புதுப்புனல்




(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒன்று திரண்டு உருப்பெறுவதற்குள்ளாகவே சிதறி விடுகிற மேகக் கூட்டத்தைப் போல அவளது எண்ணங்கள் சிதறிக் கொண்டே போயின.

சுவை தருகிற ஆசைக் கனவுகளை அளவுக்கு அதிக மாகவே நிரப்பி வைத்திருந்த இள வயதிலேயே, வளம் நிரம்பிய எதிர்காலத்தை நினைவில் பதித்து ஒருவனை கரம் பிடித்த ஆறு மாதங்களிலேயே அவள் விதவையாகிப் போனாள்.
எழில் நிரம்பி வழிகிற இருபது வயதுப்பெண்ணான அவள் குன்றுகளில் ஏறி கொழுந்தாய்கிறதை பார்க்கையில் யாருக் குச் சொல்லத் தோன்றும் அவளை விதவையென்று.
வேண்டாமென்று விதவா விவாகத்தை எதிர்ப்பவர்கள் அவளின் மௌனம் தேங்கிய முக அழகில் இரக்கம் பெற்று மனம் மாறி விடுவார்கள்.
மனித மனம் எத்தனை அற்பமானது? எத்தனை சக்தி வாய்ந்ததும்கூட?
வாழ்க்கை அமைப்பையே சீர்குலைத்து விடுகிற எத்தனை சம்பவங்களை அது தூசாகக் கருதி ஒதுக்கிவிட்டி ருக்கிறது; எத்தனை தூசான நிகழ்ச்சிகள் எவ்வளவு குடும்பங்களை உருத்தெரியாமல் பண்ணியிருக்கின்றன!
அவளுக்கு அச் சம்பவம் தூசாகி விட்டதுவா? அல்லது அவள் தன் வாழ்க்கையைச் சீர்குலைத்து விடச் சம்மதித்து, விட்டாளா?
ஆண்டாண்டு காலமாக வேரூன்றிவிட்ட வழக்கங்களை எடுத்தெறிந்து விட்டு வாழ வேண்டிய அவசியம் என்ன?
பூத்துக் குலுங்க வேண்டிய பருவம் அவளுடையது: வயிற்றில் உருவாகி வருகிற சிசுவின் நினைவு ஒன்றே பூவின் மலர்ச்சியாய் மணம் பரப்பி இன்ப நினைவுகளை எழச் செய்யப் போதுமானது. போது பூவாக விரிகையில் பிறக்கும் மணமும் மலர்ச்சியும் அவளுக்கு எப்படிக் கிட்டும்? அவரில்லாதபோது, அவரின் ஆதரவான பிணைப்பால் உருவான இன்ப நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளப் பக்கத் துணையில்லாமல் சோர்ந்துபோய் விட்டாள், எதையோ இழந்து விட்டவளாக.
இந்த இழப்பு எவ்வளவு பெரியது? அவள் அதை எப்படித் தாங்கிக் கொண்டாள்?…
வீட்டில் ஒன்றியாக இருக்கையில், பாயில் தனியாகப் படுக்கும்போது, உணவு தனக்காகச் சமைக்கையில் மேலிடும் தனிமை உணர்வு, நீண்டோடும் வாழ்க்கைப் பாதையில் ஆதரவிழந்து போனதால் எதற்கிந்த வாழ்வென்று நொந்து கொள்ளச் செய்யும்.
அந்த ஏகாந்தமே, இருவரினதும் இணைப்பில் ஓடி மறைந்த இன்ப அனுபவங்களைப் புதிது புதிதாய்ச்சொல்லித் சோபிதமான எத்தனை நிகழ்ச்சிகள்! அவை தீர்க்கும். எழுப்பிய நினைவுகளின் மதுராந்தகம்தாம் எவ்வளவு?
அவள்தான் எத்தனை அபாக்கியசாலி. இவையத்தனை யையும் இத்தனை விரைவாக இழந்து விட?
அவள் உடலுக்கு ஒன்றென்றால் ஆதரவாகப் பார்த்துப் பேச ஆளில்லை, அவளது அவர் இன்று உயிரோடில்லை.
இருள் உலகை ஆளத் தொடங்குகிற நேரம். எதிர் காலத்தைப் பற்றிய நினைப்பிலும் இருள் பரவ ஆரம்பித்து விட்ட உள்ளத்தோடும் ஒரு மூலையில் சாய்ந்து உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, வெளியே ஸ்தோப்பில் கதவை திறந்து கொண்டு யாரோ கூப்பிடுவது காதில் படுகிறது.
அவளைக் கூப்பிடுவது யாராயிருக்கும் என்று அவளுக்கே தெரியாது?
வயிரவனின் ஆதரவான குரல் ஒலித்த அடுத்த கணமே அவள் எழுந்து உட்கார்ந்து கொண்டாள், அவன் வருகையை எதிர்பார்த்து.
வயிரவன் வந்ததும் வராததுமாக மூலையிலெரிந்த லாம்பில் திரியை ஏற்றி வெளிச்சத்தைக் கூட்டினான் – இருள் கொஞ்சம் குறைந்தது. அவன் செய்கையின் அர்த்தம் அவளுக்கு விளங்கி விட்டதா? அவளுக்கு விளங்க வேண்டும் என்பதற்காக அவன்தான் சூசகமாகக் கோடி காண்பிக்கிறானா?
சாயந்தரம் வேலை முடிந்து வீடு திரும்பியவள் விட்டெறிந்த கூடையும் வீசி வைத்த படங்கும் ஸ்தோப்பில் ஒரு மூலையில் கிடக்கிறது. அதை எடுத்து ஒழுங்குபடுத்த அங்கு யாருமில்லை.
வெளிச்சத்தில், அவள் முகம் களைத்துச் சோர்ந்து போயிருப்பதைக் கவனிக்கிறான். அடுப்பில் வேறு நெருப்பையே காணோம்.
அவன் கண்கள் கலங்குகின்றன. அது அவளுக்குத் தெரிந்துவிடக்கூடாதே என்பதற்காக
மிலாரை ஒடித்து அடுப்பிலிட்டு பற்ற வைத்துவிட்டுஅவள் அருகே வருகிறான்.
“உங்களுக்கு எதற்கு இந்தச் சிரமம் எல்லாம்.” அவள் கேட்கிறாள்.
“இதைக்கூட நான் செய்யலே என்றால் வேறெதுக்கு நானிந்த உடம்பை வைச்சிக்கிட்டு இருக்கணும்.’ அவன் பேசினான்.
‘*இப்பவோ அப்பவோன்னு எதிர்பார்த்து வாயும் வயிறுமாக இருக்கிற நீ மலையேறி வேலை செய்யிறதை பார்த்துக்கிட்டு என்னால பேசாமல் இருக்க முடியலியே.
அவனால் முடியாதுதான். அவளுக்குத் திருமணம் நடக்கும் முதல் மாதம் வரையிலும், அவள் தனக்குத்தான் எண்ணங்களும் கிடைப்பாள் என்ற முழு நம்பிக்கையில் நினைவுகளும், ஆசைகளும் கனவுகளும் ததும்பி வழியச் சென்றோடிவிட்ட நாட்கள் அவனால் மறக்கமுடியாதவை.
அவள் அவனுக்கு முறைப்பெண் இல்லை. அவள் யாரோ, அவன் யாரோ! ஆனால் இளம் வயதில் முகிழ்த் தெழும் மோகன நினைப்புக்கு அவர்களிருவரும் வசப்பட்டு போனார்கள்.
வீடென்ன, வேலைத்தளம் என்ன, அவள் நினைப்பி லேயே ஒவ்வொரு விநாடியும் அவனுக்குக் கழியும்.
கிள்ளி எடுக்கும் ஒவ்வொரு இளந்தளிரையும் அவனுக் குத் திருப்தி தரும் என்ற நினைப்பிலேயே அவள் சேர்த்து, நிறைந்து, கூடையிலிடுவாள். அவனது திருப்திக்காக அவள் என்னென்ன செய்திருக்கிறாள்?
குளித்து உடுத்தி குமிழ்ச் சிரிப்பிழைந்தோட அவள் நடந்துவரும் பாதையின் ஒரு வளைவில் அவன் நின்றிருப் பான் அவள் வருக்கைக்குக் காத்து.
வேலைக்குப் போகும் போதோ. வீட்டுக்குத் திரும்பும் போதோ அவர்கள் சந்தித்துக் கொள்ளவில்லை என்றால், அந்திக்கருக்கலில் பீலிக்கரையில் சந்தித்தாக வேண்டும். இல்லையென்றால் பொழுதே போகாது! என்ன பேசிறோ மென்று சொல்ல முடியாமலும் எதைப் பேசாது விட்டோ மென்று திருப்திப்பட்டுக் கொள்ளவும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.
கடைசியில் அவர்கள் வாழ்க்கையும் வெறும் கதையாகி விட்டது.
அவளது அப்பன் மூர்க்கத்தனத்தோடு அவளை முறைப் பையன் ஒருவனுக்கு கலியாணம் செய்து வைத்து விட்டான்.
முதலில் மறுத்தவள், முடிவில் சம்மதித்தாள். நோய் வாய்ப்பட்ட அப்பன் சாகாமலிருக்க. ஆனால் அவளை மணம் முடித்த அடுத்த மாதமே அவன் போய் விட்டான். அவளை வற்புறுத்தி ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்கும் வரையில் ஒட்டிக் கொண்டிருந்தது அந்த உயிர்.
அவள் நடுங்கித் தீர்த்து விட்டாள். அவளது வாழ்க்கை யும் நடுங்கக் கூடாதே என்று.
அத்தனை காலமும் ஆதரவாய் இருந்த அப்பனைப் பறிகொடுத்துவிட்டு, சதாகாலமும் தன் நினைவிலேயே ஏக்கத்தோடு, ஒருவனை தன் எதிரிலேயே நடமாடவிட்டு விட்டு வேறு ஒருவரை நம்பித் தன் வாழ்க்கையை ஒப்படைத் திருக்கிறாளே அவளுக்கு நடுக்கம் வர யாரைக் கேட்க வேண்டும்?
அவள் பயம் நியாயமானதுதான். அதற்காக அவள் பயந்தபடி எதுவும் நடக்க வேண்டும் என்ற கட்டாயமிருக்கிறதா?
அவளது திருமணத்தின்போது அவன் வந்திருந்தான். உண்மையில், பந்தலிட்டுச் சோடித்து வீட்டை அலங்கரித்து, மணவிழா நடக்கும் வரையில் ஓடி ஆடி உழைத்தவர்களில் அவனும் ஒருவன். ஏக்கமோ, பெருமூச்சோ, ஏமாந்துபோன ஆத்திரமோ அவனிடம் காணக் கிடைக்கவில்லை.
அவளது வாழ்க்கையில் ஒளியேற்றிவைக்க அவன் ஆசைப் பட்டான். அந்த வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லையானாலும், அவளது வாழ்க்கையில் ஒளி ஏறத்தான் செய் கிறது. ஒளியேற்றுபவன் அவனாக இல்லாவிட்டாலும், அந்த ஒளியின் நித்திய சுடருக்கு அவன் ஆதரவாக இருக்க வேண்டாமா? அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனமார நேசித்துப் பழகியதே அப்படி ஓர் ஒளியை வேண்டித் தானே!
ஆரம்பத்தில் சில நாட்கள் அவள் மனம் அமைதியிழந்து, குழப்பிய குட்டையாய்க் கிடந்தது. நெஞ்சுக் குளத்தில், நினைவுக் கல்லை விட்டெறிந்து குழப்புவதை அவளால் தவிர்க்க முடியவில்ல நினைவுகளைத் தூண்டிவிடும் நிகழ்ச்சி களின் தொகுப்பாயமைந்து, அவள் அவனோடு வாழத் துடித்த வாழ்க்கை!
அவனைப் பார்க்கும்போது நெஞ்சு அலைமோதும்; பார்வை கீழிறங்கும்; செய்யக் கூடாத தவறைச் செய்து விட் டாற்போல. ஆனால், அவனோ அவளோடு நெருங்கிப் பழகிய காலத்தைய அதே புன்னகையோடு சற்று எட்ட நின்று அவளைச் சுகம் விசாரிப்பான். அவளும் நாளாக ஆக பழகிப் போனாள். “நாம் கொடுத்து வைச்சது அவ்வளவு தான்’ என்று மனதை தேற்றிக் கொள்வாள் அவள்.
வாழ்க்கை திசைமாறிவிட்ட இன்றும் அவளுக்குத் தேறுதல் சொல்ல அவன்தான் வந்திருக்கிறான்.
அவளது கணவன், தொழிற்சாலையில் வேலை செய்யும் போது “ரோதை’யில் அடிபட்டுச் செத்துபோனான் என்ற செய்தி கேட்டு அலறிக் கொண்டு வந்த முதல் ஆள் அவன் தான்.
தனக்குக் கிடைக்காத ஒரு பாக்கியம் அவனுக்கு கிடைத் திருந்தது, தன்னால் முடியாத ஒன்றை அவள் கணவன் செய் திருக்கிறான் என்று திருப்திபட்டுக் கொண்டவன், அந்த வெற்றியின் வாழ்க்கை இத்தனை குறுகியதா என்று பதை பதைத்துப் போனான்.
அவள் என்னாவாள்? அவளது வாழ்க்கை இருள் வடர்ந்து போகப் போகிறதா?
பழைய வாழ்வை பொய்யாக்கி விட்டு, புதிய வாழ்க் கைக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டவள் இன்று அந்த வாழ்க்கையையும் பொய்யாக்கிவிட்டு புலம்புவதற்கு தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டியவளாகி விட்டாள்.
அவளது கணவனின் அந்திமக் கிரியைகளை, அடிமனதில் பீறிட்டெழும் துயர நினைவுகளை, அடக்கிக்கொண்டவனாக நடத்தி முடித்தான் வயிரவன்.
சோகம் ததும்ப சோர்ந்து நிற்கும் அவளைக் காணச் சகிக்கவில்லை அவனுக்கு. ஆண் துணையற்று போன ஆண் துணையின் முழு வசீகரத்தையும் அநுபவிக்கத் தவறிப் போன அவளை நினைத்து நினைத்து அவன் அமைதியை இழந்துவிட்டான். அவளது அபாக்கியத்தைஎண்ணி எண்ணி ஆவேசப்பட்டுப் போனான்.
அவனால் ஒரு முடிவுக்குத்தான் வர முடிந்தது. அவளை வாழ வைப்பதென்று உறுதி பூண்டான். அவளுக்குத் துணை யாய் அவன் நிற்பான்.
இரண்டு மாதங்களுக்குள்ளாக எப்படி இறங்கிப் போனாள்? அவள் கணவன் உயிரோடிருந்தபோது அவளது முகத்தில் படர்ந்திருந்த செழுமை செத்துப் போய்விட்டது.
பற்றிப் படரக் கொம்பிருந்த காலத்தில் செழித்து வளரும் செடி, படர்ந்திருந்த கொம்பொடிந்தால் பட்டுப் போவதில்லையா?
அவள் நிலை கொள்ளாது தவித்தாள். அவளால் எந்த விதமான முடிவுக்கும் வர முடியவில்லை.
அவனைப் போல் அத்தனை விரைவாக அவளால் ஒரு முடிவெடுக்க முடியவில்லை; அவனது கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை.
அவனது முடிவின் பலவீனம் அவளுக்குத் தெரிந்தது, ஓ! அதை எப்படி பலவீனம் என்றுரைப்பது? முடிவின் பலமும் அதுதானே? அந்த பலமான முடிவுக்கு வர அவனுக்கு பலம் தந்தது எது?
அவன் கேட்பதில் என்ன பிழை? அப்படி கேட்பதற்கு அவனுக்கு உரிமையில்லையா?
புதுப்புனலாய் பீறிட்டெழுந்த சுகந்த நினைவுகளை அவளிடம் வளர்த்தெடுத்த முதல் மனிதன் அவன்தானே!
நிரம்பி வழியும் ஆனந்த நினைவுகளோடு, வாழ்க்கை யின் பிரகாசத்துக்குக் காத்துக் கிடக்க அவள் ஆசைப்பட்டது அவனோடுதானே!
அவன் கேட்பதில் என்ன தவறு?
அவளால் அவரை எளிதில் மறந்துவிட முடியவில்லை. எட்டு மாத காலத்தைய தாம்பத்திய வாழ்க்கைதானென்றா லும் எவ்வளவு இனிமையானது. அவள் விம்மித் தீர்த் தாள்.
வயிற்றில் வளர்கின்ற குழந்தையை வளர்த்தெடுத்து ஆளாக்க வேண்டிய பொறுப்பை அவள் எப்படி நிறைவேற்றப் போகிறாள்?
நாள் முழுக்க மலையேறி உழைத்து அலுத்து ஓய்ந்து வருகிற அவளுக்கு அதைச் செவ்வனே செய்து முடிக்கத்தான் இயலுமா?
அவரைப் பறி கொடுத்து விட்ட இந்த இரண்டு மாதத் துக்குள்ளாக அனுபவித்த நரக வேதனையில் அவள் உயிர் பிழைத்திருப்பதே அதிசயந்தான்.
அழுகை பீறிட்டது அவளுக்கு!
“இதென்ன கண்ணீர் வடிச்சிகிட்டு. இப்ப என்ன நடந் திருச்சி இப்படி அழுது வைக்க” கனிவோடு கேட்டுக் கொண்டு அவளருகே குனித்தமர்ந்தான் வயிரவன்.
அவனது கையில் ஆவி பறக்கும் தேநீர் இருந்தது. அவ ளுக்காக அவன் தயாரித்தது அது. அவள் நன்றியோடு அவனைப் பார்த்தாள்.
”கொஞ்சம் இரு. ஆற்றித் தருகிறேன். உன்னை மாதிரி இருப்பவங்களுக்குச் சூடு ஆகாது” அவன் சொன் னான்.
அவன் எதை குறிப்பிடுகிறான்? நினைவுக் கனல் நெஞ் சில் எழுப்பிவிட்ட உஷ்ணக்கீற்றுக்களையா? அதை ஆற்றி வைக்கவா, அவன் அவகாசம் கேட்கிறான்?
அந்த உரிமையை அவனுக்கு அவள் கொடுத்து விட் டாளா? அவள் வயிற்றில் துள்ளும் குழந்தைக்குப் பேரிட்டு ஆளாக்கப் போகிறவன் அவன்தானே!
– 1969
– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.