பறக்க கொஞ்சம் சிறகுகள்…
லட்சுமிக்கு காலையில் இருந்தே குழப்பங்கள். என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்கிற கேள்வி மனசைக் குடைந்து கொண்டேயிருந்தது.
இன்றைக்கு அவளுக்கு ஜெராக்ஸ் கடையில் நிறைய வேலை. கடையைப் பூட்டிக் கொண்டு கிளம்பும்போதோ மணி எட்டுக்குப் பக்கம் ஆகிவிட்டது. நன்றாக இருட்டிவிட்டிருந்தது.
காலையில் பஸ் ஸ்டாண்டில் ரேவதியைப் பார்த்ததில் இருந்தே மனசு ரொம்பவும் குழம்பிப் போயிருந்தது. அப்புறம் ஒனர் பையனின் வருகை. வரிசையாக சில நிகழ்வுகள்…
காலையில் ரேவதியை காந்தி சிலை அருகே பார்த்தாள். வேலைக்கு நேரமாகிவிட்டது என்று வேகமாகப் போய்க் கொண்டிருந்தாள். சிக்னலைத் தாண்டி ரோட்டைக் கடக்கும்போது யாரோ இவள் பெயரைச் சொல்லி அழைப்பது கேட்டது.
“”லட்சுமி… ஏய் லட்சுமி…”
திரும்பிப் பார்த்தாள். ரேவதி… ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தாள்.
“”ரேவதி…” என்று லட்சுமி உற்சாகமாய் ஓடினாள்.
ரேவதி லட்சுமியின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
“”என்ன லட்சுமி எப்படி இருக்கே? பார்த்து பல வருசமாச்சு… அஞ்சாறு வருசமாவது இருக்கும்…”
“”நல்லா இருக்கேன் ரேவதி… நீ எப்படி இருக்கறே?”
“”நல்லா இருக்கறேன்…” என்று சொல்லிவிட்டு ரேவதி, லட்சுமி ஓர் ஆழமான பார்வை பார்த்தாள். லட்சுமியின் சாயம் போன சேலையும், ஒரு காதறுந்து போய் தொங்கிக் கொண்டிருக்கும் ஹேண்ட் பேக்கும் பார்வையை உறுத்தியது. லட்சுமிக்கு ஏதோ ஒன்றை இழப்பதைப் போல தோன்றியது.
“”இப்ப நீ எங்க இருக்கறே ரேவதி?”
“”ஜோதி நகர்ல… புதுசா வீடுகட்டி குடிவந்துட்டோம். நீ திருப்பூர்லதானே இருந்தே…”
“”குழந்தை பொறந்ததில இருந்து போடிபாளையத்திலதான் இருக்கேன்…”
“”உன்னோட வீட்டுக்காரர் திருப்பூர் பனியன் கம்பெனிக்குத்தானே போயிட்டிருக்கறாரு?…”
“”இல்ல ரேவதி… அவரு இப்ப என்கூட இல்ல…”
ரேவதி குழம்பிப்போய், “”என்ன லட்சுமி சொல்றே?” என்று கேட்டாள்.
“”அந்த ஆளு வேற ஒருத்தியைக் கூட்டிட்டு ஓடிப்போயிட்டான்… டைவர்ஸ்கூட ஆயிடுச்சு…”
ரேவதியின் முகம் அதிர்ச்சியில் மாறியது.
“”அடப்பாவமே… ஸôரி லட்சுமி… தெரியாம கேட்டுட்டேன்…”
“”பரவாயில்ல… விடு ரேவதி… உனக்கு எத்தனை குழந்தைக?”
“”ஒரு பையன், ஒரு பொண்ணு… பையன் தேர்ட் ஸ்டாண்டு போறான்… பொண்ணு எல்.கே.ஜி. எஸ்.என்.கே வித்யாலயாவில படிக்கிறாங்க…”
லட்சுமி மிரண்டு போனாள்.
“”அங்க படிக்க வைக்கறதுன்னா லட்சக் கணக்கில செலவாகுமே?”
“”பணத்தைப் பார்த்தா முடியுமா குழந்தைகளோட எதிர்காலம்தான் முக்கியம்… உனக்கு பையனா? பொண்ணா?”
“”பொண்ணுதான்”
“”ஸ்கூலுக்குப் போறாளா?”
“”ம்… ரெண்டாம் வகுப்பு… கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறா…”
“”அப்படியா?” ஏதோ சொல்ல வந்த ரேவதி தயக்கத்தோடு பேச்சை மாற்றினாள்.
“”நீ வேலைக்குப் போறியா?”
“”ஆமா ரேவதி… ஜெராக்ஸ் கடையில வேலை. இங்க நியூ ஸ்கீம் ரோட்டுலதான்… நிலா ஜெராக்ஸ்”
“”லட்சுமி… கொஞ்சம் கஷ்டப்பட்டு உம்புள்ளய கான்வெண்ட் ஸ்கூல்ல சேர்த்திருக்கலாம்…”
“”பரவாயில்ல ரேவதி… நம்ம வெலவலுக்குத் தகுந்தமாதிரித்தானே சேர்க்க முடியும்…”
ரேவதி அவள் கஷ்டத்தை உணர்ந்துகொண்டு பேச்சை மாற்றினாள்.
“”வேலையெல்லாம் பரவாயில்லையா?”
“”ம்… பரவாயில்ல…”
“”சம்பளம்?”
“”நாலாயிரம் ரூபா…”
“”அம்மா எப்படி இருக்கறாங்க…?”
“”நல்லா இருக்கறாங்க… ஊத்துக்குளியில இருக்கறப்போ அடிக்கடி உன்னைப் பார்ப்பேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், “”சரி ரேவதி… நேரமாச்சு. இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்…”
“”சரி லட்சுமி… உன்னோட செல்போன் நம்பர் சொல்லு. நான் கூப்பிடறேன்…”
“”செல்போன் எல்லாம் இல்ல ரேவதி…”
லட்சுமி ரேவதியின் கையில் இருந்த விலையுயர்ந்த செல்போனை அப்போதுதான் கவனித்தாள்.
“”செல்போன் இல்லையா கொறைஞ்ச விலையில ஏதாச்சும் ஒரு போனை வாங்கிக்க லட்சுமி. அவசர ஆத்திரத்துக்கு உதவும்…” என்றாள் ரேவதி அக்கறையோடு.
“”வாங்கலாம்…”
“”சரி லட்சுமி… உன்னை கடையில இறக்கிவிடட்டுமா?”
ரேவதி அருகே ஒரு ஸ்கூட்டி நின்றுகொண்டிருந்தது.
இது ரேவதியின் ஸ்கூட்டியா?
“”வேண்டாம்… இங்கதான்… பக்கத்திலதான் கடை”
“”ஒருநாள் சாவகாசமா உன்னை ஜெராக்ஸ் கடையில வந்து பார்க்கறேன்…”
“”சரி ரேவதி…”
ரேவதி ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு வாகனங்களோடு கலந்து பறந்தாள்.
லட்சுமிக்கு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் மனசை ஏதோ உறுத்தியது.
இவ்வளவு வசதி வந்தும் ரேவதி நம்மைப் பார்த்துப் பேசிவிட்டுப் போகிறாளே… என்கிற சந்தோசமும், ரேவதி சொல்கிற மாதிரி மகளைக் கான்வெண்ட்டில் சேர்த்திருக்கலாமோ? என்கிற கவலையும் வந்தது.
வாங்குகிற நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் அது சாத்தியமுமில்லை.
கவிதாக்குட்டி இப்போதுதான் இரண்டாம் வகுப்பு போகிறாள். ஒருநாள் கவிதா கேட்டது நினைவுக்கு வந்தது.
“”அம்மா நானும் மகேஷ், புவனா மாதிரி ஸ்கூல் வேன்ல போறம்மா… அவங்க மாதிரியே யூனிபார்ம், ஷூவெல்லாம் போட்டுட்டுப் போறம்மா…”
அன்றைக்கு லட்சுமி கொஞ்சம் கதிகலங்கிப் போனாள். மெல்ல மெல்ல கவிதாக்குட்டிக்கு குடும்ப நிலையை எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தாள்.
லட்சுமியும் ரேவதியும் ஊத்துக்குளி அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தார்கள். லட்சுமியின் படிப்பு பத்தாம் வகுப்பில் பாதியோடு நின்று போய்விட்டது. அரையாண்டு பரீட்சையின்போது அவளுடைய அப்பா தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து முதுகில் பலமான அடி. ஆறுமாசம் படுத்த படுக்கையாய் இருந்து இறந்து போய்விட்டார்.
அம்மா கருப்பட்டி, நுங்கு, மாம்பழம் என்று விற்கப் போனாள். லட்சுமிக்கு பக்கத்தில் ஒரு நூல் மில்லில் வேலை. கொஞ்ச நாள் போனாள். பஞ்சுக்காற்று உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை. பென்சில் கம்பெனி, அட்டைக் கம்பெனி, ஜவுளிக்கடை என்று மாறி மாறி வேலை பார்த்தாள். எப்போதாவது ரேவதியைப் பார்ப்பாள். லட்சுமி ஜவுளிக்கடை வேலைக்குப் பஸ்சில் போகும்போது அடிக்கடி ரேவதியைப் பார்ப்பாள். ரேவதி அப்போது காலேஜ் போய்க் கொண்டிருந்தாள். ரேவதி கொஞ்சம் வசதியான வீட்டுப் பெண்தான். ரேவதியின் அப்பா ஊத்துக்குளியில் ஒர்க் ஷாப் வைத்திருந்தார்.
திருப்பூரில் தூரத்து சொந்தத்தில் நல்ல வேலையில், டிகிரி படித்த ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கிறது என்று பாப்பாத்தியக்கா வந்து சொன்னபோது, அம்மாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
“”திடீர்னு கல்யாணம்னா நான் பணத்துக்கு எங்க போவேன்?”
“”அட நீ என்ன அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படறே? உன்னால முடிஞ்சவரைக்கும் ஒரு பவுனோ, ரெண்டு பவுனோ போடு… அவங்க சீர் செனத்தியெல்லாம் பார்க்கமாட்டாங்க… பொண்ணு நல்ல பொண்ணா இருந்தா போதும்…”
கல்யாணத்துக்குப் பின்னால்தான் தெரிந்தது… தேவராஜ் பத்தாம் வகுப்பில் பெயிலானவன். நிலையான வேலை கிடையாது. குடியும், பொம்பளை சகவாசமும் அதிகம் என்று… ஒன்றரை வருசம் அவனோடு கொடுமையான குடும்ப வாழ்க்கை. கவிதாக்குட்டி பிறந்த மூன்றாவது மாதத்தில், பனியன் கம்பெனியில் கூட வேலை பார்த்த, இவனைவிட ஆறு வயது அதிகமான, கல்யாணமான ஒரு பெண்ணோடு ஓடிப் போய்விட்டான். பிறந்த குழந்தையின் முகத்தைக்கூட அவன் வந்து பார்க்கவில்லை.
“விட்டது கெரகம்…’ என்று நிம்மதியோடு அம்மாவிடமே இருந்துவிட்டாள்.
லட்சுமி இன்னும் ஓலைச்சாளையில்தான் குடியிருக்கிறாள். கழிப்பறை வசதிகூட கிடையாது.
லட்சுமி ஜெராக்ஸ் கடையில் வேலைக்குச் சேர்ந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன.
அம்மா ஆனைமலையில் சுக்குக் கருப்பட்டி விற்கும்போது வெயில் அதிகமாகி மயக்கம்போட்டு விழுந்ததில் இருந்து, எந்த வியாபாரத்துக்கும் போவதில்லை. வீட்டில் இருந்து கவிதாக்குட்டியைப் பார்த்துக் கொள்கிறாள். பள்ளிக்கூடம் கொண்டுபோய் விட்டுவிட்டு கூட்டி வருகிறாள். கவிதாக்குட்டிக்கு மத்தியானச் சாப்பாடு பள்ளிக்கூடத்திலேயே கிடைத்துவிடும். புத்தகம், சீருடை எல்லாம் இலவசம். லட்சுமி தினமும் தன்னால் முடிந்த அளவுக்கு கவிதாக்குட்டிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளை நன்றாகப் படிக்க வைத்து, நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அவள் பெரியவள் ஆவதற்குள் சிறியதாக ஒரு வீடும், கழிப்பறையும் கட்டிவிட வேண்டும். மாசா மாசம் கொஞ்சம் பணம் சேர்த்து வருகிறாள்.
மத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு டிபன் பாக்சைக் கழுவி வைக்கும்போதுதான் சந்தோஷ் வந்தான். ஓனர் பையன். முதலில் அவனைப் பார்த்தபோது அடையாளம் தெரியவில்லை.
“”என்னக்கா நல்லா இருக்குறீங்களா?” என்று கேட்டபோதுதான் தெரிந்தது.
“”சந்தோசு… நீயா! நல்லாயிருக்கறியா சாமி?”
“”நல்லா இருக்கறேன்…”
“”லீவா…”
“”ஆமாக்கா… ஃபிரண்டோட அக்காவுக்கு கல்யாணம்… அதுக்கு வந்தேன்…”
“”பெங்களூர்லதானே இருக்கறே?”
“”ஆமாக்கா…”
“”வேலையெல்லாம் பரவாயில்லையா?”
“”உம்… எந்தப் பிரச்சனையும் இல்ல…”
“”என்ன சம்பளம்?”
“”இப்ப அம்பதாயிரம் வருது…”
லட்சுமிக்கு மூச்சு அடைத்தது.
ஒரு வருடம் பாடுபட்டால்கூட தன்னால் ஐம்பதாயிரத்தைத் தொட முடியாதே
“”மாசம் அம்பதாயிரமா?” சந்தேகமாய்க் கேட்டாள்.
அவன் சிரித்தான்.
“”என்னக்கா இப்படிக் கேட்கறீங்க? மாச சம்பளம்தான். ஆறேழு மாசம்தான்… அப்புறம் யு.எஸ்.ஏ போயிருவேன். நல்ல கம்பெனி… எப்படியும் மூணு லட்சம் வரும்…”
லட்சுமிக்கு மயக்கமே வந்துவிடும்போல இருந்தது.
இப்பத்தான் பிளஸ் – டூ படிச்சிட்டு காலேஜ் சேர்ந்த மாதிரி இருந்தது. அதுக்குள்ள இத்தனை சம்பளம் தர்ற படிப்பு என்ன படிப்பு?
வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒருவிதம் என்று நினைத்துக் கொண்டாள்.
லட்சுமி வேலை முடிந்து கிளம்பும்போது மணியைப் பார்த்தாள். எட்டு மணி. கிளம்பினால் எட்டரை மணி பஸ்சைப் பிடிக்கலாம். அதைவிட்டால் ஒன்பதே காலுக்குத்தான் பஸ். கவிதாக்குட்டிக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாம் என்று நினைத்திருந்தாள். அது இப்போது முடியாது. நேரமாகிவிட்டது.
பஸ் ஸ்டாண்டுக்குள் இவள் நுழைவதற்கும் ஆறாம் நம்பர் பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. உட்கார இடம் கிடைத்தது. இவளுக்குப் பக்கத்தில் பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். வேலைக்குப் போய்விட்டு வருகிற பெண்மாதிரி இருந்தாள்.
“”வேலைக்குப் போயிட்டு வர்றியாம்மா?” என்று லட்சுமி கேட்டாள்.
“”ஆமாக்கா… நகைக்கடையில வேலை…”
“”எந்த ஊரு?”
“”திம்மங்குத்து…”
“”படிக்கலையா?…”
“”பிளஸ்-டூ வரைக்கும் படிச்சிருக்கேன்…”
“”மேல படிக்கலையா?”
“”பிளஸ் டூ ஃபெயிலாயிட்டேன்… அதனால வீட்டுல வேலைக்கு அனுப்பிட்டாங்க…”
லட்சுமி கவிதாக்குட்டியை நினைத்துக் கொண்டாள். போன வாரம் வீடு திரும்பியதும் அம்மா கவிதாக்குட்டி மேல் ஒரு புகாரை வைத்தாள்.
“”இங்க பாரு லட்சுமி உம் புள்ள பண்ற வேலையை… நேத்துத்தானே புது பென்சில் வாங்கிக் கொடுத்தே… அதை யாருக்கோ தானம் கொடுத்துப்போட்டு வந்திருக்கறா…”
“”அம்மா… பிரியாவுக்குத்தான் கொடுத்தேன். பாவம்… அவளுக்குப் பென்சிலே இல்லம்மா…”
“”புது பென்சில தொலைச்சுப் போட்டாளாம். அவங்கப்பாவுக்குத் தெரிஞ்சா அடிச்சுப் போடுவாராம்… அதுதான் கொடுத்தேன்… நீ எனக்கு ரெண்டு பென்சில் வாங்கி கொடுத்திருக்கறியே… அதுல ஒண்ணைத்தான் கொடுத்தேன்…”
லட்சுமி கவிதாக்குட்டியை அணைத்து முத்தம் கொடுத்தாள்.
“”என்ன லட்சுமி இது குழந்தைய மிரட்டி வளர்க்காம கொஞ்சறே…”
“”விடும்மா… அவ தப்பா எதுவும் செய்யலையே…”
தான் படிக்கிற காலத்தில் ரேவதி தனக்கு பேனா, பென்சில் தந்து உதவியது நினைவுக்கு வந்தது.
“”அக்கா…” பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் லட்சுமியை மெதுவாக அழைத்தாள்.
“”என்ன?”
“”பின்னால ஒருத்தன் கையைவிட்டு இடுப்பைக் கிள்ளறான்…” அந்தப் பெண் நடுங்கும் குரலில் சொன்னாள். லட்சுமி திரும்பிப் பார்த்தாள். நாற்பது நாற்பத்தைந்து வயது இருக்கும் அவனுக்கு. லட்சுமியைப் பார்த்து அசட்டுத்தனமாகச் சிரித்தான்.
“”நீலக்கலர் சட்டை போட்டிருக்கறவனா?”
“”ஆமாக்கா. ரெண்டு மூணு தடவை இப்படி பண்ணிட்டான்…” அந்தப் பெண் கண்கள் கலங்கிப் போயிருந்தன.
லட்சுமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“”பொறுக்கி நாயே… என்னடா நெனைச்சுட்டு இருக்கறே… கை கால வச்சுட்டு சும்மா இருக்க முடியலையா? செருப்பு பிஞ்சுடும்…” லட்சுமி எழுந்து அவன் சட்டையை எட்டிப் பிடித்தாள்.
“”ஏய்… என்ன ஆம்பளைமேல கை வைக்கிறே…” அவன் கத்த, பளாரென்று ஓர் அறைவிட்டாள்.
அவன் கதிகலங்கிப் போய் நின்றான்.
“”என்னம்மா? என்னாச்சு?”
“”பொம்பளை மேல கை வைக்கிறான் சார்…”
“”எவ்வளவு தைரியம்டா உனக்கு இறங்குடா கீழே…”
அவனை வெளியே இழுத்துத் தள்ளினார்கள். கீழே கூட்டம் கூடிவிட்டது.
“”ரொம்ப நன்றிக்கா… பஸ் ஏறினதல இருந்து தொந்தரவு பண்ணிட்டே இருந்தான்…”
“”பாத்தும்மா… மறுபடியும் வந்து ஏதாவது தொல்லை கொடுக்கப் போறான்…”
“”இல்லக்கா… அவன் வாங்கின அடியில இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கமாட்டான்.”
போடிபாளையத்தில் லட்சுமி இறங்கும் போது மறுபடியும் அந்தப் பெண் “”தேங்க்ஸ் அக்கா…” என்றாள்.
“”பார்த்துப் போம்மா…” லட்சுமி பஸ்சைவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
அந்தப் பெண்ணைப் பார்க்கிறபோது தன்னையே பார்க்கிற மாதிரி உணர்ந்தாள். இன்னும் கொஞ்சம் காலம் போனால் இந்தப் பெண்ணுக்கு கல்யாணம் செய்துவிடுவார்கள். கடவுளே… இந்தப் பெண்ணுக்காவது நல்ல புருசன், நல்ல வாழ்க்கை அமையட்டும்…
எப்படி இந்த வாழ்க்கையை வாழப்போகிறோம் என்கிற கவலை வந்துவிட்டது.
முதலில் எப்பாடுபட்டாவது ஒரு ஓட்டு வீட்டைக் கட்டிவிடவேண்டும்… அப்புறம் கழிப்பறை… மின் இணைப்பு வாங்கிவிடவேண்டும்… ஒரு செல்போன் அவசியம்… புது ஹேண்ட் பேக் வாங்க வேண்டும்… கவிதாக்குட்டியை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும்… தைரியமுள்ள, தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக வளர்க்க வேண்டும்… நினைக்க நினைக்க பயமாக இருந்தது. இதெல்லாம் நடக்குமா? நடக்கும். நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவளுக்கு வேண்டியது கொஞ்சம் சிறகுகள்தான்… எப்படியாவது பறந்து வானத்தைத் தொட்டுவிடலாம். எப்போது சிறகுகள் முளைக்கும் என்கிற கவலைதான் இப்போது…
தேவராஜ் தனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பதைப் பற்றி யோசித்துப் பார்த்திருப்பானா? அந்தக் குழந்தை எப்படியிருக்கும்? என்ன செய்து கொண்டிருக்கும்? என்கிற கவலை கொஞ்சமாவது இருக்குமா? கவிதாக்குட்டி இதுநாள் வரை அப்பா என்கிற வார்த்தையைப் பற்றி கேள்வியே கேட்டதேயில்லை. லட்சுமிக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
லட்சுமி சாளைக்கு வந்தபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது.
அம்மா லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அருகே பாயில் கவிதாக்குட்டி அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
“”என்னம்மா… கவிதாக்குட்டி அதுக்குள்ள படுத்துறச்சா?”
“”ஆமா… இன்னாவரைக்கும் வெளையாண்டுபோட்டு இப்பத்தான் படுத்துத் தூங்கற…”
“”சாப்பிட்டாளா?”
“”கொஞ்சம்தான் சாப்பிட்டா… சோத்துல தேங்கா எண்ணெய் ஊத்திக் கொடுக்கச் சொன்னா…”
லட்சுமி அப்போதுதான் கவனித்தாள். அம்மா சிலேட்டில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.
“”என்னம்மா பண்ணிட்டு இருக்கறே?”
“”உன்ர மக பண்ற வேலையப் பாரு… என்னமோ டீச்சருக்குப் படிக்கப் போறாளாம். எனக்குப் பாடம் சொல்லிக் குடுத்தா. அவ டீச்சராம்… இங்க பாரு… அ ஆனா போட்டு பழக்கிவிட்டிருக்கறா…”
அம்மா முதன்முதலாக “அ’ என்கிற எழுத்தை சிலேட்டில் எழுதிக் கொண்டிருந்தாள். லட்சுமிக்கு சட்டென்று கண்கள் கலங்கிப்போய்விட்டன. அம்மா கவிதாக்குட்டி போட்டுக்கொடுத்த “அ’ எழுத்தின் மேல் எழுதி எழுதிப் பழகிக் கொண்டிருந்தாள். அந்த “அ’ என்கிற எழுத்தில் லட்சுமி தன்னுடைய அத்தனை துயரங்களும் கரைந்து போய்விட்டதாக உணர்ந்தாள்.
அந்த “அ’ எழுத்து மெல்ல மெல்ல மறைந்து லட்சுமியின் உடலில் சிறகுகளாக மாறி ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது.
– கனகராஜன் (ஆகஸ்ட் 2014)
தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி-2014 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250/- பெறும் கதை.
அருமை…கல்வியின் முக்கியத்துவம் உணர்த்த எழுதப்பட்ட நல்ல கதை, வாழ்க வளமுடன்…