கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2025
பார்வையிட்டோர்: 10,166 
 
 

பள்ளித் தலைமையாசிரியர் பரந்தாமனுக்கு வருத்தமும், கவலையும் உறக்கத்தைக்கெடுத்தது. தனது வகுப்பு மாணவி மகியைப்பற்றிய கவலை தான் அது. எவ்வளவு எடுத்துச்சொல்லியும், அன்பாகப்பேசி புரிய வைத்தும் வீட்டுப்பாடம் எழுதாமலேயே பள்ளிக்கு வருவாள். பாடங்களை சரியாக மற்ற மாணவர்களைப்போல் கவனிக்கவும் மாட்டாள். மற்றவர்கள் முன் திட்டினாலும் அமைதியாக இருந்து விட்டு வெளியில் இயல்பாகச்சென்று விடும் மன அழுத்தக்காரியாக இருந்தாள்.

‘இப்படியே விட்டால் இந்த வருடம் இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம். அதனால் மாணவியில் வாழ்க்கை பாதிக்கும். குடிகாரத்தந்தை, கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் தாய் எனும் நிலை கொண்ட ஏழை வீட்டில் குழந்தையின் படிப்பைப்பற்றி தினமும் பெற்றோருக்கு கேட்கத்தெரியவில்லை. 

இன்று வேறு வகையான பரிகாரம் செய்ய வேண்டும் என யோசித்தவர், தனது அறைக்கு வரவழைத்து நான்கு பிரம்படி கொடுத்த பின் பாடங்களை எழுதிக்கொடுத்து விட்டுச்சென்ற பின்பே நிம்மதியடைந்தார். ‘இன்று உறக்கம் வர தடையேதுமில்லை’ என யோசித்தவாறு பள்ளியிலிருந்து வீட்டிற்குச்சென்றார்.

வீட்டிற்கு சென்றதும் தன் தாயிடம் ” ஓ…..” வென கதறியபடி ஆசிரியர் பிரம்பில் அடித்ததில் வீங்கியிருந்த பகுதியைக்காட்டினாள் மகி. அப்போது போதையில் உள்ளே வந்த தந்தை பார்த்து விட, பக்கத்தில் இருந்த வீடுகளில் உள்ள உறவினர்கள் பத்து பேரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டார்.

இரவு உணவருந்தி விட்டு படுக்கைக்குச்சென்ற தலைமையாசிரியர் பரந்தாமனுக்கு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வர பதறிய படி என்னமோ, ஏதோ என ஓட்டமும் நடையுமாக ஓடினார்.

காவல் நிலையம் சென்றவரை தலைமைக்காவலர் இன்ஸ்பெக்டரிடம் அழைத்துச்சென்றார்.

“வாங்க சார். உட்காருங்க…”

“இல்லிங்க சார். பரவாயில்லைங்க. நான் நிக்கறேன். நீங்க வரச்சொன்னதா போன் வந்தது. அதான் வந்தேன்” சொல்லியபடி கைகட்டினார்.

“அதோ அந்தப்பொண்ணு மகிய நீங்க அடிச்சதா கம்ப்ளைன்ட் வந்திருக்கு. ஒரே கேள்வி அடிச்சீங்களா…? இல்லையா…? உண்மையைச்சொல்லுங்க” என ஆசிரியரைப்பார்த்து ஒரு கண்ணைச்சிமிட்டியவாறு பொய்யாக கோப முகத்தைக்காட்டியவாறு கேட்டார் இன்ஸ்பெக்டர் தனஞ்செயன். 

அங்கிருந்த மகியின் தந்தையுள்பட அனைவரும் கோபமாக தன்னைப்பார்த்து முறைப்பதைப்பார்த்தவர் ” இல்லை” என்றார் பொய்யாக, உறுதியாக.

மாணவி மகியை அழைத்து “இந்த சார் உன்னை அடித்தாரா?” என இன்ஸ்பெக்டர் கேட்க அவளும் பொய் பேசக்கூடாது என அடித்த வாத்தியார் பொய் பேசுகிறாரே… அப்படின்னா நாமும் பொய் பேசிடலாம் என யோசித்தவள் “இல்லை” என்று சொன்னதும், அங்கிருந்தவர்களை அழைத்து மகியை அழைத்துக்கொண்டு செல்ல காவலர் சொன்னதும் தலைமையாசிரியருக்கு நிம்மதியைக்கொடுத்தது. 

அவர்கள் சென்ற பின்பு ஆசிரியரை இருக்கையில் அமர வைத்த இன்ஸ்பெக்டர், 

“சார் சின்ன வயசுல நானே என்னோட வாத்தியார் கிட்ட அடி வாங்கினதுனால தான் இப்ப இந்தப்பதவில இருக்கேன். நீங்க அடிச்சீங்களோ, அடிக்கலையோ… இப்ப அடிக்கலைன்னு ஆயிடுச்சு. இனி பிரச்சினை இல்லை. இருந்தாலும் நீங்க வெச்சிருக்கிற பிரம்ப நாளைக்கு சத்துணவு செய்யற அடுப்புல முறிச்சு போட்டிடுங்க. ஏன்னா உங்களப்போல நல்லவங்க, கெட்டவங்களை கண்டிச்சு நல்வழிப்படுத்திரவங்களுக்கான காலம் இப்ப இல்லைங்க….” என கூறிய போது வருங்கால மக்களின் பாதக நிலையை எண்ணி வருந்தியபடி வீட்டிற்குச்சென்றார்.

‘வளைந்து , கோணலாக வளரும் செடி மரமானால் சாதாரண விறகாகுமே தவிர, மதிப்பு மிக்க மரப்பலகை செய்ய உதவாது. அது போல சிறுவயதில் நன்றாகப்படிக்காத ஒரு குழந்தை வளர்ந்த பின் வீட்டிற்கும், நாட்டிற்கும் மட்டுமில்லாமல் தனக்கே கூட உதவாது போகும் என்பதால் தானே வளைந்து வளரும் செடியைத்தோட்டக்காரன் குச்சி வைத்துக்கட்டி நேராக வளர வைப்பது போல, ஆசிரியர் ஒருவர் ஒழுங்காகப்படிக்காத தன் மாணவர்களை குச்சி வைத்து அடிப்பதுமாகும். இதை பெற்றோரே புரிந்து கொள்ளாத போது நாம் என்ன செய்ய முடியும்….? இதனால் வருங்கால சமுதாயம் ஒழுங்கின்றி கெடக்கூடும்…’ என நினைத்து கவலை கொண்டார் நல்ல மனிதர், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் பரந்தாமன். கவலைப்படுவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

1 thought on “பிரம்பு!

  1. கதைக்கும் புகைப்படத்திற்கும் சம்பந்தமே இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *