கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2025
பார்வையிட்டோர்: 288 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொழிற்சாலை அலுவலர்களின் வேலை நேர முடிவினை உணர்த்தும் சங்கொலி கேட்டுக் கொண்டிருந்த போது, பாதிப் பேருக்கு மேல் வாசல் ‘கேற்’றைத் தாண்டி பஸ் தரிப்பிடத்தினை நோக்கி சாலை வழியே சென்று கொண்டிருந்தனர். இந்த வேகம் காலையில் வேலைக்கு வரும் போதே இவர்களுக்கு இருந்தால், அமெரிக்காவையோ, ஜப்பானையோ இன்னமும் நாம் உதாரணம் காட்டிக் கொண்டிருக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்காது என்று நினைத்தவனாக, வாசலில் இருக்கும் காவலாளர் காரியாலயத்தில் தனது இலாகாச் சாவியை ஒப்படைத்து விட்டு, இவன் வீதிக்கு வருகிறான். 

கிழக்கு மேற்காக நீண்டு செல்லும் சாலையின் இரு பக்கமாகவும் தொழிலாளர் விரைந்து கொண்டிருந்தனர். வழமையாக மேற்குத் திசை நோக்கும் இவன், மாறாக இன்று கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். ஐந்து மணிக்கெல்லாம் சங்கொலியுடன் போட்டியிட்டு ஒரு பாட்டம் இறைக்கும் அந்தி மழை இன்று விடுமுறை பெற்றுக் கொண்டது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆட்டோக்கள், கார்கள், பஸ்கள், லாறிகள் என இரைச்சல் சத்தத்தினால் தம்மை இனங்காட்டி வந்த வாகனங்கள் இவனை முந்தியும் நோக்கியும் சென்று கொண்டிருந்தன. 

இரவிற்கு அறைக்குச் சென்று, அன்றாட அலுவல்களை யெல்லாம் முடிந்த பின்பாக அசோகமித்திரனையோ, வண்ண நிலவனையோ புரட்டுவது போக, இன்றைய முக்கிய வேலையாகச் செய்ய வேண்டியதாக, பல நாட்களாகவே திட்டமிட்டிருந்த பாரதி வீட்டு விஜயத்தினையே இப்போ இவன் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவன் தங்கும் அறையிலிருந்து பாரதி வீடு கணிசளவு தூரத்தே இருப்பதனால்,சனி,ஞாயிறுகளில் அதனை வைத்துக் கொள்வதில் மேலதிகமாக ஐந்தோ, பத்தோ பஸ்ஸிற்கு விரையமாகுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே, தொழிற்சாலையிலிருந்து நடைதாரம் இருக்கும் இந்த விஜயத்தினை இன்று நிறைவேற்றுவதாகத் தீர்மானித்திருந்தான். 

பாரதி இப்போ வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பாள்? காரியாலயத்திலிருந்து திரும்பி வந்த கையோடு மாறனுக்கும் தேநீரைக் கொடுத்து விட்டுத் தானும் தேநீர் அருந்தியவாறு இன்றைய நிகழ்வுகள் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது ஒரு பக்கமாக ‘ரேப் ரெக்கோட்டரில்’ ஏதாவது ஒரு இசைக் கச்சேரி போய்க் கொண்டிருக்க, மறுபக்கமாக அண்மையில் வெளியான ஒரு சிறுகதைத் தொகுப்பிலோ, நாவலிலோ மூழ்கிப்போய் இருக்கலாம். எந்த அலுவல்களையும் திட்டமிட்டுச் செய்வதும், தினமும் கொஞ்ச நேரமாவது வாசிப்பில் ஈடுபட்டு உண்மையான தேடலினை மேற்கொள்வதும் பாரதியின் பழக்கங்களில் போற்றத்தக்கது. அதுவே இவனுக்கும் அவள்பால் ஒரு ஈடுபாட்டினை ஏற்படுத்தியது! 

1985 தை மாதத்தில் ஒரு திங்கட்கிழமை. தொழிற்சாலையின் கணக்குப் பகுதியில் கணக்காளராக நியமனம் பெற்று பாரதி வந்த முதல் நாள் அது. தொழிலாளரது சம்பளத் திட்டம், தொழிலாளர் திறன் சம்பந்தமாக சில தரவுகளைப் பெறுவதற்காக தொழிற்சாலையின் தலைமை மேற்பார்வையாளன் என்ற முறையில் பாரதி இவனை அழைத்திருந்தாள். பரஸ்பர அறிமுகங்களின் பின் விடயங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது ஒவ்வொன்றையும் அவள் அணு கிய விதம் இவனை மிகவும் கவர்ந்திருந்தது. ஒரு அதிகாரி போலன்றி, விடயதானங்களை விரிவாக அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், தக்க மரியாதையையும் இவனுக்குத் தந்து, அவள் தரவுகளைச் சேகரித்துக் கொண்ட முறை, ஆரம்பத்திலேயே இவனுக்குப் பாரதி மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. 

