பாலைவனப் பூ!
பஞ்சு பஞ்சாய் வெண் மேகப்போர்வை அதை விலக்கிக்கொண்டு கூம்பி இருந்த தாமரைய இதழ் தட்டி திறக்க தன் ஆயிரம் கரங்கள் வீசி விரைந்துகொண்டிருந்தான், சூரியன் ..
நுனிபுல்லில் இருந்து பிரியா விடை பெரும் பனி துளியை போல்.. கண்ணீருடன் கரைந்தோடிக்கொண்டிருந்தது அவள் கார்குழல் நனைத்த நீர்..
“அம்மா கோலம் போட்டாச்சு” என சொல்லிக்கொண்டே பாத கொலுசொலி பக்கவாத்தியம் இசைக்க பாதங்கள் இரண்டும் தாளமிடுவதாய் திடுதிடு என துள்ளி குதித்து ஓடி வந்தாள் தமிழி..
அன்று…
எதிர் வீட்டு நந்தனுக்கும் தமிழிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு , திருமணத்திற்கு ஒரு வார காலமே எஞ்சியிருந்தது . .

குதூகலமும் குழந்தைத்தனமும் நிரம்பி வழிந்த தமிழியின் பேச்சிற்கு தாயிடம் இருந்து எந்த மறுமொழியும் இல்லை.. “நித்திரையில் இருக்கிறாளோ?!” மெதுவாய் மெத்தையை அணுகி உறங்கிய தாயை உற்று பார்த்தவளுக்கு எல்லாம் புரிந்துவிட்டது..
நிரந்தரமான நித்திரையில் ஆழ்ந்து விட்டால் அன்னை என்று..
அலறி அடித்துக்கொண்டு எதிர் வீட்டை அடைந்தபோது.. வள்ளியும் சக்திநாதனும்.. காப்பி குடித்தப்படி பேசிக்கொண்டிருந்தார்கள்..
பீறிட்டு வந்த அழுகையை பொத்தி வைத்திருந்தவள் போல் விம்மி விம்மி அழுது கொண்டே வந்த தமிழியை பார்த்ததும்
‘என்னாச்சு கொழந்தே’ என்று கேட்டு முடிப்பதற்குள் வெடித்து வந்த அழுகையுடன் ‘மாமா அம்மா மாமா ‘ எனத் தேம்பி தேம்பி சொல்ல.. அவளோடு அவர்களும் அவள் வீட்டை அடைந்தனர்..
அடுத்து நடக்கவேண்டியவை நடக்க ஆயத்தங்கள் ஆயின..
இன்று…
பதினாறாம் நாள் காரியங்கள் முடிந்த தினம்.. தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அழுது அழுது ஓய்ந்திருந்த தமிழியை கழிவிரக்கத்தோடு பார்த்தான் நந்தன்..
தமிழியின் தாய் தந்தையர் காதல் மனம் புரிந்தவர்கள் . . இரு மனம் இனைந்து உற்றார் உறவினர்களை பிரிந்தவர்கள்.. புற்று நோயால் தமிழியின் தந்தை இறந்ததிலிருந்தே அவள் தாய்க்கும் உடல் நலம் மோசமடைந்து கொண்டிருந்தது… பேசி முடித்த ஒரே மகளின் கல்யாணத்திற்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்தாள்..
நந்தனுக்கும் தமிழிக்கும்மான திருமணத்திற்கு முதலில் அடித்தளமிட்டவர் சக்திநாதன் தான்..
சொத்தும் சௌகரியமும் நிறைந்த , மதிப்பும் மரியாதையும் கூடிய, தேவதைகள் தோற்கும்
பேரழகியான தமிழியை விட யாருக்குதான் மனம் வரும்!
நந்தனுக்கும் இவளின் மேல் ஒரு கிறக்கம் இருக்கவே செய்தது…
அவர்களின் பணத்தாசையை தமிழியின் குடும்பம் அறிந்திருக்கவில்லை!
தமிழியின் தந்தை கிருஷ்ணன் இறந்ததும், அவள் தாய் ராதாவும் ஓய்ந்திட, அடையாரில் இருந்த ஒரு வீட்டை விற்று தான் ஜீவனாம்சம் செய்ய வேண்டியதாய் இருந்தது..
கிருஷ்ணன் பணிபுரிந்த தனியார் நிறுவனமும் அவர் மறைவுக்கு பின் இவர்களுக்கு வேலை தர மறுத்துவிட்டது…
ராதா வீட்டை விற்ற விஷயம் அறிந்த கணம் முதல் “நந்தன் தமிழி” திருமணம் பற்றி எதிர்மறை யோசனையில் ஆழ்ந்தார் சக்திநாதன் . .
அன்னை மறைந்தபின் விலகும் எதிர் வீட்டாரின் நடவடிக்கைகள் தமிழியிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.. இவையெல்லாம் அரசல்புரசலாய் நந்தனே அவளிடம் சொன்னதுதான்..
ஒரு நாள் பிரபல வார பத்திரிகை ஒன்றில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது..
‘தாங்கள் அனுப்பியிருந்த ஓவியம் புகைப்படம் போல் அருமையாக இருந்தது.. அடுத்த வார அட்டை படத்திற்கு நாணமும் நிறைந்த பெண்ணின் படம் வேண்டும்’ என சொல்லி தன் இணைப்பை துண்டித்துகொண்டது.. அவள் ஏற்கனவே கிறுக்கி வைத்திருந்த கோடுகள் அட்டைப்பட பெண்ணாய் உருமாறியது…
இவளின் பொருளாதார நிலை இறங்கவும் உறவை முறித்துக்கொள்ள எத்தனித்த எதிர் வீட்டாரின் கபட குணம் இவளை பிரபல ஓவியராக்கி உள்ளது .
அவர்களின் குற்றத்தை உணர்த்தி அவர்களை மன்னித்து , இவள் கடவுளாகி காதலனை கரம் பிடித்தால் தமிழி நந்தன்!
– மார்ச் 2013