புயலும் படகும்
கதையாசிரியர்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 7,812
(1943ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7
6. அந்த மற்றொரு பெண்

இரவு முழுவதும் நான் பிரபாகரனுடைய படுக்கையில் தவித்துக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேரங்கூட எனக்குச் சரியான தூக்கம் வரவில்லை. மின்சார உதவியினால் இடையிடையே ஒளிரும் சிவப்பு எழுத்துக்கள் போல, பிரபாகரனுடைய சில வாக்கியங்கள் திடீரென்று கண்முன்பு தோற்றும். துன்புற்ற என் மனம், ‘மனித வாழ்க்கை அதிகச் சுகமுள்ளதாக ஆகவேண்டுமென்றுதானே இயற்கை காதலைப் படைத்திருக்கிறது? காதலென்பது தெய்வம்; பிசாசு அல்ல. அப்படி யிருக்க, பிரபாகரன் போன்ற இளைஞர்களை அது ஏன் பலி வாங்குகிறது? அல்லது காதலென்பது சரஸ்வதியைப் போன்ற சுமுகமான தெய்வமாக இராமல் காளியைப் போல உக்கிர மாக இருக்குமோ?’ என்று எண்ணும்.
ரெயில் வண்டித்தொடர் சட்டென ஒரு தண்டவாளத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்வதுபோல, பிரபாகரன் விஷயத்தில் மூழ்கியுள்ள என் மனம் திடீரென்று பஸ்ஸில் நான் கண்ட அந்த இரு பெண்களைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விடும். என் கட்டிலுக்கு அருகிலேயே சகாராமன் தரையில் படுத்துத் தூங்கினான். அவனுடைய அமைதியற்ற நிலையிலிருந்து அவனுக்கும் தூக்கம் வரவில்லை என்பது புலனாயிற்று. ஆனால் நாங்கள் இருவரும் ஓர் அக்ஷரங்கூடப் பேசவில்லை.
பேசுவதற்கு என்ன இருக்கிறது? சகாராமன் எந்தப் பெண்மணியைத் தேட வந்திருந்தானோ, அவள் ஏற்கனவே தன் கணவனை விட்டுத் தனக்குப் பிடித்த வேறொருவனுடன் ஓடி வந்தவள். அவள் இப்பொழுது அவனையும் விட்டு –
இந்தச் சமயத்தில் அவள் எங்கே இருப்பாள்? ஒருவேளை எவளாவது ஒரு வேசியின் வீட்டில்-
அந்தக் கசாப்புக் கடைக்காரன் பசுவைப் போல் சாதுவான அந்த எளிய பெண்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பானா, அல்லது அவர்கள் இருவரும் தாங்களாகவே இத்தகைய நரகத்தில் குதிக்கத் தயாராகியிருப்பார்களா?
சகாராமன் தேடும் பெண்மணி ஒருவேளை வேசியாவதற்கு முழுமனத்துடன் இசைந்திருக்கலாம்! ஆனால் அந்த மற்றொரு பெண்….? அவளுடைய தீன வடிவம் என் கண்முன்பு நின்றது. ‘வாருங்கள் ஐயா! ஓடி வாருங்கள்! இந்தக் கொலைபாதகன் என் கழுத்தை அறுக்கிறான். யாராவது ஓடிவந்து காப்பாற்றுங்கள்!’ என்று அவள் உரக்கக் கூவுவதுபோல எனக்குத் தோன்றியது.
நான் உடனே படுக்கையில் எழுந்து உட்கார்ந்தேன். அருகில் திவாகரன் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். தரையில் சகாராமன் இப்படியும் அப்படியும் புரண்டபடி இருந்தான். என் கண்ணெதிரே இருட்டில் அந்தப் பெண் தோன்றினாள்.
அவளுடைய சரித்திரம்-
இருபது, இருபத்திரண்டு வயது இருக்கும் அவளுக்கு. பார்வைக்கு என்னவோ மிகவும் ஏழையாகத்தான் இருந்தாள். இந்த உயர்வகுப்புப் பெண் அந்த அரக்கனுடைய வலையில் எப்படிச் சிக்கினாள்? பிரபாகரனைப் போலவே இவளுடைய துரதிருஷ்டமும், பயனற்றுப்போன காதலில் முளைத்திருக்குமோ?
இப்படி எத்தனையோ கேள்விகள் இரவு முழுவதும் என்னைக் குழப்பின. பொழுது எப்போது விடியுமோ என்று ஆகி விட்டது எனக்கு! ஆனால் விடிந்தபின்பு இரவே தேவலை என்று தோன்றியது.
சகாராமனுடன் நான் வீட்டை விட்டுப் புறப்பட்டேன். ஆனால் முதல் நாள் பஸ்ஸில் கண்ட அவ்விரு பெண்மணிகளை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது என்பதுதான் தெரியவில்லை. பஸ் ஸ்டாண்டில் விசாரித்ததில், அந்த ஆசாமி நரஸோபா தோட்டத்துக்குப் போகவில்லை என்ற செய்தி கிடைத்தது.
ஆனால், அவன் ஊருக்குள்ளே இருந்தாலும் எங்கள் கண் களில் எப்படித் தென்படுவாள்? அவ்விருவரையும் அவன் எங்கே ஒளிந்து வைத்திருக்கிறானோ, யார் கண்டது?
ஊரைச் சுற்றிக்கொண்டே, நாங்கள் குளக்கரைப் பக்க மாக வந்தோம். ‘விசாலமான இந்தக் குளத்தில் மூழ்கிப் போய், கீழே பாசிக் கொடிகளில் சிக்கியவனைக்கூட ஒருவேளை எளிதில் கண்டுபிடிக்கலாம்; ஆனால் இந்தப் பெரிய நகரத்திலுள்ள மக்கள் கூட்டத்தில் அதிலும் வேசிகள் வாழும் இடத்தில் – எங்கோ ஓர் இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த இளநங்கைகளைப் பற்றித் தகவல் சேகரிப்பது சாத்தியமா?’ என்று நினைக்கலானேன்.
நாங்கள் அம்பாதேவியின் கோயிலருகில் வந்திருந்தோம். தேவியைத் தரிசித்துப் போகலாமென்று உள்ளே சென்றோம். ஆனால் தேவியை வணங்கியபோது எனக்குள்ளேயே சிரிப்பு வராமல் இருக்கவில்லை. ‘தெய்வம் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கிறது என்கிறார்களே. ஆகவே, “அந்தப் பெண்கள் எங்கே?” என்று இந்த அம்பாதேவியையே கேட்கலாமே!’ என்றது என் மனம்.
ஸ்டேஷன், சாப்பாட்டுக் கிளப்பு, ‘கபே’, மாலை நேரத்தில் சினிமாக் கொட்டகை – கண்ட இடங்களில் நாங்கள் திரிந்தோம். ஆனால் அந்த இளநங்கைகளைப் பற்றியோ அவர்களை அழைத்து வந்த அந்தக் கொடிய அரக்கனைப்பற்றியோ எவ்விதப் புலனும் கிடைக்கவில்லை.
இரவுச் சாப்பாடு முடிந்ததும், “பகலில் தேடிப் பயனில்லை; ஒருகால் அவள் அகப்படுவதாக இருந்தால் இரவு நேரத்தில்தான் அகப்பட வேண்டும்” என்றான் சகாராமன்.
“எங்கே அகப்படுவாள்?” என்றேன்.
“அந்தக் கொலைக்காரன் சாதுவான இவ்வித அபலைகளைக் கொண்டு விடும் கொலைக்களத்தில் தான் போய்த் தேட வேண்டும்.”
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மறைந்துபோன இரண்டு பெண்மணிகளைத் தேடுவதற்காக நள்ளிரவில் வேசிகளின் தெருவில் சுற்றுவதா? அழகுதான்!
அங்கே எவனாவது நமக்குத் தெரிந்தவன் நம்மைப் பார்த்து அருணாவிடம் நம்முடைய இந்த ஆராய்ச்சியைப் பற்றி ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லி விட்டானானால்? அப்போது பூமி வெடித்து நாம் அதற்குள் மறைந்து போனால் நல்லது என்ற நிலைமை வந்துவிடும்.
நான் சகாராமனை நேராகக் கொங்கணத்துக்குத் திரும்பிப் போகச் சொன்னேன். ஆனால் அவன் எவ்விதத்திலும் தன் பிடிவாதத்தை விடவில்லை.
கடைசியாக, மறுநாள் காலையில் அவனைக் கோல்ஹாபூரி லேயே விட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.
வீட்டில் வேலைக்காரன் இருந்தான்; சமையற்காரி இருந்தாள்; யாவும் அந்த அந்த இடத்தில் இருந்தன. ஆயினும் வீட்டுக்குள் கால் வைத்ததுமே வழக்கமாக எனக்கு உண்டா கும் ஆனந்தம் அன்று இல்லை. அடிக்கடி அருணாவின் நினைவு வந்தது. ‘அப்பா, அப்பா’ என்று அஜயனின் கூக்குரல் காதில் சுழன்றது. மறுநாள் நடக்க வேண்டிய வழக்கைப் பற்றிய கட்டுகளைக் குமாஸ்தா மேஜைமேல் வைத்திருந்தான். அவற்றைப் படிப்பதை விடுத்து நான் வீடு முழுவதும் சுற்றலானேன்.
ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும், புதிய காட்சிகள் பல புலப்பட்டன.
பகலில் சந்திரனுடைய ஒளி மங்கிப் போகிறது அல்லவா? அருணா இருக்கும்போது இந்தக் காட்சிகளும் அப்படித்தான் மங்கியிருந்திருக்கும். ஆனால் இப்போது அவை முழுமதி போல என்மீது அமுதத்தைப் பொழியலாயின.
சமையலறையிலுள்ள இந்த இடத்தில்தான் அருணா ஒரு நாள் தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள். இடையில் அவள் ஒரு சிறு துணுக்கை எடுத்துச் சாப்பிடலானாள். அதற்குள் நான் உள்ளே வந்தேன். ‘‘எனக்குக்கூடத் தேங்காய் பிடிக்குமடீ!” என்றேன்.
அவள் தேங்காயைப் பெயர்ப்பதற்காகக் கையிலிருந்த அரிவாள்மணையைத் தூக்கினாள். ஆனால் நான், “ஐயோ! அந்தத் தேங்காய் எனக்குப் பிடிக்காதே” என்றேன்.
அவள் என்னை வியப்புடன் பார்த்தாள். நான் மடக் கென்று அவளருகில் உட்கார்ந்து, அவள் இதழ்களில் என் இதழ்களைப் பொருத்தி அவள் வாயிலிருந்து பாதித் துணுக்கை என் வாயில் இழுத்துக்கொண்டேன். அவள் கலகலவென்று நகைத்தாள்.
இதற்குள் அருகில் ஏதோ ஓசைப்படவே, நாங்கள் இருவரும் திடுக்கிட்டு எழுந்தோம். சமையற்காரிதான் வந்து விட்டாளோ என்று நினைத்தோம். இருவரும் விலகிப் போனதும் பார்த்தால், லட்டுகள் வைத்திருந்த பித்தளை டப்பாவைப் பூனை குடைந்து கொண்டிருந்தது.
இவ்விதமாக, வீட்டிலுள்ள ஒவ்வோர் இடமும், ஒவ்வொரு பொருளும் அருணாவை இனிமையாக நினைப் பூட்டியது. மாலை நேரத்தில் நீருற்றுக்கள் மேற்குத் திசையை நோக்கி, மனத்தை மயக்கும் பலவகை வண்ணங்களில் எழும்பித் திவலைகளாகச் சிதறும் அல்லவா? என் நினைவுகளும் அப்படித்தான் இருந்தன. எத்தனையோ விதங்கள்; ஆனால் எத்தனை இனியன!
எதிலும் என் கவனம் செல்லவில்லை. இரவு சாப்பாடு ஆனதும் பயணத்தினால் ஏற்பட்ட களைப்பைத் தீர்த்துக் கொள்ள உடனே படுக்கையில் போய்ப் படுத்தேன். ஆனால் கண்கள் மூடினால் தானே?
‘வீட்டுக்காரி இல்லாவிட்டால் வீடு காடாகத் தோன்றும்’ என்று ஒரு கவி சொல்லியிருக்கிறானே; அதன் உண்மையை ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன். அடர்ந்த கானகத்தில் இரவைக் கழிப்பதாக இருந்தால்கூட என் மனம் அத்தனை அமைதியற்று இருந்திராது. மெத்தென்ற இலவம் பஞ்சுத் தலையணை கூரிய கல்லைப் போல என்னைக் குத்தியது. படுக்கை மேலிருந்த தூய வெண்மையான விரிப்பில் யாரோ முட்களைப் பரப்பியிருப்பது போல எனக்குத் தோன்றியது, மந்தமான நீல ஒளி நிரம்பிய அந்த விசாலமான அறை ஓர் இருட்டறையைப் போல் பயங்கரமாகத் தெரிந்தது.
நான் படுக்கையிலிருந்து எழுந்து சற்றும் மன அமைதியின்றி வட்டமிடலானேன். எதையோ இழந்துவிட்டாற் போல் இருந்தது எனக்கு. பார்க்கப் போனால், எப்போதும் எனக்குள்ள வசதிகளில் எவ்விதக் குறைவுமில்லை. அருணாதான் என்னிடமிருந்து விலகியிருந்தாள்.
நடுநிலையில் நின்று, என் அமைதியின்மையை நானே கவனித்தேன். செங்குத்தான மலையுச்சியிலிருந்து மிகவும் அகாதமான பள்ளத்தைப் பார்க்கையில் மனிதனுக்குத் தலை சுற்றுமே, அப்படித்தான் இருந்தது என் மனநிலை. ‘மனிதனுடைய மனம் மோட்டார்காரிலுள்ள எஞ்சினைப் போன்றது. கார் வெளிக்கு அழகாக இருக்கும். அது ஒய்யாரமாக ஓடும் வரையில் நாம் யாரும் அதன் எஞ்சினைப்பற்றி அவ்வளவாகச் சிந்திப்பதில்லை. அது ஓடாமல் நின்றுவிடும்போதுதான் எஞ்சினைத் திறந்து பார்க்கிறோம். அப்போது மேல்மூடியை அகற்றியவுடனே நமக்குப் புலப்படும் காட்சி, எஞ்சின் அல்லது காரின் வெளியழகுக்கு முற்றும் மாறாக இருக்கிறது!
அருணாவின் பிரிவினால் நான் அமைதி இழந்திருந்தேன் என்பது வெளிப்படை. ஆனால் அருணா அப்போது அந்த இடத்தில் எனக்கு எதற்காகத் தேவையாக இருந்தாள்? என் அறிவுப் பசியைத் தீர்ப்பதற்கா?
வேறு யாராயினும் இதே கேள்வியைக் கேட்டிருந்தால், நான் ‘ஆம்’ என்றே பதில் அளித்திருப்பேன். ஆயினும் ஆத்ம வஞ்சனை பிறரை வஞ்சிப்பது போல அத்தனை சுலபமல்ல.
அப்போது அருணா என் அறிவுக்குத் தேவையாக இருக்க வில்லை. என் உணர்ச்சிக்கு – என் உடலுக்கு – அவள் தேவையாக இருந்தாள். அவள் அங்கு இருந்திருந்தால், அவளோடு வெட்டிக்குப் பேச்சுவார்த்தை யாடுவதைவிட அவள் மடியில் தலையைச் சாய்த்து, அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதே எனக்குப் பரமானந்தமாக இருந்திருக்கும். அவளுடைய பேச்சு இனிமையாக இருந்தாலும், அந்தப் பேச்சை என் இதழ்களினால் மூடுவதில் அதிக இன்பம் இருக்கிறதென்றே அப்போது கருதியிருப்பேன். மனிதனுடைய காதலில் உடலின்பத்தின் தேவை எவ்வளவு அடங்கியிருக்கிறது என்பதை அந்தக் கணத்தில் அறிந்துகொண்டேன்.
கணப்பொழுது என்மீதே எனக்குக் கோபம் வந்தது. உடனே சிரிப்பும் வந்தது. மனிதன் தன்மீதே கோபித்துக் கொள்ளும்படி இந்தத் தேவையில் அத்தகைய அதிசயம் என்ன இருக்கிறது? பசியெடுத்தால் சாப்பிடக் கேட்பதில் ஒன்றும் குற்றமில்லை. அப்படி அது குற்றமாகவே இருந்தா லும், பசி எடுத்ததும் உடல் எப்போதும் வருந்தாமலிருப்பதில்லை. நாம் காதல் என்று சொல்லுகிறோமே, அதுவும் இவ் விதமான ஒரு பசிதான். அந்தப் பசி அதிக விந்தையானது என்பது உண்மை; இயற்கையைப் போலவே மனிதனுடைய சான்றாண்மைக்கும் அதனுடன் தொடர்பு உண்டு. ஆனால் என்ன இருந்தாலும், காதலென்பது வெறும் தெய்விக உணர்ச்சியாகாது; வெறும் காவியமாகாது.
எனக்கு உடனே பிரபாகரன் நினைவு வந்தது. சுலபாமீது தான் கொண்டிருந்த முதற் காதலை அவன் இவ்வாறு பிரித்து ஆராய்ந்திருந்தானானால்?
ஆனால்! ஒரு சிறு சொல்தான்; இந்த ஒரு சொல் மனித வாழ்க்கையை எவ்வளவு துன்பமயமாக்கி யிருக்கிறது! வாழ்க்கையிலுள்ள கசப்பான உண்மைகள் மிகவும் தாமதமாகவே தெரிகின்றன. அந்தச் சமயத்தில் மனிதனுடைய உதட்டில் மருந்துகளின் கசப்பு மட்டும் எஞ்சி நிற்கிறதே தவிர, அவனுடைய நோய் தீர அவை துளியும் பயன்படுவ தில்லை. யானைகளைப் பிடிப்பதற்காகத் தோண்டிய குழிகளை அழகிய பசுமையினால் மறைத்து வைப்பது வழக்கம். அப்படித் தான் சமூகம் வாழ்க்கைப் பாதையிலுள்ள மேடு பள்ளங்களை மோகனமான காவியங்களென்ன, மயக்கும் தத்துவஞானங் களென்ன – இவற்றின் மறைவில் ஒளித்து வைத்துத் தன் சந்ததிகளையே பலி வாங்குகிறது. காதலிலிருந்து மதம் வரையில்,திருமகள் தொடங்கிக் கலைமகள் ஈறாக, வாழ்க்கையை வளர்க்கும் சுவைகள் யாவும் நம்முடைய அஞ்ஞானத்தினால் திரிந்து போயிருக்கின்றன. அவற்றில் படர்ந்துள்ள நஞ்சினால் இளைஞர்களின் தலைமுறை ஒளிகுன்றி, அகாலத்தில் வற்றிப் போய்க் கொண்டிருக்கிறது.
இரவில் தூக்கத்திலிருந்து நான் விழித்துக்கொண்ட போதும் இந்தச் சிந்தனைகளே கூத்தடித்த வண்ணமாக இருந்தன.
காலையில் அருணாவின் சேமக் கடிதம் வந்தது; அதை நாலைந்து தரம் படித்துவிட்டு அமைதியாக வேலையில் ஈடுபட்டேன்.
பட்டருக்கு ஒரு கார்டு எழுதினேன்: “பிரபாகரன் அநேகமாகப் பம்பாய்க்குப் போயிருக்க வேண்டும். அங்குள்ள என் நண்பர்களுக்கு அவனைத் தேடுமாறு கடிதங்கள் எழுதி யிருக்கிறேன். சௌகரியப்படும்போது நானும் போய் வரு வேன்” என்ற செய்தியை எழுதிவிட்டேனே தவிர, என் மனம் அதை எழுதும் சமயத்தில், ‘சாதுக்களான இந்த இரண்டு ஜீவன்களை இப்படி ஊசலாட வைப்பதனால் தீய பலன் உண்டாகாமலிருக்குமா? ஏமாற்றத்தைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம்; காரணமின்றி வளர்த்த ஆசையைப் பொறுப்பது அதைவிடக் கஷ்டமானது. இன்றோ நாளையோ பிரபாகரன் வந்து தம்மைப் பார்ப்பான் என்ற ஆசையில் இந்த எளிய ஜீவன்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு அவன் வரவை எதிர்பார்த்திருக்க, துரதிருஷ்டவசமாக அவன் தற்கொலை செய்துகொண் டிருப்பானானால்? அப்போது அவர்கள் கண்களில் நிற்கும் பிராணன் ஒரு கணத்துக்குள் அங்கிருந்து நீங்கிவிடுமே!’ என்றது.
இனி நடப்பதை இனிமேல் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதி அந்தக்கடிதத்தைத் தபாலில் போட்டேன். சாயங் காலம் வரையில் வேலையிலேயே என் பொழுது கழிந்தது.
ஆனால், சாப்பாடானதும் அன்றைப் பத்திரிகையைப் படிப்பதற்காக என் அறையில் உட்கார்ந்ததுதான் தாமதம்; திடீரென்று மப்பும் மந்தாரமும் சூழ்ந்த வானம் போல என் மனம் அமைதியை இழந்தது. அன்றைப் பத்திரிகையில் காப்டன் ராய் செய்த ஒரு பிரசங்கம் இருந்தது; காங்கிரஸ் காரியக் கமிட்டியைப் பற்றிய செய்தி இருந்தது; கர்ப்பத்தைக் கலைக்க உதவிய ஒரு பெண் டாக்டர்மீது நடக்கும் வழக்கு வந்திருந்தது; எல்லாம் இருந்தன. ஆயினும் பதினைந்து இரு பது வரிகள் படித்ததும் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை; குறுக்கும் நெடுக்குமாக நடக்கலானேன்.
என் மனம் ஒரு பெரிய கேள்விமாலையைக் கோத்துக் கொண்டிருந்தது: அருணா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? சாப்பிடுகையில் என் ஞாபகம் வந்து, அவள் கையிலுள்ள கவளம் வாயில் போடும்போது தடைப்பட்டிருக் குமா? தூங்கும் அஜயனைப் பார்க்கையில் என் நினைவு வந்து, அவள் அவனை முத்தமிட்டிருப்பாளா? தங்கைகளுடன் என்னைப்பற்றிய விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்து, அவர் களுடைய பரிகாசத்தை அவள் ஏற்றுக் கொள்வாளா? அப்புறம், இரவில் தூக்கத்திலிருந்து விழிக்கும் போது ஒரு புறம் அஜயன் இருக்க மற்றொரு புறத்தில் ஒரு மனிதர் இல்லையே என்று அவள் மனம் குறுகுறுத்துக் கொண்டிருக்குமா?
அமைதியின்மையைப் போக்க, என் அறையில் மாட்டியிருந்த அருணாவின் போட்டோவை எடுத்துக் கட்டிலில் தலை மாட்டில் வைத்துவிட்டு, நித்திரையை வருவித்தேன்.
மறுநாள் காலையில் கண் விழித்ததுமே அந்தப் போட்டோவின் மேல் என் பார்வை விழுந்தது. எனக்குள் சிரித்துக் கொண்டேன். சிறு குழந்தையைப் போல நான் பைத்தியமாகியிருந்தேன். தன் பொம்மையையோ விளையாட்டுப் பொருளையோ அருகில் வைத்துக்கொண்டு குழந்தை தூங்கு கிறதல்லவா? நானும் அதைத்தான் செய்தேன்.
பரபரவென்று எட்டு நாட்கள் கழிந்து போயின. பகல்களோடு இரவுகளும் கடந்தன. ஆனால் ஒவ்வோர் இரவிலும் அருணாவினிடமுள்ள நாட்டத்தினால் உண்டான இனிய வேதனை குறைந்ததாகவே இல்லை; அது வளர்ந்துகொண்டே போயிற்று. கட்டில் மீது அருணாவின் போட்டோவை நிலை யாகவே வைத்திருந்தேன். சீதை வனம் சென்றதும் ராமன் அவளுடைய பொன்னுருவைக் கொண்டு அசுவமேத வேள்வியை முடித்தான் என்று கதை உண்டல்லவா? கட்டில் மீது அருணாவின் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அது எனக்கு ஞாபகம் வரும். என் மனம் கற்பனையுலகில் திரியும்; ராமனுடைய வாழ்க்கையில் சீதை பின்பு திரும்பி வரவே இல்லை. ஆனால் என் அருணா விரைவில் திரும்பி வருவாள். கட்டில் மீதுள்ள தன் படத்தைப் பார்த்து அவள் களுக்கென்று நகைத்து, “இச்! இதை யாராவது பார்த்தால் என்ன சொல்லமாட்டார்கள்?” என்பாள். “என்ன சொல்வார்கள்?” என்று நான் கேட்பேன்.
“எல்லாரும் உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்பார்கள்!”
“நான் அவர்களிடம் என்ன சொல்வேன் தெரியுமா? ‘நீங்கள் யாவரும் மிகவும் நல்ல டாக்டர்கள். என் நோயைச் சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்!’ என்பேன்.”
“இச்! இதென்ன வேடிக்கை!”
அருணாவின் இந்த இனிய கற்பனைப் பேச்சைக் கேட்கும் போது, ‘காதலென்பது உண்மையில் ஒரு பித்துத்தான். அது மிகவும் இனிமையாக இருக்கலாம்; வாழ்க்கையிலுள்ள எண்ணிலாத துன்பங்களை மறக்கச்செய்யும் சக்தி அதற்கு இருக் கலாம்; அதன் பாசத்தில் கட்டுப்படாத உயிர் மிகவும் அருமை யாக இருக்கலாம்; ஆனால், இவை யாவும் உண்மையே என்றா லும், பித்தென்னவோ பித்துத்தான்!’ என்ற எண்ணம் அடிக்கடி எழும்.
ஒரு கணம் அயல் மனிதன்போல அருணாவின் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற தீவிர ஆவல் எழும். ‘உன்னைப் போன்ற அறிவுள்ள இளைஞனா இப்படிப் பித்துப் பிடித்து அலைவது? அருணா, அருணா என்று நீ இந்தப் படத்தி லுள்ள பெண்ணின் பெயரை ஜபிக்கிறாயே. இந்தப் பெண் உன் வாழ்க்கையிலேயே வராமலிருந்தால்? உனக்கும் வேறொரு பெண்ணுக்கும் மணமாகியிருந்தால்? கல்லூரியில் உன்னுடன் படித்த கருணா உனக்குக் கிடைத்திருந்தால்? இந்தச் சமயத் தில் கருணா அருகில் இருக்க வேண்டும் என்றுதான் அப்போதும் நீ தவித்துக்கொண்டிருப்பாய்!’ என்று அந்தப் பார்வை சொல்லும்.
‘கருணா எனக்குக் கிடைத்திருந்தால்?’ என்று எண்ணிய நிமிஷத்தில் அருணாவின் அந்தப் படத்தை என்னால் பார்க்கவே முடியவில்லை. கருணாவை நான் மணந்திருந்தால், இந்தச் சமயத்தில் அவளுடைய படம் என் கட்டிலில் இருக்கும்; அவள் அருகில் இல்லை என்று நான் தவித்துக் கொண்டிருப்பேன்; அவள் படத்தைப் பல தடவை முத்தமிட்டுக்கொண்டு அமர்ந்திருப்பேன்.
கருணாவும் என் வாழ்வில் வரவில்லையென்றால்? அப்போது நான் என்ன பிரம்மசாரியாக இருந்திருக்கப் போகிறேனோ? அல்லது கோயிலில் ஒரு பெண் தெய்வத்தை ஸ்தாபித்து அவளை வழிபடுவதிலேயே மனநிம்மதி அடைந்திருப்பேனா?
அதெல்லாமில்லை! கருணாவும் அருணாவும் பிறக்காமலே இருந்திருந்தாலும் நான் மூன்றாவது பெண் எவளையாவது மணந்துகொண்டுதான் இருந்திருப்பேன்; அவளுடைய பிரிவினால் தவித்துக்கொண்டுதான் இருந்திருப்பேன்; அவள் படமும் இப்படித்தான் கட்டிலில் வைத்திருக்கும்; அவள் ஸ்பரிசத்துக்காக இப்படித்தான் ஏங்கிப் புரண்டு கொண்டு இருந்திருப்பேன்!
இன்று நான் அருணாவைக் காதலிக்கிறேன் என்பது உண்மை. ஆனால் அவளை மணக்காமல் இருந்திருந்தாலும் காதலித்திருப்பேன் என்பது மட்டும் உண்மையல்ல!
கருணாவை நான் ஒரு காலத்தில் காதலித்தது உண்மை; இன்று-?
இன்று எனக்குக் கருணாவின்மீது காதல் உண்டு என்று எவனாவது சொல்வானா? சிறுவயதில் ஆற்றுமணலில் விளையா டும்போது கட்டிய மணல்வீட்டைப் போன்றதுதான் அவள் மீதிருந்த என் காதல்; காதலின் விளையாட்டு அது. காதல் ராஜ்யத்தில் முதலில் கால் வைக்கும்போது புதுமையினால், அந்தக் கணத்தின் நினைவு மனிதனுக்கு இருப்பது இயல்பு. அந்தக் கணத்தில் ஒரு மந்திரசக்தி இருக்கிறது என்பது உண்மை. ஆனால் உலகம் கணநேரத்து மாயவித்தை அல்ல. சகாராமைப் போலப் பாலையில் வருஷக் கணக்காகச் செய்யும் பயணம் அது. கடுமையான அந்தப் பயணத்தில் நட்புக் கொண்ட கூட்டாளியைத்தான் மாந்தர் உண்மையாகக் காதலிப்பர்.
உண்மையான காதல்! அப்படியென்றால் காதல் பொய்யாகவும் இருக்குமோ? கல்லூரியில் கருணாவிடம் எனக்கு உண்டான காதல் பொய்யா? அல்லவே அல்ல.
பிரபாகரனுக்குச் சுலபாவிடம் உண்டான காதல் பொய்யாக இருக்குமோ? இருக்கவே இருக்காது.
அவ்வளவேன்? பிரபாகரனிடம் சுலபா வெளியிட்ட மென்மையான உணர்ச்சி வெறுமே ஒரு நாடகமாக இருக்குமா? இருக்கவே இருக்காது.
முதற் காதல் பொய்யாக இருப்பதில்லை; ஆனால் அது உண்மையாகவே இருக்கும் என்பதும் இல்லை!
முதற் காதல் என்பது விந்தையான பாதி உண்மை. பாதி உண்மைகள் கவர்ச்சிகரமாகவும் முடிவில் எரிப்பனவாக வுமே உள்ளன என்பதை உலகில் உணரா தவன் எவன்?
இயற்கையிலுள்ள கவர்ச்சி, உணர்ச்சிப் புதுமை, காவிய மோகம், இளம் மனத்தின் கனவுத்தன்மை-இவை போன்ற பல விஷயங்களால் முதற் காதலின் எழில் வளருகிறது. ஆனால் இந்த எழில் செயற்கையானது; கணப்பொழுது வாழ்வது.
காதல் ஒரு பித்து என்பது உண்மையே. வாழ்வில் சுவையூட்டும் ஒவ்வோர் உணர்ச்சியும் பித்தாகவே இருக்கும். காதல், மதம், லட்சியம், தேசபக்தி ஆகிய நீருற்றுக்கள் வாழ்வு என்னும் வனத்துக்குச் சோலையுருவத்தை அளித்திருக் கின்றன.
ஆனால் மனிதனுக்கு மதம், லட்சியம், தேசபக்தி என்னும் இவற்றைப்பற்றி இருபதாவது வயதிலுள்ள கொள்கைகள் முப்பதாவது அல்லது நாற்பதாவது வயதில் அப்படியே நிலைத்திருக்கின்றனவா? அவை மாறிக்கொண்டே இருக் கின்றன அல்லவா? அப்படியிருக்க, முதற் காதலைப்பற்றி கொள்கையை வாழ்க்கை இருபதாவது வயதில் இருந்த அநுபவங்களினால் மாற்ற நேரிடும்போது, மனிதன் உடனே கிளம்புவது சுத்தப் வெறுத்துப்போய் உயிரை விடக் பைத்தியக்காரத்தனம் அல்லவா?
சிந்தனை செய்து செய்து என் மனம் சோர்ந்தது. கண்கள் அயர்ந்தன.
நான் திடுக்கிட்டு விழித்துக்கொண்டபோது என் உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியது. நான் ஒரு விந்தைக் கனவு கண்டிருந்தேன்: ரோஜா நிறம்; மகிழ மலரின் குணம்; குட மல்லிகை போன்ற இதழ்கள்; செவ்வந்தி மலரின் மென்மை-இவ்வளவும் கலந்த ஓர் அற்புத மலரை, உலகம் முழுவதும் சுற்றி நான் கொண்டு வந்திருக்கிறேன். அதை என் ‘கோட்’டில் செருகிக் கொண்டேன். மிகவும் அழகாகத்தான் இருந்தது; ஆயினும் எனக்குத் திருப்தி இல்லை. என் அறையில் இருந்த புஷ்ப பாத்திரத்தில் அதைவைத்தேன். ஐயோ! செப்புக் குடுவையில் யாராவது வைரத்தை வைப்பார்களா? ஒரு தெய்வத்துக்கு அர்ப்பித்தால் அந்தப் பூவின் அழகு சோபிக்கும் என்று தோன்றியது. நான் ஓடினேன். எதிரே ஒரு கோயில் தெரிந்தது. அவசரமாக உள்ளே சென்றேன். தேவி சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் தேவியா, கருணாவா? அவளுடைய பிம்பத்தின்மீது ஒரு பூக்கூட இல்லை. என் பூவைப்பற்றி எனக்கே பெருமிதமாக இருந்தது. அதைத் தூவ அருகில் நெருங்கினேன். அதற்குள் அந்தத் தேவி மறைந்துவிட்டாள். சோர்ந்த மனத்துடன் வெளியே வந்தேன்.
கால் போன வழியே போய்க்கொண் டிருந்தேன். அடிக்கடி கையிலிருக்கும் பூவைப் பார்ப்பேன். வெயிலின் வெப்பம் அதன்மீது படா தபடி இரு கைகளினாலும் அதை மூடி எடுத்துச் சென்றேன். என் கையிலுள்ள வெப்பத்தாலேயே அது வாடிப்போகுமோ என்று கணந்தோறும் பயந்தேன்.
மீண்டும் ஒரு கோயில் தெரிந்தது. ஆனந்தமும் பயமும் என் மனத்தில் கண்ணாமூச்சி விளையாடின. ‘இந்தக் கோயிலில் உள்ள தெய்வமும் அந்தத் தெய்வத்தைப் போலவே இருக்குமோ?’ என்று நினைத்து என் மனம் அந்தக் கோயிலை விட்டு நீங்கப் பார்த்தது. என் கண்களோ இந்தப் புதுத் தெய்வத்தைத் தரிசிக்கத் துடித்தன.
பயந்தவண்ணம் கர்ப்பக்கிருகத்துக்குள் புகுந்தேன். ஒரு கணம் எனக்குப் பழைய தெய்வம் நினைவுக்கு வந்தது. மறு கணம் இந்தப் புதுத் தெய்வத்தைப்பற்றிய சிந்தனையினால் என் மனம் கனத்தது. கையிலிருந்த பூவைத் தேவிக்குத் தூவியவுடனே அவள் வதனத்தில் பூத்த முறுவல்! வானத்தில் உள்ள ஒவ்வொரு தாரகையும் சந்திரனாகி வெண்ணிலவு வீசினால் அப்போது ஒருவேளை அந்த முறுவலின் தோற்றத்தைக் காணலாம். நான் கண்ணை மூடிக்கொண்டேன். பக்தனும் தெய்வமும் ஒன்றாயினர். அதற்குள், “அந்தப் பூவை எறிந்து விடுங்கள்!” என்று கடுமையான குரல் கேட்டது.
திடுக்கிட்டுக் கண்ணைத் திறந்தேன். ‘பூவை எறியுங்கள்!’ என்று கூவியவரை எங்கும் காணவில்லை. ஆனால் மெல்ல மெல்ல, என் பூ பிம்பத்தினின்றும் தொலைவில் விலகுவதைத் தெளிவாகக் கண்டேன். மார்பில் காயம் பட்டு, அதிலிருந்து மளமளவென்று ரத்தம் பெருகுவது போல ஆயிற்று என் நிலை!
என் உயிரைத் திரட்டி, “தேவி, உன் பூஜைக்காகவே இந்தப் பூவைக் கொண்டுவந்திருக்கிறேன்” என்று கத்தினேன்.
“பொய், சுத்தப் பொய். இது வழிபாட்டுக்கு உரிய மலரல்ல; நிர்மால்யம்!” என்றது குரல்.
“நிர்மால்யமா?” என்று நான் உரக்கக் கேட்டது உண்மை; ஆனால் என் குரலில் உண்டான நடுக்கத்தைச் சொல்லி முடியாது.
“முன்பு நீ இந்தப் பூவையே வேறொரு தேவிக்குத் தூவியது உண்மைதானே? சொல்லு; இப்போது ஏன் உனக்கு வாயடைத்துப் போயிற்று?”
அந்த ஒலி சுமத்திய குற்றத்தை ஒப்புக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. தெய்வத்தைப் பார்த்தேன். அவள் முகத்தில் கோபம், வெறுப்பு: அவள் தெய்வமா, அருணாவா?
கண் காணாத சக்தியொன்று அந்த மலரைக் கோயிலி லிருந்து வெளியே எடுத்துச் சென்றது. பூ மண்ணுடன் கலக்கக் கூடாதென்று நானும் பின்னால் ஓடினேன். அந்த அவசரத்தில் என் காலே அதை மிதித்துவிட்டதனால் அந்த மலர் கசங்கியே போயிற்று. இந்த இடத்தில்தான் என் கனவு முடிந்தது. என்ன பயங்கரக் கனவு.
கட்டிலில் இருந்த அருணாவின் படத்தைப் பார்த்தேன். அவள் சிரித்துக்கொண் டிருந்தாள். ஆனால், நான் கனவில் கண்ட அந்தத் தெய்வம்?
தலையில் குளிர்ந்த நீரைத் தெளித்தும் மனத் தீ அணைய வில்லை. கடைசியில் அஜயனுடைய அந்த ‘ஸெலுலாய்டு’ பொம்மையைத் தொட்டிலில் விட்டுப் பைத்தியக்காரன் போலத் தாலாட்டத் தொடங்கியபோதுதான் என் மனம் அமைதியுற்றது.
அஜயனுடைய குழந்தை விளையாட்டுக்களின் ஞாபகத்தில் மறுநாள் பொழுது மிகவும் ஆனந்தமாகக் கழிந்தது. ‘காதல் என்பது வாழ்க்கை மரத்தின் மலரென்றால், குழந்தையன்பு என்பது அதன் பழம்’ என்று எண்ணியபோது எனக்குப் பெரு மகிழ்ச்சி உண்டாயிற்று. அன்றிரவு கனவுகளில் அஜயனுடைய விளையாட்டுக்களே தென்படும் என்ற இனிமை மயக்கத்தோடு மாலையில் கோர்ட்டிலிருந்து திரும்பி வந்தேன். தேநீர் அருந்தி விட்டு, முற்றத்தில் சாய்வு நாற்காலியைப் போட்டு அதில் படுத்துக் கண்ணை மூடியதுதான் தாமதம்-!
மனத்து ஓவியங்கள் – அவை கடந்துபோன நிகழ்ச்சிகளாயினும் சரி, எதிர்காலத்துக் கனவுகளாயினும் சரி – வெகு விரைவில் உருவாகின்றன.
மூன்று நான்கு வயதான அஜயன் என் கண்முன் நின்றான். அவன் கையைப் பிடித்து நான் அவனை உலாவ அழைத்துச் செல்லுகிறேன். வழியில் போன ஒரு முயலை அவனுக்குக் காட்டினேன். அவன் மகிழ்ச்சியுடன் கைகொட்டி, என்னிடம், “அப்பா, இந்த முயலை வீட்டுக்குக் கொண்டு போவோமே!” என்றான்.
“எதற்கடா வேண்டும் உனக்கு முயல்?”
“விளையாடுவதற்குத்தான்.”
“அப்படியா! சரிதான்.”
உடனே அவன் ஏதோ ஆழ்ந்த கருத்தோடு என்னைப் பார்க்கலானான். அதன் காரணம் எனக்கு விளங்கவில்லை. கணப்பொழுது சிந்தித்துவிட்டு, ” அப்பா, எனக்கு விளையாட முயல் வேண்டாம்” என்றான்.
“பின் என்ன வேண்டும்?”
“யானை வேண்டும்.”
“யானையா வேண்டும்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.
“ஆமாம், அப்பா, நானும் யானையும் வெளியே வாசற் குறட்டில் விளையாடுவோம். சமையலறைக்குள் அது போகாது. என் யானை அம்மாவுக்குக்கூட உதவி செய்யுமே!”
“என்ன உதவியடா செய்யும்?”
”அம்மா கிணற்றிலிருந்து தண்ணீர் இழுக்க வேண்டி யிருக்கிறதல்லவா? என் யானை துதிக்கையைக் கிணற்றில் விட்டு, ஒரேயடியாக வேண்டிய ஜலம் முழுவதையும்-”
நான் சிரித்தவாறே கண் விழித்தேன். வாசலில் ஒரு கார் வந்து நின்றிருந்தது. அதிலிருந்து ஓர் இளைஞன் இறங்கினான். அவன் பின்னால் கருணாவைப் போல் தோற்றிய ஒரு மங்கை-
கருணாவே தான் அவள்!
கல்லூரியில் இருந்த கருணாவே எப்போதும் என் கண் முன் நின்றிருந்தமையால், அவள் உருவம் மாறியிருக்கலாம் என்ற எண்ணமே எனக்குத் தோன்றியதில்லை.
ஆனால் படத்திலுள்ள உருவம் மாறாவிட்டாலும், மனிதன் மாறுகிறான். மனிதனின் மனம் ஒரே இடத்தில் ஆழ்ந்து ஊமையாகி விட்டாலும், காலம் ஒவ்வொரு விநாடியும் முன்னுக்குத்தான் போகிறது.
கருணாவை வரவேற்றபோது நான் ஒரு கணம் திக்குமுக் காடிப்போனேன். உள்ளத்தில் பதிந்திருந்த ஓர் ஆணி நகர்ந் தாற்போல இருந்தது. இந்த வீட்டுக்கு ராணியாக வர வேண்டிய கருணா, நாலு நாள் விருந்தாளியாக இங்கு வருவதா?
நான் உள்ளத்துக்குள் எட்டிப் பார்த்தேன். அங்கே அருணா அஜயனை மடியில் வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள். என் முறிந்த காதலின் துணுக்கு—
மெலிந்த மனத்துக்குத் தென்பட்ட தோற்றம் அது. காலில் பாய்ந்த முள்ளை எடுத்தபின்பும் அங்கே ஏதோ உறுத்து வதுபோலத் தோன்றுகிறதே; இருதயப் புண் விஷயத்திலும் இதே அநுபவந்தான் ஏற்படுகிறது.
தேநீர் அருந்தியபோது, என் கிண்ணத்தில் தேநீர் மிகவும் குறைவாக இருப்பதைக் கருணா எப்படித்தான் கவனித் தாளோ! “உங்களிடத்தில் பெரும் மாறுதல் உண்டாகியிருக்\கிறதே, தேவதத்தரே!” என்றாள்.
“நீ சொல்வது விளங்கவில்லையே. என்னைப் பார்த்தால் தொண்டு கிழவனைப் போல் இருக்கிறேனா என்ன?” என்று கேட்டேன்.
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால்-”
“ஆனால் என்ன?”
“அதுபோலத்தான் ஏதோ இருக்கிறது! கல்லூரியில் இருந்தபோது உங்களுடைய தேநீர்க் கிண்ணம் வெண்கலப் பானையவ்வளவு பெரிதாக இருந்தது. ஆனால் இன்று அது சிறுவர்களின் மூக்கு வைத்த கிண்டியைப் போல அவ்வளவு சிறிதாகியிருக்கிறது.”
நான் சிரித்துக்கொண்டே, “இப்போதெல்லாம் இரவில் எனக்குத் தூக்கம் வருவதில்லை” என்றேன்.
“அதற்கும் தேநீருக்கும் என்ன சம்பந்தம்?”
“நீ வாத்தியாரம்மாவா டாக்டரம்மாவா, அதை முதலில் சொல்லு!” என்றேன், அவளைப் பார்த்துக்கொண்டே.
“பள்ளி ஆசிரியர்கள் மனத்தத்துவ நூல் நிரம்பப் படிக்க வேண்டுமே. இல்லையா, மனோகரரே?”
மனோகரனுக்குக் கவனம் எங்கே இருந்ததோ, யாருக்குத் தெரியும்? ஒரு யந்திரத்திலிருந்து ஓசை உண்டாவதுபோல இருந்தது அவன் குரல். “நான் சாதாரண டிராயிங் வாத்தியார். மனத்தத்துவத்துக்கும் இன்னும் எதற்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம்-” என்று அவன் கூறுவதற்குள் கருணா அவனை உற்றுப் பார்த்தாள். அவன் வாய் மூடியது. ஆனால் அவன் கண்ணில் இருந்த சோர்வுற்ற சோகம் மட்டும் பின்னும் தெளிவாகியது.
மனோகரனை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருப்பது, போல எனக்குத் தோன்றியது. எங்கே பார்த்தேன்? எவ் வளவோ நினைவுபடுத்திப் பார்த்தும் அது ஞாபகத்துக்கு வர வில்லை.
கருணா தன் கிண்ணத்திலிருந்து சிறிது தேநீரை என் கிண் ணத்தில் ஊற்றிக்கொண்டே, “அருணா பிறந்தகத்துக்குப் போயிருப்பதனால் உங்களுக்குத் தூக்கம் வரவில்லை; உண்மை தானே? அப்படியிருக்க, வீணாகத் தேநீரின்மீது பழி போடுவா னேன்? ‘தென்னமரத்தில் தேள் கொட்ட…’ என்ற பழ மொழியைப் பெண்குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் போது, இனி நான் உங்களைத்தான் அதற்கு உதாரணமாகக்- சொல்லப் போகிறேன்!” என்றாள்.
வெகு நாள் கழித்துச் சந்திக்கும் நண்பர்களின் பேச்சு, காட்டிலுள்ள கொடிவழியைப் போன்றது. அது எங்கே வளைந்து எப்படிப் போகும் என்பதை நிலையாகச் சொல்ல முடியாது.
தேநீர் அருந்தி முடிந்ததும், கருணா பழைய கல்லூரிச் சம்பவங்களை நோக்கித் திரும்பினாள். அவளுடைய வளவள வென்ற பேச்சு மனோகரனுக்குப் பொறுக்கவில்லை. அவன் ஓயாமல் முணுமுணுத்துக்கொண்டே யிருந்தான். கடைசியில் நாற்காலியை விட்டு எழுந்து அறைக்குள்ளே போய், ஒரு கவ ருடன் திரும்பி வந்தான். கருணா அந்தக் கவரைப் பார்த் ததுமே, “நடக்காத விஷயங்களையெல்லாம் பற்றிச் சொல்லிப் பயனென்ன? அவை கிடக்கட்டும். நாங்கள் வந்த வேலையைப் பற்றிச் சொல்லவே இல்லையே. பிள்ளையார் சதுர்த்தி லீவுக்கு இங்கே வரலாமென்று மனோகரரிடம் சொன்னேன். ஆனால் அவருக்கு அதுவரையில் பொறுக்கவில்லை. ஆமாம், அண்ண னின் பாசத்துக்கும் அண்ணியின் பாசத்துக்கும் இடையே இவ்வளவாவது வேறுபாடு இருக்கத்தான் இருக்கும்!” என்றாள்.
மனோகரன் நீட்டிய கவரை நான் வாங்கிக்கொண்டேன். தபால் பில்லைமீது எங்களூர் முத்திரைதான் இருந்தது. மனோ கரன் அதைக் காட்டி, “அநு இவ்வூரிலிருந்துதான் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரி கிறது. ஆனால் இதில் அவள் தன் முகவரியைக் குறிக்கவில்லை. எழுதியுள்ள விவரத்தைப் பார்த்தாலோ-” என்னும்போதே அவன் நெஞ்சம் தழுதழுத்தது. அவன் வேறு புறமாக முகத் தைத் திருப்பிக்கொண்டான்.
கருணா அந்தக் கடிதத்தைப் படிக்குமாறு எனக்குச் சமிக் கினை செய்தாள். நான் அதைப் படிக்கலானேன்:
அண்ணா,
எத்தனையோ நாள் கழித்து உனக்கு இந்தக் கடிதம் எழுது கிறேன். இந்த இரண்டு வருஷகாலத்தில் நீ என்னை எங்கெங்கோ தேடியிருப்பாய்; என் தகவல் கிடைக்கவில்லையே என்று எவ்வளவோ வருத்தப்பட்டுச் சோர்வுற்றிருப்பாய். அம்மா எனக்காக எவ்வளவு அழுதிருப்பாள் என்பதும், எந்த எந்தத் தெய்வங்களுக்கு என்ன என்ன பிரார்த்தனை சொல்லிக் கொண் டிருப்பாள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால்—
நான் என்ன செய்வது? வீட்டை விட்டு ஓடிவந்த பெண் ணுக்கு, அம்மாவுக்கும் அண்ணனுக்கும் கடிதம் எழுதக்கூடத் தைரியம் உண்டாவதில்லையே, அண்ணா!
நீ சொல்வாய்: ‘ஓடிப்போகப் பயமில்லையாம்; கடிதம் எழுதுவதற்கு மட்டும் பயம் வந்துவிட்டதாம்!’ என்று. நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள். மானிடர்களின் மனம் அத்தகையது என்பது உண்மை. என் வரையில் அப்படித்தான் இருக்கிறது. நான் மிகவும் பயங்கொள்ளிடா, அண்ணா!
வீட்டை விட்டு ஓடிவந்தேன் என்பது உண்மை. அந்தத் தைரியம் மட்டும் எனக்கு எங்கிருந்து வந்தது?
இல்லை அண்ணா; நானாக ஓடிவரவில்லை; ஓடிவர வேண்டி யிருந்தது. காட்டுத் தீயில் சிக்கிய பறவை, படபடவென்று சிறகை அடித்துக்கொண்டு எங்காவது தொலைவில் குளிர்ச்சி யான இடத்துக்குப் போக முயலுகிறதல்லவா? நானும் அதைத்தான் செய்தேன்.
இதைப் படித்ததும் உனக்குக் கோபம் வரும். ‘வீடு என்பது மலர்ந்த சோலை; தீப்பிடித்த காடு அல்ல’ என்று நீ சொல்வாய். ஆனால், நான் எழுதும் இந்தக் கடிதம் முற்றுப் பெறுமோ பெறாதோ? அப்படி எழுதி முடிந்தாலும் தபாலில் சேருமோ சேராதோ? என்னால் ஒன்றுமே சொல்ல முடியாது.
அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு நன்றாக மனமார அழவேண்டும்; ‘அண்ணா, அண்ணா’ என்று உன்னைத் தழுவிக்கொண்டு மனத் துன்பங்களையெல்லாம் கக்கிவிட வேண்டும் என்று தோன்றுகிறது.
சே! அப்படிச் செய்தால் என் அண்ணாவின் உடம்பு அழுக் காகிவிடும். அந்த எண்ணமே வேண்டாம்.
அண்ணா, நான் எத்தனையோ நாவல்கள் படித்திருக் கிறேன். ஆனால் என் சரித்திரம் அந்த எல்லா நாவல்களினின் றும் தனிப்பட்டது. எனக்குக் கதை எழுதத் தெரிந்தால் எவ் வளவு நன்றாயிருக்கும்!
அண்ணா, அம்மாவுக்குத்தான் என்மேல் எவ்வளவு ஆசை! அநு என்றால் அவள் கண்ணின் மணிகள்! உனக்குத்தான் என் மீது என்ன அன்பு! தங்கை என்றால் உனக்கு உயிர்! ஆனால்-
உண்மையைச் சொல்லட்டுமா? உங்கள் இருவரின் அன்பும் இனிய தின்பண்டம் போல இருந்தது. ஆனால் அது ஒரு கைதிக்குக் கிடைக்கும் தின்பண்டம். வீடு எனக்குச் சிறையாக இருந்தது. அந்தச் சிறையில், நீங்கள் உங்களுக்கு விருப்பமான வற்றை எனக்குத் தந்துகொண் டிருந்தீர்கள்; எனக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றித் துளியும் ஆராய்ந்து பார்க்க வில்லை.
எனக்கு என்ன வேண்டியிருந்தது?
எப்படிச் சொல்வது? அண்ணா, எப்படிச் சொல்வது?
அண்ணா, இந்த உலகில் ஒருவருக்கு என்ன வேண்டும் என்பதை மற்றவர் அறிந்துகொள்வது மிகவும் கடினம். வயிறு நிரம்பப் பஞ்சபட்சிய பரமான்னங்களைப் புசித்துவிட்டுச் சுக நித்திரை புரியும் பணக்காரனுக்கு, வாசலில் பட்டினியாக நிற்கும் பிச்சைக்காரனைக் கண்டால் ‘லச்சை’யாகத்தானே இருக்கிறது? உலகத்தில் ஒருவன் மற்றவனை இதே நோக்குடன் தான் பார்க்கிறான்.
என்னைப்பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்தால், என் மனம் புயலிடைப்பட்டது போலத் தோற்றுகிறது. இனி அதைப் பற்றிச் சிந்தித்துத்தான் என்ன பயன்? மரத்துணுக்குகள் வெள்ளத்தோடு போகின்றன அல்லவா? என்னைப் போன்ற பெண்களின் வாழ்வும் அப்படித்தான்.
அண்ணா, அம்மா எனக்குச் சிறுவயதில் மணஞ் செய்வித் தாள் என்பதற்காக நான் அவளைக் குறை கூறவில்லை. மண மான ஓர் ஆண்டுக்குள்ளேயே என் நெற்றிக் குங்குமம் அழிந்தது. கொஞ்ச நாள் வரையில் எனக்கு மிகவும் வருத்த மாக இருந்தது. ஆனால் அப்போது பல மாதங்கள் வரையில் அம்மாவின் கண்ணீர் வற்றவே இல்லை.
‘ஒரே தங்கை, அதிலும் பால்ய விதவை’ என்று, எந்த அண்ணனும் வைக்காத அத்தனை அன்பை நீ என்மீது வைத் தாய். அம்மா என்னை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்ப உடன் படவில்லை; ஆனால் நீ பிடிவாதத்தோடு என்னைப் பள்ளியில் சேர்த்தாய்.
நாலைந்து ஆண்டுகள் நன்றாகவே கழிந்தன: அதற்குப் பின்பு? என்னவ்வளவே வயதுள்ள பக்கத்து வீட்டு ஸிந்து! யாரோ அவளைப் பார்க்க வருவதாக இருந்தார்கள். அவள் நாணத்தோடு அதை என்னிடம் சொன்னாள். அன்றிரவு-
அண்ணா, அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமே இல்லை.
அவளுக்குக் கல்யாணம் முடிந்தது. அடுத்த வருஷமே குழந்தை பிறந்தது. காப்பிட்ட அன்று மாலையில் நான் போயிருந்தேன். அவளுடைய குழந்தையின் அந்தக் குளுகுளு வென்ற ஸ்பரிசம், சின்னஞ்சிறிசாக மின்னும் அதன் கண்கள், இலேசாக மூடியிருந்த அதன் மனமோகனமான தளிர்க் -கரங்கள் – அன்றிரவு எனக்குத் தூக்கம் வரவில்லை என்பதுடன் மட்டுமல்ல; இரவு முழுவதும் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பி அழுதவண்ணமாக இருந்தேன்.
வகுப்பில் உடனிருந்த பெண்களைப் போலவே புடைவை உடுத்துக்கொண்டு, அலங்காரங்கள் செய்துகொண்டு, உலாவப் போக வேண்டும், சிரிக்க வேண்டும், குதிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும். அநு தன்னோடு இருக்கும் பெண்களைப் போலப் படிக்க மட்டும் வேண்டும்; ஆனால் மற்ற விஷயங்களில் அடியோடு பற்றொழிந்தவளாக இருக்க வேண்டும் என்று அம்மா நினைத்தாள்.
அண்ணா, நீ காட்டில் வசிக்கும் முனிவனாக இருந்திருந் தால் அநு உன் ஆசிரமத்தை மெழுகிப் பெருக்கிக் கோல மிட்டும், அங்குள்ள காய்கிழங்குகளை வேகவைத்தும், ஏதாவது ஒரு மான்குட்டியுடன் விளையாடியும் பொழுது போக்கியிருக்கக் கூடும். ஆனால் காந்தங்களின் நடுவே ஓர் இரும்புத் துணுக்கை வைத்துவிட்டு, அது தன் இடத்திலிருந்து இ புறமோ அப்புறமோ எள்ளத்தனையும் அசையக் கூடாது என்று விரும்புவதனால் பயனென்ன?
நான் ஆறாவது பாரத்தில் இருந்தபோது நிகழ்ந்த அந்தச் சம்பவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நீ என்னை வீட்டுக்கு அழைத்து வருவதற்கு முன்னமே அந்த விந்தைச் செய்தி அம்மாவின் காதுக்கு எட்டியது. பள்ளிக்கூடத்துப் படிவழியே அநு கீழே இறங்கி வரும்போது, ஒரு பையன் மேலே போய்க்கொண்டிருந்தான். அவன் படக்கென்று அவளை முத்தமிட்டான். கீழிருந்து வந்த தலைமை ஆசிரியர் அதைப் பார்த்துவிட்டார்; பின்பு-
அம்மா உயிரையே விடத் தயாராகிவிட்டாள். உன்னாலும் அவளைச் சமாதானம் செய்ய முடியவில்லை. நான் அவள் காலைத் தொட்டு, ‘இனிமேல் பள்ளியில் காலெடுத்து வைக்க மாட்டேன்’ என்று பிரதிக்கினை செய்த பின்புதான் அவள் சற்றுத் தணிந்தாள்.
அந்தச் சமயத்தில் உண்மையைச் சொல்ல எனக்குத் தைரியம் உண்டாகவில்லை. ஆனால் இன்று சொல்லுகிறேன்: படிக்கட்டில் நாங்கள் இருவரும் சந்தித்து, அந்தப் பையனுடைய எல்லை மீறிய செய்கையை வேறு யாரும் பார்க்காமல் இருந்திருந்தால், நான் யாரிடமும் அதைப்பற்றிப் பிராது செய்திருக்கமாட்டேன்! அந்தப் பையனை எனக்கும் பிடித்திருந்தது.
அம்மாவுக்காகப் பள்ளியை விடாமல் இருந்திருந்தால் மிகவும் நன்மையாக இருந்திருக்கும் என்று இப்போது’ தோன்றுகிறது. படிப்பினாலாவது எனக்குச் சிறிது அமைதி கிடைத்திருக்கக்கூடும். அம்மா என்னை நாள் முழுவதும் வேலை களிலேயே மூழ்கி வைக்க முயலுவாள்; நடுப்பகலில் பாரத மாவது திருவிளையாடல் புராணமாவது படிக்கச் சொல்வாள்; மாலை நேரத்தில் தன்னுடன் கோயிலுக்கு அழைத்துப் போவாள். ராதாகிருஷ்ணன் கோயிலுக்குள் போனதும், என் கண்முன் அவ்விருவருடைய சிருங்கார லீலைகளே நடமாடு கின்றன என்பது, அம்மாவுக்குப் பாவம்! என்ன தெரியும்?
அப்படி அம்மா பகல் முழுவதும் என்மீது கடுங்காவல் வைத்திருந்தும், இரவெல்லாம் என் மனம் என்ன செய்து கொண்டிருப்பது வழக்கம் என்பதை அவளுக்குச் சொல்ல வல்லவர் யார் ?
அண்ணா, வெட்கத்தை ஒதுக்கிவைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உன் தங்கையை மன்னித்துவிடு.
நான் இரவில் படுக்கையில் படுத்ததும், பள்ளிக்கூடத்துப் படிக்கட்டில் நிகழ்ந்த அந்த மேலெழுந்தவாரியான முத்தம் சில சமயம் ஞாபகத்துக்கு வரும். அதை நினைத்தவுடன் என் மனத்தில் இனிய நெகிழ்ச்சி உண்டாகும். ‘பள்ளியிலிருந்து விலக்கி விடும்படியான பெருங்குற்றத்தை அந்தப் பையன் உண்மையிலேயே செய்தானா? ஒருவேளை நாங்கள் இருவரும் பிற்காலத்தில் மணங்கூடச் செய்து கொண்டிருக்கக்கூடுமே!” என்று நினைப்பேன்.
மணம்-காதல்-குழந்தை-இல்லற இன்பம்; அடைமழை யைப்போல இந்தக் கற்பனைகள் என்னைச் சுற்றி அறுபது நாழிகையும் மாறி மாறிப் பொழிந்தவண்ணம் இருந்தன. கதை, நாவல், நாடகம், சினிமாப் படம், கனவு, தோழிகளோடு பேச்சு எங்கே போனாலும் என் மனம் கட்டுக்கு அடங்காத விதமான விஷயங்களே எனக்குப் புலப்பட்டன; காதில் விழுந்தன; மனத்தில் பதிந்தன.
இந்த நிலையில் தான், ஆறுமாத காலத்துக்கு நியமனமான ஒரு புது வாத்தியார் பக்கத்து வீட்டில் குடி வந்தார். அவர் யார் என்பதை உனக்கு எழுதத் தேவையில்லையே.
அவர் தனியாக இருந்தார்; பார்ப்பதற்கு அழகாக இருந்தார். குரல் மிகவும் இனியதாக இருந்தது. அவர் காதல் கீதங்கள் பாட ஆரம்பித்தால் என் உணர்வையே இழந்து விடுவேன். அவருக்கு உன் ஓவியங்கள் மிகப் பிரியமானவை. ஆனால், அவருடைய ஒவ்வொரு கவிதையும் ஒரு விதவையின் மனத்திலிருந்த காதல் உணர்ச்சியை எவ்வளவு மலர்வித்தது என்பது அவருக்கே தெரியாதே; உனக்குத் தெரிய வழி ஏது?
ஆறு மாதங் கழித்து அவர் போய்விட்டார். ஆயினும் அவர் வடிவம் என் மனத்திலிருந்து சிறிதும் அகலவில்லை. ‘நான் அவரைக் காதலிப்பது அவருக்குத் தெரிந்திருக்குமோ?’ என்று என்னை நானே ஆவலோடு கேட்டுக்கொள்வேன்.
உன்னிடம் அவர் முகவரி இருந்தது. அவருக்குக் கடிதம் எழுத ஆயிரம் தடவை உட்கார்ந்திருப்பேன்; ஆனால் ஒரு. கடிதமாவது எழுத முடியவில்லை.
‘அநுவுக்கு மணமானாலன்றி நான் மணஞ்செய்து கொள்ளப் போவதில்லை’ என்று நீ உன் நண்பரிடம் பேசியது எனக்குத் தெரியும். ‘புயலும் படகும்’ என்ற ஓவியத்தின் கருத்தையும் நீ என்னிடம் கூறியிருந்தாய். நீ என்னை எப் போதும் – எந்தக் காலத்திலும் -அகலவிடமாட்டாய் என்பதை அதிலிருந்து நன்கு அறிந்துகொண்டேன்.
-ஆனால் அண்ணா, அண்ணனுடைய அன்பினாலேயே தங்கைக்குத் திருப்தி உண்டாகிவிடுவதில்லையடா! குளத்தில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் அது தேங்கித்தான் இருக்கும். ஓடும் ஆற்றுநீரின் எழில்-அது முழங்காலளவு ஆழமாகத்தான் இருக்கட்டுமே – அதற்கு வராது. மனிதவாழ்க்கை என்பது ஆறு; குளமன்று.
அதனால்தான் நான் வீட்டை விட்டு வந்தேன். வீட்டை விட்டு வெளிப்படும்போது யாராவது ஒருவருடைய ஆதாரம் எனக்குத் தேவையாக இருந்தது. நம்மூரில் இருந்த அந்தப் பாரிஸ்டர் – மாதர் சங்கத்தில் அடிக்கடி அவருடைய பிரசங்கம் நடக்குமே, அவர்தாம்- என்னைப் பம்பாய்க்கு அழைத்துப் போக ஒப்புக்கொண்டார். எவளாவது பணக்காரச் சீமாட்டி யின் வீட்டில் இருந்துகொண்டு சந்தர்ப்பப்பட்டால் நிறையப் படிக்கலாம்; நமக்குப் பிடித்தவன் எவனாவது கிடைத்தால் அவனை மணந்துகொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டிய வண்ணம் வீட்டை விட்டுப் புறப்பட்டேன். பாரிஸ்டர் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தமையால் நான் போன இடம் ஊரில் யாருக்குமே தெரியாது.
அந்தச் சண்டாளன் என்னை அழைத்துக்கொண்டு பம்பாயில் ஒரு ஹோட்டலில் வந்து இறங்கி, தன் தங்கை என்று அங்கே என் பெயரைக் குறித்தான். ஆனால் இள மங்கையைத் தங்கையாகக் கருதுகிறவர்கள் வேறு மாதிரியாக இருப்பார்கள்!
எனக்கு அவனுடைய சூழ்ச்சி தெரிந்திருந்தால் உடனே உனக்குக் கடிதம் எழுதியிருப்பேன். ஆனால் என் விதி என்னை ஏமாற்றிவிட்டது. கடுகளவும் காதலென்பதே இல்லாத ஒரு விலங்கின் கையில் நான் சிக்கினேன். கரி பூசிய என் முகத்தை அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் காண்பிப்பதில்லை என்று அப்போது தீர்மானித்துக்கொண்டேன்.
அந்தக் கொலைகாரனிடமிருந்து நான் எப்படித் தப்பி னேன்; வயிற்றுக்கு நாலு கவளம் அன்னம் கிடைப்பதற்காக இடம் இடமாக எப்படி அலைந்து தவித்தேன்; சமூகத்தில் நாகரிகர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஆண்மக்களின் காமப்பித்தைப் பற்றியும், நீதியைப் பிரமாதமாகத் துதிக்கும் பெண்மக்களின் கொடுந்தன்மையைப் பற்றியும் எனக்கு உண்டான விசித்திர அநுபவங்கள் யாவை? – இவற்றையெல் லாம் எழுத உட்கார்ந்தால், அது பெரிய இராமாயணம் ஆகும்!
நான் இங்கே எப்படி வந்தேன் என்பதை மட்டும் எழுது கிறேன். பம்பாயில் ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். பார்வைக்குப் பணக்காரி போலத்தான் இருக்கிறாள். பெரிய ஜமீன்தாரிணியாம்! ஆறாவது பாரம் வரையில் நான் ஆங்கிலம் கற்றிருக்கிறேன் என்பதை அறிந்ததுமே, “அப்படி யானால் நீ கொங்கணத்திலுள்ள என் கிராமத்தில் ஏழை எளியவர்களுக்குப் படிப்புக் கற்றுக் கொடுக்கப் போகலாமே” என்றாள். அந்த யோசனை எனக்கும் நல்லதென்று பட்டது. இங்கிருந்து முப்பது மைல் தொலைவில் அந்த ஊர் இருக்கிற தாம். அங்கே போய் என் பாவத்தைக் கழுவப் போகிறேன். அந்தப் பாவத்தைக் கழுவ முடிந்ததென்றால், உனக்கு மீண்டும் கடிதம் வருமே! இல்லையென்றால்-?
அண்ணா, அம்மாவிடம் சொல்லு: “அநு கெட்டவளல்ல; வலுவற்றவள். உன் பெண் பதிதையல்ல; ஆற்றுப்போக்கிலே விழுந்தவள். இயற்கை வெள்ளத்துக்கு எதிராக நீந்துமாறு அவளை வலுக்கட்டாயப் படுத்தாமல் இருந்திருந்தால்-?” என்று.
உன்-
சே! ‘உன்’ என்ற சொல்லை அடித்து விடலாமென்று தோன்றுகிறது. அல்ல, அல்ல; நான் உன் தங்கைதான். நான் அம்மாவின் அநுதான்.
இந்தக் கடிதத்தைப் படித்ததும் என் மனம் ஒரே சூனியமாகிவிட்டது; அரை மணி நேரம் சும்மா இருந்தேன். பிறகு மனோகரனிடம், “அநுவின் போட்டோ ஏதாவது இருந்தால் அவளைத் தேட-” என்றேன்.
என் வாக்கியம் முடியுமுன்பே மனோகரன் எழுந்து தன் அறைக்குள் சென்றான். அவசர அவசரமாக அவன் பெட்டி யைத் திறந்து மூடிய சத்தம் என் காதில் விழுந்தது. உடனே ஒரு போட்டோவைக் கொண்டுவந்து என் கையில் வைத்தான்.
அந்தப் படத்தில் நாலைந்து பெண்கள் இருந்தனர். நடுவிலிருந்த விதவைப் பெண்ணை அவன் சுட்டிக் காட்டியது தான் தாமதம்; மின் அதிர்ச்சி ஏற்பட்டதுபோல இருந்தது.
அந்தப் பெண்-
நான் கோல்ஹாபூர் போன அன்று, என் எதிரே பஸ்ஸில் இவள்தான் உட்கார்ந்திருந்தாள். ஆனால் அவள் நெற்றியில் குங்குமம் இருந்ததே?
என்னுள் இருந்த வக்கீல்தன்மை உடனே விழித்துக் கொண்டது. அவள் கழுத்தை அறுக்கப்போகும் அந்தக் கசாப்புக் கடைக்காரன், யாருக்கும் சந்தேகம் தோன்றாமல் இருப்பதற்காக, அவள் நெற்றியில் குங்குமம் இடுமாறு தந்திரம் செய்திருக்க வேண்டும்.
மனோகரன் என்னை மிகவும் நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருந்தான். கருணாவின் கண்ணிலும் அதே உணர்ச்சி தெரிந்தது. அவ்விருவருடைய ஆசையையும் ஒரேயடியாகக் குலைத்துவிட என் மனம் ஒப்பவில்லை. நான் பேசாமலே இருந்தேன்.
மறுநாள் காலையில் தேநீர் அருந்தும் சமயத்தில், அநுவை ஊருக்குள் தேடுவதாக மனோகரனுக்கும் கருணா வுக்கும் ஆறுதல் கூறினேன் என்பது உண்மையே; ஆனால் என் மனம், ‘நீ ஏற்கனவே அந்தப் பட்டரின் உயிரையும் அவர் மனைவியின் உயிரையும் அந்தரத்தில் தொங்க வைத்து உட்கார்ந்திருக்கிறாய்! இப்போது எதற்காக இவர்கள் இருவரையும் ஏமாற்றுகிறாய்?-அப்படியில்லை என்றாலும், ஏழெட்டு நாள் அவளைத் தேடியதாகப் பாசாங்கு செய்த பின்பு ‘இல்லை’ என்று கையை விரித்து, இவர்களைத் திருப்பி அனுப்பப் போகிறாய்; அவ்வளவுதானே? ஏன், இவர்களை இன்றே போகச் சொல்லிவிடேன்! மழைக்குப் பின்பு திடீரென்று கடும் வெயில் காய்ந்தால் அதை மனிதனால் பொறுக்க முடியாது. இவர்கள் நிலையும் அப்படித்தான் ஆகும். வீணுக்கு இவர்களுக்கு ஆசை காட்டுவதில் பயனில்லை’ என்றது.
‘கருணா என் கல்லூரி சிநேகிதி. அவளை வந்த நிமிஷத் திலேயே திருப்பி அனுப்புவதா? இருவரும் ஏழெட்டு நாளைக்கு இருக்கட்டுமே! கெட்ட செய்தியை ஒரேயடியாகச் சொன்னால் பேரதிர்ச்சி உண்டாகும். அதை மெதுவாகக் காதில் போடுவதுதான் நல்லது!’ என்றது மற்றொரு மனம்.
தேநீர் குடித்து முடிந்ததுமே தினசரிப் பத்திரிகைகள் வந்தன. பம்பாயிலிருந்து வந்த தினசரியில் ஒரு செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது. டாணாவுக்கும் கல்யாணுக்கும் இடையே ஏதோ ஒரு ஸ்டேஷனில் ஓர் இளம்பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றாள். டிரைவரின் சமயோசித ஜாக் கிரதையினால் அவளுக்குக் காயம் ஒன்றும் படவில்லை. ஆனால் அவளைச் சூழ்ந்திருந்த கூட்டத்திலிருந்து, அவள்மீது தமக்கு உரிமை இருப்பதாகக் கூறிக்கொள்ள இருவர் முன்வந்தனர். ஒருவன், “இவள் என் தங்கை” என்று சொன்னவுடனே, அவள் கீச்சிட்டுக் கத்தினாள். உடனே இன்னொருவன் முன் வந்து, “இவள் என் மனைவி” என்றான்.
சாயங்காலம் வரையில் இந்த விசித்திரச் செய்தி என் மனத்தில் சுழன்ற வண்ணமாக இருந்தது. கோர்ட்டிலிருந்து வீடு திரும்பியதும், கருணாவோடும் மனோகரனோடும் தேநீர் அருந்திவிட்டு, வெளியே உலாவப் புறப்பட்டேன். அதற்குள்-
எதிரே சகாராமன் வருவது தெரிந்தது. அப்போதுதான் வந்த கோல்ஹாபூர் வண்டியிலிருந்து அவன் இறங்கி வந்திருக்க இருந்தாள். அவனுக்குப் பின்னால் ஒரு பெண்மணியும் இருந்தாள். அவள் முகம் தெளிவாகத் தெரிந்ததும் எனக்குப் பேராச்சரியம் உண்டாயிற்று. சகாராமன் வெற்றியோடு திரும்பியிருந்தான். அவன் பின்னால் நின்ற அந்தப் பெண்மணி-அன்று பஸ்ஸில் யாத்திரிகனாக நடித்தவனுக்குத் தங்கைகளாக உட்கார்ந்திருந்தார்களே, இரண்டு பெண்மணிகள், அவர்களில் மூத்தவள்தான்!
அப்படியானால் அவனுடைய சிறிய தங்கை-அநு- எங்கே?
“இவளுடன் கோல்ஹாபூருக்குப் போன அந்த மற்றொரு பெண் எங்கே?” என்று நான் பரபரப்போடு சகாராமனைக் கேட்டேன்.
அவர்கள் இருவரும் தரையை நோக்கினார்கள்.
– தொடரும்…
– புயலும் படகும், கதை மூலம்: வி.ஸ.காண்டேகர், தமிழாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: டிசம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |
