புலம்பல் எஃப்.எம்.
இரு குழந்தைகளுக்குத் தாயான அவள் ஒரு புலம்பல் பேர்வழி. எப்போதும் யாரிடமாவது எதையாவது புலம்பிக்கொண்டே இருப்பாள். அதனால் அவளுக்குப் பட்டப் பேரே புலம்பல் எஃப்.எம். என்று ஆகிவிட்டது.
அவள் தன் பிறந்த வீட்டுக்கு வந்து, தந்தையிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்.
“என்னுடைய வீட்டுக்காரருக்கு குடிப் பழக்கம் அதிகமாகிவிட்டது. அதனால் வீட்டுச் செலவுக்கு போதுமான அளவு பணம் தருவதும் இல்லை. இந்த நிலைமையில், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது.

“கணவன்தான் சரி இல்லை என்றால், எனக்கு வாய்த்த குழந்தைகளும் மோசம். மகன், சொல் பேச்சு கேட்பதில்லை. ஒழுங்காகப் படிக்காமல், தறுதலைப் பையன்களோடு சேர்ந்து, ஊர் சுற்றித் திரிகிறான்.
“எட்டாவது படித்துக் கொண்டிருக்கிற மகள், இப்போதே காதல் விவகாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். அதுவும், ஒன்றல்ல; மூன்று காதல்கள். பள்ளியில் ஒரு பையன், ஊருக்குள் இருக்கிற ஒரு பொறுக்கி இளைஞன், மற்றும் பேருந்து நடத்துனரான நடுத்தர வயது ஆண் – ஆகிய மூன்று பேரை அவள் காதலிக்கிறாள். வயசுக் கோளாறு என்றாலும், இது மிதமிஞ்சிப் போய்விட்டது.
“பையன் எப்போது ஜெயிலுக்குப் போவானோ, மகள் எப்போது, யாருடன் ஓடிப் போவாளோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறேன்.
“ஒரு பிரச்சனையாக இருந்தால் பரவாயில்லை. எனக்கு வாழ்க்கையில் இருக்கும் அனைத்துமே பிரச்சனைதான். கணவன், மகன், மகள் மூவரும், ஒன்று போக ஒன்றாக, ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவே இல்லை.”
சமையற்காரரான அவளுடைய தந்தை அவளிடம் எதுவுமே பேசவில்லை. அவர் அவளை சமையற்கட்டுக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களை அடுப்பில் வைத்து, அதில் நீர் ஊற்றி, முதல் பாத்திரத்தில் உருளைக் கிழங்கையும், அடுத்ததில் முட்டையையும், மூன்றாவதில் காஃபிக் கொட்டையையும் போட்டு, அடுப்புகளை எரிய விட்டார்.
‘நான் என்னுடைய தீராத கஷ்டங்களை சொல்லிக்கொண்டிருக்கிறேன். அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க ஏதேனும் வழி செய்வார், பணத் தட்டுப்பாட்டை சரிப்படுத்த பண உதவி செய்வார் என்று பார்த்தால், எதுவும் பேசாமல் இங்கே வந்து சமையல் வேலையை செய்து கொண்டிருக்கிறாரே…! அதுவும் என்னை அழைத்து வந்து இதைக் காட்டுவதற்கு என்ன அவசியம்?’ என்று முணுமுணுத்துக்கொண்டாள் மகள்.
சுமார் கால் மணி நேரம் கழிந்ததும், தந்தை அடுப்பை அணைத்துவிட்டார்.
முதல் பாத்திரத்தில் இருந்த உருளைக் கிழங்கை ஒரு கிண்ணத்திலும், அடுத்ததில் இருந்த முட்டையை இன்னொரு கிண்ணத்திலுமாக வைத்தவர், மூன்றாவது பாத்திரத்தில் இருந்த நீரை ஒரு கோப்பையில் ஊற்றினார்.
“இதிலிருந்து என்ன தெரிகிறது உனக்கு?”
“இதில் புதிதாகத் தெரிவதற்கு என்ன இருக்கிறது? இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“மூன்று பாத்திரங்களிலும் வெவ்வேறு பொருள்களைப் போட்டு, ஒரே அளவு தண்ணீரை வைத்து, ஒரே விதமாகத்தான் சூடுபடுத்தினேன். மூன்றிலும் வெவ்வேறு விதமான விளைவுகள் நிகழ்ந்துள்ளன. முன்பு பச்சையாக இருந்தபோது கடினமாக இருந்த உருளைக் கிழங்கு, நீரில் வெந்ததும் மிருதுவாக ஆகிவிட்டது. முன்பு சாதாரண நிலையில், ஓட்டுக்குள் திரவமாக இருந்த முட்டைக் கரு, நீரில் வெந்ததும் திடத் தன்மை அடைந்துவிட்டது. கடினமான காஃபிக் கொட்டையோ, நீரில் வேக வைத்ததும், நீரின் குணத்தை மாற்றி, அதை சுவையான பானமாக ஆக்கிவிட்டது. இந்த மூன்றில் நீ என்னவாக ஆகப் போகிறாய்?
“சுடு நீரில் வேக வைப்பது என்பது, இந்த மூன்று பொருட்களையும் மாற்றக்கூடிய செயல். சூட்டைப் பொறுத்துக் கொள்ள இயலாவிட்டால், நன்மை தரத்தக்க இந்த விளைவுகளை இவை அடைந்திருக்காது” என்றார் தந்தை.
நமக்குப் பாதகமான சூழ்நிலைகளையும், நம்மைப் பக்குவப்படுத்தும் அனுபவங்களாக எடுத்துக்கொண்டு, நாம் மேம்பட வேண்டும். தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்பதுபோல, வாழ்வில் வரும் கஷ்டங்கள்தான் நம்மைப் புடம் போட்டு பக்குவப்படுத்துகின்றன.