பலம் தந்த பலவீனம்!





சளி பிடித்து அம்மாவிடம் திட்டு வாங்கினாலும் சரி ஒரு நாளாவது மழையில் நனைந்து விட வேண்டும். ‘குண்டு பூசணிக்காய்’ என மற்றவர்கள் சொன்னாலும் சரி கட்டுப்பாடில்லாமல் மனதுக்கு பிடித்ததை உண்ண வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியரிடமும், அம்மாவிடமும் திட்டு வாங்கினாலும் சரி தோழிகளுடன் விளையாடி, உடம்பு கேட்கும் வரை உறங்க வேண்டும். இப்படியொரு மாறான மன ஓட்டத்தில் இருந்தாள் பவித்ரா.

“நானும் படிச்சுப்படிச்சு படி, படி ன்னு சொன்னனே கேட்டயாடி…. கண்ட கழுதைகளோட சைக்கிளெடுத்துட்டு ஊரச்சுத்தினியே… ஊணாங்கொடிய புடிச்சுட்டு வீதில வீணாப்போனதுகளோட சேந்து ரயிலு ஓட்டுனியே…? இப்ப என்ன ஆச்சு? நாலு பாடத்துல பெயிலு… நானாவது பட்டிக்காட்ல பொறந்து படிக்காட்டியும் ஆடு, மாடு மேச்சுப்பொழைச்சுப்போட்டேன். வெயிலு ஒடம்பு மேல பட்டாலே புழுவாட்டத்துடிக்கிற நீயி, காட்டுக்குள்ள எங்க போயி பாடுபட்டுப்பொழைக்கப்போறே…? அதுக்குத்தான் நாம கஷ்டப்பட்டாலும் பரவால்லேன்னு வாயக்கட்டி, வயத்தக்கட்டி உன்னைய பள்ளிக்கொடத்துக்கு அனுப்புனா, ஒரு வருசத்தையே முழுங்கீட்டு வந்து நிக்கறே….” கவலை மேலோங்க ஆதங்கத்தில் வார்த்தைகளைக்கொட்டித்தீர்த்தாள் பவித்ராவின் தாய் ருக்மணி.
“தாயும் புள்ளையாருந்தாலும் வாயிம் வாயிறும் வேற தானே. நானும் ஒன்னம் எத்தன நாளைக்கு பாடு பட்டு உன்னக்காப்பாத்துவேன். படிப்புன்னு ஒன்னு இருந்தா நீ எந்த ஊருக்குப்போனாலும் வாழ்ந்து போடலாம். ஒன்னி ஆறாவது படிச்ச உன்னற தம்பி ஏழாவதுலயே குத்துக்கல்லாட்டா நின்னு போன உன்ற கூட வந்து படிக்கப்போறான். கொஞ்சங்கூட வெக்கமா இல்லியா உனக்கு….?” ஏழாவது வகுப்பில் அரசு பள்ளியில் தேர்ச்சி பேறாமல் போன தனது மகளைத்திட்டி மனதால் சோர்ந்தாள்.
“இதபாரு சும்மா கல்லு, மண்ணுன்னு என்னைய பேசற வேலை மட்டும் வெச்சுக்காதே…. என்றனால படிக்க முடில, படிக்கல. படிக்க முடியலேங்கிறதுக்காக செத்தா போக முடியும். படிக்காதவங்க வாழறதா இல்லே. காக்காய் குருவிகளுங்கூட விரும்பின படி வாழுதுக. நெனைச்ச எடத்துக்கு பறந்து போகுதுக. நீ படிச்சிருந்தாத்தான எனக்கும் படிப்பு வரும். மழைக்குங்கூட பள்ளிக்கொடத்துப்பக்கம் கூட ஒதுங்காத நீயி நாம்படிக்கலீன்னு குதிக்கறே… பேசாம காட்டுக்குள்ள ஆட்ட மாட்ட ஓட்டீட்டு போ…” திட்டிய தாயை எதிர்த்துப்பேசினாள் பவித்ரா.
ஒவ்வொரு பெற்றோரும் தாம் செய்ய முடியாததை தம் குழந்தைகள் செய்ய வேண்டும், தமக்கு கிடைக்காதது தம் குழந்தைகள் பெற வேண்டும் என நினைப்பது இயல்பு. அப்படிப்பட்ட மனநிலையில் தான் பவித்ராவின் தாயும் தன் மகளை நன்றாகப்படிக்க வைத்து, நல்ல வருமானம் தரும் வேலைக்கு அனுப்பி நன்றாக வாழும் மற்றவர்களைப்போல வாழ வைக்க வேண்டும். தன்னைப்போல் சிரமப்படாமல், சிரமமின்றி வாழ வேண்டும் என நினைத்தாள்.
படிப்பு என்பது, ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையை அப்பெண்ணே பெறுவது போல மற்றவர்களின் உதவியால் முடிக்க முடியாதது. தான் படித்து தானே எழுதும் நிலையது. தாய் மற்ற உதவிகளைச்செய்தாலும் மகளுக்கு பதிலாக தேர்வு எழுத முடியாது. இந்த புரிதல் பவித்ராவின் பால் மனதால் புரிய இயலவில்லை. இதற்கு வீட்டு வேலைகள் எதுவும் செய்யச்சொல்லாமல் பெற்றோர் குழந்தைகளை வளர்ப்பதும் காரணமாகும்.
“பக்கத்து ஊட்டு சர்மிளா பெத்த தாயி செத்துப்போயிங்கூட தைரியமா ஊட்டு வேலை, செய்யறது, சோறாக்கறது, அவளோட தம்பிக்கு சொல்லிக்குடுக்கற வேலையும் பாத்துட்டு படிச்சு பாஸாயிட்டா. நானு உனக்கு ஒரு வேலையுங்கொடுக்காம, நெகக்கண்ணுல மண்ணுப்படாம, கண்ணுல தூசி படாம வட்டல்ல போட்ட சோத்த ஒன்னமும் எடுத்து பச்சக்கொழந்தைக்கு ஊட்டற மாதர ஊட்டியும் உடறனில்ல. இப்படி நாம் பாத்தும் பெயிலாயிட்டு வந்துட்டியேன்னு கவல தானே தவுத்து மத்ததொன்னுமில்ல. ஒன்னி ஒரு வார்த்தையுஞ்சொல்ல மாட்டம்பாத்துக்கோ... உன்ற விதின்னு உட்டுப்போட்டு நான் நிம்மதியா இருக்கப்போறேன். நீ எக்கேடோ கெட்டுப்போ…” சொல்லி விட்டு மன உளைச்சலால் ஏற்பட்ட உடல் சோர்வில் கட்டிலில் படுத்துக்கொண்டாள் ருக்மணி.
காலையில் எப்போதும் போல் தாய் ருக்மணி எழுந்து வீட்டு வேலைகளை செய்யாததைக்கண்டு அதிர்ந்து போனாள் பவித்ரா. நெற்றியில் கை வைத்தால் சூடு அனல் பறந்தது. காய்ச்சல் என்பது புரிந்தது. அனத்தல் சத்தம் கூடியது. எழுந்து அமர முடியாததால் தன்னோடு சாய்த்து கழிவறைக்கு அழைத்து சென்று வந்தவள், பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது உறவினரான ஒருவரை அழைத்து வந்து மருத்துவ மனைக்கு தன் தாயை கூட்டிச்செல்ல வைத்தவள், மருத்துவர் ‘ஒரு வாரம் ஒரு வேலையும் செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும்’ என அறிவுறுத்த, ஆடிப்போனாள் பவித்ரா.
வாழ்வில் முதலாக வீட்டைக்கூட்டிப்பெருக்கினாள். பாத்திரங்களைக்கழுவி சமையல் செய்தாள். ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை எடுத்து அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ததோடு, தன் தம்பிக்கும் வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்தாள். ஆடு, மாடுகளை காட்டிற்குள் மேய்க்க ஓட்டிச்சென்றவள் காட்டிலேயே மரத்தடியில் அமர்ந்து பள்ளிப்பாடப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்.
தாயாருக்கு காய்ச்சல் சரியான பின்பும் வீட்டு வேலைகளுக்கு உதவினாள். அவளது உணவை அவளே போட்டு உண்டவள், தட்டைக்கழுவியும் வைத்தாள். ஒரு வாரம் தாயாரால் செயல்பட முடியாத நிலை பவித்ராவின் மனதை மொத்தமாக மாற்றியிருந்தது. படிப்பில் மிகுந்த அக்கறை காட்டினாள்.
அடுத்த வருடம் நடந்த தேர்வில் கூடுதல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பில் பவித்ரா நுழைந்த போது அவளது தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. தன் தாயாருக்கு ஏற்பட்ட உடல் பலவீனம், தன் வாழ்வில் மாற்றங்களைத்தரும் பலமாக அமைந்து விட்டது என்பது தற்போது புரிந்தது பவித்ராவிற்கு!