புரிந்து கொள்ள மறுப்பவன்




கம்பெனி வேலை முடிந்து களைப்பாய் வெளியே வந்த இஸ்மாயில் கம்பெனி வாசலில் ஞானசுதன் நிற்பதை பார்த்தான். இஸ்மாயிலை கண்டதும் ஞானசுதனின் முகம் மலர்ந்தது, வணக்கம் சார், என்றவன் சட்டென நாக்கை கடித்துக்கொண்டு தோழா என்றான். சிரித்துக்கொண்டே அவன் தோளில் கை போட்டுக் கொண்ட இஸ்மாயில் வா ஒரு டீ சாப்ப்பிடலாம் அழைத்துக்கொண்டு அந்த ‘பேக்கரியை’ நோக்கி நடந்தான்.
இருவரும் தோதான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார்ந்து கொண்டார்கள். உங்களோட ‘இரவு நட்சத்திரங்கள்’ கவிதை படிச்சேன். ரொம்ப அற்புதமா எழுதியிருக்கீங்க, நல்லா இருந்துச்சு, கண்கள் பனிக்க சொன்னான் ஞானசுதன். ஹா.ஹா. நீ உணர்ச்சி வசப்படுற அளவுல என் கவிதைகள் பிரமாதம் கிடையாது, ஆமா உன்னோட ‘வான் அழுகிறது’ அப்படீங்கற கவிதை நல்ல இருந்துச்சே பத்திரிக்கைக்கு அனுப்பிச்சியா? ச்..என்று சலித்துக்கொண்டான் ஞானசுதன் எங்க தோழா? அனுப்பிச்சாலும் பதிலே இல்லை. எனக்கும் வர வர பத்திரிக்கைகளுக்கு அனுப்பறதுக்கு மனசு வர மாட்டேங்குது. சரி இப்பத்தான் வலை தளத்துல போடலாமே, நிறைய வலை தளம் இருக்கு, சீக்கிரமா எல்லார்கிட்டேயும் உன் கவிதை போய் சேர முடியும்.
அதையைத்தான் இப்ப செஞ்சுகிட்டிருக்கேன்.அடுத்த இலக்கிய கூட்டத்துக்கு வர்றீங்களா? கண்டிப்பா வர்றேன், ஆமா உன் வேலை விஷயம் என்னாச்சு ? நான் இப்ப இலக்கியத்துல ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிறப்போ அதை எதுக்கு ஞாபகப்படுத்தறீங்க? ஞானசுதனின் இந்த பதிலுக்கு இஸ்மாயில் பதிலேதும் சொல்லவில்லை. பெருமூச்சு விட்டான். அடுத்த அரை மணி நேரம் அவர்கள் பல்வேறு இலக்கிய விமர்சனங்களை செய்தார்கள்.

சரி தோழா உங்களுக்கு டைமாகுது, நான் நம்ம தெருவுல நண்பர்கள் கூட்டம் ஒண்ணு இருக்கு. அதுல என்னைய வர சொல்லியிருக்காங்க, கவிதைகளை பற்றி சின்னதா ஒரு விளக்கம் தரணுமாம் நான் வரட்டா, விடை பெற்ற ஞானசுதனை வெறுமையாய் பார்த்தான் இஸ்மாயில். போன வாரம் ஞானசுதனின் அப்பா அவனிடம் சொன்ன வார்த்தை ஞாபகத்துக்கு வந்தது. இஸ்மாயில் நீ எப்படியோ குடும்ப கஷ்டத்துல படிக்க முடியலையின்னாலும் ஒரு கம்பெனியில சேர்ந்து இப்ப கெளரவமான சம்பளத்துக்கு வந்துட்டே, உன்னைய விட இவன் சின்னவனா இருந்தாலும் இவனும் டிகிரி முடிச்சுட்டு மூணு வருசமாச்சுல்ல, இவனுக்கு பின்னாடி இரண்டு பொண்ணுக இருக்கு, அவங்களை படிக்க வைக்கறதுக்கு முழி பிதுங்குது, இவன் ஏதாவது வேலைக்கு போனான்னா எனக்கு உபயோகமாயிருக்கும். நான் சொல்றேண்ணே, அவன்கிட்டே பதில் சொன்ன இஸ்மாயில் இப்பொழுது பெருமூச்சு விட்டான், வேலை என்றாலே முகத்தை தூக்கி வைத்து கொள்பவனிடம் எப்படி பேசுவது?
அன்று மாலை அதே ‘பேக்கரியில்’ உட்கார்ந்திருந்த பொழுது ஞானசுதன் எனக்கு தெரிஞ்ச இடத்துல நம்பிக்கையான பையன் ஒருத்தன் வேணுங்கறாங்க, கடைதான் வச்சு நடத்தறாங்க, நான் உன்னையத்தான் சொல்லி வச்சிருக்கேன், நீ கண்டிப்பா போகணும், கொஞ்சம் கடுமையான குரலிலேயே சொன்னான் இஸ்மாயில்.
ஐந்து நிமிடம் எதுவும் பேசாமல் இருந்தான் ஞானசுதன், தோழா நான் உங்க கிட்டே வேலை வேணும்னு கேட்டேனா? சூடாய் கேட்டான். அவனின் கேள்வி இவனை தடுமாற வைக்க இல்லை, நீ வேலைக்கு போனா உன் குடும்பத்துக்கு உதவியா இருக்கும்னு நினைச்சேன், ஐந்து நிமிடம் அமைதியாக இருந்த ஞானசுதன் இங்க பாருங்க, தோழரே வேலைங்கறது எப்ப வேணா எனக்கு கிடைக்கும், நான் நினைச்சா இப்ப கூட வேலை வாங்க முடியும், ஆனா என்னோட இலக்கிய லட்சியம் என்னாகும்? தயவு செய்து என் சொந்த விஷயத்துல தலையிடறத நிறுத்திங்குங்க..பட்டென சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.
அதிர்ந்து விட்டான் இஸ்மாயில். இப்பொழுது நான் என்ன சொல்லி விட்டேன், இவ்வளவு கோப்படுகிறான். வேலைக்கு போனால் உன் குடும்பத்துக்கு உதவியாய் இருக்கும் என்று நினைத்தது குற்றமா? இலக்கிய லட்சியம் என்கிறான். இலக்கியம் பசியை தீர்த்து விடுமா? ஏன் எனக்கு படிப்பு வரவில்லை என்பதற்கு காரணமே இந்த இலக்கியம்தானே ! குடும்பத்து பசி, எனக்கு பின் காத்திருக்கும் மூவர் இவர்களுக்கு என்னுடைய இலக்கியம் சாப்பாடு போட்டு விட்டதா? ஐந்து வருடம் இந்த கம்பெனியின் உழைப்பு இன்று நிரந்தர சம்பளம் குடும்பத்து பசியை போக்கியிருக்கிறதே. அதற்காக இலக்கியத்தை விட்டுவிட்டேனா? கிடைக்கும் நேரம் அதனோடு உறவாடிக் கொண்டுதானே இருக்கிறேன். இது ஏன் புரிய மாட்டேனெங்கிறது இந்த இளைஞனுக்கு..!
கன்னத்தில் கை வைத்து கவலையுடன் உட்கார்ந்து கொண்டான் இஸ்மாயில். அவன் தோள் மேல் ஒரு கரம் விழுந்ததும் நிமிர்ந்து பார்த்தான்..எதிரில் பூபாலன் நின்று கொண்டிருந்தான்.
ஞானத்துகிட்டே நீங்க பேசிகிட்டிருந்ததை நானும் பின்னாடி உட்கார்ந்து கேட்டுட்டு இருந்தேண்னே. நானும் உங்க தெருதான், என்னையும் உங்களுக்கு ரொம்ப வருசமா தெரியும். நான் போன வருசம் டிகிரி முடிச்சுட்டு வேலை தேடிகிட்டு இருக்கறவன். நீங்க அவனுக்கு சொன்ன வேலைய எனக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்தா நல்லாயிருக்கும்.. பணிவுடன் சொன்னான்.