பீலிக்கரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2025
பார்வையிட்டோர்: 102 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்போதெல்லாம் எனது அன்றாட வேலைகளில் அதுவும் ஒன்றானது. மாலை ஐந்து மணிக்கெல்லாம் குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுக்க பீலிக்கு சென்று விடுவேன். போகும் வழியில் என்னுடன் இணையும் ரேணு, பாமா, பார்வதி, சின்னவா, கட்டையா ……பிறகென்ன ஏழு மணிவரை ஒரே கும்மாளம்தான் போங்கள். வீட்டில் தண்ணீரும் நிறைந்துவிடும் எங்கள் பொழுதும் போய்விடும். 

பீலிக்கரை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு ரொம்பப் பிடித்த இடங்களில் இந்த பீலிக்கரைக்குத்தான் முதலிடம். இரண்டு வாழைப்பட்டைகளை ஒன்றாக இணைத்து ஓடும் தண்ணீர் அணைக்கப்பட்டு கற்பாறைக்குள் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கும். குளிக்க, குடிக்க பூக்கன்று வளர்க்க, உடுப்பு கழுவ, பாத்திரம் கழுவ என்று எதற்கெடுத்தாலும் பீலிதான். ஓரத்தில் ரெண்டு பாக்கு மரம். முன்னால் பாக்கியம் கிழவியின் மரக்கறித்தோட்டம். சுற்றி பெரிய பெரிய பாறைகளும் மரங்களும். அந்த கறுப்பு நிற ஒற்றைக் கல்லில் அமர்ந்துகொண்டு எவ்வளவு நேரமென்றாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வழுவழுப்பான வாழைப்பட்டைக்குள் தண்ணீர் ஓடுவதுதான் எவ்வளவு அழகு. அதன் இடையில் கை வைத்து தண்ணீரை தடுக்கும் போது கையை மீறி பாயும் தண்ணீர், பட்ட இடமெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஏற்படுமே….! அனுபவித்தால்தான் புரியும். சதா ஒடிக்கொண்டிருக்கும் அந்த தண்ணீரைப்போல அதைப் பார்ப்பதில் எனக்கு சலிப்பே வராது. 

பந்தயத்திற்கு ஓடுவதுபோல் ஓடி, விழப்போவது தெரியாமல் தடுமாறி தொகையாய் வெண் நுரைகள் தள்ளத்தள்ள வந்து விழும் அந்த நீரில் நின்று கண்களை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் குளித்துக்கொண்டிருப்பேன். ஊர்க்கதைகள் எல்லாமே பீலிக்குத் தெரியும். சாரதாக்கா உடுப்பு கழுவும் போதெல்லாம் புருசனை ஏசிக்கொண்டேதான் துவைப்பாள். தினமும் ஒரு சின்ன சண்டையாவது வந்துவிடும். பாவம் பீலியும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது. 

என் பாட்டி செத்த போது அத்தனை கவலையையும் கொட்டித்தீர்த்தது….. பரீட்சையில் பாஸ் பண்ணிய சந்தோசத்தை பகிர்ந்துகொண்டது…. அம்மா திட்டியதும் கோபித்து அடைக்கலம் புகுந்தது எல்லாமே இந்தப் பீலியிடம் தான். 

இன்றும் அப்படித்தான். பீலியையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அழுதுகொண்டு. 

“யாரோ ஒரு அமைச்சர் ஒதவியில எங்களுக்கும் குழாய் தண்ணி கட்டி தரப்போறாங்களாம் அப்பறம் கெணறையும் சிமிந்தியில கட்டப்போறாங்களாம்..” 

சின்னப்பொண்ணு சந்தோசத்தில் தலைகால் புரியாமல் சொல்லிக்கொண்டே அந்த வேகத்தில் பாத்திரத்தை அழுத்தி தேய்த்தாள். 

ஊருக்கே சந்தோசம். நான் மட்டும் எப்ப்டி சொல்ல முடியும் வாழைப்பட்டை பீலித்தான் வேணுமென்று. என்னை விட்டு ஏதோ ஒன்று பிரியப்போவதாய் உணர்கிறேன்… தினமும் பீலிக்கு வந்தால் பாடும் பாடலை இப்போதும் பாட முயற்சிக்கின்றேன். 

“சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போ…” அழுகைதான் முட்டிக்கொண்டு வருகிறது. 

“ஏம்புள்ள அழுவுற?” 

கேட்ட சின்ன பெண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டேன். இரண்டு நாளாய் கையும் ஓடாமல்… காலும் ஓடாமல் நினைவெல்லாம் பீலி பீலி பீலி. ஒரு பதட்டம் ஒரு தவிப்பு பீலிக்குப் போகவே மனமில்லை. இரவுகளில் கவலை கூடி சில நேரங்களில் தூக்கமும் தூரப்போய்விடும். 

ரெண்டு பெரிய மனிதர்கள் வாழைப்பட்டையை ஏளனமாக பார்த்து சிரித்துவிட்டு எடுத்து வீசுகின்றார்கள். அங்கிருந்த பாறைகளை ஒதுக்கி தள்ளுகிறார்கள். என்னால் முடியவில்லை… பார்த்துக்கொண்டிருக்க என்னால் முடியவில்லை… ஓடிப்போய் அவர்களின் காலைப்பிடித்துக் கொண்டு கத்துகிறேன். 

“வேணாம்… இந்த எடத்துல ஒண்ணும் செய்ய வேணாம்…” 

என்னையும் சேர்த்து தள்ளி விட்டு கற்பாறைகளை அகற்ற முயற்சிக்கையில், என்னையறியாமலேயே கையில் கிடைத்த கல்லை எடுத்து ஒரே வீசு… 

கல் தலையில் பட இரத்தம் வெளியேறி சட்டையெல்லாம் ஒரே இரத்தம்… இரத்தம்… இரத்தம்… என் உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கியது. 

“நான் வேணுண்ணு அடிக்கல்ல என்ன விட்டுருங்க… என்ன விட்டுருங்க…” 

”என்னாச்சும்மா?” 

அம்மாவின் குரல் கேட்டு எழும்பி விட்டேன். முகமெல்லாம் வியர்த்துப்போய்!!! 

கனவுதானா? 

“ஆறுமணிப்பட்டு பீலிக்குபோகாதன்னு எத்தன முற சொல்றது? கேக்குறியா… இப்ப பாரு தூக்கத்துல புலம்பிக்கிட்டு…” 

திட்டிக்கொண்டே அம்மா விபூதியை அள்ளி நெற்றியில் பூசிவிட்டாள். 

காலையில் கனவு நிஜமானது. ஒரு பெரிய டிரக்டரில் மணல் சிமிந்தி கற்கள் எல்லாம் கொண்டுவந்து இறக்கப்பட்டது. எல்லா வேலைகளும் சீக்கிரமாக நடந்தன. பீலியின் வடிவமைப்பே மாறிக்கொண்டு போனது. யாருமே தடுக்கவில்லை. எல்லோரும் அடிக்கடி பீலிக்குப் போகத் தொடங்கினார்கள். குளித்தார்கள்… துவைத்தார்கள்… கழுவினார்கள்… நடந்தார்கள்… அமர்ந்தார்கள் அத்தனை சந்தோசம் அவர்களுக்கு. வாழைப்பட்டை ஒரு மூலையில் மிதிபட்டு கிடந்தது. 

அம்மா பாவம். கஷ்டப்பட்டு தெனமும் தண்ணி எடுக்குறாங்க. என்னால பிலிக்கு போகவே முடியல. யார்கூடவும் சரியா பேசவும் முடியல்ல. மனசுக்குள்ள ஒரு கவலை எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும். இப்பெல்லாம் வீட்ட விட்டு வெளிய போகவே பிடிக்கல்ல. 

நாட்கள் மெதுமெதுவா நகர்ந்தன. 

ஒரு மூன்று மாதம் இருக்கும் குழாயில் தண்ணீர் வருவது நின்றுவிட்டது. எல்லோரும் கிணற்று நீரை பாவிக்க ஆரம்பித்தார்கள். நாள் போக போக கிணற்று நீரும் அசுத்தமாகி அதுவும் குறைந்து கொண்டே போனது. 

ஒருநாள் களைப்புடன் குளிக்கச் சென்றேன். ஆ என்ன ஆச்சர்யம்! மீண்டும் பட்டைபடபீலி. உண்மையிலேயே பட்டைபடபீலிதான். இனம் புரியாத உற்சாகம் எனக்குள். ஓடிப்போய் தண்ணீரை தடவிக் கொடுக்கிறேன்… விழும் தண்ணீரை கைகளில் ஏந்திக்கொண்டு சிரிக்கிறேன்… உடை மாற்றாமல் தண்ணீரில் நனைந்து அப்படியே மெய் மறக்கிறேன். 

எங்கள் ஊரே அந்த அமைச்சரை திட்டித் தீர்த்தது, என்னைத் தவிர. 

– ஞானம்

– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.

பிரமிளா பிரதீபன் பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *