பாடலிபுரத்துப் பாடகர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள் நாடகம்
கதைப்பதிவு: July 22, 2026
பார்வையிட்டோர்: 87 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்:
ஒரு கிழக் கழுதை, கிழநாய், பூனை, கோழி, நான்கு திருடர்கள். 

முதல் அங்கம்

முதற் காட்சி

இடம் – பாடலிபுரத்துப் போகும்பாதை. ஒரு கிழக் கழுதை மெல்ல வருகிறது. 

க. வேலை செய்கிற வரையில் தீனி போட்டான் – வேலை செய்ய முடியவில்லையென்று தீனியை நிறுத்திவிட்டான்! எஜமான் பேரிலும் ஒருவிதத்தில் தப்பில்லை. என் தலை விதி! 

வழியில் கிழ நாயை சந்திக்கிறது.

ஐயா, நாய்க்கரே! ஏன் இப்படி நாக்கைத் தொங்கவிட் டுக் கொண்டிருக்கிறீர்கள்? 

நா. என் விதி கழுதையாரே! வயசாகிவிட்டது; முன்பு போல் வேட்டையாட முடியவில்லை. பலஹீனமாகிவிட்டது, என்று என்னை என் எஜமான கொல்லப் பார்த்தான் – நான் சமயம் பார்த்து தப்பித்துக் கொண்டு வந்து விட்டேன். இனிமேலே எப்படி பிழைக்கிறது என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். 

க. நாயக்கரே, நான் சொல்வதைக் கேளும்; நான் பாடலி புரம் போய் என் குரலைக்கொண்டு பாடி ஜீவனம் செய்யலாமென்று யோசிக்கிறேன், நீங்களும் என்னுடன் வாருங்கள், நான் காம்போதி முதலிய ராகங்களில் பல்லவி பாடும்பொழுதெல்லாம் நீங்கள் உங்கள் வாயால் மிருதங்க சாப்பு கொடுத்து வாருங்கள்; நம்மிருவருக்கும் நல்ல ஜீவனம் கிடைக்கும். 

நா. சந்தோஷம் – அப்படியே செய்கிறேன். 

[சொஞ்சதூரம் போகிறார்கள்.] 

வழியில் ஒரு பூனையை சந்திக்கிறார்கள். 

க. ருத்திராட்ச பூனையாரே!- என்ன சமாச்சாரம்? மூன்றாம் பேஸ்த்து வைத்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? 

பூ. உயிர் தப்பி வந்த பிராணி எப்படி சந்தோஷமாயிருக்க முடியும்? எனக்கு வயதாகிவிட்டது, பல்லெல்லாம் மழுங்கிப் போச்சு, முன்பு போல் எலி பிடிக்க வில்லை. சும்மா அடுப்பண்டை உட்கார்ந்துகொண்டு குளிர்காய்கிறேன் என்று என் எஜமானி என்னைத் தண்ணீரில் அமிழ்த்திக் கொல்லப் பார்த்தாள். நான் தப்பிதுக்கி கொண்டு வரப்பட்டபாடு பிரம்ம யத்தன் மாயிற்று – இனி எங்கே போகிறது? எப்படி பிழைப்பது? என்று கவலையாயிருக்கிறது. நீங்கள் மிகவும் புத்திசாலி என்று மனிதர்கள் சொல்லுகிறார்களே, உங்களுக்கு ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள். 

க. நாங்கள் இரண்டு பேரும் பாடலிபுரம் போகிறோம் – பாடி ஜீவனம் செய்ய நீங்களும் எங்களுடன் வாருங்கள் – உங்களுக்குத் தான் மியா மியா, என்று தம்பூர் வாசிக்கத் தெரியுமே, நாம் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பிழைக்கலாம். 

பூ. ஆஹா! அப்படியே ஆகட்டும்! 

[மூவரும் கொஞ்ச தூரம் போகிறார்கள்.] 

வழியில் ஒரு கோழி கத்திக்கொண்டிருக்கிறது. 

க. ஐயா சேவல் கோழியாரே, காது செவிடாகும்படி ஏன் இப்படிக் கத்துகிறீர்கள்? 

கோ. கத்தாமல் என்ன செய்வது நான்? காலையில் தினந்தோறும் நான் கூவி எல்லா வேலைக்காரர்களையும் எழுப்பி வேலையின் பேரில் விட்டேன் என்று இது வரையில் சந்தோஷித்துக் கொண்டிருந்த என் எஜமானி,நாளை யாரோ விருந்தினர் வீட்டுக்கு வரப்போகிறார்களாம். அவர்களுக்கு விருந்தாக என்னைக் கொன்று சமைத்துப் போடத் தீர்மானித்திருக்கிறாள்; ஆகவே நான் கத்திக் கொண்டிருக்கிறேன். 

க. ஐயா, சிவந்த கொண்டை சேவல் கோழியாரே! நான் ஒரு யுக்தி சொல்கிறேன் கேளுங்கள், நாங்கள் மூவரும் பாடலிபுரம் போய்ப் பாடி செய்யத் தீர்மானித் திருக்கிறோம். இங்கிருந்து சாவதைவிட எங்களுடன் வாருங்கள். உங்கள் குரல் கிளாரியனெட் போலிருக்கிறது; அந்த வாத்தியம் தான் எங்களுக்குக் குறைவா யிருக்கிறது. ஆகவே நாம் நால்வருமாகச் சங்கீத கச்சேரி பண்ணினால் எல்லாம் குறையின்றி சரியாகப்போய் விடும். 

கோ. ஆ! இது நல்ல யுக்திதான். 

[நால்வரும் கொஞ்சதூரம் போகிறார்கள்.]

க. அதோ! அங்கொரு வீடுபோல் தோன்றுகிறது; வெளிச்சம் தெரிகிறது ஜன்னல் வழியாக, அங்கு போவோம் வாருங்கள். 

காட்சி முடிகிறது. 

இரண்டாம் காட்சி 

இடம் – காட்டில் திருடர்கள் வீடு. 

வீட்டிற்குள் நான்கு திருடர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்; ஜன்னல் அருகில் நான்கு பாடகர்களும் வருகிறார்கள். 

[ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து] தோழர்களே! சரியான சமயத்திற்கு வந்தோம். இங்கே வீட்டில் நான்கு பெயர் சாப்பிட ஆரம்பிக்கப் போகிறார்கள்: நாம் நால்வருமாக கொஞ்சம் கச்சேரி பண்ணுவோமாகில், நமக்கும் ஏதாவது தின்பதற்குக் கொடுப்பார்கள். நான் ஒரு யுக்தி சொல்கிறேன் கேளுங்கள்.ஐயா, சப்பை நாய்க்கரே என் முதுகின் பேரில் ஏறிக்கொள்ளுங்கள்; ருத்திராட்சப் பூனையாரே, அவர் முதுகின் பேரில் நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள்; ஐயா சிவந்த கொண்டை சேவலாரே, எல்லோருக்கு மேல் நீங்கள் பறந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். 

[அப்படியே செய்கின்றனர்.] 

இப்பொழுது நாம் பாட ஆரம்பிப்போம். 

[கழுதை கத்துகிறது, நாய் குலைக்கிறது,பூனை சீறுகிறது, கோழி கொக்கரிக்கிறது. உள்ளே இருந்த திருடர்கள் ஐ ஐயோ! பிசாசு பிசாசு! என்று கூவிக்கொண்டு வெளியே ஓடுகின்றனர்.] 

காட்சி முடிகிறது. 

மூன்றாம் காட்சி

இடம் – அதே இடம். 

காலம் – இரவு. 

நான்கு பாடகர்களும் சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கின்றனர். 

க. நாம் எல்லாம் வயிறு நிரம்பச் சாப்பிட்டாச்சுது: இனி இங்கேயே படுத்துக்கொள்வோம் – ஒவ்வொரு மூலைக்கு ஒவ்வொருவராய். 

(அப்படியே செய்கின்றனர்.) 

தலைக்கள்வன் வாயிற்படி வழியாக வருகிறான். 

த.க. என்ன இருட்டாயிருக்கிறது! ஆயினும் ஒரு சத்தத்தையும் காணோம்! நாம் வீணாக எதையோ கண்டு பயந்தோமோ என்னவோ? எதற்கும் விளக்கைக் கொளுத்திப் பார்க்கறேன் – இந்த பயர்பாக்ஸ் குச்சி பற்றவில்லை! – சீ! – ஓ! இதோ அடுப்பண்டை நெருப்பிருக்கிறது – அதில் கொளுத்துவோம். 

[பூனையின் கண் அருகில் குச்சியை எடுத்துக் கொண்டு போகிறான். பூனை தன் நகத்தால் அவன் முகத்தில் கீறுகிறது.] 

ஐ ஐயோ! [கூவிக்கொண்டு மற்றொருபுறம் போக, அங்கிருந்த நாய் அவன் காலைக் கடித்து விடுகிறது.] 

ஐஐயோ! பிசாசு! பிசாசு! 

[மற்றொருபுறம்போக கழுதை அவனை நன்றாய் உதைக்கிறது]

சந்தேகமில்லை! பிசாசுதான் பிசாசுதான்! 

(வெளியில் ஓடப்பார்க்கிறான்; அப்பொழுது கோழி அவன் தலைமேல் உட்கார்ந்துகொண்டு கத்துகிறது.)

ஐ ஐயோ! பிசாசே! பிசாசே! என்னைவிட்டுவிடு! – நான் ஓடிப்போகிறேன்! இனிமேலே இந்த வீட்டிற்கு நுழையவே மாட்டேன்! நுழையவே மாட்டேன்! 

[ஓடிப்போகிறான். நான்கு பாடகர்களும் சிரித்துப் பாடுகின்றனர்.] 

காட்சி முடிகிறது. 

நாடகம் முற்றியது.

– ஒன்பது குட்டி நாடகங்கள், முதற்பதிப்பு: 1956, நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ. பி. எல் அவர்களால் இயற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *