புத்தொளி
கதையாசிரியர்: புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 2,316
(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகவதி ‘அந்த’ அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபட வில்லை. கன்னத்தில் கோடிடும் கண்ணீரைக் கிழிந்து போன தனது சேலைத் தலைப்பால் துடைத்து விட்டு, அடுப்படி நிலத்தை அருகிலிருந்த ‘அடவியனால்’ துப்பரவாக்கியவாறே, கையை மடித்துத் தலையணையாக்கி மெல்லெனச் சரித்து விட்டாள் அவள். தலைவேறு அம்மியது அவளிற்கு.
புவனத்தாலும் ‘அதைத்’ தாங்க முடியவில்லை. நேற்றுவரை வலுவாரப்பாடாய் இருந்த அவர்கள், இந்தப் பேச்செடுத்ததுமே இப்படி மாறிப் போனது? மூட்டிய அடுப்பில் ஏற்றி வைத்த உலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.சூட்டடுப்பு சுவாலை கக்கி எரிந்து கொண்டிருந்தது.
குமரனிற்கு அவர்களைப் பார்க்க ஒரே வெப்பியாரமாக இருந்தது. தாய் தமக்கையின் இந்த நிலையைச் சகித்துக் கொள்ள முடியாமல், அடுப்படிக்குள் அம்மிக்கருகில் குந்தியிருந்தவன் ஆவேசம் பொங்க எழுந்தான். “உங்களுக்கு அப்பவுஞ் சொன்னனான். அவை வீட்டுப்படலை திறந்து சம்மந்தம் கேட்க வெளிக்கிட வேண்டாமெண்டு. இப்ப நடந்த பரிசுகேட்டைப் பாத்தியளே?”
“எனக்குத் தெரியுமே இழவை, இப்பிடி வாழ்மானம் வருமெண்டு….போக்கறுவான் புறியமில்லாட்டி இல்லை யெண்டுறதுக்கு என்ன தேள்வைக்குப் பேஞாயமெல்லாம் பறைஞ்சவன்?”-பற்றி வந்த ஆத்திரத்தை வார்த்தைகளாக வடித்தாள் பகவதி.
“மாமியும் முடியாதெண்டு சொன்னவவாமே?”
“அவளுமொரு மாமியே? தாடகை. உன்ரை மருமோளை என்ரை கொழுந்து கட்டிப்போட்டு அவனென்ன மாரடிக்கிறதே? இருக்கிறதுக்கு ஒரு ஆன வீடுவாசல் கூட இல்லாமல் என்ன முகாந்திரத்திலை அவள் கலியாணம் பேச வெளிக்கிட்டவள்? எண்டெல்லோ கொம்மானைப் பார்த்து நையாண்டி பண்ணினாளாம்.”
“முற்றா என்ன சொன்னவையாம்?”
“இது ஒத்து வராது. வேறை இடத்தைப் பாருங்கோ எண்டு கொம்மானின்ரை முகத்திலை காறித் துப்பின மாதிரிப் புரியனும், பெண்டிலும் சேர்ந்தாப் போலை சொல்லிச்சினமாம். அவளுக்கென்ன கடந்தனிக் கவலையோ? கன்னி கரை சேராத கவலையோ? புரியன்ரை சொத்து சுகத்தை அம்பாளிச்சுக் கொண்டு திண்டு திண்டுட்டுத் திமிர் எடுக்கிறதுக்கே உந்த அறுந்துபோன கதை கதைச்சவள்? போன கொம்மானுக்கு ஒரு தண்ணி வென்னி, அதுதான் இல்லாட்டி ஒரு வெத்திலைத் தட்டு…..பாவம் அது அழுவாரைப் போலை வந்துது. அக்கையின்ரை பிள்ளையளுக்காக அதுபாவம் எவ்வளவு பங்கப் படுகுது. எங்களுக்கெண்டு இந்தச் சீலக்கேடு வந்து துலைஞ்சுது.” -குமரனால் மேலும் அங்கு நிற்க முடியவில்லை. அடுப்படியை விட்டு வெளியே வந்தவன் தீராந்தி வாசலில் வந்து குந்திவிட்டான்.
எப்படியும் இம்முறை ஒரு பிசகுமில்லாமல் தமக்கையின் கலியாணத்தை ஒப்பேற்ற வேண்டுமென்ற வைராக்கியத்தில் கொழும்பில் ‘கொம்பனி’யொன்றில் கடமையாற்றும் அவன், வயலூர் பிள்ளையார் கோவில் திருவிழாவோடு லீவில் வந்தவன் தான். இரு கிழமையாகியும் இன்னுந் திரும்பவேயில்லை.
முப்பத்தியிரண்டு வயது முற்றுப் பெற்றும் இன்னும் கல்யாணங் காட்சியென்று எதுவுமே காணாதிருக்கும், தன்னைவிட ஐந்து வயது முதிய தமக்கை புவனத்திற்கு ‘ஏழரைச் செவ்வாய்’ என்ற காரணத்தால் பதினாறு வருஷங்களாகக் கலியாணம் பேசியும் பயனில்லாது போயும் அண்மையில் கப்பலிலிருந்து திரும்பிய மாமியின் மகனிற்காவது பொருந்துமோ? என்ற தாயின் நப்பாசையில் கேட்டும் அங்கும் இப்பிடி ஒரு ‘பிரச்சினை’ உருவானது…?
குமரனின் தகப்பன் சின்னையா சாதாரண தோட்டக் காரனாகத் தான் இருந்தார். ‘இருபது பட்டி பொயிலைக் கண்டு. அஞ்சு பட்டி மிளகு கண்டோடை ஈரக்காய் போக, பூசணி அவ்வளவுதான் அவரால் முடிந்தது.
வயலூர் வட்டவிதானையாரின் தோட்டத்தறையைக் குத்தகைக்கெடுத்து வாழ்க்கையைப் பண்படுத்திய அவர் இருதய நோயால் வலுவிழந்து.. கண்மூடியதற்குப் பிறகு கடந்த ஆறேழு வருஷங்களாக அந்தக் குடும்பத்திற்கு குமரன் தான் தலையாள். மேற்படிப்பு படிக்கத் தகுதியிருந்தும் வீட்டு நிலவரத்தால் இளம் வயதிலேயே தொழில் துறையென இறங்கிவிட்டான் அவன். அவனது நாலாயிரம் ரூபாய் சம்பளமும்; நெல்லுப் பிழுக்கி, கருப்பனீர் காய்ச்சி மாடாடு வளர்த்து மாடாயுழைக்கும் பகவதியின் பெருமாற்றலாலுந்தான் அந்தக் குடும்ப வண்டி இந்தளவிற்காவது ஓடுகிறது.
வீட்டுச் செலவு, தங்கை சறோவின் படிப்புச் செலவென மாதச் சம்பளமே..ஒரு மூலைக்கும் கிள்ளித்தெளிக்கக் காணாத இந்த எக்கச்சக்கமான காலத்தில் மாலும் குடிலுமாய் இருக்கும் வீட்டினைத் தான் அவன் எவ்வாறு மாற்றி அமைக்க முடியும்? இறக்கும் போது சின்னையர் விட்டுச்சென்ற ஒரு பத்தாயிரம் ரூபாக் காசு மட்டுமே குடும்பச் சொத்தாய் உள்ளது.பத்தாயிரம் ஒரு வீட்டு அத்திவாரத்திற்கே பத்தாத இந்த நாளையில்…
தந்தையின் மூத்த மைத்துனர் விசுவமடுவில் வேளாண்மைக் காரர் முருகேசர் ஆரம்பத்தில் ‘ஒல்லுப்போலை’ தமக்கு உதவி செய்தாலும் காலப்போக்கில் தாமாகவே விலகிக் கொண்டதை அவன் உணராமலில்லை.
இந்த வேளையில் தான் உழைக்கவென ‘கப்பலேறிய’ முருகேசரின் ஒரே மகன் சந்திரன் திரும்பி வந்தான். சந்திரனுக்கும் புவனத்திற்கும் ஒரே வயதென்றாலும் சின்னையர் இருக்கும் போது சந்திரனிற்குத் தான் புவனம் என்றொரு பேச்சிருந்தது. சின்னையர் சாகும் போது கூட, “நீ மூத்தவளைப் பற்றி கவலைப்படாதை! அவளை அக்கையின்ரை பெடியன் கட்டுவான். இனி…. இளையவளையும் கடவுளேயெண்டு எங்கடை பொடியன் கவனிப்பான் தானே? வயலுாரான்ரை அருளாலை எல்லாம் நல்லபடியா ஒப்பேறும்”- என்றே கூறிச் சென்றார்.
குடி இருக்கும் ஒரு பரப்பு வளவைத் தவிர வேறெதுவுமே தமக்கைக்குத் தாங்கள் கொடுக்க முடியாதிருப்பதை உணர்ந்தும் தனது விருப்பத்தின் பெயரில்; ‘அக்கைக்கும், அக்கையின் மகளிற்குமாக’ மாமன் பரமசிவம் ஓடியாடித் திரிந்து ஏறியிறங்காத படிகளில்லை என்பதும் அவன் தெரியாமலில்லை.
“என்ன பூராயம் பிடிக்கிறாய் பரமு? தங்குமடம் மாதிரி கிடக்குது…அந்தக் குஞ்சட்டி வளவுக்கை என்னெண்டு எங்கடைபிள்ளை வந்திருக்கிறது-?”, “நாசமாப்போக! ஒரு பரப்பு வீட்டை வைச்சு நாங்களென்ன மாரடிக்கிறதே? நாங்களொண்டும் பிறத்தியாரைப் போலை கொழுத்த சீதனமாகக் கேக்கேலை… இரண்டு இலட்சம் காசாத்தரேலு மெண்டால் சொல்லு. அதைப்பற்றி யோசிப்பம்”- என ஆரம்பத்தில் சொல்லியவர்களும்; “என்ன பரமு, புதுநாணயக் கதை பறையிறாய்? குமர் முத்திக் குரங்காப் போச்சு! இனி அந்தப் பொடிச்சிக்கு என்ன கலியாணம்? இனியும் சிறைவைச்சிருக்காமல் வாய்ச்சால் எங்கையாலும் இரண்டாந்தாரமா எண்டாலும் பறவாயில்லை தள்ளிவிடுங்கோ … பொடிச்சியும் வலுவாக் கொட்டுப்பட்டுப் போச்சு…. இனி உதுக்கு ஊருக்கை?”- எனப் பின்பு கூறினோரும்……அப்பப்பா! பரமசிவம் படாதபாடெல்லாம் பட்டுவிட்டார்.
கடைசியாகத்தான் “அவையையும் ஒருக்கால் கேட்டுப் பாப்பமடா,சந்திரனுக்கும் ஏழரைக் குற்றமிருக்குது எண்டு கேள்வி,”- என்று பகவதி மும்முரமாய் நின்று பரமசிவத்தை மண்டாடியதன் பெயரில் தான்…..அவர் சம்மந்தம் கேட்கவென இன்று முருகேசர் வளவிற்குச் சென்றிருந்தார்.
‘பாவம் அம்மானும் எங்களுக்காக எவ்வளவு…?’ ஏக்கப் பெருமூச்சுதிர தீராந்தி வாசலை விட்டெழுந்தான் குமரன். அவனுக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. மீண்டும் அடுப்படிக்குள்ளே வந்து அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான்.
எப்படியாவது தமக்கைக்கு ஒரு வழி பிறக்க வேண்டும். முப்பத்தியிரண்டு வயதைக் கடந்த அவளிற்கு இனியார் விரும்பி மாப்பிள்ளை தரப்போகிறார்கள்? சீதனம் இல்லாத பிரச்சினை வேறு.
திக்கற்றவர்களுக்குத் தெய்வந் தான் துணை என்பார்களே! அவர்களைப் பொறுத்த மட்டில் அந்தக் கடவுள் கூட கல்லாகிவிட்டாரா?
“கல்வளவுக் கனகசபை வீட்டிலை ஒரு புதுக்குடும்பம் வந்திருக்கு. வேற்றூரில் சனங்களாம். வடலித்திடல் பனம்பொருள் நிலையத்திலை பொடியர் மனேச்சராம். தங்கக்காறப் பொடிச்சி யோடையும், தேப்பனோடையும் பொடியன் குடிவந்திருக்கு. மனேச்சர் பொடியன் முன்னை கட்டினதாம்… பெண்சாதி தலைப்பிரசவத்திலை செத்துப் போச்சு தெண்டு கதைக்கினை. பொடியருக்கு வயதும் அவளவு ஏற்றமில்லை எண்டு சொல்லிச்சினை. தங்கைக்காறப் பொடிச்சிக்கு இருபத்தைஞ்சு வயதாம். மாற்றுச் சம்பந்தமா எங்கையாவது வாய்ச்சால் எங்களிட்டைச் சொல்லுங்கோ எண்டு தேப்பன் சங்கக்கடை சண்முகத்தாரட்டை சொல்லியிருக்கிறாராம். இப்ப நானுதிலை போகக்குள்ளை நறுவிலித் திடலடியிலை சந்திச்சு முகத்தார் சொன்னார். அது தான் உன்னட்டை ஒருக்கால் சொல்லுவமெண்டு ஓடி வந்தனான்.” வேர்க்க விறுவிறுக்க பரமசிவத்தார், தாய் பகவதிக்கு சொல்லிக் கொண்டிருப்பது குமரனிற்கும் தெளிவாகக் கேட்கிறது.
“என்ன விசர்க்கதை கதைக்கிறாய்? பொடியன் பனம்பொருள் நிலையத்திலை வேலை எண்டுறாய். அதுகள் என்ன சாதியோ?”
“உந்தக் கண்டறியாத குலங் கோத்திரம் பாக்கிறதாலேதான் எங்கடை இனசனங்கள் இப்படியிருக்குதுகள். உதுகளிலை என்ன கிடக்கு
சாடையாக் கேட்டுப் பாப்பமே அக்கை?”
“எங்கடை பொடிச்சியை இரண்டாந் தாரமாக் கட்டிக்குடுக்கிறதேடா?”
“எங்கடை நிலவரத்தையும் எல்லோ சாடையா நாங்கள் யோசிக்க வேணும். பொடிச்சிக்கும் வாற ஐப்பசியோடை முப்பத்தியிரண்டு முடியப் போகுது. இல்லைத் தெரியாமல் தான் கேக்கிறன்…இனியும் சிறைவைச்சிருந்து என்னேயப் போறாய்?”
“இதுக்கு எங்கடை பொடியன் ஒத்துவருவனே?”
“ஒத்துக் கொள்ளாமல் என்னேயிறது? அவையின்ரை பக்கத்திலும் பொடிச்சி அவ்வளவு பழுதில்லையாம். இனி அவை சீதனமா ஒண்டையும் எதிர்பாக்கேலையாம்…சீதன வாகனமெண்ட பேச்சே பொடியருக்கு பிடியாதாம்…. இனி அந்த முறையிலை மூச்சுவிடக் கூடாது. போக…. பொடியருக்கும் ஏழரைக்குற்றம் இருக்காம். இது எங்களுக்கு வாய்ச்ச சம்பந்தம் எல்லே அக்கை…”
“எதுக்கும் தம்பியையும் ஒருக்கால் கேட்டுப்போட்டு….”
“இதிலை நான் சொல்ல ஒண்டுமில்லை. எப்பிடியாவது அக்காவின்ரை காரியம் ஒப்பேறவேணும்.” என்றவாறே குமரன் வீட்டுத் தலை வாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
“பிள்ளை….உலைத் தண்ணியை மீட்டு கொம்மானுக்கும், தம்பிக்கும் ஒல்லுப்போலை தேத்தண்ணி போட்டுக்குடு. டேய் தம்பி வாசிகசாலைப் பக்கமோ போறாய்? தண்ணியைக் குடிச்சிட்டுப் போடா மோனை புவனம் மட்டுமல்ல பகவதியும் இப்போது பம்பரமாக இயங்க ஆரம்பித்துவிட்டாள்.
உலைத் தண்ணியை மீட்டு தேநீர் போட்டுவிட்டு, உலைக்குள் அரிசியைப் போட்டாள் புவனம்.
சுவாலை கக்கி எரிந்து கொண்டிருந்த சூட்டடுப்பு தற்போது புத்தொளி வீசியவாறே அரிசியை வேகவைத்துக் கொண்டிருந்தது.
– ஈழநாடு வாரமலர், 1978.
– விடியட்டும் பார்ப்போம்..!, முதற் பதிப்பு: மாசி 1997, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.
![]() |
புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஏழாம் பொருத்தம்…
யுவராஜ் சம்பத்
April 21, 2026
உனக்கும் எனக்கும்
பானுமதி வெங்கடேஸ்வரன்
April 21, 2026
ஒரு சனிக்கிழமை காலையில்
நிர்மலா ராகவன்
April 21, 2026