வேலை விடயங்களுக்காக மட்டுமன்றி தனிப்பட்ட நட்புரீதியிலும் சந்திப்புகள் தொடர்ந்தன. சில சமயங்களில் ‘இன்ரர் கொம்’ வழியாகவும் உரையாடல்கள் நிகழ்ந்தன. இருவருக்கும் ஏதோ ஒரு விடயத்தில் அதிகளவில் ரசனை ஒத்துவரும் போது அவர்களில் ஒரு அந்நியோன்னியம் உருவாகுவது தவிர்க்க முடியாதது தான். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இலக்கியம் ஒரு சாதனமாக அமைந்திருந்தது. சதா நாட்டு நிகழ்வுகளையும், அரசியல் பிரச்சினைகளையும் அலசும் தொழிலாளர், இவனையும், பாரதியையும் அசாதாரணமானவர்களாக கணித்துக் கொள்ளுமளவிற்கு இலக்கியமே பேச்சாக இருவரும் ஓய்வு நேரங்களைக் கழித்தனர். 

பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, மௌனி, அம்பை என நிறையவே படித்திருந்தாள் பாரதி, தவிரவும் டானியல், ஜீவா, நந்தி, இளங்கீரன், சி.வி, எஸ்.பொ, செ. கணேசலிங்கன், தெளிவத்தை ஜோசப், தெணியான், செங்கை ஆழியான் என்று எல்லாமே அவளுக்கு அத்துப்படி. இதனால் அவளது இலக்கிய ரசனை இவனையும் விட விரிவடைந்திருந்தது. ஒரு தரமான விமர்சகராக நின்று பாரதி இவனது படைப்புகளையும் ஆராய்ச்சி செய்தாள். அபிப்பிராயங்கள் சொன்னாள். 

மார்கழி மாதத்து ஒரு ஞாயிறு விடுமுறை நாளின் மாலைப் பொழுது. இவன் தனது அறையிலிருந்த போது அண்மைக் கால நூல்கள் சிலவற்றினைப் பெற்றுக் கொள்வதற்காக இவனது ‘அட்றஸ்’ தேடியே பாரதி வந்து சேர்ந்திருந்தாள். 

பாரதியின் எதிர்பாராத வரவினால், உண்மையில் குழம்பிப் போய்விட்டது, இவனது ‘றாம் மேற்’ ரஞ்சித் தான். வந்தவளை அமரவைத்து சிறிது நேரம் உரையாடிவிட்டு, சண்முகன், சட்டநாதன், புலோலியூர் சதாசிவம், சாந்தன், மண்டூர் அசோகா, கோகிலா மகேந்திரன் என இவன் வைத்திருந்த எல்லாவற்றையுமே கொடுத்து, அழைத்துச் சென்று பஸ் ஏற்றிவிட்டு வந்த போது, இவனைப் பார்த்து ரஞ்சித் சொன்னான். “மச்சான், உன்ரை ஊர் ‘அட்றஸ்’ ஒருக்கா எனக்குத் தேவை.” 

“எதுக்கு?’ ‘சேட்டை’ கழற்றி சுவரில் கொழுவியவாறே, இவன் கேட்டான். 

“இல்லை உன்ரை வீட்டுக்காரருக்கு ஒரு கடிதம் போடவேண்டியிருக்கு. அதுதான்.” 

“விடமாட்டியளே…! ஒரு பெண் பிரசுகளோடை கதைக்கப், பழக விடமாட்டியளே.” 

“தாராளமாகக் கதைக்கலாம், பழகலாம் மச்சான். எதுக்கும் ‘லிமிற்’ எண்டு ஒண்டு இருக்குத்தானே? இப்பிடி வீடு தேடி வந்து வழியிற் அளவுக்கு நீ வைச்சிருக்கக் கூடாது.” 

“அவ இப்ப வந்தது எதுக்கு எண்டு உனக்குத் தெரியுந் தானே? அதுவுமல்லாமல் அவ என்னையும் விட மூண்டோ, நாலு வயதுக்கு மூத்தவ.” 

“தங்களை ‘மெயின்ரெயின்’ பண்ணிக் கொள்ளுறதுக்காக சில பெட்டையள் வயது குறைஞ்ச பொடியங்களிலை தான் ‘இன்ரறஸ்ராக’ இருப்பாகளவையாம்.” 

“உனக்கு அக்கா, தங்கைச்சி இல்லை எண்டது எனக்குத் தெரியும் மச்சான். அதை அடிக்கடி ஏன் எனக்கு உணர்த்திக்காட்டுறாய்?” 

இந்த ரகமாக இருவரது கதைகளும் உச்சத்திற்குப் போய், காது என்று ஒன்றிருந்தால், அகராதி கூடக் கிடந்து முழிக்கும் பாஷைகளின் துணையுடன், இறுதியில் அன்றைய பட்டிமன்றம் வெற்றி, தோல்வியின்றி நிறைவு பெற்றது. 

அநேகமாக இப்போ இவன் பாதி வழி கடந்திருப்பான். சந்திக்கு வந்துவிட்டதற்குச் சான்றாக ஒரு மூலையில் பொதுசன மலசலகூடம் கிடந்து நாறியது. வேகமாக அவ்விடத்தைக் கடந்து, முன்னே வழியை இடைமறித்திருந்த படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தான். 

1986 ஆனி மாதத்தில் ஒரு வியாழன் மத்தியானப் பொழுது. சாப்பாட்டுக்குப் பின்னதாக இவன் தொழிற்சாலை சாப்பாட்டறைக் கதிரையில் மூட்டைப் பூச்சிக்கு இரத்ததானம் செய்து கொண்டிருந்த போது, அவசர அவசரமாக வந்த பாரதி, இவனருகே அமர்ந்து ஏதோ சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தாள். 

“இது என்னுடைய பேசனல் மற்றர்” என்று ஆரம்பித்து இறுதியில் “இதுக்கு உங்களின்ரை அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டாள். 

“எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும் பாரதி ” எனக் கூறிய இவன், தனது இலாகா சென்று ஆற, அமர இருந்து யோசித்துப் பார்த்தான். 

பாரதியோ ‘குவாலிபைட் எக்கவுண்டன். ஆனால், அவனைக் காதலிக்கிற, கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிற மாறனோ ஒரு சாதாரண ‘ஸ்ரோர் கீப்பர்.’ இந்த ஏற்றத்தாழ்வு கல்யாணமான புதிதில், ஆரம்ப காலங்களில் ஒரு பொருட்டாகத் தெரியாவிட்டாலும், காலப்போக்கில் உளக் குமுறல்களை ஏற்படுத்தாதா? இப்படியான ஒரு வேறுபட்ட அமைப்பில் கூட வெற்றிகரமாக வாழும் பலரது பெயர்கள் பட்டியலாக இவன் முன் நீண்டு வந்தது. அந்த ரீதியில் இங்கும் ஒரு நல்ல வாழ்வினை அமைத்துக் கொள்ள பாரதியின் ஆளுமையால் முடியும் என்ற நம்பிக்கையே முடிவில் இவனுள் மேலிட்டது. 

மேலும் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாது, வழிந்து கொண்டிருந்த தேநீர் குவளையினை ‘பியூன்’ கொண்டு வந்து வைத்துவிட்டுப் போன கொஞ்ச நேரத்தில் ‘இன்ரர்கொம் ரிசீவரை’ இவன் எடுத்தான். 

“ஹலோ.” 

“யேஸ் பாரதி ஹியர், என்ன முடிவுக்கு வந்திருக்கிறீங்க வேலோன்?” 

“நீங்களே முடிவாச் சொன்ன பிறகு இதிலை நான் சொல்ல என்ன இருக்குப் பாரதி? ‘பட் வண் திங்’ வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுறதுக்கு எவ்வளவோ ‘சாண்ஸ்’ இருந்தும் நீங்கள் இப்படியான ஒரு விஷப் பரீட்சையிலை இறங்கிக் கொள்ளுறது தான் எனக்கு வியப்பாக இருக்கு.” 

“அதைப் பற்றிய அபிப்பிராயத்தைத் தான் நான் உங்களைக் கேட்டிருந்தன். எனக்குத் தேவையானதெல்லாம் சுதந்திரமான வாழ்வு. என்னுடைய இலட்சியங்களிலையோ, இலக்குகளிலையோ தலையிடாத ஒரு கணவன். எத்தனையோ பேர் கல்யாணத்துக்கு முன்னாலை பெண் சுதந்திரம், சம உரிமை, பெண்விடுதலை எண்டெல்லாம் வாய்கிழியப் பேசிப்போட்டு, கழுத்திலை தாலியேறினவுடனை பெண்ணுக்கென்ற ஒரு அளவிலை ஒரு வட்டத்துக்குள்ளையே வாழ்ந்து கொண்டிருக்கினம். அதைத் தான் நான் வெறுக்கிறன். என்னுடைய ரசனையிலை, கொள்கையிலை எந்த விதத்திலையும் தலையிடாது, பாரதியைப் பாரதியாகவே வாழ வைக்கிற ஒரு கணவனைத் தான் நான் விரும்புகிறன். அந்த வகையிலே மாறன் என்னோடை கடைசி வரை ‘கோப்பறேற்’ பண்ணுவார் எண்டே நான் நினைக்கிறன்.” 

“அதாவது, மகாகவி பாரதியாரின்ரை கனவை நனவாக்கப் போறீங்க பாரதி.” 

“ஒவ்கோஸ். மற்றது இன்னொரு விசயம். ஆண்டாண்டு காலமா பெண்கள் தான் விட்டுக் கொடுத்து வாழ வேணுமெண்டு நியதியி ல்லை. அப்படி வாழ ஆண்களும் பழகிக் கொள்ள வேணும். ஒவ்வொரு குடும்பத்திலையுமே இது ஒரு நடைமுறையாக மாறவேணும். இது தான் என்னுடைய பொலிசி.” 

“பாரதிப் பெண் போல் பலரும் பாரினில் புகழ் கொண்டாலும், ‘றியலி’ பாரதிப் பெண்ணுக்கு ஒரு வரவிலக்கணமாக வாழ்ந்து காட்டப்போறது நீங்கள் தான் பாரதி. ‘அட்வான்ஸ்’ ஆகவே எனது பாராட்டுக்கள்” என்றவாறே ‘லயினைக்’ ‘கட்’ பண்ணி விட்டான் இவன். 

அன்றிரவு அறைக்குச் சென்றதும் ரஞ்சித்திடம் இது பற்றி இவனாகவே கதை எடுத்தான். சகலதையும் சுவரில் தொங்கிய சுகாசினியின் படத்தைப் பார்த்தவாறே கேட்டுக் கொண்டிருந்து விட்டு முடிவில் ரஞ்சித் எம்.ஆர்.ராதாவின் குரலில் சொன்னான். “பஸ் மிஸ்ஸிங்.” 

“மச்சான், ‘அட்வான்ஸ் லெவல் பாஸ்’ பண்ணிப்போட்டு ‘வாசிற்றி’ கிடைக்கும் எண்ட நம்பிக்கையிலை நான் ஊரிலை நிண்ட போது, கொஞ்ச நாள் கராட்டி பழகிறதுக்கு பருத்தித்துறை குட்டி மாஸ்ரரிட்டைப் போட்டு வந்தனான். தெரியுமோ?” என்று இவன் கேட்டுத் திரும்பிய போது, ரஞ்சித்தின் கட்டிலில் மூன்று நான்கு நுளம்புகள் மட்டும் பறந்து கொண்டிருந்தன. அதே சமயம் ‘பாத்ரூமிற்குள்’ இருந்து ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. 

இப்போதும் ஏதோ ஆரவாரச் சத்தம் கேட்டு இவன் நினைவு திரும்புகிறது. அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஒரு நோஞ்சான் பையன் ‘சிக்சர்’ ‘வோர்’ என விளாசி மைதானத்தையே ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருந்தான். 

1987 தை மாதத்தில் ஒரு விடுமுறை நாள். பாரதி-மாறன் திருமணம், திருமணப்பதிவு காரியாலயத்தில் மிக எளிதாக நடைபெற்றது. தொழிற்சாலையிலிருந்து இவன் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தான். வேறும் ஒரு சில வெளியிடத்து நண்பர்களும் வந்திருந்தார்கள். 

திருமணம் முடிந்து கொஞ்ச நாட்களில் பாரதி தொழிற் சாலையை விட்டு விலகி வேறொரு நிறுவனத்தில் சேர்ந்து கொண்டாள். தம்பதிகளாக ஒரே இடத்தில் தொழில் புரிவதைத் தவிர்த்துக்கொள்ளவே இந்த நடவடிக்கையாம். தொழிற்சாலையை விட்டுச் சென்றாலும், ஆரம்ப நாட்களில் தொலைபேசி மூலமாக இவனுடன் தொடர்பு கொள்ள பாரதி தவறுவதில்லை. கதைகள் பற்றிய விமர்சனங்களுடன் ஒரு சில கடிதங்களும் வந்ததாக இவனுக்கு ஞாபகம். 

சில நாட்களின் பின் மாறனுக்கும் வேறெங்கோ தொழில் வாய்ப்புக் கிடைக்கவே, அவனும் தொழிற்சாலையிலிருந்து விலகிக் கொண்டான். அன்று ஒரு முப்பதாம் திகதி. தொழிற்சாலையில் தனது இறுதி நாள் என்று இவனையும், கூடப் பணிபுரிந்த தனது நண்பர்களான இஸ்மைல், லயனல், லியனகே மூவரையும் அழைத்துத் தனது வீட்டில் ஒரு விருந்து வைத்தான் மாறன். உபசாரங்களில் மூழ்கிப் போயிருந்த பாரதியுடன் அன்று இவனால் அவ்வளவுக்குக் கதைக்க முடியாது போய்விட்டது. 

கடந்த சில நாட்களாக தனது காரியாலய தொலைபேசி ”அவுட் ஒவ் ஓடர்’ ஆக இருப்பதாகச் சொல்லி, இதனால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை எனப் பாரதி இவனுக்கு ஒரு கடிதம் போட்டிருந்தாள். அந்தக் கடிதம் கூட வந்து இன்று மூன்றோ நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கும். 

அண்மைக் காலங்களாகத் தொடராகப் பத்திரிகையில் வெளிவந்து பெரிதும் ‘பரபரப்பை’ ஏற்படுத்திய இவனது குறுநாவல் பற்றிய எந்தவித அபிப்பிராயமும் பாரதியிடமிருந்து இன்று வரை வராதது பெரும் ஏமாற்றத்தை இவனுக்கு ஏற்படுத்தி விடவே, எப்படியாவது அவளை நேரில் சந்திக்க வேண்டும் என்ற அவா இவனுள் ஏற்பட்டது. அதன் பிரகாரமே இன்று பாரதி வீட்டுக்குச் செல்வதாக இவன் தீர்மானித்திருந்தான். 

பாரதியின் வீட்டுக்குப் போவதான தனது முடிவை இன்று காலை இவன் ரஞ்சித்திற்கு சொன்னபோது பதிலுக்கு அவன் சொன்னது, இப்போ இவனுள் ஒலித்துக் கொண்டது. பாரதியின்ரை ‘ரெலிபோன் மட்டுமல்ல, ஆளே இப்ப ‘அவுட் ஒவ் ஓடர்’ தான் எண்டு நான் நினைக்கிறன். “இதுக்குள்ளை நீ அங்கை இப்ப போய் வர வேணு மெண்டு அங்கலாய்க்கிறது எனக்கெண்டால் அவ்வளவு நல்லதாகப் படேலை. கடவுளேயெண்டு உன்ரை முகரையிலை லட்சணமா, உருப்படியா இருக்கிறது மூக்கு ஒண்டு மட்டும் தான் வேலோன், வீணா அதையும் அங்கை போய் உடைச்சுக் கொண்டு வராதை. நீ ஒரு எழுத்தாளன். உனக்கெல்லாம் ‘அட்வைஸ்’ பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏதோ நீ இனி யோசிச்சுச் செய்.” 

மைதானத்தைக் கடந்து குச்சொழுங்கைக்கு வந்தவனை முகப்பில் ஒரு பெட்டிக் கடை வரவேற்குமாப் போல் அமைந்திருந்தது. அதனையும் கடந்து வீட்டு இலக்கங்களை எண்ணியவாறே முன்னேறிக் கொண்டிருந்தான். முன்னர் ஒரு தடவை வந்திருந்ததாலும், வீட்டு இலக்கம் ஞாபகத்தில் இருந்ததாலும், இடத்தைக் கண்டு பிடிப்பதில் சிரமமேதும் இருக்கவில்லை. வீதியால் இறங்கி, வீட்டுக் கதவோரம் சென்று ஓரிரு தடவைகள் தட்டினான். 

“செண்பகமே…செண்பகமே” என தனக்கும் தமிழில் பாடத் தெரியும் என்பதைப் பாரதி வீட்டு வானொலியில் ஆஷா நிரூபித்துக் கொண்டிருந்தாள். இந்தப் பரிசோதனை முயற்சிகளால் பாழாய்ப் போவது என்னவோ தமிழ்த் திரையுலகம் தான் என இவன் நினைத்தவாறே, மீண்டும் கதவைத் தட்டினான். 

பாடல் சத்தம் தேய, இப்போ யன்னலருகே “யேஸ்” என்ற குரலோடு ஒரு பருவக்குமரி பளிச்சிட்டாள். தான் தட்டிய கதவு சரிதானா என இவன் மீண்டும் ஒரு தடவை பார்த்தான். தலைகீழாகத்தான் என்றாலும் இலக்கம் சரியாகத்தான் இருந்தது. “ஐ வோன் ரு சீ மிஸிஸ் மாறன்” என்றான், குழம்பிப் போயிருந்த தன் தலைமயிரை கையால் கோதி விட்டவாறே. 

அந்தப் பெண் கதவைத் திறந்து இவனை ‘ஹோலிற்குள்’ வரவழைத்து, “ரேக் யுவர் சீற் ஹியர், சீ வில் கம்” என்று சொல்லியவாறே, “பாரதி ஏ விசிற்றர் வோர் யூ” எனச் சற்று உரக்கக் கூறிவிட்டு, முன்னறைக்குள் மறைந்து கொண்டாள். 

இந்தச் சிட்டு ‘எயர் லங்கா’ அல்லது வேறெங்காவது ஒரு நல்ல ‘வேமில்’ வரவேற்பாளராக வேலை செய்பவளாக இருக்கலாம் என்று எண்ணியவாறே, ஒரு வசதிக்காக முன்னறையை நோக்கியவாறே மூலையில் கிடந்த ஒரு கதிரையில் இவன் அமர்ந்து கொன்டான். வானொலியில் பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது “செண்பகமே…. செண்பகமே.” இவனது காற்சட்டைப் பொக்கெட்டிற்குள் இருந்த சீப்பு ஒரு தடவை வந்து தலையில் அமர்ந்துவிட்டு மீண்டும் மறைந்து கொண்டது. 

“எட வேலோனே? ‘விசிற்றர்’ எண்டதும் இவரோடை ‘பிறண்ட்ஸ்’ ஆரோ ஆக்குமெண்டு நான் நினைச்சன். என்ன கனகாலத்துக்குப் பிறகு இந்தப் பக்கம்?” என்ற குரல் கேட்டு இவன் நிமிர்ந்தான். 

பாரதி முன்னால் நின்றாள். இவனால் அவளை மட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்தக் குறுகிய காலத்துள் என்னவாக மாறிவிட்டாள்? சற்றுத் தடித்து, முகமெல்லாம் பூரித்து கொஞ்சம் நிறம் மாறி.. 

“என்ன நான் கேக்கிறன், நீங்கள் பேசாமல் இருக்கிறியள்” என்றவாறே எதிரில் இருந்த கதிரையில் வந்து அமர்ந்தாள் பாரதி. 

“இல்லைத் தெரியாதே…நாட்டு நிலவரங்கள் அதுகள், இதுகளாலை ‘விசிற்றிங்’ எண்டு நான் இப்ப அவ்வளவா ஒரு இடமும் வெளிக்கிடுகிறதில்லை. அது சரி எங்கை மாறன் அண்ணாவைக் காணேலை?” 

“அவரென்னும் வரேலை. இன்னும் கொஞ்ச நேரத்திலை வந்திடுவார். முந்தி, ஒண்டாத்தான் வாறனாங்கள். இப்ப எனக்கு ‘ஒவ்வீசிலை’ வேய்கிள் புரவைட் பண்ணு றதாலை நான் கொஞ்சம் நேரத்தோடை வந்திடுவன்.” 

பாடல்கள் முடிந்து வானொலியில் செய்தி அறிக்கை ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. 

“உங்கடை ‘ஒவிஸ் ரெலிபோன்’ இன்னமும் ‘அவுட் ஒவ் ஓடர்’ தானோ?” 

“ம்! என்னுடைய ‘டிறெக்ட் லைன்’ இன்னும் ‘அவுட் ஒவ் ஓடரா’கத் தான் இருக்கு.” 

“இல்லை, என்ரை குறுநாவல் ஒன்று தொடரா வந்திருந்தது. அதைப் பற்றிய விமர்சனம் ஒண்டும் நீங்கள் எனக்குச் சொல்லேல்லை. அது தான் கேட்டனான்.” 

இவன் சொல்லியும் பாரதி எதுவுமே பேசாதிருந்ததால், தான் சொன்னது அவளுக்குக் கேட்கவில்லையோ என்று நினைத்தவனாக, மறுபடியும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். 

“இப்ப கொஞ்ச நாளா இவர் ‘ஐலண்ட் பேப்பர்’ தான் எடுத்துக் கொண்டு வாறார். அதனாலை தமிழ்ப் பத்திரிகைகள் எதுவுமே எனக்கு வாசிக்கக் கிடைக்கிறதில்லை. சீ, நான் ‘மிஸ்’ பண்ணிட்டனே? எப்பிடி நல்லாச் செய்திருந்தியளோ?” தலைகுனிந்து இருந்தவாறே பாரதி கேட்டாள். 

“கதை தன்னுடைய மனதைத் தொட்டதாக தெணியான் விமர்சனம் எழுதியிருந்தார். கவனிப்பைப் பெறவேண்டிய எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர் எண்ட மாதிரி தெளிவத்தை ஜோசப் சொல்லியிருந்தார்.” 

“முன்னோடி எழுத்தாளர்கள் குறிப்பிட்டுச் சொல்லுற அளவுக்குக் கதை இருந்திருக்கு எண்டால் அப்ப அது ஒரு வெற்றிப் படைப்பாகத்தான் இருந்திருக்கும். ‘கட்டிங்ஸ்’ இருந்தால் தாருங்கோவன். நானும் ஒருக்கால் வாசிச்சுப் பாப்பம்.” 

“றாமிலை இருக்கு. வேணு மெண்டால் கொண்டுவந்து தாறன்.” 

“முந்தின மாதிரி இல்லை. உண்மையிலை இப்ப… இப்ப நான் வாசிக்கிறதே வலு குறைவு. ‘வேக்காலை’ வந்து, பிறகு வீட்டு வேலைகள் எண்டு எங்கை நேரம் கிடைக்குது? ‘வீக் எண்ட்ஸ்’ வந்தால் ‘விசிற்றிங்’ அது, இது எண்டு இவர் எங்கையாவது இழுத்துக் கொண்டு போயிடுவார். தனிய வெளிக்கிட்டுப் பத்திரிகைகள், புத்தகங்கள் எண்டு ஒண்டுமே வாங்க முடியிறதில்லை. அவ்வளவு பிஸி. இன் வைக்ற்… பழைய பாரதியாக இப்ப நான் இல்லை.” 

“கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மீண்டும் ஒரு தடவை அறியத் தருகிறேன்!” என வானொலியில் மரண அறிவித்தல் போய்க் கொண்டிருந்தது. 

கடைசியில் தான் சொன்னது இவனுக்குக் கேட்டிருக்குமோ என்னவோ என்ற ஒரு சந்தேகத்தில் பாரதி மறுபடியும் சொன்னாள் “இன் வைக்ற் பழைய பாரதியாக இப்ப நான் இல்லை. ஒரே பிஸி.” 

அப்போ கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே பாரதி தான் மெல்ல எழுந்து சென்று கதவைத் திறந்து விட்டாள். மாறன் வந்து நின்றான். “இங்கை பாருங்களண் ஆர் எண்டு.” இவனைக் காட்டியவாறே பாரதி கணவனைப் பார்த்தாள். 

மாறன் இவனை நோக்கினான். பின் “ஹலோ மிஸ்டர் வேலோன், ஹௌவ் ஆர் யு” என்றவாறே சிரித்தான். சிரிப்பில் ஒரு வரட்சி தெரிந்தது. 

இவனும் பதிலுக்கு “எப்படி” என்று கேட்டுக் கொண்டே வகுப்பில் வாத்தியார் நுழையும் போது மாணவர் எழுந்து பின் அமரும் பாணியில் ஒரு முறை செய்து கொண்டான். எதிரே மாறனும், அவனருகில் பாரதியுமாக அமர்ந்து கொண்டனர். 

“இங்கை, வர்ற ‘சண்டே’ ஒருக்கா இவருடைய ‘றாமுக்குப்’ போவமே?” பிடரி மயிரை விரலால் வருடியவாறே பாரதி ஒரு பக்கமாக மாறனைப் பார்த்தாள். 

“ஏன் ஏதேனும் விசேசமோ?” ‘சேட்’ மேல் பொத்தானைக் கழற்றி விட்டு, கதிரையில் சாய்ந்தவாறே, மாறன் பார்வையை பாரதி பக்கமாகத் திருப்பினான். 

“இல்லையப்பா. இவருடைய ‘ஸ்ரோறி’ ஒண்டு இருக்காம். அதை ஒருக்கா வாங்கி வர வேணும்.” 

“எட அதுக்கே? நான் நினைச்சன் ஆளுக்கு ‘வெடிங்கோ,’ ஏதோ வாக்குமெண்டும் ‘சண்டே’ தானே, பாப்பம்.” தான் கொண்டு வந்த தோல்ப்பையினை பாரதியிடம் கொடுத்தவாறே, மாறன் இவனைப் பார்த்தான். 

“ரண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருங்கோ. நான் ஒருக்கா உள்ளை போயிட்டு வாறன்” என்றவாறே கணவன் கொடுத்த பையினைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு பாரதி உள்ளே சென்றாள். 

இஸ்மைல், லயனல், லியனகே போன்ற தொழிற்சாலையின் ஸ்ரோக் கீப்பஸ் நிலவரங்கள் பற்றிக் கேட்டறிந்து கொள்வதில் மாறன் ஆர்வங் காட்டிக் கொண்டிருந்தான். 

லியனகேக்கு பேபி கிடைத்தது, இஸ்மைலின் சம்சாரம் மவுத்தாகிப் போனது, ‘எக்கவுண்டனோடு’ கொழுவுப்பட்டதாலை ‘மனேஜ்மன்ற்’ லயனலை வேலையிலிருந்து ‘சஸ்பென்ட்’ பண்ணியது உட்பட, சகல செய்திகளையும் இவன் சொல்லிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் “யஸ்ட் எ மினிட்” என்றவாறே மாறனும் உள்நோக்கிச் சென்றான். 

இப்போ இவனது பார்வை முன்னறைப் பக்கமாகத் திரும்பியது. கதவில் திரைச்சேலை ஓர் நிலையில் நில்லாது, முன் பின்னாக ஆடிக் கொண்டிருந்தது. “செண்பகமே…. செண்பகமே” பாடல் மீண்டும் ஒருமுறை இவனுள் ஒலிப்பதைப் போல் உணர்வு: அப்போ கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே, திரைச்சேலையை விலக்கியவாறே ஓடிவந்த அந்தப் பெண் கதவைத் திறந்து விட்டாள். வந்தவன் ஒரு புன்சிரிப்புடன் அந்தப் பெண்ணிடம் தான் காவி வந்த பையினைக் கொடுத்துவிட்டு, வாசல் கதவை மீண்டும் தாளிட்டுக் கொண்டான். இருவருமாக முன்னறைக்குள் நு ழைந்து கொண்டனர். அறையினுள் நுழைந்ததும் அவன் கதவை அடித்துச் சாத்தினான். கதவு இடைவெளிக்குள் திரைச்சேலை அகப்பட்டு கசங்கியபடி தொங்கிக் கொண்டிருந்தது. 

“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று உள்ளிருந்த வானொலியில் பெங்களுர் ரமணியம்மாளின் பக்திப் பாடல் ஒன்று மிக சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. இப்போ இவனுக்கு இடம் மாறியிருக்க வேண்டும் போல ஒரு உணர்வு. அதே சமயம் தட்டில் தேநீருடன் பாரதி உள்ளறையிலிருந்து வந்துகொண்டிருந்தாள். தொடர்ந்து மாறனும் வந்து அமர்ந்து கொண்டான். 

வழமையாக மாறனின் முகத்தில் தெரியும் வெளிச்சம் இன்று இல்லாததைப் போல இவனுக்குத் தென்பட்டது ‘ஆண்டாண்டு காலமாக நான் பாவிப்பது பனடோல்’ என்ற விளம்பரப் ‘போஸ்ரறில்’ உள்ளவனைப் போல் காணப்பட்டான். 

இப்போ பாரதி தனது காரியாலய நடப்புகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். தனக்குக் கீழ் வேலை செய்யும் உதவியாளர்கள் யாழ்ப்பாணம் போனால் வேளை காலையுடன் திரும்பி வராது விடுவதனால் வேலைகள் எல்லாம் ‘அறியேஸ்’ ஆகி விடுவதாக அவள் குறைபட்டுக் கெரண்டிருந்தாள். 

வானொலியில் நிலைய வித்வான்கள் வயலின் வாசித்துக் கொண்டிருந்தார்கள். 

மாறன் இன்னமும் வெளியில் எங்கோ வெறித்துப் பார்த்த படியே இருந்தான். உரையாடலில் பங்குபற்றுவதற்கான அறிகுறிகள் அவனில் தென்படுவதாக இல்லை. ஏழு மணியை அறிவிக்க வானொலி விட்டு விட்டு கூவிக்கொண்டிருந்தது. 

“அப்ப நான் வரப் போறன்.” எழுந்தவாறே இவன் கூறுகிறான். 

“பை தபை …வாற சண்டே இவருக்கு வேறை ஏதோ ‘புறொகிறாம்’ இருக்காம். அதனாலை நாங்கள் உங்களட்டை வர வசதிப்படாது எண்டு நினைக்கிறம். அடுத்தடுத்த கிழமைகளிலை ஒரு நாளைக்கு வர ‘றை’ பண்ணுறம்” கூறியவாறே பாரதி எழுந்து நின்றாள். 

“தற்ஸ் ஓகே.” வழிந்து கொண்டிருந்த வியர்வையை கைக்குட்டையால் இவன் துடைத்துக் கொண்டான். 

“ஒருக்கால் வேலோனை சந்தியிலை கொண்டுபோய் விட்டுட்டு வாங்களன்.” புருஷனைப் பார்த்து பாரதி சொல்கிறாள். 

“பரவாயில்லை, வந்து வந்து இப்ப எனக்கு இடம் நல்லாப் பிடிபட்டுட்டுதுதானே…ஐ கான் மனேஜ்” என்றவாறே இவன் வீதிக்கு வருகிறான். “குட் பாய்.” மூன்று குரல்கள் ஒலித்தன. மூன்றாவது குரல் சற்று உரமானதாக வெளிவந்தது. 

குச்சொழுங்கையால் மிதந்து வேகமாகவே மைதான மூன்றலுக்கு வந்து விட்டான். சன சந்தடியின்றி விளையாட்டு மைதானம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.விரைவாகக் கால்களை வைத்து முன்னேறிக் கொண்டிருந்தான். வழியை இடைமறிக்குமாப் போல் முன்னே பத்துப் பதினைந்து படிக்கட்டுக்கள் மேலே உயர்ந்து சென்று கொண்டிருந்தன. 

படிகளில் ஏறும்போது இவன் எண்ணிக் கொண்டான். ‘இனி என் மூக்கைப்பற்றிக் கவலைப்படும் அவசியம் ஏதும் ரஞ்சித்திற்கு இருக்காது’. இறுதிப்படி கால்களில் தட்டுப்பட்டது. ஒருமுறை வந்த வழியைத் திரும்பிப் பார்த்தான். அந்த மைதானம், குச்சொழுங்கை எதையுமே இனங்காண முடியாதவாறு சகலதுமே இருளில் மூழ்கிப்போய்க்கிடந்தது. 

– மல்லிகை

– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *