பில்வ மங்கள்





(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தக்காணத்தில் பிறந்தவர் பில்வமங்கள், சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்தவர். நிறைய புலமை பெற்றவர். நல்ல அறிவாளி, அருமையாகக் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். அழகான உடல் வனப்பும், வாக்குச் சாதுர்யமும் படைத்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

ஆனால் இவ்வளவு நல்ல அம்சங்கள் இருந்தும் அத்தனையும் ஒரே ஒரு காரணமாக விரயமாகி வந்தன, அவர் ஒரு பெண் லோலர்; காமாந்தகர்.
தினமும் தாசிகளை நாடிச் செல்லாவிட்டால் பொழுது போகாது. அவர்கள் சகவாசத்தைத்தான் மெய்யான சுகம் என்று எண்ணினார். இதனால் அவரைப் பல கெட்ட சிநேகிதர்கள் சூழ்ந்தார்கள். கெட்ட நடவடிக்கைகள் நிறைய வந்தன.
ஒரு அறிவாளியான மனிதன் கெட்டவர்கள் இடையே அகப்பட்டால் விடுவார்களா?
பில்வமங்களின் அபார கவிப் புலமையினை அவர்கள் பயன்படுத்தினார்கள்.
தாசிகள் பேரிலும் உபயோகமற்ற விஷயங்களிலும் அவரைப் பாடச் சொன்னார்கள். பில்வமங்களின் திறமை திசை திரும்பியது. காமக் கேளிக்கைகள், துர்சிநேகிதர்கள், கெட்டுப் போன பெண்கள் இவர்களைப் பற்றிய பாடல்கள் இயற்றுவது அவரது பொழுது போக்காயிற்று.
இந்த நிலையில் பில்வமங்கள் முதன் முறையாக சிந்தாமணியைச் சந்தித்தார், சிந்தாமணி ஒரு பேரழகி, அவள் ஒரு தாசி! பார்த்ததும் அவள் மீது மையல் கொண்டார் பில்வமங்கள். தம் உடல் பொருள் ஆவியை அவளிடம் சமர்ப்பித்தார். எப்போதும் அவள் நினைவும் தியானமுமாக இருந்தார். தினம் அவளை ஒரு முறையாவது அவர் சந்திக்க வேண்டும். இல்லாவிடில் உயிர் தரியாது.
சிந்தாமணி தோன்றியதும் அவர் வாழ்க்கை மேலும் மோசமாகியது. தமது திரவியங்களை இழக்க ஆரம்பித்தார். வீட்டில் மனைவி, தாய் தந்தையர்களை உதாசீனமாக நடத்த ஆரம்பித்தார். மனைவியின் நகைகளை யெல்லாம் சூறையாடினார்.
தந்தை நோய்வாய்ப்பட்டார். கடைசியில் துயரத்தில் மூழ்கி ஒரு நாள் இறந்தார். வீட்டில் நிம்மதியைப் பாதுகாத்த ஒரே ஜோதி அணைந்து விட்டது.
பில்லமங்கள் தந்தையின் ஈமக்கிரியைகள் முடியக்கூட இல்லை. அதற்குள் சிந்தாமணி நினைவு அவருக்கு வந்துவிட்டது. அவளைப் பார்க்காத விரகம் அவரை நெருப்பாக வாட்டியது, புறப்பட்டார். சில நாட்களாக இடியும் மழையுமாக இருந்தது. அன்று பெரிய புயல் வீசியது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. கிரியைகளுக்காகப் பட்டினி போட்ட உடம்போடு கிளம்பினார். யார் நிறுத்தியும் பொருட்படுத்தவில்லை.
ஊருக்கு வெளியே கிருஷ்ண வீணா என்ற நதி, அது இப்போது பெருக்கெடுத்து ஓடியது. நன்றாக இருட்டி விட்டது. இரு கரைகளும் தெரியவில்லை. ஆற்றைக் கடக்கப் படகில்லை.
பில்வமங்கள் துடித்தார், சிந்தாமணியை அவர் எப்படியும் அன்று பார்த்தாக வேண்டும். இல்லாவிடில் உயிர் தரியாது.
தண்ணீரில் குதித்தார். ஆற்றில் நீந்த ஆரம்பித்தார். சிறிது தூரம் போனதும் கை சளைத்து விட்டது. நீந்த முடியவில்லை. தண்ணீரில் மூழ்க வேண்டிய நிலை. அப்போது தெப்பக் கட்டை போல் ஏதோ பொருள் கிடைத்தது. அது அவரைக் காப்பாற்றியது. அந்தக் கட்டையின் உதவியால் மூழ்காமல் தப்பினார். நீந்தி அக்கரை சேர்ந்தார், கட்டையைக் கரை ஓரம் ஒதுக்கிவிட்டுக் கரை ஏறினார்.
ஓட்டமும் நடையுமாக சிந்தாமணி வீட்டை அடைந்தார். இருட்டி வெகு நேரம் ஆகிவிட்டது. அவள் தூங்கி இருந்தாள். கதவைத் திறக்க ஆளில்லை. வீட்டைச் சுற்றி வந்தார். ஒரு புறத்தில் பருமனான கயிறு ஒன்று தொங்கியது. அதைப் பிடித்து மேலே ஏறினார். வீட்டு முற்றத்தில் குதித்தார்.
சத்தம் கேட்டு சிந்தாமணி விழித்தாள். யார் என்று கேட்டு வந்தாள். விளக்கை ஏற்றினாள். பில்வமங்களைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டாள். இந்த மழையிலும் புயலிலும், இந்த இரவு வேளையில் இப்படி ஒரு நதியை நீந்தி வருவார் என்று எதிர்பார்க்க வில்லை. தன் மீது பில்வமங்களுக்கு இருக்கும் அன்பும் விசுவாசமும் ஆச்சரியத்தைத் தந்தன, அதே நேரம் சங்கடத்தையும் தந்தது.
தவிர, பில்வமங்களின் தந்தை இறந்திருப்பது அவளுக்குத் தெரியும், கிரியைகள் நடக்கும் நாளில் பில்வமங்கள் அவளைத் தேடி வந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் மீது உள்ள மோகத்தை அது காட்டினாலும் அது பாவம் என்று கருதினாள்.
“சுவாமி! தாங்கள் செய்தது சரியில்லை! தங்களது குடும்பத்தில் துக்கம் ஏற்பட்டிருக்கிற வேளையில் அங்கு இல்லாமல் இப்படி என்னைப் பார்க்க வரலாமா? அது தப்பு ஆயிற்றே. என்மீது இருக்கும் பற்றில் ஒரு சிறிதாவது பகவான் மீது இருந்தால் எவ்வளவோ நல்லதாயிற்றே! தாங்கள் பண்டிதர், இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டாள்.
ஒரு தாசியின் வாயிலிருந்து வரும் அதிசயமான மொழிகளைக் கேட்டு பில்வமங்கள் விக்கித்து நின்றார். சிந்தாமணியா அப்படிப் பேசுகிறாள் என்று தோன்றியது. பதில் சொல்ல முடியவில்லை.
அதற்குள் சித்தாமணி அவர் உடம்பைப் பார்த்து “இதெல்லாம் என்ன கறைகள்?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள்.
பில்வமங்களுக்கும் கறைகளின் காரணம் தெரியவில்லை.
சிந்தாமணிக்குச் சந்தேகங்கள் வந்தன.
அப்போது பொழுது விடிந்து கொண்டிருந்த நேரம்.
வானம் தெளிந்திருந்தது. புயல் அடங்கி விட்டது.
சிந்தாமணி பில்வமங்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தாள்.
பில்வமங்கள் தாம் வீட்டுக்குள் ஏற உதவிய தாம்புக் கயிற்றைக் காட்ட, இருவரும் திடுக்கிட்டார்கள்.
அது கயிறல்ல. கூரையிலிருந்து ஒரு பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பிடித்துத்தான் பில்வமங்கள் மேலே ஏறி முற்றத்தில் குதித்திருக்கிறர்.
அதிசயித்த அவர்கள் நேராக ஆற்றுக்குச் சென்றார்கள். ஆறு பெருக்கெடுத்து ஓடியது. பில்வமங்கள் தாம் கரையேறிய இடத்தை அடையாளம் காண்பித்தார்.
இருவரும் போய்ப் பார்க்க,
பில்வமங்கள் நீச்சலடிப்பதற்கு உதவியாயிருந்த கட்டை ஒரு துணியோடு கிடந்தது.
அருகில் சென்று பார்க்கும்போது, அது விறைத்துக் கிடந்தது.
அது கட்டையல்ல, பில்வமங்களின் மனைவியின் பிணம்! அவள் தற்கொலை செய்திருந்தாள். கணவனின் போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆற்றில் விழுந்து இறந்த அவளது உடலைத்தான் பில்வமங்கள் கைப் பற்றித் தமக்குத் தெப்பமாய்ப் பயன் படுத்தியிருந்தார்.
இறந்த பிறகுகூடத் தமக்கு வாழ்வளித்தாளே என்று பில்வமங்கள் நினைத்தார். அவர் கண்கள் கலங்கின. முதல் முறையாக மனைவிக்காகவும் குடும்பத்துக்காகவும் கண்ணீர் விட்டார்.
சிந்தாமணி உடனே. “சுவாமி! வாழ்க்கைத் துயரமானது, ஒரே புகல் கடவுள்தான். கிருஷ்ணரை நினையுங்கள். அவரது புகழைப் பாடி மற்றதை யெல்லாம் மறந்து விடுங்கள்! நமக்கு நிரந்த இன்பம் கிடைக்கும்” என்றாள்.
பில்வமங்களுக்கு அது தேவவாக்காகப் போயிற்று. அன்றிலிருந்து மாறிவிட்டார். தமது உடைமைகள் யாவற்றையும் துறந்தார். கிருஷ்ணனை நினைத்து எப்போதும் அவன் புகழையே பாடி, நேராகப் பிருந்தாவனம் சென்றார். மன உருகிக் கசிந்தார். கண்ணீரால் தம் மேனியை நனைத்தார். இரவும் பகலும் ‘கோவிந்தா, கிருஷ்ண தாமோதரா!’ என்று புலம்பி அழுதார்.
“உன்னைக் காண வேண்டும்” என்று விரக தாபத்தில் புலம்பினார்.
கடும் தவமும் தியானமும் முடிந்த பிறகு அவருக்குக் கண்ணனின் தரிசனம் கிடைத்தது. தமது திருக்கையால் பகவானே தமது பக்தனின் உடம்பைத் தொட்டார். பில்வமங்கள் பேரானந்தத்தில் மூழ்கினார், பிறகு கண்ணன் தமது கையை எடுத்த போது, பில்வமங்கள் வெதும்பி,
ஹஸ்தம் உத்ஷிப்ளே யதோஸி பலாத்
கிருஷ்ண கீம் விதிபுதம்!
ருத்யத் எதி நிர்மாஸி பௌருஷம்
கண்யாமி தே!
“என் பலவீன கை அணைப்பிலிருந்து பலத்துடன் போக முயல்வது அற்புதமா? என் இருதய அணைப்பிலிருந்து நீ போக முயற்சித்தால்தான் உன் பலத்தை நான் பெரிதாக நினைப்பேன்!” என்று பாடினார்.
தரிசனம் கிடைத்த நாளிலிருந்து பிருந்தாவனத்தில் விஹாரத் துறையில் இருந்து கொண்டு (கோவிந்த தேவர் கோவிலுக்கு எதிர்ப்புறமாக உள்ளது இந்தத் துறை) சாதுக்களோடு சேர்ந்து கடவுள் நாமத்தையே பாடிக் கொண்டிருந்தார் பில்வ மங்கள்.
அவர் புகழ் சிந்தாமணிக்கு எட்டியது. ‘நான் மட்டும் உலக வாழ்க்கையில் ஏன் இருக்க வேண்டும்?’ என்று நினைத்து, துறவு பூண்டு பில்வமங்கள் பக்கமே வந்து சேர்ந்தாள்,.பில்வமங்களின் ஞானத்தைக் கண்டு அவளுக்கும் வேகம் எழுந்தது, ‘கண்ணனே எனக்கு அமுது ஊட்டினால் தவிர உண்ண மாட்டேன்’ என்று உறுதி எடுத்தாள், உண்ணாமல் மெலிந்தாள். கண்ணனை நினைத்துக் கசிந்தாள். கடைசியில் கண்ணன் அருள் அவளுக்கும் கிடைத்தது. கண்ணனே அவளுக்கு முதல் அமுது ஊட்டினான்.
பின்னர் பில்வமங்களும், சிந்தாமணியும், பஜனையும் கீதமுமாக வாழ்க்கையைக் கழித்தார்கள். பில்வமங்கள் பாட அதற்கு இசைய சிந்தாமணி தெய்வ நடனம் புரிந்தாள். பார்ப்பவரும், கேட்பவரும் பரவசம் ஆனார்கள்.
பில்வமங்களின் வாயிலிருந்து வடமொழியில் அற்புதமாய்க் கவிதைப் பெருக்கு வந்தது.
“கிருஷ்ண கர்ணாம்ருதம்” என்று வழங்கப் பெறும் கிருஷ்ண லீலைப் பாடல்கள் இன்றும் நமக்குக் கிடைப்பவை. அவற்றை பஜகைப் பாடல்களில் கநாம் இன்றும் பாடுகிறோம்.
ஒரு பாடல்:
லிங்கனா மங்கனா மந்தரே மாதவோ,
மாதவம் மாதவம் சாந்தரேணாங்கனா!
இந்தமாகல்பிதே மண்டலே மத்வக!
ஸஜ்ஜகெள வேணுனா தேவகீ தந்தன!
தமது குரு தேவதாசி சிந்தாமணிதான் என்பதைச் சொல்லி அவர் துதிசெய்யும் பாடல் இதோ:
சிந்தாமணிர் ஜயதி ஸோமகிரிர் குரூர் மே!
சிக்ஷ குருஸ்ச பகவான் ஸிகிபிச் மௌமி!
‘எனது குருக்களான சிந்தாமணி, லோமகிரி கண்ணன் ஆகியவர்களை வணங்குகிறேன். சிந்தாமணிதான் என் முதல் குரு.’
– மங்கையர் மலர், ஏப்ரல் 1981.