பிறழ்வு




(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேலையிலிருந்து தன் இருப்பிடம் திரும்பிய நாதன் அவசர அவசரமாகக் காக்கைக் குளிப்புக் குளித்துவிட்டு, எப்போதாவது விசேஷமாக அணிவதற்கென மெத்தைக் குக் கீழே மடித்து வைத்திருந்த காற்சட்டை, ‘சேட்’டை எடுத்து மாட்டிக் கொண்டான். சப்பாத்துக்குள்ளிருந்து கருவாட்டு நாற்றமடித்துக் கொண்டிருந்த காலுறையை எடுத்து கட்டிலுக்குக் கீழ் ஒரு மூலையில் எறிந்துவிட்டு, தோய்த்துப் போட்டிருந்த ‘ரெனிஸ்’ காலுறையை எடுத்து மாட்டி, ஓரளவு நல்ல நிலையிலுள்ள ‘ரெனிஸ்’ சப்பாத்தை யும் எடுத்துப் போட்டுக் கொண்டான்.
நண்பன் ஜெகனுக்கு ஞாபகப்படுத்துவதற்காகத் தொலைபேசியை எடுத்து, அரை மணித்தியாலத்திற்குள் ஜெகனை விரைவாக வருமாறு கூறினான்.
கண்ணாடி முன் நின்று தலையைச் சீவிவிட்டு பின் பக்கமாகத் திரும்பித் திரும்பி தான் இளமையாக இருக்கிறேனா என எத்தனையோ எண்ணங்களில் இமைகளை வெட்டி வெட்டிப் பார்த்தான்.
‘இவன் ஜெகனை இன்னும் காணேல்ல… எயர் போட்டுக்குப் போறதெண்டால் சரியான நேரத்துக்குப் போகவேணும். இவனுக்கு எத்தனை தரம் சொல்லிற்றன்… சரி… நானும் அவனைக் குறை நினைக்கேலாது…
அவன்ர வானைப் (van) பிடிச்சுக்கொண்டு போனா நானென்ன காசே குடுக்கிறனான்.. எப்பவாவது பெற்றோல் அடிச்சுவிடுவன்… அவனோட ஒத்துத்தான் போக வேணும்… பின்னேரம் அஞ்சரை மணிக்கு ‘ஒர்லி எயர்போட் ‘டில நிக்கவேணும் எண்டு சொன்னனான்… இப்ப நேரம் நாலு மணியாப் போச்சு.. றோட்டு இறுகிச்சு தெண்டா நேரத்துக்குப் போக ஏலுமோ தெரியா.. பாவம்.. என்ர சகு அங்கை இருந்து தனியாக் களைச்சுப்போய் வருவாள்..நானும் நேரத்துக்கு அங்கை போய் நிக்காட்டி பயந்திடுவாள்……’
ஜன்னலால் எட்டி எட்டிப் பார்ப்பதும் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும் கண்ணாடியில் பார்ப்பதுமாக நின்ற நாதனுக்கு ஒவ்வொரு நிமிடமும் தவிப்பில் கழிந்துகொண்டிருந்தது.
‘சதா மச்சான் ஆறு மணிக்குத்தான் வேலையால் வருவான்..பிறகு எட்டு மணிக்கு மற்ற வேலைக்குப் போயிருவான். அவன் றூமில் தங்கிறதிலும் பார்க்க வேலையளில் தான் நேரத்தைக் கழிக்கிறான்… அவனுக்கு எயர் போட்டுக்கு வர நேரமும் இருக்காது… லீவும் எடுக்கேலாது…ஏதோ அவன்ர புண்ணியத்தில் இந்த றூமில் இவ்வளவு நாளும் காலத்தைக் கடத்திற்றன்… அவனும் பாவம் முப்பத்தொன்பது வயதாகியும் கலியாணம் காட்சி இல்லாம மாடாய் உழைக்கிறான்.. என்ர சகு வந்து சேருறதில் அவனுக்குந் தான் எவ்வளவு சந்தோஷம்..சதா உண்மையில் ஒரு நல்ல பிறவி தான்……’
மாடிக்குக் கீழே ‘கோர்ண்’ சத்தம் கேட்டதும் மின்னல் வேகத்தில் கதவைப் பூட்டிக் கொண்டு ஆறாவது மாடியிலிருந்து அந்தப் பழைய மரப்படிகளில் குதித்து ஓடி வந்தான்.
ஜெகனின் ‘றெனோல்ட்’ வான் ‘ஓர்லி எயர்போட்’டை நோக்கி விரைந்தது. இடையில் வாகன நெருக்கடியில் ஊர்ந்து போக வேண்டியும் இருந்தது.
“நாலரை மணிக்கே றோட்டு இறுகீட்டுது.. எத்தனை மணிக்கு போய்ச்சேரப் போறமோ தெரியாது…” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான் நாதன்.
சரியாக ஐந்தரை மணிக்கே விமான நிலையத்தைப் போய்ச் சேர முடிந்தது. அவசர அவசரமாக ஓடிப்போய், எதிர்பார்த்த கொழும்பிலிருந்து வரும் ‘கே. எல். எம்.’ விமானம் வந்துவிட்டதா என அட்டவணையை ஜெகன் பார்த்தான். அந்த விமானம் இருபது நிமிடம் தாமதமாகும் என அதில் குறித்திருந்ததை ஜெகன் விளக்க மாக நாதனுக்குச் சொன்னான்.
நேரம் ஆறு மணியைத் தாண்டிவிட்டது. அந்த விமானத்தில் வந்த பலர் சூட்கேசுகள், பொதிகள் என இழுத்துக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். நாதனுக்கு ஒரு இடத்தில் நிலைகொள்ளவில்லை. அங்கும் இங்கும் நடப்பதும் எட்டி உள்ளே பார்ப்பதுமாகத் தவியாய் தவித்தான்.
“என்ன மச்சான் சகுவை இன்னும் காணேல்லை..” என அடிக்கடி ஜெகனைக் கேட்டபடி நின்றான். “ஆள் இப்ப வரும் மச்சான்.. கொஞ்சம் பொறுமையா நில்லு…”
“மச்சான்… அங்கை பார்.. பச்சை உடுப்பிலை ஒரு ஆள் சகு மாதிரித் தெரியுது…”
“ஓம் மச்சான்.. பச்சைப் பஞ்சாபியில..எங்கட நாட்டு மூஞ்சியில தான் ஒரு ஆள் வருகுது…” நாதனின் முகத்தில் நூறு மின்னல் பிரகாசம் வெட்டி வெட்டி அடித்தது.
“விறு விறெண்டு வந்தவள் பிறகேன் மச்சான் அதிலை போய் நிக்கிறாள்..” என்று ஒருவித ஏக்கத்தோடு கேட்டான் நாதன்.
“உனக்கு இதொண்டும் விளங்கிறேல்லை மச்சான்.. ஏதோ அப்ப மாட்டு வண்டில்ல வந்த மாதிரி ‘ரஷ்யன் ஏரோபிளைட்டில’ வந்து இறங்கீற்றீங்க.. பரிசுக்கு வந்து பத்து வருசத்தில இண்டைக்குத் தான் எயர்போட் பக்கம் வந்திருக்கிறாய் போல.. கொஞ்சம் பொறுமையா நில்லு.. அப்ப என்னெண்டு கொழும்புக்குப் போய் கலியாணம் செய்து வந்தியோ தெரியாது.. பெலிற்றில லக்கேஜ் எடுத்துக் கொண்டெல்லே வரவேணும்.. அதுதான் தங்கச்சி அங்க நிக்கிறா…” என்று ஜெகன் சொன்னதும் பெண்களின் சிரிப்புப்போல் நளினத்தோடு கொடுப்புக் குள் சிரித்துக்கொண்டான் நாதன்.
பென்னம்பெரிய சூட்கேசை இழுப்பதும், இழுக்க முடியாது தவிப்பதுமாக, தோளில் மாட்டியிருந்ததையும் இறக்கி வைப்பதும் தூக்குவதுமாக அந்தரப்பட்டு அவலப்பட்டு மெல்ல மெல்ல வந்துகொண்டிருந்தாள் சகுந்தலா.
“சகு.. சகு..” என்று கூவியவாறு இரண்டு கைகளையும் உயர்த்தித் துள்ளியபடி நின்றான் நாதன். சகுவைக் கண்டதும் நாதனுக்கு அவனை அறியாமலே கண்கள் கலங்கிவிட்டன. சகுந்தலா கண்களில் நீர் வழிய பொங்கி வரும் விம்மலையும் அடக்கிக் கொண்டு “இந்தச் சூட்கேசை இழுங்கோப்பா..” என்று பெரிய சூட்கேசைக் காட்டினாள்..
“ஏனம்மா கண் கலங்கிறாய்..” என்று சகுவின் கண்ணீ ரைத் துடைத்துவிட எண்ணியவனாய் அவளை உற்றுப் பார்த்தான் நாதன். பின்னர் ஏதோ வெட்கம் வந்தவனாய், அவள் தோளில் மாட்டியிருந்ததையும் வாங்கித் தன் தோளில் மாட்டியவாறு சூட்கேசை இழுக்க முயன்றான். அதுவோ பாறாங்கல்லுப் பாரம்… அதை அசைப்பதே பெருங் கஷ்டமாக இருந்தது. “என்னண்டம்மா இதைக் கொண்டு வந்தனீங்க.. சரியா கஷ்டப்பட்டிருப்பீங்க போல கிடக்கு…”
“அதெல்லாம் பிறகு சொல்லுறன்.. இப்ப அதை இழுத்துக் கொண்டு வாங்கோவன்…”
“ஜெகன் கொஞ்சம் ‘ஹெல்ப்’ பண்ணடாப்பா… சகு.. இவர் என்ர சிநேகிதன் ஜெகன்.. இவற்ற வானிலதான் வந்தனான்..”
“வணக்கம்..தங்கச்சி..”
இருவருமாக சேர்ந்து இழுத்தும் தள்ளிக்கொண்டும் ஒருவாறாகக் கொண்டுவந்து வானில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். “களைப்பாய்க் கிடக்கு.. ஜெகன்.. சகுவும் களைச்சுப் போயிருக்கு.. வாற சந்தியில இருக்கிற தமிழ் றெஸ்ரோறன்ரில ஒருக்கா நிப்பாட்டன்.. ஏதும் குடிப்பம்..”
வழியில்.. பெருத்த நீண்ட வீதிகளையும் வானளாவிப் புகை கக்கி நிற்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்களையும் ஜாலம் காட்டும் வர்ண விளக்குகளையும் சில அரை நிர்வாண விளம்பரப் பலகைகளையும் பாதாளத்தில் ஓடுவது போன்ற ஆற்றின் மேம்பாலங்களையும் இடை யிடையே உயரமாக எழுந்து புகை கக்கும் புகையிலைப் போறணை போன்ற பெரிய புகைபோக்கிகளையும் ‘வானில்’ இருந்தவாறே பார்த்துக்கொண்டு வந்த சகுந்தலாவுக்கு அந்த செப்டம்பர் மாத மென்குளிரிலும் வியர்த்துக்கொண்டிருந்தது.
சகுந்தலா தனக்கு ஒரு பிளேன் ரீ மட்டும் போதும் என்றாள். “ஏனப்பா இது தமிழ்க் கடை தானே… இஞ்ச வடை, போண்டா எல்லாம்தானே இருக்கு சாப்பிடுமன்..” தனக்கு ஒன்றும் வேண்டாம் என்றும், வாய் கைப்ப தாகவும், சத்தி வருவது போலிருப்பதாகவும் சகுந்தலா சொன்னாள். அவர்கள் வீடு வந்துசேர இரவு ஒன்பது மணியாகிவிட்டது.
சதா வீட்டுக்கு வந்து அடுத்த வேலைக்கும் போய்விட்ட அறிகுறி தெரிந்தது. அவனது சாரம் கட்டிலில் எறிந்து கிடந்தது. அந்த வீடு ஒரு பழைய கட்டிடத்தில் கடைசி மாடியாகவுள்ள ஆறாவது மாடியில் ஒரு ஸ்ரூடியோ வாகும். பெரிய ஒரு அறை. அறையின் ஒரு மூலையில் சிறு குசினி. குசினிக்கு ஒரு பக்கத்தில் ‘பாத்ரூம்’. அதற்கருகில் வெளிக்கதவு. கதவைத் திறந்து இரண்டு அடி கால் வைத்தால் அறை. அறையையும் குசினியையும் பிரித்து ஒரு பக்கமாகத் தற்போது திரைச்சீலை போட்டிருந் தார்கள். அறைக்குள் ஒரு பெரிய பழைய கட்டில். அதில் ஆள் உட்கார்ந்தால் கிறீச் என்று சத்தம் எழும். கட்டிலின் பின்பக்கமாகப் பழைய உடைவுகள் கண்ட ஒரு அலுமாரி. அச்சிறிய அலுமாரியின் மேல் பிள்ளையார், லட்சுமி, முருகன் சேர்ந்த ஒரு படமும் பக்கத்தில் லூட்ஸ் மாதா சொரூபமும் புகைமண்டி இருந்தன. கட்டிலுக்குக் கீழே இரண்டு சோடி பழைய சப்பாத்துக்களும் சில ஊத்தைக் காலுறைகளும் பரவிக் கிடந்து ‘வாசனை’ வீசிக் கொண் டிருந்தன. மூலையில் இருந்த குசினியில் ஒரு சிறிய ஆட்டம் கண்ட பழைய மேசை. அதன் ஒரு பக்கத்தில் நெளிந்த, கரி பிடித்த ஒரு அலுமினியப் பானையும், பல வருடப் பாவனையைக் காட்டும் கீறல்கள் கண்ட ஒரு இரும்புக் கறிச்சட்டியும், அதேபோன்ற இன்னொரு சிறிய கறிச்சட்டியும், தேநீர்ச் சாயமேறிய நான்கு ‘கிளாசு’ களும் இருந்தன. அந்த மேசையின் மறுபக்கத்தில் இரண்டு அடுப்புகள் கொண்ட ‘காஸ் குக்கரும்’, மேசையின் கீழ் ‘காஸ் சிலிண்டரும்’ இருந்தன.
அறையில் குசினியைப் பிரித்து திரைச்சீலை போடப் பட்ட பகுதியை ஒட்டி, மடித்து வைக்கப்பட்ட ஒரு பழைய மேசையும், மடிக்கப்பட்ட இரண்டு பழைய கதிரைகளும் இருந்தன.
“இது தானாப்பா.. நீங்க இருக்கிற வீடு..”
அறைக்குள் வந்த சகுந்தலா கேட்டபடி, ‘ஊரில் ஒரு அறையோடு கூடிய எங்கட சிறிய கொட்டில் வீடு பரவாயில்லை’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.
அவசர அவசரமாக நாதன் போட்டுக் கொடுத்த தேநீரைக் குடித்து விட்டு, பிறகு சந்திப்போம் என்று கூறி விட்டு ஜெகன் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான்.
அவனது புதிய ‘றெனோல்ட்’ வானும், அதனை ஓட்டிய லாவகமும், வழியில் தேநீர் குடித்தபோது நாதனைக் காசு கொடுக்க வேண்டாமென்று தானே கொடுத்ததும், அவனது வசீகரத் தோற்றமும், அன்பான பேச்சும், ஜெகனைப்பற்றி சகுவின் மனதில் நல்ல அபிப்பிராயமே ஏற்பட்டிருந்தது.
“பரிஸிலை வீட்டின்ர அருமை உனக்குத் தெரியா தப்பா..ஏதோ மச்சான் சதாவின்ர புண்ணியத்தில் நான் இதுக்கை ஒடுங்கிக் கொண்டு இருக்கிறன். அவன் நாலும் தெரிஞ்ச நல்ல மனுஷன்.. ஏதோ நான் குடுக்கிற கொஞ்சக் காசைப்பற்றிக் கூடச் சிந்திக்காம என்ர வீடு மாதிரி என்னை இங்கை இருக்கவிட்டிருக்கிறான்.. நான் தான் அதிக நேரம் இங்க இருக்கிறனான்.. அவன் வேலை.. வேலை எண்டு ஓடித் திரியிறவன்.. இப்பிடி ஒரு வீடு வாடகைக்கு எடுக்கிற தெண்டாலே பத்தாயிரம் பிராங்குக்கு மேலே மாதச் சம்பளப் பட்டியல் காட்ட வேணும். மூண்டு மாதமோ அல்லது அதுக்கு மேலோ அட்வான்ஸ் குடுக்கவேணும்.. வாடகை கிட்டத்தட்ட 3500 பிராங்குக்கு மேலே வரும்.. அதோட லைற் காசு, குடியிருப்பு வரியெண்டு கனக்க கட்டவேண்டும்.. அதுவும் வீடு குடுக்கிற ஏஜென்சிக்கு எங்களை ஆராவது ‘ரெக்கமன்ட்’ பண்ணினாத்தான் எங்கட தோலுகளுக்கு வீடு தருவாங்கள்.. அதுக்கும் தலையால் கிடங்கு கிண்டுறமாதிரி அலைஞ்சு திரிஞ்சு அலுவல் பார்க்க வேணும்.. இப்பிடிப்பட்ட வீட்டிலேயே எங்கட சனம் எட்டுப் பேருக்கு மேலே இருப்பாங்கள்.. இது எங்கட அதிர்ஷ்டமப்பா… சரி இதெல்லாம் கிடக்கட்டும்.. நீர் போட்டுக்கொண்டுவந்த உடுப்புக்களை மாத்தி ஒரு குளிப்புப் போடும்.. களைப்புத் தீரும்.. அதுக்குள்ள குஞ்சாவுக்கு என்ர கைவண்ணத்தில் ஒரு சமையல் செய்யிறன்..” என்றான் நாதன்.
“இதுக்குள்ள எங்கையப்பா உடுப்பு மாத்திறது..”
“ஏனப்பா..வெட்கப்படுறியே.. ‘கேட்டின்’ சீலையை இழுத்துப் போட்டு.. உடுப்பை மாத்தும்.. நான் இஞ்சை குசினிப் பக்கமா நிக்கிறன்..” என்று சொல்லியவாறு மேசைக்குப் பக்கத்தில் மூலையோடு இருந்த பழைய ‘பிரிட்ஜில்’ இருந்த ஒரு கோழியைத் தூக்கிக் குசினித் தொட்டிக்குள் வைத்த கறிச்சட்டித் தண்ணீருக்குள் போட்டான்.
“ஏனப்பா.. தண்ணி ஐஸ்ஸாக் குளிருது…’ என்று கத்தினாள் சகுந்தலா. “ஆ.. ஆ.. கொஞ்ச நேரம் பொறப்பா… அந்தச் சிவப்புப்புள்ளி போட்ட பைப்பை யும், நீலப் புள்ளி போட்ட பைப்பையும் கொஞ்சம் கொஞ்சமா திறந்து கணக்கான சூட்டில குளியும்…”
”ஊரில் செம்பாட்டுத் தோட்ட ஆழக் கிணத்தில குளிச்சா என்ன மாதிரி இருக்கும்..” என்று எண்ணியவாறு இரு பைப்புகளையும் ஓரளவு சமமாகத் திறந்து, சூடும் குளிருமாக அவலப்பட்டு ஒருவாறு குளித்து முடித்தாள் சகுந்தலா.
மஞ்சள் அமெரிக்கன் அரிசிச் சோறும், கோழிக் குழம்பும்,பருப்புக் கறியும், மிளகாய்ப் பொரியலும் கொஞ்ச நேரத்துக்குள் செய்து முடித்துவிட்டான் நாதன். சகுந்தலா தலையைத் துடைத்து, முடியை வாரிவிட்டுக் கொண்டு வரவும், நாதன் சாப்பிடுவமம்மா” என்று சொல்லவும் நேரம் சரியாக இருந்தது.
“வீட்டுக்காரர் இப்ப சாப்பிட வருவாரோ..”
“அவன் வர இரண்டரை மணிக்கு மேலே செல்லும்.. இப்ப நாங்கள் சாப்பிடுவம்..”
“நீங்கள் நல்ல ருசியாச் சமைக்கப் பழகியிருக் கிறீங்கப்பா..”
அவர்கள் சாப்பிட்டு முடிய இரவு பதினொன்றரை மணியாகி விட்டது.
“இது அவன் படுக்கிற கட்டில்.. இப்ப எங்களுக்குத் தந்திட்டான்.. நான் பெட்சீற்றைப் போட்டு வழமையாகக் கீழே படுக்கிறனான்.. இப்பதான் இந்த ‘கேட்டின்’ சீலை யைப் போட்டுவிட்டவன்.. தன்ர தலையணையையும் பெட்சீட்டையும், கம்பிளியையும் கேட்டினுக்குப் பக்கத்திலை வைக்கச் சொன்னவன்.. நாங்கள் இந்தக் கட்டிலில் படுக்கலாம்…”
இரண்டரை மணிக்கு வந்து குசினித் தொட்டிக்கு மேலுள்ள சிறிய யுப் ற்றைப் போட்ட சதாவுக்கு கோழிக் குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தது. சப்பாத்தைக் கழட்டி வாசல் கதவுப் பக்கம் போட்டுவிட்டு ‘கேட்டின்’ சீலையின் மேல் தொங்கிய சாரத்தை எடுத்து அதற்குள் புகுந்துகொண்டு, கோழிக் குழம்பு, பருப்போடு ஒரு சிறு வெட்டு வெட்டினான். அது அவனுக்கு விருந்துச் சாப்பாடு போல் இருந்தது. விரைவாகவே சிறிய ரியுப் லைற்றை அணைத்துவிட்டு ‘கேட்டின்’ சீலைப் பக்கமாக தலையை வைத்து வாசற்பக்கமாகக் காலை நீட்டி படுத்துக் கொண்டான்.
அந்த நிசப்த இருளில் எலியின் சத்தம் போன்று அந்தப் பழைய கட்டில் இடைக்கிடை கீறீச்சிட்டுக்கொண்டது. இடைக்கிடை குசுகுசு சத்தங்களும் சதாவின் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே அவன் ஆழ்ந்த உறக்கத்தில் போய்விட்டான். காலை ஏழு மணிக்கு அவன் வேலைக்குப் புறப்பட வேண்டும். வேலைக் களைப்பி னால் படுத்தவுடனேயே நித்திராதேவி அவனை அணைத்துக் கொள்வாள்.ரயிலின் சத்தம் போன்று அவனது குறட்டை ஒலி அந்த வீடெங்கும் எதிரொலித்தது.
பாரிஸிலிருந்து சில நூறு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மலைப் பாங்கான அந்தச் சிறிய கிராமத்திலுள்ள சுகாதார விடுதிக் கட்டிலில் அரைத் தூக்கத்திலிருந்த நாதனுக்கு, பாரிஸில் அந்த முதல்நாள் குடும்ப வாழ்க்கை கனவில் படக்காட்சிபோல் தெரிந்தது.
இருந்தாற்போல், சகுந்தலாவும் வான் வைத்திருந்த ஜெகனும் புதுமணத் தம்பதிகள் போன்ற உடையோடு ஒரு திருமண வீட்டில் தம்பதிகளுக்கு அறுகரிசி போட்டு வாழ்த்துவது போல் காட்சிகள் தெரியவே, திடுக்கிட்டு ‘பாதகத்தி தோறை’ என்று. கத்தியவாறு படுக்கையிலிருந்து எழுந்தவனுக்கு இரத்தமாக வாந்தி வந்தது.
பிரசாவுரிமை கிடைத்ததும் கொழும்புக்குப் போய், புரோக்கர் ஒழுங்குசெய்த செம்பாட்டுக் கிராமத்துப் பெண்ணை கொழும்புக்கு அழைப்பித்துத் தன் செலவி லேயே திருமணம் செய்துகொண்டவன் நாதன்.
அன்று கொழும்புக்கு வரும்போது கையில் நாலு பிளாஸ்ரிக் காப்பு போட்டுக்கொண்டு வந்த சகுந்தலா.. இன்று….
சகுந்தலா இந்த ஒன்பது வருடத்தில் இரண்டு பிள்ளை களுக்குத் தாய். இரண்டு வீடுகளுக்குச் சொந்தக்காரி. ஓர் ‘இந்தியன் றெஸ்ரோரன்’டுக்கும், ஒரு பலசரக்குக் கடைக்கும் சொந்தக்காரி. சாரதி அனுமதிப் பத்திரமும் பெற்றுத் தனக்கென விலையுயர்ந்த புதிய ‘றெனோல்ட்’ காரும் வாங்கியுள்ளாள். கடை வேலைகளுக்கென இரண்டு வான்களும் இருக்கின்றன.
அவள் பாரிஸுக்கு வந்த காலத்தில் பிரெஞ்சு மொழி ஆரம்ப வகுப்புப் படித்தாள். பலர் நண்பராகினர். ஜெகனின் உதவியால் கொஞ்சக் காலம் ‘பீரோ கிளினிங்’ வேலை செய்தாள். அவனின் உதவியோடு மூன்று அறை கொண்ட ஓர் ‘அப்பாட்மென்ட்’ வாங்கினாள். பின்னர் பாரிஸின் புறநகர் பகுதியில் தனி வீடொன்றும் வாங்கி விட்டாள்.
ஐந்து வருடங்கள் வரைதான் நாதன் அவளுடன் பிரச்சினைகளோடு குடும்பம் நடாத்தினான். குடிகாரரைக் கண்டாலே தூர விலகிய அவன், இன்று மனக்கவலைக்கு மருந்தென்றும், சிறிது நித்திரைக்கு வழியென்றும் மதுவைத் தொடர்ந்து அணைத்துக் கொண்டு….. நிலைமை மோச மாகிட, கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக ஆஸ்பத்திரி, நண்பர்கள் வீடு, சில வேளை தெருவும் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தன. ஈரல் முற்றாகப் பாதிப் படைந்து, இரத்த வாந்தி எடுத்த நிலையிலேயே ஆஸ்பத்திரியே தஞ்சமென அவன் வாழ வேண்டிய தாயிற்று.
பல தடவை பிள்ளைகளைப் பார்க்க ஆசைப்பட்டுக் கேட்ட போது, அவர்கள் அவரது பிள்ளைகள் இல்லை யென்று சகுந்தலா சொல்லி அனுப்பிவிட்டாளாம்.
பல ஆஸ்பத்திரிகள் மாறி மாறித் தற்போது இந்தச் சுகாதார நிலையத்தில் சாவை எதிர்கொள்ளும்வரை ஓய்வென வைத்திருக்கிறார்களாம்.
பாரிஸில், தமிழர்களது பொது வைபவங்களில் சகுந்தலா இப்போது பிரமுகர் வரிசையில்தான்.. .. ஏற்கனவே திருமணமாகி, இலங்கையில் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் விட்டு விட்டு, பாரிஸில் பகட்டாகத் திரியும் ஜெகனோடு சகுந்தலா ஒரே வீட்டில் வாழ்வது பற்றி யாரும் ஒன்றும் சொல்லிவிட முடியாதாம். இது ஐரோப்பிய வாழ்க்கை.
பிரசவ வார்ட்டின் படுக்கையில் சகுந்தலா. அவள் கையில் ‘பெண்ணுரிமை விடுதலை’ என்ற புத்தகம். இன்னும் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அவளுக்குக் குழந்தை பிறக்கவுள்ளது. இது மூன்றாவது குழந்தையென்ற படியால் அவளுக்கு இப்போது வேதனை பெரிதாகத் தெரியவில்லை.
சகுந்தலா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி நாதனுக்கும் எட்டிவிட்டது…
இரத்த வாந்தியெடுத்து மயக்கமுற்ற நாதனைச் சுமந்த வாறு அம்புலன்ஸ் வண்டி நகரத்து ஆஸ்பத்திரியை நோக்கிக் கடுகதியில் விரைந்து கொண்டிருக்கிறது.
– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.