புறாவும் புதல்வரும்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,540
கிள்ளி வளவனுக்குக் கோபம் வந்தது. தன் பகைவனான மலயமானுடைய மக்களை, கொலையானைக் கால்களில் இடறவைத்துக் கொல்ல முயன்றான்:
நிறுத்து!, என்ற ஒரு குரல் கேட்டது! நிமிர்ந்து வாளுடன் திரும்பினான்.
கோவூர் கிழார் நின்றிருந்தார்.
”உன் மரபு எது?” என்று கேட்டார், கிழார்.
“கிள்ளிக்கு ஒன்றும் விளங்கவில்லை!
புறாவுக்காகத் தன்னையே கொடுத்த சிபிச் சக்கர வர்த்தியின் மரபிற் பிறந்தவன் நீ!”
இந்தச் சிறுவர்கள் யார்?
கிள்ளிவளவன் புலவரைப் பார்த்தான்.
புறாவைப் போன்றவர்கள். இல்லையா?
வளவன் தலை குனிந்தான்.
மலையமான் உனக்குப் பகைவன் அல்லன். புலவர்களை வருத்தும் வறுமைக்குப் பகைவன் அவன். பகுத்துண்ணும் பண்பாளன் அவன். வறுமை என்ற கொலையானையைக் கண்டு கதறும் புலவர்களை அவன் கை தழுவியது. அவன் புதல்வர்கள், இதோ, உன்னுடைய கொலையானை முன் நின்று கதறுகின்றனர்..
வளவன் வாய்விட்டுக் கதறினான்.
“புலவரே, பொறுத்தருளும் ! புதல்வர்காள், அழாதீர்!” என்று அவர்களைத் தழுவிக் கொண்டான்.
யானை நின்ற இடத்திலே புகழ் நின்றது!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்