பிரசவம்





(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காரிருட் போர்வை உலகத்தைக் ‘கப்பிக்’ கொண்டிருந்தது கண்ணுக்கெட்டா உயரத்திலே எங்கோ ஒன்றும் இரண்டுமாக விண்மீன்கள் ஒளிசெய்துகொண்டிருந்தன. கண்ணைப் பறிக்கும் மின்னலும், பூமியை நடுக்கும் இடிமுழக்கமும் மாறிமாறி எதிரொலி செய்துகொண்டிருந்தன. நள்ளிரவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த இயற்கை மாறுபாடுகளை யார் கவனித்துக்கொண்டிருக்கப் போகிறார்கள். வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஏழை விவசாயிகூட அந்த நேரத்திலே துன்பங்களையெல்லாம் மறந்து நித்திராதேவியின் இன்ப அணைப்பில் கட்டுண்டு கிடந்தான். ஆனால்…… நாள் முழுதும் ஒருசாண் வயிற்றை நிரப்ப ஊர்முழுதும் சுற்றியலைந்து பிரபுக்களும், பணக்காரவர்க்கமும் ஈந்த பழிச்சொற்களையேற்று, சொறி நாய்களுடன் எச்சில் இலைக்குப் போட்டிபோட்டு, விழுந்துருண்டு “மானங்கெட்ட வாழ்வு” வாழும் அந்தப் பிச்சைக்காரர்கள் – அவர்கள் மட்டும் விழித்திருந்தார்கள். மதுவின் போதையிலே மங்கையர்களின் சரச சல்லாபத்தை எதிர்ப்பார்த்து அவர்கள் விழித்தகண் விழித்தபடி வீற்றிருக்கவில்லை.
வயிறார உண்டு வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. வயிற்றுப்பசி கறையாணைப் போல அரித்தெடுத்துக்கொண்டிருக்க அவர்கள் சுகமாக நித்திரை செய்யமுடியுமா?
‘பிசு, பிசு’ வென்று தூறிக்கொண்டிருந்த மழை இருந்தாற்போலிருந்து பெருமழையாகக் கொட்டத் தொடங்கியது. வாடைக்காற்றின் அசுரவேகத்தில் அந்தப் பெரிய ஆலமரத்தின் இலைகள் ஓயாமல் சப்தித்துக்கொண்டிருந்தன. அதன் கீழே ‘பள்ளி’ கொண்டிருந்த, ‘தரித்திர நாராயணர்கள்’ எல்லோரும் சுருட்டிவாரிக் கொண்டிருந்தார்கள். தத்தம் மனம்போன திக்கில் ஆளுக்கொவ்வொரு ஒதுக்கிடந்தேடி ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்வில் இது சகசந்தானே !
அந்தப் பெரிய பிச்சைக்கார ‘மகாசபை’ யில் முத்தம்மாவும் ஒரு உறுப்பினள். எல்லாப் பிச்சைக்காரரும் விழுந்தடித்துக்கொண்டோடவே அவளும் தன் கால்போன திக்கில் ஓடினாள். கொட்டிக்கொண்டிருந்த மழையில் அவள் உடலை மறைத்துக்கொண்டிருந்த கந்தல் துணி தெப்பமாக நனைந்துவிட்டது. தேகம் வெட வெடவென்று நடுங்கிக்கொண்டிருந்தது. கொடிய குளிரை அவள் பலவீனமான உடல் தாங்கச் சக்தியற்றுத் தவித்துக் கொண்டிருந்தது. எதிரேயிருந்த ஓட்டுவீட்டு வராந்தாவில் ஒதுக்கமாக மழை படாத இடமாகப் பார்த்து எண்சாணுடம்பையும் இரண்டு சாணாகக் குறுகிப் படுத்துக்கொண்டாள். அவள் மனம் கடந்தகால நினைவுகளில் நீந்தத் தொடங்கியது. மனித உள்ளம் கஷ்டமான நேரத்தில்கூடத் தன் கடந்தகாலத்தை எண்ணிப்பார்க்கத் தவறுவதில்லை.
இந்த உலகில் பெரும்பான்மையினராக வசிக்கும் ஏழை மக்களின் கூட்டத்தில் ஒருவளாக ஒரு ஏழைக் குடும்பத்தில்தான் முத்தம்மாவும் பிறந்தாள். கருணாநிதியான கடவுளும் ஏனே அவள் விஷயத்தில் மாத்திரம் கல்நெஞ்சராகிவிட்டார் ! எட்டு வயதினை அவள் எட்டமுந்தியே அவள் தாயும் தகப்பனும் பரலோகத்துக்குப் பயணமாகிவிட்டனர். பள்ளிக்குப் போகவேண்டிய பருவத்திலே அவள், எள்ளத்தனையும் இரக்கமில்லாத கல்நெஞ்சக் கயவர்களின் ‘பங்களாக்’களில் பணிப்பெண்ணாக இருந்தாள். துன்பம், துன்பத்தின்மேல் துன்பம் அவளை வந்தடைந்து கொண்டிருந்தது. மனிதமனம் படையாத பணப் போதையும், மதுப் போதையுங் கொண்ட செல்வச் சீமாட்டிகளுடன் பணிப் பெண்ணாக வாழ அவளால் முடியவில்லை. புறப்பட்டுவிட்டாள், இந்த உலகத்தில் ஆருமற்ற அனாதையாக-ஏழைப்பிச்சைக்காரியாக! உலகில் என்னதான் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் காலம்மட்டும் தன் கடமையைச் சரிவரச் செய்யத்தவறுவதில்லை. ஏழு ஆண்டுகள் என்னமாதிரியாகவோ உருண்டோடி விட்டன. ஏழைப்பிச்சைக்காரியான முத்தம்மாவைக் காலம் எழில்மிக்க மங்கையாக-பதினைந்துவயதுப் பருவப்பெண்ணாக மாறச் செய்துவிட்டது. அப்பப்பா! அவள் மனதில் இப்பொழுது எவ்வளவு ஆசைக்கோட்டைகள், இன்பக்கனவுகள் எழும்பிவிட்டன. ஏழை மனித உருவங்களுக்கு இயற்கை ஏன் சிந்திக்கும் மனதைக் கொடுத்துச் சித்திரவதை செய்கிறது?
முத்தம்மா எழிலின்பத்தை நாடி எத்தனையோ வாலிபர்கள் வட்டமிட்டனர். ஆனால் எவரும் அவளை இலேசில் வசப்படுத்த முடியாது திண்டாடினர். பருவப் பெண்ணான அவளுக்கும் பிச்சை எடுத்து உண்பதில் கொஞ்சம், கொஞ்சமாக இலச்சை பிறக்க ஆரம்பித்தது. ‘மதனா கபே’ முதலாளி மருதப்பன் தனது கழுகுப் பார்வையை முத்தம்மா பக்கம் திருப்பினார். அவருக்கு வயது முப்பத்தைந்து வரையிருக்கும். முதல் தாரம் முடிவடைந்துவிட்டதால் ‘கட்டைப்’ பிரம்மச்சாரிபோலக் காலந்தள்ளி வந்தார். முத்தம்மாவின் எழில் வதனம் அவர் இதயத்தைக் கொக்கிபோட்டு ஈர்த்தது. மடிப்புக் கலையாத வெள்ளைவேட்டியும், அங்கவஸ்திரமுமணிந்து அவர் கடைக்குச் செல்வதும், கற்கண்டுச் சொல்லின் இனிப்பைக் கதைமூலம் காட்டுவதும் முத்தம்மாவின் மனதை மயக்கிவிட்டது. நாளடைவில் முத்தம்மா மருதப்பனின் ‘கள்ளக் காதலி’ யாகிவிட்டாள். எட்டுமாதங்கள் ‘இன்ப நாட்க’ளாக நகர்ந்தன. முத்தம்மாவும் ஒரு குழந்தைக்குத் தாயாகத் தயாராகிவிட்டாள். ஆனால் மருதப்பரின் போக்குத்தான் அவளுக்குக் கவலையைக் கொடுத்தது. அவர் முன்போலெல்லாம் முத்தம்மாவுடன் இனிமையாக முகம்கொடுத்துப் பேசுவதில்லை. கள்ளக்காதல் கசந்துவிட்டது. முத்தம்மா கர்ப்பவதியானதும், கடைப்பக்கமே வரக்கூடாது என்று தடையுத்தரவு போட்டுவிட்டார். அவள் வாழ்க்கைவண்டி தடம்புரண்டு – பாதைமாறிக் கல்லும் முள்ளும் நிறைந்த விதியில் ‘கடபுட’ வென்று செல்ல ஆரம்பித்தது. பூரண கர்ப்பிணியான முத்தம்மா நிராதரவான நிலைமையில் அரசினர் வைத்திய சாலையொன்றில் ஓர் ஆண்குழந்தையைப் பிரசவித்தாள். தாய் படுந்துயரைப் பார்க்கச் சகியாமலோ அல்லது இந்த வஞ்சக உலகத்தின் கொடுமையை நினைத்தோ அந்த ஆண் குழந்தை பிறந்த அடுத்தநாளே கண்ணை மூடிக்கொண்டது. ஒரு மாதப் படுக்கையை உதறிவிட்டு வைத்தியசாலையினின்றும் வெளியே வந்தாள் முத்தம்மா. சும்மா வரவில்லை அவள். ‘விபசாரி’ என்ற விருதையுந் தாங்கிக்கொண்டு பஞ்சமாபாதகர்கள் வாழும் இந்தப் பாழும் பூமியில் கால்மிதித்தாள். உலகம் அவளைத் தூற்றியது. ஆண்களும் பெண்களும் அவளை அருவருப்போடு பார்த்தனர். பர்த்தா வீட்டிலிருக்கப் பரபுருஷனுடன் சரசசல்லாபஞ் செய்த எத்தனையோ ‘பத்தினித் தங்கங்கள்’ சற்றும் வாய் கூசாது அவளை ‘விபசாரி’ என்று தூற்றினர். அவளுக்கு வாழ்க்கை கசந்துவிட்டது. ஊரையும் உயிரையும் மதிக்காமல் எங்கெங்கோ சென்று இறுதியில் இந்தப் பிச்சைக்கார ‘மகாசபையில்’ ஒரு உறுப்பினளாகிவிட்டாள்.
“ளொள், ளொள்” என்ற உறுமல் சத்தம் அவளைக் குலைநடுங்கச் செய்தது. ஆனை போன்ற நாயொன்று பயங்கரமாக உறுமிக் கொண்டு அவளைப் பிடுங்கியெடுக்கத் தயாராக நின்றது. நல்லகாலம் அதன் எஜமானர் அதைக் கூப்பிட்டுக்கொண்டே அங்கு வந்தார். அவர் கொண்டுவந்த விளக்குவெளிச்சத்தில் முத்தம்மா தனது அலங்கோல நிலையைக்கண்டு அருவருத்தாள். “யாரது, அர்த்தராத்திரியில் திருட்டுத்தனமாக நுழைந்தது?” என்று கர்ச்சித்தார் அவர். “ஐயா, நான் பிச்சைக்காரி, மழைக்குப்பயந்து இந்தத் தாழ்வாரத்திலே ஒண்டிக்கிட்டேன்.” இரக்கம் தோய்ந்த குரலில் முனகினாள் முத்தம்மா. ‘பிச்சைக்காரிகளெல்லாம் ஒண்டிக்கிடக்க இது தருமசத்திரமல்ல; ஓடிப்போ இப்பொழுதே,’ உறுமிக்கொண்டே முத்தம்மாவை நெருங்கினார் அந்த வீட்டுக்கார எஜமானர்.
முத்தாம்மாவின் கண்களை அவளாலேயே நம்பமுடியவில்லை. அவள் சோர்ந்த உடலில் ஒரு ஆவேசம்-பயங்கரமான ஆவேசம் பரிணமித்தது. முதலாளி மருதப்பன் தன் கழுகுக் கண்களைச் சிமிட்டிக்கொண்டே ‘முத்தம்மா’ என்றார். ஆனால்…! என்ன?
முத்தம்மா ஓடிக்கொண்டிருந்தாள். திக்குத் திசையைப்பற்றி அவள் சிந்தனை செய்யவில்லை. ‘படார்’ என்ற சப்தத்துடன் கீழே விழுந்தாள். பாறைக்கல்லு அவள் மண்டையைப் பதம்பார்த்திருந்தது. ‘துரோகி…’ என்ற சப்தத்துடன் அவள் கடைசி மூச்சு நின்றது. முத்தம்மா-ஆம், அந்த ஏழைப் பிச்சைக்காரி செத்துவிட்டாள்!
– சுதந்திரன், 2-11-1952.
– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |