புத்தி..! – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 20,463
நண்பனைப் பார்க்க வீட்டிற்குப் போனேன்.
ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியரான அவன் அப்பா சந்திரசேகர் காப்பகத்திலில்லாமல் வாசலில் நார் கட்டிலில் அமர்ந்திருக்க…அருகில் பத்து வயது பேரன் கையில் தமிழ் தினசரியைப் பிடித்து உரக்க வாசித்துக் கொண்டிருந்தான்.
அவர் கண் மூடிக் கேட்டுக் கொண்டிருந்தார்.
‘காலை வேலை குழந்தையைப் படிக்க விடாமல் வயசான காலத்துல தாத்தா ஏன் பேரனை இந்த இம்சைப் படுத்தறார்.? ‘ என்ற நினைக்கும்போதே….
என்னைப் பார்த்த நண்பன், ”வாடா…” வரவேற்றான்.
”இது….? ” இழுத்தேன்.
”அப்பாவுக்கு மறுபடியும் வாத்தியார் வேலை. அவர் ஏற்பாடு.”
”புரியலை ? ” குழம்பினேன்.
”சொல்றேன். பையன் காலத்துக்குத் தகுந்தாப்போல கான்வென்ட் படிப்பு. தாய்த்தமிழ் சரியா வரலை. இப்படி பயிற்சி கொடுத்தால்….தமிழ்… பேச்சு, படிப்பு எல்லாம் சுத்தமாய் வரும். அப்பாவுக்கும் தினசரி செய்தி தெரிஞ்சாப்பாபோல இருக்கும். என்னைக்கும் பெரியவங்க புத்தி புத்திதான். அவுங்க வீட்ல இருக்கிறது பெரிய பலம்.” பெருமையாய்ச் சொன்னான்.
அப்பாவைக் காப்பகத்தில் விடும் முடிவு எனக்குள் சட்டென்று மாறி மனம் தெளிவாகியது!