கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 25, 2025
பார்வையிட்டோர்: 297 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்றைய நாள் ஒரு மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. வானம் அம்மிக் கொண்டிருப்பதால் மழை பெய்வதற்கான அறிகுறிகள் அதிகமாகவே இருந்தது. இதமாக வீசிய தென்றல் காற்றும் குளிர்காற்றாக மாறி உடலைச் சில்லிட வைத்தது. மழைக்கான ஆரவாரங்களில் இயற்கை தன்னை இணைத்துக் கொண்டது. 

வீட்டினுள்ளே இருந்த விமலாவும் வெளியே வந்து முற்றத்தில் நின்று கொண்டு தனது கண்களை நாலா பக்கமும் படரவிட்டவளின் மேனியையும் அக்குளிர் காற்று நடுங்க வைத்தே சென்றது. அக்குளிர் காற்றின் நடுக்கம் அன்று நடந்த அவலநிலையையும் அசைபோடத் தயங்கவில்லை. அந்த நாள் இப்போதும் அவள் இதயத்தில் ஆழமாகவே வேரூன்றியுள்ளது. அன்றும் இதே போன்று வீசிய தென்றல் காற்றுத்தான்… குளிர்காற்றாக மாறி அதன் பின் உயிர்களையே இரக்கமின்றி பலியெடுக்கின்ற சூறாவளிக் காற்றாகவும் மாறி அந்தக் கிராமத்தையே சூறையாடி இருந்தது. நாசமான உடமைகள்தான் எத்தனை…. வெள்ளத்தால் ஈவிரக்கமின்றி அடித்துச் செல்லப்பட்ட உயிர்கள் தான் எத்தனை…! இவையனைத்தும் நடந்து முடிந்தது அன்று பெய்த மழையில்… அன்றைய நாளில்..! இவற்றை நினைக்கும் போதெல்லாம்… அவள் நெஞ்சம் கனக்கும்.. இனம் புரியாத ஒரு வேதனை இதயத்தைத் தாக்கும். கண்களில் நீர் முட்டியிருக்கும். இது அவளிற்கு வேதனை தந்த வலிகள். அவள் இதயத்திலிருந்து நீங்காத வடுக்கள் அவை. 

இன்றும் அவ்வாறு வீசுகின்ற குளிர்காற்று அவளைப் பயமுறுத்து வதுவும் அன்றைய அச்ச நிலையால்தான். அவளது அச்சத்தை மேலும் வலுப்படுத்துவது போன்றே குளிர்காற்றுடன் கருமேகங்களும் சூழத் தொடங்கியது.. இடி முழக்க ஓசையும், மின்னல் ஒளியும் குறைந்த போதிலும், கரு முகில்களில் ஏற்பட்ட மாறுதல்களும், அவை சூழ்ந்து கொண்ட விதத்தினை யும் பார்க்கும்போது அவளது அச்சம் மேலும் வலுக்கத் தொடங்கியது. 

அவளது கண்கள் அச்சத்தில் விரிகின்றது. எதிரே இருந்த பலாமரத்தை அவளது கண்கள் அகலத் திறந்தபடி உற்று நோக்கிக் கொண்டிருந்தது. அது அவளிற்கு எதனை உணர்த்தியதோ தெரியவில்லை.. ஆனால் ஒன்றை மட்டும் நினைவு படுத்தத் தவறவில்லை. பலாமரத்தின் பரிதாப நிலையை அவை அவளிற்கு பறை சாற்றிச் சென்றது… 

…அன்று பெரிதாக வீட்டை விட உயரமாக முற்றத்தில் நின்ற அந்தப் பெரியபலா மரம். அதன் கிளைகளையும் நாலா பக்கமும் பரப்பி நல்ல நிழலினைக் கொடுத்து உயர்ந்து, அகன்று, செழித்து வளர்ந்து சிறப்பாக நின்றது. இதுதான் வாறவை போறவையளிற்கெல்லாம் பொறாமையும் கூட, பொதுவாகவே உயர்ந்தாலே பிடிக்காத மனிதர்கள் தானே இன்று அதிகளவில் சமூகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அறிவு அதிகரிப்பிற்கு ஏற்ப அவர்கள் மனிதர்கள் முதற் கொண்டு மரங்களைக் கூட விட்டு வைப்பதில்லை… இது அவர்களில் தவறில்லை.. அவர்களின் அறிவின் அதிகரிப்பே தான் ஆசைக்குக் காரணம். இதுவே பொறாமைக்கும் வித்திடுகின்றது. 

சில மனிதர்கள் அவ்வீட்டிற்கு வருபவர்கள் அம்மரநிழலில் சிறிது நேரமாவது இருந்து களைப்பாற வேண்டும் என்று ஆசைப்படுவர். பலாமர நிழல் கொடுக்கும் அந்த இன்ப சுகத்தை இனிதாகவே நுகர்ந்தும் கொள்வார்கள். ஏன் போகும் போதும் கூட “அப்பாடா… இந்தப் பலாமரம் எவ்வளவு நல்லதைச் செய்யுது.. இது கனகாலம் இருக்கோணும்” என வாழ்த்தி விட்டு செல்லுகின்ற நன் மனிதர்களும் இருக்கத்தான் செய்தனர். 

மனிதர்கள் எவ்வாறுதான் இருந்தாலும், பலாமரம் நிலை மாறாது தனது பணியை செய்து கொண்டுதான்… இருந்தது. அந்தப் பலாமரமத்தின் பிரசவங்கள் பெரிய பெரிய பலாக் கனிகளையே சுவையோடு நிறையக் கொடுத்தது…! அதனால் பலாமரத்தின் பராமரிப்பும் அழகாகத்தான் அமைந்திருந் தது. பலாமரத்தின் அருகே வெள்ளை மணல் பரவியிருப்பார்கள்..அதனை விமலாவின் பாட்டியார் மணலை சளிய விடாமல், மேலே கூட்டிக் கூட்டி விடுவார். விழுகின்ற சருகுகளையும் மெல்ல மெல்லப் பொறுக்கி யெடுத்து நார்ப்பெட்டியொன்றிலே போட்டுக் கொண்டு சென்று வெளியே உள்ள கிடங்கொன்றில் கொட்டி விடுவார். 

அன்று ஒரு நாள் யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை… இன்றைய நிலை போன்றே கருமுகிற் கூட்டங்கள் வானத்தில் சேர்ந்து கொண்டன. 

காற்றின் இசை மாறத் தொடங்கியது… அதன் வேகமும் மாற்றங்காணத் தொடங்கியது.. திடீரென மழையுடன் சூறாவளிக் காற்று பெரிய இரைச்சலுடன் சுழன்றடிக்கத் தொடங்கியது. வீட்டுக் கூரைகள் எல்லாம் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது எடுத்து வீசப்பட்டன. எங்கும் வெள்ளக்காடானது…. மரண ஓலங்கள் அதிகரித்த வண்ணமே இருந்தது…. ஆனால் விமலாவின் வீட்டிற்கு பெரிதாக சேதங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் ஊர் அழிவில் தத்தளித்தது… அது மட்டுமன்றி பெரிதாக உயர்ந்து வளர்ந்து நின்ற பலாமரம் முறிவடைந்த நிலையில், பிரசவித்த பலாப்பழங்களும் பிஞ்சுகளும் உதிர்ந்து நிலத்தைத் தொட்ட வண்ணம் இருந்தது… இவ்வாறாக அன்று நடந்த அனர்த்த நிலை விமலாவின் உள்ளத்திலே அசையாத பசுமரத்தாணிபோல ஆழமாக வேரூன்றியிருந்தது…! 

அன்று நடந்த அனர்த்தத்தின் அச்ச நிலைதான்…. அவளை இன்றும் வாட்டிக் கொண்டிருந்தது… அன்று முறிந்த பலாமரம் இப்போதுதான் குருத்துக்களை விட்டு சில கிளைகளையும் பரப்பி தலையெடுக்கத் தொடங்கியது…. இந்நிலையில் இன்னுமொரு புயலுக்கு முகங்கொடுக்கும் நிலை புதிதாக வளர்ந்து வருகின்ற அந்தக் குருத்துக்களுக்கும்,சிறு கிளைகளுக்கும் ஏற்பட்டுள்ளது என்பதனை நினைக்கும் போது, அவள் நெஞ்சம் கனக்கத் தொடங்கியது. “என்னடி புள்ள குளிர்காற்று வீசுது….. வெளியிலை நிற்கிறாய்…. உள்ளை வாவன்…..” என்ற பாட்டியின் அதட்டலான உத்தரவைக் கேட்டதும், நினைவிற்கு வந்தவளாய்…. வீட்டினுள்ளே நுழைந்தாள் விமலா. மகள் பானுவும் எழுந்து விட்டாள். அவளுக்கு ஆறுவயதுதான் இருக்கும். ஆனாலும் படிப்பிலும் விளையாட்டிலும் மகா கெட்டிக்காரி. தந்தை இல்லாத குறை தெரியாமல், தாயினதும் பாட்டியினதும் அன்பிலே வளர்ந்தவள். தந்தை மாணிக்கராசா முந்தின பிரச்சினையுட்குள்ளேயே செத்துவிட்டார். கஷ்ரப்பட்டு கூலி வேலை செய்துதான்….. தனது மகளையும், பாட்டியையும் பார்த்து வந்தாள். தாயும் நோய்வாய்ப்பட்டு எண்பத்தேழாம் ஆண்டே இறந்துவிட்டார். அதன்பின் உதவிக்குப் பாட்டிதான். பாட்டியும் இப்போது தளர்ந்து போய் விட்டார். பாட்டியின் மனமும் தளரும் வேளைகளில் பெரியவளாக பானு வளரும் மட்டுமாவது உயிரோடு வைத்திருக்கும்படி இறைவனை இடையிடையே மனதால் வருந்தி வேண்டிக் கொள்வாள் பாட்டி. 

பானு நித்திரையால் எழுந்ததும் மறக்காமல் சண்டையைத் தொடங்கினாள். “அம்மா…. இண்டைக்கும் சங்கிலி வாங்கித் தராவிட்டால்… நான்…. ரியூசனுக்கு போக மாட்டேன்…” எனச் சிணுங்கியவளை, விமலா தலையைத் தடவிச் சமாதானம் செய்தாள். “என்னம்மா நீ எல்லாப் பிள்ளைகளும்…என்னைப் பித்தளைச்…. சங்கிலி …. போட்டிருக்கென்று பழிக்குதுகளணை…. நான் இனி ரியூசனுக்குப் போக… மாட்டன்….” என்ற மகளை சமாதானப்படுத்த அதிக பாடுபட்ட போதுதான்…பாட்டி குறுக்கிட்டாள். ”நான் பிள்ளைக்கு வாங்கித்தாறன்….” என்ற பாட்டியை பரிதாபத்துடன் பார்த்தது அந்தப் பிஞ்சு. 

“என்னடா….அப்படி பார்க்கிறாய்…” எனப் பொக்கு வாயைத் திறந்து சிரித்த பாட்டி…”நேற்றே நீ கொம்மாவோடை சண்டைப்பட….நான் சங்கிலிக்கு ஓடர் கொடுத்திட்டன்” என்றதும் ஆச்சரியத்தோடு பாட்டியை விளித்துப் பார்த்தாள் விமலா. 

“என்னடி புள்ளை அப்படிப் பார்க்கிறாய்…. இந்தக் கிழவிக்கு என்னத்துக்கடி காப்பு…. போட வேண்டிய வயதிலை அதுகள் போடவேணும் என நினைச்சு இவன் குமரேசன்ரை பொடியன் நகைக் கடையிலை வேலை செய்யிறானல்லோ.. அவன் நேற்று உதாலை போக நிப்பாட்டி…. காப்பைக் குடுத்து விட்டனான்… அழிச்சு செய்யச் சொல்லி.. இண்டைக்கு சங்கிலியோடை வருவன்…” என்றதைக் கேட்டதும்.. பானு சந்தோஷத்தில் துள்ளத்தொடங்கினாள்….”அச்சாப் பாட்டி” என பாட்டியின் பொக்குவாய் கன்னங்களிற்கு முத்தம் கொடுத்தாள். 

விமலா பாட்டியை நன்றியுணர்வோடு நோக்கி கொண்டிருந்த வேளையில்தான்.. வெளியே குமரேசன்ரை பொடியன் வந்து நின்றான்….. 

“தம்பி வாடா உள்ளை.. மழை தூறுது…” 

”குடை கொண்டு வந்தனானணை” என்றவன் குடையை மடித்து வெளியில் வைத்து விட்டு உள்ளே வந்து பாட்டியின் கையில் கொடுத்து விட்டு “செய்கூலி சேதாரமெல்லாம் கழிச்சுத்தான் சங்கிலி செய்தனான்…. நான் போட்டு வாறன் மழையும் தூறுது. இனிப் போய்த்தான்…. கடை திறக்கணும்…!” என்றவன் பதிலிற்கு காத்திராது எழுந்து சென்று விட்டான். 

பானு ஆவலோடு பாட்டியிடம் சென்று சங்கிலியைக் கேட்ட போது, பாட்டி கொடுக்க மறுத்து விட்டார். “இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை அதோடை அட்டமியும். ஒரு புது நகை போடேக்கை நல்லநாள் பெருநாள் பார்த்துப் போட்டால்தான்… நகை நட்டுகள் வந்து சேருமாம்…..” என்றதும் பானுவின் முகம் மாறியது. அதனைக் கண்ணுற்ற பாட்டி “புள்ளைக்கு நாளைக்கு காலையிலேயே போட்டு விட்டிடுவேன்… என்ன செல்லம்… பாட்டி நல்லதற்குத்தானே.. சொல்லுறன்….” என்றதும் விளங்கிக் கொண்ட பானு ”ஆம்” எனத் தலையாட்டி விட்டு “அம்மா… சாப்பாட்டைப் போடுங்கோ..” என்றதும் தாய் விமலா சாப்பாட்டுடனேயே வந்துவிட்டாள். 

“இந்தா பிள்ளை நல்லாய் சாப்பிட்டால்தான்.. பெரியாளாய் வரலாம்… அப்பதான்.. சங்கிலி வடிவாயிருக்கும்……!” 

“அப்ப கெதியென்று தீத்தம்மா.. குண்டாய் வரப்போறன்…!” என்றதைக் கேட்டதும், பாட்டி பொக்கு வாயைத் திறந்து சிரிக்க விமலாவும் சிரிக்கத் தொடங்கினாள்.. சிறிது நேரம் சிரிப்பொலிகள் நீடித்தன….. நேரம் நகர்ந்து கொண்டு சென்று மாலை வேளையையும் தொட்டு இரவு நேரத்திற்கு அடியெடுத்து வைத்தது. 

இரவு வந்ததும் பக்கத்து காணியில் இருக்கும் வெள்ளத்துட்குள் இருந்து தவளைகளின் விதம் விதமான வாத்திய ஓசைகள் ஒலிக்க ஆரம்பித்து விடும்.. சிறிது நேரத்தில் மழை பெரிய இரைச்சலுடன் பொழிய ஆரம்பித்தது. பானுவும் சங்கிலி கிடக்கும் பாட்டியின் தலைமாட்டுப் பகுதியைப் பார்த்தபடியே உறங்கி விட்டாள். பாட்டியின் கண்களும் நேரம் செல்லச் செல்ல அயரத்தொடங்கியது… பாட்டி நல்லதோர் அமைதியான ஆழ்ந்த உறக்கம் .. அமைதி.. இடையிடையே தவளைகளின்… ஆரவார ஒலி….! இடையிடையே இடி முழக்கம்… பாட்டியின் காதுகளிற்கு அவை ஒன்றம் இடையூறில்லை….! மழை சற்று ஓயத் தொடங்கியது… விடியும் நேரமும் நெருங்கிய போதுதான்…. காது, கன்னங்களையெல்லாம் நன்றாகப் போர்த்திக் கொண்டிருந்த பாட்டி அவற்றையெல்லாம் அகற்றி விட்டு, கொட்டாவி விட்டப்படி 

“எடி புள்ளை தேத்தண்ணியைப் போடன்டி.. குளிருக்கு உடம்பெல்லாம் விறைக்குதடி…” என்றபடி வாயைப் பொச்சடித்துக் கொள்கிறாள் பாட்டி. ஏதோ நினைவு வந்தவளாக.. தலையணைக்கு கீழே கிடந்த சங்கிலியை எடுத்து… கனத்தைப் பார்க்கின்றாள்… நல்ல கனமாகவே இருக்கிறது. உடனே… குழந்தையின் கழுத்தில் போட்டு அழகு பார்க்க வேண்டும் போல் அவள் கரம் துடிக்கிறது… ஒரு… அமைதி…. எழுந்திருப்பதாக இல்லை. பாட்டிக்கு சினம் தலைக்கேறுகிறது…. “இதுகள் இரண்டும் இண்டைக்கெண்டு இப்படி நித்திரை கொள்ளுதுகள் …ச்சாய்…” என அலுத்துக் கொண்ட போதிலும், நித்திரையாய்க் கிடந்தாலும் பரவாயில்லை…. நகையைப் பூட்டிவிடவோம் என்ற ஆசையில் அரக்கி… அரக்கி அருகே செல்கின்றாள்.. பாட்டி. 

சங்கிலியை எடுத்து ஆசையோடு குழந்தையின் கழுத்தில் வைக்கிறாள் பாட்டி. “ஆ…..ஆ…. ஐயோ….!” அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள் பாட்டி. அந்தப் பிஞ்சு கழுத்து வெட்டப்பட்டு… இரத்த வெள்ளத்தில்… மிதக்கிறது…!

புயலின் வேகத்தில்…. தளிர்கள் விட்டு மீண்டும் வளர்ந்த பலாமரம்… அடியோடு… சரிந்து கிடந்தது.. முற்றத்தில்…! 

(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை) 

– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.

– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

பொன்.சுகந்தன

நெல்லியடியைச் சேர்ந்த பொன். சுகந்தன் 1974ல் பிறந்தவர். சிறுகதை, கவிதை, நாடகம், மேடைப் ‘பேச்சு ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர். கலாசார அலுவல்கள் தேசிய மரபுரிமை அமைச்சினால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு (2005), இலங்கை சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் (2005) நடாத்திய சிறந்த இலக்கிய நடுவருக்கான விருது பெற்றுள்ளார். ‘சொல்வேந்தன்’ என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *