பால் பிடிக்காத பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 867 
 
 

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு விலங்குகளை வளர்ப்பது பிடித்தமானது. பூனைகள் , நாய்கள் ஆகியவற்றை மிகவும் பிரியத்துடன் வளர்த்து வந்தார் அவர்.

அழகிய பாரசீகப் பூனைகளை விலை கொடுத்து வாங்கினார். . அவருடைய அரசவையில் உள்ள அமைச்சர்கள் , புலவர்கள் , முக்கிய புள்ளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு பூனையைக் கொடுத்தார். பூனையை வளர்க்க பாலுக்காக ஒவ்வொருவருக்கும் ஒரு பசுவையும் அளித்தார்.

கிருஷ்ண தேவராயருக்குப் பிடித்தமான தெனாலி ராமனுக்கும் ஒரு பாரசீகப் பூனையும் பசுவும் வழங்கப்பட்டது. யாருடைய பூனை நன்றாக கொழு கொழு என்று இருக்கிறதோ அவருக்கு நல்ல வெகுமதி வழங்கப்படும் என்று அரசர் அறிவித்தார்.

அனைவரும் பூனையுடனும் பசுவடனும் மகிழ்ச்சியோடு தங்கள் வீட்டுக்குச் சென்றனர்.

பசுவுடன் தெனாலி ராமன் வீட்டுக்கு வருவதைப் பார்த்த தெனாலி ராமனின் மனைவி மகிழ்ச்சி அடைந்தாள். இனிமேல் வீட்டில் பாலுக்கும் தயிருக்கும் நெய்யுக்கும் குறைவு இருக்காது என்று நினைத்தாள். ஆனால் , தெனாலி ராமனின் கையில் இருந்த பூனையைப் பார்த்து முகம் சுளித்தாள். அந்தக் காலத்தில் பூனையை வளர்ப்பது பாவம் என்ற நம்பிக்கை நிலவியது.

தெனாலி ராமனின் மனைவி : இது ஏன் ? இதனால துரதிர்ஷ்டம் தான் வந்து சேரும்

தெனாலி ராமன் : சொல்ல முடியாது . இதுவே பெரிய அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் கொடுக்கும்

தெனாலி ராமனின் மனைவி : என்ன சொல்றீங்க நீங்க ?

தெனாலி ராமன் : உனக்கு சொன்னால் புரியாது . நீ சுடச்சுட பால் கொண்டு வா

தெனாலி ராமனின் மனைவி ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் பாலை ஊற்றி அருகே வைத்தாள்.

தெனாலி ராமன் , பூனையின் வாயை கொதிக்கும் பாலில் வைத்து அமுக்கினான். சூடு தாங்காமல் அந்தப் பூனை ஓடியது. அடுத்தடுத்த முறைகளில் பால் வைத்த போது மியாவ் என்று கத்திக் கொண்டே ஓடி விட்டது.

அங்கு இங்கு என்று அலைந்து தேடி கிடைத்ததை சாப்பிட்டு உடலை வளர்த்து வந்தது அந்தப் பூனை . ஆனால் , தெனாலி ராமனின் வீட்டையே சுற்றி சுற்றி வந்தது.

சில மாதங்கள் சென்றன. குறிப்பிட்ட நாளில் அரசாங்கப் பிரமுகர்கள் ,அனைவரையும் அவரவர் வளர்த்த பூனையுடன் தர்பாருக்கு வரச் சொல்லி அரசர் கட்டளையிட்டார்.

தங்கள் பூனைகளுடன் அனைவருக்கும் தர்பாருக்கு வந்தனர். தெனாலி ராமனும் தன் வீட்டுப் பூனையுடன் வந்தான். மற்றவர்கள் வளர்த்த பூனைகள் எல்லாம் கொழுகொழுவென இருக்க , தெனாலி ராமனின் பூனை ஒல்லியாக நோஞ்சனாக இருந்ததைக் கண்டு அவையினர் சிரித்தனர். மன்னர் தர்பாருக்கு வந்ததும் எல்லோருடைய பூனைகளைப் பார்த்தார். தெனாலி ராமன் கையிலிருந்த பூனையையும் பார்த்தார்.

மன்னர் : ராமா ஏன் இப்படி பூனையை ஒல்லியாக வைத்திருக்கிறாய் ?

ராமன் : அரசே என்ன செய்வது ? இந்தப் பூனைக்கு பாலே பிடிக்காது.

மன்னர் : என்ன உளறுகிறாய் ? பால் வேண்டாத பூனையும் உலகில் உண்டா ?

ராமன் : வேண்டுமானால் தாங்களே சோதித்துப் பாருங்களேன்

மன்னர் : யாரங்கே ? ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வா

ஒரு காவலன் , ஒரு பாத்திரத்தில் பாலைக் கொண்டு வந்து வைத்தான். ராமன் கையிலிருந்த பூனையைக் கீழே இறக்கி விட்டான். பூனை பாலைக் கண்டதும் கத்திக் கொண்டே ஒதுங்கிப் போய் நின்றது.

மன்னர் : ராமா என்ன செய்தாய் ? ஏன் இந்த பூனை இப்படி ?

ராமன் , பூனைக்குப் பால் பிடிக்கமால் போக அவன் பயன்படுத்திய உத்தியை விவரித்தான்.

மன்னர் சிரித்தார். அவையினரும் சிரித்தனர். ‘ உன்னுடைய நகைச்சுவை உணர்வுடன் கூடிய சாமர்த்தியத்திற்கு என்னுடைய பாராட்டுகள் ‘ என்று சொன்ன மன்னர் , தமது விரலிலிருந்த வைர மோதிரத்தைக் கழற்றி ராமனிடம் கொடுத்தார்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *