பார்வை ஒன்றே போதுமா…?!





இந்தக் காலத்துப் பசங்க மேல இசக்கிக்கு அப்படி என்ன எரிச்சலோ தெரியவில்லை. ‘டூவீலர்ல வீலிங்க்’ பண்றது… பொண்ணுங்க பின்னாடி வெட்டியாச் சுத்தறது, மொத்தத்துல பொறுப்பில்லாம நடக்கறது. பத்து காசு சம்பாதிக்கத் துப்பில்லேனாலும் அப்பன் சம்பாத்தியத்துல அட்டகாசம் பண்றதுன்னு எல்லாத்துனாலும் இந்தக் கால இளைஞர்கள் மீது இசக்கிக்கு எரிச்சல். அது, நியாயம்தானே?!

அவன் வீட்டு முக்கு தாண்டினா ஒரு ‘டாஸ்மாக்’ கடை. அங்க சீரழியறதுல பாதிக்குமேல காலேஜ் கூட்டம்தான். அதிலும் இஞ்சினீரிங்கல்லூரி மாணவர்கள்தான் அதிகம்.
வீட்டுல ஒரு போர்ஷனை காலேஜ் பசங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார் இசக்கி. வாடகை வருமேன்னு பார்த்தா… விபரீதம்தான் வந்தது நாளும். இசக்கி வேலைக்குப் போய்த் திரும்பும் போதெல்லாம் டாஸ்மாக் கடை தாண்டித்தான் வரணும். அன்னைக்கு அப்படி வந்திட்டிருந்தபோதுதான் அந்தக் காட்சியைக் கண்ணால பார்த்தான்.
வயதான ஒருத்தன் தெருவிளக்கை அணைத்துக் கொண்டு மப்பில் பிதற்றினான்’சுத்துது…! சுத்துது…! உலகமே சுத்துனு!’ குழறிக் கொண்டிருக்க, அவனுக்குப் புரிந்தது. அண்ணன் தாண்டவமாடுவது ‘டாஸ்மாக்’ தயவுன்னு.
வீடு வந்து சேர்ந்தால்… குடி வச்ச போர்ஷன் காலேஜ் பசங்கள்ல ஒருத்தன் ‘சுத்துது…! சுத்துதுன்னு!’ அதே சிக்னேச்சர் டியூனைப் பாட இசக்கி, உக்கிரமானான். ‘இதுக்குத்தான் இவனுகளுக்கு வீடே வாடகைக்கு விடக்குடாதுன்னு! அப்பன், ஆத்தா படிக்கக் காசனுப்பினா இவனுக குடிச்சு கும்மாளம் போடறானுக!’ன்னு கோபத்தோடு அறைக்கதவைத் தட்டி ஆத்திரத்தோடு.. ‘சுத்தும்டா சுத்தும்…படிக்க வந்தீங்களா? குடிக்க வந்தீங்களா? கதவை நெட்டித் திறந்து ஓங்கிய கையோடு மாணவனை அடிக்கப் போக அவன் லேப்டாப் முன்னாடி அதை ‘ஆன்’ பண்ணி உட்கார்ந்துட்டு ‘நெட் ஒர்க்’ பிரச்சனைல, அவன் ‘லோட்’ செய்த ‘டேடா’ உள்ளே போகாம, அப்லோடிங்க் டிலேல அனிமேட்டட் சிம்பல் வட்டமா, ஏன்?? வட்டமா வாட்டமா சுத்தீட்டிருப்பதுப் பார்த்து, எரிச்சலில் சக மாணவனிடம் ‘சுத்துது! சுத்துது..! சும்மா சுத்தீட்டே இருக்குடா!’ என்று நொந்து கொண்டதைத் தவறாகத் தண்ணீல உளறினதா நெனைச்சதை உணர்ந்து ‘சே…! பார்வை ஒன்றே போதுமா…?! கண்ணால காண்பதும் பொய்! என்பது இதுதானோ..?! தீர விசாரிக்காம, கோபப்பட்டோமே…!/ ஒழுங்கா படிக்கற பிள்ளைகளும் இருக்குத்தான் போல!’ என்று ஆறுதல் அடைந்தான்.