இருக்க நியாயம் இல்லையே! ஆணுார்ச் சர்க்கரை, புலவர் தவறு செய்தாலும் பொறுக்கும் இயல்புடையவர். அவரிடத்தில் பழகியவர்களுக்கு இடக்கையென்றும் வலக்கையென்றும் தெரிவதில்லை. தாய் அணைப்பில் உள்ள குழந்தையைப்போல நாங்கள் ஆகிவிடுகிறோம்.”
உபகாரி ஒருவாறு அமைதி பெற்ருர். விடை பெற்றுக்கொண்டு சென்றார் புலவர். அவரை வழி விடச் சென்றார், எல்லப்பருடைய அவைக்களப் புலவர்.
“திருமகளைப் பக்தியுடன் பீடத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும்; அழுக்கிடத்தில் அமரச் செய்யக் கூடாது. உபகாரி தரும் பரிசு திருமகளைப் போன்றது; வலக் கையால் வாங்குவதற்குரியது” என்று தொண்டை நாட்டுப் புலவர் சொன்னர். அவருக்குக் கொங்குப் புலவர் செயல் சகிக்கவில்லை. அதனால் மனம் புண்பட்டிருந்தது. காரமாகப் பேசி விடவேண்டுமென்றே அவருடன் வழிவிட வந்தார்.
அவர் பேச்சைக் கேட்ட கொங்குப் புலவர், “மோதிரம் இடக்கையில் அணிவதில்லையா? இருகையாலும் வாரி வழங்குவதையும், ஆசையோடு இருகையாலும் அதைப் பெறுவதையும் நீங்கள் பார்த்ததில்லையோ? அப்போது இடக் கை ஏற்பதில்லையோ? என் கைக்கா பரிசில் தந்தார்? என் நாவன்மைக்கல்லவா பரிசில் கிடைத்தது? அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்ற நான்கும் இன்றி அறம் செய்ய வேண்டுமென்று திருக்குறள் சொல்கிறதே. உங்கள் தலைவர் தமிழருமை அறிந்தவரே. ஆனாலும் வெகுளியை விலக்கவில்லை. அவர் எங்கள் சர்க்கரையிடம் பொறுமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லி அவர் தம் ஊருக்குச் சென்று விட்டார்.
2
தொண்டை நாட்டுப் புலவரின் மனத்தில் ஆணுார்ப் புலவரின் செயலும் சொல்லும் உறுத்திக் கொண்டே இருந்தன. ‘மரியாதையற்ற காரியத்தைச் செய்துவிட்டுக் கோபம் வரக் கூடாதென்று சொல்வது முட்டாள்தனம் அல்லவா?’ என்று எண்ணினர். எப்படியாவது அந்தப் புலவரையும், அவருக்கு அவ்வளவு இறுமாப்பு உண்டாகும்படி செய்த சர்க்கரையையும் அவமதிக்கவேண்டும் என்ற நினைப்பு அவருக்கு உண்டாகிவிட்டது.
புலவர் கொங்கு நாட்டை நோக்கிப் புறப்பட்டார். ஆணுாருக்குப் போய்ச் சேர்ந்தபோது, முன்பு அறிந்திருந்த புலவர் அவரை வரவேற்ருர், சர்க்கரையின் முன் அழைத்துச் சென்றார். இன்னாரையும் புன்னகையும் கொண்டு சர்க்கரை புலவரை வரவேற்றார். விருந்து அருந்தச் செய்தார்.
தொண்டை நாட்டுப் புலவருக்குச் சர்க்கரையைச் சோதிக்க வேண்டும் என்ற நோக்கம் மேலிட்டது. அவ்விடத்துப் புலவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், “உங்கள் தலைவர் பொறுமை நிறைந்தவர் என்பதை நான் எப்படி அறிவது?” என்று கேட்டார்.
“எப்படி வேண்டுமானாலும் அறியலாம். புலவர் எது செய்தாலும் சிறப்பாக நினைப்பவர் அவர்; நயத்தக்க நாகரிகம் உணர்ந்தவர்” என்றார்.
அன்று சிறந்த விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. தொண்டை நாட்டுப் புலவரும் கொங்கு நாட்டுப் புலவரும் சர்க்கரையும் வேறு சிலரும் அமர்ந்து விருந்துண்ணலாயினர். புலவரை உபசரிக்கும் பேற்றைத் தாமும் பெற வேண்டும் என்ற ஆர்வத்தால் சர்க்கரையின் மனைவியும் தாயும் உணவு பரிமாறினர். தொண்டை நாட்டுப் புலவருக்கு உணவின்மேல் மனம் செல்லவில்லை. சர்க்கரையைச் சோதிக்க என்ன வழி என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தார். அப்போது சர்க்கரையின் அன்னை ஏதோ ஒன்றைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று புலவர் வெறி பிடித்தவரைப்போல எழுந்தார். சர்க்கரையின் அன்னை குனிந்து பரிமாறுகையில் சட்டென்று அவள் முதுகின்மேல் ஏறி அமர்ந்தார். விருந்துண்பவர் யாவரும் பிரமிப்படைந்தனர். அன்னையோ சர்க்கரையின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினாள். அவ் வள்ளல் புன்முறுவல் பூத்தார். “என்னை அன்போடு பத்து மாதம் சுமந்தாயே; இந்தத் தமிழ்க் குழந்தையை ஒரு நிமிஷம் சுமப்பதில் வருத்தம் என்ன?” என்று சாந்தமாகச் சொன்னார்.
அடுத்த கணத்தில் புலவர் கீழே குதித்தார். சர்க்கரையின் முன்னலே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். “நான் செய்த பிழையைப் பொறுக்கவேண்டும். உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லை. நீங்கள் கர்ணனென்று சொன்னர்கள். உலகில் எவ்வளவோ கர்ணர்களைக் காணலாம். உங்களைத் தருமபுத்திரரென்றே நான் எண்ணுகிறேன்” என்று விம்மி விம்மி உருகிச் சொன்னார்.
கொங்குப் புலவர், “புலவரே, சர்க்கரையைக் குழந்தையாகப் பெற்ற அன்னைக்கு இன்று மற்றொரு குழந்தை கிடைத்தது ஆச்சரியம். அந்தக் குழந்தை அன்னைக்கு முன்னே அழுது நிற்பது அதைவிட ஆச்சரியம்!” என்று உணர்ச்சிப் பூரிப்பிலே பேசினர். புலவர் செய்த பைத்தியக்காரச் செயலைவிட வள்ளலின் உயர் குணத்தையே அங்குள்ளவர்களின் உள்ளங்கள் எண்ணி உருகின.
தொண்டை நாட்டுப் புலவர் சர்க்கரையின் பொறுமையை இப்போது அறிந்துகொண்டார். தமிழ்ப் புலவர்களிடம் அவருக்குள்ள அன்புக்கு எல்லை காண முடியாதென்பதைக் கண்கூடாகவே தெளிந்தார். பின்னும் சில நாட்கள் ஆணுாரில் தங்கினர். அப்பால் சர்க்கரை தந்த பரிசில்களைப் பெற்று ஊருக்குத் திரும்பினர்.
3
அவர் தம் ஊரை விட்டுப் புறப்பட்டபோது ஆத்திரத்தில், தம் உடன் இருந்தவர்களிடம் தம்முடைய எண்ணத்தை வெளியிட்டிருந்தார். சர்க்கரையைச் சோதிக்கச் செல்வதாகச் சொல்லியிருந்தார். இந்தச் செய்தி எல்லப்பர் காதுக்கும் எட்டியது. ஆகவே புலவர்களும் எல்லப்பரும் அவருடைய வருகையை எதிர் நோக்கியிருந்தார்கள்.
புலவர் வந்தார். “போன காரியம் என்ன ஆயிற்று?” என்று நண்பர்கள் கேட்டார்கள். அவர்களோடு பேச அவருக்கு மனம் இல்லை. நேரே வேகமாக எல்லப்பரிடம் சென்றார்.
“பல காலமாக உங்களைப் போன்ற உபகாரி உலகத்திலேயே இல்லையென்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்களையே பாடினேன். உங்களுக்கு இணையாக யாரும் இருக்க மாட்டார்களா என்று ஆராய்ந்தேன். யாரும் இல்லையென்ற முடிவுக்கு வந்திருந்தேன். இப்போது வேறு ஒருவரைக் கண்டேன். எனக்கு ஒரு தாயையும் அண்ணனையும் கண்டு கொண்டேன்” என்று அவர் பேசினர்; பாராட்டினார்; போய் வந்த கதையைச் சொன்னார். அவர் உள்ளத்திலே ஏற்பட்ட உவகை ஒரு தமிழ்ப் பாடலாக உருவெடுத்தது.
செங்குன்றை எல்லாநின் செங்கைக் கொடையதனுக்கு
எங்கெங்கும் தேடி இணைகாணுேம்-கொங்கதனில்
சர்க்கரையைப் பாடலாம்; தண்டமிழ்க்கொன் றியாத
எக் கரையாம்பாடோம் இனி.
அதைக் கேட்ட எல்லப்பருக்கும் சர்க்கரையின் புகழ் இனித்தது. புலவர் செய்த சோதனையில் வென்ற சர்க்கரையின் புகழைக் கொங்கு மண்டலத்தோடு தொண்டை மண்டலமும் பிற மண்டலங்களும் பாராட்டின.
– எல்லாம் தமிழ், எட்டாம் பதிப்பு: ஜூன் 1959, அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், சென்னை.
இவ் வரலாற்றுக்கு ஆதாரம் கொங்குமண்டல சதகம், 51-ஆம் பாடல்.
திருத்து புகழ்பெறும் ஆணுாரிற்
சர்க்கரை செந்தமிழோன்
விருத்த முடன்அன்னை மேல்ஏறத்
தாய்வெகு ளாமல்எனைப்
பொருத்த முடன் பத்து மாதம்
சுமந்து பொறையுயிர்த்தாய்
வருத்தம் இதில்என்ன என்ருன்
அவன்கொங்கு மண்டலமே.
இதற்கு மேற்கோளாக, இச் சதகத்தின் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ தி.அ.முத்துசாமிக்கோனார்,
அன்னவெரிந் மேற்கொளச்சேய்
ஆனனத்தை நோக்குதலும்
என்னை ஈ ரைந்துதிங்கள்
இன்பமாய்ச் சுமந்திரே
இவரை ஒருநிமிட
மேசுமப்பீர் என்றுரைத்த
என்ற நல்லதம்பிச் சர்க்கரை காதல் என்னும் நூலில் உள்ள பகுதியை அடிக்குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.