பின்னகரும் ஆசைகள்




அவனுக்குள் ஒரு விசித்திரமான ஆசை முளைவிட ஆரம்பித்தது. நாளாக, நாளாக அந்த ஆசை அவனை ஆக்கிரமித்துக் கொண்டேவந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த ஆசை அவனது உடலெங்கும் பற்றி ஊர்ந்த வண்ணம் இருந்தது.
நகரின் திரைச் சீலைகள் விற்கும் பிரபலமான கடைக்குச் சென்றான். கடை சிப்பந்திகளிடம் தனது ஆசையை கூறி அது போல திரைச்சீலையும், மெத்தை விரிப்பானும், தலையணை உறையும் வேண்டுமெனக் கேட்டான். கடை சிப்பந்தி அவனை மேலும் கீழும் பார்த்தான். பைத்தியமாக இருப்பானோ என்று யோசித்தான். அது போன்ற வடிவத்தில் திரைச் சீலைகள் இதுவரையில் வந்ததேயில்லை என்றான். “எனக்காக புதிதாக அது போன்று வடிவமைத்து தர முடியுமா?” என்று கேட்டான். அதுபற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை வேண்டுமானால் முதலாளியிடம் பேசிப் பாருங்கள் என்றவன். முதலாளி இருக்கும் அறைக்கு சென்று முதலாளியிடம் பேசிவிட்டு வந்து அவனை அழைத்துச் சென்றான்.
முதலாளி மாணிக்லால் தும்பைப் பூ போன்ற வெண்நிற ஆடையில் அமர்ந்திருந்தார். அவருக்கு இடதுபுறம் திறந்த அலமாரியில் திரைச்சீலைகளின் மாதிரி துண்டு துணிகள் அடங்கிய பல பிரபல நிறுவனங்களின் ‘கேட்லாக்’ இருந்தது. அதிலிருந்து ஒரு ‘கேட்லாக்’ எடுத்து அவனுக்கு காட்டினார். மிக உயர்ரக திரைச்சீலைகள், காஷ்மீர் ஜரிகையால் மினுமினுக்கும் திரைச்சீலைகள். அதில் எதுவுமே அவன் மனதை கவரவில்லை. அவன் தனது ஆசையை மாணிக்லாலிடமும் கூறினான். “உங்களுக்கு எதற்கு இந்த விபரீத ஆசை’ எனக் கேட்டார். அதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை , ஆனால் அந்த ஆசை சமீபத்தில் தான் ஏற்பட்டது. அதற்குப் பிறகு என்னால் வேறு வேலைகளில் கவனம் செலுத்த இயலவில்லை . என் உடல் முழுதும் அந்த ஆசையே இப்போது பீடித்திருக்கிறது என்றான்.
“அதுபோன்ற மெத்தை விரிப்பில் படுத்தால் நீங்கள் உங்கள் நிம்மதியை இழந்து விடுவீர்கள்” என்று தனது மோவாயை தேய்த்தவாறு கூறினார் மாணிக்லால்.
“இல்லை, அது கிடைக்காவிட்டால் தான் நிம்மதி இழந்து விடுவேன்”
“நீங்கள் ஏன் ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்க்கக் கூடாது” என்று மாணிக்லால் கூறியதும் அவனுக்குள் பதட்டம் உண்டானது. வேகவேகமாக மறுத்தான். எனக்கு மன நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. நான் எப்போதும் போல் அன்றாட பணிகளை சிறப்பாகவே செய்து வருகிறேன் என்றான். நான் கேட்ட வடிவமைப்பில் உங்களால் பிரத்யேகமாக வடிவமைத்து தரமுடியுமா? என்று கேட்டான்.
மாணிக்லால் தனது அலைபேசியில் யாரிடமோ பேசினார். அலைபேசியின் கீழ்ப்பக்கம் கை வைத்து மூடிய பிறகு “பிரிண்ட் போட்டு தரவா?” என்று அவனிடம் கேட்டார். இல்லை எனக்கு பிரிண்ட் போட்டு வேண்டாம் பார்ப்பதற்கு அப்படியே நேச்சுரலாக இருக்க வேண்டும் என்று சொல்லவும் எதிர்முனையில் இருந்தவரிடம் அப்படியே கூறினார். அலைபேசியில் எவ்வளவு துணி தேவைப்படும் என்பதை நாளை மாலைக்குள் தெரிவிப்பதாக கூறிவிட்டு அலைபேசி இணைப்பை துண்டித்து விட்டு அவனிடம் மூன்று மடங்கு விலை அதிகமாகும் பரவாயில்லையா என்று கேட்டார். எவ்வளவானாலும் பரவாயில்லை என்றான்அவன் .
“நாளை எனது வேலையாள் உங்கள் வீட்டிற்கு அளவு எடுக்க வருவான் அவனோடு சேர்ந்து நீங்களும் வாருங்கள் அப்போது எவ்வளவு செலவாகும் என்று சொல்கிறேன்” என்றார் மாணிக்லால்.
மறுநாள் மாணிக்லாலின் வேலையாள் வந்து சாளரம், மெத்தை, தலையணை என இரண்டு படுக்கையறைகளுக்கும், வரவேற்பறைக்கும் தனித்தனியாக அளவெடுத்துக் கொண்டான்.
“இரட்டை திரைச்சீலை வாங்குங்க, முன்பக்கம் இருக்கிற துணி நல்ல வெங்காய சருகு போல மெல்லிசா இருக்கட்டும்” என்று தனது ஆசையை வெளிப்படுத்தினாள் மனைவி.
“ம்..ம்” தலையாட்டிவிட்டு வேலையாளுடன் சேர்ந்து கடைக்கு சென்றான்.
தனது படுக்கை அறைக்கு மட்டும் பிரத்யேக வடிவமைப்பிலும்; வரவேற்பறைக்கும், இன்னொரு படுக்கையறைக்கும் வேறு வடிவத்திலும் துணிகளை தேர்வு செய்தான்.
“பிரத்யேகமான துணி வருவதற்கு ஒரு மாத காலமாகும். வரவேற்பறைக்கும், இரண்டாவது படுக்கையறைக்கும் ஒரு வாரத்தில் தயாராகிவிடும்” என்றார் மாணிக்கலால்.
“எல்லாம் ஒரே நேரத்தில் கொண்டு வந்தால் போதும்” என்றான் அவன். மாணிக்லால் கால்குலேட்டர் எடுத்து கணக்குப் போட்டு பார்த்துவிட்டு வரவேற்பறைக்கும், ஒரு படுக்கையறைக்கும் பதினைந்தாயிரம் என்றும்,
அவன் தனித்துக் கேட்ட வடிவமைப்பிலான அறைக்கு மட்டும் முப்பதாயிரம் என்றும் மொத்தம் நாற்பத்தைந்தாயிரம் ஆகும் என்று மாணிக்லால் கூறவும் மறு பேச்சின்றி பணத்தை கொடுத்துவிட்டு திரும்பினான்.
ஒரு மாதம் கடந்து போனது ஒரு வருடம் போல் நினைத்தான். எப்போது அந்த மெத்தை விரிப்பு வரும் , எப்போது அதில் தூங்குவோம் என்று சதா யோசித்தபடியே இருந்தான். நாளை வேலையாள் உங்களது இல்லத்திற்கு திரைச்சீலைகளை கொண்டு வருவான் என்று மாணிக்லால் கூறியதும் அன்று இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை.
மறுநாள் மாலையில் வந்த வேலையாள் முதலில் வரவேற்பறைக்கு திரைச்சீலையை மாட்டிவிட்டான். மாலை நேர வெளிச்சத்தில் திரைச் சீலை பொன்னிறமாக மின்னியது. அதுவும் அவள் கேட்டது போலவே வெங்காய சருகு போல மெலிதான துணி தகதகவென மின்னி திரைச்சீலையின் காஷ்மீர் ஜரிகைக்கு கூடுதல் அழகை கொடுத்ததில் மயங்கியே போனாள். “ரொம்ப சூப்பரா இருக்குங்க ” என்று கணவனின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் உற்சாகமாக முத்தமிட்டாள். இன்னும் சிறிது நேரத்தில் தான் அடையப் போகும் அதிர்ச்சியையோ, அதனால் விளையப்போகும் விபரீதத்தையோ அப்போது அவள் அறிந்திருக்கவேயில்லை.
இரவு உணவு முடிந்து படுக்கை அறைக்கு வந்தவள், திரைச்சீலையையும், மெத்தை விரிப்பையும் ஒருசேர பார்த்தவள் “ஆ”வென அலறினாள். தன்னால் இந்த அறையில் படுக்கமுடியாது என்று கூறிவிட்டு குழந்தையோடு மற்றொரு அறையில் போய்படுத்துக் கொண்டாள். அவன் மறுப்பேதும் சொல்லாமல் ஆனந்தத்தின் உச்சத்தில் படுக்கையில் புரண்டான்.
நூறு இணை கண்கள் ஒருசேர பார்ப்பதுபோல் உணர்ந்தான். நீலமும், பச்சையும் கலந்த வண்ணத்தில் அந்த கண்கள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. அந்த கண்களிலில் தெரியும் சூட்சுமத்தை அறியாமல் பரவசத்தில் திளைத்தான். இதங்களின் மொத்தத்தையும் இந்த மெத்தை தருவதாக நினைத்துக் கொண்டான். இதுபோன்றதொரு சுகத்தை தன் வாழ்நாளில் அனுபவிக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டவன், அந்த மயக்கத்தின் உச்சத்தில் இமைகள் சொருக கனவுகள் விரியத்தொடங்கியது. எங்கோவொரு இராஜ்யத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைப்பது போலவும், மன்னனுக்கு இணையான சிம்மாசனத்தில் அமர இருபுறமும் அழகின் வடிவான பெண்கள் மயிலிறகு கொண்டு சாமரம் வீசுவது போலவும், நகரத்து வீதிகளில் கம்பீரமாக நடந்து செல்ல நகர வணிகர்கள் எல்லாம் தம் இருக்கையை விட்டு எழுந்து நின்று வணங்குவதுபோலவும் கனவு கண்டான். அறுபட்டு, அறுபட்டு தொடர்ந்த அலைகளின் ஆர்ப்பரிப்பிலிருந்து நீளத்தொடங்கியது கனவு. உயரமாக எழுந்த அலை ஒன்று அவனை நோக்கி வந்தது. அவனுக்கு சற்று முன்பாக தன் உள்நாவை மடக்கி மீண்டும் நீருக்குள் சுருண்டு மண்ணை முத்தமிட்டு நுரைப்பூவை பரிசளித்துவிட்டு கடலுக்குள் திரும்பவும் , மணலில் ஒட்டியிருந்த நுரைப்பூவிலிருந்து அரவம் ஒன்று தோன்றி அவனை நோக்கி ஊர்ந்து வந்தது. அவன் அரவத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், அரவத்தின் வால்நுனியை பார்க்க ஆவலோடு கடலையே பார்த்துக் கொண்டிருந்தான். முடிவில்லாமல் நீண்ட அரவம் அவனத்தாண்டி மலையை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. அரவத்தின் வால்நுனிகண்டு திரும்பியவன் மலையை நோக்கி அரவம் நகர்வதை கண்டான். இந்த அரவம் தான் தனக்கு வழி காட்ட வந்த தேவதூதன் என்று நினைத்த அவன் அரவம் ஊர்ந்து சென்ற தடம் பற்றி நடக்கத்துவங்கினான்.
மலைமீதேறிய நாகம் பலவாக பிரிந்து நூறானது. நூறு நாகங்கள் பிரிந்து ஆயிரமாய் உருகொண்டு ஊர்ந்து கொண்டிருந்தன. தானும் நாகமாய் பிறந்திருக்க கூடாதா என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றியது. மறுகணமே அவனும் நாகம் போல் மலைமீது வளைந்து, நெளிந்து ஊர்வது போல கற்பனை செய்துகொண்டான். அந்த கற்பனையே அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்தது. கற்பனை கலைந்து பார்க்கும் போது நாகங்களின் நடுவே அவன் சென்று கொண்டிருந்தான். அவனுக்கு முன்னும், பின்னுமாக ஊர்ந்து கொண்டிருந்த நாகங்கள் அவன் காலைபிடித்து அவன்மீது ஏறத்துவங்கியது. கால்கள், தொடை, வயிறு, மார்பு, கை , கழுத்து, முகம், தலைவரை ஏறிய நாகங்கள் அப்படியே அவன் உடலை சுற்றிவளைத்தது. நாகங்களின் ஊர்தலிலும், நெகிழ்விலும் இலயித்து மெய்மறந்தான். கொஞ்சம்,கொஞ்சமாக அவனது தலை கீழ்நோக்கி வளைந்தது, இப்போது முழுவுடலும் மலைப்பாதையில் கிடந்தது. நாகங்கள் கீழும், மேலும் சுற்றிவளைத்து அவனது உடலை இறுக்கத் தொடங்கியது. உள்ளிருக்கும் எலும்புகள் நாகங்களின் இறுக்கத்தில் நெகிழ்ந்து, நெகிழ்ந்து நரம்புபோல் மெலிதாக, அவனும் பாம்புபோல வளைந்து, நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்தான். பாதி மலையை கடக்கத்துவங்கும் போது அலைகளின் நுரையிலிருந்து வெளிவந்த நாகம் மற்ற பாம்புகளை ஒவ்வொன்றாய் விழுங்கத் துவங்கியது. இது எதுவும் அறியாமல் அவன் போக்கில் ஊர்ந்து கொண்டிருந்தவன் தனது காலை எதோ கவ்வுவது போல உணர்ந்து உடலை வளைத்து திரும்பிப் பார்த்தான். அனைத்து நாகங்களையும் விழுங்கிய அலைநாகம் அவனையும் விழுங்க எத்தனிப்பதைக் கண்டு உடல் குலுக்கி முன்னே சீறிப்பாய்ந்தான். மலையிலிருந்த ஒரு பாறையின் முனையிலிருந்து திரும்பி பார்த்தவன், ஆவேசமாக வரும் அலைநாகத்தைக் கண்டு அதற்கு அறியாமல் பாறையின் மறுபக்கம் வழியாக ஊர்ந்து இறங்கினான்.
மறுநாள் காலை கணவனை எழுப்ப வந்தவள் அவனது நிலை கண்டு பதட்டமானாள். அவன் கட்டிலுக்கு கீழே வாயில் எச்சில் ஒழுக மயங்கிக் கிடந்தான். ஆம்புலன்ஸ் வந்தது. மருத்துவமனை சிப்பந்திகள் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவள் திரும்பி அந்த படுக்கையறையைப் பார்த்தாள். மருத்துவமனையிலிருந்து வந்ததும் முதல் வேலையாக அனைத்தையும் கழட்டி குப்பைத்தொட்டியில் வீசவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். கட்டில் , தலையணை, திரைச்சீலையெங்கும் பாம்புகள் நிழலென ஊர்ந்து கொண்டிருந்தன.